தோஸ்தோவ்ஸ்கி: பல குரல் தன்மை-எஸ்.வி.ராஜதுரை

தோஸ்தோவ்ஸ்கி படைப்புகளில் நான் முதன்முதலாகப் படித்தது, அவரது சிறையனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ஒரு சிறுநாவல்: ‘சாவு வீட்டுக் குறிப்புகள்’ (Notes from the Dead House). இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் படித்த அந்த நாவலில் உள்ள ஒரு வாக்கியம் என் மனத்தில் ஆழப்பதிந்துவிட்டது; ‘பணம் என்பது நாணயமாக வார்க்கப்பட்டுள்ள சுதந்திரம்’, (Money is minted freedom) என்பதுதான் அது. ஏறத்தாழ அதே காலகட்டத்தில்தான் மார்க்ஸின் ‘1844 ஆம் ஆண்டு பொருளாதார, தத்துவக் கையெழுத்துப் படிகள்’, ‘மூலதனம்’ முதல் பாகம் ஆகியவற்றை முனைப்புடன் படித்துப் புரிந்துகொள்ள முயற்சி செய்துகொண்டிருந்தேன். ஷேக்ஸ்பியர், கெதே, பால்ஸக் போன்றோரின் கூற்றுகளை மேற்கோள் காட்டி முதலாளித்துவ சமுதாயத்தில் பணத்திற்குள்ள ஆற்றலையும் அதிகாரத்தையும் பற்றி மார்க்ஸ் தனக்கே உரிய இலக்கியப் பாங்கான நடையில் எழுதியிருந்தவற்றை தோஸ்தோவ்ஸ்கியின் அந்த ஒரே ஒரு வாக்கியம் இரத்தினச் சுருக்கமாகக் கூறிவிட்டதாகக் கருதினேன்.

தோஸ்தோவ்ஸ்கியின் பல்வேறு படைப்புகளில் பணம், அதிகாரம் ஆகிய பிரச்சனைகள் முதன்மையான இடம் பெறுகின்றன. பணத்தைக் கொண்டு பிற மனிதர்களின் வாழ்வின் மீது ஆதிக்கமும் அதிகாரமும் செலுத்த முனைபவர்களை ‘கரமஸோவ் சகோதரர்கள்’, ‘குற்றமும் தண்டனையும்’, ‘மூடன்’ ஆகிய மாபெரும் நாவல்களில் காணலாம். ‘குற்றமும் தண்டனையும்’ நாவலில் ராஸ்கோல்னிகோவ் வட்டிக்குப் பணம் கொடுக்கும் ஒரு கிழவியைக் கொலை செய்கிறான். கொலை செய்ததற்கு ஒரு காரணம் கற்பிக்கிறான்: ‘நான் ஓர் ஏழை. இந்த வட்டிக்கடைக்காரியோ ஓர் ஒட்டுண்ணி. அவளைக் கொன்று அவளது உடைமைகளைக் கொள்ளையடிப்பதால் என்னைப் படிக்க வைப்பதற்காகத் துன்பங்களை மேற்கொள்ளும் என் தாய்க்கு ஓரளவு நிம்மதி கிடைக்கலாம்.’ ஆனால் சோனியா என்ற பெண்ணிடம் இறுதியில் அவன் கூறும் விளக்கம் வேறொன்று: தான் சாதாரண மக்களிடமிருந்து வேறுபட்டவன் என்பதை மெய்ப்பிப்பதற்காகச் செய்யப்பட்ட கொலைதான் அது.

‘மூடன்’ என்ற நாவலில் ஒரு காட்சி. நாஸ்டாஸ்யாஃபிலிப்யோவ்னா தனது பிறந்தநாள் விழாவையொட்டி, வருகை தந்துள்ள விருந்தாளிகளை மட்டம் தட்டும் வகையில் ஒரு லட்சம் ரூபிள் நோட்டுக் கற்றையை நெருப்பில் வீசுகிறாள். மானுட உறவுகளை ‘அப்பட்டமான பட்டுவாடா உறவுகளாக’, பண உறவாக மாற்றிவிட்ட ஓர் உலகிற்கு எதிராக, மானிடர்களையே சரக்குகளாக மாற்றிவிட்ட ஓர் உலகிற்கு எதிராகத் தனது தார்மீக சுதந்திரத்தை அவளால் இப்படித்தான் உறுதி செய்துகொள்ள முடிகிறது. நாஸ்டாஸ்யா போன்ற அருமையான மானுடர்களின் இயல்புகள் கூட ஆதிக்கத்துக்கும் சுரண்டலுக்கும் உட்படும்போது எவ்வாறு சிதைவுக்குள்ளாகின்றன என்பதை தோஸ்தோவ்ஸ்கி காட்டுகிறார்.

பலவந்தத்தையும் சுரண்டலையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு சமுதாயத்தில் வாழ்க்கையின் ஒவ்வொரு மட்டத்திலும் மானுட உறவுகள் அதிகாரம், ஆதிக்கம் என்பனவற்றைக் கொண்டே வடிவமைக்கப்படுவதை அவர் சுட்டிக் காட்டுகிறார். ஒடுக்குமுறையின் காரணமாக இழிவான நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள்கூடத் தம் பங்குக்கு ஒடுக்குமுறையாளராக இருக்க முடியும் என்கிறார். தோஸ்தோவ்ஸ்கியின் வாழ்க்கையில் ஒரு நிகழ்ச்சி, அதிகார உறவுகள் பற்றிய அவரது தரிசனத்துக்கு வழிகோலியது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்துக்கு முதன்முறையாகப் பயணம் செய்கிறார். அவரோடு குதிரை வண்டியில் பயணம் செய்பவன் ஓர் அரசாங்க ஊழியன். வேகமாக ஓட்டும்படி வண்டி ஓட்டுபவனை அந்த அரசாங்க ஊழியன் தன் முட்டியால் குத்திக்கொண்டே வருகிறான். இந்தக் குத்துகளை வாய் பேசாது வாங்கிக் கொள்ளும் வண்டி ஓட்டுபவனோ (அவன் ஓர் எளிய குடியானவக் குடும்பத்தைச் சேர்ந்தவன்) தன் பங்குக்கு குதிரையை இடைவிடாமல் சாட்டையால் விளாசிக் கொண்டே இருக்கிறான். இது தோஸ்தோவ்ஸ்கியிடம் கோபத்தையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது. சக மானுடர்கள் மீது இழைக்கப்பட்டும் கொடுமைகளைச் சகித்துக் கொள்ள முடியாத தோஸ்தோவ்ஸ்கி பின்னாளில் நீதியான சமூக அமைப்பை உருவாக்க விரும்பிய புரட்சிக் குழுவொன்றில் – பெட்ராவெஷ்கி வட்டத்தில் – சேர்ந்ததில் வியப்பில்லை.

ஆனால் இங்கு குறிப்பிடப்பட வேண்டிய முக்கியச் செய்தி வேறொன்றுள்ளது; நாற்பதாண்டுகளுக்குப் பின் இந்த நிகழ்ச்சியை தோஸ்தோவ்ஸ்கி நினைவு கூர்ந்தார் என்பதுதான். இப்போதுள்ள தோஸ்தோவ்ஸ்கி, ஜாராட்சிக்கு எதிரான அரசியல் சதியாலோசனையில் ஈடுபட்டுச் சிறைவாசம் புகுந்த தோஸ்தோவ்ஸ்கி அல்ல. அவருடைய அரசியல் கொள்கைகள் முற்றிலுமாக மாறிவிட்டன. ஜாராட்சியையும் வைதீக கிறிஸ்துவ சபையையும் ஆதரித்தல், சோசலிசம் உள்ளிட்ட எல்லா வகையான மேலை நாட்டுச் சிந்தனைகளையும் நிராகரித்தல் என்கிற நிலைப்பாட்டை தோஸ்தோவ்ஸ்கி மேற்கொண்டு விட்டார். ஆயினும் பழைய நிகழ்ச்சியை அவர் நினைவு கூர்கையில், அது, தான் வாழ்ந்த சமுதாயத்தை, ஆதிக்க உறவுகளின் அடிப்படையில் அமைந்த சமுதாயமாகப் புரிந்துகொள்வதற்கு உதவிய நிகழ்ச்சியாகவே கருதினார். அவரது கற்பனையில் பிறக்கிறது ஒரு படைப்பு; ஓர் இளம் குடியானவன், அவனது கழுத்தில் சொறி சிரங்கும் புண்ணும். அந்தச் சிரங்குக் கழுத்தைப் பார்த்துச் சிலர் கேலி செய்கின்றனர். அவமானம் தாங்கமுடியாத அவன் வீட்டுக்குத் திரும்பி வந்ததும் வராததுமாகத் தன் மனைவியை நையப் புடைக்கிறான்.

பிறரைத் துன்புறுத்தலும் பிறரால் துன்புறுத்தப்படும் கேவலத்துக்கு ஆளாகுதலும் (Sado-masochistic tendency) என்று நவீன கால உளவியலாளர்கள் கூறும் போக்கு மானுட இயல்பின் உள்ளார்ந்த அம்சம் என தோஸ்தோவ்ஸ்கி கருதியபோதிலும் அவர் இத்தகைய பண்புகளைக் கொண்ட கதை மாந்தர்களைத் திட்டவட்டமான சமூக, வரலாற்றுக் களத்தில் வைத்தே காண்கிறார். மேற்கூறிய உளவியல் போக்கினை எரிக் ஃப்ராம் ‘சுதந்திரத்திலிருந்து நழுவிச் செல்லுதல்’ (Escape from freedom) என்று வரையறுக்கிறார். மானுட வாழ்வு, மானுட சுதந்திரம் என்பன பற்றி அவர் கூறுவதாவது:

இயல்பூக்கங்களினால் செயல்பாடு நிர்ணயிக்கப்படுதல் என்பது குறைந்துகொண்டே போய் ஒரு குறிப்பிட்ட எல்லையைக் கடக்கும்போது, இயற்கைக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளுதல் என்கிற நிர்ப்பந்தம் நீங்கிய பிறகு, தலைமுறை தலைமுறையாக வழங்கப்பட்ட உத்திகளால் செயல்பாடு தீர்மானிக்கப்படுதல் என்பது நின்ற பிறகு, மானுட வாழ்வு என்பது தொடங்குகிறது. அதாவது, மானுட வாழ்வும் சுதந்திரமும் துவக்கத்திலிருந்தே ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிக்க முடியாதவையாக இருந்து வருகின்றன.1

அவர் மேலும் கூறுவதாவது: மானுட சுதந்திரம் என்பது தனிமனிதன், பிற மானுடர்களுடனான பூர்வீகப் பிணைப்புகளிலிருந்து விடுபட்டு, தனித்துவம் எய்திய நிலைக்கு உயர்வதைச் சார்ந்துள்ளது. மானுட வாழ்வின் முழு நிறைவு என்பது ஒருவன் பிற மானுடருடன் அவர்களின் ஓர் அங்கம் போலப் பிரிக்க முடியாதபடி ஒருவனை மற்றவன் சார்ந்திருக்கும் வகையில் ஐக்கியப்பட்டிருப்பதன் மூலம் பெறப்படுவதல்ல. மாறாக, ஒரு சுதந்திரமான, தளையிடப்படாத தனிநபர் என்ற வகையில் அவன் எல்லா மானுடரும் கொள்ளும் செயலளவிலான ஒருமைப்பாட்டின் மூலமும் அவனை மீண்டும் உலகுடன் ஐக்கியப்படுத்தும் அவனது தன்னியல்பான செயல்பாடு, அன்பு, உழைப்பு ஆகியவற்றின் மூலமும்தான் சாத்தியம்.

மானுடர்களுக்குப் பாதுகாப்புணர்வைத் தந்து வந்த பரஸ்பர பிணைப்புகளை இழக்கும்போதும், நிர்ப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார, சமூக, அரசியல் நிலைமைகளில் வாழும்போதும் மானுட சுதந்திரம் என்பது சகித்துக்கொள்ள முடியாத சுமையாகி விடுகிறது இதன் விளைவுதான் மேற்கூறப்பட்ட உளவியல் போக்கு. அது ஒரு தனிநபர் மற்றவர்களுடன் கொள்ளும் ஆரோக்கியம் அற்ற உறவு; ஆதிக்க அடிமை உறவு; உண்மையான சுயத்தின் இழப்பு. அது, ஃப்ராய்ட் துவக்கத்தில் கருதியது போல குரோதத்தின் வெளிப்பாடு அல்ல. பிறரிடமிருந்து துண்டித்துத் தனிமையாக்கப்பட்ட ஒருவன் மேற்கொள்ளும் முயற்சி அது. தனது பதற்ற உணர்வை, தான் தனித்திருக்கும் நிலையை, மற்றொருவனுடன் பிரிக்க முடியாததோர் அங்கம் போல ஐக்கியம் கொள்வதன் மூலம் மறந்து விடுவதற்காக அவன் செய்யும் முயற்சியே அது. இக்காரணத்தாலேயே மற்றொரு மனிதனைத் துன்புறுத்தும் ஒருவன் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றவனை, சார்ந்திருக்கிறான். பிறரைத் துன்புறுத்துதல், தானே துன்புறுத்தலுக்கு ஆளாகுதல் ஆகிய இரண்டும் ‘சுதந்திரத்திலிருந்து நழுவிச் செல்லுதல்’ ஆகும் என்கிறார் ஃப்ராம்.

‘தலைமறைவுக் குறிப்புகள்’ (Notes from the Underground) என்னும் நாவலின் கதாநாயகன், மேற்காணும் உளவியல் போக்குக்கு ஃப்ராம் தரும் வரைவிலக்கணத்துக்குப் பொருந்துகிறான் என்பதை மாரீஸ் ஃப்ரீட்மன் சுட்டிக் காட்டுகிறார். நண்பர்களால் தனக்கு ஏற்பட்ட அவமானத்தைப் போக்கிக் கொள்வதற்காக அவன் குடியானவக் குடும்பத்தில் பிறந்து வறுமையின் காரணமாக வேசித் தொழிலுக்கு வந்துவிட்ட லிசாவை அவமானம் செய்கிறான்; “என் கௌரவத்துக்கு ஏற்பட்ட இழுக்கின் பொருட்டு யாராவது ஒருவரைப் பழிவாங்கும் பொருட்டே என் வெறுப்பை உன்மீது கொட்டினேன். உன்னை எள்ளி நகையாடினேன். நான் அவமதிக்கப்பட்டேன். எனவே நானும் யாரையேனும் அவமதிக்க விரும்பினேன். அவர்கள் என்னைத் தூசு மாதிரி நடத்தினார்கள். எனவே நானும் வலிமையைக் காட்ட விரும்பினேன்.”2

இங்குக் குறிப்பிடப்பட வேண்டிய மற்றொரு விஷயம், மேற்குறிப்பிட்ட நாவலின் அடிப்படையில், தோஸ்தோவ்ஸ்கியை ஓர் இருத்தலியல் சிந்தனையாளராக (existentialist thinker) சித்தரிப்பதற்குப் பல மேலைநாட்டுச் சிந்தனையாளர்களும் இலக்கிய விமர்சகர்களும் முயற்சி செய்துள்ளனர் என்பதாகும் (தோஸ்தோவ்ஸ்கியின் வேறு சில படைப்புகளும் இந்த நோக்கத்திற்குப் பயன்பட்டுள்ளன). அறிவியல், அறிவு, அறிவொளி மரபு (Enlightenment),  அறவியல் அடிப்படையில் அமைந்த சிந்தனை, இயற்கை விதிகள், சமூக விதிகள் ஆகியவற்றை அந்நாவலின் கதாநாயகன் நிராகரிக்கிறான். புறநிலையான, மனித மனத்திலிருந்தும் சித்தத்திலிருந்தும் சுயேச்சையாக இருக்கிற, நம்மால் அங்கீகரிக்கப்பட்டே தீரவேண்டிய இயற்கை விதிகளை, அந்தக் ‘கற்சுவரை’ நிராகரிக்கிறான். அவன் கேட்கிறான்:

எந்தக் கற்சுவர் நீங்கள் சொல்வது? இயற்கை விதிகள், இயற்கை விஞ்ஞானங்கள், கணித அறிவியல் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட கற்சுவரா? இவற்றை ஆதாரமாகக் கொண்டு சிலர் நாம் குரங்கிலிருந்து பிறந்தவர்கள் என்று கூறினால், நாம் முகம் சுழிக்கக்கூடாது. அவர்கள் சொல்வதை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் சத்தம் போட்டுச் சொல்கிறார்கள்: ‘மன்னித்துக் கொள்ளுங்கள். நாங்கள் சொல்வதை உங்களால் மறுக்கவே முடியாது. இரண்டும் இரண்டும் நான்கு; இதற்கு இயற்கை உங்கள் சம்மதத்தைக் கேட்பதில்லை. இந்த விஷயத்தில் உங்கள் விருப்பம் என்ன என்பதைப் பற்றிய அக்கறை இயற்கைக்கு இல்லை. நீங்கள் இயற்கையை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். சுவர் இன்னும் சுவர்தான்’… கடவுளே இந்த இயற்கை விதிகள், அல்லது கணிதவியல் ஆகியவற்றைக் கொண்டு நான் என்ன செய்வது – இரண்டும் இரண்டும் நான்கு என்னும் விதி ஒருபோதும் என் ஒப்புதலைக் கோராதபோது. எனக்குப் போதுமான அளவு பலம் இல்லாவிட்டால் என் தலையை சுவரில் முட்டிக்கொள்ள மாட்டேன். ஆயினும் அந்தச் சுவரைக் கண்டு நான் திகைத்துப் போய்விட்டேன் என்பதாலோ அதைத் தகர்ப்பதற்கு எனக்கு வழியேதும் இல்லை என்பதாலோ அதை நான் ஒப்புக்கொள்ளப் போவதில்லை.3

இக்கூற்று கீர்க்கேகார்டையோ அல்லது வேறோர் இருத்தலியலாளரையோ நினைவுபடுத்தக்கூடும். ஆனால் தோஸ்தோவ்ஸ்கியின் படைப்பைக் கவனத்துடன் படிக்கும் வாசகர்கள், அவரது கதாநாயகன் தாக்குதல் தொடுப்பது தன் சமூகச் சூழலில் மேலோங்கியிருக்கும் மதிப்பீடுகள் மீதேயன்றி சமுதாயத்தின் மீதல்ல என்பதையும் சமுதாயத்தை அவன் நிராகரிப்பதில்லை என்பதையும் எளிதில் கண்டுகொள்வர். தன்னை ஒரு ‘பிறத்தியானாகக்’ கருதிக்கொள்ளும் இக்கதாநாயகனைப் பற்றி அடிக்குறிப்பொன்றில் தோஸ்தோவ்ஸ்கி எழுதுகிறார்: ‘நம்மிடையே இன்னும் தனது நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கும் ஒரு தலைமுறையைப் பிரதிநிதித்துவப்படுத்துபவன் அவன்’. இக்கூற்று புறநிலையான, திட்டவட்டமான சமூகச் சூழ்நிலைகளால் உருவாக்கப்பட்ட சமூக உளவியலின் வெளிப்பாடுதான். தோஸ்தோவ்ஸ்கியின் படைப்புகளில் காணப்படும் ‘இருத்தலியல்’, சமூக யதார்த்தம் பற்றிய அவரது ஆழமான புரிதலுடன், யதார்த்தவாதத்துடன் முட்டி மோதுவதைக் காணலாம்.

