மரத்தை மறைத்தது மாமத யானை

ண்பதுகளின் முற்பகுதியில் கல்லூரி பருவத்தில் நகுலன் கவிதைகளை வாசித்திருந்தேனே தவிர, அவரோடு எனக்குத் தொடர்பில்லை. ஆனால் அவரோடு தொடர்பு கொள்ள விரும்பினேன். 1990ல் முதல் தொகுப்பு வந்ததும் அவருக்கு அனுப்பியிருந்தேன். பிறகு கடிதம் எழுதினேன் எதற்கும் பதில் இல்லை. அறிமுகமே இல்லை என்று ஏதும் எழுதாமல் இருக்கிறார் என்று விட்டுவிட்டேன்.

அதன் பின் சாதாரணமாக இரண்டொரு கடிதம் எழுதியிருந்தேன். என் லாட்ஜ் திறப்பு விழாவுக்கு அவருக்கு அழைப்பிதழ் அனுப்பியிருந்தேன். அதற்கும் பதில் இல்லை. 95ல் இரண்டாம் தொகுப்பு வந்தது. அதை அனுப்பியிருந்தேன். அதற்கும் பதில் மௌனம்தான். அவர் பெரிய கவிஞர். என்ன மன நிலையில் இருக்கிறாரோ என்று அதன் பிறகு அவருக்கு நான்  எதுவும்  எழுதவில்லை. ஆனால், எப்படியும் அவர் தொடர்பு நமக்குக் கிடைக்கும் என்று உள்மனம் சொல்லிக்கொண்டே இருந்தது.

அவருக்குப் புத்தகம் அனுப்பி எட்டு மாசம் ஆகியிருந்தது. அப்போது என் அழைப்பின் பேரில் கும்பகோணம் கோவில்களுக்கெல்லாம் செல்ல நீல. பத்மநாபன் நம் செல்லம் விடுதியில் நான்கு நாட்கள் தங்கியிருந்தார். தினமும் அவரோடு பேச வாய்ப்பு அமைந்தது. அவர் நாவல்களைப் பற்றி நான் பேசுவதில் அவருக்கு மெல்லிய சந்தோஷம் படர்வதை சம்பாஷணையின் போது உணர முடிந்தது. காலை மாலை என இரு வேளையும் பேசிக்கொண்டிருந்தோம். எம். வி. வி மற்றும் கரிச்சான் குஞ்சுவையும் பார்க்க அவரை அழைத்துப் போனேன். எங்கள் பேச்சினூடே நகுலன் வந்தார். அவர் நகுலனைப்பற்றிச் சொல்வதை எல்லாம் கேட்ட பின்பு, என்ன சார் மதிச்சு ஒரு லட்டர் கூட போட மாட்டங்கிறார் என்று விபரங்களைச் சொன்னேன். அவர் நகுலனின் சுபாவங்களை, நித்திய காரியங்களை, வாசிப்பை, அவர் சித்தன் போக்கை, எழுத்தை, குடியை எல்லாம் சொன்னதும் சரி சார் ஒகே என்று சொல்லிவிட்டேன். அவரும் அதன் பின் எதும் சொல்லவில்லை.

சில மாதங்கள் கழித்து பத்மநாபன் என்னைப்பற்றி விஸ்தாரமாக நகுலனிடம் சொல்லியிருக்கிறார். ”ஹோ அப்டியா. குட். இவ்ளோ விஷயம் தெரியாதே ஒஹ்” என்று மட்டும் சொல்லியிருக்கிறார். அதன் பின்பு சில வாரம் கழித்து நகுலன் எனக்கு எழுதிய முதல் கடிதம் இது.

 

டி. கே. துரைசாமி,

(நகுலன்)

V/ 2521, Goft Armks Road,

Kandiyar East,

TVM – 695 041.

  1. 6. 95

3 : 30 PM.

 

நண்பருக்கு,

வணக்கம்.

