தாய்ப்பாசம் என்னும் விழுது

ர்மாவில் 1908ஆம் ஆண்டில் அண்ணாஜிராவ் என்பவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அடுத்து சில ஆண்டுகளிலேயே அவர் தன் குழந்தைகளோடு கர்நாடகத்தின் கடற்கரை ஊரான பைந்தூருக்கு இடம்பெயர்ந்து வந்தார். அந்த ஊரில் ஆரம்பப்பள்ளிப்படிப்பு மட்டுமே அந்தப் பெண் குழந்தைக்குக் கிடைத்தது. பன்னிரண்டு வயதிலேயே திருமணம் நடந்துவிட்டது. அவரை மணந்துகொண்டவர் சிவசங்கரராயர் என்னும் இளைஞர். அவர் அதுவரை செய்துவந்த வேலையை உதறிவிட்டு காந்தியடிகள் தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டார். கதராடைகள் உடுத்தினார். போராட்டத்தில் ஈடுபட்டு அடிக்கடி சிறைக்குச் சென்றார். விடுதலை பெற்ற பிறகு தினமும் நூல் நூற்றார். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ஏதேனும் பத்திரிகைகளில் மெய்ப்புத் திருத்துநராக வேலை செய்து பணம் ஈட்டினார் கட்டுரைகளை எழுதினார்.  நிரந்தரமான ஒரு வேலை இல்லை. பதினாறு வயதில் அந்தப் பெண் முதல் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.

வருமானத்துக்கான வழியாக தனக்குத் தெரிந்த கல்வி அறிவின் அடிப்படையில் அக்கம்பக்கத்துக் குடும்பங்களைச் சேர்ந்த சிறுமிகளுக்கு அந்தப் பெண் கல்வி கற்பித்தார். அதன் வழியாக தன் கற்கும் ஆற்றலையும் அவர் வளர்த்துக்கொண்டார். ஒரு பண்டிதர் இலவசமாக கற்பித்த இந்திமொழி அறிவின் உதவியோடு தானே முயன்று மேன்மேலும் படித்து விஷாரத் தேர்வு எழுதி வெற்றி பெற்றார். அதற்கான சான்றிதழை காந்தியடிகளின் கைகளிலிருந்து பெற்றுக்கொண்டார். அப்போது தற்செயலாக அவருக்குக் கிடைத்த இந்தி மொழியறிவு எதிர்காலத்தில் இந்தி ஆசிரியையாக வேலை பார்க்கும் வாய்ப்பை அளித்தது.  தாய்மையடைந்த ஒவ்வொரு முறையும் பிள்ளைப்பேற்றுக்காக சகோதரர்கள் வீடுகளுக்குச் செல்வதைச் சங்கடமாக உணர்ந்தாலும், வருமானமில்லாத நிலையில் அவருக்கு வேறு வழி தெரியவில்லை. வேலை வாய்ப்புகளைத் தேடி கணவர் பூனா நகரத்தில் குடியேறியபோது, கணவரோடு சேர்ந்து அவரும் சென்றார். அவரைப் பொறுத்தவரை கர்நாடக வாழ்க்கை அத்துடன் முடிவடைந்தது.

