சரளைப் படுகை


ப்போது நாங்கள் சரளைப் படுகையின்  பள்ளத்திற்கு அருகே வசித்து வந்தோம். அது பூதாகரமான இயந்திரங்களால் துளையிடப்பட்ட அகன்ற பள்ளம் இல்லை. மிகச் சிறியது. பல ஆண்டுகளுக்கு முன்பு  ஏதேனும் விவசாயி அதனால் கொஞ்சம் பணம் சம்பாதித்திருக்கலாம். அதிக  ஆழமில்லாத அந்தப் பள்ளத்தைப் பார்க்கும் போது  வேறு ஏதோ நோக்கங்களுக்காகத் தோண்டப் பட்டிருக்கலாமென நினைக்கத் தோன்றும் . ஒருவேளை வீடு கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டப்பட்டு  அதன் பின்  கட்டப்படாமலேயே கூட இருந்திருக்கலாம்

என் அம்மாதான்  முனைப்புடன் கூறிக் கொண்டே இருப்பாள். “நாங்கள்  சர்வீஸ் ஸ்டேஷன் சாலையில் உள்ள பழைய சரளைப் படுகையின் அருகில் வசிக்கிறோம்என்று மற்றவர்களிடம் சொல்லிச் சிரிப்பாள். ஏனென்றால் அவளது முந்தைய வாழ்க்கையோடு தொடர்புடைய   வீடு ,தெரு, கணவர் என அனைத்து அடையாளங்களையும் உதிர்ப்பதில் மகிழ்ச்சியாக இருந்தாள்.

  அந்த வாழ்க்கையைப் பற்றி மிகக் கொஞ்சமே நினைவில் உள்ளது. அதாவது சில பகுதிகள் தெளிவாக நினைவில் இருந்தாலும் ஒரு முழு வாழ்க்கைச் சித்திரம் உருவாக்க முடியாத  அளவு தொடர்பற்ற சங்கிலிகளாக அவை உள்ளன. அந்த நகரத்து வீட்டில் உள்ள என் பழைய அறையின் சுவரில் கரடி பொம்மைப் பட வண்ணத்தாள் ஒட்டியிருந்தது மட்டும் என் நினைவில் தங்கியுள்ளதுபுதிய வீட்டில், (அதை  ஒரு ஊர்தி மனை * என்றுதான் சொல்ல வேண்டும் ) என் அக்கா கேரோவுக்கும் எனக்கும் ஒன்றின் மேல் ஒன்றாக வடிவமைக்கப்பட்ட குறுகிய கட்டில்  இருந்தது .முதன் முதலாக அங்கு குடியேறிய போது ,கேரோ எங்கள் பழைய வீட்டைப் பற்றி அதிகம் பேசிக் கொண்டே ஏதாவது ஒரு விஷயத்தை நான் நினைவு கொள்ளத் தூண்டிக் கொண்டிருப்பாள். நாங்கள் படுக்கையில் இருக்கும் போதுதான் இப்படியெல்லாம் பேசுவோம். பொதுவாக ,எனக்கு எதுவும் ஞாபகத்தில் இல்லையென்பதிலும், கேரோ எரிச்சலடைவதிலும் அந்த உரையாடல் முடியும்.சில வேளைகளில் எனக்கு நினைவிருக்கிறது என்று தோன்றினாலும்  என் பிடிவாத குணத்தாலும், அல்லது விஷயங்களைத் தவறாக அனுமானித்திருக்கிறேன் என்னும் பயத்தாலும் தெரியவில்லை என்றே பாவனை செய்து கொள்வேன்.

கோடைக் காலத்தில் நாங்கள் அந்த ஊர்தி மனைக்குக் குடிபெயர்ந்தோம். எங்களுக்கு பிளிட்ஸீ என்றொரு நாய் இருந்தது. பிளிட்ஸீக்கு இந்த இடம் பிடித்திருக்கிறது என்று அம்மா கூறினார். அது உண்மைதான். என்னதான் புல்வெளிடன் கூடிய பெரிய வீடென்றாலும் நகர்ப்புறத்திலிருந்து பரந்து விரிந்த புறநகர் கிராமியச் சூழலுக்கு வர எந்த நாய்க்குத் தான் பிடிக்காதுஏதோ அந்த சாலையே அவளுக்குத்தான் சொந்தம் போல வேகமாகச் செல்லும் வாகனங்களின் பின்னால் குரைத்துக் கொண்டே ஓடுவாள் .அவ்வப்போது அவள் கொன்ற அணிலையோ, பெருச்சாளியையோ கவ்விக் கொண்டு வருவாள். இதைக் கண்டு கேரோ வருத்தமடைந்த போது, நாய்களின் இயல்பான குணம் பற்றியும், வாழ்க்கைச் சுழற்சியில் உணவுக்காக சில உயிர்கள் பிற உயிர்களைக் கொல்வது அவசியம் எனவும்  நீல் விளக்கினான்

அவளுக்கு நாய் உணவு கிடைக்கிறதுகேரோ வாதிட்டாள். பதிலுக்கு நீல், ‘ஒருவேளை அதை நாம் வாங்கி வரா விட்டால்? ஒருவேளை நாம் எல்லோருமே ஒருநாள் காணாமல் போய் விட்டால், அவள் தனக்குத் தானே இரை தேட வேண்டும் அல்லவா

கேரோ தீர்க்கமாக உரைத்தாள், ‘நான் போக மாட்டேன்’ . நான் மறைந்து போக மாட்டேன், நான் எப்போதுமே அவளைப் பார்த்துக் கொள்வேன்’ 

நீ அப்படி நினைக்கிறாயா?’ நீல் கேட்டுக் கொண்டிருக்கும் போது அம்மா அங்கு வந்து பேச்சைத் திசை திருப்பினாள்அமெரிக்கர்களைப் பற்றியும், அணு குண்டுகளைப் பற்றியும் பேசுவதற்கு நீல் எப்போதுமே தயாராக இருப்பான்.ஆனால்  அதைப் பற்றி விவாதிப்பதற்கு நாங்கள் இன்னும் தயாராகவில்லை என அம்மா நினைக்கவில்லை. அப்படி அவன் அதைப் பற்றி விவரிக்கையில்அட்டாமிக் பாம்என்று அவன் குறிப்பிட் டதை  நான்அட்டாமிக் பன்பற்றித்தான் பேசுகிறான் என  நினைத்துக் கொண்டேன் என்று அம்மாவுக்குத் தெரியாது.அப்படிப் பொருள் கொண்டதில் ஏதோ தவறு இருக்கிறதென்று  எனக்குத் தெரிந்தது.ஆனால் அதை வெளியே சொல்லிக் கேள்விகள் கேட்டு மற்றவர்கள் நகைப்புக்கு ஆளாவதை நான் விரும்பவில்லை

நீல் ஒரு நடிகன். நகரில் கோடைக்காலத்தில் இயங்கும்  தொழில்முறை நாடக அரங்கு ஒன்று இருந்தது. அந்தக் காலக்கட்டத்தில் நகருக்கு அது புதிது. சிலர் அது குறித்து உற்சாகமாக இருந்தனர், மற்றவர்கள் அது தரமற்ற குப்பை நாடகங்களைக் கொண்டு வந்து விடுமோ என அஞ்சினர். அம்மாவும் அப்பாவும் அதற்கான ஆதரவு நிலைப்பாட்டில் இருந்தார்கள்.அம்மா அதிக ஆர்வமுடன் இருந்தாள்ஏனென்றால் அவளுக்கு நிறைய நேரமிருந்தது. அப்பா ஒரு காப்பீட்டு நிறுவன அதிகாரி. அடிக்கடி பயணம் செல்பவர். அம்மா நாடக அரங்கிற்காகப் பல்வேறு வழிகளில் நிதி திரட்டுவதில் மும்முரமாக இருந்தது, தன் தன்னார்வல சேவையை வழங்கியதுடன்அங்கு வரவேற்பாளராகவும் இருந்தார். ஒரு நடிகை என்றே பலரும் நினைக்கக் கூடிய அளவுக்கு இளமையும் அழகான தோற்றமும் கொண்டவள் அம்மா., நடிகைகள் போலவே நீள ஸ்கர்ட்டும், சால்வையும் நீளமாகத் தொங்கும்  கழுத்தணிகளும் அணியத் துவங்கினாள் . கேசத்தை அப்படியே விரித்துப் போட்டுக் கொண்டவள், முகத்திற்கு ஒப்பனை செய்வதையும் விட்டு விட்டாள்.. இந்த மாற்றங்களெல்லாம் அப்போது எனக்குப் புரியவில்லை  அல்லது அதை சரியாகக் கவனிக்கவில்லை. என் அம்மா எப்படியிருந்தாலும்  என் அம்மாதான். ஆனால் கேரோ இதையெல்லாம் கவனித்தாள் என்பதில் சந்தேகமேயில்லை. அப்பாவும் தான்.. அவருடைய இயல்பையும் அம்மா மீது அவர் வைத்திருக்கும் அன்பையும் பற்றி எனக்குத் தெரிந்த அளவில் நான் உணர்ந்தது என்னவென்றால்  இந்தச் சுதந்திரம் மிக்க உருமாற்றத்தில் அம்மா எவ்வளவு அழகாக இருக்கிறாள் என்றும் நாடகக் குழுவினரோடு எந்த அளவு ஒன்றியிருக்கிறாள் என்பதையும் நினைத்துப் பெருமிதம் கொள்கிறார் எனத் தோன்றியது. இதைப் பற்றிப் பின்னொரு நாளில் பேசும் பொழுது  எப்போதுமே தான் கலையை அங்கீகரிப்பவர் என்று அப்பா கூறினார். இந்தக் கருத்தை நாடக் குழு நண்பர்கள் முன்னிலையில் அவர் கூறியிருந்தால் அம்மா எவ்வளவு தர்ம சங்கடத்தில் குன்றியிருப்பாள் என்பதையும் அதை மறைக்க மேலும் சிரித்திருப்பாள் எனபதையும் என்னால் கற்பனை செய்து பார்க்க முடிந்தது.

