என் பெயர் கமல்நாத்.
நான் யார் என்பது உங்களுக்கு முதலில் தெரியவேண்டும். இந்தக்கதைக்கு அது முக்கியமல்ல. என்றாலும், இந்தக் கதையில் வேறெங்கும் என்னை பற்றி சொல்வது சரியாக இராது.
நீங்கள் மஹாபாரதம் படித்திருந்தீர்களானால், அதில் கர்ணன் என்றொரு கதாபாத்திரத்தை எழுபத்தி ஐந்து சதம் பரிதாபத்துடனும், பச்சாதாபத்துடனும், இருபது சதம் அலட்சியத்துடனும், எஞ்சிய ஐந்து சதத்திற்கு கையாலாகாதத்தனத்துடனும் கடந்திருக்கலாம். எனக்கும் அந்த கதாபாத்திரம் என்றால் இஷ்டம். ஏனெனில், நான் தான் அது.
அதாவது, கர்ணன் போல் நானும், சமூகத்தில் உச்சாணிப்படி நிலைகளில் வாழும் மனிதர்களின் அறிவுஜீவித்தனத்தோடும் திறமைகளோடும் தாழ்ந்த ஜாதியில் வளர நேர்ந்துவிட்ட அபலன் (அபலை என்கிற பதத்துக்கு ஆண்பதம் என்ன?). படித்திருப்பது கணிணி பொறியியல். சிறுவயதிலிருந்தே அண்ணாந்து வானத்தை நோட்டமிடுவது என்றால் இஷ்டம். ஜாதிதான் தாழ்ந்ததே ஒழிய, படிப்பில் எப்போதும் உசத்திதான் நான். கல்லூரி காலத்தில் நான் நன்கு படித்ததின் காரணமாக, என் பேராசிரியர் எனக்கு என் விருப்பமறிந்து பரிசளித்த தொலைநோக்கி என் வானியல் ஆர்வத்தை துவக்கி வைத்திருந்தது.
அமெரிக்காவின் நாசாவுக்கு இணையாக செயலாற்ற துவங்கி வருடங்கள் பலவாகிவிட்ட ஒரு தனியார் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் பல நூறு ஆராய்ச்சியாளர்களில் நானும் ஒருவன். என்னுடன் சேர்ந்தவன் பாலசுப்பிரமணி. மதிப்பெண்ணில் அவனை விட நான் மூன்று சதவிகிதம் அதிகம். அது போக தினம் தினம் உடல் வறுத்தி ஜிம்மில் உழைத்திருக்கிறேன். அதன் காரணமாய் நான் எப்போதும் சிக்கன் தம் பிரியாணி தான். ஆனால், அவன் எப்போதும் தயிர் சாதம் தான். எனக்கு நேரம் கிடைத்தால் மலையேறுவது வழக்கம். அவனும் மலை ஏறுவான், படுக்கையில் அல்லது சமயத்தில் சோபாவில் அமர்ந்தபடியே. இரவில் அவனுடன் ஒரே அறையில் தங்கி, உறங்குவதில் ஒரு லாபம் என்னவென்றால், நீங்கள் இலவசமாக தினம் தினம் கிங்காங் படத்தை 1990-களின் ரேடியோக்களில் கேட்கும் ஒரு படப்பாடல் போல கேட்கலாம். அவன் ஒரு நாள் பாடியதை மறு நாள் திருப்பிப்பாடுவதில்லை. ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக பாடுவான்.
நியாயமாகப் பார்த்தால் நிறுவனத்தின் வளர்ச்சிக்கான ஏணிப்படியில் நானே முந்தியிருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை. எங்கள் நிறுவன இயக்குனருக்கு அழகான பெண் ஒருத்தி இருக்கிறாள். பேரழகில் ரதி. பெயரும் ரதிதான். சட்டென பார்க்க நெட்டுகுத்தாக வளர்ந்திருக்கும் பனை மரம் போலிருப்பாள். ஆண்களின் இதயத்தோடு விளையாடும் அவளுக்கு டென்னிஸ் விளையாடுபவள் போன்றொரு தேகம். போதாததற்கு பரத நாட்டியம் வேறு பயின்றவள். கொள்ளை அழகு. ஆம். அவள் அழகை கொள்ளை அடித்தாவது கவர்ந்து போய்விட வேண்டுமென்று தோன்றச்செய்கிற அழகு அவளுக்கு.