தோஸ்தோவ்ஸ்கி பற்றி மேற்கு நாட்டுச் சிந்தனையாளர்களிடம் உள்ள மற்றொரு பார்வையையும் இங்கு நாம் குறிப்பிட்டாக வேண்டும். மனிதர்களை அறிவுக்குப் பிடிபடாத, இயல்பூக்கங்கள் அல்லது உணர்ச்சிகளால் ஆட்டுவிக்கப்படுபவர்களாகக் காண்பவர்தான் தோஸ்தோவ்ஸ்கி என்பதுதான் இப்பார்வை. தன்னைச் சிலர் ஓர் உளவியலாளராகச் சித்தரித்ததை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்கு ஆதாரமாக அவரது குறிப்பேடுகளிலிருந்து கீழ்க்காணும் பகுதியை பாக்தின் சுட்டிக் காட்டுகிறார்:

முழுமையான யதார்த்தவாதத்துடன் மானுடனில் மானுடனைக் கண்டறிவதுதான் என் நோக்கம். நான் ஓர் உளவியலாளன் என்று அழைக்கப்படுகிறேன். நான் ஒரு யதார்த்தவாதி. இச்சொல்லுக்குரிய மிக உயர்ந்த அர்த்தத்தில், அதாவது மானுட உள்ளத்தின் ஆழங்கள் அனைத்தையும் நான் சித்தரிக்கிறேன்.4

‘உளவியலாளர்’ என்று தான் வர்ணிக்கப்படுவதை தோஸ்தோவ்ஸ்கி நிராகரிக்கக் காரணம், அவர் காலத்தில் நிலவிய உளவியல், மனிதனைப் பற்றிய மிகக் குறுகலான, மிக எளிமைப்படுத்தப்பட்ட பார்வையை வழங்கியதுதான் என்று கூறும் பாக்தின், அத்தகைய உளவியலை நிராகரித்த அதே பொழுதில், தோஸ்தோவ்ஸ்கி குறித்தும் அனைத்து மானுட உறவுகளும் மானுட விழுமியங்களும் சீரழிந்துபோய் மானுடத் தன்மையற்றவையாக மாறுவது குறித்தும் ஆழ்ந்த அக்கறை கொண்டிருந்ததாகக் கூறுகிறார். எளிமைப்படுத்தப்பட்ட வகையில் மார்க்ஸிய அணுகுமுறையை இலக்கியப் படைப்புகளுக்குப் பயன்படுத்துபவர்கள் புரிந்துகொள்ளாத விஷயம்தான் இது. வர்க்க உறவுகளும் அதிகார (ஆதிக்க) உறவுகளும் அரசியல் அல்லது பொருளாதாரத்தளம் என்னும் குறுகலான வட்டத்திற்குள் மட்டும் இயங்குவன அல்ல. மாறாக சமூக உருவாக்கங்கள், மானுடர்களுக்கிடையே உள்ள தனிப்பட்ட பரஸ்பர உறவுகள், பாலுறவுகள், குடும்ப உறவுகள் ஆகியவற்றில் தம்மைப் பிரதிபலித்துக்கொள்கின்றன. ஆதிக்க உறவுகள் வாழ்வின் பல்வேறு மட்டங்களில் நிலவுவதைப் பற்றிய ஆழமான புரிதலை தோஸ்தோவ்ஸ்கியின் படைப்புகளில் காணலாம். இக்காரணத்தாலேயே அவரை ஒரு மாபெரும் யதார்த்தவாத எழுத்தாளராகவே நாம் காணவேண்டும்.

ஆனால் இலக்கியத்தில் யதார்த்தவாத மரபை உயர்த்திப் பிடித்த மார்க்சிய இலக்கிய விமர்சகர்கள் பெரும்பாலோர் அவர்கள் கூறிவந்த விமர்சன யதார்த்தவாதம் (Critical Realism) என்னும் திணைக்குள் கூட தோஸ்தோவ்ஸ்கியின் படைப்புகளைக் கொண்டுவர விரும்பவில்லை. விமர்சன யதார்த்தவாதம் என்பது “வர்க்க சமுதாயம் பற்றிய முக்கிய உண்மைகளை வெளிப்படுத்தும் வகையிலும் மானுட பிரக்ஞையை, வர்க்க சமுதாயம் அதன்மீது திணித்துள்ள வரம்புகளிலிருந்து விடுவிப்பதற்கு உறுதுணை புரிகிற வகையிலும் போதுமான அளவிற்கு விமர்சனத் தன்மையுடைய கண்ணோட்டத்திலிருந்து வர்க்க சமுதாய சகாப்தத்தில் எழுதப்படும் இலக்கியம் ஆகும்” என்பது லூகாச் கொடுத்த விளக்கம்.

இந்த வரையறையின்படி தோஸ்தோவ்ஸ்கியின் படைப்புகள் விமர்சன யதார்த்தவாத இலக்கியமாகக் கருதப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பல முக்கிய மார்க்சியர்கள் தோஸ்தோவ்ஸ்கிக்கு இத்தகைய அங்கீகாரத்தை வழங்கவில்லை. இதற்கு இரு காரணங்களைக் கூறலாம். தோஸ்தோவ்ஸ்கியின் பிற்போக்குத்தனமான அரசியல் சித்தாந்தம் அவர்களுக்கு வெறுப்பூட்டியிருந்தது என்பது ஒரு காரணம் (நான் உட்பட என் தலைமுறையைச் சேர்ந்த பல மார்க்சியர்கள் இத்தகைய பார்வையின் தாக்கத்திற்கு உட்பட்டிருந்தோம்.)

ஆனால் சித்தாந்தத்திற்கும் கலைக்கும் இடையேயுள்ள உறவு பற்றிய ஒரு தவறான புரிதல் தோஸ்தோவ்ஸ்கியின் படைப்புகளை நிராகரிக்குமாறு செய்துவிட்டது. ஒரு சிறந்த இலக்கியப் படைப்பில், படைப்பாளியின் சித்தாந்தம் அப்படியே பச்சையாக, பட்டவர்த்தனமாக ஒருபோதும் நிலவுவதில்லை. தனது உலகைப் பற்றிய படைப்பாளியின் கற்பனாரீதியான தரிசனத்தில் அவனது சித்தாந்தம் மாற்றத்திற்கு உட்படுகிறது; சில சமயங்களில் முற்றாக உருமாற்றம் செய்யவும் படுகிறது.

இக்கற்பனை ரீதியான தரிசனத்தின் மூலமே அப்படைப்பாளியின் கலைப்படைப்பு வாசகரோடு தொடர்பு கொள்கிறது. அதனால்தான் ஓர் அரசியல் பிரசுரத்தையோ அல்லது அரசியல் கட்டுரையையோ படிப்பது போல், ஓர் இலக்கியப் படைப்பை நாம் படிக்கக்கூடாது. இங்கு பி.என்.மெட்வெடவின் கூற்றை மேற்கோள் காட்டுவது பொருத்தமானது:

இலக்கியம், சித்தாந்தச் செயல்பாடு என்னும் சூழலுக்குள் அந்த சித்தாந்த செயல்பாட்டினுடைய ஒரு சுயேச்சையான கிளையாகவே இயங்குகிறது. இந்த சித்தாந்தச் செயல்பாட்டுக்குள் அதற்கே உரிய பிரத்தியேகமான முறையில் ஒழுங்கமைக்கப்பட்ட சொற்களாலான உற்பத்திப் பொருட்கள் என்ற வகையில் இலக்கியம் ஒரு விசேடமான இடத்தை வகிக்கிறது. இத்தகைய உற்பத்திப் பொருட்களுக்கு அவற்றுக்கே உரிய திட்டவட்டமான கட்டமைப்புகள் உள்ளன… இலக்கியத்தின் உள்ளடக்கம் ஒரு சித்தாந்தக் கண்ணோட்டத்தைப் பிரதிபலிக்கிறது; அதாவது கலை அல்லாத பிற சித்தாந்த உருவாக்கங்களை (அறவியல் சார்பான, அறிதல் சார்பான சித்தாந்த உருவாக்கங்கள் போன்றவை) பிரதிபலிக்கிறது. ஆனால் அவற்றைப் பிரதிபலிக்கையில், இலக்கியமானது சித்தாந்தத்தை வெளிப்படுத்தும் புதிய வடிவங்களை, புதிய குறிகளை (Signs) உருவாக்குகிறது. இந்தப் புதிய குறிகள், அதாவது, இலக்கியப் படைப்புகள், சமூக யதார்த்தத்தின் ஓர் அம்சமாகச் செயல்படத் தொடங்குகின்றன. தமக்கு வெளியே உள்ள ஏதோவொன்றைப் பிரதிபலிக்கும் அதே சமயத்தில் இலக்கியப் படைப்புகள், தம்மிலிருந்தும் தமக்கு வெளியிலிருந்தும் சுயேச்சையான மதிப்பும் பிரத்யேகத்தன்மையும் உடைய நிகழ்ச்சிப் போக்குகளை (Phenomena) சித்தாந்தச் சூழலிலிருந்து உருவாக்குகின்றன. பிற சித்தாந்தங்களைப் பிரதிபலிப்பதோ அதாவது, இலக்கிய வடிவங்களில் அவற்றைப் பிரதிபலிப்பதோ மட்டும் அல்ல அவற்றின் செயல்பாடு. அவற்றிற்கு ஒரு சுயேச்சையான, சித்தாந்தச் செயல்பாடு உண்டு. அவை தமக்கே உரிய வகையில் சமூக – பொருளாதார நிலைமைகளை விலகலான முறையில் பிரதிபலிக்கின்றன (Refract).6

இரண்டாவது காரணம், தோஸ்தோவ்ஸ்கியின் படைப்புக் கண்ணாடி போல யதார்த்தத்தைப் பிரதிபலிப்பதில்லை. தனது நூல்களைப் பிரசுரித்து வந்த ஸ்ட்ராகோவ் என்பவருக்கு ஒருமுறை அவர் எழுதினார்:

கலையில் யதார்த்தம் என்பது பற்றி எனக்கு சொந்தக் கருத்தொன்று உள்ளது. விசித்திரமானது என்றும் விதிவிலக்கானது என்றும் பெரும்பாலானோர் கருதுகிறவை என்னைப் பொறுத்தவரை யதார்த்தத்தின் சாரமாக அமைகின்றன. சகஜமான நிகழ்ச்சிகள், அவற்றைப் பற்றிய வழக்கமான பார்வை ஆகியன என்னைப் பொறுத்தவரை யதார்த்தமானவை அல்ல; மாறாக அதற்கு நேர்மாறானவை.7

இருத்தலியல், உளவியல், அறிவு எதிர்ப்புவாதம் முதலிய பார்வைகளின் அடிப்படையில் தோஸ்தோவ்ஸ்கி மேற்கு நாட்டுச் சிந்தனையாளர்களாலும் இலக்கிய விமர்சகர்களாலும் தம்வயமாக்கப்பட, சோவியத் யூனியனிலோ அவரது புகழ் ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளாகி வந்தது. அதனால்தான் பிரபல ஆங்கில அறிஞர் ஜார்ஜ் ஸ்டைனர், மார்க்ஸிய ரஷ்யா, பிரபுக் குடும்பத்தைச் சேர்ந்த தோல்ஸ்தாயைப் புகழ்ந்துகொண்டிருந்த அதே சமயத்தில் புரட்சிக்கு முந்தின ரஷ்ய சமுதாயத்தின் விகாரங்களில் பாதிக்கப்பட்டு, அவமதிப்பையும் வறுமையையும் அனுபவித்த சாமானியரான தோஸ்தோவ்ஸ்கியைப் புறக்கணித்துவந்தது ஒரு பெரும் புதிர் என்று குறிப்பிட்டார்.

ஆனால் தோஸ்தோவ்ஸ்கி புரட்சிக்குப் பிந்திய ரஷ்யாவில் எப்போதுமே புறக்கணிக்கப்பட்டிருக்கிறார் என்பது உண்மையல்ல. நவம்பர் புரட்சி நடந்த சிறிது காலத்திற்குப் பின் அமைச்சரவைக் குழு லெனினின் ஆலோசனையின் பேரில், ரஷ்ய வரலாற்றில் புகழ் பெற்ற புரட்சியாளர்கள், கலைஞர்கள் ஆகியோருக்கு நினைவுச் சின்னங்கள் எழுப்ப முடிவு செய்தது. நினைவுச் சின்னங்கள் எழுப்பப்பட வேண்டிய கலைஞர்களின் பட்டியலில் தோஸ்தோவ்ஸ்கியின் பெயர் இரண்டாவது இடத்தைப் பெற்றிருந்தது. தோல்ஸ்தோய் பற்றி ஆழமான விமர்சனக் கட்டுரைகள் எழுதிய லெனின், தோஸ்தோவ்ஸ்கி பற்றி ஏதேனும் எழுதியிருக்கிறாரா என்பது நமக்குத் தெரியவில்லை. ஆனால் அன்றைய கல்வி கலாச்சார அமைச்சராக இருந்த லூனாசார்ஸ்கி, தோஸ்தோவ்ஸ்கியின் படைப்புகளில் ஆழ்ந்த அக்கறை காட்டினார் என்பதற்கு நிறையச் சான்றுகள் உள்ளன. அவை பற்றிப் பின்னர் காண்போம். லெனினின் புதிய பொருளாதாரக் கொள்கை கடைப்பிடிக்கப்பட்ட காலம் முழுவதிலும், அன்றிருந்த உள்நாட்டு, வெளிநாட்டு சூழ்நிலைமைகள் அனுமதித்த அளவையும் விட மிகக் கூடுதலான கலைச் சுதந்திரம் நிலவியது. பின்னர் ‘சோசலிச யதார்த்தவாதம்’ என்ற ஓர் இறுக்கமான கோட்பாடும் ஸ்டாலினிசமும் ஒன்றுக்கொன்று நேரிணையான உறையில் மேலாதிக்கம் செலுத்திய காலகட்டத்திலும் கூட, தோஸ்தோவ்ஸ்கியின் வலதுசாரிப் பிற்போக்குச் சித்தாந்தத்தைக் காரணமாகக் காட்டி, அவரது படைப்புகள் கடுமையாக விமர்சிக்கப்பட்ட அந்தக் காலத்திலும் கூட அவரது படைப்புகள் தடை செய்யப்படவில்லை. இதற்கு ஒரு முக்கியக் காரணம் தோஸ்தோவ்ஸ்கியின் அளவு கடந்த ரஷ்ய/ஸ்லாவியப் பற்று என்று கூறலாம். ஸ்டாலின் ஆட்சியின்கீழ் ரஷ்ய தேசியவாதம் ஊக்குவிக்கப்பட்டு வந்தது என்பதை நாம் நினைவுகொள்ளவேண்டும்.

