“சிவாதிருச் சிற்றம்பலம்”
“தில்லையம்பலம்”
“ஹரஹர நமப் பார்வதீ பதயே” சிவ ராஜேஷின் குரல் வழக்கத்தை விடச் சத்தமாக ஒலித்தது. “பதயேஹ்ஹ்ஹ்” என்று நடுங்கிக்கொண்டே முடித்ததை உணர்ந்ததற்குச் சாட்சியாக “ஹரஹர மகாதேவா” என்று இன்னும் ஓங்கி ஒலித்தனர் சிவனடியார் திருக்கூட்டத்தினர்.
“தென்னாடுடைய சிவனே போற்றி”
“எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி”
அர்த்தமண்டபத்திலிருந்து புறப்பட்டுக் கோவிலின் ஒரே உட்பிரகாரத்தைத் தாண்டிக் கொடிமரம் வரை கேட்ட மகுடத்தின் எதிரொலியானது
“குவளைக்கண்ணி கூறன் காண்க”
“அவளும் தானும் உடனே காண்க” என்று நீண்ட போது அதன் உச்சத்தைத் தொட்டு நூற்றைம்பதடி தள்ளியிருக்கும் ராஜகோபுரத்தின் முன்பாக மண்டியிட்டுக்கிடந்த நந்தி வரை கேட்டது.
மகாமண்டபத்தில் அமர்ந்தபடி தலைக்குமேல் குவித்த தங்கள் கரங்களை யாரும் இறக்காமலே “தொல்லை இரும்பிறவி சூழும் தளைநீக்கி…….” என்ற தற்சிறப்புப் பாயிரத்தைப் பாடிவிட்டு “நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க” என்று சிவபுராணத்தைப் பாட ஆரம்பித்தார்கள். சிவபுராணத்தைப் பாடிக்கொண்டே பூணூல் துலங்கும் பொன்மேனியரான சிவ சரவணன் அர்த்த மண்டபத்திலிருந்து எடுத்துக் கொடுத்த திரவியங்களை ஒவ்வொன்றாக வாங்கி அருள்மிகு கரைவளர் நாதரின் சிவலிங்கத் திருமேனியை முழுக்காட்ட ஆரம்பித்தார் நடராஜ சிவாச்சாரியார். ஐம்பதைக் கடந்த வயதினர்தான் என்றாலும் இன்றைக்குப் போல் அவரது கைகள் இப்படி நடுங்கியதில்லை. வெகு அனாயாசமாகக் கருவறையின் வலப்புறத்தில் வைக்கப்பட்டிருக்கும் இடுப்புயரப் பித்தளை அண்டாவை மறைத்து நின்றபடி அதிலிருந்து இடக்கையால் தாமிரச் செம்பில் நீரை முகர்ந்து வலக்கையால் செம்பின் வாயை ஒட்டிப்பிடித்துச் சிவலிங்கத்தின் மீது சொரியும் அவர் இன்று நீட்டப்பட்ட அந்தச் சிறிய தேன் சீசாவைக் கூட இருகைகளாலும் ஏந்தி வாங்கிக்கொண்டார். சிவனடியார்கள் சிவபுராணத்தைப் பாடியபடியே ஒருவரையொருவர் பார்த்துத் தலையசைத்துக் கொண்டார்கள்.
[ads_hr hr_style=”hr-fade”]
மாலை நாலரை மணிக்கே திருக்கூட்டத் தலைவரான மெய்கண்டசிவத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. சின்னச்சாமி என்ற தனது இயற்பெயரை இருநிதி அடைவதற்கான துருப்புச் சீட்டாகவும் தீட்சாநாமமான மெய்கண்டசிவத்தை அருள்நிதி பெறுவதற்குரிய கடவுச்சீட்டாகவும் கருதுபவர் அவர். செல்பேசியில் செய்தி தெரிவிக்கப்பட்டதுமே கலங்கிப்போய்விட்டார். மறுமுனையில் சிவ ரமணி “நெஞ்சே வெடிச்சிரும் போல இருக்குதுங்கையா” என்று தழுதழுத்தது இவரின் உச்சிக்குமேல் ஒரு அடி உயரத்தில் கேட்டுக்கொண்டிருந்தது. இடதுகை பற்றியிருந்த செல்பேசியை வலது கையும் தாங்கிப்பிடிக்கத் தலைக்குமேல் கூப்பியபடி “சிவ சிவா சிவ சிவா” என்று அரற்ற ஆரம்பித்துவிட்டார். கண்களிலிருந்து தாரை தாரையாக நீர் பெருக்கெடுத்து வழிய ஆரம்பித்துவிட்டது. கல்லாப்பெட்டிக்கும் முன்னால் அவரெதிரே உட்கார்ந்திருந்த சீட்டுக்காரப் பழனிச்சாமியண்ணன் “என்னாச்சு சின்னச்சாமீ என்னாச்சு சின்னச்சாமீ” எனப் பதறியவாறே இருக்கையை விட்டு எழுந்துகொண்டார். அவரது குரலைக்கேட்ட பின் தான் இவர் மூடிய தனது கண்களைத் திறந்து பார்த்தார். மறுமுனையில் “ஐயா ஐயா….” என்று பதறிக்கொண்டிருந்த சிவரமணியின் குரல் செல்பேசியின் இயற்றிறனையும் மீறி வெளியே கேட்டது. “உண்மை தானுங்ளா சிவா? நீங்களே பாத்தீங்களா?” என்று கேட்ட இவரால் “கரைவளர்நாதர் மேல ஆணையா இந்தப் பாவி என் ரெண்டு கண்ணாலயும் அந்தக் கோரத்தப் பாத்தனுங்கையா” என்றபோது நிற்கமுடியாமல் தள்ளாடித் தனது இருக்கையில் சரிந்துகொண்டார். நரம்புப் பின்னல்களாலான அந்த இருக்கை தனது தலையணைக் கரங்களால் அவரது தசைப்பற்றற்ற புட்டியைத் தாங்கிக் கொண்டு குலுங்கியது. கண்டிப்பாகச் சிவரமணி கண்ட காட்சியைத் தான் காண நேர்ந்திருந்தால் அந்த நொடியே உயிரை விட்டிருப்போம் என்று தோன்றியது. “அடச் சின்னச்சாமி… சின்னச்சாமி என்ன தானப்பா ஆச்சு? இப்படி அதிர்ச்சியாவற அளவுக்கு?” பழனிச்சாமியண்ணன் இவரது தோளைத் தட்டிக்கொண்டே இருண்டு நீண்டு கிடந்த கடையின் உட்புறத்தின் நிழலாடலை நோக்கி
“தாரப்பா உள்ள… அடக் கொமாரு எங்கடா போயிட்டீங்கொ? ஒரு சொம்புத் தண்ணி கொண்டாந்து குடுங்ப்பா மொதலாளிக்கு” எனக் குரல் கொடுத்தார்.
