தேவதரிசனம் -மொழிபெயர்ப்புச் சிறுகதை


ங்கா, ஸ்குப்னி மலையடிவாரத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தாள்.  ‘கடைக்காரன் வீட்டு ஹங்கா’ என்று அவளை அழைப்பதுண்டு. கடைக்காரன் ஜாஹிக்கு விக்டா என்று ஒரு மகள் இருந்தாள். அவளுடைய பெண் ஹங்கா. ஹங்கா இப்பொழுது ஒரு அனாதை.

காற்று பம்பம் என்று ஓலமிட்டு சீறிற்று. எதிர்த்துச் செல்லமுடியவில்லை. பக்கத்திலுள்ள ஆல்ஹிஸ்கா பள்ளத்தாக்கில் அவளை உருட்டித்தள்ளி விடும்போல் வீசிற்று. கதகதப்புக்காக அவள் அணிந்திருந்த சட்டையையும், போர்வையையும், ஊடுருவி, எலும்பைப் பிடித்தது குளிர். அடுக்கு அடுக்காகப் பனி முகில்கள் வானத்தில் மெதுவாக ஊர்ந்துகொண்டிருந்தன.  சற்றைக்கொரு முறை,  உயிரும் செயலும் அற்றுப்போன சூரியன் உருவம் சுயவர்ணத்திரை வழியே பார்ப்பது போல, அந்தப் பனி முகிலூடே அங்குமிங்கும் எட்டிப் பார்த்தது. சுற்றிலும் இயற்கை பயங்கரக் கோலம் பூண்டிருந்தது. மலைகளெல்லாம் சேர்ந்து அழுவதுபோல இருந்த காற்றின் உறுமல் வரவரப் பெருகி, விவரிக்க முடியாத ஒரு பீதியைக் கொடுத்தது.

யாருக்குத் தெரியும்? காற்றடிக்கத் தொடங்கினால், மலை மீது செத்துக் கிடப்பவர்கள் அழுது அழுது முறையிடுகிறாற்போல் நமக்குத் தோன்றுகிறது. ரொம்பப் பேர் இம்மாதிரி செத்துப் போயிருக்கிறார்கள்; அந்நிய நேரத்தில் ஒரு மதகுருவும் அவர்களை ஆசிர்வதிக்கவில்லை. ஒரு துப்பாக்கிக் குண்டோ, கோடாரியோ, கரடியின் அறையோதான் அவர்களுக்குக் கடைசி நிமிஷ வாழ்த்தாக இருந்திருக்கும். இல்லாவிடில் மலைமீது நடக்கும் போது ஏதாவது பாறை பெயர்ந்து, அவர்கள் உருண்டிருப்பார்கள் அல்லது பனிப்பாறையில் அகப்பட்டோ, ஏதாவது கருங்கல் ஒன்று மண்டையில் விழுந்தோ செத்திருப்பார்கள். மலைகளில்  கல் பெயர்வதுண்டு. மலைகளும் கிழங்கள்தானே? இன்று நேற்று ஏற்பட்டவையா? அல்லது கொல்லக்கூடாது என்று மனுஷ்ய தயைதான் அவற்றிற்கு உண்டா? ஆகவே, எத்தனையோ காலமாக இந்தமாதிரி சாகிறவர்கள் அநேகம். அவர்கள் எல்லோரும் சேர்ந்து அழுதால்!

ஆனால் இந்த பயங்கரச் சூழ்மை, கவிழ்ந்து வரும் இருள், பனிப்புயல், உறைபனி, மூடுபனி இவ்வளவையும் சகித்துக் கொண்டு ஹங்கா மலை ஏறிச் சென்று கொண்டிருக்கிறாள்.

