அழகுப் பிள்ளை நின்று கொண்டிருந்ததே ஹெட்மாஸ்டர் கண்ணில் படவில்லை. இரண்டடி மட்டும் உயரமானவர் அழகுப் பிள்ளை. ஹெட் மாஸ்டரின் மேஜைக் கால்கள் அவரை விட உயரமாக இருந்ததால் மேஜைக்குக் கீழே அந்தக் கால்களுக்கு நடுவே இவர் நின்றதை ஹெட் மாஸ்டர் கவனித்திருக்கவில்லை.
நாட்பட படிந்து போன பழக்கமாக இரண்டு தொடைகளையும் மேஜைக்குக் கீழ் வைத்து உயர்த்தி, மேஜையோடு மெல்ல ஆட்டுவது அவருக்கு பிடித்தமான காரியமாகும். அந்த மேஜையைத் தாங்குவது போல மாரப்பா ஹையர் செகண்டரி பள்ளிக்கூடத்தை, ஏன் இந்த ஊரையே அவரால் தாங்கவும், தன் விருப்பப்படி அசைந்தாடச் செய்யவும் முடியும் என்று வலுவான நம்பிக்கை அவருக்கு உண்டு. முக்கியமாக எல்லோரும் அவரை ஹெட் மாஸ்டர் என்று முழுப் பதவிப் பெயர் சொல்லிக் கூப்பிடுவார்கள். எச்செம் என்று சுருக்கமாக விளிக்க மாட்டார்கள். அவருக்கு நேரம் கிடைத்தால் அதைச் சாதித்திருப்பார். இனியும் காலம் உண்டுதான்.
எச்செம் மேஜையைக் கீழிருந்து நெம்பி ஆட்ட முனைகிறார். ஆச்சரியம், அது நகருவேனா என்று பிடிவாதமாக அப்படியே அந்தரத்தில் நிற்கிறது. யட்சினி வேலையா? அவருக்குத் தெரியாது அழகுப் பிள்ளையின் கைவேலை இது என்று.
அழகுப் பிள்ளைக்கு இது ஒரு பூகம்பம் போன்ற நேரம். அவர் மேஜைக்குக்கீழே நிற்கும்போது மேஜை அதிர்கிறது. அடுத்து தரை ஆடும். அதற்கடுத்து பள்ளிக்கூடக் கட்டிடம் ஆடும். ஊரும் மரமும் செடியுமெல்லாம் ஆடும். ஊருணியும் அலைவீசிச் சாய்ந்தாடும். அழகுப் பிள்ளைக்கு இன்றைய வருமானமான ஐந்து அல்லது பத்து ருபாய் வராமல் போய்விடும். ஆளுக்குப் பத்து பைசா வீதம் ஐம்பது பிள்ளைகள் கொடுத்திருந்தால் அது ஐந்து ரூபாயாக இருக்கும். அதற்கும் குறைவானவர்களின் நன்கொடை என்றால் இரண்டு ரூபாய் கூட இருக்கலாம். பூகம்பம் வந்து இரண்டு ரூபாய் வருமானமும் போனால் சாப்பாடு இல்லை.
அழகுப் பிள்ளை மேஜை ஆடாமல் இன்னும் கெட்டியாகக் கைகளால் பற்றிக் கொண்டார். அந்த மேஜையின் ஆட்டத்தை நிறுத்துவதில் தான் அவர் இன்றைக்கு சாயந்திரம் சம்மானமாக ஐந்து ரூபாயாவது வாங்கிப் போவது இருக்கும்.
எல்லாப் பள்ளிகளையும் எல்லா ஊர்களிலும் அவர் பதினைந்து வருடமாகச் சுற்றி வருகிறார். முதல் தடவை அப்படி எந்தப் பள்ளிக்குப் போனாலும் அப்போது பள்ளிக்கூடமே, வாத்தியார்கள், பிள்ளைகள் அடக்கம் அவரைப் பார்க்கக் கூடிவிடும்.
“ஐயா எட் மாஸ்டர் சாரை பாக்கணும்”.
”என்ன விஷயமா?”
”ஒரு நிகழ்ச்சி கொடுக்கணும்”.
”என்ன மாதிரி?”
”நான், இன்னும் ரெண்டு பேர் என்னோட சேர்ந்து நடிச்சவங்க எல்லோரும் பாட்டு, ஆட்டம், மேஜிக் ஷோ நடத்தப்போறோம்.. ஒரு பத்து இருபது ரூபா கிடைச்சா நல்லா இருக்கும்”.
”உங்களை பாதாள உலகம் சினிமாவிலே பார்த்திருக்கோம்”.
”அந்த சினிமாவிலே போட்ட வினோதமானா டிரஸ்ஸை போட்டுக்கிட்டுத்தான் ஆடப் போறோம். பாடப் போறோம்.. அதை எல்லாம் பத்திரமா வாங்கி வச்சிருக்கோம். இருபது ரூபா ஆளுக்கு ஒரு இருபது காசு போட்டா… நூறு பேர் வந்தா..”
”அய்யோடா, இருபது காசு அத்தனை எங்கே கிடைக்குதாம்? எல்லா வீட்டிலும் அதை தாம்பாளத்திலே மஞ்சத் தண்ணியிலே மிதக்க வச்சு பூஜையிலே வச்சுட்டாங்க.. ”
”அப்போ பத்து பத்து பைசாவா ஒரு இருநூறு பேர்..”
”ஆளுக்கு பத்து பைசா கூட பசங்களுக்கு வீட்டுலே கொடுத்து விட மாட்டாங்க இது கிராமமும் இல்லை டவுனும் இல்லையாச்சே… இருநூறு பேர் எங்கே இருக்காங்க காசு செலவழிக்க? இருபது பசங்க மேஷிக் ஷோ பார்க்க வந்தாலே பெரிசு.. ரெண்டு ரூபா கிடைக்கும்..”
அப்போதெல்லாம் ரெண்டு ரூபாய்க்கு மூணு பேர் வயிறு நிறையச் சாப்பிட்டு வெற்றிலை பாக்கும் போட்டுக் கொண்டு போக முடியும்.
ஆனாலும் அப்போதெல்லாம் ஒரு ஆட்டத்துக்கு பத்து ரூபாயாவது வந்துவிடும் அழகுப் பிள்ளைக்கும் குழுவுக்கும். வாத்தியார்கள், டீச்சரம்மாக்கள் மட்டுமில்லை, பக்கத்து கடைக்காரர்கள், பள்ளிக்கு அடுத்த வீடுகளில் ரிடையராகி ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் பென்ஷன்காரர்கள் என்று பலபேர் விஷயம் தெரிந்து பள்ளிக்குள் வந்து ஆட்ட பாட்டம் பார்ப்பதோடு ஆளுக்குக் குறைந்தது ஐம்பது பைசாவாவது கொடுத்துப் போவார்கள். எல்லாம் சேர்ந்து பத்து ரூபாய், நாலு பேர் ஒரு வாரம் நிம்மதியாகச் சாப்பிட பத்து வருஷம் முன் அது போதுமாயிருந்தது.
