மட்சுவா பாஷோ (1644-1694)
பாஷோவைக் குறித்து நமக்கு அறிமுகம் தேவையில்லை. அந்தரங்கமான அளவில், அவருக்கு ஏற்கனவே தமிழ் கவிஞர் என்ற இடம் அளிக்கப்பட்டுவிட்டது. அவரை நகலெடுத்தல், மொழியாக்கம் என நிறைய நடந்துவிட்டன நம் சூழலில். The Narrow road to the Interior நூல் ஜப்பானிய இலக்கியத்தின் கிளாசிக் அந்தஸ்தை பெற்ற படைப்பு. 156 சொச்சம் நாட்கள். கால்நடையாக 1500 மைல்கள் என பாஷோ மேற்கொண்ட பயணக்குறிப்புகள் அடங்கிய நூல் அது. கவிஞன் கண்டுபிடிப்பாளனாக, போதிசத்துவராக மாறும் பயணத்தைப் பார்க்கிறோம். அந்நூலில் இருந்து சில பகுதிகள் இங்கு மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன.
நிலவும் சூரியனும் நித்திய பயணிகளே. வருடங்களும் பயணித்துக் கொண்டே இருக்கின்றன. படகில் மிதந்து கொண்டிருக்கிறது ஒரு வாழ்நாள். அல்லது வயதான காலத்தில் களைப்புற்ற ஒரு குதிரையை வருடங்களுக்குள் அழைத்துச் சென்றபடி இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் ஒரு பயணம்தான். அப்பயணம்தான் அதனுள்ளேயே நம் வீட்டையும் வைத்துக்கொண்டிருக்கிறது. ஆதிகாலத்திலிருந்தே சாலைகளில் யாராவது ஒருவர் தவறிக்கொண்டே தான் இருக்கிறார்கள். இருந்தாலும் காற்றால் அலைகழிக்கப்படும் மேகங்களைப் போலவே, வாழ்நாள் முழுவதும் சுற்றித்திரிந்து பயணம் புரியும் கனவுகளால் ஈர்க்கப்பட்டு கொண்டே இருக்கிறேன். சென்ற இலையுதிர் காலத்தில் ஒரு வருடம் கடற்கரை ஓரமாக நடந்து சென்ற பயணம் முடிந்து புதிய வருடத்தை வரவேற்க சுமிதாநதியின் கரையில் இருக்கும் என் வீட்டிற்கு திரும்பி ஒட்டடைகளை அடிக்க தொடங்கினேன் ஆனால் வசந்தம் ஆரம்பிக்கும் முன்பே ஷிராகவா தடைஅரணைக் கடந்து வடக்கு திசையின் உட்பகுதிக்கு செல்ல ஆவல் கொண்டேன்.. தோசோஜினின் ஊர் சுற்றும் உட்கிடையால் ஆட்கொள்ளப்பட்டதால் என்னால் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தவே முடியவில்லை. என் கால்சராயை சரிசெய்தபடி என்னுடைய மூங்கில் தொப்பியை தைத்தபடியே பகல் கனவு காணத் தொடங்கினேன். கால்களுக்கு வலுவேற்ற மோக்ஸாவை தடவியபடியே மட்ஸுஷிமாவின் மேல் உதிக்கும் பிரகாசமான நிலவைப் பற்றி கனவு கண்டேன். உடனே என் வீட்டை வேறொருவர் பொறுப்பில் விட்டுவிட்டு என்னுடைய புரவலரான திரு சம்புவின் கோடை வாசஸ்தலத்திற்கு சென்று என் பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்யத்தொடங்கினேன். என் வாசலில் இந்த வரிகளை விட்டு சென்றேன்
இந்த புல் வீடு கூட
பொம்மையின்வீடாக
மாறக்கூடும்
27 ஆம் நாள் விடியற்காலை மூன்றாம் பிறையின் நாளன்று புலர் காலையின் பனி படலத்தில். ஒளி ஊடுருவும் சந்திரன் லேசாக கண்ணுக்கு தெரிய, பியூஜி மலை நிழலாய்த் தென்பட யூநோ மற்றும் யனாகாவின் செர்ரி மலர்களின் கீழே என் பயணத்தை தொடங்கினேன். இவர்களை நான் மீண்டும் எப்பொழுது காண்பேன்? சில நண்பர்கள் இரவில் என்னுடன் பயணித்து நான் படகில் ஏறும்வரை விடை அனுப்ப வந்திருந்தனர்.