எது எப்படி இருப்பினும் அந்த மாபெரும் படைப்பாளிக்கு முழு அங்கீகாரமும் முழு கௌரவமும் வழங்கும் வகையில் பதினோரு ஆண்டுகளுக்கு முன்பே (1978-1979) சோவியத் விஞ்ஞானக் கழகம் (Soviet Academy of Sciences) அவரது எழுத்துகள் அனைத்தையும் திரட்டி விமர்சனக் குறிப்புகளுடன் 31 தொகுதிகளில் வெளியிட முடிவு செய்து பல தொகுதிகளை ஏற்கனவே ரஷ்ய மொழியில் வெளியிட்டுள்ளது. அவரது படைப்புகளின் ஆங்கில மொழியாக்கங்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

2

தோஸ்தோவ்ஸ்கியின் படைப்புகள் அனைத்தையும் வெளியிடுவது என்கிற முடிவு சோவியத் யூனியனில் மேற்கொள்ளப்பட்ட அதே சமயத்தில்தான் மிகெய்ல் பாக்தினின் ‘தோஸ்தோவ்ஸ்கியின் படைப்பிலக்கணம் பற்றிய பிரச்சினைகள்’ (Problems of Dostoevsky’s Poetics) என்னும் நூலின் மறுபதிப்பு வெளியிடப்பட்டது. 1929-இல் முதன்முதலில் வெளியிடப்பட்ட இந்த நூல், மிக நீண்ட காலம் இருட்டடிப்பு செய்யப்பட்டிருந்தது. இந்த நூலின் மறுபதிப்பு வெளிவந்ததும் தோஸ்தோவ்ஸ்கி பற்றிய மார்க்சியப் பார்வையில் பெரும் மாற்றம் ஏற்பட்டதோடன்றி, பாக்தின் என்னும் மிக வளமான சிந்தனையாளரை உலகின் பிற பகுதிகள் அறிந்துகொள்வதற்கான வாய்ப்பும் ஏற்பட்டது. இந்த நூலின் ஆங்கில மொழியாக்கம் இதுகாறும் ரஷ்யாவில் இருந்து வெளிவரவில்லை. 1973-இல் ஆங்கில மொழியாக்கமொன்று முதன்முதலில் அமெரிக்காவில் வெளிவந்ததாகத் தெரிகிறது.

பாக்தினின் கருத்துக்களைக் காண்பதற்கு முன் ‘ரஷ்யப் புரட்சி: இலக்கிய சாட்சியம்’ என்னும் நூலில் உருவம் உள்ளடக்கம் பற்றி எழுதப்பட்டுள்ள ஒரு விஷயத்தை இங்கு நினைவுகூற விரும்புகிறேன்:

உருவத்தையும் உள்ளடக்கத்தையும் பிரித்துப் பார்த்து விமர்சிக்கும்பொழுது உருவம் கள்ளங்கபடமற்ற, வரலாற்றுத் தன்மையற்ற சமூகத்திற்கும் யதார்த்தத்திற்கும் அப்பாற்பட்ட ஓர் அம்சமாக மாறிவிடுகிறது. உள்ளடக்கம் என்பது மட்டுமே ஒரு கலைப்படைப்பில் கண்டனத்துக்கோ அல்லது பாராட்டுக்கோ உரிய அம்சமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதாவது ஒரு கலைஞனும் அவனது படைப்பும் தாம் உற்பத்தி செய்யும் உள்ளடக்கம் அல்லது அர்த்தத்துக்கு மட்டும் பொறுப்பேற்றால் போதும் என்பது போல் மேற்கூறிய பாகுபாடு வேலை செய்கிறது. இவ்வாறு பிரிக்கப்படுவதால் உருவமும் உள்ளடக்கமும் ஒன்றுக்கொன்று சம்பந்தமற்றவையாக மாறுகின்றன. மேலும், எந்த அனுமானங்களின் கீழ் இப்பாகுபாட்டை நாம் செய்கிறோமோ அந்த அனுமானங்கள், அர்த்தம், மொழி, உண்மை என்பனவற்றின் அடிப்படைகளைத் தவறாகப் புரிந்துகொள்கின்றன. இத்தகைய விமர்சனத்தை நாம் மரபான மார்க்சிய இலக்கிய விமர்சகர்கள், மரபான உருவவியலாளர்கள் ஆகிய இரு சாரார் மீதும் வைக்கலாம். ஏனெனில் இவர்களில் ஒவ்வொரு சாராரும் உருவம், உள்ளடக்கம் ஆகிய இரண்டில் ஏதோ ஒன்றை மட்டும் பற்றிக்கொண்டு மற்ற அம்சத்தைப் புறக்கணித்து விவாதம் புரிந்தனர்.8

இவ்விரு சாராரின் ஒருதலைச்சார்பான அணுகுமுறைகளைக் கடந்துவந்து புதிய கண்ணோட்டத்திலிருந்து கலை, இலக்கியப் படைப்புகளைப் பார்த்தவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவராக விளங்கியவர் பாக்தின். அவர் இலக்கிய விமர்சகர் மட்டுமல்ல, மொழியியலாளர், வரலாற்றறிஞர், பண்பாட்டு இயலாளர் (Culturologist). அவரை உருவவியல், அமைப்பியல், குறியியல் போன்ற குறுகிய வரம்புகளுக்குள் அடைத்துவிட முடியாது.9

‘The Dialogic Imagination’ என்னும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள நான்கு கட்டுரைகளில் பாக்தின் கூறியுள்ள பொதுவான சில கருத்துகள், தோஸ்தோவ்ஸ்கி பற்றி அவர் குறிப்பாகக் கூறியுள்ள விஷயங்களைப் புரிந்துகொள்ளவும் தோஸ்தோவ்ஸ்கி ஒரு மாபெரும் யதார்த்தவாத படைப்பாளி எனக் கூறுவதற்கான காரணங்களைப் புரிந்துகொள்ளவும் உதவும். இந்தப் பொதுக் கருத்துகளைச் சுருக்கமாக இங்கு காண்போம்.10

இன்று நாவல் என்று நாம் கருதும் இலக்கிய வகை (literary genre) அதற்குரிய குறிப்பிட்ட வடிவத்தை 18-ஆம் நூற்றாண்டில்தான் பெற்றது. இந்நூற்றாண்டில்தான் ஐரோப்பிய நாகரீக வளர்ச்சியில் ஒரு மாபெரும் முறிவு (rupture) ஏற்பட்டது. அதற்கு முக்கியக் காரணங்கள்:

  1. அக்கால கட்டத்தில்தான் ஐரோப்பியர்கள் கடல் கடந்து மேற்கொண்ட பயணங்களின் மூலம் தாம் வாழ்ந்துவந்த குறுகிய உலகின் எல்லைகளுக்கு அப்பால் ‘பிற’ உலகங்கள், பண்பாடுகள், நாகரிகங்கள், மொழிகள் ஆகியன இருப்பதை உணரலாயினர்.
  2. ஐரோப்பியச் சமூகங்களில் உள்ள முரண்பாடுகள், வேறுபாடுகள் ஆகியன – புதிய உற்பத்தி முறை ஒன்று தோன்றியதன் காரணமாக – முன் எப்போதும் இல்லாத வகையில் சமூகக் களத்தின் அரசியல், பண்பாட்டுத் தளங்களில் வெளிப்பாடு கண்டன.
  3. காலம் (Time) என்பதற்கு எல்லையேதும் இல்லை என்கிற உணர்வு இக்காலத்தில்தான் முதலில் தோன்றியது.

கிறிஸ்துவ மதத்தின் பார்வையிலும் சரி, தொன்மையான நாகரிகங்களின் பார்வையிலும் சரி, காலம் என்பதற்கு வரம்புகள் இருப்பதாகவே கருதப்பட்டது. கடந்த காலமானது நிகழ்காலத்திற்குள் புகுந்து அதன் தன்மையை நிர்ணயிப்பதையும் நிகழ்காலமானது முடிவில்லாத வெளியில் (space)  பயணிப்பதையும் ஆனால் ஒரு வருங்காலத்தை நோக்கிப் பயணிப்பதையும் அவை ஒப்புக்கொள்ளவில்லை. காலமென்பது துவக்கமும் முடிவும் கொண்ட ஓர் இயக்கம் என்றும் அந்த இயக்கத்திற்குப் பொருள் கற்பிப்பது கர்த்தரின் சித்தம்தான் என்றும் மத்தியகால கிறிஸ்துவம் கொண்டது. அந்த இரு கருத்துகளின் அடிப்படையிலேயே அம்மதத்தையும் அது உருவாக்கிய பண்பாட்டையும் சார்ந்து தோன்றிய இலக்கியப் படைப்புகள் கதைகளையும் கருத்தாக்கங்களையும் முன்வைத்தன. தொன்மை நாகரிகங்கள் (கிரேக்க நாகரிகம் உள்பட) உருவாக்கிய காவியப் படைப்புகளில் காலம் என்பது கடந்த காலம் என்ற வகையில்தான் செயல்படுகிறது. அதாவது, நடந்து முடிந்து போனவற்றையே அக்காவியங்கள் பேசுகின்றன. அவை சொல்லும் கதைகள் வருங்காலத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு லட்சியப் பாதையைக் காட்டுவதையே தம் நோக்கமாகக் கொண்டிருப்பதையும் நாம் காணலாம். காலத்தின் தொடர்ச்சி பற்றிய, வரம்பற்ற அதன் இயக்கம் பற்றிய உணர்வு 19-ஆம் நூற்றாண்டில்தான் பிரத்தியேகமாக வெளிப்படுகிறது.

நாவல், மரபு வழிவந்த பிற இலக்கியவகை போலச் செயல்படுவதில்லை. அதற்கே உரிய தனிப் பண்புகள் சில உண்டு. நாவலில்தான் சொல் என்பது சித்தாந்தப் போராட்டத்தின் களமாகச் செயல்படுகிறது. கவிதையில் சொல் எவ்வாறு இயங்குகிறதோ அதற்கு மாறுபட்ட முறையிலேயே நாவலில் அது இயங்குகிறது. கவிதையில் சொல், தான் விளக்கவோ வரையறுக்கவோ விரும்பும் பொருளில் அல்லது விஷயத்தில் இருக்கக்கூடிய முரண்பட்ட பல்வேறு அம்சங்களுடன், தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்கிறது. தான் விளக்க வரும் பொருளுக்கும் விஷயத்திற்கும் தனிப்பட்ட வரலாறு இருக்கக்கூடும் என்பதையும் அவற்றைப் பல்வேறு விதங்களில் பல்வேறு சூழல்களில் வைத்துப் புரிந்துகொள்ள முடியும் என்பதையும் கவிஞர்கள் பெரும்பாலும் காண்பதில்லை. அதாவது தாம் பயன்படுத்தும் மொழி பற்றிய தன்னுணர்வு இல்லாமலேயே கவிஞர்கள் எழுதுகின்றனர். படைப்பியக்கத்தில் அவர்கள் தன்னுணர்வோடு செயல்பட்ட போதிலும். ஆனால் நாவலாசிரியனோ பல குரல்களின் ஒத்திசைவையும் முரண்பாட்டையும் தனது எழுத்துக்களில் வெளிப்படுத்த வேண்டியுள்ளது. ஏனெனில் நாவலின் செயல்பாடே அதுதான். அது தோன்றிய காலமும் புனைவிலக்கியத்தில் நாவல் வகிக்க வந்த பாத்திரமும் அந்தச் செயல்பாட்டுக்கே இட்டுச் செல்கின்றன.ஐரோப்பிய நாகரிக வளர்ச்சியின் வரலாற்றில் மாபெரும் முறிவை ஏற்படுத்திய பதினெட்டாம் நூற்றாண்டில்தான் நாவல் தோன்றியது. அந்த நூற்றாண்டில்தான் ஐரோப்பிய நாகரிகமும் சமூகங்களும் தனிமைப்பட்டிருந்த நிலையிலிருந்து விடுபட்டுப் பிற மொழிகளுடனும் பண்பாடுகளுடனும் உறவு கொள்ளத் தொடங்கின. அவை ஒன்றோடொன்று முட்டி மோதின. ஒன்று மற்றொன்றை விளக்கவும் தெளிவுபடுத்தவும் உதவின. இந்தவொரு சூழலில் சொல் என்பது ஒரு விவாதமாக (dialogue) தன்னைக் காட்டிக்கொண்டது. அது யாருடைய சொல் என்பதாலும் யாரிடம் அது சொல்லப்படுகிறது என்பதாலும் நிர்ணயிக்கப்பட்டது; சொல்லின் இந்த ஈரம்சத்தைத் தம் தாக்கத்துக்கு உட்படுத்த முனைகின்றன பல்வேறு வர்க்க சக்திகளும் குழு நலன்களும். பல வர்க்கங்களும் ஒரே மொழியைத்தான் பயன்படுத்துகின்றன. ஆனால் மாபெரும் மாற்றங்களைக் கண்ட பதினெட்டாம் நூற்றாண்டில் சொல், வர்க்கப் போராட்டத்தின் களமாகவே விளங்கியது. ஒரே சொல்லில் பல்வேறு வர்க்கங்கள் பல்வேறு வகையில் தரும் அழுத்தங்கள் ஒன்றையொன்று சார்ந்து ஒன்றோடொன்று முரண்பட்டும் விளங்கின.

இதன் பொருள், பல சூழல்களிலிருந்து பல வர்க்க சக்திகளை அல்லது குழு நலன்களைச் சார்ந்த சொற்களோ குரல்களோ முந்தைய சமுதாயங்களில் இருக்கவில்லை என்பதல்ல. இன்னும் சொல்லப்போனால் குறிப்பிட்ட ஒரு சொல்லுக்குப் பல்வேறு அர்த்தங்கள் இருப்பது என்பது பழங்காலத்திலும் இருக்கவே செய்தது. ஆனால் அன்று இலக்கியப் படைப்பின் தன்மையை நிர்ணயிக்கக்கூடியதாக, சொல்லின் ஈரம்சத் தன்மை விளங்கவில்லை. 18-ஆம் நூற்றாண்டில் நாவல் இலக்கியம் தோன்றியபோது வெளி உலகின் முரண்பட்ட பல அம்சங்களையும் அது வெளிப்படுத்த விழைந்தது. மரபான இலக்கிய வகைகள் – எடுத்துக்காட்டாக அவல நாடகம் (Tragedy) போன்றவை – சமூகத்தின் மேட்டுக்குடி மக்களின் வாழ்க்கையையும், அவர்கள் எதிர்கொண்ட அறவியல், ஆன்மீகப் பிரச்சினைகளையும் பிரதிபலித்தன. யதார்த்தத்தின் உயிர்த்துடிப்பையோ எண்ணற்ற அதன் வகைகளையோ இந்த மரபான இலக்கிய வகைகள் சித்தரிக்கச் செய்யவில்லை. ஆனால் பழமையிலிருந்து பழமையான ஆதிக்க (சமூக) உறவுகளிலிருந்தும் விடுபட்ட 18-ஆம் நூற்றாண்டின் புதிய சமூக உறவுகளைத் தம் படைப்புகளில் சித்தரிக்க வந்த நாவலாசிரியர்களோ யதார்த்தத்தின் எண்ணற்ற வகைகளையும் வாழ்வுகளையும் தமது கலையில் பதிவு செய்யத் தொடங்கினர். புதிய பிரக்ஞையின் வெளிப்பாடாகவே நாவல் இலக்கியம் தோன்றியது.

நாவல் இலக்கியத்தின் தோற்றத்துடன் புனைவிலக்கியத்தில் ‘காலம்’ (Time) என்பது செயல்பட்டு வந்த முறையும் மாற்றம் கண்டது. மரபான இலக்கிய வகைகளில் நிகழ்காலத்தின் துடிப்பும், துவக்கமும் முடிவும் இல்லாத அதன் தன்மையும் இடம்பெறவே இல்லை. நிகழ்கால சம்பவங்கள் ஏதேனும் விவரிக்கப்பட்டால் அவை சமுதாயத்தின் அடித்தட்டு மக்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்ட சம்பவங்களாக அமைந்திருந்தன. ஆனால் யதார்த்தத்தில் காலம் இயங்கும் விதம் நாவல் இலக்கியத்தில்தான் முழு வெளிப்பாடு கண்டது. இக்காரணத்தாலேயே, நாவல் மிக விரைவாக மாற்றம் கண்டுவரும் யதார்த்த உலகை, அதன் முழுமையைச் சித்தரிக்கக்கூடிய இலக்கிய வகையாக அமைகிறது.

