புடுக்காட்டி

அரசு கலைக்கல்லூரி ‘தமிழ் இலக்கியத்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் து.மாணிக்காசுரர், எம்.ஏ.,எம்.பில்.,பி.எட்.,பிஎச்.டி.’ அவர்களுக்கு அன்றைய கல்லூரிப் பணியின் கடைசி மணி நேரம் சோதனையாக அமைந்துவிட்டது. இளங்கலை இலக்கியம் மூன்றாமாண்டு மாணவர்களுக்குத் தாம் நடத்தும் இலக்கணப் பாடத்தில் சிறுதேர்வு வைக்கப் போவதாகச் சொல்லிப் பலநாட்கள் ஆயிற்று. இப்படிச் சொல்வது ஆசிரியர்களுக்கு வழக்கம்தான். சொன்னதை மறந்துவிடுவதும் வழக்கமே என்பதால் மாணவர்கள் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் பேராசிரியர்  அவர்கள் அப்படி எளிதாக மறந்துவிடுபவர் அல்லர். மாணவர்களோ புத்தகத்தைப் புரட்டிக்கூடப் பார்க்காமலிருந்தனர். தேர்வு நடக்கையில் பார்த்துக் கொள்ளலாம் என்னும் அசட்டை. ‘நாளைக்கு வைத்துக் கொள்ளலாமா?’ என்று அவர் கேட்கும் போதெல்லாம் ஏதாவது காரணம் சொல்லித் தள்ளிப் போட்டார்கள்.

வெள்ளிக்கிழமை என்றால் ‘ஐயா ஊருக்குப் போகணுங்கையா’ என்று நான்கு பேர் எழுந்து நிற்பார்கள்.  ‘இன்னம் முழுசாப் படிக்கலீங்கையா. ரண்டு நாள் வேணுங்கையா’ என்பார்கள் சிலர். ‘விளையாட்டுப் போட்டிக்குப் போறங்கையா’ என்று கொஞ்சம் பேர் எழுந்து நிற்பார்கள். வகுப்பில் குறைவான மாணவியரே இருந்தனர். அவர்களிலும் ஓரிருவர் ஏதாவது காரணத்திற்காக விடுப்பு எடுத்துக் கொண்டிருப்பார்கள். பொதுவாக மாணவியர் நன்றாகப் படிப்பவர்கள் என்னும் எண்ணம் இருந்ததால் அவர்களை விட்டுவிட்டுத் தேர்வு நடத்துவதைப் பேராசிரியர் அவர்களும் விரும்ப மாட்டார்.

அதனால் எல்லாவற்றுக்கும் ‘சரிசரி’ என்று ஒத்துப் போன பேராசிரியர் அவர்கள் அன்றைக்கு அடாவடிப் பேர்வழி ஆனார்.  ‘எப்படி எழுதுனாலுஞ் செரி. இன்னைக்குத் தேர்வு எழுதீட்டுத்தான் வீட்டுக்குப் போகணும்’ என்று கறாராகச் சொல்லிவிட்டார். கால அட்டவணையில் ஐந்தாம் மணிப் பாடவேளை அவருடையது. அவ்வகுப்பைப் புறக்கணித்து ஓடிப் போகவும் முடியாது. துறைத்தலைவர் என்பதால் எதற்காவது கையொப்பம் வாங்க அவர் முன்னால்தான் போய் நிற்க வேண்டும். நல்ல நினைவாற்றல் கொண்டவர். ஒருமுறை தப்பு செய்து மாட்டிக்கொண்டால் அம்மாணவர் பெயரைப் பட்டியலில் அதற்குரிய இடத்தில் சேர்த்துவிடுவார்.

காவல்துறை அறிவிப்புப் பலகையில் பொதுமக்களை எச்சரிக்கை செய்வதற்காகக் குற்றவாளிகளின் படங்களோடு எவ்வகைக் குற்றம் செய்வார்கள் என்பதையும் குறிப்பிட்டுப் பட்டியல் ஒட்டப்பட்டிருக்குமோ அதுபோல வெவ்வேறு தலைப்புகளின் கீழ் மாணவர்களின் பெயர்களைப் பதிந்த பெரிய பட்டியலைப் பேராசிரியர் அவர்கள் தம் மனதில் ஒட்டி வைத்திருந்தார்.  தம் முன்னால் ஒரு மாணவர் வந்து நின்றதும் சில நொடிகளில் பட்டியலில் எந்த இடத்தில் அம்மாணவர் இருக்கிறார் என்பதை இனம் கண்டு அதற்கேற்ப முகபாவத்தை மாற்றிக் கொள்ளவும் சொற்களைப் பயன்படுத்தவும் அவரால் முடியும். பட்டியலில் எவ்விடத்தில் ஒரு மாணவர் இருக்கிறார் என்பதைப் பொறுத்து அணுகுமுறை அமையும். அதனால் தேர்வைத் தவிர்த்து ஓடிப் போக இயலாத நிர்ப்பந்தத்தில் எல்லா மாணவர்களும் இருந்தனர்.

நான்காம் மணிநேரப் பாடவேளைக்கு வந்தவர் தற்காலிகப் பணியில் இருக்கும் ஆசிரியர் மேகாஸ். அவருக்கு வயது குறைவு. மாணவர்களிடம் இறங்கிப் பேசுவார்.  அவரிடம் விவரம் சொல்லி அந்த வகுப்பைப் படிப்பதற்குப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்குமாறு மாணவர்கள் கேட்டனர். அவரும் ஒப்புக் கொண்டார். ‘இன்னக்கித் துறைத்தலைவர் ஐயா ரொம்பக் கோவமா இருக்கறாரே, ஏங்கையா?’ என்று அவரிடம் கேட்டார்கள். மேகாஸ் சிரித்து மழுப்பினார். அவருக்குக் காரணம் தெரிந்திருந்தது. அதை மாணவர்களிடம் சொல்லக் கூடாது என்று நினைத்தார் போல.

