கொரோனா கால நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக எங்காவது செல்லலாம் என்று முடிவெடுத்தபோது வால்பாறையைத் தேர்வு செய்தோம். அங்குச் சென்றடையும்வரை வழியெங்கும் வானுயர்ந்த மரங்களைத் தாங்கிய பள்ளதாக்குகளும் சாலையைக் கடந்து ஓடும் சிற்றறோடைகளும் துள்ளியோடும் மான்கள், மயில்கள், யானைகள், குரங்குகள், வரையாடு என வழிநெடுகிலும் தென்பட்டு கொண்டே இருந்தன. ‘புலிகள், யானைகள் வழித்தடம்; மெதுவாகச் செல்லுங்கள்’ என்ற அரசு சார்பில் வைக்கப்பட்டிருந்த பதாகைகள் சீரான இடைவெளியில் தென்பட்டன.
விலங்குகளின் வாழிடத்தை எவ்வளவு தூரம் ஆக்கிரமித்திருக்கிறோம் என்பதை அப்போதுதான் உணரமுடிந்தது. மிகப்பெரிய வனம் அது. விலங்குகள் மட்டுமே வாழக்கூடிய இடத்தில் சுற்றுலா என்ற பெயரில் எவ்வளவு வன்முறை இந்த இயற்கைக்கு இழைக்கிறோம் என்று தோன்றிய கணத்தில் பயணம் எனக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்திவிட்டது.
வால்பாறையின் உள்ளே நுழையும்போது காடுகளின் பச்சையம் நாசியைத் தொந்தரவு செய்தது. இதுவரை உணர்ந்தேயிராத வாசம் அது. இயற்கையோடு இணைந்து வாழாதவர்களுக்கு வனத்தில் இடமில்லை என்று அரசாங்கம் அறிவித்து இருந்தால் எவ்வளவு ஆச்சரியப்பட்டிருப்பேன்?
ஆனால் அரசு ஒருபோதும் அப்படிச் சொல்ல வாய்ப்பில்லை. ஏனெனில் அரசாங்கம் கானுயிர்களையும் பழங்குடி மக்களையும் பொருட்படுத்துவதாகத் தெரியவே இல்லை.
காணும் பொங்கலன்று பரம்பிக்குளம் புலிகள் காப்பகம் செல்வதற்கு ஐநூறு கார்களை வனத்திற்குள் செல்ல அனுமதித்திருக்கிறது வனத்துறை நிர்வாகம். ஐநூறு வாகனங்களின் பெட்ரோல், டீசல் வாடை பச்சையத்தின் குளிர்மையைச் சீர்குலைத்துவிட்டது. இத்தனை வாகனங்களின் சத்தமும் பனிமூட்டத்தின் ஊடே பரவும் வெளிச்சமும் கானுயிர்களுக்கு எத்தனை அச்சுறுத்தல்?
மான்கள் மிரளுவதைக் கண்கொண்டு பார்க்க முடியவில்லை.
ஒவ்வோர் உயிரியும் அதற்கே உரிய சுற்றுச்சூழலை வனத்திலோ அல்லது நிலபகுதியிலோ பெற்றுள்ளது.
அந்தச் சுற்றுச்சூழலுக்கு ஏற்றபடி வாழ அந்த உயிரி இயற்கையோடு இணைந்து செயல்பட்டு அச்சூழலில் வாழ்வதற்கேற்ற தகவமைப்புகளை உருவாக்கிக் கொள்ளும் தன்மையைப் பெற்றிருந்தாலும் எப்பொழுதும் இல்லாத புதிய ஒளி பாய்சலையோ அதிகமான ஒலியையோ வன உயிரிகளால் தாங்கிக் கொள்ள முடியாது. வன உயிரிகளின் இயல்பான சூழலை மனிதன் மாற்ற முற்படும் போதுதான் வன விலங்குகளுக்குப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
வன விலங்குகளுக்குப் பிரச்சனை ஏற்படும்போதுதான் சூழலியல் சமமின்மை உருவாகிறது; வனச் சூழல் பாதிக்கப்படும்போது இயற்கையில் வேண்டதகாத நிகழ்வுகள் ஒவ்வொன்றும் புவியில் ஏற்படுகின்றன.
மனிதன் காடுகளுக்கு ஏற்படுத்தும் அழிவைப் போன்ற அபத்தம் வேறொன்று கிடையாது. அதற்கும் மேலாக அங்கு வாழும் பழங்குடி மக்கள் இதனால் எதிர்கொண்ட துன்பங்கள் கொஞ்சநஞ்சமல்ல.