வருடாந்திர கலை நிகழ்ச்சிகளில் இயக்குனருடன் பார்த்த நியாபகம். அவளுக்கு திருமண வயது வந்தபோது நிறுவனத்தில் தகுதியுள்ள மணமாகாத ஆண்கள் பட்டியலில் இரண்டே பெயர்கள் தாம் இருந்தன. ஒன்று என்னுடையது. மற்றொன்று பாலசுப்பிரமணியுடையது. எங்கள் இருவரில் நான் தான் முதன்மை. ஆயினும், அந்த ரதியை பாலசுப்பிரமணி தான் கொத்தினான். காரணம், இயக்குனரும் பாலசுப்பிரமணியும் ஒரே ஜாதி. கொத்தினதின் பலனாக, இப்போது என்னைவிட மூன்று நான்கு படிகள் மேலே போய்விட்டான். நான் பின் தங்கிவிட்டேன். நீங்கள் சொல்லலாம், குடும்ப பழக்கங்கள், வழமைகள் பாலசுப்பிரமணியுடன் தான் ஒத்துப்போகும் என்று. யாருடன் அவள் டென்னிஸ் விளையாடுவாள்? யாருடன் அவள் பரத நாட்டியம் ஆடுவாள்? என்பதெல்லாம் என் கேள்விகள். பதில்களில்லை. எப்படி இருக்கும்? என்னைப்பற்றியெல்லாம் எவனுக்கு அக்கறை?
உங்கள் வீட்டில் குளிரூட்டி இருக்கிறதா? அதை பயன்படுத்தும் போதெல்லாம் குற்ற உணர்வு வருகிறதா? குளிரூட்டியின் க்ளோரோ ஃப்ளோரோ கார்பன் ஓசோனில் ஓட்டை உருவாக்குவதாய் சொல்லியிருப்பார்களே. அதெல்லாம் சுத்தப் பொய். குளிரூட்டி பயன்படுத்த வேண்டாமென்று சொல்வதற்கு அது காரணம் அல்ல. பூமியை என்றோ ஒரு நாள் சூரியன் விழுங்க இருக்கிறது. பூமியின் சூரியனைச் சுற்றிய வட்டப்பாதையின் நீளம் குறைந்துகொண்டே வருகிறது. இப்படியே போனால், ஒரு நாள் சூரியனின் அகோர பசிக்கு பூமி இரையாகிவிடும். ஆம். பூமிக்கு காலாவதி தேதி இருக்கிறது.
ஆகையால் அவசரமாக வேறொரு கிரகம் கண்டுபிடித்தாக வேண்டிய சூழல். நான்கு ஒளியாண்டுகள் தூரத்தில் ஆல்ஃபா சென்டாரி இருக்கிறது. அங்கே ஒரு சூரியக்குடும்பத்தில் பூமியையொத்த ஒரு கிரகம் இருக்கிறது. அங்கே சென்றால் மனித குலம் பிழைக்கும். அங்கே செல்வதற்கான வழியை கண்டறிவது ஒரு நல்ல திட்டம். தேறும்பட்சத்தில் அந்த கிரகத்தில் குடியேற முதல் வாய்ப்பு கிடைக்கும். கிடைத்தால் முதல் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு ரியல் எஸ்டேட் முதல் ராயல் ஸ்காட்ச் வரை எல்லாமும் உள்ளங்கையில். அப்பனுக்கு பின் பையன், பையனுக்குப் பின் பேரன் என்று ஒரு பெரிய நீளமான மரபை உருவாக்க இயலும். ஆனால் அந்த திட்டத்தில் பாலுவுக்குத்தான் இடம். எனக்கில்லை. இயக்குனரின் மறுமகன் ஆயிற்றே.
