சிதைவுறும் காமத்தின் எல்லைகள் 

 

இயற்கையைத் தனக்கேற்றவாறு செதுக்கிக் கொள்ள இயலும் மானுடனாகப் பிறப்பதில் தான் எத்தனை சௌகரியம்! நம்முடன் இணைந்து வாழும் சகஉயிர்களின் மனநிலையைப் பற்றி கவலைகொள்ள வேண்டியிருப்பதில்லை. படர்ந்து பரவும் செடிகளைத் தொட்டிக்குள் அடக்கி வளரவேண்டிய திசையையும், அளவையும் நிர்ணயிக்கலாம். ஆறாம் அறிவு உள்ளதை மட்டுமே தகுதியாகக் கொண்டு அஃறிணைகளை அடிமையாக்கி அன்பு செலுத்தலாம். நாய்கள் நன்றியுள்ளவை என்ற பிம்பத்தைக் கட்டமைத்து அதற்குள் அடங்காதவற்றைப் பழக்கலாம். பூனைகள் கலவு கொள்ளும் காலத்தை நிர்ணயிக்கலாம். அவற்றின் பாலியல் உணர்வுகளைத் தட்டியடக்குவதற்கான மருத்துவ சம்பிரதாயங்களை எவ்வித குற்றவுணர்வுமற்று மேற்கொள்ளலாம். அப்படிச் செய்வதால் அவற்றின் துன்பத்தைக் குறைப்பதாகச் சொல்லிக்கொள்ளலாம்.

விலங்குகளை மட்டுமல்லாமல் சமூகம் கிழித்த வரையறைக்குள் விழாத மானுடர்களையும் நமக்கு ஈடானவர்களாய் நாம் கருதுவதில்லை! அவர்களுக்கு உண்டாகும் இயற்கை உந்துதல்களைப் பகடி செய்து அவர்களைச் சமுதாயத்தின் இருண்ட மூலைக்குத் தள்ளுகிறோம். சமீபத்தில் ‘மோகனசாமி’ சிறுகதைத் தொகுப்பை வாசித்தேன். இவை மொத்தமும் “தன்பாலீர்ப்புச் சிறுகதைகள்” என்ற அறிமுகத்துடன் அப்புத்தகம் எனக்குக் கொடுக்கப்பட்ட போது அவ்வகையினரைப் பற்றி எனக்கென்று பெரிய அபிப்பிராயம் இருக்கவில்லை. அப்படியொரு தன்மை அவர்களுக்கு இயற்கையாக அமையுமென்றால் இருந்து விட்டுப்போகட்டுமே என்றே நினைத்திருந்தேன்.  நெருங்கிய உறவு வட்டத்தைத் தொடாத வரையில் எதுவும் சாதாரண விஷயம் தானே!

இந்த சிறுகதைத் தொகுப்பின் பெரும்பாலான கதைகள் தன்பாலீர்ப்பினனாகத் தன்னை உணரும் மோகனசாமியின் அனுபவக்குறிப்புகள். மோகனசாமி என்ற கதாப்பாத்திரம் வழி தன் அந்தரங்க வாழ்வின் மறைவிலிருந்து வெளிவந்த வசுதேந்திராவின் இத்தொகுப்பு, கன்னட வாசகர்களின் இலக்கிய கருத்துகளை முற்றிலுமாகப் புரட்டிப் போட்டிருக்கிறது என புத்தகத்தின் பின்னட்டைக் குறிப்பு தெரிவிக்கிறது.

நேர்மை, தூய்மை, ஒழுங்கு இவற்றை முறையாகக் கடைப்பிடிப்பவனாக மோகனசாமி அறிமுகமாகும் முதல் கதையே வாழ்வின் வசதியான தளத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த என்னைப் பிடுங்கித் தூர எறிவதாக இருந்தது. என் அடிமனதில் ஆழப்புதைந்திருந்த சமூகநம்பிக்கைகள் மேலெழுந்து சுயபாலீர்ப்பினரைப் பற்றியான என் புரிதல்களைக் கேள்விக்குள்ளாக்கித் தொந்தரவு செய்தன. தொடர்ந்து வாசிப்பது சிரமம் என்ற நிலையை நோக்கிச் செலுத்திய எண்ணங்களை ஒதுக்கி விட்டுத் தொடர்ந்தேன்.