ம்ம், அதன் பின் அந்த மாற்றம் வந்தது. ஓரளவு யூகிக்கப் பட்டதும், அதன்படியே நடந்ததும் தான். ஆனால் அப்பா மட்டும் அதை எதிர்பார்க்கவில்லை. வேறு எந்தத் தன்னார்வலர்களுக்கும் அது போல நிகழ்ந்ததா எனத் தெரியவில்லை. எனக்குச் சரியாக ஞாபகம் இல்லையென்ற போதும் ஓரளவுக்குத்  தெரியும். ஒரு நாள் முழுவதும் அப்பா அழுதவாறே அம்மாவின் பின்னாலேயே வீடு முழுவதும் சுற்றிக் கொண்டு அவளை நம்பாமல்  தன்  பார்வையிலிருந்து அகல விடாமல் பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய மனதை ஆற்றும்படியாக நல்ல வார்த்தைகள் சொல்வதற்குப் பதிலாக அவரை மேலும் வருத்தும் ஒரு விஷயத்தை அம்மா சொன்னாள்.

அவர் வயிற்றில் வளர்வது நீலின்  குழந்தை என அறிவித்தாள்..

உன் அம்மாவுக்கு நிச்சயமாகத் தெரியுமா? ”

ஆமாம், மிக உறுதியாக..’

 தேதிகளைச் சரியாகக் கணக்கிட்டு வைத்திருந்தாள்

அதன் பின் என்ன நடந்தது

எங்கள் அப்பா அழுவதை நிறுத்தி விட்டார். அவர் வேலைக்குத் திரும்பியாக வேண்டும். அம்மா அவருடைய பொருட்களை எடுத்துக் கொண்டு, எங்களையும் அழைத்துக் கொண்டு கிராமப்புறமாக நீல் ஏற்பாடு செய்து வைத்திருந்த ஊர்தி மனைக்கு வந்து சேர்ந்தாள். அதன் பின் தானும் அழுததாகக் கூறினாள் ஆனால் அப்போதுதான் தான் உயிர்ப்புடன் இருப்பதாகவும் கூறினாள். அவருடைய வாழ்க்கையில் முதல்முறையாக உண்மையிலேயே அது வாழ்தல் போல இருந்திருக்கலாம். மீண்டும் ஒரு முறை காலம் அவளுக்கு வாய்ப்பு வழங்கப் பட்டதைப் போல; வாழ்க்கையைப் புதிதாக முதலிலிருந்து துவங்கினாள். வெள்ளி, சைனா பீங்கான் பாத்திரங்களிலிருந்து, வீடு அலங்காரத் திட்டமிடல்களிலிருந்து, பூந்தோட்டங்களிலிருந்துஅவளுடைய புத்தக அடுக்கிலிருந்த புத்தகங்களிலிருந்தும் கூட வெளியேறி வந்திருக்கிறாள் இப்போது வாசிக்கப் போவதில்லை.. வாழப் போகிறாள்உடை அலமாரியில் அவளது ஆடைகள் தொங்கிக் கொண்டிருந்தன. உயர்ந்த குதிகால் காலணிகள் அதன் இருப்பிடத்தில் அப்படியே இருந்தன. அவளுடைய வைர மோதிரமும், திருமண மோதிரமும் ஒப்பனை மேசையில் வைக்கப் பட்டிருந்தன. நயம் இழை  இரவு ஆடைகள் இழுப்பறையில் உள்ளன. காலநிலை வெம்மையாக இருக்கும் பட்சத்தில்  கிராமப் புறத்தில் நிர்வாணமாக சில கணங்களுக்காவது சுற்ற வேண்டும் என விரும்பினாள்.

அது சரிப்பட்டு வரவில்லை. ஏனென்றால் அப்படி அவள் முயற்சித்த போது கேரோ அவளுடைய கட்டிலுக்குள் சென்று ஒளிந்து கொண்டாள். நீலும் அவ்விஷயத்தில் அதிக நாட்டம் இல்லை என்று சொல்லி விட்டான்

இதைப் பற்றியெல்லாம் அவன் என்ன நினைக்கிறான்? நீல்! அவன் ஒரு முறை சொல்லியிருக்கிறான், அவனது மன விசாரப்படி எது நிகழ்ந்தாலும் அவன் அதை வரவேற்பான்அனைத்துமே ஒரு பரிசு போல.. நாம் தருகிறோம், பெறுகிறோம்.

இப்படிப் பேசுபவர்களைப் பற்றி எனக்கு எப்போதுமே சந்தேகம் உண்டு. ஆனால் அப்படி மதிப்பிட எனக்கு உரிமையுள்ளது எனச் சொல்லவும் முடியாது.

நீல், ஒரு முழுமையான நடிகனுமில்லை. பரிசோதனை முயற்சியாக, தன்னைப் பற்றி என்ன அறிந்து கொண்டோம் என்பதைச் சோதித்துப் பார்ப்பதற்காகவே நடிப்புக்குள் இறங்கியதாகச் சொன்னான். கல்லூரிப் படிப்பிலிருந்து நிற்கும் முன் ’’Oedipus Rex’ என்னும் சேர்ந்திசைக் குழுவில் பங்கேற்றிருக்கிறான்அது அவனுக்குப் பிடித்திருந்தது. தன்னை அப்படியே ஒப்புக் கொடுத்து  மற்றவர்களுடன் இணைந்திருப்பது..அதன் பின் ஒரு நாள் டொரொன்டோ நகரின் தெருவில் யதேச்சையாக நண்பன் ஒருவனைச் சந்தித்த போது அவன் ஒரு சிறு நகரத்தின் நாடக க் கம்பெனியில் கோடைக் கால பணிக்காக சேர முயற்சிப்பதாகச்  சொன்னான். செய்வதற்கும் அதை விடச் சிறப்பானதாகக்  கையில் ஏதும் இல்லாததால் அவனுடன் சென்ற நீல்  அந்த வேலையைப் பெற்றுவிட்டான். ஆனால், பாவம் அந்த நண்பனுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. நீல்  பாங்க்கோ* வாக  நடித்தான். சில வேளைகளில் பாங்க்கோவின் ஆவியை உருவமாகவும் சில வேளைகளில் அருவமாக காண்பிப்பார்கள். அந்த முறை உருவம் புலப்படும்  காட்சியை வைக்க விரும்பினார்கள். அதற்கு நீல் மிகச் சரியான அளவாக இருந்தான். சிறப்பான வடிவம், வலுவான  பேய்.

அம்மா அவனுக்கு அந்த ஆச்சரியத்தை அளிக்கும் முன்பே குளிர்காலத்தை எங்கள் நகரில் கழிக்கவே அவன் திட்டமிட்டிருந்தான். அந்த ஊர்தி மனையை ஏற்கெனவே அவன் பார்த்து வைத்திருந்தான். போதுமான அளவு தச்சு வேலை அனுபவம் அவனிடம் இருப்பதால் நாடக அரங்கை புதுப்பிக்கும் பணியை எடுத்து , வசந்த காலம் வரும் வரை தேவைகளைக் கவனித்துக் கொள்ளுமளவு கையிருப்பை வைத்திருந்தான். அந்த அளவு மட்டுமே அவன் யோசிக்க  விரும்புவான்.

கேரோவுக்கு பள்ளியை மாற்ற வேண்டிய தேவை கூட இல்லை.சரளைப் படுகையின் பள்ளத்தை ஒட்டி இருக்கும் சிறிய சந்தின் முனையில் பள்ளிப் பேருந்து அவளை ஏற்றிச் செல்லும். இந்தப் புறநகரில் அவள் புதிய நட்புகளைப் பெற வேண்டும். கடந்த வருடம் அவளுடன் நண்பர்களாக இருந்த நகர்ப்புறக் குழந்தைகளுக்கு அவள் சில விஷயங்களை விளக்கிச் சொல்ல வேண்டியிருக்கும். அதிலெல்லாம் அவளுக்கு ஏதும் சிரமம்  இருந்ததாக எனக்குத் தெரியவில்லை..