என்னை பாவம் பார்த்து, என் நிறுவனத்தில் புதியதாக வேலைக்கு சேர்ந்த மின்மினி தன் இதயத்தில் இடம் கொடுத்தாள். மின்மினி அப்படி ஒன்றும் அழகி அல்ல. சுமார் தான். ஒரு வேளை அதனால் தான் எனக்கு அவள் மனதில் இடம் கிடைத்ததோ என்று கூட லேசாக ஒரு எண்ணம் உண்டு. அது தவறென்று இதுவரை நிரூபணமாகவில்லை. மின்மினி படிப்பில் கெட்டி. பாலசுப்பிரமணிக்கு இயக்குனரின் அண்மை கிடைத்ததில் துவங்கி ரதியும் கிடைத்துவிட, நிறுவனமே பாலசுப்பிரமணியின் பெருமை பேசிக்கிடந்ததில், மின்மினியை நான் வேலை பார்க்கும் துறையில் நான் மாற்றிக்கொண்டதை எவரும் கவனிக்கவில்லை. என்னைப்போல், புகழ் வெளிச்சத்தில் வராதவன், குறைந்தபட்சம் மனிதனாய்க்கூட பார்க்கப்படாதவன் என்ன செய்தால் என்ன? எவன் கண்டுகொள்ளப்போகிறான்? தவிரவும் மின்மினியும் பெரிய அழகி இல்லை என்பதால் எங்களை எவருமே கண்டுகொள்ளவில்லை. அநாமதேயமாக இருப்பதன் சௌகர்யங்களில் ஒன்றை பயன்படுத்திக்கொண்டேன் என்று சொல்லலாம். சரி எங்களை விடுங்கள். கதைக்கு மீள்வோம்.
மனித குலம் அந்த கிரகத்தில் பரவுவதில் நிறைய சிக்கல். முதலாவதாக தூரம். நான்கு ஒளி ஆண்டுகள். ஒளியின் வேகத்தில் பயணிக்க வேண்டும். அப்படி பயணித்தாலே நான்காண்டுகளாகும். ஹைபர்னேஷன் எனப்படும் தூக்க நிலையிலேயே பயணிக்க வேண்டும். இரண்டாவது சிக்கல் வேகம். ஒளியின் வேகத்தில் பயணிக்க இப்போதைக்கு நம்மிடம் இருக்கும் தொழில்நுட்பம் போதாது. அந்த தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்கும் பிரிவில் தான் நான் இன்னமும் குப்பை கொட்டிக்கொண்டிருக்கிறேன். ஆனால் பாலசுப்பிரமணியோ பல படிகள் முன்னே போய்விட்டான். இப்போது பாலசுப்பிரமணி இருக்கும் இடத்திற்கு நான் தகுதி ரீதியாக உத்தியோக உயர்வு பெற பத்தாண்டுகளாவது ஆகும். அதற்குள் அவன் ஆல்ஃபா சென்டாரியில் ஒரு ராக்ஃபெல்லர் ஆகிவிடுவான். அதன் பிறகு அவன் மனது வைத்தால் தான் எனக்கு விசா கிடைக்கும். இல்லையென்றால், பூமியிலேயே கிடந்து பேரன் பேத்தி எடுத்து சாகவேண்டியதுதான். எல்லாம் என் தலையெழுத்து.
நான் இப்போது உருவாக்கிக்கொண்டிருப்பது எரிபொருளின் தீவிரத்தை அதிகப்படுத்தும் ஒரு கருவியை.
அதைப்பற்றிய நுண்ணிய தகவல்களை நான் இப்படி இங்கே கசிய விடக்கூடாது. வேலைக்கே உலையாகப் போய்விடும். சுருக்கமாக சொல்வதானால், ஒரு மணி நேரத்தில் ஒரு லட்சம் கிலோ மீட்டர்கள் செல்லக்கூடிய ஒரு விண்வெளி கப்பலை, ஒரு நிமிடத்திற்கு மூன்று லட்சம் கிலோமீட்டர்கள் செல்லக்கூடியதாக மாற்ற வேண்டும். அப்படி மாற்றும் பட்சத்தில், அதற்கு அடுத்தபடியாக ஒருநொடிக்கு மூன்று லட்சம் கிலோமீட்டர்கள் செல்லக்கூடியதாக மாற்றிவிட்டால் ஒளியின் வேகத்தை அடைந்துவிட்டதாக அர்த்தம். ஆல்ஃபா சென்டாரி போக அதுவே போதும்.