இரண்டாவது கதை தன்னைப் ‘பெண்ணாய்’ அடையாளம் காணும் சிறுவன் மோகனசாமிக்குள் எழும் குழப்பங்களையும் அவனுக்கு ஏற்படும் அவமானங்களையும் பற்றியது. அவனை ‘கம்ஸூ’ எனக் கேலிசெய்யும் சுற்றத்தார், வயதான பின்னர் பெற்ற குழந்தையென்பதால் அவனுக்கு இப்படியானது என்று நம்பும் தாய், இவர்களுக்கிடையே சிறுவன் மோகனசாமி தன் பெண்மையை மறைத்து ஆணின் சட்டைக்குள் தன்னைப் பொருத்திக் கொள்ளச்செய்யும் முயற்சிகளில் தனது பால்யத்தைத் தொலைக்கிறான். ‘கம்ஸூ’ என்ற வசைச்சொல்லிற்கான அர்த்தத்தை முதல் பயன்பாட்டின் போது குறிப்பிட்டு, அதை ‘ஆம்தே’ (ஆண் விபசாரி என்பதன் கொச்சைத் தமிழாக்கம்) எனத் தமிழில் மொழிபெயர்த்து, அச்சொல்லைப் பின்னர் வந்த இடங்களிலெல்லாம் பயன்படுத்தி கதையை நகர்த்திச் செல்கிறார் மொழிபெயர்ப்பாளர். அவ்வார்த்தையால் அடையாளப்படுத்தப்படும் வேளைகளில் மோகனசாமியின் சிறுமனம் சிதைகிறது. அச்சொல்லைத் தன்னிலிருந்து பிரித்தெடுக்க இயன்ற முயற்சிகளைச் செய்கிறான். தன் அங்கஅசைவுகளை அடக்கி உரையாடல்களைக் குறைக்கிறான். பேசநேரும் சமயங்களில் தனது குரலைக் கரகரப்பாக மாற்றிக் கொள்கிறான். பெண்களுடன் விளையாட ஏற்படும் விழைவை அடக்குகிறான். சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்வதன்  மூலம் ஆண்மையை மீட்டு விடமுடியும் என நம்புகிறான். அத்தகைய முயற்சிகளின் போது, தன் மனப்பிம்பத்திலிருந்து முரண்படும் தன்னையே கண்டு மிரள்கிறான். வேட்டையாட இயற்கையாய் தன்னுள் எழும் உந்துதலை அடக்கிக் கூண்டிற்குள் வாலாட்டி உலவப்பழகும் புலிக்குட்டியைப் போல தடுமாறும் அவன், தன் கவனத்தைப் படிப்பின் பக்கம் திருப்புகிறான்.

சமூகத்தில் நிலவும் மூடநம்பிக்கைகள் மோகனசாமியைப் பாதிக்கின்றன.

நம் தேகத்தைக் கட்டுப்படுத்தும் மரபணுக்கள் மிகவும் புத்திசாலிகள். சில உயிரினங்கள் இந்தப் பூமிக்குத் தேவையில்லை என்று அவைப் புரிந்து கொள்கின்றன. அப்படிப்பட்ட சந்ததி தொடரக் கூடாது என்று அவை முடிவு செய்கின்றன. சந்ததி தொடராமல் இருக்க அப்படிப்பட்டவர்களைகேக்களாக செய்கின்றன என்ற நண்பனின் கூற்றை நம்பும் மோகனசாமி, தனது மரபணு தன்னைக் கைவிட்டதாக எண்ணி கழிவிரக்கம் கொள்கிறான். நாகதோஷத்தால் தான் இப்படி நடக்கிறது எனக்கருதி நாகபூஜை செய்கிறான். பிறிதொரு நாளில் அயல்பிரதேச ஆண்கள் இருவர் ஊர்க்கோவிலின் உட்பிரகார மண்டபத்துள் புணர்ச்சியில் ஈடுபடுவதைக் காணநேர்கையில் இவ்வுலகில் தான் தனியனல்ல என்ற புரிதல் அவனுக்கு உண்டாகிறது.

பதின்வயதில் மோகனசாமியின் குழப்ப எல்லைகள் விரிவடைகின்றன. பெண்களால் ஈர்க்கப்படும் ஆண் நண்பர்களுள் தன்னை ஒருவனாய்க் காட்டிக்கொள்ள, தான் ஒரு பெண்ணுடன் தொடர்பிலிருந்ததாக சொல்கிறான். மற்றவர்கள் ‘கே’க்களைப் பற்றிப் பேசும்போது தூ அசிங்கம் என்று சொல்லி நகர்கிறான். அதே நேரம் உடம்பெல்லாம் காதுகளாக அவர்கள் விவாதிக்கும் விஷயங்களிலிருந்து தன் தன்மையை ஆராய விருப்பம் காட்டுகிறான். பெண்களின் நிர்வாணப்படம் அடங்கிய நண்பர்களின் புத்தகங்களில் ரகசியமாய் ஆண் உடல் வர்ணனைகளைத் தேடி ஏமாற்றம் கொள்கிறான்.

