வெயில் பளபளவெனக் காய்ந்தது. செல்வியின் செம்பட்டை முடி வெய்யிலில் மினுங்கியது. வேப்பம் பழங்கள் பொறுக்குவதற்காக அவளும், கவிதாவும் அந்தக் காட்டிற்கு வந்திருந்தனர். காற்று இல்லாததால் பழங்கள் நிறைய உதிர்ந்திருக்கவில்லை. இரண்டு மணி நேரமாகப் பொறுக்கி அரை மடிதான் நிறைந்திருக்கிறது. வெய்யில் வேறு கொளுத்தி எடுத்ததில் செல்விக்கு நாவு மேலன்னத்தில் ஒட்டிக் கொண்டது. கண்ணுக்கு கை வைத்து மறைத்தபடி அண்ணாந்து மேலே பார்த்தாள். கண்கள் கூசியது. கூட்டிய மடியில் பாதி நிறைந்திருந்த வேப்பம் பழங்களின் வாசனை கிறக்கியது. சோர்வு உந்தித் தள்ள அவள் அடர்ந்து நிழல் தந்து கொண்டிருந்த ஒரு வேப்பமரத்தின் கீழே உட்கார்ந்தாள்.
குனிந்தவாறே பழங்களைச் சேகரித்துக் கொண்டிருந்த கவிதா நிமிர்ந்து அவளைப் பார்த்தாள். சிரித்தபடியே “ஏன்? முடியலியா?” என்றாள்.
“தண்ணி தவிக்குது” என்றாள் செல்வி. கடல் போல் பொங்கி பரவும் வெயிலை நின்றபடியே கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள் கவிதா. பிறகு, ஒரு சிறிய குச்சியால் நிலத்தைக் கீறி எதையோ வரைந்து கொண்டிருந்த செல்வியின் அருகே வந்தமர்ந்தாள்.
அவளிடமிருந்து புளித்த மோரின் வாசனை வீசியது. அவளுடைய சட்டையின் வலது கை பக்கத்தில் வியர்வை உப்பு திட்டுத் திட்டாய்ப் படிந்திருந்தது.
வெய்யிலைப் பார்த்தவாறே “தண்ணி எடுத்துட்டு வந்துருக்கணும்” என்றாள்.
அவளுடைய இடது கையில் முக்கோண வடிவில் மூன்று புள்ளிகள் பச்சை குத்தப்பட்டிருந்தன.
அதைப் பார்த்தபோது செல்விக்கு மல்லிகாவின் ஞாபகம் வந்தது. அவளுடைய இடது கையிலும் இதே போல பச்சை குத்தப்பட்டிருக்கும். போன வருட கோடை மாதத்தின் ஒரு பிற்பகல் நேரத்தில் மல்லிகா கணேசனுடைய பெயரை கையில் எழுதச் சொல்லும் பொருட்டு அவள் வீட்டு ஜன்னல் அருகே நின்றபடி ரகசியமாய் அவளை அழைத்தது நினைவுக்கு வந்தது.
எவ்வளவு வருடங்கள் ஆகிவிட்டது அவளைப் பார்த்து?! செல்விக்கு மலைப்பாக இருந்தது.
மல்லிகா செல்வியை விட எட்டு வயது மூத்தவள். செல்விக்கு நினைவு தெரிந்து மல்லிகா பள்ளிக்கூடம் போய் பார்த்ததில்லை.
அவள் அம்மா, “பள்ளிகோடத்துக்குத்தான் போகல. இங்கிருந்து வூட்டு வேலையாச்சும் ஒழுங்கா பார்க்கலாமில்ல எந்நேரமும் பாட்டு கேட்கறதும், சின்ன புள்ளைகளை கூட்டி வெச்சு பேசிகிட்டு இருக்கிறதும்” எனப் புலம்பியபடி இருப்பாள். சில சமயங்களில் மல்லிகாவை அடிக்கவும் செய்வாள். அப்போது மல்லிகா போடும் சத்தம் அநேகமாக அந்தத் தெருவில் எல்லோர் வீடுகளுக்கும் கேட்கும். அழுகை, கூப்பாடு எல்லாம் கொஞ்ச நேரம்தான். பிறகு எதுவுமே நடக்காத மாதிரி முகத்தைத் துடைத்துக் கொண்டு தெருவைப் பார்த்து அமைந்திருந்த திண்ணைக்கு வந்து விடுவாள்.