பாக்தின் ‘கால – வெளிச் சேர்க்கை (Chromotope) என்னும் கருத்தாக்கத்தைக் கையாள்கிறார். (Chromos என்னும் கிரேக்கச் சொல்லுக்கு ‘காலம்’ என்று பொருள்; Tope என்றால் வெளி). ஒவ்வொரு இலக்கிய வகைக்கும் அதற்கே உரிய கால – வெளிச் சேர்க்கை(கள்) உண்டு. எடுத்துக்காட்டாக, தன்னுணர்ச்சிக் கவிதையை (Lyric poetry) எடுத்துக் கொள்வோம். பெரும்பாலும் காதலைப் பற்றியே பாடும் இக்கவிதைகளில் இடம்பெறும் கால – வெளிச் சேர்க்கைகளைக் காண்போம். அவை அந்தரங்கமான சில வெளிகள்தான். ஒரு தோட்டம், ஒரு சன்னல் மாத்திரம் திறந்திருக்கும் தனி அறை… இவ்வாறான இடங்களில் வளரும் காதல், யதார்த்த உலகின் கால இயக்கத்திற்கு உட்படாது; மாறாக அந்தரங்க வெளிகளில் நிலவும் ‘காலத்திற்கு அப்பாற்பட்ட கால’ங்களிலேயே வெளிப்படுத்தப்படும், வளர்ச்சியடையும்.

18-ஆம் நூற்றாண்டில் தோன்றிய இலக்கியத்தில் அதற்கே உரிய கால – வெளிச் சேர்க்கைகள் காணப்படுகின்றன. பூர்ஷ்வா வாழ்க்கையைப் பற்றிய நாவல்களில் விருந்தினரை உபசரிக்கும் அறை (Parlour) என்பது, நாவலில் சம்பவங்கள் நிகழும் முக்கிய களமாக விளங்குகிறது. பூர்ஷ்வா மனிதர்கள் அனுபவிக்கும் ஓய்வு நேரம், பொழுதுபோக்கு, கேளிக்கைகள் ஆகியவற்றை நினைவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைந்திருக்கும்.

தோஸ்தோவ்ஸ்கி தனது நாவல்களில் மாடிப்படிகள், முற்றங்கள், சில சமயங்களில் நகர்ப்புறச் சதுக்கங்கள் முதலியவற்றைக் கொண்டு குறிப்பிட்ட சில கால – வெளிச் சேர்க்கைகளை உருவாக்குவதாக பாக்தின் கூறுகிறார். நாவல்களில் வரும் முக்கியச் சம்பவங்களில் பல இந்த இடங்களைச் சார்ந்தும் இவற்றிலுமே நிகழ்கின்றன. மேலும் முற்றங்கள் போன்ற இடங்களிலேயே அவரது கதாபாத்திரங்கள் முக்கியமான, தீர்மானகரமான முடிவுகளைச் சட்டென்று, நொடிப்பொழுதில் மேற்கொள்வதைக் காணலாம். இந்த நொடிப்பொழுது, இக்கதாபாத்திரங்கள் வாழும் யதார்த்த உலகின் ஓர் அம்சமல்ல. கதாபாத்திரங்களின் கால நீரோட்டத்திலிருந்தும் அவர்களது யதார்த்த உலகின் கால நீரோட்டத்திலிருந்தும் பிறப்பதல்ல.

நொடிப்பொழுதில் எடுக்கப்படும் முடிவுகள், மேற்கொள்ளப்படும் செயல்கள் ஆகியன குறிப்பிட்ட கதாபாத்திரத்தின் வாழ்வில் ஏற்படும் முக்கியத் திருப்பம் ஒன்றைக் குறிப்பனவாகவே உள்ளன. ஆனால் இம்முடிவுகளை, செயல்பாடுகளை சாத்தியப்படுத்துபவை யதார்த்த உலகில் நடைபெறும் நிகழ்ச்சிகளோ அவ்வுலகின் தன்மையோ மட்டுமல்ல. கதாபாத்திரத்தின் சிந்தனையிலிருந்து மட்டும் உதித்தவையும் அல்ல. மாறாக அவை கதாபாத்திரங்களுக்குத் திடீரென ஏற்படும் விழிப்புணர்வும் ஞானோதயமும் ஆகும். தோஸ்தோவ்ஸ்கி தனது கதாபாத்திரங்கள் மேற்கொள்ளும் முடிவுகளுக்கும் செயல்பாடுகளுக்கும் உரிய காரணங்கள் ஏதோ ஒரு வகையில் அவர்களின் இச்சைக்கும் அறிவுக்கும் அப்பாற்பட்டவை என்பதையே இங்கு வலியுறுத்துகிறார். இக்கதாபாத்திரங்கள் குறிப்பிட்ட சமூக அமைப்புக்குள் வாழ்ந்து செயல்படும் மனிதர்கள்தாம் என்பதை அவர் ஏற்றுக்கொண்ட போதிலும் அவர்களின் வாழ்வை சமூக பண்பாட்டுக் காரணங்களை மட்டும் கொண்டு விளக்குவதில்லை. அதனால் யதார்த்தத்தின் பல குரல் தன்மையை, முரண்பட்ட அம்சங்களை அவர் மிகச் சிறப்பாகச் சித்தரித்த போதிலும், ஒரு சித்தாந்த ஒருமைக்குள் அந்தப் பல குரல் தன்மையைப் புகுத்தவும் முனைகிறார். இதனைப் புரிந்துணர அவர் கையாளும் கால – வெளிச் சேர்க்கைகள் நமக்கு உதவுகின்றன.

எந்த ஒரு நாவலிலும் (தோஸ்தோவ்ஸ்கியின் நாவல் உட்பட) சித்தாந்த ஒருமை (Coherence) இருக்கவே செய்யும் என்பதை பாக்தின் ஒப்புக்கொள்கிறார். ஆனால் நாவல் என்னும் இலக்கிய வகைக்கே உரிய பிரத்தியேகமான அம்சம் பல குரல் தன்மைதான் (Polyvocality) என்பதை வற்புறுத்துகிறார் (நாவலின் பல குரல் தன்மை என்ற கருத்தாக்கத்தை அவர் தோஸ்தோவ்ஸ்கியின் நாவல்கள் பற்றிய ஆய்வுகளின் அடிப்படையில்தான் உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது).

 

3

தோஸ்தோவ்ஸ்கியின் படைப்பிலக்கணம் குறித்து பாக்தின் கூறும் முக்கியக் கருத்துகள் கீழ்வருமாறு:

பிற மனிதர்களின் பிரக்ஞைகளை, பொருட்களாகவோ விஷயங்களாகவோ கருதி, அவற்றைப் பற்றி சிந்திக்கவோ பரிசீலிக்கவோ வரையறுக்கவோ முடியாது. விவாதம் மூலம் மட்டுமே அவற்றுடன் நம்மால் ஐக்கியம் காண முடியும். ஒரு நபருடன் விவாதிப்பதன் மூலமே – அவனிடம் கேள்விகள் கேட்டு, அவனது கேள்விகளுக்குப் பதிலளிப்பதன் மூலமே – அவனைப் புரிந்துகொள்ள முடியும். இது கலைப் படைப்புகளுக்கும் கடந்தகால, நிகழ்கால தத்துவ ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்கும் கூட, ஏன் பொதுவாகப் பண்பாட்டுக்கும் பொருந்தும் உண்மையாகும். விவாதத்தின் மூலம், நம்முடன் உரையாடுபவரைப் பற்றிக் கற்றுக்கொள்ளும் அதே சமயத்தில் நம்மை நாமே அறிந்து கொள்கிறோம். மேலும் நம்மைப் பற்றிய சுய அறிவின் அளவு, பிறரின் ஆன்மாவுக்குள் நாம் எந்த அளவுக்கு ஊடுருவிச் செல்கிறோம் என்பதற்கு இணையாகவுள்ளது.

தோஸ்தோவ்ஸ்கியின் நாவல்கள் பல குரல் தன்மையுடையவை (Polyphonic). இக்குரல்களில் எதுவுமே படைப்பாளியின் எதேச்சாதிகாரக் குரலுக்குக் கட்டுப்படுவதில்லை. அக்குரல்கள் தம்மைப் படைத்த ஆசிரியனுக்கு, அவனது குரலுக்கு அருகே நிற்கக்கூடியவை; அவனோடு ஒத்துப்போக மறுப்பவை. ஏன், அவனுக்கு எதிராகக் கலகம் செய்யவும் கூடியவை. இத்தகைய பல குரல்கள் பல பாணிகளின் (stylistics) வெளிப்பாடுகள் அல்ல. தோஸ்தோவ்ஸ்கியின் பாத்திரங்கள் ஒவ்வொன்றும் தனக்கேயுரிய வித்தியாசமான பாணியில் பேசுபவை அல்ல. அவர்களின் குரல்கள், படைப்பாளியின் குரலுடன் உள்ள உறவில் எந்த நிலைப்பாட்டை மேற்கொள்கின்றனவோ அவற்றின் காரணமாகவே, சுதந்திரமான, ஒன்றிலிருந்து மற்றொன்று தெளிவாக மாறுபடுகிற குரல்களாக அமைகின்றன:

சுதந்திரமான; ஒன்றோடு ஒன்று கலந்துவிடாத பல குரல்கள்; மெய்யான பல குரல்களின் சேர்க்கை; இந்த சேர்க்கையில் ஒவ்வொரு ‘குரலும்’ தன்னளவில் முழுமை பெற்ற குரலாக விளங்குகிறது. இதுதான் தோஸ்தோவ்ஸ்கியின் நாவல்களின் அடிப்படையான, தனிச்சிறப்பான அம்சமாக உள்ளது.11

தோஸ்தோவ்ஸ்கியின் பாத்திரங்கள் வெவ்வேறு முகமூடிகள் அணிந்துகொண்டு திரியும் படைப்பாளியின் சுயம் அல்ல. படைப்பாளி துவக்கம் முதற்கொண்டே வகுத்து, வரையறுத்துத் தந்துள்ள கடமைகளை நிறைவேற்றும் வகையில் முன்கூட்டியே திட்டமிட்ட உறவுகளுக்குள் ஒழுங்கமைக்கப்பட்டவையும் அல்ல. அவை முற்றிலும் சுயேட்சையாக உருவாகி வளர்ச்சியடைபவை. தாம் எதைச் சொல்ல வேண்டியுள்ளதோ அதைச் சொல்பவை. ஆசிரியர் சொல்லிக் கொடுப்பதை ஒப்புவிப்பவை அல்ல. ஒவ்வொரு பாத்திரமும் வாழ்க்கை பற்றி எந்த ஓர் அடிப்படைக் கோட்பாடு தனக்குள் மேலோங்கியுள்ளதோ அதனுடைய தூண்டுதல்களுக்கு மட்டுமே கீழ்ப்படிபவை. ஆசிரியரின் தன்னிச்சையான தலையீடுகளிலிருந்து விடுபட்டு, நம்பிக்கைகளை, கோட்பாடுகளை, விழுமியங்களை ஒன்றுக்கொன்று எடுத்துச் சொல்பவை. வாதிப்பவை. ஒப்புக்கொள்பவை. ஆசிரியரி்ன் உணர்வுப்பூர்வமான நோக்கத்திலிருந்து சுயேச்சையாக நடக்கும் மோதல்களே (கதாபாத்திரங்களுக்கிடையே நடக்கும் மோதல்கள்) தோஸ்தோவ்ஸ்கியின் நாவலின் முழு வடிவமைப்பையும் தீர்மானிக்கின்றன. பாக்தின் கூறுகிறார்:

தற்சமயத்தில் ரஷ்ய உரைநடை இலக்கியத்தில் மிகப் பெரிய செல்வாக்குச் செலுத்துபவர் தோஸ்தோவ்ஸ்கி எனலாம். புதிய உரைநடைப் படைப்புகள் அவரது எழுத்தையே முன்னுதாரணமாகக் கொள்கின்றன. இத்தகைய செல்வாக்கை அவர் மேற்கு நாடுகளிலும் செலுத்துகிறார் என்று கூறலாம். கலைஞன் என்ற வகையில் தோஸ்தோவ்ஸ்கியை வெவ்வேறு சித்தாந்த நம்பிக்கைகளைக் கொண்டவர்களும் பின்பற்றுகிறார்கள். அவரது சித்தாந்தத்தை வெகு தீவிரமாக எதிர்ப்பவர்களும் இதில் அடங்குவர். தோஸ்தோவ்ஸ்கியின் கலைப்படைப்புகளுக்குள்ள மயக்கும் சக்தியானது எல்லா விஷயங்களையும் எதிர்ப்பில்லாதபடி ஆட்கொண்டுவிடுகிறது… இந்த மயக்கும் சக்தியை ஒரு தெளிவான, உணர்வுப்பூர்வமாக உருவாக்கிக் கொள்ளப்பட்ட சித்தாந்தத்தின் அறிவார்ந்த தாக்கத்துடன் சேர்த்துக் குழப்பிக் கொள்ளக்கூடாது. பல குரல் நாவல் என்னும் முடிவில்லாத சுழற்சிப் பாதையில் (labyrinth) புகுந்த எவரும் அதில் வழிதவறிப்போய், தனித்தனிக் குரல்களின் கூக்குரல்களை மட்டும் கேட்டு, முழுமையைக் கேளாது போய்விடுகின்றனர் போலத் தோன்றுகிறது. பல சமயங்களில் முழுமையினுடைய மிக மங்கலான சாயல்களைக் கூடப் பார்க்கத் தவறிவிடுகின்றனர். பல்வேறு குரல்களை ஒழுங்கமைக்கும் அழகியல் கோட்பாடுகள் அவர்களின் காதுக்கு எட்டுவதில்லை.12

தோஸ்தோவ்ஸ்கியின் நாவல்களின் பல குரல் தன்மை என்னும் கருத்தாக்கத்தை வகுப்பதில் பாக்தினுக்கு உறுதுணையாக இருந்தவை காஸ் (Kaus) என்னும் அறிஞரின் கருத்துகளாகும். அவற்றை பாக்தின் தனது நூலில் (Problems of Dostovsky’s Poetics) கீழ்க்கண்டவாறு தொகுத்துரைக்கிறார்:

முதலாளித்துவத்தின் ஆன்மாவை உள்ளது உள்ளபடியே உண்மையாகப் பிரதிபலிக்கிறது தோஸ்தோவ்ஸ்கியின் உலகம். தோஸ்தோவ்ஸ்கியின் படைப்புகளில் ஒன்றோடொன்று மோத வைக்கப்படும் பல்வேறு சமூக, பண்பாட்டு, சித்தாந்த உலகங்களும் களங்களும் முன்பு பரஸ்பரம் தனிமைப்பட்டிருந்த, ஒன்றுக்கொன்று மாறுபட்டிருந்த, ஸ்திரத்தன்மை கொண்டிருந்த, தமக்குள்ளே சுருங்கியிருந்த தனி உலகங்கள். அவை குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவுக்கு ஒன்றையொன்று சந்திக்கவும் ஒன்றுக்குள் மற்றொன்று ஊடுருவதற்குமான யதார்த்தமான, பொருண்மையான களம் எதுவும் இருக்கவில்லை. இந்த உலகங்கள் தனிமைப்பட்டிருந்த நிலையை முதலாளித்துவம் உடைத்தெறிந்தது. இந்த உலகங்களுக்கு இருந்த தனித்தன்மையையும் சித்தாந்த ரீதியான சுய நிறைவையும் ஒழித்துக் கட்டியது. எல்லாவற்றையும் ஒரே மட்டமானதாக்கிவிடும் முதலாளித்துவம் இந்த உலகங்கள் அனைத்தையும் ஒரே கொதிகலனுக்குள் தூக்கியெறிந்து அவற்றிற்கிடையே ஓர் ஒற்றுமையை உருவாக்கியது. இந்த உலகங்கள் பன்னூறு ஆண்டுகளாக உருவாக்கிக் கொண்டிருந்த தமது தனித்தன்மையை இன்னும் இழந்துவிடவில்லை. ஆயினும் அவை பிரத்தியேகமான உலகங்களாக, தனிமைப்பட்டிருக்கும் உலகங்களாக இனியும் விளங்க முடியவில்லை. அவை ஒன்றையொன்று தெரிந்துகொள்ளாது, குருட்டுத்தனமான அமைதியோடு வாழ்ந்து வந்த காலம் மறைந்துபோய் அவற்றின் முரண்பாடுகளும் அதே சமயத்தில் அவை ஒன்றையொன்று சார்ந்திருக்கும் நிலையும் மென்மேலும் புலப்படத் தொடங்கின.