சில தடவை பீர்க்கங்காய், சுரைக்காய், பூசணிக்காய் இப்படி ஏதாவது கூட அன்பளிப்பாக வந்ததுண்டு. ஒரு கூழைப் பலாப்பழத்தை இப்படித்தான் அன்பளிப்பாக வாங்கி எடுத்துப்போய் அறுத்துப் பார்த்தால் அத்தனையும் சொத்தை. யார் கொடுத்தாரோ அவரைத் தேடிப்போய்ச் சண்டையா போட முடியும்? அத்தனை குப்பையையும் மாட்டுக்குப் போட அள்ளிப்போகும்போது கீழடுக்கில் நாலு பலாச்சுளை கண்ணில் பட்டது. எடுத்து உரித்து சாப்பிட, அழகுப் பிள்ளை ஆயுசிலேயே அதுபோல் சாப்பிட்டது இல்லை. அத்தன இனிப்பு, அத்தனை வாசனை.
”மேஜைக்கு கீழே யார் நிக்கறது?”
ஹெட் மாஸ்டர் குரல் இடி போல வந்ததும் அழகுப் பிள்ளை நடுநடுங்கி வெளியே வந்து நின்று சலாம் வைத்தார். தன் மேஜைக்குக் கீழே தனக்கே தெரியாமல் இந்த ஆள் புகுந்து கொண்டது எப்படி என்ற கோபத்தோடு நோக்கிய எச்செம் ஊருக்குப் புதுசு, ஏன் இந்தப் பிராந்தியத்துக்கே புதுசு.
”எந்த கிளாஸ்டா நீ?”
அவர் மூக்குக் கண்ணாடியைத் தேடியபடி அழகுப் பிள்ளையைக் கோபமாகக் கேட்டார். நிலைமை பிடிபட்டது அழகுப் பிள்ளைக்கு. ஆக, அவரை பள்ளிக்கூடப் பையன் என்று நினைத்திருக்கிறார் ஹெட் மாஸ்டர்.
”சார், நான் பையனில்லீங்க. ஆக்டர் …”
”ஆக்டர்னா?”
”நடிகன்.. சினிமாவிலே ஆக்ட் கொடுத்திருக்கேன்.. ”
”என்ன உளற்றே… சினிமா நடிகன்னா என் டேபிள் அடியிலே என்ன பண்றே?”
அழகுப் பிள்ளை இடம் வாகாக இருக்கிறதா என்று ஒரு வினாடி மனதில் கணக்குப்போட்டுப் பார்த்து, ஒரு அந்தர் பல்டி அடித்தார். ஹெட்மாஸ்டர் அறை வாசலுக்குப் போய் அங்கே இருந்து இன்னொரு குட்டிக்கரணம். நேரே ஹெட்மாஸ்டர் முன் நின்று இன்னொரு சல்யூட். அந்த மனுஷர் அசந்து போய்ப் பார்த்துக் கொண்டிருந்தார்.
நிஜமாகவே சர்க்கஸ்காரன்.. கோமாளியாக இருக்கலாம். சினிமா என்று சும்மா சொல்லியிருப்பான்.
”இல்லீங்க.. நான் பாதாள உலகம் சினிமாவிலே குறும்படை தலைவன். என்னைப் போல ஐம்பது குள்ளர்களை படை சேர்த்துத் தலைமை வகித்து பாதாள உலகத்துக்குக் கூட்டிப் போறவன்..”
”ஆமாய்யா நீர்தானா அது.. நான் பாத்து இருக்கேனே அந்தப்படத்தை..”
எச்செம் உற்சாகமாகச் சொன்னார். ரொம்ப் தேங்க்ஸ் சார் என்று இங்க்லீஷில் விட்டார் அழகு.
”அது சரி இங்கே என்ன செய்யறீர்? பள்ளிக்கூடத்துலே ஷூட்டிங்கா? சொன்னாக் கேளும்.. வேண்டாம்.. இன்னிக்கு கரஸ்பாண்டெண்ட் வேறே வரேன்னிருக்கார்”
”ஐயோ உங்களுக்கு தெரியாம ஷூட்டிங்கெலாம் வச்சுடுவாங்களா என்ன?”
”அப்போ பக்கத்துலே ஊருணிக்கரையிலே ஷூட்டிங்கா?”
”ஷூட்டிங்கே இல்லே சார்.. பசங்களுக்காக ஆடிப்பாடி அவங்களை சந்தோஷப்படுத்தி, மேஜிக் செஞ்சு காமிக்க வந்திருக்கேன்.. ”
எச்செம் ஆச்சரியத்தோடு அழகுப் பிள்ளையைப் பார்த்தார். அவர் இங்கே தலைமை ஆசிரியராக இடம் மாறி வந்து ஒரு வாரம் தான் ஆகிறது. புறநகர்ப் பள்ளிக் கூடத்தில் இருந்து நகரமா கிராமமா என்று இன்னும் யாருக்கும் தெளிவாகத் தெரியாத இந்த ஊருக்கு வந்தவர். புறநகரில் சினிமா குள்ளர்கள் ஆட்டம், மேஜிக் எல்லாம் பார்க்க யாருக்கும் நேரம் இருப்பதில்லை. ஒரு மணி நேரம் கிடைத்தால் அவசர அவசரமாக பஸ் பிடித்து, மின்சார ரயில் பிடித்து வீட்டுக்கு ஓடுவது பசங்களுக்கு மட்டுமில்லை, ஆசிரியர்கள், ஆசிரியைகளுக்கும் பழக்கமான ஒன்று அங்கே. இங்கே வாழ்க்கையில் இதற்கெல்லாம் நேரம் உண்டு போல.
அறை வாசலில் நிழலாடியது. நெசவு நெய்யவும், பேப்பரில் கிண்ணமும், பழக்கூடையும், ரோஜாப் பூங்கொத்தும் செய்யவும் கற்பிக்கும் வாத்தியார் நின்று கொண்டிருந்தார். கையில் சாக்பீஸ் அடைத்து வரும் சிறு மர டப்பா.
”அட, நீங்க அதுக்குள்ளே வந்தாச்சா… சாயந்திரம் நாலு மணிக்கு தானே பாதாள உலகம்? இப்போ தானே ஸ்கூல் தொடங்கப் போவுது?”
நெசவு வாத்தியார் சிரித்துக் கொண்டே அழகுப் பிள்ளையைக் கேட்டார். ஒன்பது மணிக்கு மணியடித்து பிரேயர் பாடி ஆரம்பிக்கும் பள்ளிக்கூடம் இது. ஒன்பதே காலுக்கு தாமதமாக வந்த மாணவர்கள் பள்ளிக்கூடத்தை ஒட்டிய பொட்டல் காட்டைச் சுற்றி ஓடிக் கொண்டிருப்பார்கள். இரண்டு சுற்று ஓடி இனி நான் நேரத்தோடு பள்ளிக்கூடம் வருவேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டு அவர்கள் வகுப்புக்குப் போவதை மேல் பார்வை பார்க்க வேண்டிய பொறுப்பும் நெசவு வாத்தியாருக்கு உண்டு.
இன்னும் இருபது நிமிடத்தில் அசெம்பளி பிரேயர் தொடங்கி விடும். அப்போதே கண்குத்திப் பாம்பாக வாசலில் வழி மேல் விழி வைத்துப் பார்க்கத் தொடங்கி விடுவார் அவர். சரியாகக் கண்காணிக்கா விட்டால் தாமதமாக வந்து ஓசைப்படாமல் பிரேயருக்கு வகுப்பு வாரியாக வரிசையாக நிற்கும் மாணவர்களோடு லேட்டாக வந்தவர்களும் கலந்து போய் விடலாம்.