தன் வயதையொத்த நண்பர்களெல்லாம் பெண்களின் பின்னே சுற்ற, இவன் மனம் நெருங்கிய நண்பனின் பால் செல்கிறது. அவன் மீது எழும் பதின்பருவக் கிளர்வுகளைக் குற்றவுணர்வு மேலெழ அடக்கிக் கொள்கிறான்.  உலகம் நிர்ணயித்த ஆண் என்ற எல்லைக்குள் பொருந்திவிட தனக்குத் தெரிந்த அனைத்தையும் செய்கிறான். இவற்றையெல்லாம் மீறி அவ்வப்போது வெளிக்கசிந்துவிடும் ‘பெண்மை’ அவனைக் கேலிக்குள்ளாக்கித் தற்கொலையை நோக்கி விரட்டுகிறது. சாதாரணமாய் நாம் கடந்து வரும் பாதை தான் சுயபாலீர்ப்பினர்களுக்கு எவ்வளவு சிக்கல் நிறைந்ததாய் இருக்கிறது! நாம் கவனமின்றித் தாண்டும் நொடிகளை யோசிக்கவியலாப் போராட்டங்களுடன் தடுமாறிக் கடக்கும் அவர்களின் மீது எத்தனைச் சுலபமாய் சொற்களை வீசிவிடுறோம்!

மோகனசாமியின் பெற்றோருக்குள் சுழன்றெழும் உணர்வுப் போராட்டங்கள் நுட்பமானவை.

தன் மகன் பெண்தன்மை கொண்டவன் என்பதை ஏற்றுக்கொள்ள இயலாமல் அவனுக்குள்ளிருக்கக் கூடிய ஆண்மையைத் தேடித்துழாவுகிறாள் அவனது தாய்.

தனது உடலிலிருந்து இரத்த மாமிசமாக வெளியே வந்த தன்னுடைய குழந்தை உயிரின் துணுக்கைப் பற்றி எந்தவித அபத்தமான வார்த்தைகளைக் கேட்கவும் அவள் தயாராக இல்லை.

மோகன் என்ன ஆனாலும் என் மகன். ஒன்பது மாதம் வயிற்றில் சுமந்து பெற்றவள் நான். அவன் எவ்வளவு பெரியவனானாலும் இன்றும் எனது குட்டிப்பையன் தான். அவன் மலம் கழித்ததையெல்லாம் கழுவியவள் நான். அவனை அம்மணமாக குளியலறையில் நிறுத்திக் குளிக்க வைத்தவள் நான். காய்ச்சல் வந்து படுத்த போது உள்ளாடையை மாற்றியவள் நான். எனக்கென்ன வெட்கம்? ஆண்டவா என் தவறை மன்னித்துவிடு. எனக்கு எந்த கெட்ட எண்ணமும் கிடையாது’, என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மெல்ல அவனது ஆணுறுப்பைக் கூச்சத்துடனும் சங்கோஜத்துடனும் தொட்டுப் பார்க்கிறாள். அது விரைத்துக் கொண்டிருந்தது தெரிந்து மிகவும் மகிழ்ச்சியானது. எல்லாச் சந்தேகங்களும் தீர்ந்து போனது போல அவள் மனது அமைதியடைந்தது.’

கனவில் வந்த இளம் பையனின் நிர்வாண தேகம் தான் அவ்விரைப்பிற்குக் காரணம் என்பதை அறியாமல் நொடியில் உடையக் கூடிய சோப்புக் குமிழியாய் அவளுக்குள் மகிழ்ச்சி மொட்டுவிடுகிறது. தன் மகன் பிற ஆண்களிலிருந்து வேறுபட்டவனல்ல என நம்ப விரும்பும் தாயின் உளநிலையை இதைவிடத் துல்லியமாக வேறு எப்படி விவரித்துவிட முடியும்!

‘கே’ ‘ஹோமோ’ போன்ற வார்த்தைகளில் பரிட்சயம் கொண்ட மோகனசாமியின் தந்தை மகனிடம் மிளிரும் பெண்மையை அடையாளம் கண்டு ஒதுங்குகிறார். சமூகக் கட்டுப்பாடுகளுக்குள் சிக்கிய அவரது மனம்  எப்போதும் திருமணம் செய்து கொள்ளாத, வரதட்சணை வாங்க முடியாத, வம்சத்தை வளர்க்க முடியாத பையனு’’க்காகும் மேற்படிப்புச் செலவுகளை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. அதனைத் தொடர்ந்து மோகனசாமி பகுதிநேர வேலைக்குச் சென்று படிக்கத் துவங்கும் நாட்களில் அவருள் ததும்பியெழும் குற்றவுணர்வு, வரதட்சணைப் பணத்திற்கு ஈடாக அவன் சம்பாதிக்கும் நாட்களில் உச்சத்தைத் தொடுகிறது. அவர் மனதிற்குள் கட்டமைத்து வைத்திருந்த எல்லைகள் தகர்கின்றன. அவனையொத்த பிள்ளைகளின் அமைதி குலைந்த இல்லறத்தைக் காணும் அவர், அது போன்ற திருப்தியற்ற வாழ்வு தன் மகனுக்கு அமையவில்லை எனச்சமாதானம் செய்துகொள்கிறார்.