வாழ்க்கையின் ஒவ்வொரு அணுவிலும் முதலாளித்துவ உலகம், முதலாளித்துவ பிரக்ஞை ஆகியவற்றின் முரண்பட்ட ஒற்றுமை பிரதிபலிக்கிறது. மாற்றமடைந்து வரும் இந்த உலகத்தை மிகச் சிறப்பாகவும் முழுமையாகவும் சித்தரித்தவை தோஸ்தோவ்ஸ்கியின் படைப்புகள்தாம். தோஸ்தோவ்ஸ்கி வாழ்ந்த ரஷ்யா பற்றி பாக்தின் எழுதுகிறார்:

ரஷ்யாவில் முதலாளித்துவம், திடீரென ஏற்படும் ஓர் இயற்கைப் பேரழிவு போல் தன்னை நிறுவிக் கொண்டிருந்தது. அது இதுவரை மாற்றமடையாதிருந்த ஏராளமான சமூக உலகங்களையும் குழுக்களையும் திகைப்பிலாழ்த்தியது. மேற்கு நாடுகளில் முதலாளித்துவ அமைப்பு பரிணாம வளர்ச்சியடைந்து வந்தபோது பல சமூக உலகங்களும் குழுக்களும் தமது தனித்தன்மையை மெல்ல மெல்ல இழந்துகொண்டிருந்தனவே, அதனையொத்த அனுபவம் அல்ல இது. இங்கோ அமைதியான, சிறிதும் சலனமற்ற, உறுதியான ஒரே சீரான காலத்தின் இயக்கத்திற்குள் கொண்டுவரப்படுவதற்கான எல்லா முயற்சிகளையும் எதிர்கொள்கிற வகையில் உருவாகிக் கொண்டிருந்த இந்த சமுதாயத்தின் முரண்பட்ட தன்மை தெட்டத் தெளிவாகவே புலனாயிற்று. அதே சமயம் திடீரென்று ஒன்றோடொன்று மோத வைக்கப்பட்டுத் தமது சித்தாந்த சமநிலையை இழந்த இந்த உலகங்களின் தனித்தன்மைகள் அசாதாரணமான முறையில் தீட்சண்யத்துடனும் முழுமையாகவும் வெளிப்படுத்தப்பட்டன.13

பாக்தின் இந்த முரண்பாடுகளை விளக்குவதில் அக்கறை காட்டுகிறார். அவரைப் பொறுத்தவரை நாவல் என்பதே பல குரல் தன்மையுடையது; பல தரப்பட்ட குரல்களுடன் தன் குரலை இணைத்துப் பொருத்திப் பார்த்து அவற்றை ஒன்றுடன் ஒன்று விவாதிக்க வைத்துமே நாவலாசிரியர் செயல்படுகிறார். இங்கு தோஸ்தோவ்ஸ்கியின் ‘சொல்’ செயல்படும் விதம் பற்றி பாக்தின் கூறுவதாவது:

‘(தாமல்லாத) பிறரது சொல்லின் ஆழமான, முனைப்பான பரஸ்பர தொடர்பு தோஸ்தோவ்ஸ்கியின் படைப்புகளில் இரண்டு விதமாகக் காணப்படுகிறது. முதலாவதாக, அவரது கதாபாத்திரங்களின் மொழியைப் பொறுத்தவரையில் மற்றவரின் சொல்லுடன், ஆழமான, தீர்க்க முடியாத மோதல் காணப்படுகிறது. வாழ்ந்து பெற்ற அனுபவம் என்ற மட்டத்தில் (‘என்னைப் பற்றி பிறர் கூறுவன’); அறவாழ்வு மட்டத்தில் (‘பிறருடைய மதிப்பீடு, பிறரால் அங்கீகரிக்கப்படுவது, அங்கீகரிக்கப்படாதது’); சித்தாந்த மட்டத்தில் (தீர்க்கப்படாத, தீர்க்க முடியாத வாதங்கள் என்ற வகையில் முன்வைக்கப்படும் கதாபாத்திரங்களின் உலகக் கண்ணோட்டங்கள்). தோஸ்தோவ்ஸ்கியின் கதாபாத்திரங்கள் சொல்பவை பிறருடைய சொற்களுடன் ஒரு முடிவில்லாத போராட்டம் நடக்கும் களமாக அமைகின்றன; வாழ்வின் அனைத்து மட்டங்களிலும் வளமான சிந்தனைச் செயல்பாடுகளிலும் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. இந்தக் காரணத்தினாலேயே இக்கதாபாத்திரங்கள் சொல்பவை பிறரது வாதத்தை வடிவமைக்கவும் எடுத்துச் சொல்லவும் உதவும் பலதரப்பட்ட வழிமுறைகளுக்கான மிகச் சிறந்த முன்மாதிரிகளாக அமையக்கூடும். இரண்டாவதாக, தோஸ்தோவ்ஸ்கியின் படைப்புகள் முழுவதையும் அவரது சொல்லாடல்களாக எடுத்துக் கொள்வோமானால் அவை கதாபாத்திரங்களுக்கிடையேயும் (இவர்களுமே குறிப்பிட்ட உலகக் கண்ணோட்டங்களைப் பிரதிநிதித்துவம் செய்பவர்கள்) படைப்பாளிக்கும் அவரது கதாபாத்திரங்களுக்கிடையேயும் நடக்கும் அதே முடிவில்லாத, தீர்வு காண முடியாத வாதங்கள்தாம். கதாபாத்திரங்களின் வாதங்கள் படைப்பாளியின் வாதங்களைப் போலவே ஒன்று மற்றொன்றில் கரைக்கப்படாமல், சுதந்திரமாக விளங்குகின்றன. தோஸ்தோவ்ஸ்கியின் நாவல்களில் கதையளவில் வேண்டுமானால் பாத்திரங்களின் வாழ்க்கை அனுபவங்களுக்கும் அவர்களின் வாதங்களுக்கும் தீர்வு காணப்படலாம். ஆனால் சாரத்தில் அவை முழுமையடையாதவையாகவும் தீர்க்கப்படாதவையாகவுமே விளங்குகின்றன.’14

பாக்தினின் வாதங்களைப் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளும் லூனா சார்ஸ்கி ஒரு குறிப்பிட்ட சித்தாந்த நிலைப்பாட்டை தோஸ்தோவ்ஸ்கி மேற்கொண்டதற்கான சான்றுகளாகவே அவரது படைப்புகளில் உள்ள முரண்பாடுகளை, பல குரல் தன்மையைக் காண்கிறார். யார் சார்பாக தோஸ்தோவ்ஸ்கி குரல் கொடுக்கிறார் என்பது நமக்குத் தெட்டத் தெளிவாகத் தெரிகிறது என்கிறார்:

தோஸ்தோவ்ஸ்கியின் படைப்புகளில் காணப்படும் அவரின் சொந்தக் கருத்துகள் யாவை என்பதை வாசகர்கள் அறிந்துகொள்வதில் எந்த ஐயத்திற்கும் இடந்தராத வகையில் நாவலின் முழு அமைப்பும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கருத்துகளை அவர் நேரடியாக வெளிப்படுத்தாதது அவரது கலா நேர்த்திக்கான, ஓர் அற்புதமான எடுத்துக்காட்டாக விளங்குகிறது என்பது உண்மைதான். ஆனால் படைப்பாளியின் இதயத் துடிப்பைப் பற்றிய நம் விழிப்புணர்வை, அவரது எழுத்துகளோடு சேர்ந்து விம்மித் தணியும் சீரற்ற அந்த இதயத் துடிப்புகளைப் பற்றிய நம் விழிப்புணர்வை நாம் ஒருபோதும் இழப்பதில்லை.15

தோஸ்தோவ்ஸ்கியின் நாவல்களில் பல குரல் தன்மைக்கு இயற்கையின் சீற்றத்தைப் போல் ரஷ்யாவில் புகுந்த முதலாளித்துவம் உருவாக்கிய சமுதாய நிலைமைகளைப் போலவே, அவரது பிளவுண்ட ஆளுமையும் காரணமாகிறது என்று வாதிடுகிறார் லூனாசார்ஸ்கி. இத்தகைய பிளவுண்ட ஆளுமையைக் கொண்டிருந்தவர் தோஸ்தோவ்ஸ்கி மட்டுமல்லர்: அன்றைய ரஷ்யாவின் முற்போக்கு புரட்சிகர அறிவுஜீவிகளில் பலரும்தான். ரஷ்ய சமுதாயத்தின் சீர்கேட்டையும் அவலத்தையும் போக்கி சமூக சீர்திருத்தத்தையும் சமூக மாற்றத்தையும் கொண்டு வருவதில் ஆர்வம் காட்டிய பூஷ்கின், பெலின்ஸ்கி, கோகோல், க்ளெப் உஸ்பென்ஸ்கி, நெக்ரசோவ், செர்னிஷெவ்ஸ்கி போன்றோர் ஏதோ ஒரு வகையில் இரட்டை ஆளுமை கொண்டவர்களாகவே இருந்தனர். அவர்கள் வாழ்ந்த சகாப்தம் பற்றி லூனாசார்ஸ்கி எழுதுகிறார்:

அந்த சகாப்தம் நெடுகப் பிணங்களும் அரைப் பிணங்களும் சிதறிக் கிடந்தன. எதிர்ப்புத் தெரிவித்துப் பின்னர் சிதைவுக்குள்ளான பிணங்கள் சில அவற்றில் அடங்கும். மற்றவையோ சமரசம் செய்துகொண்டு உயிர் வாழ்ந்த பிணங்கள்; ஆன்மீக முடவர்களாக உயிர் வாழ்ந்துகொண்டிருந்தவை அவை.16

ஒரு புறம் வேதனையால், துயரால் நலிவுற்றுக் கிடக்கும் ரஷ்ய நாடு. மூடர்களாலும் தன்னலக்காரர்களாலும் ஆளப்படும் மாபெரும் நாடு. எதிர்ப்புணர்வைத் தூண்டி அதை வளர்க்கச் சாதகமான ஒரு சூழல். ஆனால் எதிர்ப்பாளர்களை, கலகக்காரர்களை வழிநடத்திச்செல்ல, அவர்களின் சார்பாக எந்தவொரு சக்தியோ அமைப்போ இல்லாத நிலை. மறுபுறம் இந்த நிலையைக் கண்டு கொதித்தெழுந்து, அதன் காரணமாக அடக்குமுறைகளைச் சந்தித்துப் பின்னர் தோல்வி உணர்வுக்கு ஆளாகி அவலப் பார்வையை உருவாக்கிக் கொண்ட அறிவு ஜீவிகளின் கையாலாகாத்தனம், அவர்கள் அதிகார சக்திகளுடன் செய்துகொண்ட சமரசங்கள்… இவர்களில் சிலர் நோய்வாய்ப்பட்ட மனசாட்சியால் அவதியுற்றவர்கள், பெரும்பாலும் அப்பட்டமான சந்தர்ப்பவாதிகள் என்று லூனாசார்ஸ்கி கூறுகிறார்:

அவர்கள் கீழ்க்காணும் இரண்டு நிலைப்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்: ‘இந்த பயங்கரத்தை என்னால் பார்க்க முடிகிறது. ஆனால் அதை எதிர்த்து என்னால் போராட முடியாது’ என்பது ஒன்று. ‘என்னால் இந்த பயங்கரத்தைப் பார்க்க முடிகிறது. ஆனால் இதில் ஏதோவொரு புனிதத்தன்மையையும் காண விரும்புகிறேன்; இந்தப் புனிதத்தன்மை, நான் அந்த பயங்கரத்தை எதிர்த்துப் போராடாமல் இருப்பதற்கும் அதே சமயத்தில் நான் எனது சுய மரியாதையை இழக்காமல் இருப்பதற்கும் வழிகோலுகிறது’ என்பது மற்றொன்று.17

இத்தகைய பின்னணியைச் சேர்ந்தவர்தான் தோஸ்தோவ்ஸ்கி என்று கூறுகிறார் லூனாசார்ஸ்கி: அந்த மாபெரும் படைப்பாளி சமூகத்தில் நிலவிய அநீதிகளைக் கண்டு கொதித்தெழுந்ததையும் வேதனையால் துடித்ததையும் குறிப்பிடுகிறார். புரட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டபோதுதான் அவர் வலிப்பு நோயால் முதன்முதலாகத் தாக்குண்டார். அங்கிருந்த ஒரு நாத்திகவாதியுடன் நடத்திய விவாதத்தின்போது ‘இல்லை, இல்லை. நான் கடவுளை நம்புகிறேன்’ என்று தனது கடவுள் நம்பிக்கையை உறுதி செய்துகொள்கிறார். கட்டாய உழைப்பு முகாமுக்கு, பலவந்தமாக அனுப்பப்பட்ட தோஸ்தோவ்ஸ்கி, கோகோலைப் போலவே தனக்குள்ள மேதைமை, வாழ்வில் தனக்கு விதிக்கப்பட்டிருந்ததாக அவர் கருதிய சிறப்புப் பாத்திரம் ஆகியன பற்றிய மிக ஆழமான பிரக்ஞையோடு இருந்தார். இந்தக் காரணத்தினால் தான் ஜாரிச எதேச்சாதிகாரமானது தன்னை உயிரோடு தின்று கொண்டிருந்தது என்பதை அவரின் உள்ளமும் உடலும் அறிந்திருந்தன. தான் அவ்வாறு உயிரோடு தின்றுவிடப்படுவதை அவர் விரும்பவில்லை. அவர் ஒரு நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அது, ஒரு புறம் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த பாத்திரத்தைப் பாதுகாத்துக் கொள்ளவும் மறுபுறம் அதிகாரம் படைத்தோருடன் மீண்டும் மோதல்களுக்கு இட்டுச் செல்லாததுமான நிலைப்பாடு. ‘இந்த மோதல்கள் அவருக்கு உடனடிப் பேரழிவை ஏற்படுத்தியிருக்கும்.’18

லூனாசார்ஸ்கி மேலும் கூறுவதாவது: தோஸ்தோவ்ஸ்கி அதிகாரத்திற்கு முற்றாக அடிபணிந்து முடியாட்சியின் உணர்வுப்பூர்வமான ஆதரவாளராக மாறிவிட்டார் என்று கூறிவிட முடியாது. ஆனால் அவர் மேற்கொண்ட நிலைப்பாடு ஜார் ஆட்சியை எதிர்த்து, போராடி கலகம் செய்யுமாறு அவரை அழைத்த ‘குரல்களை’ தணியச் செய்யவோ மங்கச் செய்யவோ அல்லது ஒரேயடியாக நீக்கிவிடவோ செய்துவிட்டன. எனினும் அவரது இறுதி நாள்வரை தான் மேற்கொண்ட நிலைப்பாடு சரியானதென்பதை அவரது நனவு மனமோ, நனவிலி மனமோ, அவரது மகத்தான சமூக உணர்வுடைய மனசாட்சியோ நம்ப மறுத்தது. ஒரு புறம் யதார்த்த உலகில் உள்ள விகாரங்களைக் கண்டு வெறுப்பும் சினமும் மறுபுறம் வைதீகக் கிறிஸ்துவத்தில் இவ்வுலகத் துன்பங்களுக்குத் தீர்வு காணுதல் – இதுதான் தோஸ்தோவ்ஸ்கி. மனித ஆன்மாக்களின் சமத்துவம், அன்பு நிறைந்த கடவுள், இந்தக் கடவுள் உத்திரவாதம் செய்யும் அறவியல் – இவற்றை அக்கிறிஸ்துவம் வழங்குகிறது.

பாக்தின் கூறுகிறார்: தோஸ்தோவ்ஸ்கியின் பல்வேறு படைப்புகளில் அவரது நம்பிக்கை பரிசீலித்துப் பார்க்கப்படுகிறது. அவற்றில் பல குரல்கள் – விகாரமான, அறிவார்ந்த, உணர்ச்சிவசப்பட்ட குரல்கள் ஒலிக்கின்றன. அவை மதம் தரும் கடவுள் நம்பிக்கையைப் பிரதிநிதித்துவம் செய்யும் அருள் நிறைந்த உள்ளங்களுக்கு எதிராக, அவற்றுக்குச் சவாலாக உள்ள குரல்கள். தோஸ்தோவ்ஸ்கி என்னும் தத்துவவாதியின், அல்லது கொள்கைப் பிரச்சாரகரின் இறுதி முடிவுகள் யாவை என்பதை வரையறுத்துக் கூறமுடிவது போல் தோஸ்தோவ்ஸ்கி என்னும் படைப்பாளியின் (நாவலாசிரியனின்) இறுதி முடிவுகள் யாவை என்பதை வரையறுத்துக் கூறுவது கடினமானது. இதில் கணிசமான அளவு உண்மை இருக்கிறது என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது என்று கூறும் லூனாசார்ஸ்கி சில கேள்விகளை எழுப்புகிறார்: பாக்தின் மீது செல்வாக்கு செலுத்திய காஸ் என்பவர் கூட தோஸ்தோவ்ஸ்கியின் நாவல்கள் முடிவு பெறாத விவாதங்கள் என்னும் கருத்தைக் கொண்டிருந்தது ஏன்? நாவல்களில் வரும் பாத்திரங்கள் யாருக்குமே இறுதி வெற்றி கிடைக்காதது போல் தோன்றுவதற்கு என்ன காரணம்? சுயேச்சைத் தன்மையுடனும் சுதந்திரமாகவும் தமக்கேயுரிய உலகங்களில் சஞ்சரிக்கும் குரல்களை உருவாக்குகிற தோஸ்தோவ்ஸ்கி தனது குரலை உயர்த்தாமல் வேண்டுமென்றே பின்வாங்குவது ஏன்? அவரது சொந்த நம்பிக்கையிலிருந்து மிகவும் மாறுபட்ட குரல்கள் அல்லது அவருக்குப் பிரியமான நம்பிக்கைகளுக்கு இணையானவற்றை ஒலிக்கிற குரல்கள் ஆகியவற்றிற்கிடையே தனது குரலை ஒலிக்க வேண்டிய முறை வந்தபோது ‘நான் இல்லை’ என்று தோஸ்தோவ்ஸ்கி ஒதுங்கிக் கொள்வதைப் போலத் தோன்றுவது ஏன்? மற்றொரு புறம் அவருடைய வெளிப்படையான அனுதாபத்தைப் பெற்றிருக்கக்கூடிய குரல்கள் (சோனியா, ஜோஷிமா, அலியோஷா போன்றோர்) தோஸ்தோவ்ஸ்கியே ஏமாற்றமும் சலிப்பும் அடைந்துகொள்ளும் வகையில் இறுதி வெற்றி பெற்றுவிட்டவர்களாகத் தம்மை நிலைநாட்டிக்கொள்ள முடியாதது ஏன்? இதற்கெல்லாம் காரணம் (இந்தப் பல குரல்களுக்கு அடிப்படை) தோஸ்தோவ்ஸ்கியின் இரட்டை ஆளுமைதான். வரலாற்றில் தீர்வு காண முடியாத முரண்பாடுகளால் வார்த்தெடுக்கப்பட்ட அந்தப் பிளவுண்ட ஆளுமைதான் அவரது நாவலில் ஒலிக்கும் பல குரல்களை ஒழுங்கமைக்கும் கோட்பாடாகச் செயல்படுகிறது.

