பற்று


ருபத்தெட்டு ஃபிப்ரவரி, 1936 அன்று (அதாவது, ஃபிப்ரவரி 26 சம்பவத்திலிருந்து மூன்றாவது நாள்), கனோய் போக்குவரத்து படைப்பிரிவின் இராணுவத் தளபதி ஷிஞ்சி தகேயாமா, போராட்டக்காரர்களுடன் ஆரம்பத்திலிருந்தே துணை நின்று வந்த ஏகாதிபத்தியப் படைகளை ஏகாதிபத்திய படைகளே தாக்கும் போக்கிற்கெதிராக கோபத்துடன் எதிர்வினையாற்றும் விதமாக – யோட்சுயா தொகுதியில் அவோ பச்சோ எனுமிடத்தில் ஒதுக்கப்பட்டிருந்த எட்டு விரிப்புகள் கொண்ட தனது வீட்டறையில் இருந்தபடியே – தனது அரசவாளினை எடுத்து சம்பிரதாயப்படி வயிற்றைக் கிழித்து இறந்தார். மனைவி, ரெய்கோ அவரைப் பின் தொடர்ந்து தானும் குத்திக் கொண்டு இறந்துவிட்டிருந்தாள். தளபதியின் விடைபெறல் குறிப்பில் ஒரேயொரு வரிதான் இருந்தது: “ஏகாதிபத்திய படைகள் நீடூழி வாழ்க.” அவளது கடிதத்தில் இவ்விதமாகத் தனது பெற்றோரை முந்திக் கொண்டு இடுகாட்டிற்குச் சென்றுவிட்டதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்ட பிறகு இப்படி முடிவுற்றிருந்தது: “ஒரு படைவீரனுடைய மனைவியின் வாழ்க்கை எங்கு வந்து சேர வேண்டுமோ, அங்கே வந்துவிட்டிருக்கிறது…”. வீரமும் அர்ப்பணிப்புணர்வும் கொண்ட இந்த இணையின் அந்தகம் அந்த தெய்வங்களையும் அழவைக்கக் கூடியவை. தளபதிக்கு அகவை முப்பத்தியொன்று, அவரது மனைவிக்கு இருபத்தி மூன்று என்பது குறிப்பிடத்தக்கது; அவர்களுக்குத் திருமணம் நிகழ்ந்ததிலிருந்து அரையாண்டு கூட பூர்த்தியாகியிருக்காத நிலையில் இப்படி நிகழ்ந்திருக்கிறது.


 

2

மாப்பிள்ளை பெண் கோலத்தில் அவர்கள் இருக்கும் நினைவு புகைப்படத்தைப் பார்த்தவர்கள் எல்லோரும் – தளபதியின் திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருந்த அனைவருமே கிட்டத்தட்டப் பார்த்தார்கள் – இந்த அழகிய இணையின் தோரணை பற்றிய வியப்பைத் தெரிவித்தனர். தளபதி தனது இராணுவ சீருடையில் மிடுக்கான தோற்றத்துடன் தனது மனைவியைப் பாதுகாப்புடன் அருகில் வைத்திருந்தபடி இருந்தார். அவரது வலக்கரம் வாளின் மீதிருக்க இடக்கரமோ தன் தொப்பியைப் பற்றியபடி இருந்தது. அவரது கூரிய முகபாவனையோடு, இருண்ட புருவங்களும் அகன்ற பார்வையும் இளமைக்கட்டின் தெளிவைப் பறைசாற்றின. வெண்ணிற மேலாடையிலிருந்த மணமகளின் அழகினைப் பொருத்தமட்டில் எந்த ஒப்பீடும் போதுமானதாய் தோன்றாது. மென்புருவங்களின் கீழிருக்கும் விழிகள், உருளையுற்று கச்சிதமாக அமைந்த நாசி மற்றும் முழுமை குடிகொண்ட அதரங்கள் ஆகியவற்றின் பரிசுத்தம் புலனீர்ப்பவையாக இருந்தன. ஒரு கரம் நாணத்துடன் மேலாடையிலிருந்து வெளிப்பட்டு விசிறியைப் பிடித்திருந்தது, விரல்நுனிகள் நிலாமலரின் மொட்டென வடிவக்கொத்தாய் இருந்தன.

தற்கொலைக்குப் பிறகு அனைவரும் இந்த புகைப்படத்தை வெளியே எடுத்து ஆராய்ந்து, வருத்தத்துடன் இத்தகைய அபாரமான இணைவு உருவாகும் போதெல்லாம் சாபம் போல ஏதோவொன்று வந்து தாக்கிவிடுகிறது என்று தெரிவித்தனர். இது வெற்றுக் கற்பனையாக இருக்கலாம், ஆயினும் இந்த துர்சம்பவத்திற்குப் பிறகு, பொன் திரைப் பின்னணியில் நின்றவாறு இவ்விரு இளமக்களும் ஓற்றை தீர்க்கத்துடன் சீர்மை கொண்டிருக்கிற பார்வை, தங்கள் முன்பு வீற்றிருக்கும் மரணத்தைப் பார்த்தபடி இருப்பதாகவே குறிக்காட்சி தருகிறது.

அவர்களுக்குதவிய நல்ல அலுவலர்களுக்கு நன்றி, தலைமைத் தளபதி ஒசெக்கி அவர்களால், யோட்சுயாவில் அபோச்சோவில் புது இல்லத்தில் தங்கள் வசிப்பிடத்தை ஏற்படுத்திக் கொள்ள அவர்களுக்குக் கூடியது. “புது இல்லம்” என்ற பதம் குழப்பமேற்படுத்தக் கூடியது. அது பழைய – மூன்று அறைகள் கொண்ட, பின்புறம் சிறிய தோட்டத்துடன் கூடிய – வாடகை வீடுதான். சூரிய வெளிச்சம் அடித்ததால் அவர்கள் கீழ்த்தளத்தில் இருந்த ஆறு விரிப்பு கொண்ட அறையையோ நான்கரை விரிப்பு கொண்ட அறையையோ உபயோகிக்காமல், மேற்தளத்தில் இருந்த எட்டு விரிப்பு கொண்ட அறையையே படுக்கை அறையாகவும் கூடமாகவும் பயன்படுத்தி வந்தனர். அவர்கள் வீட்டில் குற்றேவல்காரி யாருமில்லை, அதனால் கணவன் இல்லாத பொழுதுகளில் ரெய்கோ தனியாக வீட்டைப் பாதுகாத்துப் பராமரிக்க வேண்டியிருந்தது.

தேசிய அவசரக்காலமாக இருந்ததால் தேனிலவுப் பயணத்தை ரத்து செய்ய வேண்டியிருந்தது. அவர்கள் இருவரும் தங்கள் முதலிரவை இந்த அறையிலேயே கழித்தனர். மஞ்சத்திற்குச் செல்லும் முன், ஷிஞ்சி, தனது வாள் முன் கிடக்க, தரையில் விரைப்பாய் அமர்ந்திருந்தவாறு, தனது மனைவிக்கு சிப்பாய்த்தனமான குறு சொற்பொழிவை வழங்கிக் கொண்டிருந்தார். ஒரு இராணுவ வீரனை மணந்துவிட்ட ஒரு பெண் தனது கணவனை எந்நேரமும் மரணம் தழுவும் என்ற உண்மையைத் தீர்மானமாக அறிந்தும் ஏற்றும் கொண்டிருக்க வேண்டும். அது நாளைக்கே வரக்கூடும். அல்லது அதற்கடுத்த நாள். அது எப்போது வரினும், அவள் அதைத் தீர்மானமாக ஏற்றுக் கொள்வதில் ரெய்கோ பிடிவாதமாய் இருக்கிறாளா? என்று அவர் கேட்டார். ரெய்கோ தன் பாதம் நின்று, அலமாரியின் இழுப்புப் பெட்டியைத் திறந்து, தனது புதிய சீர்களில் எல்லாம் விலைமதிப்பற்றதான தனது தாய் தன்னிடம் ஒப்படைத்திருந்த குறுவாளை வெளியே எடுத்தாள். தனது இடத்திற்குத் திரும்பி வந்து ஒரு சொல்லுமின்றி அவள் முன்பு விரிப்பில், தனது கணவன் தன் வாளினை வைத்ததைப் போலவே, இந்த குறுவாளினையும் வைத்தாள். அவ்விடத்தில் ஒரு மெளன புரிதல் நிகழ்ந்துவிட்டது, அதிலிருந்து ஒருமுறை கூட தளபதி தன் மனைவியின் தீர்மானம் குறித்த எந்த கேள்வியும் எழுப்பியதில்லை.

திருமணமாகி முதல் சில மாதங்களில் ரெய்கோவின் எழில் நாளுக்கு நாள், மழைக்குப் பின்னான நிலவின் வசீகரிகவொளி போல மிளிர்வும் பெருக்கமும் கொண்டிருந்தது.

இருவருமே இளமையும் வீரியமும் ததும்பும் சரீரங்களைக் கொண்டிருந்ததால் அவர்களது தாம்பத்யம் உணர்வுப்பூர்வமானதாக இருந்தது. அது இரவிற்குரிய விசயமாக மட்டுமே மட்டுப்பட்டிருக்கவில்லை. சில சமயங்களில் பணி முடிந்து வீட்டிற்கு வந்த உடனேயே, தனது களிமண் தெளித்த சீருடையைக் கழற்றுவதற்குக் கூட விசனப்பட்டுக் கொண்டு, தளபதி தனது மனைவியைத் தரையில் தள்ளிவிடுவதுண்டு. ரெய்கோவும் ஊக்கத்துடன் தனது மறுவினையில் ஈடுபடுவாள். அவர்களது முதலிரவிலிருந்து ஒரு மாதத்திற்கும் மேலோ அல்லது உள்ளாகவோ ரெய்கோ சுகத்தை அறிந்திருந்தாள், அதைக் கண்ட தளபதியும் இன்பமடைந்தார்.

ரெய்கோவின் சரீரம் வெண்மையும் நிர்மலமுமாய் இருந்தது; அவளது வீங்கிய முலைகள் அழுத்தமாய் கன்னிமையான எதிர்ப்பை வெளிக்காட்டின, ஆனால், ஏற்பிற்குப் பிறகு, முலைகள் வரவேற்கும் பதமான வெப்பத்திற்கு இளகி அணுக்கத்தை ஏற்படுத்தின. மஞ்சத்திலும் இவர்கள் இருவரும் பயங்கரமான திகைப்பிற்குரிய தீவிரம் கொண்டிருந்தனர். காட்டுத்தனமான வெறி நிறைந்த சம்போகங்களின் இடையிலும் கூட அவர்களது இதயங்கள் தீவிரக் காதலின் தூய்மை கொண்டிருந்தன.

பகலில் பயிற்சிகளுக்கிடையே வரும் சிறிய இடைவேளைகளில் தனது மனைவியைப் பற்றிய எண்ணங்களுடன் தளபதியும், வீட்டில் நாள்முழுவதும், ரெய்கோ தனது கணவனின் முகத்தை நினைத்துக் கொண்டும் கடந்தனர். பிரிந்திருக்கும் போது கூட இன்பத்தை மீண்டும் ஏற்படுத்தித் தர அவர்களது பார்வை திருமண புகைப்படத்தில் விழுவதே போதுமானதாக இருந்தது. சில மாதங்களுக்கு முன்புவரை முற்றும் அந்நியனாக இருந்த ஒரு மனிதன் தற்போது தன்னுலகம் சுற்றிச் சுழலும் சூரியனாக ஆகிவிட்டது குறித்து ரெய்கோவிடம் துளி திகைப்பும் இருக்கவில்லை.

இத்தகைய பொருளுக்கெல்லாம் ஒரு மன அடிப்படை இருக்கிறது, கலவியில் “கணவனும் மனைவியும் பொருத்தம் கொண்டிருக்க வேண்டும்” எனச் சொல்வதைப் போலவே எல்லாம் சரியாக நடந்தது. ஒரு முறை கூட ரெய்கோ தனது கணவனுக்கு எதிராகச் சொல்லிடவில்லை, தளபதியும் தன் மனைவியை வைவதற்கென ஒரு காரணத்தைக் கூட கண்டறியவில்லை. படிக்கட்டின் கீழே இருந்த பக்தி மாடத்தில், மாபெரும் இசே கோவிலின் அட்டைப்படமும், ஏகாதிபத்திய தலைவர்களின் படங்களும் இருந்தன. ஒவ்வொரு காலையும் தவறாமல், பணிக்குச் செல்லும் முன், தளபதி தன் மனைவியுடன் இந்த குழிவான இடத்தின் முன் நின்றபடி இருவரும் தலைகளைக் குனிந்து வழிபடுவர். இல்லத்திற்கு வரும் நீர் தினமும் காலை புதிதாய் வரும், புனித சசாகிக் கிளை எப்போதும் பசுமையாகவும் புதியதாகவும் இருக்கும். அவர்களது வாழ்வு கடவுள்களின் முழுப் பாதுகாப்புடனும் செறிந்த மகிழ்வுடனும் நிரம்பி இருந்து அவர்களது உடலின் ஒவ்வொரு தசைநாரிலும் அதிர்வேற்படுத்தியது.


3

பிரபு சைட்டோவின் இல்லம் அருகிலேயே இருந்த போதும் அவர்கள் இருவருமே ஃபிப்ரவரி 26 காலையில் துப்பாக்கி இரைச்சல் என்று எதையும் செவியுறவில்லை. மங்கிய பனிவீழும் விடியலில் திரட்டுவதற்கான ஊதுகுழலோசைதான் தளபதி தன் பாயலிலிருந்து நிலையிழந்து எழக் காரணமாக இருந்தது, அப்போது அந்த பத்து நிமிட துர்சம்பவம் நிகழ்ந்தேறிவிட்டிருந்தது. மஞ்சத்திலிருந்து எழுந்த உடனேயே ஒரு வார்த்தை கூட பேசாமல் தனது சீருடையை எடுத்து அணிந்து கொண்டு, தனது மனைவி தயாராக வைத்திருந்த வாளினை எடுத்து கொக்கியிட்டுக் கொண்டு இன்னும் இருண்டிருந்த காலையில் பனிமூடிய தெருக்களில் இறங்கி விரைந்து சென்றார். அவர் 28 அன்று மாலைவரை திரும்பிவரவில்லை.

பின்னர் ரேடியோ செய்தியின் வாயிலாக ரெய்கோ வன்முறையின் தாண்டவத்தின் முழுமையையும் கேட்டறிந்தாள். அவளது வாழ்வின் அடுத்த இரண்டு நாட்களும் முற்றான துயரமானநிலையில், தன் மூடப்பட்ட கதவுகளுக்குள்ளே முழுத்தனிமையிலேயே கழிந்தது.