”சார், அசெம்பளியிலே ஒரு தடவை அழகுப் பிள்ளை ஷோ பத்தி சொல்லுவோம். காலையிலே பத்து பைசா கொண்டு வர மறந்து போனா, லஞ்ச்லே போய் எடுத்து வரலாமேன்னு தான்..”
நெசவு வாத்தியார் சொன்னபோது எம்செம்முக்கு ஆச்சரியம். காலையில் வரும்போதே எல்லோரும் மதியச் சாப்பாடு கொண்டு வந்து அதை இங்கேயே சாப்பிடறவங்க இல்லையோ.
”பாதி பேர் பக்கத்துலே, அடுத்த தெரு, ஊர்க்கோடி இப்படித்தான் இருக்கப்பட்டவங்க.. மதியம் பைக்கட்டை கிளாஸ்லேயே வச்சுட்டு வீட்டுக்கு பூஞ்சிட்டா பறிஞ்சு போய் சோறு தின்னுட்டு வந்துடுவாங்க..”
இந்த மாதிரி ஊர்களில் குடும்பத்தோடு இருக்கக் கொடுத்து வைக்கவில்லை எச்செம்முக்கு. அவர் மனைவியும் ஒரு பள்ளிக்கூடத்தில் எச்செம் என்பதால் அவர் மனைவியால் இங்கே உத்தியோகம் மாற்றிக்கொண்டு வரமுடியவில்லை. இனி பணி ஓய்வு பெறும்போது இரண்டு பேரும் ஒரே இடத்தில் இருக்க முடியலாம் என்று தோன்ற விரக்தியாகச் சிரித்தார் எச்செம்.
”சரிய்யா, சாயந்திரம் மூணு மணிக்கு வந்துடும்” என்று அழகுப் பிள்ளையைப் பார்த்துச் சொல்லி நடந்தார் எச்செம். அழகு இன்னொரு அந்தர் பல்டி அடித்து அறை வாசலில் நின்று ”சார், பசிக்குது ரெண்டு ரூபா இருந்தா கொடுங்க.. மதியம் வர்ற பணத்திலே குறைச்சுக்குங்க” என்று மன்றாடும் தொனியில் சொன்னார்.
“மூணு பேர் சார், இன்னும் ரெண்டு ஆட்டக்காரங்க ஊருணிக்கரையிலே உக்காந்திருக்காங்க.. நான் போய்த்தான் ஏதாச்சும் சாப்பிடத் தந்து ஆட இட்டு வரணும்” பல்டிகளுக்கு நடுவே அவர் சொன்ன கூடுதல் தகவல் இது.
”அட நீ வேறே.. வெறும் காலி பாக்கெட் சட்டை இது..”
ஹெட் மாஸ்டர் சட்டைப்பையை வெளியே எடுத்துக் காட்டினாலும் சிரித்தபடி மேஜைக்கு உள்ளே இருந்து ரெண்டு அரை ரூபாய் காசுகளை எடுத்து அழகு பிள்ளையிடம் கொடுத்தார். மூன்று பேர் ஒரு ரூபாயில் என்ன சாப்பிட்டு வந்து குட்டிக்கரணம் அடிப்பார்கள்? பக்கத்தில் பன் வாங்கக் கடை எதுவும் கிடையாதே.
பரிதாபப்பட்டு, இன்னொரு தடவை மேஜைக்குள் பார்த்து ஒரு பழைய இரண்டு ரூபாய் நோட்டை எடுத்து அழகு பிள்ளையிடம் கொடுத்தார்.
”வச்சுக்கய்யா. இது கணக்குலே வராது” என்று அசெம்பளி பிரேயருக்குப் புறப்பட்டுப் போனவரை வணங்கி நின்றார் அழகுப் பிள்ளை.
எல்லை இல்லா எங்கும் நிறை ஏக பரம்பொருளே என்று நூறு இளம் குரல்கள் பிரார்த்தித்துப் பாடும் இசை சூழ்ந்திருக்க பள்ளிக்கூடத்துக்குப் பின்னால் நல்ல தண்ணீர் ஊருணிக்கரைக்கு நடந்தார் அழகு பிள்ளை. பழைய பாளையக்காரர்கள், அவர்களின் மனைவி, கூத்தியார் என்று பலவட்டமாகப் புதைத்து நிறுத்திய சமாதிகள் அடைந்த பகுதி அது. கடைசி சமாதி கதவும் ஜன்னலும் வைத்து படியேறி உள்ளே போகும்படியான சௌகரியத்தோடு இருந்தது. பாளையக்கார ஜமீந்தார் அந்திம ஓய்வு கொள்ளும் இடம் அது என்று அழகு பிள்ளை ஊகித்திருந்தார். அங்கே தான் அவருடைய இரண்டு ஆட்டக்கார குழுவினர்கள் தங்கி இருக்கிறார்கள்.
உள்ளே இரண்டு கீரிப் பிள்ளைகள் கல் பாவிய சமாதிக்குப் பின்னால் உறவில் ஈடுபட்டிருந்தன. அவருடைய குழுவினர், நெட்டையனும் குறளியும் தான் அவர்கள்.
பாதாள உலகம் படத்தில் தொடக்கத்தில் வரும் ஒரு காட்சியில் குள்ளர்களுக்கு ஒரு முனிவர் நினைத்தபடி உருவம் மாறும் சக்தியை அளிப்பார். அதை வைத்துக்கொண்டு அழகுப் பிள்ளையும் மற்றவர்களும் கதைப் போக்குப்படி உரு மாறிக்கொண்டே இருந்து சுவாரசியமாக சினிமா நகர வழி செய்வார்கள். படம் முடியும் முன் ஒரு காட்சியில் அந்த முனிவர் இவர்கள் எல்லோரையும் சாதாரண ஜனங்களாக மறுபடி ஆக்கி, உரு மாறும் ஆற்றலைத் திரும்ப வாங்கிக் கொள்வார். அந்தக் காட்சி, ரிலீஸ் ஆன படத்தில் நீளம் அதிகம் என்பதால் வெட்டப்பட, அழகுப்பிள்ளையிடம் உரு மாரும் திறமை தொடர்ந்து நிலைத்து விட்டது. மற்ற ஆக்டர்களுக்கும் கூடத்தான். திரையைத் தாண்டி நீண்ட அபூர்வ ஆற்றல் அது. மொத்தம் இருபது பேர் இருந்தார்கள் அப்படி.
எனினும் அழகுப்பிள்ளையின் ஆட்டக் குழுவில் அவர்களில் இரண்டே பேர் தான் உண்டு. மற்றவர்கள் என்ன ஆனார்கள் என்று அழகுப்பிள்ளை எவ்வளவோ முயன்று தேடினாலும் அவர்கள் கிடைக்கவில்லை. அவர்கள் வேறு ஏதோ உயிரினம் ஆக உரு மாறி திரும்ப மனித உருவெடுக்க முயன்றது தோல்வியில் முடிந்ததால் இருக்கலாம். அழகுப்பிள்ளை தெருவில் ஆடு, மாடு, நாய் என்று சகல விலங்குகளையும் கண்ணில் பார்த்து நடப்பது தன் பழைய சகபாடிகளைத் தேடித்தான்.