யாராவது அவளை அப்பொழுது சந்தித்தால் சட்டென்று சிலுவை அடையாளம் செய்து கொண்டிருப்பார்கள். ஏனெனில் பனி மழையில் அவள் நடந்து செல்வது, அருவம் நடந்து செல்வது போலிருந்தது. இந்த வேளையில் மலைவெளியிலும், காற்று உறுமும் ஓடைகளிலும் அவளுக்கு என்ன வேலையிருக்கும் என்று யாரும் ஆச்சரியப் பட்டிருப்பார்கள். மனிதனே வாழாத இடங்கள் அவை. பீதிதான் அங்கு வாழ்கிறது. ஒவ்வொரு திருப்பத்திலும் மூலையிலும் யாராயிருந்தாலும் பிடிக்கக் காத்துக் கொண்டு, சாவு உறுமும் இடம் அது. மனிதர்கள் ஓய்ந்து வீழ்ந்து ஆத்மாக்கள் கூட்டைவிட்டுப் பிரிந்து செல்லும் இடங்கள் அவை.

ஏ முட்டாள்! திரும்பிவிடு, இல்லாவிட்டால் தொலைந்துப் போய் விடுவாய். மேலே சென்றால் பனி உன்னை அமுக்கி அழுத்தி விடும். அப்புறம் நீ எங்கு விழுந்துகிடக்கிறாய் என்று கடவுளைத்தான் கேட்க வேண்டும். அப்புறம் பச்சைப் புல்லையோ, மஞ்சள் தான்யத்தையோ நீலத் தண்ணீரையோ நீ பார்க்க முடியாது…. பனியின் கீழே கல் மாதிரி கிடப்பாய் நீ. வேனில் வந்ததும், கழுகும் ஆந்தையும் வந்து உன்னைப் பிய்த்துத் தின்று, உன் எலும்புகளை மூலைக்கு மூலையாக நாலாபக்கமும் இறைத்துவிடும். ஏ பெண்ணே! அங்கு என்ன வேலை உனக்கு? திரும்பிவிடு.

 இப்படித்தான் அவளைச் சந்தித்தவர்கள் சொல்லியிருப்பார்கள். ஆனால் யாரும் சந்திக்கவில்லை. மலைமான் வேட்டையாடுபவர்கள் கூட துப்பாக்கிகளைக் குடிசைச் சுவர்களில் தொங்கவிட்டு  விட்டார்கள். அவர்களில் சிலர் மட்டும் இன்று வேட்டையாடிக் கொண்டு, பாறைக் குகைகளில் குளிர் காலத்தைக் கழித்துக் கொண்டிருந்தனர். இந்த பனியில் வெளிப்போந்து வேட்டையாட முடியுமா? ஒருவருக்கும் முடியாது. துணிவும் இராது. மீறிக்கொண்டு பரிஷை பார்க்க விரும்புகிறவர்களுக்குக் கட்டாயம் தண்டனை கிடைக்கும், மலைமான் வேட்டையாடுகிறவர்களைத் தவிர, ஒருவரும் அந்தப் பிராந்தியத்திற்கு வரமாட்டார்கள்.

 இதுவே ஹங்காவிற்கு மகிழ்ச்சியளித்தது.  எங்கு போகிறோம், ஏன் போகிறோம் என்று யாருமே கேட்கமாட்டார்களல்லவா?  இந்த பயங்கர வெளியில் தனித்திருக்கிறோம் என்று அவளுக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி.

அங்கு என்ன வேலை அவளுக்கு? அவள் ஓடிக்கொண்டிருந்தாள். சாவை நோக்கி, நாசத்தை நோக்கி ஓடிக் கொண்டிருந்தாள். அவள் நெஞ்சில் கோபமே இல்லை.  தாங்கொணாத துன்பமும் வலியும்தான் இருந்தன. அது அவன் குற்றம். வாய்டக்ம்ரெளாகாவின் – ஆல்சாவைச் சேர்ந்த வாய்டக்ம்ரெளகாவின் குற்றம்; வேறு யாருமடையதுமல்ல.

ஹங்காவிற்கு அவன் மீது கோபமே கிடையாது. வருத்தம்தான். சொல்லுக் கெட்டாத, சகிக்கமுடியாத வருத்தம். அடிக்கடி அவளை முத்தமிட்டான் அவன். தழுவினான். ஆரத்தழுவினான். கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று பலமுறை உறுதியளித்தான். அவள் பணிந்தாள். சர்வசுதந்திரமாக நடந்து கொண்டான் அவன். ஏன்? ஹங்காவிற்கு அவன் மீது எல்லையில்லாத பாசம். அவளுடைய உலகம் அவன் தான். அவன் குரலைக் கேட்டாலே, அவள் மெய் சிலிர்க்கும்.