அவள் வீடு வந்து சேர்வதற்காக பிளிட்ஸீ  சாலையில் வந்து காத்துக் கொண்டிருப்பாள்

அம்மாவிடம் கார் இல்லாத காரணத்தால் நான் சிறார் பள்ளிக்குச் செல்லவில்லை. ஆனால் மற்ற குழந்தைகள் உடன் இல்லாமல் இருப்பதை நான் பொருட்படுத்தவே இல்லை. கேரோ வீட்டுக்கு வந்ததும் அவள் இருப்பதே எனக்குப் போதுமானதாக இருந்தது. அம்மாவும் எப்போதும் விளையாட்டு மனநிலையிலேயே இருந்தாள். பனிப்பொழிவு ஆரம்பித்தவுடன் அம்மாவும் நானும் ஒரு பனி மனிதனை செய்து முடித்தோம். , இதை நீல் என்று அழைக்கலாமா என்று அம்மா கேட்ட போது  நானும் சரி என்றேன்..பின் நாங்கள் பனி மனிதனின் உருவம் மேலும்  வேடிக்கையாகத் தோற்றமளிக்க அதன் மீது பல பொருட்களைச் செருகிக் கொண்டே இருந்தோம். நீல் ஓட்டி வரும் கார்  வீட்டுக்கு வெளியே கண்ணில் படும்போது நான் ஓடிச் சென்றுநீல் இங்கே..நீல் இங்கேஎன்று பனிமனிதனைக் காட்டிக் கத்த  வேண்டும் என்று அம்மாவும் நானும் திட்டமிருந்தோம். ஆனால் அவன் வந்ததும்  நான் அதே போலச் செய்த போது ,காரை நிறுத்தி விட்டு வேகமாக இறங்கி வந்த  நீல்உன் மீது காரை ஏற்றியிருப்பேன் தெரியுமா ,என்று  மிகுந்த கோபத்தோடு சத்தமிட்டான்

ஒரு தந்தை போல அவன் நடந்து கொண்ட வெகு சில தருணங்களில் அதுவும் ஒன்று.

குளிர்காலத்தின் குறுகிய பகல் நேர நாட்கள் எனக்கு விசித்திரமாக இருந்திருக்க வேண்டும்.  ஏனென்றால்  நகரில்  மாலையில் விளக்குகள் எரியும். ஆனால் குழந்தைகள் மாற்றத்திற்குப் பழக்கப் பட்டு விடுகிறார்கள். சில வேளைகளில் எனது மற்றொரு வீட்டைப் பற்றி நினைத்துக் கொள்வேன். அதை இழந்தது போலவும் உணரவில்லை, அங்கு போய் வாழ்வதையும் பெரிதாக விரும்பவில்லைஅது எங்கே போனதென்றுதான் வியப்பாக இருக்கும்

நீலுடன் அம்மா கழிக்கும் இனிமையான நேரங்கள் இரவுகளிலும் தொடரும். நான் தூக்கத்தில் விழித்துக் கழிவறைக்குப் போக வேண்டுமென்றால் அவரை அழைப்பேன். மகிழ்ச்சியுடனே வருவாள், ஆனால் அவசரமேதுமில்லாமல்உடலில் ஒரு துவாலையையோ அல்லது சால்வையையோ சுற்றிக் கொண்டு வருவார். அதனுடன் ஒரு நறுமணமும் படர்ந்திருக்கும். அந்த நறுமணத்தின் தொடர்பாக நான் நினைப்பது சங்கீதம் , மெழுகுவர்த்திகள் . மற்றும் காதல்

உறுதியாகத் தெரியாவிட்டாலும் அந்த சமயத்தில் வேறு ஏதோ நடந்து கொண்டிருந்தது எனத் தெரிந்தது. ஆனால் அப்போது  அது என்னவென்று  புரிந்து கொள்ள நான் மெனக் கெடவில்லைஎங்கள் நாய் பிளிட்ஸீ அளவில் பெரியதல்ல, ஆனால் கேரோவின்  மேற்சட்டைக்குள் அடங்கி விடும் அளவுக்குச் சிறியதும் அல்ல. கேரோவால்  எப்படி அதைச் செய்ய முடிந்தது என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு முறையல்ல, இரண்டு முறை அவள் பிளிட்ஸீயைத் தன் மேற்சட்டைக்குள் மறைத்து எடுத்துக் கொண்டு பள்ளிப் பேருந்தில் பயணம் செய்து , இறங்கியதும் நேராகப் பள்ளி செல்லாமல் நகரில் உள்ள எங்கள் பழைய வீட்டிற்கு அவளை எடுத்துச் சென்றிருக்கிறாள். அங்கிருந்து ஒரு தெரு தொலைவில்தான் வீடு இருக்கிறது.வீட்டிற்குத் தன் தனிமையான மதிய உணவு வேளைக்கு வந்த அப்பா, பூட்டாமல் இருந்த பால்கனியில் பிளிட்ஸீயைப் பார்த்திருக்கிறார். கதைகளில் வருவது போல் தன் பழைய வீட்டை மறக்காமல் மீண்டும் வீடு திரும்பும் நாய் போல அவள் அந்த இடம் வந்தடைந்தது அவருக்கு மாபெரும் ஆச்சரியமாக  இருந்தது. இங்கே,காலையிலிருந்து தான் நாயைப்  பார்க்கவில்லை என்று சொல்லி  மிகப் பெரும் ஆர்ப்பாட்டம் செய்தாள் கேரோ. ஆனால் அதே வழிமுறையை  மீண்டும் ஒரு வாரத்திற்குப் பின்  முயற்சிக்கும் தவறைச் செய்தாள். இம்முறை பேருந்திலோ, பள்ளியிலோ யாருக்குமே அவள் மீது சந்தேகம் எழவில்லை. ஆனால் அம்மாவுக்கு மட்டும் ஏற்பட்டது

அப்பா பிளிட்ஸீயைத் திரும்பக் கொண்டு வந்து வீட்டில் விட்டாரா என்று தெரியவில்லை. அவர் அந்த ஊர்தி மனைக்குள்ளோ, அதன் வாசலிலோ, ஏன்  அந்தத் தெருவிலோ கூட நிற்பதை என்னால் கற்பனை செய்ய முடியவில்லை. ஒரு வேளை நகரிலிருக்கும் அந்த வீட்டிற்குச் சென்று நீல் அவளை எடுத்து வந்திருக்கலாம். அதுவும் கற்பனை செய்ய எளிதாக இருந்தது என்று  சொல்ல முடியாது.

இப்படியெல்லாம் நான் சொல்வதன் மூலம் கேரோ மகிழ்ச்சியாக இல்லை அல்லது  எப்போதும் எதையோ திட்டமிட்டுக் கொண்டிருக்கிறாள் என்பதாகத் தோற்றமளித்தால் அது உண்மையல்ல. முன்பே நான் கூறியது போல இரவில் படுக்கையில் இருக்கையில் என்னை அதிகமாக உரையாட வைக்க முயற்சி செய்கிறாள் என்பது உண்மைதான், ஆனால் எப்போதும் குறைகளை மட்டுமே  சொல்லிக் கொண்டிருப்பதில்லை. மன வாட்டத்துடன் சிணுங்கிக் கொண்டிருப்பது அவள் இயல்பிலேயே இல்லை. நல்ல பெயரெடுப்பதில் மிக முனைப்புடன் இருந்தாள். மற்றவர்களுக்கு அவளைப் பிடிப்பது அவளுக்கு விருப்பமானது; தான் இருக்கும் இடத்தை  உற்சாகத்தால் நிரப்பி அதை ஆரவாரமான கொண்டாட்டம் நிறைந்த  சூழலாக மாற்றுவது அவளுக்குப் பிடிக்கும். என்னை விட அவளே அதைப் பற்றி அதிகம் சிந்தித்தாள்

 கேரோதான்  அம்மாவின் குணங்களை அதிகமாகக் கொண்டிருந்தாள்  என்று  இப்போது தோன்றுகிறது.

அவள் நாயை வைத்து என்ன விளையாடினாள்  என்பதைப் பற்றிச் சில விசாரணைகள் நடந்தன. எனக்குக் கொஞ்சம் நினைவிருக்கிறது.

அதை ஒரு  விளையாட்டுக்காகச் செய்தேன்.’

நீ உன் அப்பாவுடன் போய் இருக்க விரும்புகிறாயா

அந்தக் கேள்வி கேட்கப்பட்டது என நம்புகிறேன். அவள் இல்லை என்றும் சொன்னதாகத் தெரிகிறது.

நான் எதுவும் கேட்கவில்லை. அவள் செய்தது எதுவும் எனக்கு விநோதரமாகப் படவில்லை. ஒரு வேளை இளைய குழந்தைகள் நிலை அப்படித்தான் இருக்குமோ’ –விசித்திரமான, மன வலிமை கொண்ட மூத்த குழந்தைகள் செய்வது எதுவும் அசாதாரணமாகத் தெரியாது.