வால்பாறையில் மலசர், மலைமலசர், காடர் போன்ற பழங்குடியினர் வாழ்கின்றனர். அடர்ந்த காட்டின்னுள் தான் அவர்கள் வசிக்கிறார்கள். இந்த வனம் வணிகமயமாக்கப்படுவதற்கு முன்பு இன்னும் அடர்ந்த காடாக அது இருந்திருக்கக் கூடும்.
காட்டில் குருமிளகு, சாமை, இஞ்சி, மஞ்சள், தேன் எடுப்பது போன்ற அவர்களுக்கு உரித்தான வேலைகளைச் செய்து காட்டிலிருந்து நடந்தே வந்து வால்பாறையில் அதை விற்று காசாக்கி அவர்களுக்குத் தேவையான சிறு சிறு பொருட்களை வாங்கிகொண்டு நடந்தே தான் அவர்கள் திரும்பிச் செல்கின்ற்னார். ஆனால் அந்த நிலை இன்று முற்றிலும் மாறி இருக்கிறது.
வரலாற்றின் தொடக்க காலத்தில் பழங்குடிச் சமூகம் வனத்தில் சுயாட்சி நடத்திவந்திருகின்றனர். வனம்தான் அவர்களுக்கு எல்லாமும் என்பதை அரசும் நிர்வாகமும் வசதியாக மறந்து சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் அளித்து அவர்களை வனத்திலிருந்து வெளியேற்ற அரசு, தன்னால் எதை எல்லாம் மறைமுகமாக செய்ய முடியுமோ அதை செய்து கொண்டிருக்கிறது.காடுகளின் மீது மனிதனின் ஆதிக்கம் அதிகமானதின் விளைவு தான் சூழலியல் மாற்றத்திற்கான காரணி.அதிகமான பிளாஸ்டிக் பயன்பாடு மிக முக்கியமான காரணி.
டாப்சிலிப்
பொள்ளாச்சியில் இருந்து 35 கி.மீ. தொலைவில் இருக்கிறது டாப் சிலிப். அதாவது ஆழியாறு அணையிலிருந்து வால்பாறைக்கு ஒரு சாலையிலும், டாப்சிலிப்க்கு இன்னொரு சாலை வழியாகவும் செல்ல வேண்டும். வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளை கவரும் இடம். அடர்ந்த காட்டினுள் சென்று சுற்றிப் பார்த்து வர யானை சவாரி உண்டு. இன்னும் ஒரு அதிசயம் மர வீடு. உயரமான பெரிய மரங்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள மரத்தினாலான வீடுகள் இரண்டு உண்டு. நூல் ஏணியில் எறிச்சென்று இரவு தங்கலாம். நடு இரவில் உலா வரும் காட்டு விலங்குகளை மரவீட்டின் ஜன்னல் வழியே கண்டு ரசிக்கலாம். இதில் தான் பிரச்சினையே. தங்கி செல்ல வருபவர்கள் விட்டு செல்லும் பிளாஸ்டிக் கழிவுகள் வனஉயிர்களுக்கு பேராபத்தை விளைவிக்ககூடியவை.
பிளாஸ்டிக் கப், பாலிதீன் போன்றவற்றுக்குத் தடை என்று தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. ஆனால் இது போன்ற சுற்றுலா தளங்களில் அத்தடை அப்பட்டமாக மீறப்படுகிறது.
வன சுற்றுலா செல்ல மூன்று மணி நேரம் காடுகளுக்குள் அரசு வாகனத்தில் அழைத்து செல்லப்படுகின்றனர் மக்கள். ஆனால் மூன்று மணி நேரம் கையில் கொண்டு செல்லும் தின்பண்டங்கள் நெகிழி பைகளில் அடைக்கப்பட்ட உணவு பொருட்கள் தான். அடர்ந்த காடுகளுக்குள் ஒரே ஒரு நெகிழி கிடந்தாலும் அது வன விலங்குகளுக்கு நாம் இழைக்கும் இம்சைதான்.
காடுகளில் உள்ள பழங்குடி மக்கள் வன விலங்குகளுக்கு எந்த துயரையும் அளிப்பதில்லை. மாறாக கீழிருந்து காடுகளுக்கு செல்லும் சுற்றுலா வாசிகளால் முற்றிலும் வனத்தைச் சிதைக்கும் முயற்சியில் அனைவரும் சேர்ந்தே இயற்கைக்கு அநீதியை இழைக்கிறோம்.
மிக நுண்ணிய அளவு நெகிழி கூட மிகப்பெரிய அளவுக்கு இயற்கை சூழலை பாதிக்கும் என்பது தரவுகள் மூலம் நிருபிக்க பட்டுள்ளது.
