அன்பின் நறுமணம்


ஜானகிராமனை நினைக்கறப்ப எப்பவுமே எனக்குள்ள மெலிசா ஒருவித நெகிழ்ச்சிய ஃபீல் பண்ணுவேன். என் வாழ்க்கைல ரொம்பக் கடன்பட்ட மறக்கவே முடியாத பர்சனாலிட்டின்னா அது ஜானகிராமன்தான். எனக்கு எவ்வளவோ நண்பர்கள். அதுல கு.ப.ரா, ந.பிச்சமூர்த்தி மாதிரி மூத்தவர்கள் இருந்திருக்காங்க. என் சமகாலத்து நண்பர்கள் கரிச்சான்குஞ்சு, திருலோகசீதாராம், சாலிவாகனன், அப்பறம் பிரகாஷ், கலியமூர்த்தி, இப்போ தேனுகா, ரவிசுப்பிரமணியன், செல்வசேகரன், முத்து, இப்படி. நாளைக்கு இன்னும் புதிய இளம் நண்பர்கள் கூட எனக்குக் கிடைக்கலாம். இருக்கட்டும். எல்லாருமே ஒவ்வொரு வகைல எனக்கு முக்கியமானவங்கதான். என் மேல அன்பு உள்ளவங்கதான். நானும் அப்படித்தான் இருக்கேன். இப்ப கடைசியா வந்த கட்டுரைத் தொகுப்பைக் கூட என்மீது அதிக பிரியங்கொண்ட மறைந்த இலக்கியமேதை கரிச்சான்குஞ்சுவுக்கு சமர்ப்பணம் அப்படின்னுதான் போட்டுருக்கேன். அப்படி என்கூட நிழலாவே இருந்தவர் அவர். அவ்ளோ இலக்கிய உதவிகளை எனக்கு செஞ்சவர். பிரகாஷும் அப்படி பலவிதமா என்கிட்ட அன்பக் காமிப்பார். ஆனா, இவங்க எல்லாரைவிட கரிச்சான்குஞ்சும் ஜானகிராமனும் எனக்கு ஸ்பெஷல். எனக்கு ஒரு கண் கரிச்சான்குஞ்சுன்னா, இன்னொரு கண் ஜானகிராமன். அவருக்கும் நான் அப்படித்தான் இருந்திருக்கேன்னு அவர் நடந்துகிட்ட விதத்துல செஞ்ச காரியங்கள் வழியா நான் நினைக்கிறேன்.

நான் காலேஜ்ல படிச்ச காலத்திலேர்ந்து என்னோட பதினாறாவது வயசுலேர்ந்து அதாவது முப்பத்தாறு முப்பத்திஏழுலேர்ந்து அவர் எனக்குப் பழக்கம். ரொம்ப சங்கோஜி. குரலும் கு.ப.ரா குரல் மாதிரி, மூக்கால பேசுறதுபோல இருக்கும். அதிக சத்தம் வராது. சாஃப்ட்டாதான் பேசுவார். பேசுற மொழிலயும் சரி, காட்டுற அக்கறையிலயும் சரி, நடந்துகிற பாவத்துலயும் சரி, அப்படி ஒரு அன்ப செலுத்தி வசீகரிச்சுருவார் யாரையும். அவர் அப்ப எழுதத் துவங்கல. கரிச்சான்குஞ்சும் எனக்கு அப்பதான் பழக்கம். எனக்கும் ஜானகிராமனுக்கும் பெரிசா வயசு வித்யாசமில்ல. ஒரு வயசு வித்யாசம் இருக்கும். நான் அவருக்கு மூத்தவன் அவ்ளோதான். ஆனா, அவர் என்னை வியந்து பாத்துகிட்டே இருந்தார். நான் அவருக்கு முன்ன எழுதினது காரணமா, இல்ல, அவர் ஆரம்பகால எழுத்துக்கள்ள திருத்தங்கள் சொல்லி இப்படி மாத்தி பாருங்க அப்படின்னல்லாம் சொன்னதா, இல்ல, கு.ப.ரா, பிச்சமூர்த்தி இவங்களோட நான் நெருங்கி பழகினதா அல்லது என்னோட படைப்புகளா எதுன்னு எனக்குத் தெரியல. ”நித்திய கன்னி” முன்னுரையில கூட புதுமைப்பித்தன், கு.ப.ரா., பிச்சமூர்த்தி, பி.எஸ்.ராமய்யா இவங்க கதைகளோட என் கதையும் அவருக்கு வழிகாட்டினதா அவர் எழுதிருக்கார். ஆனா, அப்படில்லாம் ஒண்ணுமில்ல. அவர் ஞானம் பெற்ற வழி வேற. அவர் அப்படி நினைச்சிகிட்டார். எப்பவும், என்னை ரெண்டு ஸ்டெப் மேல வச்சித்தான் பாப்பார். கடைசி வரை சார்ன்னுதான் கூப்பிட்டுருக்கார். ரொம்ப சில ரேரான சமயங்கள் தவிர. என் கிட்ட கோச்சுகிறப்ப, கடிஞ்சுகிறப்ப கூட.