அந்த பனிவிடியலின் போது மெளனமாகவும் விரைந்தும் வெளியேறிய தளபதியின் முகத்தில் மரணத்திற்கான வைராக்கியம் இருந்ததை ரெய்கோ கண்ணுற்றிருந்தாள். கொழுநன் திரும்பி வராது போனால் என்ன செய்ய வேண்டும் என்ற முடிவு அவளால் எடுக்கப்பட்டிருந்தது; தானும் மரித்துப் போவாள். தனது தனியுடமைகளின் சீர்வரிசை குறித்த மனநிலையை அசைபோட்டாள். தனது பள்ளித் தோழிகள் வைத்துக் கொள்வதற்காகத் தனது கிமோனோக்களை மூடி வைத்தாள், அத்தோடு நில்லாது ஒவ்வொன்றையும் மடித்து தாளுறையிட்டு அவற்றின் மேல் யார் யாருக்கு அவை சேர வேண்டும் என்று குறிப்பிட்டு எழுதியும் வைத்தாள். நாளை குறித்த சிந்தனை எப்போதும் கொள்ளக்கூடாது என்று தனது கணவன் வழங்கியிருந்த தொடர் அறிவுரையின் பேரில் அவள் நாட்குறிப்பேடு எழுதுவதையும் தவிர்த்திருந்தாள்; அதனால் இப்போது கடந்த சில மாதங்களின் இன்புறலைப் பதிவு செய்துவைத்திருந்து அதை உறுதியோடு மீள்வாசிப்பு செய்யும் வாய்ப்பும் இல்லாமல் போனதோடு, அந்த ஒவ்வொரு பக்கத்தையும் தீக்கு தின்னத் தருவதற்கு ஒதுக்கும் பணியினையும் செய்யமுடியாமல் போனது. ரேடியோவின் மேற்புறத்தில் ஒரு சிறிய சைனா நாய், ஒரு முயல், ஒரு அணில் ஒரு ஓநாய் ஆகியவை நிரையாக இருந்தன. அங்கு ஒரு சிறிய ஜாடியும் நீரூற்றும் கிண்ணமும் இருந்தன. இவையே ரெய்கோவின் ஒரேயொரு சாமான் தொகுப்புகளாக இருந்தன. இவற்றையெல்லாம் ஞாபகார்த்தமாக  வைத்திருப்பதற்குத் தகுதியான பொருட்களாகக் கொள்வதற்குத் தயக்கமாக இருந்தது. அவை சவப்பெட்டியில் வைக்கச் சொல்லி கேட்கவும் பொருத்தமற்றவை. இத்தகைய எண்ணங்கள் மனதில் உதித்த போது அந்த பொம்மை மிருகங்களின் முகங்களில் நம்பிக்கையின்மையும் துயரமும் மிகுந்து கொண்டே சென்றபடி இருந்தது.

ரெய்கோ தனது கைகளில் அணிலை ஏந்தி பார்த்தாள். பின்னர், அவளது எண்ணங்கள் இத்தகைய சிறுபிள்ளைத்தனங்களிலிருந்து விலகி விரிந்திருக்கும் சாம்ராஜ்ய கற்பனைகளுக்குள் சென்றது, அவளது கணவனின் சூரியன் போன்ற மிடுக்கினை தொலைதூரத்திலெனக் கண்டாள். அந்த சூரிய ரதத்தின் மிளிரும் அழிவிற்குள் தானும் தரதரவென இழுத்துச் செல்லப்படவிருப்பதற்கு அவள் தயாராகத்தான் இருந்தாள். இருந்தபோதும் தற்போதைக்கு தனது தனிமையின் சில நிமிடங்களில் இத்தகைய அற்பமான மடமையான ஒட்டுதல்களில் ஆடம்பரமாகச் செலவிட எத்தனித்தாள். இந்த பொருட்களையெல்லாம் மனப்பூர்வமாக அவள் நெடுங்காலத்திற்கு முன்பு விரும்பியிருந்ததுண்டு. தற்போது அவற்றை விரும்பியதன் நினைவுகளில் தற்போது மகிழ்ந்திருந்தாள், அவளது இதயத்தில் அவற்றின் இடம் குறித்த செறிவான விழைவுகள் அதீத மகிழ்ச்சியினால் அவளை வெடித்தபடி இருக்கச் செய்தன. ரெய்கோ உடலிச்சைகளின் மகிழ்ச்சியை இன்பமாகக் கருதியதில்லை. ஃபிப்ரவரியின் கூதலும் சைனா அணிலின் குளிர்ந்த தொடுகையும் ரெய்கோவின் உருளை விரல்களை உணர்விழக்க வைத்தன. அளவுக்குப் பொருந்தியவாறு தைக்கப்பட்டிருந்த பாவாடையின் கிமோனோ நெடுக்கே செல்ல அவளது கால்களின் கீழ்ப்பகுதியில், அவள் தனது கணவனின் ஆற்றல்மிக்க கரங்களின் தொடுகையைச் சிந்தித்துப் பார்க்கையில், பனியை எதிர்க்கும் வல்லமை கொண்ட சூட்டினை அவளால் உணர முடிந்தது.

மனதில் சுழன்றடித்துக் கொண்டிருக்கும் மரணம் பற்றிய நினைவுகளால் அவள் கிஞ்சித்தும் அச்சப்படவில்லை. வீட்டில் தனித்திருந்தபடி தனது கணவன் தற்போது உணர்ந்தும் சிந்தித்தும் கொண்டிருக்கக் கூடிய, அவரது கவலை, அல்லது கோபம் போன்றவை அவளை – அவரது உடற்தசையின் ஆற்றலின் மீது இருக்கக்கூடிய அதே ஈர்ப்பின் அளவிற்கு – மரணத்தை வரவேற்கக் கூடிய மனநிலைக்கு எடுத்துச் சென்றபடியே இருக்கிறது. அவளது உடல் எளிதாக உருகி தனது கணவனின் எண்ணங்களின் ஒரு அங்கமாக மாறிவிடக்கூடும் என்று உணர்ந்தாள்.

தனது கணவனின் கூட்டாட்களின் பெயர்கள் அவ்வப்போது கிளர்ச்சியாளர்கள் பற்றிய ரேடியோ அறிவிப்பில் இடம்பெற்றுக் கொண்டிருப்பதைக் கேட்டுக் கொண்டிருந்தாள். அது மரணச்செய்தியாக இருந்தது. அவள் செய்தியின் அசைவுகளைக் கவனமாக உற்றுக் கேட்டபடி இருந்ததால், பதற்றத்துடன் திகைத்தபடி, மீண்டும் மீண்டும் சரிசெய்யமுடியாத நிலைமையை அடைந்துகொண்டிருக்கும் சூழலைப் பற்றி – ஏன் ஏகாதிபத்திய அவசரச்சட்டம் இடப்படவில்லை எனவும், தேசத்தின் பெருமையை நிலைநாட்டுவதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் எப்படி விரைந்து கலகம் என்ற பெயரில் குறிப்பிடப்பட்டு அவமதிப்பை அடைந்தது என்று – யோசித்துக் கொண்டிருந்தாள். படைப்பிரிவிலிருந்து எந்த ஒரு தொடர்பும் வந்து சேர்ந்திருக்கவில்லை. எந்த நொடியிலும் பனிபடர்ந்து கிடக்கும் தெருக்களில் கூட சண்டை நிகழக்கூடும் என்ற தோற்றம் நிலவியது.

இருபத்தெட்டன்று சூரிய அஸ்தமனத்தின் போது வாசற்கதவின் மீது கடும் ஒலியெழுப்பியபடி தட்டப்பட்ட சத்தத்தைக் கேட்டு துணுக்குற்றாள். அவள் படிக்கட்டில் விரைந்து இறங்கினாள். நடுங்கும் விரல்களோடு பனியுறைந்த சத்தமிடாத கதவுகளின் நாதாங்கியைத் திறக்க அவள் முற்படுகையில் வெளியே நின்றிருந்த முழுமையாகத் தெரியாத ஒரு கோட்டோவியம் போன்ற ஆளை அவள் தனது கணவன் என்று தெளிவாக அறிந்திருந்தாள். தள்ளுக்கதவின் நாதாங்கி இத்தனை இறுக்கமாக இருக்குமென அவள் நினைக்கவில்லை. இன்னும் அது அவளைத் திறக்க விடவில்லை. கதவு திறந்தபாடில்லை.

தான் திறப்பதில் வெற்றியடைந்து விட்டோம் என்று அவள் புரிந்து கொள்ளும் நொடியில் தளபதி தனது காக்கி புறச்சட்டையில் போர்த்தியிருந்தபடி, தனது சேறு நிறைந்த சப்பாத்துக்களை உதறியபடி திண்ணையில் நின்று கொண்டிருந்தார். தனக்குப் பின்னிருந்த கதவினை மூடிவிட்டு நாதாங்கியை அதன் ஓட்டைக்குள் மீண்டும் பொருத்தினார். ரெய்கோவிற்கு அவரது மனநிலையின் முக்கியத்துவம் புரியவில்லை.

“வாருங்கள், வாருங்கள்.”

ரெய்கோ நன்கு வளைந்து வணங்கினாள், ஆனால் அவள் கணவன் அதற்கு மறுவினை செய்யவில்லை. அவர் ஏற்கனவே தனது வாளினைத் தளர்த்திவிட்டு தனது புறமேற்சட்டையைக் கழற்ற முயன்றுகொண்டிருந்ததால், ரெய்கோ அவருக்கு உதவ முற்பட்டாள். வழக்கமாக வெயில் பட்டதும் கசிந்து வரும் குதிரைச்சாண வாடை, புறமேற்சட்டை குளிர்ந்து இறுகி இருந்ததால் வரவில்லை. புறமேற்சட்டை வழக்கத்தை விடக் கணமாக இருந்தது. தொங்கியில் அதை விரித்து வைத்துவிட்டு, தனது பையில் வாளையும் அதன் உறையையும் பிடித்தபடி, தன் கணவன் தனது சப்பாத்துக்களைக் கழற்றும் வரைக் காத்திருந்து பின்னர் அவரைப் பின் தொடர்ந்து வாழ்வறைக்கூடத்திற்குச் சென்றாள். இது கீழிருக்கும் ஆறு பாய்கள் விரிக்கப்பட்ட அறை.

தீபவொளியின் தெளிவில் அவளது கணவனது முகம் கொஞ்சம் வளர்ந்திருந்த தாடியின் வளர்ச்சியைக் காட்டியது, அவர் முகம் அடையாளம் மாறி நொய்ந்தும் ஒல்லியாகவும் காணப்பட்டது. கன்னங்கள் குழிந்து அவற்றில் களையும் பளபளப்பும் இன்றி காணப்பட்டன. வழமையான மனநிலையில் இருந்திருந்தால் இந்நேரம் அவர் வீட்டினுள் நுழைந்த உடனேயே உடைகள் மாற்றி அவளைத் தனக்கு உணவு எடுத்து வர உடனடியாகப் பணித்திருப்பார், ஆனால் இப்போதோ மேசையின் முன்பாக இன்னும் சீருடையிலேயே அமர்ந்தவாறு தலையைத் தளர்வுடன் தொங்கவிட்டிருந்தார். ரெய்கோ தான் மாலையுணவைத் தயாரிப்பதா இல்லை வேண்டாமா என்று கேட்காமலிருந்தாள்.

கொஞ்ச நேர இடைவெளிக்குப் பின்னர் தளபதி பேசினார்.

“எனக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை, அவர்கள் என்னைச் சேரும்படி கேட்கவில்லை. எனக்குப் புதிதாகத் திருமணம் ஆகியிருந்த காரணத்தின் பால் கொஞ்சம் கருணை கொண்டு அவ்வாறு கேட்காமலிருந்திருக்கலாம். கானோ, ஹோம்மா, யமாகுச்சி என எல்லோருமே.”

ரெய்கோவின் மனதில் அந்த உணர்ச்சிமிக்க, தனது கணவரின் நண்பர்களான இளைய அலுவலர்களின் முகங்கள் ஒரு நொடி நினைவில் உதித்தது. அவர்கள் எப்போதாவது தங்கள் வீட்டிற்கு விருந்தாளிகளாக வந்திருந்தவர்களாக இருந்தனர்.

“நாளை ஒரு ஏகாதிபத்திய அவசராணை அனுபப்படக் கூடும். அவர்கள் அனைவரையும் அது கலகக்காரர்கள் என்ற பெயரில் அழைக்கவும் கூடும் என்றே எண்ணுகிறேன். அவர்களைத் தாக்க வேண்டிய படைப்பிரிவிற்கு நான் தலைமை தாங்கும் நிலை ஏற்படக்கூடும்… என்னால் அது முடியாது. அத்தகைய செயலை ஒரு போதும் என்னால் செய்ய முடியாது.”

அவர் மீண்டும் பேசினார்.

“அவர்கள் என்னைப் பாதுகாப்புப் பணியிலிருந்து எடுத்துவிட்டு, என்னை ஓரிரவு வீட்டிற்குச் செல்ல அனுமதித்து அனுப்பினார்கள். நாளைக் காலை, கேள்விக்கிடமின்றி, அந்த தாக்குதலுக்கு நான் சென்றாக வேண்டும், என்னால் அதைச் செய்ய முடியாது, ரெய்கோ.”

ரெய்கோ தாழ்ந்த விழிகளுடன் உடல் நிமிர்த்தி அமர்ந்திருந்தாள். அவள் தனது கணவன் மரணத்தைக் குறித்துப் பேசிவிட்டதை தெளிவாகப் புரிந்துக் கொண்டிருந்தாள். தளபதி தீர்மானம் செய்துவிட்டார். ஒவ்வொரு வார்த்தைகளும் மரணத்தில் விதை கொண்டு, இந்த இருண்ட அசைக்கமுடியாத சூழ்நிலையின் பின்னணியில் கூர்மையாக வெளிப்பட்டுக் கொண்டிருந்தன. தனது இரண்டும் கெட்டான் நிலையைப் பற்றியே தளபதி பேசிக் கொண்டிருந்தார் என்றபோதும் அவரது மனதில் ஊசலாட்டத்திற்கென எந்த இடமும் இருக்கவில்லை.

