முதலாளித்துவம் எவ்வாறு நம்மை இயற்கையிடமிருந்து துண்டிக்கிறது-அனிதா வாட்டர்ஸ்

மார்க்ஸ் சுற்றுச்சூழல் கோட்பாட்டாளராக முதலில் அறியப்பட்டிருக்கவிட்டாலும், அவர் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குறித்த திட்டமிட்ட அணுகுமுறையைக் கொண்டிருந்தார், அவர் உழைப்பு, தொழில்நுட்பம், மற்றும் இயற்கைக்கு இடையிலான முக்கியமான இணைப்புக்களை அங்கீகரித்திருந்தார் என்று மார்க்சின் படைப்புக்கள் குறித்த அண்மைக்கால ஆய்வு மாணவர்கள் வாதிடுகின்றனர். சுற்றுச்சூழல் குறித்த அவருடைய விவாதங்கள் “இருபதாம் நூற்றாண்டின் மிகவும் முன்னேறிய சூழலியல் பகுப்பாய்வை முன்கூட்டியே” அறியத்தந்திருக்கின்றன என்று சமூகவியலாளர் ஜான் பெல்லமி ஃபாஸ்டர் கூறியுள்ளார். முதலாளியத்தின் காரணமாக சிதைக்கப்பட்ட மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான உறவைப் பகுப்பாய்வு செய்ததன் மூலம் அவரது காலத்தின் வேளாண் அறிவியலின் வளர்ச்சிகளைப் பயன்படுத்தி, சமூகப் பொருளாதார உறவுகளை புரட்சிகரமான முறையில் மாற்றியமைப்பதன் மூலம் மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான பிளவினைச் சரி செய்வது சாத்தியம் என்று வாதிடுகிறார். நீடித்த வாழ்வுக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குமான ஒரு பாதை சாத்தியமே.

மார்க்ஸ் எங்கல்சும் இருபதாம் நூற்றாண்டு முதலாளித்துவத்தில் உள்ளார்ந்துள்ள சுற்றுச்சூழல் பிரச்சனைகளை நேரடியாகக் கண்ணுற்றவர்களாகவும் கூர்த்த பகுப்பாய்வாளர்களாகவும் இருந்தனர். இன்றைய மிகவும் நெருக்கடியான பிரச்சனை என்று பெல்லமி ஃபாஸ்டர் அங்கீகரிக்கும் நிலக்கரி இருப்புக்கள் குறைந்துவருவதும் காடுகளின் அழிவும், குறிப்பாகக் குறைந்துவரும் மண் வளமும் குறித்து அவர்கள் எழுதியுள்ளனர். மண் வேதியியலில் முன்னேற்றங்களைக் கருத்தில்கொண்டு, 1800 களின் பெரிய நில உரிமையாளர்களும் “வளமிழந்த மண்ணை” மேம்படுத்துவதற்கு பொட்டாசியம் உப்புக்கள், பாஸ்பேட்டுக்கள் மற்றும் குவானோ (தென்னமெரிக்காவிலும் கரீபியனிலும் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்த  கடற்பறவை எச்சங்கள்) ஆகியவற்றின் மதிப்பை அறிந்திருந்தனர். அதேநேரத்தில், மண்ணை வளப்படுத்துவதற்குப் பயன்படுத்தக்கூடிய கனிமப் படிமங்கள் விலை உயர்ந்தவையாகவும் பற்றாக்குறையாகவும் இருப்பதை விவசாயிகள் அறிந்திருந்தனர்.

அவரது காலத்தின் வேளாண் வேதியியலாளர்களில் மிகவும் புகழ்பெற்றவர்களில் ஒருவரான ஜஸ்டஸ் வான் லீபிக் (1803—73), விவசாய நடைமுறைகளில் குவானோ போன்ற மிகவும் வரம்புக்குட்பட்ட மூல வளங்களைச் சார்ந்திருப்பதை விமர்சித்துள்ளார்.  அவை போன்ற தற்காலிக இடுபொருட்களால் மண்ணின் “மறுவுற்பத்தி நிலைமைகளை” மீட்டெடுக்க முடியாது. நகர்ப்புறவாசிகளின் குப்பைகளின் சத்துக்களைக் கிராமப்புறத்து மண்ணுக்குக் கொண்டுவரக்கூடிய புரட்சிகரமான மறுசுழற்சித் திட்டத்தை 1859 இல் லீபிக் முன்வைத்தார். அதை “வேளாண்மை, மீட்டெடுப்புக் கோட்பாடு, வயல்களுக்கு அவற்றின் இயற்கை வள நிலைமைகளைத் திரும்ப அளிப்பதன் மூலம் விவசாயி நிலத்திற்கு அதன் நிரந்தரத் தன்மைக்குக் காப்பீடு அளிக்கிறார்”  என்று அவர் குறிப்பிட்டார்.