பேராசிரியர் அவர்களின் மனைவி வேறொரு அரசு அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். மனைவியைக் காரில் அழைத்துச் சென்று அலுவலகத்தில் விட்டுவிட்டுக் கல்லூரிக்கு வருவது அன்றாட வழமை. அதனால் தினமும் பதற்றத்தோடுதான் கல்லூரிக்கு வந்து சேர்வார். அன்றைக்கும் அப்படித்தான் நூறு கிலோ மீட்டர் வேகத்தில் காரை ஓட்டிவந்து இரண்டாம் மணியடித்து முடித்த சமயத்தில் ஒரு மரத்தடியில் நிறுத்தினார். நிழலில் இரண்டு மூன்று நாய்கள் படுத்திருந்தன. கார் சத்தம் கேட்டும் அவை எழவில்லை. ஒலிப்பானை வேகமாக அழுத்திப் பார்த்தார். அவை நகரவில்லை. சில மாணவர்கள்தான் திரும்பிப் பார்த்தனர். ‘சனியனுங்க. எந்திரிக்குதா பாரேன்’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவர் காரை இன்னும் கொஞ்சம் சத்தத்தோடு முன்னகர்த்தினார். ஒலிப்பானையும் அடித்தார். தம்மைத் தொந்தரவு செய்பவரைப் பார்த்து முறைத்துக்கொண்டே அவை சோம்பலாக எழுந்து நகர்ந்தன. அவற்றில் இரண்டு நாய்கள் கடுவன்கள் என்பது தெரிந்தது.

‘இந்தப் புடுக்காட்டி நாய்வளப் புடிச்சுக்கிட்டுப் போயி வெதரெடுத்துடணும்’ என்று சற்று சத்தமாகவே சொல்லிக்கொண்டே காரை நிறுத்தினார்.

திரும்பக் காரை எடுக்கும்போதும் எச்சரிக்கையாக எடுக்க வேண்டும். அவை போக்குக் காட்டிவிட்டுக் காரடியில் வந்து மீண்டும் படுத்துக் கொள்ளும். ‘எங்க பாத்தாலும் நாய்க தொந்தரவுதான்’ என்றவர் விரைந்து துறைக்கு நடந்தார்.  சோற்றுப் பையை ஒருகையில் பிடித்தபடி கையொப்பம் இட்டு வருகைப் பதிவேட்டு வேலைகளை எல்லாம் முடித்தார். அறையை ஒரு நோட்டம் விட்டார். பல ஆசிரியர்களைக் காணவில்லை. எல்லோரும் வகுப்புக்குப் போய் விட்டனர் என்றுணர்ந்தார். மேகாஸ், முருகேஸ், லிங்கேஷ் மூவர் மட்டும் இருந்தனர். மூவரும் தற்காலிக விரிவுரையாளர்கள். அவர்களுக்கு வகுப்பு இல்லை போல.

பேராசிரியர் அவர்களின் நாற்காலிக்கு எதிர்ச் சுவரோரம் ஒருநாய் படுத்திருந்தது. உடலில் ஒருபொட்டுக்கூட இடமில்லாமல் முழுக்கறுப்பு. ‘நாய்ங்க நாய்ங்க நாய்ங்கதான்’ என்று முனகினார். அந்த நாய்க்கு அந்த இடம் எப்படியோ பிடித்துப் போயிருந்தது. இரவுக் காவலர் தினமும் காலையில் இந்த அறைக்கதவைத் திறந்ததும் வந்து இந்த இடத்தில் படுத்துக் கொள்ளும். அவரிடம் விரட்டிவிடச் சொல்லியும் பார்த்தாயிற்று. ‘முடுக்கி உட்டுட்டு நான் அந்தப் பக்கம் போனன்னா, இந்தப் பக்கம் வந்து படுத்துக்குதுங்கையா’ என்று காவலர் புகார் சொல்வார். ஆசிரியர்களும் அவ்வப்போது விரட்டுவார்கள். ஆனால் எப்படியோ போக்குக் காட்டிவிட்டு வந்து அதே இடத்தில் படுத்துக் கொள்ளும். 

‘போன பிறவியில ஆசிரியராப் பொறந்திருக்குமோ?’ என்று சொல்லிச் சிரிப்பார்கள்.

வேறு துறை ஆசிரியர்கள் ‘அதுவும் தமிழாசிரியராத்தான் பொறந்திருக்கும்’ என்பார்கள்.

அந்த நாயைக் கண்டாலே பேராசிரியர் அவர்களுக்குப் பிடிக்காது. கண்ணை உறுத்துகிற மாதிரி இப்படி ஒருகறுப்பா என்று அவர் உடல் சிலிர்க்கும். ‘தூய்… எந்திருச்சு ஓடு’ என்று வாயால் விரட்டினார். அது உடலைக் குறுக்கி முறுக்கிப் படுத்திருந்தது. எந்த அச்சமும் இல்லாத இடத்தில் எவ்வளவு சுதந்திரமாக இருக்க முடியுமோ அப்படி உணர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது. அவர் சத்தத்துக்குக் காதுகளை உயர்த்தி லேசாகக் கண் விழித்துப் பார்த்தது. அவ்வளவுதான். இது வழக்கம்தானே என்று மீண்டும் கண்களை மூடிக் கொண்டது. இன்றைக்கு அவர் விடுவதாயில்லை. ‘உனக்கு இதுதான் எடமா? தெனமும் இதே எழவாப் போச்சு’ என்று கத்தினார். அறையில் சில ஆசிரியர்கள் இருந்தனர். அவர்களில் இளவயதாக இருந்த மேகாஸ் தம் நாற்காலியில் இருந்து எழுந்தார்.

‘நீங்க இருங்க மேகாஸ். இன்னைக்கு அதுவா நானான்னு பாத்தர்றன்’ என்று சொன்ன பேராசிரியர் அவர்கள் ஒடிந்து கீழே கிடந்த பெஞ்சுக் காலாகிய  மரக்கட்டையை எடுத்து ஓங்கிக் கொண்டு அந்த நாயை நோக்கிச் சென்றார். அவர் கையில் தடியைப் பார்த்ததும் நாய் எழுந்து வெளியே ஓட வந்தது. குறுக்காட்டி அதை அடிக்கப் பார்த்தார். வாலை ஒடுக்கிக் கொண்டு அவர் காலுக்குள் புகுந்து அடியிலிருந்து தப்பித்து ஒருநிழல் நகர்வதைப் போல வெளியோடியது. நல்லவேளையாக அவர் கீழே விழவில்லை.  குறி தவறித் தரையை ஓங்கி அடித்தார்.

