வள்ளுவன் வழி வந்ததொரு பாணனின் அரசியல் பேச்சுக்கள்

வள்ளுவன் வழி வந்ததொரு பாணனின் அரசியல் பேச்சுக்கள்

அல்லது

மற்றமைகளுக்கான அறம் பேசும் குரல்களின் பரிணாம வளர்ச்சி

[வெய்யிலின் இதுவரை வெளிவந்துள்ள கவிதைத் தொகுப்புகள் குறித்த உரையாடற் கட்டுரை]

 


வெய்யிலுக்கு விருது வழங்கி இருப்பதை ஒட்டி ஒரு கட்டுரை எழுதச் சொல்லி இருக்கிறார்கள்.

ஓ. நல்லது. நான் அவருடைய, ‘அக்காளின் எலும்புகள்’தொகுப்பு வந்தபோதே எழுத முயற்சித்தேன்.

ஏன், பிறகு எழுதவில்லை?

பொதுவாக ஒருவருக்கு விருது கிடைக்கும் வரை அவர் குறித்து எழுதக்கூடாது என்பது இங்கு நடைமுறையாக உள்ளது. அப்புறம் வேறு சில காரணங்களாலும் அது சாத்தியப்படவில்லை.

அது என்ன, ‘விருது வரும் வரை எழுதுவில்லை.’..

ஒரு தொகுப்பை, கவிஞரை இங்கு ஏற்றுக்கொள்வதில் பலவித மனத்தடைகள் இருக்கின்றன. அதில் சில நியாயமான விசயங்களும், சில கீழ்மையான விசயங்களும் இருக்கின்றன. விருது இவ்வாறான மனத்தடைகளை ஓரளவு தகர்க்கிறது. அவ்வாறானவை தகர்க்கப்படும் போது சிலர் எழுத தலைபடுகின்றனர். நானும் அப்படியானவன்தான். ஹி.

ஓ! விருது கொடுக்காமல் விட்டால், ஒருவர் நிராகரிக்கப்படுவரா, அவ்வாறே தொகுப்பும்?

இல்லை. அவ்வாறான புரிதல் உள்ளது என்னமோ உண்மைதான். ஆனால் அது உண்மையில்லை. காலதாமதம் ஆகும். அவ்வளவுதான். 

சரி, நியாயமான காரணங்கள், கீழ்மையான காரணங்கள்?

கீழ்மையான காரணங்களில் முதலாவது, மேற்சுட்டியபடி தங்களுடைய ‘பீட’த்தை, நமக்கு ஒவ்வாத ஒருவன் பிடித்துக் கொள்ளப்போகிறானே என்கிற  கவனமான மௌனம். இரண்டாவது, நம்மோடு ஒத்துப்போகிறவனுக்கு மட்டும் அனைத்தையும் கிடைக்கச் செய்துவிட்டு ஏனையோரை கவனமாக மறந்தும், கடந்தும் போவது. நியாமான காரணம் என்பது, தெருவோரக் கடையில் தேநீர் அருந்திக்கொண்டிருக்கையில் அறிமுகமாகும் அன்பர்கூட கவிஞராக இருப்பதன் யதார்த்தம் தரும் அயர்ச்சி. எல்லாவற்றையும் படித்து கருத்து உருவாக்கி, அதில் சல்லடையிட்டு, தான் கைகொண்ட இலக்கிய அரசியல் சார்ந்தும் விலகியும் ஒருவரை அங்கீகரிக்க ஏற்படும் கால தாமதம். இந்த தாமத்தால் கவிதைத் தொகுப்பிற்கும், கவிஞருக்கும் ஏற்படும் அங்கீகார இழப்பை, தாமதத்தை ஈடுசெய்ய விருது/கள் ஓரளவு உதவலாம்.

 

விருதுதான் இந்த தாமதத்தை நிவர்த்தி செய்கிறது என்கிறீர்களா?

ஆம். ஆனால் இல்லை. ஏற்கனவே மென் ஸ்டீரிமில் அடையாளம் காணப்பட்டவரின் பங்களிப்பை மதிக்கும் முகமாகவும் விருது வழங்குதல் வழக்கம். இதுவும் நல்ல நடைமுறைதான். வெய்யிலுக்குத் தரப்பட்டுள்ளதை இரண்டாவது வகையில் அடங்குவதாகக் கொள்கிறேன்.

 

நாம் ரொம்ப நேரமாய் வெளியிலேயே உலவிக் கொண்டிருக்கிறோம்.

ஓ! மன்னிக்கவும். இனி, கவிதைகள் குறித்து பேசலாம்.

 

***

வெய்யில் கவிதைகளை அறிமுகப்படுத்திக் கொண்டது எப்படி?

நான் தொகுப்பு வெளியிட்டிருந்த சமயம். பலர் அழைத்து சம காலத்தில் எழுதிக்கொண்டிருப்பவர்களில் யாரை எல்லாம் வாசிக்கிறார்கள், யாரெல்லாம் நன்றாக எழுதுகிறார்கள் என்று கேட்பார்கள். இவ்வாறு கேட்பது, மேற்சுட்டிய சல்லடை செய்யும் தொழிலில் பயன்படுத்தப்படும் ஒரு உத்தி. அது, நான் நூலகங்களை மட்டுமே சார்ந்திருந்த காலம் அது. எனவே நூலகத்தில் வாசிக்கக் கிடைத்த பெருந்தேவி, இளங்கோ கிருஷ்ணன், இசையின் முதலிரு நூல்கள் என அங்கு கிடைத்த நூல்களை மட்டுமே வாசித்திருந்த காலம். ஆனால், வெய்யில் என்ற பெயரை அடிக்கடி கேள்விப்படுவேன். பிறகு, ஒருசில கவிதைகள் இதழ்களில் வாசித்திருந்தேன். எனவே அந்த அசட்டு தைரியத்தில் பெயரைக் குறிப்பிட்டு வந்தேன். பிறகு, பெயரை குறிப்பிடத் தொடங்கியதாலேயே நூலை மணல்வீடு ஹரிகிருஷ்ணன் வீட்டிலிருந்து எடுத்து வந்து வாசித்தேன்.