பள்ளிக்குச் செல்ல வாய்ப்பில்லாதவர்கள் காசி இந்து பல்கலைக்கழகத்தின் வழியாக நேரிடையாக மெட்ரிக்குலேஷன் தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பு அப்போது இருந்தது. அந்தப் பெண் அத்தேர்வை எழுதும் ஆவல் கொண்டிருந்தாள். ஆனால் அவருடைய குடும்பம்  அதற்கு அனுமதிக்கவில்லை. அடுத்தடுத்து நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.  அவருடைய மூத்த மகன் வளர்ந்து மெட்ரிக்குலேஷன் தேர்வு எழுதுவதற்குச் சென்றபோது, அந்தப் பெண்மணியும் மகனோடு சேர்ந்து தேர்வெழுதி வெற்றி பெற்றார். அதற்குப் பிறகு கல்லூரியில் சேர்ந்து டீச்சிங் டிப்ளோமா பெற்றார். அந்த வெற்றி அவருக்கு நல்ல வேலை வாய்ப்பை அளித்தது. அவர் மகன் கல்வியைவிட கலைகளில் நாட்டம்  கொண்டவராக இருந்தார். இசை, நடனம் அனைத்திலும் தேர்ச்சி பெற்றார். அழகான தோற்றமும் திறமையும் கொண்ட அவரை திரையுலகம் தக்கவைத்துக்கொண்டது. தன் ஆற்றலால் மிக விரைவாக நாடறிந்த நல்ல நடிகர் எனவும் நல்ல இயக்குநர் எனவும் பெயர் பெற்று புகழீட்டினார். மகனின் முன்னேற்றத்தைக் கண்டு தாய் மகிழ்ச்சியில் திளைத்திருந்தார். கெடுவாய்ப்பாக அந்தக் கலைஞரின் இல்வாழ்க்கையில் புயல் வீசியது. முப்பத்தொன்பது வயதிலேயே மறைந்துபோனார். அந்தக் கலைஞரின் பெயர் குருதத். அவர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களால்  திரைக்காவியங்களாக கருதப்படுபவை. அவருடைய தாயார் பெயர் வாசந்தி படுகோணே.

இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் வாழும் வாய்ப்பு வாசந்தி படுகோணேக்குக் கிடைத்ததால், அவர் ஏழு மொழிகளைக் கற்றுக்கொண்டார்.  கன்னடத்தில் மொழிபெயர்க்கும் அளவுக்கு அவருக்கு கன்னட மொழிப்புலமையும் இருந்தது. நாடகம், இசை, திரைப்படம், வாசிப்பு என எப்போதுமே ஏதேனும் ஒரு செயலில் ஆர்வத்தோடு முழுமையாக ஈடுபட்டுவிடும் அவரை மகனுடைய திடீர் மறைவு துயரத்தில் மூழ்கவைத்துவிட்டது. அதிர்ச்சியில் அவர் மனம் செயலிழந்ததுபோல உறைந்துவிட்டது. அவருடைய மனபாரத்தைக் குறைக்கும் வகையில் அவருடைய இன்னொரு மகனான ஆத்மாராம் குருதத் பற்றிய நினைவுகளை எழுதும்படி தூண்டினார்.  அதற்காகவே காத்திருந்ததுபோல அவர் உடனடியாக அந்த எழுத்துவேலையில் இறங்கிவிட்டார்.  ஒவ்வொரு நாளும் சில பக்கங்களென நினைவிலிருந்து எழுதினார். குருதத் பிறந்து வளர்ந்து கலைஞனாக உருவாகி மறைந்த வரலாற்றை ஒரு அழகான நினைவோடைப்பதிவாக ‘என் மகன் குருதத்’ என்ற பெயரில் கருமமே கண்ணாக இருந்து எழுதி முடித்தார்.  

சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, அது புத்தகமாக முதன்முதலாக 1976இல் வெளிவந்தது. உடனடியாக அது இந்தியிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகி, அவருடைய எழுத்தாளுமையை உலகமே அறிந்துகொள்ள வழிவகுத்தது. அரை நூற்றாண்டுக்குப் பிறகு மொழிபெயர்ப்பாளர் நல்லதம்பியின் முயற்சியால் இப்போது தமிழுக்கு வந்திருக்கிறது. நினைவோடை வரிசையில் இது ஒரு முக்கியமான நூலாக நிலைத்திருக்கும்.

கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் நிரந்தர வருமானமென எதுவும் இல்லாத ஓர் இலட்சியவாதியைத் திருமணம் செய்துகொண்டு ஒவ்வொரு ஊராக அவருக்குப் பின்னால் அலையும் ஓர் இளம்பெண்ணின் துயரத்தையும் ஆற்றாமையையும் வாசந்தியின் நினைவோடை வழியாக நம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது. எந்த இடத்திலும் அவர் யாரைப்பற்றியும் குறை சொல்லும் தொனியில் ஒரு சொல் கூட எழுதவில்லை என்பது கவனித்தக்கது. அவருடைய அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இடையில் நல்ல உறவில்லை. அப்பாவைப் பார்த்தால் அம்மாவுக்குப் பிடிப்பதே இல்லை. இருவரும் பிரிந்தே வாழ்கிறார்கள். எப்போதாவது மகளைப் பார்ப்பதற்காக அப்பா வரும் வேளையில் அம்மா வீட்டைவிட்டு வெளியேறிவிடுகிறார். அப்பா மகள் மீதும் பேரக்குழந்தை மீதும் பாசமழை பொழிகிறவராக இருக்கிறார். ஆனால் தன் துணையைவிடத் தாயின் துணையே மகளுக்கு மிகவும் அவசியம் என்னும் எதார்த்தத்தைப் புரிந்துகொண்டதும், அந்தக் குடும்பத்திலிருந்தே வெளியேறிவிடுகிறார். தெரியாத ஏதோ ஓர் ஊரில் வசித்து அப்படியே மறைந்துவிடுகிறார்.

வாசந்தி பிள்ளைப்பேறு சமயத்தில் படும் துன்பங்களைப் படிக்கும்போது அக்காலத்திய குடும்ப உறவு பற்றிய சித்திரங்களைப் புரிந்துகொள்ளமுடிகிறது. ஒவ்வொரு பிள்ளைப்பேறும் யாரோ ஓர் உறவுக்கார அண்ணன் வீட்டிலோ, அக்கா வீட்டிலோ நடைபெறுகிறது.  அப்போது மூன்று நான்கு மாதங்கள் தங்க நேரிடுகிறது. அவர்களில் யாரும் வசதி படைத்தவர்களோ பெரிய வீட்டுக்குச் சொந்தக்காரர்களோ அல்ல. அவர்களும் கிடைத்த வேலை செய்து வாடகை வீடுகளில் ஒடுங்கி காலத்தைத் தள்ளுகிறவர்கள். அவ்வப்போது அவர்கள் ஆற்றாமையில் வெடித்துப் பேசுகிறார்கள். கசப்பைக் காட்டுகிறார்கள். ஆனாலும் ஆதரித்து நல்ல முறையில் பிள்ளைப்பேறு பார்த்து குழந்தையோடு அனுப்பி வைக்கிறார்கள். அன்பும் சலிப்பும் ஒருங்கே அமைந்த குடும்ப அமைப்பை வாசந்தி அளிக்கும் சிறுசிறு சித்திரங்களிலிருந்து உணர்ந்துகொள்ள முடிகிறது. ஒவ்வொரு நினைவுக்குறிப்பின் வழியாகவும் அன்றைய சமூகத்தின் குறுக்குவெட்டுச் சித்திரத்தைப் பார்க்கமுடிகிறது.

திருமணத்துக்குப் பிறகு ஒருமுறை வாசந்தியின் கணவர் மலேரியா காய்ச்சல் வந்து படுத்த படுக்கையாகக் கிடந்தார். அப்போது அங்கே வந்த உறவுக்காரர் ஒருவர் யாராவது நல்ல ஜோதிடரை வீட்டுக்கு வரவழைத்து ஜாதகக்குறிப்புகளைக் காட்டுமாறு கேட்டுக்கொண்டார். உடனே ஜோதிடரும் வரவழைக்கப்பட்டார். ஜோதிடர் வாசந்தியின் ஜாதகக்குறிப்பைப் பார்த்தார். பிறகு உள்ளங்கையைப் பிரித்துக் காட்டுமாறு சொல்லி கைரேகைகளையும் பார்த்தார். பிறகு முகமலர்ச்சியோடு “மகளே, நீ பாக்கியசாலி. இன்னும் ஓராண்டுக்குள் உனக்கு ஒரு மகன் பிறப்பான். அவன் உங்கள் குடும்பத்துக்கு நல்ல பேரையும் புகழையும் ஈட்டிக் கொடுப்பான்” என்று சொல்லிவிட்டு ”ஆனால்…” என்று எதையோ சொல்ல நினைத்துச் சொல்லாமலேயே நிறுத்திவிட்டார். திருமணம் மட்டுமே ஆகியிருந்த இளம்பெண்ணான வாசந்தி குழந்தை பற்றிய செய்தியைக் கேட்டு வெட்கத்தோடு அங்கிருந்து ஓட்டமாக ஓடி மறைந்துவிட்டார். ஜோதிடர் முழுமையாகச் சொல்ல வந்தது என்ன என அவரும் சொல்லவில்லை. இவரும் கேட்கவில்லை. அவருடைய வெட்கம் அதைத் தடுத்துவிட்டது. அன்று புகழுக்குரியவனாக ஜோதிடரால்  குறிப்பிடப்பட்ட மகன்தான் குருதத்.

