என் இலக்கிய, தமிழாய்வுப் பயணத்திற்கு ஆற்றுப்படை நூல்களாக அமைந்து வரும் நூல்களின் முதன்மையான குறும் பட்டியலைத் தருகிறேன். அவரவர் விருப்பத்திற்கேற்ப இந்நூல்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
“என் முதன்மை ஆசிரியரின் நூல்கள் அல்லது ஆற்றுப்படை நூல்கள்”
- “பழந்தமிழில் அமைப்பியல் மற்றும் குறியியல் ஆய்வுகள்” என்பது தமிழவனின் நூல். தமிழவன், தமிழவனின் சிந்தனைப் பள்ளியைச் சேர்ந்தவர்கள், சிற்றேடு அமைத்துக் கொடுத்த களம் இல்லை என்றால் நான் தீவிர எழுத்திற்கு வந்திருப்பது கடினம். தொடக்க காலங்களில் பல நூல்களை நான் இவர்களிடம்தான் இனாமாகவோ, இரவலாகவோ வாங்கி வந்து படித்தேன். அந்தவகையில் தமிழவனின் நூல்களிலேயே நான் படித்துவிட்டு அதிகமும் வியந்துப் போனது மேற்சுட்டிய அவரை நூலை வாசித்துத்தான். அதாவது, தமிழவனின் நூல்களில் அவரது ‘அமைப்பியலும் அதன் பிறகும்’ என்ற நூல்தான் முதன்மையானது என்று பலர் பரிந்துரைத்த போதும், அவரெழுதிய இந்நூலே அவருடைய தமிழ்ப் படிப்பு, கோட்பாட்டு ஈடுபாடு, அவர் உருவாக காரணமான அமைந்த புதுக்கவிதை தோற்றம் என அனைத்தின் குணப்பாடுகள் குறித்தும் அனுமானிக்க பயன்படும் நூலாக இருந்து என்னை வழிநடத்தியது. நான்கே கட்டுரைகள் கொண்ட இக்குறுநூலில் சங்கக் கவிதை தொடங்கி, உரை பனுவல்கள், ஆத்மாநாம் வரையிலான தேர்ந்தெடுத்த பனுவல்கள் குறித்து அவர் பெரிதும் ஈடுபாடு கொண்டுள்ள மொழியியல், சொல்லாடல், குறியியல், அமைப்பியல் ஆகிய துறைகள் தனக்குத் தந்த ஒளியில் எழுதப்பட்டுள்ள நூல். இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் மட்டுமன்றி, அவற்றிற்குத் தந்துள்ள அடிக்குறிப்புகளும் என்னை அதிகமும் வியப்பில் ஆழ்த்துவதாக இன்றும் உள்ளது. தமிழ்த் துறை மாணவர்களுக்கு அடிக்கடி நான் வாங்கிக் கொடுக்கும் நூல், விலை வெறும் 45. உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு.
- கோட்பாடு பழகத் தொடங்கிய காலத்தில் எனக்கு பரிந்துரைக்கப்பட்ட நூல், Literary Theory A very short introduction என்ற ஜானதன் கல்லரின் நூல். எனக்குத் தமிழளவு ஆங்கில வாசிப்பு வேகமெடுக்காது. அதனால் கொஞ்ச நேரத்தில் சோர்ந்து போவேன். அப்போதெல்லாம் எனக்கு கைவிளக்காக அமைந்தவை எண்ணற்ற மொழிபெயர்ப்புப் பனுவல்கள். அத்தகையவற்றுள் தலையாயதே ஆர். சிவகுமார் அவர்களின் மேற்சுட்டிய நூலின் மொழிபெயர்ப்பான ”இலக்கியக் கோட்பாடு, மிகச் சுருக்கமான அறிமுகம்” என்ற அடையாளம் பதிப்பக வெளியீடு. ‘மிகச் சுருக்கமான அறிமுகமான இந்நூல் பற்றி மிகச் சுருக்கமாக அறிமுகப்படுத்த வேண்டும் என்றால், இதில் இடம்பெறும் இரண்டு கேலிச் சித்திரங்களையே முதலில் சுட்டுவேன்.