அதுவன்றி, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் வெய்யில், ‘கவிதை என்ன செய்யும்’ என்ற அங்கிருந்த அனைவருக்குமான கேள்விக்கு, திருக்குறள் என்னைத் தொந்தரவு செய்கிறது என்று பதில் சொல்லி இருந்தார். அது தமிழ் மாணவனாகிய என்னை அவர் கவிதைகளை வாசிக்க இன்னொரு வகையில் தூண்டியது. எனவே, இந்த உரையாடலில் அவ்விரு பிரதிகளை ஒப்பிடவும் நேரலாம்.

இந்த வாசிக்காமல் பெயரைக் குறிப்பிடுதல் புதிய தொகுப்பு பற்றி குறிப்பிடும் போதும் நடக்கும் இல்லையா?

ஆம். இது தீவிர வாசகர், படைப்பாளி, இலக்கிய அமைப்பாளர், இதழாளர் ஆகியோரிடமும் அவர்கள் அப்டேட்டாக இருக்கிறார்களா என்று சோதிக்கவும், தாங்கள் அவர்கள் வழி அப்டேட் ஆகவும் கேட்கப்படும் கேள்வி. மேற்சுட்டியதில் எனக்கு நேர்ந்த சங்கடத்தைப் போலவே அவர்களுக்கும் இது நேர்கையில், அடிக்கடி கேள்விப்படும் பெயர்கள், புதிதாக விருது பெற்றவர்கள் பெயர்களின் என்று சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். சொல்வதில் எந்த பிரச்சனையும் இல்லை.  ஆனால் அதை பிறகாவது மறவாமல் பரிசீலிக்க வேண்டும். பெயரும், விருதும் ஏமாற்றவும் செய்யலாம் அல்லாவா?

தாங்கள் மீண்டும் விலகுகிறீர்கள்.

ஓ! எனக்கு இது ஒரு பிரச்சனை. இலக்கியத்தில் அரசியலை ஒதுக்குபவர்கள், இலக்கிய அரசியல் பேசிக்கொண்டிருப்பார்கள் என்பார் ஜமாலன். அந்த பிரச்சனை போல எனக்கு. ஹா. ஹா.

றாம் சந்தோஷ்

வெய்யில் கவிதைகள் அரசியல் கவிதைகளா?

அரசியல் இல்லாமல் எந்த எழுத்தும் எழுதப்படுவதில்லை. எல்லோருடைய எழுத்திலும் அரசியல் உண்டு. அதாவது, ஒருவர் நான் அரசியலற்று எழுதுகிறேன் என்று சொல்வதே அரசியல்தான். அதுவன்றி, அரசியல் நீக்கத்தை ஒருவர் எவ்வளவுதான் கவனமாக கையாண்டாலும், அவர் புழங்கும் மொழி என்பதே அரசியல் வயப்பட்டதாக உள்ளது. எனவே, அது (மொழி) அவரை ஏமாற்றிவிட்டுக்கூட தன் வேலையைச் செய்யும்.

மேலும், அரசியல் கவிதைகள் என்று ஒன்றை பருண்மையாகச் சுட்டும்போது, அவ் எழுத்து மிகப் பருண்மையாக அரசியல் பேசுகிறது என்பது பொருளாகிறது. அந்த வகையில், வெய்யில் கவிதைகள் அரசியல் கவிதைகள்தான்.

ஆனால், அரசியல் சரிகளைக் (political rightness) கவிதைகளில் பேசக்கூடாது என்று கூறப்படுகிறதே?

எல்லோரும் கூறுவதில்லை. ஆனால் கூறப்படுகிறது.  இதில் நான் உடன்பாடும் உடன்பாடின்மையும் ஒருசேரக் கொண்டிருக்கிறேன்.

விளக்குங்கள்.

அரசியல் என்பது சார்பானது. மேற்சுட்டியது போல், அரசியல் கவிதைகளில் இந்த சார்பு, சரி என்கிற விசயம் வெகுவாய் ஸ்தூலப்பட்டிருப்பதால் அது இயல்பாகவே தான் பேசும் அரசியலுக்கு எதிரானவர்களையும், அவ்வாறு பேசுவதால் ஒடுக்கப்படும் அல்லது மறைக்கப்படும் நபர்களையும் ஒரு சிறு உண்மையினை கணக்கில் கொள்பவர்களையும் அருவருக்கச் செய்கிறது. எனவே, அவ்வாறு எழுதக் கூடாது என்பதில் எனக்கு ஏற்பும் உள்ளது. அதேசமயம், மறுப்பும். அதாவது, இந்த அறிவுரையை இந்த பொருண்மையின் அடிப்படையில் சொன்னால் மட்டுமே என்னால் ஏற்றுக்கொள்ள முடியும். மற்றபடி, இவ்வாறு சொல்லி, ‘நிகழும் சூழற்கேட்டை மௌனமாக கடந்துபோ’ என்று மறைமுகமாக நிர்பந்தித்தால் அதற்கு நான் உடன்படமாட்டேன்.

தாங்கள் சொன்னதின் அடிப்படையில் கேட்கிறேன், வெய்யில் கவிதை உங்களை அருவருக்கச் செய்கிறதா?

இல்லை. நான் அவர் கைகொள்ளும் அரசியல் சரிகளின் பக்கம் பெரும்பான்மை ஒத்துப்போகக் கூடியவன். எனவே, அவை என்னை அருவருக்கச் செய்வதில்லை.

ஒத்துப்போகாதவர்களை அருவருக்கச் செய்கிறதா?

அதற்கும் வாய்ப்பு குறைவுதான்.

இங்கு தங்கள் கூற்றிலிருந்து தாங்களே முரண்படுவதாகப் படுகிறதே?

இல்லை.

எப்படி?