சென்ஜுவில் இறங்கும் பொழுது மூவாயிரம் மைல்கள் என் இதயத்தின் ஊடே விரைந்து செல்வது போல் உணர்ந்தேன் இந்த முழு உலகமும் கனவு போல் தோன்றியது. அதை நான் அவர்களின் விடை அனுப்பும் கண்ணீரில்கண்டேன்
வசந்தம் செல்கிறது
பறவைகள் அழுகின்றன
மீன்களின் கண்களில் கண்ணீர்
எனது தூரிகையில் இருந்து வந்த இந்த முதல் வார்த்தைகளோடு நான் கிளம்பினேன். பின் தங்கி விட்டவர்கள் பயணியின் பின்பக்க நிழல் மறைவதை கண்டார்கள்.
ஜென்ரோக்கு சகாப்தத்தின் இரண்டாம் வருடத்தில் வளைந்த கற்கள் போன்று தோற்றமளித்த மேகங்களின் கீழ் வடக்கு திசையில் உள் நோக்கி அழைத்துச் செல்லும் நீண்ட பாதையை பற்றி நினைக்கிறேன். பல கதைகளில் கூறப்பட்ட அந்த இடத்திலிருந்து நான் திரும்பும்போது என் முடி பனி போல் வெளுத்து இருக்கலாம், அல்லது நான் திரும்பி வராமலே போகலாம். இரவு கவியும் பொழுது நாங்கள் சோகாவை வந்தடைந்தோம். கனமான பைகளால் தோள்கள் துவண்டு போயிருந்தன. கதகதப்பான இரவு உடைக்கும், குளியலுக்கான பருத்தி அங்கிக்கும், எழுதும் தூரிகைக்கும், மை மற்றும் தேவையான பொருட்களுக்கும் மிகவும் நன்றி உடையவர்களாக இருந்தோம். நண்பர்களிடமிருந்து விடைபெறும்போது அவர்கள் அளித்த பரிசுப் பொருட்களால் பை கனத்து இருந்தது. அவற்றை விட்டு விட்டு வர முடியாது
முரோ-னோ-யாஷியாமாவில் உள்ள கோயிலுக்கு செல்லும்பொழுது உடன்வந்த சோரா கூறினார் ”கோ-னோ-ஹானா சகுயா ஹைம் என வழங்கப்படும் இந்த பெண் தெய்வம் மரங்கள் பூப்பதற்கான கடவுள். இந்த தெய்வத்திற்கு பியூஜியிலும் ஒரு கோயில் உள்ளது. இந்த தெய்வம் தன் மகனின் தெய்வத் தன்மையை நிரூபிப்பதற்காக நெருப்புக்குள் தன்னை பூட்டிக்கொண்டு விட்டார். அதனால் அவருடைய மகன் இளவரசன் ஹோஹோடெமி அதாவது நெருப்பிலிருந்து பிறந்தவன் என அழைக்கப்படுகிறான். அதனால் தான் இங்குள்ள கவிகள் புகையைப் பற்றி எழுதுகின்றனர். மேலும் அதனால்தான் இங்கு வசிப்பவர்கள் எரியும் சதையை போல நாற்றம் அடிக்கும் கோனோஷீரோ என்ற மீனை வெறுக்கின்றனர். இங்குள்ள அனைவருக்கும் இந்த கதை தெரியும்” என்றார்.
மூன்றாம் நிலவில் இறுதி நாளன்று , நிக்கோ மலையின் அடிவாரத்திலுள்ள ஒரு விடுதி. விடுதி காப்பாளரின் பெயர் ஹொடோகே கோஸேமான்—ஜோபுத்தன். தன்னுடைய நேர்மை தனக்கு இந்த பெயரை கொடுத்தது என்று கூறியவர், விடுதியை உங்கள் வீட்டைப் போல் பாவித்து ஓய்வு எடுக்குமாறு கூறினார். கருணை மிக்க புத்தர் திடீரென்று ஒரு சாதாரண மனிதனைப் போல் தோன்றி ஒரு பயணிக்கு அவன் செல்லும் வழியில் உதவி செய்வதற்கு அவருடைய எளிமை ஒரு பெரிய வரம். அவருடைய அர்ப்பணிப்பு சிறிது கூட மாறவில்லை. கன்பியூசிய நேர்மையின் ஒரு வடிவமாகத் திகழ்ந்தார் . அந்த விடுதிக் காப்பாளர் ஒரு போதிசத்துவர்.
