மனிதன் கவிதையைத் தேடிப் போவதற்கும் கவிதை மனிதனைத் தேடித் தீண்டுவதற்கும் இடையில் பெரியதொரு வேற்றுமை இருக்கிறது. கவிதை மனிதனைத் தீண்டுவது வேதனை; மனிதனுக்கு.
முதலில் மெதுவாக, மங்கலாக, மிகவும் மங்கலாக; பின் மெல்ல மெல்ல, பனிக்காலத்து உதயம் போல, கவிதை தன்னை அவனுக்கு காட்டுகிறது; காட்டிக்காட்டி மறைகிறது. இது வேதனை. ஆனால் இந்த வேதனை தான் அசலான கவிதையைத் தோற்றுவிக்கிறது; அதனால் அசலான கவிஞனையும்.
-ஆனந்த் (கவிதை என்னும் வாள்வீச்சு)
கவிதை என்னவெல்லாம் செய்யும். கவிதை ஒருவருக்கு என்னவாகவெல்லாம் இருக்க முடியும் என்று ஒரு கேள்வி எழுப்பினால், அதற்கான பதிலாக நம் கைகளில் இருக்கிறது ஷங்கர் ராமசுப்ரமணியனின் “கல் முதலை ஆமைகள்”. அவருடைய ஐந்து தொகுதிகளின் தொகுப்பான “ஆயிரம் சந்தோஷ இலைகள்” முழுமையாக அவருடைய படைப்புலகத்தின் சித்திரத்தை அளித்தது. நகரத்திற்குள் புதிதாய் நுழைபவர்கள் எதிர்கொள்ளும் திடுக்கிடல், வியப்பு, புதிய மனிதர்கள், புதிய காட்சிகள் தரும் அனுபவங்கள், இளவயது மனம் எதிர்கொள்ள நேரிடும் சங்கடங்கள், நினைவுகளுக்குள் புதைந்திருக்கும் சொந்த ஊரின் சித்திரம், வாழ்வின் பயணத்தில் வந்து சென்ற நட்புகள் என விரியும் அவரது கவிதைகள். அவரே தனது முன்னுரையில், “ நான் பேசுவதற்கு விரும்புபவன். என் கவிதைகள் என்னைப் பேசாத இடத்துக்கு இழுத்துப் போகிறதை பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று பகிர்ந்திருந்தார். தலைப்பிரட்டைகளை மீன் கள் என நினைத்து சந்தோஷிக்கும் சிறுவனின் மனதில் இருந்து, வன்மம் அனைத்தையும் காற்றாய் நிரப்பி பலூனில் கோடரி செய்ய விரும்பும் இளைஞனின் உணர்வும், சிங்கத்திற்கு பல் துலக்க வேண்டிய நிர்ப்பந்தம் உடைய கவிஞனின் பணியிடமும், காமத்தின் பகடையாட்டத்தின் அலைவுறும் மனமும் நிரம்பியவை அக்கவிதைகள். நகுலனின் ஸ்டேஷன் கவிதையை நினைவுறுத்தும் வேறொரு ஸ்டேஷன் இதில் புதிர்ச்சித்திரமாகப் பதிவானது. கொக்கும் காகமும் நித்யவனத்தினுள் ஜோடியாய் பறந்த சித்திரம் தான் கல்முதலை ஆமைகளுக்கான விதையாக இருந்திருக்க வேண்டும்.
2016 ல் வெளியான ஞாபகசீதா ஒளி மிகுந்த காற்றோட்டமான வீட்டினுள் புழங்கும் நிறைவினை அளித்தது. புறாக்களும் காகங்களும் பறந்து திரியும், ஆயிரம் சந்தோஷ இலைகள் கொண்ட அரசமரம் தெரியும் பால்கனி உள்ளதொரு வீடு.
க்ரியாவின் வெளியீடாக வந்துள்ள கல் முதலை ஆமைகள் ஷங்கர் ராமசுப்ரமணியனின் சமீபத்திய கவிதைத் தொகுப்பு. தொலைவதை ஏற்பதற்கு, தொலைவதன் ரகசியம் முன்னால் மண்டியிட்டு அதை ஏற்றுக் கடந்து செல்வதற்கு, நான் கற்றுக் கொண்டு வரும் பாடங்களின் தடயங்கள் தான் இந்தத் தொகுப்பில் உள்ள எனது கவிதைகள் என்று முன்னுரையில் ஷங்கர் கூறுகிறார். ஆனந்த் அவர்களின் குறிப்புகள், ஷங்கரின் கவிதைகளுக்கு கூடுதல் வெளிச்சத்தை அளிக்கின்றன.