ஆனால் காரியமானதும், வாய்டக்ம்ரௌகாவிற்கு அலுப்பு வந்துவிட்டது. அவள், கல்யாணத்தைப்பற்றிப் பேச்செடுத்ததும், “உனக்கென்ன பைத்தியம் பிடித்திருக்கிறதா? நீ அன்னக்காவடி, நாதியற்றவள். எனக்கு என்ன குறைச்சல்? நல்ல சொத்து. நல்ல வயசு, எல்லாம் இருக்கிறது. வருஷம் முப்பது மூட்டை கோதுமை விளைகிறது. நல்ல ஜாதிக் குதிரைகள், ஆடுமாடு எல்லாம் இருக்கிறது. உனக்கென்ன இருக்கிறது? உன் உடம்பையும், இப்போது போட்டுக் கொண்டிருக்கிறாயே, அந்தச் சட்டையையும் தவிர? நான் யாரை வேண்டுமானாலும் கல்யாணம் செய்துகொள்வேன். என் இஷ்டம் அது.” என்று பதில் சொன்னான் அவன்.

அவளுடைய அநாதை நிலை அவனுக்கு இளப்பமாயிருந்தது. அவளுக்கு பந்துக்களே கிடையாது. இருந்த கொஞ்சம் பேரும் அருகில் இல்லை. எங்கெங்கேயோ இருந்தார்கள்.

ஹங்கா அதிர்ச்சியுற்றாள். வலி நெஞ்சில் வாளைப் பாய்ச்சிற்று.

“வாய்டக், வயிற்றில் ஒரு குழந்தை துடிக்கிறதே?”

“அது உன் குற்றம்…”

“உன் குழந்தைதானே அது..”

”அதெப்படிச் சொல்லமுடியும்? நீ ஒரு யூதன் வீட்டில் வேலை செய்கிறாய். குழந்தை கிறிஸ்தவக் குழந்தையாகக்கூட இருக்காதோ என்னமோ, யார் கண்டது?”

ஹங்காவிற்கு கால் ஆட்டம் கண்டது. விழுந்துவிடாமல் எப்படியோ சமாளித்துக்கொண்டாள்.

ஒன்றும் பேசவில்லை அவள். ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. உடனே தான் வேலை செய்யும் வீட்டை நோக்கி ஓடி, அடுக்களையிலிருந்த போர்வையை எடுத்துப் போர்த்திக் கொண்டு, வாய்டக் இருக்கிறானா போய்விட்டானா என்று கூடப் பார்க்காமல், மலையை நோக்கி ஓட ஆரம்பித்தாள்.

காடர்பில்லர் குட்டைக்கருகில் ஓடிவந்தாள் அவள். அங்கு தான் அவள் மாடுமேய்க்கும் வழக்கம் – எஜமானன் ஸ்டாசன் மாடுகளை. வெகுநாள் பழக்கத்தின் பயனாக கால் வழி காட்ட, கால் அவளை அங்கு இழுத்து வந்தது. அங்குதான் முதன்முதலில் வாய்டக்கைக் கண்டு காதலித்தாள் அவள். அதே இடத்தில் பெரிய ஆட்டுமந்தை ஒன்றை – சொந்தமந்தையை – மேய்த்துக் கொண்டிருந்தான் அவன். அவன் அழகன். நீலக்கண்கள், சிவந்த கன்னங்கள். ஒற்றைநாடியான முறுக்கிவிட்ட உடல். அவனைக் கண்டதுமே காதலிக்கவேண்டியதுதான்.

மலைச்சரிவிலிருந்தவாறு, கறுப்பாகத் திட்டுத்திட்டாக நின்ற குடிசைகளை ஏறிட்டுப்பார்த்தாள் ஹங்கா, உடனே சற்று நின்றாள். மேய்க்கப்போகிறவர்கள் இளைப்பாறுவதற்காக நிறுவப்பட்டவை இந்தக் குடிசைகள்.

