லாப்ஸ்டர் விருந்து

1

கொத்தாக இறந்து கிடந்தன லாப்ஸ்டர்கள். இனி அவற்றால் எந்த ஆபத்தும் நமக்கில்லை. குவியலாகக் கிடந்த அவற்றின்  ஓடுகள் பழுப்பு நிறத்திலில்லை. . சிவப்பாகவும் இல்லை. நீலமாகவும் இல்லை. மாறாக அவை கண்களின் நிறத்தைப் போல இருந்தன. நம் இருவரது கண்களின் நிறம்! அவற்றை அழிப்பதற்காக நாம் அவற்றைத் தின்றோம் .எவ்வித கீறலுமில்லாத அதன் வெற்று ஓடுகளிலிருந்து  எவ்வாறாகவோ ஒரு முணுமுணுப்பு வருகின்றது . பழுதடைந்த  வண்டிச்சக்கரத்தின் ஓட்டை வழியே தப்பித்துச் செல்லும் காற்றைப்போல மென்மையான லாப்ஸ்டர்களிடமிருந்து கிசுகிசுப்பாய் வார்த்தைகள் வெளியேறுகின்றன. .அழிப்பதற்காகவே நாம் அவை எல்லாவற்றையும் தின்றோம் என்றாலும் சட்டென  துயரமாகவும் வெறுமையுமாகவும்  அளவுக்கதிகமாகவே வயிறு நிரம்பியிருந்ததைப் போலவும் உணர்ந்தோம். நான் உன்னிடம் திரும்பி முதல்முறையாக எனது காதலை சொன்னேன். நுரை ததும்பிய ஓடுகளோடு கொத்தாக இறந்து கிடந்த லாப்ஸ்டர்கள் ,  நாம் இருவரும் துகிலுரிப்பதை காத்திருந்து பார்த்துக்கொண்டிருந்தன ., லாப்ஸ்டர்களுக்கே உரிய எவ்வித எதிர்த்தாக்குதல் சப்தங்களையும் அவை  எழுப்பவில்லை. பதிலுக்கு நம் இனத்தையே அழித்து விடுவோம் என்பது போன்ற வெற்று வார்த்தைகளால் நம்மை அச்சுறுத்தவும் இல்லை. மாறாக உயிர்ப்பான கண்களை விடவும் சற்றே வேறுபட்டிருந்த கண்களோடு இறந்து கிடந்த லாப்ஸ்டர்கள் காத்துக்கொண்டிருந்தன. அங்கே கடற்கரையில் சூரியன் ஜொலித்தது. அழிக்கமுடியாதிருந்தது நம் காதல். என்றாலும்  பீடிகையாகச் செந்நிற நுரைகளை உமிழ்ந்து ஒதுக்கிக்கொண்டிருந்தது கடல். குவியல்களாகக் கிடந்த  லாப்ஸ்டர்களில் எதுவும் நகரவில்லை. சில மட்டும் அசைந்தன. அசைந்தவை இன்னமும் உயிரோடிருந்தன. அவற்றின்  அசைவுகளால் கொதிக்கும் வெந்நீர் பானையைப்போல நெளிந்தது லாப்ஸ்டர் குவியல் . நமது அழிவை ஒத்திவைப்பதற்காக நாம் அவற்றைத் தின்றோம். ஆனால் நம் அழிவுக்கு இனி எந்தத் தடையுமில்லை என்பது இப்போது தெள்ளத்தெளிவாகிறது. மணற்பரப்பில் என்னை லேசாக்கிக்கொள்கிறேன் நான். பிறகு உன் பக்கமாய் சாய்ந்து கண்களை மூடிய நான், உன் கால்களையும் பெரிய கைகளையும் மெதுவாக வருடியபடியே கண்ணயர்ந்து போகிறேன்.

2

கேப் காட் விடுமுறை தினம். லூஸி, சுடுமணலின்மேல் போர்வையை விரித்ததும் கொதிக்கும் மணலிலிருந்து என் பாதங்களைக் காப்பாற்ற அப்படியே அதில் தாவுகிறேன். சூசன் தனது உடலில் வெயில்படும் இடங்களில் எல்லாம் சன்ஸ்க்ரீனை தடவிக்கொண்டிருக்க எங்களையே வட்டமிட்டபடி இருக்கின்றன கடல்பறவைகள்.