அரசியல் செய்பவர் பற்றி பேசுபவை, அரசியல் செய்யப்படுபவர் பற்றி பேசுபவை (ஆம். ஸ்தூலமாக) என இரண்டுமே அரசியல் எழுத்துக்கள்தான். பொதுவாக, அரசியல் செய்பவர் பற்றி பேசும்போது, அவர்களை நாம் விமர்சிக்க நேரிடும். எனவே இயல்பாக, அதன் மறுபுறத்தில் இயங்குபவர்கள் முகங்கோணலாம். அதாவது, இவ்வாறு பேசுவது அவர்களை அருவருக்கச் செய்யும். ஆனால், ‘அரசியல் படுத்தப்படுவர்கள்’ பற்றி பேசும் போதோ, நிலைமை வேறுவிதமாகவும் அமைகிறது. அதாவது, இந்த படுத்தப்பட்டு விளிம்பாக (edges) இருப்பவர்கள் குறித்து பேசும் போதோ, அவ்வரசியல் சரியில் நின்று பேசுபவர்கள், அதற்கு மறுபுறத்தில் இயங்குபவர்கள் என்ற இரண்டு தரப்பினரையுமே தைக்கும். (அரசியல் செய்யப்படுபவர் இரு தரப்பிலும் இருத்தலும் இதற்கு ஒரு காரணம்) இந்த தைத்தல் வாசிப்பவரின் உணர்வை தொந்தரவு செய்கிறது, நம் உடலில் ஒரு உணர்வாக்கமாகப் (Affect) படிகிறது. எனவே, இவ்வாறானவை அரசியல் சரியாகவும், அதேசமயம் கவிதைத் தன்மையும் உடன் பெறுபவையாகவும் உள்ளன. வெய்யிலின் கவிதைகள் இத்தன்மையுடையவையே. அதாவது, இருதரப்பினரையும் தன்னால் முடிந்த மட்டில் தன்பால் ஈடுபாடு கொள்ளச் செய்பவை; அதுபோல், கவிதைத் தன்மையையும் கொண்டிருப்பவை; எனவே, பெரும்பான்மை இவர் கவிதைகள் அருவருக்கச் செய்வதில்லை.

இந்த பதிலிலிருந்து எனக்கு கூடுதல் விளக்கமும்,  ஒரு வினா கேட்க வேண்டியுள்ளது.

கேளுங்கள்.

மேற்கூறியவற்றை உதாரணத்துடன் விளக்கினால் நன்றாக இருக்கும். அதுபோல், கவிதைத் தன்மை என்பது உணர்வாக்கத்தை அளவீடாகக் கொண்டதா?

கேள்விக்கான பதிலை முதலில் சொல்லிவிடுகிறேன், ஆம். உணர்வாக்கம் கவிதைத் தன்மைக்கான ஒரு அளவீடுதான். பொதுவாகவே வாசகர்கள், கவிஞர்கள் என யாரைக் கேட்டாலும் சொல்வார்கள், கவிதை நம்மை தொந்தரவு செய்யவேண்டும், எழுச்சி கொள்ள செய்ய வேண்டும் என்றெல்லாம்.

‘கவிதை என்பது அது வெளிப்படும் மொழியைவிட அதை வெளிப்படுத்தும் உடலின் , அதை வாசிக்கும் உடலின் உணர்வு மற்றும் உணர்ச்சியை எந்த அளவிற்கு எழுச்சிக்கொள்ள செய்கிறது அல்லது தூண்டுகிறது என்பதை பொறுத்தே அமைகிறது’ என்பது கவிதையில் ஒரு அங்கீகரிக்கப்பட்ட வரையறாக உள்ளதை ஜமாலன் கூறுகிறார். (‘தமிழ்க் கவிதையியல் கோட்பாட்டாக்கத்திற்கான சில மொழிதல்கள்’, ‘பிரதியில் கிளைக்கும் பிம்பங்கள்’, காலக்குறி,) .

அடுத்து, ஒரு கருத்தை சார்ந்திருப்பவர்கள் அன்றி, அதற்கு எதிர் நிலையில் இயங்குபவர்களையும் ஓரளவாவது இணங்க அல்லது யோசிக்கவாவது செய்யும் உத்தி பற்றிய உதாரணத்துக்கு வருவோம்.

திருக்குறளில் வரும் புலால் மறுத்தல் அதிகாரத்தை எடுத்துக்கொள்ளலாம். நான் புலால் உண்பவன். ஆக, என்னிடம் வந்து, திருவள்ளுவர்,  ‘ஊனைத் தின்னுதல் அறம் இல்லாத செயல்’ (அருளல்லது யாதுஎனின் கொல்லாமை கோறல்/ பொருளல்லது அவ்வூன் தின்னல்) என்று சொன்னால் கேட்க மாட்டேன், அதுபோல், ‘அறிவுடையோர் உயிர் வழி வந்த உடலை ஒரு போதும் உண்ணமாட்டார்கள்’ (செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்னர்/ உயிரின் தலைப்பிரிந்த ஊன்) என்றோ, ‘புலால் உண்ணுதலைக் கைவிடுவதால் வரும் பலன் உயர்ந்ததாகும்’ (அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்/ உயிர்செகுத்து உண்ணாமை நன்று) என்றோ கூறினால் கூட அவர் கருத்தோடு இணங்கிப் போகமாட்டேன். ஏன், ‘ஊன் உண்டால் நரகம் அவனை வெளியே விடாது’ (உண்ணாமை உள்ளது உயிர்நிலை, ஊன்உண்ண அண்ணாத்தல் செய்யாது அன்று) என்று கூறும் போதும் அது பற்றி நான் பெரிதான கவலை ஏதும் கொள்ளப்போவதில்லை.