நான்காம் நிலவின் முதலாம் நாள் ஒருகாலத்தில் ‘இரண்டு வைல்டர்னெஸ்’ என அழைக்கப்பட்டு, பின்பு குகாயால் வேறு பெயர் இடப்பட்ட மலையின் மேல் உள்ள ஆலயங்களை காண்பதற்கு ஏறினோம். அவர் எதிர்காலத்தில் ஆயிரம் வருடங்கள் தாண்டி தன் பார்வையை வீசினார் போலும். புனிதமான இந்த ஆலயமும், அவருடைய கருணையும் முடிவில்லாமல், எட்டு திசைகளிலும் சமமாக, அமைதியாக, நான்கு விதமான மக்களிடையே பரவியிருந்தது. கீர்த்தி அதிகமாய் இருக்கும் பொழுது வார்த்தைகளால் குறைவாகத் தான் கூற முடியும்.
ஆஹ்—- எரிக்கும் சூரிய வெளிச்சத்தில்
இந்த துளிர்க்கும் வசந்த இலைகளின் முன்
பேச்சற்று நிற்கிறேன்
குரோகாமி மலை இன்னும் பனியால் போர்த்தப்பட்டு தான் இருக்கிறது. இதமான பனியில் சோரா எழுதுகிறார்.
கருப்பு முடி மலையில்
தலையை மழித்து
கோடை ஆடை பூணுகிறோம்
சோராவின் பெயர் கவாய் சோகோரோ. சோரோ அவருடைய புனைப்பெயர். பாஷோ- ஆன் (வாழைமர ஆசிரமம்) என அழைக்கப்பட்ட என்னுடைய பழைய வீட்டில் அவர் தண்ணீரும் விறகும் சுமந்து வந்து கொடுப்பவர்.. மட்சுஷிமா மற்றும் கிசாகட்டாவைக் காணும் ஆவலில் அவர் எங்களுடன் பயணம் செய்வதற்கு ஒப்புக்கொண்டார். களிப்பதும் உழைப்பதும் ஒரேமாதிரிதான் அவருக்கு. நாங்கள் கிளம்பிய காலை நேரத்தில் அவர் புத்தமததினரின் ஆடையை அணிந்து, தன் தலையை மழித்துக் கொண்டு, தன் பெயரை சோகோ அதாவது சாது என மாற்றிக் கொண்டார். அதனால் அவருடைய கவிதையில் காணப்படும் ஆடை பூணுதல் என்ற வார்த்தையில் அர்த்தங்கள் நிரம்பியுள்ளது
100 கெஜம் மேலே ஏறிய பின் ஒரு அருவி. ஒரு மேட்டில் இருந்த குகையில் இருந்து 100 அடி உயரத்திற்கு, ஆயிரம் கற்களால் ஆன ஒரு பாத்திரத்தினுள் கீழே பாய்ந்தது. அந்த குகையின் பின்னிருந்து பதுங்கி குனிந்து பார்த்த பொழுதுதான், அது ஏன் உரமி- நோ- டாக்கி (அருவியின் பின்னிருந்து காட்சி) என அழைக்கப்படுகிறது என்பது புரிந்தது.
அருவியின் உள்ளே–
சிறிது நேரம் நின்று இருந்தோம்
கோடை பின்வாங்கத் தொடங்கியது
அகன்ற நாசுமூரின் தொலைதூரத்தில் இருக்கும் குரோபானேவில் நண்பன் ஒருவன் வசித்து வந்தான். குறுக்கு வழியில் செல்ல ஆரம்பித்தோம். ஆனால் மாலையில் மழை பொழிய ஆரம்பித்தது. அதனால் கிராமத்திலுள்ள ஒரு பண்ணை வீட்டில் தங்கிவிட்டு, மறுநாள் விடியற்காலையில் பயணத்தைத் தொடர்ந்தோம். வெளியே வயலில் ஒரு குதிரையும், புல் வெட்டிக் கொண்டிருந்த ஒரு மனிதனும் இருந்தனர். வழி கேட்க நான் நின்றேன். மரியாதையுடன் அவர் சிறிது நேரம் சிந்தித்துவிட்டு ‘பல பாதைகள் குறுக்கிடுகின்றன. தொலைந்து போகும் சாத்தியம் அதிகம். இந்த வயதான குதிரையை அது செல்லும் வரை அழைத்துக் கொண்டு செல்லுங்கள். இதற்கு வழி தெரியும். அது நிற்கும் பொழுது இறங்கி விடுங்கள். அது திரும்பி வந்துவிடும்’ என்றார்.