எனது ஆராய்ச்சியின் படிக்கு முதல்கட்ட இலக்கை எட்டியிருந்தேன். நொடிக்கு ஆயிரம் கிலோமீட்டர்கள் செல்லக்கூடிய ஒரு எஞ்சினை வடிவமைத்துவிட்டிருந்தேன். இப்போது அதை சோதிக்க வேண்டும். பூமியைச்சுற்றிய ஒரு பாரிய நீள் வட்டப்பாதையில் மூன்று லட்சம் மைல் சென்று திரும்ப வேண்டும். இதைச் செய்து காட்டிவிட்டால் இலக்கை எட்டியதாக அர்த்தம். சும்மா வெறுமனே சுற்றாமல், சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றும் நிபுறுவை கிட்டத்தில் சென்று படமெடுத்து அனுப்பும்படி கூடுதலாக ஒரு இலக்கையும் தந்து அனுப்ப இருக்கிறார்கள். விடிந்தால் எனக்கும் மின்மினிக்கும் விண்வெளிப் பயணம். நான் என் அறையை ஒட்டிய பால்கனியில் நின்று வெண்ணிலவை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
என்னத்தைச் சொல்வது? மீன் பிடிப்பவன் ஒருவன், சுட்டுத்தின்பது வேறொருத்தன் கதையாகப்போய்விட்டது. நான் அந்த விண்வெளிப்பயணத்தை முடிக்கையில் ஏதேனும் விபரீதமாக நடந்துவிட்டால்? இதை நான் யோசிக்காமல் இல்லை. நடந்தால் நடந்ததுதான். என்னை மறந்துவிட்டு அடுத்த ஆளை வைத்து என் ஆராய்ச்சியை தொடர்வார்கள். விபரீதமாக ஏதும் நடவாமல் நான் பத்திரமாக திரும்பிவிட்டால் மீண்டும் அடுத்த இலக்கிற்கு உழைக்க வேண்டும். அப்படியே உழைத்து அதை கண்டுபிடித்துவிட்டால், அதில் ஏறி ஆல்ஃபா சென்டாரிக்கு முதன்முதலாக குடும்பமாக பாலசுப்பிரமணியும் அவனின் புது மனைவியாக அந்த ரதியும் செல்வார்கள். என்ன கொடுமை பாருங்கள்!
நானும் மின்மினியும் உயிரை பணயம் வைத்து கண்டுபிடிப்போமாம். அதைப் பயன்படுத்தி இவர்கள் வேறொரு கிரகத்தில் கோலோச்சுவார்களாம். அதை அண்ணாந்து பார்த்தபடியே நாங்கள் காலம் கழிக்க வேண்டுமாம். என்ன அநியாயம் சார் இது? இதை நான் விடப்போவதில்லை. ஒழிக! இந்த ஜாதி வேற்றுமைகள். உழைக்கிறவனுக்கே எல்லா பலன்களும் சென்று சேர்வதுதான் நியாயம். அந்த நியாயத்தை நிலைநாட்ட எதையாவது நான் செய்தே தீர வேண்டும். இல்லையெனில் திறமைசாலி ஏமாந்தவனாகி விடுவான். அது ஒன்று போதாதா, இந்த உலகின் சம நிலை குலைய. அதை நான் அனுமதிப்பதாய் இல்லை.
‘என்ன செய்யலாம்?’
இப்படியும் அப்படியுமாக எப்படி எப்படியோ யோசித்துப் பார்த்த எனக்கு, மின்னல் வெட்டாமல், ஒரு யோசனை தோன்றியது. எனது மடிக்கணிணியை எடுத்து படபடவென்று தட்டியபடி படுத்தேன். திரையில் கோர்வையான எழுத்துக்களுடன் படங்கள் தோன்றின. அந்த படங்கள் எனக்கு சாதகமாக இருந்தன. வாரிச்சுருட்டிக்கொண்டு எழுந்தமர்ந்தேன். மறுநாள் விண்வெளிக்கு சோதனைப்பயணம் மேற்கொள்ள இருப்பவன் இத்தனை நேரம் அயர்ந்து தூங்கியிருக்க வேண்டும். நானோ ‘யுரேகா யுரேகா’ என்று கத்திக் கொண்டிருந்தேன். அடுத்த வீட்டுக்காரன் கடுங்கோபத்துடன் ஜன்னலைத் திறந்து எட்டிப்பார்த்தான்.
படுக்கையில் நான்.
என் மடியில் என் இடுப்புப் பிரதேசத்தை தோராயமாய் மறைத்தபடி என் மடிக்கணிணி.
அவர் மனைவி பெயர் ‘சுரேகா’.
அவரின் கடுங்கோபத்திற்கான காரணத்தை இப்போது நீங்கள் கற்பனை செய்துகொள்ளலாம். எனினும், அவரின் முறைப்பை பொருட்படுத்தும் நிலையில் நானிருக்கவில்லை.
மறுநாள் நிறுத்தி வைக்கப்பட்ட ராக்கெட்டின் மடியில் ஒரு கோழிக்குஞ்சைப்போல் நானும், மின்மினியும் அமர வைக்கப்பட்டோம். எங்களுக்கு அது முதல் விண்வெளிப்பயணம். ஆனால் எனக்கு பயமில்லை. ஆனால், பயம் இருப்பது போல லேசாக காட்டிக்கொண்டேன். மின்மினி நிஜமாகவே பயந்திருந்தாள்.
