கோபி கிருஷ்ணன் கதைகளைப் பற்றி முதன் முறையாக சாரு எழுதிய கட்டுரையில்தான் படித்தேன். அதன் பிறகு வெகு காலம் கழித்தே அவருடைய கதைகள் அடங்கிய முழுத்தொகுப்பை வாங்கி வாசிக்க ஆரம்பித்தேன். முதல் கதையை படித்த உடனே அடுத்த கதைக்கு போகும் எண்ணமே வராமல் மீண்டும் மீண்டும் அதே கதையையே வாசித்துக் கொண்டிருந்தேன். ஒருவேளை ஒண்டிக்குடித்தனம் என்பதில் உள்ள அனுபவங்கள் எனக்கும் அவருக்கும் அத்தனை பொருந்திப் போனதாக இருந்ததே காரணமாக இருக்கலாம். நான் என் அப்பா, அம்மா, இரண்டு தம்பிகள் உட்பட அனைவரும் பத்துக்கு பதினைந்து அளவுள்ள வீட்டில் இருபத்தைந்தாண்டுகள் வாழ்ந்தோம். அங்கே கழிவறை என்பது பெரும் அவஸ்தையின் குறியீடு. அதிலும் மழைக்காலத்தில் சொல்லவே வேண்டாம். கோபி கிருஷ்ணன் தன்னுடைய “காணி நிலம் வேண்டும்” என்ற சிறுகதையில் பேரவலமான தனித்துவிடப்பட்ட தன் வாழ்வின் பக்கங்களை சுய எள்ளலோடு எழுதிப் போகிறார். வீட்டு உரிமையாளர்கள் எப்படி நடந்துகொள்வார்கள், அவர்களுடைய உத்தரவுகளை கடைபிடிக்க எத்தனை போராட வேண்டியிருக்கும், அதில் எத்தனை அவமானங்கள் பட வேண்டியிருக்கும் என்பதையும் கோபி அநாயாசமாக தன் எழுத்தில் பேசுகிறார்.
காணிநிலம் வேண்டும் சிறுகதையில் அவர் வாடகைக்கு இருந்த வீட்டில் குடித்தனக்காரர்களுக்கென்று பொது கழிவறையைவிட மோசமான ஒரு கழிவறையும், கதவில்லாத ஒரு குளியலறையும் இருக்கிறது. அங்கே குளிக்கப் போகிறவர்கள் வாளியை பாதி வெளியே தெரியும்படி வைத்துவிட்டு குளித்தால்தான் இன்னொருவர் அங்கே இருக்கிறார் என்பதை மற்றவர்கள் தெரிந்துக்கொண்டு விபரீதங்களை தவிர்க்கலாம். இதனை மீறி அப்புச்சம்மாள் என்ற கிழவி, தாராவின் கணவன் குளித்துக்கொண்டிருக்கும் போது சட்டென்று உள்ளே நுழைந்து அதிர்ச்சியடைகிறாள். அவளுடைய அதிர்ச்சிக்கு காரணம் அந்நேரத்தில் தாராவின் கணவன் ஜட்டி போடவில்லை. இந்தச்செய்தி காலணி முழுக்க பரவி வீட்டு உரிமையாளர் ஓர் உத்தரவு போடுகிறாள். இனி எல்லா ஆண்களும் ஜட்டி அணிந்து கொண்டு குளிக்கவேண்டுமென்று. இதனால் ஏற்பட்ட அவமானத்தில் கூசிப்போகும் தாராவின் கணவன் குற்றவுணர்வடைந்து ஒருவாரம் தலையை குனிந்தபடி தரையைப் பார்த்து நடந்துக்கொண்டிருக்கிறான். அங்கிருந்து அடுத்த வீடு, அதற்கடுத்த வீடென்று ஒவ்வொரு முறை வாடகை வீடு மாறும் போதும் இதே போன்றதொரு சம்பவம் நிகழ்ந்தபடியிருக்கிறது.
