அதிகாரி வாடனாபே, கபுகி அரங்கத்திற்கு எதிரில் டிராமிலிருந்து இறங்கியபோது மழை சரியாக நின்று விட்டிருந்தது. சேற்றுக் குட்டைகளைக் கவனமாகத் தவிர்த்து கோபிகி பகுதி வழியாக, தகவல் தொடர்புத்துறை இருக்கும் திசையில் விரைந்தார். அருகில் தான் எங்கோ அந்த விடுதி இருந்தது என்று நினைத்துக்கொண்டே நீரோடை ஓரமாக நடந்தார். இங்குதான் ஒரு மூலையில் அந்தப் பெயர்ப் பலகையைப் பார்த்த நினைவு.
வீதிகள் பெரும்பாலும் காலியாகத்தான் இருந்தன. மேற்கத்திய உடையணிந்த ஒரு இளைஞர் கூட்டம் கடந்து போயிற்று. சத்தமாகப் பேசிக்கொண்டிருந்த அவர்கள் அப்போது தான் அலுவலகத்தை விட்டு வந்தது போல இருந்தார்கள். கிமோனோ அங்கியும் பளீரென்ற நிறத்தில் குறுக்குப் பட்டையும் அணிந்த ஒரு பெண் அவர் மீது மோதுவது போலக் கடந்து சென்றாள். அருகிலிருந்த ஏதேனுமொரு தேநீரகத்தின் பணிப்பெண்ணாக இருக்கக் கூடும் என்று நினைத்தார். மேற்கூரை பொருத்தியிருந்த ஒரு ஆட்டோ ரிக்ஷா பின்னாலிருந்து கடந்து போனது.
கடைசியாக அந்த சிறிய பெயர்ப்பலகையைக் கண்டுபிடித்துவிட்டார்.
கிடைமட்டமாக மேற்கத்திய பாணியில் “செயோகென் விடுதி” என்று எழுதி இருந்தது. ஓடை நோக்கி இருந்த கட்டிடத்தின் முகப்பில் சாரம் கட்டப்பட்டிருந்தது. அதன் பக்கவாட்டு முகப்பு ஒரு சிறிய தெருவில் திறந்தது. விடுதியின் முன்பகுதியில் இரண்டு சாய்வான படிக்கட்டுகள் மேலேறிச் சென்று ஒரு ஒடுங்கிய முக்கோணம் போலத் தெரிந்தன. ஒவ்வொரு படிக்கட்டுத்தொடர் முடியும் இடத்திலும் ஒரு கண்ணாடிக் கதவு இருந்தது. ஒரு நொடி தயங்கிய பின் “உள்ளே” என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த இடது புறக் கதவின் வழியே வாடனாபே நுழைந்தார்.
விடுதியின் உள்ளே ஒரு அகன்ற நடைவழியைக் கண்டார். கதவருகில் காலணிகளைத் துடைத்துக் கொள்ளும் துணிகள் குவியலாகக் கிடந்தன. அருகில் ஒரு பெரிய மேற்கத்திய மிதியடி கிடந்தது. வாடனாபேயின் காலணிகள் மழையில் சேறாகி இருந்தன.
கவனமாகத் துணியிலும் மிதியடியிலும் கால்களைத் துடைத்துக் கொண்டார். இந்த விடுதியில் மேற்கத்திய வழக்கப்படி அறைக்கு உள்ளேயும் காலணிகள் அணிந்து கொண்டிருக்கவேண்டும் போலும்.
அறைக்குள் ஆள் அரவமில்லை. ஆனால் தொலைவிலிருந்து சுத்தியாலும் ரம்பத்தாலும் வேலை செய்யும் பெரும் சத்தம் வந்துகொண்டிருந்தது. இந்த இடத்தில் மறு கட்டுமானம் நடந்து கொண்டிருக்கிறது என்று நினைத்துக் கொண்டார் வாடனாபே.
நடைவழியில் சிறிது நேரம் காத்திருந்தார். யாரும் வரவேற்க வரவில்லை. நடைவழியின் முடிவு வரை நடந்தார். அதன் பின் எந்த வழியில் திரும்புவது என்று தெரியாமல் நின்றார் . திடீரென்று ஓர் ஆளைப் பார்த்தார். கையில் ஒரு தூவாலையை அடக்கிக் கொண்டு சுவரில் சாய்ந்து நின்று கொண்டிருந்தான். அவனருகில் சென்றார்.
