பாவப்பட்டவர்களின் தேவதூதன் -அ.வெண்ணிலா

‘மகிழ்ச்சி! அப்படியொன்றை நான் வாழ்க்கையில் அறிந்ததே இல்லை. நான் விரும்பிய மகிழ்ச்சி எனக்கு ஒருபோதும் கிடைத்ததில்லை…’’

தஸ்தயேவ்ஸ்கி தன் மனைவி அன்னாவிடம் இப்படி வருந்தியிருக்கிறார்.

துயரங்களின் ஊற்றாக இருந்த வாழ்க்கையில் இருந்துதான் தஸ்தயேவ்ஸ்கி காலத்தால் நிலைத்து நிற்கும் எழுத்தாளரானார். அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் தன்னுடைய கண்டுபிடிப்புகளுக்கு, தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளே தூண்டுதலாக இருந்ததாக சொல்கிறார். உளவியல் கோட்பாடுகளை முதன்முதலில் கண்டறிந்து வெளியிட்ட ஃபிராய்டு, தஸ்தயேவ்ஸ்கியின் கதாபாத்திரங்களின் சித்தரிப்பே தனக்கு மிகவும் உதவியாக இருந்தன என்கிறார்.

டால்ஸ்டாயா? தஸ்தயேவ்ஸ்கியா… யார் ரஷ்யாவின் முகம்? இருவருமே ரஷ்யாவின் முகங்கள்தான். ஆனால், ரஷ்யாவின் தீர்க்கதரிசியாக தஸ்தயேவ்ஸ்கியே போற்றப்படுகிறார். கொள்கைகளையும் கோட்பாடுகளையும் உட்கிடையாகக் கொண்டு காவியத்தன்மையுள்ள நாவல்களை எழுதிய டால்ஸ்டாயை, தஸ்தயேவ்ஸ்கி நூலிழை இடைவெளியில் கடந்து சென்று முன்நின்று விடுகிறார்அஸ்தபோவ் ரயில் நிலையத்தில் டால்ஸ்டாய் இறக்கும்போது அவரின் கையில் இரு புத்தகங்கள் இருந்தன. அதில் ஒன்று தஸ்தயேவ்ஸ்கியின் ‘கரம்சோவ் சகோதரர்கள்’.

விடுகதை போன்றவன் மனிதன்

தஸ்தயேவ்ஸ்கி மனித ஆன்மாக்களைப் பற்றிப் பேசினார். மனிதர்களைப் பற்றி எழுதப்படுகின்ற படைப்புகளே ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தோற்றுப் போய்விடாது என்பதற்கு தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளே உதாரணம்.

“மனிதன் பரம ரகசியமானவன். விடுகதை போன்றவன். இதற்கான விடையைக் கண்டுபிடித்தே தீர வேண்டும்…’’ என்று சொல்லும் தஸ்தயேவ்ஸ்கி, தன் படைப்புகளில் நாற்பதுக்கும் மேற்பட்ட அசாதாரணக் கதாபாத்திரங்களைப் படைத்திருக்கிறார். ரஷ்யாவின் கலாச்சார நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்தின் இருளும் ஒளியும் நிரம்பிய வீதிகளில், நிந்திக்கப்படுவோரும், சித்திரவதைக்கு உள்ளாவோரும், கைவிடப்படுபவர்களும், கொலைகாரர்களும் வேசைகளுமாக தஸ்தயேவ்ஸ்கியின் கதைகளில் உயிர் பெறுகிறார்கள். துன்பியல் நிரம்பிய காவியங்களையே படைத்தார்.

