தாஸ்தாயெவ்ஸ்கி: சூரியனின் முகம்படா ஊற்றுகள் -சி. மோகன்

டவுளின் இருப்பு குறித்தும், கடவுளுக்கும் மனிதனுக்குமான உறவு குறித்தும் எழுந்த கேள்விகளுக்கு விடை தேடிச்சென்ற 19-ஆம் நூற்றாண்டின் சிந்தனைவளம் கடவுளின் மரணத்தைக் கண்டறிந்தது. கடவுள் சமாதியானதன் தொடர்ச்சியாக, மனித வாழ்வின் இலக்கு, தர்மங்கள் குறித்து புதிய கேள்விகள், சிந்தனைகள் எழுந்தன.

19-ஆம் நூற்றாண்டின் குழந்தையான தாஸ்தாயெவ்ஸ்கியைப் பெரிதும் வதைத்த பிரச்சனை, கடவுளின் இருப்பு பற்றியதுதான். இப்பிரச்சனையின் கலைவடிவம்தான் ‘கரமசோவ் சகோதரர்கள்.’ இந்நாவல் குறித்து அவர் தன் நண்பருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுவது: “என் வாழ்நாள் முழுவதும் என்னை நனவு நிலையிலும், நனவிலி நிலையிலும் வதைத்துக்கொண்டிருக்கும் அடிப்படைப் பிரச்சனையை இப்புத்தகத்தின் எல்லாப் பகுதிகளிலும் அணுக இருக்கிறேன். கடவுளின் இருப்பு குறித்ததே அது.’’

19ஆம் நூற்றாண்டின் சாரமான தாஸ்தாயெவ்ஸ்கியின் மனம் இப்பிரச்சனையில் வெகுவாக அலைக்கழிந்தது.

“மெய்மை, ஒருவேளை கிறிஸ்துவை நிராகரிக்குமென்றாலும் நான் கிறிஸ்துவின் பக்கமே நிற்பேன்”

என்று தாஸ்தாயெவ்ஸ்கி கூறியிருக்கிறபோதிலும் அவர் மனம் அல்லாடியதென்னவோ மறுக்க முடியாதது. ஏனெனில் அவர் 19-ஆம் நூற்றாண்டின் புதிய காற்றை சுவாசித்தவர். “நான் நம்பிக்கையின்மையின், சந்தேகத்தின் குழந்தை. இதுநாள் வரை நான் அப்படித்தான் இருந்திருக்கிறேன். என் வாழ்நாள் முழுவதும் நான் அப்படித்தான் இருப்பேனென்பதும் எனக்குத் தெரியும்.” தாஸ்தாயெவ்ஸ்கி திரும்பத் திரும்பச் சொல்லிவந்த விசயமிது. இவற்றிலிருந்தெல்லாம் கடவுளின் இருப்பு குறித்த அவர் கேள்வி வேறுவிதமாக அமைந்திருந்ததை அறிய முடிகிறது. அது: ‘கடவுள் வேண்டுமா, வேண்டாமா?’ என்பதுதான். தம் கால மனித மனங்களின், வாழ்நிலைகளின் ஆழமான கிரஹிப்புக்குப் பின் மனித மனமும் வாழ்நிலையும் செழுமையுற, கடவுள் வேண்டும் என்று ஆசைப்பட்டார் தாஸ்தாயெவ்ஸ்கி. கடவுளின் படிமம் உயிர்ப்போடு இல்லாத ஒரு சமூகத்தில் ‘எல்லாமே முறையானதுதான்’ என ஆகும் அபாயத்தை அவர் கண்டார். அவரைப் பொறுத்தவரை இவ்வுலகம், கடவுள் இல்லையெனில், சாத்தான்களின் குடியிருப்பாகிவிடும். எனினும், தாஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புகள் முன்தீர்மானிக்கப்பட்ட கருத்துகளின் கனிகளல்ல; அவர் படைப்புகள் அவரின் கருத்துரைகளல்ல. மாறாக, அவை யதார்த்தங்களின் ஆழங்களில் ஊடுருவிப் பாய்ந்து உயிர்ப்புறுபவை.

மெய்மையும் கருத்துகளும் ஒரு பேரின்பச் சேர்க்கையில் முயங்குவதில் விளைந்த சிருஷ்டிகள் அவை. மேலும், “தர்க்கம் என்பது இரு பக்கமும் கூர் கொண்ட கத்தி போன்றது” (தாஸ்தாயெவ்ஸ்கி நாவல்களில் பல முறை இடம்பெற்றிருக்கும் வாக்கியம்) என்பதில் விகாசம் கொள்வதுதானே அவர் படைப்பு மேதமை. அதனால்தான் ‘கரமசோவ் சகோதரர்கள்’ நாவலில் மனித ஆத்மாவைக் கைப்பற்றக் கடவுளும் சாத்தானும் மனித மனவெளிகளில் கடுமையாக மோதுகிறார்கள். உண்மையில், நிகழ்வது ஒரு பெரும் யுத்தம்தான். இறுதிவரை – சாவு வரை – போராடும் அனல் தெறிக்கும் யுத்தமிது. அதன் வெம்மையில் தகிக்கின்றன இந்நாவலின் பக்கங்கள். இருளும் ஒளியுமான ஊடுபரவலில் ஓவியங்களாகின்றன அதன் எழுத்துகள்.

 

2

‘கரமசோவ் சகோதரர்கள்’ தாஸ்தாயெவ்ஸ்கியின் கடைசி நாவல். நாவல் கலையின் சிகரம். கலைப் படைப்பின் ஆற்றல்கள், கலைஞனின் படைப்பாக்க சாத்தியங்கள் குறித்து பிரமிப்பூட்டும் ஒரு உலகம்.

இந்நாவல் நான்கு பெரும் பகுதிகளும் ஒரு சிறு முடிப்புரையும் கொண்டது. முதல் மூன்று பகுதிகள் மூன்று நாட்களில் நிகழ்கின்றன. ப்யோதர் பாவ்லோவிச் கரமசோவ் கொலையுறுவதற்கும், அவரின் மூத்த மகன் டிமிட்ரி தந்தையைக் கொன்ற குற்றத்திற்காகக் கைதாவதற்கும் களமாக இந்த மூன்று நாட்கள் அமைகின்றன. இக்காரியங்கள் நடப்பதற்குக் காரணமாக, இந்நாட்களில் நிகழ்கிற சம்பவங்களையும் கிளைக்கிற சிந்தனைகளையும் முதல் மூன்று பகுதிகள் மிக விரிவாகச் சொல்கின்றன. நான்காவது இறுதிப் பகுதியில், டிமிட்ரி மீதான வழக்கு விசாரணையும் டிமிட்ரி கொலையாளியென தீர்ப்பு வழங்கப்படுவதும் இடம்பெறுகிறது. கடைசியில் அமையும் சிறு முடிப்புரை, அலோஸ்யா, சிறுவர்களின், வளர்ந்து வரும் புதிய தலைமுறையின் வழிகாட்டியாக அமைவதைக் குறிப்பாகக் கொண்டு முடிகிறது. இவ்விரு பகுதிகள், இரண்டு மாத இடைவெளிக்குப் பின்னான ஐந்து நாட்களைக் களமாகக் கொண்டிருக்கின்றன. காலத்தின் நீட்சியானது குறுக்கப்பட்டு அக்குறுகிய நாட்களுக்குள் வெகு அடர்த்தியான ஒரு உலகம் விஸ்தரிக்கப்படுகிறது. இதன் காரணமாக, சம்பவங்கள், பாத்திரப் படைப்புகளின் எதிர் கொள்ளல்கள் என அனைத்துமே அடர்த்தி மிக்கதாகின்றன. இரவுகள் கூட ‘வெண்ணிற இரவு’களாகின்றன. தந்தை கொலையுறும் மூன்றாம் நாள், அதன் விடியல் வரை நீட்சி பெற்றிருக்கிறது.

