நான்கு கவிதைகள்-மஸின் கம்சியே



நேற்றிரவு நான் மூன்றுமணி நேரம் கூட உறங்கவில்லை. எனவே நான் வேலை செய்தேன், கடுமையாக நடந்தேன், வாழ்க்கையைப் பற்றிச் சிந்தித்தேன். நம்மைச் சுற்றி நடக்கும் இனப்படுகொலையையும் அழிவையும் வலுக்கட்டாயமாகக் கவனித்தேன்.

உண்மைநிலையுடன் ஒப்பிடுகையில் எனது கொடுங்கனவுகள் ஒன்றுமில்லை போலத் தெரிந்தன. காசா பகுதியில் இருந்த எனது நண்பர்களைத் தொடர்புகொண்டேன். அங்கு அவர்கள் குண்டுவீச்சால் ஆடுமாடுகளைப் போல ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு விரட்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள், பாலஸ்தீனத்தின் பூர்வகுடி மக்களை முற்றாக ஒழித்துவிட்டு பாலஸ்தீனப் பிரச்சனைக்கு முடிவுகட்டுவதைப் போல இருந்தது. இவையனைத்தும் மேற்கத்திய அரசாங்கங்களின் ஆதரவுடன் சயொனிசத்தின் காலடியில் நிகழ்ந்துகொண்டிருந்தது. நான் நடைபயின்றபோது, இந்த வன்முறைக்கும் இன்றியமையாத் தேவைகள் (நிதி) கிடைக்காத நிலைமைக்கும் மத்தியில் நம்பிக்கை என்னும் பாலைவனச் சோலையைக் கட்டியமைப்பது எவ்வளவு கடினம் என்பதைப் பற்றிச் சிந்தித்தேன். செயல்வீரம் குறித்த எனது சிந்தனைகளைப்பற்றிய புத்தகம் ஒன்றில் முன்பு நான் எழுதிய எனது கவிதைகளையும் ஆங்காங்கே தெளித்திருக்கிறேன். பல ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய நான்கு கவிதைகளை இங்கே தருகிறேன்.


சிந்தனை
(11.11.2004)
வாழ்தல் சாதல்
கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம்
பற்றிய சிந்தனைகள்
எவ்வாறோ, எங்கோ, எப்போதோ
என்றும் தீராக் கேள்விகளைப் புரிந்துகொள்ள
ஏங்குகிறோம்
எங்கோ தொலைவிலிருக்கும்
ஆற்றல்மிக்க, அதிசயமிக்க
கடவுளின் மனதைத் தொட்டுவிடப்
பார்க்கிறோம்
ஆனால் நமக்குள் மறைந்திருக்கும்
வாழ்வின் இரகசியங்கள் அனைத்தும்
ஒரு கைகுலுக்களில்
ஒரு புன்னகையில்
குழந்தை ஒன்றின் விழிகளில்
ஓர் ஒற்றை உயிரணுவில்
அல்லது ஒரு முத்தத்தில்
காணக் கிடைக்கலாம்.

நோக்கம்
(20.04.2005)
தலைவிதி ஒன்றை உருவாக்கவோ
பகைமை கொண்டு செயல்படவோ
விரியும் விதியில் நம்மால்
தலையிடமுடியாது
ஆனால் இயற்கையில் உருவாகிவரும் அருவியை
மீறாமல் கெஞ்சாமல்
அழிக்காமல் செயல்பட உதவவும்
தடுக்காமல் கட்டியமைக்கவும்
உதவும் மகிழ்ந்தனுபவிக்கவும் முடியும்
எதிர்காலம் சுதந்திரமாக வாழ்வதற்கு
உள்நோக்கிக் காண்பது முக்கியம்
இயற்கையாய் மலர்வதற்கும் உதவுவதும்
வாழ்வின் அற்புதங்கள் வளர்வதற்கும்
வாழும் ஒவ்வொரு உயிரினத்திற்கும்
சிறந்த எதிர்காலம் விரிவதற்கும்
உதவமுடியும்.

