காலநிலை நடவடிக்கைக்கு 100 சதவீத மக்களின் ஈடுபாடு தேவைப்படும் அதே நேரத்தில், பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது என்பது சிறந்த காலநிலைத் தீர்வுகளை அர்த்தமுள்ளதாக்கும்.
இங்கு ஏற்கனவே காலநிலை நெருக்கடி இருந்து வந்தாலும் அது அனைவரையும் சமமாகப் பாதிப்பதில்லை. பெண்களில் பெரியவர்களும் சிறியவர்களும், குறிப்பாக வறுமையின் சூழ்நிலைகளில், வழக்கமாக அவர்களுக்கு இருக்கும் பங்கு, பொறுப்புகள், கலாச்சார விதிமுறைகள் காரணமாக ஒப்பீட்டளவில் அதிக உடல் உபாதைகளைக் கொண்டிருக்கின்றனர். ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டத்தின் (UNDP) படி, பேரழிவில் இறப்பதற்கான ஆபத்து ஆண்களை விடப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் 14 மடங்கு அதிகம் எனத் தெரிய வந்திருக்கிறது. சுத்தமான சுற்றுச்சூழலுக்கான உரிமை என்பது வாழ்வதற்கான உரிமையின் வரம்பிற்குள் அடிப்படை உரிமையாக ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும் காலநிலை மாற்றத்தின் பாதகமான விளைவுகளிலிருந்து விடுபடுவதற்கு மக்களுக்கு உரிமை உண்டு என்றும் சமீபத்தில் இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
இந்தியாவில், குறிப்பாகக் கிராமப்புற இந்தியாவில் பெண்களுக்கு மிக முக்கியமான வாழ்வாதாரம் விவசாயம் ஆகும். காலநிலையின் போக்கால் ஏற்படும் குறைவான பயிர் விளைச்சல் உணவுப் பாதுகாப்பின்மையை அதிகரிப்பதோடு ஏற்கனவே ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கும் ஏழைக் குடும்பங்களை இது மோசமாகப் பாதிக்கும்.
சிறு மற்றும் குறு நில உரிமையாளர் குடும்பங்களுக்குள், செலுத்தப்படாத கடன்கள் (இடம்பெயர்வுக்கும், மன உளைச்சலும், சில சமயங்களில் தற்கொலைக்கு வழிவகுக்கிறது) காரணமாக ஆண்கள் சமூக இழிவை எதிர்கொள்கிறார்கள். இதனால் பெண்கள் அதிக வீட்டு வேலைச் சுமைகளையும், மோசமான உடல்நிலை பாதிப்பையும், நெருக்கமான உறவு கொண்டிருப்போரால் ஏற்படும் வன்முறையையும் அனுபவிக்கின்றனர். தேசியக் குடும்பச் சுகாதார ஆய்வு (NFHS) 4 மற்றும் 5 தரவுகளின்படி, கடந்த 10 ஆண்டுகளில் வறட்சி இல்லாத மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வசிக்கும் பெண்கள் அதிகமான அளவுக்கு எடை குறைந்தவர்களாகவும், நெருங்கிய உறவினரின் வன்முறையை அனுபவிப்பவர்களாகவும், சிறுவயது பெண்களின் திருமணம் பரவலாக இருப்பதாகவும் குறிப்பிடுகிறது. பெண்களைப் பொருத்தவரை, அதிகரித்து வரும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பின்மை, வேலைச் சுமைகள், வருமானம் மீதான நிச்சயமற்ற தன்மை ஆகியவை மோசமான உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுப்பதோடு அவர்களின் மன ஆரோக்கியத்தையும் உணர்ச்சிரீதியிலான நலனையும் பாதிக்கிறது.