ஆனால், இவ்வாறு சொல்வதைக் காட்டிலும், வள்ளுவர், ‘தன் உடலை வளர்ப்பதற்காக வேண்டி பிறிதோர் உயிரின் தசையைத் தின்கிறவன் எவ்வாறு இரக்கமுள்ளவனாக இருக்க முடியும்?’ (தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்/ எங்ஙனம் ஆளும் அருள்) என்று கேட்டு ஒரே அடியாய் நம்மை, அதாவது புலால் உண்ணக்கூடாது என்ற தனது சரிக்கு எதிர் நிலையில் இயங்கும் ஒருவனை, அவனுடைய மெல்லுணர்வுகளை ஆட்டம் காணும்படியும் செய்துவிடுகிறார்.

இப்படியாக ஒருவர் நமது உணர்வை சலனப்படுத்தும் போது, நாம் அவர் கருத்தியலோடு முழுமையாக ஒத்துப்போகாவிட்டாலுமேகூட, அதாவது, அசட்டை செய்யத் துணிந்தாலுங்கூட, அவ்வாறு நேர்வதை, தனக்கு எதிர் நிலையில் இயங்குபவர்களை, ஒரு கனமாவது தள்ளிப்போடும்படி செய்கிறார். இதுவே வள்ளுவர் கைகொள்ளும் உத்திக்கான வெற்றி.

வெய்யிலும் இதுபோல் செய்கிறாரா, வெற்றி கொள்கிறாரா?

ஆம்.

 

உதாரணம்?

உடனடி உதாரணம் என்றால், ‘தட்டிவிடுங்கள்’ என்ற தலைப்பில் அமைந்த கவிதையை எடுத்துக்கொள்ளுங்கள். இது அவரது ‘குற்றத்தின் நறுமணம்’தொகுப்பில் பக். 51-ல் வருகிறது.

தட்டிவிடுங்கள்

ஆகாச விரிவு கண்டு அஞ்சி

இமைகளை இறுக்கிக்கொள்ளும்

குழந்தை

கம்பத்தின் உச்சியில் மல்லாந்து கிடக்கையில்

தயவுசெய்து பிச்சையிடுங்கள்.

 

(என்பதை வசதி கருதி, இக்கவிதையின் முதல் பாதியெனக் கொள்கிறேன்.) இது பெரிதாய் உங்களை அசைக்கிறதா?

கொஞ்சம். இல்லை என்றுகூட சொல்லலாம். தயவுசெய்து பிச்சையிடுங்கள் என்று பலர் என்னிடம் கேட்டு அலுக்கச் செய்துவிட்டார்கள். நானே ஒரு பிச்சைக்காரன் போ என்று கூட அருவருப்பின் தொனியில் சொல்லி இருக்கிறேன்.

சரி, அதன் அடுத்த பகுதியைப் பார்ப்போம்.

இன்றேல்

வில்தைத்த பறவைக் குஞ்சாய்

வீழும் பிஞ்சுடம்பை

ஏந்துகையில்

தகப்பனின் கைகளைத் தட்டிவிடுங்கள்.

 

இதை படிக்கும் போது..

கொடுமை. என்னை கலங்கச் செய்கிறது. ஒரு பிச்சைக்காரன் போ என்று நான் ஒரு வெறுப்பில் சொன்னதை, உண்மையாகவும் உணரச் செய்கிறது. நான் இதில் வரும் தகப்பான இருந்தால் … என்று யோசிக்கவும், அதைவிட, என்னை ஒரு கொலை செய்யச்  சொல்வது… நான் திடுக்கிடுகிறேன்.

 

நல்லது. இதுதான் வெய்யில் கவிதைகள்.

 

இதேபோன்ற அவரது கவிதைகளை நானும் படித்திருக்கிறேன்.

ஓ. மகிழ்ச்சி. இப்போது நீங்கள் ஒரு உதாரணம் சொல்லுங்கள்.

ம்.

கொன்று பழகுங்கள் (மேலது, பக். 24)

”கொலை செய்வதற்கான

காரணங்களை

பசியும் காமமும் உருவாக்கித்தரும்

பயிற்சிக்கு வேண்டுமாயின்

நீங்கள் மிகவும் நேசிக்கும்

வளர்ப்புப் பிராணியொன்றை  கொன்று பழகலாம்

குற்ற உணர்ச்சியற்று

வாழ்வதற்கான ஒரே வழி

நம்பிக்கையோடு உங்கள் மடியில்

கண்ணயரும் பொழுது

அறத்தின் கழுத்தை அறுத்துவிடுங்கள்.”

 

மன்னிக்கவும் இது மேற்சுட்டிய கவிதையை ஒத்திருக்கிறது. ஆனால் இல்லை.

என்ன சொல்கிறீர்கள்.

ஆம். முந்தைய கவிதையில் வாசிப்பவர் ஆகிய நாம் பிச்சை போடுபவராக அதாவது, அதிகாரம் கொண்டவராக இருக்கிறோம், ஆனால், நம்மை பிஞ்சுடம்பை ஏந்தும் தந்தையாக பாவித்துக் கொள்ளச் செய்கிறார். அப்போது, நாம், நான் என்ற மைய அதிகார எல்லையிலிருந்து மற்றமை (other) என்ற விளிம்பின் தன்மையை தற்காலிகமாக, நாடகீயமாக அடைகிறோம். அப்போது, அந்த விளிம்பின் உணர்வு நம்மை ஒருகணம் சலனப்படுத்துகிறது. ஆனால், தாங்கள் சுட்டிய கவிதையில் நாம்தான் மற்றமை. அதாவது, இங்கு நமக்குத்தான் பசிக்கிறது.

சரி. ஆனால், இங்கு ஒரு சந்தேகம். முந்தைய கவிதையில் கவிதைச் சொல்லி கொல்லக்கூடாது என்பதுபோல் சொல்கிறார், இதிலோ கொல்லுங்கள் என்பது வெளிப்படையாகவே சொல்கிறார். அதாவது, அறத்தைக் கைகொள்ளுங்கள் என்றும், கொள்ளக்கூடாது என்றும் ஒரே சமயத்தில் சொல்கிறார். அதேபோல், ‘மகிழ்ச்சியான பன்றிக்குட்டி’என்ற தொகுப்பில் (பக். 17) ‘அறத்தின் மாபெரும் செங்கோல் அது’ என்றும் பேசுகிறார். இவை ஒன்றிற்கொன்று முரண்படுகின்றனவே.

