சொற்ப மீன்கள்


ப்போதும் நமக்குள் வன்முறை இருந்து கொண்டேதான் இருக்கிறது” இதை லெனினா என்னிடம் சொன்ன போது நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். என் மீதிருந்த அவளது பார்வையைத் திருப்பியதும் அவளது முதுகுக்குக் கீழ் புதைந்திருந்த எனது கைகளை உருவினேன்.இன்னும் இரண்டு நாட்களில் அப்பாவின் நினைவு நாள் என்றாள். ஆமாம் அவள் எப்போதுமே இப்படித்தான் அவளது தந்தையின் நினைவு நாள் நெருங்கும் போது சற்று வித்தியாசமாக நடந்து கொள்வாள். நான் கட்டிலின் சிறு அசைவுகளை வெளியேற்றியபடியே கீழிறங்கி எதிரேயிருந்த ஜன்னலைத் திறந்தேன். அந்த வெளிச்சம் எங்களுக்குத் தேவையானதுதான், இந்த நகரத்தை அந்த வெளிச்சம் அடைந்து நீண்ட நேரமாகிவிட்டது ஆனால் அது எங்கள் அறைக்குள் நுழைய லெனினாவின் வார்த்தைகளே காரணமாக இருந்தது. அந்த ஜன்னல் வெகு நீட்சியானதாக, எனது கடந்த காலத்தைத் திரையிடக் கூடியதாக இருந்தது. லெனினாவும் எழுந்துவந்து எனது தோள்களை பின்னிருந்து அழுத்தினான்.

“நான் உன்னைக் கலைத்து விட்டதாக எண்ணுகிறேன்”

இல்லை லெனினா. நிச்சயமாக நாம் எதையும் தெரிந்து செய்பவர்கள் அல்ல. நமது வார்த்தைகள் எப்போதுமே நம்மைக் காயப்படுத்துவதும் இல்லை அது தெரியாது விழுகிற போதும் முதலில் வெளிப்படுத்துபவர்தான் கலங்குவோம், அதுதான் நமது உறவின் ஆழம் என்ற படியே அவளை அணைத்துக்கொண்டேன்.

“ஆனாலும் உன் கண்களில் எரிகிற அந்தத் தீயை என்னால் காணமுடிகிறது” என அவளும் அணைத்தபடியே முதுகில் கோலமிட்டாள்.

அவள் சொல்வது உண்மைதான் அன்பானவர்களே அந்தத் தீ என்னை மீறி எரித்துவிடுகிறது. அலுவலகத்தின் வேலை பளுக்களிடையே, டிக்கெட் எடுக்க வரிசையில் நிற்கையில், பூங்காக்களில், சமயங்களில் லெலீனாவோடு சல்லாபிக்கையில் கூட அந்தத் தீ என்னையும் எனது கண்களையும் எரித்து விளையாடுகிறது. நானே கூட அதை விரும்பத் தொடங்கிவிட்டேன். அதன் உயரம் வெகு நீளமானது.