‘கரும்புடுக்க ஆட்டிக்கிட்டுப் போவுது பாரு. இந்தப் பக்கம் இன்னமே வந்து பாரு, இடுப்ப முறிச்சிர்றன்’ என்று கத்தினார்.

பேராசிரியர் அவர்கள் காலை உணவை எடுத்து வந்து கல்லூரியில் தான் உண்ணுவார். கணவன் மனைவி    இருவரும் வேலைக்குச் செல்வதால் காலை, மதியம் இருவேளைக்கும் சேர்த்துச் சாப்பாடு செய்வார்கள். வீட்டில் சாப்பிட நேரமிருக்காது. சாப்பிட வேண்டும் என்பதற்காகவே முதல் மணிநேரம் அவருக்கு வகுப்புப் போட்டுக்கொள்ள மாட்டார். சாப்பிட உட்கார்ந்து சோற்றைக் கையில் எடுத்து ஒருவாய் வைத்ததும் ‘த்தூ’ என்று சத்தமாகத் துப்பினார். மேசை முழுக்கவும் பருக்கைகள் இரைந்தன. புரையேறி விட்டதோ என்று அப்போது அறையிலிருந்த ஆசிரியர்கள் எல்லோரும் எழுந்து ஓடி வந்தனர். 

அப்படியே வேகமாக எழுந்து வெளியே கொண்டு போய்ச் சோற்றை நாய்க்குக் கொட்டினார். கல்லூரி வளாகத்தில் ஏராளம் நாய்கள் சுற்றிக் கொண்டிருந்தன. ஆசிரியர்களும் மாணவர்களும் போடும் எச்சில் சோற்றில் வளர்ந்து தம் சந்ததியையும் பெருக்கிக் கொள்பவை அவை. விலங்கியல் துறையைச் சார்ந்தவர்கள் ஒருமுறை கணக்கெடுத்து ‘நாற்பத்திரண்டு நாய்கள்’ வளாகத்தில் இருப்பதாகக் கணக்குச் சொன்னார்கள். இப்போது இன்னும் பெருகியிருக்கலாம்.  அத்துறையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் விலங்கு நல ஆர்வலர். நாய்களைப் பாதுகாக்க ஏதேதோ செய்து கொண்டிருந்தார். அவரால்தான் நாய்கள் பெருகுகின்றன என்று மற்றவர்கள் சொல்வார்கள். அவரோ ‘உயிரோட அரும தெரியாத மூடங்க’ என்று மற்றவர்களைத் திட்டுவார்.  அவரது திருவாக்கு ஒன்று மிகவும் பிரபலமானது.

‘மனுசங்க பூமிக்குப் பாரம்; மிருகங்க பூமிக்குப் பலம்.’

கல்லூரி விடுமுறை நாட்களில் உணவுக்கு நாய்கள் படும் பாடு பெரிது. பக்கத்து ஊர் வீடுகளை நோக்கியும் எங்காவது போட்டிருக்கும் கோழிக் கழிவுகளைத் தேடியும் ஓடிவிடும். மிச்சச் சோற்றை நாய்களுக்குக் போடுவதற்கெனவே இருந்த ஒரு கல் மேல் பேராசிரியர் அவர்கள் சோற்றைக் கொட்டியதும் ஐந்தாறு நாய்கள் ஓடி வந்தன. அவற்றில் குட்டிகள் சிலவும் இருந்தன. மூன்று மாதக் குட்டிகளாக இருக்கும். தாய்ப்பால் குடிப்பதாலோ என்னவோ அவை புஷ்டியாக இருந்தன. ‘சோத்தத் தின்னுட்டு எல்லாம் கொழுப்புக் கட்டிக் கெடக்குதுவ’ என்று முணுமுணுத்தார். அக்குட்டிகள் வாலை இடுக்கிக் கொண்டு சோற்றைத் தின்றதால் பின்னிருந்து பார்க்கப் பெட்டையா கடுவனா என்பது தெரியவில்லை. ‘புடுக்கு மொளச்சிருச்சின்னா இதுவளயும் கைல புடுக்க முடியாது’ என்று சொல்லிக் கொண்டார். பெரிய நாய்கள் பல்லைக் காட்டித் தமக்குள் முறைத்துக் கொண்டிருந்த தருணத்தைப் பயன்படுத்திக் குட்டிகள் சோற்றில் புகுந்தன.

‘இங்கயும் அடிதடி தானா? இந்தச் சோத்துக்கா இப்படி அடிச்சுக்கறீங்க?’ என்று சத்தமாக நாய்களைப் பார்த்துக் கேட்டார்.

பேராசிரியர் அவர்களின் பேச்சுக்குப் பணிந்தோ சண்டை வேண்டாம் என்று நினைத்தோ சோற்று வாசனை பிடிக்காததாலோ ஒன்றிரண்டு பின்வாங்கின. அதைப் பார்த்ததும் கொஞ்சம் திருப்தியாக இருந்தது. அருகில் இருந்த குழாயில் பாத்திரத்தைக் கழுவினார். அவருக்குப் பிடிக்காத வேலை பாத்திரம் கழுவுவது. ஆனால் கழுவாமல் வீட்டுக்குக் கொண்டு போக முடியாது. ‘சும்மா ஒரு அலசு அலசி வெக்க முடியாதா? நாத்தமெடுத்துத்தான் கொண்டாருவீங்களா?’ என்று மனைவியிடம் திட்டு வாங்க வேண்டியிருக்கும். கிளம்பிய அதே வேகத்தில் அறைக்குத் திரும்பியவரைப் பார்த்து ஓர் ஆசிரியர் கேட்டார்.

‘என்னங்கையா ஆச்சு?’

‘நாய்கூடத் திங்காதுங்க இந்தச் சோத்த. வெளிய போயிப் பாருங்க. வந்து வந்து மோந்து பாத்துட்டுப் போவுதுங்க’ என்று வெறும் பாத்திரத்தை மேலும் கீழும் உதறிக் காட்டிவிட்டு நாற்காலியில் அமர்ந்தார். 