லூனாசார்ஸ்கி மேலும் கூறுவதாவது: தான் படைத்த பாத்திரங்கள் மீது தோஸ்தோவ்ஸ்கிக்குள்ள அதிகாரத்திற்கும் கட்டுப்பாட்டிற்கும் உள்ள வரம்புகளின் விளைவுதான் பல குரல்களின் சுயேச்சைத் தன்மையும் சுதந்திரமும். அவராலும் கூட இதை யூகித்துக் கொள்ள முடிகிறது. தனது சொந்த நாவல்கள் என்னும் மேடையில் வாசகரின் நலன் கருதி, ‘ஒழுங்கை’ நிலைநாட்டுவது அவரது சக்திக்கு உட்பட்டதுதான் என்ற போதிலும் திரைகளுக்குப் பின்னாலிருந்தோ ‘இது இப்படித்தான்’ என்று திட்டவட்டமாகச் சொல்வதற்கு வழியேதுமில்லை. அங்கு நாடகப் பாத்திரங்கள் அவரது கட்டுப்பாட்டை விட்டு நழுவிச் சென்றுவிடக் கூடும். படைப்பாளியின் சிந்தனைக்கு முற்றிலும் மாறுபட்ட – நீண்ட காலப்போக்கில் படைப்பாளியின் கருத்துக்களையே நார்நாராகக் கிழித்தெறிந்து விடக்கூடிய கருத்துகளை – தொடர்ந்து வளர்க்கக்கூடும்.

‘இவ்வுலகில் நிறைவேற்றப்பட வேண்டிய சோசலிசம்’ என்பது அவரது இளமைக்கால இலட்சியமாக இருந்தது. பின்னர் அதனை அவர் தனக்குள்ளேயே ஆழமாகப் புதைத்துவிட்டார். ‘அது மீண்டும் வெளியே வருவதற்கு ஒருபோதும் அனுமதிக்கப்படலாகாது; அதன்மீது காறித்துப்ப வேண்டும், சேற்றில் போட்டு அதை மிதிக்க வேண்டும், அவமானப்படுத்த வேண்டும், அது பொருட்படுத்தப்படக் கூடாததாகவும் நகைப்புக்குரியதாகவும் தெரியும்படிச் செய்யவேண்டும்’ என்று அவர் கருதினார். பல படைப்புகளில் இதைச் செய்யும் தோஸ்தோவ்ஸ்கி, ‘பேய் பிடித்தவர்கள்’ என்னும் நாவலில் நிதானத்தையும் தன்மீது தனக்குள்ள கட்டுப்பாட்டையும் முற்றிலுமாக இழந்துவிடுகிறார் என்று லூனாசார்ஸ்கி எழுதுகிறார். சோசலிசத்தின் மீதும் அதை இவ்வுலகில் நிறைவேற்றப் போவதாக உரிமை கொண்டாடியவர்கள் மீதும் தோஸ்தோவ்ஸ்கி கடும் வெறுப்பை உமிழ்ந்து வந்ததற்கு ஒரு காரணம் இருந்தது. அதுதான் நெசாயேவிசம் (Nechayevism)19 அது, ரஷ்யாவைப் பிடித்தாட்டிக் கொண்டிருக்கிற ஒரு பேரழிவு என்றும் அவர் கருதினார். சோசலிசமும் நெசாயேவிசமும் ஒன்றுதான் என்பது அவரது வாதம். புரட்சியின் பெயரால் தம் விருப்பம் போல் ஆட்டிவைக்கப்படக்கூடிய பொம்மைகளாக, தாம் விரும்பிய உருவங்களில் பிசைந்து வைக்கப்படக்கூடிய களிமண்ணாக மக்களைக் கருதுவதுதான் சோசலிசம் என அவர் நினைத்தார்.

4

தோஸ்தோவ்ஸ்கியின் அரசியல் நிலைப்பாடு, அவரது சமய (கிறிஸ்தவ) நம்பிக்கைகள் ஆகியன குறித்து லூனாசார்ஸ்கி முன்வைக்கும் இந்த மதிப்பீட்டை அப்படியே ஏற்றுக்கொள்வது கடினம். ஏனெனில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாட்களிலேயே ரஷ்ய அறிவாளிகளுக்கும் வெகுமக்களுக்குமிடையே இருந்த கடக்க முடியாத பிளவை உணர்ந்த தோஸ்தோவ்ஸ்கி, தனது கற்பனா சோசலிசக் கடந்த காலத்தைக் கேள்விக்குட்படுத்தத் தொடங்கினார். ரஷ்ய முதலாளியத்தின் சமூக பொருளாதார முரண்பாடுகள் (இவை செல்வம் படைத்தோருக்கு ஆன்மீக, அறவியல் சரிவுகளையும் செல்வமில்லாதோருக்கு வறுமையையும் அவமானத்தையும் வழங்கின என அவர் கருதினார்). சமயம், அறவியல், தத்துவப் பிரச்சினைகள் ஆகியவற்றுக்குப் புதிய தீர்வுகளைத் தேடிக் கண்டறியுமாறு அவரை நிர்ப்பந்தப்படுத்தின. இளமைக் காலத்தில் தான் ஏற்றுக்கொண்டிருந்த முற்போக்குச் சிந்தனைகள், மேற்கு ஐரோப்பியக் கருத்துகள் ஆகியவற்றைக் கைவிட்டு ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்துவத் திருச்சபையும் பாமர ரஷ்ய மக்களுமே விமோச்சனத்தை வழங்கக் கூடியவர்கள் எனக் கருதத் தொடங்கினர்.

ஆனால் தனது கடந்த காலத்தை உதறித் தள்ளுவது, அவருக்கு எளிதாக இருக்கவில்லை. ‘சாவு வீட்டு நினைவுக் குறிப்புகள்’ நாவலில் கதை சொல்கிறவன் கூறுவதைப் போல “(அந்த நம்பிக்கைகளுக்காக) அவன் வாழ்க்கையில் எத்தனையோ துன்பங்களை அனுபவித்துள்ளான். அவற்றை அடைய ஒரு பெரும் விலையைத் தந்துள்ளான். எனவே அவற்றிலிருந்து முறிவு ஏற்படுத்திக் கொள்வது நடைமுறைச் சாத்தியமற்றது.” இவ்விதமாக, தோஸ்தோவ்ஸ்கியின் உள்முரண்பாடுகள் – அவரது பழைய நம்பிக்கைகளுக்கும் புதிய நம்பிக்கைகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் – இக்காலத்தில் அவர் எழுதிய புனைவு இலக்கியங்களிலுள்ள பாத்திரப் படைப்புகளினூடாக வெளிப்படுகின்றன. வன்முறை, அரசு அதிகாரத்தைப் பலாத்காரமாகத் தூக்கியெறிதல் ஆகியவற்றுக்கு மாறாக அன்பு, கருணை, இரக்கம், துன்புறுதல் ஆகிய கிறிஸ்துவ இலட்சியங்கள் முன்வைக்கப்படுகின்றன. மேற்கு ஐரோப்பிய மனப்பாங்கு ரஷ்ய தேசியவாத மனப்பாங்குடன் மோதுகிறது.

கிறிஸ்துவ சமயத்தின் மீது அவர் வளர்த்துக்கொண்ட மோகமும் ஈடுபாடும் மெய்யுலகைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியாதபடி அவரது கண்களைக் கட்டிவிடுகின்றன. சமய நம்பிக்கையும் பெருந்தேசிய வாதமும் அவரிடத்தில் பின்னிப் பிணைந்துகொள்கின்றன. எந்தக் கிறிஸ்துவ மதம் இரட்சிப்பையும் விமோச்சனத்தையும் வழங்கக்கூடியதாக அவருக்குத் தோன்றுகிறதோ அந்த மதத்தின் பெயரால் ஜார் முடியாட்சியின் விரிவாக்கம், இராணுவ ஆக்கிரமிப்பு, கீழ்த்திசை நாடுகள் மீதான வெறுப்பு, அவை குறித்த இழிவான எண்ணங்கள் ஆகியன நியாயப்படுத்தப்படுகின்றன.20

15-ஆம் நூற்றாண்டில் ரஷ்யா, துருக்கியை மையமாகக் கொண்டிருந்த ஓட்டோமான் பேரரசுக்குப் பணிந்துபோய்க் கொண்டிருந்தது. தனது கப்பல் போக்குவரத்துக்கும் வாணிபத்துக்கும் கருங்கடலைப் பயன்படுத்திக் கொள்ள அப்பேரரசின் அனுமதியைக் கோரியது. ஆனால் 18-ஆம் நூற்றாண்டிலோ அதே ரஷ்யா, துருக்கியர்களிடமிருந்து கிரிமியத் தீபகற்பத்தைக் கைப்பற்றிக் கொண்டது. அத்தகைய உரிமை தனக்கு இருப்பதாகக் கருதியது. ஜார் மன்னன் மூன்றாம் ஐவான் முதலில் கிழக்கு முகமாகவும் தெற்கு முகமாகவும் ரஷ்யப் பேரரசின் விரிவாக்கத்தைத் தொடங்கி வைத்தான். 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் சைபீரியா, உஸ்பெகிஸ்தான், கஸகஸ்தான், தாஜிக்ஸ்தான், கிர்கிஸியா, துர்க்மேனியா, ஆர்மீனியா, ஜார்ஜியா, அஸெர்பய்ஜான், போலந்து, பின்லாந்து, லித்துவேனியா ஆகியன ரஷ்யப் பேரரசின் கீழ் வந்துவிட்டன. அதே சமயம், அதனுடைய காலனிய நலன்கள் பிரான்ஸ், இங்கிலாந்து ஆகியவற்றின் காலனிய நோக்கங்களுடன் மோதத் தொடங்கின. மத்திய தரைக் கடலில் வேரூன்ற ரஷ்யா செய்த முயற்சிகளை மேற்சொன்ன இரு நாடுகளும் எதிர்த்தன. இருதரப்புக்குமிடையிலான சண்டைகளுக்குத் துருக்கி ஒரு களமாயிற்று. ஏற்கனவே பலகீனப்பட்டிருந்த துருக்கியை அதனைப் பொருளாதாரச் சுரண்டலுக்குட்படுத்திய இங்கிலாந்தும் பிரான்சும் ஆதரித்தன. அதனை கிறிஸ்துவுக்கு எதிராகவும் துருக்கியர்களுக்கு ஆதரவாகவும் கிறிஸ்தவர்கள் மேற்கொண்ட வெட்கக்கேடான செயல் என்றார் தோஸ்தோவ்ஸ்கி.

1877-இல் துருக்கி மீது ரஷ்யா தொடுத்த போரை, துருக்கியின் பிடியில் இருந்து வந்த ஸ்லாவ் மக்களின் விமோசனத்துக்காக நடத்தப்பட்ட போர், மற்றொரு சிலுவைப் போர் என்று தோஸ்தோவ்ஸ்கி கருதினார். கிரிமியத் தத்தாரியர்களைப் பலவந்தமாக வெளியேற்றும் ரஷ்ய அரசாங்கக் கொள்கையை முழுமனதோடு ஆதரித்தார். ரஷ்யர்கள் உள்ளே நுழையாவிட்டால், யூதர்கள் நுழைந்துவிடுவார்கள் என்றார் (அவரது யூத விரோதக் கொள்கை, இஸ்லாமிய விரோதக் கொள்கையிலிருந்து எவ்வகையிலும் குறைந்தது அல்ல.) துருக்கியர்களின் பிடியிலிருந்து புல்கேரியர்கள் விடுவிக்கப்படவேண்டும் என்றும் ஸ்லாவியர்கள் அனைவரும் சகோதரர்களாக ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். “ஸ்லாவியர்களுக்கு ரஷ்யாதான் இப்பொழுதும் சூரியன், நம்பிக்கை, நண்பன், தாய், பாதுகாவலன், எதிர்கால விமோசகன்” என்று எழுதினார். அனைத்து ஸ்லாவிய இயக்கத்திற்கு ரஷ்யா தலைமை தாங்கவேண்டும் என விரும்பிய அவர், “மூன்றாம் ஐவான் காலத்திலிருந்து ரஷ்யாவிற்கு விதிக்கப்பட்ட வரலாற்றுப் பாத்திரம், அது ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்துவத்தின் தலைவராக, அதன் பாதுகாவலராக, காப்பாளராக இருக்கவேண்டும் என்பதுதான்” என்றார்.

1881-இல் ரஷ்யப் படைகள், துர்க்மேனியப் படைகளின் கடுமையான எதிர்ப்பை முறியடித்து துர்க்மேனியாவின் முக்கிய நகரமான அஷ்காபாத்தைக் கைப்பற்றின. ரஷ்யாவின் இந்த ஆக்கிரமிப்புக் கொள்கையைக் கண்டனம் செய்த ரஷ்ய அறிவாளிகளை விமர்சித்த தோஸ்தோவ்ஸ்கி, ரஷ்யா மீது படையெடுத்து வந்த நெப்போலியனின் பிரெஞ்சுப் படைகள் பின்வாங்கியவுடனேயே ரஷ்யா கிழக்குமுகமாக முன்னேறி கிழக்கு நாடுகளைத் தனது ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்திருக்க வேண்டும், கிழக்கு நாடுகளைத் தனது காலனியாக்குவதிலேயே ரஷ்யாவின் எதிர்காலம் தங்கியுள்ளது என்று எழுதினார். “வெள்ளை ஜார் வெல்லப்பட முடியாதவர். அவரது வாள் வெல்லப்பட முடியாதது என்பது மறுக்க முடியாத உண்மை என்ற எண்ணம் இந்தியா வரையிலான, ஆம் இந்தியாவிலும்தான். இந்த இலட்சக்கணக்கான மக்களின் மனத்தில் வளரட்டும். இந்த மக்களிடம் அவர்களது கான்களும் அமீர்களும் இருக்கலாம்: இங்கிலாந்தின் வல்லமை கண்டு அவர்கள் திகைப்படையலாம்; ஆனால் கான்கள், அமீர்கள், இந்திய மகாராணி ஆகியோர் எல்லோருக்கும் மேலாக, ஏன் துருக்கியின் காலிஃபுக்கும் மேலாக ஜார் நிற்க வேண்டும். அந்த காலிஃப் காலிஃபாகவே இருக்கட்டும். ஆனால் ஜார், காலிஃபுக்கும் ஜார்தான். இத்தகைய மறுக்கமுடியாத உண்மை அவர்களின் மனதில் ஆழமாகப் பதியட்டும்”

கீழ்த்திசை நாடுகளைத் தனது காலனிகளாக்குவதன் மூலம் ரஷ்யா அந்த நாடுகளுக்கு நாகரிகத்தைக் கொண்டு செல்வதாகக் குறிப்பிட்டார் தோஸ்தோவ்ஸ்கி: “ஐரோப்பாவில் நாம் தொங்கு சதைகளாக இருந்தோம். ஆனால் ஆசியாவிலோ நாம் எசமானர்களாக வந்து இறங்குவோம்.” கீழை நாடுகளை, ஏன் மனிதகுலம் முழுவதையுமே பண்படுத்துகிற, நாகரிகப்படுத்துகிற ஆற்றல் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்துவத்துக்கு உள்ளதாகவும் அந்த ஆற்றல் செயல்படுகிற ஊடகமாக ஜார் ரஷ்யா விளங்குவதாகவும் கருதிய தோஸ்தோவ்ஸ்கி, கீழை நாகரிகங்களை, கீழைச் சமயங்களை – குறிப்பாக இஸ்லாத்தை – பார்த்தவிதம் எட்வர்ட் சய்த் கூறும் ‘கீழ்த்திசையியல்’ (orientalist) பார்வைதான். இந்தப் பார்வையின் மூலம் இஸ்லாம் மீதும் முகமது நபி மீதும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளையும் அவதூறுகளையும் சுமத்துகிறார். 1876, 1877, 1881-ஆம் ஆண்டுகளில் அவர் எழுதிவந்த ‘ஒரு எழுத்தாளனின் குறிப்புக’ளில் துருக்கியர்கள் மீது காரணமற்ற வெறுப்பை உமிழ்கிறார்: ‘புனிதநிலை கெட்ட முகமதியர்கள்’, ‘காட்டுமிராண்டித்தனமான வெறுக்கத்தக்க முஸ்லிம் கும்பல், நாகரிகத்தை அழிக்க உறுதிபூண்ட கூட்டம்.’