வயது 72ல் முன்போல எதிலும் ஊர்ஜிதமாக இயங்க முடியவில்லை. எனவே இத்தாமதத்திற்கு மன்னிக்கவும். உங்கள் கடிதமும் புத்தகமும் கிடைத்தன. உங்களை ஞாபகம் இருக்கிறது. உங்கள் Hotel திறப்பு விழாவுக்கு அனுப்பிய அழைப்பிதழ் கிடைத்தது. ஒரு பத்திரிகையில் (பெயர் ஞாபகம் இல்லை) உங்கள் கவிதை படித்ததும், அது நன்றாக உருவாகியிருந்ததாக ஒரு நினைவு. பின் உங்கள் தொகுதி குறித்து சில.

குறிப்புகள் :

1) என் பார்வையில் தொகுதியில் மிகச் சிறந்த கவிதை

(ப. 37) உருவிலும் அனுபவப்பூர்வ சிருஷ்டியிலும் மிகவும் கச்சிதமாக உருவாகியிருக்கிறது. இங்கு சில வரிகள் மூலம் கூறப்பட்ட அனுபவம் ஒரு விரிவான பரிமாணத்தைப் பெற்றிருக்கிறது.

 

(உ- ம்)

“என்போக்குத் தனிப்போக்கு 

வட்டமற்ற பெருவெளியே 

சுகமெனக்கு! 

 

இங்கு த்வனி அல்லது குறிப்பு சிறப்பாக உருவாகியிருக்கிறது. இதில் இன்னொரு கலையம்சம்.

அப்புறந்தான்

கவிதை கிவிதை” எல்லாம்.

 

2) அடுத்தபடியாக பக்கம் 31 நவீன விமர்சன முறையில் அணுகுகையில் – அமைப்பியல் முறையில் அணுகுகையில் 4 – 5 அலகுகளாகப் பிரிக்கலாம்.

 

அலங்கரி.

 

“சிரி” என்பதில் வாசகன் தாசன் சிருஷ்டிகர்த்தா என்ற நிலையில் “சிரி” என்பதை ஒரு கிண்டல் ரீதியாகக் காணலாம். “பொருள்” கொள்ளும் முறையில் ஆண் & பெண் உறவுக்குப் பாத்திரமல்லாமல் கலைப்படைப்பை அணுகுவதற்கும் பயன்படுத்தலாம்.

 

3) ப. 54. கச்சிதமான வலுவான கவிதை.

 

4) ப. 63. ஒரு வகையில் திரு எஸ். வைத்தீஸ்வரன் குறித்தபடி நான் என் வகையில் எதையுமே, ஒரு தத்துவச் சாயலுடன் தான் பார்க்க முடிகிறது. இக்கவிதை மனதின் சேஷ்டையைத்தான் காட்டுகிறது இல்லையென்றால்!!!

 

5) ”கர்வகும்மாளம்” ப. 47. நல்ல கவிதை. ஆனால் “கர்வம்” என்ற கடைசிப் பகுதியை நீக்கி விடவேண்டும். அதற்கு முன் பகுதியில் “போது” என்பதின் பின் மூன்று புள்ளிகள்… இடலாம். கடைசிப் பகுதியை நீக்கவேண்டும் என்பதின் காரணம் அது ஒரு அசட்டு உணர்ச்சியை (Sentimental) விளைவிக்கிறது. தொகுதி நன்றாக உருவாகியிருக்கிறது. நீங்கள் ஒரு உண்மையான கவிஞர். இவ்வயதில் விரிவாக எழுதாததற்கு மன்னிக்கவும். இக்கடிதம் கிடைத்ததற்கு ஒரு வரி எழுதவும்.

 

அன்புடன்

“நகுலன்”

 

டி. கே. துரைசாமி,

(நகுலன்)

V/ 2521, Goft Armks Road,

Kandiyar East,

TVM – 695 041.

 

  1. 6. 95

 

நண்பருக்கு,

நான் நேற்று எழுதிய கடிதத்தைத் தொடர்ந்து எழுதுகிறேன் பக்கம் 31 – இக்கவிதையில் பேசுவது பெண்* என்பது தெளிவாகவே இருக்கிறது. மேலும் நம் பெண்களுக்கு இயல்பாகவே ஒரு நகைச்சுவை இருக்கிறது என்பதும் தெரிகிறது. இப்படிப் பார்க்கையில் கவிதையில் கலை அம்சம் இருக்கிறது என்பது என் கணிப்பு.

அன்புடன்

நகுலன்.