“நேற்று முன்பதிவுக்காக போன் செய்திருந்தேன்”.
அந்த ஆள் சட்டென சூழலை உணர்ந்து கொண்டான். ”ஆம் ஐயா. இரண்டு பேருக்கான மேசை. சரிதானே? தயவு செய்து என்னுடன் வர முடியுமா?”
பணியாள் அவரை இன்னுமொரு மாடிப்படிக்கட்டின் வழியே அழைத்துச் சென்றான். வாடனாபேயை உடனடியாகக் கண்டறிந்து விட்டான். விடுதி மராமத்துப் பணியில் இருப்பதால் வாடிக்கையாளர்கள் குறைந்திருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டார். படிகளில் ஏற ஏற பணியாளர்கள் உருவாக்கிய இரைச்சல் காதைச் செவிடாக்குவதாக இருந்தது.
வாடனாபே “பரபரப்பான இடமாக இருக்கிறது” என்றார் பணியாளிடம். திரும்பிப் பார்த்து.
“இல்லை ஐயா. வேலையாட்கள் ஐந்து மணிக்குச் சென்று விடுவார்கள். சாப்பிடும் போது உங்களுக்குத் தொந்தரவு ஒன்றும் இருக்காது ஐயா”
அவர்கள் படிக்கட்டின் உச்சியை அடைந்த போது பணியாள் வாடனாபேயை முந்திக் கொண்டு கதவை இடப்பக்கமாகத் திறந்தான்.
அந்த அறை பெரியதாக, நீரோடையைப் பார்க்கும் வகையில் திறந்திருந்தது. இரண்டு பேருக்கு மிகவும் பெரியதாகத் தோன்றியது.
அறைக்குள் இருந்த மூன்று மேசைகளைச் சுற்றிலும் நிறைய நாற்காலிகள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு திணிக்கப் பட்டிருந்தன. சன்னலுக்குக் கீழே ஒரு பெரிய சோபாவும் அதற்கு அருகில் சுமார் மூன்று அடி உயரமுடைய தொட்டிக் கொடியும் வெம்பசுமை இல்லத்திராட்சைகள் செறிந்த குட்டை மரமும் இருந்தன.
பணியாள் அறையைக் கடந்து சென்று மற்றொரு கதவைத் திறந்தான். ‘இது உங்களுக்கான உணவறை ஐயா.” வாடனாபே அவனைத் தொடர்ந்தார்.
அந்த அறை சிறியதாக, ஒரு தம்பதிக்கு போதுமானதாக இருந்தது. மேசையின் நடுவில் இரண்டு உறைகளும் ஒரு பெரிய கூடையில் அசெலியா பூக்களும் ரொடொடென்ட்ரான் பூங்கொத்துகளும் இருந்தன.
சற்று திருப்தி அடைந்த உணர்வுடன் வாடனாபே அகன்ற அறைக்குத் திரும்பினார். பணியாள் சென்றுவிட்டான். மீண்டும் தனியாக உணர்ந்தார். திடீரென சம்மட்டி இரைச்சல் நின்றது அவர் தன் கடிகாரத்தைப் பார்த்தார்
ஆம் சரியாக ஐந்து ஆகி இருந்தது.
அவரது சந்திப்புக்கு இன்னும் அரை மணி நேரம் இருந்தது
மேசையிலிருந்த திறந்த பெட்டியில் இருந்து ஒரு சுருட்டை எடுத்து முனையில் ஒரு துளையிட்டுப் பற்ற வைத்துக் கொண்டார்.
வினோதமாக இருந்தது அவருக்கு. எந்த எதிர்பார்ப்பும் இருக்கவில்லை . அவரைச் சந்திக்கச் சற்று நேரத்தில் வரப்போவது யார் என்பது பற்றி எந்த முக்கியத்துவமும் இல்லாதது போல உணர்ந்தார். இன்னும் சற்று நேரத்தில் அந்தப் பூக்கூடைக்கு அப்பால் யாருடைய முகத்தைப் பார்க்கப் போகிறார் என்பது குறித்து எந்த கவனமும் இல்லாதவராக இருந்தார் . அவருடைய விலகலைக் குறித்து அவரே வியந்து கொண்டார் .