பகலில் தெரு குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கும், பெரியாட்கள் காடு கரைகளுக்கும் போன பிறகு, வயதானவர்கள் மட்டுமே வீட்டில் எதையாவது உருட்டிக் கொண்டும், வெளித் திண்ணையில் அமர்ந்து தெருவின் அமைதியைக் கிழிக்கும்படி உரலில் வெற்றிலை பாக்கு இடித்தபடியும் அமர்ந்திருப்பார்கள்.
அந்த நேரங்களிலெல்லாம் மல்லிகா அருகிலோடும் பள்ளத்திற்குப் போய் துணிகளைத் துவைத்து, உலர்த்தி வீடு திரும்புவாள். இங்கே வந்து வீட்டிலுள்ள மிச்ச வேலைகளை செய்தாலும் அவை சீக்கிரமே முடிந்துவிடும். ரேடியோ கேட்டு, சாப்பிட்டு, படுத்துப் புரண்டு நெளிந்தாலும் பகல், மண்புழுவை போல அவள் பொறுமையைச் சோதித்தபடி மெதுவாக நகரும்.
மல்லிகாவிற்கு அந்த தனிமை தாங்க முடியாததாக இருந்தது. முன்பு போல பஞ்சு மில்லிற்கு வேலைக்குப் போனால் கூடப் பரவாயில்லை என்று நினைத்தாள். அங்கே வேலை கிடைத்த போது அம்மா ரொம்ப சந்தோஷப்பட்டாள். வேலைக்குப் போய் வர கம்பெனிக்காரர்களே இலவசமாக சைக்கிள் கொடுத்தார்கள். அது போக மாதம் ஆயிரத்து ஐநூறு ரூபாய் சம்பளம். அவளோடு எட்டாவது வரை ஒன்றாகப் படித்த கயல்விழி தான் அவளை அங்கே சேர்த்து விட்டாள். அவள் பள்ளிக்கூடத்தை விட்டு நின்ற உடனே கம்பெனி வேலைக்குப் போய் விட்டாள். ஐந்து வருடங்களாக அங்கேதான் வேலை பார்க்கிறாள். மூன்று மாதத்திற்கு முன் அவளுக்குக் கல்யாணம் ஆன போது கூட , முதலாளி தன் மனைவியோடு காரில் வந்திருந்தார். சிறிது நேரம் இருந்து ரமேஷ் ஓடிப்போய் வாங்கி வந்த கலர் குடித்துவிட்டு, அரை பவுன் காசை அன்பளிப்பாக மணமக்கள் கையில் கொடுத்து விட்டுப் போனார். அங்கே இருந்த எல்லோருக்கும் அந்த நாள் முழுவதும் இதே பேச்சாகத் தான் இருந்தது.
மல்லிகா கூட தானும் இது போல் நிறைய நாட்கள் வேலை செய்து கல்யாணத்தின் போது அரைப்பவுன் வாங்கி விட வேண்டுமென்று நினைத்தாள். என்ன சாயங்காலம் வீடு திரும்பும் போது தலை முடியெல்லாம் பஞ்சாக அப்பியிருக்கும். அது ஒன்றுதான் அவளுக்குச் சங்கடமாக இருந்தது. மற்றபடி வேறு எந்தப் பிரச்சினையும் அவளுக்கு இல்லை. அதுவும் அங்கே சூப்பர்வைசராக வேலை செய்து வந்த கதிர்வேலை நினைக்கும்போது ஞாயிற்றுக் கிழமை கூட வேலைக்குப் போய் விடலாம் போலத்தான் இருக்கும்.அவனுக்கும் கூட அதே ஊர்தான். ஆனால் வேறு வளவில் குடியிருந்தார்கள்.
மல்லிகா வேலை பார்த்துக்கொண்டு நிற்கும் போது அவன் வந்து ஏதாவது பேச்சுக் கொடுப்பான். இவளும் விளையாட்டாய் ஏதாவது சொல்வாள். ஒரு நாள் உணவு இடைவேளையில் இவள் தன் தோழிகளோடு உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அவன் அவர்கள் நான்கு பேருக்கும் கேன்டீனில் இருந்து வடை அனுப்பி வைத்தான். கயல் அவ்வப்போது அதைச் சொல்லிக் கிண்டல் செய்வாள்.