எங்கள் மூவருக்கிடையில் அலைந்த சிவப்பு பந்தைப் பிடித்தபடி விளையாடினோம்.  பிறகு கடற்கரையோரம் நடந்தபடியே எனது பாதங்களால் மணலில் துளையிடுகிறேன் நான். அவற்றை வேகமாக வந்து நிரப்புகின்றன அலைகள்.  இங்கே மட்டும் தான் இவ்வாறு தண்ணீர் காலுக்கடியில் தேங்குமா அல்லது எங்கேயும் இப்படிதானா ?

நன்கு உடையணிந்திருந்த நீ கரையின் தூரத்திலிருந்து இலக்கற்ற கோடுகளைக் கிறுக்கிக்கொண்டிருக்கும் என்னைப்   பார்ப்பதை  நான் பார்க்கிறேன் . போர்வையைப் போலப் பெரிதாய் இருந்த ஒரு ராட்சச லாப்ஸ்டர் கரை ஒதுங்குவதைப் பார்க்கிறேன்.

இளஞ்சிவப்பாக இருந்தது அது. நான் லாப்ஸ்டரை பார்த்துக்கொண்டிருப்பதை நீ பார்க்கிறாய் .ஆனால் அதுகுறித்து நீ  எதுவும் செய்யவில்லை.  லாப்ஸ்டர் பெரும் பிரயத்தனத்தோடு நடக்க முயல்கிறது. ஆனால் அதன் கால்கள் ஈர மணலில் சிக்கி தானாகவே மணலில் புதைந்துகொள்கின்றன.

லாப்ஸ்டர்கள் நீரில் வேகவைக்கும் போது கதறும் என ஒரு தவறான கருத்து இங்கே நிலவுகிறது. உண்மையில் அந்த சத்தம் சூட்டின் காரணமாக ஓடுகளிலிருந்து வெளியேறும் ஆவியின் சத்தம். தொடவே கூடாது என்றெண்ணி அந்த ராட்சஸ லாப்ஸ்டரின் அருகில் செல்கிறேன். ஆனால் அருகில் கண்ட ஒரு மரக்குச்சியை  எடுத்து அதை மணலிலிருந்து தள்ளி கடலுக்குள் விரட்டுகிறேன். நான் மீண்டும் மீண்டும் நான் அதையே செய்யவும் அது போராடுவதை நிறுத்தியது. அந்த நொடியில் ஏதோ எனது உதவிக்காக அது காத்திருப்பது போல எனக்குத் தோன்றியது. நான் மீண்டும் மீண்டும் அதனை மணலின் அடியிலிருந்து வயிற்றுப் பக்கமாய் புரட்ட, கடல் பறவைகள் எக்காளமிடும் சத்தம் கேட்கிறது. இப்போது குபுக்கென ரத்தம் வெளியேறுகிறது. அதன் வயிற்றின் மீதும் , வயிற்றுக்குள்ளும்  கொத்திக் கொத்தி தின்கிற பறவைகளின் மீது நுரைத்து படிகிறது நீல ரத்தம். மிகவும் மென்மையான அந்த லாப்ஸ்டரால் நகர முடியவில்லை. வேகமாக அது தின்னப்பட்டுக்கொண்டிருந்தது. எனது குச்சி இன்னமும் அதில் குத்தியபடி தான் இருந்தது. குச்சி முழுவதும் நீலம். எனது கையிலும் நீலம். / எங்கும் நீலம். உன்னைத் தவிர. வெளிர் நிறத்தில் பரிசுத்தமாக இருக்கும் நீ தூரத்திலிருந்தபடி  என்னவோ போல என்னைப் பார்க்கிறாய்.