எங்கள் வீட்டுக்குரிய தபால்கள் சாலையின் முனையிலுள்ள அஞ்சல் பெட்டிகளில் போடப்படும். கடும் காற்று வீசும் நாட்கள் தவிர தினமும் நானும் அம்மாவும் நடந்து சென்று ஏதாவது தபால் உள்ளதா என்று பார்த்து வருவோம். என் மதிய உறக்கத்திற்குப் பின் செல்வோம். சிலசமயங்களில் அது ஒன்றுதான் நாங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் நேரமாக இருக்கும்.காலையில் நான் ஏதாவது தொலைக் காட்சி நிகழ்வுகளைப் பார்த்துக் கொண்டிருப்பேன்அவர் ஏதாவது வாசித்துக் கொண்டிருப்பார் ( வாசிப்பை விட்டு அதிக நாட்கள் விலகி இருக்கவில்ல அவர்)மதிய உணவுக்காக டப்பாவில் பதப்படுத்தியிருந்த சூப்பை சூடு செய்து அருந்தி விட்டு நான் கீழே உறங்கச் சென்று விட்டேன்.அவர் மேலும் அருந்திக் கொண்டிருந்தார். வயிற்றில் குழந்தையுடன் அவர் உருவம் பார்க்கப் பெரிதாக இருந்தது. குழந்தையும் இப்போது அசையத் துவங்கி விட்டதால் என்னாலும் அதைத் தொட்டுணர முடிந்தது.அதன் பெயர் கூட முடிவாகி விட்ட து. ’பிராண்டி’-ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அதே பெயர் தான்.

ஒரு நாள் கடிதங்களை எடுக்க நானும் அம்மாவும் சென்று கொண்டிருந்தோம். அஞ்சல் பெட்டிக்கு மிக அருகில்  நெருங்கிய போது, அம்மா அசையாமல் நின்று விட்டார்.

அமைதியாக இரு’ 

நான் அமைதியாக நின்றேன். எனது காலணிகளால் பனியைக் கிளறி விளையாடவும் இல்லை.

நான் அமைதியாக இருக்கிறேன்’  என்று சொன்னேன்.

உஷ்ஷ் ,திரும்பு

ஆனால் நாம் தபால்களை இன்னும் எடுக்கவில்லையே

பரவாயில்லைஅப்படியே நட

அப்போதுதான் கவனித்தேன். எப்போதும் உடன் வரும்  அல்லது எங்கள் முன்னாலேயோ, பின்னாலேயோ வந்து கொண்டிருக்கும் பிளீட்ஸீயைக் காணவில்லை. சாலையின் எதிர்த் திசையில் அஞ்சல் பெட்டிக்குச் சில அடிகள் தொலைவில்  வேறு ஒரு நாய் நின்று கொண்டிருந்தது.

வீட்டிற்குள் நுழைந்ததும்  அம்மா எங்களுக்காகக் காத்திருந்த பிளிட்ஸீயை உள்ளே வர அனுமதித்து விட்டு உடனே நாடக அரங்கைத் தொலைபேசியில் அழைத்தார்யாரும் எடுக்கவில்லை.பள்ளியில் யாரையோ  அழைத்து , கேரோவை வீட்டின் முன் இறக்கி விட வேண்டுமென்று பேருந்து ஓட்டுநரிடம் சொல்லச் சொன்னார்நீல் பனியை வாரி  ஒதுக்கி வைக்கவில்லையென்பதால் ஓட்டுநரால் அப்படிச் செய்ய முடியவில்லை. கேரோ வீடு வந்து பத்திரமாகச் சேரும் வரை பார்த்திருந்து விட்டுத்தான் பேருந்தை நகர்த்தினார்,அப்போது அங்கு எந்த ஓநாயும் கண்ணில் தென்படவில்லை

அப்படி ஒன்று அங்கு இல்லவே இல்லை என்பது நீலின் கருத்து. அப்படியே இருந்தாலும் அது பனிக்கால உறக்கத்திலிருந்து வந்திருக்கும் .அதனால் பலவீனமாக இருக்கும்.நமக்கு ஆபத்து ஏதுமில்லை.’

ஓநாய்கள் பனிக்காலத்தில் உறங்குவதில்லை என்று கேரோ சொன்னாள். ‘அவற்றைப் பற்றிப் பள்ளியில் படித்தோம்

நீல் துப்பாக்கி வாங்க வேண்டுமென்று அம்மா  விருப்பப் பட்டார்,

நீ என்ன நினைக்கிறாய், நான் ஒரு துப்பாக்கியை வாங்கி, பாவம் அந்தத் தாய் ஓநாயைக் கொல்ல வேண்டுமென்று நினைக்கிறாயா? நீ எப்படி உன் குழந்தைகளைப் பாதுகாக்கிறாயோ அதே போல்தான் அதற்கும் காட்டில் சில  குட்டிகள் இருக்கலாமோ என்னவோ , அது அவற்றைப் பாதுகாக்க நினைக்கலாம் அல்லவா?அமைதியான குரலில் சொன்னான் நீல்.

இரண்டு மட்டும். இரண்டு குட்டிகள்தான் ஒரு முறைமீண்டும் இடைமறித்தாள் கேரோ.

சரி, சரி, நான் உன் அம்மாவுடன் பேசிக் கொண்டிருக்கிறேன்

உனக்குத் தெரியுமா என்ன? அதற்குப் பசியுடன் காத்திருக்கும் குட்டிகள் இருப்பது பற்றியெல்லாம் உனக்கு ஒன்றும் தெரியாது

அவனிடம் அம்மா இப்படியெல்லாம் பேசக் கூடுமென்று நான் நினைத்ததில்லை.

அமைதி, அமைதி..நிதானமாக இரு..கொஞ்சம் யோசித்துப் பார், துப்பாக்கிகள் மிகவும் பயங்கரமானவை.நான் போய் அதை வாங்கியிருந்தால்  என்ன சொல்லியிருப்பேன்? வியட்நாமின் நிலை சரியாகி விட்டதென்றா? நானே வியட்நாமுக்குப் போய் விடலாம் என்றிருக்கிறேன் என்றா?’

நீ அமெரிக்கனே இல்லை

நீ எனக்கு எரிச்சல் மூட்டாதே

இப்படித்தான் அவர்கள் பேசிக்கொண்டார்கள். நீல் துப்பாக்கி வாங்கப் போகவில்லை என்பதோடு விஷயம் முடிந்து விட்டது. அன்று வந்தது  ஓநாய்தான் என்று வைத்துக் கொண்டாலும் அதை நாங்கள் மீண்டும் பார்க்கவேயில்லை.அதன் பின் அம்மா தபால்களை எடுக்கச்  செல்வதை நிறுத்தி விட்டாள் என்று நினைக்கிறேன் . உடம்பும்  மிகவும் பருமன் ஆகி விட்டதால் நடப்பதும் சிரமமாக இருந்திருக்கலாம்

மாய வித்தை போலப் பனிப் பொழிவும் படிப் படியாகக் குறைந்து விட்டது.மரங்கள் இன்னும் இலைகளற்று வெறுமையாக வே இருந்தன. காலையில் கேரோ பள்ளிக்குக் கிளம்புகையில்  அம்மா அவளுக்கு வெம்மை ஆடை அணிவித்து விடுவார், ஆனால் மாலையில் அதைத் தன் பின்னால் இழுத்துக் கொண்டு வருவாள் .

இரட்டைக் குழந்தைகளாக இருக்கலாம் என்று அம்மா சொன்னாள்ஆனால் அப்படி இல்லையென்று மருத்துவர் சொல்லி விட்டார்

அருமை,அருமை..எல்லோருக்குமே இரட்டைக் குழந்தைகள் தான் வேண்டும். ‘மருத்துவர்களுக்கு என்ன தெரியும்?’ என்று  நீல் சொன்னான்.

 பள்ளம் இப்போது  உருகிய பனியாலும், மழையாலும் அதன் விளிம்பு வரை நிரம்பியிருந்தது. . கேரோவுக்கு அதன் ஓரமாகச் சுற்றி  நடந்து சென்று பள்ளிப் பேருந்தைப் பிடிக்க வேண்டியிருந்தது. தெளிவான வானத்திற்குக் கீழே அந்தச் சிறிய ஏரியின் நீர் சலனங்களின்றிப் பள பளத்துக் கொண்டிருந்தது. அனுமதி கிட்டும் என்னும் நம்பிக்கையின்றியே,அதில் நாங்கள் விளையாடலாமா என்று ஒரு முறை கேரோ கேட்டாள்.

பைத்தியம் போலப் பேசாதே, அது இருபது அடி ஆழம் இருக்கும் என்றாள் அம்மா.  

பத்தடி இருக்கலாம்,’ என்றான் நீல் 

ஓரங்களில் அவ்வளவு இருக்கலாம் என்றாள் கேரோ 

ஆமாம், உள்ளே செல்லச் செல்லக் குறையும். கடற்கரைக்குப் போய் விளையாடுவது போல அல்ல  இது, தயவு செய்து அங்கே போய்த் தொலையாதீர்கள். அதிலிருந்து தூரவே இருங்கள்

அம்மா இப்போதெல்லாம் அதிகமான வசைச் சொற்களை உபயோக்கிகிறாள். நீலை விடவும் அதிக முறை,. அதுவும் மிகவும் கடுகடுப்பான தொனியில் ..

நாம் நாயைக் கூட தூரத் தள்ளி வைக்க வேண்டுமா?’ கேரோ கேட்டாள்

அது பிரச்சனையில்லை, நாய்களால் நீந்த முடியும்என்றான் நீல்.