குழந்தையின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டத்தைப்பற்றிய நினைவுச்சித்திரத்தை அழகாக எழுதியுள்ளார் வாசந்தி. குழந்தை தன் இயல்பான சுறுசுறுப்போடு வீட்டுக்கு வருபவர்களிடமெல்லாம் “இது என்ன? அது என்ன?” என மாற்றி மாற்றிக் கேள்வி கேட்கிறது. ஒருநாள் ஆரத்தித்தட்டில் கையை வைத்துச் சுட்டுக்கொள்கிறது. இன்னொருநாள் பால் கறக்கும் பால்காரரைப் பார்த்துவிட்டு வந்து, அதே போல ஒரு பாத்திரத்தோடு தரையில் உட்கார்ந்து தன் முன்னால் ஒரு பசு நிற்பதுபோல கற்பனை செய்துகொண்டு ஒரு பாத்திரத்தில் பால் கறக்கிறது. பிறகு தனக்கு முன்னால் அமர்ந்திருப்பவர்கள் அனைவருக்கும் ஒவ்வொருவராக  பாலை ஊற்றிக் கொடுக்கிறது.  குழந்தையை வளர்க்கும் பருவத்தில் கிடைத்த  ஒவ்வொரு நாள் அனுபவத்தையும் ஒரு சித்திரமாக வாசந்தி தீட்டிக் காட்டியிருக்கிறார். அவருடைய நினைவாற்றல் வியப்பளிக்கிறது. எதையும் மிச்சமில்லாமல் சொல்லிவிடவேண்டும் என அவர் நினைப்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.

காந்தியடிகள் பெங்களூரில் தங்கியிருந்த சமயத்தில் தினமும் அவரைச் சந்தித்த அனுபவங்களை ஓரிடத்தில் நினைவு கூர்கிறார் வாசந்தி. குழந்தையான குருதத்துக்கும் கதராடை உடுத்தி தானும் கதர் உடுத்திக்கொண்டு அவரைச் சந்திக்கச் செல்கிறார். பிரார்த்தனைகளில் கலந்துகொள்கிறார். காந்தியடிகள் முன்னிலையில் பாடியிருக்கிறார். அவர் குழந்தை குருதத்தை வாங்கிக் கொஞ்சியிருக்கிறார். குழந்தைக்குக் கற்கண்டு கொடுத்து அது சுவைப்பதைப் பார்த்து மகிழ்ந்திருக்கிறார் காந்தியடிகள். என்றாவது ஒருநாள் குழந்தையோடு செல்லமுடியாதபோது “இன்று ஏன் குழந்தையைத் தூக்கிக்கொண்டு வரவில்லை?” என்று ஆர்வமுடன் கேட்கிறார் காந்தியடிகள். அவருடைய ஆசிரமத்தில் சேர்ந்து சேவையாற்றுவதற்கு வாசந்திக்கு ஆர்வம் இருக்கிறது. ஆனால் அப்போது வாசந்திக்குப் பதில் எதுவும் சொல்லாமல் புன்னகைத்து ஆசி வழங்கியபடி சென்றுவிடுகிறார் காந்தியடிகள். பிறகு சபர்மதியிலிருந்து அவருக்கு  ஒரு கடிதம் எழுதுகிறார். அக்கடிதத்தை நீண்ட காலம் பாதுகாத்து வைத்திருந்த வாசந்தி தன் நாடோடி வாழ்க்கையில் எங்கோ தொலைத்துவிட்டதாகக் குறிப்பிடுகிறார். ஒருவர் தன் வாழ்நாளில் தொலைக்கக்கூடாத ஒரு புதையலைத் தொலைத்துவிட்டதாக வருத்தத்தோடு குறிப்பிடுகிறார்.

