Saturday, Sep 25, 2021
Homeபடைப்புகள்கட்டுரைகள்ஜப்பானிய கலாச்சாரத்தின் உடல்மொழி அழகியல்

ஜப்பானிய கலாச்சாரத்தின் உடல்மொழி அழகியல்


லகில் அரங்கச் செழுமை கொண்ட கலாச்சாரங்கள் மனித நடத்தைகள் குறித்த புரிதலை முன்னெடுத்துச் செல்வதில் முன்னோடிகளாக விளங்குவதை நாம் பார்க்க முடியும். உடல்கூறுக் கலைகளும், உடல்மொழியின் நுட்பங்களும் ஆழமாக வேரூன்றியுள்ள ஜப்பான் போன்ற கீழை நாடுகளில் மனித இயல்புகள் குறித்த நெகிழ்வுகளும், கறார் தன்மையற்ற மதிப்பீடுகளும் நிலவுவதையும், அங்கு உருவாக்கப்பட்டுள்ள பிம்பங்கள் மனித உறவுகள் குறித்த சமநிலைகளை உறுதி செய்வதையும் நாம் பரவலாகப் பார்க்க முடியும்.

அகிரா குரசோசாவின் ரோஷமான் படத்தில் மனித உறவுகளின் மீது பாய்ச்சப்படும் வெளிச்சத்தை அச்சூழலின் அடர்ந்த தன்மையின் பின் புலத்திலிருந்தே நாம் பார்க்கவேண்டும். ஜப்பானின் உடற்கூறுக் கலாச்சாரம் மனித உறவுச் சிக்கல்களின் அடர்ந்த தன்மையை வாழ்வின் அழகியல் அம்சமாக எதிர்கொள்ளும் சாத்தியங்களை வழங்குகிறது. இத்தகைய சூழல்களில் விதைக்கப்படும் பிம்பங்களின் மாறுபட்ட தன்மைகளும், முரண்பாடுகளும்தான் அங்கு நிலவிவரும் மதிப்பீடுகளில் சலனங்களை உருவாக்கிக் கொண்டும் தொடர்ந்து ஒருவித ஈடுபாட்டையும், சுவையையும் வழங்கிக்கொண்டும் வருவதையும் நாம் பார்க்கமுடியும்.

ஜப்பான் தற்கொலை தேசம் என்று சொல்லுமளவுக்கு வாழ்வின் அர்த்தமின்மையையும், வெறுமையையும், தோல்விகளையும் எதிர்கொள்ளத் தற்கொலையை ஒரு வடிவமாகப் பயன்படுத்தி வருகிறது. ஜப்பானிய எழுத்து இத்தகைய மனோவியல் மீது தன்னுடைய ஆழ்ந்த அக்கறையையும், கவலையையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது. யசுனாரி கவபட்டாவின் `தூங்கும் அழகிகள் இல்லம்` நாவல் ஒரு தேர்ந்த சூழலில் மனிதனின் தனிமை, அழகியல் நோக்கு மற்றும் மரணம் குறித்த அதிர்வுகளை ஆராய்கிறது. அதீத உணர்வுகளுக்குத் தள்ளிவிடாமல் மனிதர்களை சமூகத்தின் பிடியில் இருத்திக்கொள்ளவே ஜப்பானிய மரபு விரும்புகிறது. ஜப்பானில் ஜென் செல்வாக்கு பெற்றதற்கான காரணங்களை இந்த பின்புலத்திலேயே நாம் பார்க்கமுடியும். ஜப்பானியப் பாரம்பரிய அரங்க வடிவங்களான நோ மற்றும் கபூகியின் ஒயிலாட்ட தன்மை, கராத்தே, குங்ஃபூ, மல்யுத்தம் போன்ற உடற்கலைகள், முதியோருக்கான மசாஜ் மற்றும் குளியல் விடுதிகள், செஸ் விளையாட்டில் அதீத ஈடுபாடு ஆகிய தீவிரங்களை இந்த பின்னணியிலேயே நாம் விளங்கிக்கொள்ள முடியும்.

 

கவபட்டாவை அழகினூடே பயணித்தவர் என்று கென்சாபுரா ஓயி என்ற மற்றொரு ஜப்பானிய நோபல் பரிசு எழுத்தாளரும் குறிப்பிடுகிறார். ஆனால் கவபட்டா மேற்குலகின் நிஹிலிச கோட்பாட்டுக்கு மாறாக வெறுமை என்பதை ஒருவித கவித்துவத்துடன் இணைத்து மனித இயக்கத்துக்கான சில சாத்தியங்களை முன்வைக்கிறார். கீழை நாட்டு பூடகவாதத்தின் ஒரு அபூர்வத் தன்மையை இந்த நாவல் வெளிப்படுத்துகிறது. முதியோர்களுக்கான ஒரு பிரத்யேகமான கேளிக்கை இல்லத்தைக் களனாகக்கொண்டு பின்னப்பட்ட இந்த நாவல் முதுமையில் தோன்றும் பாலியல் விழைவுகளும், இயலாமைகளும் மரணத்தின் அண்மையை நினைவுபடுத்துவதை இந்த நாவல் சிறுசிறு இழைகளாக ஆராய்கிறது. ஜப்பானியர்கள் அதீதமான வாழ்வு நிலைகள் குறித்தும், தனிமை உணர்வுகள் குறித்தும், இயலாமைகள் குறித்தும் கொண்டிருக்கும் மனப்புழுக்கத்தை நாவல் முழுவதும் பார்க்கமுடிகிறது. முற்றிலும் நனவோடை உத்தியில் சொல்லப்படும் இந்த நாவல் மிகவும் கவித்துவமான விவரணைகளைக் கொண்டுள்ளது. உலகப்புகழ் பெற்ற குரசோவாவின் `Seven Samurai `படம் Samurai என்கிற படிமம் ஜப்பானின் தேசிய அடையாளமாக உருக்கொள்வதை கவனப்படுத்துகிறது.

ஜப்பானிய உடற்கலைகள் இன்றளவிலும் உலகளவில் தனித்தன்மை கொண்டதாக அழகியல் எழுச்சிகளின் ஊற்றுகளாக அடையாளம் காணப்படுகின்றன.


வெளி ரங்கராஜன் 

 

வெளி ரங்கராஜன் என தமிழ் இலக்கிய வட்டாரங்களில் அறியப்படும் இவரது இயற்பெயர் ரங்கராஜன். இலக்கியம், நாடகம், நிகழ்கலைகள் குறித்த ஆழ்ந்த ஈடுபாடுகளுடன் அவைகளுக்கு இடையிலான ஊடாட்டம் குறித்த உரையாடல்களை தமிழில் முன்னெடுத்து வருபவர். திருச்சி மாவட்டத்தில் உள்ள  ஸ்ரீரங்கத்தில்  பிறந்தவர். கணிதத்தில் முதுகலைப்பட்டமும் இந்தியில் எம்.ஏ. பட்டமும் பிரெஞ்சு மொழியில் பட்டயம் (டிப்ளோமா) பட்டமும் பெற்றவர். வங்கி அதிகாரியாகப் பணியாற்றிய இவர் தற்போது முழுநேர கலாச்சாரப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.     
பகிர்:
No comments

leave a comment