சனிக்கிழமை.என்னுடன் அமர்ந்து  Friendly Giant ‘ படம் பார்த்துக் கொண்டிருந்த கேரோ . இடையிடையே கருத்து சொல்லிக் கொண்டு அந்த அனுபவத்தைக் கெடுத்துக் கொண்டு  இருந்தாள். நீல் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு அவனுக்குப் பிடித்த பிரத்யேகமான சிகரெட்டைப் பிடித்துக் கொண்டிருந்தான்.பணியில் இருக்கையில் அதைப் புகைக்க முடியாதென்பதால் வார இறுதியில் அதை ஈடு கட்டி விடுவான். சில சமயங்களில் தானும் அதை முற்சி செய்து பார்க்க வேண்டுமென கேரோ பிடிவாதம் பிடிப்பாள். ஒரு முறை அவள அனுமதித்தவன்  அம்மாவிடம் சொல்லி விட வேண்டாமெனக் கூறினான்.

நானும் அங்கிருந்தேன். அதை உடனே அம்மாவிடம் சொல்லி விட்டேன்

அம்மா  எச்சரிக்கை மட்டும் செய்தாள். ஆனால் பெரிய சச்சரவெல்லாம்  இல்லை,

உனக்குத் தெரியுமா, இந்த விஷயம் மட்டும் அவர் காதுக்கு எட்டினால் உடனடியாகக் குழந்தைகளை இங்கிருந்து அழைத்துக் கொண்டு போய் விடுவார்

இனிமேல் செய்ய மாட்டேன்அம்மாவின் சொல்லுக்கு உடன் பட்டவன், ‘அங்கு அவர் தரும் நஞ்சு போன்ற பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவைப் பற்றி என்ன சொல்வதாம் என்றவாறே நகர்ந்தான்

ஆரம்ப நாட்களில் நாங்கள் அப்பாவைப் பார்க்கவேயில்லை. கிறிஸ்துமஸுக்குப் பிறகு சனிக்கிழமை மட்டும் ஒப்பந்தமானது. நாங்கள் திரும்பி வந்த தும், ‘ மகிழ்ச்சியாக நேரம் போக்கினீர்களா ?’ என்று தவறாமல் கேட்பார் அம்மா. ஆமாம் என்றுதான் எப்போதும் சொல்வேன். ஒரு சினிமாவுக்கு செல்வதும், ஹுரான் ஏரிக் கரையில் விளையாடுவதும், அதன் பின் நல்ல உணவகத்தில் உணவு உண்பதும் தானே மகிழ்ச்சியாக நேரம் போக்குதல் என்று நினைத்துக் கொள்வேன். கேரோவும் ஆமாம் என்றுதான் சொல்வாள். ஆனால் அதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய அக்கறை உங்களுக்கு இல்லை என்னும் தொனியில் சொல்வாள். அதன் பின் குளிர்கால விடுமுறைக்காக அப்பா கியூபா சென்றார் ( அதற்குக் கொஞ்சம்  வியப்பாகவும், தான் அனுமதித்தது போலவும் அம்மா காட்டிக் கொண்டாள்) அங்கிருந்து வந்தவர் தொடர் காய்ச்சலில் இருந்ததால் நாங்கள் செல்வதும் குறைந்து போனது.வசந்த காலத்தில் மீண்டும் தொடர்ந்திருக்க  வேண்டியது ஆனால் ஏனோ அன்றுவரை நிகழவில்லை.

தொலைக்காட்சியை நிறுத்திய பின் , அம்மா சொன்னது போல நானும் கேரோவும் ஓடியாடவும் தூய்மையான காற்றை சுவாசிக்கவும்  வெளியே அனுப்பப் பட்டோம். நாயையும் உடன் அழைத்துச் சென்றோம்.

வெளியே சென்றதும் முதல் வேலையாக , அம்மா எங்கள் கழுத்தைச் சுற்றிக் கட்டியிருந்த சிறிய சால்வையைத் தளர்த்தினோம். ( இரண்டு விஷயங்களை இணைத்து முடிச்சுப் போடாவிட்டாலும், உண்மை என்னவென்றால் கர்ப்ப காலம் வளர வளர  அம்மா ஒரு சாதாரணத் தாயைப் போன்ற மனநிலைக்குள் திரும்பிக் கொண்டிருந்தாள். இது போன்ற தேவையற்ற சால்வையைச் சுற்றி விடுவது மற்றும் வேளைக்கு உணவு  தருவதும் அவை.)  என்ன செய்யலாம் என்று கேரோ கேட்ட போது எனக்குத் தெரியவில்லை என்று சொன்னேன்.அவளுக்கு அது ஒரு சம்பிரதாயக் கேள்வி, ஆனால் எனது பதில் நேர்மையானது. நாயை எங்கள் முன்னே நடக்க விட்டோம். சரளைப் படுகையில் நடந்து பள்ளத்தின் அருகே சென்று அதைப் பார்ப்பதுதான்  பிளிட்ஸீயின் குறிக்கோளாக இருந்தது. வீசும் காற்று  நீரைச் சுழற்றி அதில் சிறிய அலைகளை உருவாக்கியது. விரைவில் எங்களுக்குக் குளிர் அடித்ததால் சால்வையைக்  கழுத்தைச் சுற்றி இறுகக் கட்டிக் கொண்டோம்

வீட்டிலிருந்து கண்ணில் படாத தொலைவிலிருக்கிறோம் என்று தெரிந்தும் கூட, எவ்வளவு நேரம் தண்ணீரின் விளிம்பைச் சுற்றி நடந்து கொண்டிருந்தோம் என அறியவில்லை. சற்று நேரம் கழித்து சட்டென யாரோ எனக்கு உத்தரவுகள் பிறப்பிப்பது போல உணர்ந்தேன்

வீட்டிற்குச் சென்று அம்மாவிடமும் நீலிடமும் நான் ஏதோ சொல்ல வேண்டும்

நாய் தண்ணீரில் விழுந்து விட் டது

நாய் தண்ணீரில் விழுந்து விட்டதாகவும் அது மூழ்கி விடுமென்று கேரோ பயந்து விட்டதாகவும்  கூற வேண்டும்

பிளிட்ஸீ.மூழ்கி விட்டது.

மூழ்கி விட்டது

ஆனால் பிளிட்ஸீ தண்ணீரில் இல்லை

அவள் தண்ணீரில் தான் இருந்திருக்க வேண்டும். அவளைக் காப்பாற்ற கேரோ தண்ணீரில் குதித்திருக்கக் கூடும் 

அவள் தான்,! நீ இல்லை, அப்படி நடந்திருக்கக் கூடும்.. ஆனால் அப்படி இல்லை  ..என்பது போன்ற பல சாத்தியங்கள் பற்ரிய குழப்பமான வாதங்கள்  மனதில் எழுந்ததையும் நன்றாக உணர்கிறேன். அதே வேளை நாய்கள் நீரில் மூழ்குவதில்லை என்று சொன்னதையும் நினைவு கூர்கிறேன்

 எனக்கு என்ன சொல்லப்பட்டதோ அது போல் நடந்து கொள்ளும்படி கேரோ கட்டளையிடுகிறாள்.

ஏன்?

அப்படிக் கேட்டிருக்கக் கூடும் அல்லது கீழ்ப் படியாமல் வேறு ஏதாவது வாக்குவாதத்தை மனதில் திட்டமிட்டுக் கொண்டு அங்கேயே நின்றிருக்க வேண்டும்

பிளிட்ஸீ  அவள் மேல்சட்டையைப் பிடித்துக் கொண்டு தொங்க முயற்சி செய்த போதும் கேரோ விடாமல் அதை எடுத்து சுழற்றி வீசுவதை என் மனதுள் காண முடிகிறது.அதற்குப் பிறகு சற்றுப் பின் நகர்கிறாள்நீரை நோக்கி ஓட்டமெடுக்கப் பின்னோக்கி நகர்கிறாள் கேரோ. ஓடுகிறாள், குதிக்கிறாள்..சட்டென்று நீருக்குள் தன்னை எறிந்து கொள்கிறாள். ஆனால் ஏதாவது வீழ்கையில்  அதன் மேற்பரப்பில் எழும்பித் தெறிக்கும் நீர்ச்சிதறலின்  ஓசை எழ வேண்டும். அதுவும் ஒன்றன் பின் ஒன்றாக விழுகையில்  …ஒரு சிறிய உருவம் மற்றும் ஒரு பெரியது விழுகையில்..அப்படி எந்த ஓசையும் என் நினைவுக்கு வரவில்லை. ஒருவேளை அதற்குள் நான் வீடு திரும்பி விட்டேனோ என்னவோ? –அப்படித்தான் செய்திருப்பேன்

கனவில் இவற்றைக் காணும் போதெல்லாம் நான் ஓடுகிறேன். ஆனால் என் கனவுகளில் நான் வீட்டை நோக்கி ஓடவில்லை.மாறாகமீண்டும் பள்ளத்தை நோக்கி ஓடுகிறேன். அங்கே பிளிட்ஸீ தத்தளித்துக் கொண்டிருக்கக் காப்பாற்றும் பொருட்டு கேரோ அவளை நோக்கி நீந்திச் செல்கிறாள். மிக்க ஆற்றலுடன் நீந்துகிறாள்.அவள் அணிந்திருக்கும் பழுப்பு வண்ணக் கட்டம் போட்ட மேற்சட்டையையும், கம்பளி நூலால் ஆன கழுத்து சால்வையையும் ,பெருமிதமும் வெற்றிக் களிப்பும்  பொங்கும் அவள் முகத்தையும், அவள் செந்நிறக் கூந்தலின் நுனிக் கற்றை நீர் பட்டதால் சற்று அடர்நிறமாக மாறி இருப்பதையும் நான் தெளிவாகக் காண்கிறேன். நான் செய்யக் கூடியதெல்லாம் அவளைப் பார்த்துக் கொண்டு ஆனந்தமாக இருக்க வேண்டியதுதான்.. –என்னிடம் வேறு எதுவும் எதிர்பார்க்கப் படவில்லை தானே?