அழகுப்பிள்ளையின் குழுவில் இருக்கும் இரண்டு பேரில் ஒரு ஆண், மற்றது பெண். உரு மாறும் உத்தி அவர்களுக்கு அவ்வப்போது உடம்பு சுகம் அனுபவிக்கத்தான் பயன்படுகிறது. கண்டும் காணாமல் போக வேண்டிய கட்டாயம் அழகுப் பிள்ளைக்கு. மூன்றே பேர் இருக்கும் குழுவில் அவர்கள் மட்டும் விலகி இன்னொரு குழு ஆரம்பித்து விடலாம். ஆனால் பேசும், பாட்டு கட்டும் திறமை அவர்களிடம் போதாது. அது அழகுப் பிள்ளையின் ஏகபோகம்.
கீரிகள் உறவு கொள்வதில் மும்முரமாக இருந்தன. உரு மாறும் நாகரிகப்படி, உரு மாறுகிறவர்கள் தங்கள் இயல்பான உயிரினமாக மாறிய பிறகே அடுத்தவர்களோடு பேச்சு மற்ற தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளலாம். அதாவது இரண்டு மனிதர்கள் முயலாக மாறினால், அவர்கள் மறுபடி மனிதர்களான பின் தான் மற்ற மனிதர்களுடன் பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ளலாம். அழகுப் பிள்ளையால் கடைப்பிடிக்க முடியாத நாகரிகம் அது. வயிறு தான் நாகரிகத்தைத் தீர்மானிக்கிறது அவருக்கும் அவருடைய குழுவுக்கும்.
கீரிகள் உறவு முடியும் வரை வேறு திசையில் திரும்பியபடி காத்திருந்தார் அழகு. சமாதியில் புதையுண்டவராக மாற முடியும் என்றால் அழகு பிள்ளை அப்படி உருமாறி மற்ற சமாதிவாசிகளுக்குத் தன் வயிறே சகலமும் என்றாகிப் போன வாழ்க்கைத் துயரத்தைச் சொல்ல முடிந்திருக்கும். ஆனால் உருவம் மாறுவது உயிர் இருக்கும் ஒன்றிலிருந்து உயிருள்ள மற்றதுக்குத் தானே.
தடதடவென்று சத்தம். கீரிகள் உரு மாறும் சத்தம் அது. இரண்டு கீரிகளும் சமாதியைச் சுற்றி ஓடின. அது முடியும்போது அவை திரும்ப நிஜ உருவம் கொள்ளும்.
ஓடி.நின்றார்கள். உருவம் மாறியதில் ஏதும் பிரச்சனையா? திரும்பாமலே கேட்டார். ஆமாம் என்றார்கள். உரு மாற முடியவில்லையாம்.
”பதட்டப்படாதீங்க. இன்னொரு முறை முயன்று பாருங்க” என்றார் அழகுப் பிள்ளை.
.சமாதிக்குள் இருக்கும் சேனாதிபதியோ ராணியம்மாவோ தடுக்கிறதால் இப்படி பிரச்சனை ஏற்படுகிறதா? அழகுப் பிள்ளை கை குவித்து முகம் அறியாத யாரையோ வணங்கினார்.
”சரியாயிடுச்சு”.
ஆணும் பெண்ணுமாக குரல்கள் ஒலித்தன. அழகுப் பிள்ளை திரும்பிப் பார்த்தார்.
ஒரு நக்னமாக குள்ளர். உயரமான ஒரு பெண். கீரியாக இருந்து பழையபடி உரு மாறிய அவர்கள் தடதடவென்று சமாதிப் பரப்பில் ஓடி சமாதிக்குப் பின்னால் அவசரமாகப் போய் நின்றார்கள், ஓடியதால் கீழே அடக்கமாகி இருந்தவர்கள் உறக்கம் கலைந்து இருக்கலாம் என அழகுப்பிள்ளை பயந்து போனார்.
குறளியும், நெட்டையனும் சமாதிக்குப் பின் நின்றபடி அழகுப் பிள்ளையைப் பார்த்தார்கள். என்னாச்சு’பா இன்னும் பிரச்சனையா? அவர் கேட்க பேசாமல் தலையசைத்தார்கள் இருவரும்.
அவர்களுடைய இப்போதைய பிரச்சனை அவருக்கு உறைத்தது.
எங்கே போனது அவர்களுடைய தினசரி உடுப்பும், ஆடும்போது அணியும் ஜரிகை உடுப்புமெல்லாம்? அது இருந்தால்தான் நடமாட முடியும். நடனமாட முடியும். மாலைக்காட்சி மேஜிக் ஷோவும் பாதாள உலகமும் நடத்த முடியும். அது இருக்கட்டும், மனுஷனாக மாறினால் அணிந்து கொள்ளக் குறைந்த பட்சம் ஒரு டிராயராவது வேண்டாமா? எங்கே போனது எல்லாம்? பெண்ணுக்கோ ஓடியாட சௌகரியமாக இந்திக்கார பைஜாமாவும் நீளமான அங்கி போன்ற மேலுடுப்பும் கட்டாயம் வேண்டும். ஆண்பிள்ளை அணிவது போல பேண்ட் என்றாலும் சரிதான்.
சமாதியில் சுருட்டி வைத்ததை யாரோ எடுத்துக் கொண்டு போய் விட்டார்கள். கூடவே ஆட்டத்துக்கான உடுப்புகளும் இல்லை இப்போது. அந்தப் பெட்டியையும் கிளப்பிக்கொண்டு போயிருக்கிறார்கள். நல்லவேளை அழகுப் பிள்ளை எப்போதுமே அவற்றை அணிந்திருப்பதால் அவருக்கு உடுப்பு எதுவும் களவு போகவில்லை.
இலுப்பை எண்ணெய்ச் செக்கின் பின்னால் இருக்கும் அழகான பளிங்குக் கல் பதித்த சமாதியில் தான் கீழடுக்கில் கல் பாளத்துக்கு அடியில் பத்திரப்படுத்தி வைத்து விட்டு கீரிகளாக உறவு கொள்ளப் போயிருந்தார்களாம் அவர்கள் இருவரும். அப்போது தான் உடுப்பு களவு போயிருக்கிறது.
வேட்டியைத் திருட வந்தவர்களாக இருக்காது அவர்கள். ஜரிகை குப்பாயம், பைஜாமா இப்படியான சினிமா மோஸ்தர் உடுப்பு களவாட வந்தவர்கள் அவர்கள். அவற்றை வைத்து சினிமாவில் புகுந்து கொள்ள முயற்சி செய்யக் கூடியவர்களாக இருக்கலாம். சினிமாவில் சேர எப்படி வேண்டுமானாலும் பிரயத்தனம் செய்யலாம். ஆனால் மந்திர தந்திர சினிமா இன்னுமா எடுக்கிறார்கள்? அழகுப் பிள்ளைக்குத் தெரியாது.