குண்டுழுந்தைப் பொட்டலம் போட்டுக்கொண்டிருந்த குமரேசன் அதை அப்படியே போட்டுவிட்டு நீள் வரிசையில் அமைக்கப்பட்டிருந்த பலசரக்கு அட்டிகள் இரண்டினிடையில் ஓடிவந்து மெய்கண்டாரின் இருக்கைக்கு வலது புறத்தில் சற்றுத் தள்ளி மறைவாக வைக்கப்பட்டிருந்த நன்னீர்க் குடுவையிலிருந்து நீரைப் பிடித்துக் கொடுத்தான். அதற்குள் “ரொம்பப் படபடப்பா இருக்குதுங் சிவா. அப்பறமாக் கூப்டறனுங். அப்பறமாக் கூப்டறனுங்” என்று அழைப்பைத் துண்டித்தவர் அண்ணாந்து வாயில் நீரை ஊற்றிக்கொண்டார். மடக்மடக்கென்று தண்ணீர் உள்ளே இறங்கியது. தாடையிலிருந்து நெஞ்சுவரை வழிந்த குளிர்ந்தநீர் சட்டையை நனைத்தது.
“எதாச்சும் பெரீ காரியமா சின்னச்சாமி?” பழனிச்சாமியண்ணனால் பொறுக்கமுடியவில்லை.
“அதவடப் பெருசுங்ணா…. அதவடப் பெருசுங்ணா” தனது வலதுகையால் நெஞ்சின் இடப்பக்கத்தில் பட்டும் படாமலும் அறைந்துகொண்டார்.
“விசீத்தச் சொல்லப்பா மொதல்ல. ஒரே மூடு மந்தரமால்ல இருக்குது”
இவர் விஷயத்தைச் சொல்லச் சொல்ல
“அடக் கருமாந்தரத்த இதுக்குப் போயா இப்புடி இடிஞ்சு போன? நாங்கோட என்னமோ ஏதோன்னு பதறிப் போயிட்டனப்பா” குலுங்கிச் சிரித்தவர் தலையில் அடித்துக்கொண்டார். எதுவும் பேசாது இவர் பணத்தை எண்ணி நீட்ட எண்ணி வாங்கிப் பையில் பத்திரப் படுத்திக்கொண்ட பழனிச்சாமியண்ணன் எழுந்து கொண்டார்.
“அப்ப நா வாரஞ் சின்னச்சாமி. நம்பு வயிசுக்கல்லா இப்பிடிப் பதறுனா ஒடம்புக்கு ஆவாது பாத்துக்கொ” கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு நடையைக் கட்டிவிட்டார்.
“முத்திநெறி அறியாத மூர்க்கரொடும் முயல்வேனை…” அவர் போகும் திசையைப் பார்த்தவாறே முழுப்பாடலையும் முணுமுணுத்தவர் கல்லாப் பெட்டியிலிருந்து நூறு ரூபாய்த் தாள் ஒன்றை எடுத்து நீட்டி “எல்லா கலிகாலங் கொமாரு. வேலியே பயர மேயருதுன்னு ஆயிப்போனா என்னத்த மிஞ்சும்? இந்தா இந்த நூறு ரூவாய்க்கீ எம்பட நெம்பருக்கு ரீசார்சு பண்டச் சொல்லு முருவங் கடையில” என்றார். தாளை வாங்கிக்கொண்டு படியிறங்கித் தார்ச்சாலையில் கால்வைத்தவனைப் பார்த்து “அங்க போயிக் கதையடிச்சுட்டுருக்கக் கொடாது கொமாரு. மளார்னு வந்து பொட்டணத்தப் போடோணும்” என்று அவர் சற்று உரக்கக் கூறியதைக் காதில் வாங்கியதற்கு அடையாளமாகத் தலையை இடமும் வலமுமாக ஆட்டிக்கொண்டே போனான் குமரேசன்.
[ads_hr hr_style=”hr-fade”]
சிவ ராஜேஷ் தான் திருக்கூட்டத்தின் செயலாளர். மெய்கண்டாருக்குச் சொன்ன கையுடன் இவருக்கும் விஷயத்தைச் சொல்ல சிவரமணி தாமதிக்கவில்லை. “அழாதீங் சிவா அழாதீங்க… எல்லாத்தையும் பெருமான் பாத்துட்டே தான் இருக்கார். நீங்க தாமதிக்காம அர்த்தஜாமத்துக்கு வந்துருங்க. பாத்துக்கலாம்” என்று ஆறுதல் கூறியவர் அர்த்தசாமப் பூசைக்கான ஒத்திகையை அப்பொழுதே மனதில் ஓட்டிப்பார்க்க ஆரம்பித்துவிட்டார்.
வழக்கமாக மாலை ஏழுமணியிலிருந்து ஏழரைமணி வரை ஒவ்வொருவராக வந்து சேரும் சிவனடியார்கள் இன்றைக்கோ ஆறரை மணிக்கே குழும ஆரம்பித்துவிட்டார்கள். வந்தவுடனே ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டதும் இருகைகளையும் நெஞ்சுக்கு நேரே கூப்பியவண்ணம் ‘ட’ வன்னாவைத் தலைகீழாக நிறுத்தியது போல் உடலை வளைத்துத் தலையைத் தாழ்த்தி “நமச்சிவாய வாழ்க” என்று வாழ்த்திக் கொண்டே நிமிர்ந்து புன்னகைத்துக் கொள்வார்கள். அதிகமாக வளைந்து குனிபவர்கள் புதிய அடியார்கள் என்பதைத் தனியாகச் சொல்லத் தேவையில்லை. ஆனால் இன்றைக்கோ இப்பொழுதே அழுதுவிடுவதைப் போன்ற முகபாவத்தைப் பலரும் பல்லை இறுக வெருவிக்கொண்டு கடுகடுத்த முகத்துடன் சிலரும் வணங்கி நிமிர்ந்தார்கள். கூடிக்கூடிப் பேசிக்கொண்டார்கள். பேச்சு குசுகுசுப்பாகவும் கொக்கரிப்பாகவும் மாறி மாறி வெளிப்பட்டது. “சிவா நாம பெருமானோட அடியார்கள்ங்கறத எக்காரணத்த முன்னிட்டும் மறந்துறாதீங்க. பொறுமை முக்கியம். பொன்னூசல் முடிஞ்சதும் ரவி கடையில கூடிப் பேசி முடிவெடுக்கலாம். அது வரைக்கும் “அன்பே சிவமா” இருக்கணும்” பரிவுகலந்த கண்டிப்புடன் எல்லோரையும் எச்சரித்துவிட்டு அன்றைக்கான பணிகளை வழங்க ஆரம்பித்தார் செயலாளர்.