ஆனால் நான்  உண்மையாக செய்தது என்னவென்றால் திரும்பி சற்றே மேட்டுப் பகுதியிலிருக்கும் ஊர்தி மனைக்குச் செல்லும் வழியில் நடந்து சென்றதுதான். வீட்டை அடைந்ததும் வெளிப்புறமாகவே அமர்ந்து விட்டேன். அங்கு ஒரு முற்றமோ, பெஞ்ச்சோ இருப்பது போல அமர்ந்திருந்தேன்.அவை இரண்டுமே அங்கு இல்லை .அப்படியே அமர்ந்து அடுத்த நடக்கவிருக்கும் நிகழ்வுக்காகக் காத்திருந்தேன்.

இது எனக்குத் தெரியும் ஏனென்றால் அப்படித்தான் நடந்தது. இருப்பினும் என் மனதில் என்ன ஓடியது, எனது அடுத்த திட்டம் என்ன என எனக்குப் புரியவில்லை.ஒரு வேளை  நான் காத்திருந்தேனோ என்னவோ,? கேரோ நடத்திய  நாடகத்தின் அடுத்த பாகத்திற்கு..அல்லது நாயினுடையதற்கு

அங்கு ஐந்து நிமிடங்கள் அமர்ந்திருந்திருந்தேனா என்று தெரியவில்லை.அதை விட அதிகம் ? அல்லது குறைவு? அவ்வளவாகக் குளிரும் இல்லை

ஒரு முறை மனநல ஆலோசகரிடம் சென்றிருந்த போது என்ன நடந்திருக்குமென்று அவரே அனுமானித்தார்..என்னையும் நம்ப வைத்தார். வீட்டின் கதவைத் திறப்பதற்கு நான் முயற்சி செய்திருக்க வேண்டும் .ஆனால் அது தாளிடப் பட்டிருக்கக் கூடும். ஏனென்றால் அம்மாவும் நீலும் எவ்வித இடையூறும் இல்லாமல் பாலுறவில் ஈடுபட்டிருந்திருக்கலாம். நான் கதவைத் தட்டியிருந்தால் அவர்கள் எரிச்சலடைந்திருக்கக்  கூடும். இப்படி ஒரு தீர்வை நோக்கி என்னை இட்டுச் சென்றதற்காக  மன நல ஆலோசகர் திருப்தியடைந்தார்நானும் திருப்தியடைந்தேன் ..கொஞ்ச காலத்திற்கு..ஆனால் அதுதான் உண்மையென்று அதிக நாட்கள் நம்பவில்லை. அவர்கள் உள்ளே பூட்டிக் கொண்டிருப்பார்கள் என்று நான் நம்பவில்லை. ஒரு முறை அவர்கள் உள்ளே இருந்த போது கேரோ மட மடவென  நுழைந்து விட, அவள் முகம் போன போக்கைப் பார்த்து அவர்கள் சிரித்தது எனக்குத் தெரியும்.  

நாய்கள் நீரில் மூழ்குவதில்லை என்று நீல் சொன்னது எனக்கு நினைவு வந்திருக்கிறது, அதன் பொருள் என்னவென்றால் கேரோவுக்கு பிளிட்ஸீயைக் காப்பாற்றத் தேவையில்லை .அவளாலேயே அவள் திட்டத்தை செயல்படுத்த முடியாது. ஓஓ, கேரோவின் எத்தனை திட்டங்கள்..

அவளால்  நீந்த முடியுமென்று நான் நினைத்தேனா? ஒன்பது வயதில் பல குழந்தைகளால் நீந்த முடியும்..சொல்லப் போனால் அந்தக் கோடைக்கு முன்பு ஒரு வகுப்புக்குக் கூடச் சென்றிருக்கிறாள். அதன் பின் அங்கிருந்து கிளம்பி  புதிய வீட்டுக்கு வந்து குடியேறிய பின் அவள் செல்லவில்லை. தன்னால் சமாளிக்க முடியுமென்று அவள் நினைத்திருக்கலாம். அவளுக்கு என்ன விருப்பமோ அதைச் செய்யட்டும் என நானும் நினைத்திருக்கலாம்

கேரோயின் கட்டளைகளை நிறைவேற்றுவதில் நான் சலிப்படைந்திருக்கலாம் என்று ஆலோசகர் குறிப்பிடவில்லை. ஆனால் எனக்கு அப்படி ஒரு எண்ணம் தோன்றியது. அது சரியல்ல ,ஒரு வேளை நான் மூத்தவளாக இருந்திருந்தால் அது சரி..ஆனால் அந்த வயதில் என் உலகத்தை அவள் நிரப்ப வேண்டுமென்றுதான் நான் எதிர்பார்த்தேன்.

எத்தனை நேரம் வெளியே அமர்ந்திருந்தேன்?நீண்ட நேரம் இல்லை போல..சற்று நேரம் கழித்து..ஒன்றோ அல்லது இரண்டோ நிமிடங்கள் கழித்து நான் கதவைத் தட்டியிருக்கும் சாத்தியங்களும் உண்டு.எப்படியோ, அம்மா தானாகக் கதவைத் திறந்தாள்..காரணமே இல்லாமல்..வரும் முன் உணர்தல்!

அடுத்த நொடி நான் உள்ளே இருந்தேன். அம்மா நீலிடம் ஏதோ கத்திப் பேசி அவனுக்கு ஏதோ புரிய வைக்க முயன்றாள். அவன் எழுந்து நின்று, அத்தனை அன்பாக, அத்தனை ஆதுரமாக, அத்தனை ஆறுதலாக அவரைத் தொட்டு பேசினான். ஆனால் அம்மாவின் தேவை அதுவல்ல..நீலிடமிருந்து தன்னைப் பிய்த்தெடுத்துக் கொண்டு கதவருகே ஓடினாள்.அவன் தலையை உதறிக் கொண்டே தன்னுடைய காலணி அணியாத வெற்றுக் கால்களைப் பார்த்தான். அவனுடைய பெரிய, உதவாக்கரைக் கால் விரல்கள்.  

ஏதோ ஒரு ராகமான குரலில்  தன்னுடைய துக்கத்தை வெளிப்படுத்தினான். வினோதம்!

அம்மா நீரில் குதிக்கவில்லை.அதிர்ச்சியில் பிரசவ வலியும் ஏற்படவில்லை.இறுதிச் சடங்குக்குப் பின் பத்து நாட்கள் வரை, என் தம்பிபிரெண்ட்’  பிறக்கவில்லை. பேறுகாலம் முழுவதையும் நிறைவு செய்து நன்கு உருவான சிசுவாகத்தான் பிறந்தான்.அவன் பிறக்கும் வரை அவர் எங்கே இருந்தார் என எனக்குத் தெரியவில்லை.ஒரு வேளை மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு அந்தச் சூழலில் இயன்றவரை  மயக்க நிலையிலேயே வைத்திருக்கக் கூடும்.

இறுதிச் சடங்கின் தினம் எனக்கு நன்கு நினைவிருக்கிறது.மிக சாந்தமான, இனிய ,அறிமுகமாகாத பெண்மணி ஒருவர் என்னை ஊரைச்  சுற்றிப் பார்க்க அழைத்துச் சென்றார்.அவர் பெயர் ஜோஸி. ஊஞ்சலாட்டமும், நானே நுழையக் கூடிய  அளவு பெரியதாக இருந்த பொம்மை வீட்டையும் காட்டிய பின் எனக்குப் பிடித்த உணவு வகைகளை உண்ணவும் வைத்தார். ஜோஸி யாரென்பதை பின்னொரு நாலில் நன்றாக அறிந்து கொண்டேன். அவர் கியூபாவில் என் தந்தையுடன் நட்பானவர். அவருடைய விவாகரத்துக்குப் பின் எனது சிற்றன்னையாக, அப்பாவின் இரண்டாவது மனைவியானார்

அம்மாவின் உடல்நிலை தேறியது. தேறியே ஆக வேண்டிய கட்டாயம். பிரெண்ட்டையும், பெரும்பாலான நேரங்களில் என்னையும் கவனித்துக் கொண்டார். அவர் தனது எதிர்கால வாழ்வை அங்கு கழிக்கும் திட்டத்துடன்  ஒரு வீட்டைத்  தயார் செய்து கொண்டிருந்த போது நான் அப்பாவுடனும் ஜோஸியுடனும் தான் இருந்தேன்..பிரெண்ட் தன்னுடைய உயரமான குழந்தை இருக்கையில் அமரும் அளவுக்கு வளரும் வரை நான் அங்கு செல்லவில்லை எனத் தோன்றுகிறது

அம்மா மீண்டும் நாடக அரங்கத்தின் பணியில் அமர்ந்தார்துவக்கத்தில் பழைய தன்னார்வலர் பணியில் இருந்தாலும் பின்னர் அவருக்கு நல்ல வேலையும் சம்பளமும்,உடன் பல பொறுப்புகளும் வந்தன. அவர்தான் வணிக மேலாளர்.பல ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் நாடக அரங்கு இயங்கியது. இப்போதும் இருக்கிறது.