கடவுளே, நீ எல்லாம் வல்லவன். கருணைவள்ளல்: இந்தக் குடிசைகளிலிருந்து புறப்பட்டுத்தான் அவள், மாட்டு மந்தையை ஓட்டிக்கொண்டு, ஆக்னிஷ்காவுடன் பச்சைமலை, கோவில் மெச்சா முதலிய இடங்களுக்கும் அப்பாலும் செல்லும் வழக்கம்.  இரண்டு குட்டிகளும் எத்தனையோ முறை புல்தரையில் மல்லாந்து படுத்துப் பாடியிருக்கிறார்கள். புல்லிலும் மரத்தளிர் மீதும் பட்டு வெயில் மின்னும் – என்ன இன்பம்! சுற்றிலும் கழுத்துமணிகள் அசைந்தொலிக்க, வெள்ளை, பழுப்பு பசுக்கள் கூட்டம் கூட்டமாக மேயும். ஒருபக்கம் ஆடுகளை மேயவிட்டு வாய்டக் படுத்துக்கொண்டே பாடுவான் – எத்தனையோ தடவை.

பச்சை வெளியே என் முன்னே

பரந்து நில்லேன், எனதுள்ளம்

இச்சை வீசி அப்பெண்ணை

இழுத்திழுத்து வந்து நிறுத்திவிடும்.

இன்னும் சில சமயங்களில் டாமக் மைக்கல்சின் குடிசைக்குள்ளிருந்து வாத்தியம் வாசித்துக்கொண்டிருப்பான். வெளியே இதைக்கேட்டு, வாய்டக் நடனமாடத் தொடங்குவான். ஹங்காவோடு மாத்திரம்தான் அவன் ஆடும் வழக்கம். மீதி எல்லாப் பெண்களும், ஏக்கத்துடன் அவனை விழுங்கிவிடுவதுபோல் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

மாலைவேளைகளில், வெளியில் மழை கொட்டும்போது, எல்லோரும் குடிசைக்குள் வந்து கணப்பைச் சுற்றி உட்கார்ந்து கொள்ளுவார்கள். பெரிய கட்டை ஒன்று எரிந்து கொண்டிருக்கும்.

பிசின் தோய்ந்த பைன் சுள்ளிகள் எரியும்போது படபட வென்று பொறிபறக்கும். டாமக் மைக்கல்சின் ஏதாவது கதை சொல்ல ஆரம்பிப்பான். கதையில் வரும் பூதங்களுக்கும் சூன்யக்காரிகளுக்கும் பயந்து ஹங்கா, வாய்டக்கின் கைகளில் சுருண்டு துள்ளுவாள். கைகளை அவள் மீது போட்டு இறுக அணைத்துக்கொள்வான் அவன். அவன் ஸ்பரிசம் பட்டதும் அவளுடைய நெஞ்சு துள்ளி வெளியே குதித்து விடுவது போலத் துடிக்கும். சிலசமயம் கணப்பின் நிழலைப் பயன்படுத்திக் கொண்டு அவளை முத்தமிடுவான் அவன். அவளுக்கு உலக நிலையே அற்றுவிடும்… நட்சத்திரங்களை விட, சூரியனைவிட அவன்தான் அவளுக்கு வேண்டியது. கடவுளை தொழும்போது கூட நினைவு அவளையறியாமல் அவனிடம் போய்விடும். இதற்கெல்லாம் பிசாசுதான் காரணமோ என்னவோ?

ஈசா, இதெல்லாம் நடந்ததா இல்லையா? இரவில் கண்ட வெறும் கனவுகள்தானா இவை?

குடிசைகளை நோக்கி இறங்கினாள் ஹங்கா, பாதை மறைந்து பனிமீதே நடந்து சென்றாள். இரவு வேளைகளில் கறவைப் பசுக்களைப் பூட்டிவைக்கும் தொட்டில் அதோ இருந்தது. அதோ வாய்டக் வழக்கமாகத் தூங்கும் குடிசை. அங்குதான் டாமக் மைக்கல்சின் கதை சொல்லி, வாத்யம் வாசிக்கும் வழக்கம். அவள் போய்க்கொண்டிருந்தாள். குடிசைகளோடு நடந்து, பச்சைமலையை நோக்கித் திரும்பினாள். ஏதோ ஒன்று அவளை முன்னே தள்ளித்தள்ளிச் சென்றது. துரிதப் படுத்திய அந்த சக்தி எது? பயங்கரமான, நெஞ்சில் தோய்த்த அவன் வார்த்தைகள்தான்.

