ஆர்தர் ரைம்போவின் கடிதம்


ஜீன் நிக்கோலாஸ் ஆர்தர் ரைம்போ (20.10.1854 – 10.11.1891) வடகிழக்கு பிரான்சின் ஆர்டென்னெஸ் பகுதியில் உள்ள சார்லவில்லில் வளர்ந்தார். 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வாழ்ந்த ஞானம் மிக்க குழந்தையாகப் போற்றப்பட்ட ரைம்போ, பிரெஞ்ச் குறியீட்டு இயக்கக் கவிஞராக அறியப்பட்டவர். தன் 16 வயதிலிருந்து 19 வயதிற்குள் கவிதை எழுதி முடித்தவர். ‘குழந்தை ஷேக்ஸ்பியர்’ என்று செல்லமாக அழைக்கப்படுபவர்.

அவர் சிறு வயதில், பக்தியும் பணிவுமுள்ள மாணவராக, மற்றைய மாணவர்கள் அனைவர்க்கும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். கோலேஜ் டி சார்லவில்லில் அனைத்துப் பாடங்களிலும், குறிப்பாக இலக்கியத்திலும் காண்பித்த தனது அசாத்தியத் திறமையால் தனது ஆசிரியர்களை வியப்பில் ஆழ்த்தினார். ரைம்போ தீவிரமாக வாசிப்பவராயிருந்தார். சமகால, கடந்தகால பிரெஞ்சு இலக்கியங்களை எல்லாம் வெகு விரைவில் துறைபோகக் கற்றதோடு, இலத்தீன் மொழிக் கவிதைகளைப் படைப்பதிலும் வல்லவாராயிருந்தார்.

1870 இல் ஜார்ஜஸ் இசம்பார்டடு, கோலேஜ் டி சார்லவில்லில் ரைம்போவின் வழிகாட்டியாக ஆனார். விரைவில் ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையே ஒரு நெருங்கிய நட்பு உருவானது. ரைம்போ இசம்பார்ட்டை தனது மூத்த சகோதரராகப் பார்த்தார். மே 1871 இல், ரைம்போ கீழ்வரும் கடிதத்தை இசம்பார்டுக்கு அனுப்பினார். மிக முக்கியமான இந்தக் கடிதத்தில், (அதில் “ஆரஞருற்ற உள்ளம்” என்ற கவிதை அடங்கியுள்ளது), அவர் தான் ஒரு கவிஞனாக இருக்க விரும்புவதாகவும், ஒரு தீர்க்கதரிசியாகத் தன்னை ஆக்கிக் கொள்ளப் பாடுபடுவதாகவும் தெரிவித்துள்ளமையையும், பிற்காலத்தில் அவர் மது உள்ளிட்ட பல துர்சகவாசங்களுக்கும் அடிமையாய் இருந்திருப்பதையும் காணலாம்.

இனி,

ஆர்தர் ரைம்போவின் கடிதம்


ஜார்ஜஸ் இசம்பார்டுக்கு
சார்லேவில், 13 மே 1871.

ன்புள்ள ஐயா!