துன்பியலை எழுத வேண்டும் என்பது அவர் தேர்வல்ல. வாழ்க்கை அவரை அப்படித்தான் வைத்திருந்தது. அமைதி அவருக்குக் கனவில்கூட இருந்ததில்லை. சிறுவயதில் தாயைப் பறிகொடுத்தவர். கடுமையான கட்டுப்பாடுகளுடைய தந்தைக்குப் பயந்த சிறுவயது வாழ்க்கை. படிக்கின்ற காலத்திலேயே தந்தையும் கொல்லப்பட, நிராதரவான சூழல். உடன்பிறந்தவர்களில் அண்ணன் மிகேய்யில் மட்டுமே தஸ்தயேவ்ஸ்கிக்கு ஒரே ஆறுதல். எல்லாவற்றையும்விட கடுமையாக தாக்கிய வலிப்பு நோய்.

மரணம் கையருகில்

புரட்சிக்கான சதி ஆலோசனையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் தஸ்தயேவ்ஸ்கியும் 21 நண்பர்களும் கைது செய்யப்படுகிறார்கள். ஜார் மன்னனின் அதிகாரிகள் விசாரணை நடத்தி மரண தண்டனையை உறுதி செய்தார்கள். தண்டனையை நிறைவேற்றுவதற்காக பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள ஸெமனோவ் சதுக்கத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அக்கால வழக்கப்படி அணிந்துகொள்ள வெள்ளாடையும், முத்தமிட சிலுவையும் தரப்பட்டன. நீதிமன்ற தீர்ப்பு வாசிக்கப்படுகிறது. கட்டப்பட்ட கண்களுடன் இருந்த கைதிகளை நோக்கி துப்பாக்கி நீண்டிருக்கிறது. கமாண்டரின் உத்தரவுக்காக குண்டுகள் காத்திருக்கின்றன.

தஸ்தயேவ்ஸ்கி ஆறாவது ஆளாக நின்று கொண்டிருக்கிறார். கையருகில் மரணம் வந்துவிட்டதை உணர்கிறார். உயிர்கள் பறிக்கப்படப் போகும் கனத்த அமைதியை கிழித்தபடி, கையில் வெள்ளை லேஸை அசைத்தபடி ஓர் அதிகாரி ஓடி வருகிறார். மரண தண்டனை எட்டு வருட கடுங்காவல் தண்டனையாக மாற்றப்பட்ட உத்தரவு அந்த அதிகாரியின் கையில் இருந்தது.

தஸ்தயேவ்ஸ்கி என்ற எழுத்துலக மேதையைக் காப்பாற்றவே காலம் அந்த மாயத்தைச் செய்ததோ? மரணத்தின் வாயிலுக்குள்ளேயே தலையைவிட்டு, தஸ்தயேவ்ஸ்கி மீண்டு வந்தார். எட்டு ஆண்டு தண்டனை நான்காண்டுகளாகக் குறைக்கப்பட்டு, கடும் பனிபொழியும் சைபீரியாவின் சிறைக்கு அனுப்பப்பட்டார். சிறையில் ‘உயிரோடு பிணப் பெட்டியில் போட்டு மூடப்பட்டதுபோல்’ முடிவற்ற துன்பத்தினால் அல்லலுற்றிருக்கிறார். வாழ்வினால் கைவிடப்பட்டவர்களின் வாழ்க்கையை மேலும் நரகமாக்கிய கொடும் தண்டனைச் சிறை அது.

‘கரம்சோவ் சகோதரர்கள்’

“வாழ்க்கை எங்கே இருந்தாலும் வாழ்க்கைதான். நமக்குள்ளேதான் இருக்கிறது வாழ்க்கை. வெறும் புறக்காரணிகளால் இல்லை…’’ என்ற பக்குவம் சிறையிலேயே அவருக்கு வந்துவிட்டது. சிறைத் தண்டனையும், அதற்குப் பின்னான ராணுவ சேவையிலும் கழிந்த பத்தாண்டுகளில் எழுத முடியவில்லையே என்ற துயரம் மட்டுமே தஸ்தயேவ்ஸ்கியின் மனதை அறுத்தது.