‘அது கிறிஸ்தவக் குழந்தையாகக்கூட இராதோ என்னமோ! நீ யாரோ யூதன் வீட்டில் வேலைசெய்கிறாய்.’ அவள் காதில் இச்சொற்கள் ரீங்கரித்தன.

காற்று மேலும் மேலும் வலுத்து. மூச்சையே திணற அடித்தது. எங்கும் பனி, எதிரே ஒன்றும் தெரியவில்லை. பனிபரந்த வான மங்கலூடே லில்லிமலையிலிருந்து சில மலை மான்கள் – அவளை நோக்கி ஓடிவந்தன. ஒன்று, இரண்டு, மூன்று. ஹங்கா ஐந்து எண்ணினாள்.

அவளைக் கடந்து, ஓடி, அவை பனிப்படலத்துள் மறைந்தன. அவள் அங்கிருப்பது அவற்றின் கண்ணுக்குத் தெரியவில்லை. மோப்பமும் பிடிக்கவில்லை. காற்று மோப்பத்தை அகற்றிக் கொண்டு போய்விட்டது. அவை மீண்டும் திரும்பி பனிமுகிலுக்குள் அருவங்கள் போல் மறைந்தன.

தன்னையறியாமல் ஹங்கா அவற்றின் வழியையே பின்பற்றி லில்லி மலையை நோக்கி ஏறத்தொடங்கினாள்.

கூடாரங்களிலிருந்து வரும் வெளிச்சத்தைப்போல், பச்சிலை ஒளிபோல், சிவப்பு ஒளிகள், வினோதமாகத் தோன்றி அவள் கண் முன்னே நடனமிட்டன. முதலில் தொலைவில் தென்பட்ட அவை வரவர அருகே வந்து, இன்னும் சிவந்து, ரத்தமழைபோலப் பெருத்தன. குளிர் அவள் உடலில் ஊசி பாய்ச்சிற்று. இது மாதிரி குளிரிலேயே அவள் நடந்து கொண்டு தானிருந்தாள். களைப்போ தாங்கமுடியவில்லை. காது நொய் என்று ஓலமிட்டது. மண்டைக்குள் இடி வலி – யாரோ பெரிய ஆணிவைத்து இறக்குகிறாற் போலே. சற்று நின்றாள் அவள். எங்கும் நிசப்தம். நரையிட்ட மங்கல். பயங்கர சூழ்நிலை. சிற்சில சமயம் ஒரு பெரிய மலைச்சுவர் ஒன்று பனிமீது நிற்கும். ஆனால் அதுமாதிரி சுவர் ஒன்று உண்மையாகவே அங்கே நிற்கிறதா, அல்லது வெறும் தோற்றமா என்று அவளுக்கு நிச்சயிக்க முடியவில்லை. உலகம் முழுவதையுமே பனிப்புயல் போர்த்தி விட்டது போல் தோன்றிற்று.

மிகவும் அருகில் உள்ள வெள்ளைப்பனி குவிந்த புதர்கள் தான் கண்ணுக்குப் புலப்பட்டன. பனி புகாத சுவரின் சந்து பொந்துகளில் காற்று பனித்துகள்களை வீசித்தெறித்தது. தூரத்தில் ஈயநிறத் திரை வழியே பார்ப்பது போல, மலைமீது சூரியன் மங்கலாக எரிந்தது.

‘குழந்தை, கிறிஸ்தவக் குழந்தையாக இருந்தால் அது குணம் எப்படியிருக்குமோ? யார் கண்டார்கள்? ஹங்கா நடந்து கொண்டிருந்தாள்.