ஒருமுறை குழந்தை குருதத்துக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விடுகிறது. வைத்தியர்கள் கைவிட்டுவிடுகிறார்கள். ஒரு மருத்துவர் வந்து இரவு முழுக்க வெந்நீர் கொடுத்தபடி இருக்கச் சொல்லிவிட்டுச் சென்றுவிடுகிறார். கண் திறக்காத குழந்தையை சுற்றி அனைவரும் அமர்ந்திருக்கிறார்கள். அதிகாலை சமயத்தில் குழந்தை கண் திறந்து “அம்மா தண்ணி” என்று கேட்கிறான். அந்த நேரத்தில் யாரோ தெருவில் ஜகி சர்வசுகி ஆஸா கோண ஆஹே என சுலோகத்தைப் பொருத்தமான தாளத்தோடு பாடியபடி செல்கிறார். நீடூழி வாழ்க என இறைவனே அக்குரல் வழியாக வாழ்த்தியதாக நினைக்கிறார். வாசந்தி அக்காட்சியை உணர்ச்சிமயமாகச் சித்தரித்திருக்கிறார். அக்காட்சியைப் படிக்கும்போது நமக்கும் அந்த உணர்ச்சி எழுகிறது. குழந்தைப் பருவத்தில் மரணத்தின் பிடியிலிருந்து பிழைக்க வைத்த விதி, நடுவயதில் அவரைக் கைவிட்டுவிட்ட அவலத்தை வாசந்தி குறிப்பிடாவிட்டாலும் நம் மனத்தில் அது ஒரு கேள்வியாக எழுந்து விடையைத் தேடுகிறது.

ஒருமுறை கல்கத்தாவில் இருக்கும்போது ஏதோ ஒரு நாடகம் பார்ப்பதற்காகச் சிறுவன் குருதத்தோடு செல்கிறார் வாசந்தி. அக்கம்பக்கத்தில் அமர்ந்திருப்பவர்களிடம் பேச்சு கொடுத்துப் பழகி நட்பைப் பெறுவது சிறுவனுக்குக் கைவந்த கலையாக இருக்கிறது. அன்று நாடக அரங்கிலும் பக்கத்தில் அமர்ந்திருந்த இளைஞர்களிடம் உரையாடி நட்பைப் பெறுகிறான் சிறுவன். இடைவேளை சமயத்தில் வெளியே செல்லும்போது அவனையும் தம்மோடு அழைத்துச் செல்கிறார்கள் அவர்கள்.  இடைவேளை முடிந்து நாடகம் தொடங்கிய பிறகும் கூட அவர்கள் யாரும் வரவில்லை. அப்போது அச்சத்தால் வாசந்தியின் மனம் நடுங்குகிறது. வெகுநேரத்துக்குப் பிறகு கை நிறைய பிஸ்கட், சாக்லெட், பிஸ்கட் பாக்கெட்டுகளோடு சிரித்துக்கொண்டே இளைஞர் படை சூழ புன்னகையோடு வந்து சேர்கிறான். அவனைப் பார்த்த பிறகே அவருடைய மனம் ஆறுதல் அடைந்தது என்று அன்றைய நிகழ்ச்சியை நினைவு கூர்கிறார் வாசந்தி.

