இந்திர நீலம்

காலையில் இருந்து நிதானம் தவறியது. உடம்புக்கு என்னவென்று உணரமுடியவில்லை. காய்ச்சல் இருக்கிறதா என்று தொட்டுப் பார்த்துக் கொண்டேன். உடம்பு குளிர்ந்திருந்தது. உள்ளுக்குள் அனலாகத் தகித்தது. தலைவலி இல்லை. உடம்பு வலி இல்லை. சளி பிடிப்பதற்கான அறிகுறிகள் இல்லை. மாதவிலக்கு முடிந்து ஒரு வாரம் ஆகிறது. உடம்பு எப்பொழுதும் இப்படித்தான். என்ன செய்கிறது என்பதைக்கூட புரிந்துகொள்ள விடாது. நானும் புரியாமல்தான் இருக்கிறேன். இயல்பில் இல்லை என்பது மட்டும் புரியும். லேசாக அனலில் வறுபடுவதுபோல் தவிப்பாக இருக்கும். இதுதான் செய்கிறது என்று புரிந்துகொண்டால் பரவாயில்லை. உடம்புத் தன்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்வது இல்லை. அல்லது என்னால் புரிந்துகொள்ள முடியவில்லையா?

மார்பகங்கள் கனத்தன. மாதவிலக்கு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக உடல் இப்படித்தான் முறுக்கியெடுக்கும். கண்களில் வெப்பம் தெரியும். தொடை கனக்கும். கால்கள் இரண்டும் துவண்டு விழும். உடம்பைச் சுமப்பது வேதனையானது என்பதை அந்த நாட்கள் சொல்லும். இப்பொழுதெல்லாம் எல்லா நேரமும் உடம்பு இப்படி இருப்பதற்குக் காரணம் என்ன?

பொருட்படுத்தக் கூடாது என்று முடிவெடுத்து வேலைகளில் மனத்தைத் திருப்பினேன். மனத்தை அடக்குவதுதான் கடினம். உடம்பு நன்றாக இருந்தால், மனத்தை ஒதுக்கிவைத்துவிட்டு இயல்பாக இருந்து கொள்ளலாம். உடம்பு கொஞ்சம் முரண்டு செய்தால்கூட, மனமும் சோர்ந்துபோய், வண்டி எங்காவது நின்றுவிடுகிறது. ஏற்கனவே வீட்டில் டயர் வண்டி என்று பெயர்.

உடம்பில் எங்குமே வலி இல்லை. உடம்பின் எந்த பாகத்திலும் அசாதாரணத்தன்மை இல்லை. புது நோய் எதுவும் இருக்குமோ? மனத்தைத் திடப்படுத்திக்கொண்டு வேலைகளில் மனம் செலுத்தினேன். வேலைகளுக்கு இடையிலும் உடம்பை முழுமையாக மறந்துவிட்டேன் என்று சொல்ல முடியாது. சிறு வயதில் புதுப் பூந்தொடப்பத்தால் வீடு பெருக்கும்போது, அதிலிருக்கும் ஊமுள் ஆடைகளுக்குள் எங்காவது ஒட்டிக்கொள்ளும். எங்கிருக்கிறது என்று தெரியாது. நடக்கும்போதும், உட்காரும்போதும், உடம்பில் ஏற்படும் அசைவுகளுக்கெல்லாம் உடனசையும் ஊமுள் உடம்பில் குத்திக் கொண்டே இருக்கும். கண்டுபிடித்துத் தூக்கியெறிவதற்குள் போதுமென்றாகிவிடும். உடம்பின் உள்ளே ஊமுள்ளை வைத்துத் தைத்ததுபோல் இருக்கிறது. எப்படிக் கண்டுபிடித்துத் தூக்கிப்போடுவது? இதற்கு ஸ்கேன் வசதி இருக்கிறதா?

நாள் முழுக்க வேலைகளில் ஓடிக் கொண்டிருந்தாலும், உள்ளுக்குள் சிறு மின்னல், அலைபோல் நெளிந்து கொண்டிருந்தது. மனம் நிதானமாகச் சிறு அலையைப் பின் தொடர்ந்தது. உள்ளங்காலில் இருந்து உச்சந்தலைக்குச் சில நேரங்களில் பரவியது. உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரைக்கும் ஒருமுறை. மார்பகங்களுக்கு இடையில் ஒருமுறை. இதயத்தின் ஆழத்திற்குள்ளிருந்து ஒருமுறை. வெவ்வேறு இடங்களில் தொடங்கிய அலைகள் உடம்பிற்குள் குறுக்கு நரம்புகளைப்போல் ஓடிக் கொண்டிருந்தன.

ஒன்பதாம் வகுப்பில் ரத்த நாளங்கள் பற்றி முதன்முதலில் பார்த்த வரைபடம் கண்முன் நின்றது. ரத்த நாளங்கள் சிடுக்கு விழுந்த நூற்கண்டுகளைப்போல் உடல் முழுக்கப் பின்னப்பட்டிருக்கும். ஒவ்வொரு நாளமும் எங்கிருந்து எங்கு போகிறது? எது தொடக்கம்? எது முடிவு? மேலிருந்து கீழாகச் செல்கிறதா? கீழிருந்து மேலாகச் செல்கிறதா? படித்து முடிக்கும் வரை புரிந்து கொண்டதில்லை. தசைகளற்ற ரத்த மண்டலத்தில் நாளங்களின் ஓட்டம்தான் எனக்கு உடம்பின் வலியாகத் தெரிகிறதோ?

சிறு ஊசி குத்தினால்கூட தனி வலியாக அடையாளம் காட்டிவிடும் உடம்பு, பிசைந்து வைத்த மாவு உருண்டையைப்போல் ஒன்றையும் வெளிக்காட்டாமல் இருக்கிறது. கவனத்தை இன்னும் குவித்தேன்.

இந்த உடம்பை எத்தனை முறை முழுமையாகப் பார்த்திருக்கிறேன்? பதினைந்து வயது வரை வீட்டில் குளியலறை கிடையாது. வீட்டுக்குள்ளே இருக்கும் நடு வாசலில்தான் குளிக்க வேண்டும். கூட்டுக் குடும்பத்தில் எப்பொழுதும் ஆட்கள் நடமாடிக் கொண்டே இருப்பார்கள். அம்மா, சித்தி, அக்கா எல்லாம் வாசலை ஒட்டியிருக்கும் அடுப்படியில் வேலை செய்வார்கள். பிள்ளைகள் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருக்கும். அக்கம்பக்கத்துப் பெண்களும் கடுகு, பச்சைமிளகாய், கறிவேப்பிலை கடன் வாங்க வந்து போவார்கள். அத்தனைப் பேர் முன்னிலையிலும்தான் குளிக்க வேண்டும். தொட்டியில் இருந்து பெரிய கூடையில் தண்ணீர் எடுத்து, மார்புக்குமேலே பாவாடையை ஏற்றிவிட்டு, குளிக்க உட்காரும்போது உடம்பு கூசிப் போகும். பெரிய தண்ணீர் அன்ன கூடைக்குப் பின்னால் மறைந்து கொள்ளலாமா எனத் தவிப்பாக இருக்கும். எல்லாரும் வேலை செய்வதுபோல் தோற்றம் இருக்கும். கண்கள் குளிக்கும் ஆளை ஒரு பார்வைப் பார்த்துக் கொள்ளும். பக்கத்து வீட்டுப் பையன்கள் அந்த நேரத்தில் கட்டாயம் ஒன்றிரண்டு முறை வீட்டுக்குள் வந்து வெளியே போவான்கள். ஏன் வந்தான்கள், வந்தபடியே எதற்கு வெளியே போகிறான்கள்? யாருக்கும் கேள்வியே எழாது.

“கழுத்துல்லாம் பாரு கருப்பா இருக்கு,  நல்லா தேச்சிக் குளி” சத்தமாகச் சொல்வாள் அம்மா. தினம் இந்த வசனத்தை மறக்க மாட்டாள். குத்தங்கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கும் உடம்பில் மார்புக்குமேல் உள்ள பகுதியே வெளியில் தெரியும். அவசரமாகக் கழுத்திற்கும் முகத்திற்கும் கைகளுக்கும் சோப்பைப் போட்டுத் தேய்த்துக் கொள்வேன். கால் பாதங்களை வெளியில் நீட்டி, பேருக்குத் தேய்த்துவிட்டு, தண்ணீர் ஊற்றிக் கொள்வேன். உடம்பை முழுமையாகத் தேய்த்துக் குளிக்கும் பழக்கம், தனி குளியலறை வந்தபிறகுதான். வளர்ச்சியடைந்த உடம்பை குளியலறையில்தான் முதன்முறைப் பார்த்தேன். “இனிமே பெட்டிக்கோட்டு போடக்கூடாது. உள்பாடி போடு. மாரு தொங்கிப் போச்சுன்னா கிழவி மாதிரி இருக்கும்” என்று சித்தி முன்னாலேயே அம்மா சத்தமாகச் சொல்வாள். வளர்ந்த மார்பகங்களைப் பார்த்தேன். காய் மாங்காயாகக் கல்லு மாதிரி இருந்தது. தொடுவதற்குக் கூச்சமாக இருந்தது.

‘கண்ணகிக்கு வெளியவே தெரியாது. எந்தச் சட்டைப் போட்டாலும், முன்னுக்குத் துருத்திக்கிட்டு நிக்காது. எனக்கு ஏன் இவ்வளவு பெருசா வளர்ந்ததோ?’ திட்டிக்கொண்டே தான் தினம் குளிப்பேன். நன்றாகத் தேய்த்துக்கூட குளித்ததில்லை. அருவருப்பான ஒரு வஸ்துவைப்போல் மார்பகத்தைத் தொடக் கூசுவேன். நான் இருக்கிறேன் என்று முந்திக்கொண்டு நிற்கும் மார்பகங்கள் எதிரிபோல் நின்றன. திருமணத்திற்குப் பின், கண்ணா கை வைக்க வந்தபோது கைகளைத் தட்டிவிடுவேன். “எவ்வளவு அழகான மார்பகம் உனக்கு. அமுதக் கலசம் மாதிரி, எதுக்குத் தொட விட மாட்றே” என்று கோபித்துக் கொள்வான். ஸ்ரீரங்கம் போனபோது,  கையில் கண்ணாடியுடன்,  மேடிட்ட முலைகளுடன் இருந்த பெண் சிற்பத்தைப் பார்த்தவுடன் என்னைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டினான். தூங்கும்போது எப்பொழுதும் கையில் பிடித்துக் கொள்வான். “இந்தக் கதகதப்பு இருந்தாத்தான் தூக்கம் வருது” என்பான்.

குளியலறைக்குள்ளும் நிம்மதியாகக் குளிக்க விடமாட்டாள் அம்மா. “ஏன் கதவைத் தாழ்ப்பாள் போட்ற, இங்க யார் கெடக்குறாங்க பாக்க” எனத் தாழ்ப்பாள் போட்டாலே நான்கு வீட்டுக்குக் கேட்பதுபோல் கத்துவாள். “தாழ்ப்பாள் போடாததுக்கு எதுக்கு பாத்ரூம்” என்று கோபம் வந்தாலும் வெளிக்காட்ட முடியாது. முதுகுத் தேய்த்துவிடுகிறேன் என்று வருவாள். “நீ தேய்ச்சா எண்ணெயே போகாது. திரும்பு இப்படி, நான் நல்லா தேய்ச்சு விடுறேன்” எனத் தலையில் சியக்காய் தேய்த்துவிடுவாள். குளியலறை கட்டியதும் நடமாடும் ஆண்கள் பார்வையில் இருந்து தப்பித்தாலும், ஒரு நாள்கூட என் விருப்பப்படி உடம்பைப் பார்த்துக் குளிக்க அம்மா அனுமதித்ததே இல்லை. கல்யாணம் முடிந்து மறுவீடு வந்தபோதுகூட, “எங்கெங்க வலி இருக்கோ, சூடா தண்ணிய ஊத்து” என உள்ளே நுழைந்துவிட்டாள்.

உடம்பை முழுமையாகக் கவனித்துப் பார்த்தபோது இருபத்து மூன்று வயதாகிவிட்டது. ஆளுயர கண்ணாடி வைத்த பீரோ தான் வாங்க வேண்டும் என்று அப்பாவிடம் அடம் பிடித்து வாங்கினேன். “அது எதுக்கு, ஒரு வருசத்துல ரசம் போயிடுச்சுன்னா,  பாக்க நல்லாவே இருக்காது” என்று மறுத்தவரிடம் “பரவாயில்லை, எனக்கு பீரோ வாங்குனா கண்ணாடி வச்சுத்தான்” என்று கண்டிப்பாகச் சொன்னேன். “மூஞ்சியப் பாக்கத்தான் சின்னக் கண்ணாடி இருக்கே,  பீரோவுல எதுக்குக் கண்ணாடி” என்று அம்மா மறுத்துப் பார்த்தாள். அப்பா கண்ணாடி விசயத்தில் என் பேச்சைக் கேட்டார்.

அம்மாவிடம் ஒரு கையகல கண்ணாடி இருக்கிறது. சாயந்திரமானால், தெருத் திண்ணையில் உட்கார்ந்து, தலையைச்  சீவி,  உச்சியில் கொண்டை போடுவாள். கழுத்து, நெற்றியில் மினுமினுக்கும் எண்ணெய்யை முந்தானையால் துடைத்துக் கொண்டே அந்தக் கையகல கண்ணாடியை எடுப்பாள். முகம் முழுமையாகத் தெரியாது. ஓரடி தள்ளி வைத்துப் பார்த்தால், நெற்றி வரை தெரியும். அம்மா நெற்றியில் வைத்திருக்கும் பெரிய குங்குமத்தை, கண்ணாடியைச் சாய்த்துப் பிடித்தபடி சரி பார்ப்பாள். வலது பக்கமாகவும், இடது பக்கமாகவும் முகத்தைத் திருப்பிப் பார்த்துக் கொள்வாள். முழுக்க ரசம் போய்விட்ட அந்தக் கண்ணாடியில் அம்மா என்ன பார்க்கிறாள் என்று தெரியாது. அதுதான் அம்மா தன்னைப் பார்த்துக் கொள்ளும் நேரம். குளித்துவிட்டு வரும்போதே, மாடத்தில் இருக்கும் குங்குமத்தை எடுத்து, கண்ணாடிப் பார்க்காமல் நெற்றியில் சரியாக வைத்துக் கொள்வாள். பேருக்குத்தான் கண்ணாடிப் பார்ப்பது. என் கல்யாண சீரிலும் கையகல கண்ணாடி ஒன்று இருந்தது.