நீங்கள் மீண்டும் ஒரு ஆசிரியராகி விட்டீர்கள். சமுதாயத்திற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்று நீங்கள் என்னிடம் கூறியுள்ளீர்கள். நீங்கள் கற்பித்தல் அமைப்பின் அங்கத்தவராக இருக்கிறீர்கள்; நீங்கள் சரியான பாதையில் பயணிக்கிறீர்கள். நானும், நன்மையில் நம்பிக்கையற்றவனாக என்னை வைத்துக் கொள்வதென்ற கொள்கையில் இருக்கின்றேன். நான் பள்ளிக்கால அறிவிலிகள் சிலரைத் தேர்ந்தெடுத்துள்ளேன்: என்னால் முடிந்த அளவுக்குப் புதிதாகப் புனைந்துருவாக்க வல்ல முட்டாள்தனமான, இழிந்த, மட்டமான சொற்களிலும், செயல்களிலும் நான் அவர்களுக்கு ஒத்தாசையாயிருக்கிறேன். அவற்றுக்கு ஈடாக அவர்கள் எனக்கு வாற்கோதுமைக் கள்ளையும் (beer), மதுபானங்களையும் அளிக்கிறார்கள். ‘துயருற்ற தாய் தன் மகன் தொங்கிக்கொண்டிருந்த இடத்தில் அழுது கொண்டிருந்தாள்’ (Stabat Mater dolorosa dum pendebat Filius). – எனது கடமை சமுதாயத்திற்குச் சேவையாற்றுவதென்பது உண்மை – நான் சொல்வது சரி – நீங்கள் சொல்வது கூட இப்போதைக்குச் சரியாகவே படுகிறது. உண்மையில், உங்கள் கொள்கையில் நீங்கள் காண்பவை அனைத்தும் அகநிலைக் கவிதைகள் தாம்: பல்கலைக்கழகத்தைச் சென்றடைவதில் இருந்த உங்கள் பிடிவாதம் – என்னை மன்னியுங்கள் – இதை நிரூபிக்கிறது. ஆனால், ஈற்றில் நீங்கள் எப்போதும் எதையுமே செய்ய விரும்பாததால் எதையும் செய்யாத ஒரு சுய திருப்தியுள்ள மனிதனாகவே இருப்பீர்கள். உங்கள் அகநிலைக் கவிதை எப்போதும் வெறுக்கத்தக்க ஒன்றாகவும், அசுவாரசியமானதாகவுமே இருக்கும் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதில்லை. ஒரு நாள், நான் நம்புகிறேன் – இன்னும் பலரும் இதைத்தான் நம்புகிறார்கள் – நான் உங்கள் கொள்கையின்படி புறநிலைக் கவிதைகளைப் பார்ப்பேன், நீங்கள் அவற்றைப் பார்ப்பதிலும் நான் அகமார, உண்மையாகப் பார்ப்பேன்! நான் ஒரு தொழிலாளியாக இருந்திருப்பேன்: வெறித்தனமான கோபம் என்னைப் பாரிஸ் போரை நோக்கிக் கவர்ந்து இழுக்கும் போதெல்லாம் இந்த எண்ணம் என்னைத் தடுக்கிறது – பல தொழிலாளர்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள்; நான் உங்களுக்குக் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறேன்! – இப்போது வேலை செய்வதா? – ஒருபோதுமில்லை, ஒருபோதுமில்லை – நான் வேலைநிறுத்தத்தில் இருக்கின்றேன்.

இப்போதெல்லாம் நான் ​​இயன்றளவு என்னைத் தரந்தாழ்த்திக் கொள்கிறேன். ஏன்? நான் ஒரு கவிஞனாக இருக்க விரும்புகிறேன், நான் ஒரு தீர்க்கதரிசியாக என்னை ஆக்கிக் கொள்ளப் பாடுபடுகின்றேன். இதை நீங்கள் புரிந்து கொள்ள மாட்டீர்கள், அதை உங்களுக்கு எப்படி விளக்குவது என்று எனக்குத் தெரியவுமில்லை. அது புலன்களனைத்தினதும் அறிவுதிறம்பல் மூலம் அறியப்படாதவற்றை அடைதற்கான ஒரு உய்த்துணர்வு. துன்பங்கள் பாரியவை தாம் – ஆனால் ஒருவர் வலுவாக இருத்தல் அவசியம், ஒருவர் கவிஞராகப் பிறக்க வேண்டும், நான் ஒரு கவிஞன் என்பதறிவேன். இது முற்றிலுமாக என் தவறே அல்ல. இருப்பினும், அவ்விதம் சொல்வது தவறென்று நான் நினைக்கிறேன். ஒருவர் மக்கள் தன்னை நினைப்பதாகச் சொல்ல வேண்டும். பூடகமாகப் பேசுவதற்கு மன்னியுங்கள் [சிந்தனைக்குத் தீனி].