இக்கதைச் சுருக்கம் ஒரு ஓவியத்தின் வெளிச்சட்டகம் மட்டுமே, இந்தச் சட்டகத்திற்குள், நம் சிந்தனைகளையும் வாழ்நிலைகளையும் மறுபரிசீலனைக்குள்ளாக்கும் அசாத்தியமான உள்ளுறை உலகமென்று சிருஷ்டிக்கப்படுகிறது. மனித மனக் கிடங்குகளின் ரகஸ்ய அறைகள் திறக்கப்படுகின்றன. அதேசமயம் நம் மனக் குகைகளின் திறவு மந்திரங்களாகவும் அவை அமைகின்றன. மனித ஆத்மாவின் உலகளாவிய வெளிப்பாடு, பல்வேறு முரண்பட்ட குரல்களினூடாக ஒலிக்கிறது. இம்முயற்சியில் தம் காலத்தையே கைவசப்படுத்த எத்தனிக்கிறார் தாஸ்தாயெவ்ஸ்கி. இதன் மூலம், காலம் கடந்த மனிதப் பொதுமையுடையதாகப் படைப்பு விகாசம் கொள்கிறது.

தந்தை கொலையுறுவதுதான் இப்படைப்பு ஓவியத்தின் கதைமுக மையம். முன்புலங்களும் பின்புலங்களும் அதிலிருந்து விரிபவைதாம். பாத்திரப் படைப்புகளும் இக்கதைமுக மையத்தின் முன் பின்னான கோலங்களிலேயே பின்னிப் பிணைந்திருக்கின்றன. தந்தை ப்யோதர் பாவ்லோவிச் கரமசோவ் கொலையுறுவதில் அவரின் நான்கு மகன்களுமே ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். ‘தந்தையின் மரணத்தை விரும்பாதவர் யார்?’ என்பது இவானின் நீதிமன்ற வாக்குமூலக் கூற்று.

டிமிட்ரி, மூத்த மகன். சுகவாசி. பதற்றங்களுடன் அலைபவன். நியதிகளுக்கு அப்பாற்பட்டவன். வாழ்வின் இச்சைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக அல்லாடுபவன். மானுடத்தின் சதைப் பாங்கானவன். இவன் தந்தையிடம் தன் பங்கைப் பிரித்துக் கேட்கும் பகுதியுடன்தான் கதை முகம் தோற்றம் கொள்கிறது. “நான் கரமசோவ் வம்சத்தைச் சேர்ந்தவன். படுபாதாளத்தில் விழவேண்டியிருந்தால் தலைகுப்புற விழுவேன். அதன் அடித்தளம் வரை சென்று பார்த்துவிடுவேன்.” இதுதான் டிமிட்ரி. இந்த டிமிட்ரி கொலை நிகழ்ச்சிக்கு முன்னான டிமிட்ரி. கொலையாளியாகக் கைதாவதிலிருந்து இவன் முகம் மாற்றம் கொள்கிறது.

மூன்றாம் நாள் இரவுக் கூத்தடிப்புகளின்போது, விடியலுக்குச் சற்று முன்பாகக் கைது செய்யப்பட்டு முன்விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் டிமிட்ரி, விசாரணைக்குப் பின், பிற சாட்சிகள் விசாரணைக்குள்ளாகும் சமயத்தில், விசாரணைப் பகுதியின் தடுப்பறையில் அப்படியே அயர்ந்து தூங்கிவிடுகிறான். அவன் தூக்கத்தில் விழிக்கிறது ஒரு கனவு. அந்தக் கனவுதான் இப்படைப்பின் மையக் கரு. கனவுப் பகுதி:

“இரண்டு குதிரைகள் பூட்டிய வண்டியில் டிமிட்ரி, முன்பு அவன் இராணுவ அதிகாரியாக வசித்த பகுதியில், சென்றுகொண்டிருக்கிறான். ஒரு குடியானவன் அந்த வண்டியை ஓட்டிச் செல்கிறான். நவம்பர் மாதத்திய கடும் குளிர். பனி கொட்டுகிறது. தூரத்தில் ஒரு கிராமம் தெரிகிறது. அதன் குடிசைகள் பாதிக்கும் மேலாக எரிந்திருக்கின்றன. வண்டி அக்கிராமத்தை நெருங்கும்போது குடியானவப் பெண்கள் வரிசையாகப் பாதையோரம் நின்றுகொண்டிருக்கிறார்கள். அவர்கள் வற்றி வதங்கிக் காணப்படுகிறார்கள். ஒரு ஓரத்தில் எலும்பும் தோலுமாக நாற்பது வயது மதிக்கக்கூடிய, ஆனால் உண்மையில் இருபது வயதே இருக்கக்கூடிய, வளர்ந்த ஒரு பெண் நிற்கிறாள். அவள் கையில் அழுகிற குழந்தை. அவள் மார்புகள் ஒரு சொட்டுப் பால்கூட இன்றி வற்றி வதங்கிக் கிடக்கின்றன. குழந்தை அழுதுகொண்டே இருக்கிறது. அதன் சிறிய வெறும் கைகள் குளிரில் விறைத்து நீலம் பாரித்துக் கிடக்கின்றன.

“அவர்கள் ஏன் அழுகிறார்கள்? அவர்கள் ஏன் அழுகிறார்கள்?” என டிமிட்ரி கேட்கிறான்.

“அது குழந்தை. குழந்தைதான் அழுகிறது” – வண்டி ஓட்டும் குடியானவனின் பதில்.

“அது ஏன் அழுகிறது? அதன் கைகள் ஏன் வெறுமனே இருக்கின்றன? ஏன் அவர்கள் அவற்றைப் போர்த்தக் கூடாது?”

“குழந்தை குளிரில் வாடுகிறது. அதன் மெல்லிய ஆடை குளிர் தாங்கக்கூடியதாக இல்லை.”

“ஏன்? ஏன் அப்படி?”

“ஏனென்றால் அவர்கள் ஏழை மக்கள். சாப்பிட அவர்களுக்கு ரொட்டியில்லை. அவர்கள் பிச்சை எடுக்கிறார்கள்.”

