தொண்ணூறுகளின் தொடக்கத்தில் பெங்களூர் சுசித்ரா திரைப்படக்கழகம் இரண்டாம் உலகப் போரை கதைக்களனாகக் கொண்ட பத்து திரைப்படங்களைத் திரையிட்டார்கள். அவை என்னை உண்மையிலேயே நடுங்கவைத்துவிட்டன. பல படங்களின் காட்சிகள் மீண்டும் மீண்டும் என் கனவுகளில் வந்தபடி இருந்தன. அவற்றில் ஒரு காட்சி இன்னும் என் மனத்தில் அழுத்தமாகப் பதிந்திருக்கிறது.
ஓர் ஊரிலிருந்து ஒரு பெரிய ரயிலில் யூதர்களை ஏற்றி அனுப்புகிறார்கள். இருக்கைகளே இல்லாத இருளடர்ந்த ரயில்பெட்டிகள். ஒவ்வொரு பெட்டியும் வெளிச்சத்துக்கே வழியில்லாத இருட்டறை. ஒவ்வொரு பெட்டியிலும் அதன் கொள்ளளவைவிட அதிக எண்ணிக்கையில் மக்களை ஏற்றி அடைக்கிறார்கள். உட்கார இடமில்லை. உணவோ, குடிநீர் வசதியோ, கழிப்பகமோ எதுவுமே அப்பெட்டிகளில் இல்லை. வண்டி ஓடிக்கொண்டே இருக்கிறது. யாருக்கும் இரவு பகல் வேறுபாடு தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் ஒருசிலர் மயங்கி விழுந்து மரணமடைகிறார்கள். பல நாட்களுக்குப் பிறகு ஒரு ஊரில் ரயில் நிற்கிறது. பெட்டிகளைத் திறக்கிறார்கள். இறங்கிவர ஒருவரும் இல்லை. எல்லாப் பெட்டிகளிலும் சடலங்களே நிறைந்திருக்கின்றன. பின்னணி இசையே இல்லாத அக்காட்சியைக் கண்டு மனம் உறைந்துவிட்டது.
இப்படி அன்று பார்த்த ஒவ்வொரு படத்திலும் யூதர்களுக்கு இழைக்கப்பட்ட விதவிதமான கொடுமைகள் சித்தரிக்கப்பட்டிருந்தன. ஹிட்லர் என்னும் சர்வாதிகாரி தன் நெஞ்சில் இருந்த யூதவெறுப்பை ஜெர்மனி முழுதும் விதையெனத் தூவிவிட, அந்த நச்சுமரம் வேகவேகமாக உயர்ந்து வளர்ந்து அனைவரையும் இரையாக்கிக்கொண்டது என அன்று நினைத்துக்கொண்டேன்.
இரண்டாம் உலகப்போர் தொடங்கிய 1939 – 41 ஆண்டு காலகட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஏறத்தாழ ஒரு லட்சம் யூதர்கள் வாழ்ந்தனர். ஜெர்மனியில் ஹிட்லரின் ஆட்சியில் மட்டும் இரண்டு லட்சம் யூதர்கள் வாழ்ந்தனர். இவர்கள் அனைவரையும் ஹிட்லரின் ராணுவத்தினர் தேடித்தேடிக் கொன்றொழித்தார்கள். யூதர்கள் சாத்தான்களின் வடிவம் என்றும், இரத்தத்தைக் குடிப்பவர்கள் என்றும், ஏசுவை சிலுவையில் ஏற்றியவர்கள் என்றும், பூமியில் எல்லாப் பாவங்களுக்கும் அவர்களே பொறுப்பு என்றும் எங்கெங்கும் பொய்யைப் பரப்புவதில் ஈடுபட்டார்கள். அதன் விளைவாக அவர்களை அரசு தேடித்தேடி பிடித்துவந்து சிறைப்படுத்தியது. சில சமயங்களில் ஜெர்மனியின் மக்களே அவர்களைப் பிடித்துவந்து அரசிடம் ஒப்படைத்தார்கள். விஷவாயு அறைகளிலும் கொலைக்களங்களிலும் சிக்கி உயிரிழந்தவர்கள் பலர். அவ்ஸ்விட்ஸ் வதைமுகாமில் மட்டும் லட்சக்கணக்கான யூதப்பெண்களையும் சிறுவர்களையும் விஷவாயு அறைகளில் அடைத்து துடிக்கத்துடிக்க கொன்று எரித்தனர். கடுங்குளிரிலும் பசியிலும் சிக்கி உயிரிழந்தவர்களும் உண்டு.
