பாண்டூரங் மேதேக்கர் (நானா) சமந்தன் கட்டிடத்திலிருந்து சுறுசுறுப்புடன் வெளியேறினார். அவரது கையில் ஒரு பை இருந்தது. வீட்டில் அணியக்கூடிய லெங்கா சட்டையை அணிந்திருந்தார். நடக்கும்போது அவரது கழுத்து ஆடிக்கொண்டிருந்தது. எதையோ முணுமுணுத்தவாறே தனது நிதானத்தை இழந்தபடி அவர் காட்சியளித்தார். அப்படியிருந்ததும் உறுதியுடன் முன்னேறிக்கொண்டிருந்தார்.
தனது அலுவலகத்துக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த அவரது பக்கத்து வீட்டுக்காரரான மனோகர் ரணபீஸ், அவரைப் பார்த்துவிட்டு வெளியே ஓடி வந்தார். “நானா”, “ஹேய் நானா” அவர் கத்தினார். நானா தொடர்ந்து நடந்தபடியே இருந்தார். ரணபீஸ் படிகளில் விரைந்து இறங்கினார். அந்தச் சமயத்தில் நானா தெருவில் ஒரு டாக்ஸியை நிறுத்திக்கொண்டிருந்தார். வேகமாக ஓடிச்சென்று அவரது பாதையில் குறுக்காக நின்றுகொண்ட ரணபீஸ், “நானா, நீ எங்கே செல்கிறாய்?” எனக் கேட்டார்.
“சுடுகாட்டிற்கு” என்ற நானாவின் குரலில் கோபமேறியிருந்தது.
“என்ன இது நானா? இப்போது வீட்டிற்கு வா.. என்ன செய்யலாமெனப் பிறகு பார்க்கலாம்”
“வீடா அது? வீடு அல்ல. சிறைக்கூடம்! மனிதர்கள் அங்கு வசிப்பதில்லை. மிருகங்கள். மிருகங்கள். ரத்த உறிஞ்சிகள்!” நானா பேசப் பேச அவரது உடல் கோபத்தில் குலுங்கியது.
“இப்போது அமைதியாக இரு! எளிதாக எடுத்துக்கொள்” என்றார் ரணபீஸ் அக்கறையுடன். நானாவின் பையைக் கையில் எடுத்துக்கொண்டு, சாலையோரமாக அவரை நகர்த்திச் சென்று அனுசரணையுடன், “நானா, நான் உனது குடும்பத்தைச் சேர்ந்தவனில்லை.எனினும் எனக்கு முழு சூழலும் தெரியும். நமது மையத்திற்கு நீ பரிசளித்ததால்தான் இவையெல்லாம் நிகழ்ந்தன அல்லவா? உனது மகன்களும் மருமகள்களும் கோபமடைந்தார்கள், இல்லையா? நானா, நான் இதைச் செய்கிறேன். அனைத்தையும் உன்னிடமே திரும்பித் தரும்படி அவர்களிடம் சொல்கிறேன்”
“முட்டாளைப்போலப் பேசாதே. எனது பையைக் கொடு. என்னைப் போக அனுமதி!”
“நானா, நீங்கள் எங்குச் செல்வீர்கள்?”
”வயதானவர்களின் இல்லத்திற்கு”
”வயதானவர்களின் இல்லமா? அது எங்கு இருக்கிறது?”
“எனக்கு அது தெரியும்”
”எங்களில் யாரேனும் அங்கு இதற்குமுன் சென்றிருக்கிறார்களா?”
”நான் செல்கிறேன். நான் போக வேண்டும்”
”சரி. ஆனால் அது எப்படி இருக்கும்? நாம் முதலில் அதைக் கண்டறிவோம்”
”இல்லை. முதிய மனிதர்களுக்கு அங்கு என்னவெல்லாம் நிகழுமோ அதுவெல்லாம் எனக்கும் நடக்கும். எனினும், இன்னும் எவ்வளவு தூரம் எனக்கு மீதமுள்ளது? துயரார்ந்த சில முதிய மனிதர்களுடன் எனது நாட்களைச் செலவிடுவதில் நான் மகிழ்ச்சியடைவே செய்வேன்”.
மனோகர் நானாவுடன் மேற்கொண்டு விவாதிக்க விரும்பினாலும், அவர் தனது தீர்மானங்களின் மீது பிடிவாதமாக இருக்கிறார் என்பதை உணர்ந்ததும் டாக்ஸியை நிறுத்தி, “நாம் போகலாம். நீங்கள் அங்குதான் செல்கிறீர்கள் என்பதை நான் உறுதிசெய்து கொள்கிறேன்” என்றார்.
டாக்ஸி நின்றது. எதுவும் பேசாமல் நானா இருக்கையில் தலைசாய்த்து அமர்ந்தார். அவரது மகனின் வார்த்தைகள் தேள் கொட்டியதைப்போல அவரது இருதயத்தில் ஆழ்ந்த வலியை இறக்கின. “சமூகச் சேவை செய்வதைப்போல நாடகமாடுகிறாயா? ஆனால் உன்னால் அதைப் பணத்தால் மட்டுமே செய்துவிட முடியாது. உனது கட்டை ஏற்கெனவே சுடுகாட்டிற்குச் சென்றுவிட்டது”.
பாண்டூரங்கன் மேதேக்கர் அஞ்சல் ஊழியத்திலிருந்து ஓய்வுபெற்றபோது அவருடைய மகன்கள் ஒரு கொண்டாட்டத்திற்குத் திட்டமிட்டார்கள். அவர், “இல்லை. இல்லை. இதில் கொண்டாடுவதற்கு என்ன இருக்கிறது” என அவர் அதனை மறுத்தார்.
”என்ன இருக்கிறதா? இதுவொரு கடன். நீங்கள் எங்களை வளர்த்தீர்கள். கல்வி அளித்தீர்கள்” மகன்கள் பெருமையுடன் சொன்னார்கள். “அதோடு, எங்களிடம் வேறு இரண்டு காரணங்களும் இருக்கின்றன. நாங்களும் எங்களுடைய நண்பர்களும் சேர்ந்து டாக்டர். பாபாசாகேப் அம்பேத்கர் கலாச்சார மையம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறோம். மக்களுக்கு அதைப் பற்றித் தெரியப்படுத்த வேண்டுமெனவும் விரும்புகிறோம். அந்தக் கூட்டத்திற்கு நன்கறியப்படும் பிரிசிடெண்ட் மற்றும் பேச்சாளர்களை நாங்கள் அழைக்கவிருக்கிறோம். மேலும், தத்யாசாகேப் சிட்டாலே நமது பகுதியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் ஆனவர். அவரையும் நாம் வாழ்த்துவோம். இந்த மனிதர்களெல்லாம் நமக்குப் பெரிதும் உதவிகரமாக இருப்பார்கள்”.
தனது மகன்கள் என்ன சொன்னார்கள் என்பதை நானாவால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றாலும் தனது மகன்களுக்காக அவர் தன்னையே தோய்த்து அழித்துக்கொண்டவர் என்பதை அறிந்திருந்தார். அதில் அவருக்கு முழுத் திருப்தியும் இருந்தது.
விழாக் காலத்திற்கென்றே வடிவமைக்கப்பட்ட புதிய சட்டை ஒன்றை அணிந்துகொண்டார். தனது தலைக் கேசத்தை நன்கு நீவிக்கொண்டார். தனது விரலில் தங்க மோதிரத்தை அணிந்துகொண்டு மேடையில் தனக்குரிய இடத்தில் தன்னைப் பொருத்திக்கொண்டார். அதன்பிறகு, மோதிரத்தைத் தேய்த்தபடியே கூடியுள்ளவர்களைக் கூர்ந்து கவனித்தார். தளத்தின் பக்கவாட்டில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் மற்றும் பூலேவின் புகைப்படங்களையும் அவரால் பார்க்க முடிந்தது. மேடைப்பேச்சுகள் அவரைத் திடுக்கிடச் செய்தன.
நானாவின் தோற்றமென்பது ரொம்பவே சாதாரணமானது. மென்மையான தோளினையுடைய குச்சி போன்ற உடலமைப்புடன் பல வருடங்களுக்கு முன்னமே மயிர் நரைத்த, முகத்திலிருந்து ஒருபோதும் அழிக்கவியலாத அப்பாவித்தனத்துடன் இருப்பவர் அவர். ஒவ்வொரு பேச்சாளர்களும் சற்றே மிகையாகவே அவரைப் புகழ்ந்திருந்தாலும், உண்மையில் நானா தனது குடும்பத்தையும் குடும்ப ஊழியத்தைத் தாண்டி இதுவரையில் எதையுமே செய்தவரில்லை. “சமூகப் பொறுப்புணர்ச்சி” “சமூகத்துக்குக் கடன்படுவது” போன்ற வார்த்தைகளெல்லாம் அவருக்கு முற்றிலும் அன்னியமானவை. ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள்ளாகவே கடிதங்களையும், அஞ்சலட்டைகளையும், பொட்டலங்களையும், சேமிப்புச் சான்றிதழ்களையும் சுமந்துகொண்டு திரிந்தவர் அவர். இருப்பினும், “சமூகத்தின் ஊழியன்”, “பெரும் பயனாளி” ”அறிவாற்றலின் மீது நேசம் கொண்டவர்” போன்ற உயர் நவிற்சி பட்டங்கள் அவர் மீது ஒட்டப்பட்டன.
இதற்குமுன் ஒருபோதும் தன்னைப் பற்றி இந்தளவிற்குப் பெருமிதத்துடன் பேசப்படுவதைக் கேட்டிராத நானா இவ்வார்த்தைகளால் ஒளிர்ந்துகொண்டிருந்தார். சுற்றும் முற்றும் பார்ப்பதை நிறுத்திவிட்டு, அவர்களுடைய பேச்சை ஆழ்ந்து கவனிக்கத் துவங்கினார். “எவ்வளவு சிறப்பாக மக்கள் என்னைப் பற்றிப் பேசுகிறார்கள்! இவ்வளவு நம்பிக்கையை மக்கள் என் மீது வைத்திருக்கிறார்கள்! எனக்கு அருகாமையில் அமர்ந்திருக்கும் சிறந்த மனிதர்களுக்கு இதுவெல்லாம் பொருந்தும். அவர்களுடைய பணிகள் மக்கள் அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன! ஆனால் நான்? சமூகத்துக்கு எனது பங்களிப்பு என்ன? கடினச் சூழலில் சிக்குண்டிருக்கும் மனிதர்களுக்கு உதவ எப்போதாவது முனைந்திருக்கிறேனா? அன்பாகப் பேசியிருக்கிறேனா? எனது ஆதரவைத் தெரிவித்திருக்கிறேனா?”. அதன்பிறகு தனது வாழ்க்கையையே ஒருகணம் நினைவில் புரட்டிப் பார்த்த நானா தன்னிலையை மிகவும் மோசமாக உணர்ந்தார். “இல்லை, இல்லை. நான் இதற்கெல்லாம் தகுதியானவனே அல்ல”. பக்கவாட்டில் வைக்கப்பட்டுள்ள பூலே மற்றும் அம்பேத்கர் ஆகியோரது உருவப்படங்களைப் பார்க்கும் தைரியம் அவருக்கு இல்லை. எவருடைய கண்களையுமே நேருக்கு நேராக அவரால் பார்க்க முடியவில்லை.