“நல்லாப் பேசாதப்பவே வடை கிடையெல்லாம் வருதே. என்ன மல்லி ? ரெண்டொரு வார்த்தை நல்லாத்தான் பேசேன். உன் புண்ணியத்துலே கேன்டீன்லே வேணும்கிறதைச் சாப்பிட்டுக்கறோம்” என்று சொல்லிச் சிரிப்பாள். மல்லிகாவிற்கும் ஆசைதான். ஆனால் அவர்களுடைய ஊரைச் சேர்ந்த நிறையப் பேர் அங்கே வேலை பார்த்தார்கள். அதனால் அங்கே பேசிக்கொள்ள இருவருக்குமே பயமாக இருந்தது.
இரண்டு மூன்று முறை இவர்களுடைய மில்லிற்கு சற்று தள்ளி இருந்த மணீஸ் கூல் பாரில் அவன் இவளுக்கு ரோஸ் மில்க் வாங்கித் தந்து சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள்.. அதைப் பார்த்த யாரோ ஒருவர் அம்மாவிடம் போய் சொல்லிவிட , அம்மா ரொம்ப பயந்து போனாள்.
” அய்யோ .. நீ வேலைக்குப் போறேன் போறேன்னு ஊர்லே இருக்கிற வம்பையெல்லாம் இழுத்து வுட்ராதடி. அவங்க பொல்லாப்பெல்லாம் நமக்கு ஆகாது” என்றாள். அதோடு வேலைக்குப் போவதையும் தடுத்து விட்டாள்.
“அப்படியெல்லாம் ஒன்னும் இல்லம்மா. வேணும்னா இனிமே பேசலை” என்று எவ்வளவு அழுதும் கெஞ்சியும் கூட வேலைக்காகவில்லை.
” வீட்டுல எத்தனை வேலை கிடக்குது. அதைப் பாத்துட்டு சும்மா இரு. கொஞ்ச நாள் போகட்டும் உங்க சின்ன மாமன் கிட்ட சொல்லி அவம் போற எடத்துல ஏதாவது வேலை வாங்கித் தரச் சொல்றேன்” என்றாள். இரண்டு வருடம் போய்விட்டது. இன்னும் வேலைக்கு போன பாடில்லை. இப்படியே இந்த அரவமற்ற பகல் தெருவைப் பார்த்தபடியே நேரம் போய்க் கொண்டிருந்தது.
மாலை வேளைகளில் பள்ளி முடிந்து வீடு திரும்பும் செல்வியைப் கண்டால்தான் அவளுக்கு சந்தோஷமே.
அவளுக்கு என்னவோ செல்வியை ரொம்பப் பிடித்திருந்தது. மற்றவர்களிடம் பகிராத நிறைய ரகசியங்களை அவள் செல்வியிடம்தான் பகிர்ந்து கொள்வாள். கோடை காலங்களில் பிள்ளையார் கோவிலுக்கு தண்ணீரூற்றப் போகும்போது இவளைத்தான் அதிகாலையில் எழுப்பிக் கூட்டிச் செல்வாள். அப்படி ஒரு நாளில்தான் ரங்க மாதாரி கடலைக் காட்டில் சரோஜாவின் கையைப் பிடித்துத் தடவி தப்பு செய்து கொண்டிருந்த செய்தியையும், ஒருநாள் மல்லிகா குளித்துக் கொண்டிருந்தபோது அவளுடைய பெரியப்பா ஓலைத் தடுக்குகளின் இடைவெளி வழியே அவள் குளித்ததைப் பார்த்துக் கொண்டிருந்ததையும் செல்வியிடம் தெரிவித்தாள்.
முதன்முதலாக அவள்தான் செல்வியை சினிமாப் பார்க்க தியேட்டருக்குக் கூட்டிப் போனவள். “நால்ரோடு தேட்டருளே கமலஹாசம் படம் போட்டுருக்கராங்க செல்வி. உங்கம்மாகிட்ட சொல்லிட்டு வா கூட்டிட்டு போறேன்” என்று கலைஞன் படத்திற்கு அழைத்துச் சென்றாள். படம் ரெண்டு பேருக்கும் பெரிதாகப் புரியவில்லை. ஆனால் மல்லிகாவிற்கு கமலஹாசனைப் பார்த்ததே போதுமாயிருந்தது. அதில் கமலுக்கு ஜோடியாக நடித்த நடிகையை அந்த மாசம் முழுவதும் திட்டிக் கொண்டிருந்தாள்.