இறுதிச் சடங்குகளில் நம்பிக்கையற்றவன் நீல். அதனால் கேரோவின் அந்திம யாத்திரையில் பங்கேற்கவில்லை அவன் பிரெண்ட் டைப் பார்க்கவேயில்லை.இது எனக்கு நெடு நாட்கள் கழித்தே தெரிந்தது. தனக்குத் தந்தை என்னும் ஸ்தானத்தில் இருக்க விருப்பமில்லையென்பதால் , வேறொரு இடத்தில் வாழ்க்கையைத் துவங்குவதே நலம் எனச் சொல்லிக்  கிளம்பி விட்டான் . அவனைப் பற்றி  பிரெண்ட்க்கு ஒரு போதும் சொன்னதில்லை .அது அம்மாவிற்கு மிகுந்த மன வருத்தம் அளிக்கும் என நினைத்தேன். மற்றுமொரு விஷயம், அவனிடம் நீல் குறித்த சாயல் எதுவுமே தென்படவில்லை.அதை விட அப்பாவைத்தான் அவன் அதிகம் கொண்டிருந்தான்.உண்மையிலேயே அவனைக் கருவுற்ற காலத்தின் போது என்ன நடந்திருக்கும் என யோசித்தேன். அப்பா இது குறித்து எதுவுமே சொன்னதில்லை, சொல்லவும் மாட்டார், அவர் என்னை எப்படி கவனித்துக் கொண்டாரோ, அதற்கு ஒரு மாற்றுக் குறையாமல் தான்  பிரெண்ட்டிடமும் இருந்தார். ஆனால் உண்மை எதுவாக இருந்த போதும்  அப்படி நடந்து கொள்ளக் கூடிய மனிதர் அவர்.

அவருக்கும் ஜோஸிக்கும் குழந்தைகள் இல்லை, ஆனால் அது அவர்களைப் பாதித்தது என்று எனக்குத் தோன்றவில்லை.ஜோஸி மட்டுமே கேரோ பற்றிப் பேசுவார், அதுவும் அடிக்கடி பேசமாட்டார். அவள் மரணத்துக்கு என்  அம்மாதான் பொறுப்பு என அப்பா நினைக்கவில்லை என்றும் சொல்வார். அப்பாவும், தான் ஒரு சுவாரஸ்யம் இல்லாத,,அமைதியான சுபாவம் கொண்டவராக இருந்ததாகவும்அதே வேளை  அம்மா வாழ்க்கையில் மிகவும் உற்சாகத்தையும் ஆரவாரத்தையும் விரும்புபவளாக இருந்தார் எனவும், கூறினார்.  .அவருக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் தேவைப் பட்டது. அது கிடைத்தும் விட்டது. அதை நினைத்து வருத்தப்படுவதில் பயன் இல்லை . அந்த அதிர்ச்சி கிட்டவில்லை என்றால் அவர் ஜோஸியை சந்தித்திருக்க மாட்டார், இருவருக்கும் இந்த மகிழ்ச்சியான வாழ்வு கிட்டியிருக்காதென்றும் சொல்லிக் கொண்டார்.

எந்த இருவர்?’ வேண்டுமென்றே அவரைத் தடம் புரள வைக்க இந்தக் கேள்வியை நான் கேட்கும் போது , ஜோஸி, ஜோஸிதான் என்று உறுதியாகச் சொல்வார்.

அம்மாவை அந்த நாட்களைப் பற்றி நினைவு கூர வைக்க முடியாது, நானும் அது குறித்து அதிகம் கவனம் கொள்வதில்லை. நாங்கள் வசித்து வந்த சாலையின் வழியாக  காரை ஓட்டிச் சென்று , இப்போது அந்தத் தரிசு நிலத்தில் புதிய ரக வீடுகள் பகட்டப்பட்டு இடமே மாறிப் போயிருந்ததைப் பார்த்திருந்தார் என எனக்குத் தெரியும். சற்றே வெறுப்பான குரலில் இது போன்ற வீடுகள் அவர் மனதைக் கிளறுவதாகக் கூறினார். நானே அந்த சந்திற்கு ஒரு முறை போய் வந்தேன். ஆனால் யாரிடமும் சொல்லவில்லை. இது போலக் குடும்பங்களை அகற்றுதல்  அனைத்துமே இப்போது தவறானதாகப் படுகிறது 

நாங்கள் வசித்து வந்த சரளைக் கல் படுகையும் சமதளமாக்கப் பட்டு அங்கே ஒரு வீடு எழுந்து நிற்கிறது.

எனக்கு இப்போது ஒரு இணை உள்ளது. அவள் பெயர் ருதன். என்னை விட வயதில் இளையவளாக இருந்த போதும் எனைக் காட்டிலும்  விவேகமானவள். அல்லது என் மனதில் உள்ள சாத்தான்களை விரட்டியடிப்பது குறித்து தளரா நம்பிக்கை கொண்டவள். அவளுடைய தூண்டுதல் இல்லையெனில் நான் நீலுடன் தொடர்பு கொள்வதென்பது சாத்தியமாகி இராது. நீண்ட காலமாக அதைப் பற்றிய நினைப்பே இல்லாததால், தொடர்பு கொள்ள வழியேதும் இல்லாமல் இருந்தது. இறுதியில் அவன் தான் எனக்குக் கடிதமெழுதினான். முன்னாள் மாணவர் இதழில் எனது புகைப்படத்தைப் பார்த்த பின்பு சிறிய வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தான்.நான் ஒரு கல்வி சார் விருதால் கௌரவிக்கப் பட்டிருந்தேன்எங்கள் சரகத்திற்குள் மட்டுமே அறியப்பட்ட அந்தச் செய்தி பதிக்கப்பட்டிருந்த இதழ் நீல் கையில் எப்படிக் கிடைத்தது எனத் தெரியவில்லை

நான் எங்கு ஆசிரியராக இருந்தேனோ அங்கிருந்து ஐம்பது மைல் தொலைவே அவன் இருப்பிடம் இருந்த து. அங்குதான் நான் படித்த கல்லூரியும் இருந்தது. அங்கு எப்போதவாது வந்திருப்பானோ என வியப்பாக இருந்தது. ஒரு வேளை படித்துப் பட்டம் பெற்று விட்டானோ?

முதலில் அதற்குப் பதில் எழுதும் எண்ணம் எனக்கு இல்லை. ஆனால் ருதனிடம் சொன்ன போது பதில் அனுப்புவது பற்றி யோசிக்கச் சொன்னாள். அதன் விளைவு, நான் மின்னஞ்சல் அனுப்ப, அதன் பின்  சில ஏற்பாடுகள் செய்யப் பட்டன. நகரில் உள்ள பல்கலை கழகத் தேநீரகத்தின் அமைதியான சூழலில் .அவனை நான் சந்திக்க வேண்டும். காணச் சகியாதவனாக அவன் இருக்கும் பட்சத்தில்இப்படி நான் சொல்வதன் பொருள் என்னவென்று தெரியவில்லைஅப்படியே கடந்து வந்து விட வேண்டியதுதான்.

முன்பிருந்த தை விடக் குள்ளமாக இருப்பதாகத் தெரிந்தான். வளர்ந்த பின் பால்யத்தாலேயே நாம் அறியப் படுவது போல. அவனுடைய கேசம் மெல்லியதாக இருந்தது. அதைக் கழுத்து வரை சீராக வெட்டி இருந்தான்.எனக்கு காஃபி சொல்லி விட்டு , தான் தேநீரை அருந்தினான்.

வாழ்வாதாரத்திற்கு இப்போது என்ன செய்கிறான்

குழந்தைகளைத் தேர்வு எழுதப் பயிற்சி தருவதாகச் சொன்னான். சில சமயங்களில் கட்டுரைகள் எழுத உதவுவதாகவும் சொன்னான். அவ்வப்போது அவனே எழுதித் தருவதாகவும் அதற்கான தொகையைப் பெற்றுக் கொள்வதாகவும் கூறினான்.

அந்த வழியில்  லட்சாதிபதியாக முடியாது, என்று சொல்வேன். ,

அவன் ஒரு குப்பை மேடு போல  இருந்த இடத்தில் வசித்தான்.. அல்லது கொஞ்சம் மதிக்கத்தக்க குப்பை மேடு.அவனுக்குப் பிடித்திருந்தது

எனது கொள்கைகளுக்குப் பொருத்தமாக உள்ளது. ஆடைகளை Sally Ann நிறுவனத்தில் குறைந்த விலைக்குப் பெற்றுக் கொள்வதாகச் சொன்னான்.  