“ராஜ கோபாலையா நீங்க கட்டியம்”
“மூர்த்தி ஐயா நீங்க தீவட்டி”
“காந்திமதியம்மா நீங்க கைவிளக்கு”
“சண்முகநாதையா நீங்க தூபம்”
“லோகநாயகியம்மா நீங்க ஊதுவத்தி”
“ரமேஷையா நீங்களும் தெய்வசிகாமணி ஐயாவும் சாமரம்”
“முத்துச்சாமி ஐயா நீங்களும் நாகராஜ் ஐயாவும் பல்லக்கு”
“சக்திவேலையா நீங்க லவண்டை”
“நமச்சுஐயா நீங்க தாளம்”
“முருகானந்தமையா நீங்க சங்கு”
“கண்ணப்பையா நீங்க அங்கமாலை”
“தலைவரையா பாடற்பணி”
எல்லோரும் தங்களுக்கான பணிகளை வணங்கி ஏற்றுக்கொண்டு திருமுழுக்காட்டைக்காண மகா மண்டபத்துள் கூடினார்கள். கரைவளர்நாதர் திருமேனியின் மீது சொரியப்பட்ட ஒவ்வொரு திரவியத்தின் வழிசலையும் உற்று உற்றுப் பார்த்தார்கள். தீபம் காட்டப்பட்ட பொழுதெல்லாம் இறைவன் திருமேனியின் மீதான அதன் பிரதிபலிப்பைக் கவனமாக ஆராய்ந்தார்கள். திருமுழுக்காட்டு முடிந்து திரை இழுத்துவிடப்பட்டது.
“மறைந்திட மூடிய மாய இருளை
அறம் பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டிப்………. ……..”
சிவபுராணம் எங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்ததது.
[ads_hr hr_style=”hr-fade”]
“……….. செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப்பணிந்து”
கூட்டத்தினர் சிவபுராணத்தை முடிக்கவும் திரைவிலகவும் சரியாக இருந்தது.
“சிவா திருச்சிற்றம்பலம்” சிவராஜேஷ் ஓங்க
“தில்லையம்பலம்” கூட்டம் இன்னும் ஓங்கி ஒலித்தது.
சிவராஜேஷின் குரலில் மீண்டும் மகுடம் தொடங்கக் கூட்டம் இசைந்து தொடர்ந்தது. தூப தீபங்கள் காட்டப்பட்டன. பருத்தி வேட்டி பருத்தித்துண்டு சகிதமாக ஐந்து தலை நாகம் குடைபிடிக்கக் கொலுவீற்றிருந்தார் கரைவளர்நாதர். அவரது சிரசில் மட்டும் ஒரு கைப்பிடி வில்வ இலைகள் வைக்கப்பட்டிருந்தன.
[ads_hr hr_style=”hr-fade”]
சுவாமியின் பஞ்சலோகத் திருமேனி பல்லக்கில் ஏற்றப்பட்டதும் நந்தியைக் கொண்டையாகக் கொண்ட மர உலக்கைபோன்ற கட்டியக்கோலைத் தோளோடு சாய்த்து இருகைகளிலும் ஏந்திய இராஜகோபாலரின் வெண்கலக் குரலில் கட்டியம் உயிர்பெற்றது.
“ஜெய் ஸ்ரீ அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகர் சகல சிருஷ்டி திதி சம்ஹார திரோபாவ அனுக்ரஹ காரணகர்த்தாவும் லோகாதிபதியும் சகல ஜீவாதிபதியும் ……. ………… ………….. துறைவளர்நாயகி உடனமர் கரைவளர்நாதர் வருகிறார் வருகிறார் வருகிறார்”
கட்டியம் முடியவும் பல்லக்குப் புறப்பட்டது. “டம் டம் டம்டமடம டமடமடமடம…” லவண்டை என்றைக்குமே இத்தனை உக்கிரமாய் ஒலித்ததில்லை. சங்கு போர் முழக்கமிட்டது. தாளத்தினிடையில் கருங்கல் சிக்கியிருந்தால் கூடப் பொடிப் பொடியாகியிருக்கும்.
“தலையே நீவணங்காய் தலைமாலை தலைக்கணிந்து…….” கண்ணப்பர் திருஅங்கமாலையைப் பாடப் பல்லக்கின் பின் தொடர்ந்த திருக்கூட்டம் வாங்கிப் பாடியது. தேவாசிரியமண்டபத்தைக் கடக்கும் போது ஒவ்வொருவரது கண்களும் நீரால் தளும்பின. அங்கமாலையைப் பாடியபடி நாயன்மார்களின் சிலைகளைப் பார்த்துச் சிலர் தேம்பினார்கள். லிங்கோத்பவத்தை அடைந்ததும் பல்லக்கும் நின்றது. கூட்டமும் நின்றது. திடீரென்று எல்லோரும் ஒரே சமயத்தில் மறைந்துவிட்டதைப் போன்ற அமைதி ஏற்பட்டது. அண்ணாமலையாருக்கு இடது தோளையும் பல்லக்குக்கு நெஞ்சையும் காட்டியபடி தலைக்குமேல் இருகைகளையும் கூப்பிய மெய்கண்டசிவர் பாட ஆரம்பித்தார்.
“வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
உளைந்தன முப்புறம் உந்தீபற
ஒருங்குடன் வெந்தவா றுந்தீபற
……. …….. ……. …………”
செஞ்சடை திசையெங்கும் வீச வில்லில் நாணேற்றியபடி நெஞ்சை நிமிர்த்தி உன்மத்தனைப் போலச் சிரித்துக் கொண்டிருந்தார் சிவபிரான். அசுரர்களின் மூன்று உலோகக் கோட்டைகளும் வெடித்துச் சிதறின. திசையெங்கும் பரவியது கோபாக்கினி.
தேவர்கள் அஞ்சி நடுங்கி எட்டுத் திக்கும் அலறிப்புடைத்து ஓடிக்கொண்டிருந்தார்கள். கொய்யப்பட்டு மண்ணில் புரண்டோடிய தக்கனின் சிரத்தைப் பாழ்வெளியில் உதைத்துத் தள்ளினார் வீரபத்திரமூர்த்தி. யாகசாலையெங்கும் குருதி கொப்பளித்துக் கொண்டிருந்தது.