இல்லை. நிச்சயம் இல்லை.

எப்படிச் சொல்கிறீர்கள்.

முந்தைய பதிலை சரியாக உள்வாங்குங்கள்.

அதாவது, நான் * மற்றமை அல்லது மையம் * விளிம்பு என்ற இருமை எதிர்வில் (binary) வரும் இரண்டில் ஒன்றின் அறம், மற்றதிற்குப் பொருந்தாது அல்லது இரண்டிற்குமான அறம் ஒன்றல்ல என்கிறாரா?

ஆம். சரியான புள்ளியை அடைந்திருக்கிறீர்கள். வாழ்த்துகள். நான் எனும் அதிகார மையத்தில் இருப்பவர்கள் அறம் என்பதைத் தங்களைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவும், வயிற்றுப்பாட்டிற்கே வழி இல்லாதவர்களோ அவ் அறத்தைக் கைவிட வேண்டி வருகையில், அதனை விலக்கவுஞ் செய்யலாம் என்றும், மேலும், அவ்வாறு விளிம்பு நிலையினர் தாம் கைகொண்ட அறத்தை விலக்க நேரிடுகையில் ஏற்படும் குற்றவுணர்ச்சியை அடைய தேவையில்லை என்றும் கூறுகிறார். ஆக, சரிதான். தாங்கள் சொன்னபடி, இருவருக்குமான அறம் ஒன்றில்லை என்பதுதான் அவர் கூறவிழைவதும்.

 

வள்ளுவர்கூட, பல்லக்கைச் சுமப்பவனிடத்திலும், அதில் ஏறிச் செல்பவனிடத்திலும் செயல்படுவது ஒரே அறம் இல்லை (அறத்துஆறு இதுஎன வேண்டா; சிவிகை/ பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை) என்பதை கூறுகிறார்.

ஆமாம். (ஆனால், பல்லக்கைச் சுமப்பவன் புண்ணியம் செய்திருக்கவில்லை எனவே அவனுடயது விதி என்பது போன்ற சனாதன உரைகள் உள்ளன. அது இருக்கட்டும்.)

ஆக, வெய்யிலினுடையவை வர்க்க அரசியல் கவிதைகளா?

ஆம். வர்க்க அரசியலும்தான். முதல் தொகுப்பினைவிட, இரண்டாம் தொகுப்பில் இது மேலும் பருண்மையாக்கம் பெறுகின்றது. உதாரணத்திற்கு, ‘கொஞ்சம் மனது வையுங்கள் தோழர் ஃப்ராய்ட்’ தொகுப்பில் வரும் ‘நுரையீரல்களின் பாடல்’ போன்ற கவிதைகளைச் சொல்லலாம். ஆனால், இந்த வர்க்க அரசியல் என்பது இதேபோன்றே மேலதிக பருண்மை ஆக்கம் பெற்று பால் அரசியலாக ‘அக்காளின் எலும்புகள்’ தொகுப்பாக மிளிர்கிறது.

நீங்கள், ‘கொஞ்சம் மனது வையுங்கள் தோழர் ஃப்ராய்ட்’ தொகுப்பு பற்றி கூறியதால், அந்த தலைப்பில் அமைந்த கவிதையைப் பற்றி பேசுவோம்.

வாசித்துக் காண்பியுங்கள். 

கொஞ்சம் மனது வையுங்கள் தோழர் ஃப்ராய்ட்!

நான் ஒரு நீண்ட துப்பாக்கியைக் கனவு கண்டேன் / நிச்சயமாக அது பாலியல் கனவு அல்ல மிஸ்டர் ஃப்ராய்ட்! / ராட்சத இயந்திரங்களால் குடைந்தெடுக்கப்பட்ட /மலைகளின் கொடுந்துளைகள் குறித்த கனவையும்கூட / என் மறையுறுப்போடு நீங்கள் தொடர்புபடுத்தக்கூடும் / தயவுசெய்து / உங்கள் கண்ணாடியை துடைத்துக் கொள்ளுங்கள்

டாக்டர் ஃப்ராய்ட்!/ என்னிடமிருப்பதிலேயே/ பெரும் பிரச்சனைக்குரிய உருப்பென்றால் அது/ எனது இரைப்பைதான்/ அரசு எங்களுக்கு பிரமாண்டக் கனவுகளை தந்திருக்கிறதுதான்/ அதில் ஒரு துண்டைக்கூட உப்பிட்டுத் தின்ன இயலாது/ தாழ்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன்/ உங்களால் புரிந்துகொள்ள இயலாது ஆய்வாளர் ஃப்ராய்ட்!/ நாங்கள் வயிற்றால்கூட கனவு கண்டிருக்கிறோம் / நான் சாமான்யை / எனக்குக் குழந்தைகள் இருக்கின்றன / உங்களிடம் சிறு உதவி வேண்டும் நண்பர் ஃப்ராய்ட்! / ஓர் எளிய நீதிக்காக / சட்டத்திற்குக் கேட்காதவாறு / ஐந்து தோட்டாக்களை ‘பயன்படுத்தி’விட்டேன் / நீங்கள் மனதுவைத்தால் / தடயங்களேதுமின்றி

அதை ஒரு கனவாக மாற்றிவிடலாம்.

(மேலது, பக். 40)

நல்ல கவிதை. இதில் ஏற்கனவே சுட்டியதுபோல், அறத்திற்குக் கட்டுப்படுதல், மீறல் ஆகியவை வர்க்க அடிப்படையில் நிகழும்பட்சத்தில், மற்றமையைக் காப்பாற்றும் படி ‘நானி’டம் கோரிக்கை வைப்பதாக இது உள்ளது.