‘யாராச்சும் பையன அனுப்பி எதாச்சும் வாங்கிக்கிட்டு வரச் சொல்லட்டுமாங்கையா?’ என்று ஒருவர் கேட்டார்.

‘கொஞ்ச நேரம் கழிச்சு நானே போய்க்கறன்’ என்று சொல்லிவிட்டார்.

உணவகம் சற்று தூரத்தில் இருந்தது. இந்நேரம் வடையும் போண்டாவும் போட்டிருப்பார்கள். சூடாகவும் மணக்க மணக்கவும் இருக்கும் அவற்றைத் தின்பதற்கு ஆசிரியர்கள் குழுக்குழுவாகப் போவதுண்டு. பேராசிரியர் அவர்கள் போனாரா ஏதாவது சாப்பிட்டாரா என்பது ஒன்றும் தெரியவில்லை. மனைவி மீதான சலிப்பும் பசியால் ஏற்பட்ட வருத்தமும் அவரது கோப மனநிலைக்குக் காரணமாக இருக்கலாம். அதை எப்படி மாணவர்களிடம் சொல்ல முடியும்? மேகாஸ் ஒருமாதிரி சிரித்துச் சமாளித்தார்.

‘சத்தம் போடாமல் படிக்க வேண்டும்’ என்று கட்டளையிட்ட மேகாஸ் வகுப்பறைக் கதவையொட்டி வெளியில் நின்றுகொண்டு வருவோர் போவோரிடம் பேசிக் கொண்டிருந்தார். ஒருகண் உள்ளேயும் மறுகண் வெளியேயும் இருந்தன. மாணவர்கள் வாசிக்கும் முணுமுணுப்பு சற்றே கூடும்போது உள்ளே திரும்பி ‘டேய்’ என்பார். சத்தம் அப்படியே அடங்கிவிடும். கொஞ்ச நேரத்தில் மீண்டும் பேச்சுச் சத்தம் வரும். ‘டேய்’ என்று கத்தி அடக்குவார். இப்படியே ஒருமணி நேரமும் கழிந்தது. ஏதோ படித்தார்கள். இலக்கணப் பாடம் புரிந்தும் புரியாமலும் இருந்தது. மேகாஸிடம் ஐயம் கேட்கவும் முடியாது. அவர் ஏற்கனவே ‘எனக்கே இலக்கணம் வராதுப்பா. அடிச்சுப் புடிச்சுப் பார்டர்ல பாஸ் பண்ணி வந்திருக்கறன்’ என்று சொல்லியிருக்கிறார்.

மணி அடித்ததும் பேராசிரியர் அவர்கள் வகுப்புக்கு வந்தார். வெளியில் நின்றிருந்த மேகாஸ் ‘தேர்வுக்குப் படிக்கணும்னு கேட்டாங்கையா. அதான் சரின்னு விட்டன்’ என்று சொன்னார்.

‘உங்க வகுப்பப் புடிங்கிக்கிட்டானுங்களா? எத்தன வகுப்பு குடுத்தாலும் படிக்க மாட்டானுங்க’ என்று வருத்தப்படுபவர் போலச் சொல்லிவிட்டு உள்ளே நோக்கி ‘எழுதலாமா?’ என்று மாணவர்களைக் கேட்டார்.

ஆசிரியர் நின்று பாடம் நடத்தும் வகுப்பறை மேடையில் கரும்பலகைக்குக் கீழே சுவரை ஒட்டிச் சுருண்டு படுத்திருந்த நாய் ஒன்று அவர் கண்ணுக்குப் பட்டது. சட்டென்று கோபம் மிகுந்தது. உயரத்தில் இருந்த விளக்கு, மின்விசிறி ஸ்விட்சுகளைத் தட்டிப் போடுவதற்காக  வகுப்பறைக் கதவோரத்தில் சாத்தி வைத்திருந்த நீளக்குச்சியை எடுத்தார். அவரது பருத்த உடலுக்குப் பொருந்தாத விரைவோடு போய் நாயை ஓங்கி அடித்தார். அதை எதிர்பார்க்காத நாய்  ‘வாள்வாள்’ என்று கத்திக்கொண்டே வெளியே ஓடியது. ‘புடுக்காட்டி நாய்வ’ என்று முனகிக் கொண்டே திரும்பினார். பேராசிரியர் அவர்கள் வகுப்பறைக்குள் நுழைந்ததால் மாணவர்கள் எல்லோரும் எழுந்து நின்றனர்.

‘வகுப்புல நீங்க படிக்கறீங்களா? நாய் படிக்குதா? உள்ள வந்தா முடுக்க மாட்டீங்களா?’ என்று கத்தினார்.

உள்ளே ஒரே அமைதி. வெளியே பார்த்தார். மாணவர்கள் மீதான கோபம் அடுத்துத் தன் மேல்தான் பாயும் என்பதால் மேகாஸ் சொல்லிக் கொள்ளாமலே போய்விட்டார். வகுப்பறை அமைதியைப் பொருட்படுத்தாமல் இறுகிய முகத்தோடு கரும்பலகையில் வினாக்களை எழுதிப் போட ஆரம்பித்தார். உட்காரச் சொல்வார் என்று எதிர்பார்த்து நின்ற மாணவர்கள் ஒவ்வொருவராகத் தாமாகவே உட்கார்ந்தனர். இனித் தப்பிக்க வழியில்லை என்பதை உணர்ந்து  தாளை எடுத்து எழுதத் தொடங்கினர். தாள் இல்லாதவர்கள் குறிப்பேட்டில் கிழித்தெடுத்து எழுதினார்கள். ஒருமணி நேரத் தேர்வுக்கான வினாக்களைக் கரும்பலகையில் எழுதி முடித்ததும் மேடையிலிருந்து கீழிறங்கி மாணவர்களை இடைவெளி விட்டு அமரச் சொல்லி ஒழுங்குபடுத்தினார்.