தெளிவு இருந்த போதும், உருகிய பனியிலிருந்து ஓடும் ஓடை போன்ற தெளிவாக அது இருவருக்கும் இடையில் மெளனமாக நகர்ந்தபடி இருந்தது. கடும் சோதனைகள் நிறைந்த இரண்டு நாட்களுக்குப் பின்னர் தனது வீட்டில் அமர்ந்தபடி தனது அழகிய மனைவியின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் தளபதிக்கு ஒரு மனநிம்மதியை முதல் முறையாக அனுபவிக்க முடிந்தது. அவருக்கு அப்போதே தனது வார்த்தைகளுக்குப் பின் இருக்கும் தீர்மானத்தைத் தனது மனைவி புரிந்து ஏற்றுக் கொண்டிருப்பதை, அவள் தன் வார்த்தைகளால் சொல்லாத போதும், அவர் அறிந்திருந்தார்.

“ம், சரி…” தளபதியின் விழிகள் அகலத் திறந்தன. முற்றிலும் சோர்வடைந்திருந்த போதும் அவர்கள் பலமாகவும் தெளிவாகவும் தோற்றமளித்தனர். முதல் முறை அவர் தனது மனைவியின் கண்களை நேருக்கு நேர் பார்த்து, “இன்றிரவு நான் எனது வயிற்றைக் கிழித்துக் கொள்வேன்” என்றார்.

ரெய்கோ திடுக்கிடவில்லை.

அவளது உருண்டையான விழிகள், மணிமோதி ஒலியெழுப்புவதை ஒத்த ஒரு விரைப்புடன் வீரியமான உணர்வை வெளிப்படுத்தியது.

“நான் தயார்,” என்றாள். “நான் உங்களுடன் துணைவர அனுமதி கோருகிறேன்.”

அந்த விழிகள் கொண்டிருந்த பலத்தினைக் கண்டு தளபதி உடனடியாக வியந்து போனார். அவரது வார்த்தைகள் எளிதாகவும் சுருக்காகவும், சித்தபிரமை பிடித்த மனிதனின் வாயிலிருந்து வரும் சொற்களைப் போல வெளிவந்தன. இருப்பினும் இத்தகைய விசயத்தில் அனுமதி வழங்குவது எப்படி இத்தனை சரளமாக முடிகிறது என்பது அவரது புரிந்துணர்வினைக் கடந்ததாக இருப்பதையும் அவர் உணர்ந்திருந்தார்.

“சரி. நாமிருவரும் ஒன்றாய் போவோம். ஆனால் எனது தற்கொலைக்கு நீ முதலில் சாட்சியாக இருக்க வேண்டும். ஏற்கிறாயா?”

இதைச் சொல்லி முடித்ததும் சடுதியில் அவர்கள் இருவரது இதயங்களிலும் பெருமகிழ்ச்சி பெருகி நிறைந்தது. தன் மீது தனது கணவர் கொண்டிருந்த நம்பிக்கையினைக் கண்டு ரெய்கோ மனமுருகிப் போனாள். என்ன நிகழ்ந்தாலும் தனது மரணத்தில் எந்த பிழையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பது தளபதிக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது. அந்த காரணத்திற்காக ஒரு சாட்சியின் துணை இருந்தாக வேண்டும். அதற்காகத் தனது மனைவியைத் தேர்வு செய்தது அவரது நம்பிக்கையின் முதற்படி. இரண்டாவது முக்கிய விசயம் : இருவரும் ஒன்றாக இறக்கலாம் என்று அவர் குறிப்பிட்ட போதும் தனது மனைவி தனக்கு முன்பு இறப்பதை விரும்பாத அவர், அவரது இறப்பிற்குப் பிறகு அவளது இறப்பு நிகழ வேண்டும் என ஒத்திப் போட்டார், அவளது இறப்பினைச் சரிபார்ப்பதற்கு அவர் இருக்கப் போவதில்லை. தளபதி சந்தேகமுடையவராக இருந்திருப்பாரே ஆயின், இத்தகைய தற்கொலை ஒப்பந்தத்தின் போது, மறு யோசனைக்கு இடமின்றி தனது மனைவியை முதலில் கொல்வதற்குத் தேர்ந்தெடுத்திருப்பார்.

ரெய்கோ, “நான் உங்களுடன் துணை வர அனுமதி கோருகிறேன்” என்று சொன்னபோது தனது முதலிரவில் தொடங்கித் தொடர்ந்து பாடம் நடத்தி வந்த ஒரு கற்பிதத்தின் பலனைத் தான் இன்று இந்த சொற்களைக் கேட்பதன் மூலம் தான் அனுபவிப்பதாக உணர்ந்தார். அதனாலேயே சொல்ல வேண்டியதைச் சொல்ல வேண்டிய நேரம் வந்த போது எந்த ஒரு தயக்கமும் இன்றி எளிதாகக் குறிப்பிட முடிந்தது. இது, தளபதி தன்னை ஒரு தற்சார்பு உடையவனாக எண்ணி பெருமிதம் கொள்வதற்கு உதவியது. இந்த சொற்கள் தனது கணவன் மீது கொண்டிருக்கும் காதலின் பால் வெளிப்பட்டவைதான் என்று கற்பனை செய்து கொள்ளும் அளவிற்கு அவர் கற்பனாவாதியாகவோ தலைக்கனம் கொண்டவராகவோ இல்லை.

அவர்களது இதயத்தில் ஊற்றெடுத்துப் பெருகிய மகிழ்ச்சியின் அளவைத் தாளாது ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டனர். மீண்டும் திருமண இரவிற்கு வந்ததைப் போன்ற உணர்வை ரெய்கோ அடைந்தாள்.

அவளது விழிகளுக்கு முன் வலியோ மரணமோ ஒரு பொருட்டாகத் தோன்றவில்லை. தொலைதூரங்களில் ஏதோ ஒரு திறப்பின் வழியே தடையற்ற சுதந்திரமான உலகு உருவாவதை மட்டுமே அவள் கண்டாள்.

“தண்ணீர் கொதித்திருக்கிறது. குளிக்கிறீர்களா இப்போது?”

“ஆம், நிச்சயமாக.”

“மாலையுணவு…”

வார்த்தைகள் பரிமாறப்பட்டுக் கொண்டிருந்த பதத்தினையும் பரிமாணத்தையும் உணர்கையில் தளபதிக்கு இவையெல்லாம் வெறும் உளமயக்குதானோ என்ற எண்ணம் ஒரு நொடிப்பகுதியில் ஏற்பட்டது.

“நமக்கு மாலையுணவு தேவை என்று தோன்றவில்லை, கொஞ்சம் மதுவைச் சூடாக்க முடியுமா?”

“உங்கள் விருப்பப்படியே.”

ரெய்கோ எழுந்து குளியலுக்குப் பிறகான டான்சன் கவுனை மடிப்பு மாடத்திலிருந்து எடுத்த பிறகு, கணவனது கவனத்தை வேண்டுமென்றே திறந்திருந்த இழுப்பானின் மீது விழச் செய்தாள். தளபதி எழுந்து மடிப்புமாடத்தின் முன்பு நடந்து, அதன் உள்ளே பார்த்தார். வரிசையாக அடுக்கப்பட்டிருந்த தாளுறைகளில் குறிப்பிட்டிருந்த முகவரிகளைப் பார்த்தார். இத்தகைய தீர்மானச் செயலைக் கண்ட தளபதியின் எதிர்வினை சோகமானதாக இருக்கவில்லை. அவரது உள்ளம் காருண்யத்தால் நிரம்பியிருந்தது. தனது குழந்தைத்தனமான பொருட்களைக் காட்டும் மனைவியின் பெருமிதத்தைக் கண்ட தளபதி, தனது அன்பின் மிகுதியால் அவளைப் பின்புறத்திலிருந்து அணைத்துத் தழுவி புறங்கழுத்தில் ஒரு முத்தமிட்டார்.

ரெய்கோ தனது கழுத்தில் மழிக்கப்படாத தோலினை உணர்ந்தாள். இந்த உணர்வு உலகில் இருக்கும் ஒன்று என்பதை விட ரெய்கோவிற்கு இதுவே உலகம் என்று இருக்கக்கூடியது, ஆனால் தற்போது, சீக்கிரமே  எப்போதைக்குமாக இழந்துவிடக்கூடிய உணர்வு என்பதால், அது எதைவிடவும் புத்துணர்ச்சியுடன் கூடிய உணர்வை உருவாக்கியது. பின்னிருந்து வரும் கணவரது வருடல்களை ஏற்றுக் கொள்ளும் விதமாக, தனது கால்விரல் நுனிகளில் எக்கி நின்றபடி, அந்த ஸ்பரிசத்தின் ஆழம் தன் உடலெங்கும் விரவிச் செல்ல அனுமதித்தாள்.

“முதலில் குளியல், பிறகு கொஞ்சம் மது… பிறகு மேற்தளத்தில் மஞ்சத்தை ஒருக்கம் செய், என்ன?”

இந்த சொற்களை தன் மனைவியின் காதில் தளபதி கிசுகிசுக்க, ரெய்கோவோ ஆமோதித்துத் தலையசைத்தாள்.

தனது சீருடையைக் களைந்துவிட்டு தளபதி குளியலுக்குச் சென்றார். துளிச் சொட்டும் நீரின் பின்னணியில் ரெய்கோ உடைகளை மடித்து வைத்துவிட்டு மதுவைச் சூடேற்றத் துவங்கினாள்.

டான்சன், உறைகள் மற்றும் உள்ளாடைகளை எடுத்துக் கொண்டு அவள் நீர் எப்படிக் கொதித்திருக்கிறது என்று கேட்பதற்காகக் குளியலறைக்குச் சென்றாள். கொதித்துக் கொண்டிருக்கும் சுருள்களுக்கிடையே நீராவி மேகமென எழுந்து கொண்டிருக்க, கால்களை சம்மணமிட்டு அமர்ந்தபடி மழித்துக் கொண்டிருக்க, அவரது ஈரமான முதுகில் அவரது கைகள் ஏற்படுத்திக் கொண்டிருந்த அசைவுகளால் உருவான சிற்றலைகளை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

ஒரு தனித்துவமிக்க முக்கியத்துவத்தை விளக்குவதற்கென அங்கு ஏதும் இருக்கவில்லை. சமையல் அடுக்குகளிலிருந்த பொருட்களை வைத்துக் கொண்டு ரெய்கோ மும்முரமாகத் தனது பணியில் ஆழ்ந்தாள். அவளது கைகளில் நடுக்கமில்லை. சொல்லப் போனால், வழமையை விட வேலைகளைச் சுத்தமாகவும் சரளமாகவும் செய்தாள். அவ்வப்போது அவளது மார்பினுள்ளே விசித்திரமான வலித்துடிப்பினை உணரவும் செய்தாள். தொலை மின்னலைப் போல அது கூரிய செறிவுடன் ஏற்பட்டு பின்னர் தடயமே இன்றி மறைந்து போனது. அதைத்தவிர வழக்கத்திற்கு மாறாக எதுவும் அங்கு நிகழவில்லை.

தளபதி குளியலறையிலிருந்து மழித்தபடி இருந்தபோது இதுவரை இருந்த சோர்வும் குழப்பமும் நீங்கி அற்புதமாக ஆற்றுப்படுத்தப்பட்ட நிலைக்கு வந்திருந்தார், கண்முன்னே மரணம் வீற்றிருக்கும் போதும், அதை மகிழ்வுடன் எதிர்பார்த்தபடி இருந்தார். தனது மனைவி வீட்டுப் பணிகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒலி அவரை மெலிதாக வந்தடைந்தது. இரண்டு நாட்களாக ஆழத்திலிருந்த வளமான உடலிச்சை தானாய் மேலெழும்பியது.

மரணத்தின் மீது சத்தியம் செய்த போது அனுபவமான மகிழ்ச்சியில் எந்த ஒரு தீங்கும் இருந்திருக்கவில்லை என்பதில் தளபதி உறுதிப்பாட்டுடன் இருந்தார். அவ்வளவு தெளிவாகவும் மனப்பூர்வமாகவும் புரியாதிருந்த போதும் அவர்கள் இருவருக்கும் தங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த தனிமைச் சுகங்கள் மீண்டும் தர்மத்தின் தேவ விசையின் பாதுகாப்பிற்குக் கீழ் வந்து சேர்ந்துவிட்டதாகவும் முழுமையான தகர்க்கமுடியாத சத்தியத்தில் சேர்ந்துவிட்டதாகவும் உணர்ந்தனர். ஒருவரது விழியில் மற்றொருவர் பார்க்கையில் அவர்கள் மரியாதைக்குரிய மரணம் குறித்து, மீண்டும் ஒருமுறை சத்தியமும் அழகும் ஒருங்கே சேர கட்டமைக்கப்பட்டிருந்த தகர்க்க முடியாத இரும்பு கோட்டைக்குள் தங்களது ஆன்மா பாதுகாப்பாக இருக்கப் போவதாக எண்ணிக் கொண்டனர். உடலிச்சைகளுக்கும் தனது தேசபக்தியின் வீரியத்திற்குமான பிணைப்பில் பிழைகளையோ அல்லது தடுமாற்றங்களையோ இதுவரை காண முடியாத தளபதி இரண்டையுமே ஒரே பொருளின் அங்கங்கள் என்று கருதிக் கொண்டார்.

இருட்டில் விரிசலுடன் இருந்த பனிபடிந்த கண்ணாடியில் தன் முகத்தைக் காட்டியவாறு மிகுந்த அக்கறையுடன் மழித்துக் கொண்டிருந்தார். இதுதான் அவரது மரணத்தின் முகமாக இருக்கப் போகிறது. அதில் பார்க்கச் சகியாத களங்கங்கள் ஏதும் இருந்துவிடக்கூடாது. சுத்தமாக மழிக்கப்பட்ட கன்னங்கள் மீண்டும் இளமைப் பொலிவுடன் மிளிர, அது கண்ணாடியின் இருளை ஒளிர்விக்கத் தக்கதாய் இருந்தது. மரணத்துடன் தொடர்பு படுத்தி தனது மிளிர்கின்ற வளமான முகத்தினைப் பார்க்கையில் கொஞ்சம் நேர்த்தி இருப்பதை அவர் வெகுவாக உணர்ந்தார்.

இப்போது காட்சியளித்துக் கொண்டிருப்பதைப் போல, அது அவரது மரணமுகமாக மாறியிருக்கிறது! ஏற்கனவே அது தளபதியின் சொந்த முகம் என்கிற இடத்திலிருந்து மெல்ல விலகி, இறந்து போன சேவகனின் நினைவிடத்தின் மேலிருக்கும் மார்பளவுச் சிலை போல மாறிவிட்டிருந்தது. ஒரு சோதனைக்காக அவர் தனது விழிகளை இறுக மூடினார். அனைத்துமே கருப்பினால் சூழப்பட்டிருந்தது, அவர் அப்போது உயிர்வாழும் விழிபார்க்கக் கூடிய ஓர் உயிரியாக இல்லை.