அப்போது நான் லாங்கூர் துறைமுகப் பகுதியின் புது கனவான் எனக்கு மீன்பிடிக்கவே அதிகமான ஆசை இருந்தது. எங்கள் குடும்ப நண்பரும் தூரத்துச் சொந்தமுமான சூசைராஜ் அங்கிருந்தார். நான் அவரை நோக்கிச் சென்றேன் என்னை, அவர் வேலைபார்க்கிற படகு ஒன்றிலே வேலைக்குச் சேர்த்துவிட்டார். லாங்கூர் அப்போதைக்கு மிகப்பெரிய மீன்பிடி தளம் அதன் பிரமிப்பு இன்னுமே கூட என்னுள் இருக்கிறது. எங்கள் படகுகின் உரிமையாளர் விக்டர் அதிகளவிலான படகுகளை வைத்திருந்தார். எல்லா பணியாள்களுமே மாறி மாறி படகுகளில் வேலை பார்க்கிற போதும் நான் மட்டும் சூசையுடனே இருந்தேன். அங்கு சூசைக்கு முதலாளி மத்தியில் நல்ல செல்வாக்கும் இருந்தது. விக்டரின் படகுகளில் மட்டும் சம்பளம் தரம் மாதிரியான முறையில் பிரிக்கப்படும் அதாவது அங்கிருக்கிற மீனவர்களுக்கு தனித்தனியான கூடைகள் கொடுக்கப்படும் பிடிபடுகிற மீன்களை மீனவர்கள் அவர்களுக்குக் கொடுத்த கூடையில் சேகரித்து அதற்கான முறையில் தனியாகக் கூடுதல் பணம் பெறலாம். அப்போது நான் சேர்ந்த புதிதென்பதால் எடுபிடி வேலைகளை மட்டுமே செய்து வந்தேன். எனது மனக் குழப்பங்களும் நெருக்கடிக்கும் இடையே இந்த படகுத்தொழில் எனக்கு நல்ல ஆறுதலாக இருந்தது. தனித்து வீட்டைத் தவிர்த்து நான் தவிக்கின்ற நாள்களில் எனக்குப் பணம்‌ தேவையானதாக இருந்தது. அதனாலே எனது முழு சிந்தனையும் அங்கே தங்கிவிட்டது எனக்கு அந்த படகு எல்லாம் தருவதாக இருந்தது.

சிறு சிறு பைப்பர் பலகைகள் சாத்திய குடில் ஒன்று கொடுத்தார்கள். எனக்கான எல்லா சுதந்திரமும் அங்கு கொடுக்கப்பட்ட போதும், நான் சமயங்களில் தனிமையை உணர்வேன் .அப்படியான நேரத்தில் தனித்து லாங்கூர் சந்தைக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தேன். அந்த சந்தை அத்தனை அழகானது எனது வாழ்நாட்களில் அது மறக்கமுடியாத இடம் சந்தையைச் சுற்றி காற்றிலாடுகிற அந்த வண்ண பல்புகளைப் பார்த்தபடியே கழிப்பேன் எனது மனக்குறைகளையும் தீராத துயர சிந்தனைகளையும் அந்த பல்புகளுக்கு இடையே கட்டிவைத்து வந்துவிடுவேன் அவைகளை லாங்கூர் சந்தை விடிய விடிய ஒளிர வைத்துக்கொண்டிருக்கும்.