“ஏன் அந்த ஏழைத் தாய்மார்கள் அங்கே நிற்கிறார்கள்? ஏன் மக்கள் ஏழைகளாக இருக்கிறார்கள்? ஏன் அந்தக் குழந்தை ஏழையாக இருக்கிறது? … ஏன் அவர்களால் குழந்தைக்குப் பாலூட்ட முடியவில்லை?”

அவன் மனதில், அவன் எப்போதுமே உணர்ந்திராத வகையில் இரக்க உணர்வு எழுகிறது. அவன் அழ விரும்பினான். அவர்கள் எல்லாருக்காகவும் அவன் ஏதாவது உடனடியாகச் செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்டான். அந்தக் குழந்தை இனிமேல் கதறக் கூடாது என்பதற்காக; இருள் படர்ந்த முகத்தோடும் வற்றிய உடம்போடுமிருக்கும் அந்தத் தாய் இனி அழக்கூடாது என்பதற்காக; இந்தத் தருணத்திலிருந்து இனி ஒருவரும் கண்ணீர் சிந்தக்கூடாது என்பதற்காக.”

கனவு முடிந்து விழித்தெழுந்த டிமிட்ரியிடம் விசாரணை அலுவலர் குற்றப் பத்திரிகையை நீட்டுகிறார். அவரிடம் டிமிட்ரி, மகிழ்ச்சியோடும் முகத்தில் பூத்த மலர்ச்சியோடும் புதிய குரலில் கூறுகிறான்: “நீங்கள் விரும்புமிடத்தில் நான் கையெழுத்திடுகிறேன். நான் ஒரு அருமையான கனவு கண்டேன்.”

இந்தக் கனவும், தந்தையைக் கொலை செய்யாவிடினும் அதற்கான உந்துதல் கொண்டிருந்த டிமிட்ரியின் குற்ற உணர்வும் விசாரணைக் காலத்தில் அவனிடம் பெரும் மாற்றங்களை விளைவிக்கின்றன.

சிறையில் அவனைப் பார்க்கச் சென்ற கிரெசெங்காவிடம் டிமிட்ரி சொன்னதாக அவள் அலோஸ்யாவிடம் சொன்னது: ‘‘அந்தக் குழந்தை ஏன் ஏழையாக இருக்கிறது? அந்தக் குழந்தைக்காக நான் சைபீரியாவுக்குப் போகிறேன். நான் கொலையாளி இல்லை; எனினும் நான் சைபீரியாவுக்குப் போயாக வேண்டும்.”

சிறையில் தன்னைப் பார்க்க வந்த அலோஸ்யாவிடம் ஒரு முறை: “… கடந்த இரண்டு மாதத்தில் நான் என்னுள் புதிய மனிதனைக் கண்டேன். உள்ளத்தில் ஒரு புதிய மனிதன் தோன்றியிருக்கிறான். சுரங்கத்தில் இருபதாண்டுகள் வேலை செய்ய வேண்டியதைப் பற்றி இப்போது எனக்குக் கவலையில்லை. அதற்காகப் பயப்படவுமில்லை. ஆனால் அந்தப் புதிய மனிதன் என்னை விட்டுப் போய்விடுவானோ என்றுதான் அஞ்சுகிறேன்” என்கிறான்.

தந்தை கொலையுண்டதற்குப் பின் ஏதோ ஒருவகைக் குற்ற உணர்வில் மனச் சுத்திகரிப்பு பெறும் டிமிட்ரி இவன். டிமிட்ரி, வழக்கில் கொலையாளி எனத் தீர்ப்பு பெறுகிறான். சந்தர்ப்ப சூழ்நிலையின் சாதகத்தில் நீதி சரிகிறது. தர்ம நெறிகளின் பக்கமல்ல, வாழ்வின் அபத்தத் தன்மைகளின் பக்கம்தான் தாஸ்தாயெவ்ஸ்கியை படைப்புலகம் இட்டுச் செல்கிறது.

இவான், இரண்டாவது மகன். புத்திசாலி. அறிவுலகவாதி. மானுடத்தின் அறிவுப் பாங்கானவன். தாஸ்தாயெவ்ஸ்கியின் எண்ணத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பியச் சிந்தனைகளால் பீடிக்கப்பட்டவன். தாஸ்தாயெவ்ஸ்கி படைப்புலகங்களில் இவான் ஒரு ஆற்றல்மிக்க பாத்திரப்படைப்பு. இவன் கிறிஸ்துவைக் கேள்விக்குள்ளாக்கும் ‘The Grand Inquistor’க்கு நிகரான பகுதி இலக்கியப் பரப்பில் இல்லையென்று கருதப்படுகிறது. அதன் உட்பிரிவான ‘The Revolt’ என்னும் பகுதியில், எவ்வித பாவமும் அறியாத குழந்தைகளின் துயரங்களை முன்வைத்து கடவுளின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்குகிறான் இவான். கடவுள் இல்லாத உலகில் ‘எல்லாமே முறையானதுதான்’ என்பது இவன் கருத்து. அலோஸ்யாவுடனான விவாதத்தின்போது தன்னைப்பற்றி இவான் குறிப்பிடுவது அவன் தன்மையின் ஒரு பகுதியைப் புரிந்துகொள்ள உதவும். அது: “நான் வாழ விரும்புகிறேன். சுவைத்த கோப்பையை விட எனக்கு மனமில்லை. அதை ஒருநாள் விட்டுவிடுவேன் என்பது உண்மைதான். ஆனால் இன்னும் அதை நான் காலி செய்துவிடவில்லை. என் வாழ்வின் தாகம் முப்பது வயதானதும் தணிந்துவிடுமென்று தோன்றுகிறது. கரமசோவ் வம்சத்தினருக்கு வாழ்க்கையின் கீழான உணர்ச்சிகள் தொற்றுநோய் போன்றவை. ஆனால் அதற்கு நீ விதிவிலக்கானவன். கடுமையான கட்டுப்பாடுகளுடன் நான் வாழ்ந்து வந்தாலும் எனக்கு இந்த வாழ்க்கையின்மீது விருப்பம் இருக்கிறது. இயற்கையின் நியதிகளில் எனக்கு நம்பிக்கையில்லை. நான் நேசிப்பதெல்லாம், மலர்ந்த பூ, பரந்த நீலவானம், ஏனென்று தெரியாமல் என்னை நேசிக்கும் சிலர் – அவ்வளவுதான்.’’

இந்த இவான் தந்தை கொலையுறுவதற்கு முன்பானவன். ஆனால் தந்தையின் கொலைக்குப் பின், ‘எல்லாமே முறையானதுதான்’ என்ற தன் கருத்திலிருந்து பலம் பெற்றே ஸ்மார்டியாகோவ், தந்தையைக் கொலை செய்தான் என்பதை அறிந்ததிலிருந்து அவன் மனம் சிதறுகிறது. அவனின் சிந்தனைக் கிருமிகளே அவனை நோய்மையுறச் செய்கின்றன. மன நோயாளியாக அவன் சிதைவுறுகிறான். ‘The Devil’ என்ற பகுதியில் சாத்தான் அவனுடன் நிகழ்த்தும் உரையாடலின்போது, அவனின் அகத்தின் ஒரு பகுதி கண்ணாடியில் தெள்ளத் தெளிவாகப் புலப்படுவதைப் போன்ற பிரமிப்பு ஏற்படுகிறது.