அப்போது கேபிள் டிவி வந்த புதிது. பகல் முழுவதும் தனிமையில் மூச்சு முட்டக் கிடந்த மல்லிகாவிற்கு அது வரபிரசாதமாகத் தெரிந்தது. அவள் வீட்டில் இருந்த சிறிய போர்ட்டபில் கருப்பு வெள்ளை டிவி க்கு அவள் அம்மாவை அதட்டி, உருட்டி, கெஞ்சி கேபிள் கனெக்ஷன் வாங்கினாள். அதில் அவளுக்கு ரொம்பப் பெருமை.
ஒரு முறை மர்ம தேசம் பார்க்க அருகாமைத் தோட்டத்தில் வசிக்கும் நவமணி கவுண்டச்சி வீட்டுக்கு போய் இருந்தோம். உள் வாசலுக்குள் கூட அவர்கள் நுழைய விட மாட்டார்கள். வெளி வாசலில் அமர்ந்ததான் நாடகம் பார்க்க வேண்டும். நாங்கள் போனதும் வேண்டுமென்றே அந்த வீட்டுக் குழந்தைகள் சத்ததைக் கூட்டுவதும் உயர்த்துவதுமாக இருந்தார்கள். ஒரு தட்டு நிறைய முறுக்கு எடுத்துக்கொண்டு இவர்களுக்கு மறைக்கும் படியாய் கட்டிலைப் போட்டுப் படுத்தபடியே சாப்பிட்டார்கள். மல்லிகாக்கா சிறிது சத்தமாக ” கொஞ்சம் தள்ளிக்கங்க சாமி, டிவி பொட்டி மறைக்குது “என்றாள். “நகரவெல்லா முடியாது, தெரிஞ்சாப் பாரு, தெரிலீனா எந்திரிச்சுப் போ” என்றாள் நவமணி அம்மாவின் மூத்த பெண் சுதா. எதுவும் சொல்லாமல் அவளை முறைத்துப் பார்த்து விட்டு எங்களை திரும்ப அழைத்துக்கொண்டு வந்து விட்டாள் மல்லிகாக்கா. அதிலிருந்து அங்கே படம் பார்க்கப் போவதில்லை.
கேபிள் டிவி வந்தாலும் வந்தது சாயங்காலம் பள்ளிக்கூடம் விட்டதும் பிள்ளைகள் முதல் வேலையாக அங்கே தான் ஓடினார்கள். மல்லிகாக்கா முகம் கொள்ளாப் பூரிப்புடன் வீட்டிற்குள் வளைய வருவாள். “இனிமே எல்லா நாடகமும் இங்கேயே பாதுக்கலாம் .யார் வீட்டுக்கும் போக வேண்டியதில்லை” என அடிக்கடி சொல்லிக் கொள்வாள்.
ஒரு நாள் ஜென்டில்மேன் படம் போட்டிருக்கிறானென அவள் உரத்த குரலில் அழைத்த போது, காபியை, குடித்தும் குடிக்காமலும் ஓடத் தயாரான செல்வியை அவள் அம்மா அதட்டி நிறுத்தினாள். “இனிமே அங்கே போற வேலையெல்லாம் வெச்சுக்காதே. அவ கிட்ட பேசவே கூடாது” என கண்டிப்பான குரலில் அவள் சொன்னபோது செல்விக்கு திக்கென்றது. ஒன்றும் பேசாமல் போய் படுத்த போது ஆற்றாமையில் அழுகை பொங்கியது. அழுதபடியே உறங்கி விட்டாள்.
செல்விக்கு மட்டுமல்ல, முத்து லட்சுமி, சாந்தி, ரேவதி என எல்லோருக்குமே அவளுடன் பேசத் தடை விதிக்கப்பட்டிருப்பது பிறகுதான் தெரிந்தது. முத்து லட்சுமிதான் சொன்னாள். மல்லிகா கேபிள் கணேசனுடன் பழகுவதாகவும், துணிக்கடைக்குப் போவதாகச் சொல்லிவிட்டு அவனோடு சென்று பவானிசாகர் அணையில் உட்கார்ந்திருந்த போது அவளுடைய சித்தப்பா மகனொருவன் பார்த்து, அவளை அடித்து இழுத்து வந்ததாகவும் தெரிவித்தாள்.