எங்கள் பின்னே இரண்டு குழந்தைகள் நடனம் ஆடிக்கொண்டிருந்தன. அதில் ஒரு குழந்தையின் பெயர், இளஞ்சிவப்பு மலரின் விசித்திரமான பெயரான கசானே. சோரா இவ்வாறு எழுதினார்.
இந்தக் கசானேயுடன்
அவள் இருமடங்கு இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கிறாள்
என்ன ஒரு பொருத்தமான பெயர்
கிராமத்தை அடைந்த பின் சேணத்தில் ஒரு சிறிய பரிசை கட்டிவிட்டேன். குதிரை திரும்பி நடந்தது.
குரோபானில் மிகப்பிரபலமான சாமுராய் ஜோபோஜியை சந்தித்தேன். அவர் பண்ணை வீட்டின் பாதுகாவலராய் இருந்தார். என் வருகையினால் மிகவும் ஆச்சரியம் அடைந்த அவர் இரவும் பகலும் பேசியபடியே பல நாட்கள் என்னை அங்கு தங்க செய்துவிட்டார்.
பல நாள் அவருடைய தமையன் தோசுவின் வீட்டில் தங்கினேன். அவர்களுடைய நண்பர்களையும் உறவினர்களையும் சந்தித்தேன் ஒரு நாள் நாங்கள் இனோவா மோனோ நாய் வேட்டையாடும் தளத்திற்கு சென்றோம். சதுப்பு நிலங்களுக்குள் நடந்து தன்னை கல்லாய் மாற்றிக்கொண்ட சீமாட்டி தமமோவின் கல்லறையை கண்டுபிடிக்கச் சென்றோம். வீரக்கடவுளான ஷோ-ஹச்சிமனை வணங்கிய பிறகு, நகரும் படகிலிருந்து யொஷிட்சுனேவின் தளபதி யோய்சி, விசிறியை எறிந்த, ஹச்சிமன் கோவிலுக்கு சென்று வணங்கினோம். இரவு கவியும் நேரம் தோசுவின் வீட்டிற்கு திரும்பினோம்.
மலைகளின் துறவிகளின் கோவிலான ஷுகென் கோம்யோவிற்கு வரும்படி அழைக்கப்பட்டோம்.
கோடை மலைகளில்
அதிஉயர புனித நீர் தடுப்புகளுக்கு முன் பணிவோம்
இந்தப் பயணம் ஆசீர்வதிக்கப்படட்டும்.
உன்கன் கோயில் அருகிலிருந்த ஒரு மலை ஆசிரமத்தில் என்னுடைய தர்ம குருவான புட்சோ இவ்வாறு எழுதினார்.
ஓலையால் வேயப்பட்ட 5 அடி அகல குடிசை–
மழை மட்டும் பெய்யவில்லை என்றால்
நான் அதை அமைத்திருக்க மாட்டேன்
அவர் இந்த கவிதையை கரியால் ஒரு பாறையின் மேல் எழுதினார் என்று என்னிடம் வெகு நாட்களுக்கு முன் கூறியிருக்கிறார். ஆர்வத்துடன் பல இளைஞர்கள் எங்களுடன் சேர்ந்து கொண்டனர். உங்கன் கோயிலை நோக்கி அவர்களின் கைத்தடிகள் நீண்டன. எங்கள் பேச்சு சுவாரஸ்யத்தில் விரைவில் கோவிலை அடைந்தது எங்களுக்கு வியப்பாக இருந்தது. நீண்ட பள்ளத்தாக்கு வழியாக பாசி அடர்ந்து தொங்கும் அடர்த்தியான செடார் மற்றும் பைன் மரங்களின் வழியாக குளிர்ந்த வசந்த கால வானத்தின் கீழே தோட்டங்களைப் பார்த்தபடியே ஒரு பாலத்தை கடந்து நாங்கள் கோயிலின் வாயிலை அடைந்தோம்.