உரைகள் உயர்ந்தபடியே இருந்தன. ஒவ்வொரு பேச்சாளரும் மிகுதியான ஆர்வத்துடன் சமூகத்துக்குச் சேவை ஆற்ற வேண்டியதன் முக்கியத்துவம் குறித்துப் பேசினார்கள். “சமூகத்துக்குச் சேவை புரிவதே, கடவுளுக்குச் சேவை ஆற்றுவதாக அர்த்தமாகும்”, “அந்தப் பாதையில் யாரெல்லாம் பயணிக்கிறார்களோ, அவர்களுக்கு பொன்னொளி மின்னும் எதிர்காலம் காத்திருக்கிறது”. அகர்கர், சாவர்க்கர், பூலே, அம்பேத்கர்… மிகச் சிறந்த மனிதர்களுடைய பெயர்கள் பேச்சாளர்களின் உதடுகளில் நடனமாடிக் கொண்டிருந்தன. புதிய கலாச்சார மையம் பற்றிய திட்டமிடல்கள் மீண்டும் மீண்டும் குறிப்பிடப்பட்டன. குழந்தைகளுக்கான மழலையர் பள்ளி, பெண்களுக்கான தையல் வகுப்புகள், கல்வியறிவு அற்றவர்களுக்கு படிப்பறிவூட்டும் வகுப்புகள், தேவைப்படுவோருக்கு ஆலோசனைகள், ஆதரவற்றோருக்கு உதவி – இத்தகைய எண்ணங்கள் காற்றில் ஓதப்பட்டன. பேச்சாளர்கள் பேசிக்கொண்டே போனார்கள். மையத்திற்கான அன்பளிப்புகள் குறித்து அவர்கள் பேசினார்கள். நூற்றியொன்று.. ஐநூற்றியொன்று… ஆயிரத்தியொன்று.. ஏலம் விடுப்பவர்களுக்கு நிகரான பாவனைகளுடன் அவர்கள் புள்ளிவிவரங்களை வெளிப்படுத்தினார்கள். பார்வையாளர்கள் பகுதியில் பலத்த கைதட்டு. எனினும், சமூகச் செயற்பாட்டாளர்கள் மகிழ்வடையவில்லை. இன்னும் பெரிதான நன்கொடைக்கு அவர்கள் அழைப்பு விடுத்தனர்.
இந்தச் சலசலப்புக்கு மத்தியில், நானாவின் மனம் அவருக்குள் உரையாடியபடியே இருந்தது. “இதுநாள் வரையிலும் உனக்கும் உனது பிள்ளைகளுக்கும் ஏராளமானவற்றைச் செய்திருக்கிறாய். உனது மகன்கள் சிறந்த கல்வியைப் பெற்றிருக்கிறார்கள். உயர்-தர வேலைவாய்ப்பும் அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. சமூகத்துக்கென ஏதாவது செய். இதுதான் அதற்கான சரியான நேரம்! எழு! பேசு!” அவருடைய உணர்வுகள் அவரைத் திணறச் செய்தன.
அந்த உணர்வு மேலெழும்புதல்களுக்குப் பதிலளிக்க நானா எழுந்து நின்றார். சில வார்த்தைகளைக் கோர்த்தபடியே, “நண்பர்களே! நான் இந்தச் சமூகத்துக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்கிற உணர்வைப் பெற்றிருக்கிறேன். அதை வெளிப்படையாக அறிவிக்கவும் விரும்புகிறேன். எனது ஓய்வூதிய நிதியான ஐம்பதாயிரம் ரூபாயைக் கலாச்சார மையத்திற்கு நான் நன்கொடையாக அளிப்பேன்”.
இதைக் கேட்டதும் பார்வையாளர்கள் இடிமுழக்கத்தைப்போலக் கைதட்டினார்கள். ஐந்து நிமிடங்களுக்கு அந்த மண்டபம் வாழ்த்துரைப்புகளால் நிரம்பியது. சமூகச் செயற்பாட்டாளர்களின் முகங்கள் பிரகாசத்துடன் பூத்துக் குலுங்கின. கண்கள் பளபளத்தன. மேடையிலிருந்த போற்றுதலுக்குரிய பேச்சாளர்கள் நானாவை மிகுந்த மரியாதையுணர்வுடன் பார்த்தார்கள். பத்திரிகையாளர்கள் பரபரப்புடன் கிறுக்கினார்கள். நானா அந்தக் கூட்டத்தில் தனது மகன்களையும் மருமகள்களையும் தேடினார் – ஆனால், அவர்களை நானாவால் அவ்விடத்தில் பார்க்க முடியவில்லை.
கூட்டம் முடிந்ததும், பெருமிதத்துடன் இதற்கு முன்பு உணர்ந்திராத நன்கொடையளித்தலின் முழு மனநிறைவுடன் வீடு திரும்பினார். தனது அறைக்குச் செல்லாமல் வரவேற்பறையில் இருந்த சோபாவில் அவர் அமர்ந்தார். தனது மகன்களுக்காகக் காத்திருந்தபடியே விழாவில் தனக்கு அணிவிக்கப்பட்ட மலர் மாலைகளை வருடிக்கொண்டிருந்தார். அவரது அகம் மகிழ்வுற்றிருந்தது…
“இன்று எனது அத்தை இந்த விழாவைக் காண இங்கிருந்திருக்க வேண்டும்”. சோபாவில் அமர்ந்த நிலையிலேயே கிராமத்திலுள்ள தனது அத்தையைப் பற்றிய ஞாபகங்கள் அசைபோட்டபடி இருந்தார். தனது மகன்களின் படிப்பிற்காகவும், திருமணத்திற்காகவும், நகரத்தில் ஒரு வீடு வாங்குவதற்கும் தனது வயல், வரப்புகளை, கொட்டகையை, தனக்குச் சொந்தமான நிலத்தை, இறுதியில் தனது வீட்டை நானா விற்றபோது, அவருடைய அத்தை அவரைத் தடுக்க முனைந்தாள். கோபத்துடன் அவரை எதிர்த்து நின்ற அவள், “நீருக்கு வெளியே உள்ள தவளையைப் போன்றவன் நீ. நமது சமூகத்தையும், சாதியையும் பற்றி நீ நினைக்காமல் போகக்கூடும். ஆனால் நினைவில் வைத்துக்கொள், வயதான காலத்தில் நீ உன் மகன்களையே சார்ந்திருக்க வேண்டிய நிலை உருவாகும்”.
நானாவும் கோபத்துடன் தனது அத்தைக்குப் பதிலளித்தார், “பாருங்கள், எனது மகன்கள் சிறப்பாகக் கல்வி கற்றவர்கள். அவர்கள் என்னை வெறுத்து ஒதுக்க மாட்டார்கள். நிராதரவற்ற நிலையில் நீங்கள் எங்கள் வீட்டிற்கு வந்தால், அவர்கள் உங்களையும்கூட கவனித்துக்கொள்வார்கள்”.
அத்தையைப் பற்றி நினைக்கையில் அவரது கண்கள் தானாக மூடிக்கொண்டன. வேகமாக ஒலித்த அழைப்பு மணிதான் மீண்டும் அவரை எழுப்பியது. அவருக்குக் கவலை உண்டானது. மருமகள்களில் ஒருவர் கூட கதவைத் திறக்க உள்ளறைகளிலிருந்து வெளியே வரவில்லை. கதவுத் திறக்கப்படவில்லை. அவரே எழுந்து சென்று கதவைத் திறந்தார். வாசலில் அவருடைய மகன்கள் கண்களால் அவரைக் கூறுபோடுவதைப்போல வெறித்துக்கொண்டு நின்றிருந்தார்கள்.
“தாமதமாக வந்திருக்கிறீர்கள். இவ்வளவு நேரமும் எங்கு சென்றீர்கள்?” நானா இயல்பாகக் கேட்டார். கையை ஒதுக்கியபடியே அவருடைய இளைய மகன், “உனது பெருந்தன்மை மிகுந்த எண்ணத்தைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருந்தோம்…”
இளைய மகனின் வார்த்தைகளைப் புரிந்துகொள்ள முடியாமல் தனது மூத்த மகனைப் பார்த்தார். உள்நுழைந்தபடியே அவர், “இப்படியொரு காரியத்தை யார் உன்னைச் செய்யச் சொன்னது?” என்றார்.
“ஆனால், என்ன ஆயிற்று?”
”அவ்வளவு பெரிய தொகையைத் தூக்கி எறிந்துவிட்டு, என்ன ஆயிற்று என்றா கேட்கிறீர்கள்?” குழம்பிய நானா, “தூக்கி எறிந்தேனா? நீ என்னச் சொல்கிறாய்? பணத்தை உன்னுடைய கலாச்சார மையத்தில் தானே கொடுத்தேன்?”
“ஓஹ். ஆமாம். ஆனால், மையத்திற்குக் கிடைக்கும் எந்தவொரு மிதமான உதவியையும் நாங்கள் நன்கொடை மூலமாகவே பெற்று வருகிறோம். அதோடு பெரியளவில் பிரச்சாரம் செய்திருக்கிறோம். பல பெரிய நன்கொடையாளர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறோம். ஏன் தெரியுமா? அடித்தட்டில் உள்ள மக்களை மேலுயர்த்த வேண்டியது அவர்களுடைய பொறுப்புதானே, இல்லையா? அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதையாவது நீ அமைதியுடன் பார்த்திருக்க வேண்டாமா?”.
“இது யாருடைய பொறுப்பு, யார் என்ன கொடுக்கிறார்கள் என்பதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதற்குப் பதிலாக, நான் என்ன செய்ய வேண்டுமென்று நினைத்தேனோ அதையே செய்திருக்கிறேன். இதனால் உனக்கு என்ன இழப்பு? ஏற்கெனவே உனக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை நான் செய்துவிட்டேன்”.
“ஓஹ். நான் அவ்வாறு நினைக்க வேண்டுமா? அது உன் கடமை.எங்கள் பிள்ளைகளுக்கு நாங்கள் எதுவும் செய்வதில்லையா? மனிதர்கள் முதலில் தங்கள் குடும்பத்தைப் பார்க்க வேண்டும். பிறகுதான் சமூகமெல்லாம். நம்முடைய சொந்த வீடே தீப்பற்றி எரிந்துகொண்டிருக்கும்போது எப்படி சமூகத்தின் மீது படர்ந்துள்ள தீயை அகற்றுவாய்? ” நானாவின் சொந்த வார்த்தைகளே அவருக்கு எதிராக வீசப்பட்டன.