“பூஸ்டர், கோ…ரெட்ரோ, கோ. ஃபிடோ, கோ. கைடன்ஸ், கோ. சர்ஜன், கோ. ஈகாம், கோ. ஜி.என்.சி., கோ. டெல்மூ, கோ. கன்ட்ரோல், கோ. ப்ரசீஜர், கோ. இங்கோ, கோ. எஃப். ஏ.யு., கோ. நெட்வொர்க், கோ, ரெகவரி, கோ. காப்காம், கோ. லாஞ்ச் கன்ட்ரோல்.. வீ ஆர் கோ ஃபார் லாஞ்ச்”
கவுண்ட் டவுன் முடிந்து, அடர்த்தியான புகையை கக்கியபடி ராக்கெட் விண்ணை நோக்கி பயணப்பட்டது. சரியாக மூன்று நிமிடங்கள்.
நீல வானம் கரைந்து, கரிய விண்வெளி தெரியத் துவங்கியது. ராக்கெட் எங்கள் விண்வெளிக் கப்பலை விண்வெளி எல்லையில் திணித்துவிட்டு, தலைகுப்புற பூமிக்குள் கவிழ்ந்து விழுந்தது. நானும் மின்மினியும் விண்வெளிக்கப்பலை செலுத்தினோம். நான் என் மடிக்கணிணியை விரித்தேன். பொத்தான் ஒன்றை அழுத்தினேன். மடிக்கணிணி விழித்துக் கொண்டது.
மின்மினி விண்வெளிக்கப்பலை பூமியைச்சுற்றி நீள்வட்டப்பாதையில் செலுத்தினாள். நான் மேற்பார்வை பார்த்தேன். ஆங்காங்கே உதவினேன். விண்வெளிக்கப்பல் எதிர்ப்பேதுமற்ற விண்வெளியில் வழுக்கிக்கொண்டு பயணப்பட்டது. பலமுறை ஒத்திகை பார்க்கப்பட்ட செயல்முறைகளை அவள் எவ்வித திணறலுமின்றி நேர்த்தியாக செய்தாள். எனக்கு அவளை மேற்பார்வை பார்க்க வேண்டிய கட்டாயம் கூட இருக்கவில்லை. அவள் பார்த்துக்கொள்வாள் என்ற நம்பிக்கை வலுத்தபிறகு நான் வந்த வேலையை துவக்கினேன். அவள் தன் வேலையைத்தொடர்ந்தாள். துறை ரீதியாக அவளுக்கு நான் மேலதிகாரி. ஆதலால் அவள் என்னை கேள்வி கேட்க வேண்டியதில்லை. இரண்டு நாட்கள் பயணித்திருந்தோம்.
அந்த இரண்டு நாளும் அவ்வப்போது மின்மினி கப்பலை செலுத்துவதை மேற்பார்வை பார்த்து பூமிக்கு அனுப்ப வேண்டிய தகவல்களை அனுப்பினேன். என் மடிக்கணிணி ஒரு பக்கம் தன் போக்கில் இயங்கிக்கொண்டிருந்தது.
மின்மினி பின்னால் திரும்பி என்னைப் பார்த்தாள். நான் என் மடிக்கணிணியில் எதையோ தட்டிக்கொண்டிருப்பதை பார்த்துவிட்டு,
“என்ன பண்ற?” என்றாள்.
“யுத்தம்” என்றேன் நான். மின்மினி விழித்தாள். என்னையே பார்த்தாள்.
“ஒண்ணும் இல்லை. எல்லாம் நார்மலா போகுது. நாம தூங்கலாம். நிபுறுவை நெருங்குறப்போ முழிச்சிக்கிட்டா போதும்” என்றபடியே மின்மினியை தூங்கும் பேழைக்கு அழைத்து வந்தேன்.
அத்தனை அழகில்லை தான் எனினும் என்னை விரும்பும் ஒரே ஜீவன் என்பதால் பேழைக்குள் மின்மினி ஏறி படுத்துக்கொள்ள உதவி செய்தேன். அவள் எதையும் பார்க்காமல் இருப்பது நல்லது. கதவு சரிந்து மூடுகையில் “லவ் யூ டா கண்ணா” என்றாள் மின்மினி. பேழையின் கதவு மூடிக்கொள்ள ஹைட்ரஜன் சல்ஃபைடு உறக்க வாயு செலுத்தப்பட்டு சற்றைக்கெல்லாம் ஆழ்ந்த உறக்கத்தில் தொலைந்தாள்.