தோள்களில் மகாமேருவைத் தாங்கியபடி மிகுந்த வேதனையுடன் தனது இடக்கை நரம்புகளைத் தந்திகளாக்கி மீட்டிச் சாம கானம் பாடிக்கொண்டிருந்த இலங்கேஸ்வரனின் பத்துத் தலைகளும் மண்ணில் புதைந்து கொண்டிருந்தன. ஓட ஓட விரட்டப்பட்ட பிரமனின் சிரசு கிள்ளி எறியப்பட ரத்தம் பீறிட்டது. திருமாலும் இந்திரனும் கதிரவனும் உயிரைக் கையில் பிடித்தபடி தப்பித்தோம் பிழைத்தோமென்று விரைந்தோடிக் கொண்டிருந்தார்கள்.
இருபது கலித்தாழிசைகளையும் கோபம் கொப்பளிக்கப் பாடி முடித்துவிட்டுத் தான் மெய்கண்டசிவர் கண்களைத் திறந்தார். அவை கோவைக்கனிகளாய்ச் சிவந்திருந்தன. கூட்டம் மயிர்க்கூச்செறிந்தது. கயிலை மலையின் சிவகணங்களைப் போலத் தம்மை உணர்ந்தார்கள். தம்மை மறந்த சிவ அப்பூதியாருக்கு அருள் வந்துவிட்டது. கைகளிரண்டையும் தலைக்குமேல் உயர்த்திப் பிணைத்து முறுக்கிக்கொண்டு “அரகரா அரகரோவ் அரகரா அரகரோவ்” என்று பெருங்குரலிட்டார். கண்களை இறுக மூடியபடி இடை இடையே உஸ் உஸ் என்று காற்றை ஊதித் தள்ளினார். சுற்றியிருந்தவர்கள் அவரை உடனடியாக இறுக்கிப் பிடித்துக்கொள்ள அந்த இறுக்கத்தையும் மீறி உடலை முறுக்கிக்கொண்டு திமிறினார். இன்னும் இறுக்கத்தைக் கூட்டி அணைத்து அவரது திமிறலை அடக்க முயன்றது கூட்டம். “திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்” என அனைவரது வாய்களும் அனிச்சையாகச் சொல்லிக்கொண்டிருந்தன. சிவராஜேஷ் தனது வெண்கலக் குரலில் மகுடத்தை ஒலிக்கக் கட்டுக்குள் வந்த கூட்டம் “தில்லையம்பலம்” எனத் தீவிரமாக ஒலித்தது. மீண்டும் அங்கமாலை தொடரத் தோள்மாற்றிக்கொண்டு புறப்பட்டது பல்லக்கு.
அம்பாள் சன்னிதியை அடையவும் அங்கமாலை முடிந்து மீண்டும் மகுடம் ஒலித்தது. இராஜகோபாலரின் குரல் என்றைக்குமில்லாத கம்பீரத்தை அடைந்திருந்தது. வழக்கமான பூசைகள் முடிந்ததும் காத்திருந்த இறைவியோடு தந்தத்தாலான ஊசலில் அமர்த்தப்பட்டார் கரைவளர்நாதர். “சீரார் பவளங்கால் முத்தங் கயிறாக…….. “ ஓதுவாரின் கரகரத்த குரலில் திருப்பொன்னூசலைக் கேட்டபடி இருவரும் மெதுவாக ஆடிக்கொண்டிருந்தார்கள்.
பிரசாதத்தை வாங்கிக்கொள்ள இன்றைக்கு யாரும் அவ்வளவு விரும்பவில்லை. “நமது கோபதாபங்களப் பெருமான்கிட்டக் காட்டக்கூடாது சிவா. கண்டிப்பா எல்லாரும் வழக்கத்தப் போலப் பிரசாதத்தை வாங்கிக்கணும்” சிவராஜேஷின் ஆணைக்கிணங்க வரிசையில் நின்று பிரசாதத்தை வாங்கிக் கொண்டார்கள். காரசாரமான விவாதம் எழுந்து தாழ்ந்து உயர்ந்தபடி தொடர்ந்தது. அந்நேரம் பார்த்துத்தான் அவசர அவசரமாகக் கோவிலுக்குள் ஓடிவந்தார் சிவ நாவரசு ஐயா. குண்டிகத்திரிக்க ஓடி வந்தவர் “நாங் கேள்விப்பட்டது உம்மையா சிவா உம்மையா சிவா” என்று கதறியபடியே கற்றரையில் விழுந்து உருள ஆரம்பித்துவிட்டார். எது நடக்கக்கூடாது என்று நினைத்தார்களோ அது நடந்தேவிட்டது. யாருக்கு எது தெரிய வேண்டாம் என்று நினைத்தார்களோ அது அவருக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது. சாக்கியநாயனாரைப் போல ஒருவர் தங்களிடையே இருப்பதைக் கூட்டத்தினர் உணர்ந்துகொண்ட தருணம் அது. இனி நாவரசரைக் கட்டுப்படுத்தக் கரைவளர்நாதராலும் முடியாது. வயிற்றிலடித்தபடி புரண்டு கதறிக் கொண்டிருந்தார் அவர். நாவரசர் சிவனடியாரான புதிதில் கலந்துகொண்ட பெரியபுராண வகுப்பு ஒன்றின் பொழுது சுந்தரமூர்த்தி சுவாமிகளின் புராணத்தை விளக்கிக்கொண்டிருந்தார் திருச்சியிலிருந்து வருகைபுரிந்திருந்த புனிதவதி அம்மையார். சுந்தரருக்காகத் தியாராஜர் பரவையாரிடம் தூது சென்ற பகுதியைக் கேட்டதுதான் தாமதம் “எம்பெருமானே எம்பெருமானே” என்று கதறியபடி கடமுடவெனத் தரையில் விழுந்து புரள ஆரம்பித்துவிட்டார். கூட்டம் சிதறியெழுந்துகொண்டது. நாவரசரின் உருளல் நிற்கவில்லை. “எம்பெருமானின் பொன்னார் திருவடிகள் ஆரூர் மண்ணில் நடந்தபோது எப்படி வலித்ததோ நொந்ததோ கொப்பளித்ததோ” என்று கதறிக்கொண்டிருந்தார். கைகள் தரையை அறையக் கால்களை உதறிக்கொண்டிருந்தார். குப்புறக்கிடந்தவரின் மூக்கிலிருந்து புறப்பட்ட கோழை தரைக்குப் பாலம் அமைக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தது.
கூர்க்காக்கள் இருவரும் ஓடிவந்தார்கள். “கோவிச்சுக்காதீங்க ஐயா நடையடைக்கிற நேரமாச்சுங்க. எதுவாருந்தாலும் நாளெக்கிப் பேசிக்கலாம்” கையெடுத்துக் கும்பிட்டுக் கெஞ்சலாகக் கேட்டுக் கொண்டார்கள். அப்படியே அலேக்காக நாவரசரைத் தூக்கிக்கொண்டு திருக்கோயில் வீதியிலிருக்கும் ரவியுடைய சிறிய உணவகத்தை அடைந்தது திருக்கூட்டம்.