அருகில் இருப்பவர்களிடம் பாசத்தோடு பேசிப் பழகுவது குருதத்தின் இயல்பாகவே இருந்திருக்கிறது. அதை வாசந்தி விவரிக்கும் பல சம்பவங்களிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது. ஒருமுறை வாசந்தி பிள்ளையோடு அகமதாபாத்தில் ஓர் அண்ணனின் வீட்டில் தங்கியிருக்கிறார். அப்போது அவர்களுடைய வீட்டுக்கு அருகில் வாடகைக்கு அறை எடுத்து மருத்துவத்தேர்வுக்குப் படித்துக்கொண்டிருக்கும் மாணவரொருவர் இருக்கிறார். குருதத் அந்த மாணவரோடு பேசி நட்பை சம்பாதித்துவிட்டான். வகுப்பு இல்லாத நேரங்களில் இருவரும் சேர்ந்து விளையாடி பொழுது போக்குகிறார்கள். திடீரென அந்த அண்ணன் வீட்டைவிட்டுப் புறப்பட்டுச் சென்றுவிடும்படி சொல்லிவிடுகிறான். அவர் அங்கிருந்து கல்கத்தாவுக்குச் செல்லவேண்டும். கையில் பணமில்லை. என்ன செய்வது என தவித்துக்கொண்டிருந்த வேளையில் அந்த மருத்துவ மாணவனே கல்கத்தா ரயிலுக்குச் சீட்டு வாங்கிக் கொடுத்து கைச்செலவுக்குப் பணமும் அளிக்கிறான். ”உங்களுக்கு வசதிப்படும்போது திருப்பி அனுப்புங்கள்” என்று சொல்லி வழியனுப்பிவைக்கிறான். துன்பம் நேரும்போதெல்லாம் யாரோ ஒருவர் அத்துன்பத்திலிருந்து மீண்டு வர உதவியாக இருப்பது உலக இயற்கையாக இருக்கிறது.

ஒருமுறை குடும்பத்துடன் பம்பாயில் வசித்து வந்த வேளையில் தான் பார்த்த உதயசங்கர் நாடகக்குழுவின் நடனத்தைப்பற்றி  வாசந்தி பரவசத்துடன் குறிப்பிடுகிறார். அன்று அவர் பார்த்தது சிவபார்வதி நடனம். சிவனும் பார்வதியும் உண்மையிலேயே கைலாயத்திலிருந்து இறங்கி வந்து நடனமாடியதைப்போல இருந்தது எனக் குறிப்பிடுகிறார் வாசந்தி. வாழ்நாள் முழுதும் நினைவில் நீடித்திருக்கக்கூடிய பேரனுபவம் என அதைக் குறிப்பிடுகிறார். ஆனால் அந்த நாடகத்துக்கு அவர் தன் மகன் குருதத்தை அழைத்துச் செல்லவில்லை. அதனால் நாடகத்தைப் பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பியதும் தாயிடம் கோபம் கொள்கிறான் அவன். அழுது சாப்பிட மறுத்து பல மணி நேரம் வீட்டுக்கு வெளியேயே உட்கார்ந்திருக்கிறான். மூன்று நாட்கள் அவனுடைய துயர அமைதி நீடிக்கிறது. அதற்குப் பிறகே அவன் தன் தாயாருடன் பேசத் தொடங்குகிறான். தொடங்கும்போதே ”என்றாவது ஒருநாள் நானும்  உதயசங்கரைப்போல மேடை ஏறிக் காட்டுகிறேன் பார்” என்று தாயிடம் சொல்கிறான். தொடக்கத்தில் சிறுபிள்ளையின் சொல் என்று அப்போது வாசந்தி நினைக்கிறார். ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு குருதத் உண்மையாகவே  மேடையேறும் தருணம் கூடி வருகிறது. மனத்துக்குள் எடுக்கும் முடிவை நடைமுறைப்படுத்தி ஈடேற்றிக்கொள்ளும் இயல்பு குருதத்திடம் இயல்பாகவே குடிகொண்டிருப்பதை உணரமுடிகிறது.