அலோஸ்யா, இளைய மகன். கரமசோவ் வம்ச குணங்களுக்கு விலக்கானவன். அன்னையின் இறைமையுணர்வு அருளப்பெற்றவன். அன்பானவன். அறவியல் நெறிகளில் இயல்பாய்த் தோய்ந்தவன். நிதானமானவன். நேர்மையானவன். மானுடத்தின் ஆன்மீகப் பாங்கானவன். தாஸ்தாயெவ்ஸ்கியின் வார்த்தைகளில் அவன்தான் இந்தக் கதையின் நாயகன். நாவலின் அறிமுக அத்தியாயங்களில் அவனைப் பற்றிச் சொல்லப்படுவது: “பிற்காலத்தில் அலோஸ்யாவைப் பற்றி ம்யூகோவ் இவ்வாறு கூறினான்: (தன் படைப்பின் பாத்திரமொன்று கூறியதாக, நாவலில் அப்பாத்திரம் அறிமுகமாவதற்கு முன்பாகவே, தாஸ்தாயெவ்ஸ்கி இவ்விதம் குறிப்பிடுகிறார். நாவல் உலகத்துக்கும் அவருக்குமுள்ள உறவின் ஓர் அம்சமிது.) “இதோ ஒருவன் இருக்கிறான். இவனைக் கையில் பைசா இல்லாமல் பல்லாயிரக்கணக்கான மக்கள் வசிக்கும் நகரத்தில் கொண்டுபோய் விட்டாலும் அவனுக்கு ஒரு தீங்கும் நேராது. குளிரினாலோ பசியினாலோ அவன் இறந்துவிட மாட்டான். அவனுக்கு உணவும் தங்குமிடமும் உடனே கிடைத்து விடும். அவனை யாரும் ஒரு சுமையாக உணர மாட்டார்கள். மாறாக, அவ்வாறு செய்வதில் பெருமிதமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்.”

மற்றுமொன்று: “அலெக்ஸி ஒரு முட்டாள்; பள்ளிப்படிப்பை முடிக்காதவன்; மனப் பக்குவமற்றவன் என்றெல்லாம் பேசப்பட்டது. அவன் பள்ளிப்படிப்பை முடிக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் அவனை உதவாக்கரை, முட்டாள் என்று கூறுவது அபத்தம். வாழ்வின் இருளிலிருந்து விலகி ஒளியைச் சென்றடையவே அவன் இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தான். ஒரு வகையில் அவனை முந்தைய கால இளைஞர்களுடன் ஒப்பிடலாம். உண்மையைக் கண்டறிய அவனுக்கு அதிக ஆர்வமிருந்தது. எல்லோருக்குமாகப் பணி புரியவும் எல்லாவற்றையும் தியாகம் செய்யவும் அவன் தயாராக இருந்தான்.”

ஃபாதர் ஜோஸிமாவின் புகழ், சக்தி ஆகியவற்றால் அவனின் இளமைக் கனவுகள் தூண்டப்பட்டன. தந்தை கொலையுறும் நாளில் ஃபாதர் ஜோஸிமாவின் ஆசிரமத்தில் அவன் தங்கிவிடுவதன்மூலம் கொலை நிகழ்வதற்கு அனுசரணையான ஒரு சூழல் அமைகிறது. அதன் மூலம் அவன் அக்கொலைக்கான ஒரு மௌன சாட்சியாகிறான்.

கொலைக்குப் பின், இந்நாவலின் எல்லாப் பாத்திரங்களோடும் ஊடாடியபடி, அன்பு, அமைதி, நல்லெண்ணம் ஆகியவற்றின் விதைகளைத் தூவியபடி வளைய வருகிறான். ஒரு கல்லெறிச் சம்பவத்தின் தொடர்ச்சியாக, இவன் சில பள்ளிச் சிறுவர்களுடன் நட்பு கொள்கிறான். இந்நட்பின் மூலம், வளரும் தலைமுறையினரின் ஆகர்சிப்பாகிறான். இச்சிறுவர்களில் ஒருவனான ஐலோஷாவின் சவ அடக்க நிகழ்வில், அவனும் சிறுவர்களோடு சேர்ந்து பங்கேற்பதுதான் நாவலின் கடைசி நிகழ்வு. அச்சமயம், சிறுவர்களிடையே அலோஸ்யா இறுதியுரை ஆற்றுகிறான். சவ அடக்கத்தின் பின், விருந்துக்கு ஐலோஷாவின் வீட்டுக்கு அனைவரும் வரும்போது, துடிப்பான கோலியா அவனிடம், “எல்லாம் வேடிக்கையாக இருக்கிறது, கரமசோவ். எவ்வளவு துக்ககரமான சம்பவம். ஆனால் உடனே பான் கேக் விருந்து. இம்மாதிரி விஷயங்கள் நம் மதத்தில் இயல்புணர்ச்சிக்குப் புறம்பானதாக இருக்கிறது” என்று சொன்னதற்குப் பதிலாக, அவ்வுரையின் இறுதியில் அலோஸ்யா சிரித்தபடி கூறுவதுதான் இந்நாவலின் கடைசி வரிகள்: “சரி, உரையை நாம் இத்துடன் முடித்துக்கொள்வோம். நாம் இப்போது இறுதிச் சடங்கு விருந்துக்குப் போகலாம். பான் கேக் சாப்பிடும் நம் பழக்கம் குறித்து சங்கடம் கொள்ள வேண்டாம். இது வெகு காலமாக இருந்துவரும் பழக்கம். அதில் ஏதேனும் நல்ல அம்சம் அடங்கியிருக்கும். சரி, இப்போது நாம் ஒருவர் கைகளை ஒருவர் கோத்தபடி விருந்துண்ணப் போகலாம்.”

கடவுளின் இருப்பை, அப்படிமம் சமூகத்திற்களித்த அறவியல் நியதிகளை ஏற்பதன் அருமையை உணர்த்துபவனாக அலோஸ்யா இருக்கிறான். இவன் கருமைக்கு எதிரான வெண்மை; இருண்மைக்கு எதிரான ஒளி.