மூலதனத்தில் இயற்கை பற்றிய அவரது விவாதத்தில் மார்க்ஸ் லீபிக்கின் படைப்பைப் பெரிதும் சார்ந்திருக்கிறார், மேலும் லீபிக்கின் படைப்பில் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களுக்கு இடையிலான பிரிவினை பற்றிய கவலைகள் “பொருளாயத மற்றும் மூளை உழைப்புக்கு இடையிலான மாபெரும் பிரிவினையை”, அதாவது நகர்ப்புறத்துக்கும் கிராமப்புறத்துக்கும் இடையிலான பிரிவினையை   எதிரொலிக்கின்றன என்பதைக் காட்டுகிறார். முதலாளித்துவ உற்பத்தி, மனித இருத்தலின் இயற்கையான அடித்தளங்களிலிருந்து விலகியிருக்கும் மாநகரங்களில் மக்கள்தொகையைக் குவியச் செய்கிறது. “முதலாளித்துவம் மனித உயிரினங்களுக்கும் அவர்கள் வாழும் புவிக்கோளுக்கும் இடையிலான உயிர்ப்பொருளாக்கச் செயல்பாட்டுப் பரஸ்பரத் தொடர்புக்கு இடையூறை ஏற்படுத்துகிறது, இதுவே உயிர்ப்பொருளாக்கச் செயல்பாட்டுப் பிளவு (metabolic rift) என்ற கருத்தாக்கமாக அறியப்படுகிறது” என்று மார்க்ஸ் எழுதினார்.

மூலதனம் தொகுதி மூன்றில் அவர் பின்வருமாறு எழுதுகிறார்:

பெருமளவிலான நிலச் சொத்துரிமை வேளாண் மக்கள்தொகையை எப்போதும் மிகவும் குறைந்தபட்சமாகச் செய்துகொண்டே இருக்கிறது, மேலும் அது பெருநகரங்களில் எப்போதும் நெருக்கமாக அதிகரித்துக்கொண்டே இருக்கும் தொழில்துறை மக்கள்தொகையை எதிர்கொள்கிறது, இந்த வழியில் அது  சமூக உயிர்ப்பொருளாக்கச் செயல்பாட்டின், அதாவது உயிர்வாழ்க்கையின் இயற்கையான விதிகளின்படி நிகழும் உயிர்ப்பொருளாக்கச் செயல்பாட்டின் பரஸ்பரம் சார்ந்த நிகழ்ச்சிப்போக்கில் சரிசெய்ய இயலாத பிளவினைத் தூண்டக்கூடிய நிலைமைகளை ஏற்படுத்துகிறது.

இங்கு, மார்க்ஸ் உயிர்ப்பொருள் ஒன்று வளர்ந்து மறு உற்பத்திக்கு வழிவகை செய்வதற்காக அதன் சுற்றுச்சூழலிலிருந்து சத்துக்களை எடுத்துக்கொண்டு, அதன் கழிவுகளை வெளியேற்றும் உயிரியல் அமைப்பினைக் குறிப்பிட்டு உயிர்ப்பொருளாக்கச் செயல்பாட்டின் இயற்கையான ஒப்பீட்டைப் பயன்படுத்தியுள்ளார். ஓர் ஒற்றை உயிரணு, ஓர் உயிர், ஒரு சூழலியல் அமைப்பு  அல்லது உண்மையில் ஒட்டுமொத்தப் புவிக்கோளின் ஒழுங்காற்றுச் செயல்முறையை விவரிக்க உயிர்ப்பொருளாக்கச் செயல்பாட்டைப் பயன்படுத்தலாம். மேலும் சமூக உயிர்ப்பொருளாக்கச் செயல்பாட்டில் மார்க்ஸ் கவனம் செலுத்தினார். அதில் மனிதர்களை இயற்கையுடன் இணைக்கும் அமைப்புமுறைகள் உற்பத்தி சக்திகளால் இடையீடு செய்யப்படுகிறது. “உயிர்ப்பொருளாக்கச் செயல்பாட்டில் பிளவு” என்பது மனித உழைப்பு அதன் இயற்கையான மூலவளங்களிலிருந்து அந்நியப்படுத்தப்படுகிற முறையைக் குறிக்கிறது.