ஆனால் கோபி கிருஷ்ணன் தன்னுடைய எழுத்துக்களில் சக மனிதர்கள் மீது கசப்போ வெறுப்போ காட்டுவதில்லை. யார் மீதும் அவர் விஷத்தைக் கக்குவதுமில்லை. பெரும்பாலான தன் கதைகளில் உளவியல் ஆய்வுக்குரிய மனித மனதின் விசித்திரங்களை சொல்லிச்செல்லும் போது அவருக்கே உரித்தான எள்ளலும் அதனுள் ஊடுபாவாக கலந்திருக்கும் மனசிதைவின் பாழ்பட்ட Melancholic சிந்தனையும் வெளிப்படுகிறது. அது சுதந்திரமான மனதை நெறித்து நசுக்கும் தின வாழ்வின் கொச்சையான பசப்பலை சகிக்க இயலாத ஒரு மனிதனின் கோவம் அல்லது விரக்தி.
இதையே “ஜட்டியை” முன்வைத்து அவர் எழுதியிருக்கும் “மிகவும் பச்சையான வாழ்க்கை” என்ற சிறுகதையை வாசிக்கும்போது ஒருவர் கண்டு கொள்ள இயலும். உண்மையில் நம் தின வாழ்வில் தரிசனம் என்று ஏதாவது இருக்கிறதா? அப்படியே அது உண்மையாக இருக்குமானால், அது ஒரு சராசரி குடும்ப வாழ்வில் சிக்கிக்கொண்ட பேரன்பான ஒருவனுக்கு எப்பொழுதாவது நிகழக்கூடிய வாய்ப்பு இருக்கிறதா? இல்லை என்பதே அப்பட்டமான உண்மை. வேறென்ன இருக்கிறது என்பதற்கு ஒரு மயிரும் இல்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.
கோபியின் எழுத்துக்களை பெரும்பாலானோர், மிக சாதாரணமான மனம்பிறழ்ந்த அல்லது அதீத மன நெருக்குதலுக்கு ஆளான ஒருவனுடைய சொற்கள் என்று சொல்லி கடந்து போக இயலும். ஆனால் போலியான வாழ்க்கை போலியான மனிதர்கள் சூழ்ந்த ஜீவனத்தில், யார் மனநிலை பாதிக்கப்பட்டவர்? குற்றம்சாட்டும் நபரா அல்லது குற்றம்சாட்டப்படுபவரா என்பதே கேள்வி. குறிப்பாக அவருடைய கதைகளை மனநெருக்கடியில் உழலும் தற்கால மனிதர்களின் வாழ்க்கையுடன் மிக எளிதாக ஒருவர் பொருத்திப் பார்க்க இயலும். அவை பாசாங்கல்ல. வெறுமனே உத்தி சார்ந்ததும் அல்ல. அது சாலையில் தேங்கி நிற்கும் நீர், வாகனத்தின் சக்கரத்தில் அமுக்கி பிதுங்கி அய்யோவென்று அலறி நம் முகத்தில் அறைந்து நம்மை திக்கென்று நிற்க வைப்பது போன்ற நிஜம்.
உரிமை என்ற சிறுகதையின் முடிவில், ரோஸி கடல் அலைகளை நோக்கி செல்வது அப்படியானதே!
கோபி நேர்மை, அகிம்சை என்பதையெல்லாம் நாம் மனஉறுத்தல் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம் என்பதால் தான் கடைபிடிக்க வேண்டியிருக்கிறது, அது நற்பண்பு என்பதால் அல்ல என்கிறார். எல்லாவற்றிலும் நாம் தான் இருக்கிறோம். நம்முடைய சுயம் ஏதோ ஒன்றுக்காக எப்போதும் ஏங்கியபடியேயிருக்கிறது.
அவர் எழுத்துக்கள் சொல்வதைப்போல, நம் வாழ்வில் பெரும்பாலானோர் இச்சமநிலை குலைவால் மனநிலை பாதிப்படைந்தவர்கள்தான். Paranoia, Hysteria, Schizophrenia, Pedantry இவை எல்லாம் மனநிலை காப்பகத்தில் இருக்கும் ஒருவனுக்கும், சராசரி மனிதன் ஒருவனுக்கும் அளவில்தான் வேறுபடுகின்றனவே தவிர அறவே இல்லை என்று யாரும் சொல்ல முடியாது. மினிசிகரெட்டும், டீயுமாக தன் வாழ்வை சுருக்கிக்கொள்ள முயலும் புறமும், அனைத்து உயிரினங்களையும் அளவுகடந்து நேசிக்கும் பேரன்பின் சுடராக அகமும் நிறைந்த வாழ்வை, வண்ண மீன்கள் நீந்தும் கண்ணாடித் தொட்டியாக எப்போதும் தன் கைகளில் ஏந்திச்செல்ல அவரால் இயலவில்லை. இழந்த யோகம், முடிவில்லாத சமன் போன்ற சிறுகதைகள் அதன் பிரதிபலிப்பாகி, நிஜத்திற்கும் கற்பனைக்குமான அந்தரங்க வெளியை அழித்து நம்முடன் உரையாட கூடியவை.