ஓ, பாலஸ்தீனமே
(15.7.2005)
உனது சகோதரிகள் அவர்களுடைய
அரண்மனைகளில் தங்கச் சங்கிலிகளுடனும்
வெட்கமற்ற பொய்களுடனும் தங்கிக் கொண்டார்கள்
சிலர் பல்லை இளித்துக்கொண்டு
குற்றவாளிகளுக்கு உதவினார்கள்
மற்றவர்கள் கண்களை மூடிக்கொண்டிருப்பதைத்
தெரிவுசெய்தார்கள்
சிலர் வன்புணர்வையும் விரட்டுதலையும்
நியாயப்படுத்துகிறார்கள்
மற்றவர்கள் தங்கள் மௌனித்த கடவுளர்களிடம்
பிரார்த்தனை செய்தார்கள்
அந்த அழிவுகளின் வறட்சியான ஜூனில்
நிரப்பும் பணியை அவர்கள் முடித்துவிட்டதாக
நீங்கள் நினைத்தபோது
அச்சமூட்டும் செயல்களை முடிப்பதற்கு
அவர்கள் குன்றுகளின் மீதேறினார்கள்
நோய்வாய்ப்படுதல் மீறல்கள் ஆயின
வலிமைமிகு உங்கள் கரங்களில் அடர்திரள்
ஆர்மீனியன், சர்காசியன், ஹீப்ரூ மற்றும் டுரூஸ்
ஆதரவற்றோரைக் கனிவுடன் தூக்கிய கரங்கள்
பசித்த குழந்தைகளுக்குப் பால்தந்த
உங்கள் வெள்ளை மார்பகங்களில் சிதைவுகள்
எண்ணற்ற விழிகளின் கண்ணீரைத் துடைத்த
உங்கள் மென்மையான விரல்களில் காயங்கள்
லட்சக்கணக்கானோர்க்கு நம்பிக்கைகள் அளித்த
உங்கள் இரக்கமிகு முகங்களில் துயர்மிகு விழிகள்

பேராசைகொண்ட தற்செருக்கின் பலிபீடத்தில்
வெறித்தனமான காதைச் செவிடாக்கும் ஒலிகள்
வன்முறை இரத்தவெறி வன்புணர்வுகள்
நீதியையும் உண்மையையும் பலிகொடுத்த
எண்ணற்ற நீண்ட அறிக்கைகள்
நகர்வுகள், திட்டங்கள், தீர்மானங்கள்
குழந்தைக் கனவுகளின் நம்பிக்கைகள்
எங்கே போகின்றன?
விழிப்புணர்வு பெற்ற மனச்சாட்சியிலா?
ஒலிவ மரங்களிலா அல்லது கள்ளிச் செடிகளிலா?
காலத்திலா, தொலைவிலா, அல்லது போராட்டங்களிலா?
கம்பீரமான மலைகளின் ஆழத்தில் விழிக்கிற இதயத்திலா?
மௌனமான பாலைவனங்களின் அடியிலா?
1920 — 29 — 36 — 56 — .87 — 2000 —- என
அவ்வப்போது வெடித்தெழும் பாலஸ்தீன எழுச்சியிலா?

தோற்றுப்போன மனிதர்கள் நம்பிக்கையின்றி
அதிகாரத் துணுக்குக்காகத்
தீர்வுகளைக் குறித்து முடிவற்று வாதிடுகிறார்கள்
அது கதவுகளை உடைக்க
மூச்சுத்திணறடிக்கும் சுவர்களைத் தகர்த்தெறியப்
போராடும் வேளையில்
குலங்களும் பழங்குடிகளும் கானல்நீரைத்
துரத்துகிறார்கள்
பலவீனமானவர்கள் பொய்களில் வலிமையைக்
கற்பனை செய்துகொள்கிறார்கள்
இறுதியில்
கதிரவன் மீண்டும் ஒளிர்கிற போது
உங்களுடையதும் எங்களுடையதுமான
காயங்கள் அனைத்தையும் ஆற்றுவதற்கு உதவ
உன்னுடைய பழங்கால உத்வேகம் பிழைத்திருக்கிறது
என்பதை மறுப்பார் யாருமில்லை
ஓ பாலஸ்தீனமே.