நேரமாகிக்கொண்டே போனது. குரல்கள் உயர்ந்தபடியே இருக்க, தடித்த வார்த்தைகளும் வீசப்பட்டன. இரு மருமகள்களும் அறையிலிருந்து வெளியில் வந்து தங்கள் கரங்களை இடுப்பில் வைத்துக்கொண்டு, தாங்களும் ஏதேனும் பேசுவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். இதற்கு மேலும் கூடுதல் வாதம் எதுவும் வேண்டாமெனக் கருதியதால், வாக்குவாதத்தை நிறுத்திக்கொண்டு உறங்குவதற்காக நானா தனது அறைக்குத் திரும்பினார்.
ஏழெட்டு நாட்களில் நானா அளித்த நன்கொடை பெரியளவில் எல்லோராலும் அறியப்பட்டது. மக்கள் இது குறித்துத் தொடர்ந்து பேசியபடியே இருந்தார்கள். போலவே, மருமகள்களும் சின்ன சின்ன வழிகளின் மூலமாக அவரை அவமானப்படுத்தியபடியே இருந்தார்கள். அவருடைய உணவு நேரம் மேகத்திற்குள் மறைந்துபோனது. மகன்களும் அவரைப் புறக்கணித்தார்கள். பேரக்குழந்தைகளும்கூட சுதந்திரமாக அவருடன் பேசுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. அனைத்துத் தளைகளிலிருந்து துண்டிக்கப்பட்டவராக நானா உணர்ந்தார் என்றாலும், தொடர்ந்து அவர் அமைதியாகவே இருந்தார்.
குழந்தைப் பருவத்தில் இருந்து வளர்ந்து இளைஞராவது, குடும்பத் தலைவராவது, முதுமையடைவது என்பதில் நான்காவது நிலைதான் முடிவற்றது என்பதை அவர் அறிந்திருந்தார். இருப்பினும், நமது பிள்ளைகள் நமக்கு ஆதரவு கொடுப்பார்கள். மன வேதனையூட்டும் இந்த அவமானங்களையும் கடந்து நானா இந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் வாழ்ந்துகொண்டிருந்தார். எனினும், ஒருநாளில் அந்த நம்பிக்கை முற்றிலுமாகத் தகர்ந்து போனது.
அலுவலகத்துக்குச் செல்லும் முன்பாக இரு மகன்களும் கையில் பேருந்து டிக்கெட்டை வைத்துக்கொண்டு நானாவின் முன்னால் வந்து நின்று, “உங்கள் கிராமத்திற்குச் சென்று சிறிது காலம் ஓய்வெடுங்கள்” என்றார்கள்.
”எனது கிரமத்திற்குச் செல்வதா? நீ என்ன சொல்கிறாய்? என்ன காரணத்திற்காகச் செல்ல வேண்டும்? அங்கே எனக்கென்று என்ன இருக்கிறது?”
“என்ன? அங்குதான் ஒரு கூட்டுக் குடும்ப வீடு இருக்கிறதே. அதையாவது நீங்கள் விற்கவில்லையே”
மகன்களின் இந்த அவமானகரமான பேச்சு நானாவை எரிச்சலடையச் செய்தது. நீண்ட நாள்களாகத் தனது இதயத்துக்குள் அடக்கி வைத்திருந்த கோபம் வெடித்துக் கிளம்ப, “ஏன் இதை வைத்து ஒரு நாடகம் ஆடுகிறாய்? குடும்பத்துக்கான எனது பயன் முடிவடைந்துவிட்டது என வெளிப்படையாகவே நீ சொல்லலாமே?” என்று உரத்த குரலில் பேசினார்.
”ஆமாம், ஆமாம் சமூகசேவை எனும் உன்னுடைய பெரிய நாடகத்துக்குப் பிறகும் உன்னால் ஆகக்கூடியதென்று எதுவுமில்லை” அவருடைய இளைய மகனும் கோபத்தில் எகிறியபடியே பேசினான்.
“என்ன நான் நாடகமாடினேனா?”
“வேறென்ன? பணத்தால் மட்டுமே செய்யக்கூடியது என்னவிதமான சமூகசேவை? சமூகசேவைக்கு உழைப்பு தேவை” பற்களைக் கடித்தபடியே மூத்த மகன் சொன்னான், “உனது கட்டை ஏற்கெனவே சுடுகாட்டிற்குச் சென்றுவிட்டது. நீ வயதானவன். பயனற்றவன். உனக்கு சமூகசேவை பற்றி என்ன தெரியும்?”.
நானா வார்த்தைகளின் கசையடியை உணர்ந்தார். இவ்வார்த்தைகளில் வெளிப்பட்ட அவதூறு என்பது அவர் மீது எரிமலைக் குழம்பை ஊற்றுவதைப்போல இருந்தது. நானா மனவேதனையால் புழுங்கினார்.
இத்தகைய வார்த்தை தாக்குதல்களின் மூலம் பழிவாங்கியபிறகு இரு மகன்களும் வெளியேற, மருமகள்கள் தங்களுக்குள் பேசியபடியே தத்தமது கணவர்களுக்காகச் சோத்து மூட்டைகளைக் கட்டிக்கொண்டிருந்தார்கள். ஒரு திகைப்புடன் எழுந்த நானா தனது பையில் துணிகளைப் போட்டு நிரப்பிக்கொண்டு, யார் பார்வைக்கும் படாமல் வெளியே கிளம்பினார்.
நகரத்தின் அனைத்துச் சாலைகளையும் சதுக்கங்களையும் விட்டு விலகி, டாக்ஸி தொலைதூர மலையொன்றின் திசையில் தார் சாலையில் அழுந்தி ஊர்ந்தபடியே மேலேறியும் கீழிறங்கியும் வளைவுகளில் பயணித்தும் ஒரு சிறிய குன்றின் அண்மையிலிருந்த ஒரு மூடப்பட்ட நுழைவுக் கதவின் முன்னால் போய் நின்றது. நுழைவுக் கதவிற்குப் பின்னால் மரங்களின் அணிவகுப்பினூடாக ஒரு நீண்ட வராண்டாவைக் கொண்ட பள்ளி போன்ற கட்டிடமொன்று தென்பட்டது. கதவுகள் அந்த வராண்டாவை நோக்கி சென்றன. ஒரு நெடுவரிசையில் இருந்து தொங்கியபடி கரும்பலகை ஒன்று தென்பட்டது. அதில் “மாலைநேர நிழல்கள்” என்று எழுதப்பட்டிருந்தது. அத்தகைய கவித்துவப் பெயருக்குக் கீழே இருந்த “முதியவர்களுக்கான இல்லம்” எனும் சொற்கள் அதன் அர்த்தத்தை வெளிப்படையாகத் தெளிவுபடுத்தின.
டாக்ஸியில் இருந்து இறங்கி இருவரும் நுழைவுக்கதவை நோக்கி நடந்தார்கள். சங்கிலியைத் தூக்கி கதவைத் திறக்கையில் அவை அதீதமாக ஒலியெழுப்பின. வராண்டாவுக்குப் பின்னாலிருந்த அறையிலிருந்து ஆமைபோன்று நடுங்குகின்ற கழுத்தையுடைய ஒரு முதியவர் வெளியே வர அவருடைய மங்கிய பார்வை பிரகாசித்துத் தளும்பியது. “யார் இந்த நபர்கள்? இவர்கள் யாரையேனும் பார்க்க வந்திருக்கிறார்களா அல்லது இல்லத்தில் சேர வந்திருக்கிறார்களா? அல்லது வெறும் விசாரணை மட்டும்தானா?”. கேள்விகள் காற்றில் தொங்கின. முன்னால் வந்த காவலாளி, “என்ன வேண்டும்” எனக் கேட்டார்.
”நான் சேர வந்திருக்கிறேன்”
“நான்கு மணிக்குப் பிறகு வாருங்கள்” காவலாளி உறுமினார்.
”கவனியுங்கள். இப்போது நேரம் ஒன்றுதான் ஆகிறது. நாங்கள் எங்கு செல்வது…” மனோகர் சத்தமாகத் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியபடியே ஒரு விவாதத்தைத் தொடங்கினார். இறுதியில், ஒரு ஐந்து ரூபாயைக் கொடுத்துவிட்டு அவர் நானாவை உள்ளே அழைத்துச் சென்றார். நானா கீழே அமர்ந்திருக்க, மனோகர் உள்ளே விசாரிக்கச் சென்றிருந்தார். நானாவின் ஒட்டுமொத்த சூழலையும் மேலாளரிடம் விவரித்துப் படிவத்தைப் பூர்த்தி செய்து பணத்தையும் கட்டினார். கையொப்பங்கள் பெறப்பட்ட பிறகு, அறை எண்ணும் விதிமுறைகளும் மேலாளரால் வழங்கப்பட்டன. மனோகரும் நானாவும் அங்கிருந்து சென்றார்கள்.
சேர்க்கை கிடைத்ததும் ஒருவித விடுவிக்கப்பட்ட உணர்வுடன் நானா மனோகருடன் சென்றார். அறையை அவர்கள் நெருங்கியதும், “வாருங்கள், வாருங்கள், நீங்கள் ஒரு படுக்கையைப் பிடித்துக்கொண்டீர்கள்” என்று உள்ளிருந்த வந்த ஒருமித்த குரல்கள் இருவரையும் திடுக்கிடச் செய்தன.
அறையிலிருந்த மூன்று படுக்கைகளில் மென்மையாகச் சிரித்தபடியே நானாவை வரவேற்கும் விதமாக மூன்று முதியவர்கள் அமர்ந்திருந்தார்கள். “உள்ளே வாருங்கள், ஏன் பயப்படுகிறீர்கள்? நாங்களும் உங்களைப் போன்றவர்கள்தான். எங்கள் குடும்பங்களுக்கும் நாங்கள் தேவைப்படவில்லை. சமூகமும் எங்களை நிராகரித்துவிட்டது” முதியவர்களில் ஒருவர் சொல்ல, மற்றவர்கள் சிரித்தபடியே அதை ஆமோதித்தார்கள்.
நானாவும் மனோகரும் சிரிக்கவில்லை. அமைதியாகவே உள்நுழைந்தார்கள். உள்ளே சுவர் பக்கமாக இருந்த நான்காவது கட்டில் நானாவுக்கானது. நான்காவது கட்டிலில் நானா அமர்ந்தார். நானாவின் பையை கட்டிலுக்குள் கீழே மனோகர் தள்ள, “மனோகர் இனி நீ செல்லலாம்” என்று மனோகரிடம் நானா தெரிவித்தார்.