அழகுப் பிள்ளைக்கு சினிமா வாய்ப்பு அவருடைய குள்ளமான உருவத்தால் வந்தது. அவர் குழுவினர் ஆன நெட்டையனுக்கும் கூட. நெட்டையன் மகா குட்டையாக ரெண்டடி உயரம் தான் இருப்பான். குறளி நல்ல உயரமாக ஏழடி இருப்பாள் நிமிர்ந்து நின்றால். இவர்கள் மேடையில் சேர்ந்து ஆடுவதோடு இங்கேயும் ஆடுகிறார்கள் இயற்கை விதித்தபடி என்பதில் அழகுப் பிள்ளைக்குப் புகார் ஏதுமில்லை. அவர் வயதுக்கு ஆடக் கால் முன்னால் வருவதே அதிசயம். வயிறு அவர் காலை ஆட்டுகிறது.
கீரியாகவோ, தவளைகளாகவோ காதல் செய்யும்போது உயரம் பற்றிய சிந்தனைகளே ஏற்படாது என்பதால் உருமாறி அவர்கள் உறவு கொள்ள ஈடுபாடு காட்டுகின்றனர் போல. ஈடுபாடு இடுப்புத் துணியைப் பறிகொடுக்கவா வைக்கும்?
”என்னப்பா இப்போ போய்த் துணியைத் தொலைச்சுட்டு நிக்கறீங்க. நாலரை மணிக்கு ஆட்டம் இருக்கு.. நான் தனியா எப்படி செய்ய முடியும் சொல்லுங்க”
அவர்கள் சமாதிக்குப் பின்னால் இருந்து எட்டிப் பார்த்துவிட்டு இரண்டு புறாக்களாக உருமாறினார்கள்.
இப்போ எதுக்கு இது? அழகுப் பிள்ளை சலித்துக் கொண்டார். தவிட்டு நிறத்தில் நீளமான கழுத்தோடு உள்ள புறா குறளி. கருப்பும் சாம்பலுமாக நிறத்தில் குண்டுப் புறா நெட்டையன். அழகுப்பிள்ளை மனதில் குறித்துக்கொண்டார்.
”மேஜிக்லே டப்பாவுக்குள்ளே காகிதத்தைத் தீ கொளுத்திப் போட்டதும் உள்ளே இருந்து ஒண்ணுக்கு ரெண்டு புறாவா பறக்கட்டுமே” என்றான் நெட்டையன்.
சரி, அதுவும் ரெண்டு நிமிஷத்துலே முடிஞ்சுடும். மீதி நேரம் நான் தனியா குதிக்கட்டுமா அழகுப்பிள்ளை கேட்டார். வேறே என்ன வழி என்றாள் குறளி.
வேறே உருவமா கூடு விட்டு கூடு பாயலாமா? நெட்டையன் திடீரென்று நினைவு வந்தது போல் யோசனை சொன்னான்.
அதுக்கு நமக்கு அனுமதி இல்லை. சித்தர்களுக்கு மட்டும் தான் அது நடக்கும் என்று அழகுப் பிள்ளை அதைத் தள்ளினார். உயிரை இடம் மாற்றும் சிக்கலான விஷயமில்லை உரு மாற்றம்.
அவர் சொன்னால் மற்ற இரண்டு பேரும் கேட்க வேண்டும் என்பது அந்தக் குழுவில் எழுதாத சட்டம் என்பதால் மறுப்பு ஏதும் எழவில்லை.
டால்டா டப்பாவில் உட்கார்ந்த இரண்டு புறாக்களோடு தனியாக ராஜபார்ட் வேஷம் கட்டிப் புறப்பட்டார் அழகுப் பிள்ளை. புறாக்கள் டப்பாவில் இருந்து பறந்ததும் வெளியே மரத்தின் கிளையில் இருக்க வேண்டும் என்று ஏற்பாடு. இன்னும் இரண்டு மணி நேரத்தில் நிகழ்ச்சி முடித்துப் பணம் வாங்கி கடைவீதியில் கைத்தறிச் சேலை, வேட்டி வாங்கி ஓடிவருவார் அழகுப் பிள்ளை. பணம் பற்றாவிட்டால் நாலு பேரிடம் கையேந்தவும் தயங்க மாட்டார் அவர். அப்புறம், மூன்று பேருக்கு ரெண்டு நாளாவது சாப்பிட வழி ஏற்பட வேண்டும். அழகுப் பிள்ளை தலையில்தான் எல்லாப் பொறுப்பும்.
அவர் பள்ளிக்கூடத்துக்குப் போனபோது மத்தவங்க எங்கே என்று ஹெட்மாஸ்டர் கேட்டார். மேலுக்கு முடியாம போயிட்டாங்க என்றார் அழகு. ஹெட்மாஸ்டர் முகத்தில் நிராசை.
”கரஸ்பான்டெண்ட் வந்திருந்தார்.. இப்போ தான் போறார்.. போன தடவை நீங்க வந்தபோது சொல்லியிருந்தாராமே. பேண்ட், சட்டை தரேன்னு. வீட்டுக்கு ஆள் அனுப்பி எடுத்து வரச் சொன்னார். அதோ இருக்கு பாருங்க மிலிட்டரி காக்கி பேண்ட், சட்டை. உயரமான ஆளுங்க போட ஒரு ஜோடி, குள்ளமான ஆளுங்களுக்ககாக மடிச்சுத் தையல் பண்ணின ரெண்டு சராசரி உயர ஜோடி பேண்ட், சட்டை. அதுவும் சொல்லியிருந்தீங்களாமே. ஆர்மியிலே போட்டு பழசாக்கினது,. தெருவிலே டெய்லர் கிட்டே உடனே கொடுத்து துணி மடிச்சுத் தச்சு வாங்கி அமர்க்களம் பண்ணியிருக்காரு. உங்களுக்கு சரியா இருக்கும்”.
அழகுப் பிள்ளைக்கு வயிற்றில் பால் வார்த்ததுபோல் இருந்தது. டால்டா டப்பா தோளில் ஊசலாட இரு கரம் கூப்பி கரஸ்பாண்டெண்ட் சாருக்கும் எச்செம் சாருக்கும் நன்றி சொல்லி வணங்கினார். பிறகு, இது கரஸ்பாண்டெண்டுக்கு என்று ஒரு குட்டிக்கரணம் அடித்தார். தொடர்ந்து, ஹெட் மாஸ்டருக்கு இன்னொரு பல்டி.
இதோ வந்துடறேன் சார் என்று வெளியே கைகாட்டியபடி டால்டா டப்பாவுக்குள் வாஞ்சையோடு நோக்கினார் அழகுப் பிள்ளை. புறா இரண்டும் எங்கே?
ஊருணிக் கரைக்கு டால்டா டப்பாவோடு வந்தபோது யாரோ அவற்றை டப்பாவில் இருந்து எடுத்திருக்க வேண்டும். அவற்றை எடுத்து என்ன ஆகப் போகிறது. அப்படி எடுத்திருந்தால், அவர்கள் உடனே ஆண், பெண்ணாக உரு மாறி இருக்கலாம்.
டால்டா டப்பாவுக்குள் இரண்டு புறாக்கள் மனிதர்களாக இட நெரிசலைச் சகித்துக் கொண்டு காத்திருக்க வேண்டும். அது முடியாமல் திரும்பிப் போய் விட்டார்களா?