[ads_hr hr_style=”hr-fade”]
ஆடிப்பெருக்கு நெருங்கிக் கொண்டிருந்தது. ஆண்டின் அந்தநாளில் தான் கரைவளர்நாதரின் பக்த எண்ணிக்கை உச்சத்தைத்தொடும். கிழக்கை நோக்கிய சத்தியோஜாத முகமும் மேற்கை நோக்கிய தத்புருஷ முகமும் தெற்கை நோக்கிய வாமதேவ முகமும் வடக்கை நோக்கிய அகோரமுகமும் இவற்றின் நடுவே உச்சியில் சற்றுச் சிறிதாக அமைந்த ஈசான முகமும் கொண்டவராகக் கரைவளர்நாதரின் லிங்கத் திருமேனி அந்த நாளில் காட்சியளிப்பது உலகறிந்தது. தங்கநிறத்திலான தத்புருஷ முகத்தின் பிம்பத்தைக் கருவறையின் மேற்குச் சுவரில் அன்றைக்கு விசேஷமாக வைக்கப்படும் கண்ணாடியில் காண்பதற்காகப் பக்தர் கூட்டம் பெருவிரலில் நிற்கும். இப்படிப்பட்ட சிறப்பு அலங்காரத்தை முறைக்காரர்களே செய்துகொண்டிருந்த காலம்போய்க் கடந்த சில ஆண்டுகளாகப் பழனியிலிருந்து ஒரு குழு வந்து செய்து கொண்டிருக்கிறது. ஆண்டுக்காண்டு உயர்ந்துகொண்டிருக்கும் அலங்கார நேர்த்தியைப் போலவே பக்தர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டிருக்கிறது. போதாக்குறைக்குச் சென்ற ஆண்டின் அலங்கார நேர்த்தியைக் கண்ட மாவட்ட ஆட்சியர் அக் குழுவினரை நேரடியாக அழைத்துப் பாராட்டியதோடல்லாமல் மனம் நிறையும்படி சன்மானமும் அளித்திருந்தார். இந்த ஆண்டும் அவரை அசத்தியே தீருவது என்ற முடிவோடு இருந்தது அலங்காரக்குழு.
“தோ பாருங்கோ நடராஜையர் வருஷா வருஷம் சொல்லிண்டே இருக்கேன். நீங்க யாரும் சட்டை செய்யறதேயில்ல. பஞ்சமுகங்களையும் வைக்கறச்சே அப்படியே பொழுதுக்கும் நின்னாத்தானே ஷோபிக்கும். லிங்கத்துல இருக்கற மெழுகால நிக்காம வழுக்கிண்டு கொஞ்சங்கொஞ்சமா மொகங்கள் எறங்கிடறது மக்களோட கண்ணுக்கு வேணாத் தெரியாம போலாம். எனக்கு அது கொஞ்சங்கூடச் சகிக்கலை. சாயரட்சைக்குப் பாக்கைல பகவானோட சத்யோஜாதம் ஆவுடையார் மேல ரொம்ப அழுந்தித் தாடை பிளந்து நிக்கறது என்னை நரகத்துலன்னா சேக்கும்? என்ன பண்ணுவேளோ இந்தமுறை பாணலிங்கத்துல மெழுகே இருக்கப்படாது. போனமாசம் தான் மாக்காப்பிட்டேன்ங்கற மாதிரி சால்ஜாப்பெல்லாம் சொல்லிடாதேள். இந்தவருஷம் அமைச்சர்கள்லாம் வேற வரப்போறான்னு பேசிக்கறா. நான் தலைகுனிஞ்சு நிக்கறாப்ல பண்ணிடாதேள்”
ஒரே மூச்சில் சொல்லவேண்டியதைச் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டார் சபேசையர். வருஷா வருஷமும் சொல்லிக் கொண்டிருக்கிறாராமே? ஆனால் தங்களுடைய போன முறையின் போது எதுவும் சொன்னதாக நினைவில்லை. ஒருவேளை கடந்த இரு ஆண்டுகளாகச் சொல்லிக் கொண்டிருக்கிறாரோ? ஆனால் எவனும் மூச்சுவிடவில்லையே. சொல்லமாட்டான்கள் தான். போட்டி முறைக்காரன்களின் பெயர் கெடட்டும் என்று தான் நினைப்பார்கள்.
ஆனால் ஆனி பிறந்ததும் பழனிக்கே சென்று நேரில் பார்த்துப் பூ பழம் வைத்துப் பத்திரிகை கொடுத்து அழைத்தபொழுது இவராவதும் சொல்லியிருக்கலாம். அதற்கப்புறம் நான்கைந்து முறை தொலைபேசிய பொழுதாவதும் சொல்லியிருக்கலாம். ஆனால் இப்போது திடீரெனத் தூக்கத்திலிருந்து விழித்தவரைப் போல இப்படிச் சொல்கிறார். இப்படித் திடீரெனச் சொல்லிக் கலங்கவைக்கிறாரே மனிதர் என நொந்து போனார் நடராஜையர். ஒரு பத்து நாட்களுக்கும் முன்னால் சொல்லியிருந்தால் கூடப் பரவாயில்லையே என அடித்துக்கொண்டது மனது. அவர்களுக்கிருக்கும் வேலை நெருக்கடியில் இப்படித்தான் சொல்வார்கள். இந்த ஒரு கோவிலை மட்டும் நம்பியா அவர்களுடைய பிழைப்பு இருக்கிறது? ஆனால் தங்களுக்கு அப்படியில்லையே. கரைவளர்நாதரை நம்பித்தான் தனது குடும்பமும் தம்பி ஞானகுருவின் குடும்பமும் ஜீவித்திருக்கிறது. மூன்று குடும்பங்கள் முறை வைத்துப் பூஜை செய்துகொண்டிருக்கும் கோவில். இந்த ஆடிப்பெருக்கை முடித்துவிட்டால் அடுத்த ஆண்டு அம்பாள் சன்னிதியிலும் அதற்கு அடுத்த ஆண்டு சுப்பிரமணியர் சன்னிதியிலும்தான் தானும் தம்பியும் சொற்ப வருமானத்திற்குத் தட்டை ஏந்திக் கொண்டிருக்கவேண்டும். மூன்றாவது வருடம் ஆடிப்பெருக்கு வருவதற்குள் என்ன வேண்டுமானாலும் நடந்துவிடலாம். பஞ்சமுக தரிசனத்தன்று சுவாமி சன்னிதியில் நின்றால் தான் நிஜம். மற்ற கோவில்களைப் போல நடையடைக்கும் போது மாக்காப்பைச் சார்த்திவிட்டு மறுநாள் காலையில் களைந்துவிட முடியாது. கரைவளர்நாதர் விசேஷமானவர். இரவு முழுவதும் அவரது லிங்கத் திருமேனியைத் தீண்டியிருக்கும் தகுதி பருத்தித் துணியைத் தவிர எதற்கும் இல்லை என்கிறது ஐதீகம். இரவு பன்னிரண்டு மணிவரை நீளும் பஞ்சமுக தரிசனத்தன்று கூட நடையடைக்கும் பொழுது சிறப்பு அலங்காரத்தைக் களைந்துவிட்டுப் பருத்தித் துணியாலான வழக்கமான அலங்காரத்தைச் செய்துவிட்டு நடையடைப்பதே வழமை. எனவே, பகலில் தான் மாக்காப்பைச் சார்த்தி வைத்திருக்க முடியும். ஆடிப்பெருக்கிற்கு இன்னும் ஐந்து நாட்களே இருக்கையில் சுவாமிக்கு மாக்காப்பைச் சார்த்தி வைத்திருக்க முடியுமா? காப்பு காய்ந்து மெழுகையும் உரித்துக்கொண்டு பாளம்பாளமாக வெடித்துப் பெயர்வதைப் பார்க்கவா ஞாயிற்றுக்கிழமையான இன்றும் கூடக் கூட்டம் இப்படி அதிகரித்தபடி இருக்கிறது? அதே நேரத்தில் சபேசையரின் பேச்சைத் தட்டிக்கழித்து ஏதாவது ஏடாகூடம் ஏற்பட்டுவிட்டால் தீராத அபவாதத்திற்கு வேறு ஆளாக நேரிடும். ஒரு வழியும் புலப்படாததால் உண்டு களைப்பாறிக்கொண்டிருந்த தம்பியை உலுக்கி எழுப்பிக் கிட்டத்தட்ட அழுது புலம்பிவிட்டார் நடராஜ சிவாச்சாரியார்.