 

*ஒரு பெண்ணின் தனிமொழி என்பது தெளிவாகவே இருக்கிறது.

 

Thiru. Ravisubramaniyan,

Post Box No. 38,

Chellam Lodge,

57, Nageswaran North St,

Kumbakonam – 612 001.

Thanjavur Dt.

Tamil Nadu.

***

 

இந்த கடிதம் வந்த பிறகு என் உற்சாகத்துக்கு அளவே இல்லை. காதலியிடமிருந்து வந்த முதல் கடிதத்தைப் போல அதைத் திரும்பத் திரும்ப படித்துக்கொண்டிருந்தேன். உடன் பதில் எழுதினேன். அது சேர்வதற்குள் அடுத்த கடிதம் வந்துவிட்டது. நான் என் அறியாமைகளோடும் அவர் அவரது மேதைமையுடனுமாக தொடர்ந்து கடிதங்கள் எழுதிக்கொண்டே இருந்தோம்.

பல கடிதங்கள் வெறும் கார்டுகள். சும்மா நலம் விசாரிப்புகள். என்னை எதும் கிண்டல் செய்யும் பழம் பாடல் வரிகள். என்னை புராண கதாபாத்திரமாய் சொல்லி எள்ளல் செய்வது. எல்லாம் சொல்லிவிட்டு ஹா ஹா என்று சிரிப்பு காட்டுவது. ஆனால் அதெல்லாம் தவிர்த்து அதில் சுத்தமாக ஒரு 50க்கு மேற்பட்டவை இலக்கிய கடிதங்கள். அவரின் கவிதைகள், வெளி வராமல் அந்த கடிதத்தன்மைக்கு ஏற்றதாகவும் பொதுவாகவும் சின்ன சின்ன கவிதைகள். ஒரே முறை மட்டும் ஒரு நீண்ட கவிதை எழுதியிருந்தார் வாழ்வின் சூழலில் தொலைந்து அழிந்தவற்றில் இப்படியான கடிதங்களும் போனது.

சார் எப்ப பாத்தாலும் என்னை இப்படி கிண்டல் பண்ணிட்டே இருக்கிங்களே நியாமா சார் என்று கேட்டுருந்தேன். ஒரு அசடை நான் வேற என்ன செய்வது. சரி. ஒகே. Deel. குறைச்சிணுடறேன். ஒரு கும்மோணத்தான் இன்னோரு கும்மோணத்தானை விட்டுக்கொடுப்பேனா. Don’t take serious Subbu என்று எழுதியிருந்தார். என்னை யாரும் அப்படி விளித்தது இல்லை.

2

காவேரி பகவத்படித்துறை பொயிருக்கேளா, சக்ரபாணி கோயில் எல்லாம் அப்படியே வச்சிருக்காளா, மகாமக குளம் நன்னா இருக்கா, சங்க புலவன் சக்தி முற்றத்து புலவர் கும்மோணம் பக்கம் உள்ள பட்டீஸ்வரம் தெரியுமா, இந்திரா பார்த்த சாரதியும் நானும் அண்ணாமலை ல ஒண்ணா படிச்சோம், பஞ்சாமய்யர் பசும்பால் காபி கிளப் அங்க இன்னம் இருக்கோ, எம். வி. வி என்னத்துக்கு இவ்ளோ எழுதினார். நீங்க நாகேஸ்வரன் கோவில் பக்கம் தானே. அந்த கோயில்ல யமதர்மனுக்கு ஒரு விக்ரஹம் சந்நிதி உண்டில்லையா. அபூர்வமா பிரம்மனுக்கும் அங்க ஒரு கோவில் இருக்குல்லியா. இப்படி பல விஷயங்கள் அந்த கடிதங்களில் வரும். கும்பகோணம் அவர் பிறந்த ஊர் தான். ரொம்ப நாள் அவர் அங்கிருக்கவில்லை. ஆனால் வந்து வந்து பார்த்துப் போயிருந்திருக்கிறார். அவருக்குக் கும்பகோணத்தின் ஞாபகங்கள் தொடர்ந்து இருந்துகொண்டே இருந்தன. காவிரி அழகைப்பற்றியும் அது வறண்டு வருவதையும் சேர்த்து வாழ்வின் நிலையாமை போல ”ஆற்றுக்கும் உண்டோ அந்திமம்” என்ற ரீதியில் ஒரு கவிதை எழுதியிருந்தார். திடீரென்று பட்டினத்தார் பாடலை எழுதுவார். என் வாயில் நுழையாத ஆங்கில கவிஞர்கள் கவிதையை ஆங்கிலத்தில் எழுதி டிக்‌ஷனரி வச்சு படிங்கோ என்பார். ஒரு முறை நீங்க இந்த அசடுக்கு இப்படி புரியாம எனக்கு எழுதி எழுதி படுத்துறதுக்கு எழுதாம இருக்கலாம் சார்ன்னு எழுதினதுக்கு ஒரு கார்டில் இதை மட்டும் பதிலாக எழுதியிருந்தார்.