சுருட்டை மும்முரமாக ஊதிக்கொண்டு ஜன்னலுக்கு அருகில் வந்து அதைத் திறந்தார். நேர் கீழே பெரிய மரக்கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
இது தான் முக்கிய வாசல். ஓடையில் தண்ணீர் எந்த அசைவும் இல்லாமல் இருந்தது. மறு பக்கத்தில் ஒரு வரிசையில் மர வீடுகள் இருந்தன. பார்ப்பதற்கு விபச்சார விடுதிகள் போல இருந்தன. அங்கே யாருமே காணப்படவில்லை. ஒரே ஒரு பெண் முதுகில் ஒரு குழந்தையைச் சுமந்து கொண்டு முன்னும் பின்னும் ஒரு வீட்டின் முகப்பில் நடந்து கொண்டிருந்தாள். வலது கோடியில் பிரம்மாண்டமான கப்பல் படை அருங்காட்சியகத்தின் சிவப்புக் கல் கட்டிடம் அவரது பார்வையை மறைத்துக் கொண்டு நின்றிருந்தது
வாடனாபே சோபாவில் அமர்ந்து அறையை அலசினார். சுவரில் ரசனையில்லாமல் தேர்ந்தெடுத்திருந்த படங்கள் அலங்கரித்திருந்தன. ஒரு ப்ளம் மரத்தின் மேல் நைட்டிங்கேல்கள், ஒரு தேவதைக் கதையின் காட்சி, மற்றும் ஒரு பருந்து.
திரைச்சீலைச் சுருள்கள் சிறியதாகவும் குறுகியும் இருந்தன. உயரமான சுவரில் அவை பொருத்தமில்லாமல் தோன்றின. கீழ்ப் பகுதி மறைவாகச் சொருகப்பட்டது போலிருந்தது. கதவில் ஒரு பெரிய பௌத்த வாசகம் காணப்பட்டது. இதைத் தான் கலைகளின் நிலம் என்று சொல்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டார் வாடனாபே
சிறிது நேரம் சுருட்டைப் புகைத்துக் கொண்டு தன் பௌதிக இருப்பின் ஆசுவாசத்தில் திருப்தி அடைந்தவராக மூழ்கி இருந்தார். பின்னர் நடைவழியில் பேச்சொலி கேட்டது . கதவு திறந்தது.
அது அவள்தான்.
அவள் ஒரு பெரிய ஆன்னி மேரி தொப்பியை அணிந்திருந்தாள். அது மணிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நீளமான சாம்பல் கோட்டிற்குக் கீழே எம்ப்ராய்டரி செய்யப்பட்ட மென்னிழை ரவிக்கை அணிந்திருந்தாள்.
அவள் பாவாடையும் சாம்பல் நிறத்திலிருந்தது. குஞ்சத்துடன் கூடிய ஒரு சிறிய குடையை வைத்திருந்தாள். தன் முகத்தில் வாடனாபே ஒரு புன்னகையைத் தருவித்துக்கொண்டார். சுருட்டை தட்டில் வீசி விட்டு சோபாவில் இருந்து எழுந்தார்.
அந்த ஜெர்மானியப் பெண்மணி முகத்திரையை விலக்கி பணியாளைப் பார்த்தாள். அவன் அவளை அறை வரை கொண்டு விட்டு கதவருகில் நின்றான்.
“உங்களைக் காக்க வைத்ததற்கு மன்னிக்கவும்” ஜெர்மனில் வெடுக்கென்று கூறினாள்.
அவள் தன் குடையை இடது கைக்கு மாற்றிக் கொண்டு கையுறை அணிந்த வலது கை விரல்களை நீட்டினாள்
இது எல்லாம் பணியாளரின் முன்னால் செய்யும் பம்மாத்து என்று நினைத்த வாடனாபே மரியாதையுடன் அவள் விரல்களைப் பற்றிக் கொண்டார்.