அவை எதற்காகவும் நான் அவனுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கவில்லை.நான் சொல்ல வேண்டுமென்று அவன் எதிர்பார்த்தான் என்பதும் சந்தேகம்தான்.

எப்படியோ, எனது வாழ்க்கை அவ்வளவு சுவாரஸ்யமானதல்ல, எப்படி இதெல்லாம் நடந்தது என்று அறிய உனக்கு விருப்பமாக உள்ளதென்று நினைக்கிறேன்,

எப்படி உரையாடுவதென எனக்குப் புரியவில்லை

நான் கல்லடி பட்டேன், மேலும் எனக்கு நீச்சலும் தெரியாது.நான் வளர்ந்த இடத்தில் நீச்சல் குளங்கள் இல்லை.நான் மூழ்கியிருக்க க் கூடும். இதுவெல்லாம் அறிந்து கொள்ளவா விரும்புகிறாய்? ’

உண்மையில் நான் நினைத்துக் கொண்டிருப்பது  அவனைப் பற்றி அல்ல  எனச் சொன்னேன்.

அதன் பின் நான் அந்தக் கேள்வியை கேட்ட  மூன்றாவது நபர் அவன்,’கேரோவின் மனதில் என்ன இருந்ததென நினைக்கிறாய்?’

நம்மால் அறிய முடியாதென மனநல ஆலோசகர் சொல்லி விட்டார். ‘அவளுக்கே தனக்கு என்ன தேவை என்று தெரியவில்லை? கவன ஈர்ப்பு? அதற்காக அவள் தன்னை மூழ்கடித்துக் கொள்ள நினைத்திருக்கவே மாட்டாள்அவள் எவ்வளவு மோசமாக உணர்கிறாள்  என்பதைப் பற்றிய கவன ஈர்ப்பு தேவையாக இருந்ததா? ’

ருதன் சொன்னாள்,’அவள்  நினைத்ததை அம்மா செய்ய வேண்டும் என நிர்ப்பந்திக்கவா?’தன்னுடைய புத்திசாலித் தனத்தால் உன்னுடைய அப்பாவிடமே அவள் திரும்பிச் செல்ல வேண்டுமென்பதற்கா?’

நீல் கூறினான், அதுவெல்லாம் விஷயமில்லை, ஒரு வேளை அவளுக்குத் தன்னால் நன்றாக நீந்த முடியும் என நம்பிக்கை இருந்திருக்கலாம், அவளுடைய குளிர்கால ஆடைகள் அத்தனை கனமாக இருக்கும் என அவளுக்குத் தெரியாமல் போயிருந்திருக்கலாம்.அல்லது அவளுக்கு உதவக் கூடிய நிலையில் யாருமில்லாமல் இருந்திருக்கலாம். ‘இதை எண்ணி உன் நேரத்தை வீணடிக்காதேவேகமாக ஓடி வந்து விவரத்தை சொல்லியிருக்க வேண்டுமென்று இன்னும் நினைத்துக் கொண்டிருக்கிறாயா? அப்படியா? அந்தக் குற்ற உணர்வில் இன்னும் உழல்கிறாயா என்ன

அவன் சொல்லும் கோணத்திலும் நினைத்துப் பார்த்தேன் என்றேன்ஆனால் அப்படி இல்லை .  

மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம். எது நடந்தாலும் பரவாயில்லை, அப்படி இருக்க முயற்சி செய். உன்னால் முடியும்.அதன் பின் அனைத்தும் மெல்ல மெல்ல இலகுவாகி விடும். மகிழ்வாக  இருப்பதற்கும்  நம் சூழ்நிலைக்கும் எந்த விதத் தொடர்புமில்லை. அந்த மனநிலை எவ்வளவு நன்றாக இருக்குமென்று உன்னாலேயே  நம்ப முடியாது. எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்.அதன் பின் துயரங்கள் அனைத்தும் மறைந்து விடும்.அல்லது அதன் பாரம் குறைந்து இலகுவாகி விடும். நீ இங்கு இருக்கிறாய்இந்த உலகத்தோடு இயைந்து எளிதாக வாழப் போகிறாய்.அவ்வளவுதான். என்றான் நீல்.

அவன் எந்த அர்த்தத்தில் சொல்கிறானென்று புரிந்தது. உண்மையிலேயே அதுதான் ஒருவர் செய்யக் கூடிய சரியான செயல். ஆனால் என் மனதில், கேரோ தண்ணீரை நோக்கி ஓடிக் கொண்டே இருக்கிறாள், தன்னை அதில் வீசி எறிந்து கொள்கிறாள். ஏதோவொரு மாபெரும் வெற்றியைப் பெற்று விட்டவள் போல..நான், இன்றும் அந்தக் கணத்தில் சிக்குண்டிருக்கிறேன், காத்திருக்கிறேன்,அவள் வந்து எனக்கு விளக்கம் சொல்வதற்காக..காத்திருக்கிறேன்அந்த நீர்த் தெறிப்பின்  ஓசைக்காக..


*ஊர்திமனை – நான்கு சக்கர கனரக வாகனத்தின் பின்னே இணைக்கப் பட்டிருக்கும் நீண்ட வீடு போன்ற இரும்புக் கலன்.

**பாங்க்கோ – ஷேக்ஸ்பியரின் படைப்பான மெக்பத் நாடகத்தில் வரும் ஒரு கதாபாத்திரம். மெக்பத் தனது பதவி ஆசையால் பாங்க்கோவைக் கொலை செய்து விட அதன் பின் நாடகத்தில் ஆவியாகத் தொடரும் கதாபாத்திரம்.


  • ஆலீஸ் முன்ரோ

தமிழில்: லதா அருணாச்சலம்

 

ஆசிரியர் குறிப்பு:

 

  • லதா அருணாச்சலம்  

கவிதை, கட்டுரை , மொழிபெயர்ப்பில் ஈடுபட்டு வரும் லதா அருணாச்சலம், ஆங்கில முதுகலை, மற்றும் ஆசிரியப் பட்டப் படிப்பை முடித்தவர் .பதினான்கு ஆண்டுகள் நைஜீரியா நாட்டின் லாகோஸ் நகரில் வாழ்ந்தவர் . கடந்த சில வருடங்களாக சென்னையிலும் நைஜீரியாவிலும் மாறி மாறி வாசம் செய்கிறார் .பயணங்களில் மிகுந்த ஆர்வம் மிக்கவர் . இவரது கவிதைத் தொகுப்பு உடலாடும் நதி, மொழிபெயர்ப்பு நாவல் தீக்கொன்றை மலரும் பருவம் இரண்டும் வெளியாகியுள்ளன. மற்றும் பல சிற்றிதழ்களிலும், இணைய இதழ்களிலும் மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் எழுதி வருகிறார் . 2020ம் ஆண்டு தீக்கொன்றை மலரும் பருவம் சிறந்த மொழிபெயர்ப்பு நாவலுக்கான விகடன் விருதை பெற்றது.

 

நன்றி ஓவியம் :etsy.com

Previous articleகேப்ரியேலா மிஸ்ட்ரல் கவிதைகள்
Next articleஷமீலா யூசுப் அலி ஓவியங்கள்
Avatar
கவிதை, கட்டுரை , மொழிபெயர்ப்பில் ஈடுபட்டு வரும் லதா அருணாச்சலம், ஆங்கில முதுகலை, மற்றும் ஆசிரியப் பட்டப் படிப்பை முடித்தவர் .பதினான்கு ஆண்டுகள் நைஜீரியா நாட்டின் லாகோஸ் நகரில் வாழ்ந்தவர் . கடந்த சில வருடங்களாக சென்னையிலும் நைஜீரியாவிலும் மாறி மாறி வாசம் செய்கிறார் .பயணங்களில் மிகுந்த ஆர்வம் மிக்கவர் . இவரது கவிதைத் தொகுப்பு உடலாடும் நதி, மொழிபெயர்ப்பு நாவல் தீக்கொன்றை மலரும் பருவம் இரண்டும் வெளியாகியுள்ளன. மற்றும் பல சிற்றிதழ்களிலும், இணைய இதழ்களிலும் மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் எழுதி வருகிறார் . 2020ம் ஆண்டு தீக்கொன்றை மலரும் பருவம் சிறந்த மொழிபெயர்ப்பு நாவலுக்கான விகடன் விருதை பெற்றது.

1 COMMENT

  1. வெகு அரிதாகத் தமிழாக்கம் செய்யப் பட்டுள்ள உலகப் புகழ் பெற்ற எழுத்தாளருடைய படைப்பு; சிரமமான பணியுங் கூட; வாசகர் தளத்துக்குப் பரீட்சயமான பேச்சு வழக்கு உரையாடல்களுடன், மொழிபெயர்ப்பை வாசிக்கிறோம் என்கிற உணர்வு வாசகர்களுக்கு ஏற்படாத வகையில் சிறப்பாக அமைந்திருக்கிறது தங்கள் தமிழாக்கம். தங்கள் இலக்கியப் பயணம் நெடிது நீள நிறைவான வாழ்த்துகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.