 

மரத்தை மறைத்தது மாமத யானை

மரத்தில் மறைந்தது மாமத யானை

பரத்தை மறைத்தன பார்முதல் பூதம்

பரத்தில் மறைந்தன பார் முதல் பூதமே.

 

கடிதங்களில் அவர் விளையாடும் விளையாட்டுக்கு அளவில்லாமல் இருந்தது. எம். வி. விக்கு நான் அம்பி என்றால் இவருக்கு நான் அசடு.

அவரை சந்திக்கும் ஆவல் எனக்கு இருந்துகொண்டே இருந்தது. சென்னையில் நான் விஜய் டி.வி யில் வேலை பார்த்துக்கொண்டிருந்த போது அது நிகழ்ந்தது. இப்போது நினைத்தாலும் ஆச்சர்யமாக இருக்கிறது. நான் மேற்கு மாம்பலத்தில் அயோத்தியா மண்டபம் இருக்கும் தெரு கடைசியில், விஜய் டிவிக்காக ஒரு நிகழ்ச்சியின் ஷீட்டிங்கை பாதியில் முடித்து பிரேக்கில் பக்கத்திலிருந்த டீக்கடையில் டீ குடித்துக்கொண்டு நின்ற போது ஒரு ஆட்டோகாரர் சில்லறை மாற்ற வந்தார். கடையில் இல்லை என்றதும் என்னிடம் அவர் கேட்க, நான் தந்தேன். அவர் நின்றபோது ஆட்டோவிலிருந்து ஒரு முதிய தலை எட்டிப் பார்த்து கை நீட்டி வா வா என்று ஆட்டோக்காரரை அழைத்தது. என்னடா இது நகுலன் தலை மாதிரி இருக்கே என்பதற்குள் தலை இழுத்துக்கொண்டுவிட்டது. அவராக இருக்க முடியாது. அவர் திருவனந்தபுரத்தில் அல்லவா இருக்கிறார். அப்பறம் எப்படி இங்கே தள்ளாத வயதில் ஆட்டோவில் வருவார். ஆனாலும் பார்த்துவிடுவோம் என்று மறு கணம் தோன்றி நான் பாதி டீயை வைத்துவிட்டு ஆட்டோ அருகில் சென்று டிரைவர் இருக்கை வழியே எட்டிப்பார்த்தால் போட்டோவில் பார்த்த அதே நகுலன்.

“சார் வணக்கம்”

அவர் பதில் ஏதும் சொல்லாமல் என்னை பார்த்தார்.

”சார் வணக்கம். நீங்க நகுலன் தானே”

சட்னெ திரும்பினார்

“யார் நீங்க. ஆட்டோக்காரர் எங்க”

“இதோ பின்னடி நிக்கிறார். நீங்க நகுலன் தானே”.

“ஆமா. நீங்க யார்”

“சார் நான் ரவிசுப்பிரமணியன்”

”கும்மோணம் கவிஞரா”

சட்டென முகத்தை ஒரு கையால் மூடி தடவிக்கொண்டார் கன்னத்தில் கை வைத்துக்கொண்டார்.

“இங்க எப்படி. எப்படி கண்டுபிடிச்சேள்”

என்று சிரித்தார். விடாமல் சிரித்தார். கையை நீட்டினார். கையை கொடுத்தேன். சட்டென எடுத்துக்கொண்டார்.

”என்ன சார்”

”நிறம் ஒட்டிடும் போல்ருக்கு”

திரும்ப சிரிப்பு. தன் முகத்தை ஒரு கையால் துடைத்தார்.