அவர் என் வீட்டுக்கும் நான் அவர் வீட்டுக்குமா இயல்பா, தேடிப் போய் மணிக்கணக்காப் பேசி நெருக்கம் உண்டான பிறகு நான் அவரை எனக்கு சமதையாக்க, சகஜமாக்க எவ்ளோவோ முயற்சி பண்ணிருக்கேன். அது வெற்றி பெறல. சில விஷயங்களுக்கு நமக்கு காரணமே புரியாது. ஆனா, சாப்பாடு விஷயம் உட்பட எங்களுக்குள்ள பல ஒத்துமை இருந்தது. உதாரணத்துக்கு, நல்ல காப்பிக்காக ஏங்குவோம். அலைஞ்சு தேடித் தேடிப்போய்க் குடிப்போம். நல்ல டிகிரி காப்பிக்கு சப்புக்கொட்டாத கும்மோணத்து நாக்கு எங்கயாச்சும் இருக்கா என்ன?

அவரைப் பத்தி குறைஞ்ச பட்சம் ஒரு நூத்தம்பது பக்கத்துலயாவது புஸ்தகம் எழுதணும்ன்னு பாக்கிறேன். நான் அவரைப்பத்தி எழுதினது ரொம்ப ரொம்ப குறைச்சல். அப்ப இருக்க மூட், ஞாபகங்கள், உடல் உபாதைகள் எல்லாம் சேந்தது இல்லையா அது. கரிச்சான் குஞ்சு
கு.ப.ரா பத்தி எழுதினது போல, கரிச்சான்குஞ்சு பத்தியும் பிச்சமூர்த்தி பத்தியும் எழுத எனக்கும் ஆசைதான். என்ன செய்யறது? எண்பத்துமூணுக்கு பிறகு என்னால எழுதவே முடியல. பாக்கலாம். இப்ப தொண்ணுத்துமூணுல வெளி வந்த இந்த இலக்கிய நண்பர்கள் கட்டுரை தொகுப்புல வந்திருக்கே, இந்த ஆகச் சிறுசான கட்டுரைகளைக்கூட எழுத நான் பட்டபாடு எனக்குத்தான் தெரியும்.

அவர் போனப்ப, ஒரு மாசம்வரை என்னால இயல்பா இருக்க முடியல. எந்த ஒரு மரணமும் என் அப்பா, அம்மா மரணம் உட்பட, என்னை அந்த அளவு பாதிச்சது இல்ல. அந்த அளவுக்கு அவர் எனக்குள்ள போயிட்டார். (தழு தழுக்கிறார்) அது வேறொரு ஆத்மா.

நான் எங்கயோ போயிட்டேன் பாருங்க. ஏன் அவர் அவ்ளோ முக்கியம், இப்படி பாதிக்கிற அளவுக்குன்னு கேட்டிங்கன்னா, அதுக்கு பல காரணங்கள் இருக்கு. ரொம்ப முக்கியமான காரணம், என்னோட உச்சபட்சமான மனக்கொந்தளிப்பு நாட்கள்ல மாசக்கணக்குல என்னை அவர் வீட்டுல வச்சிப் பராமரிச்சார். காப்பாத்தினார். அவரோட 24சி, ராக்கியப்ப முதலித்தெரு, மயிலாப்பூர் வீட்டை என்னால மறக்கவே முடியாது. அவர் எவ்ளவோ உதவிகளைப் பண்ணிருக்கார் எனக்கு.