தீவிர நிகழ்வுகளும் பாலின அடிப்படையிலான வன்முறையும்:
அதிகரித்து வரும் தீவிர வானிலை நிகழ்வுகளையும் காலநிலையால் தூண்டப்பட்ட இயற்கை ஆபத்துகளையும் உலகம் கண்டு வருகிறது. ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சிலின் (Council on Energy, Environment and Water – CEEW) 2021 ஆம் ஆண்டு அறிக்கையானது இந்தியாவில் 75 சதவீத மாவட்டங்கள் ஹைட்ரோமெட் (hydromet – நீரியல் + காலநிலையியல் ) பேரழிவுகளால் (வெள்ளம், வறட்சி மற்றும் சூறாவளி) பாதிக்கப்படக்கூடியவை எனக் கூறுகிறது.. ஐந்தாவது தேசியக் குடும்பச் சுகாதார ஆய்வின் தரவானது இந்த மாவட்டங்களில் வாழும் பெண்களும், குழந்தைகளும் பாதிக்கு மேல் ஆபத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது. இந்த இயற்கைப் பேரழிவுகளுக்கும் பெண்களுக்கு எதிரான பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கும் இடையே நேரடித் தொடர்பு இருப்பதாகக் கூறும் ஆய்வுகள் அதிகரித்து வருகின்றன. . மேலும், தீவிர வானிலை நிகழ்வுகளும் நீர் சுழற்சி முறைகளில் ஏற்படும் மாற்றங்களும் பாதுகாப்பான குடிநீருக்கான அணுகலைக் கடுமையாகப் பாதிப்பதோடு வேலையைக் கடுமையாக்கி உற்பத்தித் திறனையும் அனைத்து வயது பெண்களின் ஆரோக்கிய பராமரிப்புக்கான நேரத்தையும் குறைக்கிறது.
மனித வரலாற்றில் இதுவரை பதிவு செய்யப்படாத வெப்பம் கடந்த தசாப்தத்தில் இருந்ததோடு இந்தியா போன்ற நாடுகள் இதற்கு முன் இல்லாத அளவுக்கு வெப்ப அலைகளை எதிர்கொள்ள வாய்ப்பிருக்கிறது. நீடித்த வெப்பமானது கர்ப்பிணிப் பெண்களுக்கும் (முன்கூட்டிய பிறப்பு மற்றும் பேறுகால வலிப்பு போன்ற அபாயத்தை அதிகரிக்கும்), இளம் குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் ஆபத்தானது. இதேபோல், காற்றில் (வீட்டுக்குள்ளும் வெளியிலும்) இருக்கும் மாசுவானது பெண்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது. இதனால், சுவாசம் மற்றும் இருதய நோய்களை ஏற்படுத்துவதோடு கருவுக்குள் வளர்ந்து வரும் குழந்தையின் உடல் வளர்ச்சியையும் அறிவாற்றலையும் பாதிக்கிறது. காற்று மாசுபாட்டின் மிகவும் கவலைக்குரிய அம்சங்களில் ஒன்று வளர்ந்து வரும் மூளையில் அது ஏற்படுத்தும் தாக்கம் ஆகும். இந்தியாவில் ஒத்த கருத்தின் மீதான ஆய்வுகள் மூலம் பெறப்படும் தரவுகள், ஒரு கன மீட்டரில் இருக்கும் PM2.5 இல் 10 மைக்ரோகிராம் அதிகரிக்குமென்றும், நுரையீரல் புற்றுநோய்க்கான அபாயம் 9 சதவீத அளவுக்கும் இருதய நோய் ஏற்பட்ட நாளன்றே இறப்பதற்கான ஆபத்து 3 சதவீத அளவுக்கும் பக்கவாதம் 8 சதவீத அளவுக்கும் அதிகரிக்குமென்றும் கூறுகின்றன. டிமென்ஷியாவிற்கு, PM2.5 இல் வருடத்துக்கு 2 மைக்ரோகிராம் அதிகரிக்கும்பட்சத்தில் ஆபத்தானது 4 சதவீத அளவுக்கு அதிகரித்திருக்கிறது எனவும் தெரிய வந்திருக்கிறது.
ஒரே புவியியல் அல்லது வேளாண்-சுற்றுச்சூழல் மண்டலத்தில் இருந்தாலும் எல்லாப் பெண்களுக்குமான ஆபத்து சமமாக இருப்பதில்லை. எனவே, காலநிலை மாற்றம் ஒரு தனித்துவமான பாலின பரிமாணத்தைக் கொண்டிருந்தாலும், சில துணைக் குழுக்களை மிகவும் பாதிப்புக்குள்ளாகும் என்பதற்கு கூடுதல் சான்றுகளோடு கூடுதல் பாதுகாப்பும் தேவையாகும்.
பெண்கள் ஏன் காலநிலை நடவடிக்கைக்குத் தேவை?