அதாவது, ஒரு சாமான்யை எனும் விளிம்பு நிலையில் இருப்பவள் சட்டத்திற்குக் கேட்காதவாறு ஓர் எளிய நீதிக்காக பயன்படுத்திவிட்டதை, தாங்கள் ராட்சத இயந்திரங்களால் குடைந்தெடுக்கப்பட்ட மலைகளின் கொடுந்துளைகள் குறித்து காணும் கனவையும்கூட அவர்களின் மறையுறுப்போடு தொடர்புபடுத்தக்கூடிய ஒருவகை அதிகாரம் கொண்ட ஃப்ராட்டிடம், அப்படியானதை ஒரு கனவாக மாற்றிவிடக் கோருகிறது.

அறமீறலை, அதன் நன்மை பயக்குந் தன்மை கருதி, அறமாகக் கொள்ளச் சொல்லும் வள்ளுவனின், ‘பொய்ம்மையும் வாய்மை இடத்து; புரைதீர்ந்த/ நன்மை பயக்கும் எனின்’ (வாய்மை) என்ற குறளின் தன்மையை ஒத்ததா?

 

ஆம்! சரிதான்.

****

வர்க்க அரசியல் பற்றி பேசிவிட்டோம். இடையில், பால் அரசியல் கவிதைகளாக வெய்யிலினுடையவை பரிணமித்ததாகச் சுட்டினீர்களே. அதைப் பற்றி கூறுங்கள்.

வெய்யிலின் மற்ற மூன்று தொகுப்புகளிலிருந்தும் (குற்றத்தின் நறுமணம், அனன்யா, 2009 – இது அவருடைய புவன இசை தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதைகளையும் மேலும் சில கவிதைகளையும் சேர்த்து புதுஎழுத்தால் 2011 பதிப்பிக்கப்பட்டது, கொஞ்சம் மனது வையுங்கள் தோழர் ஃபாராய்ட், மணல்வீடு, 2016, மகிழ்ச்சியான பன்றிக்குட்டி, கொம்பு, 2017) அவற்றின் போக்குகளிலிருந்தும் அதிகம் பண்பட்ட ஓர் அழகியல் படைப்பு அவருடைய சமீபத்திய நான்காவது தொகுப்பான ‘அக்காளின் எலும்புகள்’ (கொம்பு, 2018).

இத்தொகுப்பானது, அவருடைய முந்தைய வர்க்க அரசியலின்பாற்பட்ட அரசியல் சரிகளிலிருந்து, பால் (gender) அடிப்படையிலான அரசியல் சரிகளைப் ‘பாசாங்கற்று’ பேசும் பிரதிகளை உள்ளடக்கியவையாக இருக்கின்றன. இதில் வரும் ‘அக்காள்’ ஒற்றை அக்காள் இல்லை. ‘அக்காள்கள்’. கணவனை இழந்த அக்காள், மணமுறிவு பெற்ற அக்காள், இவ்வாறான நிலையில் தன் உடல் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள முடியாத அக்காள், பூர்த்தி செய்துகொள்ள முயலும் போது அலர் தூற்றப்படும் அக்காள், அதனால் கொலை செய்யப்படும் அக்காள் என பல அக்காள்கள்  ‘ஒற்றை அக்காளாக’க் குறியீட்டாகம் பெற்று தொகுப்பெங்கும் உலவுகின்றனர்.

அது என்ன பாசாங்கு அற்று?

இதற்கு முன்பு பேசிய வெய்யிலின் தொகுப்புகளில் வரும் கவிதைச் சொல்லிகள் (narrators) தான் கைகொண்ட அரசியல் சரிகளில் காறாராய் இருப்பது சரியானதாகவே இருப்பினும், அவ்வாறு கச்சிதமாக (perfect – ஆக) இருப்பது என்பது கொஞ்சம் செயற்கையானதாகவும் வாசகருக்குப்படுகிறது.

ஆனால், இது ‘அக்காளின் எலும்புகள்’ தொகுப்பில் பண்பட்டுள்ளது.

இத்தொகுப்பில், தானொரு ‘ஆண்’னாக இருந்து கொண்டு, அதன் மற்றமையாக அறியப்படும் பெண்ணின் பாடுகள் (வாதைகள்) குறித்து பேசும் குரல், ஓரிடத்தில் தன் இயல்பான ‘நான்’ தன்மையை ஒலித்துவிடுகிறது. அதாவது, தொகுப்பெங்கும் பெண்ணின் உடல் தேவை போன்ற விசயங்களுக்காக குரல் கொடுக்கும் கவிதைச் சொல்லி ஓரிடத்தில் (அதாவது, ஒரு கவிதையில்) ‘புதுக்கூரை வேய வந்தவருக்குக் கொடுத்தது தப்புதான்’என்று தான் கைகொண்ட கறாரான அதாவது, தனது கச்சித பாவனையை மறந்து போய் தனக்குள் ஆழ்ந்திருக்கும் இயல்பான – ஆணுக்கான குணத்தை, தெரிந்தோ, தெரியாமலோ அனுமதித்துவிடுகிறது. இந்த அனுமதித்தலைத்தான் பாசங்கற்ற என்றும், செயற்கைத்தனம் அற்ற என்றும் குறிப்பிட்டேன்.

தற்போது குறிப்பிட்ட வரி இடம் பெறும் கவிதையைச் சுட்ட முடியுமா?

எங்கள் வீட்டுச் சலவைக்குறியில்

இரு கோடுகள் இரு புள்ளிகள்,

இரண்டு எலும்புகள்

தோண்டியெடுக்கப்பட்ட இரு கண்களைப் போல.

மச்சான் வீட்டில் புள்ளிகள் இடவலமாய் மாறிய குறி.

பெண்களுக்குச் சலவைக்குறியிடும் வழக்கமில்லை நம்மில்.

மச்சான் உயிரோடிருந்தபோது வேய்ந்த கூரை

மூன்று மழைக்காலத்தைத் தாங்கியிருக்கிறது.