இங்கு மார்க்ஸ் நகர்ப்புறங்களில் தொழிலாளர்களை முதலாளிகள் சுரண்டுவதற்கும் கிராமப்புறத்தில் மண் வளமை போன்ற இயற்கை மூலவளங்கள் முதலாளித்துவ விவசாயத்தால் அழிக்கப்பட்டு வருவதற்கும் இடையில் ஒப்பீட்டை வரைகிறார். பெருவீத தொழில்துறை தொழிலாளர்களை வறுமைக்குள் தள்ளுகிறது, பெருவீத விவசாயம் மண்வளத்தைக் குன்றச் செய்கிறது. உலகளாவிய அளவில் ஏகாதிபத்திய நாடுகள் காலனியப் பகுதிகளின் மண்வளத்தைக் குன்றச் செய்வது உட்பட அவற்றின் இயற்கை மூலவளங்களைக் கொள்ளையிடும் முறையில் உயிர்ப்பொருளாக்கச் செயல்பாட்டில் பிளவு காணப்படுகிறது. பெருவில் குவானோவைச் சுரண்டி எடுப்பது அல்லது சிலியின் நைட்ரேட்டுக்களைச் சேகரிப்பது ஆகியவை மண்வள இழப்புப் பிரச்சனைக்குத் தற்காலிக மற்றும் போலியான தீர்வுகளாகும். (உண்மையில் இங்கிலாந்து வேளாண்மை பயனளிக்கும் அளவுக்கு குவோனோ படிவங்களைப் பயன்படுத்த வேண்டுமானால் இங்கிலாந்தின்  நிலக்கரி வயல்களின் அளவுக்குக் கண்டுபிடித்து எடுக்க வேண்டியிருக்கும்).

மார்க்ஸைப் பொறுத்தவரை, காத்துப் பேணுவதற்கான ஒரே நீடித்த வழி நிலத்தைச் சமூகச் சொத்தாகக் கருதி உணர்வுப்பூர்வமான மற்றும் பகுத்தறிவு சார்ந்த முறையில் பயன்படுத்துவதுதான்.அதாவது தனியுடைமை நிலச் சொத்துரிமையை ஒழிப்பதாகும். சூழலியலைக் காத்துப்பேணுதல் என்பது எதிர்காலத்தில் உற்பத்தியாளர்களின் கூட்டிணைவுச் சமுதாயத்தில், அதாவது சோசலிச சமுதாயத்தில் தான் சாத்தியமாகும். அதுதான் ஒரு புதிய, உயர்ந்த கூட்டிணைவை, வேளாண்மை மற்றும் தொழில்துறையின் கூட்டிணைவைக் கொண்டுவரமுடியும்.

இருப்பினும், சோசலிசத்துக்கு மாறிச் செல்வது மட்டுமே நகர்ப்புறத்துக்கும் கிராமப்புறத்துக்கும் இடையிலான பகைமையைத் தானாகவே அகற்றிவிடும் என்ற உத்தரவாதத்தை அளிப்பதில்லை. கவனமான திட்டமிடலுக்கான தேவைக்கு, மண்ணுக்கான சத்துக்களை நகர்ப்புறத்திலிருந்து கிராமப்புறத்துக்கு மறுசுழற்சி செய்ய வேண்டிய தேவைக்கு, கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் மிகவும் சமமான மக்கள்தொகைப் பரவலின் தேவைக்கு மார்க்ஸ் அழுத்தம் கொடுத்தார் என்று பெல்லமி ஃபாஸ்டர் கூறுகிறார். தொடக்கக்கால சோவியத் ஒன்றியம், குறிப்பாக லெனினின் காலத்தில், இயற்கை மூலவளங்களையும் இயற்கைப் பாதுகாப்பையும் அறிவியல் பூர்வமாக நிர்வகிப்பதற்கு மிகவும் தீவிரமாக அக்கறை செலுத்தியது. பின்னர், 20 நூற்றாண்டின் பிற்பகுதி சோவியத் தலைவர்களுக்கு இருந்த வேறு முன்னுரிமைகள், உயிர்ப்பொருளாக்கச் செயல்பாட்டுப் பிளவு பற்றிய மார்க்ஸின் வாதத்தைக் கைவிட்டு, “சூழல் கொலை” என்று சித்தரிக்கப்பட்ட கொள்கைகளைப் பின்பற்ற இட்டுச் சென்றன. பெரிய தனியார் கார்பொரேட்டுக்களின் மேலாதிக்கத்தில் இல்லாத உள்ளாற்றல் மிக்க ஒரு சமுதாய மாதிரியை கியூபாவில் காணமுடியும். கடலோர மேலாண்மையிலும் நகர்ப்புற விவசாயத்திலும் காத்துப்பேணும்  வேளாண்மையிலும் கியூபாவின் முன்னேற்றங்கள் நன்கு அறியப்பட்டவை. தனி உரிமையாளர்களின் குறுகிய கால இலாபம் முதன்மைக் குறிக்கோளாக இருக்கும்போது இந்தச் சாதனைகள் சாத்தியமாகா.