எழுத, புக் வெளிவர, பொருளாதார உதவிகள் இப்படி. முக்கியமா மனோரீதியான தெம்பை குடுத்தார். நான் சில விஷயங்கள் எழுத அவர்தான் காரணம். குறிப்பா ரேடியாவுக்கு கிட்டத்தட்ட இருபது நாடகங்கள் எழுதியிருக்கேன். அந்த டெக்னிக் அவர்தான் சொல்லிக் கொடுத்தார். நீங்க வழக்கம் போல உங்க கதைய சொல்லுங்க சார். டிஸ்கிருப்ஷன்ல உள்ளத ஆடியோல கேக்கிறவனுக்காக டயலாக்கா மாத்துங்க. சிம்பிள் அப்படின்னாரு. அது வந்துருதுச்சு எனக்கு. இவ்ளோதான் சார். இது பெரிய கம்பசூத்திரம் எல்லாம் இல்ல. எல்லாமே உங்களுக்கு ஈஸியா முடியும்னு சொன்னார். பதிமூணு நாடகங்கள் ஒலிபரப்பாயிருக்கு. அதெல்லாம் இப்ப எங்க போச்சுன்னு தெரியல.

அப்பறம் சகஸ்ரநாமத்துக்கு நாடகம் எழுத வைக்கணும்ன்னு என்னைக் கூட்டிட்டுப்போய் அறிமுகப் படுத்தி வச்சார். சகஸ்ரநாமம் அதுக்கு முன்னயே என் வாசகரா இருந்தது. என் கதைகளை படிச்சத சொன்னது -எல்லாம் எனக்கு அவ்ளோ ஆச்சர்யமாவும் சந்தோஷமாவும் இருந்தது. ‘மோகமுள்’-ளுல என்னை ஒரு பாத்திரமாவே படைச்சார் ஜானகிராமன். இப்படி அவருக்கு அன்ப ஏதோ ஒருவிதமாச் செலுத்திட்டே இருக்கணும் எதையாவது செஞ்சிகிட்டே இருப்பார். ஆனா, தான் செஞ்சிருக்கோம்ன்னு துளிகூட நமக்கு காட்டிக்கிற சிறு சொல்லோ, செயலோ அவர்கிட்ட இருக்கவே இருக்காது.

மயிலாப்பூர் வீட்ல மாடில அவர் படிக்க ரெஸ்ட் எடுக்க ஒரு ரூம் இருந்தது. அதுல புஸ்தகங்கள் எல்லாம் வச்சிருந்தார். அந்த ரூம எனக்கு ஒதுக்கி குடுத்துட்டார். அங்கேயே தான் இருந்தேன். சொந்தக்காரங்க வீட்டுக்குக் கூட போய் கூச்சமில்லாம ரெண்டு நாள் தங்காதவன் நான். அவங்க வீட்லயும் சொந்தகாரங்களை அப்படி தங்க வச்சி உபசரிக்கலாம். ஆனா என்னை, அதும் மனக்குழப்பத்தின் உச்சியில் இருக்கும் என்னை, ஏன் அப்படி உபசரிக்கணும். என்னால அவருக்கு ஒரு ப்ரயோஜனமும் கிடையாது. செலவும் உபத்திரவமும்தான். ஆனா, அந்த வீடே அவர் மனைவி, அந்த மூணுகுழந்தைகள் உட்பட என்னை அப்படி உபசரிச்சாங்க. ஜானகிராமன் கூடப்பிறந்த சகோதரருக்கு மேலா என்னைக் கவனிச்சிகிட்டார். நான் செளராஷ்ட்ரா சமூகத்தைச் சேர்ந்தவன். ரெண்டு பேரும் சைவம்ன்னாலும் எங்க நேம நிஷ்டைகள் வேற. அவர் குடும்பத்துப் பூஜை புனஸ்காரங்கள் வேற. அவங்க அப்பா வால்மீகி ராமாயணத்த பிரவசனம் பண்ணவர். அதனால தினமும் ராம பூஜை நடக்கிற வீடு அது. ரொம்ப சின்ன வயசுலேயே எப்பிக்கும் மியூசிக்கும் (காவியமும் சங்கீதமும்) அவருக்குள்ள இறங்கிடுச்சு. எல்லார்க்கும் அது கிடைக்காது. இதெல்லாம் இருந்தும் அவரோ, அவர் குடும்பமோ என்கிட்ட எந்த வித்யாசமும் காட்டினதில்ல. இந்த ஜாதி விஷயம் எல்லாம் இன்னைக்கு உள்ள கான்ட்டெக்ஸ்ட்ல நீங்க பாக்காதிங்க. நான் சொல்றது அறுபதுகள்ல. முப்பத்தி சொச்சம் வருஷம் முன்ன. அப்பறம் சில விஷயங்கள் ஜானகிராமனைப் பத்தி நான் எழுதின அந்த கட்டுரைக்குள்ள இருக்கு. படிக்காதவங்க அத படிச்சி பாருங்க. அதுல இல்லாத சிலத நான் இப்ப சொல்றேன்.