”என்ன நடக்குறது இங்க. எப்படி நீங்க இங்க”

“சார் டிவி வேலையா ஒரு ஷுட்டிங் வந்துருக்கேன் சார்”

”ஒஹ்”

”எப்படி கண்டு பிடிச்சேள்”

“போட்டோல பாத்திருக்கனே.”

”ஆனா நீங்க புஸ்தகத்துல உள்ள போட்டோல சேப்பா இருந்தேள்”

“அதிருக்கட்டும் எங்க சார் இங்க வந்திங்க.”

”அசோக் நகருக்கு தம்பி வீட்டுக்கு வந்தேன். இப்ப, இங்க அழகிய சிங்கர் போஸ்ட்டல் காலனில இருக்கார். அவரை பாக்க வந்தேன். நீங்க வரேளா.”

“இல்ல சார். ஒரு ஷூட்டிங் கிளம்பணும். பாதில இருக்கேன் நான் திரும்ப எப்ப வந்து, எங்க பாக்க எத்தனை நாள் இங்க இருக்கிங்க”

“நான் இன்னிக்கே கிளம்புறேன் அடுத்த தடவை

பாக்கலாம்.”

“எப்படி தனியா போவிங்க”.

“தனியே தான போயாகணும் இல்லியா.

சிரித்தார்.

”இறங்கிற இடத்துல ஆட்கள் இருக்கா. ஆட்டோகாரர் தெரிஞ்சவர். பொயிடுவேன்” என்றார்.

ஆட்டோகாரார். வண்டியை ஸ்டார்ட் செய்தார். மெல்ல கையசைத்தார். அவருக்கும் பேச வேண்டும் போல இருந்தது போலிருந்தது. கையை நெற்றியில் வைத்து கண்களை இடுக்கி ஒரு முறை பார்த்தார். வண்டி புறப்பட்டுவிட்டது. எவ்வளவு நாள் ஏக்கம் அவரை பார்த்தும் எனக்கு நிதானமாகப் பேச முடியவில்லை. வண்டி கடந்துவிட்டது. இதுதான் எங்கள் முதல் சந்திப்பு. பின்பு இதைப்பற்றியும் கடிதங்கள்.

பிறகு திருவனந்தபுரத்தில் ஒரு முறை சந்தித்தேன். என் வாழ்வில் அவரை சந்தித்தது இரண்டே முறைதான். ஆனால் கடிதங்கள் வழியே நிறைய வருஷங்கள் நெருக்கமாகப் பழகிவிட்டோம்.

திருவனந்தபுரத்தில் சாகித்ய அகாடமி ஒரு கவிதை வாசிப்பு நிகழ்ச்சி நடத்தியது. எல்லா மொழியிலிருந்தும் இரண்டு இரண்டு பேர்கள் வந்திருந்தனர். சாகித்ய அகாடமிக்கு ஒரு சம்பிரதாயம் இருக்கிறது. ஒரு கவிஞனை கவிதை வாசிக்க போட்டால் எழுதத் தெரிகிறதோ இல்லையோ கூடவே ஒரு பேராசிரியரை கவிதை வாசிக்கப் போட்டுவிட வேண்டும் அந்த விதிப்படி என்னோடு ஒரு பேராசிரியர் வந்திருந்தார். எனக்கு கவிதை வாசிப்பு மதியம் 3 மணிக்கு இருந்தது. அதனால் காலை கேரள சாகித்ய அகாடமி பொறுப்பாளர்கள் உதவியோடு காலை ஒரு கார் ஏற்பாடு செய்துகொண்டு போகும் வழியில் நல்ல ஒயின்ஸ் கடையாகப் பார்த்து ஒரு ஃபுல் பாட்டில் பிராந்தி மற்றும் பழங்கள் வாங்கிக்கொண்டு சென்றேன்.

வீட்டுக்கு சென்று அவரை பார்த்ததும்

“சார் வணக்கம்”

“வாங்கோ யாரு”

“என்னை தெரியலையா. ரவிசுப்பிரமணியன். ஏற்கனவே பாத்திருக்கிங்களே”

ஒஹ்… என்று சிரித்தார்.

