பாரிஸ் காலநிலை ஒப்பந்தம்: ஐந்து ஆண்டுகள் கடந்த பின்னர்

லகம் இன்று சந்திக்கும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று பூதாகரமாகிவரும் புவிவெப்பமடைதல். இந்தச் சவாலைச் சந்திக்க 2015ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் சர்வதேச மாநாடு நடந்தது. நவம்பர் 30 முதல் டிசம்பர் 11 வரை பாரிஸ் நகரில் கூடிய மாநாட்டின் இறுதியில் காலநிலை மாற்றத்தைத் தடுத்து நிறுத்தும் விதமாகப் பாரிஸ் ஒப்பந்தம் என்னும் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச ஒப்பந்தம் டிசம்பர் 12 அன்று நிறைவேற்றப்பட்டது.

தொழிற்புரட்சி காலத்தை ஒப்பிடும்போது தற்போதைய நிலையில் பூமியில் ஏற்கெனவே ஒரு டிகிரி வெப்பம் அதிகரித்திருக்கிறது. மேலும் அதிகரித்துக்கொண்டே செல்லும் புவிவெப்பநிலையை 2100இல் இரண்டு டிகிரிக்கு மேலே உயர்ந்துவிடாமல் தடுப்பது தான் முக்கிய இலக்கு. முடிந்தால் 1.5 டிகிரிக்கு மிகாமல் வெப்பத்தைக் கட்டுக்குள் வைக்க விருப்பம் தெரிவிக்கும் இந்த ஒப்பந்தத்தின் நாடுகள் கரிம வெளியேற்றத்தைத் தாமே முன்வந்து கார்பன் மற்றும் பசுங்குடில் வாயுக்களைப் படிப்படியாக, கணிசமாகக் குறைத்துக் கொள்ள வேண்டும். இதனை நோக்கமாகக் கொண்டு ஒவ்வொரு நாடும் பசுங்குடில் வாயு மாசு குறைப்பு சம்பந்தமான வாக்குறுதிகளை அளித்துள்ளனர்.

2016 நவம்பர் 4ஆம் தேதி முதல் நடைமுறைக்குவந்த இந்த ஒப்பந்தத்தை ஈரான், இராக், துருக்கி உட்பட ஏழு நாடுகள் தவிர உலகின் மற்ற 190 நாடுகளும் அங்கீகரித்துள்ளன. அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 2017ஆம் ஆண்டும அமெரிக்காவை இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகச் செய்தார். தற்போது அதிபராக பதவியேற்றிருக்கும் ஜோ பைடன் அமெரிக்காவை ஒப்பந்தத்திற்குள் மீண்டும் இணைந்துள்ளார்.

2014இல் உலகமும் முழுவதும் வெளியிடப்பட்ட பசுங்குடில் வாயுக்களில் 6.7 சதவிகிதம் இந்தியா உமிழ்ந்தது. உலகின் ஆகப் பெரிய மாசு செய்யும் நாடுகளில் நான்காவது இடத்தில் இந்தியா இருக்கிறது. இந்தப் பின்னணியில் வரும் 2030க்குள், 2005இல் தான் வெளியிட்ட தனிநபர் பசுங்குடில் வாயு விகித அளவில் 33-35 சதவீதம் குறைத்துக் கொள்வதாகவும், மொத்த ஆற்றல் உற்பத்தியில் சுமார் 40 சதவீதம் சூரிய ஆற்றல் காற்றலை முதலிய பசுமை ஆற்றல் மூலங்களில் இருந்து பெறும் வகையில் நிலக்கரிப் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்வதாகவும், புதிய காடுகளை வளர்த்து சுமார் 2.5 முதல் 3 பில்லியன் டன் கார்பனை வளிமண்டலத்திலிருந்து அகற்றுவதகவும் இந்தியா வாக்குறுதி அளித்தது. சீனாவோ 2030க்குள் 60 முதல் 65 சதவிகிதம் தனிநபர் பசுங்குடில் வாயு விகிதத்தை குறைத்துக் கொள்வதாகவும், பசுமை ஆற்றல் மூலங்களைக் கொண்டு சுமார் 20 சதவீதம் உற்பத்தி செய்வதாகவும் உறுதி அளித்தது. ஆண்டுதோறும் வெளியிடும் பசுங்குடில் வாயுவின் அளவில் சுமார் 26 முதல் 28 சதம் குறைத்துக்கொள்வதாக அமெரிக்காவும் சுமார் 40 சதம் குறைத்துக்கொள்வதாக ஐரோப்பாவும் வாக்குறுதி அளித்தன.