ஒரு நாள் ராத்திரி டிபன் பண்ணிருக்காங்க. சுடச்சுட பரிமாறியாச்சு. உப்மா. ஜானகிராமன் என்னை சாப்பிட சொல்லிட்டு ஒரு விள்ளல் எடுத்து சாப்பிட்டுட்டு இருக்கார். நான் எடுத்து வாயில வச்சேன். என்ன உப்மா இது வாய்ல வைக்கவே சகிக்கல, நல்லாவே இல்லன்னு சொல்லிட்டேன். சொல்லிருக்கக் கூடாது. நான் அதிதி. விருந்தாளி. உறவினன் இல்ல. சொல்லிட்டேன். நான்தான் நார்மலா இல்லியே. என்னைத் தாண்டி வார்த்தைய செலுத்தின, என் மூளைல இருக்க அந்த சைத்தானோட வேலை அது. ரெண்டு பாகமா வேலை செய்யுது மூளை. ஒருபக்கம் அத சொல்ல முடியுது. இன்னொரு பக்கம் இதெல்லாம் தப்புன்னு உணரவும் முடியுது. ஆனாலும் சொல்லிட்டேன். ஜானகிராமனும் அப்படியே வச்சிட்டார். அப்ப மிஸஸ்.ஜானகிராமன் என்ன சொன்னாங்க தெரியுமா? ”அப்படியே வச்சிடுங்கோ. சித்த அவரோட பேசிண்டிருங்கோ. நான் நிமிஷமா வேற எதாவது பண்ணிட்டு கூப்பிட்றேன்’’-ன்னு சொல்லிட்டு எல்லாத்தையும் அப்படியே எடுத்துட்டு போயிட்டாங்க. நான் ஜானகிராமன் வழக்கமா உக்கார்ற ஈஸி சேர்ல போய் உக்காந்துகிட்டேன். அவர் எதுமே நடக்காதது போல இலக்கிய விஷயங்களைப் பேச ஆரம்பிச்சுட்டார். அவங்க தெரு முனைல உள்ள செட்டியார் கடைல போய் எது எதோ வாங்கிட்டு வந்து, அவசர அவசரமா இடியாப்பமோ சேவையோ என்னவோ ஒண்ணு பண்ணிப் போட்டாங்க. ”இது நன்னா இருக்கா, இப்ப பரவாயில்லையா”-ன்னு கேக்குறாங்க. ம்..ம்-னு மட்டும் சொல்றேன். அந்த சைத்தான் உள்ள இருக்கறதால எனக்குப் பாராட்டக்கூட வேற வார்த்தை வரல. எவ்ளோ கஷ்டம் பாருங்க.

ஜானகிராமன் வீட்டுக்கு பல எழுத்தாளர்கள், நண்பர்கள் வந்துட்டே இருப்பாங்க. அவர் எல்லார் கிட்டயுமே அன்பா இருப்பார். அவங்க எல்லாருக்கும் தண்ணி குடுக்க, ரெண்டு வார்த்தை விசாரிச்சுப் பேச, காப்பி குடுக்க, சமையல் செய்யன்னு மிஸஸ்.ஜானகிராமன் ஒருபக்கம் இயங்கிட்டே இருப்பாங்க. வேலைக்காரங்க, சமையல்காரங்க யாருமில்ல. எல்லா வேலைகளையும் செய்தாங்க. அந்த சின்ன சின்ன குழந்தைகளையும் ஒண்டி ஆளா, அவங்கதான் பாத்திட்டு இருந்தாங்க.