இனவெறுப்புப் பார்வை முதலில் மனிதர்களை சமநிலை இழக்கவைக்கிறது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஐயத்தை வளர்த்துக்கொள்கிறது. அதன் விளைவாக ஒரு கொலையை நிகழ்த்துவதற்குத் தேவையான மூர்க்கத்தனத்தையும் ஆவேசத்தையும் தன் நெஞ்சில் பெருக்கித் தேக்கிக்கொள்கிறது. இறுதியில் ஒருபோதும் தணியாத தன் பசிக்கு ஒவ்வொருவரையும் இரையாக்கி அழிக்கிறது. திகைப்பூட்டும் இந்த வேட்டையுணர்வு மனிதனை மறுபடியும் விலங்காக்கி வேடிக்கை பார்க்கிறது. போர் என்பது இயல்பான மனிதர்களுக்கும் விலங்கான மனிதர்களுக்கும் இடையிலான மோதலன்றி வேறில்லை. போர்க்காலத்தில் மரணங்கள் கணம்தோறும் பார்க்கக்கூடிய காட்சிகளாகின்றன. உயிர்பிழைக்க ஓடியொளியும் முயல்களாக மனிதர்கள் கண்ணில் தெரியும் பாதைகள் வழியாக தப்பித்து ஓடுகிறார்கள். இஸ்ரேல் என்னும் தனிநாடு அமையும் வரைக்கும் அவர்கள் உலகெங்கும் தொடர்ந்து இடம்பெயர்ந்தபடியே இருந்தார்கள்.
கன்னட நாவலாசிரியரும் அறிவியல் ஆய்வாளருமான நேமிச்சந்திரா, பெங்களூரில் கோரிப்பாளையம் மயானத்தில் ஹீப்ரு எழுத்துகள் பொறிக்கப்பட்ட ஒரு யூதரின் கல்லறையை தற்செயலாகப் பார்க்க நேர்ந்த ஒரு கணம்தான் ’யாத் வஷேம்’ நாவலின் கரு உருவான கணம். அவருடைய படைப்பு மனம் அந்தக் கல்லறையையும் இரண்டாம் உலகப்போரில் கொல்லப்பட்ட யூதர்களையும் இணைத்துக் கொண்டது. போர் தொடங்கியதுமே உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஜெர்மனியிலிருந்து வெளியேறியவர்கள் ஏராளாமானோர். அவர்களில் ஜெர்மனிய அறிவியல் பணிக்கூடத்தில் பணியாற்றி, இனப்படுகொலைக்கு அஞ்சி உயிர்தப்பி இந்தியாவுக்கு வந்து, பெங்களூரில் மாரடைப்பால் உயிர்துறந்த அறிவியலாளரான கற்பனைப் பாத்திரமும் ஒருவர். சி.வி.ராமனின் அழைப்புக்கிணங்கி ஜெர்மனியிலிருந்து வந்து பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்தில் இணைந்து பணியாற்றிய யூத அறிவியலாளர் பற்றிய உண்மைத்தகவலோடு அந்தக் கற்பனைத்தகவலை கச்சிதமாக இணைத்துவிடுகிறார் நேமிச்சந்திரா. அந்த இணைப்பு நாவலுக்கு ஒரு நம்பகத்தன்மையை அளிக்கிறது.
தன் மகளோடு பெங்களூருக்கு வந்து சாமராஜபேட்டையில் வாடகைக்கு வீடெடுத்து தங்கியபடி தினமும் அறிவியல் கழகத்துக்குச் சென்று வரும் வாழ்க்கையோடு தன்னைப் பொருத்திக்கொள்கிறார் அவர். விரைவில் போர் முடிவடையும், மீண்டும் தாயகத்துக்குச் சென்று அங்கே விட்டுவிட்டு வந்த மனைவியோடும் மகளோடும் மகனோடும் சேர்ந்து வாழலாம் என்ற நம்பிக்கையை வளர்த்துக்கொள்கிறார் அவர். தன் மகளின் நெஞ்சிலும் அந்த நம்பிக்கையை வளர்க்கிறார். ஆனால் எதிர்பாராத அவருடைய மரணத்தால் எல்லாக் கனவுகளும் பொசுங்கிவிடுகின்றன.