கணேசனை நினைக்க நினைக்க செல்விக்கு எரிச்சலாக இருந்தது. இந்த கேபிள் டிவி வந்த பிறகு அவன் மவுசு ரொம்பத்தான் கூடிவிட்டது. அது வரும் வரை அவனை யாரும் பெரிதாகப் பொருட்படுத்தியதில்லை. அவனுடைய வலது கால் இடது காலை விட சற்றே உயரம் குறைந்திருக்கும். அதனால் அவன் நடக்கும்போது குதித்துக் குதித்து நடப்பது போலத் தோன்றும். ஊருக்குள் பொடிசுகள் எல்லாம் அவனை “வாத்து நடையான் வாத்து நடையான்” என்று வம்பிழுப்பார்கள். குருசாமி டெய்லர் கடையில் கூடும் இளவட்டங்களின் கூடுகையிலும் சரி, பஞ்சாலைக்குப் போய்த்திரும்பும் இளைஞர்களின் சாயங்காலக் கூடுகையிலும் சரி அவனுக்கு எப்போதுமே பெரிதாக இடம் இருந்ததில்லை.
இவனுடைய வளவளப் பேச்சும், இவன் எடுத்து விடும் சுயபிரதாபக் கதைகளும் அவர்களுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை என்றாலும் கூட, அவனுடைய அப்பா கந்து வட்டிக்கு விட்டு கையில் கொஞ்சம் காசு பணம் சேர்த்து வைத்திருப்பதால் அவனைக் அவர்கள் சிறிது சகித்துக் கொண்டார்கள். ஆனால் கொடிவேரி அணைக்குக் குளிக்கப் போகும்போதோ, குழந்தை மாதிரி திக்கித் திக்கிப் பேசும் ப்ரேமாவின் அப்பா வைத்திருக்கும் டீ ஸ்டாலுக்குப் போகும்போதோ இவனை மறந்தும் அழைத்துச் செல்ல மாட்டார்கள்.
கேபிள் டிவி நடத்தும் வெங்கடேசு அண்ணனிடம் எப்படியோ எதையோ சொல்லி அவனுடைய அப்பா அவனைக் கேபிள் ஆப்பரேட்டராகச் சேர்த்து விட்ட பின் அவனுக்கு வந்த வாழ்வைச் சொல்லி மாளாது. ப்ளூ கலர் லூனா வண்டியில் சும்மா அதற்கும் இதற்குமாய் பறந்து கொண்டே இருப்பான்.
மல்லிகாக்கா வீட்டிற்கு கேபிள் கனக்க்ஷன் தந்த ஒரு மாதத்திலேயே அரசல் புரசலாக இப்படி ஒரு பேச்சு வந்தது. செல்வி அவற்றைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஊருக்குள் குரல் உடையத் தொடங்கி இருந்த பயல்கள் கூட “அடிச்சுட்டான்டா கணேசன் லக்கி ப்ரைஸ்” என்று பாதி ஆற்றாமையும், பாதிக் கிளுகிளுப்புமாகப் பேசித் திரிந்தார்கள்
ஆனால் செல்வி பெரிதாக இதையெல்லாம் நம்பவில்லை. அவள் அழகுக்கும், மதிப்புக்கும் கணேசனைப் ஏறெடுத்தும் பார்ப்பாளா என்று நினைத்தாள். மல்லிகா எப்படிப்பட்ட அழகு. அவளுடைய உயரமும், அந்த சீரான பல் வரிசையும் இங்கே எவளுக்கிருக்கிறது? வழுவழுவென்றிருக்கும் அந்த நீலக் கலர் புடவையைத் தழையத் தழைய உடுத்திக் கொண்டு அவள் திருவிழாவில் வளைய வருகையில் வாயைப் பிளக்காத யார் தான் இந்த ஊரில் இருக்கிறார்கள்? ஆனால் அவள் நடையும், பேசுகிற தோரணையும், ஒரு ஆண்பிள்ளையுடையது போலத்தான் இருக்கும்.
“இத்தன அழகுக்கு ஒன்னு ரெண்டு ஒச்சமும் வேண்டாமா?” என்பாள் தனாக்கா.