முதலாவது, “நீங்கள் ஒரு தீவிரவாதியா? நல்ல காலம், நீங்கள் ஒரு கோட்பாட்டாளரோ என்று நினைத்தேன்.” (அத்தியாயம் 1, கோட்பாடு என்றால் என்ன?),
அடுத்து, ”ஐயா, மன்னிக்க வேண்டும், கோடைகால வாசிப்புக்கு தாஸ்தாயவஸ்கி ஏற்றவர் அல்ல” (அத்தியாயம் 2, இலக்கியம் என்றால் என்ன? அது பொருட்படுத்தக் கூடியதுதானா?)
இவற்றை படித்துவிட்டு விழுந்துவிழுந்து சிரித்தேன். அன்றி, இந்நூலில் இடம்பெற்றுள்ள கோட்பாடுகள் அதன் விளைவுகள் பற்றிய கூற்றை சுட்டிக்காட்டுவதும் அவசியத்தினும் அவசியம் எனக் கருதுகிறேன். அது, ‘நீங்கள் நிபுணராகவும் ஆகவில்லை; முன்பிருந்த இடத்திலும் இல்லை. உங்களுடைய வாசிப்பின் மீது புதுவழிகளில் சிந்தனை செலுத்துகிறீர்கள். கேட்பதற்கு வித்தியாசமான கேள்விகள் உங்களிடம் உள்ளன. நீங்கள் வாசிக்கும் படைப்பைப் பற்றிய உங்கள் கேள்விகளில் பொதிந்திருக்கும் உட்பொருள்களைப்பற்றிய மேம்பட்ட உணர்வும் உங்களிடம் உள்ளது.’ (பக். 25)
இந்நூல் எழுத கல்லர் தேர்ந்தெடுக்கப்பட்டதைப் போன்ற சரியான தேர்வே ஆர். சிவகுமாரும் என்பேன். அந்தளவு ஈடுபாட்டுடன் தனக்களித்த பணியை நல்ல முறையில் செய்துள்ளார் மொழிபெயர்ப்பாசிரியர். திராவிடப் பல்கலைக் கழகத்தில் என்னுடன் பயிலும் ஆங்கில இலக்கிய மாணவர்களுக்கும், கோட்பாடு பற்றி அறிந்துகொள்ள விழையும் நண்பர்களுக்கும் இந்நூலின் மூலம், மொழிபெயர்ப்பு என இரண்டையும் அடிக்கடி வாங்கித் தந்துள்ளேன். (மொழிபெயர்ப்பு, அடையாளம் பதிப்பக வெளியீடு, விலை ரூ. 120)
[இந்நூலை புரிந்துகொள்ள முடியாத மாணவர்களுக்காக, இலக்கியமும் திறனாய்வுக் கோட்பாடுகளும் என்ற முனைவர் க. பஞ்சாங்கம் எழுதிய நூலினைப் பரிந்துரைப்பதும் வழக்கம். (அன்னம் வெளியீடு, விலை ரூ. 275/-)]
- இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் சாகித்திய அகாதெமி வெளியிட்ட ‘தொல்காப்பியர்’ என்ற நூல் சிறப்பானது. மேற்கத்திய மரபில் அரிஸ்டாட்டில் போல தமிழுக்குத் தொல்காப்பியப் பனுவல் ஒரு மூல நூல். அதன் நுண்மையைத் தொடர்ந்து புரிந்துகொள்ள விழைவதும், விரித்துரைத்துக் கொண்டாடுவதும் அவசியம். அதனை தமிழியற் புலத்தில் இருந்துகொண்டு ஆகச் சிறப்பாக செய்த தமிழாசிரியர்களில் தமிழண்ணல் எனப்படும் பெரியகருப்பனும் ஒருவர்.
அவர், வழக்கம்போல் தொல்காப்பியத்தை வெறும் இலக்கண நூலாக சுருக்காமல், இலக்கியக் கோட்பாட்டு நூலாகவும் பார்த்தவர். தொல்காப்பியரின் இலக்கியக் கொள்கைகள் பாகம் 1, 2 (செல்லப்பா பதிப்பகம்), அவ்விலக்கண, இலக்கியவியல் நூலுக்குக் கைகட்ட உரை முதலான நூல்களைக் கண்டவர் ‘தொல்காப்பியத்தின் முழுமையும் அதன் பயனீட்டையும் உணர்ந்து மேற்சுட்டிய நூலை யாத்த முறை என்னை அதிகமும் கவர்ந்தது. தொல்காப்பியத்தின் அருமை தெரிய விரும்புவர்களுக்கு அடிக்கடி வாங்கிக் கொடுக்கும் நூல்களில் இந்நூலும் ஒன்றாகும். 118 பக்கங்களே உடைய இந்நூலின் விலை வெறும் 50 ரூபாய்தான்.