தனது மழிப்பினால் மென்னீலமாக ஒளிரும் கன்னத்துடன் குளியலறையிலிருந்து திரும்பி வந்த தளபதி தற்போது மிகச்சீராக கனலேற்றப்பட்டிருந்த கனப்பிடத்தின் முன்னர் அமர்ந்தார். ரெய்கோ வேலையில் மும்முரமாக இருந்துவந்த போதும் தனது முகத்திற்குச் சற்றே ஒப்பனை செய்து அழகூட்டி இருப்பதைத் தளபதி கண்டறியத் தவறவில்லை. அவளது கன்னங்கள் எழில் கூடியும் உதடுகள் ஈரப்பதத்துடனும் இருந்தன. துயரத்தின் நிழல் கூட அங்கு தென்படவில்லை. தனது மனைவியின் அற்புதமான இயல்பைக் கண்டவர், தான் மிகச்சரியானவளைத்தான் இல்லறத் துணையாகத் தேர்ந்தெடுத்திருப்பதாக உணர்ந்தார்.

தனது மதுக் கோப்பையைச் சுவைத்தவுடன் அதை ரெய்கோவிற்குக் தந்தார். ரெய்கோ அதற்கு முன்பு ஒருபோதும் மதுவினைச் சுவைத்ததில்லை, ஆனால் எந்தவித மறுப்பும் சொல்லாமல் அதை மென்மையாகச் சுவைத்தாள்.

“இங்கு வா,” என்றார் தளபதி.

ரெய்கோ கணவரது அருகே சென்று அவரது மடியின் குறுக்கே பின்புறமாக சாய்ந்த போது, அவரால் தழுவப்பட்டாள். மகிழ்ச்சி, துயரம் ஆகியவற்றுடன் அருந்திய மதுவும் ஒன்றாகச் சேர்ந்து அவளைப் படுத்திய போது அவளது முலைகள் வன்மமான துள்ளல்களுடன் இருந்தன. தளபதி தனது மனைவியின் முகத்தினைக் குனிந்து பார்த்தார். இந்த முகம்தான் இவ்வுலகில் அவர் கடைசியாகப் பார்க்கிற முகம், அது அவரது மனைவியின் முகம். தான் இனித் திரும்ப வரவே போகாத ஒரு சுற்றுலா தளத்தினை நுணுகிப் பார்க்கும் ஒரு பயணியைப் போல அவள் முகத்தை உற்றுப் பார்த்தார். இந்த முகம் ஒருபோதும் அவருக்குச் சலிப்பை ஏற்படுத்தாத முகம், எல்லாம் வழமை போல இன்னும் குளிர்மை கொள்ளாமல் இருக்க, மெல்லிய வலிமையுடன் உதடுகள் மூடி இருந்தன. தளபதி அந்த உதடுகளை யோசனையின்றி முத்தமிட்டார். காணச்சகியாத அழுகையின் சுவடுகள் ஏதுமற்றபோதும், சடுதியில் மூடிய விழிகளின் இமைவழியே கண்ணீர் வழிந்து பளபளக்கும் நீரோடை போல நகர்ந்தது.

கொஞ்ச நேரம் கழித்து தளபதி மேற்தளத்தில் இருக்கும் படுக்கையறைக்குச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்திய போது, அவரது மனைவி குளித்துவிட்டுப் பின் வருவதாக பதிலளித்தாள். படுக்கையறைக்குத் தனியே படியேறிச் செல்கையில் ஏற்கனவே வாயு கொதிப்பானால் காற்று சூடேற்றப்பட்டிருந்தது. தனது கால்களை அகட்டியும் கைகளை விரித்தவாறும் அவர் மஞ்சத்தில் படுத்துக் கிடந்தார். வழமையை விட அதிக நேரமோ அல்லது குறைவான நேரமோ அப்போதும் அவளுக்காகக் காத்திருக்கையில் ஆகிவிடவில்லை.

கைகளை மடித்து தலையின் கீழ் வைத்து கூரையின் மீது நிரையாக இருந்த தீபங்களைக் கடந்து இருந்த ஒரு மென்னிருட்டினைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். அவர் இப்போது காத்திருப்பதே அந்த மரணத்தை எதிர்நோக்கித்தானா? அல்லது புலன்களுக்கான விலங்கிச்சைகளையா? இருவரும் இதுவே மரித்தல் தான் என்பது போல உடலை ஒன்றோடொன்று சுருட்டிக் கொண்டனர். ஆனால், எது எப்படியாயினும், இதற்கு முன்பு ஒரு போதும் தளபதி அத்தகைய சுதந்திரத்தைச் சுகித்ததில்லை.

சாளரத்திற்கு வெளியே ஒரு மகிழுந்தின் ஒலி கேட்டது. பனி குவிக்கப்பட்டிருந்த தெருவில் அதன் சக்கரங்கள் சறுக்கிக் கொண்டு கீறீச்சொலி எழுப்பியதைக் கேட்டார். அருகிலிருந்த சுவர்களில் பட்டு எதிரொலித்த அதன் ஒலி…அந்த சத்தங்களைக் கேட்டபோது அவருக்குத் தனது இல்லம் ஒரு தனித்தீவாகி இருப்பது போன்ற எண்ணம் உண்டாகி சமூகம் தனது பணியைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டு தன்பாட்டிற்கு இருப்பதாகத் தோன்றியது. சுற்றிலும் அகலமாகவும் அசுத்தமாகவும் அவரது சோகத்திற்கு நாடே நீண்டிருந்தது. அவர் அதற்காகத் தனது உயிரை விடவிருக்கிறார். ஆனால் அவர் தன்னையே பலி கொடுக்கத் தயாராகக் காரணமாக இருந்த அந்த மாசிறப்புடைய நாடு இவரது மரணத்திற்காக கொஞ்சமேனும் தலைதிருப்பிக் கவனித்துப் பார்க்குமா? அவருக்குத் தெரியாது, அது ஒரு பொருட்டுமல்ல. அவருடையது பெருமிதமற்ற போர்க்களம், தன் வீரத்தின் பிரதாபம் செய்ய ஒருவரும் இல்லாது போன போர்க்களம் : அது உணர்வின் முதல்வரிசை.

ரெய்கோவின் பாதவொலி படியில் கேட்டது. இந்த இல்லத்தின் சீரிய படிக்கட்டுகள் இன்னும் மோசமாக விரிசல் விட்டிருந்தன. அந்த விரிசல்களுக்கென்று இனிய நினைவுகள் இருந்தன, பல தடவைகள், மஞ்சத்தில் காத்திருந்த போது, அதன் வரவேற்பு முழக்கத்தினை தளபதி கேட்டிருந்தபடி அமர்ந்திருந்ததுண்டு. இனி அதைக் கேட்கப்போவதில்லை என்ற எண்ணம் வந்ததும் அதை மிகச் செறிந்த கவனத்துடன், ஒவ்வொரு தருணத்திலும் ஒவ்வொரு மூலையிலும் இந்த அதிமுக்கியமான நேரம் அந்த மென்மையான பாத வீழ்வு அந்த விரிசலுற்ற படிப்பாதையில் வீழ்வதை எதிர்பார்த்தபடியே இருந்தது. அத்தருணங்கள் உள்ளொளியால் மிளிரும் ஆபரணங்களென மாறுவதாகத் தோற்றமளித்தன.

ரெய்கோ  நகோயா உறையினை தனது இடைவரை இருந்த யுகாதாவின் மீது அணிந்திருந்தாள், ஆனால் தளபதி அதனருகே தன் கைகளை நீட்டியதும், மென்னொளியால் துலங்கிய அதன் செந்நிறத்தின் மீது, ரெய்கோவின் விரல்கள் அவருக்கும் உதவும் விதமாக வந்து தொட, அந்த உறையாடை, தரையை நோக்கி விருட்டெனக் கீழே வீழ்ந்தது. அவருக்கெதிரே அவள், தனது யுகாதாவில் நின்றபடி இருக்க தளபதி அதன் இருபுறங்களிலும் இருக்கும் திறப்புகளின் உள்ளே தன் கைகளை நுழைத்து, அவளை அப்படியே தழுவ முயற்சித்தார்; ஆனால் அவளது மெல்லிய சூட்டிலிருந்த உடலை அவரது விரல்நுனிகள் தீண்டியதும், அவள் அக்குள் நெருக்கப்பட்டு அவரது கைகளை இறுக்கியதும், அவரது சரீரம் முழுதும் சடுதியில் தீப்பற்றி எரிந்தது.

சில நொடிகளில் இருவரும் வாயு கொதிப்பானின் ஜுவாலை முன் நிர்வாணமாய் கிடந்தனர்.

இருவருமே தங்கள் எண்ணங்களைப் பேசிக்கொள்ளாத போதும், தங்களது இதயங்கள், சரீரங்கள், வலி கொண்ட மார்புகள் ஆகியவை இதுதான் கடைசி முறை என்றறிந்து துடிப்பதைத் துல்லியமாக அறிந்து கொள்ள முடிந்தது. அவர்களது உடலின் ஒவ்வொரு நுனியிலும் விழியறிய முடியாத தூரிகை கொண்டு “இதுதான் கடைசி முறை” என்ற வார்த்தைகள் ஒவ்வொரு முறையும் வெளிப்படுத்தப்பட்டதைப் போல இருந்தது.

தளபதி தனது மனைவியை அருகே இழுத்து வெறியுடன் முத்தமிட்டார். அவர்களது நாவுகள் மற்றோருடைய வாயினை அறிந்து கொண்டிருந்தபடி மென்மையான உள்பகுதிகளை நோக்கி அளைந்தபடி இருக்க, இன்னும் முழுமையாகப் புரிந்து சேர்ந்திருக்காத மரண வதைகள் அவர்களது புலன்களைச் சிவந்த சூடான இரும்பினைப் போன்ற மனநிலையில் வைத்திருந்தது. அவர்கள் இன்னும் அடைந்திருக்காத தொலைவில் காத்திருக்கும் மரணத்தின் வதைகள், அவர்கள் இன்பத்துய்ப்பின் மீது கொண்டிருக்கும் விழிப்புணர்வைப் பன்மடங்கு பெருக்கியது.

“இதுதான் நான் உன் உடலைப் பார்க்கவிருக்கும் கடைசி முறை” என்றார் தளபதி. “அதை இன்னும் நெருங்கிப் பார்க்க காட்டு.” தீபம் இருந்த பிடியினை ஒரு புறம் திருப்பி ஒளியைக் கட்டுப்படுத்தி, அவளது நீண்டு கிடந்த அம்மணக் கோலத்தில் அதன் கதிர்களை முழுமையாகப்  பரவவிட்டார்.

ரெய்கோ தனது விழிகளை மூடியபடி இன்னும் அப்படியே கிடந்தாள். தாழ் விளக்கின் ஒளி அவளது  வெண்ணுடம்பின் கம்பீர அழகை முற்றாய் காட்டியது. தளபதி அகங்காரத்துடன் தான் இந்த அழகு  இறந்துவிடுவதை ஒருபோதும் பார்க்கப் போவதில்லை என்ற எண்ணத்துடன் பார்த்தபடி இருந்தார்.

இந்த ஓய்வு நேரத்தில் மறக்கமுடியாத எண்ணங்கள் பலவற்றையும் தனது மனதில் செதுக்கிப் பதித்தபடி அமர்ந்திருந்தார். ஒருகையினால் கூந்தலை அளைந்தபடி, மறுகையினால் மெல்ல அதிரூப வதனத்தை வருடியபடி இருந்தார். அவரது பார்வை பட்ட இடங்களில் எல்லாம் இங்குமங்குமாக முத்தங்களைப் பொறித்தபடி இருந்தார். உயர்ந்து, தட்டையாக இருந்த குளிர் நெற்றியில், தடிமனற்ற இமையின் கீழ் நீண்ட இமை மயிர்கள் இருக்க மூடியிருந்த விழிகளில், சீர்மை மிகுந்த நாசியில், முழுமையாக அமைந்த இதழ்களின் இடையே ஒளிவிட்டுக் கொண்டிருக்கும் பற்கள், சிறிய அழகிய தாடைகள் மற்றும் அவளது தொண்டைப்பகுதி அவரது முத்தங்களால் சிவந்தன. மீண்டும் வாயை நோக்கித் திரும்பி வந்து தனது இதழ்களை அதன் மேல் பொருத்தி மென்னழுத்தம் தந்து ரெய்கோவின் உதடுகள் மேல் லயத்துடன், சிறிய படகிலிருந்து ஒளியலையும் அசைவு போல அசைத்தபடி இருந்தார். அவர் விழியை மூடினால் உலகமோ ஒரு தூளி போல அசைந்தபடி இருந்தது.

தளபதியின் கண்கள் எங்கெல்லாம் சென்றனவோ அங்கெல்லாம் அவரது உதடுகள் பின் தொடர்ந்தன. உயர்ந்து மதர்த்திருந்த முலைகள், அதன் மீது செர்ரி பழத்தைப் போல அழைப்பு விடுத்தபடி இருந்த காம்புகள், தளபதியின் உதடுகள் வரவர இறுகி விறைத்தன. கைகள் முலைகளின் இருபுறங்களிலிருந்தும் கீழ்நோக்கி நீண்டு ஓடி மணிக்கட்டினை நோக்கி வளைந்து வருகையிலும் தனது சமச்சீர்மையையும் உருளையமைப்பையும் விடாமல் இருந்தன. முடிவில் அவை திருமணத்தின் போது கைவிசிறியினைப் பற்றியிருந்த அந்த நுண்மையான விரல்களில் முடிந்தன. ஒவ்வொன்றாக அவர் முத்தமிட்டுக் கொண்டிருக்கையில், விரல்கள் நாணத்தினால் விலகிக் கொண்டன. மார்பிற்கும் வயிற்றுக்கும் இடையில் இயல்பாகவே இருக்கும் குழிவு தனது மென்மையை மட்டுமின்றி, வளைந்து கொடுக்கும் திறனையும் பறைசாற்றுபவையாக இருந்தன. வயிறு மற்றும் இடையின் பால் வெண்மையின் மிதமிஞ்சிய அழகின் கிண்ணத்தில் அவளது உந்திச்சுழி மழைத்துளியின் புத்துணர்ச்சியுடன் அங்கு அப்போதுதான் விழுந்தது போலத் தோன்றியது. நிழல்கள் செறிவுடன் கூடிய இடத்தில் கூந்தல் கற்றைகளாக, மென்மையாகவும் புலன் உணர்வுப்பூர்வமாகவும் இருக்க கிளர்வுகள் குவிய அங்கு ஒரு உடல் இருப்பது என்கிற நிலை மாறி மனம்வீசும் முகைகள் மொத்தமாய் அலர்ந்து மெல்ல அதீத தூண்டலை உருவாக்கும் படி உள்ளூர எரிந்தன.