தொடக்கத்திலிருந்தே அச்சிறுமியின் மீது பாசம் கொண்டவளாக இருக்கிறாள் பக்கத்துவீட்டு அம்மாள். அவள் பிள்ளைகளும் அவளைப்போலவே அச்சிறுமியுடன் அன்போடு விளையாடி மகிழ்கிறார்கள். அவள் பூப்படைந்த நாளன்று தன் பெண்ணுக்குச் செய்வதுபோலவே எல்லாச் சடங்குகளையும் செய்கிறாள். எதிர்பாராத விதமாக அச்சிறுமி ஆதரவற்றவளாக நின்றுவிட, அவளை தன் வீட்டுக்குள்ளேயே வைத்து வளர்க்கிறாள். தன் பிள்ளைகளுக்குக் கொடுக்கும் எல்லாச் சலுகைகளையும் உரிமைகளையும் அவளுக்கும் வழங்குகிறாள். மதமோ இனமோ எதுவும் அவளுடைய அன்புக்கு இடையூறாக இல்லை. ஹான்யா என்னும் அவளுடைய பெயர் அவள் அன்பின் காரணமாக அனிதாவாக மாறிவிடுகிறது. அவளை வளர்த்து ஆளாக்கி தன் மகனுக்கே திருமணம் செய்துவைத்து மருமகளாக ஏற்றுக்கொள்கிறாள். அவளுடைய அடையாளம் அவளைத் தவிர வேறு யாருக்குமே தெரியாத ஒன்றாக மாறிவிடுகிறது. அது நாவலின் முதல் பகுதி.
அனிதாவுக்கும் பிள்ளைகள் பிறந்து பெரியவர்களாக மாறுகிறார்கள். அவளுடைய முதுமைப்பருவத்தில் அவளுக்குள் ஒரு வேட்கை எழுகிறது. தாம் உதறிவிட்டு வந்த ஊரில் தன் சகோதரியோ, சகோதரனோ எங்கோ உயிரோடு இருக்கக்கூடும், அவர்களைப்பற்றிய விவரத்தைச் சேகரித்துக்கொண்டு அவர்களை வாழ்வில் ஒருமுறையாவது சந்திக்கவேண்டும் என்பதுதான் அந்த வேட்கை. மகனும் கணவனும் அவளுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். ஆனால் கணவனின் துணையோடு பயணம் செய்யும் ஒவ்வொரு முறையும் அவளுக்கு ஏமாற்றமே காத்திருக்கிறது. முதலில் ஆம்ஸ்டர்டாம் டகாவ் முகாமுக்குச் செல்கிறாள். அங்கு கிடைத்த தகவலை வைத்துக்கொண்டு வாஷிங்டன் ஹொலாகாஸ்ட் மியூசியத்துக்குச் செல்கிறாள். அங்கு கிட்டிய தகவலின் அடிப்படையில் இஸ்ரேலில் உள்ள யாத் வஷேம் என்னும் நினைவுச்சின்னக் காப்பகத்துக்குச் செல்கிறாள். அந்த மூன்றாவது பயணத்தில்தான் அவள் தன் சகோதரி ரெபெக்காவைச் சந்திக்கிறாள். தாயாரும் தம்பியும் வதைக்கூடத்துக்கு அழைத்துச் சென்ற சில நாட்களிலேயே மறைந்துவிட்டார்கள் என்னும் செய்தி அவளுக்கு ஆழ்ந்த துக்கத்தைத் தருகிறது. அவள் வழியாக யூதர்களின் சிறைவாழ்க்கை அனுபவங்கள் இடம்பெறுகின்றன. அது நாவலின் இரண்டாவது பகுதி.