அந்த நாள் குருதத்தின் வாழ்வில் திருப்புமுனையான நாள் என்றே சொல்லவேண்டும். தானும் ஓர் உதயசங்கராக வேண்டும் என்கிற கனவை அவன் நெஞ்சில் வளர்த்துக்கொண்டான். நண்பரொருவரின் உதவியோடு ஒரு நுழைவுச்சீட்டை வாங்கிக்கொண்டு உதயசங்கரின் காட்சிக்கு சென்று வந்தான். அவன் கனவு மேன்மேலும் வளர்ந்தது. யாருக்கும் தெரியாமல் நடனப்பயிற்சியை மேற்கொண்டான். வாசந்திக்கு யார் என்ன செய்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளமுடியாத அளவுக்கு வீட்டு வேலை. வீட்டுச்செலவுக்குத் தேவையான பணத்தை ஈட்டவேண்டிய வேலையும் இருந்தது. தெரிந்த குடும்பத்தில் வசிக்கும் குழந்தைகளுக்குக் குஜராத்தியோ, இந்தியோ கற்றுக்கொடுத்து பத்தும் இருபதுமாகச் சம்பாதித்து காலத்தை ஓட்டினார். முறையான கல்வி இல்லாவிட்டாலும் தனிப்பயிற்சி மூலம் மருத்துவ உதவியாளராவதற்கு வசதியாக அப்போது ஒரு நான்காண்டுக் காலப் படிப்பை ஒரு கல்லூரி தொடங்கி உதவித்தொகை கொடுத்தது. உதவித்தொகை கிடைத்ததால் வாசந்தியும் அதில் சேர்ந்தார். ஆனால் அவரால் சில மாதங்களுக்கு மேல் அக்கல்வியைத் தொடரமுடியவில்லை. உதவித்தொகை கொடுத்துவந்த நிறுவனம் திடீரென உதவித்தொகையை நிறுத்திவிட்டது. வீட்டைவிட்டு வெளியே அலைய  முடியாதபடி வாசந்தி மீண்டும் கருவுற்றார். அதனால் அவருடைய மருத்துவக்கனவு கலைந்துவிட்டது. இருப்பினும் மனம் சோராமல் 1941இல் மகன் குருதத் மெட்ரிக் தேர்வு எழுதச் சென்றபோது, அவனோடு அவரும் சேர்ந்து அத்தேர்வை எழுதி வெற்றி பெற்றார். குருதத்தும் வெற்றி பெற்றார். ஆயினும் அவர் கல்வியைத் தொடராமல், கலை நாட்டம் கொண்டவராக இசை, நாடகம், நடனம் என வெவ்வேறு பயிற்சிகளின் திசையில் சென்றுவிட்டார். தன் சொந்தத் திறமையின் அடிப்படையில் உதயசங்கர் குழுவில் இணைந்து பணியாற்றத் தொடங்கினான். புதிதாக நாட்டியக்கதையைத் தானே எழுதி, தானே இயக்கி, மேடை மீது ஆடிக் காட்டினான். மெல்ல மெல்ல அவர் ஒரு சிறந்த மேடை நாடகராகவும் இயக்குநராகவும் உருவெடுத்தார்.

மேடைகளில் அவருக்குக் கிடைத்த வெற்றி, திரைத்துறையில் அவருக்கு நல்லதொரு அறிமுகத்தைக் கொடுத்தது. பூனாவில் செயல்பட்டு வந்த பிரபாத் திரைப்பட நிறுவனத்தில் மூன்றாண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணியாற்றச் சென்றார். அதன் முடிவில் தேவ் ஆனந்த் உதவியோடு ஒரு சில திரைப்படங்களில் சிறுசிறு பாத்திரங்களில் நடித்தார். திரைப்படங்கள் இல்லாத சமயங்களில் ஒருசில மாதங்கள் அம்மாவோடு வந்து இருப்பதும் பிறகு வாய்ப்பு கிடைத்ததும் திரைப்படங்களை நாடிச் செல்வதுமாக அவருடைய வாழ்க்கை அமைந்துவிட்டது.

தேவ் ஆனந்த் தொடர்பு குருதத்தின் வாழ்க்கையில் மற்றொரு திருப்புமுனையாக அமைந்தது. தேவ் ஆனந்த் இயக்கிய படத்தில் குருதத்தும் குருதத் இயக்கிய படத்தில் தேவ் ஆனந்தும் நடித்து வெற்றிப்படங்களை வழங்கினர். குருதத்தின் வாழ்க்கை வெற்றியின் திசையில் பயணத்தைத் தொடங்கினாலும் அவருடைய இல்வாழ்க்கை அவரை சரிவை நோக்கித் தள்ளியது. மனைவி உறவு சீரானதாக இல்லை. அந்தத் தோல்வி அவரை சோர்வுகொள்ள வைத்தது. இறுதியில் முப்பத்தொன்பது வயதிலேயே அவர் உயிர் பிரிந்தது.