ஆளுயர கண்ணாடி பொருத்தப்பட்ட பீரோ என்னுடன் வந்தபோது, திருட்டுத்தனத்தை மறைத்துக் கொண்ட மகிழ்ச்சிதான் இருந்தது. படுக்கையறையில் கட்டிலுக்கு எதிர்ப்பக்கத்தில் பீரோவை வைக்கச் சொன்னேன். பீரோவைத் திறக்கும்போதும், மூடும்போதும், அந்த அறைக்குள் நடமாடும்போதும் ஆளுயர கண்ணாடியில் தெரியும் என் முழு பிம்பத்தைப் பார்ப்பேன். ஒவ்வொரு முறையும் என் உருவத்தைப் பார்க்கும்போதும் நின்று ரசிக்கத் தோன்றும். நான் அழகா? அழகில்லையா?  கேள்வியே இல்லை. உடம்பின் முழுமை ரசிக்கத் தூண்டியது. கண்ணாடிப் பார்க்கும்போது, முகத்தைத் திருப்பிப் பார்த்துக்கொண்டு ஆடையை சரி செய்து கொள்ளும்போது ஒரு புத்துணர்ச்சி கிடைத்துவிடும். நள்ளிரவில் அறையின் குறைந்த வெளிச்சத்தில் கண்ணாவுடன் பார்த்த முதல் நிர்வாணம், கோயில் சிற்பம்போல் மனதில் இருக்கிறது. கதவைத் தாழ்ப்பாள் போட்டுவிட்டு ஆடை மாற்றிக் கொள்ளும் நேரங்களிலும் பதற்றமாகத்தான் உடம்பைப் பார்த்துக் கொள்ள முடிந்தது. தப்புக் காரியம் செய்யும் குற்றவுணர்ச்சி இருக்கும். கண்ணாடி முன்னால் நிற்கும் நேரம் பார்த்து,  யாராவது கதவைத் தட்டினால் பயத்தில் உயிர் போய்விடும். வியர்வையில் முதுகு நனையும். “வர்றேன்” என்று சொல்லும் குரலில் லேசான நடுக்கம் தெரியும். “என் உடம்புதானே, நான் பார்த்தால் என்ன தப்பு” என்று மனதில் தைரியம் வரப் பார்த்தாலும், ஒருமுறைகூட வந்ததே கிடையாது.

யாழினி வயிற்றில் இருக்கும்போதுதான் பெரும்பாடு. டாக்டரிடம் போக வேண்டும் என்றால், முதல் நாளில் இருந்தே எனக்கு மயக்கம் வரும். நானே முழுமையாகப் பார்த்துக் கொள்ளாத என் உடம்பை,  ஒரு பேப்பரைப் போல் புரட்டிப் பார்த்துவிடுவார்கள். டாக்டர் வரும்முன்,  அங்கிருக்கும் உதவியாள், “மேலே ஏறிப் படுங்க,  பாவாடையை லூஸ் பண்ணுங்க,  புடவையை மேலே ஏத்துங்க, காலை விரிச்சு வைங்க” என்று கட்டளைகளால் என்னை விரட்டும்போது அவமானமாக இருக்கும். கூச்சத்தில் உடம்பு நத்தைபோல் சுருங்கிக் கொள்ளும். “ஃபிரியா விட்டா தாம்மா, என்னால் பார்க்க முடியும்” என கிளவுஸ் அணிந்த கைகளால் டாக்டர் எனக்குள் துழாவும்போது, மூச்சு நின்றுவிடும். குழந்தை உண்டாகி, பிறக்கும் வரை,  என் உடம்பை எத்தனைப் பேர் பார்த்திருப்பார்கள்? பிரசவ வலியில் கத்தியபோது, செவிலிப் பெண்,  என் தொடையில் ஓங்கி குத்தினாள். “படுக்கும்போது தெரியலையா, இப்ப வாயப் பொளக்கற” என்றாள்.

குழந்தை பிறந்த அன்று கழிப்பறைக்குச் சென்றேன். சிறுநீர் போலவே ரத்தம் வெளியேறியது. அவ்வளவு ரத்தம் பார்த்தவுடன் தலை சுற்றியது. தடுமாறி விழப் போன என்னை,  மருத்துவமனை ஆயா ஒருவர் தாங்கிப் பிடித்தார். “இரு” என்று சொல்லிவிட்டுப் போனவர் சின்ன வாளியில் வெந்நீரைத் தூக்கி வந்தார். “காலை அகட்டி வச்சு நில்லு. புடவையைத் தூக்கு மேலே” என்று கரகரத்த குரலில் சொன்னார். அன்றுதான் உடம்பு கூச்சம் விட்டுப்போனது. கை பொறுக்கும் சூட்டில் இருந்த வெந்நீரை குவளையில் எடுத்து, அங்கு விசிறியடித்தார். வலியில் கடுத்துக் கொண்டிருந்த இடத்தில் பட்ட வெந்நீர், மருந்துபோல் இதமாக இருந்தது. தொடைகளை இன்னும் அகற்றினேன். வெந்நீர் ஊற்ற ஊற்ற வலி காணாமல் போனது. இரண்டாம் நபர் முன்னால் நிர்வாணமாக நிற்கிறோமே என்ற தயக்கம் எழவில்லை. ரத்தத்தில் மிதந்த என் உடம்பு மருத்துவமனை ஆயாவுக்கு அருவருப்புக் கொடுக்கவில்லை. வலி கண்ட இடத்திற்கு வைத்தியம் பார்க்கும் முதிர்ச்சியுடன் அவர் எனக்குப் பணிவிடை செய்துவிட்டுப் போனார். வாயில் வெற்றிலையைக் குதப்பிக்கொண்டு, வெளியில் உட்கார்ந்திருந்த அவரை மருத்துவமனையில் இருந்த மூன்று நாளும் பார்த்துக் கொண்டே இருந்தேன். ஒரு குழந்தை பெற்ற பிறகுதான், எனக்கு உடல் கூச்சம் போனது.

நீலா அத்தைக்கு கனத்த மார்புகள் தொங்கிக் கொண்டிருக்கும். ஒருநாள்கூட மாராப்பை இழுத்து மூடியதில்லை. சின்ன வயதில் அத்தையைப் பார்த்தாலே பிடிக்காது. எதுக்கு இப்படி திறந்துபோட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கிறது என்று கோபமாக வரும். போகிறவர்கள், வருகிறவர்கள்,  கீரைக்காரி,  கோலமாவுக்காரி,  தள்ளுவண்டி ஆள், வளையல் பாய், எண்ணெய் செட்டி, நீலா அத்தையிடம் எத்தனைப் பேர் பேச்சுக் கொடுத்தாலும்,  மாராப்பு, பூணூல்போல் இரண்டு மார்புகளுக்கு நடுவில்தான் கிடக்கும். புடவை எப்பொழுதும் முழங்காலுக்கு மேலேதான் ஏறி இருக்கும். “ஏன் அத்தை இப்படி உட்கார்றே” என்றால் போதும், “யார்கிட்டயும் இல்லாத அதிசயமா என்ன? பார்த்துட்டுப் போறானுங்க” என இடையில் இருக்கும் முந்தானையையும் ஒருமுறை தூக்கிக் காட்டுவாள். அதற்குமேல், பேச்சு வளர்ந்தால் அத்தைப் பேசுவதைக் காது கொடுத்து கேட்க முடியாது. கீழ்ப் புடவையையும் தூக்கிக் காட்டும். “நீ பொறந்த பொச்சுதானே” என்று நடுத் தெருவில் கத்திக் கூச்சல் போடுவாள். மருத்துவமனை ஆயா முன்னால், காலை அகட்டிக் கொண்டு நின்றபோதுதான், நீலா அத்தைக்கு எப்படி உடல் கூச்சம் போயிருக்கும் எனப் புரிந்தது.

என் பெயர் சொன்னால் நினைவுக்கு வருவது உடம்புதான். அந்த உடம்பின் வெளித் தோற்றத்தை முழுமையாகப் பார்க்கவே இருபத்து மூன்று வருஷம் ஆனது. குழந்தை பெற்ற பிறகுகூட,  இன்னும் உடம்பின் உள் சூட்சுமம் புரிபடவில்லை. உடம்பு என்ன செய்கிறது என்று உணர முடியவில்லை. பசித்தால் புரிகிறது. இடித்துக் கொண்டால் வலிக்கிறது. உடம்பைப் பற்றி வேறென்ன எனக்குத் தெரியும்?

உடலெங்கும் ஓடி நடுக்கமுண்டாக்கும் அலையை என்ன செய்வது? ஐம்பது வயதில் நிற்கும் எனக்கு, என் உடம்பைப் புரியவில்லையென்பது சோகமல்லவா?  உடலின் தசைகள் லேசாகச் சுருக்கம் விழுந்திருக்கின்றன. கண்களுக்குக் கீழே கருவளையம் கூடிவிட்டது. பார்க்கும் ஆண்கள் மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்க்கும் கவர்ச்சியை உடல் கடந்துவிட்டது.

பருவம் கடந்த காய்ப்பைப்போல், உடம்பு எதற்காக இப்படித் தத்தளிக்கிறது? டாக்டர்கள் எல்லாம் சொல்லும் ஒரே வார்த்தை மெனோபாஸ் பிராப்ளம். மெனோபாஸ் ஆரம்பிக்கும்போதும் பிராப்ளம். முடியும்போதும் பிராப்ளம்.

உடம்பின் கோளாறைச் சொல்ல உகந்த நபர் யார்? கண்ணாவா? டாக்டரா? அலுவலகத் தோழிகளா? ஆண் நண்பர்களா? அப்படி யாரும் தனக்கு இருக்கிறார்களா? பிள்ளைகளா?

மற்றவர்களிடம் சொல்லும்முன், எனக்கு நான் சொல்லிக்கொள்ள, என்னையே ஆராய்கிறேன்.

என் உடம்புக்கு என்ன? ஏன் இந்த தத்தளிப்பு? உள்ளிருந்து உருக்கும் நோய் என்ன?


நாள் முழுக்க வேலைகளில் இருந்தாலும், உடம்பின்மீதான கவனம் இடம் மாறவில்லை. உடம்புக்குள் என்ன நடக்கிறது என்பதை நானே கவனிக்கத் தொடங்கினேன். உடம்புக்கு என்ன என்று டாக்டர்கள் நம்மைத்தான் கேட்கிறார்கள். காய்ச்சல், தலைவலி, வயிற்றுவலி என்றால் மாத்திரை கொடுத்து, ஊசி போடுவார்கள். “என்ன செய்யுதுன்னு தெரியல, என்னமோ செய்யுது என்றால்”, மேலும் கீழும் பார்த்துவிட்டு, “என்ன செய்யுதுன்னு சொன்னாத்தானே தெரியும்” என்று கோபப்படுவார்கள். நம் வாயிலிருந்துதான் என்ன நோய் என்பதைக் கேட்டுத்தான் தெரிந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு முறையும் டாக்டர் முன்னால் நின்று என்ன செய்கிறது என்பதைச் சொல்லத் தெரியாமல் அசிங்கப்பட வேண்டியிருக்கிறது. கண்ணாவுக்கு மற்றவர்கள் முன்னால்தான் கோபம் வரும். “என்ன பண்ணுதுன்னு எப்படிப்பா தெரியாது?” என்று கண்ணை உருட்டுவான். இந்தமுறை யாரிடமும் சொல்லவில்லை. காலையில் இருந்து உடம்பை நானே என் கண்காணிப்பில் வைத்திருக்கிறேன்.

வெளித்தோற்றத்தில் தெரியும் உடம்பை உற்றுப் பார்ப்பது எளிது. கால் நகங்களைப் பார்க்கலாம். முகத்தைப் பார்க்கலாம். கழுத்தைப் பார்க்கலாம். பார்க்க முடியாத முதுகுப் பக்கத்தைக்கூட முன்பக்கம் ஒரு கண்ணாடி வைத்துக்கொண்டு, அப்படி இப்படித் திரும்பி, அரைகுறையாகப் பார்த்துவிடலாம். உடலின் உள்ளே நடப்பதை எப்படிக் கண்காணிப்பது? ஸ்கேன் மெஷின்போல், மனம் வேலை செய்யுமா?

விடாப்பிடியாகக் கண்காணிப்பில் ஈடுபட்டேன். நரம்புத் துடிப்பில் இருந்து இதயத் துடிப்பு வரை நிதானமாக கவனித்தேன். குறிப்பிட்ட எந்த உறுப்பிலும் வலி இல்லை. உணர்ச்சிப் பந்து மட்டும் வயிற்றுக்குக் கீழே உருள்வதைப்போல் இருந்தது. வீட்டில் பிரச்சனை என்றால், வயிற்றுக்குள் பய உருண்டை சுற்றும். சின்ன வயதில், சைக்கிள் கற்றுக்கொண்ட போது, பின்னால் ஓடி வந்த சுந்தரி தடுமாறி கீழே விழுந்துவிட்டாள். அவளுக்குத் தோள்பட்டை எலும்பு உடைந்துவிட்டது. வலியில் அவள் போட்ட கூச்சலில் தெருவே கூடிவிட்டது. சைக்கிளைப் போட்டுவிட்டு பயத்தில், சண்முகம் பெரியப்பா வைக்கோல் போருக்குப் பின்னால் ஒளிந்து கொண்டேன். அம்மா அடிக்குப் பயம் இருந்தது. சுந்தரியின் அம்மா, அப்பா அடிப்பார்களோ என்ற பயத்தில், நெஞ்சுக் குழிக்கும் வயிற்றுக்கும் இடையில் ஏதோ உருள்வது போலவே இருந்தது. மூச்சுவிடச் சிரமமாக இருந்தது. வீட்டில் பிரச்சனை என்றாலே பய உருண்டை உருளத் தொடங்கிவிடும். ஒரு விநாடியில் எப்படி வயிற்றுக்குள் வந்துவிடுகிறது?  வளர்ந்த பிறகும் அந்த பய உருண்டை சுற்றுவது நிற்கவில்லை.

இப்பொழுது உருள்வது பய உருண்டையில்லை. பய உருண்டை வயிற்றுக்கும் மார்புக்கும் இடையில் சுற்றும். இது, வயிற்றுக்குக் கீழே சுற்றுகிறது. வயிற்றுக் கோளாறாக இருக்குமா? இருக்காதே? இரண்டு நிமிடங்களுக்குமேல், கழிப்பறையில் எப்பொழுதுமே இருப்பதில்லை. உடம்பைப் பராமரிப்பதில்லை என்றாலும், அது தொந்தரவு செய்ததில்லை. மாதவிலக்கு நாள்களில்கூட வயிற்று வலி வராது. அடிவயிறு மட்டும் லேசாக பிசைவதுபோல் இருக்கும். அவ்வளவுதான். வயிற்றுக்கும்கீழே அவஸ்தையின் கதிர்கள் நீண்டன. கவனிப்பைக் கூர்மையாக்கி, இன்னும் பின்தொடர்ந்ததில் அவஸ்தையின் முடிச்சு, கீழே இறங்கியது. தேடிச் சென்ற இடத்தைப் பளிச்சென்று கண்டடைந்தேன். இதயத்தில் இருந்து உடலெங்கும் ரத்தம் பரவுவதைப்போல், இந்த முடிச்சில் இருந்தே உணர்வுப் பந்து பரவிக் கொண்டிருக்கிறது.