“ரொம்ப காலத்துக்குப் பிறகு
நீலவானம்
அதன் பளீர் வெளிச்சத்தை
இன்று பார்க்கக் கிடைக்கிறது
இன்று
இளநீராக இப்பொழுது தித்திக்கத்
துவங்கியிருக்கிறது”
என்பதில் நீண்ட பயணத்திற்கு பின் ஏற்படும் அகத்தின் தெளிவு தெரிகிறது. ஷங்கரின் மன அதிர்வுகளின் பிரதிபிம்பமாக, தோழமைக்கரம் கொடுப்பவையாக வரும் நாய்கள் மற்றும் பூனைகள் அவரின் பிரத்யேக உலகின் பிரஜைகள். பிரியமான ப்ரவுனி சூரியனிலிருந்து இறங்கி வருவதை தரிசனமாக உணரும் தருணம், சின்னஞ்சிறு நாய்க்குட்டியின் காதுமடல்களை இலைகளாய், புல்லாய், பறவையின் மேனிச் சிலிர்ப்பாய் உணரும் நிகழ்முறை, ரமணரின் புகைப்படத்தில் அபூர்வமாய் இடம் பிடித்த முயல்,மியாவ்களின் அர்த்தத்திற்குள் வாழ்க்கை அடங்கியிருப்பதன் சிறு ரகசியம் என ஷங்கரின் அறிதல்கள் சின்னஞ்சிறு உயிர்களின் இயக்கத்தில் நிகழ்ந்திருக்கிறது.
முதல் அமுது தருபவளின் தவறான பெருமிதத்தை சற்றே உயரத்தில் நின்று பார்க்கும் மனமும், உழைத்துக் களைத்தவனின் பசியாறும் சத்தம் இவ்வுலகின் “ஆதிதாளமென” உணரும் மனமும் குழந்தையுள்ளமும் ஞானியின் சிரிப்பும் ஒருங்கே கொண்டிருக்கும் கவிமனம். சங்குபுஷ்பத்திற்குள் இருப்பும் இருப்பின்மையும் மாறி மாறி காட்சியளிப்பது, கோதை கவிதையில் நாகதீபங்கள் ஆடுவதைப் போன்று புலப்படுகிறது.
பால் அற்ற எருமை ஷங்கரின் உலகத்தின் “புதிய பிரஜை”. நீலமிருதுவின் வெளிப்பாடு புதுக்குழந்தையை கன்னத்தோடு கன்னம் ஒட்டும் உணர்வு.
“கடலின் காதல் சுவடுகளும்
உனது முதுகில் அழகிய சமச்சீர் வரிகளாக
பறவை மூக்கென இறங்கிக் குழிந்துள்ளன”
என, கடற்கரையில் ஒதுங்கிய சிப்பியிடமும் உரையாடும் மனம் ஷங்கருடையது. நாம் எல்லோருமே ஏதோ ஒரு கணத்தில், கடலின் விருப்பத்திலிருந்தும் விலகி, உலகின் விருப்பத்துக்கு வீசப்பட்டு வெயிலில் ஒப்புக்கொடுத்து யாருக்காகவோ எதற்காகவோ காத்திருக்கும் புனிதச்சிப்பிகள் தானே.
“ஆனந்தா என்றேன்
பிறந்தவையும் ஆம் என்றன
இன்னும் பிறக்காதவையும்
ஆம் ஆம்
என்கின்றன.”
அறிதலின் ஒவ்வொரு கணமும் ஆசிர்வதிக்கப்பட்டவையே. அறிதலின் பயணம் “புனிதப் பயணம்” தான். ஷங்கர் ஆசிர்வதிக்கப்பட்டவர்.