நீண்ட நடுங்குகிற குரலில் ரெய்கோ பேசினாள்.

“எனக்குக் காட்டுங்கள்… நானும் இறுதியாக ஒருமுறை பார்த்துக் கொள்கிறேன்.”

இதற்கு முன்பு ஒரு போதும் தன் மனைவியின் உதடுகளிலிருந்து இவ்வளவு வலிமையுடன் எதற்கும் சமானமற்ற ஒரு வேண்டுதலை அவர் கேட்டதில்லை. அவளது பொறையுடைமை உள்ளிருக்க விரும்பி மெல்ல முடிவை நோக்கி சடுதியில் அதன் தளைகளை விடுத்து வெடித்தது போலிருந்தது. தளபதி மரியாதையுடன் மல்லாந்து படுத்தவாறு தன்னைத் தனது மனைவியின் முன் ஒப்புக்கொடுத்தார். மெதுவாகத் தனது வெண்ணிற நடுக்குற்ற உடலுடன் எழுந்தவள் தனக்குத் தன் கணவர் செய்ததை அப்படியே திருப்பிச் செய்துவிட வேண்டும் என்ற கள்ளமற்ற எண்ணத்துடன் அவரது விழிகளில் இரண்டு விரல்களை வைத்தாள், அவை அவளை நிலைத்துப் பார்த்தன. மெல்ல அவற்றைத் தடவிட அவை மூடிக்கொண்டன.

சடுதியில் கனிவினால் உந்தப்பட்டு, அவளது கன்னமெங்கும் உணர்ச்சிப் பிரவாகமெடுத்தது. ரெய்கோ தனது கரங்களை ஒட்ட வெட்டப்பட்டிருந்த தளபதியின் தலையைச் சுற்றி வளைத்தாள். அவள் கொங்கைகளின் மேல் அந்த குற்றுமயிர் வலியேற்படுத்தும் அளவிற்குத் தேய்த்தது. புடைத்திருந்த நாசி அதே குளிர்வுடன் அவளது தசைக்குள் அழுத்த அவரது மூச்சோ சூடாக இருந்தது. தனது தழுவலைத் தளர்த்திக் கொண்டவள் தனது கணவனின் ஆண்மை மிக்க முகத்தைக் குனிந்து நோக்கினாள். வன்புருவங்கள், மூடிய விழிகள், நாசிப்படலம், வடிவான உதடுகள் ஒன்றுடன் ஒன்று அழுந்தியிருந்தன… நீல நிறத்தில் முற்றிலும் மழிக்கப்பட்டிருந்த கன்னங்கள் ஒளியைப் பிரதிபலித்து மென்மையாக மிளிர்ந்து கொண்டிருந்தன. ரெய்கோ அவ்விரண்டையும் முத்தமிட்டாள். அகன்றிருந்த புறங்கழுத்து, வலிய விரைத்திருந்த தோள்கள், கேடயமும் அதில் இரும்பு காம்புகளும் என இருந்த வன்மார்பு மற்றும் அதிலிருந்த இரட்டை வட்டங்கள் ஆகிய அனைத்தையும் முத்தமிட்டாள். தோள்கள் மற்றும் மார்பின் வன் தசைகளுக்குள் ஒடுங்கி இருந்த அக்குள் குழியில் இருந்த வளர்ந்த முடியில் இருந்து இனிய சோகம் நிறைந்த நறுமணம் வெளியேறியது, அந்த மணத்தின் இனிமையில் இளம் இறப்பின் அடிப்படைத்துகள் எப்படியோ கலந்திருந்தது. தளபதியின் நிர்வாணமான தோல் பார்லி வயலைப் போன்று ஒளிவிட்டபடி இருந்தது. எங்கிருந்தும் வழிந்து கொண்டிருந்த தசைகள் அனைத்தும் திடீர் குறுக்கமுற்று கீழ் வயிற்றில் இருந்த உந்திச்சுழியினை நோக்கி வந்திருந்தன. இளமையும் வன்மையும் கொண்ட முடியால் பெரிதும் மூடப்பட்டிருந்த வயிற்றினைக் கண்டு இன்னும் கொஞ்ச நேரத்தில் அது கொடூரமாக வெட்டுப்படப் போகிறது என்ற எண்ணத்தினால் ரெய்கோ கவலையிலும் பரிதாபத்திலும் அழுது, அதை முத்தத்தினால் குளிப்பாட்டினாள்.

தனது மனைவியின் கண்ணீர்த் துளிகள் தனது வயிற்றில் வீழ்ந்த உடன் தளபதி தனது தற்கொலையின் கொடூர வலிகளைத் தாங்குவதற்கு மனோதிடத்துடன் தயாராகினார்.

இத்தகைய கனிவான பரிமாறுதல்களுக்குப் பிறகு அவர்கள் எத்தகைய மீமகிழ்வை உணர்ந்திருப்பார்கள் என்பது கற்பனை செய்யக்கூடியதே. தளபதி தான் எழுந்து தனது மனைவியை மடிப்பது போல ஆற்றலுடன் கட்டித் தழுவிய போது அவளது சரீரம் துயரத்தினாலும் விட்ட கண்ணீரினாலும் துவண்டிருந்தது. உணர்ச்சிவயப்பட்டவர்களாய் ஒருவரை ஒருவர் முகம் பார்த்து கன்னங்களை ஒன்றோடு ஒன்றாகத் தேய்த்துக் கொண்டிருந்தனர். ரெய்கோவின் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. வியர்வையினால் ஈரமாகி இருந்த அவர்களது மார்புகள் நெருங்கிப் பிணைந்து இனியொருமுறை பிரியவே போவதில்லை என்று உளமயக்கு ஏற்படுத்தும் அளவிற்கு அந்த இளம் உடல்கள் பிணைந்திருந்தன. ரெய்கோ கதறியழுதாள். உச்சங்களிலிருந்து அவர்கள் பள்ளங்களில் வீழத்தொடங்கினர், பள்ளங்களில் வீழ்கையில் மீண்டும் சிறகடித்துப் பறந்து மீண்டும் தலைசுற்றும் உயரங்களை அடையத் துவங்கினர். தளபதி படைப்பிரிவு பீடுநடை போடுகையில் இருப்பவரைப் போல மூச்சுவாங்கினார். ஒரு சுழற்சி முடிந்ததும், உடனடியாகவே அடுத்த உணர்ச்சியலைகள் உருவாகின, இருவரும் இணைந்து, சலிப்பின் சுவடே இல்லாமல், உடனடியாக உணர்வின் சிகரத்திற்கு ஒற்றை மூச்சில் ஏறிக்கொண்டிருந்தனர்.


4

இறுதியில் தளபதி மறுபுறம் நோக்கித் திருப்பிக் கொண்டபோது அவர் களைப்படைந்திருக்கவில்லை. தற்கொலை செயல்பாட்டை மேற்கொள்வதற்குத் தேவையான வலிமையைத் தான் குறைத்து மதிப்பிட்டுவிடக்கூடாது என்பதன் பதற்றம் அவரைத் தொற்றிக் கொண்டது, ஒன்று. மற்றொன்று, இவ்வாறு ஆழ்காதலில் துய்த்ததால் ஏற்பட்ட இனிய நினைவுகளைக் கெடுக்கப் போவது குறித்த துயரம்.

தனது இன்பம் துய்த்தலைத் தெளிவான முடிவுடன் நிறுத்திவிட்ட தளபதியைப்  பார்த்ததும், வழமை போல் தன் கீழ்படிதல் பண்பைப் பறைசாற்றுவதாக ரெய்கோவும் நிறுத்திக் கொண்டாள். அவர்கள் இருவரும் தங்களது விரல்கள் ஒன்றுடன் ஒன்று பின்னிய நிலையில் மஞ்சத்தில் நிர்வாணமாய் கிடந்தனர். அறை சூடேற்றியினால் இன்னும் கதகதப்புடன் இருந்தது. அவர்களது சரீரங்களிலிருந்து வியர்வை கொட்டுவது நின்று போன பின்னும் கூட இன்னும் குளிர்ச்சியை அவர்கள் உணரவில்லை. வெளியே, இரகசிய மொழி பேசும் இரவில், கடந்து கொண்டிருந்த வாகனங்களின் ஒலியும் தீர்ந்துவிட்டிருந்தன. யோட்சுவா நிலையத்திலிருந்து வரும் இரயில் மற்றும்  மகிழுந்துகளின் சத்தங்கள் இத்தனை தூரத்தைத் துளைத்து வந்து சேர்வதில்லை. அகழியரணால் சூழப்பட்ட பகுதியில் எதிரொலித்து முடிந்ததும் அகசகா என்ற இடத்தில் உள்ள மரப்பூங்காவில் அந்த ஒலிகள் தீர்ந்துவிடுகின்றன. ஏகாதிபத்திய படைகள் இரண்டாகப் பிரிந்து ஒருவரையொருவர் போர்க்களத்தில் சந்தித்துக் கொண்டு சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர் என்பது நம்புவதற்கே சற்றுக் கடினமாக இருந்தது.

தங்களுக்குள் மின்னிக் கொண்டிருக்கும் கதகதப்பைச் சேமித்துப் பாதுகாத்து வைத்துக் கொண்ட அவர்கள் அப்போதுதான் சுகித்திருந்த பொக்கிஷ உணர்வுகளை மீள் நினைவுபடுத்திக் கொண்டபடி நிலைத்துப் படுத்திருந்தனர். முத்தங்களின் சுவை ஒருபோதும் குன்றி இருக்கவில்லை என்பதையும் மாறி மாறி வந்த களிமயக்க சம்போகங்களில் உணர்ந்த நிர்வாண உடற்தசையின் ஸ்பரிசங்களையும் அசை போட்டபடி இருந்தனர். ஆனால் ஏற்கனவே கருங்கூரையின் விரிசல்களிலிருந்து மரணத்தின் விழிகள் அவர்களை உற்று கவனிக்கத் துவங்கி இருந்தது. இந்த மகிழ்வு இறுதியானவை, அவர்களது உடல் இனியொருமுறை இவற்றைச் சுகிக்க இயலாது. ஒருவேளை நரைகூடிக் கிழப்பருவமெய்தி இறந்தாலும் கூட, இத்தகைய செறிவுடன் கூடிய உடற்சுகம் இனி ஒருபோதும் மீண்டும் அனுபவிப்பதற்கில்லை, என்பதை இருவரும் ஒன்றாகவே புரிந்து கொண்டனர்.

அவர்களது விரல்கள் ஒன்றுடன் ஒன்று பின்னிக் கொண்டிருக்கும் ஸ்பரிச உணர்வு, அதுவும் கூட விரைவிலேயே இல்லாமல் போய்விடும். அவர்கள் தற்போது இருண்ட கூரைச்சுவர்களின் மீது வெறித்துக் கொண்டிருக்கும் மரத் துகள் அடுக்குகள் கூட அவர்களிடமிருந்து பிடுங்கப்பட்டிருக்கும். அவர்களால் அருகருகே நெருங்கி வந்து கொண்டிருக்கும் மரணத்தை அறிய முடிந்தது. இப்போது எந்தவித தடுமாற்றமும் இருக்க முடியாது. அவர்கள் தத்தம் மரணங்களைத் தானாகவே தொட்டு கட்டித் தழுவியாக வேண்டிய அவசியம் இருந்தது.

“சரி, நாம் முன் தயாரிப்புகளைச் செய்யத் தொடங்கலாம்,” என்றார் தளபதி. அச்சொற்களிலிருந்த உறுதியின் குறிப்பு களங்கமற்றிருந்தது, அதே சமயத்தில் ரெய்கோ இதற்கு முன் தன் கணவரின் குரலில் இத்தனை அன்பையும் கனிவையும் அறிந்ததிருந்ததில்லை.

அவர்கள் எழுந்துவிட்டதும் அவர்களுக்கென பல ஒருக்கப்பணிகள் காத்திருந்தன.

இதற்கு முன்பு ஒருதடவை கூட மஞ்சத்தை ஒருக்குவதில் உதவியிராத தளபதி அப்போது மகிழ்வுடன் இழுப்பானின் கதவைத் திறந்திழுத்துவிட்டு, படுக்கைவிரிப்பினை தானாக எடுத்து அறையைக் குறுக்கே கடந்து, அதை இழுப்பறைக்குள் வைத்துத் திணித்தார்.

ரெய்கோ வாயுச் சூடேற்றியை அணைத்துவிட்டு வெளிச்சத்தின் நிறுத்தியை நகர்த்தினாள். தளபதி இல்லாதிருக்கையில் அவள் இந்த அறையைப் பெருக்கி தூசு நீக்கி மிகுந்த கவனத்துடன் ஒருக்கினாள். இப்போது, ஒரு மூலையில் தள்ளப்பட்டுக் கிடந்த மரமேசையை மட்டும் ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், அந்த எட்டுவிரிப்பு அறை, ஏதோ ஒரு முக்கிய விருந்தினருக்காகக் காத்திருக்கும் வரவேற்பறையினை ஒத்திருந்தது.

“இங்கு கொஞ்சம் முக்கியமான குடியாட்டு நிகழ்ச்சிகளைக் கண்டிருக்கிறோம், இல்லையா? கானோ, ஹோம்மா, நோகுச்சி எல்லோரும் உள்பட…”

“ஆம், அவர்கள் அனைவருமே நல்ல குடிகாரர்கள்.”

“நாம் கொஞ்ச நேரத்திலேயே அவர்கள் அனைவரையும் மறுமையில் சந்திக்கவிருக்கிறோம். அவர்கள் நம்மைக் கேலி செய்வார்கள், கற்பனை செய்து பாரேன், நான் உன்னையும் அழைத்து வந்திருக்கிறேன் என்று தெரிந்தால் அவர்கள் என்னவெல்லாம் சொல்வார்களோ?”