ஜானகிராமன் ஆபீஸ் போன பிறகு, நான் மாடிலயே இருப்பேன். சாப்பிட, குளிக்க கீழ வரதோட சரி. சாயந்திரமானா அவரோட எங்கயாவது புறப்பட்டுப் போய் பேசிட்டு இருந்துட்டு, சாப்பிடற நேரமா வீட்டுக்கு வந்து சேருவோம். அப்படி ஒருநாள் வரேன். எப்பவும் எனக்கு எல்லாம் நீட்டா இருக்கணும் டிரஸ், மேஜை, வீடு, எழுத்து எல்லாமே. மூளை அப்படி இருக்கப்ப சில சமயம் எல்லாம் நேர்மாறு. படிச்ச புஸ்தகங்கள் மடக்கி வைக்காம விரிச்சபடி இருக்கும். ஈரத்துண்டு சுருட்டினபடி டேபிள்ள இருக்கும். வேர்வையோட கழட்டிப் போட்ட பனியன் ஒரு பக்கம் கிடக்கும். எழுதிப்போட்ட சில குப்பை பேப்பர்கள். எல்லாம் அலங்கோலம். அந்த மாதிரி சூழல்ல நாங்க வெளில போயிட்டு வீட்டுக்கு திரும்புவோம். நான் மாடிக்குப் போவேன். ரூம் அவ்ளோ நறுவுசா இருக்கும். எல்லாம் நீட்டா அடுக்கி வைக்கப்பட்டு ஜன்னல் உள்பட எல்லாம் துடைச்சி சுத்தமா இருக்கும். அந்த ரூம்ல இருந்த மெலிதான வீச்சம் போய் வாசனை அடிக்கும். அது அந்த ரூமில் இருந்து வந்த வெறும் வாசனை அல்ல. மிஸஸ்.ஜானகிராமன் தன் கணவர் மீதும் அவர் சார்ந்த மனிதர்கள் மீதும் செலுத்திய அன்பின் வாசனை.

ஜானகிராமன் என்னைப்பற்றி அவங்ககிட்ட அவ்வளவு சொல்லியிருக்கணும். அதுதான் இத்தனை காரியங்கள். ஜானகிராமன் மீது மிகுந்த அன்பும் மதிப்பும் மரியாதையுமா இருந்த, அப்படிப்பட்ட ஒரு பதிவிரதை அவருக்கு வாய்ச்சது அவருக்கு கிடைச்ச பல கொடுப்பினைகள்ள ஒண்ணு.

இதை எல்லாம் விட மிகமிக முக்கியமான ஒண்ணை நான் சொல்லணும். வழக்கம் போல ஒரு ஞாயித்துக் கிழமை, நாங்க வெளியில பொயிட்டு, போன இடத்துலயே எங்கயோ சாப்ட்டு சாயந்திரம் ஆறு மணிக்கு வீட்டுக்கு வந்தோம். வந்தா, டேபிள்ள என் சட்டை வேட்டி பனியன் எல்லாம் துவைக்கப்பட்டு, அயன் பண்ணப்பட்டு, நியூஸ் பேப்பர்ல சுத்தி சணல் கட்டப்பட்டு, பங்குடா இருக்கு. அன்னைக்கு என்னவோ அழுக்குத் துணியை துவைக்காம டேபிளுக்கு கீழ மொத்தமா சுருட்டிப் போட்டுட்டு போயிருந்தேன். வேலைக்காரர்கள் இல்லாத வீடு. என்னை நானே நொந்துகிட்டேன். ராஜலக்ஷ்மியம்மான்னு வாய்விட்டுச் சொல்லி நான் கண்ணீர் உகுத்தேன். ஜானகிராமனைப் பத்தி எல்லாரும் பேசலாம். இப்படி ஒரு உத்தமமான மனுஷியைப் பற்றி யார் சொல்றது? அவருக்கு அப்படி ஒரு பலமா இருந்த மனுஷி அவங்க. பல சமயம் அவங்களை கையெடுத்துக் கும்பிடத் தோணிருக்கு எனக்கு.