ஒப்பந்தத்தின் பகுதியாக ஒவ்வொரு நாடும் அளித்துள்ள வாக்குறுதிகளைக் கூட்டிக் கழித்துப் பார்த்தல் ஒப்பந்தம் போடும்போது தோல்வி எனக்கொள்ளலாம். தொழிற்புரட்சிக்கு பிறகு 2015 வரை வளிமண்டலத்தில் நாம் செயற்கையாகச் செலுத்தியுள்ளவ 531 கிகா டன் கார்பன் அளவை பசுங்குடில் மாசு. பாரிஸ் ஒப்பந்தம் தெரிவிக்கும் விருப்பம் அடிப்படையில் உலக வெப்பநிலையைச் சுமார் 1.5 டிகிரிக்கு மேல் உயர்ந்துவிடாமல் தடுத்து நிறுத்தவேண்டும் என்றால் இனி கூடுதலாக வெறும் 269 கிகா டன் கார்பன் அளவை பசுங்குடில் மாசு மட்டுமே வெளியிட இடமுள்ளது. பாரிஸ் ஒப்பந்தத்தில் உலக நாடுகள் அளித்துள்ள வாக்குறுதிகளைத் தொகுத்துப் பார்த்தல் மீதம் இருக்கும் கார்பன் பட்ஜெட்டில் சுமார் 75% சதவிகிதத்தை 2035க்குள் பயன்படுத்திவிடுவார்கள். எனவே உலக நாடுகள் அளித்த வாக்குறுதிகளைத் தொகுத்து பார்க்கும்போது 2100க்கும் உலக வெப்பநிலை 3.2 டிகிரி செல்சியஸ் உயர்ந்துவிடும். எனவே பாரிஸ் ஒப்பந்தத்தின்போது அளித்த வாக்குறுதிகள் போதவே போறாது என்பது தெளிவு.

ஐந்து ஆண்டுகளுக்குப் பின்

 பாரிஸ் ஒப்பந்தத்தின் பின்னர் ஐந்து ஆண்டுகள் கடந்த பின்னரும் ஆண்டுதோறும் உமிழப்படும் கார்பன் மாசின் அளவு உயர்ந்துகொண்டே தான் செல்கிறது. 2015இல் ஆண்டுதோறும் 50 கிகா கார்பன் அளவை பசுங்குடில் மாசு வெளியிடப்பட்டன; இது 2019இல் 59.1 கிகா டன் ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று முடக்கம் காரணமாக 2020இல் பசுங்குடில் மாசு அளவு சுமார் 2.4 கிகா டன் அளவு சரிந்தது. ஆயினும் இதன் தொடர்ச்சியாக 2050இல் கூடும் வெப்பநிலை வெறும் 0.01°C மட்டுமே குறையும்.

பாரிஸ் ஒப்பந்தத்துக்குப் பிறகு இந்தியாவின் முயற்சிகள் திருப்திகரமாக உள்ளன என்றும், அர்ஜண்டீனா, ரஷ்யா, அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளின் போக்கு மிகவும் அதிருப்தியாக உள்ளது என்றும் பிரசில், கனடா போன்ற நாடுகளின் நடவடிக்கை போதிய அளவு இல்லை என்றும் ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டுகிறது.

கொரோனா காலத்தில் கடைபிடிக்கப்பட்ட போக்குவரத்துக்கு பயன்படுத்துவதை தவிர்த்தல் போன்ற தனிநபர் செயல்களினால் கூடுதலாக வெறும் 7 சதவிகிதம் மட்டுமே கார்பன் மாசினைக் குறைக்க முடிந்துள்ளது. எனவே பொருளாதார அமைப்பு மற்றும் பொருள் உற்பத்தி முறைகள் தீவிரமாக மாற்றி அமைக்கப்படாமல் காலநிலைச் சிக்கலுக்கு தீர்வு சாத்தியம் இல்லை.

2018இல் உலகளவில் தனிநபர் சராசரி கார்பன் உமிழ்வு ஆண்டுக்கு 1.3 டன் என்று இருக்க, அமெரிக்காவின் சராசரி 4.5 டன், சீனா 1.9 டன், ஐரோப்பா, 1.8 டன், இந்தியா 0.5 டன் என்று இருந்தது. அதாவது கார்பன் உமிழ்வால் கிடைக்கும் வளர்ச்சிக் கனிகள் எல்லோருக்கும் சமமாக இருக்கவில்லை.

அடுத்த கட்ட நடவடிக்கைகள்

 பாரிஸ் ஒப்பந்தத்தின்படி மறுபடி தாமாகவே முன்வந்து அடுத்தகட்ட வாக்குறுதிகளை அளிக்க வேண்டும். கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டதால் இதற்கான கூட்டம் ஒத்திவைக்கப்பட்டன. வரும் 2021 நவம்பரில் ஸ்காட்லாந்து க்ளாஸ்கோ நகரில் இதற்கான பேச்சுவார்த்தை நடைபெறும். இதில் முக்கியப் பேசுபொருள் கார்பன் சாமநிலை பொருளாதாரம் ஆகும்.