படிகளில் இறங்கிவந்தபடியே அந்த – மெளனமான, தூய, மேற்கூரை விளக்கினால் பிரகாசமாக ஒளியூட்டப்பட்ட – அறையினை திரும்பிப் பார்த்தார். அவரது மனதில் அங்கு குடித்து மகிழ்ந்திருந்த இளம் அலுவலர்களின் முகங்கள் மிதந்து வந்தன, அவர்களது குழந்தைத்தனமான உளறல்களும் சிரிப்புகளும் கூட. இந்த அறையிலேயே தான் ஒரு நாள் தனது வயிற்றை வெட்டித் திறக்கப் போவதாக அவர் ஒருபோதும் நினைத்ததில்லை.

கீழிருக்கும் இரண்டு அறைகளிலும் கணவனும் மனைவியும் தங்கள் முன் தயாரிப்புப் பணிகளில் இலகுவாகவும் முழுமையாகவும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். தளபதி முதலில் கழிவறையையும் பின்னர் குளியலறையையும் தூய்மையாக்கக் கிளம்பினார். அதனிடையே ரெய்கோ தனது கொழுநனின் மேலாடையை மடித்து வைத்துவிட்டு, அவரது சீருடை, கால்சராய் மற்றும் புதிதாக வெட்டித் தூய்மையாக்கப்பட்ட கெளபீனம் ஆகியவற்றைக் குளியலறையில் வைத்துவிட்டு தங்களது பிரியாவிடைக் குறிப்புகளை எழுதும் பொருட்டு வாழ்வறையில் காகிதத்தாள்களை வைத்து முடித்தாள். பின்னர் அவள் எழுத்து பெட்டகத்திலிருந்து மையினை எடுத்து பேனாவில் தேய்த்தாள். ஏற்கனவே தனது குறிப்பு எப்படி இருக்க வேண்டும் என்று எண்ணி முடித்திருந்தாள்.

 

ரெய்கோவின் விரல்கள் மை உறைவின் மீதிருந்த குளிர்ந்த எழுத்துக்களை அழுத்திக் கொண்டிருந்தன. புட்டி முழுவதும் கருநிறம் பரவியது போல இருண்டதும் விரல்களிலிருந்து வரும் அழுத்தமும், மங்கி உயர்ந்து குன்றி ஒலிக்கும் சத்தமும் மரணத்தையே முற்றிலும் குறிக்கிறது என்ற அவளது எண்ணத்தை நிறுத்தினாள். அது தினந்தோறும் செய்யும் பணிகளுள் ஒன்றுதான், அது தன்னை மரணம் வந்து எதிர்நிற்கும் முன்பு வரை நேரத்தைக் கடத்த உதவும் சின்ன பணிதான் என்று எண்ணினாள். ஆனாலும் எப்படியோ அதிகரித்துக் கொண்டிருக்கும் மெல்லிய இயக்கத்தினாலும், பெருகும் மையிலிருந்து வரும் வாசனையினாலும் அங்கு சொல்லமுடியாத இருண்மை திரண்டு கொண்டிருந்தது.

 

தனது தோலின் மீது இன்னொரு தோல் போல ஒருங்கிய சீருடையினை அணிந்தபடி தளபதி குளியலறையிலிருந்து வெளிவந்தார். ஒரு வார்த்தையின்றி அவர் மேசையில், தனது கையில் தூரிகையை எடுத்து, என்ன எழுதுவது என்று அறியாத வெறிப்புடன் தாளின் முன்பு நிமிர்வுடன் அமர்ந்திருந்தார்.

 

ரெய்கோ வெண்பட்டு கிமோனோவை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் சென்றாள். வாழ்வறைக்கு மீண்டும் அவள் வெண்பட்டு நிற கிமோனோவை அணிந்து, சற்றே முகத்தில் சுண்ணம் பூசி திரும்பி வந்த போது பிரியாவிடைக் குறிப்பு எழுதப்பட்டு மேசையில் விளக்கின் கீழ் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டாள். அதில் தடித்த கருப்பு நிற தூரிகை வெறுமனே இப்படியாகச் சொன்னது :

“ஏகாதிபத்திய படைகள் நீடூழி வாழ்க! இவண், இராணுவத் தளபதி தகயாமா ஷிஞ்சி.”

அவருக்கு எதிரில் அமர்ந்து ரெய்கோ தனது குறிப்பினை எழுதிக் கொண்டிருந்த போது, தளபதி அமைதியாக, தீவிர த்வனியுடன், தூரிகையை மிகுந்த நுட்பமாக இயக்கிக் கொண்டிருந்த தனது மனைவியின் வெளிறிய விரல்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.

தத்தம் குறிப்புகள் கைகளில் இருக்க – தளபதியின் வாள் அவரது பக்கவாட்டில் செருகப்பட்டும், ரெய்கோவின் குறுவாள் அவளது வெண் கிமோனோவின் ஒரு திறப்பின் உள்ளே வைக்கப்பட்டும் கிடக்க – கடவுளுக்கு முன் நின்று இருவரும் மெளனமாகப் பிரார்த்தனை செய்தனர். பிறகு கீழறைகளின் அனைத்து விளக்குகளையும் எரியச் செய்தனர். படிகளில் ஏறியபடியே தனது தலையைத் திருப்பி வெண்ணாடை அணிந்து மிளிர்வுடன் தன் பின்னால் நடந்து வந்து கொண்டிருந்த தனது மனைவியைக் கீழ்நோக்கிய பார்வையால் கீழிருந்த இருளின் பின்புலத்தில் கண்டார்.

பிரியாவிடைக் குறிப்புகளானது மேல் மாடி அறையிலிருந்த மாடத்தில் வைக்கப்பட்டன. தொங்கும் திரைச்சீலையை அகற்றுவது குறித்து யோசித்துவிட்டு, அதிபர் ஒழெக்கி ‘கடமை’ என்று எழுதப்பட்டிருந்ததால் அது இருந்த இடத்திலேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டனர். ஒருவேளை அவை குருதித் தெறிப்பினால் கறைபடினும் அதை இராணுவ அதிபர் புரிந்து கொள்வார் என்று எண்ணிக் கொண்டனர்.

தளபதி திண்ணைப் பகுதிக்குப் புறமுதுகு காட்டியபடி நிமிர்வுடன் அமர்ந்து தனக்கு முன்னால் தரையில் தனது வாளினை வைத்தார்.

ஒரு பாயின் அகலம் தள்ளி அவரைப் பார்த்தவாறு ரெய்கோ அமர்ந்தாள். அவள் முழுமையும் வெண்மையில் பிரகாசிக்க செந்தீற்றல் நிறைந்த உதடுகள் மட்டும் காமத்தின் ஈர்ப்பால் நிறைந்திருந்தன.

இருவரையும் பிரிக்கும் பாயின் தொலைவில் அமர்ந்தபடி ஒருவர் மற்றவரது விழிகளுக்குள் பார்த்துக் கொண்டனர். தளபதியின் வாள் அவரது முட்டியின் முன்புறம் கிடந்தது. அதைப் பார்த்துக் கொண்டிருந்த ரெய்கோவிற்கு அவர்களது முதலிரவு துயரத்துடன் நினைவில் எழுந்தது. தளபதி கரகரக்கும் குரலில் பேசினார் :

“எனக்கு உதவ இரண்டாமவர் யாருமற்ற காரணத்தினால் நான் நன்கு ஆழமாக வெட்டிக் கொள்ள வேண்டும். அது பார்ப்பதற்கு உகந்ததாக இருக்காது என்றாலும் அச்சம் கொள்ளாதே. எந்தவகை மரணமுமே பார்ப்பதற்குப் பயம் ஏற்படுத்துபவைதான். நீ பார்க்கவிருப்பதைக் கண்டு உனக்குத் தயக்கம் ஏற்பட்டுவிட்டுவிடக் கூடாது. சரிதானே?”

“நிச்சயமாக.”

ரெய்கோ பூர்ண சம்மதத்துடன் தலையசைத்தாள்.

தன் மனைவியின் உருளையான வெண்ணிற தோற்றத்தைக் கண்ட தளபதிக்கு விசித்திரமான கிளர்ச்சி உண்டானது. அவர் செய்யவிருப்பது தனது இராணுவ வீரன் என்கிற நிலையிலிருந்து காண்பிக்கப்பட வேண்டிய சாற்றல், இதற்கு முன் தன் மனைவியிடம் தான் காண்பித்து விடாதது. அது போர்க்களத்திற்குள் நுழைகையில் தேவைப்படும் செருக்கிற்கு நிகரான தைரியத்தைக் கோரியது; இந்த மரணம் போர்முகத்தில் நிகழ்வதை விட எந்த விதத்திலும் மரியாதையிலோ தரத்திலோ குறைவான ஒன்றில்லை. அவர் தற்போது பறைசாற்றவிருப்பது போர்க்களத்தில் தனது நடத்தையைக் காண்பிப்பதற்கு நிகரானது.

அத்தருணத்தில் இந்த எண்ணம் தளபதியை ஒரு இனம்புரியாத கற்பனைக்கு இழுத்துச் சென்றது. போர்க்களத்தில் நிகழும் தனித்த மரணம், தன் அழகிய மனைவியின் விழிகளுக்கு முன் நிகழும் மரணம்… இந்த இரண்டு பரிமாணங்களிலும் ஒரு சேர நிகழவிருக்கும் இம்மரண உணர்வு, இவ்வாறு நிகழ்வதற்கரிய ஒரு புள்ளியின் இணைவில் நிகழவிருப்பதாலேயே இதில் வார்த்தைக்கு அடங்காத இனிமை இருப்பதாக அவர் கருதினார். இது நற்பேறின் உச்சமே என்று நினைத்தார். தனது இறப்பின் ஒவ்வொரு கணத்தையும் இந்த இன்விழியாளின் முன் கடப்பதென்பதது, மெல்ல மெல்ல இனிமையான, நறுமணம் வீசும் தென்றலுடன் கரைவதை ஒத்தது என்று கருதினார். இங்கு ஒரு சிறப்புச் சலுகை இருக்கிறது. அது என்ன என்பதை அவரால் முற்றுணர முடியாத போதும், அவை பிறரால் கிஞ்சித்தும் அறிய முடியாத ஒரு களத்தில் நிகழ்பவை என்று மட்டும் தெரிந்தது : யாருக்கும் வழங்கப்படாத ஒரு பேறு தனக்குக் கிட்டியிருக்கிறது. மணமகள் போன்ற தோற்றத்தில், வெண்ணிற உடையில் ஜொலிக்கும் தன் மனைவியின் தோற்றத்தைப் பார்த்ததும் தனது முழு வாழ்வையும் – ஏகாதிபத்தியம், தேசம், இராணுவ கொடி என – எவற்றிற்காகவெல்லாம் அர்ப்பணித்தாரோ அவை அனைத்தையும் தன் விழி முன் கண்டார். மனைவியின் வழியே இவை அனைத்தும் அவரை நெருங்கியும் தெளிவுடனும் பிழையற்ற பார்வையினால் பார்த்துக்கொண்டிருந்தன.

ரெய்கோவும் விரைவிலேயே சாகவிருக்கும் தன் கொழுநனை கவனத்துடன் பார்த்துக் கொண்டிருக்கையில், இது போல் அற்புதமான ஒன்றைத் தன் வாழ்நாளில் பார்த்ததில்லை பார்க்கப் போவதுமில்லை என்று நினைத்துக் கொண்டாள். தளபதி எப்போதுமே சீருடை கோலத்தில் அழகுடன் இருப்பார் எனினும் தற்போது கூரிய புருவங்களும் இறுக மூடிய அதரங்களும் கொண்டு தோற்றமளித்தவர் ஆண்மை என்பதற்கான பெரும் பொருளைப் பறைசாற்றிக் கொண்டிருந்தார்.

“இது புறப்படுவதற்கான நேரம்,” என்று இறுதியாகச் சொன்னார் தளபதி.

ரெய்கோ தன் உடலைப் பாயில் படும் அளவிற்கு வளைத்து முகமன் செய்தாள். அவளால் தன் முகத்தை மீண்டும் நிமிர்த்த இயலவில்லை. அவள் தன் முகத்தின் பூச்சினை கண்ணீரால் கலைத்துவிட விரும்பவில்லை, இருந்தபோதும் கண்ணீரை கட்டிவைத்திடுவதும் சாத்தியமில்லை.

நெடுநேரத்திற்குப் பிறகு அவள் நிமிர்ந்ததும், தனது கலங்கிய விழிகளால் தன் கணவனைப் பார்க்கையில், அவர் வெண்ணிற துணியைப் பட்டையாக வாளைச் சுற்றிக் கட்டி அதில் கூர்முனையின் ஐந்தாறு இஞ்ச்கள் மட்டும் தெரியும்படி வைத்திருந்தார்.

தனக்கு முன்னிருந்த பாயில் அந்த துணியுறையிட்ட வாளினை வைத்துவிட்டு, தனது முழங்காலிட்ட நிலையிலிருந்து எழுந்து, கால்களைக் குறுக்கிட்ட நிலையில் மீண்டும் அமர்ந்த தளபதி, தனது சீருடை கழுத்துப்பட்டையின் பொத்தான்களை அவிழ்த்துக் கொண்டார். அவரது விழிகள் தன் மனைவியை இனியும் கண்டுகொண்டிருக்கவில்லை. மெல்ல ஒவ்வொரு வெண்கலப் பொத்தான்களாக அவிழ்த்தார். மென்பழுப்பு நிற மார்பும் அதன் பிறகு வயிறும் வெளிப்பட்டன. அவர் தனது இடைப்பட்டையைத் திறந்து கழற்றிவிட்டுத் தனது கால்சராயின் பொத்தான்களையும் கழற்றினார். பல மடிப்புகளால் தடித்திருந்த கெளபீனத்தின் தெள்ளிய வெண்ணிறம் தெரியத் தொடங்கியது. மேலும் தனது வயிற்றை வெளிக்காட்டும் படிக்கு தளபதி தனது உடைகளைக் கீழ்நோக்கித் தள்ளிவிட்டார். பின், தனது வெண்ணுறையிடப்பட்ட வாளை எடுத்தார். தனது இடது கையினால் வயிற்றைத் தடவிக் கொடுத்தபடி கீழே குனிந்து பார்த்தார்.

வாளின் வெட்டும் முனையின் கூர்மையை ஊர்ஜிதம் செய்து கொள்ளும் பொருட்டு தனது கால்சராயின் இடது பிரிவை தனது தொடை கொஞ்சம் தெரியும் படி நன்கு விலக்கிவிட்டு, வாளினைக் குறுக்கே கிழித்தார். உடனடியாக காயத்திலிருந்து குருதி பொங்கி வந்தது. நல்லொளியில் ஜொலித்தபடியே பல செங்கோடுகள் கீழ்நோக்கி வழிந்தன.

