எஸ்.ரா பொருட்படுத்தப்படாத, எளிய மனிதர்களின் ஆத்மா!

மனிதர்கள் விசித்திரமானவர்கள், உன்னதமானவர்கள் எந்த நொடி பிறழ்வடைவார்கள், கனிவார்கள், அரக்கர்களாக மாற்றம் பெறுவார்கள் என்று யாராலும் சொல்லவே முடியாது.

இலக்கியத்தை பொறுத்த மட்டில் கதை, கவிதை, நாவல் என பல வடிவங்களில் மனித வாதைகளையும், மனிதர்களையும்தான் அது பேசுகின்றது. எல்லா வகையான எழுத்தாளர்களும் இதை அடியொட்டித்தான் பயணித்திருக்கிறார்கள், பயணப்படுகிறார்கள்.

எழுத்தாளர் தேசாந்திரி எஸ். ராமகிருஷ்ணனும் மற்றைய எல்லா எழுத்தாளர்கள் போலவும்தான் மனித வாதைகளையும், அவலங்களையும் தன் கதைகளில் எழுதியுள்ளார். ஆனால் சற்று வித்தியாசமாக அந்த மனிதர்களின் உள்ளத்தின் அடி ஆழத்தில் படிந்திருக்கும் தொன்மங்களையும், நேயங்களையும் படிமங்களாக எழுத்தில் கொண்டு வந்தார். அத்தகு மனிதர்களை தான் வாழும் நிலத்தின் நீண்ட மரபின் சாதனையாளர்களாக கொண்டு ஆறாய்ந்து எழுதியிருக்கிறார்.

பொருட்படுத்தப்படாத எளிய மனிதர்களை இலக்கியத்தில் வைத்தல் என்பது அத்தனை இலகுவான செயலன்று அத்தகைய மனித பிம்பங்களின் வாதைகளை அனுபவத்தில் உணராமல் எழுத்தில் சொல்லிச் செல்வதென்பதும் அத்தனை இலேசுபட்டதில்லை ஆனால் இதனை மிக நேர்த்தியாக எஸ்.ரா அவரின் படைப்புக்களில் பதிவு செய்கிறார்.

எஸ்.ரா அவர்களின் எழுத்தினை படிக்கும் ஒவ்வொரு சாமானியனும் அதிலுள்ள ஏதாவதொரு பத்திக்குள் அடங்கிவிடுகிறான். குரலற்ற மனிதர்களின் குரலாக எஸ். ரா வின் எழுத்துக்களைச் சொல்லலாம்.

தத்துவ விசாரம் ததும்பத் ததும்ப உண்மைகளைப் பேசும் வார்த்தைப் பயன்பாடுகளை அவரின் எழுத்தில் காணக்கிடைக்கும். அவர் கொண்டாடும் புறக்கனிக்கப்பட்ட வெள்ளந்தி மனிதர்களின் நியாயங்களை எழுத்தில் மிக நேர்த்தியாக படிப்போர் மனதை பாதிக்கும் வகையில் சொல்லிச் செல்வதில் அவர் விற்பன்னர்.

எஸ்.ரா வின் கதைகள் மேதாவித்தனமும், மெத்தன போக்குமற்ற மிக இலகுவான நேரடிக் கதை கூரல்களாகவே இருக்கின்றன. அவர் கடைப்பிடிக்கும் வித்தியாசமான கதை ஒழுங்கு, கதை கொள்கைகள் என்பன ஓங்கி ஒலியாமலும், ஆர்ப்பாட்டமில்லாமலும் எளிமையான, நேரடி கதை சொல்லும் முறையாகவே உள்ளது இதனையே தனது எல்லா கதைகளிலும் பின்பற்றுகிறார். இத்தகைய எழுத்து ஊடுபாடுகள் மனித அவலங்களையும், அகச்சிக்கல்களையும் சலிப்பின்றி சொல்ல ஏதுவாக அமைந்து விடுகின்றது.