பார்யாளுக்கு ஆம்படையானும் சளைச்சவர் இல்ல. என்கிட்ட மாடில வந்து உக்காந்து பேசிகிட்டே இருப்பார். ஆணில என் சட்டை மாட்டியிருக்கும். திடீர்ன்னு எந்திரிச்சிப் போய் சட்டைகிட்ட நின்னு சாஞ்சி பேசிட்டு இருப்பார். நான் குனிஞ்சு வெத்தலை போட்டுகிட்டு பேசிட்டிருப்பேன். அப்பறம் ஆபீசுக்கு நேரமாச்சுன்னு கிளம்பிப் போயிடுவாரு. சாயந்திரம் வெளில கிளம்பறப்ப சட்டை எடுத்துப் போடுவேன். அதுல, புதுசா ஒரு பத்து ரூபா இருக்கும். நான் அவர் வீட்டுல இருக்கேன். சாப்பாடு, செலவு எல்லாம் அவருது. அப்பறம் ஏன் என் சட்டைல வந்து எனக்கு தெரியாம எதுக்கு பத்து ரூவா வச்சிட்டு போகணும்? அதான் ஜானகிராமன் மனசு. ரேடியோ ஸ்டேஷன்ல உக்காந்துகிட்டு, இன்னைக்கு போட்டுக்க அவருக்கு வெத்தலை சீவல் போதுமோ என்னமோ, சாயந்தரம் போம்போது வாங்கிட்டு போகணும்ன்னு நினைக்கிற மனசு. எல்லாரும் தீபாவளி கொண்டாடிட்டு இருக்கப்ப, நீங்க எப்படி கொண்டாடுறீங்களோ, என்ன செய்றீங்களோ, பணம் எதும் இருக்கோ இல்லையோன்னு அந்தநாள்ல உக்காந்து எனக்கு லட்டர் எழுதிகிட்டு இருக்க மனசு. என் மனஉபாதைகளைத் தீர்க்க, கோயிலுக்கு, தியானத்துக்கு, மடத்துக்கு, சாமியார்கள்ட்ட கூட்டிட்டு ஓடுற மனசு. நான் பதிலுக்கு அப்படில்லாம் இருந்திருக்கனான்னு நினைச்சு பாக்கிறேன். கூச்சமா இருக்கு. ஆனா அவர் எதையுமே எதிர்பாத்து செஞ்சவர் இல்ல. அப்படி ஒரு பிறவி அவர்.

இப்படி அவரை நான் விதந்தோதிப் புகழ்ந்துகிட்டே இருக்கனே அவருக்கு எதும் பலவீனமே இல்லியான்னு உங்களுக்கு தோணலாம். இருந்திச்சி. அத பத்தி நான் பேச விரும்பல. ஏன் உங்களுக்கு இல்லியா? எனக்கு இல்லியா? எல்லார்க்கும் இருக்கு. நாம அதுக்காகல்லாம் ஒரு கலைஞனை கொண்டாடுறது இல்ல. நீங்க என் மனோவியாதிக்காகவா என்னை கொண்டாடுவிங்க? அது காதுகளா மாறுனதுக்காகத்தான் என்னைக் கொண்டாடுவிங்க. அதுபோல பலவீனமும் படைப்பாளிக்கு வேணும். அது பேலன்ஸ் பண்ணுற ஒரு பேரலல் உந்து சக்தி. அது உங்களுக்கு புடிக்குதா இல்லியா, நீங்க அத ஏத்துகிறிங்களா இல்லியாங்கிறதுல்லாம் விஷயமில்ல. அது அப்படி இருக்கும். அவ்ளோதான்.

படைப்புல கூட அவர் ஆண் பெண் உறவு பத்தியேதான் எழுதிருக்கார்ன்னு விமர்சனம் பண்றாங்க. அவர் கட்டுரைகள், மொழிபெயர்ப்பு, நாடகங்கள் எவ்ளோ இருக்கு. அதுலல்லாம் அவர் செலக்‌ஷன், அவர் என்ன பண்ணிருக்கார்ன்னு நீங்க பாக்கணும். நல்ல சிறுகதைக்குச் சமமா சில கட்டுரைகள் எழுதிருக்கார்.