லெனினா மேஜையின் மீதிருந்த கோப்பையொன்றைத் தவறவிட்டாள். அது எனது போக்கைக் கலைப்பது மாதிரி பட்டது. கோப்பை உடைகிற சப்தம் கேட்டதும் நான் அவளது முகத்தைத்தான் முதலில் பார்த்தேன், என்னையே பார்த்தபடி இருந்தாள். அப்போதே புரிந்துவிட்டது ‌கோப்பை தவறி விழவில்லை அவளை கவனிக்கச் சொல்லி உடைத்திருக்கிறாள்‌ என்று. நான் லெனினாவை பார்த்துச் சிரித்தபடியே சொன்னேன், இந்தக் கோப்பை நாம் முதலாக வெளியே சென்ற போது வாங்கியது மறந்து விட்டாயா. வெடுக்கென கோப்பையைப் பார்த்தவள் ஆமாம் மறந்துவிட்டேன் என்றாள். அவள் அழத் தயாராகிற குரலாக அது இருந்தது. அதை உணரத் தொடங்கியதுமே எனது மார்புக்குள் இருந்த அந்த குறுகுறுப்பான பூரான் மெல்ல எழுந்து வாய் வழியாக வெளிவரத் துடித்தது. அது எனக்கு அருவருப்பாக இருந்தது ஆமாம் , லெனினா எப்போது அழத்தொடங்கினாலும் அந்தப் பூரான் முழித்துக்கொள்ளும். நான் அதை விரும்பமாட்டேன் ஆனாலும் அது என்னை மீறித் துடித்து, அதன் அசட்டுத்தனத்தை என்னிடம் பரவவிட ஆயத்தமாகும். அப்போது எனது கோபமான வார்த்தைகள் கட்டுப்படுத்த முடியாதளவில் அவளைச் சென்றடையத் துடிப்பதை அத்தனை அப்பட்டமாக உணர்வேன். ஆனால் இன்று அந்த பூரானை அடக்கி சிரித்தபடியே இங்கே வா லெனினா துணிகளை மடிப்போம் என்றேன். அவள் எழுந்தபடியே ஏன் என்று கேட்டாள். எங்காவது வெளியே போய் வரலாம் அது உனக்குமே கூட நன்றாய் இருக்குமென்று தோன்றுகிறது என்றேன். அதில் அவளுக்குமே கூட விருப்பமிருந்திருக்க வேண்டும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாது சொன்னாள் முடியாது நான் மன அமைதி பெற நீ அமைதியாக இருந்தாலே போதும். இப்போது அந்த பூரான் மீண்டும் எழப் பார்த்தது. நான் ஒன்றுமில்லை என்பதுபோல வாயை இறுக்க மூடிக்கொண்டேன். எதிரே இருந்த அறையின் இருளுக்குள் வேகவேகமாக சென்று மறைந்தவள் பெரும் கேவலோடு அப்பாவென்று கத்தினாள். எனது பூரான் கீழிறங்கிச் சுருங்கிக்கொண்டது. மார்பு வளைவுகள் அதற்கு ஏதுவான வழிகாட்ட மீண்டும் உறங்கத் தொடங்கியது. எனது கைகளால் என் கைகளை பின்னிக் கோர்த்தபடி அமர்ந்தேன் நடுங்கும் உடலை எப்படி சமாதானம் செய்வதென்று தெரியவில்லை, கூடுதலான இரண்டு கைகள் இருந்தால் என்னையே கட்டியணைத்துப் படுத்துக்கொள்ளலாம் போலத் தோன்றியது.


லாங்கூர் மீன்பிடிதளம் வெகு சிறப்பாக இயங்கத் தொடங்கியது அங்கிருந்த தொழில் குடில்கள் ஏற்றுமதி கூடங்கள் எப்போதுமே சுறுசுறுப்பான முகத்தை செழிப்பாகக் காட்டின. அத்தகைய வளமான வரத்துகளிலும் என்னவோ எங்கள் படகுகளில் மட்டுமே மீன்வரத்தில் குறையிருந்தது.இதனால் சோர்ந்த விக்டர் தனது படகுகளில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கத் தொடங்கினார். அது அவருக்கு சம்பளச் சிக்கல் இல்லாது தொழில் நடத்த ஏதுவாகுமென முடிவெடுத்தார். அவரோடு ஆரம்ப காலத்திலிருந்தே உடனிருந்த சூசையின் கருத்தையே இறுதியாக்கிடவும் முனைந்தார். சூசை அந்நாட்களில் அத்தனை அதிகாரமும் விரிந்த மார்புகளோடும் வலம் வருவார் எல்லோரும் அஞ்சத் தொடங்கினோம் அவரது கோபம் எங்களைத் தொட்டால் வேலை போய்விடுமென்று அவரின் எல்லா வகையான வார்த்தைகளுக்கும் தலைசாய்த்தோம். நிறைய நபர்களை பணி நீக்கினார். ஆனால் என்னை நீக்கவில்லை, அது ஏதோவொரு கரிசனம் போலத் தோன்றியது. நான் மீன்பிடிக்க ஆசைப்பட்டாலும், எடுபிடியாகவே இருந்த நாட்களது. என்னை நீக்காது அவர் விட்டுச் செல்வது மீன்பிடிக்கப் பழக என்னைத் தயார்படுத்தும் ஆர்வத்தைக் கொடுத்தது. வேகவேகமாக அதில் என்னை செயல்படுத்தத் தொடங்கினேன். இடைவேளைகளில் வலைப்பின்னல், வலைகளில் அடையாள பந்துகளைச் சரியான இடைவெளிகளில் பொருத்துவது. வலை மடிப்புகள் கலையாது வீசப் பழகுவது, தூண்டில் பொருத்துதல் என மேம்போக்குத் தனமான நுணுக்கங்களை எளிதே எனக்குள் கொண்டுவரப் பழகினேன். அனுபவம் சார்ந்த பிற மீனவர்களும் அதற்கு நிறையவே உதவினார்கள். அத்தனை எளிதே நான் ஈடுபாட்டுடன் தொடங்க என்னைத் தயார்படுத்தினாலும், எனக்கு மீன்களின் வாயிலிருந்து தூண்டில் நீக்குவது மட்டும் பிடிபடவேயில்லை. அது கடலையே திருப்பி போடுவது மாதிரியான வேலையாக இருந்தது. பல நேரங்களில் எனது கட்டைவிரலை பதம் பார்க்கும். உப்புத் தண்ணீரில் விரல் காயம் தீராது எரியும் அப்போதெல்லாம், வழிகிற ரத்தங்களில் இரவும், பகலும் தீப்பிடிக்கத் தொடங்கின.