உலக வெப்பநிலை அதிகரிப்பை 1.5° சென்டிகிரேடுக்குள் கட்டுப்படுத்தும் பாரிஸ் உடன்படிக்கையின் இலக்கை அடைய வேண்டுமென்றால், காலநிலை நடவடிக்கைக்கு 100 சதவீத மக்களும் தேவைப்படுகிறார்கள். அதே நேரத்தில், பெண்களுக்கு அதிகாரம் அளித்தால் அது சிறந்த காலநிலை தீர்வுகளைக் குறிப்பதாக இருக்கும்; ஆண்களுக்கு நிகரான வளங்கள் கொடுக்கப்பட்டபோது, பெண்கள் அவர்களின் விவசாய விளைச்சலை 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை அதிகரித்தனர். குறிப்பாகப் பழங்குடியினரும் கிராமப்புற பெண்களும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முன்னணியில் இருந்து வருகின்றனர். பெண்களுக்கும் பெண்களின் அமைப்புகளுக்கும் (சுயஉதவிக் குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள்) அறிவு, கருவிகள் மற்றும் வளங்களுக்கான அணுகலை வழங்கினால் அது உள்ளூர் அளவில் தீர்வுகள் காண்பதை ஊக்குவிக்கும். வெப்பம், காற்று மாசுபாடு, நீர் மற்றும் உணவுக்கான அணுகல் ஆகியவை சூழலுக்கு ஏற்ப மாறுபடும் என்பதால் நடவடிக்கைகளைப் பின்பற்றுவது கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் வேறுபட்டதாக இருக்கும்.
வெப்ப அலையும் தண்ணீர்ப் பற்றாக்குறையும்:
தரவுகளில் உள்ள இடைவெளிகளும் (பல சமூக விளைவுகளுக்கான பாலினரீதியில் வகைப்படுத்தப்பட்டத் தரவுகள்) விஷயங்களும் கூடுதல் ஆராய்ச்சி மூலம் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்றாலும், உடனடி நடவடிக்கை தேவைப்படும் பகுதிகளும் இருக்கின்றன. முதலாவதாக, முன்னுரிமை குழுவினருக்கு (வெளிப்புறத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள், கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தைகள், சிறார்கள் மற்றும் முதியவர்கள்) நீடித்த வெப்பம் ஏற்படுத்தும் தாக்கத்தை குறைக்க வேண்டும். வெப்ப அலை நாட்களில் அதிகப்படியான இறப்புகள் இருப்பதாக பல இந்திய நகரங்களின் தரவுகள் காட்டுகின்றன, இருப்பினும் அவை அப்படியே ஏற்றுக் கொள்ளப்படவில்லை. உற்பத்தித்திறனில் ஏற்படும் இழப்பானது சிறிய மற்றும் பெரிய வணிகங்களையும், நமது பொருளாதாரத்தையும் பாதிக்கும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், நகராட்சி நிர்வாகம் மற்றும் அனைத்து பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட அதிகாரிகள் ஒரு திட்டத்தை உருவாக்கி செயல்படுத்துபவர்களில் முக்கியமானவர்களுக்கு பயிற்சியையும் வளங்களையும் வழங்க வேண்டும். வெப்ப அலை எச்சரிக்கைகள் (உள்ளூர் வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தின் அடிப்படையில்), வெளிப்புற வேலைகளுக்கும் பள்ளிகளுக்குமான நேர மாற்றம், சுகாதார அமைப்புகளில் குளிரூட்டும் அறைகள், குடிநீர் வசதி ஆகியவற்றோடு இறப்புகளைக் குறைக்கும் வகையில் வெப்பத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு உடனடி சிகிச்சைக்கான வசதி ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். கூடுதலாக, மர நிழலை அதிகரிக்கும் வகையிலான நகர்ப்புற திட்டமிடுவது, கான்கிரீட் பயன்பாட்டைக் குறைப்பது, பச்சை-நீல வெளியை (மரங்கள் மற்றும் நீர்நிலைகள்) அதிகரிப்பது, வெப்பத்தைத் தாங்கும் வகையில் வீடுகளை வடிவமைப்பது ஆகியவை நீண்ட காலச் செயல்களாகும். உதய்பூரில் உள்ள மஹிலா ஹவுசிங் டிரஸ்ட், குறைந்த வருமானம் கொண்ட வீடுகளின் கூரைகளுக்கு வெள்ளை நிற பெயிண்ட் அடித்ததன் மூலம் உட்புற வெப்பநிலையை 3° சென்டிகிரேட் முதல் 4° சென்டிகிரேட் வரை குறைத்து வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியது.