ஸ்மெர்டியாகோவ், பாவ்லோவிச்சின் துர்நடத்தையால் பிறந்த மகன். பிறப்பால் அவமானமும் மன ஊனமும் அடைந்தவன். அதிகமும் பேசாதவன் என்ற வகையில் அமைதியானவன், ரகஸ்யமானவன், வஞ்சகமானவன். பாவ்லோவிச்சிடமே இவன் சமையல்காரனாகப் பணிபுரிகிறான். தன் தந்தையும் எஜமானனுமான பாவ்லோவிச் மதுபோதையில் தோட்டத்தில் தவறவிட்ட முந்நூறு ரூபிள்களைக் கண்டெடுத்தபோது, அதைத் தன் எஜமானன் மேஜையில் வைத்துவிடும் இந்த ஸ்மெர்டியாகோவ்தான் இவானின் சிந்தனைக் கிருமிகளினால் பீடிக்கப்பட்டு சந்தர்ப்பங்களின் சாதகத்தில் தன் எஜமானனான தந்தையைக் கொன்று மூவாயிரம் ரூபிள்களை எடுத்துக்கொள்கிறான். இறுதியில், இவானிடம் இந்தத் தகவலை வெளிப்படுத்திய நாளில் தற்கொலை செய்து கொள்கிறான். இவானுடனான அந்நாள் உரையாடலின்போது, “எல்லாம் முறையானதுதான் என்று நீ சொன்னதனாலேயே இதைச் செய்தேன்” என்றும் கூறுகிறான். கொலை பற்றிய, கொலையாளி பற்றிய ரகஸ்யங்களின் விடுவிப்பாக அல்ல; மனித மன ரகஸ்ய அறைகளில் குவிந்து கிடக்கும் இருளின் மூச்சுகளை வெளிப்படுத்துவதாகவே பெரும் அதிர்வுகளுடன் இப்பகுதி அமைகிறது.

தனது களியாட்டங்களுக்காக எவ்வித நெறிகளுமற்று வாழ்ந்த தந்தை பாவ்லோவிச், ‘கோப்பையை விட்டு அகல மனமின்றி’ அதன் ருசிகளுக்காகக் கட்டிக் காக்கும் பணத்தின் பொருட்டு கொலையுறுகிறான்.

கரமசோவ் வம்சத்தின் இச்சைக் கிருமிகளினால் ‘தொற்று நோய்’க்குள்ளான டிமிட்ரி கொலையாளியென குற்றம் சாட்டப்பட்டு தீர்ப்பும் பெறுகிறான்.

19-ஆம் நூற்றாண்டின் சிந்தனைக் கிருமிகளினால் பாதிக்கப்பட்ட இவான், அக்கிருமிகளின் பரவலினாலேயே தந்தை கொலை செய்யப்பட்டார் என்பதை அறிந்து மனநோயாளி ஆகிறான். இவானின் சிந்தனையின் பலத்தில் கொலைக்கான உத்வேகம் பெற்ற ஸ்மெர்டியாகோவ் தற்கொலை செய்துகொள்கிறான்.

மனித குலம் முழுமைக்கும் பொதுமையான கிறிஸ்துவ அன்புச் சுடரின் ஒரு திரியென அலோஸ்யா இப்படைப்பு நெடுகிலும் மெல்லிய ஒளி தந்துகொண்டிருக்கிறான்.

இப்பாத்திரப் படைப்புகளை இவ்விதமாக அறிமுகம் செய்துகொண்டிருப்பதன் மூலம் நாம் அறிந்துகொண்டிருப்பது, இப்படைப்போவியத்தின் சில வெளிக்கோடுகளை மட்டுமே.

 

3

தாஸ்தாயெவ்ஸ்கியின் அறிமுகம்தான், காலம் – கலை – படைப்பெழுச்சிமிக்க கலைஞன் என்ற உறவின் திகைப்பூட்டும் அதிசயங்களை ஆழமாய் எனக்கு வெளிப்படுத்தியது. சூரியனின் முகம் படாத ரகஸ்ய ஊற்றுகளின் சலனங்களைக் காணக் கிடைத்ததும், குமிழ் ஓசைகளைக் கேட்க முடிந்ததும் அக்கலைஞனின் படைப்புலகோடு கொண்ட உறவில்தான். கலை இலக்கியம் குறித்து இளம் வயதில் நான் கொண்டிருந்த கோட்பாடுகளை முதன்முறையாக, முற்றிலுமாகத் தகர்த்தெறிந்தவர் தாஸ்தாயெவ்ஸ்கி. யதார்த்தம் என்பதன் வெளிமுகங்களில் அல்ல, மாறாக, அவற்றின் உள்முகங்களிலேயே, படைப்பெழுச்சியில் பிரவஹிக்கக்கூடிய வாழ்வின் உண்மைகள் சலனம் கொண்டிருக்கின்றன என்பதை உணர்த்தியது இந்த உறவுதான். பாத்திரங்களின் எண்ணங்கள், செயல்கள் எல்லாம் அதனதன் வரையறைக்குள், பிசகற்ற ஒரு நேர்கோட்டில் வார்க்கப்பட்டிருக்க வேண்டும் என்ற ஒரு மதிப்பீட்டுப் பார்வை என்னிடமிருந்து கழன்றோடியது. ஒழுங்கு, பிசகின்மை, நேர்த்தி, முரணற்ற தன்மை என்பனவற்றின் பெயரில் உண்மையும், படைப்பு நேர்மையும் நழுவி விடுகின்றன என்பதை தாஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புலகமே உணர்த்தியது. ஒழுங்கு குறித்த எவ்விதத் தீர்மானங்களுமின்றி, முரண்பட்ட உணர்ச்சிகளில் ஊசலாடும் இயல்பினராக அவர்கள் இருக்கிறார்கள். தாஸ்தாயெவ்ஸ்கியின் படைப்பெழுச்சியில், உள்ளுறைந்து கிடக்கும் உண்மைகளின்மீது வெளிச்சம் பரவுகிறது. அவ்வெளிச்சத்தில் அந்த உண்மைகள் நம்மீதும் படர்கின்றன. யதார்த்தத்தின் ஆழ்ந்த பகுதிகளில் ஊடுருவிப் பாய்வதன் மூலம் வெளிவரும் உண்மைகள் அவை.

தாஸ்தாயெவ்ஸ்கியின் படைப்பாக்க நெறியும் பாத்திர உருவாக்கமும் முற்றிலும் தனித்துவமிக்கது. டால்ஸ்டாய், ஸ்டெந்தால் உட்பட பலரின் படைப்பாக்க முறைமையைத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பாக்கமாகவும், தாஸ்தாயெவ்ஸ்கியின் படைப்பு நெறியை ஓவியத் தன்மையுடையதாகவும் ஆந்த்ரே ழீட் கருதுகிறார். “எல்லாப் படைப்பாளிகளின் ஆக்கங்களிலிருந்தும், ஏன் டால்ஸ்டாய், ஸ்டெந்தால் போன்றவர்களின் படைப்புகளிலிருந்தும்கூட தாஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புகள் வேறுபடுவது, ஓர் ஓவியத்துக்கும் காட்சித் தொகுப்புக்கும் இடையில் இருக்கக்கூடிய சகல வேறுபாடுகளையும் உள்ளடக்கியது” என்கிறார் அவர். இக்கூற்றை வெகு நுட்பமாக அவர் நிலைநிறுத்துகிறார்:

“தாஸ்தாயெவ்ஸ்கி ஓர் ஓவியத்தை உருவாக்குகிறார். அதில் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டியது ஒளியின் சரிவிகித சமானம்தான். ஒளி ஒற்றைத் திரியிலிருந்து விரிகிறது. ஸ்டெந்தால் அல்லது டால்ஸ்டாயின் நாவல்களில் ஒளியானது, ஆடாமல் அசையாமல் ஓரிடத்தில் நிலைத்து நின்று எல்லா திசைகளிலும் பளிச்சிடுகிறது. ஒவ்வொரு பொருளும் அதன் எல்லாப் பக்கங்களிலிருந்தும் பார்க்கக் கூடிய வகையில் பிரகாசம் பெறுகின்றன. நிழல்கள் என்பதே இல்லை. ஆனால் தாஸ்தாயெவ்ஸ்கியின் படைப்பில் ரெம்பிராண்டின் ஓவியத்தைப் போல, நிழல்கள்தாம் முக்கியத்துவம் பெறுகின்றன. தாஸ்தாயெவ்ஸ்கி தன் பாத்திரப் படைப்புகளையும் சம்பவங்களையும் கூட்டமைப்புகள் செய்து, பின் அவற்றின் மீது ஓர் ஆழ்ந்த ஒளிச்சுடரை அவற்றின் ஒரு பக்கம் மட்டுமே ஒளி படும்படி பாய்ச்சுகிறார். அவரின் ஒவ்வொரு பாத்திரப் படைப்பும் நிழலாகச் சலனம் கொள்கிறார்கள்.” (Dostoevsky (Lecture III) The Andre Gide Reader, p. 694)

தாஸ்தாயெவ்ஸ்கியின் தனித்துவம் என்பது, நாவல் கலை என்பது வாழ்வின் வெளித்தோற்றங்களின் கண்ணாடி எனக் கருதாது வாழ்வின் உள்முகங்களை ஊடுருவிப் பார்க்கும் முயற்சியில் விளைந்தது. மனிதனின் நடவடிக்கைகளுக்குக் காரணமான அவனின் மனப் பிராந்தியத்துக்குள் தாஸ்தாயெவ்ஸ்கி போல் சஞ்சாரம் புரிந்த கலைஞன் இல்லை. அது ஒரு அசாத்தியமான பிரதேசம். அறிமுகமற்றது; பாதைகளற்றது; இருட்டானது. எனினும் தாஸ்தாயெவ்ஸ்கி இடர்ப்பாடுகளின்றி சஞ்சரித்திருக்கிறார். அவருக்குப் பாதைகள் புலப்பட்டிருக்கின்றன. படிகள் தென்பட்டிருக்கின்றன. வெளிக்கதவுகள் மட்டுமன்றி உள்ளறைக் கதவுகளும் திறந்துகொண்டிருக்கின்றன.

இந்தப் பயணத்தில் வேதனைகளும், குரூரங்களும், நம்பிக்கைகள் அற்றதுமான ஓர் உலகை அவர் தரிசித்தார். மனிதத் துயரங்களின் முழு ஆழத்தையும் ஸ்பரிசித்த தாஸ்தாயெவ்ஸ்கி மனித குலத்தின் பூரணத்துவத்துக்கும் விமோசனத்துக்கும் ஆசைப்பட்டார். அவருக்கு ஆசுவாசம் தேவையாய் இருந்தது. வாழ்வின் இருளை மங்கச் செய்வதற்கான ஒளி வேண்டியிருந்தது. ஒரு சிறு கைவிளக்கு இருந்தால் போதும். அவ்விளக்கின் துணையில்லையெனில் வாழ்வு குறித்த எந்த நம்பிக்கைக்கும் இடமில்லை. அதுகாறும் மனித சமூகத்தின் நிம்மதிக்கும், அறவியல் நியதிகளுக்கும் அடியோட்டமாக இருந்த கடவுள் எனும் கைவிளக்கை அவர் ஏந்திக்கொண்டார்.

ஓர் இடையோட்டமாக, தாஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்நிலைகளையும் சிந்தனை நிலைகளையும் பெரிதும் தீர்மானித்த இரண்டு முக்கிய நிகழ்வுகளைக் குறிப்பிட வேண்டியிருக்கிறது (தாஸ்தாயெவ்ஸ்கி என்ற ஆளுமையை வழி நடத்திச் சென்ற வாழ்க்கைச் சம்பவங்களை இங்கு விரிவாக முன்வைக்கவில்லை. அவை, தாஸ்தாயெவ்ஸ்கியை அறிந்து கொள்ள விழையும் எவருக்கும் எளிதில் கிடைத்துவிடும்).

தாஸ்தாயெவ்ஸ்கியின் படைப்பாக்க செயல்பாட்டுக்கு உறுதுணையாக அமைந்த ஒரு முக்கிய நிகழ்வு, அவர் வாழ்வை முறைப்படுத்திய அன்னா, அவரின் வாழ்க்கைத் துணையானது. அவரின் மேதமையைப் போற்றிய அன்னா, கரிசனையோடும் காதலோடும் அவரைப் பராமரித்திருக்கிறார். தகிக்கும் அவர் படைப்புணர்ச்சி சீராக வெளிப்பட, அவரின் புறப் பிரச்சனைகளையும், அவை சார்ந்த அக நெருக்கடிகளையும் வழிப்படுத்தி இருக்கிறார் அன்னா. அவர் வாழ்வின் இதம் அன்னா. அன்னாவுடனான மண வாழ்க்கையின் பதினான்கு வருடங்களில்தான் அவரின் மிகச் சிறந்த படைப்புகளான ‘குற்றமும் தண்டனையும்’, ‘முட்டாள்’, ‘பீடிக்கப்பட்டவர்கள்’ மற்றும் ‘கரமசோவ் சகோதரர்கள்’ வெளிவந்தன. ஒன்று நிச்சயமாகச் சொல்லாம்: அன்னா இல்லையெனில் இன்று நாம் அறியக்கூடிய தாஸ்தாயெவ்ஸ்கியாக அவர் இருந்திருக்க மாட்டார்.

மற்றொரு நிகழ்வு. தாஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புலகையும், மனிதகுல மீட்சி பற்றிய அவர் பார்வையையும் தீர்மானித்த, நான்காண்டு கால சைபீரியச் சிறை வாழ்க்கை. சோஷலிச சிந்தனைகளில் கிளர்ச்சியுற்ற இளம் தாஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்நிலையும் அறிவு வட்டமும் அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்திருந்த மிகச் சிறிய முற்றத்திலிருந்து அவர் பார்த்த ‘ஏழை எளியவர்கள்’ வேறு; நான்கு ஆண்டுகால சைபீரியச் சிறைவாழ்வில் அவர் நேரடியாக உறவாடிய ஏழை எளியவர்கள் வேறு. ‘கரமசோவ் சகோதரர்கள்’ நாவல் உட்பட அவரின் பல படைப்புகளுக்கான கதைக்கரு இவ்வனுபவங்களிலிருந்து பெறப்பட்டவைதாம். குற்றங்கள், கொலைகள், தற்கொலைகள் என விரவிக்கிடக்கும் தாஸ்தாயெவ்ஸ்கியின் உலகம், சுவாரஸ்யமான கற்பனைகளிலிருந்து உருவான வெளிமுகங்கள் அல்ல; அவரின் இந்த அனுபவ உலகிலிருந்து உயிர்த்தெழுந்த உள்முகங்கள். கருத்துகளின் கிளர்ச்சிகளிலிருந்து விடுபட்டு, வாழ்வின் உண்மைகளிலிருந்து மனிதர்களை அவர் அறிந்த காலமிது.