ஆனால் உரையாடலுக்கான சாத்தியத்தை அழித்து Philistine சமூகமான நாம் பொதுவாகவே அனைத்தையும் ஒற்றைப்பார்வையுடன் அணுகுபவர்களாகவே இருக்கிறோம். இதற்கென்று புது அகராதி எழுதுபவர்களே மேற்சொன்ன சமூகத்தின் எழுத்தச்சன்கள். அவர்கள் மிக எளிதாக கோபியின் எழுத்துக்களை உளறல், Minimalistic என்று புறந்தள்ளுவார்கள். குதறப்பட்ட வாழ்வில் நிகழ்பவை அனைத்தும் அவர்களுக்கு ஆன்மீகமயமானவை. அதிலும் அவர்களுக்கு படைப்பின் வழி எல்லாவற்றிலும் தரிசனம் நிகழவேண்டும். ஆனால் நிஜத்தில் நாம் எதிர்கொள்ளும் வாழ்க்கை அத்தனை சாத்வீகமானதா! அத்தனை ஆன்மிகமானதா!
இங்கே ஒருவன் Misogyny ஆக வாழ்வது பெருமையானதாக கலாச்சார ரீதியில் ஆதரிக்கப்படுகிறது. ஆனால் Philogyny-ஆகவோ அல்லது Genophilia-ஆகவோ வாழ்வது கொலைக்குச் சமமானது. அதை எழுதுவதும் அவ்வாறானதே. அவர்களுக்கு குறைந்தபட்ச மரியாதை கூட கிடைக்காது. இந்நிலையில், மனமாறாட்டம் காரணமாக சுயத்தை இழக்கும் மனிதர்களை புரிந்துகொள்ள உதவி செய்யும் கதைகளை கோபி கிருஷ்ணன் எழுதுகிறார்.
ஒரு வகையில் அவை சிதைந்து போன அவருடைய சொந்த நிஜம். அதில் மௌடீகமில்லை, போலி வேதாந்தமில்லை அதில் இருப்பதெல்லாம் எளிய மனிதன் ஒருவனின் எளிய வாழ்க்கை. அதில் தன்னை பொருத்திக் கொள்ள இயலாமல் அவனடையும் உளச்சிக்கல். ஆனாலும் அவன் அதை ஒரு படைப்பாக மாற்றுகிறான். அதில் பெரிய மகிழ்ச்சியோ அங்கீகாரமோ இல்லை என்றபோதும் தன்னளவில் ஏற்படும் ஒரு நெகிழ்வுக்காக அதை செய்கிறான். ஒருவிதத்தில், அது அவன் பிடிக்கும் சிகரெட், பீடி அல்லது அருந்தும் டீ போன்றது. மேற்கொண்டு கேட்டால், இதில் வேறென்ன வேண்டியிருக்கிறது என்பதே அவனுடைய பதிலாக இருக்கும். கோபி கிருஷ்ணன் அவ்வாறானவர் அவருடைய எழுத்துக்களும் அதைத்தான் செய்கின்றன. நீங்கள் அவரை அன்றாட வாழ்வியலின் தவிர்க்க இயலாத கதைசொல்லி என்று எந்த தர்க்கமுமின்றி ஏற்றுக்கொள்ள இயலும். அதற்கு நம்முள் இருக்கும் மனமாறாட்டத்தை அல்லது மனசிதைவை முதலில் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
- விருட்சன்
கோபியின் கதைகளை படிக்க வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்துகிறது உங்கள் எழுத்து. நன்றி நண்பரே