இப்போதுதான் முதல் முறையாக தன் கணவரின் குருதியைக் கண்ணுறும் ரெய்கோவிற்கு நெஞ்சில் ஒரு கடுமையான வலியை உணர முடிந்தது. அவள் தனது கணவரின் முகத்தைக் கண்டாள். மெளனமாக ஒப்புகையுடன் குருதியைப் பார்த்தபடி இருந்தார் தளபதி. ஒரு கணம் – மேம்போக்கான அமைதிதான் என்ற சிந்தனை அப்போது வந்திருந்தாலும் – ரெய்கோ அமைதியுணர்வை அடைந்தாள்.

தளபதியின் விழிகள் தனது மனைவியின் மீது செறிந்து கூர்மையுடன் வெறித்தபடி இருந்தது. தன் இடுப்புப் பகுதியிலிருந்து மேலெழும்பியவாறு தனது மேலுடலின் பகுதி வாளின் கூர்முனைக்கு முன்பு தயாராக தன்னைக் காட்டியது. அவர் தனது தோளில் இருக்கும் சீருடையின் கோபவுணர்வின் மீது தனது முழுமையான வலிமையைத் திரட்டி எழுப்பினார். தனது வயிற்றின் இடது பகுதியில் ஆழமாகக் கிழிக்க தளபதி நோக்கினார். அவரது வன் ஓலம் அறையின் மெளனத்தைக் குத்தியிறங்கியது.

குத்தும் செயலில் எத்தனையோ கவனத்துடன் ஈடுபட்ட போதும் தளபதிக்கு வேறு யாரோ ஒருவர் தடிமனான இரும்புப் பட்டையினால் தன் வயிற்றின் பக்கவாட்டுப் பகுதி மீது கடுமையாக  அடித்தது போல உணர்ந்தார். ஒரு நொடி அவருக்குத் தலைசுற்றலெடுத்தது, தனக்கு என்ன ஆயிற்று எனுமளவு சித்தம் தடுமாறியது. துணி சுற்றப்படாத ஐந்தாறு இன்ச் திறந்த முனை முற்றிலுமாக அவரது மாமிசத்திற்குள் நுழைந்துவிட்டிருக்க, அவரது இறுகிய பிடிமானம் தொட்டிருந்த வெண்ணிற கட்டு நேரடியாக அவரது வயிற்றில் இடித்தது.

அவர் தன் நினைவிற்கு மீண்டு வந்தார். கத்திமுனை நிச்சயம் வயிற்றுச் சுவரைக் கிழித்துவிட்டது என்று நினைத்தார். அவரது சுவாசம் கடினமடைந்து, அவரது நெஞ்சம் கடுமையாகத் துடித்தது. தரைபிளந்து உருகியிருக்கும் தீக்குழம்பு கொதியூற்று பீறிட்டு வெளிப்பட்டதைப் போல அவரே அறிந்திருக்காத ஆழத்திலிருந்து ஒரு புதிய அச்சமூட்டும் பெருவலி பெருகி வந்து கொண்டிருந்தது.  பயங்கர வேகத்துடன் வலியானது சடுதியில் நெருங்கி வந்தது. தளபதி தனது கீழுதட்டைக் கடித்தபடி அனிச்சையான முனகலின் வழியே தன் வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

இதுதான் செப்புக்குவா? என்று அவர் எண்ணிக் கொண்டிருந்தார். உச்சி மீது வானிடிந்து வீழ்ந்ததைப் போல, உலகமே குடித்து விட்டுத் தடுமாறியாடிக் கொண்டிருப்பதைப் போல மிகவும் தாங்க ஒண்ணாத மோசமான உணர்வாக அது இருந்தது. அவர் பிளவினை ஏற்ப்படுத்துவதற்கு முன்பு ஆரோக்கியமானதாகத் தோற்றமளித்த அவரது மனவலிமையும் தைரியமும் இப்போது ஒற்றை மயிரிழையைப் போலச் சிறுத்துப் போயிருந்தது. இத்தகைய சிறு நூலிழை அளவுள்ள நம்பிக்கையினைப் பற்றிக் கொண்டுதான் தனது காரியத்தில் முன்னகர்ந்தாக வேண்டும் என்ற துன்பகரமான உண்மையால் அவர் கடுமையாக தாக்குற்றார். அவரது இறுகிய பிடி தற்போது குருதியால் ஈரப்பதம் அடைந்திருந்தது. கீழே குனிந்து அவர் பார்க்கையில் தனது கரமும் வாளினைச் சுற்றியிருந்த வெண் துணியும் உதிரத்தால் நனைந்திருந்ததைக் கண்டார். அவரது கெளபீனத் துணியும் கூட கடுஞ்சிவப்பால் நிறமேறி இருந்தது. இத்தகைய கடுந்துயரின் இடையிலும் கூட பார்க்கக் கூடிய பொருட்கள் இன்னும் பார்க்கமுடிவதாலும் இருக்கக் கூடியவை இன்னும் இருந்து கொண்டிருப்பதாலும் அந்த நிலை வியப்பிற்குரியதாக இருந்தது.

தனது இடப்புறம் வாளினை அவர் தள்ளியதும் அவர் முகத்தில் மரண வெளுப்பு ஏற்பட்டதை அவள் கண்ணுற்ற கணத்தில், வெடுக்கென ஒரு திரைச்சீலையை மூடியது போன்ற நிலையில், தான் அவரது பக்கம் சென்று விடாமல் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள ரெய்கோ கடுமையாகப் பாடுபட வேண்டியிருந்தது. எது நடந்தாலும் அவள் பார்த்துக் கொண்டிருந்தாக வேண்டும். அவள் சாட்சியாக இருந்தாக வேண்டும். அதுதான் அவளுக்குக் கணவனால் விதிக்கப்பட்ட பணி. அவளுக்கு எதிரே, ஒரு பாயின் அளவுக்குத் தள்ளி, தன் கணவன் வலியால் துன்புற்று உதட்டினைக் கடித்துக் கொண்டிருப்பதை அவள் பார்க்க முடிகிறது. வலி அங்கு வெகு சத்தியமாக வீற்றிருக்கிறது, கண் முன்னே. ஆயினும் ரெய்கோ அவரைக் காப்பதற்கு எதைச் செய்யவும் கையாலாகாது இருக்கிறாள்.

வியர்வை அவளது கணவன் சென்னியில் மின்னியது. தளபதி ஏதோவொரு சோதனை செய்பவர் போல அவரது விழிகளை இறுக மூடினார், பின்னர் மீண்டும் திறந்தார். விழிகள் தனது ஈர்ப்பினை இழந்திருந்தன, ஒரு சிறு விலங்கின் விழிகளைப் போல அவை காலியாகவும் அப்பாவித்தனத்துடனும் தோற்றமளித்தன.

ரெய்கோவின் உள்ளே குடைந்து கிழிக்கும் வருத்தத்தின் செறிவிலிருந்து வெகுதூரத்தில் நிகழ்வது போல அவளது விழிமுன் விரிந்த பெருவலியின் காட்சி கோடைச் சூரியன் போலப் பிரகாசத்துடன் தகித்துக் கொண்டிருந்தது. வலி தன் செறிவில் தொடர்ந்து மேல்முகமாக வளர்ந்து கொண்டிருந்தது. தனது கணவன் ஏற்கனவே வேற்றுலகத்தின் மனிதனாக ஆகிவிட்டான் என்று கருதினாள். முற்றிலும் வலிக்குகையால் சூழப்பட்ட, முழுமையாகவே வலியாகவே மாறிவிட்ட உலகில் அவர் இருக்கிறார். யாரும் நீட்டித் தொட்டுவிட முடியாத தொலைவில் இருக்கிறார் என்று அவள் நினைத்தாள். ஆனால், ரெய்கோவிற்கு வலியே ஏற்படவில்லை. அவளது துயர் வலியன்று. அவள் இது குறித்து நினைத்துக் கொண்டிருந்த போது, யாரோ ஒருவர் தன் கணவனுக்கும் தனக்கும் இடையே ஒரு பெரிய கண்ணாடிச் சுவரை எழுப்பிவிட்டதைப் போலத் தோன்றியது.

மணமுடித்த பிறகு தனது கணவனின் இருப்பே தனது இருப்பாகவும் அவரது ஒவ்வொரு மூச்சிழுப்பும் தனது சுவாசமாகவும் கருதி வந்திருக்கிறாள். ஆனால் இப்போது, தனது கணவரின் இருப்பே வலியின் இன்னொரு வடிவமாக நிஜத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கையில், தான் அனுபவித்துக் கொண்டிருக்கும் துயரின் உள்ளே தான் இருந்து கொண்டிருப்பதற்கான எந்த ஒரு ஆதாரத்தையும் அவளால் காண முடியவில்லை.

வலது கையால் மட்டும் வாளினைப் பிடித்தபடி தன் வயிற்றின் குறுக்கே வெட்டத் தொடங்கினார். உள்ளிருக்கும் மென்குடலின் வளையும் தன்மையினால் வாளின் வெட்டு எதிர்க்கப்பட்டு வெளிப்புறமாகத் தள்ளப்பட்டுக் கொண்டிருந்தது. தனது இரண்டு கரங்களாலும் அழுத்தம் தந்து ஆழமாக வெட்டியாக வேண்டிய அவசியம் என்று தளபதி புரிந்து கொண்டார். குறுக்கே அவர் வாளினை இழுத்தார். அவர் எண்ணியது போல அது அத்தனை எளிதாக வெட்டவில்லை. அவர் தனது உடலின் மொத்த வலிமையையும் தனது வலக்கரத்திற்கு கொண்டுவந்து மீண்டும் இழுத்தார். அங்கு ஒரு மூன்று நான்கு இஞ்ச் ஆழத்திற்கு வெட்டுவிழுந்தது.

வலியானது ஆழத்திலிருந்து தற்போது வெளிப்புறங்களுக்கும் பரவி, வயிறு அதிர்ந்தது. அது ஒரு காட்டுத்தனமான மணியோசை போல இருந்தது. அல்லது அவரது ஒவ்வொரு மூச்சிலும் அல்லது ஒவ்வொரு நாடித்துடிப்பிலும் ஆயிரம் மணிகள் ஒருசேர அடிப்பதைப் போல அவரது முழு இருப்பையுமே அசைத்துப் பார்த்தது. இதற்கு  மேலும் முனகுவதைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. ஆனால் தற்போது வாள் வெட்டிச் சென்று தொப்புளைக் கடந்திருந்தது, அதைப் பார்த்ததும் கொஞ்சம் திருப்தியடைந்தவரைப் போல தைரியத்தை மெல்ல மீட்டெடுத்துக் கொண்டார்.

குருதி வழிதலின் அளவு மெல்ல கூடிக் கொண்டே போனது, அது இப்போது ஒரு காயத்திலிருந்து குபுகுபுவென, நாடித் தாளத்திற்கேற்ப பெருகிக் கொண்டிருந்தது. தளபதிக்கு முன்பிருந்த பாய் முழுதும் செங்குருதியால் நனைந்திருந்தது, மேலும் மேலும் தற்காலிகக் கிண்ணங்களில் சேகரிக்கப்பட்டது போல அவரது காக்கி கால்சராயின் மடிப்பில் படிந்திருந்த குருதி தளும்பி பாயில் ஊற்றிக் கொண்டிருந்தது. ஒரு துளி மட்டும் தெறித்து பறவை போல் எழும்பிப் பறந்து ரெய்கோவிடம் வந்து அவளது மடிமூடியிருந்த வெண்ணிற பட்டு கிமோனோவின் மீது அமர்ந்து கொண்டது.

தனது வயிற்றின் வலதுபக்கமாகக் கிழித்துக் கொண்டிருக்கும் போது வலுவிழந்து மெல்ல வாளானது, உயவினாலும் குருதியினாலும் வழுக்கியபடி, மேலோட்டமாகக் கிழித்துக் கொண்டிருந்தது, அதன் கூரிய முனை வெளியே தெரிந்தது. சடுதியில் வாயுமிழ்வினால் பீடிக்கப்பட்டு கடும் குரலில் தளபதி அலறினார். வாயுமிழ்வு கடும்வலியை இன்னும் கொடியதாக்கிக் கொண்டிருந்தது, இதுவரை அழுத்தமாகவும் பொருந்தியும் இருந்த வயிறானது இப்போது வெடுக்கென பிளவுபட்டு, தனது காயத்தை அகலவிரித்துக் கொள்ள அனுமதித்தது. தனது எஜமானனின் துயரத்தை அறியாதவையாக இருந்த வயிற்று உள்ளடக்கங்கள் மறுப்புடன் விருப்பின்றி மென்மையாக வெளியேறி அவரது சிசினப்பகுதியில் விழுந்தன. தளபதியின் தலை கவிழ்ந்தது, தோள்கள் தளர்ந்தன, அவரது விழிகள் குறுகிய பிளவுகளாயின, மெல்லிய எச்சில் நீட்சி அவரது வாயிலிருந்து ஒழுகியது. அவரது தோளில் வீற்றிருந்த மதிப்புமிக்க சின்னத்திலிருந்த பொன்னெழுத்துக்கள் ஒளியைப் பிடித்துக் கொண்டு கண்சிமிட்டின.

குருதி எங்கும் பரவிக் கிடந்தது. தனது முழங்கால் வரை குருதியில் நனைந்திருந்தார் தளபதி, ஒரு கை தரையில் இருக்க, விசித்திரமான ஒரு நிலையில் மடங்கி அமர்ந்திருந்தார்.  கவிழ்ச்சி மனம் அந்த அறையை நிறைத்தது. தலையைக் கவிழ்த்தபடி, தளபதி மீண்டும் மீண்டும் ஓங்கரித்தார், அந்த இயக்கத்தினை அதுவரை கண்டிராத த்வனியில் அவரது தோள்கள் காண்பித்தன. குடல்களால் தள்ளப்பட்டு வெளிப்பட்ட வாள் முனை இன்னமும் அவரது வலது கரத்தில் இருந்தது.

அவர் தனது தலையை மீண்டும் தூக்கி நிறுத்த முனைந்து கொண்டிருக்கும் அந்தக் காட்சி, இதைவிட வீரமான ஒரு கணத்தினை கற்பனை செய்வது என்பது கடினம் எனத் தோன்றியது. சடுதியில் வெடுக்கென கடுமையுடன் அந்த அசைவு மேற்கொள்ளப்பட்டது. அவரது புறந்தலை சுவற்றில் இடித்துக் கொண்டது. இப்போது முகம் நிலன்நோக்க அமர்ந்திருந்த ரெய்கோ, வழிந்து நகர்ந்து தனது முட்டியை நோக்கி வந்து கொண்டிருக்கும் குருதியை அகல்விழிகளால் பார்த்தாள். ஆனால் அந்த திடீரொளி அவளைக் கலைத்து வியப்பேர்ப்படுத்தவே, துணுக்குற்று மேலே பார்த்தாள்.