ஊமுள்ளாக உடம்பை உறுத்திக் கொண்டிருக்கும் உணர்வுப் பந்து இருக்குமிடத்தைப் புரிந்து கொண்டவுடன் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. சிறுநீரும், மலமும் வெளியேற்ற முடியாமல் அடக்கி வைக்கும் அவஸ்தையாக இல்லை. திறப்பதற்காகக் காத்திருக்கும் ஊற்றின் தளதளப்பாக இருந்தது. வயிற்றுப் பசியைப் போல் உடற்பசியும் உள்ளிருந்து உணற்றுகிறதா? ஒன்றாக என்றிருந்தோம்? நாள் கணக்கைப் பின்னுக்குத் தள்ளிக்கொண்டே போனால், பத்து நாளுக்கு முன்னால் நின்றது. பிள்ளைகள் வளர்ந்த பிறகு, மாதத்திற்கொரு முறையோ,  இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையோதான் வாய்ப்புக் கிடைக்கிறது. ஐந்து நிமிடங்களுக்குள் எல்லாம் முடித்து கண்ணா எழுந்துபோய் விடுவான். உடம்புத் தயாராவதற்குள் முடிந்து போயிருக்கும். கண்ணாவுக்கு நன்றாகத் தூக்கம் வரும். எனக்குத் தூக்கம் போகும். உடம்பின் தடுமாற்றத்தை மறைக்க, வேறு வேலைகள் செய்வேன். சமநிலைக்கு வர அரைமணி நேரமாகிவிடும். இல்லாமல் இருந்தாலே பரவாயில்லை. அவசரத்திற்குச் சோறள்ளி விழுங்கிவிட்டுப் போவது எதற்கு? மறுக்கவும் முடியாது. முகம் சுண்டிப் போகும். நாளெல்லாம் சுள்ளென்று தடித்த வார்த்தைகள்  வந்துவிழும். ஐந்து நிமிடங்கள் பொறுத்துக் கொள்வதும் மனைவியாய் இருப்பதின் கடமையாகிவிட்டது.

கல்யாணமான புதிதில் வேறு மாதிரி. நான்கு சுவர்களுக்குள் கிடைத்த சுதந்திரம், ஒருவர் உடலை, ஒருவர் அறிந்து கொள்ளும் வேட்கையைக் கொடுத்தது. நேரம், காலமெல்லாம் கிடையாது. எண்ணிக்கைக் கிடையாது. பேசிக் கொண்டிருக்கும்போது விநாடியில் கண்ணா மாறிவிடுவான். ஒருவரை ஒருவர் ஈர்ப்பதற்கான யுத்தம். முதன்முறையாகச் சேரும் ரசவாதத்தை ருசிப்பதற்கான யுத்தம். இருவருமே தயாராக இருப்போம். ஈர்ப்பதற்கான வழியாக உடல் இருந்தது. உடல் கவர்ச்சியை நாங்கள் கடப்பதற்குள், யாழினி பிறந்துவிட்டாள். குழந்தை பிறந்து மூன்றாவது நாள் வீட்டுக்கு வந்தவுடன், கண்ணா, “இப்பல்லாம் முடியாதா பாமா?” என்று கேட்டான். பரிதாபமாக இருந்ததால், ஒரு வாரம் கழித்து, கண்ணாவுடன் தூங்கினேன். ஆதி பிறந்தவுடன் பழைய ஈர்ப்பு இல்லை. அவசியம் வேண்டும் என்ற நேரத்தில் மட்டுமே கண்ணா வருவான். வாரத்திற்கொரு முறை, மாதத்திற்கு இரண்டு முறை என்ற கணக்கெல்லாம் கிடையாது. மறந்துவிடாமல் இருக்கப் பழகுவதாயிற்று.

சமையல் செய்து கொடுப்பது, துணி துவைத்துக் கொடுப்பது, விசேச வீடுகளுக்கு அலங்காரம் செய்து கொண்டு கண்ணாவின் பெருமைக்காகப் போவதுபோல், உடம்பைப் பகிர்ந்து கொள்வதும் ஒரு கடமையாக இருந்தது. கண்ணாவாக கேட்காத சமயங்களில் எனக்குத் தோன்றியதே இல்லை. நானாக விரும்பிச் சென்றதில்லை. எல்லாம் கேட்டு வாங்கலாம். கணவனிடம் காமத்தைக் கேட்டு வாங்கினால் அசிங்கம் என்று தோன்றும். ஒருமுறைகூட நானாகச் சென்றதில்லை. இதில் பெருமிதம் இருக்கிறதா என யோசிப்பேன். கண்ணாவுக்கு மன உளைச்சல் இல்லாமல் இருக்கும்.

இருவரும் சேர்ந்திருக்கும் நேரங்களில் ஒருமுறைகூட கண்ணா நான் எப்படி இருக்கிறேன் எனப் பார்க்க மாட்டான். முடிந்தால் எழுந்து போய்விடுவான். நிறைவடைந்தேனா, கரையேற முடியாமல் தத்தளிக்கிறேனா என்ற கவலையெல்லாம் அவனுக்கு இருக்காது. தண்ணீர்க் குடித்துவிட்டு, கைக்குக் கிடைக்கும் நொறுக்குத் தீனியை எடுத்து வைத்துக்கொண்டு தின்பான். பழங்கள் இருந்தால், குரங்குகள் பிய்த்துத் தின்பதைப்போல் தின்பான். கட்டாயம் அவனுக்குத் தின்பதற்கு ஏதேனும் வேண்டும். எதுவும் இல்லையென்றால், சமையலறை டப்பாக்களைத் திறந்து ஆராய்வான். முந்திரி, உலர்ந்த திராட்சை, பொட்டுக்கடலை, எதையாவது தின்றாக வேண்டுமவனுக்கு. உடம்பில் குறைந்த சக்தியை உடனே ஏற்றிக் கொள்வதுபோல் இருக்கும் அவனது நடவடிக்கை. கையில் கிடைத்ததைத் தின்றுவிட்டு, அடுத்த ஒரு மணி நேரத்திற்கு அசந்து தூங்கிவிடுவான்.

ஆர்வம் இல்லாமல் போனதற்குக் காரணம், கரையேற முடியாமல் அரைகுறையாக விடப்படுவதுதான். கரியாக்க, விறகைப் பற்ற வைத்துவிட்டு, பாதி விறகு எரிந்திருக்கும்போதே, தண்ணீர்விட்டு அணைத்துவிட்டால் எப்படி இருக்கும்? பாதி விறகு, பாதி கரி. ஓரத்தில் ஒதுக்கி வைப்பதுபோல்தான் இந்த உடம்பும். தீய்ந்த வாடையை ஒருமுறைகூட வெளிக்காட்டியது இல்லை.

திடீரென்று இந்த மோகமுள் உருத்திரண்டு உருள்வது ஏன்? ஒரு வருடம் முன்பாக, மகப்பேறு மருத்துவரிடம் சென்று வந்தேன். மாதாந்திர தொந்தரவு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே உடல் கொதிக்கிறது. கை கால் நடுங்குகிறது என்றேன். “மாத விலக்கு நிற்கும் நேரத்தில் உடலில் பல மாற்றங்கள் நடக்கும். மாத்திரை மருந்து சாப்பிடுவதைவிட, கொஞ்சம் சமாளித்துக்கொண்டு கடந்துவிட்டால் நல்லது. அதிக ரத்தப்போக்கு, வேறு உடல் பிரச்சனைகள் இருந்தால் மாத்திரைப் போடலாம். எமோஷனல் இம்பேலன்ஸ்தான் உங்கள் பிரச்சனை. நீங்கள் தைரியமாகக் கையாண்டால் சரியாகிவிடும். வீட்டில் இருப்பவர்களுக்கும் சொல்லுங்கள்” என்றார்.

கண்ணாவும் உடன் வந்தான். உள்ளே வரவில்லை. வண்டியில் வீட்டுக்கு வரும்போது டாக்டர் சொன்னதைச் சொன்னவுடன், “காசு பிடுங்க எல்லா டாக்டரும் வழி தெரிஞ்சு வச்சிருக்கானுங்க. மெனோபாஸ் டென்ஷன், ஒபிசிட்டி, மைண்ட் ரிலாக்ஸ் இதுக்கெல்லாம் அப்போ என்ன வைத்தியம் பாத்தாங்க? யோகா, எக்சஸைஸ்னு இப்போ, உடம்பை வச்சு பொழைக்கிறாங்க. உடம்பு ஒண்ணுக்குத்தானே நாம பயப்படுவோம்?” என உலக அரசியல் பேசினான். படபடப்பு அதிகமானது எனக்கு. மாத விலக்கு வருவதற்கு முன்பாக ஒரு வாரம், பின்னால் ஒரு வாரம், மாத விலக்கு நேரம் என மாதத்தில் முக்கால் பங்கு படபடப்பிலேயே கழிகிறது. “நீயா ஏன் பெருசு பண்ணிக்கிற?” என கண்ணா கேட்கப் போகும் கேள்வியின் எரிச்சலில் நான் மீண்டும் அந்த மகப்பேறு மருத்துவரைப் பார்க்கச் செல்லவில்லை. ‘எப்போ நின்றுத் தொலையுமோ?’ என்ற எதிர்பார்ப்பில் இருக்கும்போது, புதிதாக இந்த ஊமுள் ஒட்டிக்கொண்டிருக்கிறது.

இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிட்டேன். அவ்வளவுதானே? தூக்கி எறிந்துவிட்டுப் போக வேண்டியதுதான். சோற்று உலை கொதிப்பதுபோல் இரண்டு நிமிடம் கொதித்துவிட்டுத் தானாக அடங்கிவிடப் போகிறது.


நினைத்ததுபோல், தானாக அடங்கவில்லை. பாறையிடுக்கில் இருந்து கண்ணுக்குத் தெரியாமல் சுரந்து கொண்டிருக்கும் சுனை நீரைப்போல், உடம்பிற்குள் ஊற்று பரவிக் கொண்டிருந்தது. குளிர்ச்சியும் வெம்மையும் சரிவிகிதத்தில் கலந்த மெல்லுணர்வு மனத்தையும் மென்மையாக்கியது. உடம்பை இன்னும் கூர்ந்து பார்க்கச் செய்தது. ஆளுயரக் கண்ணாடியில் நிதானமாக முகம் பார்த்து வருடங்கள் ஓடிவிட்டன. யாழினியும் ஆதியும் அவர்கள் உயரத்திற்கு கை வைத்துத் தேய்த்து, கிறுக்கி, பாதி வரை கண்ணாடி ரசம் போயிருந்தது. புடவை கட்டும்போது, முகத்தை முன்னுக்குச் சாய்த்து, பொட்டு நேராக இருக்கிறதா என சரிபார்த்துக் கொள்வதோடு சரி.

இன்று கண்ணாடி பார்க்கத் தோன்றியது. ரசம் குறைந்த கண்ணாடி போலவே முகத்திலும் பொலிவு குறைந்திருந்தது. முன்நெற்றியில் நிறையவே நரை தெரிந்தது. முடியைச் சீராக்க உயர்த்திய வலது கையின் தசைகள் சுருங்கி, நரம்புப் புடைத்திருந்தது. பாத்திரங்கள் தேய்க்கும் சோப்பும், துணி சோப்பும் கைகளின் பொலிவை குறைத்திருந்தன. சமையலறைக்கு வரும் முன் தான் பெண்களின் கைகள் பளபளப்பாக இருக்கும்.

தினம் சமைக்கத் தொடங்கிய ஒரு வருடத்திற்குள் கைகள் மட்டும், நிறம் மங்கித் தனியாகத் தெரியும். ரேவதியும், உஷாவும் நன்றாக அலங்காரம் செய்து கொண்டுதான் வருவார்கள். முகத்தைப் பளிச்சென்று வைத்திருப்பார்கள். நேர்த்தியான புடவை, தலைக்கு டை என்று வயதை மறைக்கும் எல்லா உத்திகளையும் கையாண்டார்கள். நாற்காலியில் உட்கார்ந்து, கம்ப்யூட்டரை தட்டத் தொடங்கும் கைகள் கருத்து, நரம்புகள் மேலே துருத்திக்கொண்டு, தசைகள் சுருங்கிப்போய் இருக்கும். அவர்கள் என்ன செய்வார்கள்? வீட்டு வேலையின் தன்மை அப்படி. கால்களைப் பற்றிச் சொல்லவே வேண்டும். கல் வைத்துப் பளபளப்பாக இருக்கும் மிதியடிகள், வெடித்துப்போன கால்களுக்குப் பொருந்தாமல் பல்லிளிக்கும். அலுவலகத்தில் மற்றவர்கள் கிண்டல் செய்வார்கள். நான் அவர்களுக்கு ஆதரவாகவே இருப்பேன். கை கறுத்துப் போவதற்கும், கால் வெடிப்பு விழுவதற்கும் அவர்கள் காரணமல்ல என்பேன். தங்களை அழகாக, புத்துணர்ச்சியோடு வைத்துக் கொள்வதில் என்ன தவறு என்று பரிந்து பேசுவேன். நானும் நன்றாக அலங்காரம் செய்துகொள்ள வேண்டும் என்று இப்பொழுது விருப்பமாக இருந்தது. சுருக்கம் விழுந்த கைகளை எப்படியாவது சரிசெய்துவிட வேண்டும்.

மனசுக்குள் ஒரு ரோஜா தோட்டம் மலர்ந்தது. நாட்டு ரோஜாவில் இருந்து கசியும் மென்மையான வாசம் மனசுக்குள் சுரந்தது. எனக்கே நான் வித்தியாசமாகத் தெரிந்தேன். நடையில் ஓர் அமைதி வந்தது. எரிந்து விழாமல் பிள்ளைகளிடம் பேசினேன். கண்ணாவுக்குப் போன் செய்து, “எத்தனை மணிக்கு வீட்டுக்கு வருகிறாய்?” என்று கேட்டேன். எட்டு மணிக்கு வீட்டுக்குள் இருப்பான் என்று தெரிந்திருந்தாலும் அவனிடம் பேச வேண்டும் எனப் பேசினேன்.