லெனினா அந்த அறையைத் தவிர்த்து அழுகைக்குப் பிறகு என்னிடம் மீண்டும் வந்தாள். நான் உன்னை அதிகம் சிரமப்படுத்துகிறேனா எனக் கேட்டாள் . நான் இல்லை என்று யோசிக்காது உடனே சொல்லியிருக்க வேண்டும். எனது தாமதத்தை அவள் புரிந்துகொண்டாள். ஆனால் வெளிக்காட்டாது பதிலுக்காகக் காத்திருந்தாள். நான் அவளது கைகளைப் பிடித்து அருகிலே அமர வைத்தேன் அவள் மடியில் தலைசாய்த்தபடியே சொன்னேன். அப்படியெல்லாம் இல்லை லெனினா நீ என்னைச் சிரமப்படுத்துவதாக நான் உணரவில்லை, அப்படி உணர்ந்திருந்தால் எப்போதோ அதை வெளிப்படுத்தியிருப்பேன். அவள் எனது தலைமுடியைக் கோதினாள். ஆனால் நான் அழுகிறேன், அது உனக்கு எத்தகைய துயரமென்பதை உணர முடிகிறது, நானும் அந்த அழுகையை நிறுத்த வேண்டும் ஆனால் முடிவதில்லை. உன்னோடு பேசி சமாதானிக்க முயல்கிற நேரத்தில், இந்த அழுகை என்ற பிசாசு மட்டும் என் உடலில் எங்கிருந்து வருகிறதென்று தெரியவில்லை என்றாள்.

நான் அவளை நிமிர்த்தினேன் லெனினா அழுகை பிசாசு இல்லை, அதுவொரு மந்திர வார்த்தை. கோபம்தான் பிசாசு கோபத்திற்கு முன்னால் அழுவது எத்தனையோ நல்லது உன் கேவல்களில் வெளியாகிற புரிபடாத வார்த்தைகள் கோபத்தை விரட்டுகிறது அதுவொரு நல்ல பணிதான் என்றேன். அப்படியென்றால் உனக்கு நான் அழுவது பிடிக்கும் அதானே என மெல்லச் சீறினாள்.நான் இல்லை இல்லை என படபடத்தபடியே சொல்லி அமைதியாகி விட்டேன். இந்த வாய்கள் இப்படிதான் நானொரு அறிவு ஜீவன், தத்துவவாதி என்பதை நிரூபிக்கபோய் எங்காவது மாட்டிக் கொள்கின்றன. ஆனால் எனக்கு உண்மையிலே கோபத்தை விட அழுகை இன்னமும் கூட சாமர்த்தியமாகத் தெரிகிறது .