யூதர்களுக்கென்று இப்போது ஒரு நாடு உள்ளது. போர்க்காலத்தில் வெவ்வேறு நாடுகளுக்குச் சென்றிருந்த பலரும் நாடு திரும்பி அங்கே வாழ்கிறார்கள். வெறுப்புக்குரியவர்களாகக் கருதி காலமெல்லாம் வதைபட்ட யூதர்கள் அமைதியாக வாழ்வதற்கு மாறாக, மற்றவர்களை வெறுத்து ஒதுக்குவதற்கும் அழிப்பதற்கும் காரணம் தேடியோடும் கூட்டமாக மாறிவிடுகிறார்கள். அந்த மாற்றம் அனிதாவுக்கு திகைப்பை ஏற்படுத்துகிறது. ஹிட்லர் இறந்துவிட்டாலும் பிள்ளைகளிடமும் பேரப்பிள்ளைகளிடமும் ஏதோ ஒருவிதத்தில் ஹிட்லர் நுட்பமாக வெளிப்பட்டபடியே இருக்கிறான். யூதர்கள் வீட்டிலும் இதயத்திலும் ஹிட்லர் தோன்றிக்கொண்டே இருக்கிறான். எது மறுபடியும் இந்த மண்ணில் நிகழக்கூடாது என நினைத்தார்களோ, அதை அவர்களே நிகழ்த்திக் காட்டும் வேகமே வெளியுலகில் நிறைந்திருக்கிறது. பகை நாம் வெறுப்பவர்களைச் சுடுவதற்கு முன்னால் நம்மைச் சுட்டெரித்துவிட்டுச் செல்லும் ஆற்றல் உள்ளது என்னும் உண்மையை உணராதவர்களாகவே இருக்கிறார்கள்.
சகோதரியைச் சந்திக்கச் செல்லும் அன்று அனிதா தன் கண்முன்னாலேயே ஒரு குண்டுவெடிப்பைப் பார்த்துத் திகைக்கிறாள். அரைநூற்றாண்டு காலத்துக்கு முன்னால் நிகழ்ந்த போர்க்கால அனுபவம் நினைவில் மோதி அவளை நடுங்கவைக்கிறது. அன்று ஒரு விடுதியில் ஒரு பெண் தன் பிறந்தநாளைக் கொண்டாட தன் நண்பர்களை வரவழைத்துச் சந்தித்து உரையாடுகிறாள். பிறகு அங்கிருந்து டிஸ்கோ நடனம் நிகழும் இடத்துக்கு எல்லோரும் செல்கிறார்கள். நடனக்கூடம் இளைஞர்களால் நிரம்பிவழிகிறது. எதிர்பாராத ஒரு கணத்தில் தீவிரவாதக் குழுவைச் சேர்ந்த ஒரு பாலஸ்தீனிய இளைஞன் மனிதவெடிகுண்டாக மாறி அந்தக் கூட்டத்தில் நுழைகிறான். குண்டு வெடிக்கிறது. ஏராளமானவர்கள் அக்கூட்டத்தில் உயிரிழந்து போகிறார்கள்.
இஸ்ரேலின் நிலையைக் கண்டு அனிதா உண்மையிலேயே திகைத்துக் குழம்புகிறாள். ஹோலாகாஸ்ட் நரகத்திலிருந்து உயிர்தப்பி வந்திறங்கிய மக்கள் எப்படியாவது ஒரு துண்டு நிலத்தைப் பெற்று வாழவேண்டும் என்ற எண்ணத்துடன் தவித்தார்கள். அப்படி ஏங்கி கனவு கண்டு அடைந்த நாட்டில் வேறொரு விதமான வேட்டை தொடங்கிவிட்டது. துப்பாக்கிகள் கைமாறி இருக்கிறதே தவிர, வேட்டை நிற்கவில்லை ஆக்ரோஷத்தின் நெருப்பு முதலில் நம்மைத்தான் எரிக்கும் என்பதை மற்றவர்கள் மறக்கலாம், ஆனால் ஏற்கனவே எரிபட்டு தழும்புக்காயங்கள் கொண்டவர்களுக்கு அது நிரந்தரமாக நினைவில் இருக்கவேண்டுமல்லவா? அதை எப்படி அவர்கள் மறந்தார்கள் என்னும் கேள்வி அவளை வதைக்கிறது. பகையின் நஞ்சை உண்டு நாம் வாழமுடியுமா? பகை பகையைத்தானே ஏற்படுத்தும்? மரணம் ஒரு விசித்திரமான பசி. அது மரணத்தையே இரையாகக் கோரும். ஒரு கொடுமை, இன்னொரு கொடுமைக்கு மருந்தாகமுடியுமா?