கண்ணா உள்ளே நுழைந்தவுடன், “குளிக்கிறியா?” என அவன் முன்னால் நின்றேன். அலுவலகம் முடித்து வீடு திரும்பியவுடன் நானும் குளித்துவிடுவேன். குளித்ததுடன் இன்று மீண்டும் தலைவாரி, லேசாகப் பவுடர் அடித்து, கண்ணுக்கு மை வைத்திருந்தேன். கண்ணா கண்டுபிடித்துக் கேட்பான் என்று அவன் முன்னால் நின்றேன். வண்டி சாவியை ஹாங்கரில் மாட்டிவிட்டு, செல்போனில் இருந்த மிஸ்ட் காலுக்கு அழைத்துப் பேசியபடியே உள்ளே போய்விட்டான். யாழினியும், ஆதியும் “என்னம்மா இன்னைக்கு ஃபிரெஷா இருக்கே?” என்றார்கள். “இல்லையே, எப்பவும் போலத்தானே” என்று சொன்னாலும் அவர்கள் கண்டுபிடித்துக் கேட்டது பிடித்திருந்தது.

கண்ணா எப்பவும் இப்படித்தான். அவன் வேலைகளில் மட்டும்தான் கவனமாக இருப்பான். அவனிடம் இருந்துதான் நான் பழைய புத்தகங்கள் வாங்குவேன். அவன் ஒன்பதாவது. நான் எட்டாவது. அவனுக்கு எழுத்து வேலை இருந்தது என்றால் நேராக வீட்டுக்கு வருவான். “அத்த, பாமாவ எழுதி வைக்கச் சொல்லுங்க” என்பான். எனக்குக் கணக்கில் சந்தேகம் என்று நான் போனால், “எனக்கே நிறையப் படிக்கணும்” என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்வான். அவனைத்தான் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று மாமா கேட்டபோது, நான் உடனே தலையாட்டினேன். “நீ தான் அவனை இழுத்துப் பறிச்சுக்குனு போகணும், தலையாட்டாம யோசிச்சிக்கோ” என்று அம்மா சொன்னாள்.

இரவு தூங்கப் போகும் வரை கண்ணா என்னைப் பார்க்கவில்லை. சாப்பிட்டோம். டி.வி.பார்த்தோம். பேருக்கு ஏதோ பேசிக் கொண்டோம். கண்ணாவுக்கு என்னை நிமிர்ந்து பார்க்கும் சந்தர்ப்பமே வரவில்லை. தினம் இப்படித்தான் இருக்கிறோமா? இன்று நான் வித்தியாசமாக இருப்பதால் எனக்குத் தோன்றுகிறதா? கண்ணாவுக்கும் என்றாவது மனதிற்குள் ரோஜா தோட்டம் பூத்திருக்குமா? அவன் எதிர்பார்த்திருந்த நாளில் நான் நிமிர்ந்து பார்த்திருக்காமல் இருந்திருப்பேனா? சின்னக் கவலை நுழையப் பார்த்தது. “ச்சே, ச்சே, பாமா, இங்க வந்து பாருடி” எனச் சத்தம் போட்டுச் சொல்லியிருப்பான். அன்பாக இருக்கின்ற நேரத்தில் மட்டும் கண்ணாவின் வாயிலிருந்து ‘டி’ வரும்.

யாழினியும் ஆதியும் ஒருவர்மேல் ஒருவர் கால்போட்டுத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். கண்ணா படுக்கையில் உட்கார்வதுதான் தெரியும். எப்பொழுது படுப்பான், எப்படித் தூங்குவான் என்று சொல்ல முடியாது. இரண்டு நிமிடத்திற்குள் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பான். கண்ணாவுடன் பேசிக் கொண்டிருக்க வேண்டும், அவன் கையைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டும் என்று விருப்பமாக இருந்தது. மீசைக்குக் கீழே அச்சுபோல் அவன் உதடுகள் இருந்தன. முத்தமிட்டு எத்தனை நாளாச்சு? நாளா? மாதமாகியிருக்கும். மாதமா? வருடங்கள் ஆகியிருக்கும். முத்தமே கொடுத்துக் கொள்ளாமல்தான் நாங்கள் இருவரும் ஒன்று சேர்ந்திருக்கிறோமா?

காலேஜில் இருந்து திரும்பி வந்தவுடன் சைக்கிளைத் தோட்டத்திற்குப் பின்னால் தான் நிறுத்த வேண்டும். கண்ணா எப்படித்தான் அங்கு நின்றிருப்பானோ? சைக்கிளைப் பூட்டிவிட்டுத் திரும்பியவுடன் பின்னலைப் பிடித்து இழுப்பான். சுதாரிக்கும் முன்னால், உதட்டைக் கவ்விக் கொள்வான். கை, கால்களை உதறி, வேகமாகத் தள்ளப்பார்த்தாலும்,  உதட்டை விட மாட்டான். மூச்சுத் திணற முத்தம் கொடுத்த பிறகுதான் விடுவான். காலடிச் சத்தம் கேட்கும் நேரத்தில் மனசே இல்லாமல் பாதியில் விட்டு, தோட்டத்து மரங்களுக்குள் மறைந்து விடுவான். எங்கள் இரண்டு வீட்டிலும், அவன் எனக்கு முத்தம் கொடுக்காத மறைவிடங்களே இல்லை.

ஒருமுறை எல்லாரும் கோயிலுக்குப் போயிருந்தார்கள். நான் மட்டும் வீட்டில் இருந்தேன். பீரியட் டைம். நல்ல மழை. வீட்டில் யாரும் இல்லை. எப்படியோ வந்துவிட்டான். கையைப் பிடித்து இழுத்து வந்து, நடுவாசலில் நிறுத்தினான். மழைநீர் முகத்தில் வழிய வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்த என்னை அப்படியே அணைத்துக் கொண்டான். மழைநீருடன் சேர்த்து முத்தமிட்டான். எவ்வளவு நேரம் முத்தம் கொடுத்துக் கொண்டோம் என்று நினைவில் இல்லை. அன்று இரவே காய்ச்சல் வரும் அளவிற்கு இருவரும் நனைந்திருந்தோம்.

ஒரு நிமிடம், இரண்டு நிமிடம் என்று நேரம் வைத்துக்கொண்டு முத்தம் கொடுக்கும் கண்ணா,  என்றிலிருந்து முத்தம் கொடுக்காமல் இருக்கிறான்? எனக்கும் மறந்து போச்சே? இத்தனை நாளாக எனக்கும் ஏன் தோன்றவில்லை?

முத்தம் நினைவுக்கு வந்தவுடன் உள்ளுக்குள் உருண்டு கொண்டிருந்த உணர்வுப் பந்து வேகமாக உருண்டது. பிள்ளைப் பூச்சி உடம்புக்குள் ஓடியது. முழுமையாகக் கனன்ற அனலின் உருக்கம் உள்ளே பரவியது. அனலில் இருந்து சந்தன வாசம் கமழ்ந்தது. உடம்பு ஏற்றுக்கொண்ட ரசவாதத்தை மாற்றுவது எப்படி? விரல் நுனிகள் குளிர்ந்தன. உள்ளங்கால்களில் சூடு பரவியது. முலைகள் கனத்தன. தொடைகள் இறுக்கம் தளர்ந்தன. காமத்திற்காகத் தயாராகி நிற்கும் உடலின் ரூபம் கண்ணுக்குள் திரண்டு நின்றது. ஒருநாளும் தானாய் எழுந்த காமத்தை உணர்ந்ததே இல்லை. நூறு முறையில் ஒருமுறை, உடம்பு நெகிழ்ந்து தளர்ந்திருக்கும்.

கடவுளின் முன்னால் ஒப்புக்கொடுத்து, மனமுருகி நிற்பதைப்போல் நின்றிருந்தேன். அணைக்கப்பட வேண்டிய நெருப்பாக என்னைத் தீய்க்கவில்லை. தப்பித்துப் போகச் சொல்லும் கடுங்குளிராக விரட்டவில்லை. இருகை விரித்து, உள்வாங்கி,  கரைந்து போக அழைப்பு விடுக்கும் அருவிபோல் என்னை அழைத்தது. திறக்கும் காமத்தின் கதவில் நுழைய என்னுடன் கண்ணா வேண்டுமே? பறக்கும் நிலையில் இருந்த உடலுடன் கண்ணாவைத் திரும்பிப் பார்த்தேன். முழங்கால்களுக்குள் கைகளைக் கோர்த்தபடி சுருண்டு தூங்கும் அவனுக்குள் காற்றுகூட நுழைய முடியாது.

உடலின் விஸ்வரூப தரிசனம் மீண்டும் கிடைக்குமோ?  சிறு முத்தம் போதும். உடலின் ரகசியக் கதவுகளைத் திறந்து பார்க்க. கண்ணா விழித்துவிட்டால், இத்தனை நாள் என்னிடம் தேடி கண்ணா தோற்றுவிட்ட சுரங்கத்தின் சாவி கிடைக்கும். “எழுந்திரு கண்ணா” என்று மனசுக்குள் அழுத்திச் சொன்னேன். அழுத்திச் சொன்னாலும் மென்மையாகவே ஒலித்தன வார்த்தைகள்.

“ நானே ஏன் கண்ணாவை எழுப்பக்கூடாது?” சத்தமில்லாமல் அவனுக்கு ஒரு முத்தம் தந்தால் எப்படி இருக்கும்? பயந்து கத்துவானோ? கையைத் தட்டி விடுவானோ? “ச்சூ” என்று சொல்லிவிட்டால்? கட்டிலில் கண்ணாவுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தேன். மின்விசிறியின் இலைகள், அவன் முகத்தில் சுற்றி சுற்றி வந்தன. நிழலும் வெளிச்சமும் மாறி மாறி பட்டதில் வித்தியாசமாக இருந்தது முகம். இன்னும் நெருங்கி உட்கார்ந்தேன். தலையில் கையை வைத்து, முடியைக் கோதிவிட்டேன். விரல்கள் தயக்கத்துடன்தான் கோதின. நெற்றியில் கை வைத்தேன். கண்ணாவிடம் எந்த அசைவும் இல்லை. விரல்கள் முடிக்குள் அலைந்து கொண்டிருந்தன.

நீலநிற விளக்கு, அறையை, இரவு வெளிச்சத்தில் மங்கலாக ஒளிரும் வெட்ட வெளியாகக் காண்பித்தது. காற்றில் ஆடிக் கொண்டிருக்கும் மாத நாட்காட்டி மட்டும் மேலும் கீழும் ஆடிக் கொண்டிருந்தது. சுழலும் மின் விசிறி, அறை முழுக்கக் காற்றை வாரி வீசினாலும், அறை அசைவின்றி இருந்தது.

கண்ணா எழுந்து கேட்டால் என்ன சொல்வது? “நீ எனக்குத் தேவை என்றா?” கண்ணா என்றைக்காவது என்னிடம் இறைஞ்சுதலோடு நின்றதுண்டா? அவனுக்கு உரிமையானதை எடுத்துக்கொள்ளும் தெளிவு அவன் நடவடிக்கைகளில் இருக்கும். அவன் நினைத்தால் நடத்திக் கொள்வான். பழகிய தாம்பத்தியம், எனக்குப் பிடித்த என்னுடைய கண்ணா. நான் ஏன் தயங்க வேண்டும்? எனக்கு நீ வேண்டும் என்று சொன்னால், என்னைக் கேவலமாக நினைப்பானோ? உடம்புத் தயாராக இருக்கிறது என்று சொல்ல என்ன பயம்?

கண்ணாவைப்போல் நானும் ஏன், எனக்குத் தேவையானதை எடுத்துக் கொள்ள முடியவில்லை. மறந்துபோன முத்தம் கொடுத்து, அவனை எழுப்பி விடுவோமா? “என்னாச்சு” என்பானோ? கண்ணாவின் முதுகில் சாய்ந்து படுத்தேன். என் சுமை அவன் முதுகில் ஏறியவுடன் லேசாக அசைந்தான். உடம்பு குப்பென்று விரைத்து தயாரானது. கொசுக்கடிப்பதாக நினைத்தானோ? பிள்ளைகள் கால் தூக்கிப் போடுவதாக நினைத்தானோ? கொஞ்சம் முன்நகர்ந்து காலில் கிடந்தப் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டான். அடுத்த நொடி, அவன் மூச்சு விடும் சத்தம் சீராகக் கேட்டது.

சாய்ந்திருந்த நான் சுதாரித்துக்கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தேன். மணி பனிரெண்டை கடந்து, அரை மணியாகி இருந்தது. கண்களில் எரிச்சல் இல்லை. உடம்பில் சோர்வில்லை. அந்த நள்ளிரவு எனக்கொரு புதையலைக் கண்டுபிடித்துக் கொடுக்கக் காத்திருப்பதைப்போல், என்னைத் தயார் செய்திருந்தது. எடையில்லாத உடம்பு. பறக்க வசதியாகச் செய்யப்பட்டதுபோல் இருந்தது.

மெனோபாஸ் நேரத்தில், விதவிதமான உணர்வெழுச்சிகள் வரும் என்று டாக்டர் சொன்னது இதைத்தானோ? காமம் அதிகமாகும், உடலை ஆக்கிரமிக்கும் என்று சொல்லவில்லையே? கண்ணாவிடம் பேசியிருக்கலாமே? அவனுக்கும் சொல்லியிருந்தால், நான் கேட்காமலேயே கொடுத்திருப்பானோ? காக்காய் கடி கடிக்கும் அவன்,  மதகுடைத்துப் பாயக் காத்திருக்கும் பெரு வெள்ளம்போல் இருக்கும் இந்த உடம்பை அறிவானா?

விரும்பியேற்றுக் கொண்ட கணவனிடம் தேடிப் போவதில் என்ன தவறு? கண்ணாவின் குணம் இதுதான் என்று சொல்ல முடியாது. சுதந்திரம் கொடுப்பான். கொடுக்கிறானே என எடுத்துக் கொண்டால் பிடுங்கிக் கொள்வான். அவன் விரும்பி உடன் இருக்கும் நேரங்களில், எனக்கும் உடம்புத் தயாராகிவிட்டால், நெளிந்து வளைந்துவிடக் கூடாது. இறுக்கிப் பிடித்துக் கொள்வான். முடிந்தவுடன் எழுந்து போகிறவனை கையைப் பிடித்து இழுத்தால், தட்டிவிட்டுப் போய்விடுவான். அவன் விருப்பம் மட்டுமே எனக்குக் காமம். என் உடம்பிற்கென்று தனியாகக் காமம் கிடையாது. நிறைந்த நீர் நிலைபோல் உடம்பு இரவு முழுக்கத் தளும்பிக் கொண்டிருந்தது.

தவிப்பின் வலி புரியாத இரவு, இரண்டு மணி, மூன்று மணியாகக் கடந்து கொண்டிருந்தது. வாசனை மலரைப்போல் மணம் பரப்பிய உடம்பின் மலர்ச்சியை நான் முழுமையாகத் தரிசித்தேன். கண்ணாவை மறந்து போனேன். காமத்தில் திரண்டு நிற்கும் உடம்பு இயற்கையின் பேரதிசயம். படம் விரித்தாடும் நாகத்தைப்போல், உடம்பு விரும்பி காமத்திற்குத் தயாராகி நின்ற அதிசயத்தை நான் இன்றிரவு தரிசித்தேன்.