பரம்பிகுளம் சரணாலயதில்
பெரிய இருவாச்சி, கருங்கழுகு என 218 வகைப் பறவைகள் இப்பகுதியில் தென்படுகின்றன, இவற்றில் 12 வகைப் பறவைகள் ஓரிட வாழ்விகள். அப்படிப்பட்ட வனப்பகுதியில் நெகிழி, தடையின்றி அரசு ஆணையைப் போல் தடையின்றி காற்றில் பறக்கிறது.
இதே வனப்பகுதியில் வேங்கைப் புலி, சிறுத்தை, செந்நாய், நரி, கரடி, யானை, கடமான் அல்லது மிளா (Sambar Deer), கேளையாடு, காட்டெருது, தேன் (Nilgiri marten), ஓரிடவாழ்விகளான (Endemic species) வரையாடு, நீலகிரி கருமந்தி, சோலைமந்தி (சிங்கவால் குரங்கு), பழுப்பு மரநாய், சின்ன பறக்கும் அணில் முதலிய பாலூட்டிகளும், ஆனைமலை சாலியா ஓணான், மலபார் குழிவிரியன் முதலிய ஊர்வனவும், காலில்லா பல்லிகள் (Caecilians), கொட்டான் எனும் கேழல்மூக்கன் தவளை எனப் பல அரிய உயிரினங்களைக் கொண்டுள்ள பகுதி இது.
சோலை மந்தி உணவுப் பற்றாகுறையால் தவிக்கிறது.
அதற்கு காரணம் அதன் வாழ்விடங்களையும் சேர்த்து மனிதன் ஆக்கிரமிப்பு செய்தது தான்.சமூகப் பொறுப்புணர்வு ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இருக்கிறது தானே?
கால்நடை மருத்துவ நண்பர் ஒரு முறை பேசிக்கொண்டிருக்கும் போது சொன்னவிஷயத்தில் அதிர்ச்சியில் உறைந்தே விட்டேன் .ஒரு யானை வயிற்று வலியால் துடித்து கொண்டிருந்தது.வயிற்று வலிக்கு மருந்து கொடுத்தும் வலி சரியாகவில்லை என்னவென்று பார்த்தால் நெகிழி பையை (lays பாக்கெட் கவர்) சாப்பிட்டுவிட்டதை பின்பு தான் அறிந்து கொள்ள நேர்ந்தது. எத்தனை துயரமான விஷயம்? தான் நெகிழியை சாப்பிட்டு விட்டேன் என்று அதனால் சொல்ல இயலுமா?
உணவு பற்றாக்குறையால் கிடைக்கும் அத்தனையும் சாப்பிடுவதால் தான் இத்தனை துயரங்களையும் அனுபவிக்கிறது. இயற்கைக்கு மாறான போக்கில் இடம்பெயர்வு செய்வது தான் மிக முக்கியமான பிரச்சனை. இது விலங்குகளுக்கு மட்டுமான பிரச்சனை அல்ல. மனிதனுக்குமான பிரச்னையும் கூட.
பழங்குடி மக்கள் இது குறித்து தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் போது மிகுந்த மன வருத்ததத்தில் உள்ளதாக தெரிவித்தனர். எங்கள் மூதாதையர்கள் வனத்தை உயிர் போல் தான் கருதினர். நாங்களும் அவ்வாறே கருதுகிறோம். சிறு துன்பம் கூட காட்டுயிர்களுக்கு ஏற்படுத்த கூடாது என்பதில் தெளிவாக இருக்கும் எங்களை வனத்தில் இருந்து வெளியேற்றுவதற்கான எல்லா முயற்சிகளையும் எடுக்கிறது அரசு
எங்களுக்கு வனம் தான் கடவுள். அங்கிருந்து எங்களைத் தேயிலை எஸ்டேட் பகுதியில் குடியமர்த்தும் செயல் எங்களை முற்றிலும் இழிவு படுத்தும் செயலாகும். காட்டுயிர்களுக்கு கேடு விளைவிக்கக் கூடாது என்று நினைக்கும் எங்களையே வன சுற்றுலாவுக்கு வழி காட்டியாக பயன்படுத்துவது பொருளாதார வாழ்வாதாரதிற்காக இருந்தாலும் மனப்பூர்வமாக நாங்கள் அதைச் செய்வதில்லை என்றும் கூறுகின்றனர். புலிகள் காப்பகப் பகுதியில் தங்களது வசிப்பிடம் வந்து விட்டதால் இயற்கை முறையில் விளைவிக்கும் கிழங்கு போன்றவற்றைக் கூட பயிரிட முடியாத நிலையில் இருப்பதைப் பகிர்ந்துகொண்டனர். வனச்சுற்றுலாவால் வனம் சீர்கேடு அடைவதை எங்களால் காண இயலவில்லை என்று மனம் நோக சொல்லிச் செல்கின்றனர்.