எல்லோரும் அமைதியாக எழுத ஆரம்பித்துச் சில நிமிடங்கள் கடந்திருக்கும். வெளியே  இரைச்சல் எழுந்தது. வகுப்பறைக்கு வெளி வராந்தாவில் வேறு ஏதோ வகுப்பு மாணவர்கள் சிரிப்பும் கும்மாளமுமாய்ச் சத்தமிட்டுக் கொண்டே போனார்கள்.  ‘இது ஓர் எழவு’ என்று முணுமுணுத்தார். நான்காம் மணி நேரமும் ஐந்தாம் மணி நேரமும் பல வகுப்புகள் நடக்காது. மாணவர்கள் வெளியேறிச் செல்வார்கள். அந்த வகுப்பைக் கடந்துதான் போயாக வேண்டும். தேர்வெழுதும் மாணவர்களுக்கு அந்தச் சத்தம் இடைஞ்சலாக இருக்குமோ என்னவோ. அவருக்கு எரிச்சலாக இருந்தது.

என்ன செய்யலாம் என்று ஒருகணம் யோசித்தார். அந்த வரிசையில் ஆறு வகுப்பறைகள் இருந்தன. இதுதான் முதலாவது. இதையடுத்து ஒன்று. அதுவும் இலக்கியத்துறை வகுப்பறைதான். அதற்கப்புறம் ஒரு வாயில் இருந்தது. அதிலும்  போகலாம்; வரலாம். ஆனால் மாணவர்கள் பெரும்பாலும் அதைப் பயன்படுத்துவதில்லை. பேராசிரியர் அவர்களின் மனதில் சட்டென ஒரு திட்டம் உருவானது. ‘பேச்சுச் சத்தம் வரக் கூடாது. இங்கதான் இருக்கறன்’ என்று சத்தமாக எச்சரித்துவிட்டுப் பக்கத்து வகுப்பறைக்குப் போனார். அங்கே வகுப்பு நடக்கவில்லை. இரண்டு மாணவியர் பெஞ்சில் உட்கார்ந்திருந்தனர். அவர்களைச் சூழ்ந்து அருகிலும் டெஸ்க் மீதும் உட்கார்ந்து நான்கைந்து மாணவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். சிரிப்பும் சத்தமுமாய்க் கலகலப்பாய் இருந்தது. ஒருகணம் நின்று பார்த்தார். அவரைக் கவனிக்கும் நிலையில் யாருமில்லை.

‘டேய்ய்’ என்று எத்தனை மாத்திரை என்று அறிய முடியாத அளபெடையில் குரலெடுத்துக் கத்தினார். எல்லோரும் அதிர்ந்து திரும்பினார்கள். பேராசிரியர் அவர்களைக் கண்டதும் விருட்டென்று எழுந்து நின்றனர். அந்தப் பெண்களைப் பார்த்துச் சொன்னார்.

‘வகுப்பு முடிஞ்சா ஒடனே வீட்டுக்குப் போகணும்னு சொல்லியிருக்கறன்ல? இங்க என்ன கும்மாளம்? போங்க.’

‘ஒரு பொட்ட நாயி இருந்தாப் பத்துக் கடுவன் புடுக்காட்டிக்கிட்டுப் பின்னாலயே சுத்துதுங்க’ என்பதை வாய்க்குள் முனகிக் கொண்டு நின்றார். அந்தப் பெண்களுக்குக் கேட்டிருக்கலாம். தம் நோட்டுக்களையும் புத்தகங்களையும் அவசரமாகப் பொறுக்கிக் கொண்டு இருவரும் தலைகுனிந்தபடியே வெளியேறினார்கள். அவர்களைப் பின் தொடர்ந்து செல்ல முயன்ற பையன்களை ‘நீங்க எங்க பொறத்தாண்டயே தொரத்திக்கிட்டுப் போறீங்க, நாய்ங்க மாதிரி?’ என்று சத்தம் போட்டார். நால்வரும் இப்போது என்ன செய்து விட்டோம் என்றோ என்ன செய்வது என்றோ யோசித்தபடி நின்றார்கள். அதில் ஒருவனை  விரல் நீட்டி ‘இங்க வா’ என்று கூப்பிட்டார். தனக்கு ஏதோ வேலை சொல்லப் போகிறார் என்று தெரிந்ததும் தன் புத்தகங்களைப் பெஞ்சின் மேல் வைத்துவிட்டு முன்னால் வந்து நின்றான். 

‘மேகாஸ் ஐயா துறையில இருப்பாரு. அவர நான் கூப்பிட்டன்னு கூட்டிக்கிட்டு வா’ என்று சொல்லி அவனை அனுப்பினார்.

மற்ற மூவரும் என்ன சொல்லப் போகிறாரோ என்று தெரியாமல் அப்படியே நின்றனர்.

‘அந்த ஓரத்துல தனியாக் கெடக்குதில்ல, அந்த ரண்டு டெஸ்க்கயும் ஒவ்வொண்ணாத் தூக்கிக்கிட்டு வாங்க’ என்று பணித்தார்.

டெஸ்கின் ஒருபுறத்தை ஒருவரும் மற்றொரு புறத்தை இருவரும் சேர்ந்து பிடித்துத் தூக்கி வந்தனர். நடுவில் இருந்த வழியை அடைத்து ஒன்றைப் போடச் சொன்னார். தேர்வெழுதும் அறைப் பக்கம் யாரும் நுழையாமல் தடுத்து இன்னொன்றைப் போடச் சொன்னார். அங்கு வந்த மேகாஸும் அவரை அழைக்கச் சென்ற மாணவரும் வந்து டெஸ்க் பக்கத்தில் தயங்கி நின்றார்கள்.

‘நீங்க நகத்திட்டு வாங்க’ என்றார் பேராசிரியர் அவர்கள்.

மேகாஸைப் பார்த்து ‘வகுப்புல கொஞ்ச நேரம் நின்னு பாத்துக்கங்க. சும்மா இருக்க மாட்டானுங்க. கவனமாப் பாத்துக்கங்க’ என்றார். மேகாஸ்  ‘பேசாத எழுதுங்கடா’ என்று வெளியே கேட்கும்படி கத்திக்கொண்டே வகுப்புக்குள் நுழைந்தார். மாணவர்கள் நிமிர்ந்து அவரைப் பார்த்து லேசாகச் சிரித்துவிட்டு மீண்டு எழுத ஆரம்பித்தார்கள்.