- அடுத்து, ஒரு உரையாடல் தொகுப்பு. தலைப்பு: ”படைப்பும் பன்மையும்” தொகுப்பு ஆசிரியர்: எம். ஜி. சுரேஷ்.
நேர்காணல்கள் நான் என்றும் அதிகம் வாசிக்கும் வடிவம். உரையாடல் என்றால் இன்னும் குஷி ஆகிவிடுவேன். எஸ். சண்முகம் ஆளுமைகளுடன் நடத்திய உரையாடல்கள், (கலைஞன், புது எழுத்து பதிப்பக வெளியீடுகள்) சுந்தரராமசாமி நேர்காணல்கள், காலச்சுவடு நேர்காணல்கள், தொடங்கி இன்றைய இடைவெளி இதழ், த.ராஜன் நேர்காணல்கள் என பார்வையில்படும் பலதையும் படித்துவருகிறேன். ஆனால் இவை எல்லாவற்றையும் வாங்கித்தர முடியாது என்பதாலும், புதுப்புனல் பதிப்பக வெளியீடு என்பதாலும், (எம்.ஜி. சுரேஷ், பிரேம்:ரமேஷ் ஆகியோரின் நூல்களுக்கான பதிப்பு வாய்ப்பினை தொடக்க காலத்திலும், ஞானி நூல்களைத் தற்போதும் வெளியிட்டு வரும் எளிய பதிப்பகம் புதுப்புனல். ஆனால் அப்படி ஒரு பதிப்பகம் இருப்பதே பலருக்குத் தெரிவதில்லை. பெரிய நஷ்டத்திலும்கூட கணவனும் மனைவியும் தொடர்ந்து இயங்கி வருகிறார்கள். இவர்களுக்கு மணல்வீடு அமைப்பு சமீபத்தில் விருது அறிவித்திருப்பது உள்ளபடியே போற்றுதலுக்குரியது) விலை மலிவு என்பதாலும் – வெறும் ரூ.55தான் – இந்நூலை வாங்கித் தருவது வழக்கம்.
இந்நூலில் ஞானக்கூத்தன், ஞானி, பிரம்மராஜன், தமிழவன், சா. கந்தசாமி ஆகியோருடன் எம். ஜி. சுரேஷ், பிரேம், பிரேம் – ரமேஷ், ரவிச்சந்திரன், ஆர். ராஜகோபாலன் ஆகியோர் தனித்தனியாகவும், சேர்ந்தும் நடத்திய உரையாடல்கள் (கவனிக்க நேர்காணல் இல்லை). இதில் ரோலன் பார்த் சில பதில்கள் மொழிபெயர்ப்பும் குறிப்பும் என்ற பனுவலும் இடம்பெற்றுள்ள மிகவும் முக்கியமான ஆவணம் இந்நேர்காணல் தொகுப்பு.
- அடுத்ததாக, தோழர் பொதியவெற்பனின் அரைநூற்றாண்டுப் பயணம் என்ற வீ. அரசு எழுதிய குறுநூல் குறித்து. பொதி என்கிற ஆளுமை குறித்த அறிமுகம் வேண்டுவோர் நிச்சயம் படிக்கவேண்டிய எளிய (32 பக்.) அதேசமயம் பிரம்மாண்டமான குறும் பனுவல் இது. தமிழவன் சிந்தனைப் பள்ளியை பொதி ஆழமாக வாசித்து, கொண்டாடி, விமர்த்து வருவது குறித்து முழுமையாக அறிந்துகொள்ளத் தொடங்கிய போது வாங்கிய புத்தகமே இந்த என்சிபிஎச் வெளியீடு; விலை ரூ. 20/- . அடிக்கடி நண்பர்களுக்கு வாங்கிக் கொடுக்கும் நூலாக மாறியுள்ளது.