தனிமையிலும், குற்றவாளிகளுடனும் மாறுபட்ட குணாம்சங்கள் கொண்ட மனிதர்களுடனும் பழகுவதற்காகக் கிடைத்த வாய்ப்பே, தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளுக்குப் பின்னாளில் உயிரூட்டியது. அவரின் துயரமான கதாபாத்திரங்களை அவர் இந்த பத்தாண்டுகளில்தான் சந்தித்தார். ‘கரம்சோவ் சகோதரர்கள்’ நாவலில் இன்று வரை உயிரோட்டமாக இருக்கும் கதாபாத்திரங்கள்.

தோல்வியையும் ஏமாற்றங்களையும் மட்டுமே சந்தித்த தஸ்தயேவ்ஸ்கியால் எப்படி இடைவிடாமல் எழுத முடிந்தது என்பது ஆச்சரியமே. பொருந்தாத காதல், திருமணம், குடும்பத்தினரின் தொந்தரவு, நோயுற்ற உடல், நிரந்தரக் கடன், ஒரு கடனை அடைக்க, புதியதாக கடன், கடனை அடைக்க அவசரமாக எழுத வேண்டிய அடுத்த புத்தகம், தோழன்போல் உடன் நின்ற அண்ணன் மிகேய்யிலின் திடீர் மரணம், ஆதரவற்ற அவர் குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டிய கடமை, வெறித்தனமாக சூதாடும் பழக்கம்… நெருக்கடிகளே நாட்களாக விடிந்த துர்பாக்கிய நிலையில் இருந்த தஸ்தயேவ்ஸ்கி, எழுதுவதில் மட்டுமே நிறைவடைகிறவராக இருந்தார்.

அமைதியை ருசிக்காத இதயம்

தஸ்தயேவ்ஸ்கி எழுதிய காலத்தில் ‘நிகிலிஸ்ட்கள்’ அவரை பிற்போக்குவாதி என்று விமர்சித்தார்கள். மேட்டுக் குடியாய் இருந்த டால்ஸ்டாய்க்கு புகழ் வெளிச்சம் இருந்தது. ஜெர்மனியில் இருந்து எழுதிய துர்கனேவ்க்கு ரஷ்யாவில் மதிப்பிருந்தது. தஸ்தயேவ்ஸ்கிக்கும் மதிப்புறு வாசகர்கள் இருந்தார்கள். பெரும் மதிப்பும் இருந்தது. என்றாலும் அவரின் வாழ்வை மேம்படுத்தும் அளவுக்கு இல்லை. வசதியான டால்ஸ்டாய்க்கு அதிகப் பணம் ராயல்டி கொடுக்கத் தயாராக இருந்த பதிப்பாளர்கள், தஸ்தயேவ்ஸ்கிக்கு மிகக்குறைந்த தொகையையே கொடுத்தார்கள்.

அமைதியை ருசித்துப் பார்க்காத இதயத்துடனே இருந்த தஸ்தயேவ்ஸ்கியின் வாழ்வில் வந்தவர்தான் அன்னா கிரிகரேவ்னா. 45 வயது தஸ்தயேவ்ஸ்கிக்கு சுருக்கெழுத்து எழுதுபவராக அறிமுகமானார் அன்னா. நிபந்தனையற்ற அன்பையே அறியாத தஸ்தயேவ்ஸ்கியை, அவரின் அனைத்து பலவீனங்களுடன் ஏற்றுக்கொண்டு அளப்பரிய அன்பில் மூழ்க வைத்தவர். முசுடு, முன்கோபக்காரர், படைப்பின் உச்சநிலையில் இருக்கும்போது, எதிரில் இருப்பவர் பெயர்கூட மறந்துபோகும் சமநிலையற்றவர், கட்டுப்பாடில்லா சூதாடி, தந்தையைப் போன்ற வயதுள்ளவர் என தஸ்தயேவ்ஸ்கியின் பக்கமிருந்த குறைகள் அன்னாவின் கண்களுக்குத் தெரியவில்லை. சராசரி மனிதனாக அவரின் குறைகள், எழுத்தாளராக அவரின் மேதமையின் முன் மிகச் சாதாரணம் என்ற பக்குவம் அன்னாவிடம் இருந்தது.