ஹேமா

மிரட்டிப் பணம் பறிக்கப்படும் இக்கட்டான சூழலொன்றில் தன் சுயத்தை ஏற்று மோகனசாமி நிமிர, அவனது சிக்கல்கள் அடுத்த கட்டத்திற்கு நகர்கின்றன. ஆண் நண்பர்களைத் தேடிப்பிடிப்பது சிரமமென்றால், அவர்களை நம்பகமானவர்களாய் தேடுவது அதை விடச் சிரமமாக இருக்கிறது அவனுக்கு. மற்றவர்களிடம் தன் வாழ்க்கைத் துணையினைப் பற்றி பேசுவது கூட அசாதாரணமான ஒன்றாகிவிடுகிறது. விமானத்தின் பக்கத்து இருக்கையில் அமரும் அந்நியரிடம் தன் ஆண் நண்பனைப் பெண்ணாய் திரித்து, தனது அனுபவங்களை விவரித்து, அவரது முகமாறுதல்களை அவன் ரசிக்கும் வேளையில் அவனுள் இருக்கும் குறும்பு தலைக்காட்டுகிறது. விடைபெறும் நேரம் உண்மையைச் சொல்லி அவரிடம் மன்னிப்புக் கேட்கும் அவனது நேர்மையில் அவன் மீதான மதிப்பு உயர்கிறது.

மோகனசாமியை நோக்கிய அவனது சுற்றத்தாரின் எதிர்வினைகளும் நுண்ணியமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

மோகனசாமியின் பலவீனத்தை அறியும் காசிவீரன் அவனை மிரட்டி பணம் பறிக்கிறான். அவனுடன் ஓரிரவை கழிக்க முற்படும் அந்நிய இளைஞன் அவனது கைத்தொலைப்பேசி, மடிக்கணினி இவற்றையெல்லாம் களவாடிச் செல்கிறான்.

உங்களுக்கு படுக்கை சகவாசம் வேண்டாம்னா விட்டுடுங்க. மகளிடம் முன்பே சொல்லி வச்சிருக்கேன். உங்களை அதுக்குக் கட்டாயப்படுத்தமாட்டா. வீட்டில் சமையல் செய்வது, துணி துவைப்பது, உங்களைப் பார்த்துக்கறது . . . மொத்தத்தில் ஒரு நல்ல தோழியாய் இருக்கலாம் தானே. அவளுக்கும் வாழ்க்கைக் கிடைத்த மாதிரி இருக்கும். நீங்களும் ஜனங்க முன்னாடி பொண்டாட்டியைக் கூட்டிகிட்டு சுத்தலாம் என்று ஏழைப்பட்டரொருவர் தனது விதவைப் பெண்ணின் வாழ்க்கைக்காக அவனிடம் பேசுகிறார். தன்னுடன் முன்பொருமுறைப் புணர்ச்சியில் ஈடுபட்டு தனது பொருட்களை திருடிச் சென்றவன் அந்த விதவைப் பெண்ணின் தமையன் என்பதை உணர்ந்தும், அவனுக்கு வேலைத் தேடித்தந்து உதவுவதாக மோகனசாமி ஒப்புக்கொள்ளும் போது அவனால் தன் மகள் மறுக்கப்பட்டதை மறந்து மகிழ்கிறார் பட்டர்.

தன்பாலீர்ப்பினரின் மனநிலையை இந்த அளவிற்கு நுட்பமாய்ச் சுட்டிக் காட்டும் கதைத்தொகுப்பு தமிழில் இருப்பதாய் தெரியவில்லை. வசுதேந்த்ராவின் இந்தக் கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து, அவற்றின் மூலம் நாம் சமபாலீர்ப்பினரின் மீது கொண்டுள்ள முன்முடிவுகளைச் சிதைக்கிறார் கே. நல்லதம்பி.

 நூல்: மோகனசாமி–  (மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு)

கன்னடத்தில்வசுதேந்த்ரா

தமிழில் கே. நல்லதம்பி  


-ஹேமா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.