ஆனால் அது கூடச் செல்விக்கு ஒச்சமாகத் தெரியாது. அப்படியாகப்பட்ட மல்லிகா போயும் போயும் இந்தக் கணேசனை விரும்புவாளா? எனவே யார் எப்படிப் பேசியபோதும் செல்வி மட்டும் இவற்றையெல்லாம் நம்பவே இல்லை. ஒரு நாள் மல்லிகா ஜன்னலருகே நின்று செல்வியை ரகசியமாக அழைத்து கணேசனுடைய பேரைக் கையில் எழுதச் சொன்னபோதுதான் அவளால் முழுமையாக நம்ப முடிந்தது.
ஒருநாள் செல்வி பள்ளிக்கூடம் விட்டு வீடு திரும்பும்போது மல்லிகாவின் வீட்டருகே ஒரே கூட்டமாய் இருந்தது. அவள் அம்மா அழுவது தெருமுனை வரைக் கேட்டது. பையை வாசலில் எறிந்துவிட்டு பாவாடையை உயர்த்திப் பிடித்தபடி செல்வி ஒரே ஓட்டமாக அங்கே ஓடினாள். மல்லிகா அக்காவின் அம்மா வாசற்படியில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள். தனக்காவும், செல்வியின் அம்மாவும் அவளைத் தேற்றிக் கொண்டு இருந்தார்கள். “இந்த நொண்டிப் பயலுக்கு வேண்டி இன்னும் என்னல்லாம் பண்ணுவாளோ” என்றபடி முந்தானையை எடுத்து மூக்கைச் சிந்தினாள் அவள். செல்வி கூட்டத்திலிருந்து நகர்ந்து, மல்லிகா எங்காவது தென்படுகிறாளா என்று சுற்றிலும் தேடினாள். அவள் பிளேடில் கையை அறுத்துக் கொண்டதால், ராசண்ணனும், கோபாலண்ணனும் ஆஸ்பத்திரிக்கு கூப்பிட்டுப் போயிருப்பதாக ரமேஷ் சொன்னான்.
இரண்டு நாட்கள் கழித்து வீடு திரும்பியிருந்த மல்லிகாவைப் பார்க்க செல்வி போனபோது அவள் உள்ளறையில் படுத்திருந்தாள். செல்வி வந்த அரவம் கேட்டு திரும்பிப் படுத்தாள். செல்விக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை. சும்மா அவளருகே சென்று அமர்ந்து கொண்டாள். அறையின் மூலையிலிருந்த பச்சை நிற ட்ரங்க் பெட்டி திறந்து கிடந்தது. அதில் ஏராளமான பாட்டு புத்தகங்கள். எல்லா புதுப்படங்களின் பாட்டு புத்தகங்களையும் மல்லிகா உடனுக்குடன் வாங்கி விடுவாள். அதில் அவளுக்கு அவ்வளவு ஆர்வம். முக்கியமாக சோகப் பாடல்களின் மீது அவளுக்கு அதீத ஆசையிருந்தது. ஓரளவு எல்லா சோகப் பாடல்களையும் முழுதாகப் பாடத் தெரிந்து வைத்திருந்தாள். எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு, கிலுவை மர இலைகள் கூட அசையாத மதிய நேரத்தில், அவள் குளிக்கும்போது, “ராசாவே உன்ன நம்பி” என இழுத்து இழுத்துப் பாடியபடி தண்ணீரை மொண்டு, மொண்டு ஊற்றி நிறைய நேரம் குளிப்பாள். கணேசனுக்கு முன்னால் மாரியப்ப அண்ணனைக் அவள் காதலித்த போது இதை அடிக்கடி பாடுவாள்.
வலது கையை ஊன்றி எழுந்து, நகர்ந்து, சுவரில் சாய்ந்து அமர்ந்தபடி என்னைப் பார்த்துச் சிரித்தாள்.
“அப்புடியே ரத்தம் குபுகுபுன்னு வந்துது தெரியுமா? நானே பயந்துட்டேன் செல்வி ” என்றாள்.
செல்வி எதுவும் பேசவில்லை.
சிறிது நேரம் கழித்து
” செல்வி கடைத்தெருவுலே கணேசனைப் பாப்பியா?” என்றாள்.
“ம்”.
“நாளைக்குப் பாத்தா, மல்லிகாக்கா நல்லாருக்கா. பயப்படாதேன்னு சொல்லீர்றியா?”