பாலஸ்தீனத்தின்
(19-4-2006)
நான் இறக்கிற போது
எனது நினைவை எங்களுக்கு
வாழ்வையும் கல்வியையும் அன்பையும் அளித்த
பாலஸ்தீனத்தில் எனது நகரில்
எனது சாம்பலைப் புதையுங்கள்
பொய்யெதுவும் சொல்லாத வானில்
சமரசமற்ற சூரியனின் கீழ்
பாறைகள் நிறைந்த மண்ணை
உழுவதற்கும் திருமண நாட்டியம் ஆடவும்
நாங்கள் கற்றுக்கொண்ட
பாலஸ்தீனத்தில்
ஓர் உணவிலிருந்து பிரிக்கமுடியாத
அம்மாவின் கனிவான சொற்களில்
ஊஞ்சலாடவும் கற்றுக்கொண்ட
பாலஸ்தீனத்தில்
மசூதியிலும் தேவாலயத்திலும் ஒலிவ மர வனங்களிலும்
நாங்கள் வழிபாடு செய்த
அதுதான் எங்கள் இறுதி நாள் என்று அறியாதபோதும்
நாங்கள் ஒன்றாக அன்றாடம் வாழக் கற்றுக்கொண்ட
பாலஸ்தீனத்தில்
ஆக்கிரமிப்பை, நிலப் பறிமுதலை,
அமெரிக்க நிதியுதவி பெற்ற படையை
நாங்கள் வெறுத்த,
இழந்துவிட்ட நண்பர்களுக்காக
நாங்கள் துக்கித்த
தங்கியும் வாழ்ந்தும் நேசித்தும் எதிர்ப்புத் தெரிவித்த,
தங்க முடியாதபோது நன்மதிப்பாலும் அன்பாலும்
நாங்கள் தொடர்பிலிருந்துவந்த
பாலஸ்தீனத்தில்
துப்பாக்கிக் குண்டுகள், சோதனைச் சாவடிகள்
சுவர்களிலிருந்தும் பட்டினியிலிருந்து
தப்பிக் கடந்து பள்ளிக்குச் சென்ற
பாலஸ்தீனத்தில்
புகலிட முகாம்களில், தாயகம் துறந்த தனிமையில்
திருமணம் செய்துகொண்டோம்
குழந்தைகள் பெற்றுக்கொண்டோம்
சிரித்தோம், அழுதோம், வாழ்ந்தோம், நேசித்தோம்
பந்தை உதைக்கவும் முகமன் கூறவும்
எங்கள் குழந்தைகளுக்கு நாங்கள் கற்றுக்கொடுத்தோம்
அன்பு செலுத்தியும் நேசித்தும் வாழ்ந்த
எங்கள் முன்னோர்களின்
கோடானுகோடி ஆன்மாக்களுடன்
எங்கள் சாம்பல் சேர்ந்துகொள்ளும் என்று நம்புவதற்கு
“சாத்தியமில்லா 20 குணாம்சங்கள் போன்ற” வற்றுடன்
நேசித்து வாழும் எங்கள் குழந்தைகளுக்கு
இப்போதும் சொல்லிக் கொடுப்போம்
நாம் பாலஸ்தீனம் திரும்புவோம்
நமது குழந்தைகள் பாலஸ்தீனத்தில்
சுதந்திரமாக வாழ்வார்கள்.

(மாஸின் கம்சியே ஓர் இணைய வெளி நாடோடி கிராமவாசி)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.