எழுத்து வேறு வாழ்க்கை வேறு என்று நம்பிக்கொண்டிருப்பவர்களை எழுத்தே வாழ்க்கை என நம்பச் செய்ததில் எஸ்.ரா விற்கு மிக முக்கிய பங்குண்டு.

பொருட்படுத்தப்படாத மனிதனிடம்தான் உன்னதமான, மகத்தான விடயங்கள் இருக்கின்றது. உலகத்தின் நாகரீகங்களையெல்லாம் அறிந்தவர்கள், மேன்மக்கள் என நம்பிக்கொண்டிருக்கும் படித்தவர்களிடம் அதனை காணக்கிடைக்காது. இலக்கியங்கள் அத்தகு அன்றாடங்காய்ச்சிகளிடம் கொட்டிக்கிடக்கும் மகத்தான மனிதபிமானத்தை பேசுவதுடன், மகொன்னதமான இடத்தையும் அவர்களுக்கென வழங்கிச் செல்கின்றது.

எஸ்.ராமகிருஷ்ணன்

 

மனிதன் தன் நினைவுகளை, அனுபவங்களை பதிவு செய்யவதற்காகவுள்ள மிகச்சிறிய, சிறந்த, அபூர்வமான கலை வடிவமே கதை. ஒரு மனிதன் ஏதாவது கதையில் தன்னை கதாபாத்திரமாக்கிக் கொள்ளவே விரும்புகிறான், அவன் எத்தகு உயர் வர்க்க, ஆடம்பர வாழ்வை வாழ்ந்த போதிலும் தன் வாழ்க்கையை ஒரு கதையாக மாற்றிக்கொள்ளவே விரும்புகிறான். கற்ற பாடங்கள், எவையெல்லாம் மறக்க கூடாது என்பதாக நம் நினைவில் இருந்து கொண்டு எம்மை மகிழச்செய்யவும், துன்புறவும் செய்கின்றனவோ அவையெல்லாம் எஸ்.ரா வின் படைப்புலகில் கதையாக இருக்கின்றன.

எளிய மனிதர்களுக்காக யாராவது ஒருவர் பரிதாபம் கொள்ளவும், எழுதவும், அவர்பக்க நியாயங்களை சொல்லவும் வேண்டியிருக்கின்றது அத்தகைய மகத்தான பணியை எஸ்.ரா தன் கதைகளில் வாதைக்குள்ளான அந்த மனிதர்களை கதாமாந்தர்களாகக் கொண்டு, உயரிய இடங்களை அவர்களுக்கு தந்து செவ்வனே செய்கிறார்.

எளிய மனிதர்களுக்கும் நியாயம், குரல் என்பன இருக்கின்றது, அவர்களுக்கும் நால்வர் தோள் கொடுக்கவும், ஆதாரவாகவும் நிற்க வேண்டியிருக்கின்றது. என்பதை தன் கதையூடாக எல்லோருக்கும் மீண்டும் மீண்டும் ஞாபக மூட்டிக்கொண்டே இருக்கின்றார். ஞாபக மூட்டுவதுதானே எழுத்தாளனின் மகத்தான பணி.

ஒட்டு மொத்த சமூகத்தின் தேவைகள், விருப்பங்கள், அவலங்கள், துன்பம் என்பனவற்றையும் சிறு சம்பவத்தைக்கொண்டு சொல்லிட முடியும் என்பதற்கு எஸ்.ரா வின் கதைகளே சான்று.