- சிற்றிதழ், அரங்க மரபில் தன்னை தொடர்ந்து ஈடுபடுத்தி வருபவர், தமிழில் நாடகத்துக்காக வெளி என்ற இதழை தொடங்கி 10 ஆண்டு காலம் தொடர்ந்து நடத்தியவர் ரங்கராஜன். இதனால் தன் பெயரோடு வெளி என்ற முன்னொட்டு கொண்டே (வெளி ரங்கராஜன்) அறியப்படுகிறார். இவரின் சமீபத்திய நூல் ”உடல் மொழியின் கலை” என்ற நூல். எளிய நடையிலான சிறு சிறு கட்டுரைகள் என்றாலும் அவற்றை எழுத ஒரு அரைநூற்றாண்டு கால செயல்பாடு தேவைப்பட்டிருக்கிறது என்பதை அந்நூலை, விசயம் தெரிந்து படிப்பவர்கள் உணர்வர். சொந்த ஆக்கங்கள் மட்டுமின்றி, மொழிபெயர்ப்பு பனுவல்களும் இடம்பெற்றுள்ள இந்நூலில் இடம்பெற்றுள்ள டி. யோகனனின் கலையும் மனப்பிறழ்வும் என்ற கட்டுரைக்காகவாவது நிச்சயம் வாங்கிப் படிக்க வேண்டும் என்று கடந்த மாதங்களில் பல நண்பர்களுக்கும் பரிந்துரைத்து வருகிறேன். இந்நூலினை போதி வனம் வெளியீட்டுள்ளது. விலை ரூ. 120.
- அடுத்து என்னை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய நூல்களின் ஒன்றான சுந்தர ராமசாமி. குறிப்பேடு பற்றி. புதுப்பித்தனை ஆதர்ஷமாகக் கொண்டு இலக்கியத்திற்கு வந்த சுந்தர ராமசாமி., ஆர். வெங்கடாசலபதி பதிப்பித்த புதுமைப்பித்தன் கதைகள் என்ற நூலின் முன்னுரைக்காகவும், அவ்வாய்ப்பினை ஒட்டி தான் பு.பி., கதைகள் குறித்து எழுதவிருந்த, விரும்பிய நூலிற்காகவும் ஒவ்வொரு கதைகளையும் படித்துவிட்டு அவர் குறிப்பெடுத்தவையே சுந்தர ராமசாமி. குறிப்பேடு. இந்நூலில் இடம்பெறும் ஒவ்வொரு கதை பற்றிய குறிப்புகளையும் முதலில் படித்துவிட்டு, அந்த குறிப்பு குறிப்பிடும் சிறுகதையை அடுத்து படிப்பது என தொடர்ந்து மூன்று நான்கு நாட்கள் ஈடுபட்டிருந்தேன்.
எழுத்தாளன் எவ்வளவு உழைக்கவேண்டும் என்று எனக்குக் கற்றுக் கொடுத்த நூல் இது. காலச்சுவடு வெளியீடான இந்நூலினை என் பல்கலைக் கழக நூலகத்தில் எடுத்து வந்து படித்தேன். நானுமே இன்னும் சொந்தமாக வாங்கவில்லை; வாங்க வேண்டும். விலை 175.
- பதிப்பிலற்ற நூல்கள்:
அ.
ஆத்மாநாம், போர்ஹேஸ் என்ற இருவரையுமே தம் நூல்கள் மூலமாக ஆகச்சிறப்பான முறையில் எனக்கு அறிமுகப்படுத்தியவர் என்றால் அது பிரம்மராஜன்தான். மீட்சி புக்ஸ் வெளீயீடாக 1984 – ல் அவர் கொண்டு வந்த ‘கவிதை பற்றி – ஆத்மாநாம்’ என்கிற குறுநூலை என் ஆசிரியர் வீட்டிலிருந்து முதன்முதலில் நான் கொண்டுவந்தேன்.
இக்குறு நூலில் இடம்பெற்றுள்ள ஆத்மாநாம் (ஆத்மா. பற்றி பிரம்மராஜன் எழுதிய குறிப்பு), கவிதை பற்றி – ஆத்மாநாம் – பிரம்மராஜன் ஆகியோர் மேற்கொண்ட உரையாடல், ஆத்மாநாம் அப்போது புதிதாக எழுதியிருந்த கவிதைகள், ‘கவிதை எனும் வார்த்தைக்கூட்டம் பற்றி ஆத்மாநாம்’ என்கிற கட்டுரை ஆகியவை இந்நூலில் இடம்பெற்றுள்ளன. தற்போது இவை யாவும் ஆத்மாநாம் படைப்புகள் என்ற முழுத்தொகுப்பில் இடம்பெற்றிருந்த போதிலும், இதனை இதேபோன்ற குறுநூலாக வாசிப்பது எனக்குப் பிடித்திருக்கிறது. (அப்போதைய) விலை ரூ. 4/-
ஆ.