மூன்றாம் நாள் காலையில், பூமிக்கு தகவல் அனுப்பும் கருவியை எடுத்து பிடித்துக்கொண்டேன். விண்வெளிக்கப்பலுக்குள் மின்சாரக்கசிவு ஏற்பட்டிருப்பது போலொரு பிம்பம் உண்டாக்கும் ஒலிகள் அடங்கிய ஒலி நாடாவை ஓடவிட்டு என் கையிலிருந்த மைக்கை எடுத்து கிட்டத்தில் வைத்தேன்.
“மேடே… மேடே… ஷிப் எக்ஸ்பீரியன்ஸிங் பவர் லாஸ்… மேடே… மேடே..”
“மேடே… மேடே… ஷிப் எக்ஸ்பீரியன்ஸிங் பவர் லாஸ்… மேடே… மேடே..” என்று கத்திவிட்டு விண்வெளிக்கப்பலின் பூமியுடனான தொடர்புக்கான சாதனங்களின் மின்சார இணைப்பை துண்டித்தேன்.
பிறகு விண்வெளிக்கப்பலின் வேகத்தை கூட்டினேன். பயணத்துக்கென ஒதுக்கப்பட்ட பாதையை விட்டு விலக்கி விண்வெளிக்கப்பலை செலுத்தினேன்.
இத்தனை நேரம் எங்கள் கப்பலிலிருந்து சிக்னல் கிடைக்காமல் குழம்பியிருப்பார்கள். ஆனால் இரண்டு நாள் பயணத்தில் இப்போது பாரிய தொலைநோக்கிகள் அமைந்த பூமியின் துருவங்களுக்கு எதிர் திசையில் நாங்கள் பயணித்துக்கொண்டிருந்தோம். ஆதலால் தொலைநோக்கிகளால் எங்களை பார்க்க முடியாது. ஆகவே, பூமியைச்சுற்றி நிலை நிறுத்தப்பட்டிருக்கும் பல்வேறு சாட்டிலைட்டுகளின் காமிராக்களை திருப்பி எங்கள் கப்பலை படமெடுக்க முயல்வார்கள். அவர்களுக்கு இது ஒரு எதிர்பாராத தருணம். பூமியில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் உள்ளவர்களுக்கு குழப்பமே எஞ்சியிருக்கும். ஆனால் இப்படி நடக்குமென்று எனக்குள் ஒத்திகை இருந்தது. மற்ற சாட்டிலைட்டுகளை எங்கள் பக்கம் திருப்ப அதிக நேரம் ஆகாது. ஆயினும் ஏற்கனவே இரண்டு நாள் தூரம் வந்தாகிவிட்டது. ஆதலால், இந்த தூரத்தில், இருளில் எங்கள் கப்பலை கண்டுபிடிப்பது சற்று சிக்கலான காரியமே. இங்கே நான் அகப்படவில்லை என்றால், தலை முழுகிவிடுவார்கள். விண்கலன் இறந்துவிட்டது என்று எடுத்துக்கொள்வார்கள். எனக்கும் மின்மினிக்கும் ஒரு சம்பிரதாய அஞ்சலியை செலுத்திவிட்டு அடுத்த வேலையை பார்க்கப் போய்விடுவார்கள்.
நான் உடனடியாக செயல்பட வேண்டிய தருணம் இது.
ஜன்னலோரம் ஒரு ஐந்து சதுர மைல் பரப்பளவு கொண்ட ஒரு பெரிய விண்கல் அவ்வழியே கடந்தது.
நான் விண்வெளிக்கப்பலை அந்த விண்கல்லின் வாலை நோக்கி செலுத்தினேன். எங்கள் விண்வெளிக்கப்பல் அந்த விண்கல்லை நெருங்க நெருங்க, அந்த கல்லின் ஈர்ப்பு விசை எங்கள் விண்கலனை இழுக்கலானது. நான் மெல்ல மெல்ல சமாளித்து விண்கல்லின் தரையில் விண்கப்பலை இறக்கினேன். கப்பலின் பெரும்பாலான பாகங்களுக்கான மின்சார இணைப்பை துண்டித்தேன்.
என்னிடம் திட்டம் தெளிவாக இருந்தது.