இஸ்ரேலின் உருவாக்கத்துக்காக லட்சக்கணக்கில் விரட்டியடிக்கப்பட்ட பாலஸ்தீனிய மக்கள் ஜோர்டான், சிரியா, லெபனான் நகரங்களின் எல்லைகளில் எங்கும் அண்ட இடமில்லாமல் சிதறி வசிக்கிறார்கள். அவமான உணர்ச்சி அவர்களை வதைக்கிறது. அது பொங்கி உச்சத்துக்குச் செல்லும்போதெல்லாம் இஸ்ரேலில் குண்டு வெடிக்கிறது. இஸ்ரேலில் வாழும் யூதர்களுக்கோ கண்ணில் தென்படும் அனைவரும் எதிரிகளாகவே தென்படுகிறார்கள். வெறுப்புக்குரிய முகங்கள்தான் காலம்தோறும் மாறிவருகிறதே தவிர, மனிதமனத்திலிருந்து வெறுப்பு மாறவே இல்லை. “எங்கே மக்கள் தம் கத்திகளை உடைத்து ஏர்க்கருவிகள் செய்துகொள்கிறார்களோ அதுவே நம் இடம். எங்கே ஒரு இனம் மற்றொரு இனத்தின்மீது கத்தியை ஓங்குவதில்லையே அதுவே நம் இடம். எங்கே போர்க்கலையைக் கற்பிக்கும் கூடமோ, கற்றுக்கொள்ள இளைஞர் கூட்டமோ இல்லாமல் இருக்கிறதோ, அதுவே நாம் வாழும் இடம்” என்று தம் வாழிடத்தைப்பற்றி குறிப்பிட்டிருக்கும் மதநூல் வாக்கியத்தில் ஒரு வரி கூட மக்கள் நெஞ்சில் பதியவில்லை என்பதை நேருறக் கண்ட உண்மையால் அவள் மனம் துயரத்தில் மூழ்கிவிடுகிறது. இதுவா தான் இத்தனை காலமும் ஏங்கி கனவு கண்டு எதிர்பார்த்திருந்த தாய்நாடு என்று நினைத்து நினைத்து பெருமூச்சு விடுகிறாள். பகைமையுணர்ச்சி நிரம்பிய தன் சகோதரியையும் அவள் பிள்ளைகளையும் பார்க்கப் பார்க்க அவளுக்குள் ஒருவித சங்கடம் பெருகுகிறது.
பால்யகாலத்திலிருந்து தாம் வாழ்ந்த பெங்களூரு சாமராஜ்பேட்டை நாட்களை அவள் மனம் அக்கணத்தில் அசைபோட்டுப் பார்க்கிறது. சாமராஜ்பேட்டை என்பது பல்வேறு இனத்தவர்கள் சேர்ந்து வாழ்கிற பகுதி. வீட்டைவிட்டு தெருவில் இறங்கினால் அலி ஸ்டீல் ஸ்டால். அதற்குப் பக்கத்திலேயே ஸ்ரீவெங்கடேஸ்வரா மளிகைக்கடை. அதற்கு எதிர்ப்புறத்தில் மகாவீர் டெக்ஸ்டைல்ஸ். அதற்குப் பிறகு தாஜ் டீ ஸ்டால். அதையொட்டி மாருதி மெடிக்கல்ஸ். அமீர் சலீம் லேடீஸ் டெய்லர்ஸ். அந்தக் கடையில் காஜா தைக்கும் பெண் ரங்கவ்வா. அவள் வசிக்கும் வீடு உயர்சாதி பிராமணர்கள் வசிக்கும் வீடுகளுக்கு நடுவில் இருக்கிறது. அவர்கள் வீடுகளுக்குள் விளையாடுவதற்குக்கூட குழந்தைகள் சென்றுவிட முடியாது. அது தாம் உயர்ந்தவர்கள் என்னும் மேட்டிமை உணர்வின் வெளிப்பாடுதானே ஒழிய தினசரி உரையாடல்களுக்கோ சேர்ந்து பழகுவதற்கோ அது ஒருநாளும் தடையாக இல்லை. எல்லோரும் ஏதோ ஒருவகையான மேட்டைமை மனக்கூறுடன் வசிக்கிறார்கள். ஆனால் அந்த மனக்கூறை ஒருநாளும் யாரும் வெறுப்பாக வளர்த்துக்கொள்ளவில்லை. அனைத்தையும் கடந்து அனைவரும் சேர்ந்து வாழும் நல்லிணக்கப் பார்வையுடன் வசிக்கும் பக்குவத்தை அவர்கள் பெற்றிருக்கிறார்கள். அரைநூற்றாண்டுக் காலமாக அந்த நல்லிணக்கத்தையே கண்டு வாழ்ந்த அவளால் வெறுப்பாக உருமாறும் வேறுபாடு திகைக்கவைக்கிறது. தன் தந்தையின் கல்லறை இருக்கும் கோரிப்பாளையம் மயானத்தை ஒருகணம் அவள் நினைத்துக்கொள்கிறாள். ஒருபுறம் இந்துக்கள் இடுகாடு. மறுபுறம் இஸ்லாமியர் இடுகாடு. இதற்கு நடுவில்தான் யூதர்களின் கல்லறைகள். அனைத்தையும் பாதுகாக்கும் காவலராக இருப்பது ஓர் இஸ்லாமியக்குடும்பம்.