அழகுப் பிள்ளை காலி டால்டா டப்பாவை ஓரமாக வைத்து விட்டு வெளியே ஓடினார். அவர்கள் தன்னிச்சையாகப் பறந்து போயிருப்பார்களோ என்று எதிரே மரத்தை நிமிர்ந்து பார்த்தார். அங்கே தொடர்ந்து துளைத்துக் கொண்டிருந்த மரங்கொத்தி தவிர வேறு எந்தப் பறவையும் இல்லை.
ஊருணிக் கரையும் வெறுமையாகத்தான் இருந்தது. சமாதிக்குள் தேனீக்கள் ஒன்றிரண்டாகப் பறந்து கொண்டிருந்தன. கொட்டும் என்ற பயம் காரணமாக உள்ளே போகாமல் திரும்பினார் அழகுப் பிள்ளை.
அவர் பள்ளிக்குள் போகும்போது இரண்டு புறாக்களும் டால்டா டப்பாவுக்குள் இருந்தன. எங்கே போனீங்க? குறளி வெட்கத்தோடு சொன்னாள் –
“வழியிலே ஒரு வீட்டு வாசல்லே ஒரு கிழவியம்மா கருவாடு உலர்த்திக்கிட்டிருந்தா. அவள் உள்ளே போனபோது ஆளுக்கு ரெண்டு எடுத்துப் போய் சாப்பிட்டு வந்துட்டோம்” என்றாள் மெதுவாக. டால்டா டப்பாவில் கருவாடு வாடை அடித்ததை ஆசையோடு முகர்ந்தார் அழகுப்பிள்ளை.
“காக்கா தான் திருடிக்கிட்டு போகும்.. புறாவுமில்லே இந்தக் காலத்துலே கருவாடு களவாடுது..என்று அங்கலாய்த்துக்கொண்டு கிழவி துடைப்பத்தை தூக்கி எறிஞ்சா.. நெட்டையன் கால்லே பட்டு, அதான் நொண்டறான்” என்றாள் அவள்.
“பசித்த வயிறு .. கால் உடஞ்சாலும் பரவாயில்லேன்னு மனசுலே வந்தது” என்றான் நெட்டையன் குற்றம் செய்த முகபாவத்தோடு.
”ஆமா, சந்தோஷமா இருக்க வயித்திலே சோறு வேணும். இல்லாட்டி சந்தோஷமா இருந்தப்புறம் ஏதாவது வயத்துலே போடணும்” என்றாள் குறளி.
வாஸ்தவம் தான் என்று தலையை ஆட்டியபடி அழகுப்பிள்ளை உள்ளே போனார்.
ஒருவர் இருவராக பிள்ளைகள் வந்து உட்கார்ந்தார்கள். எத்தனை நேரம் தான் அந்தர்பல்டி அடிப்பது? அழகுப் பிள்ளைக்குக் களைத்து விட்டது. ஹெட்மாஸ்டர் வந்ததும் ஆரம்பித்து விட வேண்டியதுதான் என்றார் நெசவு ஆசிரியர். எச்செம் தான் வரும் வழியாகக் காணோம்.
அவர் மூன்றாம் வகுப்பு எடுக்கும் வாத்தியாரம்மாளோடு ஏதோ நீளமாகப் பேசிக் கொண்டே இருந்தார். அந்தம்மாவும் பேச்சை வளர்த்துக்கொண்டே போனார். தென்மேற்கு பருவக்காற்று, வெட்டுக்கிளிகள், உரு மாறும் உயிரினங்கள் என்று அவள் ஹெட்மாஸ்டரை தலைக்குப் பின் ஒளி வட்டத்தோடு அறிவுடையாராக்கிக் கொண்டிருந்தாள்.
ஒரு வழியாக, முன்பனிக் காலம் என்று வாத்தியாரம்மாள் ஆரம்பிக்க இன்னொரு நாள் பார்க்கலாம் என்று சமாதானமாகி எச்செம் எழுந்திருந்தார். மேஜிக் பார்க்க வரல்லியா என்று அன்போடு மூன்றாம் வகுப்பு வாத்தியாரம்மாவை அழைத்தார். ”இல்லே சார், வீட்டுலே இட்லிக்கு ஊறப்போட்டு வச்சிருக்கேன். மாவு ஆட்டி வேவிக்கணும். அவர் விரதத்துலே இருக்கார், வாறேன் சார்”
பல்டி அடித்துப் போனபோது அழகுப் பிள்ளைக்கு எச்செம் அறையிலிருந்து காதில் விழுந்தது. நிகழ்ச்சி முடிந்தாவது ஓட்டல் இட்லி ரெண்டு சாப்பிட வேண்டும் என்று தீர்மானப்படுத்திக் கொண்டார் அவர். எச்செம் கொடுத்திருந்த ரெண்டு ரூபாய் பணம் இன்னும் பத்திரமாக சட்டைக்குள் ஏகமாக மடங்கி இருக்கும். அதை நேராக்கி இட்லி சாப்பிட வைத்துக்கொள்ள நினைத்தார் அவர்.
சட்டைக்குள் அந்தப் பணத்தை எடுத்துப் பார்த்தார். நுண்ணிய காகிதக் குழல் போல இருந்த அந்தப் பண நோட்டின் ஒரு ஓரத்தில் இருந்து பார்க்க, மறு முனையில் எல்லா வர்ணங்களோடும் உலகம் விரிந்து கொண்டிருந்தது.
”வரீங்களா அழகுப் பிள்ளை?”
நெசவு ஆசிரியர் அழைக்க, பணத்தைத் திரும்ப உள்ளே வைத்தபடி அந்தர்பல்டி அடித்து அறையின் பின்பகுதியில் சற்றே உயரமாகக் கட்டி இருந்த மேடைக்குப் போனார் அவர். பையன்களின் கைதட்டல் அதிகமாக இருந்தது.
முதலிலேயே காகிதம் கொளுத்தி டால்டா டப்பாவில் போட்டு புறா வரும் மேஜிக். இரண்டு புறாக்களும் விசேஷமாக கொல்லன் வடிவமைத்த அந்த ஒட்டுப்போட்ட டால்டா டப்பாவின் கீழ் ரகசிய அறையில் மூச்சு முட்டியபடி இருந்தன. நெட்டையன் அந்த நிலையில் குறளியோடு இன்பம் துய்க்க ஆரம்பித்து விடாமல் இருக்க வேணுமே என்று அழகுப் பிள்ளைக்கு கவலை ஏற்பட்டது. என்னதான் மனுஷ ஜோடி என்றாலும் புறா தர்மத்தில் தானே அந்த உடல்கள் இயங்கும்?
நல்ல வேளை. அழகு காகிதத்தைக் கொளுத்தி டப்பாவில் போட்டு விட்டு இடது கை ஆள்காட்டி விரல் நுனியால் டால்டா டப்பாவின் கீழ்ப் பகுதியை நெம்பித் திறக்க இரண்டு புறாக்களும் ஒன்றன்பின் ஒன்றாக வெளிப்பட்டுப் பறந்தன. எச்செம் அதிகமாக கைதட்டி, ”புறாக்கள் அருமையான பறவைகள். சமாதானத்தின் சின்னம் இவை. நம் ஜனாதிபதிக்கு மிகவும் பிடித்த பறவைகள்” என்று கௌரவமாகப் பேச, புறாக்களை விட அவருக்கு ஆசிரியர்களின் கைதட்டு ஆரவாரம் அதிகமாக இருந்தது.