2050க்குள் கார்பன் சமநிலை (carbon neutral) பொருளாதரத்துக்குச் செல்ல ஒவ்வொரு நாடும் வாக்குறுதி தரவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது அந்தந்த நாடுகள் வெளியிடும் கார்பன் மாசுகளை (அல்லது பசுங்குடில் மாசு) உறிஞ்சுக்கொள்ளும் விதமாக கார்பன் தேக்கிகள் இருக்கவேண்டும். காடு வளர்ப்பு போன்ற வகையில் கார்பன் தேக்கிகளை உருவாகிக்கொள்ளலாம்.

பசுங்குடில் மாசு குறித்துப் பேசும்போது பாவம் ஓரிடம் பழி வேறிடம் என்பது போல சீன, இந்தியா போன்ற வளரும் நாடுகள் அதிக பசுங்குடில் மாசை உருவாக்கி பொருள்களைத் தயார்செய்ய அந்தப் பொருள்களை அனுபவிபவர்கள் மேலை நாடுகள். எனவே உற்பத்தி அளவில் பசுங்குடில் மாசுகளை அளவிட்டு பார்க்கக்கூடாது; யார் பயன்படுத்துகிறார்களோ அவர்கள் தான் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்ற குரலும் எழுந்துவருகிறது. உலகின் ஒரு சதவிகித உயர் வருமானம் ஈட்டுபவர்கள் அனைவரும் சேர்ந்து அனுபவிக்கும் கார்பன் உமிழ்தல் கடைக்கோடி வருமானம் ஈட்டும் உலகின் 50 சதவீத மக்கள்தொகைக்குச் சமம். அதாவது நாடுகள் அளவிலும் சரி அந்தந்த நாடுகளுக்குள்ளும் சமமற்ற நிலைதான் நீடிக்கிறது.

தற்போது ஆண்டுதோறும் வெளியேறும் பசுங்குடில் வாயுக்களில் பெருமளவை இந்தியாவும் சீனாவும்தான் வெளியேற்றுகின்றன என்றாலும், வரலாற்றுரீதியாக உலகில் உள்ள அனைத்து நாடுகளைவிட அதிகளவில் வளிமண்டல கார்பன் மாசினை செய்துள்ளது அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும்தான். இன்றும் பசுங்குடில் வாயுக்கள் மாசு செய்வதில் உலகில் இரண்டாவது இடத்தில் அமெரிக்கா திகழ்கிறது.

சீனா உட்பட 51 சதவிகித உலக பசுங்குடில் வாயுக்களை வெளியிடும் 126 நாடுகள் ஏற்கனவே இப்படி வாக்குறுதி தர இசைவு தெரிவித்துள்ளனர். அமெரிக்காவும் இந்த வாக்குறுதியை அளித்தால் இது 63 சதவிகிதமாக உயரும். ஆயினும் வெறும் 22 நாடுகள் மட்டுமே கறாரான புதுபித்த வாக்குறுதி அளித்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளில் புதிதாக நிறுவப்படும் ஆற்றல் உற்பத்தியில் சுமார் 90 சதவீதம் சூரிய ஆற்றல், காற்றலைகள் நீர் அணைகள் போன்ற புதுப்பிக்கத் தத்தக்க ஆற்றல் மூலங்கள் கொண்டு இயங்குபவையாக உள்ளன. மேலும் பிரான்ஸ், இந்தியா, சீனா முதலிய நாடுகள் இணைந்து உருவாக்கும் ‘ஐட்டர்’ எனும் அணுக்கரு பிணைவு ஆற்றல் ஆய்வுகள் பசுமை ஆற்றலுக்கு வழிசெய்யக்கூடும். சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டமைப்பை இந்தியா முன்னெடுத்துவருகிறது. மேலும் கார்பன் மாசு செய்யும் தொழில்துறைகளில் சுமார் எழுபது சதவிகித துறைகளில் சுமார் எழுபது சதவிகித துறைகளில் கார்பன் சமநிலை தொழில்நுட்பங்கள் தயாராகிவருகின்றன. எனவே கார்பன் சமநிலை வளர்ச்சி சாத்தியமே; வெறும் கனவல்ல. ஆயினும் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் மற்றும் அமெரிக்கா முரண்டுபிடித்து வருகின்றன.

காலநிலைச் சிக்கலை சரிசெய்ய உலகம் முழுவதும் இணைந்து முயற்சி மேற்கொள்ள வேண்டிய முக்கிய தருணம் இது.


த.வி.வெங்கடேஸ்வரன், மத்திய அரசின் ‘விஞ்ஞான் பிரச்சார்’ தன்னாட்சி அமைப்பில் முதுநிலை விஞ்ஞானி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.