இதேபோன்ற ஒரு ஆவணக் குறுநூல் – நிறப்பிரிகை 1995 –ல் கொண்டுவந்த ‘பின் நவீனத்துவம், எது நவீனத்துவம், தலித்தியம்’. என்பதுகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய தமிழவனின் ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் நாவலை, அவர் சிந்தனைப் பள்ளியை விமரிசித்து எழுதப்பட்ட நூலாக இதைச் சுருக்கமாகக் கொண்டாலும், அதையும் தாண்டி நமக்குத் தேவையானதை எடுத்துக்கொள்ள தோதுபடும் பல விசயங்களைக் கொண்டுள்ள ஆவணம் இது. தற்போதெல்லாம் ஒருநூலை விமரிசித்து ஒருவார்த்தைச் சொன்னாலே ஜன்ம பொல்லாப்பு கொள்ளும் காலத்தவருக்கு ஒரு நூலுக்கு எப்படி எல்லாம் விமரிசனங்கள் எழுந்துள்ளன என்று வாசித்து, பிரமிப்புற, அதன் இருபக்க அரசியலையும் அறிந்துகொள்ள, விமர்சிக்க உதவும் இவ்வரிய நூலினைப் பார்க்கும் போதெல்லாம் எனக்குப் பயங்கர ஆச்சரியமாக இருக்கும். வேறு ஏதாவது நூல்களுக்கு இப்படியான எதிர்வினைகள் வந்ததா என்று அறிந்துகொள்ளவும் விரும்புகிறேன். (அப்போதைய) விலை ரூ. 5/-
- மொழிபெயர்ப்புகள்:
அ.
நாட்டுப்புறவியலில் முதன்மையான அறிஞர்களில் ஒருவர் விளாடிமிர் பிராப். அவருடைய Morphology of the tale மிகவும் முக்கியமான நூல். ரசிய தேவதைக் கதைகள் நூறினை ஆய்வு செய்து அவற்றிற்கிடையில் 31 செயல் / வினை (Function)கள் இருப்பதைக் கண்டறிந்தார். இந்நூல் லெவி ஸ்ட்ராஸ், பார்த் ஆகியோரை பாதித்த நூல் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோலவே இவருடைய முக்கியமான ஆக்கங்களில் ஒன்று Oedipus in the light of folklore. பொதுவாக பிராடின் ஒடிபஸ் சிக்கல் என்பதன் வழியாகவே ஒடிபஸ் கதையை அறிந்து, வாசித்திருப்பவர்களுக்கு, அதற்கு மாற்றாக நாட்டுப்புறவியல் ஒளியில் ஆராயப்பட்ட இந்நீள் கட்டுரை நூலின் மொழிபெயர்ப்பு ‘ஒடிபஸ்’ என்கிற பெயரில் காவ்யா சண்முக சுந்தரத்தால் தமிழில் மேற்கொள்ளப்பட்டுள்ள தகவல் தெரிந்திருக்குமா என அறியேன். (விலை: 40)
நாட்டுப்புறவியலில் ஆய்வு செய்யும் மாணவர்களுக்காக அடிக்கடி பரிசளிக்கும் நூல்களில் ஒன்று இது.
ஆ.
அதைப்போலவே, தத்துவவாதியும், புகழ்பெற்ற கோட்பாட்டாளருமான ழாக் தெரிதாவின் ‘Structure, Sign and Play in the Discourse of Human Sciences’ எனும் கட்டுரை நூலும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. [தலைப்பு: அமைப்பும், குறியும், விளையாட்டும், மொ. ஆசிரியர் பேரா. பொ. நா. கமலா, வெளியீடு: காவ்யா. (விலை: 160)] உள்ளபடியே கொண்டாடப்பட வேண்டியது.
