Fortress of War
கதை. 1941. இரண்டாம் உலகப்போர் காலக்கட்டம். ரசியாவின் மேற்குப்பகுதியின் பெலாரஸ் பகுதி. போர்ட்ரெஸ் என்ற கோட்டைக்குள் 8000 செம்படை வீரர்களும் அவர்களுடைய குடும்பங்களும் வசிக்கிறார்கள். ஜூன் மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை. அங்கு வாழ்பவர்கள் வார இறுதி நாள் என்பதால், ஜாலியாக நடனமாடிக்கொண்டிருக்கிறார்கள்.
இரண்டாம் உலகப்போர் கட்டம் என்பதால், இட்லரின் நாஜிப்படைகள் எப்பொழுது வேண்டுமென்றாலும், தாக்குவார்கள் என ஒரு படைத்தளபதி கணிக்கிறார். ஒருவித பதட்டமாகவும், இறுக்கத்துடன் இருக்கிறார்.
அவர் கணித்ததை போலவே அடுத்தநாள் இட்லரின் நாஜிப்படைகளில் ஒரு குழு ரசிய வீரர்களின் இராணுவ உடையணிந்து, ரயிலிருந்து இறங்குகிறார்கள். எல்லோரும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கும் விடிகாலை 4மணி அளவில் இட்லரின் வான்படை கொத்து கொத்தாக குண்டுகளை வீசுகிறார்கள். கோட்டைகள் தூள் தூளாகின்றன. வீரர்கள், மக்கள் என பலர் இறக்கிறார்கள். திடீர் தாக்குதலால் கொஞ்சம் நிலைக்குலைந்து போன செம்படையை, தளபதிகள் சுதாரித்து தாக்குதலை எதிர்கொள்ள தயார்படுத்துகிறார்கள்..
நாஜி படைகள் எந்தவித போர் ஒழுங்கையும் கடைப்பிடிப்பதில்லை. மக்கள் பலரையும் சுட்டுத்தள்ளுகிறார்கள். மருத்துவமனையில் உள்ளவர்களை கவசம் போல பயன்படுத்திக்கொண்டு, பின்னால் பதுங்கி வருகிறார்கள். பீரங்கி போன்ற நவீன, அளவில்லா ஆயுதங்களுடன் தாக்குகிறார்கள். கோட்டையின் எந்த பகுதி வழியாகவும் மக்கள் வெளியேற முடியாமல் நாஜிப்படைகள் சுற்றி வளைத்துவிடுகிறார்கள்.
குறைவான படை, நவீன ஆயுதங்கள் இல்லை, உணவு இல்லை. குடிநீர் கூட இல்லை. இருப்பினும் செம்படை தங்களுடைய தியாகத்தால், அர்ப்பணிப்பால் எதிரி படையை துணிவுடன் எதிர்கொள்கிறார்கள். தலைமை அலுவலகத்திற்கு கூடுதல் படையை அனுப்ப சொல்லி செய்தி அனுப்புகிறார்கள்.
அவர்கள் எதிர்பார்த்தப்படி தலைமை படைகளை அனுப்பியதா? மக்கள் உயிர் பிழைத்தார்களா? செம்படையின் நிலை என்ன ஆனது என்பது உணர்வுபூர்வமான முழு நீளக்கதை
****
இது ஒரு உண்மைகதை. படத்தைப் புரிந்துகொள்ள, வரலாற்றின் பக்கங்களை நாம் கொஞ்சம் புரட்டவேண்டும்.
ஏகாதிப்பத்தியங்கள் தாங்கள் கொள்ளையடிப்பதற்காக நாடுகளை பிடிப்பதற்காக நடத்திய போர்கள் தான், உலகை உலுக்கிய இரண்டு உலகப்போர்களும்! தங்கள் இலாப வெறிக்காக பல கோடி மக்களை கொன்று குவித்தார்கள்.
முதல் உலகப்போரில் முதலாளித்துவ அரசுகள் தங்களுக்குள் போரிட்டுக்கொண்டிருந்த பொழுது, முளைத்து எழுந்தது முதல் சோசலிச அரசான ரசியா. கம்யூனிசம் மெல்ல மெல்ல உலக மக்களை ஈர்க்க துவங்கியது. இப்படி வளர்வது ஏகாதிப்பத்தியங்களின் கண்ணை உறுத்திக்கொண்டே இருந்தது. தங்களுக்கு போட்டியாய் இருந்த, உலகை ஆளும் வெறியில் இருந்த இட்லரை ரசியா பக்கம் திருப்பிவிட முனைந்தார்கள். இதைப் புரிந்துகொண்ட ஸ்டாலின் சோசலிசத்தை காப்பதற்காக இட்லருடன் ஒரு இடைக்கால ஒப்பந்தம் போட்டுகொண்டார். அதனால் தான் 1939 – 1941 வரை ரசியா போரில் கலந்துகொள்ளவில்லை.
ஒப்பந்தத்தை மீறித்தான் இட்லர் ரசியாவை 1941ல் தாக்க ஆரம்பித்தான். ரசிய செம்படை அர்ப்பணிப்புடனும், துணிவுடனும் போராடியது. உலகத்தை பாசிசத்தின் பிடியிலிருந்து காப்பாற்றியது. அதற்காக சோசலிச ரசியா கொடுத்த விலை இரண்டு கோடி உயிர்கள். இந்த பின்னணியில் நடந்த உணர்வுபூர்வமான போராட்டம் தான் இந்த படம்.
அமெரிக்காவில், இஸ்ரேலில், துருக்கியில், ஆஸ்திரேலியாவில், லத்தீன் அமெரிக்க நாடுகளில், பிரான்சில், ஜெர்மனியில், இந்தியாவில் என உலகில் கடந்த முப்பது ஆண்டுகளில் வலதுசாரிகள் மெல்ல மெல்ல வளர்ந்து ஆட்சியை பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆண்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு ஆக்டோபஸ் போல உலகை பாசிசம் தன் கைகளால் வளைத்துக்கொண்டிருக்கிறது. மக்கள் எழுச்சியுடன் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
படத்தின் இடையில் செம்படை தளபதி தன் வீரர்களிடம் சொல்வார்.
”எதிரிகள் நம்மை சரணடைய சொல்கிறார்கள். நாம் செம்படையின் வீரர்கள். நமது தாய்மண்ணை காக்க கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை போராடுவோம்”
அதையே நமக்கும் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்வோம்!
ஜனநாயக சக்திகள், முற்போக்கு சக்திகள், புரட்சிகர சக்திகள் என அனைவரும் ஒன்றிணைவோம்.
எதிரிகளை வீழ்த்தும்வரை போராடுவோம்!
நமக்கு வேறு குறுக்குவழிகள் ஏதுமில்லை!!
– இராம்கி செல்வம்