”நானா, உங்களுக்குப் பணம் தேவைப்பட்டால்…”
“இல்லை. என்னிடம் கொஞ்சம் இருக்கிறது”
”பாருங்கள் நானா, உடல்நலனைக் கவனித்துக்கொள்ளுங்கள். மகிழ்ச்சியாக உணருங்கள். அவ்வப்போது நான் வந்து பார்க்கிறேன்”.
”மனோகர், எதற்காக நீ இங்கே வருவாய்? செல், மகிழ்ச்சியாக இரு, ஆனால் கவனி, எனது மகன்களிடம் இது பற்றி எதுவும் சொல்ல வேண்டாம். அவர்களுடைய முகத்தைப் பார்க்க நான் விரும்பவில்லை. என்னளவில், இன்றோடு அவர்கள் இறந்துவிட்டார்கள்…!!” பேசப் பேச அவரால் தனது அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவரது கண்களில் கண்ணீர் நிரம்பியிருந்தது.
மனோகரின் கால்கள் தடுமாறின. அங்கிருந்த முதியவர்கள் நானாவை நெருங்கிச் சென்று, “ஓஹ். ஏன் நீங்கள் ஒரு குழந்தையைப்போல அழுகிறீர்கள்? இப்படி நடந்துகொள்ளாதீர்கள். உங்கள் மனதை நிலையாக வைத்திருங்கள். எது நடந்ததோ அது நடந்து முடிந்துவிட்டது என்பதோடு மறக்கப்பட வேண்டியதும்கூட. முதலில் உங்கள் பையைத் திறங்கள்” என்றவாறே அவர்களில் ஒருவர் கட்டிலின் அடியில் இருந்த நானாவின் பையைக் காண்பித்தார். “கடவுளின் புகைப்படங்களை வெளியில் எடுத்து சுவரில் அவைகளைப் பொருத்துங்கள்”.
”நீங்கள் இன்னமும் என்னப் பார்க்கிறீர்கள்? இங்கே பாருங்கள். எங்களிடம் மூன்று சுவர்கள் உள்ளன. அவற்றில் எங்கள் கடவுள்களை எவ்வாறு அமைத்துள்ளோம் எனப் பாருங்கள். இப்போது நான்காவது சுவர், அது இனி உங்களுடையது. அது எவ்வளவு அழகாக உள்ளதெனப் பாருங்கள். விரைவிலேயே இவ்விடத்தை உங்கள் வீட்டைப்போல உணரத் துவங்கிவிடுவீர்கள்”
அப்போதுதான் நானாவுக்கு உணவு வந்தது. “உணவை உட்கொள்ளுங்கள். அதன்பிறகு உங்கள் பணிகளைப் பார்க்கலாம்”.
சுவரிலிருந்த கடவுள்கள் மற்றும் புவாக்களின் (Buwas) அனைத்துப் படங்களையும் பார்த்துக்கொண்டே நானா அமர்ந்திருந்தார். புதிய மலர் மாலைகளும் தூபங்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டன. புகைப்படங்களின் முனைகளில் தூபக் குச்சிகள் செருகப்பட்டிருந்தன. அதன்கீழே புனிதர்களின் வாய்மொழிகள் எழுதப்பட்டிருந்தன. நான்காவது சுவர் மட்டுமே வெறுமையாக இருந்தது. வாழ்க்கையால் நிரப்பப்படக் காத்திருப்பதைப்போல வெற்றுப்பகுதியாக இருந்தது.
“நானா, முதலில் சிறியளவில் சாப்பிடுங்கள். காலையிலிருந்தே நீங்கள் எதுவும் சாப்பிடவில்லை” மனோகர் உணவு உட்கொள்ளுமாறு அவரை சம்மதிக்க வைக்க முயன்றார், அவரது முயற்சி வலுவற்றது என்பதை உணர்ந்திருந்தபோதும்…
”எனக்கு உணவு எதுவும் வேண்டாம். நான் பசியோடு இல்லை. வா. போய் ஆஸ்ரமத்தைப் பார்ப்போம்” என்றவாறே நானா எழுந்துகொள்ள, மனோகரும் அவரைப் பின்தொடர்ந்தார். அனைத்து அறைகளும் ஒரே வடிவத்திலும் ஒரே அளவிலும் இருந்தன. ஒவ்வொரு அறையிலும் நான்கு கட்டில்களும் நான்கு சுவர்களும் இருந்தன. ஒவ்வொரு அறையிலும் ஒரு மேசையும் அதைச் சுற்றி நான்கு நாற்காலிகளும் போடப்பட்டிருந்தன. அவற்றின் மீது புத்தகங்களும், வெள்ளைத் தாள்களும், பேனாக்களும், அழிப்பான்களும் இருந்தன.
அந்த அறைகளுக்குப் பின்னால் ஒரு காலியான நடைபாதை இருந்தது. அதன் ஒருமுனையில் சமையற்கூடமும் மறுமுனையில் ஒரு பெரிய பொது மண்டபமும் அதைத் தொடர்ந்து ஓர் குளியலறையும் நடைபாதையை ஒட்டியபடியே இருந்தது. அந்தப் பொது மண்டபத்தில் பாதியளவில் உணவு மேசைகளும் நாற்காலிகளும் அமைக்கப்பட்டிருக்க, மறு பாதியில் வழிபாட்டிற்குரிய இடமாக மூலையில் ஒரு பெரிய தெய்வ வழிபாட்டுக் கூடம் அமைந்திருந்தது. வழிபாட்டுக்குத் தேவையான அனைத்து விஷயங்களுடன் சிறியதும் பெரியதுமான பல கடவுள்களின் புகைப்படங்களும் அந்த வழிபாட்டுக் கூடத்திலிருந்தன. இரண்டாவது முனையில் ஒரு மேஜையும், ஜால்ராக்களும், முரசும் காணப்பட்டன. சிறிய தரைவிரிப்புகள் அங்குமிங்கும் விரவிக்கிடந்தன. பட்டாடைகளை உடுத்திய இரண்டோ மூன்றோ முதியவர்கள் கைகளில் ஜபமாலைகளை உருட்டியபடி அங்கு அமர்ந்திருந்தனர்… தங்கள் உடல் முழுவதும் விபூதி பூசியிருந்த வேறு இருவர் சிந்தனையில் மூழ்கியவர்களாகக் காணப்பட்டார்கள்.
இதையெல்லாம் பார்த்துவிட்டு மனோகர் சற்றே கலக்கத்துடன், “இங்குள்ள சில விஷயங்கள் உங்களுக்குத் தொந்தரவு அளிக்கக்கூடும், ஏனெனில் இங்குள்ளவர்கள் பழைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள், பழைய வகையிலான சிந்தனை முறையை இவர்கள் பெற்றிருப்பார்கள். ஆகவே, நீங்கள் செய்யும் விஷயங்களில் கவனமாக இருங்கள்”.
“நண்பரே, என்னவிதமான கவனத்தைப் பற்றி நீ சொல்கிறாய்? மன அமைதியுடன் எனது தலையைச் சாய்ப்பதற்கு ஒரு இடம் வாய்த்திருக்கும் வரையில் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை”.
“நான் என்ன உணருகின்றேனோ அதை உங்களிடம் தெரிவிக்கிறேன். இரண்டு மூன்று கடவுள்களின் புகைப்படங்கள் எடுத்துவருகிறேன், அதை சுவரில் பொருத்திவிடுங்கள், மேலும் சாத்தியமிருந்தால் சாதியைப் பற்றி எதுவும் பேச வேண்டாம். குறைந்தபட்சம் உங்களுடைய வயதுக்கு நீங்கள் அந்தப் போரை எதிர்கொள்ள வேண்டாம்”.
மனோகர் பேசிக்கொண்டிருக்க, நானா அதைக் கேட்டபடியே அமர்ந்திருந்தார். முதியவர்களுக்கான வீடு என்பது ஒரே வயதிலான மனிதர்களுக்கான, ஒரே வகையிலான துன்பத்தை எதிர்கொண்டிருக்கும் மனிதர்கள் கூடி வாழ்வதற்கான ஒரு பொதுவான இடம் என்பதையே நானா உணர்ந்திருந்தார். ஒவ்வொருவரும் மற்றொருவரின் மீது அக்கறையுடன் இருப்பதோடு, சுதந்திரமான விடுவிக்கப்பட்ட மனநிலையுடன் இறுதி முடிவை நோக்கி தைரியத்துடன் நகர்ந்துசெல்ல வேண்டும்.
எதையோ நினைத்தவராக, தனது பாக்கெட்டிலிருந்து விதிமுறைகளை வெளியில் எடுத்த மனோகர், ஒரு குறிப்பிட்ட விதியின் மீது விரல் வைத்தவராக, “பூஜைகளுக்கும் மதச் சடங்குகளுக்கும் கட்டாயமாக ஒவ்வொரு மாதமும் ஐம்பது ரூபாய் கொடுக்க வேண்டும் நானா. இந்தப் பணத்தை நாம் கட்டவில்லை. பிறகு உங்களிடமிருந்து இதனைப் பெற்றுக்கொள்வார்கள்”.
விதிமுறைகளைத் தனது கைகளில் பெற்றுக்கொண்ட நானா, “சரி மனோகர், நீ செல்லலாம். வீட்டை அடைய உனக்குத் தாமதமாகிவிடும்” என்றார்.
“ஆனால், புகைப்படங்கள்..”
“நான் அதைப் பார்த்துக்கொள்கிறேன். நீ போ..”
மனோகருக்கு விடையளித்துவிட்டு, நானா வராண்டாவை நோக்கிச் சென்றார். ஒரு ஆதிவாசி இசைக்குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் உரத்த சத்தமிடும் ஒலிகளை எழுப்பிக்கொண்டிருந்தார்கள். அவர்களுள் சிறுவர்களும், பெண்களும் நானாவை விட வயதில் முதிர்ந்தவர்களும் இருந்தார்கள். அவர்களுடைய கைகளில் தேன் கேக்குகள், மெழுகுத் துகள்களும், காட்டு இலைகள் மற்றும் வேர்களிலிருந்து செய்யப்பட்ட மருந்துகளும் இருந்தன. மக்கள் அவர்களிடம் பேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். சிலர் சத்தமாகப் பனிரெண்டு வயது சிறுவர்கள் இருவர் அல்லது மூவரை நோக்கி விரல் நீட்டியபடியே பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களுடைய கறுத்த மெலிந்த உடலில் தேனீ கடித்ததில் உண்டான சிவப்புத் தடிப்புகள் தெரிந்தன. அந்தச் சிறுவர்கள் வேதனையில் இருப்பதாகத் தோன்றினார்கள். இந்தக் குழு காட்டிலிருந்து பொருட்களைச் சேகரிப்பதிலுள்ள துரதிர்ஷ்டங்களைப் பற்றிப் பேசியபடியே, அவர்களுடைய கடின உழைப்புக்கு ஏதேனும் கொடுக்கும்படி மேலாளரிடம் மன்றாடுகிறார்கள்.