சிறிது நேரம் தரையையே பார்த்துக் கொண்டிருந்த ஞானகுரு தலையை நிமிர்த்திச் சமாதானமாகச் சொன்னார் “அதெல்லாம் பாத்துக்கலாம். நீ கவலையை விடுண்ணா”
சொன்னதுடன் நிறுத்திக் கொள்ளவில்லை இளவல். மூன்றரை மணிக்கே கோவிலுக்கும் சென்றுவிட்டார். கோவில் நடை திறக்க நாழியிருந்தது. அதற்குள் வேலையை முடித்துவிடவேண்டும். இருந்தாலும் மனசு மிகவும் சஞ்சலப்பட்டது. தான் செய்வது தனக்கே சரியானதாகப்படாத பொழுது மற்றவர்கள் கண்ணில் வேறு பட்டுவிட்டால்? ஒரு நிமிடம் உடல் நடுங்கியது. ஆனாலும் ஆபத்திற்குப் பாவமில்லை. கரைவளர்நாதர் மேல் பாரத்தைப் போட்டுவிட்டுக் காரியத்தில் இறங்க வேண்டியதுதான். இரு கைகளையும் தலைக்குமேல் கூப்பி மனமுருகப் பிரார்த்தித்தார். கண்கள் கலங்கின. மனதைக் கல்லாக்கிக்கொண்டு கருவறையின் திரையை இழுத்துவிட்டார். கரைவளர்நாதர் மீதிருந்த வெள்ளியால் ஆன நாகக் குடையையும் திருநீற்றுப் பட்டத்தையும் மெள்ள இறக்கிவைத்தார். மலர்மாலைகளையும் பூக்களையும் வஸ்திரத்தையும் களைந்தார். காலையில் பகவானது சிரசில் தான் பார்த்துப் பார்த்துச் சந்தனத்தைக் குழைத்துத் தீற்றிவைத்த சந்திர சூரியர்களைப் பிட்டு எடுத்தார். மறுபடியும் பகவானை ஒரு முறை கைகூப்பி வணங்கிவிட்டுப் பையிலிருந்த நீளமான சூரிக்கத்தியை எடுத்து லிங்கத் திருமேனியின் மீது வைத்து ஒரு தேர்ந்த நாவிதர் சிரைப்பதைப் போல மெழுகைச் சிரைக்க ஆரம்பித்தார். ஒரே அழுத்தாக அழுத்தி மெழுகை அப்படியே அடியோடு பெயர்த்து எடுக்காமல் கொஞ்சங் கொஞ்சமாகப் படலம் படலமாகச் சுரண்டி எடுக்க ஆரம்பித்தார். உடலெங்கும் வியர்த்துக் கொட்டிக் கொண்டிருந்தது. அரைமணி நேரத்தில் லிங்கத்தைச் சுற்றிலுமிருந்த மெழுகை அழகாகச் சுரண்டி எடுத்துவிட்டிருந்தார். உச்சிமட்டுமே எஞ்சியிருந்தது. தனது கீர்த்தியைப் போலவே உயரமானவர் கரைவளர்நாதர். அவரது உச்சியை எட்டிக் கத்தியை வைத்து இழுத்தால் மெழுகு வரும் தான். ஆனால் கரைவளர்நாதருக்கும் காயம்படும். சாய்மானமில்லாமல் நின்று கொண்டிருக்கும் தானும் கத்தியுடன் கீழே விழுந்து எசகுபிசகாக அடிபடலாம். சற்று நேரம் கரைவளர்நாதரையே பார்த்துக் கொண்டிருந்தவர் ஒரு முடிவுக்கு வந்தவராகத் தனது வேட்டியின் இடது சொங்கை மடித்து இடுப்பில் சொருகிக் கொண்டார். தனது இடது கையால் லிங்கத்தை அணைத்துப்பிடித்தபடி வலது காலைத்தூக்கி ஆவுடையாரின் மேல் வைத்துச் சற்றே உந்தினார். இப்போது உச்சி அவரது மூக்கருகே இருந்தது. தனது பெருமூச்சு கரைவளர்நாதரது திருமேனியின் மீது பட்டுவிடாதவாறு முகத்தைத் திருப்பிக்கொண்டு பஞ்சாட்சரத்தை ஜெபித்தவாறே கத்தியை வைத்தார்.