“வாங்கோ வாங்கோ. உக்காருங்கோ நீங்க தானா அது”

”சார்”

“கும்மோணத்துலேர்ந்து வரேளா”

“இல்லை சென்னைல இருந்து”

கொஞ்ச நேரம் மெளனமாக இருந்தார். எழுந்து சென்று அலமாரியை திறந்தார். எதையோ பார்த்தார். மறுபடி வந்தார்.

“என்ன திடீர்ன்னு”

சாகித்ய அகாடமி கூட்டம். அது தொடர்பாக வந்து தங்கியிருப்பது விவரம் எல்லாம் சொன்னேன். கொஞ்சம் பேசிக்கொண்டிருந்தார். எழுந்து போய் வாசலைப் பார்த்தார் மறுபடி உட்கார்ந்தார்.

“நீங்க ரவிசுப்பிரமணியன் தானே”

”ஆமா சார்”

“கும்பகோணம் நாகேஸ்வரன் சந்நிதி”

சிரிப்பு. எழுந்து போய் பாட்டிலை எடுத்து வந்தார்.

”கொஞ்சம் போல சாப்பிடறேளா. சாப்பிடுவேன்னேளே”

“இல்ல சார் சாயந்திரம் மீட்டிங்”

“அக்கடமிக் டிசிப்பிளின் வேணுமோ”

”இல்ல. ஸ்மெல் வருமே சார்”

“ஸ்மெல்லே இல்லாதவதான் வராளா அங்க எல்லாரும்”

அவர் கொண்டு வந்ததை எடுத்துக்கொண்டு போய் வைத்துவிட்டார். மறுபடி கடந்து போன பூனையை பார்த்தார். உதவிக்காரம்மாள் குடிக்க பிளாக் டீ கொண்டு வந்தார்.

“இது ஸ்மெல் வராது”

“சாரி சார்”

“குடிங்கோ. வேற எதும் சாப்பிடறேளா”

“ஒண்ணும் வேணாம் சார்”

மீண்டும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.

“வாடகை டாக்ஸி சார். நான் கிளம்புறேன்.”

“கொஞ்ச நேரம் இருங்களேன்”.

“இல்ல சார். அந்த அரங்கத்துக்கும் போய் அட்டனன்ஸ் போடணும்”

அவர் எதும் சொல்லவில்லை. வாசல் வரை வந்து நின்றார். நெற்றியில் கை வைத்து பார்த்துக்கொண்டே இருந்தார்.

”மீண்டும் வீதியில் யாருமில்லை. வெறும் தனிமை” என்ற அவரின் கவிதை எனக்குள் ஓடிக்கொண்டு இருக்க கார் ஏறி இறங்கி போய்கொண்டிருந்தது.

 

(கனலியின் நகுலன் 100 சிறப்பிதழுக்காக 23. 8. 2021 திங்கள் 6 : 36க்கு எழுதப்பட்டது. வீடு.)

 

 

 

 

 

 

 

Previous articleவந்து போகும் அர்ச்சுனன்
Next articleநன்றாக குடி
ரவிசுப்பிரமணியன்
ரவிசுப்பிரமணியன் (Ravisubramaniyan) இவர் ஓர் தமிழக எழுத்தாளரும், கவிஞரும், ஆவணப்பட இயக்குனருமாவார். பன்முகம் கொண்ட படைப்பாளியான இவர் கும்பகோணத்தைச் சேர்ந்தவர். தற்போது சென்னையில் வசித்து வருகிறார். கவிதைத் தொகுப்புகள், கட்டுரைகள், ஆவணப்படங்கள் என்ற நிலையில் இவரது பங்களிப்புகள் உள்ளன. சிறுகதைகளும் எழுதிவருகிறார். பாவலர் இலக்கிய விருது, சாரல் இலக்கிய விருது, அகல் இலக்கிய விருது, சென்னை இலக்கியத் திருவிழா விருது போன்ற விருதுகள் வழங்கும் குழுவிலும் உறுப்பினராக உள்ளார். பல தமிழ்க்கவிஞர்களின் கவிதைகளுக்கு இசையமைத்துள்ளார். 80க்கு மேற்பட்ட நவீனக் கவிதைகளுக்கு இசை வடிவம் தந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.