நான் வேறு யாரோ. தன்னை ஒரு வயலினாக உய்த்துணரும் மரத்துக்கு இது மோசமானதொன்றாக இருப்பதுடன், முற்றிலும் தாம் அறியாத ஒன்றைப் பற்றி வாதிடுகின்ற, முன்கருதாதோருக்கு இது ஓர் ஏளனப்பொருள். நீங்கள் எனக்கு ஒரு ஆசிரியர் அல்ல. இதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்: நீங்கள் சொல்வது போல் இது நையாண்டியா? இது கவிதையா? இது கற்பனை தானா எப்போதும். – ஆனால் நான் உங்களிடம் இறைஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன், அதை உங்கள் பென்சிலாலோ அல்லது உங்கள் தீவிர சிந்தனையாலோ அடிக்கோடிட்டுக் காட்ட வேண்டாம்:

ஆரஞருற்ற உள்ளம்
————————–
துயருறும் என்னிதயம் பவ்வீ கண்டு சொள்ளு வடிக்கிறது
எனது இதயம் புகையிலைத் துப்பல்களால் மூடப்பட்டிருக்கிறது:
அவர்கள் அதன்மீது வடிசாற்று ஓடையாய் வாந்தியெடுக்கிறார்கள்,
துயருறும் என்னிதயம் பவ்வீ கண்டு சொள்ளு வடிக்கிறது:
உரக்கச் சிரிக்கும் போர்வீரர்களின் நையாண்டியின் கீழ்
துயருறும் என்னிதயம் பவ்வீ கண்டு சொள்ளு வடிக்கிறது
எனது இதயம் புகையிலைத் துப்பல்களால் மூடப்பட்டிருக்கிறது!

கிரேக்கமதுத் தெய்வீகமானதும், சிப்பாய்த்தனமானதும்;
அவர்களது நையாண்டி அதைச் சீரழித்துவிட்டது!
சுக்கான் மீது நீங்கள் சுவரோவியத்தைக் காண்கிறீர்கள்
கிரேக்கமதுத் தெய்வீகமானதும், சிப்பாய்த்தனமானதும்.
ஓ அப்ரகடப்ரா அலைகளே,
எனது இதயத்தை எடுத்துச் செல்லுங்கள், அது கழுவப் படட்டும்!
கிரேக்கமதுத் தெய்வீகமானதும், சிப்பாய்த்தனமானதும்;
அவர்களது நையாண்டி அதைச் சீரழித்துவிட்டது.
அவர்கள் மென்று உண்ணும் புகையிலையை
முழுவதுமாகப் பயன்படுத்தி விட்டிருந்த போது,
ஓ திருடப்பட்ட இதயமே, நான் எவ்விதம் செயலாற்றுவது?
அங்கு மானங்கெட்ட போதை தரும் விக்கல் இருக்கும்,
எனக்கு வயிற்றுப் புரட்டல்கள் இருக்கும்,
எனது இதயம் சீரழிக்கப் பட்டிருந்தால்:
அவர்கள் மென்று உண்ணும் புகையிலையை
முழுவதுமாகப் பயன்படுத்தி விட்டிருந்த போது,
ஓ திருடப்பட்ட இதயமே, நான் எவ்விதம் செயலாற்றுவது?

இதில் எந்த உள்ளர்த்தமும் கிடையாது.

ஆ.ரை. மே/பா எம். டெவெரியர் எனக் குறிப்பிட்டுப் பதில் மடலனுப்புங்கள்.

உளங்கனிந்த வாழ்த்துகள்,!
-ஆர்த். ரைம்போ.


தமிழாக்கம் : குகதர்சனி (தமிழ்க்கிழவி)

நன்றி : rimbaudanalysis.wordpress.com (ரைம்போவின் கடிதம்), விக்கிபீடியா, என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா.