அவர் சொல்லும் கதைகளெல்லாம் வெறும் கதைகளல்ல. அவர் சொல்லும் கதைகள் நம்மை சஞ்சலப்படுத்துகின்றது, அக் கதைகளின் வழி பல உண்மைகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. அந்த உண்மை படிப்போர் மனதை தொடுவதுடன் மனது அந்த  உணர்ச்சிகளை ஏற்றுக்கொண்டு வலிக்குள்ளாகிறது, சந்தோசப்படுகிறது, அழுகிறது. உதாரணமாக வீதியில் ஊனமுற்றும், தன் பிள்ளைகளுடன் யாசகம் கேட்டு அலையும் ஒரு பிச்சைக்காரனுக்காக நின்று நிதானித்து யாரும் அழுவதில்லை ஆனால் அதே பிச்சைக்காரன் ஏதாவதொரு கதையில் கதாபாத்திரமாக வைக்கப்பட்டு அவன் படும் துயர் விவரணம் செய்யப்படுகையில் அதனை படிக்கும் வாசகனுக்கு தன்னை அறியாமலேயே கண்ணீர் சிந்துகின்றது. இதுவே ஒரு மகத்தான படைப்பாளியின், படைப்பாக்கத்தின் வெற்றி இத்தகைய உணர்ச்சி வெளிப்பாட்டிற்கான கருக்களைக் கொண்ட கதைகள் எஸ்.ரா வின் படைப்பில் ஏராளம்.

நிஜ வாழ்க்கையைக்காட்டிலும் எஸ்.ரா எழுதும் புனைவுகள் படிப்போர் வாழ்க்கையை வலிமையாக பாதிக்கக்கூடியதாக இருக்கின்றது. புனைவிலான படைப்புக்கள் எம் உள்ளத்தின் இரகசிய கதவுகளை தட்டி நாம் எதையெல்லாம் மறைக்க ஆசைப்படுகிறோமோ அத்தனையையும் அடையாளப்படுத்திவிடுகின்றது. மனிதன் தன் வாழ்வில் எதையெல்லாம் அடைகிறான் என்ன கனவுகள் காண்கிறான் அதில் எதை ஜெய்த்தான் எதில் தோற்றான் அதற்கான காரணம் என்னவென மிக அற்புதமாக புனைவு வழியாக பதிவு செய்திருக்கிறார் எஸ்.ரா.

அவர் எழுத்தில் பெண்கள் சம்பந்தமாகவும் பல படைப்புக்களைக் காணலாம். ஒருவர் தன்னை ஒப்புக்கொடுத்தல் போன்ற உலகின் மிகத் துயர் தரக்கூடிய விடயம் எதுவுமே இல்லை அதை பெண்கள் தெரிந்தே செய்து கொண்டிருக்கிறார்கள். குடும்பம் எனும் மிகப்பெரும் உறவுச் சிக்கலில் அல்லுண்டு அவர்களின் ஆசை, படிப்பு, கனவு, இலட்சியம் என்பவற்றை மறந்து குடும்பத்திற்காகவே தன்னை இறையாக்கி கொண்டிருக்கிறார்கள். இத்தகு அபலை வாழ்வு வாழும் பெண்களின் குரலாகவும் அவரின் எழுத்துக்கள் இருக்கின்றன. அவரின் பல படைப்புக்களில் பெண் கதாமாந்தர்கள் இத்தகு அவல நிலையிலேயே வாழ்வதை சித்தரிக்கும் விதமான கதைகள் இருக்கின்றன. உதாரணமாக அவரின் எழுத்தில் உருவான பேரருவி, எம்பாவாய், விரும்பி கேட்டவள்… போன்ற கதைகளைச் சொல்லலாம்.

பிறந்தது, வளர்க்கப்பட்டது, வாழ்ந்தது என மனிதர்கள் எல்லோரும் ஆளுக்கொரு அனுபவத்தை கதையாக வைத்திருக்கிறார்கள். பிறந்த கதை, வளர்ந்த கதை, வாழ்ந்த கதை, வீழ்ந்த கதையென பிரிக்கப்பட்டிருக்கும் கதை மரபில் வீழ்ந்த கதைதான் இருப்பதிலேயே மிகத்துயரம் நிறைந்த கதையாக இருக்கின்றது. வாழ்வில் ஜெய்த்த மனிதன் தன் வெற்றிக்களிப்பில் உலகையும், தான் வாழும் சமூகத்தையும் நோக்கி பேசிக்கொண்டிருக்கையில் தோற்றுப்போன மனிதன் மாத்திரம் தனக்குத் தானே பேசிக்கொண்டிருக்கின்றான். அத்தகைய தோற்ற, வீழ்ந்த மனிதனின் வாழ்வனுபவங்கள் மூலமாகத்தான் எமக்கான படிப்பினைகள் புகட்டப்படுகின்றன. இப்படியான வீழ்ந்த மனிதனின் கதையை எடுத்துக்கொண்டுநீ செயலளவில்தான் தோற்றுப்போயிருக்கின்றாய் இன்னும் ஜெய்க்க நிறைய நம்பிக்கை மீதமிருக்கின்றதுஎன கதை வழி ஆற்றுப்படுத்தக்கூடிய வகையிலான எழுத்துக்களையே தன் கதை முடிவாக வைத்துள்ளார் எஸ்.ரா.