மனம் புலம்பிற்று.  ‘துக்கத்திற்காகவே பிறந்திருக்கிறேன் நான். குழந்தைப் பருவத்திலிருந்தே தனிமையும் அடிமைத்தனமும் வந்துவிட்டது. துணி கிடையாது, சோறு கிடையாது. கொஞ்ச அடிவாங்கவில்லை. எல்லோரும் என்னை வேலை வாங்கினார்கள். கொடுமை இழைத்தார்கள். பெரியவளானதும் இந்தக் கொடுமை குறைந்தது. வயதுவந்தவளை இப்படி நடத்தமுடியுமா? ஆனால் அதற்கு பதிலாக இது வந்துவிட்டது… ஈசா, ஈசா, ஈசா, ஈசா…’

விம்மியவாறே பனிமேல் நடந்து ஏறிக்கொண்டிருந்தாள்.

 ‘எங்கே போகிறேன்?’ என்று தன்னையே கேட்டுக்கொண்டு ‘நேராகப் போகிறேன்,’ என்று பதில் சொல்லிக்கொண்டாள்.

‘சாகவா?’

‘சாகத்தான்!’

மீண்டும் அந்த மண்டை வலி ஆரம்பித்தது.  சுட்டது. முன்னை விட ஓங்கி இடித்தது. அதேசமயம், எங்கோ தூரத்தில் மணி ஒலி கேட்பதுபோல் அவளுக்குத் தோன்றிற்று. அவள் தாய் இறந்ததும், ஈமக்கிரியைகளை முடித்து, குழிக்குள் சவப் பெட்டியை இறக்கும் போது மதகுருவின் மணி ஒலித்தது அவள் நினைவுக்கு வந்தது. மனத்துள் ஏதோ கேள்வி. ‘நீ இங்கு இருக்கிறாயா? அல்லது அங்கு இருக்கிறாயா? லில்லிமலைப் பாதையில் போகிறாயா? அல்லது உன் தாயின் ஈமச்சடங்கின் முன், சமாதியின் முன் நிற்கிறாயா?’

நான் பாட்டுக்குப்போகிறேனே! அங்கு என்ன இருக்கிறது? ஏதாவது கிராமம் உண்டா? ஜனங்கள் இருப்பார்களா?

கால் இடறிற்று. பாதைகளிடையே வீசும் காற்றின் ஓசை போல இரைச்சலெடுத்தது. தள்ளாடி, வலமும் இடமுமாகத் தடுமாறினாள் அவள். சுற்றியிருந்த மலை ஆட்டங்கண்டு, நடுங்கிப் பெயர்ந்து அவள் மீது சரிவதாகத் தோன்றிற்று. பனிமுகில்கள், மலைகள் அவளை நசுக்கி வளைக்கத் தொடங்கின. லட்சிமீர் மாதாகோயிலில் ஒரு பாப விமோசன தினத்தன்று நின்று கொண்டிருந்த போது ஏற்பட்ட  உணர்ச்சி அவளுக்கு இப்போது எங்கிருந்தோ வந்தது.  ஒரு பீடத்தில் கன்னிமேரி, ஏசுவைக் கையில் ஏந்தி, தலையில் பொன்முடி மிளிர நின்று கொண்டிருந்தாள். நீலச்சட்டை, ரோஜா நிற முகம், அவள் காலடியில் நட்சத்திரங்கள் சிதறியிருந்தன. அருள் நிறைந்த மரியே, வாழ்க. கர்த்தர் உம்முடன் என்று ஹங்கா மெதுவாகச் சொன்னாள். அப்படிச் சொல்லுகையில் குழுமி வரும் அந்திமங்கலுக் கிடையே ஒருவிதமான ஜோதி அவளுக்கு மேலே பரவிற்று, வெளிர்ந்த ஒரு ஜோதி – பனிபட்டு மயங்கியதுபோல.

ஹங்காவின் மெய் சிலிர்த்தது. அது என்ன? ஜோதி நெருங்கி நெருங்கி வந்து. இன்னும் தெளிவுபெற்றது. ஆனால் இன்னும் பனி சூழ்ந்ததால் விளைந்த மங்கல் தெளியவில்லை.