அந்த சத்தம்.. அது என்ன? சீழ்க்கை சத்தமா ?சீரும் சத்தமா? அல்லது கதறலா ? இப்போது கடலிலிருந்து ஆயிரமாயிரம் லாப்ஸ்டர்கள் வெளியே வருகின்றன. அவற்றின் சத்தம் சீழ்க்கையாகவோ சீறலாகவோ இல்லை . மாறாக அவை மாறி மாறி ஒரே வார்த்தையையே கிசுகிசுத்துக்கொண்டிருந்தன.

3

அப்படியும் இப்படியுமாகத் தலையை ஆட்டியவாறு உணவுப் பட்டியலைப் பார்த்தவாறு ,“எனக்கு ஒரு கிரீம் சாஸ் லாப்ஸ்டர்”,  என்ற சூசன்,  “ உள்ளூர் உணவு தானா என்று தயவுசெய்து உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். இவ்வளவு தூரம் நாங்கள் இங்கே  பயணப்பட்டிருப்பது, இறக்குமதியான கடலுயிரிகளை சாப்பிடுவதற்காக அல்ல!” என்கிறாள் .

இரண்டு பவுண்ட் எடையுள்ள லாப்ஸ்டர்கள் இரண்டையும் ஒரே கொதியில் போட்டவுடன் இறந்துவிடுமளவிற்கு கொதிக்கும் தண்ணீரில் துரிதமாகப் போடவும். பெரிய  கொடுக்குகளை உடைத்து அவற்றைக் கடாயின் நடுப்பகுதியில் இருக்குமாறு வைத்திடவும் . வென்மதுவாலும் தண்ணீராலும் அவற்றை முக்கியெடுக்கவும். பிறகு கொஞ்சம் பிரியாணி இலைகள், பார்ஸிலே, வெங்காயம் சேர்த்து இருபது நிமிடங்கள் கொதிக்கவிடவும். பிறகு அவற்றின் வால்களைப் பிரித்தெடுத்து உள்ளேயிருக்கும் கொழக்கொழப்பான வஸ்துக்களை வடிகட்டி மீதமிருப்பதை வெண்ணெய்யில் வறுக்கவும். அதனோடு லாப்ஸ்டர் சாறு இட்டு மிருதுவானதும், கொஞ்சம் சின்ன வெங்காயம், கிரீம் மற்றும் மதுவைச் சேர்க்கவும். பிறகு உடலைத் துண்டுகளாக்கி, ஓடுகளை இரண்டு ஓரத்திலும் வைத்து, அதன் தலையை உங்கள் பக்கமாக வைத்து, அதாவது, கடலை   விடுத்து  உங்களையே  நேரடியாகப் பார்ப்பது போல வைக்கவும்.

லூசி உதடுகளை சப்புக்கொட்டியவாறு உணவுப்பட்டியலைப் படிக்கிறாள்.

“எனக்கு லாப்ஸ்டர் போர்டுலேஸ் பிடித்திருக்கிறது” என்றவள் “அதனோடு கொஞ்சம் எலுமிச்சைகளும் தபாஸ்கோ சாசும்” என்கிறாள்.

வெள்ளை மதுவில் லாப்ஸ்டர் துண்டுகளின் சாற்றில் நறுக்கிய கேரட் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு சேர்க்கவும். லாப்ஸ்டர் பதப்படுத்தப்பட்டதாகவோ, குளிர்ந்த நீரில் பிடிக்கப்பட்டு ஓடுகள் கடினமானதாகவோ இல்லாமல் புத்தம் புதியதாக இருக்க வேண்டும். சரியாக  ஓடுகள் உதிரும் பருவத்திற்கு முன்னர் அவற்றால் நன்றாகப் பாதுகாக்கப்பட்டிருக்கும் லாப்ஸ்டர் தான் மிகவும் இனிப்பானதாகவும் உள்ளதிலேயே நல்ல சதைப்பிடிப்பையும்  கொண்டிருக்கும் .

பிறகு எனக்கு ?”ஒரு கோப்பை சோள வடிச்சாறு அதனோடு சாலட். தொட்டுக்கொள்ள கொஞ்சம் சாஸ்” என்கிறேன் நான்.

வேடிக்கையும் ஏளனமும் கலந்து என்னைப் பார்க்கிறாள் சூசன்.