இவர்கள் காலேகாபின் கட்காரிஸ் (Kalekabhinn Katkaris)… கிட்டத்தட்ட நிர்வாணமாக, சதைப்பற்றில்லாத மெலிந்த உடலும், சுருங்கிய முகமும் உறைந்த கண்களையுடைய அவர்களைப் பார்த்தபடியே அவ்விடத்தில் நீண்ட நேரம் நின்றிருந்த நானாவிற்குக் கிட்டத்தட்ட காய்ச்சலே வந்துவிட்டது.
”ஓஹ், நண்பரே… ச்ச்சீ, நீ ஏன் அவர்களைப் பார்க்கிறாய்? சீக்கிரம் இங்கு வா, இல்லையெனில் உனக்குக் காய்ச்சல் பிடித்துக்கொள்ளும்” அவருடைய தோழர்களில் ஒருவர் அழைக்கிறார். நானா தனது அறைக்குத் திரும்பியபோது பிற மூன்று முதியவர்களும் நானாவின் கட்டிலில் அமர்ந்தபடியிருக்க, அவர்களுள் ஒருவர், “அதுதான் எங்கள் கைவினைக்கான மூலப்பொருள். இங்கு என்ன நடக்கும் என்பதை நாளை பார்ப்பாய்” என்றார்.
”அதேநேரத்தில், விதிமுறைகளைப் பாருங்கள். காலை ஒன்பது மணியிலிருந்து பனிரெண்டு மணிவரையில் தேனைப் பாட்டிலில் போட்டு அடைப்பதிலும், மருந்துகளை அரைக்கவும், தோட்ட வேலைகள் செய்வதிலும் நாம் ஈடுபட வேண்டும்” மூன்றாவது முதியவர் தகவலை அளித்தார்.
”ஓஹ். அதை மறந்துவிடு. உன்னைப் பற்றி ஏதேனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறாயா?” “உனது பெயர், உனது ஊரின் பெயர், தொழில், உறவுகள், இங்கு வந்ததற்கான காரணம், அதுபோல.. எங்களிடம் பகிர்ந்துகொள்….”
”நான் இப்போது சரியான மனநிலையில் இல்லை என்பது போன்ற சொற்றொடர்கள் உனக்கு உதவப் போவதில்லை” மூவரில் ஒருவர் தேநீரை உறிஞ்சியபடியே விளையாட்டுத்தனமான சூழலை உருவாக்கியபடியே பேசினார்.
அவர்களுடைய இலகுவான உரையாடல் நானாவை இயல்பாக உணரச் செய்தது. சிரித்தபடியே, “நீங்கள் எனக்கு முன்பாக இங்கு வந்தவர்கள். அதனால் முதலில் உங்களைப் பற்றி என்னிடம் தெரிவியுங்கள்”.
பின்வருமாறு ஒருவர் சொல்லும்வரை, ஒவ்வொருவரும் தங்கள் கதையை விவரிக்கத் தொடங்கினார்கள். ”புதிதாகச் சொல்ல என்ன இருக்கிறது? என் பெயர் ஜோஷி, அவர் சவந்த், இது ரசல், பிறகு நீங்கள்.. மேதேக்கர். ஆமாம். உங்களுடைய பெயர் வேறொன்றாக இருக்கலாம், உங்களுடைய தொழில், குடும்பச் சூழல் வேறானதாக இருக்கலாம். ஆனால், நம்முடைய அடையாளமென்பது ஒன்றேதான். “முதியவர்”. நமது துரதிர்ஷ்டங்களும் ஒன்றேதான்: இனியும் மக்களுக்கு நாம் தேவைப்படவில்லை”.
”நாம தேவைப்படாதவர்களாக இருப்பதற்கான காரணமும் ஒன்றேதான். அது பணம்”. தனது கண் கண்ணாடியை அகற்றியபடியே சவந்த், “எனது வருமானங்களைப் பிள்ளைகளுக்குப் பகிர்ந்து அளித்ததும், இந்த முதிய வயதில் அவர்களுக்கு நான் தேவையற்றவனாக ஆகிவிட்டேன்”.
ரசல் தன்னுடைய பிரச்சனைகளை விவரிக்கத் துவங்கினார் “எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். எனது மனைவியை அவளுடைய வீட்டில்தான் தங்க வைத்திருக்கிறேன். இதன்மூலம் ஐந்து ரூபாயைச் சேமிக்க முடியும். எனினும், நான் அங்கு தங்குவதில்லை. ஏதோவொரு வழியில் பணம் பற்றிய கேள்வி எழுந்துவிடுகிறது. இல்லையா?” ஜோஷி நானாவைப் பார்த்தபடியே கேட்டார்.
ஏதோ காரணத்தினால் நானா அமைதியுடன் இருந்தார். சமூகத்துக்கு அவர் பெருமளவில் பணம் கொடுத்ததை அவர்கள் ஏற்பார்களா? என்று அவர் நினைத்தார். அல்லது பணம் பற்றிய கேள்வியிலிருந்து ஒரு கதையை உருவாக்கியிருக்கிறேன் என நினைப்பார்களா?
”நீ எப்படி மேதேக்கர்?”
“ஆமாம். ஆமாம். பணத்துடனான ஒரு கடினமான உறவின் காரணமாகவே நானும் இங்கிருக்கிறேன்”
“பாருங்கள். ஒரே நிலையிலேயே நம்மை நம்முடைய சூழல்கள் கொண்டுவந்து நிறுத்தியுள்ளன. நாம் ஒரே நிலையிலேயே இருக்கிறோம். நம்முடைய மனதை வலிமையாக வைத்துக்கொள்ள வேண்டும். எது நடந்ததோ அது முடிந்துவிட்டது. இனி நாம் கவலையில்லாமல் வாழ வேண்டும்”.
“இது நமது குழந்தைப்பருவ வீட்டிற்குத் திரும்பிச் செல்வதைப் போன்றது” யாரோ ஒருவர் சொல்ல, அனைவரும் மனப்பூர்வமாக அதற்குச் சிரித்தார்கள்.
அதன்பிறகு மூவரும் எழுந்தார்கள். “மேதேக்கர், நாங்கள் சிறிது நடந்துவிட்டு விரைவில் திரும்பி வருவோம். அதுவரையிலும் அறையை உங்கள் வீட்டைப்போல நினைத்துக்கொள்ளுங்கள்” என்றார் ஜோஷி நானாவுக்குப் பின்னாலிருந்த வெற்று சுவரை வெறித்தபடியே.
நானா தனது பையைத் திறந்து கசங்கிய தனது உடைகளை வெளியில் எடுத்தார். இரண்டு மூன்று ஆதிவாசி சிறுவர்கள் கதவினருகில் நின்றிருந்ததைப் பார்த்ததும், “உள்ளே வாருங்கள், உள்ளே வாருங்கள், உங்கள் பெயர்கள் என்ன? எங்கிருந்து வருகிறீர்கள்” என்றார்.
எதிர்பாராத இந்தக் கேள்விகளால் திடுக்கிட்ட சிறுவர்கள் ஒருகணம் குழம்பினார்கள். எனினும் சிறுவர்களில் ஒருவன் தைரியத்துடன் முன்னால் வந்தான். தனது விரல்களைத் தவறுதலாகச் சுட்டியபடியே, “அது ஹோங்கர், அவனுக்குப் பின்னால் இருப்பவன் தியா, எனது பெயர் திந்தியா”. அதன்பிறகு என்ன சொல்வதென்று தெரியாததால் சிறுவர்கள் வெறுமனே சிரித்துக்கொண்டு அமைதியாக நின்றிருந்தார்கள்.
“இந்தாருங்கள். உங்களுடைய சிற்றுண்டிக்காகச் சிறிது பணம்” எனச் சொல்லி அரை ரூபாயை அவர்களின் கரங்களில் போட்டார் நானா. அவர்களைப் பின்னால் லேசாகத் தட்டும்போது யாரோ ஒருவர் கோபத்துடன், “ஏய்.. இங்கு செய்கிறீர்கள்? அங்கே சென்று விளையாடுங்கள்” என்று சிறுவர்களை விரட்டினார். முயல்களைப்போல அந்த சிறுவர்கள் குதித்தோடி மறைந்தனர். நானா தனது பேரக்குழந்தைகளை நினைத்தபடியே கட்டிலில் மன அழுத்தத்துடன் அமர்ந்திருந்தார்.
அவருடைய அறைத் தோழர்கள் மீண்டும் திரும்பியதும் சுவரின் மீது அவர்களின் பார்வை பதிந்தது. அதன்பிறகு கட்டிலிலுள்ள நானாவைப் பார்த்து, “மேதேக்கர், உனக்கு உடல்நிலை சரியில்லையா?
அவர் தூக்கத்தில் இருப்பதைப்போல தெரிகிறார்” என்றார் ஜோஷி.
சவந்த் நெருங்கி வந்து நானாவை உலுக்கினார். “மேதேக்கர் எழுந்திரு. இது பிரார்த்தனைக்கான நேரம்”.
“நீங்கள் செல்லுங்கள். நான் சிறிது நேரம் படுத்திருக்க விரும்புகிறேன்” என்றுவிட்டு நானா அதே இடத்திலேயே இருந்தார். மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடியே, “பிரார்த்தனைக்கு வரவில்லை என்றால், இதற்கு என்ன அர்த்தம்?” என முணுமுணுத்தவாறே வெளியேறினார்கள்.
“விரைவில் நாம் கண்டுபிடிப்போம். அவர் எங்கு சென்று விடப் போகிறார்”
அவர்கள் திரும்பி வந்ததும், நானா இன்னமும் உறங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தார்கள். மூவரும் அவரை நெருங்கி வந்து கை வைத்துப் பார்த்தார்கள். உண்மையாகவே அவர் உடல் நலமில்லாமல் இருந்தார்.
மேலாளரிடமிருந்து அவர்களில் ஒருவர் கற்ற மூலிகை கலவையைச் செய்வதன் மூலமாக நானாவை அவர்களை நிதானத்துக்குத் திருப்பி கட்டிலில் அமரச் செய்தார்கள்.
ஆஸ்ரமத்தில் மாலை உணவு கிடையாது. சிறிது நேரத்தில் பால் வந்தது. மூவரும் வற்புறுத்தி நானாவைப் பாலருந்தச் செய்தார்கள், “காலையிலிருந்தே நீங்கள் ஒரு கவளம்கூட உணவு சாப்பிடவில்லை”. அக்கறையுடன் கூடிய அவர்களுடைய முகங்களைப் பார்த்ததும் நானா சிறிது தெம்பாக உணர்ந்தார்.
மறுநாள் காலையில் நானா கண்விழித்தபோது அவருடைய அறைத் தோழர்கள் பல் தேய்த்துக்கொண்டிருந்தார்கள். “நானா இப்போது எவ்வாறு உணருகிறாய்? உடல்நிலை பரவாயில்லையா?”. நானா சிரித்தபடியே பரவாயில்லை என்று சொல்லிவிட்டு முகங்கழுவச் சென்றார்.