டெஸ்க் தடுப்புப் போட்டிருந்த ஒவ்வொரு பக்கத்திற்கும் இரண்டிரண்டு மாணவர்களை நிற்க வைத்தார் பேராசிரியர் அவர்கள். அந்தப் பக்கம் வரும் மாணவர்களை இன்னொரு வழியில் செல்லும்படி அறிவுறுத்தி அனுப்புவது மாணவர்கள் வேலை. அவர் இருபுறமும் நடந்து கொண்டிருந்தார். ஓரிரு நாட்களுக்கு இந்தத் தடுப்பை அப்படியே வைத்து மாணவர்களை ஒழுங்குபடுத்திவிட்டால் நடு நுழைவாயிலைப் பயன்படுத்தும் பழக்கம் வந்துவிடும். தடுப்பு அமைப்பை நிரந்தரமாக்கும் விதம் குறித்து யோசித்துக் கொண்டிருந்தார். தடுப்பருகே வந்து நின்று டெஸ்க் தடுப்பைப் பார்த்துத் தடுமாறுபவர்களிடம் ‘இந்தப் பக்கம் போகக் கூடாதுன்னுதான டெஸ்க் போட்டிருக்குது? கண்ணுத் தெரியல’ என்று கடுமையாகச் சொன்னார். காவலுக்கு நின்ற மாணவர்கள் ‘அந்தப் பக்கம் போ’ என்று சக மாணவர்களிடம் பொறுமையாகச் சொல்லிக் கொண்டிருந்தனர்.

சற்று நேரத்தில் எல்லாம் ஒழுங்குக்கு வந்துவிட்டதாகத் தோன்றியது. திருப்தியோடு இருபுறமும் நடைவிட்டார். அவ்வப்போது தேர்வு வகுப்பறைக்குள்ளும் எட்டிப் பார்த்துக் கொண்டார். இனி எல்லாம் சரியாக நடக்கும், துறைக்குத் திரும்பலாம் என அவருக்குத் தோன்றியது. அப்போது நுழைவாயில் பக்கமிருந்த தடுப்பைத் தள்ளிக்கொண்டு ஒரு மாணவன் உள்ளே நுழைய முயன்றான். அவன் தம் துறை மாணவன் இல்லை என்பதைப் பார்த்ததும் கண்டுகொண்டார். துறை மாணவர்கள் எல்லோரையும் பெரும்பாலும் தெரிந்து வைத்திருப்பார். காவலுக்கு இருந்தவர்கள் ஏதோ சொல்லி அவனைத் தடுக்க முயல்வதும் அதைக் கேட்காமல் டெஸ்க்கைத் தள்ளிக் கொண்டு அவன் நுழைவதும் தெரிந்தது. பேராசிரியர் அவர்கள் வேகமாக அங்கே விரைந்தார்.

‘என்னடா? இதென்ன தொறந்த ஊடா? நாயாட்டம் பூதறதுக்கு? அதான் தடுப்புப் போட்டிருக்குதில்ல? அறிவில்ல?’ என்று பெருங்குரலெடுத்துக் கத்தினார்.

வகுப்பறைக் கதவை ஒட்டி நின்றபடி மேகாஸ் திரும்பிப் பார்த்தார். தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவர்கள் ‘என்னாச்சுங்கையா’ என்று மேகாஸைப் பார்த்துக் கேட்டனர். வெளியே நடப்பதை அறியும் ஆவல் எல்லோரிடமும் தொற்றிக் கொண்டது. ‘பேசாத எழுதுங்கடா’ என்று மேகாஸ் திட்டிவிட்டு வேடிக்கை பார்க்கத் தொடங்கினார். மாணவர்களுக்கு வெளியிலேயே கவனம் இருந்தது.

கத்திக்கொண்டே பேராசிரியர் அவர்கள் வருவதைக் கண்டாலும் அம்மாணவன் பின்வாங்கவில்லை. காவலுக்கு நின்றவர்களை ஒருகையால் ஒதுக்கி இன்னொரு கையால் டெஸ்கைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தான்.  ‘ஐயா’ என்று அவன் ஏதோ சொல்ல அவரை நோக்கி முன்னால் வந்தான். தான் போட்டிருக்கும் தடுப்பையும் காவலையும் மீறி அவன் உள்ளே நுழைகிறான் என்பதைப் பொறுக்க முடியாத பேராசிரியர் அவர்கள் வெறியோடு அவனருகில் போய்ச் சட்டையைக் கொத்தாகப் பிடித்தார். ‘உடுங்கையா’ என்று சற்றே பின்னால் இழுத்தான் அவன்.

‘நாயே… நாயே… அறிவில்ல உனக்கு?’ என்று கர்ஜித்துக் கொண்டு பிடியை இறுக்கினார். அவனுக்கும் கோபம் வந்தது.

‘என்னத்துக்கு நாய்ங்கறீங்க? இப்ப என்ன செஞ்சிட்டன்?’ என்று அவருக்கு ஏற்றாற் போலக் கத்தியபடி பிடியிலிருந்து விடுவித்துக்கொள்ள முயன்றான்.

அவர் முன்னால் இழுக்க, அவன் பின்னால் இழுக்கப்  பர்ரென்று ஒருசத்தம். அவன் சட்டை நீளவாக்கில் கிழிந்தது. நெஞ்சின் இருபுறமும் கிழிசல்கள். உள்ளே பனியன் இல்லை. கறுத்து மெலிந்த மார்புக்கூடு வெளியே தெரிந்தது. வெட்கத்தோடு மார்பில் கை வைத்துக்கொண்டு சுற்றிலும் பார்த்தான். வகுப்புக்குள் இருந்தவர்கள் எல்லோரும் எழுந்து வந்து கதவருகிலும் ஜன்னலோரமும் நின்றிருந்தார்கள். வராந்தாவுக்கு வெளியே மாணவர் கூட்டம் திரண்டிருந்தது. அவமானத்தில் உடலைக் குறுக்கி நெஞ்சை மறைத்த அவன் கேட்டான்.

‘எங்கிட்ட இருக்கறது இது ஒரே சட்டதான். அதயும் கிழிச்சுட்டீங்க. இப்ப என்ன பண்ணட்டும்?’