ஆதரவற்ற சிறுமியான தன்னை எந்தக் கேள்வியும் கேட்காமல் தன் குடும்பத்தில் ஒருத்தியாக ஏற்றுக்கொண்ட அம்மாவின் பேரன்பை நினைத்து அவள் மனம் கரைகிறது. திருப்பதி பெருமாளின் படமும் எஞ்சேரப்பா என்னும் தன் குலதெய்வத்தின் படமும் அலங்கரிக்கும் அந்த வீட்டில் பூஜையறையில் “உங்க சாமி படம் ஏதாச்சும் இருந்தா அதயும் கொண்டுவந்து வச்சிக்கோம்மா” என்று சொன்ன அவள் குரலை நினைத்து நினைத்து அவள் மனம் விம்முகிறது.
இறுதிக்காட்சியில் அழுகைச்சுவருக்கு முன்னால் நின்று மெளனத்தில் ஆழ்ந்திருக்கும்போது அனிதாவின் மனத்தில் மிதந்தெழும் எண்ணங்கள் மிகமுக்கியமானவை. அரைநூற்றாண்டு வரலாற்றுச் சம்பவங்களை கோர்வையாக்கி அவள் அக்கணத்தில் அசைபோடுகிறாள். வெறுப்பு இல்லாத, அச்சம் இல்லாத நாட்டை எங்களுக்குக் கருணையோடு அளிப்பாய் இறைவனே என்று ஒரு காகிதத்தில் எழுதி அழுகைச்சுவரின் விரிசலில் திணிக்கிறாள். அக்கணத்தில் அந்த இடம் தான் பல ஆண்டுகளாக கனவு கண்டு பார்ப்பதற்குத் துடித்த இடமல்ல என்று அவளுக்குத் தோன்றுகிறது. அவளைச் சுற்றி யூதர்கள் நிறைந்திருந்தாலும் அவர்களை அவள் மனம் தன்னவர்கள் என்று ஏற்றுக்கொள்ளவில்லை. தன் சொந்தச் சகோதரியே வேறொரு பெண்ணாக தோற்றமளிக்கிறாள். இறுதியில் அது தன் மண்ணே அல்ல என்று தோன்றுகிறது. பிறந்த ஊர் என்பதால் மட்டுமே ஓர் இடம் ஒருவருக்கு தாய்நாடாக மாறிவிடுவதில்லை. நல்லிணக்கத்தோடும் வெறுப்பற்ற, நிபந்தனையற்ற அன்போடும் எல்லோரோடும் கலந்துவாழும் தாய்மையுணர்வைக் கற்றுக்கொடுக்கும் இடத்தையே தாய்நாடு என்று சொல்லலாம் என்ற தெளிவு பிறக்கிறது.
இந்த நாவலுக்காக பத்தாண்டுகளுக்கும் மேலாக உழைத்திருக்கிறார் நேமிச்சந்திரா. இஸ்ரேலுக்கும் வாஷிங்டனுக்கும் பலமுறை சென்று நேரில் தகவல்களைத் திரட்டியிருக்கிறார். பல குடும்பங்களைச் சந்தித்து உரையாடியிருக்கிறார். இட்லர் பிறந்த மண்ணையும் மதநல்லிணக்கத்தை முன்வைத்த காந்தியடிகள் பிறந்த மண்ணையும் ஒரு யூதச்சிறுமியின் வழியாக இணைத்திருக்கிறார். கன்னடத்தில் எழுதப்பட்ட உலகநாவல் என்றே இந்தப் படைப்பைச் சொல்லவேண்டும். அதன் புதுமையாலும் உலகத்தன்மையாலும் ஈர்க்கப்பட்டு தமிழில் மிகச்சிறப்பாக மொழிபெயர்த்திருக்கும் நல்லதம்பிக்கு தமிழ்வாசக உலகம் கடமைப்பட்டிருக்கிறது.