பொழுது விடிந்தது.

அருள் வந்த உடம்பாகத் தளர்ந்து விடவில்லை. அருளாசி பெற்ற உடம்பாக, தெளிச்சியாக இருந்தது. உடம்பு மிக முக்கியமாகப் பட்டது. நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற விருப்பம் மிகுந்தது. இந்த உடம்பிற்கென்று தான் ஒன்றும் செய்யவில்லையே. பசிக்கிற வயிறுக்குச் சோறு. மரியாதைக்கு ஆடை. எந்த பாகமாவது பழுதடைந்தால் மருத்துவம்.

உயிருக்கு உருவம் கொடுத்தாலும், உடலுக்குத்தானே உணர்வுகள். மனம் துயரப்படுகிறது. கண்கள்தானே கண்ணீராய் வெளிப்படுத்துகிறது? நிமிடத்திற்கொரு அவதாரம் எடுக்கும் மனத்தின் அவஸ்தைகளை  உடல் தாங்குகிறது. மூளை இடும் கட்டளைகளை நாள் முழுக்கக் கேட்கிறது. நடக்கிறது. உட்காருகிறது. குனிகிறது. சிரிக்கிறது. பசியாறுகிறது. கழிவுகளை வெளியேற்றுகிறது. சோர்வு நீங்க உறங்குகிறது. முடுக்கிய கனப் பொருத்தமான இயந்திரம். மனம், மூளை எனும் இரண்டு ராட்சதர்களின் வேலையாளாக அல்லாடும் உடம்பு தனக்கென எதையாவது கேட்கிறதா? சிரிப்பு உதட்டுடன் நின்று போகிறது. அழுகை கண்களுடன் முடிந்து போகிறது. வெளித்தோற்றத்தில் பிறரை கவனிக்கச் செய்கிறது.

முழு உடம்பும் பூ போல் மலர்ந்து நின்று மகிழ்ச்சி கொள்ள காமம்தான் உடலுக்குத் தேவை. கருவறையில் அலங்காரப்பூஷிதையாக இருக்கும் குழல்வாய் மொழியின் ரூபம்போல், காமம் பூரணத்துவமாக நேற்று என்னுள் வெளிப்பட்டது. கருவறையின் இருளும், நெய் விளக்கின் மணமும், திருநீற்றின் வாசனையும், அபிஷேகப் பொருட்களின் கலவையான நறுமணமும், குழல்வாய் மொழியின் இதழ்க்கடையில் ஒளிரும் புன்னகையும் என்னை மறக்கச் செய்யும். சில கணங்கள் தடுமாறுவேன். எங்கிருக்கிறோம் எனத் தெரியாத அநாதியான ஒரு காலத்திற்குள் நுழைவேன். காமத்தின் கதவும் அவ்விதமே திறந்திருக்கிறது.

சூடிக் கொடுத்த சுடர்க் கொடியான ஆண்டாள், அரங்கனுடன் தன் இளமைப் பொங்கும் உடலுடன் அடைக்கலம் புகுந்தாளே? காமத்தின் சுவை நாக்குகள் அவளைத் தீண்டி, அரங்கனிடம் உடம்புடன் அழைத்துச் சென்றதோ? கடவுளைத் திருமணம் செய்துகொண்டால், தன் தேவைக்கு அவனை அழைக்க வேண்டாமோ? எல்லாம் அறிந்த கடவுள் தன் சகியின் காமத்தையும் அறிந்து ஆவண செய்வானோ? கண்ணாவைப்போல், அரங்கன் பாதியில் எழுந்துபோக மாட்டான். அரைகுறையாக முடித்துக்கொள்ள மாட்டான். என்னுடைய நிறைவைப் பற்றிக் கேட்பான்.

ஆண்டாள் அரங்கனிடம் கண்டது எல்லையற்ற காமத்தைத்தானோ? அவள் சூடிக் கொடுத்த பூமாலைகள் மூலம், தன் உடல் வாசனையை அவனுக்கு அனுப்பி வைத்தாளோ? பூமாலைப் போலவே அவள் உடலையும் அவன் முழுமையாகச் சூடிக் கொண்டானோ? அரங்கனின் கருவறை ஆண்டாளுக்குப் பள்ளியறை. ஆண்டாளின் விம்மி எழுந்த கொங்கைகள் அரங்கனின் கை பட்டு அடங்கினவா?

காமத்தின் சுவையை அறிய உதடுகள் முதலில் தயாரானாலும், கொங்கைகளே தாபத்தைத் தாங்கி மேலெழும்புகின்றன. தளர்ந்து வதங்கியிருந்த மார்பகம், நேற்றிலிருந்து நிமிர்ந்து நிற்கின்றது. கனம்கூடி தொடுகைக்கான வேட்கையுடன் காத்திருக்கின்றது. கண்ணா லேசாக ஒரு அழுத்து அழுத்துவான். யாழினி பிறந்தபோதுதான், வெறியாய் இருப்பான். ஒரு பக்கம் யாழினி பால் குடித்தால், இவன் ஒரு பக்கம். எனக்குத் தானே முதலில் என்பான்.

“அம்மாவிடம் பால் குடித்தது நினைவில் இல்லை. எங்க அப்பா எட்டு வயசு வரை பால் குடித்தார். எங்க பாட்டி எங்க நின்றாலும் நேராக வந்து முந்தானையை விலக்கிவிட்டு வாய் வைத்துவிடுவாராம். பாட்டி வெட்கப்படுமாம். கோபமும் படுமாம். புடவையை விலக்கிவிட்டு மானத்தை வாங்குறானே என்று முதுகில் இரண்டு அடி போடுமாம். ஆனாலும் அப்பா, வைத்த வாயை எடுக்க மாட்டாராம். எட்டு வயது வரை அம்மாவின் முலைப் பால் குடித்த அப்பா, மறக்க முடியாமல் திணறி இருக்கிறார். இரவு தூங்கும்போது, அம்மாவின் புடவைக்குள் கையை விட்டு, முலையைப் பிடித்துக் கொண்டுதான் தூங்குவாராம்” என்பான். “ஒரு வயது வரை பால் குடித்த எனக்கு என்ன நினைவில் இருக்கும். அதனால் நீதான் எனக்கு இரண்டாவது அம்மா” என்று முட்டுவான். அன்று அவன் முகத்தில் என்னுடைய இரண்டு சொட்டுக் கண்ணீர் விழுந்தது. மனைவி வழியாகத் தான் கணவனும் பெண் உடம்பை அறிந்து கொள்கிறான், அனுபவிக்கிறான். சீக்கிரம் அலுத்தும் போகிறான்.

உடல் சேர்க்கைக்குப் பிறகு, உதடு, முலை, கை, கால் எல்லாம் இரண்டாம்பட்சமாகி விடுகிறது. தூங்குவதற்கு முன் செய்ய வேண்டிய உடற்பயிற்சியாகிறது. கண்ணாவும் அப்படிப் பழகிவிட்டான். நானும்தான் காரணம். வேலை, யாழினி, ஆதி என்று எல்லாவற்றுக்கும் கவனிப்பைக் கொடுக்கிறேன். எனக்கும் கண்ணாவுக்கும் என்று தனியாக நேரம் ஒதுக்கியது இல்லை. சேர்ந்து வாழ்கிறோம் என்று பெயர். சின்ன அந்நியோன்யமும் இல்லை. இரவு முழுக்க கண்ணாவுக்கு ஒரு முத்தம் கொடுக்க தயக்கம். கடைசிவரை கொடுக்கவில்லை. ஆயிரம் முறையாவது ஒன்றுடன் ஒன்று சேர்ந்த உடல். தன்னிச்சையாக ஒரு முத்தம் கொடுக்கப் பலமணி நேர காத்திருப்பு.

யாழினியும் ஆதியும் எழுந்திருக்கும் முன்பாகவே, பாசி பருப்பை அரைத்து, தயிருடன் குழைத்து முகத்தில் தேய்த்தேன். கண்ணாடியில் ஒரு நிமிடம் நின்று முகம் பார்த்து எத்தனை நாளாச்சு! அழகாகப் பராமரிக்க வேண்டும். ஃபேஸ்பேக் போட்டுக்கொண்டு டி.வி.யில் காட்டுவதைப்போல் ஓரிடத்தில் உட்கார முடியவில்லை. கண்களுக்கு அருகில் வழித்துவிட்டுக் கொண்டு சமையலைத் தொடங்கிவிட்டேன்.

“அய்யோ, என்னம்மா பூதம் மாதிரி” என்று அதிசயமாய் முதலில் எழுந்துவந்த ஆதி கத்தினான்.

“பூதம்தான், ஆண்டாள் பூதம்” என்று சிரித்துக் கொண்டே சொன்னேன்.

“எதுக்கும்மா இது, என்ன பூசியிருக்க?”

“பாசி பருப்புடா, முகம் பளபளப்பா இருக்கும்.”

“நீ நல்லாத்தான்ம்மா இருக்கே. கேசவனோட அம்மா முகம் முழுக்க பிளாக் மார்க்ஸ் இருக்கும். நீ ஃபேர் அன் லவ்லி போடேன்ம்மா.”

“இதான் நேச்சுரல் கண்ணு.”

பல் தேய்க்க வெளியில் சென்றுவிட்டான்.

யாழினி வந்தவுடன் வாய்விட்டுப் பெரிதாகச் சிரித்தாள்.

“ஏம்மா உனக்கு இந்த வேலை? கிழவியாயிட்ட. ஃபேஸ்பேக் போட்டு நீ எந்த ப்யூட்டி காம்பிட்டிஷனுக்குப் போகப் போற?”

“ஏன் காம்பிட்டிஷனுக்குப் போனால்தான் அழகா இருக்கணுமா?”

“நீ காம்பிட்டிஷனுக்குப் போனாலும்…” என்று இழுத்தாள்.

“எனக்கு நான் நல்லா இருக்கணும். அழகா இருக்கணும்னு அர்த்தமில்ல.”

“அப்பா பாவம். காலையிலேயே அவருக்கு ஷாக் இருக்கு.”

கண்ணா எட்டு மணிக்குத்தான் எழுந்து வருவான். பாசி பருப்புப் போட்டு அரை மணி நேரம்தான் ஆகியிருந்தது. யாழினி சொன்னதுபோல், கண்ணா காலையிலேயே மனசு கஷ்டப்படும்படி எதாவது சொல்லிவிட்டால்?

துண்டை எடுத்துக்கொண்டு குளியறைக்குள்  நுழைந்தேன். புதிதாக உடம்பை அன்றுதான் பார்ப்பதுபோல், ஒவ்வொரு பகுதியாக அதிகக் கவனம் செலுத்தித் தேய்த்துக் குளித்தேன். கால் விரல் நகங்களை இரண்டு முறை தேய்த்துப் பளபளப்பாக்கினேன். முழங்கை, முழங்கால்களில் லேசாகக் கருத்த பகுதிகளில் பிரஷ் வைத்துத் தேய்த்தேன். மார்பகங்களை எப்படித் தேய்த்துக் குளிப்பேன் என்றே நினைவில் இல்லை. கனத்திருந்த மார்பகங்களை குழந்தையைத் தூக்கித் தேய்த்துவிடுவதுபோல் கவனமாகத் தேய்த்தேன். ஏக்கத்தில் விம்மித் தவித்திருந்தன.

குறிஞ்சி பூக்கும் காலம்போல், உடம்புக்குக் காமம் பூக்கும் காலம் இருக்கோ? எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும்? மாத விலக்கு நிற்கும் காலம் என டாக்டர் சொன்னாரே? உடல் மலர்வதை நிறுத்தும் காலமோ? அடங்குவதற்குமுன் தீபம் பிரகாசமாக எரியும் என்பார்களே? உடலும் காமத்தின் இறுதி வேட்கையில் இருக்கிறதா? களிப்பின் உச்சத்தைக் கண்டடைந்து அமைதியடைந்து விடுமா? ஐம்பது வயதிற்குமேல், காமத்தின் மிச்சம் இருக்காதா? வெளிநாடுகளில் அறுபது வயதில் குழந்தைப் பெற்றுக் கொள்ளும் பெண்களைப் பற்றிப் படிக்கிறோமே? அவர்களின் உடல் மட்டும் காமத்திற்கு எப்பொழுதும் எப்படித் தயாராக இருக்கிறது? குழந்தைப் பெற்றுக் கொள்வதற்கு எதற்குக் காமம்? தப்பு தப்பு. காமமற்ற சேர்க்கையிலும் எக்ஸ் குரோமோசோம்களும், ஒய் குரோமோசோம்களும் ஒன்று சேரும்.

மாத விலக்கு நின்று போனால் காய்ப்பை நிறுத்திய மரம்போல் ஆகிவிடுமா உடம்பு? இறக்கும் வரை பசி இருக்கிறது. இறக்கும் வரை உடம்பின் வலிகள் இருக்கின்றன. காமம் மட்டும் ஏன் இல்லாமல் போகிறது? இருக்கக் கூடாது என்று நாமே முடிவு செய்து கொள்கிறோமா?

“உள்ளேயே தூங்கிட்டயா? மணி என்ன ஆச்சுத் தெரியுமா? அரைமணி நேரமா குளிக்கிற. நீ குளிக்கிறயா? பாத்ரூம் குளிக்குதா?” கண்ணாவின் காட்டுக் கூச்சல் கேட்டது.

அவசரமாகத் தண்ணீரை ஊற்றிக்கொண்டு வெளியேறினேன்.

“இன்னும் டீ கொடுக்கலை. எப்ப டிபன் சாப்பிட்றது? நீராடல் பெருசா இருக்கே?” மீண்டும் சீண்டினான்.

குளித்த ஈரம் போகாமல் அவனை இழுத்து வைத்து முத்தம் கொடுக்க வேண்டும்போல் இருந்தது. முத்தம் கொடுப்பதான நினைப்பில் சிரித்துக்கொண்டே கடந்த என்னை, கண்ணா வித்தியாசமாய்ப் பார்த்தான்.

அலுவலகத்தில் நான் சொன்ன ‘குட்மார்னிங்’ புதிதாக இருந்தது. மலர்ச்சியாகச் சிரித்தேன். தோழிகளைத் தொட்டுப் பேசினேன். சுறுசுறுப்பாக வேலை செய்தேன். என் உடம்பு லேசாக இருப்பது, எல்லோரின் கண்ணுக்கும் பளிச்சென்றுத் தெரிவதாக நானே நினைத்துக் கொண்டேன். சத்யா மட்டும் அருகில் வந்து கேட்டாள்.

“மேம், ஐ லைனர் போட்டிருக்கீங்களா? அழகா இருக்கு மேம். கண்ணு பெருசா இருக்கிறவங்க போட்டாதான் நல்லா இருக்கும்னு சொல்லுவாங்க. பட், அவங்க மை போட்ட கண்ண உருட்டி பாத்தாங்கன்னு பயமா இருக்கும். சின்ன கண்ணுக்கு மை போட்டாத்தான் எடுப்பா இருக்கும். டெய்லி போடுங்க மேம்” என்றாள்.