தண்ணீர் பற்றாக்குறை என்பது நமது இருப்புக்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால் ஒருங்கிணைந்த சமூக நடவடிக்கை தேவை. குளங்கள், கால்வாய்கள் போன்ற சேமிப்புகளுக்கான அமைப்புடன் மழைநீர் சேகரிப்பிலும் மிகவும் முன்னேறிய அமைப்பைக் கொண்ட ஒன்றாக பாரம்பரியமாகவே இந்தியா இருந்து வருகிறது. எம்.எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் புவியியல் தகவல் அமைப்புகளைப் பயன்படுத்தி பஞ்சாயத்து அளவில் முக்கிய நீர் ஆதாரங்களை வரைபடமிட்டு அதற்கு ஏற்படவிருக்கும் பாதிப்புகளையும் காலநிலை அபாயங்களையும் கண்டறிந்து, அரசாங்க திட்டங்களையும் ஆதாரங்களையும் ஒழுங்கமைப்பதன் மூலம் நீர் அணுகலை மேம்படுத்த உள்ளூர் திட்டத்தை உருவாக்க முடியும் என்று காட்டியது.
கிராம அளவில் வேலை:
துறைகள், சேவைகளின் ஒருங்கிணைப்போடு செயல்களுக்கு முன்னுரிமை அளிப்பது கிராமம் அல்லது பஞ்சாயத்து மட்டங்களில் மிகவும் சிறப்பாக நடக்கும். சமூகத்தின் தலைமையிலான பங்கேற்பு வழியில் மீள்திறனை எவ்வாறு உருவாக்குவது என்பதை நிரூபிக்கும் இந்தியாவின் வழி என்னவெனில் அதிகாரங்கள் மற்றும் நிதிகளின் பகிர்வும், பஞ்சாயத்து மற்றும் சுய உதவிக் குழு உறுப்பினர்களின் திறனை வளர்ப்பதில் முதலீடு செய்வதும் ஆகும்.
இறுதியாக, காலநிலை மாற்றம் குறித்த அனைத்து மாநில-செயல் திட்டங்களுக்கும் பாலினரீதியிலான பார்வை வேண்டும். பருவநிலை மாற்றத்திற்கான தேசியச் செயல் திட்டம் (NAPCC) மற்றும் காலநிலை மாற்றத்திற்கான மாநில செயல் திட்டம் (SAPCC) ஆகியவை பெண்களின் மீதான தாக்கங்களை எடுத்துக்காட்டினாலும் அவை பெரும்பாலும் அவர்களைப் பாதிக்கப்பட்டவர்களாகச் சித்தரிக்கிறதே தவிர ஆழமான பாலினப் பார்வை இல்லை. இருபத்தெட்டு SAPCC களின் மதிப்பாய்வானது மாற்றத்திற்கான அணுகுமுறைகளில் இருக்கும் குறைபாட்டைக் காட்டியது, ஒரு சில மாநில அமைப்புகள் மட்டும் பெண்களை மாற்றத்தின் முகவர்களாக அங்கீகரித்திருக்கின்றன. அனைத்துப் பாலினங்களின் பாதிப்புகளை அங்கீகரிப்பதையும், பாலின-மாற்ற உத்திகளைச் செயல்படுத்துவதையும், காலநிலை தழுவலுக்கு ஒரு விரிவான மற்றும் சமமான அணுகுமுறையையும் உறுதி செய்வதோடு ஒரே மாதிரியான கருத்துக்களுக்கு அப்பால் செல்ல வேண்டியதன் அவசியத்தையும் SAPCC களின் தற்போதைய திருத்தத்திற்கான பரிந்துரைகள் வலியுறுத்துகின்றன. . பாதிக்கப்பட்டவர்கள் என்று முத்திரை குத்தப்படுவதற்குப் பதிலாக, காலநிலை நடவடிக்கைகளில் பெண்கள் முன்னணியில் நின்று வழிநடத்த முடியும்.
டாக்டர் சௌமியா சுவாமிநாதன் – தலைவர்,எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை, சென்னை