வெறுப்பை விதைத்து, வெறுப்பின் வடிவமாகவே வாழ்ந்த ஹிட்லரின் மறைவு என்றோ நிகழ்ந்திருக்கலாம். ஆனால் வெறுப்பின் நிழல் இந்த உலகில் எங்கு படியத் தொடங்கினாலும் அங்கு நுண்வடிவில் ஹிட்லரின் பிறப்பு நிகழ்ந்துவிட்டது என்றே பொருள். ஹிட்லர் எங்கு வேண்டுமானாலும் பிறக்கலாம். அமெரிக்காவில், ஜெர்மனியில், இஸ்ரேலில், அகிம்சையே உயர்ந்த நெறி என்று முழங்கும் இந்தியாவில் என எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் பிறந்து வளரலாம். நமக்குள் பிறக்கக்கூடிய ஹிட்லரைத் தடுக்கும் பொறுப்பு நம்மிடம்தான் இருக்கிறது என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. இக்கணத்தில் நாம் பொறுப்போடு நடந்துகொள்ளப் போகிறோமா? அல்லது பொறுப்பைத் தட்டிக் கழித்து நடந்துகொள்ளப் போகிறோமா? நாம் எடுக்கப்போகும் முடிவில்தான் எதிர்காலம் அடங்கியிருக்கிறது.
நாவலில் இடம்பெற்றிருக்கும் பல சின்னச்சின்ன காட்சிகள் சிறுகதைகளைப்போல உள்ளன. ஒன்றோடு ஒன்றை இணைத்துப் பார்க்கும்போது அவை அபூர்வமான அனுபவத்தை வழங்குகின்றன. ஒரு காட்சி. வெள்ளையனே வெளியேறு போராட்டம் பெங்களூரில் நடைபெறும் கட்டம். கல்லூரிக்கு வெளியே போராட்டக்காரர்கள் எழுப்பும் முழக்கம் கல்லூரிக்குள் இருக்கும் பல மாணவர்களை வெளியே வரவழைத்துவிடுகிறது. பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவன் கல்லூரி வளாகத்தைவிட்டு வெளியேறி முழக்கமிடும் கூட்டத்தோடு கலந்துகொள்கிறான். ஒரு திருப்பத்தில் காவலர்கள் அவர்கள்மீது தடியடி நிகழ்த்தி கூட்டத்தைக் கலைக்கிறார்கள். ஒரு மாணவனுக்கு காலில் அடி விழுகிறது. நொண்டியபடி தப்பித்து ஓடுகிறான். ஒரு குடிசையிலிருந்து வெளியே வந்த ஒரு பெண் அந்த இளைஞனை குடிசைக்குள் இழுத்துச் சென்று அடிபட்டு வீங்கிய காலுக்கு மருத்துவம் செய்து மஞ்சள்தூள் வைத்து கட்டு போடுகிறாள். கேழ்வரகை தெருவில் நிறைத்து குதிரைகளை விழவைத்து காவலர்களின் கால்களை முறிந்துபோகும்படி செய்தவளே மாணவனின் அடிபட்ட காலுக்கு மருத்துவம் செய்து அனுப்பிவைக்கிறாள்.
இன்னொரு காட்சி. நகரத்திலிருந்து அழைத்துவந்து அடைக்கப்பட்டிருந்த டகாவ் முகாம். ரெபெக்காவும் அவள் தம்பியும் தாயும் அங்குதான் அடைபட்டிருந்தார்கள். பல நாட்கள் பட்டினிக்குப் பிறகு அவர்களை வரிசையில் நிற்கவைத்து உழைப்பு முகாமுக்கு அனுப்ப ஆட்களைத் தேர்ந்தெடுத்தார்கள். வரிசையின் தொடக்கத்தில் துப்பாக்கியோடு நின்றிருந்த சிப்பாய் ஒவ்வொருவரையும் உற்றுப் பார்த்து ஒருசிலரை வலதுபக்கமாகப் பிரித்து அனுப்பிவைக்கிறான். ஒருசிலரை இடதுபக்கமாகப் பிரித்து அனுப்பிவைக்கிறான். சிறுவனைத் தோளில் சுமந்த தாயும் ரெபெக்காவும் அடுத்தடுத்து நிற்கிறார்கள். தாயை வலதுபக்கம் அனுப்பும் வீரன் அவளைப் பின்தொடர்ந்து நடக்கவிருந்த ரெபெக்காவைப் பார்த்து ஒரு கடுமையான உறுமலோடு இடதுபக்கம் அனுப்பிவைக்கிறான். அந்த உறுமலுக்குக் கட்டுப்பட்டு அவள் இடதுபக்கம் செல்கிறாள். அந்த உறுமலால்தான் அவள் உயிர்பிழைக்கிறாள். அவள் தாய் அடுத்த நாளே விஷவாயு நிறைந்த கூடத்துக்குள் அடைக்கப்பட்டு பிணமாகிவிடுகிறாள்.