அந்த நேரத்தில் தான் அந்த அசம்பாவிதம் நடந்தது. முதலாட்டம் சினிமாவிற்கு நண்பர்களுடன் போகத்திட்டமிட்ட சிவரமணிக்கு அர்த்தசாமப் பூசையைத் தவறவிடுகிறோமே என்று மனது உறுத்தியது. வார நாட்களில் வேலை முடிந்து வீடுதிரும்பவே இரவு மணி பத்தாகிவிடுவதால் வாராவாரம் ஞாயிறன்று அர்த்தசாமப் பூசையில் தவறாமல் கலந்து கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தான். ஆனால் இந்த வாரம் சினிமா இழுத்தது. இல்லை இல்லை. அவனது நேசத்திற்குரிய உச்ச நட்சத்திரம் சுண்டி இழுத்தார். அதற்காக அவனது வாழ்வின் தலைவராக வரித்திருந்த கரைவளர்நாதரை விட்டுக்கொடுத்துவிட முடியுமா? கொடிமரத்தின் முன்பாகவாவதும் விழுந்து வணங்கிவிட்டு வந்துவிடலாம் என எண்ணியவன் கோவிலுக்கு விரைந்தான். திட்டிவாசலைத் தட்டியதும் கூர்க்கா எட்டிப்பார்த்தார். இவனது முகத்தைப் பார்த்ததும் புன்னகையுடன் கதவை அகலத்திறந்தவர் “சன்னிதி திறந்துதான் இருக்கு ஐயா. குருசாமி ஏதோ சிறப்பு அலங்காரம் செய்யறாரு போல” என்றார். அப்படியே மயிர்க்கூச்செறிந்தான் சிவரமணி. “திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்” என மனது அரற்றியது. கண்கள் பனித்தன. சட்டையை அவிழ்த்து இடுப்பில் சுற்றியவாறே சுவாமி சன்னிதியை நோக்கி ஓடினான்.
மகா மண்டபத்தில் நுழைந்ததுமே வியர்த்துப் புழுங்கியது. அர்த்த மண்டபத்திலும் மின்விசிறி ஓடிக் கொண்டிருக்கவில்லை. இங்கே நிற்கும் நமக்கே இப்படியென்றால் திரைமூடிய கருவறையில் நின்றுகொண்டிருக்கும் சிவாச்சாரியாருக்கு எப்படியிருக்கும் என்று எண்ணியவன் அர்த்த மண்டப நுழைவாயில் விநாயகருக்கு மேலிருந்த இரு பொத்தான்களையும் அழுத்தினான். காற்றாடி சுற்றவும் திரைச்சீலையின் ஒருபகுதி சற்றே விலகியது. பதறிப்போன ஞானகுரு வலக்கையில் கத்தியுடன் இடது காலை ஆவுடையாரின் மேலிருந்து இறக்கிக் கொண்டிருந்தார். ஒரு நொடி. ஒரே ஒரு நொடி இருவரது கண்களும் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டன. “எம்பெருமானே எம்பெருமானே” கதறிக்கொண்டே வெளியே ஓட ஆரம்பித்தான் சிவரமணி.
[ads_hr hr_style=”hr-fade”]
மேசைகளின் மேல் காரைக்காலம்மையாரைப் போலத் தலையில் நின்று கொண்டிருந்த இருக்கைகளை எடுத்துப்போட்டு அமர்ந்தார்கள் மூத்த அடியார்கள். இளையவர்கள் நின்று கொண்டார்கள். ஒரு மேசையின் மீது கிடத்தப்பட்டிருந்த நாவரசர் விசும்பிக் கொண்டிருந்தார். கழுவிவிட்ட ஈரம் காய்ந்த தரை சில்லென்றிருந்தது.
“முப்போதுந் திருமேனி தீண்டறவரு இப்பிடிச் செய்யிலாங்களாய்யா? மனசு கொதிக்குதுங்க” தனது சடைமுடிக் கற்றையை அள்ளிமுடித்தவாறு சீறினார் சிவமாணிக்கவாசகம்.
“கேட்டுப் பாருங்க சாமி சிவரமணி ஐயாகிட்ட. விசீத்தக் கேள்விப்பட்டதீம் அப்பிடியே விருமுத்திபுடிச்சாப்ல ஆயிப்போயிட்டெ” சிவரமணியைக் கைகாட்டியவாறு சொன்னார் மெய்கண்டசிவம்.
“ந்யூஸச் சொன்னதீமே ஐயா சிவ சிவா ன்னு கதறுனது இன்னூ எம்பட நெஞ்சுக்குள்ள செலையோடுதுங்கையா. ஐயா அழுவறதப் போன்ல கேட்டுப்போட்டு நானூங் கதறீட்டனுங்கையா” இது சிவரமணி.
சாயங்காலத்திலிருந்தே யாரிடமும் பெரிதாக ஒன்றும் சொல்லிப் புலம்பிக் கொள்ளாமலிருந்த சிவஞானசம்பந்தம் கண்கள் சிவக்கக் கடுகடுத்தார்.
“இப்பிடியே மாத்தி மாத்தி நம்புளுக்குள்ள அழுது பொலம்பி என்ன சிவா பிரயோசனொ? எல்லா பாப்பாரத் திமுரு. இத லேசுல உட்றப்படாதுங்க. தண்டன குடுத்தே ஆகோணு”
“நாம்ப ஆருங் சிவா அவரத் தண்டிக்கறதுக்கு? எம்பெருமான்கிட்ட மனசார முறையிட்டாக் கூலீங் குறியாப்பையுஞ் சேத்திக் குடுத்தறப் போறாரு” தரையில் கண்ணீர் சொட்ட அமர்ந்திருந்த சிவ அப்பூதியார் வாய்திறந்தார்.
“நல்ல யோசனீங்கையா. நாளைக்கே திருவாசக முற்றோதலப் பண்டீறோணுமுங்” இது சிவ கார்த்தி.
சிவஞானசம்பந்தம் வெடுக்கென எழுந்துகொண்டார். “இதென்ன நாயம் பொம்பளச்சட்டீகளாட்ட? அறவது அடியார் இருக்கற திருக்கூட்டத்துனால ஒரு பாப்பாஞ் செஞ்சதத் தட்டிக்கேக்க முடீலீன்னா அப்பறமென்னத்துக்குச் செயலாளரு? பொருளாளரு? வெங்காயமெல்லா?” கழுத்துநிறைய அணிந்திருந்த உருத்திராட்ச வடங்கள் ஏறி ஏறி இறங்கின.
துணிப்பையைத் தொங்கவிட்டபடி உள்ளே நுழைந்தார் அம்பாள் கோவில் அர்ச்சகர் பாலாஜி. “இதெல்லாம் மஹாப்பாவம். சாதாரணமா விட்றாதீங்க. பாடம் கற்பிச்சாத்தான் அவனெல்லாம் அடங்குவான்” என்று கூறியவர் “பாலாஜீ பாலாஜீ” என்ற அவரது அண்ணனின் குரலுக்கு “தோ வந்துட்டேன் வந்துட்டேன்” என்று பதில் கூறியவாறே ஓடிப்போனார்.