அந்த விண்கல்லை பூமியில் ஆராய்ச்சியில் இருந்தபோதே நான் அவதானித்திருந்தேன். அது விண்மீன் கூட்டங்களுக்கிடையே பயணிக்கும் விண்கல். இன்டர்காலாக்டரி மீடியார் என்பார்கள். அதை கண்டுபிடித்ததை என் நிறுவனத்துக்கு தெரிவிக்கவில்லை. தெரிவித்தால் என்னாகும்? அந்த விண்கல்லிற்கு இயக்குனரின் பெயரையோ, அல்லது ரதியின் பெயரையோ அல்லது பாலசுப்பிரமணி – ரதிக்கு பிறந்த பிள்ளையின் பெயரையோ வைத்து பெருமை தேடிக்கொள்வார்கள். காலங்காலமாக அதுதானே நடக்கிறது. ஆதலால் நான் தெரிவிக்கவில்லை. அதற்கு இன்னொரு காரணம் இருந்தது. அது அந்த விண்கல்லின் வேகம். பொதுவாக விண்கற்கள் அதிகபட்சமாக நொடிக்கு சுமார் என்பது கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கலாம். ஆனால், விண்மீன் கூட்டங்களுக்கிடையே பயணிக்கும் அந்த குறிப்பிட்ட விண்கல் நொடிக்கு நூறு கிலோமீட்டர் வேகத்தில் பயணித்தது. மிக முக்கியமாக அந்த விண்கலில் பயண வழித்தடத்தில் தான் ஆல்ஃபா சென்டாரி இருந்தது.
என் யோசனை மிக எளிமையானது. அது, அந்த விண்கல்லை ஒரு ரயில் மீது ஏறிக்கொள்ளும் கரப்பான் பூச்சையைப் போல் பயன்படுத்திக் கொள்வதுதான். இப்படி பயன்படுத்திக்கொள்வதால், நான்கு ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் கிரகத்திற்கு செல்ல எரிபொருளே தேவை இருக்காது. விண்கல்லின் முதுகில் ஏறி அமர்ந்துகொண்டால் போதும்.
அதுபோக, என்னிடம் நொடிக்கு ஆயிரம் கிலோமீட்டர்கள் உந்துவிசை அளிக்கும் எஞ்சின் இருந்தது. எஞ்சினை விண்கல்லோடு பொறுத்தி அந்த உந்துவிசையை ஆயிரம் முறை விண்கல்லுக்கு அளித்துவிட்டால் போதும். விண்வெளியின் எதிர்ப்புசக்தியற்ற தன்மையால் அந்த விண்கல் நொடிக்கு ஒரு லட்சம் கிலோமீட்டர்கள் வேகத்தை எளிதாக எட்டிவிடும். இப்படியாக ஒளி ஓராண்டில் கடக்கும் தூரத்தை அந்த விண்கல் கடக்க மூன்றாண்டுகள் எடுத்துக்கொள்ளும். அப்படியானால் நான்காண்டு கால பயணம் உண்மையில் பன்னிரண்டாண்டு பயணமாகும். பன்னிரு ஆண்டுகள் நானும் மின்மினியும் உறங்கும் பட்சத்தில், நாங்கள் ஆல்ஃபா சென்டாரியை அடைந்துவிடலாம். அங்கே நொடிக்கு ஒரு லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் விண்கல்லிலிருந்து குதிக்க வேண்டும். அதற்கு மெல்ல மெல்ல எங்கள் விண்வெளிக்கப்பலை விண்கல்லின் மீதிருந்து விடுவித்தால் போதும். ஈர்ப்பு விசை குறையை குறைய விண்வெளிக்கப்பல் விண்கல்லின் வாலில் விழுந்து படிப்படியாக வெளியே தள்ளப்பட்டுவிடும். அதன் பிறகு விண்வெளிக்கப்பலை இயக்கி ஆல்ஃபா சென்டாரியில் உள்ள அந்த இன்னொரு பூமி கிரகத்தை அடைந்துவிடலாம்.