வழக்கமாக நாம் மார்க்ஸைச் சுற்றுச்சூழல் கோட்பாட்டாளராகப் பார்ப்பதில்லை, ஏனென்றால் சுற்றுச்சூழல் சிந்தனை குறித்த நமது வரையறை சூழல்மையவாதத்தை (இயற்கை உலகின் மீது கவனம் செலுத்துதல்) மானுடமையவாதத்திற்கு (மனிதர்கள் மீது கவனம் செலுத்துதல்) எதிர்நிறுத்தும் அதேநேரத்தில் சமுதாயத்திற்கும் இயற்கை உலகுக்கும் இடையிலான இடைத்தொடர்பை கைவிட்டுவிடும் அளவுக்கு மிகவும் குறுகியதாக இருக்கிறது. முதலாளித்துவம் இயற்கையை மனித இனத்திலிருந்து தனித்ததாக, மனிதர்களால் மேலாதிக்கம் செலுத்தக் கூடிய, செலுத்த வேண்டிய ஒன்றாகவும் மூலதனத்துக்கான “இலவயக் கொடையாகவும்” காண்கிறது. மார்க்ஸ் இன்னும் ஆழமான ஒரு கருத்தினை முன்வைத்தார். மண் வளமை கூட “நாம் நினைப்பது போல மிகவும் இயற்கையான பண்பு அல்ல; அது அந்தக் காலத்தின் சமூக உறவுகளுடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டது” என்று மார்க்ஸ் தத்துவத்தின் வறுமை என்ற நூலில் எழுதியுள்ளார்.

மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான இடைத்தொடர்புக்கான வழி   தொழில்நுட்பத்தில் காணப்படுகிறது, அது இயற்கை நிலைமைகள் மற்றும் சமூக உறவுகள் ஆகிய இரண்டினாலும் வடிவமைக்கப்படுகிறது. பெல்லமி ஃபாஸ்டர் சுட்டிக்காட்டுவதைப் போல, வேளாண் தொழில்நுட்ப உத்திகளில் முன்னேற்றங்கள் நீடித்த வேளாண்மைக்கு உள்ளார்ந்த வகையில் பொருந்திப்போகாத புதிய சமூக உறவுகளை உருவாக்கியுள்ளன. நாம் மாற்ற வேண்டியது வேறுபட்ட தொழில்நுட்ப வளர்ச்சிகளில் பெரிதாக இல்லை, மாறாகச் சமூக உறவுகளிலேயே மாற்றம் கொண்டுவர வேண்டும்.   

அண்மையில் இளைஞர்களின் காலநிலை மாற்ற வேலை நிறுத்த அணிவகுப்பு ஒன்றில் ஓர் இளைஞர் “காலநிலை நெருக்கடிக்கான ஒரே தீர்வு முதலாளித்துவத்துக்குக் முடிவுகட்டுவது தான்” என்ற முழக்க அட்டையை ஏந்தி வந்தார். மார்க்ஸ் அதை ஒப்புக்கொண்டிருப்பார். கார்பொரேட் அதிகாரத்திற்கு  கடிவாளம் பூட்டும் கட்டமைப்பு மாற்றம் தான் பூமியைப் பாதுகாப்பதற்கான ஒரே செயலூக்கமுள்ள வழியாக இருக்கும், “அது ஒன்றே நமது வாழ்தலுக்கான முதலாவது நிபந்தனையாகும்” என்று எங்கல்ஸ் எழுதியுள்ளார்.

__________________________________________

அனிதா வாட்டர்ஸ் ஓகியோ, கிரான்வில்லியில் டெனிசன் பல்கலைக்கழகத்தில் சமூகவியலுக்கான வருகைதரு பேராசிரியராக இருக்கிறார். மேலும் ஓஹியோவில் அமெரிக்கக் கம்யூனிஸ்டுக் கட்சியின் (CPUSA) அமைப்பாளராகவும் இருக்கிறார்.

மேற்கோள்கள்:

  1. John Bellamy Foster. “Marx’s Theory of Metabolic Rift: Classical Foundations for Environmental Sociology.” The American Journal of Sociology, Vol. 105, No. 2. (Sep., 1999), pp. 366-405.
  2. Karl Marx and Frederick Engels. The German Ideology. New York: International Publishers, 1970 [1846]. Full text available at Marxists.org.
  3. ​Karl Marx 1981. Capital vol. 3. NY: International Publishers.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.