போகும் அவரைச் சுட்டிக்காட்டியபடி “எம்பெருமான் மேல ஒரு பாப்பானுக்கிருக்கற பற்றுதல் நமக்கில்லீங்ளாங் சிவா? இத இன்னக்கி இப்பிடிச் சாதாரணமா உட்டுப் போட்டம்னா நாளக்கிப் பழனி முருகனுக்கு ஏற்பட்ட கெதிதா நம்பு சாமிக்கீ. அவங் குடுமய அறுத்தாத்தா எஞ்செனமடங்கும்” சிவஞானசம்பந்தரது கர்ஜனை அறையெங்கும் எதிரொலித்தது.
இறுதிமுடிவாக விடிந்ததும் எல்லோரும் ஒன்றாகத் திரண்டு ஊர்ப் பெரியமனிதர்களைப் பார்த்து விஷயத்தைத் தெரிவிப்பது என்றும் பின்னர் கோவிலுக்குச் சென்று செயல் அலுவலரை நேரில் பார்ப்பது என்றும் அவரிடம் நடந்த சம்பவத்தை எழுத்துப்பூர்வமாகத் தெரிவிப்பதோடு அல்லாமல் ஞானகுரு சிவாச்சாரியார் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் கோருவது என்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஒருக்கால் செயல் அலுவலரின் நடவடிக்கைகளில் சுணக்கமிருந்தால் மற்ற ஊர் அடியார்களையும் வரவழைத்துத் திரட்டிப் பேரணியாகச் சென்று மாவட்ட ஆட்சியரிடம் முறையிடுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
“தலைவரையாவோட செல்வாக்குக்கு இதெல்லா நெம்பச் சாதாரண காரியம். கரைவளர்நாதப் பெருமானுக்காக அவர் இதக் கண்டிசனாச் செய்வாருன்னு நம்பறேன்” உரக்கச் சொல்லிவிட்டு புல்லட்டைக் கிளப்பினார் சிவஞானசம்பந்தர். சிறிது நேரத்தில் கூட்டம் கலைந்தது.
அவர்களது தகப்பனார் அகால மரணமடைந்த அன்று கூட நடராஜ சிவாச்சாரியார் இப்படி இடிந்துபோகவில்லை. விஷயத்தைக் கேள்விப்பட்டதுமே தம்பியின் கைகளில் துணிமணிகள் நிறைந்த பையையும் பணத்தையும் திணித்தார். “க்ஷணங்கூடத் தாமதிக்காம பெங்களூருக்குப் பஸ்ஸப்பிடி. மாமாட்டச் சொல்லியிருக்கேன். நான் வரச் சொல்ற போது வந்தாப் போதும். பஸ் ஏர்ற வரை யார்கண்ணுலயும் பட்றாத” என்று கூறித் துரத்திவிட்டார்.
[ads_hr hr_style=”hr-fade”]
இருவரது மனைவிமார்களும் தூணருகில் அமர்ந்து அழுது கொண்டிருந்தார்கள். மூத்தவரின் வளர்ந்த பெண்பிள்ளைகளிருவரும் வீட்டுப்பாடத்தை எழுதிக் கொண்டிருந்தார்கள். இளையவருடைய இரு ஆண்குழந்தைகளும் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தார்கள். எவ்வளவு நேரத்திற்குத்தான் இப்படியே உட்கார்ந்திருப்பது? மணி நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருந்தது. “போய்க் கட்டயச் சாய்ச்சுக்குங்கோ. நம்ம கையில என்ன இருக்கு? ஈஸ்வர ஆக்ஞைப்படி நடக்கட்டும்” இருகைகளையும் உயர்த்திக் காட்டியபடி உள்ளே எழுந்து போனார் நடராஜ சிவாச்சாரியார்.
படுக்கையில் புரண்டுகொண்டே கிடந்த மெய்கண்டசிவம் நள்ளிரவு தாண்டித்தான் உறக்கத்தில் ஆழ்ந்தார்.
சடாரெனப் படுக்கையை விட்டு எழுந்து பூஜையறைக்கு ஓடியவருக்குத் ‘திக்’ கென்றது.
பெட்டகத்திலிருந்த தங்க நகைகளையும் பணத்தையும் மட்டுமல்ல. பூஜையறையிலிருந்த குத்து விளக்குகளையும் செப்புச் சாமான்களையும் பஞ்சலோகத்தினாலான கரைவளர்நாதரையும் நந்திகேசுவரரையும் கூட அவன் விட்டுவைக்கவில்லை.
“சிவனே சிவனே” என்று அரற்றிக்கொண்டே சுவற்றில் தலையை மோதிக்கொண்டவர் “ஐயோ… வண்ணக்கிளிமொளீ வண்ணக்கிளிமொளீ… எங்களே போய்ட்ட பாளும் முண்ட…? எம்பெருமானையீ நந்தியெம்பெருமானையீ திருடீட்டுப் போயிட்டானே… திருடீட்டுப் போயிட்டானே திருட்டுக் கண்டாரோளிபயெ…” என்று உரக்கக் கத்தி ராகம் போட்டு அழ ஆரம்பித்தார்.
“தேதேது? மசை முத்தி மண்டக்கி ஏறிட்டுட்டுதாட்ட இருக்குதா! ‘வெளக்கி வெக்கிலீன்னாலுங் காளுக் காள்ன்னு கத்தற? இன்னைக்குன்ற சோமாறக் கெளமயப்போவ்…”
வெரசலான குரல் வந்த திசையை நோக்கித் தலையைத் திருப்பினார். சமையலறையின் அரைவட்டத் திறப்பின் வழி மனைவியாரின் ஆவி பறக்கும் முகம் தெரிந்தது.
“நாந்தே எல்லாப் பூசச் சாமானத்தையீம் புளிப் போட்டுத் தேய் தேய்னு தேச்சுக் களுவிப் பொடக்காணீல கமுத்தியிருக்கறன். இந்தத் தங்கத்தயெல்லாந் திருடீட்டுப் போறதுக்குத் திரடம்மேறவாரானாமா திரடெ?”
கண்களைக் கசக்கியபடி மலங்க மலங்க விழித்தவாறே நடந்தவர் புழைக்கடையில் எட்டிப் பார்த்தார்.
அதிகாலையின் மெல்லிருளில் வானத்தைப் பார்த்தபடி பளபளத்துக்கொண்டு கிடந்தார்கள் சிவலிங்கமும் நந்தியும். “அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள் போய் அகன்றது உதயம்நின்……” கரைவளர்நாதர் கோயில் கோபுரத்திலிருந்து மெலிதாகக் கசிந்துகொண்டிருந்தது திருப்பள்ளியெழுச்சி.
- சத்தியப்பெருமாள் பாலுசாமி