தளபதியின் முகம் வாழும் மனிதனின் முகமாகவே இல்லை. விழிகள் ஆழமற்று, தோல் வழிந்து, முன்பு காமம் கொள்ள உகந்ததாய் இருந்த கன்னங்களும் அதரங்களும் தற்போது உலர்சேற்றை வாரியிறைத்ததைப் போலவும் இருந்தது. வலக்கரம் மட்டுமே அசைந்து கொண்டிருந்தது. கடும் கஷ்டத்துடன் வாளைப் பற்றி, அது காற்றில் தடுமாற்றத்துடன் அசைந்து கொண்டிருந்தது. தளபதியின் தொண்டையினருகே ஏதோ அசைவை உருவாக்கிக் கொண்டிருக்கும் பொம்மலாட்டத்தின் கரங்களைப் போல அது பணியாற்றிக் கொண்டிருந்தது. ரெய்கோ, இத்தகைய இதயத்தைப் பிளக்கும் இறுதிக்கட்ட நடவடிக்கைகளில் தனது கணவர் மும்முரமாக இருப்பதைக் கண்டாள். குருதியாலும் கொழுப்பினாலும் மின்னிக்கொண்டிருந்த வாளானது மீண்டும் மீண்டும் தொண்டையின் அடியில் அழுத்தப்பட்டு உருவப்பட்டுக் கொண்டிருந்தது. ஒவ்வொரு முறையும் அது தன் இலக்கினைத் தவறவிட்டபடி இருந்தது. அதை இயக்குவதற்குத் தேவையான ஆற்றல் அங்கு இருக்கவில்லை. வழிவிலகிக் குத்திக் கொண்டிருந்த அந்த கூர்முனை கழுத்துப்பட்டையையும் அதிலிருந்த மரியாதைச் சின்னத்தையும் குத்திக் கொண்டிருந்தது. அவற்றின் பிடியூசிகள் தளர்த்தப்பட்டிருந்த போதும், விறைப்பான இராணுவ கழுத்துப்பட்டை மீண்டும் தொண்டையைச் சுற்றி விழுந்து பாதுகாப்பளித்துக் கொண்டிருந்தது.

ரெய்கோவால் அதற்கு மேல் பார்க்க முடியவில்லை. அவள் கணவருக்கு உதவ முயற்சி செய்தாள், எனினும் அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவள் மேல் குருதிபடியப் படிய நகர்ந்தாள், அவளது வெள்ளாடை வன் செம்மையானது. கணவரது பின்புறத்திற்குச் சென்றவள் அவரது கழுத்துப் பட்டையைத் தளர்த்திவிடுவதைத் தவிர வேறெதையும் செய்யவில்லை. நடுங்கிக் கொண்டிருந்த வாள் முனை ஒருவழியாகத் தொண்டையுடன் நேரடித் தொடர்பிற்கு வந்தது. அத்தருணத்தில் தான் தான் தனது கணவரை முன்னகர்த்தி இருக்கிறோம் என்று ரெய்கோ எண்ணம் கொள்ள, அது தளபதியின் திட்டத்தினால் நிகழ்ந்ததுதான்  என்று தெரிய வருகிறது. அவளை அப்படி உதவ வைக்க அவரது ஆற்றல்தான் முனைந்திருக்கிறது. வெடுக்கென தன்னுடலை வாளின் மீது எறிந்து கொண்டார், அவரது கழுத்தினைக் குத்திக் கிழித்த வாள் பின்னங்கழுத்தில் வெளியேறி உலகைப் பார்த்தது. குருதிப் பெருக்கு அதீதமாக இருந்த போதும் தளபதி அசைவின்றி இருந்தார், குளிர்ந்த, நீலவொளி வீசும் இரும்பு அவரது கழுத்தில் அச்சு போல நீட்டிக் கொண்டிருந்தது.


5

மெல்லத் தனது இரத்தம் தோய்ந்த காலுறைகள் வழுக்கியவாறு ரெய்கோ படியிலிருந்து இறங்கினாள். மேற்தளத்தின் அறை அப்போது முற்றிலும் உறைந்திருந்தது.

தரைதளத்தில் இருந்த விளக்குகளைப் போட்டுவிட்டு, அவள் வாயு எரியூட்டியையும் முக்கிய மின் அடைப்பையும் துவக்கிவிட்டுவிட்டு புகையேறிக் கொண்டிருக்கும் பாதி எரிந்த கரியை கவனித்தாள். நான்கரை பாய் விரிப்பு உள்ள அறையில் இருந்த நிலைக்கண்ணாடியின் முன் அவள் நின்றபடி தனது உடையைப் பிடித்துப் பார்த்தாள். இரத்தக்கறையைப் பார்த்தபோது தனது வெண்ணிற கிமோனாவின் மீது தெளிவான ஒழுங்கற்ற மாதிரியின் வடிவமைப்பு செய்யப்பட்டது போலிருந்தது. அவள் கண்ணாடியின் முன்பு அமர்ந்தபோது, அவளது தொடைப்பகுதியில் இருந்த தன் கணவரது குருதியின் குளிர்வும் ஈரமும் சேர்ந்து நடுக்கத்தை ஏற்படுத்தியது. பிறகு நெடுநேரம் அவள் தனது கழிவறை ஒருக்கத்தில் ஈடுபட்டிருந்தாள். தனது கன்னங்களில் மென்மையாக செந்நிற பூச்சினைத் தடவியபடி இருந்தாள். இவை இனி தனது கணவனுக்காகச் செய்யும் ஒப்பனை இல்லை, தான் விட்டுச் செல்லப் போகின்ற இந்த உலகத்திற்கானது, அவள் தூரிகையை வைத்து ஒப்பனை செய்வதில் ஒரு மேன்மையுணர்வும் பிரம்மாண்டமும் இருந்தது. அவள் எழுந்த போது, ஆடி முன்பிருந்த விரிப்பு குருதியால் ஈரமாக இருந்தது. ரெய்கோ அதைப் பொருட்படுத்தவில்லை.

கழிவறையிலிருந்து வெளியேறிய பின்பு, ரெய்கோ தாழ்வாரத்திலிருந்த சிமெண்ட் தரையில் நின்றாள். அவளது கணவர் முந்தைய நாள் இந்த கதவைத் தாழிட்ட போது அது மரணத்திற்கான முன் தயாரிப்பாக இருந்தது. கொஞ்ச நேரம் அவள் சின்னஞ்சிறு பிரச்சனைகள் குறித்துச் சிந்தித்தபடி இருந்தாள். இப்போது அவள் தாழினை விலக்க வேண்டுமா? அவள் கதவினைப் பூட்டிவைத்தபடி விட்டால், அவர்கள் இறந்ததைப் பல நாட்களுக்குப் பிறகே அண்டைவீட்டார்கள் கண்டுகொள்ளக் கூடும். அவர்கள் கண்டறிவதற்கு முன்பாக அவர்கள் இருவரது பிணங்களும் நாற்றமெடுப்பது குறித்து ரெய்கோவிற்கு அவ்வளவு ஏற்பில்லை. அதைத் திறந்துவிடுவதே உகந்தது என்று தோன்றியது. தாழினை விடுவித்துவிட்டு, ஒருமுறை உறைபனி படர்ந்திருந்த கண்ணாடிக் கதவினைத் திறந்தாள். உடனடியாக ஒரு குளிர்தென்றல் உள்ளே புகுந்தது. நள்ளிரவு தெருவில் யாரும் நடமாடுவதற்கான ஒரு அறிகுறியும் இருக்கவில்லை. எதிரில் இருந்த பெரியவீட்டின் மரங்களின் ஊடாகத் தெரிந்த தாரகைகள் குளிர்ந்து மின்னிக் கொண்டிருந்தன.

கதவை அப்படியே விட்டுவிட்டு ரெய்கோ படிகளில் ஏறினாள். அவள் கொஞ்ச நேரம் இங்குமங்கும் நடந்தவாறிருந்தாள், அவளது காலுறைகள் இப்போது உலர்ந்திருந்ததால் வழுக்காமல் இருந்தன. பாதி ஏறியிருந்த போது, அவளது நாசி ஒரு பிரத்தியேகமான வாடையினால் துணுக்குற்றாள்.

தளபதி தன் முகம் குருதித் தெப்பத்தில் ஆழ்ந்து கிடக்க விழுந்து கிடந்தார். முன்பிருந்ததை விட இன்னமும் கூரியதாக வாள்முனை தெளிவாகவும் நீண்டும் இருந்தது. ரெய்கோ கவனக்குறைவுடன் குருதியின் குறுக்கே நடந்தாள். தளபதியின் சடலத்தினருகே அமர்ந்து கொண்டு, அவர் முகத்தை கவனமாக வெறித்தாள், அது விரிப்பின் மீது ஒரு கன்னம் அழுந்த கிடந்தது. எதையோ காணாததைக் கண்ட வியப்பில் இருப்பது போல அவரது கண்கள் அகலத் திறந்திருந்தன. அவள் தலையை உயர்த்தி, தனது உடையின் மீது மடித்துவைத்து, உதடுகளில் இருந்த குருதியைத் துடைத்தாள். தனது இறுதி முத்தத்தினை வழங்கினாள்.

பின்னர் எழுந்து ஒரு புதிய வெள்ளை துணி விரிப்பினையும் இடைக்கயிற்றையும் எடுத்தாள். அவளது உடை கசங்கிவிடாமல் இருக்கும்படி அந்த விரிப்பினைத் தனது இடைக்கு மேல் பிடித்து அதை இடைக்கயிற்றால் இறுகக் கட்டினாள்.

தளபதியின் உடல் கிடந்ததிலிருந்து ஓரடி தொலைவில் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து ரெய்கோ அமர்ந்து கொண்டாள். தனது உடையிலிருந்து குறுவாளை வெளியே எடுத்து, ஜொலிக்கும் கூர்மையினை உற்றுப் பார்த்தவாறு, தனது நாவின் மீது வைத்தாள். மெருகேற்றப்பட்ட இரும்பின் சுவை கொஞ்சம் இனிப்பாக இருந்தது.

ரெய்கோ மேலும் தாமதிக்கவில்லை. இதற்கு முன்பு தனக்கும் தன் கணவனுக்கும் இடையில் பாதாளங்களை ஏற்படுத்திய அவள் கண்ட வலியின் நெடுமை தற்போது அவளுக்கு அனுபவமாக வந்திருக்கிறது. தனக்கு முன்பு தன் கணவன் ஏற்படுத்திக் காட்டிவிட்ட வலியின் அனுபவத்திற்குள் தானும் நுழையவிருப்பது அவளுக்கு மகிழ்வையே ஊட்டியது. விவரிக்க முடியாத ஏதோ ஒன்றை தன் கணவனின் கண்களில் முதன்முறை கண்டதை எண்ணினாள். இப்போது அந்த புதிரை அவளும் அவிழ்த்துக் கண்டாக வேண்டும். கடைசியில் தனது கணவன் நம்பிய அந்த பிரம்மாண்டமான தத்துவத்தின் இனிமையையும் கசப்பையும் ஒரு சேர தானும் சுவைக்கப் போகிறோம் என்பதை உணர்ந்தாள். இதுவரை சுகித்தவை எல்லாம் தனது கணவனின் மூலமாகத் தெளிவற்ற நிலையில் அவள் உணர்ந்தவையே, எனினும் தற்போது நேரடியாக அவள் நா அச்சுவையை உணரப் போகிறது.

தனது தொண்டையின் ஓரத்தில் குறுவாளின் கூர்முனையைப் பொருத்தினாள் ரெய்கோ. வலுவாக அதை உள்ளே அழுத்தினாள். காயம் மேலோட்டமானதாக மட்டுமே இருந்தது. அவள் தலை தீச்சுவாலையானது, அவளது கரங்கள் கட்டுப்பாடின்றி துடித்தன. அவள் குறுவாளினை பக்கவாட்டில் வலுவுடன் இழுத்தாள். கதகதப்பான ஒன்று அவளது வாயின் உள்ளே பொங்கிப் பெருகியது. குருதிவழிக் குழாயில் காணும் காட்சியைப் போல அவள் விழிமுன் அனைத்தும் சிவப்பானது. அவள் தனது வலிமை முழுவதையும் திரட்டி குறுவாளின் கூர்முனையைத் தனது தொண்டைக்குள் அமிழ்த்தினாள்.


ஜப்பானிய மூலம் : யுகியோ மிஷிமா.

ஆங்கில வழி தமிழில்  : கோ.கமலக்கண்ணன்

[tds_info]

ஆசிரியர் குறிப்பு:

யுகியோ மிஷிமா (1925 -1970) இருபதாம் நூற்றாண்டின் முக்கிய ஜப்பானிய எழுத்தாளர்களுள் ஒருவர். வெறும் எழுத்தாளர் என்பதைத் தாண்டி நடிப்பிலும், மாடலிங்கிலும் பங்கேற்றவர். வலதுசாரி ஏகாதிபத்திய அரசியலில் தீவிர நம்பிக்கை கொண்டவர். இவரது எழுத்தில் வருணனைகளும் நீண்ட கதையாடல்களும் தனித்து தெரிபவை. மட்டுமின்றி, காமம், மரணம், குருதி, போர் போன்ற மானுடத்தின் இருள் ஆழங்களை அவதானித்து வந்துள்ளார். ஜப்பானிய அரசமைப்புச் சட்டத்தை ரத்து செய்வதற்காக கலகம் செய்து அதிகார மீட்பிற்கு முயன்ற போது தோல்வியுற்று ‘செப்புக்கு’ முறைப்படி தற்கொலை செய்து கொண்டார். Patriotism (பற்று) என்ற  சிறுகதையில் ‘செப்புக்கு’ முறையின் வர்ணனைகள் அணுக்கமாக பதிவாகி உள்ளன.

மொழிபெயர்ப்பாளர் :

மொழிபெயர்ப்பாளர்
கோ.கமலக்கண்ணன்: திருச்சிராப்பள்ளியைச் சார்ந்தவர். தொடர்ந்து இலக்கிய மற்றும் சினிமா கட்டுரைகள், மொழிபெயர்ப்பு, சிறுகதைகள் எழுதி வரும் இவர் அரசுப் பணியாளர் ஆவார்.

[/tds_info]


 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.