அச்சமடைந்து அவள் நின்றாள். கையை அகலவிரித்துப் பின்னால் – சாய்ந்தாள். வாய் திகிலினால் திறந்தது. உடனே பனிக் கட்டி வாய்க்குள் விசிறிப் புகுந்தது. பயத்தில் சிந்திக்கும் சக்தி குலைந்து  ஹ்ருதயம் ஓயத்தொடங்கிற்று. பிறகு, அந்த ஜோதியினின்று ஒரு மென்மையான, இனிமை நிரம்பிய குரல் எழுந்தது.

“ஹங்கா, அஞ்சவேண்டாம்.” ஹங்காவிற்கு உச்சி முதல் உள்ளங்கால் வரையில் நடுங்கிற்று. குரல் சொல்லிற்று:

 ”வா.”

 “எங்கே?”

“சுவர்க்கத்திற்கு!”

ஜோதியின் மத்தியில், பனிமுகிலின் மத்தியில், பொன்முடியும் நீல அங்கியும், நீலக்கண்ணும் நாணும் ரோஜாநிறமும் கொண்ட ஒரு முகம் – ஒளிர்ந்தது. சற்று வெளிறாக இருந்தது. நன்றாகத் தெரியவில்லை.

“தேவதூதர்களின் அரசியா நீ?” என்று மெதுவாகக் கேட்டாள் ஹங்கா.

ஆனால் பதிலில்லை. ஜோதி, லில்லிமலையை நோக்கி நகரத் தொடங்கிற்று.

ஹங்கா அதைப் பின்தொடர்ந்தாள். அவளுக்கும் புது பலம் வந்துவிட்டது போலிருந்தது. காதில் இரைச்சல் நின்றுவிட்டது. குளிரின் கொடுமை பொறுக்க முடியாததாக இல்லை. பனிப்புயலில் முழுகி லில்லிமலையை நோக்கி நடந்தாள் அவள்.

ஆனால் மீண்டும் கால் தடுமாற்றம் கண்டது. செவ்வொளிகள் கண்முன் பறந்தன. மண்டை இடித்தது. ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாதபடி, தள்ளாமை வலுத்தது. “அம்மா, நான் உட்கார்ந்து கொள்ளட்டுமா?”

“சரி, உட்கார்,” என்று ஜோதியிடமிருந்து இனிய குரல் சொல்லிற்று. ஒரு பெரிய பாறை மறைவில் உட்கார்ந்தாள் ஹங்கா, குளிர்காற்றுப்படாமல் மறைத்தது அந்தப் பாறை. அதன்மீது சாய்ந்து காலை நீட்டிக்கொண்டாள் அவள். ஆனால், ஜோதி எங்கோ பனிமுகிலில் தேய்ந்து மறைந்துவிட்டது.

“அம்மா, எங்கே இருக்கிறாய்?”

ஆனால் பனி சுமந்த அந்த அந்திமங்கலினின்று ஒரு பதிலும் வரவில்லை. அவளுக்கு அழுகை வந்தது. ஆனால் அழமுடியவில்லை.கால் மீதும் கைமீ தும் எதோ கனமாக அழுத்திற்று. எலும்பின் கூட்டிற்குள் நடுக்கம் கண்டது. மூச்சுத்திணறிற்று. கண்மங்கிற்று. காது கேட்கவில்லை.  மூளைக்குள் ஒரு சூன்யம், பயங்கரமான, சிவந்து எரியும் ஒரு சூன்யம் பரவிற்று. ஈரக் கசிவான பனி ஓயாமல் விழுந்து. முழங்கால், மார்பு, தோள் ஏன், முகத்தைக்கூட மூடிற்று. கொஞ்சம் கதகதப்பு உண்டாயிற்று – ஒரு சூடு. ஆனால் அது மூச்சைத் திணற அடித்தது. தூக்கம் வருகிறாப்போல் இருந்தது.