“ஆனி மேரி.. இந்த கோடைக்காலத்தில்  கேப் பகுதியில் வந்து சைவத்தை கடைப்பிடிப்பது நீ ஒருத்தி தான். கொஞ்சம் வாழ்ந்து தான் பாரேன். நாம் உட்கொள்ளும் உணவு தானே நாம்!” என்கிறாள்.

‘ஐயோ! எனக்கு அப்படியில்லையே!’

4

நீல வான பிரகாசத்தில் நீரிலிருந்து தங்களின் வார்த்தையை மீண்டும் மீண்டும் கிசுகிசுத்தபடி ஆயிரக்கணக்கான லாப்ஸ்டர்கள் மெதுவாகக் கிளம்பிக்கொண்டிருக்கும் இந்த நாள் தான் எத்தனை அழகாக இருக்கிறது. மயக்கம் போடாத குறையாக வயிறு நிரம்ப தாங்கள் உண்டு தீர்த்த ருசியான லாப்ஸ்டரைப் பற்றி விவாதித்துக்கொண்டிருந்த கடல் புறாக்களின் வீங்கிய மார்புகளில் படிந்திருக்கும் நிறம் தான் எத்தனை அழகு.  லூசியும் சூசனும் தூரத்திலிருந்து என்னைப் பார்க்கின்றனர். செய்வதறியாது சிவப்பு  பந்தைக் கீழே போடுகிறார்கள். பிறகு சிறுவயதில் செய்தது போலவே  அந்திமாலையில் கடற்கரையோரம் கைகோர்த்து நடக்கலாம் என்றிருந்தோம். ஆனால் இப்போது கடலிலிருந்து ஒரு வித சத்தம் வருகிறது. அதனால் எங்கள் திட்டங்களை மாற்ற வேண்டிவரும் எனத் தோன்றுகிறது.

தேநீர் கெண்டியின் சீழ்க்கை ஒலியாக உயர்ந்துகொண்டே இருந்த அந்த சத்தம் சட்டென உடைந்து கிறீச்சிடும் சத்தமானது.  பிறகு கடற்கரைக் காற்றினை கிழிக்கும் கத்தியைப்போல அழகிய ஒற்றை ஒலியானது. அதன் பின்  மரசுத்தியைப்போல உடைந்தது சத்தம். முழுவதுமாக சத்தம் ஓய்ந்த கொஞ்ச நேரத்திற்கெல்லாம் எனக்கு அந்த வார்த்தை கேட்க ஆரம்பித்தது. லாப்ஸ்டர்கள் நம்மைக் கொல்லத் தயாரான அந்த சமயத்தில் நான் அதனை நன்றாகவே அடையாளம் கண்டுகொண்டேன்

நல்ல உடற்கட்டு உள்ளவனை முதலில் கொன்றன லாப்ஸ்டர்கள் . பின்னாலிருந்து அவை அவனை மடக்கவும் பொம்மையைப் போல உடைகிறான் அவன். அங்குமிங்கும் திரியும் கொடுக்குகளோடு அவை மோசமாக நடமாடிக்கொண்டிருந்தன. சூரிய ஒளியில் மின்னும் ஓடுகளோடு  அலை அலையாக சிவப்பும்  பழுப்புமாக மக்களின் முகங்களில் வழிந்தோடுகின்றன லாப்ஸ்டர்கள். குனிந்து நீல நிறமாயிருந்த என் கைகளைப் பார்த்த நான் இது நிஜமல்ல என்று எனக்குள் சொல்லிக்கொண்டிருந்தேன். ஆனால் நிச்சயம் இது நிஜம் தான்.  அவர்களின் வாய் மற்றும் மூக்கின் வழியாகச் சண்டையிட்டு   உள்ளே சென்ற லாப்ஸ்டர்கள் எந்தவித பாகுபாடும் இன்றி எல்லா தரப்பு மக்களையும் தாக்கிக்கொண்டிருந்தன..