கவிதை ஒருவரின் அகத்தின் அதிர்வுகளைப் பதிவு செய்வது மட்டுமல்ல, மாறாக தான் சந்தித்தவைகளின் வழி, கற்றுக் கொண்ட பாடங்களின் வழி தன்னைத்தானே வேறொரு நபராக உணர்ந்தறிதலும் கூட. தொலைந்த நிகழ்வுகள், தொலைந்த கணங்கள் என் உடல்மேல் ஏவிக்குதறும் வேளையில் தற்கணங்களை, இவ்வேளையின் காட்சிகளை, நிலப்பரப்புகளை, விலங்குகளை, அழகை, நேசத்தை நோக்கிச் செல்ல விழையும் கவிதைகள் இவை. என்று ஷங்கர் கூறுவதை,
“யாராவது என்னை லேசாக விரலால் தொட்டால்
போதும்,
எனக்குள்
சுடர்கிறது ஒரு பொற்கணம்
இப்போது நான் அணிந்திருக்கும்
பழய ஆடைகளுக்குள்
ஏமாறுவதற்கு யாரும் இல்லை”
என்ற தேவதச்சனின் கவிதையோடு பொருத்திப் பார்க்கலாம்.
நகுலனின் மழை, மரம்,காற்று கவிதை தனக்குள்ளான ஒரு சீராய்வை, உணர்வுகளின் பரிசீலனையை வெளிப்படுத்தும்.
“நான் சற்றே சாய்வான
நாற்காலியிலிருந்து
விடுபடுகிறேன்”
என்று அக்கவிதையில் நகுலனின் சொற்கள் வெளிப்படுத்தும் ஒரு விடுதல் உணர்வு
“அவன் காவலர்களுடன் சென்ற போது
அவனது ஜீன்ஸுக்குள் பிதுங்கி ஆடிய
யானைப்புட்டங்கள் எனக்கு
விடுதலையின் சந்தோஷத்தை அளித்தது’
என்பதில் ஷங்கரின் சொற்களிலும் வெளிப்படுகிறது.
“காற்றில் அவன் பறப்பான்
ரயிலும் பறக்கும்
பழைய நினைவைப் புதுப்பித்து
குரங்கும் பறந்து
காணாமல் போகும்.
போகட்டுமே”
என்ற கூறு முறையில்,
ஆனந்தின்
ஒரு இலை உதிர்வதால்
மரத்துக்கு ஒன்றுமில்லை
ஒரு மரம் படுவதால்
பூமிக்கு ஒன்றுமில்லை
ஒரு பூமி அழிவதால்
பிரபஞ்சத்துக்கு ஒன்றுமில்லை
ஒரு பிரபஞ்சம்
போவதால்
எனக்கு ஒன்றுமில்லை
என்று தொனிக்கிறது.
பயணம் மேற்கொள்வதும், உரையாடுவதும் அவரவருக்கான தனிப்பட்ட தேடலின் தேவையில் இருந்து உதிப்பது தானே. தங்களுடைய வாழ்வனுபவங்களிலிருந்து தங்களின் தேடலுக்கான விடையைக் கண்டடைந்தவர்கள் உள்ளே சுடரும் ஒளி கொண்டவர்களாகிறார்கள்.
“தெரியாததற்கு முன் தண்டனிடு சங்கரா
தெரியாததற்குள்
உன் ஆசைகளையும் நினைவுகளையும்
அள்ளியள்ளி இடு”
என்று தன்னை கவிதைக்கு ஒப்புக் கொடுக்கும் மனநிலை ஷங்கரிடம் இருக்கிறது. அதுவே தனித்துவமாக மிளிர்கிறது. ரமணர் காட்டிய அஷ்டாவக்கிரரை, காகங்கள், நாய் மற்றும் தெருவில் நடந்த கிழவியிடம் தரிசிக்கும் பார்வை கிடைக்கப் பெற்றிருக்கிறது. அஷ்டாவக்கிர கீதையைப் பற்றிக் குறிப்பிடும் போது, “அது தூய்மையான மறைநூல், அதன் அழகெல்லாம் அதன் புலப்பாட்டுத் தன்மையில், அது தரும் பரவசம் மற்றும் மாசற்ற தூய்மையில் உள்ளது” என்று குறிப்பிடுகின்றனர். அந்த அழகையெல்லாம் திரட்டி, ஷங்கர் கல் முதலை ஆமைகள் தொகுதிக்குள் பொதித்திருக்கிறார்.
அது தான்
தன் ஒளிப்பூக்கொண்டையைச் சிலுப்பி
கண்கள் பறிக்க
உயிர்க்கோஷம் இடுகிறது
ஆனந்தா
நூல்: கல் முதலை ஆமைகள்
ஆசிரியர்: ஷங்கர்ராமசுப்ரமணியன்
வெளியீடு : க்ரியா பதிப்பகம்.
-ரஞ்சினி பாசு
வாசிக்கத் தூண்டடும் மிகச் சிறப்பான நூல் விமர்சனம்!