ஐந்து நிமிடம் கழித்து அறை வாசலில் நிழலாடியது. மந்திரக்குச்சியை அசைத்து அந்த புறாக்களை என்ன செய்தேன் தெரியுமா என்று அழகுப்பிள்ளை கேட்டபடி வாசல் பக்கம் குனிந்து வணங்கி நின்றார். புறாக்கள் போல் குக்கும் குக்கும் என்று சத்தமிட்டபடி குறளியும் அவள் பின்னால் நெட்டையனுமாக ராணுவ உடையணிந்து அணிவகுத்து உள்ளே நுழைய மிக அதிகக் கைதட்டு கிட்டியது அவர்களுக்கு. இப்படி உள்ளே நுழைய அழகுப் பிள்ளை தான் பயிற்சி கொடுத்திருக்கிறார் மற்ற இருவருக்கும்.
”நாங்க மூணு பேரும் பிசாசு ராஜா அவையில் பாதாள உலகம் சினிமாவில் இப்படித்தான் ஆடிக்கிட்டே வருவோம்”.
அழகுப் பிள்ளை சொன்னபடி டால்டா டப்பாவைத் தட்ட, கையில் இன்னும் புறா பறந்த அக்னிச்சூடு அடங்காமல் சுட்டது. குறளி சுழன்று சுழன்று ஆட, அவளை மேலும் கீழுமாகக் குதிக்க வேணாம் என்று ஆடியபடியே உதடசைத்து அவள் கண்ணில் படச் சொன்னார் அழகுப்பிள்ளை. மின்சார விசிறிக்குச் சற்றே தான் கீழே இருந்த அவள் தலையில் அடிபட வாய்ப்பு இருந்ததால் அந்த மாதிரியான ஆட்ட அசைவுகளைத் தவிர்க்க வேண்டிவரும் என்பது குறளிக்குத் தெரியும்.
ஆடி முடித்ததும் அழகுப் பிள்ளை அந்தக் காட்சியை எப்படி ஒரு ராத்திரி முழுக்கப் படமாக்கினார்கள் என்று விவரமாகச் சொல்ல ஆரம்பித்தார். ஹெட் மாஸ்டரும் சில ஆசிரியர்களும் சுவாரசியமாகக் கேட்டார்கள். ஆரிப்ளக்ஸ் கேமரா, லைட்டிங், பூம் மைக் என்று வினோதமான சினிமா சம்பந்தப்பட்ட வார்த்தைகள் தூவிய அந்தப் பேச்சிலும், தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை பாடுவது போல் குழுவாகப் பாடும் மன்னர் வாழ்த்துப் பாடலிலும் பிள்ளைகளில் சிலர் தவிர மற்றவர்களுக்கு ஈடுபாடு இல்லை. பதினைந்து வருடம் முந்தைய குழந்தைகள் பாதாள உலகம் சினிமா பார்த்தவை. அவர்கள் இப்போது கல்லூரி மாணவர்கள். இந்தக் குழந்தைகளுக்குத் தெரியாத பிசாசு உலகத்தை இவர்களுக்கு அறிமுகப் படுத்துவதால் என்ன பயன்?
”நீங்க படிச்சு பரீட்சை எழுத நாலடியார் மனப்பாடம் செய்யக் கஷ்டப்பட வேண்டாம். இதோ ஈசியான வழி. பாட்டாகப் பாடி நினைவு வச்சிக்கலாம்”.
அழகுப்பிள்ளை சொல்லி முடிக்கும் முன் சுமாரான குரல்களில் நாலடியார் பாடியபடி குறளியும், நெட்டையனும் மயில்கள் ஆகி விட்டார்கள். மனிதக் குரலில் பாடி மெல்ல அசையும் மயில்கள் அந்த சாயந்திரத்தை அழகாக்கின. உற்சாகமாக மயிலிரண்டும் ஆட, நட்டுவன் போல் அவற்றைச் சுற்றி நடந்து கூடவே ஆடினார் அழகுப் பிள்ளையும்.
அந்த மயிலாட்டமும் பாடலும் பெருவாரியாக ரசிக்கப்பட, ஹெட் மாஸ்டர் எழுந்து சொன்னார் – ”இந்த அழகான பறவைகள் தோகை விரித்து மறுபடி ஆட முடியுமா? அந்த நாலடியார் பாடலுக்கு நான் உரை சொல்கிறேன். நானும் கூடவே ஆடுகிறேன்”.
அவர் ஆட ஆரம்பித்து ’குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும் மஞ்சள் அழகும் அழகல்ல’ என்று அவருடைய குரலில் அஜீர்ணம் கண்ட பகாசுரன் போல் பாடினார். தலைமுடியை வாரி முடிப்பதால் ஏற்படும் அழகும், உடுத்த துணி அழகும், மஞ்சள் பூசிக் குளித்து ஏற்படும் அழகும் உண்மையில் அழகு இல்லை என்று தொடங்கும் நாலடியார் உரையைச் சொன்னார்.
மயில்கள் ஒயிலாக ஆட, அவர் அழகுப் பிள்ளையோடு சேர்ந்து ஆடி மயில்களைச் சுற்றிச் சுற்றி வந்தார். நாலடியார் பாடல் முழுக்கத் தெரிந்த இரண்டாம், ஐந்தாம் வகுப்பு ஆசிரியைகளும் நெசவு ஆசிரியரும் ஆளுக்கொரு ராகத்தில் குஞ்சி அழகும் கொடுந்தானை கோட்டழகும் பாட, இது கவுண்டர் பாயிண்ட் என்று இசையில் சொல்லப்படும் என விளக்கினார் எச்செம். எல்லாம் தெரிந்த ஹெட் மாஸ்டரை அந்தப் பள்ளிக்கு அளித்த கடவுளை வாழ்த்தி அன்னப் பறவையானார் அழகுப் பிள்ளை. மயில்கள் அதற்குள் நெட்டையனும், குறளியுமாக பழையபடி ஆகியிருந்தன.
குறளி பாதாள உலகம் சினிமாவில் எப்படி குள்ளன் அன்னப் பறவையாகி அந்த அன்னப் பறவை கதாநாயகனுக்கு கதாநாயகி அனுப்பிய ரகசியச் செய்தியைக் கொண்டு போனது என்பதை அதற்கான பதினைந்து வருடம் முன் பிரபலமாகி இருந்த பாட்டைப் பாடி விளக்கினாள். அன்னப் பறவை அறைக்குள் மின்விசிறி மேல் படாமல் கீழாக மெதுவாகச் சிறகடித்துப் பறந்தது. ’ஓ என் மணவாளனே, மன்னன் என் நேசனே’ என்று குறளி பாட, டீச்சரம்மாக்கள் கைதட்ட வாத்தியார்கள் புன்சிரிப்போடு அங்கீகரித்தது போல் பார்த்திருந்தார்கள்.
ஒன்பது, பத்தாம் வகுப்புகள் பள்ளியில் வரும்போது நளவெண்பா பாடமாகலாம். அப்போது இந்த உரு மாறுதல் மற்றும் திரைப்படப் பாடல் மூலம் முழு சிலபஸ்ஸையும் மனப்பாடம் செய்ய வைக்கலாம் என்றார் ஹெட்மாஸ்டர். அது நடக்க இன்னும் பத்தாண்டுகளாவது ஆகலாம் என்றார் நெசவு ஆசிரியர். நான் ரிடையர் ஆகியிருப்பேனே என்றார் ஹெட் மாஸ்டர். சற்று நிறுத்தி, நான் அப்போது உயிரோடு இருப்பேனோ என்னமோ என்றார் முகத்தில் சோகம் ததும்ப.