வாசந்தி எழுதியிருக்கும் ஒவ்வொரு சித்தரிப்பிலும் அவருடைய தாய்மையுணர்வு நிறைந்திருப்பதைப் பார்க்கமுடிகிறது. எந்த இடத்திலும் வாசந்தி தன் மகன் குருதத்தை ஒரு சாதனையாளராக வாசகர்கள் முன் நிறுவ முயற்சி செய்யவே இல்லை. அவருடைய செயல்களில் சரியானது எது, சரியல்லாதது எது எனச் சீர்தூக்கி மதிப்பிடவும் முயற்சி செய்யவில்லை. இதை இதை இப்படிச் செய்திருக்கலாம், இதை இதை இப்படி செய்திருக்கக்கூடாது என எந்த இடத்திலும் மதிப்பிட்டுத் தீர்ப்பெழுதவும் முயற்சி செய்யவில்லை. மாறாக, ஒரு குழந்தையாக, ஒரு சிறுவனாக, ஓர் இளைஞனாக குருதத் தன் தாய்க்கு அளித்த மகிழ்ச்சியையும் பரவசத்தையும் பகிர்ந்துகொள்ளும் விதத்திலேயே வாசந்தி ஒவ்வொரு பக்கத்தையும் எழுதியிருக்கிறார். மருமகளின் பிற ஆடவர் தொடர்பை முன்வைத்து எழுதும்போது மட்டும் அவருடைய மனம் அவரையறியாமல் சமநிலை பிறழ்ந்து குற்றம் சுமத்தும் தொனியில் அமைந்துவிடுகிறது.

பிறந்த தருணத்திலிருந்து குருதத்துடன் கழித்த ஒவ்வொரு நிகழ்ச்சித்தருணத்தையும் அழகான பின்னணி விவரங்களோடு சித்தரித்திருக்கிறார் வாசந்தி. குருதத்தை திரையுலகில்  மட்டுமே பார்த்து மகிழ்ந்தவர்களுக்கு திரையுலகத்துக்குள் நுழையும் முன்னர் குருதத் எப்படி இருந்தார் என்று அறிந்துகொள்வதற்கு வாசந்தியின் குறிப்புகள் மிகவும் உதவியாக இருக்கும். வாசந்தியின் தாய்ப்பாசம் என்னும் விழுது ஏராளமான நினைவுக்குறிப்புகள் வழியாக இம்மண்ணில் ஆழமாக இறக்கியிருக்கிறது. இப்புத்தகத்தை படிக்கும் சமயத்தில், ஒரு நடிகரைப்பற்றி அந்நடிகரின் தாய் எழுதிய குறிப்புகள் என எந்த இடத்திலும் தோன்றவே இல்லை. தனக்குப் பிறந்த மூத்த மகனைப்பற்றி ஒரு தாய் எழுதிய நினைவுக்குறிப்புகளாகவே தோன்றுகின்றன. நல்லதம்பியின் சிறப்பான மொழிபெயர்ப்பு, வாசந்தியின் மன உணர்வுகளை முழுமையான அளவில் ஒவ்வொரு வாசகனும் உள்வாங்கிக்கொள்ள உறுதுணையாக அமைந்துள்ளது.

(என் மகன் குருதத் – கன்னட மூலம்: வாசந்தி படுகோணே. தமிழில்: கே.நல்லதம்பி. எதிர் வெளியீடு, 96, நியூஸ் ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி 642002. விலை. ரூ. 180)

Previous articleதேவதேவன் கவிதைகள்
Next articleசெல்லையா கு.அழகிரிசாமியானது-கி.ராஜநாராயணன்
பாவண்ணன்
பாவண்ணன் குறிப்பிடத்தக்க மூத்த தமிழ் எழுத்தாளர். ரசனையை அடிப்படையாகக்கொண்டு இவர் எழுதிய பல இலக்கியக் கட்டுரைகள் அழகியல் விமர்சகர்களின் வரிசையில் வைத்துக் குறிப்பிடப்பட வேண்டியவர். சிறுகதை, கவிதை, நாவல், குழந்தைப்பாடல்கள், கட்டுரைகள், திரைப்பட விமர்சனங்கள் எனப் பல தளங்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக, கன்னட மொழியிலிருந்து பல முக்கியமான ஆளுமைகளைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் சிறுகதை, நாவல், கவிதை, சுயசரிதைகள் என ஏராளமான படைப்புகளை மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.