‘தூங்கிவிடப் போகிறேன்,’ என்று நினைத்தாள் ஹங்கா. உலகம் முழுவதும் இருண்டது. மலைவெளியின் நடுவிலும் ஓரத்திலும் உள்ள சிகரங்களிலிருந்து காற்று சீறிச்சீறி வீசிற்று. சிறுசிறு பனி உருண்டைகள் மேகங்களாகத் திரண்டு வந்தன. கழுகு கோழியைத் தூக்கிச் செல்லும்போது உதிரும் சிறகுகள் போல், பெரிய பனிக்குச்சிகள் காற்றால் தள்ளப்பட்டுப் பறந்து வந்தன. ஹங்காவைச் சுற்றி ஒரு பனிச்சுழற்காற்றே வந்து அவளுக்கு மேலே சுழன்றது. பனி அறுத்த அவள் முகத்தி லிருந்தும் கழுத்திலிருந்தும் சூடாக ரத்தம் கசியத் தொடங்கிற்று.

 ‘மரணமா?’

திடீரென்று இந்த எண்ணம் தோன்றியதும், பயத்தில் எழுந்து ஓட ஆரம்பித்தாள் – இல்லை ஓட விரும்பினாள்.

‘மலையைவிட்டு இறங்கிவிடவேண்டும் – கிராமத்தை நோக்கி, மனிதர்கள் இருக்குமிடத்திற்குப் போய்விடவேண்டும்.’

ஆனால் அவளுக்கு எழுந்திருக்கச் சக்தியில்லை. எழுந்து நிற்கக் கடைசியாக பலமெல்லாம் திரட்டிப்பார்த்தாள். முடியவில்லை.

பயத்தில், நிராசையில் வெறிகொண்ட திகிலில் ஒரு முனகல் பீறிட்டது. விரல்கள் பனியைக் கவ்வின.

“என்னைக் காப்பாற்றுங்களேன். காப்பாற்றுங்களேன்.” பிறகு, பனிப்படலத்தில், மங்கி எங்கும் பரந்த அந்தி நரையில், மங்கிய அந்த ஜோதி மீண்டும் எழுந்து, அவள் தலைக்கு வெகு அருகில் வந்தது. மீண்டும் பொன்முடியும், தேன் போன்ற முகமும், மலர் போன்ற விழியும் தெரிவது போலிருந்தது. அந்த உருவம் தன்னைத் தொட்டுவிட்டதுபோல் கூட ஒரு உணர்ச்சி அவளுக்கு ஏற்பட்டது.

பனிப்படலத்தினின்று போகும் அந்த உருவத்தினின்று ஒரு மெல்லிய இன்குரல் அழைத்தது.

“வா!

”எங்கே?”

“சுவர்க்கத்திற்கு. இந்தா, கையைப் பிடித்துக்கொள்.”

 ஹங்கா அவ்வாறே கையைப் பற்றிக்கொண்டு சென்றாள்.


 மூல ஆசிரியர்: டெட் மேஜர் (Kazimierz Przerwa Tetmajer)

தமிழாக்கம்:  தி.ஜானகிராமன்

 

மூல ஆசிரியர் குறிப்பு: காசிமியர்ஸ் ப்ரெர்வா-டெட்மேஜர் (12 பிப்ரவரி 1865 – 18 ஜனவரி 1940) ஒரு போலந்து கவிஞர், நாவலாசிரியர், நாடக ஆசிரியர், பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். அவர் இளம் போலந்து இயக்கத்தில் உறுப்பினராக இருந்தார்.


[mkdf_highlight background_color=”black” color=”yellow”]குறிப்பு[/mkdf_highlight] 1948-ஆம் வருடம்  காதம்பரி இதழில் வெளியான இந்த மொழிபெயர்ப்புச் சிறுகதை  கனலி-யின் தி.ஜானகிராமன் நூற்றாண்டுச் சிறப்பிதழுக்காக தட்டச்சு செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது

[mkdf_highlight background_color=”black” color=”yellow”]நன்றி[/mkdf_highlight]:கிரிஷ்கா, தமிழ்ச்சுடர் நிலையம்


2 COMMENTS

  1. சிறுகதை மற்றும் மொழி பெயர்ப்பும் அருமை அருமை

  2. ஒரு பெண்ணின் மன ஓட்டத்தை அழகான தமிழில் மொழி பெயர்ப்பு செய்திருக்கும் ஆசிரியருக்கு பாராட்டுக்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.