கதவுப் பக்கம் திரும்பி “இரவுணவு தயாரானதும் சொல்லுங்கள் ” என்றார் . பணியாள் தலை வணங்கி வெளியே சென்றான்.
“உன்னைப் பார்ப்பதில் எவ்வளவு மகிழ்ச்சி தெரியுமா ” என்று ஜெர்மனில் சொன்னார்.
அந்தப் பெண் குடையை ஓர் இருக்கை மேல் அனாயாசமாக வீசிவிட்டு ஒரு களைத்த பெருமூச்சுடன் சோபாவில் அமர்ந்தாள்.
மேசைமேல் முழங்கைகளை வைத்து அமைதியாக வாடனாபேயை கவனித்தாள். அவர் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு உட்கார்ந்தார்.
சில வினாடிகள் கழித்து “இங்கே ஒரே அமைதியாக இருக்கிறது இல்லையா?” என்றாள்.
“இந்த விடுதி மறுகட்டுமானத்தில் இருக்கிறது” . என்றார் வாடனாபே
“அவர்கள் நான் வந்தபோது பெரும் இரைச்சல் செய்து கொண்டிருந்தார்கள் “
“அதானே பார்த்தேன். ஒரு மாதிரியான அலைக்கழிவை இந்த இடம் ஏற்படுத்துகிறது, நான் ஒன்றும் அமைதியான ஆள் கிடையாது, என்றாலும்.”
“நீ எப்போது ஜப்பானுக்கு வந்தாய் ?”
“நேற்று முன்தினம். அப்புறம் நேற்று உன்னைத் தெருவில் பார்த்தேன்.”
“ம்ம். எதற்காக வந்தாய் ?”
“பாரேன். வருடக் கடைசியிலிருந்து நான் வ்ளாடிவாஸ்டக்கில் வசித்து வருகிறேன்.”
“அங்கே, அதன் பெயர் என்னவோ …. எதோ ஒன்று. அந்த விடுதியில் பாடிக் கொண்டிருக்கிறாய், சரியா?”
“ஆமாம் “
“நீ தனியாக இருந்திருக்க மாட்டாய் . உடன் யாராவது துணைக்கு?”
“இல்லை. துணைக்கு யாருமில்லை. ஆனால் நான் தனியாகவும் இல்லை. ஒருவருடன் இருந்தேன். சொல்லப் போனால் உனக்கு அவரைத் தெரியும்.”
ஒரு கணம் தயங்கி விட்டுச் சொன்னாள்.
” நான் கோஸின்ஸ்கியுடன் இருந்தேன்”
“ஓ, அந்த போலந்துக்காரன் . உன்னை கோசின்ஸ்கியா என்று அழைக்கலாம் என்று சொல்”
“அற்பமாகப் பேசாதே. நான் பாடுகிறேன்; அவன் உடன் வாசிக்கிறான் . அவ்வளவுதான்”
“அவ்வளவு தான் என்று உன்னால் உறுதியாகச் சொல்ல முடியுமா ?”
“நாங்கள் இன்பமாகப் பொழுதைக் கழிக்கிறோம் என்று தானே புரிந்து கொண்டிருக்கிறாய் ? நல்லது. அது ஒருபோதும் நடப்பதில்லை என்று என்னால் சொல்ல முடியாது “
“அது ஒன்றும் ஆச்சரியமானது இல்லை. அவன் உன்னுடன் டோக்கியோவில் தான் இருக்கிறான் என்று நினைக்கிறேன் “
“ஆம். நாங்கள் இருவருமே ஐகோகுசன் விடுதியில் தங்கி இருக்கிறோம்.
“ஆனால் அவன் உன்னைத் தனியாக வர அனுமதிக்கிறானே!.”
“அன்பு நண்பனே, நான் அவனைப் பாடுவதற்கு மட்டும் தான் உடன் வர அனுமதிக்கிறேன். தெரியுமா?”
அவள் “பெக் லெய்ட்டன் ” என்ற வார்த்தையைப் பயன்படுத்தினாள் .
பியானோவில் இசை கோர்த்தவன் வேறு வகையிலும் உடனுறைந்திருக்க வேண்டும் என்று நினைத்தார் வாடனாபே.