இஸ்ஸத்

எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களையும், அவரின் எழுத்துக்களையும் அதிகமதிகம் கொண்டாட காரணம்; தோற்றுப்போன, பொருட்படுத்தப்படாத, அலட்சியப்படுத்தப்பட்டு விளிம்பு நிலை வாழ்வு வாழ்கின்ற மனிதர்களையே நான் அதிகம் நேசிக்கிறேன். அத்தகைய மனிதர்களின் கதைகளையே தொடர்தேர்ச்சியாக வாசிக்கிறேன். அவர்களுக்கு ஆறுதல் சொல்ல ஆட்கள் இல்லை, பரிவாக வருட அன்பின் கரங்கள் இல்லை, அவர்கள் தனக்கு இந்த உலகில் நிம்மதி தரும் வகையில் ஒரு சிறிய இடம் கூடவா இல்லை என நினைக்கின்றனர், வீழ்ச்சியின் பாடலைத்தான் அவர்கள் பாடிக்கொண்டே இருக்கிறார்கள்

அறம் இறந்து போன காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அன்பு மறுக்கப்பட்ட மனிதர்களின் மீது அன்பை ஏற்படுத்தவும் அவர்களும் எம் மத்தியில்தான் வாழ்கின்றார்கள் என இந்த உலகத்துக்கு சொல்லவும், அவர்களை அடையாளம் காட்டவும் வேண்டியே வீழ்ச்சியை பேசுவதையே படைப்பாளியின் மகத்தான பணியாக கொண்டு செயற்படுகின்றார் திரு எஸ்.ரா.

எஸ்.ரா அவரின் படைப்புக்கள் பற்றி சொல்கையில் இப்படி சொல்கிறார்ஒரு மனிதன் இரு கம்புகளுக்கு மத்தியில் கட்டப்பட்டுள்ள கயிற்றில் பெரிய மூங்கிலை சுமந்தபடி நடந்து சாகசம் காட்டுகின்றான். இந்த உலகமே அவனை வியந்து பார்க்கின்றது, கை தட்டுகின்றது. எனக்கு அவனின் சாகசத்தைப் பற்றியோ மற்றவர்கள் அவனை வியந்து பார்ப்பது பற்றியோ எழுத வேண்டியதில்லை. அதே கயிற்றில் நடந்த அம்மனிதன் ஏன் தனியாக, புறக்கணிக்கப்பட்டவனாக, உலகம் அவனை வியந்து பார்த்த போதிலும் யாருமற்றவனாக சாகசம் முடிந்த பின்னர் வீதியில் நடந்து போகின்றான்? அவ்வளவு கை தட்டல்களை சம்பாதித்தவன் தன் வீட்டு கதவை தட்ட ஏன் தயங்கி நிற்கின்றான்? அது அவன் வீடுதானே!

கூச்சத்தோடும், தயக்கத்தோடும் மனிதர்கள் மீண்டும் மீண்டும் தோல்வியை சந்தித்து கொண்டே இருக்கின்றார்கள். எல்லாம் தாண்டி அந்த மனிதர்கள் இந்த உலகத்தை விட்டு இன்னும் மறையவில்லை. இப்படியாக இந்த வாழ்க்கை அவனுக்கு எதுவும் தராத போது குறைந்த பட்சம் இலக்கியமாவது இடம் கொடுக்கட்டுமே என்றுதான் அவனை திரும்ப திரும்ப இலக்கியத்திற்குள் வைத்துக் கொண்டே இருக்கின்றேன்.” என்கின்றார்.