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு:

குகதர்சனி: பிரித்தானியாவில் சுதந்திர பட்டய (Chartered) மனித வள ஆலோசகராகப் பணியாற்றுகிறார். லண்டன் மிடில்செக்ஸ் பல்கலைக்கழகத்தின் மனிதவள முதுகலைமாணி. இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணத் திறைசேரியிலும், பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சிலும் முகாமைத்துவ உதவியாளராகவும், பிரித்தானியாவில் பிரபல நிறுவனம் ஒன்றில் தமிழ்/ஆங்கில, ஆங்கில/தமிழ் நேர்முக உரைபெயர்ப்பாளராகவும் இருந்தவர்.  கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், பாடல்கள், குறும்படங்கள், விரிவுரைகள், அகராதி அத்தியாயங்கள், ஆவணங்கள், கணக்கு அறிக்கைகள், மருத்துவர்/ இயன்மருத்துவர்/ உளநலவியலாளர்/ நகரசபை வாடிக்கையாளர் சந்திப்புகள், சத்திர சிகிச்சை முற்பொழிப்புக்கள், குடிவரவு நேர்காணல்கள்,  நீதிமன்ற சாட்சிக்கூற்றுகள்  உள்ளிட்ட நூற்றுக்கணக்கானவற்றை மொழி/உரை பெயர்த்தவர். 

கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். இலங்கை அரச உத்தியோகத்தர்களுக்கு இடையிலான இலக்கிய நிர்மாணப் போட்டிகளில் கவிதை, சிறுகதை, மொழிபெயர்ப்பு ஆகியவற்றுக்கான பரிசில்களைப் பெற்றவர். ‘தமிழ்க்கிழவியின் கிறுக்கல்கள்’ இவரது முதல் கவிதைத் தொகுப்பாக வெளிவந்துள்ளது.

Previous articleசெத்துப்போனவர்
Next articleநான் உன்னைக் காதலித்த போதும்…
Avatar
குகதர்சனி (தமிழ்க்கிழவி): பிரித்தானியாவில் சுதந்திர பட்டய (Chartered) மனித வள ஆலோசகராகப் பணியாற்றுகிறார். லண்டன் மிடில்செக்ஸ் பல்கலைக்கழகத்தின் மனிதவள முதுகலைமாணி. இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணத் திறைசேரியிலும், பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சிலும் முகாமைத்துவ உதவியாளராகவும், பிரித்தானியாவில் பிரபல நிறுவனம் ஒன்றில் தமிழ்/ஆங்கில, ஆங்கில/தமிழ் நேர்முக உரைபெயர்ப்பாளராகவும் இருந்தவர். கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், பாடல்கள், குறும்படங்கள், விரிவுரைகள், அகராதி அத்தியாயங்கள், ஆவணங்கள், கணக்கு அறிக்கைகள், மருத்துவர்/ இயன்மருத்துவர்/ உளநலவியலாளர்/ நகரசபை வாடிக்கையாளர் சந்திப்புகள், சத்திர சிகிச்சை முற்பொழிப்புக்கள், குடிவரவு நேர்காணல்கள், நீதிமன்ற சாட்சிக்கூற்றுகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானவற்றை மொழி/உரை பெயர்த்தவர். கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். இலங்கை அரச உத்தியோகத்தர்களுக்கு இடையிலான இலக்கிய நிர்மாணப் போட்டிகளில் கவிதை, சிறுகதை, மொழிபெயர்ப்பு ஆகியவற்றுக்கான பரிசில்களைப் பெற்றவர். ‘தமிழ்க்கிழவியின் கிறுக்கல்கள்’ இவரது முதல் கவிதைத் தொகுப்பாக வெளிவந்துள்ளது.

4 COMMENTS

  1. ரைம்போ பற்றிய சிறு ஆனால் பயனுள்ள அறிமுகம்.

  2. தமிழுக்கு இந்த உணர்வை (அதை எப்படி விளக்குவது என்றே தெரியவில்லை) கடிதத்திலும் கவிதையிலும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்…‌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.