- நான் கவிதை மட்டுமின்றி கவிதையியலும் ஈடுபாடுகொண்டவன். எனக்கு சில கனவு திட்டங்கள் / நூல்கள் எல்லாம் உண்டு. அப்படியானவற்றுள் ஒன்று கவிதையியல் வரலாறு. இந்நிலையில், பாரதி தொடங்கி தற்போது வரை மேற்கொள்ளப்பட்ட கவிதைத் திறனாய்வுகளை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட ‘கவிதைத் திறனாய்வு வரலாற்று’ நூலானது தமிழினியால் வெளியிடப்பட்டுள்ளது. (ஆசிரியர். சு. வேணுகோபால்) ஆனால் இதற்கு முன்பே இத்துறையில் எனக்கு ஆதர்ஷமாக இருந்ததென்றால் அது பேரா. கார்த்திகேசு சிவத்தம்பி எழுதிய தமிழின் கவிதையியல் என்கிற குமரன் புத்தக இல்ல வெளியீடுதான். ஆனால், இந்நூல் மேற்சுட்டியதைப் போன்று பாரதி காலத்தில் தொடங்குவது இல்லை. மாறாக, தொல்காப்பிய, சங்க இலக்கிய காலத்திலிருந்து தொடங்கி, பாரதி வரையிலும், பிறகு குறைந்த அளவில் மணிக்கொடி கால சிறுவரலாறு வரை விரியும். (தாலாட்டு, சினிமா பாடல்கள் குறிப்பிடப்பட்டுள்ளதும், ஈழத்துத் தமிழ்க் கவிதை மரபு பற்றிய பின்னிணைப்புக் கட்டுரைகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.) இந்நூல் மரபிலக்கிய கவித்துவ வரலாறு, தமிழ் பண்பாட்டில் கவிதை குறித்து அறியவிரும்புவோருக்குப் பரிந்துரைக்கத் துணியும் நூல் இது. விலை. 200
(சாகித்திய அகாதெமி, NCBH, பாரதி புத்தகாலயங்களின் குறுநூல் வரிசைக்கும்… என் பழைய முகநூல் பதிவை பொருட்படுத்தி நான் பெரிதும் வாசிக்க விரும்பிய சி. மணியின் ‘யாப்பும் கவிதையும்’ நூலை அனுப்பித்தந்த அகச்சேரனுக்கும்…)
-றாம் சந்தோஷ்
குறிப்பு:
2020 – புத்தாண்டை வரவேற்கும் முகமாக கடந்த ஆண்டு (2019) டிசம்பர் முடிவில், “புதிய ஆண்டில் ஒரு புத்தகத்தை யாருக்காவது பரிசளிக்க அல்லது பரிந்துரை செய்ய விரும்பினால் அது எந்த புத்தகம்?” என்ற கேள்வியை கனலி சார்பாக நண்பர் விக்னேஷ்வரன் கேட்டிருந்தார்.
[நான் அதற்காக வேண்டி ஒரு குறும்பட்டியலை கடந்த 31.12.2019 அன்று தந்தேன். பட்டியல் பெரிதென்பதாலும், அதற்கான முக்கியத்துவம் இருப்பதாக அவர் கருதியதாலும் அதை கனலிக்குக் கட்டுரையாக அனுப்பும்படி பணித்தார்.
தனித்தனி நூல்கள் பற்றியும் விரிவாக எழுதவேண்டியதுள்ளதென்பதாலும், கட்டுரை தன் முதலில் தொழிற்பட்ட விதத்தில் ‘பதிவு’பாற்பட்டதென்பதாலும் மிகச்சுருக்கமாகவே இந்நூல்கள் பற்றியவை இடம்பெற்றுள்ளன. இதுதொடர்பான கனலி முகநூல் பரிந்துரைப்பட்டியலில் / பதிவில், ‘இந்திய தத்துவ ஞானம்’ என்ற மெய்யியல் நூலை நான் பரிந்துரைத்துவிட்டேன் என்பதால் அந்நூல் இப்பட்டியலில் மீளவும் சேர்க்கப்படவில்லை.
மேலும், பரிசளிக்க விரும்பும் என்கிற சொல்லாட்சியும் இடம்பெற்றுள்ளதால், என் பொருளாதார சூழலிற்கேற்ப விலை மலிவான நூல்களையும், புனைவு அல்லாத நூல்களையும், ஆதரிக்க வேண்டிய அரசு, அரசு சாரா நிறுவனங்களின் குறுநூல்களையும் மட்டுமே இப்பட்டியலில் குறிப்பிட்டுள்ளேன்.]
அருமையான கட்டுரை. ஆகச் சிறந்த நூல்களின் பரிந்துரை. வாழ்த்துக்கள் தோழர்கள் றாம் சந்தோஷ் மற்றும் கனலி விக்னேஷ்வரன் இருவருக்கும்.