நான் ஒரு நாவல் போல இன்னொன்னு இருக்க கூடாது, ஒரு சிறுகதைபோல இன்னொண்ணு இருக்க கூடாதுன்னு எழுதினவன். அவங்க அவங்களுக்கு ஒரு பாணி. ஆண்பெண் உறவு வழியா திரும்ப திரும்ப அன்பைச் சொல்லிட்டே இருக்கணும்ன்னு அவர் நினைச்சிருக்கார். ஒரே ராகத்துல லயிச்சு ஆழ, ஆழ உள்ள பொயிட்டார். அப்படிப் போறப்ப மிக மிக நுட்பமான கலைச் சேர்மானங்கள் தானா வந்து சேந்துரும். கான்ஷியஸாவோ, இல்ல சப்கான்ஷியஸாவோ. அதெல்லாம் நீங்க பாக்க தவறுறிங்க. ஒரு விஷயத்தோட மேன்மையோ, மகாத்மியமோ புரிய அதுக்குக் கால இடைவெளி தேவையா இருக்கு. அந்த இடைவெளி முடிஞ்ச பிறகு, அந்த படைப்புகளோட முழு விஸ்தீரணம் தெரியலாம். பொதுவா மேலோட்டமாவே பாத்துப் பாத்துதான பழக்கம் நமக்கு. மரம்தான் தெரியுது. பூமிக்குக் கீழே கிளைவிட்டு பின்னிப்பின்னிக் கிடக்கிற அதோட வேர்கள் உங்க கண்ணுக்கு தெரியல. அவர் படைப்புகள் வெறும் கதைகள், நாவல் மட்டுமில்ல, தஞ்சாவூர் ஜில்லாவோட கல்சுரல் லிட்டரரி டாக்குமெண்ட். இங்க புழங்கிற மொழி, இந்த மனிதர்களோட சுபாவம், இந்த விவசாய வாழ்வு, சங்கீதம், கலை, சைக்காலஜி, நல்வாழ்வுக்கான மரபு மீறல், இயல்பான பலவீனம்னு எவ்ளோவோ அதுல கொட்டிக்கிடக்கு. நமக்கு இது எல்லாத்தையும் முழுமையாப் பாக்குற கண் இல்ல, அதான் பிரச்சனை. எல்லாரையும் ஏதோ ஒருவிதமா பிராண்ட் பண்ணி ஒரு சீல் போடணுமே. அதோட கோளாறுதான், இப்படி மொட்டையா மொட்டையா விமர்சனம் பண்றது. அவர் பாப்புலர் ஆயிருக்கலாம். ஆனா இவங்கள்ளாம் சொல்ற சென்ஸ்ல அவர் பாப்புலர் ரைட்டர் இல்ல.

ஒரே ஒரு விஷயத்தச் சொல்லி நான் முடிச்சுகிறேன். அவரோட பாத்திரங்கள், குறிப்பா நல்ல பாத்திரங்கள் அது ஆணோ பெண்ணோ அதுல எல்லாத்துலயும் அவர்தான் அங்கங்க நிறைஞ்சு இருக்கார். அந்த நோட்டெல்லாம் சுஸ்சுரமா திரும்ப திரும்ப வாசிச்சு பாருங்க. அந்த ராகத்தோட பல பல விஸ்தீரணங்கள் உங்களுக்குப் புரியும்.


(கும்பகோணம் கும்பேஸ்வரன் கோவில் வடக்கு வீதி மங்களாம்பிகா கல்யாண மண்டபத்தில் நடந்த இலக்கிய சந்திப்பு கூட்டம், தஞ்சாவூர் பெரிய கோவில் சுற்றுப் பிராகாரத்தில் என்னோடும் தேனுகாவோடும் நடத்திய உரையாடல், சென்னை தி. நகர் கீதாஞ்சலி ஓட்டலில் என்னுடனான தனிப்பேச்சு என்று மூன்று சந்தர்ப்பங்களில் தி. ஜானகிராமன் பற்றி எம்.வி.வி விஸ்தாரமாகப் பகிர்ந்து கொண்டவற்றிலிருந்து, என் ஞாபகத்தில் எஞ்சியதை அவர் பேச்சு மொழியிலேயே தொகுத்து எழுதியது இது. பின்புல காரண காரியங்கள் விவரணைகள் சேர்த்து கட்டுரை வடிவில் எழுதிப் பார்த்தபோது மூன்று பேரின் ஆளுமையும் குவிப்பாய் துலங்காமல் ஒர்மை குலைந்து நீண்டு சென்றது. எனவே அதை தவிர்த்து விஷயத்தை மட்டும் முன்னிருத்த நான் தேர்ந்து கொண்ட வடிவம் இது)


– ரவிசுப்பிரமணியன்

ஓவியம்: சுந்தரன்

1 COMMENT

  1. மிகவும் நெகிழ்வான கட்டுரை. நன்றிகள் பல. மகிழ்ச்சி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.