வெளியே பின்புறத்தில் பலரும் குளித்துக்கொண்டிருந்தார்கள். பட்டாடை உடுத்திய சில முதியவர்கள் பஜனைகளைப் பாடிக்கொண்டிருக்க, மற்றவர்கள் அங்குமிங்கும் நடந்தபடியே தாளத்திற்கேற்ப தங்களுடைய நேரத்தைக் கடைப்பிடித்தார்கள்.
அந்தப் பக்கமாகச் செல்வதற்குப் பயந்த நானா மீண்டும் திரும்பி தனது அறைக்கு வந்து கட்டிலில் அமர்ந்துகொண்டார். அவருக்கடுத்து முகம் கழுவச் சென்ற ஜோஷி தகவல்களைக் கிளறும் விதமாக, “மேதேக்கர், மேதே எனும் உன் கிராமப் பெயரிலிருந்து உன்னுடைய பின் பெயர் சூட்டப்பட்டதா? அந்தக் கிராமத்தைச் சேர்ந்த அனைத்து சாதியினரும் மதத்தவரும் மேதேக்கர் எனப் பெயர் சூட்டப்படுவார்களா? அல்லது உனக்கு மட்டும்தான் இந்தப் பெயரா?…”
“இல்லை. மேதே கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் தங்கள் பெயருடன் மேதேக்கர் என இணைத்துக்கொள்வார்கள்” நானாவின் பதிலால் ஜோஷியின் முகம் சற்றே சுருங்கியது என்றாலும் தனது சக தோழர்களை அர்த்தத்துடன் அவர் பார்த்தார். முகச் சவரம் செய்துகொண்டிருந்த சவந்த் கண்ணாடியில் தெரிந்த நானாவின் முகத்தைப் பார்த்தபடியே, “ஆனால் மேதே கிராமத்திலுள்ளவர்கள் எந்தச் சாதி மதத்தைச் சேர்ந்தவர்கள்? அதாவது, அங்கு எவ்வளவு நபர்கள் உள்ளீர்கள்?” என்றார்.
”மிகச் சிறிய வயதிலேயே நான் கிராமத்திலிருந்து வெளியேறிவிட்டேன். அதனால், உண்மையில் என்னால் அதைச் சொல்ல முடியாது”. நானாவின் இந்தப் பதிலால் சவந்தின் இணக்கம் தாக்கப்பட்டது. அதன்பிறகு ரசல் நானாவை நெருங்கிச் சென்று, “மேதேக்கர் நீங்கள் இன்னும் சுவரில் எதுவும் பொருத்தவில்லை. உங்களிடம் இல்லையெனில், எனது புகைப்படங்களிலிருந்து ஒன்றையோ இரண்டையோ கொடுக்கவா?”
“ஓஹ். அது அவருடைய சுவர். ஏன் அவருடைய சுவருக்குள் நீ தலையிடுகிறாய்?” நானாவின் பாவனைகளின் மீது கண் பதித்துக்கொண்டே ஜோஷி இதைச் சொன்னார்.
இதைச் சொன்னபடியே அவர் குளிக்கச் சென்றார், நானாவும் அங்கிருந்து விலகி வெளியே சென்றார். நானா இப்பிரச்சனையிலிருந்து தப்பிக்கப் பார்க்கிறார் எனும் எண்ணத்துடன் மற்றவர்கள் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
குளியலறையில் இப்போது கூட்டமில்லை. நானா குளித்துவிட்டுத் தனது ஆடைகளைத் துவைத்து, அவைகளை உலர்த்திவிட்டு வெய்யிலில் காய வைத்தார். அவர் அறைக்குத் திரும்பியபோது மற்ற மூவரும் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தார்கள். நானாவைப் பார்த்ததும் தங்களுக்குள் பேசுவதை நிறுத்திவிட்டு அவரிடத்தில், “குளித்துவிட்டீர்களா? நாங்களும் குளித்துவிட்டு வருகிறோம். மேதேக்கர், உங்கள் ஆடைகளை அப்படியே குளியலறையில் வைத்துவிடுங்கள், அவைகளைத் துவைக்கச் சிலர் வருகிறார்கள்” என்றனர்.
மூவரும் குளியலை முடித்துவிட்டுத் திரும்பும்போது, சவந்தும் ரசலும் பட்டுடையை அணிந்திருக்க, ஜோஷி தனது புனித பூணூலை வருடியபடியே பஜனைகளை முணுமுணுத்துக் கொண்டிருந்தார். மூவரும் தங்களுக்குரிய சுவர்களைப் பார்த்தபடியே தங்கள் பூஜைக்குரிய சடங்குகளை முடித்தார்கள். அதன்பிறகு, தனது உடையை அணிந்துகொண்டு ஜோஷி, “இங்கு வந்ததிலிருந்தே என்னால் செய்ய முடிகின்ற எனது விருப்பச் செயல் என்றால், அது இந்தப் பூஜை மட்டும்தான். உங்களைப் பற்றி என்ன மேதேக்கர்? மன அமைதிக்கும் வேறு விஷயங்களுக்கும்..? நீங்கள் என்ன படிப்பீர்கள்?”
மூவரும் ஆர்வத்துடன் நானாவின் கையிலிருந்த புத்தகத்தை எட்டிப் பார்த்தார்கள். புத்தகத்தை மூடிய நானா, “வாருங்கள், நமது கைவினைக்கான நேரம் இது..” என்றார்.
“ஆனால் புத்தகம்..” என்று வினவிய அவர்களுடைய முகம் ஆர்வத்தில் துளிர்த்திருந்தது. நானா அந்தப் புத்தகத்தை அவர்களிடம் காட்டினார், “உடல் ஆரோக்கியத்திற்கான உங்கள் கையேடு. நீங்கள் இதை வாசிக்க வேண்டும்”. விரைவாக அவர்கள் தயாராகி வராண்டாவுக்குச் சென்றார்கள்.
முந்தைய தினம் அங்கு வந்திருந்த தேனை பொட்டலம் கட்டும் பணி அவ்விடத்தில் நடந்தது. முதிய மனிதர்கள் தேனை அளவிடுவது, பாட்டில்களில் அதை ஊற்றுவது, அதன் மீது லேபிள்களை ஒட்டுவது, முத்திரையிடுவது போன்ற செயல்களில் சுறுசுறுப்பாக இயங்கினார்கள்.
நானாவுக்கு இவ்வேலைகள் மிகவும் பிடித்திருந்ததால், தனது தோழர்களுடன் வேலையில் ஈடுபட முன்வந்தார். “இவர்தான் இவ்விடத்திற்கு நேற்று வந்தவர் இல்லையா?” என்று சிரித்த முகத்துடன் சொல்லியபடியே நானாவை வரவேற்றார்கள். கனத்த கண்ணாடியொன்றை அணிந்திருந்த பள்ளியைச் சேர்ந்த ஒருவன், அவன் அங்கு பட்டியலில் பெயர் எழுதிக்கொண்டு இருந்தான், நானாவைப் பார்த்து, “உன் பெயர் என்ன?” என்றான்.
“மேதேக்கர்”
“மேதேக்கர்.. என்றால் யார்..?”
நானா அமைதியாக இருந்தார். கேள்வி கேட்டவர் நானாவின் தோழர்களைப் பார்த்தார். அவர்கள் சுருங்கியபடியும் ஒருவருக்கொருவர் முணுமுணுத்தபடியும், “ஒருவேளை அவர் தீண்டத்தகாதவராக இருக்கலாம்” என்றனர்.
“ஓஹ்.. எவ்வாறு அந்த லேபிள்கள் சிக்கிக்கொண்டன” யாரோ ஒருவர் எதிர்ப்பு தெரிவிக்கும் குரலில் சொன்னார்.
மதியத்தில் மீண்டும் அனைவரும் பொது மண்டபத்தில் ஒன்று கூடினார்கள். அங்கு பல ஆண்கள் இருந்தனர். ஒருவரோ இருவருமோ மட்டுமே பெண். சில முதியவர்கள் தளர்ந்த நிலையில், கூன் விழுந்தபடி, பிறிதொருவரின் உதவியால் மட்டுமே நடக்கக்கூடியவர்களாகத் தென்பட்டார்கள்.
சாப்பிடும்போது சவந்த் நானாவிடம், “கடவுள் நம்பிக்கையற்ற என்னுடைய நண்பனொருவனைப் பற்றிய கதையைச் சொல்கிறேன். நான் அவனிடம் நாத்திகவாதியாக இருப்பது ஒரு நன்மையையும் விளைவிக்காது. நீ அதற்காக வருந்த வேண்டியிருக்கும். மனிதர்கள் முதலில் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும். அதன்பிறகுதான் அதைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் எனக் கருத்துரைக்க வேண்டும். ஏதோவொரு கடவுளின் புகைப்படத்தை எதிரில் வைத்துக்கொண்டு தியானத்தில் ஈடுபடு, அடுத்த சில நாட்களில் என்னவிதமான அனுபவம் கிடைக்கிறது என்று பார். எதுவும் நடக்கவில்லை என்றாலும் உனது முதிய வயதுக்கு அது உறுதுணையாகவாவது இருக்கும் என்று சொன்னேன்” என்றார்
“அதன்பிறகு என்ன நடந்தது?” ரசல் ஆர்வத்துடன் கேட்டார்.
“அவர் எனது வார்த்தைகளை வெறுமனே பின்பற்றினார். இப்போது அவர் தீவிர பக்தராக இருக்கிறார்”
“சரி இந்தக் கதையை ஏன் மேதேக்கரிடம் சொல்கிறாய்?” என்றார் ஜோஷி.
“எதுவுமில்லை என்றாலும், அவர் அதை முயன்று பார்க்கவேண்டும்”
“சரி எப்போதிலிருந்து மேதேக்கர் நாத்திகர் ஆனார்? ஏன் மேதேக்கர்?”
“பாருங்கள் நண்பர்களே, நான் ஆத்திகனா அல்லது நாத்திகனா என்று எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்ததெல்லாம் எவ்வித ஆதரவோ மூலாதாரமோ இல்லாமல் என்னால் கட்டுப்படுத்த முடியாத ஒரு சூழலில் மரணக் கதவின் முன்னால் தொங்கவிடப்பட்டிருக்கிறேன் என்பது மட்டும்தான். இதைச் சொல்லி முடித்ததும் மன வேதனையுற்று எழுந்து தனது அறைக்குத் திரும்பினார். எல்லோரும் தனது சாதியைக் கண்டுபிடிக்க மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர் என்பது அவருக்குத் தெரியும். கேள்விகள் கேட்கப்படும்போதெல்லாம், அவரது சாதியைக் கண்டடைந்தால் என்னவிதமான எதிர்வினைகள் உண்டாகும் என்பதை அவர் அறிந்தே வைத்திருந்தார். அங்கு நிலவும் வழக்கத்துக்கு மாறான பதற்றத்தை உணர்ந்தவராக எப்போதும் எளிதில் உடல்நலம் பாதிக்கக்கூடியவராகவே அவரிருந்தார்.