தோஸ்தோவ்ஸ்கியின் அரசியல் எழுத்துகளில் மட்டுமல்லாது அவரது புனைவிலக்கியங்களிலும் இஸ்லாத்திற்கும் முகமது நபிக்கும் எதிரான காழ்ப்புணர்வுகள் சில பாத்திரங்கள் மூலம் வெளிப்படுவதைக் காணலாம். ‘குற்றமும் தண்டனையும்’ நாவலில் முகமது நபி, தங்களின் குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்காக எதையும் செய்யத் தயங்காத அதிமானுடர்களான நெப்போலியன், ஜூலியஸ் சீசர் ஆகியோருக்கு இணையானவராகச் சித்தரிக்கப்படுகிறார். ‘மூடன்’, ‘பேய் பிடித்தவர்’, ‘பக்குவப்படா இளைஞன்’ ஆகிய நாவல்களில் முகமது நபிக்கு இருந்த காக்காய் வலிப்பு குறிப்பிடப்படுகின்றது. ‘கரமசோவ் சகோதரர்களி’ல் எதிரும் புதிருமான கருத்துகள் விவாதிக்கப்படும் அத்தியாயங்களிலும் கூட துருக்கியர்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஒரு குழந்தையின் கண்ணீரை விலையாகக் கொடுத்துத்தான் உலகளாவிய சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கொண்டுவர முடியுமா என்ற ஐவான் கரமாஸோவின் கேள்வி தொடர்பாக, குழந்தைகள் மீது இழைக்கப்படும் சித்திரவதைகள் பட்டியலிடப்படுகின்றன.  பெற்றோர்களும் நிலப்பிரபுக்களும் சமுதாயமும் குழந்தைகளை எவ்வாறெல்லாம் சித்திரவதை செய்கின்றனர் என்பது காட்டப்படுகிறது. ஒரு குழந்தையைக் கையிலெடுத்துக் கொஞ்சிவிட்டு பிறகு சிரித்துக் கொண்டிருக்கும் அதனை, அதன் தாயின் கண்ணுக்கு எதிரிலேயே மேலே தூக்கிப் போட்டு அது கீழே விழுகையில் மிகக் கூர்மையான துப்பாக்கிச் சனியனைக் கொண்டு அதனைப் பிடித்து மகிழும் துருக்கியப் படைவீரர்களின் கொடூரச் செயல் வர்ணிக்கப்படுகிறது. அன்பு, கருணை ஆகிய கிறிஸ்துவ விழுமியங்களின் உறைவிடமாகத் திகழும் அலியோஷா கரமஸோவ் இந்த நிகழ்ச்சிகளையெல்லாம் கேட்ட பிறகு பழிவாங்கும் உணர்ச்சி கொள்கிறான். இதே நாவலில் கிறிஸ்துவத்தை ஏற்றுக்கொள்ளாத புற சமயத்தவரைத் தண்டிப்பதற்காக மத்தியகாலக் கிறிஸ்துவத் திருச்சபை உருவாக்கிய ‘மாபெரும் தண்டனை முறை’ (Grand Inquisition) குறித்து தனியொரு அத்தியாயமே எழுதப்பட்டுள்ளது. எனினும் அத்தண்டனை முறையின் கீழ் இழைக்கப்பட்ட கொடூரமான சித்திரவதைகள் ஒன்றுகூடக் குறிப்பிடப்படுவதில்லை.

இவ்வாறு தோஸ்தோவ்ஸ்கியின் புனைவிலக்கியங்களில் – குறிப்பாக நாவல்களில் – உள்ள ‘பலகுரல் தன்மை’யும் கூட கீழைத்தேய மக்களுக்குக் குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு – ஆதரவான அல்லது குறைந்தபட்சம் அவர்களைக் குறித்த இழிவுரைகளை மறுக்கக்கூடிய – ஒரு குரலை உள்ளடக்காமலிருப்பதை பாக்தினும் லூனாசார்ஸ்கியும் காணாமல் இருப்பது வியப்புத் தருகிறது.

எனினும் ‘விமர்சன யதார்த்தவாதம்’ ‘பலகுரல் தன்மை’ என்பன தோஸ்தோவ்ஸ்கியின் படைப்புகளில் வரும் ஐரோப்பியக் கதாபாத்திரங்களுக்கு மட்டுமே பொருந்துவன என்று கொண்டாலும் அவை தம்மளவில் முக்கியத்துவமுடையவையாகவே தோன்றுகிறது. ‘கரமஸோவ் சகோதரர்களி’ல் ஜவானுக்கும் அலியோஷாவுக்கும் நடக்கும் வாதங்கள் அலியோஷாவுக்கு சாதகமாகவா முடிவடைகின்றன? நம்மை ஈர்ப்பது ஜவானின் குரல்தான் – தோஸ்தோவ்ஸ்கியின் தத்துவ, தார்மீக ஆதரவு அலியோஷா பக்கம் இருந்தபோதிலும்.

(இக்கட்டுரையின் மூல வடிவம் ‘கல்குதிரை’ 8, டிசம்பர் 1990 – மே 1991 தாஸ்தாயெவ்ஸ்கி சிறப்பிதழில் பிரசுரமானது. பெருமளவில் மாற்றப்பட்டு, திருத்தப்பட்டுள்ளது. தலைப்பும் மாற்றப்பட்டுள்ளது.)

 

குறிப்புகள்

  1. Eric Fromn, Escape from Freedom, quoted by Maurice Friedman in To Deny Our Nothingness, Contemporary Images of Man: The University of Chicago Press, Chicago, 1978, p.228
  2. Fyodor Dostoevsky, quoted by Maurice Friedman, Ibid, p.228
  3. Fyodor Dostoevsky, Notes from Underground, Bantam Books, New York, 1981, pp 12 & 13
  4. Baktin, quoted by Reggie Sriwardena in A Soviet Critic of Dostoevsky, Lanka Guardian, Colombo, Vol 3 -No.20, March 1981
  5. ‘உளவியல்’ என்று பேசும்போது ஃப்ராய்ட் நினைவுக்கு வருகிறார். தோஸ்தோவ்ஸ்கியின் வாழ்க்கை சரிதங்களை எழுதியவர்களிற் பலர், அவரது தந்தை சில குடியானவர்களால் கொலை செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர். அதை அப்படியே ஏற்றுக்கொண்ட ஃப்ராய்ட், தோஸ்தோவ்ஸ்கி பற்றிய கீழ்க்காணும் ‘உளவியல்’ விளக்கத்தை உருவாக்கினார்: “யூடிபஸ் சிக்கல் தோஸ்தோவ்ஸ்கியின் மனத்திலிருந்தது. எனவே அவர் தனது தந்தை மீது வெறுப்பு காட்டி வந்தார். அவரது நனவிலி மனத்தில் தந்தையைக் கொலை செய்யும் தூண்டுதல் இருந்து வந்தது. எனவே அவரது தந்தை குடியானவர்களால் கொலை செய்யப்பட்டபோது, அக்கொலைக்குத் தானும் உடந்தைதான் என்கிற குற்ற உணர்வு அவர் மனத்தில் ஏற்பட்டது. அவருக்குக் காக்காய் வலிப்பு வந்து கொண்டிருந்ததற்குக் காரணம் தந்தையின் மரணத்தால் ஏற்பட்ட அதிர்ச்சிதான்”.

தோஸ்தோவ்ஸ்கிக்கு வலிப்பு நோய் இருந்ததற்கான முதல் அறிகுறிகள் அவரது தந்தையின் மரணத்துக்கு முன்பே இருந்து வந்தன. எனவே இது குறித்து ஃப்ராய்ட் கூறியதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. தோஸ்தோவ்ஸ்கியின் தந்தையின் மரணம் எந்த சந்தர்ப்ப சூழ்நிலையில் நடந்தது என்பதைப் பற்றி 1975-இல் ஒரு சோவியத் அறிஞர் புதியதொரு ஆய்வை மேற்கொண்டார். அவர் கண்டறிந்து கூறியவை: “தோஸ்தோவ்ஸ்கியின் தந்தை கொலை செய்யப்பட்டார் என்பது அவரது குடும்பத்தின் மீது சொத்து சம்பந்தமாக வழக்குத் தொடுத்திருந்த ஒரு நில உடைமையாளன் வேண்டுமென்றே பரப்பிய வதந்தியே தவிர வேறல்ல. இந்த விஷயம் அன்று முழுமையான புலனாய்வுக்கு உட்படுத்தப்பட்டது. கொலை செய்யப்பட்டதற்கான சான்றுகளோ தடயங்களோ ஏதும் நிறுவப்படவில்லை. ஒரு நிலவுடமையாளர் (தோஸ்தோவ்ஸ்கியின் தந்தை) அவரது குடியானவர்களால் கொலை செய்யப்படுவதை அன்றைய ஜார் அரசாங்கம் அவ்வளவு சாதாரணமாக எடுத்துக்கொண்டு அலட்சியம் செய்திருக்காது.”

  1. N.Medvedev, quoted by Reggie Sriwardena, in A Soviet Critic of Dostoevsky, Lanka Guardian, Vol 3- No 20, May 15, 1980.
  2. Dostoevsky, Letter to Strakhov, quoted by Reggie Sriwardena in Fiction and the Marxist Criticism, Lanka Guardian, Vol I – No.19 February 1, 1979.
  3. எஸ்.வி. ராஜதுரை, ரஷ்யப் புரட்சி இலக்கிய சாட்சியம். அன்னம், சிவகங்கை 1989, பக்கம் 88.
  4. பாக்தின்: பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மேற்கு நாடுகளில் ஏற்பட்ட ‘மறுமலர்ச்சி’ (Renaissance) 1920-களில் சோவியத் யூனியனில் மற்றொரு வடிவத்தில் ஏற்பட்டது என்று கூறலாம். குறிப்பாக லெனினின் புதிய பொருளாதாரக் கொள்கை காலகட்டத்தில் துவங்கி அவரது மறைவுக்குப் பிறகும்கூட ஏறத்தாழ ஐந்தாண்டு காலம் நீடித்த இந்த ‘மறுமலர்ச்சி’யின் போது ஆழமான, ஆக்கபூர்வமான கலை, இலக்கிய விவாதங்கள், திறனாய்வுகள், பரிசோதனை முயற்சிகள் ஆகியன நடைபெற்றன. கலை இலக்கியம் மட்டுமல்லாது பல்வேறு அறிவுத் துறைகளும் அரசியல், வரலாற்று ஆய்வுகளுக்கும் கேள்விகளுக்கும் உட்படுத்தப்பட்டன. எதிரும் புதிருமான கருத்துகள், இதுகாறும் ஒன்றையொன்று சந்திக்காமலிருந்த கருத்துகள் சந்தித்துக் கொண்டன. முரண்பட்டன, மோதின, ஒன்றிசையவும் செய்தன.

இத்தகையதொரு சூழலில்தான் ரஷ்ய மேதை மிகெய்ல் மிகெய்லோவிச் பாக்தின் (Mikhail Mikhailovich Bakhtin) அழகியல் பற்றிய தனது ஆய்வுகளைத் தொடங்கினார். ஆழ்ந்த கிறிஸ்துவ நம்பிக்கை கொண்டிருந்த அவரது சமய நம்பிக்கை அவரது தனிப்பட்ட விமோச்சனத்திற்கானதன்று. தோல்ஸ்தோயையும் தோஸ்தோவ்ஸ்கியையும் போல மானுட குலம் முழுவதற்குமான விமர்சனத்தை வழங்கி, நீதியும் சமத்துவமும் சகோதரத்துவமும் நிலவச் செய்யும் நெறியாகவே அவர் கிறித்துவத்தைப் பார்த்தார். ஏசு கிறித்துவின் நெறிகளோடு ஒன்றிசைவதாக நவம்பர் புரட்சியைக் கண்ட அலெக்ஸாண்டர் ப்ளாக் போலவே மிகெய்ல் பாக்தினும் அப்புரட்சியை வரவேற்றார். மார்க்சியத்தின்பால் ஈர்க்கப்பட்ட பாக்தின், மொழியியல், உளவியல், பண்பாட்டியல், வரலாற்றியல், அழகியல் முதலானவற்றை மார்க்சியத்தின் துணை கொண்டு பார்த்து அத்துறைகளில் தன் பங்களிப்புகளைச் செய்தார். அவற்றின் மூலம் மார்க்சியப் பார்வையையும் வளப்படுத்தினார்.

1895 நவம்பர் 16-ஆம் நாள் ரஷ்யாவிலுள்ள ஓரல் என்ற இடத்தில் பிறந்தார் பாக்தின். அவரது குடும்பம் பிரபு வம்சத்தைச் சேர்ந்தது என்றாலும் அவர் பிறக்கும்போது அதற்குச் சொத்துகள் ஏதும் இல்லை. அவரது தந்தை வங்கியொன்றில் அலுவலராகப் பணி புரிந்துவந்தார். பாக்தினின் இளமைப்பருவம் ஓரல், வில்னியஸ், ஒடெஸ்ஸா ஆகிய நகரங்களில் கழிந்தது. 1913-இல் ஒடெஸ்ஸா பல்கலைக் கழகத்தில் சேர்ந்து வரலாறும் மொழியியலும் கற்று பின்னர் பீட்டர்ஸ்பர்க் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். பீட்டர்ஸ்பர்க்கில் அப்போது ஃப்யூச்சரிஸ்டுகள், உருவவியலாளர்கள், சிம்பலிஸ்டுகள் ஆகியோருக்கிடையே நடந்த ஆழமான, கடுமையான விவாதங்கள் அவரது சிந்தனையைத் தூண்டுவனவாக அமைந்தன. 1918-இல் பல்கலைக்கழகப் படிப்பை முடித்தபின் நெவேல் என்ற நகரத்திற்குச் சென்று அங்கு இரண்டாண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார்.

இங்குதான் முதல் ‘பாக்தின் வட்டம்’ (Bakhtin Circle) உருவாயிற்று. அவரது புகழ்பெற்ற மாணவர்களில் பி.என்.மெட்வெடேவ் தவிர பிற அனைவரும் ஒன்று சேர்ந்தது இங்குதான். 1919-இல் பாக்தின் எழுதிய ‘கலையும் பொறுப்புணர்வும்’ என்ற சிறுநூல் பிரசுரிக்கப்பட்டது.

1920-இல் விடெய்ஸ்க் என்ற பைலோ ரஷ்ய நகரத்துக்குச் சென்றார். ஏறத்தாழ நான்காண்டு காலம் அவர் வாழ்ந்து வந்த அந்த நகரம் அப்போது எல் லிஸ்ஸிட்ஸ்கி, மாலெவிச், மார்க் ஷகால் போன்ற ஓவியக் கலைஞர்கள், பல புகழ் பெற்ற விஞ்ஞானிகள், இசைக் கலைஞர்கள் ஆகியோரின் புகலிடமாக இருந்தது. 1921-இல் எலினா அலெக்ஸான்ட்ரோவ்னா ஓகோலோவிச் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். 1971-ஆம் ஆண்டு காலமான எலினா, பாக்தினின் வாழ்வில் இன்றியமையாத அம்சமாகத் திகழ்ந்தார். பாக்தினின் வாழ்நாள் முழுவதும் நீடித்த எலும்பு நோய் 1923-இல் தொடங்கியது (1938-இல் அவரது காலொன்று வெட்டப்பட வேண்டியதாயிற்று). 1924-இல் லெனின்கிராட் நகரத்தின் வரலாற்று நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கினார். அரசு பதிப்பக நிலையத்தின் ஆலோசகராகவும் இருந்தார். அங்குதான் அவரது படைப்புகள் சில வெளிச்சத்திற்கு வந்தன. ஆனால் அவரது படைப்புகள் பிரசுரமாவதில் ஏதோ ஒரு வகைத் தடை அன்று தொட்டே இருந்துவந்தது எனலாம். ‘எழுத்துப் படைப்புகளில் அழகியல் பற்றிய ஆய்வுமுறைப் பிரச்சினை (On the Question of the Methodology of Aesthetics in Written Works) என்ற படைப்பைப் பிரசுரம் செய்ய முன்வந்த ஒரு சோவியத் ஏடு திடீரென்று நிறுத்தப்பட்டுவிட்டது. 51 ஆண்டுகளுக்குப் பிறகே அது பிரசுரமாயிற்று.