கிறிஸ்துவின் பக்கம் நின்றவர்

திருமணமானவுடன் இருவரும் ஐரோப்பாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்கள். நான்காண்டுகள் நீடித்த இந்தப் பயணம், தஸ்தயேவ்ஸ்கியின் மேல் விவரிக்க முடியாத தூய்மையான அன்பு கொண்ட அன்னாவை வெளிப்படுத்துகிறது. தஸ்தயேவ்ஸ்கி கையில் இருக்கிற பணத்தையெல்லாம் சூதாடி தோற்கிறார்.

அன்னா தன் தாய்க்குக் கடிதம் எழுதி வீட்டில் உள்ள தன்னுடைய கம்பளி ஆடையை விற்றாவது உடனடியாகப் பணம் அனுப்பும்படி எழுதுகிறார். தஸ்தயேவ்ஸ்கியின் சிறு தோல்வியையும் அன்னா ஏற்க விரும்பவில்லை.

கடவுளின் இருப்புக் குறித்த கேள்விகள் தஸ்தயேவ்ஸ்கிக்கு எப்போதும் இருந்தன. “உண்மை, ஒருவேளை யேசு கிறிஸ்துவை நிராகரிக்குமென்றாலும் நான் கிறிஸ்துவின் பக்கமே நிற்பேன்” என்று கடவுளைக் கொண்டாடுவார். அதே நேரம், “குழந்தைகள் ஏன் துன்பப்பட வேண்டும்? துன்பப்பட்டுத்தான் பரலோகம் செல்லவேண்டுமென்றால், பரலோகமும் வேண்டாம், யேசு கிறிஸ்துவும் வேண்டாம்…’’ என்று கடவுளை நிராகரிப்பார்.

விவிலியத்தின் முதல் பக்கம்

தஸ்தயேவ்ஸ்கியின் மரணத்தைப் பற்றி இருவேறு கருத்துகள் சொல்லப்படுகின்றன. சொத்து விஷயமாக உறவினர்கள் கொடுத்த நெருக்கடி ஒன்று. மற்றொன்று எழுதுவதற்காக பேனா எடுக்கச் சென்ற தஸ்தயேவ்ஸ்கியின் மேல் பீரோ ஒன்று சாய்ந்தது என்பது.

தஸ்தயேவ்ஸ்கி யேசுவின்மேலும், விவிலியத்தின்மேலும் தீராத காதல் கொண்டவர். யேசு இல்லாத உலகம் பைத்தியக்காரர்களின் கூடாரம் என்பார். காயம்பட்டோ, நோய்வாய்ப்பட்டோ படுத்திருந்த தஸ்தயேவ்ஸ்கி, இறுதி நாளன்றும் அன்னாவிடம், “விவிலியத்தைத் திறந்து முதலில் காணும் பக்கத்தைப் படி’’ என்று கூறுகிறார்.

விழிகளில் வழியும் நீருடன் அன்னா வாசிக்கத் தொடங்கினார். ஆச்சரியமாக, தஸ்தயேவ்ஸ்கிக்கு விடைகூறுவது போன்ற பகுதி அது. தஸ்தயேவ்ஸ்கி அன்னாவிடம், “நீ அதைக் கேட்டாயா? இப்போது சம்மதித்துக் கொள், எனது நேரம் வந்திருக்கிறது. நான் மரணமடைய வேண்டும்’’ என்று சொன்ன தஸ்தயேவ்ஸ்கி, 60-வது வயதில் தனக்குப் பிடித்த யேசுவிடம் தன்னை ஒப்படைத்துக் கொண்டார்.மனித வாழ்வின் இறுதியில் மரணத்தை எதிர்கொள்ளலாம். தஸ்தயேவ்ஸ்கியோ மரணத்துக்கும் வாழ்க்கைக்குமான இடைவெளியில்தான் வாழ்ந்தார்.

 

(மரணம் ஒரு கலை புத்தகத்திலிருந்து)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.