பின்னே திரும்பி புட்சோவின் ஆசிரமத்தை தேடிய பொழுது அது மலைமேல் ஒரு பாறையின் விளிம்பில் குகைக்கு அருகில் இருப்பது தெரிந்தது. மையோஜென்சி 15 வருடங்கள் இருந்த குகை போலவும், ஜென் மாஸ்டர் ஹௌனின் ஏகாந்த இடத்தை போலவும் தோன்றியது.
மரங்கொத்திப் பறவைகள் கூட
அவற்றை தனித்து விட்டுவிடுகின்றன.
கோடைச் சோலையில் ஒரு ஆசிரமம்
அவசரமாக எழுதப்பட்ட ஒரு சிறிய கவிதை கம்பத்தின் மேல் பொருத்தப்பட்டது.
செஷ்ஸோ செகி என்று அழைக்கப்படும் கொலைகார பாறையை காண்பதற்காக இரவல் வாங்கப்பட்ட ஒரு குதிரையில் சென்றோம். அதை நடத்தி அழைத்துச் சென்ற ஒருவன் ஒரு கவிதை கேட்டான். தயவு செய்து ஏதாவது அழகாக சொல்லுங்கள் என்றான்.
அகன்ற சமவெளியில் இருந்து
குதிரை தன் தலையை திருப்புகிறது
குக்கூவின் குரல் ஒலிக்கிறது
விஷ வாயுக்களை வெளியேற்றிய படி மலையின் நிழலில் இருக்கும் வெந்நீர் நீரூற்றுகளின் அருகே இந்த செஷ்ஸோ செகி கிடக்கிறது. தரையில் மண்ணிலும் இறந்துபோன தேனீக்களும் பட்டாம்பூச்சிகளுமாய் கிடக்கின்றன.
தெளிந்த நீர் ஓடையின் அருகில் வளரக்கூடிய மரம் என்று அஷினொவில் புகழப்படும் செய்கோ எனப்படும் வில்லோ மரம், இன்றும் நெல் வயலின் அருகே உள்ள பாதையில் வளர்கிறது. உள்ளூர் அதிகாரி ஒருவர் எங்களுக்கு வழிகாட்டுவதாக கூறினார். நான் எப்பொழுதும் அது நிஜம் தானா?அது எங்கே இருக்கக் கூடும் என்று வியந்து கொண்டிருந்தேன். இதோ இன்று அதே வில்லோ மரம்.
நெல் விதைத்தாயிற்று
வில்லோ மரத்தின் நிழலில் இருந்து நான் வெளிவரும் முன்
அவர்கள் செல்லத் தொடங்கினர்
ஒவ்வொரு நாளும் நினைத்துக் கொண்டே இருப்பதால், ஷிராகாவா தடை அரணை நினைக்கும் பொழுது எனக்கு படபடப்பாக இருந்தது. ஆனால் “வீட்டிற்கு செய்தி அனுப்புதல்” என்ற பழைய கவிதையை மனதில் இருத்தி என் மனதை அமைதிப்படுத்தினேன். பசுமையான அடர்த்தியான கோடைகால காடுகளின் வழியே நடந்தேன். மூன்று தடை அரண்களில் சில கவிஞர்கள் பொறித்திருந்த “இலையுதிர்கால காற்று” மற்றும் “சிவப்பு மேப்பில் இலைகள்” போன்றவைகள் ஞாபகத்திற்கு வந்தன. சாலையின் இரு பக்கத்திலும் யூநோஹானா என்ற மலர் புதர்கள், வெள்ளை மலர்களை தாங்கி பனி வயல் போல் காட்சி அளித்தன. இங்கே கியோசகி என்ன எழுதினார் என்றால் “மலையின் கதவின் வழியே செல்வதற்கு மக்கள் தங்களின் சிறந்த ஆடைகளை அணிந்து கொள்கின்றனர் என்றும், ஆண்கள் சிறிய கருமை நிறத்தில் உள்ள தொப்பிகளை அரசவைகளுக்குச் செல்வது போல் அணிந்து கொண்டு செல்கிறார்கள்” என்றும் எழுதியிருந்தார்.
என் தலையைச் சுற்றிலும்
யூநோஹானா
ஆதி சடங்குகளுக்காக உடை அணிந்து கொண்டு (ஸோரா)
கணவாயைக் கடந்து, அபுகுமா நதியைக் கடந்து சென்றோம். எங்களின் இடது பக்கத்தில் ஐசு மலை இருந்தது. இவ்வாக்கி,சோமா, மற்றும் மிஹாரு கிராமங்களும் இருந்தன. அவை வலதுபுறம் இருந்த ஹிட்டாச்சி மற்றும் ஷிமொட்சுகே கிராமங்களிலிருந்து இரண்டு சிறிய குன்றுகளால் பிரிக்கப்பட்டிருந்தன. ககேனுமாவில் கண்ணாடி போன்ற ஒரு குளம் இருந்தது. ஆனால் இருண்டு விட்ட வானம் அனைத்து பிரதிபலிப்பையும் மங்கலாகக் காட்டியது.