புதுக்கூரை வேய வந்தவருக்குக் கொடுத்தது தப்புதான்

வேட்டியிலொரு புதுக்குறி விழுந்தது கண்டு

சிரித்தாள் தங்கை,

வெட்கம் மிகுந்த அக்கா சொன்னாள்:

“முயல்தடம் போலிருந்த கறை

என் ரத்தம்தான்!”

இது போல் வேறு சில விசயங்களும் அவரின் ஏனைய தொகுப்பிலிருந்து இத்தொகுப்பானது மேலதிக முதிர்ச்சி அடைந்ததற்குச் சான்றாக அமைந்துள்ளன..

 

சொல்லுங்கள்.

பொதுவாக வெய்யின் கவிதைகள் தன் உரையாலுக்கான பேசுவோனை, கேட்போனை உணர்வு வயப்படச் செய்யும் கவிதைகளாக உள்ளன. அதுவே அவர் பேசும் அரசியல் சரியின் பக்கம் ஒரு கனம் நம்மை, வாசகனை நின்று யோசிக்கச் செய்வதாக உள்ளது. இவற்றை விளக்கிவிட்டோம். மேலும், இதற்கு அவர் கவிதைகளில் இடம்பெறும் உறவுகள் – பெயர்கள் (அப்பா, அம்மா, அக்காள், தங்கை) அதிகம் உதவுவதாக உள்ளன. உதாரணமாக, அறத்தடி நீர் கவிதை இப்படித் தொடங்குகிறது…

கை தோண்டும் ஆழத்திலேயே கிடைத்தது நீர்

பின் 

அம்மாவை நின்றபடி புதைக்கும் ஆழத்திற்கு போனது 

இப்பொழுதோ

நம் மொத்தக் குடும்பத்தையும் நின்றபடி புதைத்தாலும் 

தாகத்திற்கு எட்டிவிடாத தொலைவிலிருக்கிறது

என்று போகும்.

இந்தக் கவிதையில் நீரானது எவ்வளவுக்கெவ்வளவு கீழே போய்க்கொண்டிருக்கிறது என்ற விசயத்தைச் சாதாரணமாக சொல்லாமல், அம்மாவை நின்றபடி புதைத்தும், பிறகு நம் மொத்தக் குடும்பத்தையும் நின்றபடி புதைத்தாலும் எட்டிவிடாத தொலைவில் இருப்பதாக சொல்கிறார்.

 

இதில் ஏதேனும் பிரச்சனை என்று உணர்கிறீர்களா? நன்றாகத்தானே உள்ளது. தொடக்கத்தில் குறிப்பிட்ட, ‘வில்தைத்த பறவைக் குஞ்சாய்/ வீழும் பிஞ்சுடம்பை/ ஏந்துகையில்/ தகப்பனின் கைகளைத் தட்டிவிடுங்கள்’கவிதையில் இடம்பெறுவது போல, நம் அதாவது நீங்கள் சொன்ன உரையாலுக்கான பேசுவோனை, கேட்போனின் அறவுணர்வினைத் தொந்தரவு செய்வதாகத்தானே உள்ளது.

ரச்சனை என்று கூறவில்லை. அதேசமயம், இங்கு உயரத்தைக் குறிப்பிட ஒருவரை, அதுவும் ‘அம்மா’வை எடுத்த எடுப்பில் புதைக்க வேண்டியதில்லை என்றே கருதுகிறேன்.

 

ஓ! சரி. தற்போது விசயத்திற்கு வாருங்கள். ‘அக்காளின் எலும்புகள்’ தொகுப்பின் கவிதைச் சொல்லிகள் இதிலிருந்து எப்படி பண்படுகிறார்களா …

ஆம். இதே போன்றே கால இடைவெளியை அளவிட ஆனால், மிக இயல்பான ஒன்று இத்தொகுப்பில் எழுதிக்காட்டப்பட்டுள்ளது….

அது:

கல்யாணத்துக்கு வச்ச பனை

தோளுயரம்

மச்சான் கருமாதிக்கு வச்ச பனை

மாருயுரம்

இதன் வழி, தோளுக்கும் மாருக்கும் இடைப்பட்ட குறுகிய இடைவெளியிலான காலம்தான் அக்காளும் மச்சானும் வாழ்ந்த மணவாழ்வு என்பது பெறப்படுகிறது.

மேலும், இதனால்தான்,

ஏதாச்சுமொன்னைப் பிளந்து

எளங்குருத்து திங்கனுமுன்னு காயிதா அக்கா

நெழல் நீண்ட மத்தியானம்

இடுப்பரிவாளோடு போகிறவரின் தூரத்திற்கு

அடிவயிற்றிலிருந்து கூவுகிறாள் அக்கா.

என்பதற்கான நியாயமான காரணமும் பெறப்படுகிறது ;

அவள் வருத்தம் நம்மை அண்டுகிறது;

என்ன அற்புதமாக வந்திருக்கிறது இந்த கவிதை!

 

உண்மைதான். இது போன்று நிறைய கவிதைகளை அத்தொகுப்பெங்கும் பார்க்கலாம். பக். 26, 42 ஆகியவற்றில் இடம்பெற்றுள்ள கவிதைகள் அபாரம். எனக்கு மிகவும் பிடித்தவை.

 

எனக்கும்தான்.

***

வெய்யில் கவிதைகளின் வர்க்க, பால் அரசியல் பாடுதன்மைகள் குறித்து பேசிவிட்டோம். ஜாதி அரசியல் பற்றி பேசியுள்ளாரா?

பேசியுள்ளார். ஆனால் இவற்றோடு ஒப்பிடுகையில் குறைவே. உடனடியான உதாரணங்கள் என்றால், ‘அக்காளின் எலும்புகள்’ தொகுப்பு, பக். 32, 33 இடம்பெறும் கவிதைகளைச் சுட்டலாம். இவற்றுள் ‘ஊருக்குள் சோறெடுக்கப் போன அக்கா’, அதற்கு அடுத்தப் பக்க கவிதையில் இடம்பெறும், ‘அக்காளை இங்கிட்டுதான் புதைத்திருக்கிறோம்/ அவரின் கல்லறை, அதோ வேதக்காரர்கள் புதைக்கிற/ அங்கே’ போன்ற வரிகளைச் சுட்டலாம்.