‘கிழிஞ்ச சட்டயப் போட்டுக்கிட்டு வந்துட்டு என்னடா ரவுடித்தனம் பண்ற?’ என்று பேராசிரியர் அவர்கள் விடாப்பிடியாகச் சொன்னார்.

அவன் சட்டை பழையதாகத்தான் இருந்தது. துவைக்கும்போது ஓங்கி இரண்டு அடி அடித்தால் நார்நாராகக் கிழிந்துவிடும் அளவு நைந்த துணி. ஆகவே அவரால் அப்படிச் சொல்ல முடிந்தது.

‘எவனாச்சும் கிழிஞ்ச சட்டயப் போட்டுக்கிட்டுக் காலேஜ்க்கு வருவானா? நீங்க வருவீங்களா?’

அவன் கேட்டான். அதற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் தடுமாறித் தன் வசை அம்புகளை எய்யத் தொடங்கினார் பேராசிரியர் அவர்கள்.

‘நாய்ங்க வரும்டா. ஒரு பனியன்கூடப் போடாத நாயி.’

அதற்குள் இருபுறத் தடுப்புகளையும் உடைத்துக்கொண்டு மாணவர் கூட்டம் உள்ளே நுழைந்துவிட்டது. வராந்தாவின் நெடுகிலும் மாணவர்கள். அந்த மாணவனிடம்  ‘என்னாச்சுடா சுரேஷு?’ என்று கேட்டான் தலைவனைப் போலத் தெரிந்த ஒருவன். அவன் விவரம் சொன்னான்.

‘எந்தங்கச்சி இந்த வகுப்புல இருக்குது. அது வர எவ்வளவு நேரமாகும்னு கேக்கத்தான் வந்தன். எஞ்சட்டயப் புடிச்சு இழுத்துக் கிழிச்சுட்டாரு. அதில்லாத நாயி நாயின்னு பேச்சுக்குப் பேச்சு திட்டறாரு.’

கூட்டத்தைப் பார்த்துத் தடுமாறிப் போனார் பேராசிரியர் அவர்கள். தன் தரப்பை எடுத்துச் சொல்ல முனைந்தார்.

‘பசங்க பரிட்ச எழுதறாங்க. சத்தமா இருந்தா எப்படி எழுதுவாங்க? அதான் தடுப்பு வெச்சிருக்குதில்ல? அதத் தூக்கிப் போட்டுட்டு வந்தா என்ன அர்த்தம்? வெச்சதுக்கு என்ன மரியாத?’ என்று நூறு பேர் உள்ள வகுப்பில் பாடம் எடுக்கும் சத்தத்தோடு கேட்டார்.

ஒருவன் கேட்டான்.

‘இது மாணவர்கள் போறதுக்கான வழிதான? நீங்க எப்படித் தடுப்புப் போடலாம்?’

இன்னொருவன் கேட்டான்.

‘பிரின்சிபால் கிட்டப் பர்மிஷன் வாங்கித்தான் போட்டீங்களா?’

கூட்டத்திற்குள் இருந்து ஒருவன் சொன்னான்.

‘யுனிவர்சிடி எக்சாமா நடக்குது? தடுப்புப் போடறதுக்கு?’

கூட்டம் கூடுவதைப் பார்த்துத் துறைக்கு ஓடிய மேகாஸ் அங்கிருந்த மற்ற ஆசிரியர்களையும் கூட்டி வந்தார். வேறு துறை ஆசிரியர்களும் சத்தம் கேட்டும் கூட்டம் பார்த்தும் வந்தார்கள். பேராசிரியர் அவர்களைச் சூழ்ந்து மாணவர்கள் கூட்டம் இருப்பதைப் பார்த்த ஆசிரியர் ஒருவர் சொன்னார்.

‘ஐயாவ வெளிய விடுங்க. எதுனாலும் துறைக்குப் போயிப் பேசிக்கலாம்.’

அவரை அங்கிருந்து அகற்றி வெளியில் கொண்டுவந்து விடும் நோக்கம் மாணவர்களுக்குப் புரிந்துவிட்டது. மாணவர் தலைவனைப் போலத் தெரிந்த ஒருவன் சொன்னான்.

‘இவனோட சட்டய அவரு கிழிச்சிருக்கறாரு. அதுக்குப் பதில் சொன்னப்பறம் கூட்டிக்கிட்டுப் போங்க.’

இன்னொருவன் சொன்னான்.

‘நாயின்னு திட்டியிருக்கறாரு. நாங்கெல்லாம் நாயா? அதுக்கு மொதல்ல மன்னிப்புக் கேக்கச் சொல்லுங்க.’

‘தெனமும் கொரைக்கறது நாங்களா? நீங்களா?’ என்று அடையாளமில்லாத ஒருகுரல் கூட்டத்திலிருந்து வந்தது.

‘டேய்… என்ன ஓர் ஆசிரியருன்னு மட்டு மரியாத இல்லாத என்னென்னமோ பேசற? அவர மொதல்ல வெளீய விடு. வேண்ணா பிரின்சிபால் ரூம்க்குப் போயிப் பேசிக்கலாம்’ என்றார் ஆசிரியர் ஒருவர்.

மாணவர் கூட்டம் பெருகியதும் முன்னின்ற மாணவர்களுக்கு உற்சாகம் பெருகிவிட்டது. முகத்தைத் தீவிரமாக்கிக் கொண்டு முழக்கம் போலச் சத்தம் எழுப்பினார்கள்.

‘நாய்னு சொன்னதுக்கு மன்னிப்புக் கேக்கணும்.’

‘சட்டைக்குப் பதில் சொல்லணும்.’

‘பனியன்கூட இல்லாத அவன் எப்படி வெளிய போவான்? அவரு சட்டயக் கழட்டிக் குடுக்கட்டும்.’

‘ஆமா… அவரு சட்டயக் கழட்டிக் குடுக்கட்டும்.’

‘அவருதான் பனியன் போட்டிருக்கறாருல்ல. சட்டயக் கழட்டிக் குடுத்துட்டுப் போகட்டும்.’

‘மன்னிப்புக் கேள்… மன்னிப்புக் கேள்.’

‘சட்டயக் கழட்டிக் குடு…சட்டயக் கழட்டிக் குடு.’