ரேவதி சாப்பாட்டு நேரம் வரை பக்கத்திலேயே வரவில்லை.

“என்ன பாமா, வெட்டிங் டேவா? விசேசமா வந்திருக்கே?” என்றாள் உணவு இடைவேளையில்.

“வெட்டிங் டேனா ஆபிஸ் வருவாங்களா? பிறந்த நாளா இருக்கும்” என்றாள் உஷா.

“பிள்ளைங்க பிறந்த நாள் மட்டும்தான் கொண்டாடுவேன்னு உங்களுக்குத் தெரியாதா?”

“இல்லையே, இன்னைக்கு என்னவோ கூட இருக்கே. புளி போட்டுத் தேய்ச்ச விளக்கு மாதிரி பளிச்சுனு இருக்க” என்றாள் ரேவதி.

என் மலர்ச்சியை அவர்கள் கவனித்ததில், முகத்தில் பெருமை கூடியது.

“இப்படித்தான் வரணும். நாற்பது வயசானாலே எழவு வீட்டுக்குப் போற மாதிரியேவா இருக்கணும்? என் பசங்க கூட சொல்லுவானுங்க. இந்தப் புடவை கட்டாதம்மா, அந்தப் புடவை கட்டாதம்மான்னு. எனக்குப் புடிச்சத நான் கட்டுவேன்னு சொல்லிடுவேன்” என்றாள் ரேவதி.

“உனக்குப் பிடிக்கும்போது உன் வீட்டுக்காரரை கூப்பிட்டிருக்கியா?” என்று கேட்க வாய் வந்தது.

புடவைக் கதை வரை பேசலாம் அலுவலகத் தோழிகளிடம். அந்தரங்கம் வரை போக முடியாது. வாயைக் கட்டிக் கொண்டேன்.

பேருந்துக்கு நிற்கும்போதும், பேருந்தில் ஏறிய பின்னும் என் வயது பெண்களை உற்று கவனித்தேன். சோகம் கவிந்த முகங்கள். உடம்பைப் பற்றிய அக்கறையற்ற முகங்கள். பேசுவதற்கும் சிரிப்பதற்கும் ஒன்றுமில்லை என அறிவிப்பு செய்துவிட்ட முகங்கள். கால்கள் மங்கிக் கிடந்தன. எண்ணெய் பிசுக்குடன் கழுத்து. அரிதாகச் சில பெண்கள் பளிச்சென்று இருந்தார்கள். இள வயது பெண்கள் காரணமே இல்லாமல் பேசி சிரிக்க, தெரிவை வயதுப் பெண்களோ வீட்டில் காத்திருக்கும் வேலைகளுக்காகப் பேருந்திலேயே கவலை கொண்டார்கள். வேலைகளைத் தவிர அவர்களின் சிந்தனையில் வேறொன்றுமே இல்லை. இவர்களிடம் ஒரு நாளாவது தனக்குப் பிடித்த காமத்தைக் கொடு என்று உடம்பு கேட்டிருக்குமா? உடம்பு கேட்பதைப் புரிந்துகொள்ளும் அளவிற்கு நிதானமாக இருக்கிறார்களா? எண்ணெயின்றி தீய்ந்துபோய் நிற்கும் திரிபோன்ற மங்கிய கூட்டத்தின் பிரதிநிதியாகத் தானே நானும் இருந்தேன்? இருந்தேன் என்ன, இருந்தேன்? இருக்கிறேன்? கண்ணாவிடம் ஒரு முத்தம் கேட்க முடியவில்லை? தானாக ஒரு முத்தம் கொடுக்க முடியவில்லை? நான் சுதந்திரப் பறவையா?

வீடு தனிமையில் இருந்தது. என்றும் இருப்பதுதான். இன்றுதான் பார்க்கிறேன். யாழினியும் ஆதியும் வர இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது. கதவைத் தாழ் போட்டுவிட்டுப் படுக்கையறைக்குள் நுழைந்தேன். தூங்கலாமா என்ற எண்ணம். தூக்கம் வருவதுபோல் இல்லை. பையைக் கட்டிலின்மேல் போட்டுவிட்டு, ஆளுயரக் கண்ணாடியின் முன் நின்றேன். கண்ணாடியில் தெரிந்த உருவத்தைப் பார்த்தேன். எந்த வித்தியாசமும் தெரியவில்லை.

“உனக்கு என்ன வேண்டும், ஏன் என்னைப் படுத்துகிறாய்?” உடம்பு மௌனமாக இருந்தது. எல்லாருக்கும் காமம் இல்லையா? தீர்ந்தாலும் தீரவில்லையென்றாலும் அவரவர் ஓடிக் கொண்டுதானே இருக்கிறார்கள்? வயிற்றுப் பசிக்கு சோறு இல்லையென்றால் கவலைப்படலாம். பிறரிடம் பரிதாபம்கூட சம்பாதிக்கலாம். உடம்பு பசியா இருக்கிறது என்றால்? உடம்பு பசியாக இருக்கிறது என்றால் அதன் பொருள் என்ன? சுற்றி இருப்பவர்கள் என்ன சொல்வார்கள்? எனக்கென்ன பெயர் வைப்பார்கள்? உடம்பு கொழுப்பு எடுத்தவள் என்பார்களோ? பிறர் சொல்வது இருக்கட்டும். கண்ணா என்ன சொல்வான்? நான் குடும்பத்திற்கு லாயக்கில்லை என்று தள்ளி வைப்பானோ? உன்னுடன் இருந்தால் பிள்ளைகளும் கெட்டுப் போவார்கள் என்று என்னைப் பிரித்து விடுவானோ?

கண்ணாவிடம் நான் என்ன கேட்டுவிடப் போகிறேன்? தானாக மலர்ந்து நிற்கிற உடம்பை மகிழ்விக்கச் சொல்கிறேன். எண்ணெய் ஊற்றி, திரிபோட்டு, ஏற்றி வைக்கிற தீபத்தினை, இன்னும் ஒளிர தூண்டிவிட வேண்டும். கனன்ற அனலை நீர்விட்டு அணைக்க வேண்டும். உடம்பு அகல் விளக்கா? கனலும் அனலா? முதலைகளும் சுறாக்களும் ஆழ் கடலில் நீந்துவது தெரியாமல் நீந்துவதைப்போல், உடம்புக்குள் காமம் அமைதி காக்கிறது. காமத்தை அடையாளம் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் அமைதியாக இருக்குமா? அப்படித்தானே பதினைந்தாண்டுகளாக இருந்தேன். உடல் சேர்க்கைக்குக் காமம் என்று பெயர் வைத்துக்கூட நான் அழைத்ததில்லை.

பிள்ளைகள் வரும்முன் கண்ணா வந்தால் நன்றாக இருக்கும். காத்திருப்பில் இருக்கும் முத்தம் கொடுக்கலாம். நானாக விரும்பிச் செல்ல வாய்ப்பு அமையும். மலர்ந்த உடம்பு எப்படி இருக்கு என்று கண்ணாவிடம் கேட்க வேண்டும். அவசரம் இல்லாமல் அனுபவித்துச் செய்ய வேண்டும். கண்ணா எப்பவும் எட்டு மணிக்குத்தானே வருவான்?

கண்ணாவை நினைக்க நினைக்க உடல் முழுக்கப் பரவசக் கீற்றுகள் ஓடின. கழுத்துவரை உணர்வுப் பந்து மோதி நின்றது. கால்களில் சூடு பரவியது. அணைப்பிற்குத் தவித்த முலைகள் மேலெழும்பின. முகத்திற்கு மொத்த ரத்தமும் ஏறி பலூன்போல் ஊதி நின்றது. கண்ணாடியில் மீண்டும் பார்த்தேன். உடம்பு முதலில் பார்த்ததுபோலவே நின்றிருந்தது. வெளியில் சிறு அடையாளமும் தெரியாமல், உள்ளுக்குள் ஒரு எரிமலையே உருகி வழிந்து கொண்டிருக்கிறதே. மனசு உடம்பைத் தயார் செய்கிறதா? உடம்பு தானாகத் தயாராகிறதா? மாத விலக்கு உடம்புக்குத் தானே? உடம்புத் தானாக தயாராக முடியுமா? மூளையும் மனசும் சேர்ந்து கட்டளையிட்டால்தானே முடியும்? மனசு உடம்பைக் கட்டிப் போடுகிறதே? இதெல்லாம் தவறு என்று தலையில் தட்டிக் கொண்டிருக்கிறதே? கணவனின் அன்னியோன்யத்திற்கு ஏங்குவது தவறா? அவனுடன் விருப்பப்படி இருக்க வேண்டும் என்ற விழைவு தவறா?

மேலும் மனத்தை அனுமதிக்க விரும்பவில்லை நான். கொதித்துத் தளும்பும் உடலை, சிந்தனைகள் நீர்விட்டு அணைக்கின்றன. எனக்குள் பீறிடும் உணர்வுகளுடன் இருக்கவே பிடிக்கிறது. அபூர்வமாய்ப் பூக்கும் பூக்களை, கை விரல்களின் சூடுகூட வாடச் செய்யாமல், இறைவனுக்குச் சாத்துவதைப்போல், என் மலர்ச்சியை அப்படியே ஒப்படைக்க வேண்டும். தலைமுடிகூட காமத்தில் விகசிக்க வேண்டும். ஒவ்வொரு அங்கமும் அதனதன் பூரணத்துவத்துடன் மலர்ந்திருக்கிறது. காமத்தை இத்தனை நாளாய், பசிக்குச் சோறு போல் சாப்பிட்டிருக்கிறேன். கடவுளுக்குப் படையல் போடும் சடங்குபோல், கண்ணா வந்தால் படையல் போட்டிருக்கிறேன். கருவறை தரிசனத்திற்காக, கோயிலின் பெருங்கதவுகள் திறந்து வைக்கப்படுவதுபோல் உடலின் கதவுகள் திறந்து வைத்திருக்கிறேன். “கண்ணா நீ எந்தக் கதவின் வழியாக உள் நுழையப் போகிறாய்?”

அழைப்பு மணி அடித்தது. தூக்கிவாரிப் போட்டது மனசு. கையும் களவுமாக பிடிபட்டதுபோல் தடுமாற்றம். வியர்த்தது. ‘என்ன தப்பு செய்தோம்? ஏன் பயப்படுகிறோம்?’ என்று ஆசுவாசம் கொண்டேன். படபடப்பு குறையவில்லை. அதற்குள் இரண்டாவது அழைப்பு மணி கேட்டது. முகத்தில் எதுவும் தெரிகிறதா என்று கண்ணாடியில் பார்த்துக் கொண்டேன். ஒன்றும் வித்தியாசமாக இல்லையென்று திருப்தியானவுடன் சரியாக இருந்த ஆடைகளை மீண்டும் சரி செய்துகொண்டு கதவை நோக்கி ஓடினேன். தாழ்ப்பாள் திறந்தவுடன், மீண்டும் உடம்பு விர்ரென்று காற்றில் பறந்தது. கண்ணா நின்று கொண்டிருந்தான். கோயில் மணியோசை இனிமையாக மனத்திற்குள் ஒலித்தது.

கதவைத் தாழ்ப்பாள் போட்டுத் திரும்பிய நொடியில், கண்ணாவைப் பின்னாடி இருந்து அப்படியே இறுக்கிக் கட்டிக் கொண்டேன். வியர்வையில் சட்டை முதுகுடன் நனைந்திருந்தது. வியர்வை வாசம் இன்னும் அவனை இறுக்கிக் கொள்ள வைத்தது. கொஞ்சமும் எதிர்பார்க்காத கண்ணா நிற்பதற்குத் தடுமாறினான். அலுவலகப் பையை ஒரு கையில் பிடித்துக் கொண்டே, மறு கையால் என்னை முன்னுக்கு இழுத்தான்.

காற்றின் லேசான அசைவிற்குக் காத்திருக்கும் கனிந்த பழம்போல், அவன் மார்பில் சரிந்தேன். உடலில் திகுதிகுவென்று அனல் பரவியது. கழுத்தைச் சுற்றிக் கொண்ட கைகள் அவனை எனக்குள் சிறைப்படுத்தின. உதட்டைக் கவ்விக் கொண்டேன். இரு உதடுகளையும் சேர்த்துக் கவ்விக் கொண்டதில் கண்ணா  மூச்சுத் திணறினான்.

பொக்கிஷங்கள் நிரம்பிய கோயிலின் சாவி உதட்டுக்குள்தான் இருந்திருக்கிறது. சாறூறும் கனியாக சுவைத்தது. கண்ணாவின் மூச்சுத் தகிப்பை என் மூச்சு உணர்ந்தது. அவனின் சுவாசம் சீராக்க, என் மூச்சுக் காற்றை அவனுக்குள் செலுத்தினேன். இறுகி மூடிய கண்களுக்குள் சிவப்பும் நீலமும் கலந்த துகள்கள் மிதந்தன. முத்தத்தின் ஈரத்தில் புதிய உயிர் துளிர்த்தது. காடு, மேடு, மலை, கடல், அருவி எல்லாம் காலடியில் நழுவியது. வானத்தில் பறந்தேன்.

முத்தம் இரு சிறகுகளாக மாறியிருந்தது. கண்ணாவின் உதடுகள் கண்ணிலிருந்து மறைந்தன. உயிர்க் கோளமாக சுழலும் பூமிப்பந்தின் நாவினை நான் சுவைத்துக் கொண்டிருந்தேன். உடலின் கதவுகள் திறக்கத் திறக்க, பிரபஞ்சத்தின் கருவறைக்குள் நுழைந்தேன்.

காட்டுப் பூக்களின் வாசம் வந்தது. மண்ணிலிருந்து தோண்டியெடுத்த பச்சைக் கிழங்குகளின் ஈர மண்வாசம். கறந்த பாலில் கொப்பளிக்கும் நுரை. கடல் நீரின் உப்பு. சுனை நீரின் இனிப்பு. செம்மண் குட்டையின் கரிப்பு.  அகல திறந்த மாயக் கண்ணனின் வாய்க்குள் சுழலும் பிரபஞ்சம். ஒன்றையொன்று கவ்விக் கொண்டு இறுக மூடிய நான்கு உதட்டிற்குள் சுழன்றது பிரபஞ்சம். புவி உதடுகளுக்கு உள்ளே சுழன்றது. பருவங்களைக் கடந்த மலர்ச்சி.

“விடு டீ, மூச்சடைக்குது” நெஞ்சில் கை வைத்து, முன்னுக்குத் தள்ளினான்.

கண்ணாவின் உதடுகளை விட முடியாமலேயே முன்னுக்கு நகர்ந்தேன். உடம்பு உதட்டில் மையம் கொண்டிருந்தது. சிறு அசைவில்லை உடம்பில்.