சைபீரியச் சிறை வாழ்க்கை அறிவின் கிரீடத்தை உதறச் செய்தது. இதுதான் கடவுளிடம் அவரை அழைத்துச் சென்றது.

கடவுளெனும் கைவிளக்கை ஏந்திய தாஸ்தாயெவ்ஸ்கி, சரணடைதல், துன்பங்களை ஏற்றல், குற்றங்களுக்கான தண்டனையை ஏற்று ஆத்ம சுத்திகரிப்பு அடைதல் ஆகியவற்றிலேயே மனித விமோசனம் தங்கியிருக்கிறதெனக் கருதினார். வாழ்வின் சாரமென்பது, துன்பங்களில் புடம் போடப்பட்டு பிரகாசிப்பதிலும் அன்பின் பரிவர்த்தனையிலுமே அடங்கியிருப்பதாக உணர்ந்தார். கடவுள் இல்லையெனில் இந்த முன்வைப்புகள் அர்த்தமற்றவை என்பதையும் அவர் வேதனையோடு அறிந்தவராக இருந்தார். எனவே, மனித விமோசனத்துக்குக் கடவுள் வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, கடவுள் இல்லையெனில் தாஸ்தாயெவ்ஸ்கியிடம் மனிதத் துயரங்களுக்கான விடுவிப்பில்லை.

எவ்விதப் பாவமும் அறியாத குழந்தைகளின் துயரங்களை முன்வைத்து கடவுளைக் கேள்விக்குள்ளாக்குகிறான் இவான். ஆனால், தான் கனவில் கண்ட, பாலுக்காக அழும் குழந்தையின் அழுகைக்குத் தானும் ஒரு காரணம் என உணர்கிறான் டிமிட்ரி. அதற்காக, தான் செய்யாத குற்றத்திற்கான தண்டனையை மனமுவந்து ஏற்றுக்கொள்ளவும் விழைகிறான். “தனி மனிதனுடையதும், சமூகத்தினுடையதுமான அனைத்து பாவங்களுக்கும் நாம் அனைவரும் பொறுப்பாளியாகிறோம். இந்த எண்ணம்தான் ஒவ்வொரு சாமியாருக்கும் மனித வாழ்க்கையின் மகுடம் போன்றது” என்ற ஃபாதர் ஜோஸிமாவின் கூற்றுக்கு மனித உதாரணமாகிறான். உல்லாசப் பிரியனாக வாழ்ந்த டிமிட்ரி தண்டனையின் மூலம் உயிர்மீட்சி பெறுகிறான்.

கிறிஸ்துவ அன்பே மனித சமூகமெனும் விளைநிலத்துக்கு நீர் பாய்ச்சும் என்பது தாஸ்தாயெவ்ஸ்கியின் நம்பிக்கை. அதனால்தான் நீட்ஷே, “ஒழுக்கவியலின் இறுக்கங்களில் சிக்குண்டு திணறிய மனிதன் தாஸ்தாயெவ்ஸ்கி” என்றும் “இரண்டாயிரம் ஆண்டுச் சுமை காரணமாக மனசாட்சியின் தொல்லைகளுக்கும் சுய அழிவுச் சிந்தனைகளுக்கும் பலியான ஒருவர்” என்றும் கூறுகிறார்.

ஆனால் தாஸ்தாயெவ்ஸ்கியின் நம்பிக்கைகள், கனவுகள், ஆசைகள் இவை மட்டுமே படைப்புலகின் குரலில்லை. தாஸ்தாயெவ்ஸ்கியை இவ்வாறு விமர்சிக்கும் நீட்ஷே, “தாஸ்தாயெவ்ஸ்கியை நான் கண்டு கொண்டது, ஸ்டெந்தாலின் அறிமுகத்தை விடவும் மிக முக்கியமானது. அவர் ஒருவர் மட்டுமே உளவியல் குறித்து எனக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார்” என்று ஏற்பதைப் போலத்தான் இதுவும். நாவலில் ஒவ்வொரு பாத்திரமும் வெவ்வேறு குரலாய் வெளிப்படுகிறார்கள். முழுச் சுதந்திரத்தோடு தன்னிச்சையாய் ஒலிக்கும் குரல்கள் இவை. ஒவ்வொரு குரலும் தன்னளவில் தனிமனிதனுக்கு வெகு அன்னியோன்யமானதும் ரகஸ்யமானதுமான உண்மையில் தோய்ந்து ஒலிக்கின்றன. தாஸ்தாயெவ்ஸ்கி தன் நம்பிக்கைகளுக்கு வலுவூட்ட உண்மைகளைத் திரிப்பதோ, குரல்வளையைத் திருகுவதோ இல்லை. வாழ்வின் குரல்களை அவற்றின் இசைமையோடு பதிவு செய்திருக்கிறார். வெளியீட்டு சௌகர்யங்களுக்காகவோ, நேர்த்திக்காகவோ, படைப்பின் அழைப்பை எதிர்கொள்ளத் திராணியற்று தப்பித்துக்கொள்வதற்காகவோ அல்லது தன் நம்பிக்கையின் குரல் உரத்துக் கேட்கவேண்டும் என்பதற்காகவோ அவர் விஷயங்களை எளிமைப்படுத்துவதில்லை. பூச்சுகள் செய்வதில்லை. பாத்திரங்களின் எண்ணங்கள், உணர்ச்சிகள், ஈடுபாடுகள், செயல்கள் என எவையுமே தனிமைப்படுத்தப்படுவதில்லை. மாறாக, அவற்றின் யதார்த்தமான பின்னங்களில் திளைத்து உண்மைகளைத் திரண்டுவரச் செய்கிறார்.

 

4

சுயமான, தன்னிச்சையான, இசைமையின் முழுமைகூடிய குரல்களின் கூட்டமைப்பாக நாவல் உயிர் கொண்டிருப்பதால்தான் நம்பிக்கையின் குரலுக்கு இணையான எதிர்க்குரல்களும் சக்திமிக்கதாக இருக்கின்றன. மனித ஆத்மாவின் உலகளாவிய வெளிப்பாடு இவ்வாறுதான் நிகழ்கிறது.

ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில், ஒரு குறிப்பிட்ட புறவய, அகவய பின்புலங்களில், ஒரு குறிப்பிட்ட உணர்ச்சிப் பிரவாகத்தோடும் சிந்தனை எழுச்சியோடும் ஒலிக்கும் குரல், அத்தருணத்தில் உயர்ந்து நிற்கிறது. இதன் காரணமாக, பல்வேறு குரல்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஒன்றை மேவி ஒன்று என உயிர் நாதம் கொள்கின்றன. உண்மையில், யதார்த்தத்தின் ஆழ்நிலைகளின் தன்மைக்கேற்ப, இந்நாவலில் இருள் கவிந்த குரல்களே அடர்ந்திருக்கின்றன. முனைப்பான பல குரல்களின் நாத எழுச்சிகளுக்கேற்ப நாவல், தீர்க்கப்படாத விவாதங்களால் சூழப்பட்டிருக்கிறது. இத்தன்மை காரணமாகத்தான் இந்நாவல் நம்மை வெகுவாக ஆகர்சிக்கிறது. இந்த ஆகர்சிப்பு, நம்மை நமக்கு இனங்காட்டக்கூடிய மன சஞ்சாரங்களுக்கான அழைப்பாகிறது. அதை நாம் ஏற்கும்போது, புதியதோர் உலகம் நம்முன் விரிகிறது.