“உன்னை நான் ஜின்சா வணிகப் பகுதியில் பார்த்ததாக அவனிடம் சொன்னேன். உன்னைச் சந்திக்க மிகவும் ஆவலுடன் இருக்கிறான் . ”
“எனக்கு அந்த அரிய இன்பத்தை மறுதலிக்கும் உரிமையைக் கொடு ”
“கவலைப்படாதே. அவனுக்குப் பணத்திலோ வேறு எதிலுமோ குறை இல்லை “
“இல்லை. அவன் இங்கேயே இருந்தால் கூடிய விரைவில் அந்த நிலைக்கு வந்து விடுவான்“ என்றார் புன்னகையுடன்.
“அடுத்து எங்கே போகத் திட்டம் ?”
“நான் அமெரிக்கா போகிறேன். எல்லோரும் சொல்கிறார்கள் ஜப்பானில் எந்த நம்பிக்கையும் இல்லை. அதனால் எனக்கு இங்கே எந்த வேலையும் கிடைக்குமென்று தோன்றவில்லை ”
“நீ சொன்னது மிகவும் சரி. ரஷ்யாவை விட்டால் நல்ல இடம் அமெரிக்கா தான். ஜப்பான் இன்னமும் பின்தங்கி உள்ளது. அது இன்னமும் மறுகட்டுமானத்தில் இருக்கிறது “
“ஆண்டவா. நீ கவனமாகப் பேசு. நான் அமெரிக்கா போய் ஒரு ஜப்பானியன் தனது நாட்டைக் குறைத்துப் பேசினான் என்று சொல்லிவிடுவேன் – அதுவும் ஒரு ஜப்பானிய அரசு அதிகாரி. நீ அரசு அதிகாரி தானே ?”
“ஆம் .நான் அரசாங்கத்தில் இருக்கிறேன். “
“சரியான அரசு விதிகளின் படி நடந்து கொள்பவன் அல்லவா ?”
“கொடூரமாக, அப்படித்தான் இருக்கிறேன். நான் ஒரு முதன்மையான அதிகாரி ஆகிவிட்டேன். இன்றிரவு மட்டும் தான் விதிவிலக்கு “
“நான் பெருமிதம் கொள்கிறேன்“ என்றாள்.
அவள் தன் நீளமான கையுறைகளை மெதுவாகக் கழற்றினாள். வலது கையை வாடனாபேயிடம் நீட்டினாள்.
அழகிய பளிச்சிடும் வெண்மையான கரம். அவர் அதன் குளிர்ச்சியை உணர்ந்தவாறு அதை உறுதியாகப் பற்றினார்..
வாடனாபேயின் பிடியிலிருந்து கையை விலக்காமல் உற்றுப் பார்த்தாள். அவளது பெரிய பழுப்பு நிறக் கண்கள் கரிய நிழல்களை உருவாக்கி இருமடங்கு பெரிதாகத் தெரிந்தன.
“என்னை முத்தமிட விரும்புகிறாயா?” என்றாள்.
ஒரு கேலியான புன்னகை வாடனாபேயின் முகத்தில் வந்தது.
“நாம் இருப்பது ஜப்பானில்” என்றார்.
எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் கதவு முழுவதும் திறந்தது. பணியாள் தோன்றினான். “இரவுணவு பரிமாறப்பட்டு விட்டது ஐயா” என்றான்.
“நாம் இருப்பது ஜப்பானில் “ என்று மீண்டும் சொன்னார்.
எழுந்து அவளைச் சிறிய உணவறைக்கு அழைத்துச் சென்றார் . தலைமேலிருந்த பளீரென்ற விளக்குகளை பணியாள் ஒளிரவிட்டான்.
வாடனாபேக்கு எதிரில் உட்கார்ந்திருந்த அந்தப் பெண் அறையைச் சுற்றிலும் பார்த்தாள் .
“அவர்கள் நமக்குத் தனியறை ஒதுக்கி இருக்கிறார்கள். எவ்வளவு சிலிர்ப்பாக இருக்கிறது.” என்றாள் சிரித்துக் கொண்டே.
நேராக அமர்ந்து கொண்டு வாடனாபேயை உற்றுப் பார்த்தாள். அவரது பதிலைப் பெறுவது போல.