சுகாகவாவில் கவிஞர் தோக்கியோவுடன் பல நாட்கள் கழித்தோம். அவர் எங்களை ஷிரகாவா தடை அரணைப் பற்றி விசாரித்தார். “உடலும் மனமும் வன்மையாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. மற்ற கவிஞர்களின் வரிகளை படிப்பதிலும், அங்கிருந்த அருமையான சூழலை ரசிப்பதிலும் நேரத்தை செலவிட்டதால் நான் அதிகம் எழுதவில்லை என்பது அதிசயம் அல்ல” என்றேன்.
கலாச்சாரம் ஆரம்பிப்பது
கிராமங்களின் இதயத்திலிருந்துவரும்
நடவுப்பாட்டுகளிலிருந்துதான்
“இந்த ஆரம்ப வரிகளுடன் தொடர்புள்ள மூன்று கவிதைகளை நாங்கள் எழுதினோம்” என்றேன்.
ஊரின் எல்லையில், மிகப்பெரிய செஸ்ட்நட் மரத்தின் நிழலில் ஒரு துறவி தன் ஆசிரமத்தை அமைத்து இருந்தார். ‘காடுகளின் உள்ளே செஸ்ட் நட்டுகளை சேகரித்தல்” என்ற சைக்யோவின் கவிதை இப்படிப்பட்ட ஒரு இடத்தை தான் குறிக்கிறது. நான் ஒரு சிறிய தாளில் இவ்வாறு எழுதினேன் :சீன மொழியில் செஸ்ட் நட் என்று எழுதினால் அதன் வடிவம் மேற்கில் உள்ள மரம் என்று வரும். அது மறைமுகமாக மேற்கே உள்ள சொர்க்கமான அமிதா புத்தரைக் குறிக்கிறது; க்யோகி என்ற துறவி தன் வாழ்நாள் முழுவதும் செஸ்ட் நட் மரத்தைத் தான் தனது கைத்தடியாகவும் தன் வீட்டிலுள்ள கம்பங்களாகவும் உபயோகித்தார்.
எறவாணங்களின் அடியில்
செஸ்நெட் மலர்கள் மலர்வதை
ஏறக்குறைய யாருமே பார்ப்பதில்லை
டோக்யூ வீட்டிலிருந்து மலையின் அடிவாரத்தில் இருக்கும் ஹைவாடா நகரத்திற்கு சில மைல்கள் நடந்து சென்றோம். நகரத்துக்கு வெளியே சதுப்பு நிலங்கள் பளபளத்துக் கொண்டிருந்தன. அப்பொழுது ஏறக்குறைய கோடைகாலத்தில் நடுப்பகுதி. ஐரிஸ் மலர்கள் பறிக்கும் நேரம். கட்ஸுமி வளர்வதை பற்றி நான் விசாரித்தேன். ஆனால் அவை எங்கு வளர்கின்றன என்பது யாருக்கும் தெரியவில்லை. நாள் முழுவதும் சூரியன் மறையும் வரை “கட்ஸுமி கட்ஸுமி” என்று முணுமுணுத்துக் கொண்டே தேடினேன்.
நிஹோன்மட்சுவில் வலது பக்கம் இருக்கும் சாலையைத் தொடர்ந்து சென்று குரோசுகா குகைகளைக் காண்பதற்காக பயணத்தை நிறுத்தினோம். புகுஷிமாவில் இரவு தங்கினோம்.
- பத்மஜா நாராயணன்
குப்பிழான்.ஐ. சண்முகன் / November 30, 2020
கவிதைகளுடன் ஓர் அழகிய யாத்திரை.
/
K B Nagarajan / December 1, 2020
இத்தனைக்கும் பயணப்படு. அருமையான மனதிற்கு நெருக்கமான அழகிய படைப்பும் மொழியாக்கமும். மனமகிழ்ந்த நன்றிகள் பல திருமதி. பத்மஜா நாராயணன் அவர்களுக்கு.
/