இங்கே பூமியில் எங்களை தொலைத்துவிட்டதாய் முடிவு கட்டிவிடுவார்கள். இந்த பூவுலகில் அழகில்லாதவரும், சொல்லிக் கொள்ளும்படியான ஜாதியில் பிறக்காதவர்களும் பிறக்கவே கூடாது. இங்கே எத்தனை போராட்டம் நடத்தினாலும், எத்தனை புரட்சிகள் செய்தாலும் எதுவும் தீர்வை தரப்போவதில்லை. யாருக்கும் வேண்டாதவர்களான அல்லது எல்லோரும் வெறுக்கும் நானும் மின்மினியும் யாராலும் தேடப் படப்போவதில்லை. ஆனால், ஒளியின் வேகத்தில் பயணிக்கும் கலனை வடிவமைக்க பல லட்சங்கோடிகளை செலவிடப்போகிறார்கள். அதற்கு நிச்சயம் இருபது முப்பது ஆண்டுகளாகிவிடலாம்.
விண்கல்லை ரயிலாகப் பயண்படுத்திக்கொள்ளும் எனது யோசனையில் சாதகங்கள் அதிகம். பயணத்தின் போது குறுக்கே விண்கற்கள் விழலாம். சோலார் ஃப்ளார் தாக்கலாம். இப்படி எத்தனையோ இடையூறுகள். விண்ணூர்தியில் பயணிக்கின் இவற்றிலிருந்தெல்லாம் தப்பிக்க வேண்டும். எரிபொருள் அதிகம் தேவைப்படும். ஆனால், விண்கல்லின் முதுகில் ஏறிக்கொள்வதால் இந்த எல்லா பிரச்சனைகளையும் அந்த விண்கல்லே பார்த்துக்கொள்ளும். இந்த என் யோசனையால் தான் நிறுவன இயக்குனரின் மகள் எனக்கு கிடைக்காதது எனக்கு பெரிய விஷயமாகத் தெரியவில்லை. இப்படி ஒரு யோசனை தோன்றிய என்னை தேர்வு செய்யாமல் போனதின் பலனை அவள் அழியப்போகும் இந்த பூமியில் இருந்து அனுபவிக்கட்டும். அதற்குள் நானும் மின்மினியும் ஆல்ஃபா சென்டாரியில் காலனி அமைத்துவிடுவோம். எங்கள் பிள்ளைகள் புதிய உலகின் சக்கரவர்த்திகள். இந்த புதிய உலகில் சக்கரம் இருக்கும். நெருப்பு இருக்கும். பணம் இருக்காது. ஜாதி அறவே இருக்காது. அந்த புதிய உலகிற்கு ஆதாம் நான், ஏவாள் மின்மினி.
பத்து நிமிடங்களுக்கு பிறகு நான் தயாரித்த எஞ்சின் தானாகவே உயிர் பெற்று, அந்த விண்கல்லை ஆயிரம் முறை உந்தச்செய்யுமாறு கட்டளைகள் பிறப்பித்தேன். ஒவ்வொரு முறையும் நோடிக்கு ஆயிரம் கிலோமீட்டர் உந்துவிசையை என் எஞ்சின் அந்த விண்கல்லுக்கு அளிக்கும். ஆயிரம் முறை உந்துதலுக்கு பிறகு விண்கல் நொடிக்கு ஒரு லட்சம் கிலோமீட்டர் வேகத்தை எட்டிவிடும். பின் மின்மினிக்கு அருகிலிருந்த பேழைக்குள் சரிந்து கால் நீட்டி படுத்துக்கொண்டேன். நித்திரையை வரவழைக்கும் ஹைட்ரஜன் சல்ஃபைடு வாயு நாசியில் நுழைகையில் அந்த விண்கல் வேகமெடுப்பதை உணர முடிந்தது.
என் யோசனை வேலை செய்யும் என்ற நம்பிக்கையுடன் நான் ஹைப்பர் ஸ்லீப் எனப்படும் ஆழ்நித்திரையில் ஆழ்ந்தேன்.
- ராம்பிரசாத்
அருமையான கதை. அறிவியல் எத்தனை முன்னேற்றத்தை வழங்கியபோதும் இந்திய மண்ணில் பிற்போக்கு சக்திகள் அதனை விழுங்கி விழுமியங்களை தனதாக்கி கொள்கிற அவலத்தை அற்புதமாக நச்சென்று சொல்லியிருக்கிறீர். கதைக்குள் வருகிற தங்களது அறிவார்ந்த நடைமுறைகள் மிகச் சிறப்பு. இன்னும் பலலட்சம் ஆண்டுகள் ஆனாலும் இந்த சாதியவாத மண் மாறாது என்பதை புதிய கிரகத்தில் குடிபெயர்வதாய் எழுதியது உண்மை. சிறப்பு. தொடர்க. வாழ்த்துக்கள்.