ஆனால் 1929-இல் ‘தோஸ்தோவ்ஸ்கியின் கலை பற்றிய பிரச்சினைகள்’ என்ற மிக முக்கியமான நூல் வெளியாயிற்று. பெரும் வரவேற்பு பெற்ற அப்படைப்பை அன்றைய கல்வி அமைச்சரும் கட்சித் தலைவர்களில் ஒருவருமான லூனாசார்ஸ்கி உட்படப் பலர் புரட்சிகரமான படைப்பு என்று பாராட்டினர். ஆனால் அந்த நூல் கணிசமான அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஏனெனில் நூல் வெளியான சில மாதங்களுக்குப் பின் பாக்தின் கஸக்ஸ்தானில் உள்ள தொலைதூரப் பகுதியொன்றுக்கு ‘நாடு கடத்தப்பட்டார்’. ஆறாண்டுக் காலம் அங்கு வாழ்ந்து வந்த அம்மேதை, கணக்காயர் (Book – keeper) தொழில் செய்து பிழைக்க வேண்டியிருந்தது. அங்கு அவர் வாழ்ந்த காலத்தில்தான் அவரது நெருங்கிய நண்பர்கள் பலர் ஸ்டாலினிசக் களையெடுப்புகளுக்குப் பலியாகினர். ஆனால் தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்த அவரது முக்கியமான கட்டுரைகள் சில (‘நாவலில் சொல்லாடல்’ போன்றவை) அங்குதான் எழுதப்பட்டன.

1936-இல் ஸாரன்ஸ்க் நகரில் ஆசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பு பெற்ற அவர், 1937-இல் மாஸ்கோவிலிருந்து 200 கி.மீ. தொலைவிலுள்ள கிம்ரி என்ற நகரத்துக்குச் சென்றார். அங்கு அவர் 18-ஆம் நூற்றாண்டு ஜெர்மானிய நாவல் பற்றிய மிகப் பெரும் ஆய்வு நூலை எழுதி முடித்தார். அந்நூலின் கையெழுத்துப் பிரதியொன்றைப் பிரசுரத்திற்காக அரசுப் பிரசுர நிலையத்தில் கொடுத்திருந்தார். ஆனால் ஜெர்மானியப் படையெடுப்பின் காரணமாக ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலைமையில் அப்பிரதி காணாமற் போய்விட்டது. அவரிடமிருந்த மற்றொரு பிரதியிலுள்ள காகிதங்களைக் கிழித்து சிகரெட்டுகள் தயாரிக்கப் பயன்படுத்திவிட்டார் பாக்தின். நிறைய சிகரெட் புகைக்கும் பழக்கமுடைய அவர் போர்க்காலத்தில் நிலவிய சிகரெட் பற்றாக்குறையை இவ்வாறுதான் ஈடு செய்து கொண்டார். தனது படைப்புகள் பிரசுரமாவது குறித்துப் பெரிதும் அக்கறை காட்ட மாட்டாராம் அவர். தனக்குத் தெளிவு ஏற்பட்டுவிட்டது என்றால் எழுதியதைப் பிரசுரிக்க விரும்ப மாட்டாராம். அவரது நண்பர்கள் விடாப்பிடியாக வற்புறுத்தி அவரது கையெழுத்துப் பிரதிகளை வாங்கி வைக்காமல் இருந்திருந்தால் அவரது பல படைப்புகள் உலகிற்குத் தெரியாமலேயே போயிருக்கும்.

1940 ஆண்டு தொட்டு உலகப் போர் முடியும்வரை மாஸ்கோவிற்கு அருகிலேயே வாழ்ந்துவந்த அவர் 1940-இல் முனைவர் பட்டத்திற்கான தனது நீண்ட ஆய்வுரையைச் சமர்ப்பித்தார். போர் முடியும்வரை அது பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. 1946 முதல் 1979 வரை நடந்த பரிசீலனைக் கூட்டங்களுக்குப் பிறகு முனைவர் பட்டம் வழங்கும் அதிகாரம் உள்ள அரசாங்க நிறுவனம் அப்பட்டத்தை வழங்க மறுத்துவிட்டது. இதன் காரணமாக அந்த மாபெரும் படைப்பு ‘பேரேலாவும் மத்திய கால, மறுமலர்ச்சிக் கால நாட்டார் பண்பாடும்’ (Rabelais and folk Culture of the Middle Ages and Renaissance) 1965-இல்தான் முதன்முதலாக ரஷ்யாவில் பிரசுரமாயிற்று. இதற்கிடையே அது உலகின் பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுவிட்டது.

ஆனால் அவரது நண்பர்களின் இடைவிடாத முயற்சியின் காரணமாக மாஸ்கோ பல்கலைக் கழகத்தில் ரஷ்ய, உலக இலக்கியத் துறையின் தலைவராகப் பொறுப்பேற்றார். வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த மிகச் சிறந்த மாணவர்களை உருவாக்கிய பாக்தின் 1961-இல் உடல் நலம் குன்றி கட்டாய ஓய்வு பெற வேண்டியதாயிற்று. மருத்துவ சிகிச்சைக்காக 1969-இல் மாஸ்கோவுக்குத் திரும்பிய அவர் 1975 மார்ச் 7-இல் காலமானார்.

1963-இல் தோஸ்தோவ்ஸ்கி பற்றிய அவரது நூல் மறுபிரசுரமாயிற்று. இலக்கிய ஆய்வு பற்றிய அடிப்படைப் பிரச்சினைகள் மீதான அக்கறையை அது தூண்டிவிட்டது. அவரது முக்கியக் கட்டுரைகளின் தொகுப்பொன்று (‘இலக்கியம், அழகியல் பிரச்சினைகள்’) அவரது மரணத்திற்குப் பின் 1975-இல் வெளியிடப்பட்டது.

பாக்தின் பள்ளியைச் சேர்ந்தவர்களால் வெளியிடப்பட்ட மூன்று முக்கிய நூல்களின் உண்மையான ஆசிரியர் யார் என்ற கேள்வி நீண்ட காலமாகத் தீர்க்கப்படாதிருந்தது. அவை கீழ் வருமாறு: வி.என். வோலோஸினோவ் பெயரில் வெளிவந்த Freudianism, Marxism and the Philosophy of Language ஆகிய இரண்டு நூல்கள்; பி.என்.மெட்வெடெவ் பெயரில் வெளிவந்த The Formal Method in Literary Scholarship ஆகியன. பாக்தினின் வாழ்க்கையையும் அவரது படைப்புகளையும் ஆழமாக ஆய்வு செய்துள்ள மைக்கேல் ஹோல்க்விஸ்ட் (Michael Holquist) போன்ற அறிஞர்கள், அந்த மூன்று நூல்களுமே பாக்தினால் எழுதப்பட்டுப் பல்வேறு காரணங்களுக்காக அவரது மாணவர்கள் பெயரில் வெளியிடப்பட்டவை என்று முடிவு செய்துள்ளனர்.

மேற்காணும் குறிப்புகளுக்கான ஆதாரம்:

The Dialogic Imagination: Four Essays by M.M.Bakhtin, University of Texas Press, Austin 1981 (See the Introduction by Michael Holquist)

Boris Kagarlitsky, The Thinking Redd: Intellectuals and The Soviet State 1917 to the Present, Verso, London, 1989.

Rashmi Doraiswamy, The Self and the Other: Discourse/Texuality in Bakhtin in Structure and Significance, Ed. H.S.Gill, Wiley Eastern Ltd,. Madras 1990.

  1. The Dialogic Imagination – Four Essays by M.M.Bakhtin
  2. M.Bkhtin, quoted by Lunacharsky in On Literature and Art, Progress Publishers, Moscow, 1965, p.101
  3. Ibid, pp. 102-103
  4. Ibid, p 107
  5. M.Bakhtin, op.cited, p.349
  6. Lunacharsky, op.cited, p.116
  7. Ibid, p.121
  8. Ibid, p.121
  9. Ibid, p.121
  10. நெசாயேவிசம்: 19-ஆம் நூற்றாண்டு ரஷ்யாவின் புரட்சி மரபில் தோன்றிய ஓர் அதிதீவிரவாதப்போக்கு. அந்தப் போக்கின் மூலகர்த்தாவான ஸெர்ஜி நெசாயேவ் என்பவரை முன்மாதிரியாகக் கொண்டு படைக்கப்பட்டவன்தான் தோஸ்தோவ்ஸ்கியின் ‘பேய் பிடித்தவர்கள்’ (The Possessed) நாவலின் கதாநாயகன் பியோதர் வெர்கோவென்ஸ்கி. ஒரு நல்ல குறிக்கோளை எய்துவதற்காக எந்த வழிமுறைகளையும் பயன்படுத்தலாம் என்பதுதான் நெசாயேவின் கொள்கை. பொய் சொல்லுதல், புரட்சியாளர்களை ஏமாற்றுதல், தோழர்களைக் கொலை செய்தல், மக்களை மோசடி செய்தல், கருத்து வேறுபாடு கொள்பவர்கள் பற்றிய அவதூறுகளைப் பரப்புதல் ஆகியவை புரட்சியைச் சாதிக்க உதவுமானால் அவற்றைப் பயன்படுத்தியே தீரவேண்டும் என்பது அவரது கோட்பாடு.

‘பொது மக்கள் தீர்ப்பு’ என்ற பெயரில், தலைமைக் குழுவொன்றால் வழிநடத்தப்படும் ஐந்தைந்து பேர் கொண்ட சிறு சிறு புரட்சிக் குழுக்களை உருவாக்கி, புரட்சி மந்திரங்கள் சிலவற்றைக் குழு உறுப்பினர்களுக்குக் கற்றுக்கொடுத்து புரட்சியை நடத்தத் திட்டமிட்டவர் அவர். அந்தத் தலைமைக் குழுவிலிருந்தவர் அவர் மட்டுமே.

தன்னை ஒரு பெரும் புரட்சியாளர் என்று மற்றவர்கள் – குறிப்பாகத் தனது அமைப்பைச் சேர்ந்தவர்கள் – நம்பவேண்டும் என்பதற்காகப் பல பொய்களைக் கூசாது சொன்னவர். ஒரு முறை தனது தோழர்களிடம், போலீஸ் தலைமையகத்துக்கு வருமாறு தனக்கு உத்தரவு வந்திருப்பதாகக் கூறிவிட்டுச் சென்றார். வழிப்போக்கன் ஒருவனிடம் ஒரு துண்டுத் தாளைக் கொடுத்து அதைத் தன் தோழர்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டார். தன்னைப் போலீஸார் பீட்டர்-பால் கோட்டைச் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்வதாக அதில் எழுதியிருந்தார். அவரைத் தேடிச் சென்ற தோழர்களோ அவர் போலீஸ் நிலையத்திற்கோ கோட்டைச் சிறைச்சாலைக்கோ கொண்டுசெல்லப்பட்டதற்கான தடயம் ஏதும் இல்லாதிருப்பதைக் கண்டனர். நெசாயேவோ மாஸ்கோவுக்குப் போய்ச் சேர்ந்துவிட்டார். அங்குள்ள நண்பர்களிடம் தான் சிறைச்சாலையிலிருந்து தப்பி ஓடிவந்துவிட்டதாகக் கூறினார். வெளிநாட்டுக்குச் செல்வதற்கான கடவுச்சீட்டை (passport) ஒரு நண்பனிடமிருந்து இரவல் வாங்கிக்கொண்டு வெளிநாடு போவதாகக் கூறினார். ஆனால் அவர் சென்றதோ ஒடெஸ்ஸா என்ற ரஷ்ய நகரத்துக்குத்தான். அங்கிருந்து மீண்டும் மாஸ்கோவுக்கு வந்தார். தான் மீண்டும் கைது செய்யப்பட்டதாகவும் மறுபடியும் தப்பித்துவிட்டதாகவும் கூறினார். மற்றொரு நண்பனிடமிருந்து வேறொரு கடவுச்சீட்டை வாங்கிக் கொண்டு உண்மையாகவே ஐரோப்பாவுக்குச் சென்றார்.

அங்கு அப்போது ஜாராட்சியின் ஒடுக்குமுறைகளிலிருந்து தப்பி ஓடிய ரஷ்யப் புரட்சியாளர்களான பகூனின், ஓகாரியோவ் ஆகியோரைச் சந்தித்து அவர்களையும் நன்றாக ஏமாற்றினார். அவர்களிடம் தன்னைப் பற்றியும் தன் இயக்கத்தைப் பற்றியும் மிகைப்படுத்திக் கூறி ரஷ்யப் புரட்சிக்காக அவர்களிடமிருந்து நிறையப் பணம் கறந்துகொண்டார். ரஷ்யாவுக்குத் திரும்பி வந்ததும் அனைத்து ஐரோப்பியப் புரட்சி இயக்கங்களும் தனக்கு ஆதரவு தந்துள்ளதாகத் தன் தோழர்களிடம் பொய் கூறினார். மார்க்ஸ் – ஏங்கல்ஸ் எழுதிய ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’யிலிருந்து சில பகுதிகளை எடுத்துத் தான் எழுதியதாகக் கூறி அவற்றைத் தனது கொள்கையறிக்கையில் சேர்த்துக்கொண்டார்.

மூன்று அடுக்குகள் கொண்ட தனது அமைப்பில், இரண்டாவது, மூன்றாவது அடுக்குகளில் உள்ள உறுப்பினர்கள் முதல் அடுக்கைச் சேர்ந்தவர்களுக்கு வாய்பேசாது அடிபணிய வேண்டும் என்றும் எல்லா விஷயங்களையும் அவர்கள் ஒளிவு மறைவில்லாமல் தெரிவிக்க வேண்டும் என்றும் நியதி வகுத்த அவர் இந்தக் கீழ்மட்ட உறுப்பினர்களுக்கு மேல்மட்ட உறுப்பினர்கள் எல்லா விஷயங்களையும் சொல்ல வேண்டியதில்லை என்று விதி செய்தார். (தோஸ்தோவ்ஸ்கியின் ‘பேய் பிடித்தவர்கள்’ நாவலின் கதாநாயகன் பியோதர் வெர்கோவென்ஸ்கி ஓரிடத்தில் கூறுவது நினைவுக்கு வருகிறது: “பயங்கரமான அளவுக்குச் சக்தி வாய்ந்தது சீருடை. அந்தஸ்துகள், கடமைகள் ஆகியவற்றை நான் திட்டமிட்டே உருவாக்குகிறேன். செயலாளர்கள் தலைவர்கள், பதிவதிகாரிகள் எல்லோருமே என்னிடம் உள்ளனர்… எல்லாருக்குமே சீருடை பிடித்திருக்கிறது. அது ஓர் அற்புதமான வெற்றியைச் சாதித்துள்ளது.”)

‘நம்மோடு ஒத்துப் போகாதவர்கள் அனைவரும் நமது எதிரிகள்’ என்ற முழக்கத்தை வைத்த நெசாயேவ், தனது நடவடிக்கைகளை விமர்சித்த இயக்கத்தோழன் ஐவான் ஐவானோவ் என்பவனைச் சதி செய்து ஒழித்துக் கட்டினார்.

இத்தகைய மனிதரிடம் மற்றொரு பண்பும் இருந்தது. எவ்வித உலகியல் ஆசைகளும் தன்னலமும் இன்றி இலட்சியத்திற்காக எல்லாத் தியாகங்களையும் செய்யும் நெஞ்சுறுதியும் கைது செய்யப்பட்டு கை கால் விலங்குகள் பூட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் அவர் காட்டிய நெஞ்சுரமும் ஜார் அரசாங்க அதிகாரியைத் திகைக்க வைத்தது. சிறைக்காவலர்கள் பலரை சொல்வன்மையினால் தன் பக்கம் வென்றிருந்தார்.

நெசாயேவையும் நெசாயேவிசத்தையும் மார்க்ஸ், ஏங்கல்ஸ் மட்டுமல்லர், பகூனின் போன்றோரும் வன்மையாகக் கண்டித்தனர். ஆயினும் ஏதோ ஒரு வடிவத்தில் நெசாயேவிசம் தொடர்ந்து நிலவியது என்றே கூற வேண்டும். நெசாயேவ், நெசாயேவிசம் பற்றிய விளக்கங்களுக்கும் விரிவான செய்திகளுக்கும் கீழ்க்காணும் நூல்களைக் காண்க:

V.Kharos, et al, The Russian Revolutionary Tradition, Progress Publishers, Moscow, 1988

Andrei Anikin, Russian Thinkers: Essays on Socio: Economic Thought in the 18th and 19th Century, Progress Publishers, Moscow, 1988

N.Pirumova, et al, Russia and the West: 19th Century, Progress Publishers, Moscow, 1990.

  1. Kalpana Sahni, Oriental Phantoms: F.Dostoevsky’s View on the East, Social Scientist No.158, July 1986, New Delhi.

 

(சொல்லில் நனையும் காலம் தொகுப்பிலிருந்து)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.