ஃபாதர் ஜோசிமாவின் அருளாசி பெற்ற, கிறிஸ்துவ அன்பை மனித குலம் முழுமைக்குமான சுடராக ஏற்கிற அலோஸ்யாவால் எந்த ஒரு நிகழ்வையும் தடுக்கவோ, மாற்றங்களுக்கு உட்படுத்தவோ இயலாமல் தானிருக்கிறது. தந்தையின் கொலை, இவானின் மனப் பிறழ்ச்சி, டிமிட்ரி அடைந்த தண்டனை, ஸ்மெர்டியாகோவின் தற்கொலை எல்லாம் அதனதன் கதியைத் தாமே சென்றடைகின்றன. அலோஸ்யா மௌன சாட்சியாக ஊடாட மட்டுமே முடிகிறது. அந்த அருமைச் சிறுவன் ஐலோஷா ஏன் மரணமுறுகிறான்? சமூக நோய்மையின் ஓர் அம்சமாகவே இந்த மரணத்தை நாம் கொள்ள முடியும்.

‘எல்லாமே முறையானது’ என்ற இவானின் குரல்கூடப் படைப்பில் தன் ஆளுமையின் வெற்றியைக் கொண்டிருக்கிறது. டிமிட்ரி, குற்றவாளியெனத் தீர்மானிக்கப்படுமெனில், சைபீரியா செல்லும் வழியில் அவன் தப்பித்து வெளிநாடு செல்வதற்கான வழிமுறைகளையும், பண ஒழுங்கையும் இவான் முன்னரே அமைத்து வைத்திருக்கிறான். தண்டனையை ஏற்று மன விகாசம் பெற விழைந்த டிமிட்ரி இத்திட்டத்திற்கும் இணங்கித்தான் இருக்கிறான். அறவியல் நெறிகளை ஏந்திய அலோஸ்யா இத்திட்டத்திற்கு எதிராக இருக்கக்கூடும் என்ற அவர்களின் எண்ணத்திற்கு மாறாக, அவனும் இதற்கு உடன்படுகிறான். அம்முடிவுக்கான மன சமாதானங்களை அவன் கொண்டிருக்கிறான். எனினும் இது எதன் வெற்றி?

நீதி பிறழ்ந்து டிமிட்ரி கொலையாளியென தீர்ப்பு பெறுகையில் வெற்றி பெறுவது எது?

இவானுக்கும் அலோஸ்யாவுக்கும் இடையேயான விவாதங்களில் இவான் முன்வைக்கும் கேள்விகள் எழுச்சி மிக்கதாகவும் உயிர்ப்போடும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றன.

உண்மையில், தாஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புலகம், இருண்மையின் அடர்த்தியும் ஒளியின் மெல்லிய சுடரும் ஊடாடும் உலகம். இருண்மையின் அடர்த்தியை, மனித ஆழ்மன இருள்களின் யதார்த்தமான, கலாபூர்வமான, எழுச்சிமிக்க சித்தரிப்புதான் உருவாக்குகிறது. இதன் காரணமாக, படைப்புலகை இருள் சூழ்ந்து அப்பிக்கொண்டிருக்கிறது. அந்த மனிதர்களும் அசாத்தியமான ஒரு உலக சிருஷ்டியின் உயர்ந்த அங்கங்களாகியிருக்கிறார்கள். ஆனால் மெல்லிய சுடராய், தாஸ்தாயெவ்ஸ்கியின் நம்பிக்கைகளுக்கு, ஆசைகளுக்குத் துணையாய் இருக்கும் பாத்திரப் படைப்புகள் அவர்களுக்கு நிகரான கலை வெற்றியைப் பெறவில்லை. தகிக்கும் பாலை வெயிலில் அன்பின் நீரோடை வற்றப்பார்க்கிறது. சூறாவளிக் காற்றில் சுடர் அணையப் பார்க்கிறது.

இந்நாவல், அதன் சத்திய வேட்கை, எழுச்சி காரணமாக, ஒரு கலைஞனின் கலையெழுச்சிமிக்க செயல்பாட்டுக்கும், அவனின் ஆசைக்குமான கேள்வியை முன்வைக்கிறது. வெற்றியடைவது கலைஞன்தான். கலைஞன் விஸ்வரூபம் கொள்ளும்போது அந்த ஆசை மனிதன் சிறுரூபம் கொண்டுவிடுகிறான்.

கலைஞனின் கலையெழுச்சிமிக்க விஸ்வரூப ஆற்றல், நமக்கும் வாழ்வுக்குமான உறவில் புதிய பிணைப்புகளை ஏற்படுத்துகின்றன. இத்தகைய பிணைப்புகளில் விகாசம் பெறுவதுதான் மனித மனம். இவ்வகையில் தாஸ்தாயெவ்ஸ்கியுடன் நாம் கொள்ளும் உறவு பெரும் பேறாக நமக்கு அமையும்.

தாஸ்தாயெவ்ஸ்கி ஒரு கலை உலக இயக்கம். அவ்வியக்கத்தின் பாதிப்புகளை அதன்பின் வந்த மிகச் சிறந்த படைப்பாளிகள் எதிர்கொண்டிருந்தபோதிலும், சூரியனின் ஆகர்சிப்புக்குள்ளான ஆனால், தம்மளவில் தனித்தனியான சிறு சிறு கோளங்களாகவே அவர்கள் இயங்கியிருக்கின்றனர். ஏனெனில் தாஸ்தாயெவ்ஸ்கி ஒரு கலை உலக இயக்கத்தின் ஆரம்பமாக மட்டுமல்ல, அதன் முழுமையும் நிறைவுமாக இயங்கியிருக்கிறார். தன்னிறைவு பெற்ற அந்த இயக்க சக்தி கலை ஈர்ப்பு கொள்ளும் ஒரு வாசகனை என்றும் ஆகர்சிக்கும். புதிய கேள்விகளை அவனுள் விதைக்கும். இருளை ஊடறுக்கும் ஒளியைப் பாய்ச்சும். வாழ்வின் சாத்தியங்களை விஸ்தரிக்கும்.

 

(கல்குதிரை, தாஸ்தாயெவ்ஸ்கி சிறப்பிதழ், 1992)

நன்றி:

சி. மோகன்

1 COMMENT

  1. சி. மோகன் அவர்களின் பதிவு சிறப்பு. அடர் இருக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் ஒளித் துணுக்கை கண்டுவிடும் பார்வை அவருடையது. அப்படியாக தான் கண்டையும், ஒரு ஆளுமையின் / படைப்பின் சாரத்தை பதிவாக்கிவிடும் சி. மோகன் அவர்களின் தனித்திறன் பாராட்டுக்குறிது அவருக்கு என் vவாழ்த்துக்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.