“ம்ம்ம்ம்ம். லூசு, என்னாச்சு, விடு டீ” வேகமாக முகத்தில் கைவைத்து விலக்கினான்.

முலைப்பால் குடிக்கும் குழந்தையிடம் மார்புக் காம்புகளை விலக்கிக் கொண்டால், வீறிட்டழுவதுபோல், அழுகை வந்தது.

“ கண்ணா, ப்ளீஸ்.” மீண்டும் உதடுகளைக் கவ்வப் போனேன். வலுவான கைகளால், பின்னுக்கு இழுத்து, தோள்களுக்குள் என்னை அடக்கியபடி, படுக்கையறை நோக்கி நடந்தான். பை அதே இடத்தில் கீழே கிடந்தது.

சட்டையை கழட்டவில்லை. பேன்ட்டை மட்டும் அவசர அவசரமாகக் கழட்டினான். என் ஆடைகளை கண்ணா கழட்டி விடுவான் என்று காத்திருந்தேன். உடம்பின் ஒவ்வொரு அங்கமும் எப்படி மாறி இருக்கிறது என்று காட்ட விரும்பினேன்.

பூவில் தங்கியிருக்கும் பனித்துளியை ருசிப்பது, கனிந்த பழத்தின் சாறுறிஞ்சுவது, நீருக்குள் ஆழ ஆழ மூழ்கி சுவை நீரை பருகுவது என்று ஒவ்வொரு பகுதியாக அவனைக் கடக்கச் செய்ய வேண்டும். சட்டென்று கனம் தெரிந்ததுமேலே. கண்ணா படர்ந்திருந்தான்.

“கண்ணா, இரு இரு” என்றேன். அதற்குள் பாதி கடந்திருந்தான்.

“கொஞ்சம் பொறு, சொல்றதக் கேளு” என்றேன் கெஞ்சலாக.

புடவைகூட களையவில்லை. மூச்சு வாங்க மேலேயே சரிந்தான். கண்ணாவின் வியர்வை பிசுபிசுத்தது. மலையேற தொடங்கிய பயணம், சமவெளியிலேயே நின்று போனது. அன்போடு இருக்கும் நொடியில் தெரியாத உடலின் கனம் இப்போது அதிகம் கனத்தது.

வியர்வை அடங்கிய பின், துண்டுடன் குளிக்கச் சென்றான்.

போருக்கு முரசறிவித்து, தயாரான படைகளைக் கலைந்து செல்லச் சொல்வதுபோல் மனம் குன்றியது. அம்மனுக்குத் திருநீராட்டு செய்ய அபிஷேகப் பொருள்கள் தயார் செய்துவிட்டு, திருநீராட்டு செய்யாமல், கற்பூர ஆரத்தி மட்டும் காட்டிவிட்டுச் சென்றதுபோல், வெறுமை.

கருஞ்சிலை போல், உடம்பில் எண்ணெய் சிடுக்கின் நெடி பரவியது.

“எழுந்து, ஒழுங்கா படு” சொல்லிவிட்டு, முகத்தைத் துடைத்துக்கொண்டு வெளியே சென்றான் கண்ணா.


ணல் வீடு கட்டி சொப்பு வைத்து விளையாடிக் கொண்டிருந்தோம். வெயில் பளபளவென்று ஏறிக் கொண்டிருந்தது. இளம் வெயில் முற்றினாலே அம்மா கூச்சல் போடுவாள். “பாம்பு சட்டையை உரிக்கிற மாதிரி வெயில் தோல் உரிக்குது. வெயில்ல என்ன விளையாட்டு?” என்று தெருவுக்கே கேட்கும்படி கத்துவாள். எனக்கு உச்சி வெயிலில் வெளியில் விளையாடுவதுதான் பிடிக்கும்.

வெயிலின் கதிர்கள் சுள்ளென்று அடிக்கும். பட்ட நொடியில் எரியும். வெயிலையே கவனித்துக் கொண்டிருக்க வேண்டும். அடுத்த கதிர், அதற்கடுத்த கதிர், அதற்குமடுத்த கதிர் என்று வெயிலின் கதிர்கள் உடம்பில் ஊடுருவும்போது இதமாக இருக்கும். அதிகச் சூட்டில் உடலுக்குள் பரவும் குளுமை தனியாகத் தெரியும். உடம்பு முழுக்க வியர்வையில் குளிக்கும். உள்ளுக்குள் இதமான குளிர்ச்சி பரவும். சோறு பொங்கி, கறிகாய் செய்து, சாப்பிட்டு, மர நிழலில் படுக்கும்போதும், வெயிலின் கதிர்கள் உடலைத் தைப்பதைப் போலவே இருக்கும். உச்சந்தலையில் படும் வெயில் உள்ளே ஊடுருவியபோது, உடல் முழுக்கச் சிலிர்ப்பு பரவியது. சுற்றிலும் எல்லோரும் இருந்தாலும், என் உடல் மட்டும் தனியாக மிதந்தது.

விளையாட்டில் எப்பொழுதும் மணியும் இருப்பான். சுந்தரி அடித்து விரட்டுவாள். “ச்சூ, பாவம். குட்டிடி அது, அடிக்காதே” என்றவுடன், வாலையாட்டிக் கொண்டு என் பக்கம் நகர்ந்து வரும். நான் மணியை ஆதரிக்கிறேன் என்பதை மோப்பம் பிடித்துவிடும். காலடியில் உரசிக் கொண்டே உட்கார்ந்திருக்கும். வெயிலின் இதத்திற்கு நாங்கள் காய்ந்து கொண்டிருந்தால், மணி அனல் தாங்காமல், முனகும். என்னுடைய பாவாடைக்குள் தலையை நுழைத்துத் தப்பிக்கப் பார்க்கும். வால் வெயிலின் தாக்கத்தால் கால்களுக்கிடையில் மடங்கிக் கிடக்க, பாவாடையில் முண்டிக் கொண்டிருக்கும். “நாய் உண்ணி ஏறுச்சுன்னா அவ்வளவுதாண்டி, ரத்தத்தை உறிஞ்சிடும்” என்றாள் சுந்தரி. “நாய் ரத்தம்தான் குடிக்கும். மனுசங்க ரத்தத்தைக் குடிக்காது”  என்று சொல்லிவிட்டு, மணியை இழுத்து வெளியே விட்டேன். ‘வவ்வவ்’ என்று கத்திக்கொண்டு, மீண்டும் பாவாடைக்குள் நுழைந்தான்.

தும்பைச் செடியை கொத்துக் கொத்தாகப் பறித்து வந்திருந்தோம். பூக்களை மட்டும் பிரித்துக் கொண்டிருந்தேன். மண் சட்டியில் ஒவ்வொரு பூவாகப் பிரித்துப் போட்டேன். ஒன்றுக்குப் போகும் இடத்தில், பிசுபிசுவென்று ஈரம் தெரிந்தது.

“ஒன்னுக்குப் போயிட்டமோ” என்று பயந்து போனேன். ஏதோ கடிப்பதுபோல் இருந்தது. சுந்தரி சொன்னதுபோல், நாய் உண்ணி கடிக்குதோ? உடம்பு முழுக்க விறுவிறுவென்று ஏதோ பரவியது. என்னவென்று புரியவில்லை. ஆனால், பிடித்திருந்தது. சுந்தரியும் சுமதியும் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்.

எனக்குள் நடப்பதை அவர்கள் பார்க்கவில்லை. அந்த இடத்தில் எதுவோ முட்டி முட்டி சப்புவதுபோல் இருந்தது. யாரும் பார்க்காமல், பாவாடைமேல் மெதுவாக கை வைத்துப் பார்த்தேன். மணி இருந்தான். அவன் அம்மாவிடம் பால் குடிப்பதுபோல், முட்டி முட்டிக் குடித்தான். நெஞ்சடைப்பதுபோல் இருந்தது. மணியை வெளியே இழுத்துவிடத் துணிவில்லை. சப்பக்கால் போட்டு உட்கார்ந்திருந்த நான், குத்தக்கால் போட்டு உட்கார்ந்து கொண்டேன். கண்கள் சொருக மயங்கினேன். உடம்பு தள்ளாடியது. அந்த உணர்வைக் கடக்க முடியவில்லை. கிறுக்குப் பிடித்ததுபோல் இருந்தது.

“இந்த வெயில்லயா விளையாடுவிங்க?” பெரியம்மாவின் குரல் தூரத்தில் கேட்டவுன் தூக்கிவாரிப் போட்டது. பயந்து எழுந்தேன். மடியில் இருந்த மண் சட்டி கீழே விழுந்து உடைந்தது. தும்பைப் பூக்கள் சிதறின. உடம்பு கிடுகிடுவென்று ஆடியது. ரங்கராட்டினத்தில் வேகமாகச் சுற்றிக் கொண்டிருக்கும்போது, ஒரே இழுப்பில் நிறுத்தி இறக்கிவிட்டதைப்போல் நிலைகுலைந்து நின்றேன்.

“இந்தப் பல்லுக் கிழவி வீட்ல சொல்லிக் கொடுத்துடுவாடீ, சாயங்காலம் வர்றோம்” சுந்தரியும் சுமதியும் கிளம்பினார்கள். பதில் சொல்ல முடியவில்லை. உடல் இன்னும் தரை இறங்கவில்லை. இரண்டடி நடந்த சுந்தரி திரும்பிப் பார்த்தாள். என் காலடியில் வாயைக் குழைத்து நின்ற மணியைப் பார்த்தாள். “மணி இவ்வளவு நேரம் எங்கடி இருந்துச்சு?” “பாக்கலையேடீ நான்” என்றேன். “எங்கியோ கண்ட எடத்துல வாய வச்சுட்டு வந்திருக்கு. வாயக் குழைச்சிக்கிட்டு நிக்குது பாரு” திட்டிக் கொண்டே நடந்தாள்.

உச்சத்தில் சுற்றிக் கொண்டிருந்த ரங்கராட்டினத்தை, ஒரே இழுப்பில் நிறுத்திவிட்டான் கண்ணா. கால்கள் தரையில் இறங்கி நின்றன. மனசு இறங்காமல் உச்சியில் சுற்றிக் கொண்டிருந்தது.


ர்ந்து கொண்டிருந்த சிறு வண்டை குறி வைத்துக் காத்திருந்தது பல்லி. உயிரற்ற ஜந்துபோல் சுவரில் ஒட்டிக் கிடந்த பல்லியின் அருகே வண்டு நகர்ந்தது. முன்னால் பல்லி இருக்கும் எச்சரிக்கையில் திரும்பிப் போனது. மீண்டும் திரும்பியது. அப்பொழுதும் பல்லி அசையாமல் இருந்தது. வண்டுக்கு என்ன தோன்றியதோ, மீண்டும் திரும்பியது. பல்லியை நோக்கி மெதுவாக நகர்ந்தது. பல்லி கொஞ்சமும் அசைவின்றி இருந்தது. தயக்கத்துடன் வண்டு முன்னேறியது. பல்லிக்கும் வண்டுக்கும் இடைவெளி குறைந்தது. வண்டு நிமிர்ந்து பல்லியைப் பார்த்தது. பல்லியிடம் அசைவில்லை. கண்கள் அரை விழியில் அப்படியே இருந்தன. வண்டு தன் இறக்கையை லேசாக விரித்து மூடியது. சில விநாடிகள் தாமதித்தது. வந்த வழியில் போகத் திரும்பியது வண்டு. திரும்பிய கணத்தில் பல்லியின் நாக்கு நீண்டது. வண்டிருந்த இடம் வெற்றிடமாகியது. நாக்கு வெளியில் நீண்டதும், வண்டு உள்ளே சென்றதும் இமைப்பதற்குள் முடிந்துவிட்டது.

அறையில் துயர் நிரம்பியது. இரவின் அமைதி துயரத்தை அதிகரித்தது. இரவை வேடிக்கைப் பார்ப்பது அச்சம் தந்தது. தூரத்தில் கேட்கும் பூனையின் குரல் இரவுக்கு அசாதாரணத்தைத் தந்தது. பூனையின் மென்மையான குரலை கேட்டிருக்கிறேன். கடுமையான குரலில் பூனையின் சீறல் இதுவரை கேட்டறியாதது. நாயின் ஊளையும் பூனையின் சீறலும் இரவுக்குக் கொடூர முகத்தைக் கொடுத்தன. இருட்டு தரும் அமானுஷ்யத்திற்கு அஞ்சிதான் இரவில் எல்லோரும் தூங்கக் கற்றுக் கொண்டார்களோ?

இருட்டு ஏன் அச்சமூட்டுகிறது? பகலைப் போலவே இருட்டிலும் வேலைகள் செய்து கொண்டிருந்தால், இருட்டின் அச்சம் விலகிவிடுமே? இரவுப் பணிகளுக்குச் சென்று வருகிறவர்கள் தினம் இருட்டைப் பார்த்து அச்சப்பட்டுக் கொண்டிருப்பார்களா? இயந்திரங்கள் இரவு, பகல் இல்லாமல் ஓடுவதைப்போல் மனித இயந்திரங்களும் இயங்க முடியாதா?

அமைதியானது இரவு என்கிறோம். இரவில்தான் ஆயிரம் சத்தங்கள் கேட்கின்றன. சிறு ஒலியும் தெளிவாகக் கேட்கிறது. பூனையின் மென் பாதங்களின் ஒலிகூட அருகில் கேட்கிறது. கரப்பான் பூச்சி படபடப்பது, தும்பிகளின் இறெக்கைச் சத்தம் எல்லாம் தெளிவாகக் கேட்கிறது.

இரவை வாழ்நாளில் கவனித்ததே இல்லை. திருமணமான புதிதில் இரவு முழுக்க விழித்திருந்திருக்கிறேன். கண்ணாவுடன் பேசுவதும் கூடுவதுமாக இரவு கழிந்திருக்கிறது. இரவின் சத்தங்களோடு எங்கள் சத்தம் கலந்திருக்கிறது. இரவின் சத்தங்களை நாங்கள் கேட்டதே இல்லை. இப்பொழுதுதான் விழித்திருக்கிறேன். இந்த ஒரு வாரத்தில் எனக்குள் எத்தனை மாற்றங்கள்?

நல்லதா? கெட்டதா? எனக்கு நன்மை செய்யப் போகிறதா? படுகுழியில் தள்ளப் போகிறதா? உடம்பு சுகம் வேண்டும் என்று ஒரு குடும்பப் பெண் காத்திருக்கிறாள் என்றால் ஊர் காறித் துப்பாதா?