லாப்ஸ்டர்கள் நம்மைக் கொன்றுகொண்டிருக்கும் வேளையில் நீ என்னை நோக்கி ஓடி வருகிறாய். மிருதுவான தோள்களில் சூரியன் மின்ன காற்றில் கலைந்த கூந்தலோடு என்னவோ வாயசைத்து நீ சத்தமிடுவது மக்களும், லாப்ஸ்டர்களும் போடும் கூச்சலில் எனக்குக் கேட்கவில்லை.  நீ என்னை நெருங்குகிறாய். நாம் அவை அத்தனையையும் அழித்தே ஆக வேண்டும் என்று என் காதுகளில் கிசுகிசுக்கிறாய் . மெதுவாக நான் தலையாட்ட இருப்பதிலேயே பெரிய லாப்ஸ்டர்  ஒன்றைக் கைகளில் பிடித்து இரண்டாகக் கிழிக்கிறாய். மிருதுவான வெம்மை மணலில் நீலம் சொட்ட ஒரு பாதியை என்னிடம் நீட்டுகிறாய். நானோ எங்கே அது என்னை காயப்படுத்திவிடுமோ என்று பல்லை கடித்துக்கொண்டு  தயங்கியபடியே கையில் வாங்குகிறேன்.

5

அதிகமாக நிரம்பியிருந்ததாகவே உணர்ந்தேன். லாப்ஸ்டர் துண்டுகளால்.  லாப்ஸ்டர் துண்டுகளின் துயரத்தால். நூற்றுக்கணக்கான விலைமதிப்பற்ற ஓடுகளை உடைத்தெறிந்த உணர்வினால். அழிவின் சத்தத்தால், அதன் காட்சியால். குவியலாக இறந்து கிடந்த லாப்ஸ்டர்களில் சிலவற்றின்  வெற்று ஓடுகளில் உதட்டுச் சாயம் ஒட்டிக்கொண்டிருந்தது. அவற்றின் வார்த்தைகள் ஒன்றோடு ஒன்று அடுக்கடுக்காய் சேர்கின்றன. எனது வயிற்றிலிருந்து எதுவோ கிசுகிசுக்கும் சத்தம் கேட்கிறது. சத்தங்கள் ஓயவில்லை. அவை கேட்பதற்குப் பாவமாகவும் அதே சமயம் உணர்ச்சியற்றதாகவும் இருக்கிறது. அடுத்து அடுத்து அடுத்து.. சத்தங்கள்.

‘சரி, அடுத்து என்ன செய்யலாம்?’ என்றேன் நான்.

“லாப்ஸ்டர் சாப்பிடலாமா?” என  சிரித்தபடியே ஏதோ நானும் கூட சேர்ந்து சிரிக்கவேண்டும் என்பது போல  கேட்கிறான் அவன். என் பக்கமாகச் சாய்ந்து அவன் முத்தமிட என்னை அப்படியே முழுதாக விழுங்கும் வரை பெரிதாக வளர்ந்துகொண்டே போகும் அவன் திறந்த வாயைப் பார்த்தன என் கண்கள்.

அலெக்ஸாண்டரா க்ளீமேன்

தமிழ் மொழிபெயர்ப்பு: ப்ரீத்தி வசந்த்


அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் ஒரு அமெரிக்க எழுத்தாளர் . 2016 பார்ட் ஃபிக்ஷன் பரிசு பெற்றதும் நியூயார்க் டைம்ஸ் எடிட்டர்ஸ் சாய்ஸ் வழங்கப்பட்டதுமானYou Too Can Have A Body Like Mine என்ற நாவலை எழுதியவர். 2016ல் வெளிவந்த இமிடேஷன்ஸ் என்னும் சிறுகதை தொகுப்பினை எழுதியவர். 2020 ரோம் விருதின் வெற்றியாளர். நியூயார்க் டைம்ஸ், தி கார்டியன், வேனிட்டி ஃபேர், வோக் ஆகியவற்றில் அவரது பணி மதிப்பாய்வு செய்யப்பட்டிருக்கின்றன.. கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றும் க்ளீமனின் இரண்டாவது நாவல் , ஹோகார்த் பதிப்பகத்தின் வாயிலாக ஆகஸ்ட் 2021 இல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.