அது துக்ககரமானது என்று எல்லா ஆசிரியர்களும் எழுந்து நின்று கருத்துத் தெரிவித்தார்கள். அன்னம் போன்ற தூய்மையைக் குறிக்கும் பறவைகள் இருக்கும் இடத்தில் இறப்பு பற்றி அதுவும் ஹெட் மாஸ்டர் போன்ற நல்லவர்களின் வாயால் அவர்களுடைய இறுதி பற்றிப் பேசுவது வேண்டாமே என்று ஹெட் மாஸ்டரைக் கெஞ்சினார்கள்.
அன்னப் பறவையும் இரண்டு மனிதர்களும் சந்தோஷம் தரும் இசையமைப்பில் ’வசந்தம் வந்ததே ஆனந்த வசந்தம் வந்ததே’ என்று பாடி நிற்க ஆசிரியர்கள் அனைவரும் ஹெட் மாஸ்டரைப் பார்த்து அதே வரிகளை மீண்டும் பாடி இருக்கும் இடத்திலேயே சிக்கனமாக நடனமாடினார்கள்.
புன்சிரிப்போடு அவர்களுடைய அன்பையும் பரிவையும் அங்கீகரித்து ஏற்று வாங்கிய எச்செம் கைக்கடியாரத்தைப் பார்த்தார். ஐந்தரை ஆகப் போறதே.. நாம் ஒரேயடியா மேஜிக்லே இருந்து இருட்டிடுச்சுன்னா பசங்க வீட்டுக்கு போறது சிரமமாயிடுமே..
அழகுப்பிள்ளை சுயரூபம் அடைந்திருந்தார் அப்போது. அடுத்த நீதிநெறி வெண்பா பாட்டுக்காக ’கொம்புளதற்கு ஐந்து முழம் குதிரைக்குப் பத்து முழம்’ என்று குறளியும் நெட்டையனும் பாடியபடி மாடுகளாக உரு மாறத் தொடங்கிய போது வேண்டாம் என்று நிறுத்திவிட்டார் அழகுப் பிள்ளை.
பசங்கள் எல்லோரும் ஏதோ கஷ்டம் தீர்ந்த நிம்மதியோடு ஒரே நேரத்தில் வெளியேறி பின் கதவின் அருகே கழிப்பறை வாசலிலே ஒரே நேரத்தில் குந்தி சிறுநீர் கழித்தார்கள். ”டேய் உள்ளே போய்ப் போங்கடா” என்று சத்தமிட்டபடி நெசவு ஆசிரியர் தானும் வெளியில் மூத்திரம் போனபடி தலையைத் தூக்கி வானத்தில் எதையோ மும்முரமாகத் தேடிக் கொண்டிருந்தார். சிவப்பு பூசி சூரியன் மறைந்து கொண்டிருக்கும் அந்திப் பொழுது என்று கவிதை சொல்ல அவருக்கு ஆசை. நீர் சரியாகப் பிரிந்தால் கவிதை என்ன காவியமே எழுதுவார் அவர். கைத்தறியில் துண்டு தவிர புடவை கூட அவர் நெய்வார். சந்தர்ப்பமும் நூலும் சொன்னது கேட்கும் கிட்னியும் தான் வாய்க்கவில்லை அவருக்கு.
ஹெட் மாஸ்டர் தன் அறையில் இருந்து வெளிப்பட்டு, அழகுப் பிள்ளையை உள்ளே வரச் சொன்னார். “இந்தாருமய்யா, மொத்த வசூல் ஆறு ரூபாய் ஐம்பது நயாபைசா, ஆசிரியர், ஆசிரியைகள் அன்பளிப்பு எட்டு ரூபாய் எழுபத்தைந்து நயாபைசா, ஆக மொத்த வசூல் பதினஞ்சு ரூபா, இருபத்தைந்து நயாபைசா. இந்த ரசீதில் கையெழுத்து போட்டுக் கொடும்
அழகுப் பிள்ளை சந்தோஷமாக கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். சைக்கிள்களின் அணிவகுப்பாக ஆசிரியர்கள் வெளியேற, குடைகளோடு வாத்தியாரம்மாக்கள் சாப்பாட்டுப் பாத்திரம் வைத்த ப்ளாஸ்டிக் ஒயர் பின்னல் பெட்டிகளோடு அடுத்து வெளியே நடந்தார்கள். வாட்ச்மேனிடம் அழகுப்பிள்ளை நன்றி சொல்லி சட்டைப் பையில் கை வைத்தபடி பார்த்தார்.
”பரவாயில்லே அழகு, போய்ட்டு வா. இந்தப் பணம் ஒரு வாரம் வருமா உனக்கு? நான் அதையும் பிடுங்கக் கூடாது. நல்லா சாப்பிட்டு தூங்கி ரெஸ்ட் எடு. நல்லா இன்னொரு ஸ்கூல்லே ஆடிட்டு வா. வயிறை வாட விட்டுடாதே. உனக்கு மட்டுமில்லே, அந்த ரெண்டு ஜீவனுக்கும் கூட அதேதான்..”
அழகுப் பிள்ளை அவனுக்குக் கை கூப்பி வணங்கி, போதாது என்று பட வாட்ச்மேனுக்காக நாலு அந்தர்பல்டி சுறுசுறுவென்று அடித்து, நெட்டையனோடும், குறளியோடும் ஊருணிக்கரைக்கு வந்தார்.
“போய்த் துணி திரும்பி வந்துடுச்சான்னு பாருங்க, சமாதி பிரதேசத்திலே சமயா சமயம் அதிசயம் எல்லாம் நடக்கும்” என்றபடி ஒரு சமாதியில் உட்கார்ந்து சட்டைப் பைக்குள் இருந்து பீடி எடுத்துப் பற்ற வைத்தார். அடித்த பல்டிக்கு பீடி பிய்ந்து போயிருக்க வேண்டும். ஆனால் அது வாங்கியபடிக்கே இருந்ததில் ஆறுதல் அழகுப் பிள்ளைக்கு.
இதென்ன கோராமை என்றாள் குறளி கையை முன்னுக்கு நீட்டி எதையோ காட்டி.
துணி இருக்கு என்று சொல்லியபடி, சமாதி உள் அறையில் இருந்து இன்னொரு ஜோடி குறளியும், நெட்டையனும் வந்து கொண்டிருந்தார்கள். அந்தக் குறளி இரண்டு அடி உயரமும், நெட்டையன் ஏழடிக்கு ஓங்கு தாங்காகவும் இருந்தார்கள்.
ஐந்து பேர் பதினேழு ரூபாயில் எத்தனை நாள் பசியாற முடியும்? ஹெட் மாஸ்டரிடம் கேட்டிருக்க வேண்டும்.
எல்லாரும் கீரிப்பிள்ளை ஆகி விடலாம் என்றார் அழகுப் பிள்ளை. இருட்ட ஆரம்பித்தது.
-இரா.முருகன்