‘மாணவன் மானத்தைக் காப்பாற்று.’

‘சட்டை கொடுத்து மாணவன் மானத்தைக் காப்பாற்று.’

‘சட்டை கொடுத்து மாணவன் மானத்தைக் காப்பாற்று.’

அந்த முழக்கம் பரவி மாணவர் கூட்டம் முழுக்க எதிரொலித்தது. பேராசிரியர் அவர்கள் அருகில் நின்ற  ஆசிரியர் ஒருவர் காதுக்குள் ‘ஐயா, இது சாதிப் பிரச்சினையா மாறற மாதிரி தெரியுது. நாய்ங்களுக்கெல்லாம் சட்ட எதுக்குன்னு கேட்டீங்கன்னு பேசறாங்க’ என்றார். சூழலை முழுவதும் உணர்ந்துகொண்ட பேராசிரியர் அவர்கள் மனதில் என்னென்னவோ காட்சிகள் ஓடின. அவற்றின் விளைவுகளும் தோன்றின. உடனே சட்டென்று முடிவெடுத்து ஓர் ஓரமாய் ஒதுங்கி நின்ற அந்த மாணவன் சுரேஷ் கையை எட்டிப் பிடித்து முன்னிழுத்தார். அவன் கைகளைத் தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டார்.  பிறகு சொன்னார்.

‘நாயின்னு சொன்னது தப்புத்தாம்பா. மன்னிச்சிரு.’

அவர் முகத்தை ஆச்சரியமாக நிமிர்ந்து பார்த்தான் சுரேஷ். ஆசிரியர் இத்தனை சீக்கிரம் இறங்கி வருவார் என்று அவன் நினைக்கவில்லை போலும். அடுத்துப் பேராசிரியர் செய்த செயல் கூட்டம் முழுவதையும் அதிரச் செய்து அமைதியாக்கியது.

‘ஓய்வு பெறப் போற வயசுல இருக்கறன். உன்னோட தாத்தா மாதிரி. எனக்கொன்னும் பிரச்சினயில்லப்பா. இந்தா நீ போட்டுக்கிட்டுப் போ’ என்று சொல்லித் தன் சட்டையைக் கழட்டத் தொடங்கினார்.

‘ஐயா’ என்று சிலர் கத்தினார்கள். அதில் ஆசிரியர்களும் அடக்கம்; மாணவர்களும் அடக்கம். இரண்டு பொத்தான்களைக் கழட்டிவிட்டார். அவசரத்தில் பொத்தான் வரவில்லை. மூன்றாம் பொத்தானைக் கழட்ட அவர் முயன்று கொண்டிருந்த போது அந்த மாணவன் சுரேஷ் தம் இருகைகளாலும் பேராசிரியர் அவர்கள் கைகளைப் பிடித்தான்.

‘ஐயா… கழட்ட வேண்டாங்கையா. எனக்குச் சட்ட இருக்குது. பக்கத்துலதான் ஹாஸ்டல். போயி மாத்திக்குவன். வேண்டாங்கையா… வேண்டாம்.’

‘இல்லப்பா. ஒன்னும் பிரச்சின இல்ல. கை வச்ச பனியன்தான் உள்ள போட்டிருக்கறன்’ என்று பேராசிரியர் அவர்கள் சொன்னார்.

அதைக் கேட்டு நெகிழ்ந்த சுரேஷ் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது.

‘வேண்டாங்கையா… வேண்டாம்’ என்று சொல்லி அவர் கைகளை விட்டுவிட்டுக் கிழிந்த சட்டையை ஒருகையில் இறுக்கிப் பிடித்தபடி உடனே கூட்டத்தைத் துளைத்துக் கொண்டு வேகமாக வெளியேறினான். பிரச்சினை இத்தனை சீக்கிரம் முடிவுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்காததால் அவன் பின்னாலேயே கூட்டம் கலைந்து போனது. கழட்டிய பொத்தான்களைப் போடாமலே பேராசிரியர் அவர்கள் நடந்தார். அவரைச் சூழ்ந்திருந்த ஆசிரியர்களும் ஒன்றும் பேசாமல் அவர் பின்னாலேயே நடந்தனர்.

ஆசிரியர் அறைக்குப் போகும் கதவுக்குள் நுழைந்து தம் நாற்காலியில் உட்கார்ந்தார். அவர் கண்ணுக்கு நேராக இருந்த சுவரோரத்தில் அந்த நாய் படுத்திருந்தது.

Previous articleசெல்லையா கு.அழகிரிசாமியானது-கி.ராஜநாராயணன்
Next articleகலை அறுதியாக அகவயமான ஒன்று-காலத்துகள்
பெருமாள்முருகன்
பெருமாள்முருகன் (பி. 1966) ஒரு தமிழ் எழுத்தாளர். இவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் கூட்டப்பள்ளியில் பிறந்தவர். தமிழ் வட்டார நாவலின் முன்னோடியாகிய எழுத்தாளர் ஆர். சண்முகசுந்தரம் குறித்து ஆய்வு செய்து தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அரசு கலைக் கல்லூரி ஒன்றில் தமிழ்ப் பேராசிரியராகவும் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றியவர். "பெருமாள்முருகன்” என்னும் பெயரில் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை ஆகியவற்றை எழுதி வருகிறார். இளமுருகு என்னும் பெயரில் கவிதைகள் எழுதியுள்ளார். காலச்சுவடு இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவராக இருந்தார். மனஓசை, குதிரைவீரன் பயணம் ஆகிய இதழ்களின் ஆசிரியர் குழுவில் பணியாற்றி உள்ளார். கல்வி பற்றிய பல கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரது ஒன்பது நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நிழல்முற்றம் நாவல் போலிஷ் மொழியிலும் மாதொருபாகன் நாவல் ஜெர்மன் மொழியிலும் செக் மொழியிலும் வெளியாகியுள்ளன. மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகள் பலவற்றில் மாதொருபாகன் நாவல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவரது பெரும்பாலான நாவல்கள் மலையாளத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. அகராதியியல், பதிப்பியல் ஆகிய துறைகளில் ஆர்வமுடையவர். அத்துறைகளில் நூல்கள், கட்டுரைகள் எழுதியுள்ளார்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.