ஒரு நாட்டின் பரப்பளவில் முப்பதுமூன்று சதவீதம் காடுகள் இருக்க வேண்டும். அதாவது பூமியின் மூன்றில் ஒரு பங்கு காடுகள் இருக்க வேண்டும். கனிம வளங்கள் வெட்டியெடுப்பு சாலைகள் அமைத்தல் குடியிருப்புகள் அமைத்தல் சுற்றுலா விடுதிகள் அமைத்தல் போன்ற பல்வேறு காராணங்களால் காடுகள் வரை முறையின்றி அழிக்கப்பட்டு வருகிறது.இது காலநிலையில் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. காடுகள் பரப்பளவு குறைவதால் வன விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் வனப்பகுதியில் மோதல் ஏற்படுகிறது.உயிர்ப்பல்வகைமையைப் பேணுவதில் காடுகளின் பங்களிப்பே பிரதானமாக்கும். மலைப்பிரேதேசங்களில் காடுகள் அழிக்கப்படுவதென்பது எதிர்விளைவையே ஏற்படுத்தும்.காடுகள் அழிப்பதினால் அங்குள்ள நீருற்றுகள் படிப்படியாக அழிந்து போகின்றன. நதிகள் வற்றி போகும் சூழல் உருவாதலால் மனித விலங்கு எதிர் கொள்ளல் ஏற்படுகிறது.
இயற்கை-காட்டுயிர் பாதுகாப்பு என்பது புலிகள், யானைகளைப் பாதுகாப்பதுடன் முடிவடைந்துவிடுவதில்லை. நிலையற்ற பருவநிலை, சுரண்டப்பட்ட ஆறுகள் – கடல்கள், சீரழிந்த நிலம், வளமற்ற காடுகள் என அனைத்திலும் உயிரினப் பன்மை துடைத்தழிக்கப்பட்ட பிறகு ஆரோக்கியமாகவோ, மகிழ்ச்சியாகவோ, வளமாகவோ மனிதர்கள் வாழ முடியாது. ஏனென்றால், இந்த சிக்கலான உயிரின வலைப்பின்னல்தான் உலகுக்கும் மனிதர்களுக்கும் உயிர் தந்துகொண்டிருக்கிறது. இதில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு சிற்றுயிரிலிருந்து பேருயிர்வரை அனைத்துக்கும் முழுமையான பங்கிருக்கிறது.
அறியபடாத தீவுப் போல் அறியபடாத வனம் இருக்க வேண்டும்.வனத்தின் ரகசியம் ரகசியமாகவே இருந்து விடக்கூடாதா என்ற ஏக்கம் என்னுள் மீண்டும் மீண்டும் எழுகிறது. ரகசியத்தை அறிந்து கொள்வதில் இருக்கும் ஆர்வம் பாதுகாப்பதில் மனிதனுக்கு இருப்பதில்லை.
“எந்த ஒரு காடு சார்ந்த பாதுகாப்பு மற்றும் மேலாண்மை முயற்சியாக இருந்தாலும், அந்த மண் சார்ந்த மக்களை முன்னிறுத்தியே செய்யவேண்டும். அப்போதுதான் அவர்களின் முழுப் பங்களிப்பும் அதில் கிடைக்கும்,” என்று புலிகள் ஆராய்ச்சியாளர் குமரகுரு கூறியிருக்கிறார். ஆனால் மண்ணின் மைந்தர்கள் வெளியேற்றப்பட்டு கொண்டே சுற்றுலாவை மேம்படுத்தும்செயல்பாடுகள் சுற்று சூழல் சமமின்மையே அதிகரிக்கும்.
வன சுற்றுலாவில் சுற்றுசூழல் பருவ நிலை மாற்றங்களை மனதில் கொண்டு வனப் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவை நூறு சதவீதம் தடை செய்ய வேண்டும். போக்குவரத்துக்கு டீசல் பெட்ரோலிய எண்ணெய் வளங்களை பயன்படுத்தாமல் மாற்று எரிபொருட்களை பயன்படுத்த அரசு மாற்று திட்டங்களை கொண்டு வரவேண்டும். அதை முதலில் வனத்திலிருந்தே தொடங்க வேண்டும்.
இப்பேரண்டத்தின் மிகசிறிய துகள் மனிதன் என்பதை வசதியாக மறந்து விட்டு எல்லாவற்றையும் அவன் ஆளுகைக்கு உட்படுத்தி இப்புவியை அழிவு பாதைக்கு கொண்டு செல்வதில் முனைப்பாக இருக்கும் மனிதன் அதை பாதுகாப்பதில் தவறிவிடுகிறான்.
சசிகலா தேவி