“சரி சொல்லிடறேன்”.
வெளியே வந்தபோது சரசு அத்தையிடம், “ஓடுகாலி முண்டை. அப்படியே அப்பன் புத்தி. இவளப் பெத்ததுக்கு இன்னும் என்னென்ன பாக்கோணுமோ” என மல்லிகாக்காவின் அம்மா சொல்லிக் கொண்டிருந்தாள்.
மல்லிகாவின் அம்மா கேபிள் கனக்க்ஷனை பிடுங்கி எறிந்த பிறகு கணேசனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தெருவில் ஓரிரண்டு முறை குறுக்கும் நெடுக்குமாக அலைந்து பார்த்தான். பிறகு வேட்ராயன் கோவில் ஊஞ்சல் மரத்தடியில் தன் லூனா மொப்பட்டை நிறுத்தியபடி கால்மாற்றிக் கால்மாற்றிக் காத்திருந்தான். மல்லிகா வெளியே வரவேயில்லை. குழிமுயல் போல வீட்டிற்குள்ளேயே கிடந்தாள்.
ஊர் திருவிழாவிற்கு இன்னும் மூன்று நாட்கள்தான் இருந்தன.
மல்லிகா பழையபடி இருக்க ஆரம்பித்தாள். கையை அறுத்துக் கொள்வது, பொழுது விழுந்த பிறகு அம்மாவிடம் சண்டை போட்டுவிட்டு ஓடைக்கரை பாறைகளின் பின்னே போய் மணிக்கணக்காக அமர்ந்து கொள்வது என எந்தக் கிறுத்துவமும் இல்லை. கணேசன் பேச்சை எடுப்பதே இல்லை. அவள் அம்மா கூட கொஞ்சம் தெளிச்சியாகி விட்டாள். சீக்கிரமே சொந்தத்தில் யாரையாவது பார்த்து பிடித்துக் கொடுத்துவிட வேண்டுமென்று அவள் நெருக்கமாகப் பழகும் சில பெண்களிடம் சொல்லி வந்தாள். செல்விக்கும் கூட அவள் அந்த கணேசனை விட்டுத் தொலைத்தது ரொம்ப நிம்மதியாக இருந்தது. திருவிழாவன்று ஊரே ஒரே கோலாகலமாக இருந்தது. இட்டிலியைத் தின்றுவிட்டு மல்லிகா செல்வியை அழைத்துக் கொண்டு கோயிலுக்குப் போனாள். பாசிக் கடையொன்றில் நின்று விலை கேட்டுக் கொண்டிருக்கும்போது அங்கே வந்த கணேசனை அவள் நிமிர்ந்து பார்க்கவே இல்லை. பெரிய குற்றம் புரிந்தவள் மாதிரி, அவன் அந்த இடத்தை விட்டு அகலும் வரை தலையைக் குனிந்தபடியே நின்றிருந்தாள்.
அன்றைக்கு இரவு செல்வி வானவேடிக்கை எல்லாம் பார்த்துக் களித்து வீடு திரும்பிய போது தெருவே அமளி துமளி பட்டுக் கிடந்தது. செல்வியைக் கண்டவுடன் ஆளாளுக்கு எங்க அவ? எங்க அவ? எனப் பரபரத்தார்கள்.
“சாயந்திரம் கோவிலுக்கு கூப்பிட்டப்போ ,தூரமாகிட்டேன். கோயிலுக்கு வரமுடியாதுன்னு சொல்லிட்டு வீட்டுக்குள்ள போய் படுத்துட்டாளே” என்று சொல்லவும், மல்லிகாவின் அம்மா மடேர் மடேரெனத் தலையில் அடித்துக் கொண்டு அழுதாள்.
செய்தியை ஊர்ஜிதப் படுத்த கணேசனை தேடிப் போயிருந்த பயல்கள், கணேசன் டீக்கடையில் பீடி குடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்ததாகவும், கதிர்வேலனைத்தான் காணவில்லை என்றும் அவன் மனைவி அவர்களுடைய தெருவில் நின்று அழுது கொண்டிருப்பதாகவும் சொன்னார்கள்.
- தீபு ஹரி
அருமையான கதை. எழுதிய தீபு ஹரிக்கும் வெளியிட்ட கனலிக்கும் அன்பும் வாழ்த்துக்களும்