முதல் தொகுப்பில் இடம்பெறும், ‘மண்புழு’ என்ற தலைப்பில் உள்ள கவிதையில் வரும், ‘நாம் கடைசிப் பாட்டனும் நிலமிழந்து/ அடிமையான நாளில்’ என்ற வரிகள் சமீபத்தில், ‘அசுரன்’ திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில், அது பேசும் பஞ்சமி நிலமீட்பு அரசியல் பேசும் போது, இந்த வரிகள் என் நினைவுகளில் வந்து போயின.

முடிவாக, நீங்கள் ஒரே சமயத்தில் அவரின் கவிதைச் சொல்லிகள் சத்தம் குறைவாக பேசுவதை பலம் என்றும், பலவீனம் என்றும் விளக்குகிறீர்கள் இது முரணாகப்படுகிறதே?

இல்லை. விளம்புநிலையினர் / மற்றமைகள் குறித்து பேசும்போது வெளிப்படும் குரல்களின் ஒலி சத்தம் குறைவாக ஒலிப்பதை, அவை தம் இயல்பிலேயே அமுக்கப்பட்டிருப்பதால் – அவற்றின் அக்குணம் மாறாமல் வெளிப்படுவதை வரவேற்கிறேன்.  (இதன் பொருள் அக் குரல்கள் ஒலிக்கக் கூடாதவை என்பதல்ல.) அதேசமயம், அவர்களுக்கு மறுபுறத்தில், ‘மையத்தில்’ இயங்குபவர்களை இவர்கள் சார்பில் கண்டிக்கும் போதோ, நிந்திக்கும் போதோ இவ்வாறான சன்னத் தொனியிலேயே அதையும் வெளிப்படுத்தினால்…. இங்கு கொஞ்சம் தொணியைக் கூட்டலாம்.

 

உதாரணமாக,

நீங்கள்

எதை வேண்டுமாயினும்

தின்னுங்கள்

நானோ என் பன்றிகளுக்கு

ரோஜாக்களையே தருவேன்.’ / (2011: 49),

 

‘எம். சிறுபிள்ளையே…

இந்நிலத்திற்கு மேலே நீ சாட்சியாயிரு

கண்ணீரை வீணாக்கிவிடாதே. கரித்தாலும் குடி. உயிர்த்திரு.’/ (2016:17),

 

‘’சிரமமாயிருக்கிறது…

புர்ர்ர்ரென்று உங்கள் கவிதைக்குள் சுற்றித்திரியும்

அந்த வண்டைக் கொல்லுங்கள்

நண்பரே

அந்த வண்டு சுற்றித் திரியத்தான் கவிதையே’/  (2016:49) போன்ற வரிகளிலும்,

 

அதேபோல்,

‘பெருங்கவிதைகளின் கரங்களை இறுகப் பற்றி

இப்படிக் கேட்டுக்கொண்டேன்:

“அளவில் பெரியவைகளே…

சிறியவைகளிடம் அன்பாயிருங்கள் மேலும்

கவனமாகவும்!”/ (2017: 16),

 

‘கவிதை நம்புகிறது’  என்ற தலைப்பில் அமைந்த கவிதையில் இடம்பெறும்,

‘யாவும் பொது!’

என அது முஷ்டியை உயர்த்திய போது

உலகம் சிரித்தது.

ஆனாலும், கவிதை நம்புகிறது.

சிறிய எறும்பின் முஷ்டியே என்றபோதும்

அது

அறத்தின் மாபெரும் செங்கோல்’  (பக். 17 ) போன்ற வரிகளும் இவை தங்களது தொழிலை நன்றாகவே செய்கின்றன.

எனினும், வள்ளுவன் எப்படி, ‘தன்னிடமுள்ளதை மனமுவந்து கொடுப்பவரிடத்தும் பெறாமல் வறுமையில் வருந்துவதே கோடி மடங்கு நல்லதாகும்’ (கரவாது உவந்துஈயும் கண்அன்னார் கண்ணும்/ இரவாமை கோடி உறும்) என்று இரவச்சம் அதிகாரத்தில் கூறிவிட்டு, அதே அதிகாரத்தில், அதற்கு அடுத்த குறளிலேயே, ‘படைத்தவன் இவ்வுலகில் சிலரை இரந்து பிழைக்கும்படி படைத்திருப்பானாயின், அவனும் அங்ஙனமே பிச்சை எடுத்து அலைவானாக’ (இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து/ கெடுக உலகுஇயற்றி யான்.) என்று பேசி, அரசீற்றம் கொள்கிறாரோ, அது போல் சீறினால் இன்னும் நன்றாக இருக்கும்.  

மகிழ்ச்சி. மொத்தமாக வெய்யில் கவிதைகளை எப்படி சுட்டுவீர்கள்.

வள்ளுவன் வழி வந்ததொரு பாணனின் அரசியல் பேச்சுக்கள்.

மற்றமைகளுக்கான அறம் பேசும் குரல்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றியதாகவும் இந்த உரையாடலைப் பார்க்கலாம்.

நல்லது.

 வேறு ஏதாவது விடுபட்டுள்ளனவா?

நிச்சயம்; நிறைய. ஆனால், இங்கு உரையாடப் பெற்ற பொருண்மைக்கு வெளியில் அவை உள்ளன. எனவே ஆய்வு எல்லை (study limit) கருதி அவை இங்கு பேசப்படவில்லை. அவசரகதியிலற்ற, எழுத்துப் பிழைகள் களைந்த இன்னுமின்னும் நல்ல தொகுப்புகளை வெய்யிலிடமிருந்து எதிர்ப்பார்க்கிறேன். வாழ்த்துகள். நன்றி.

(காணிக்கை: வே. மு. பொதியவெற்பனுக்கு)


-றாம் சந்தோஷ்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.