முனைவர் கோ.சுனில்ஜோகி நீலகிரி மாவட்டம், ஒரசோலை கிராமத்தைச் சார்ந்தவர். தமிழில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர் கோவை வி.எல்.பி ஜானகியம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் 5 ஆண்டுகள் தமிழ் உதவிப்பேராசிரியராக பணியாற்றியுள்ளார். தற்போது கோவை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். நீலகிரி படகர்கள் குறித்த “மாதி” எனும் புதினத்தை இயற்றியுள்ளார். இது பரிசல் பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவந்துள்ளது. இதுவே படகர்கள் குறித்த முதல் இனவரைவியல் புதினம் என்பது குறிப்பிடத்தக்கது. 20 ஆண்டுகளுக்கு மேலாக படகர்கள் குறித்த ஆய்வனுபவம் கொண்ட இவர் அவர்களின் மரபார்ந்த மூலிகை மருத்துவம் மற்றும் அவர்களின் மரபுசார் பண்பாட்டுப் புழங்கு பொருள்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு பாரதியார் பல்கலைக்கு ஆய்வேடு சமர்ப்பித்து ஆய்வியல் பட்டம் பெற்றுள்ளார். நாட்டுப்புறவியல், மானிடவியல், தமிழியல் சார்ந்த 50 மேற்பட்ட பன்னாட்டு ஆய்வுக்கட்டுரைகளையும், பல்வேறு தமிழ் இதழ்களில் 200 மேற்பட்ட கவிதைகளையும், சில சிறுகதைகளையும் இயற்றியுள்ளார்.