ஒரு குறிப்பிட்ட வரையறையை வைத்துக்கொண்டு யாரையும் எளிதாக நல்லவர், தீயவர் என வகுத்துவிட முடியாது. வதைமுகாமில் ரெபெக்காவுடன் வல்லுறவு கொள்ளும் ஒரு முரட்டுச்சிப்பாய் புறப்பட்டுச் செல்லும்போது அவளை காலால் உதைத்துவிட்டுச் செல்கிறான். வேறொரு முரட்டுச்சிப்பாய் அவள் மீது ரொட்டித்துண்டுகளை வீசிவிட்டுச் செல்கிறான். ரெபெக்காவின் பார்வையில் உதைக்கும் சிப்பாயைவிட ரொட்டித்துண்டுகளை அளிக்கும் சிப்பாய் நல்லவனாகத் தெரிகிறான்.
ஒரு காட்சியில் மனிதவெடிகுண்டாக ஒரு கூட்டத்துக்குள் செல்லும் ஓர் இளைஞன் அனைவருக்கும் மரணத்தைப் பரிசாகக் கொடுத்துவிட்டு அவனும் மடிந்துபோகிறான். இன்னொரு காட்சியில் ஆலம்மா சத்திரம் சித்தரிக்கப்படுகிறது. சந்தைப்பேட்டை வியாபாரியான நரசிம்மையா என்பவரின் மனைவி ஆலம்மா. சந்தைப்பேட்டையில் பல்வேறு வேலைகளைச் செய்யும் குஞ்சிடிகர் சாதியைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகள் தங்கி கல்வி கற்பதற்காக அவர் எழுப்பி வெற்றிகரமாக நடத்தியதே ஆலம்மா சத்திரம். அங்கு தங்கிப் படித்தவர்களே அந்தச் சாதியில் கல்வி கற்ற முதல் தலைமுறையினர்.
நன்மையும் தீமையும் இந்த உலகில் மாறிமாறி நடந்தபடியே உள்ளது. இரண்டு பாதைகளும் தெளிவாகவே உள்ளன. ஒருவரை அன்பு நிறைந்த நல்லிணக்கத்தின் பாதை நன்மையை நோக்கியும் வெறுப்பின் பாதை அழிவை நோக்கியும் செலுத்துகிறது. ஹான்யா என்னும் அனிதாவின் புறப்பயணமும் அகப்பயணமும் அவள் மனத்தில் நிறைந்திருக்கும் நல்லிணக்க நாட்டத்தைச் சுட்டிக்காட்டி நிறைவடைகிறது நாவல்.
இரண்டாம் உலகப்போர் முடிவடைந்து எழுபத்தைந்து ஆண்டுகள் முடிவடைந்துவிட்டன. லட்சக்கணக்கான யூதர்களை பலிவாங்கிய வெறுப்பு வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக நிலைத்துவிட்டது. உலகமானுடம் முக்கால் நூற்றாண்டைக் கடந்துவந்துவிட்ட இன்று, இந்த வெறுப்பிலிருந்து பாடம் கற்று மாறிவிட்டது என்று நம்மால் நெஞ்சை நிமிர்த்திச் சொல்லமுடியுமா? மாறிவிட்டது என்றால் மீண்டும் மீண்டும் இந்த மண்ணில் வெறுப்பின் அடிப்படையில் ஒருவரையொருவர் கொல்வதும் ஒதுக்குவதும் ஏன் தொடர்கிறது? மாறவில்லை என்றால், நாகரிகத்தால் நாம் மேம்பட்டவர்கள் என்று தலைநிமிர்ந்து சொல்வதில் என்ன பொருள் இருக்கிறது? நேமிச்சந்திராவின் நாவல் பல கேள்விகளை நமக்குள் எழுப்பி அமைதியிழக்கவைக்கிறது.
- பாவண்ணன்
சிறப்பான விமர்சனம். இந்நூல் பற்றி இப்போது தான் தெரிந்துகொண்டேன். நன்றி.
நாவல் கிடைக்குமிடம் தகவல்
அனுப்ப வேண்டுறேன்.
Ethir publications
[…] […]