“இது வெறும் தற்செயல் தான் “ என்றார் அமைதியாக.
அவர்கள் இருவருக்கும் மூன்று பணியாட்கள் தொடர்ச்சியாக சேவை செய்தார்கள். ஒருவன் ஷெரியை ஊற்றினான். மற்றொருவன் எலுமிச்சை துண்டுகளை வைத்தான். மூன்றாமவன் எந்த பயனும் இல்லாமல் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தான்.
“இந்த இடம் பணியாளர்களால் உயிர்ப்புடன் இருக்கிறது “ என்றார் வாடனாபே.
“ஆமாம். அவர்கள் அசட்டையான ஆட்களாக இருக்கிறார்கள்.”
கைகளைக் கட்டிக் கொண்டு எலுமிச்சைத் துண்டைப் பார்த்தாள்.
“என் விடுதியிலும் இதே போல மோசமான பணியாட்கள் தான் “
“உனக்கும் கோஸின்ஸ்கிக்கும் தொந்தரவாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன். எப்போதுமே கதவைத் தட்டாமல் அதிரடியாக நுழைந்து விடுகிறார்கள்.”
“நீ மொத்தமும் தவறாகப் புரிந்து கொள்கிறாய். நல்லது, எலுமிச்சை நன்றாக இருக்கிறது.”
“அமெரிக்காவில் உனக்குக் காலை எழுந்தவுடன் அடுக்கடுக்காக உணவுகள் கிடைக்கும் “
உரையாடல் மெதுவாக நகர்ந்து சென்றது . கடைசியாக பணியாட்கள் பழக்கலவை கொண்டு வந்தனர். ஷாம்பெயின் ஊற்றப்பட்டது.
“உனக்குக் கொஞ்சம் கூடப் பொறாமை இல்லையா?“ திடீரென்று அந்தப்பெண் கேட்டாள்.
அவர்கள் சாப்பிட்டவாறே அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள்.
முந்தைய காலங்களில் இசை நிகழ்ச்சி முடிந்தவுடன் அவர்கள் அந்த சிறிய உணவு விடுதியில் எதிரெதிரே அமர்ந்து கொண்டிருந்ததை நினைத்துக் கொண்டாள். சில நேரம் .சண்டை வரும். எப்படியும் கடைசியில் சேர்ந்து விடுவார்கள் .
அவள் நகைச்சுவையாகக் கேட்பதாக ஒரு தோற்றத்தை உருவாக்க நினைத்தாள் என்ற போதும் குரலில் ஒரு தீவிரம் இருந்தது.
வாடனாபே ஷாம்பெயின் கோப்பையைப் பூக்களுக்கு மேலே உயர்த்தி தெளிவான குரலில் சொன்னார் “கோஸின்ஸ்கியின் நல்வாழ்வுக்காக”
அந்தப் பெண் அமைதியாகக் கோப்பையை உயர்த்தினாள். அவள் முகத்தில் ஒரு உறைந்த புன்னகை. அவள் கை மேசைக்கு அடியில் கட்டுப்படுத்த முடியாமல் நடுங்கியது.
ஜின்சா கடைவீதியின் மின்னும் கடல் போன்ற விளக்குகளின் வழியே ஒரு தனித்த கருப்பு நிற கார் சென்றபோது மணி எட்டரை தான் ஆகியிருந்தது . அதன் பின்னிருக்கையில் இருந்த பெண் திரையிட்டு முகத்தை மறைத்திருந்தாள்.
– மோரி ஓகை
தமிழில் – ஆர்.ராகவேந்திரன்
[tds_info]
ஆசிரியர் குறிப்பு:
ஆர். ராகவேந்திரன் ஒரு வங்கியில் பணிபுரிகிறார். மரபு இலக்கியங்களிலும் அறிவியல்,தத்துவப் படைப்புகளிலும் ஆர்வமுண்டு. அரூ அறிவியல் சிறுகதைப் போட்டியில் 2020 இல் பரிசு பெற்றார். தொடர்ந்து வாசிக்கவும் எழுதவும் முயன்று வருகிறார்.
[/tds_info]