அம்மா கிளம்பி வந்துவிடுவாள். “உன்னைப் பெத்து வளத்ததுக்கு, இதான் நீ எனக்கு வாங்கிக் கொடுக்கிற நல்ல பேரா? ரெண்டு புள்ளைப் பெத்த பிறகு உடம்பு சுகம் கேக்குதா? புள்ளைங்கள வளத்தமா, படிக்க வச்சமா, அதுகள ஆளாக்குனமான்னு இல்லாம, புருசன்கூட எப்பவும் படுக்கணும்னு கேக்கிற? என் வயித்துலதான் பொறந்தியா? அக்கம்பக்கத்துல விசயம் கசிஞ்சுது, தூத்திடுவாளுங்க தூத்தி. தேவடியா கூட காசுக்குத்தான் நாள் முழுக்கப் படுக்கிறா. அவ என்ன வர்றவன் கூடல்லாம் சந்தோசமாவா படுக்கிறா? பாவம். பொழப்புன்னு பல்லக் கடிச்சுக்கிட்டு படுப்பா. குடும்பத்துல எவளாவது புருசன்கூட படுக்கணும், எழுந்துக்கணும்னு வெளிய சொல்லிக்கிட்டு இருப்பாளா? தேடி வந்தான்னா இல்லன்னு திருப்பியனுப்பாமா படுத்துக்கிடக்கணும். அதானே பொம்பள. காசு பணம் சேத்தமா, செட்டா குடும்பம் பண்ணனுமான்னா இல்லாமா, ஊர்ல இல்லாத அதிசயமா கிளம்பிட்டா” என என்னை நாற அடித்துவிடுவாள்.

“பொம்பளன்னா ஒடம்பக் கட்டிப் போடணும். மனச அடக்கி வைக்கணும்”  ஒவ்வொரு கை வேலைக்கும் ஒரு பேச்சு பேசுவாள்.

“நான் போறவன் வர்றவன்கூடவா இருக்கணும்னு கேட்கிறேன். கண்ணாகூட தானே கேட்கிறேன்? இத்தனை வருசம் கேட்டேனா? எனக்கே என்னைப் புரியலையே? நான் பொருட்படுத்தாமல் இருந்தாலும் உடம்பு என்னை இம்சிக்கிறதே? நானும் எல்லாப் பெண்களையும் போலத்தானே இருந்தேன். உடம்பிற்குள் சாமி இறங்கியதுபோல் இருக்கிறதே.”

உடம்பைப் பார்த்து மிரண்டுதான் துறவறம் மேற்கொண்டார்களோ? உள்ளிருந்து படமெடுத்தாடும் நாகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், காயத்தைத் துறக்க துறவிகள் விரும்பினார்களோ? சிற்றின்பம் என்று குறைத்துக் கூறினால், யாரும் அதனிடம் மயங்க மாட்டார்கள் என்ற முன்திட்டமா?

இன்பத்தில் சிறியது பெரியது உண்டா? சிற்றின்பம் என்று எப்படிச் சொல்லியிருப்பார்கள்? கொஞ்ச நேரத்திற்கே நீடிக்கும் என்பதினாலா? ஆணும் பெண்ணும் சேர்வதினால் சிற்றின்பமா? ஆணும் பெண்ணும் சேர்வதினாலேயே கீழானதாக இருக்க முடியுமா?

பிற இன்பங்களைத் தனித்தனியாக அனுபவித்துக் கொள்ளலாம். தனியாகச் சிரிக்கலாம். அழலாம். கோபப்படலாம். பசி போக்கிக் கொள்ளலாம். காமத்தை சுவைக்க மட்டுமே இருவர் தேவை. சுய இன்பம் செய்பவர்களும் இருக்கிறார்களாம். நம் ஊரில் தெருவில் இருக்கிறார்களா? கேள்விப்பட்டதில்லை. இயற்கையில் சேர்க்கை என்றாலே இருபால்தானே? இனப்பெருக்கத்தின் அடிப்படையான இன்பத்தை சிற்றின்பம் என்பார்களா? மனிதர்களுக்குள் நிகழ்வதால் சிற்றின்பமா?

பேரின்பம் இருக்கிறதா? கடவுளை நினைத்தல் பேரின்பமா? கடவுளை நினைத்திருக்கிறார்கள். கடவுளை அடைந்திருக்கிறார்களா? கடவுளின் திருப்பாதங்களை அடைந்தால், பேரின்பம் என்று சொல்லலாம். அடைந்ததாக எவரும் சொல்லவில்லை. சொன்னவர் எவரும் அடையவில்லை.

அமைதியாகப் போய்க் கொண்டிருந்த வாழ்வில் ஏனிந்த வண்டின் குடைச்சல்? உடம்பை என்னுடைய அறிவுக் கட்டுப்படுத்தும் திறனை இழந்ததா? ஏன் கட்டுப்படுத்த வேண்டும் என்று மனம் முரண்டு பிடிக்கிறதா? குடும்பத்திற்குள் உடலின்பத்திற்கு என்ன இடம் இருக்கிறது? வாழ்வின் அமைதியை நானே குலைக்கிறேனா?

மலர்ந்த உடல்? இன்பம் சேர்த்த ஊற்று? கிளர்ந்த மன எழுச்சி? நான் கேட்கவில்லையே? மறைத்துக் கொண்டு பொய்யாய் இருக்க வேண்டுமா? என்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்வது குடும்பத்திற்குள் சாத்தியமற்ற ஒன்றா? மனைவியின்மீது நம்பிக்கைத் தொலைத்த அரசர்கள் வேட்டைக்குச் செல்லும்போது, இரும்புக் கவசத்தில் மனைவியின் உடலைப் பூட்டி, கையுடன் சாவியைக் கொண்டு சென்றார்களாமே? என் உடலுக்கும் நானே ஒரு இரும்புக் கவசம் போட்டுக் கொள்ள வேண்டுமா? எனக்கு நானே ஒரு முகமூடி போட்டுக் கொள்ள வேண்டும். போட்டுக் கொண்டால் தப்பிக்கலாம்.

வண்டினை விழுங்கிய அடையாளமற்று பல்லி அடுத்த இரைக்காகக் காத்திருந்தது. குறைந்த ஒளியில், யாழினியும் ஆதியும் பேரழகோடு தெரிந்தார்கள். அவர்களின் அமைதி எனக்குள்ளும் பற்றியது. உறக்கம் தொலைத்து, அமைதி குலைந்து, என்ன அவஸ்தை இது.

மெத்தைக்கு வெளியில் நீண்டிருந்த கண்ணனின் கால்களைப் பிடித்தவாறு மெத்தையில் சாய்ந்தேன். குழப்பமா, பயமா உணர்வைப் பிரிக்க முடியவில்லை. அன்பான இரு கைகள் மடியில் புதைத்து அணைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும். தலையைக் கோதி, ‘நான் இருக்கிறேன்’ என்று செய்கையால் உணரச் செய்தால் நிதானமாகலாம். “என்ன தூங்கலையா?” என்று கேட்டால்கூட போதும்.

கண்களில் நீர் கோர்த்தது. கண்ணனுடன் வாழ்ந்தாலும் ஆழ்ந்த உறக்கத்தில் தெரியும் கண்ணன் அந்நியமாகத் தெரிந்தான்.

பாமா ஆதிக்கும் யாழினிக்கும் இடையில் இருந்த சிறு இடைவெளியில் ஒடுங்கிப் படுத்தாள். இரு கைகளையும் விரித்து இருவர் மேலும் போட்டாள். கண்ணீர் இமையை நனைத்து, கன்னத்தை நனைத்து, கழுத்து வரை வழிந்தோடி இருந்தது.


சுருட்டிப் போட்ட கொண்டையுடன் காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தாள். ஆதி பல் தேய்த்துக் கொண்டிருந்தான். வாயில் நுரையுடன் திரும்பியவன் சத்தமாக, “பாசிப் பருப்பு ஃபேஸ் ஃபேக் இன்னைக்குக் கிடையாதாம்மா?” என்று கேட்டான்.


-அ.வெண்ணிலா

Previous articleஸ்ரீவள்ளி கவிதைகள்
Next articleரோஜாப்பூக்கள்
Avatar
தமிழக எழுத்தாளரும், கவிஞரும் ஆவார்.கவிஞர், சிறுகதை ஆசிரியர், கட்டுரையாளர், நாவலாசிரியர், ஆசிரியர், சிறு பத்திரிகை ஆசிரியர் என பன்முக ஈடுபாடுகளுடன் தமிழ் உலகில் இயங்கிவருகிறார்.பெண்ணியம் சார்ந்த கருத்துகளை முன்னெடுத்து இலக்கியம் படைத்து வருவது வெண்ணிலாவின் தனித்துவமாகும். அன்றாட வாழ்வின் இன்னல்களை புனைவுகள் ஏதுமின்றி படைப்பாக்குவது இவரது ஆற்றலாகும். இவர் எழுதிய படைப்புகள் ஆங்கிலம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நூல்கள் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி அளவிலான பாடத்திட்டங்களில் பாடமாகவும் இடம்பெற்றுள்ளன. 2009-2010 ஆம் ஆண்டு காலத்தில் தமிழகத்தின் சமச்சீர் கல்வி பாடத்திட்டக் குழுவில் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி புதிய பாடப்புத்தக உருவாக்கத்தில் பங்களிப்பு வழங்கியுள்ளார்.

17 COMMENTS

    • கடலை காணாத எழுத்தாளனால் பிறரின் வாய்மொழி வைத்து கடலை அப்படியே எழுத்தில் கொண்டுவந்துவிட முடியும். ஆனால் பெண்ணின் மனதை பெண்னைத்தவிர யாரால் சொல்ல முடியும். அற்புதமான படைப்பு. வாழ்த்துகள் வெண்ணிலா

  1. அருமையான, மேற்பூச்சு இல்லாமல் நேரடியாக பெண்களின் உடல், மாதவிடாய், குழந்தைபேறு, காமம் என நுண்ணர்வுகளைப் படம்பிடித்து காட்டும் அற்புமான கதை.

    பெண்களின் அகம் சென்று அவர்களின் எண்ண ஓட்டத்தை, கனவை, நிராசையை பார்த்துவிட்டு வந்த உணர்வு.

    வாழ்த்துக்களும், நன்றிகளும் தோழர்!!!

  2. பெண்ணின் நுண் உணர்வுகளை வரிக்கு வரி புரிய வைத்த விதம் இனிது.
    அறிவியல் புக் படித்த மாதிரி இருந்தது.

  3. அருமை அருமை… சில இடங்களில் நான் என்னையே உணர்கிறேன்….நல்ல படைப்பு..

    • நீண்ட நாட்களாக நான் பார்த்த பெண்களின் பரிதாப வாழ்க்கையை என்னையும் சேர்த்து எழுதிவிட்டீர்கள். கணவனின் துணையோடு தானே காமனை வென்றாக வேண்டும் பாடல் வரிகள் கேட்கிறது.

      கல்யாணமான புதிதில் திளைத்த உடம்பு படிப்படியாக குடும்ப சூழலுக்குள் அகப்பட்டு தனக்கே சுமையாகி போய்விடும்.

      மெனோபாஸ் ஆண்களுக்கும் உண்டென அறிவேன். ஆனால் அவர்கள் எப்படியான உணர்வுகளை பெறுவார்கள் தெரியவில்லை.

      ஒரு அன்பான அணைத்துலுடன் ஆதரவான வார்த்தைகளும் அடிக்கடி அணைத்துக்கொள்வதும் எங்கள் கலாச்சாரத்தில் கொலை பாதகமாயிற்றே. இங்கே வெளிநாடுகளில் கணவன் மனைவி சந்திக்கும் போதைல்லாம் ஒரு முத்தம் ஒரு அரவணைத்தல் கண்டிப்பாக இருக்கும்.

      ஏன்? அன்பாக சிரித்துப் பேசுவதற்கே எமது ஆண்களுக்கு நேரமில்லை.

      மெல்லிய உணர்வுகளால் ஆனதே காம்ம் அது பல நிலைகளில் நிறைவேற்றப்படவேண்டியது. வெறுமனே கால அட்டவணை போட்ட மாதிரி இரவு பத்திற்கும் பதினொன்றிற்குமிடையே ஏறி இறங்குவதல்ல.

      வாழ்க்கையின் எல்லாவற்றிற்கும் அடிப்படை இதுவே. மூல ஊற்று. ஆனால் எமது பெண்களுக்கு இளமையிலும் கிடைப்பதில்லை. நன்றாக எழுதியுள்ளீர்கள் வெண்ணிலா! முதலில் உங்கள் துணிச்சலை பாராட்டுகின்றேன்

  4. பழத்தின் அழகை
    பாராட்டுகின்றனர்
    வண்டின் குடைச்சலை
    யார் அறிவார்——அபியின் கவிதை நினைவில் வந்தது.

    வாழ்த்துகள் வெண்ணிலா. சீரிய தமிழ் நடைக்கு..

  5. எப்படி இவ்வளவு கச்சிதமாக பெண்கள் மனதில் புகுந்து மன உணர்ச்சிகளை அள்ளி வந்தீர்கள் வெண்ணிலாமா

  6. மிகவும் அருமையான கதை வாழ்த்துகள் மேடம்.

  7. மனதில் மிக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது இந்த கதை …

    இது கதையா இல்லை பல நூறு …லட்சம் பெண்களின் உணர்வுகள் … ….

    அவர்களின் உணர்வுகள் புரிந்துக் கொள்ளபடுமா ..இனியாவது …

  8. இது கதையல்ல. நிஜம். பெண்களின் நுண்ணுணர்வு.
    அற்புதம். வாழ்த்துகள் தோழர்.

  9. வரும் ஆண்டுகளில் தமிழின் தவிர்க்க முடியாத கதைகளில்
    இதுவும் இடம்பெறும் என நம்புகி
    றேன். துணிச்சல் . பயமின்மை.நேர்மை. ஔிவுமறையற்ற உணர்ச்சி ஓட்டம்.
    பெண்ணுடம்பின் தகவல்களின் குவியல். இப்படி அடுக்குகிறது கதை.

  10. மிக அற்புதமான நுண் உணர்ச்சிகளை தொடும் கதை. இதை இருபாலருக்கும் பொருத்தி பார்க்கலாம். அருமையான எழுத்து நடை. வாழ்த்துகள்.

  11. மிகவும் அருமையான எழுத்தாளுமை. ஆண்டாள், சூடிக்கொடுத்த சுடர்கொடியின் அர்த்தம் உங்களின் இக்கதையை வாசித்தபின்பு தான் உணர முடிந்தது. Superb.

  12. பெண் உணர்வுகளையும் உணர்வுகளால் அவள் அங்கீகரிக்கப்பாடததையும் மிக நேர்த்தியாக படைத்துள்ளமை மிகஅருமை……உணர்வுகளைப் பரிந்து கொள்ளும் ஆண்களில்லை… Fantastic… .

  13. பெண்ணின் உடலையும் மனதையும் ஒருசேர பிரதிபலிக்கும் படைப்பு. ஒவ்வொரு ஆண்களும் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய பாடம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.