நீண்ட நேரத்துக்குப் பிறகு அவருடைய தோழர்கள் அறைக்குத் திரும்ப, அவர்களில் ஒருவர் “மேதேக்கர் யாரோ ஒருவர் நகரத்துக்குச் செல்லவிருக்கிறார். உனக்கு ஏதேனும் வேண்டுமா? அதாவது புகைப்படங்களோ? வேறெதுவோ?” என்றார்.
நானா தனது சுவரை தலையுயர்த்திப் பார்த்துவிட்டு, வேண்டாமெனத் தலையசைத்தார். மூவருடைய புருவங்களும் உயர்ந்தன. மேலாளர் சில காகிதங்களுடன் உள்ளே நுழைந்து, “மேதேக்கர் பூஜைக்கான ஐம்பது ரூபாயை இன்னும் நீங்கள் கொடுக்கவில்லை. இப்போது உங்களால் அதைக் கொடுக்க முடியுமா?” என்றார். நானா அமர்ந்தபடியே மெதுவாக, “ஆனால் இந்தப் பங்களிப்பு தானாக முன்வந்து கொடுப்பது என்று நினைத்தேன்” என்றார்.
”விதிமுறைகளின்படி இது கட்டாயமானது”
“இருக்கலாம். ஆனால் விதிமுறைகள் அனைவரும் கருத்தில் கொண்டல்லவா உருவாக்கப்பட வேண்டும்?”
“மேதேக்கர், விதிமுறைகளை நீங்கள் கவனமாகப் படிக்கவில்லை என்பதைப் போலத் தெரிகிறது, இந்தப் பணத்திலிருந்து எதுவெல்லாம் மிச்சமாகிறதோ அதெல்லாம் கோவில்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும், அப்படியொரு பரிசளிப்பை நீங்கள் எப்படித் தவிர்க்க முடியும்?”
“ஒட்டுமொத்த விதிகளுமே தன்னார்வமாக வந்து கொடுப்பவர்களுக்கானதாக இருக்க வேண்டும் என்று சொல்கிறேன்”
“சரி. நான் அறங்காவலர்களிடம் தெரிவிக்கிறேன். பிற விதிகளிலும் எல்லோரையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்தான்” இதோடு சலித்துக்கொண்டே மேலாளர் அறையிலிருந்து வெளியேறினார். சிறிது நேரத்திற்குப் பிறகு, தேநீர் வந்தது. அதன்பிறகு நானாவின் அறைத் தோழர்கள் உடைகளை மாற்றிக்கொண்டு வெளியே சென்றனர்.
தனது தோழர்களுடைய மெளனம் நானாவை சற்றே அசெளகர்யமாக உணரச் செய்தது. அறையில் தான் மட்டுமே தனித்திருப்பதை நானா விரும்பவில்லை. அதனால் அவரும் உடைகளை அணிந்துகொண்டு அறையிலிருந்து வெளியேறினார். வராண்டாவுக்கு அவர் வந்தபோது, தனது அறைத் தோழர்கள் அலுவலகத்திலிருந்து வெளியே வருவதை அவரால் பார்க்க முடிந்தது. நானாவை அவர்கள் பார்த்தார்களென்றாலும், அவரைப் புறக்கணித்துக் கடந்த சென்றார்கள்.
நானா நுழைவாயிலுக்கு அருகில் சென்றார். வெளியிலிருந்து வந்த காற்றின் தழுவல் அவரை சுகமாக உணரச் செய்தது. திறந்த வெளியில் ஆஸ்ரமத்தைச் சேர்ந்த முதிய மனிதர்கள் கதைபேசிக்கொண்டு அமர்ந்திருந்தனர். குன்றின் மற்றொருபுறத்தில் தொழுவத்தின் அருகில் சில சிறுவர்கள் அங்குமிங்குமென ஓடித் திரிந்தார்கள். நானா தொடர்ந்து நடந்தார். ஆஸ்ரமத்திலிருந்து வெளியேறி.
அவர் திரும்பி வந்தபோது பொது மண்டபத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த பிரார்த்தனையின் முணுமுணுப்புகள் அவருக்குக் கேட்டன. தனது கைகளையும் கால்களையும் கழுவிவிட்டு, தனது அறைக்குள் நுழைந்து படுக்கையில் அமர்ந்து கடவுளின் படங்களையுடைய மூன்று சுவர்களையும் பார்த்தார். தனது வெற்று சுவரைப் பார்த்ததும், மாற்றத்தின் விழாவில் தான் எடுத்துக்கொண்ட இருபத்தி மூன்று சபதங்கள் அவருக்கு நினைவுக்கு வந்தன.
பிரார்த்தனை முடிவடைந்ததும் மூவரும் திரும்பி வந்து தத்தமது படுக்கைகளில் அமர்ந்தார்கள். நானா அவர்களுடைய முகங்களை ஒவ்வொன்றாக மாறி மாறி பார்த்தார். அவர்கள் தன்னைப் பார்த்துச் சிரிக்கக்கூடும் அல்லது ஏதேனும் பேசக்கூடும் என நினைத்தார், ஆனால் அவர்கள் வெறுமனே அமைதியாக மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருந்தனர். அதன்பிறகு பால் வந்தது, மூவரும் சிந்தனையில் ஆழ்ந்தவர்களாகக் காணப்பட்டார்கள். நானாவும் தன்னுடைய புத்தகத்தைக் கையிலெடுத்தார்.
காலையில் அவர் கண்விழித்தபோது இருவர் ஏற்கெனவே குளித்து முடித்திருந்தார்கள், ரசல் மட்டும் சவரம் செய்துகொண்டிருந்தார். நானா துணிகளையும் துண்டையும் எடுத்துக்கொண்டு குளிப்பதற்காகச் செல்லும்போது, விரைந்து வெளியே வந்த ஜோஷி, “மேதேக்கர் ஒரு நிமிஷம். எனது பூஜை துணிகளைக் குளியலறையிலேயே வைத்துவிட்டேன். நான் அதை எடுத்துக்கொண்டு வந்துவிடுகிறேன்” என்றார்.
அவருக்குப் பின்னாலேயே வந்த ரசலும், “நான் முதலில் குளித்துவிடுகிறேன், அதன்பிறகு நீங்கள் போய் குளிக்கலாம்” என்று தெரிவித்தார்.
அதற்கும் மேலும் யாரும் தன்னைப் பிடித்து நிறுத்த வேண்டாம் எனக் கருதியதால் அனைவருக்கும் பிறகு கடைசியாக அவர் குளித்தார். அப்போதும்கூட யாரோ ஒருவர் அவரிடத்தில், “நானா ஈரத் துணிகளைக் குளியலறையில் வைக்காதே” என்றார்கள். நானாவுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. குளியலுக்குப் பிறகு அவர் வராண்டாவுக்குச் சென்றார். இரண்டோ மூன்றோ நபர்கள் மட்டுமே அவரைப் பார்த்துத் தோழமையுடன் தலையசைத்தார்கள்.
மதிய உணவுக்காக நானா பொது மண்டபத்துக்குச் சென்றார். உள்ளே அவரது அறை தோழர்கள் அமர்ந்திருப்பதை அவரால் பார்க்க முடிந்தது. நானாவைப் பார்த்ததும் அவர்கள் சிரிப்பதாகத் தோன்றியது, எனினும் உடனடியாக அவரைத் தவிர்த்துவிட்டு தங்களுக்குள் பேசிக்கொள்ளத் துவங்கினார்கள். கதவுக்கருகில் இருந்த மேசையிலிருந்து தனது உணவை எடுக்க நானா சென்றபோது அங்கு நடைபெற்றுக்கொண்டிருந்த ஓர் உரைடாலை அவரால் கேட்க முடிந்தது. “ஆமாம். ஆமாம். அப்படித்தான் அவர் நடந்துகொள்ள வேண்டும். அவருக்கான இடத்தை காட்டியாக வேண்டும். அதோடு ஒவ்வொரு இடத்திலும் ஒரு நிறுத்தற்குறி இருக்கிறதுதான், அதனால் என்ன? உண்மையில் நாம்தான் அவமானப்படுத்தப்படுகிறோம்”
“ஆனால் நான் சொல்கிறேன், அது உண்மையென்றால் மேலாளர் எவ்வாறு இவரை உள்ளே சேர்த்துக்கொண்டார்?”
“ஏனெனில், இந்த ஆஸ்ரமம் எல்லோருக்கும் திறந்திருக்கிறது. அதனால்தான்”
“ஓஹ். அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்…”
“கேட்கட்டும். நமக்கு என்ன சொல்ல இருக்கிறதோ, அதை நாம் சொல்வோம்”
“அவர்களுடைய வருகையால் எல்லா இடங்களிலும் நாம் துயரத்தை அனுபவிக்கிறோம்”
“அப்படியே இருக்கட்டும், அவர் இங்கிருக்கிறார், எதற்கு இந்த விவாதம்?” பின்னாலிருந்து வந்த யாரோ ஒரு புரிந்துகொண்ட மனிதரின் குரல் இது.
”அவர் தனது வாழ்நாள் முழுக்க தூய்மைக் கேடால் பாதிக்கப்பட்டிருக்கும்போது, அவர் ஏன் இங்கிருக்கிறார்?” இது மற்றொரு முதிய மனிதரின் புகார் குரல்.
“ஓஹ் இது எங்கு முடிவடையும், மரணிப்பதிலும் தூய்மைக் கேடு இருக்கத்தான் செய்கிறது” இது இரண்டாவது மனிதரின் பதிலளிப்பு குரல்.
நானாவால் இப்படி நினைக்காமல் இருக்க முடியவில்லை. வெளியில் அவருடைய குடும்பம் அவரை எதிர்க்கிறது. இங்கே உள்ளேயும் அவர் எதிர்க்கப்படுகிறார், வாழ்வதென்பது கடினமானதே. வெளியில் வேறு ஏதேனுமொரு இடத்தைக் கண்டுபிடித்தாக வேண்டும். அவர் இங்கிருந்து வெளியேறிச் செல்ல வேண்டும். ஆனாலும் அவர் எங்கே செல்வார்? இதுதான் அவர் முன்னால் எழுந்திருந்த பிரச்சனை. அவர் கவலையால் நிரம்பியிருந்தார்.