எஸ்.ராமகிருஷ்ணன் வெறுமனே தமிழின் மகத்தான படைப்பாளி மாத்திரமல்ல அவர் பொருட்படுத்தப்படாத, எளிய மனிதர்களின் ஆத்மா!

 

இஸ்ஸத்

10 COMMENTS

  1. எழுத்தாளர் எஸ் ரா பற்றிய ஆழமான புரிதல். ..

    எஸ் ரா அவர்களின் எழுத்தின் வடிவம், சதா கடந்து போகும் எளிய மனிதர்களின் உணர்வுகள்.

    வாழ்த்துக்கள் இஸ்ஸத்

  2. அருமையான பதிவு இஸ்ஸத் அவர்களே.
    திருமிகு.எஸ்.ரா
    எளிய மனிதர்களின்
    வாழ்க்கையை வாதைகளை
    சமுகத்தின் முன் வைக்கிறார்.
    சாதாரன மனிதர்களின்
    மனத்திற்குள் புதைந்து இருக்கும் “மனிதத்தை” எடுத்து அதே வாசகனுக்கு காட்டுகிறார்.
    மனிதம் காத்திட அவர் விடும் அழைப்பை வெறும் வாசிப்பாக கடப்பது இந்த சமூகத்திற்கு அழகு அல்ல…இந்த சமூகம் அதை முன்னெடுக்க வேண்டும்
    அதுவே அவர் படைப்புகளுக்கு நாம் செய்யும் சிறப்பு

  3. அருமையான பதிவு நண்பர் இஸ்ஸத் வாழ்த்துக்கள்.
    திருமிகு எஸ்.ரா வின் பேச்சுக்கள் மற்றும் எழுத்துக்கள் எனக்கு
    மிகவும் பிடிக்கும்.
    எளிய மனிதனுக்குள் இருக்கின்ற அன்பு, துயரம் ,உன்மை, வறுமையும்சுட்டிக்காட்டும் போது அதன் அடி இழையாய் மனிதம் இருக்கும்.
    எஸ்.ரா தனது வாசகனுக்கு எழுத்தின் மூலம் சமூக கடமையை சுட்டி காட்டுவது.
    அதை வெறும் வாசிப்பனுபவமாக
    கடப்பது எஸ்.ரா எழுத்துக்கு செய்யும்
    மரியாதையாக இருக்காது.

    • எழுத்தாளன் எப்போதும் தன் எழுத்தின் மூலமாக மக்களுக்கு ஞாபகமூட்டிக்கொண்டே இருக்கிறான். எஸ்.ரா அதனை தன் எழுத்தின் மூலம் செவ்வனே செய்கிறார்.

      மீண்டும் நன்றிகள் உங்கள் வாழ்த்துக்கு ❣️🙏🏻

  4. அன்புடைய ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்,
    கனலியின் படைப்புகளை படித்தேன். மிகவும் அற்புதமாக உள்ளது. எஸ்.ராவின கட்டுரைகளை தொடர்ந்து படித்துக் கொண்டு இருக்கிறேன். அவர் கட்டுரைகளை, எமது முகநூல் ‘செயல் மன்றம்’ என்ற பதிவில் பதிந்து கொண்டு இருக்கிறேன். எஸ்.ரா அவர்கள், எளிய மனிதர், பல இலக்குகளை, எளிதில் எட்டிப்பிடிக்கும் திறமைசாலி. எழுத்தின் மூலம் பல இலக்குகளை கண்டு கொண்டு, பலருக்கும் பல கதை, கட்டுரைகள் மூலம் இலக்குகளை நிர்மாணிக்கும் கட்டுரை ஆசிரியர்.

    கரந்துறை வரிகளில் பாக்களை தொகுக்கும்

    தங்கவேலு சி
    பதிவர்,
    செயல் மன்றம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.