நான்கைந்து தினங்கள் இதே ஒடுக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலேயே நானாவுக்கு கடந்து சென்றது. அதன்பிறகு ஒருநாள் மதியநேரத்தில் இரும்புக் கதவு திறக்கும் ஓசையும், “ஓஹ், பாண்டூரங், பாண்டூரங்கன் மேதேக்கர் எங்கே இருக்கிறார்? அவருடைய அறை எங்குள்ளது?” எனும் உறுதியான குரலும் வெளிப்பட்டது. அனைத்து அறைகளுக்கு வெளியிலும் தலைகள் தென்படலாயின. வராண்டாவில் ஓர் எண்பது வயது முதியவரும், கரும்பைப் போன்ற உறுதியுடனும் துணிச்சலுடன் காணப்பட்ட ஒரு முதிய விவசாயப் பெண்ணும் நின்றிருந்தார்கள். அவள் அணிந்திருந்த கருஞ்சிவப்பு நிற பார்டர்களைக் கொண்ட புடவை அவளது தலையையும் போர்த்தி மூடியிருக்க, அவளது தோள்களின் மீது ஒரு சால்வையும், கைகளுக்குக் கீழே ஒரு பொட்டலம் இருக்க, கையில் ஒரு குச்சியைப் பிடித்திருந்தாள். தனது உடலிலிருந்து வழிந்துருளும் வியர்வையைத் தனது புடவையின் ஒரு முனையால் துடைத்தபடியே தேடும் பார்வையுடன் அங்குமிங்கும் பார்த்துக்கொண்டிருந்தாள்.
நானா இந்தக் குரலைக் கேட்டதும், அது தன்னுடைய அத்தையினுடையது என்பதை உணர்ந்து அதிர்ச்சி அடைந்தார். அவள் எப்படி இங்கு வந்தாள்? விரைந்து அறையிலிருந்து வெளியேறினார் நானா.
நானாவைப் பார்த்ததும், அவளுடைய பாசம் வெடித்தெழுந்தது. “முதியவனே, எனது குழந்தாய்..” என அவள் கூச்சலிட்டாள்.
நானாவின் முதுகை வருடியபடி அழுதுகொண்டே அந்த முதிய பெண், “மனோகர் என்னைக் காண வந்தார். உன்னுடைய பிள்ளைகள் உன்னை வெளியில் தூக்கி எறிந்துவிட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார். அதைக் கேட்டதும் கவலை என்னைச் சூழ்ந்துகொண்டு எனது குழந்தாய்”. அதன்பிறகு திடீரெனக் கோபப்பட்டு, “வெளியேறியபோது நீ என்னைப் பற்றி நினைக்கவில்லையா? நீ நிலத்தை விற்றாயோ இல்லையோ? உனது சகோதரர் கிராமத்தில் இருக்கிறார். உனது மதினி அங்கிருக்கிறாள். நான் உன் அத்தை இல்லையா? பிறகு ஏன் நீ அங்கு வீட்டிற்கு வரவில்லை? ஏன்? என்னிடம் சொல்?”
முதியவள் எல்லை மீறி உணர்ச்சிவயப்பட்டவளாகப் பேசினாள். நானா அவளைத் தடுத்து தனது அறைக்குள் கூட்டிச் சென்றார். “ஓஹ்… பாண்டூரங்கன். நீ சமூகத்திற்கு ஐம்பதாயிரம் ரூபாய் நன்கொடை அளித்து பெரும் சமூக சேவகராக நிலைபெற்றிருக்கிறாய் என்பதை அறிந்தேன். என்னவிதமான சமூகப் பணி நீ செய்கிறாய், பாபா? என் பேச்சைக் கேள், என்னுடன் கிராமத்திற்கு வா, சமூகத்திற்கு நீ என்ன செய்ய விரும்புகிறாயோ அதை அங்கு வந்து செய்”. பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு சிறிய பையை எடுத்து அதிலிருந்து நீல நிறத் துண்டு பிரசுரம் ஒன்றை வெளியில் எடுத்தாள். நானாவிடம் அதைக் கொடுத்துவிட்டு, “இதைப் பார். நமது கிராமத்தில் ஒரு மழலையர் பள்ளியைத் துவங்கவிருக்கிறோம். அதுவொரு பெரிய திட்டப் பணி. உனது பெயரை அதனுடைய பிரசிடெண்ட் என நாங்கள் போடுவோம். பார்” என்றாள்.
நானா அந்த துண்டுப் பிரசுரத்தைத் தனது கையில் எடுத்துப் பார்த்தார். மழலையர் பள்ளியின் துவக்க விழா குறித்த அழைப்பிதழ் பகுதியின் ஒருமுனையில் மகாத்மா பூலேயின் புகைப்படமும், வலதுபுறத்தில் பாபாசாகேப் அம்பேத்கரின் புகைப்படமும், இருவருக்கும் நடுவில் புத்தபிரானின் புகைப்படமும் அச்சிடப்பட்டிருந்தது. அதற்குக் கீழே தகவல்கள் இருந்தன. “ஏன் அவ்வாறு பார்க்கிறாய்? ஒரு ரூபாய் கூட கொடுக்க வேண்டாம். உனது அறிவின் சில துளிகளைப் பிள்ளைகளுக்குக் கொடு. அவர்களுக்குக் கல்வி புகட்டு. அவர்களுக்கு ஞானமூட்டு” இவ்வாறு சொன்ன முதியவள் கட்டிலின் கீழேயிருந்து நானாவின் பையைப் பிடித்து வெளியே இழுத்தாள்.
அந்த முதிய பெண்ணின் நாடகீகமான உள்நுழைவும், அவளுடைய உயர் குரலும், எதனையும் மதிக்காத அவளுடைய குணவியல்புகளும் ஆஸ்ரமத்தில் இருந்த அனைவரையும் பேச்சிழக்கச் செய்தன. நானா, அந்தக் கல்வியறிவற்ற வெகுளியான பெண்ணின் பரந்த மனப்பான்மையை நினைத்து நிலை தடுமாறினார். அவருடைய சிந்தனைகள் முன்னால் ஓடின. அவளைப் பற்றி ஒரு வார்த்தைகூட நான் விசாரித்ததில்லை, அவளுக்கு இரண்டு ரூபாய்கூட கொடுத்ததில்லை. என்னுடைய நலன் சார்ந்து அவள் பேசியபோதும்கூட அவளிடம் திமிராகவே பேசியிருக்கிறேன். ஆனால் அவள்தான், கையில் பணமேதுமில்லாத நிலையிலும், அவள் மட்டும்தான் என்னைப் பார்க்க வந்திருக்கிறாள். “அத்தை, உண்மையிலேயே நீ மிகச் சிறந்தவள்”. வெடித்தழுதபடியே அவளருகில் குனிந்த நானா, “அத்தை, உன்னுடைய மதிப்பை ஒருபோதும் நான் உணர்ந்திருக்கவில்லை. என்னை மன்னித்து விடு. நான் தவறாக நினைத்துக் கொண்டிருந்தேன். நான் குழப்பமுற்றிருந்தேன். ஆனால், இன்று எனது பாதையை நான் பார்த்துவிட்டேன். அந்தப் பாதையில் நான் பயணிக்கிறேன். ஆனால் அத்தை, என்னை மன்னித்து விடுங்கள். நமது வீடு… என்னால் கிராமத்திற்கு இனி வர முடியாது. மிக நீண்ட காலத்திற்கு முன்பாகவே நான் அதைத் தொலைத்துவிட்டேன்” என்றார்.
அதன்பிறகு, கைகளைக் கட்டியபடி அங்குச் சுற்றி நின்றிருந்த அனைவரையும் பார்த்தபடி, “நண்பர்களே, நான் வீடற்ற முதியவன். ஆதரவைத் தேடியே நான் இங்கு வந்தேன். ஆனால், இங்கு வந்த பிறகுதான் எனக்குப் புரிந்தது, நான் தவறான பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். நண்பர்களே, என்னால் ஏற்பட்ட அசெளகர்யமான சூழலுக்காக வருந்துகிறேன், என்னை மன்னித்து விடுங்கள்” என்றார் நானா.
தனது அறை தோழர்கள் மூவரின் பக்கம் திரும்பிய நானா, “நண்பர்களே, நீங்கள் என்னிடம் தெரிவித்த பரிசோதனையை நினைவில் வைத்திருக்கிறீர்களா? கடவுளின் படத்தை எதிரில் வைத்துக்கொண்டு தியானத்தில் ஈடுபடுவது. நான் அந்தப் பரிசோதனையைச் செய்து பார்த்தேன், மேலும் எது குறித்த அறிதல் எனக்குக் கிடைத்ததென உங்களிடம் சொல்ல வேண்டுமா? இது எனது உடல் எனும் அறிதல்தான் எனக்கு ஏற்பட்டது. புகைப்படத்தின் மீது நிலைபெற்றிருக்கும் எனது பார்வை சிறப்பானதுதான். எனது ஞாபகங்கள் இன்னமும் சிறப்பாக இருப்பதையும், என்னால் தெளிவாகக் கேட்க முடிவதையும் உணர முடிந்ததோடு, எனக்குள் பாய்ந்தோடும் ரத்தம் நான் முழுமையாகவும் செயல்படக்கூடிய திறனுடனும் இருக்கிறேன் என்கிற அறிதலைக் கொடுத்தது”.
“நண்பர்களே, நான் உங்களுக்கு நன்றிக்கடன் பெற்றிருக்கிறேன். எனது உடல் இன்னமும் தேய்ந்தழியவில்லை என்பதை உங்களால்தான் என்னால் உணர முடிந்தது. என்னால் இன்னமும் பல வேலைகளைச் செய்ய முடியும். இன்றிலிருந்து சாகும் வரையிலும் பிறருக்காக எனது உடலைப் பயன்படுத்துவது என்று தீர்மானித்திருக்கிறேன். அதுவே போதுமானது”
சில கணங்களுக்கு அமைதியுடன் இருந்துவிட்டு தனது சுவரைப் பார்த்துவிட்டு நானா, “நண்பர்களே, நான் இங்கு வந்ததிலிருந்து அவ்வப்போது ஒரு முக்கியமான, அதிமுக்கியமான செய்கையைச் செய்யும்படி என்னிடம் தெரிவித்தபடியே இருந்தீர்கள், அதை இன்று செய்கிறேன். யார் என்னைச் சமூக சேவை செய்யும்படி தூண்டினார்களோ அவர்களே எனது முன்மாதிரிகள். அதனால் இதை எனது நான்காவது சுவரில் பொருத்தப் போகிறேன்” என்றார்.
இதைச் சொல்லிவிட்டு, பூலே அம்பேத்கர் புத்தர் ஆகியோரின் படங்களைக் கொண்டிருந்த நீல நிற துண்டு பிரசுரத்தைக் கையிலெடுத்து அதை அந்த வெற்று சுவரில் ஒட்டினார். அதன்பிறகு தனது அத்தையின் பையைக் கையிலெடுத்தபடி சுறுசுறுப்பாக அவளுடன் சேர்ந்து அவ்வறையிலிருந்து வெளியேறினார்.
ஊர்மிளா பவார் :