தொடர் பயணம் அதிகமான வருமானத்தைக் கொடுத்தாலும் அங்கு நிலைகொள்ள முடியாதென்றேதோன்றியது. படகுகளில் பயணிக்கிற போதும் எனக்கு லாங்கூர் சந்தையின் நினைவுகள் வந்தபடியே இருந்தன. அந்த வண்ண விளக்குகள் என்னை இரவுகளில் நிறையவே இம்சையித்தன. எனது கட்டை விரல் மரத்துவிட்டதாக உணரத்தொடங்கினேன். எனக்கு இப்போதெல்லாம் மீன்கள் இரையைத் தூண்டிலில் கவ்வி இழுக்கிற அசைவின் வேகத்தைப் பொறுத்து சுண்டும் திறன் வளர்ந்தது. எனது தூண்டில்களில் அதிகமான மீன்கள் சிக்கத்தொடங்கின ஆள்காட்டி விரலுக்கும் கட்டைவிரலுக்கும் இடையே நரம்பு துடிக்கிற வேகத்தை வைத்தே மீனின் தடிமன் வரை கண்டறிய பழகிக் கொண்டேன். என்னோடு பயணிக்கிறவர்களில் எனது கூடை மட்டுமே அதிகளவிலான மீன்களைச் சுமந்தபடியே இருந்தது எனது கால்கள் அகன்றபடி கைகள் பரபரத்துக்கொண்டிருப்பது மற்ற மீனவர்களிடையே பொறாமைப்பட வைத்தாலும் அவர்கள் என்னை உற்சாகமடையச் செய்யத் தவறுவதில்லை. அவர்களுடைய பேச்சும் ஆரவரங்களும் எனக்கு வியப்பாக அமைந்தன, அது எனக்கு சமயங்களில் எனது சோர்வைத் தவிர்க்கக் கூடியதாக இருந்தது. ஆனால் சூசைக்கு அது என்னவோ போல் தோன்றியிருக்க வேண்டும் அவர் எனது கூடை மீன்களால் நிரம்பும் போதெல்லாம் அவைகளை அவர் கூடைகளில் நிரப்பி எனக்கு சொற்ப மீன்களை மட்டுமே வைத்துச் செல்வார். நான் பிடித்த மீன்களை விக்டரிடம் காண்பித்து, பாராட்டுகளைப் பெற்று வந்தார். அந்த செயலைத் தடுக்க எனக்குள் மிகப்பெரிய பயமிருந்தது. என்னோடு இருந்த எல்லா மீனவர்களுக்கும் கூட அதை எதிர்க்கத் தைரியம் இல்லை.

காரணம் விக்டர் சூசையின் பேச்சை மட்டுமே நம்பக்கூடியவராக இருந்ததுதான். ஒருமுறை படகு ஆழ்கடலில் தனித்திருந்தது. எனது தூண்டிலில் மட்டுமே ஊலா வகை மீன்கள் தணித்து சிக்கிக்கொண்டிருந்தது, அது எனக்கு மட்டுமே நடக்கிற வித்தையைப் போல எல்லோரும் பார்த்தார்கள். அப்போது கீழ்த்தளத்தில் இருந்து யாரோ மேலே ஏறி வரும் சப்தம் கேட்டது, அது விக்டர் தான் என்பதை அறிந்த சூசை வேகவேகமாக எனது கூடை மீன்களை மாற்றினார். விக்டர் சரியாக மேலே வரும் போது அத்தனை மீன்களையும் அவர் பிடித்தது போல உடல் பாவனையளித்து விக்டரை பார்த்துச் சிரித்தார். விக்டர் மற்ற மீனவர்களின் கூடைகளை நோட்டமிட்டு என் அருகே வந்தபோது ஏதுமில்லாத என் கூடையைப் பார்த்து இந்த படகின் தற்போதைய ஒரே தூரதிஷ்டம் நீதான் என்றதும், என்னுள் எழுந்த அவமானத்தில் அந்த உப்பு கரிக்கின்ற காற்றின் அத்தனை நேர இசை ஒரே கனத்தில் அழுகிற சப்தங்களாக மாறுவதைத் தவிர்க்க முடியாததாக இருந்தது. விக்டர் கீழிறங்கியதும் திரும்பி சூசையைப் பார்த்தேன்கரு நிறத்தில் பூ வரைந்த சிலிக்கான் சட்டையில் ஒரு ராட்சச பருந்து மீன்களுக்குப் பதிலாக மனிதஉணர்வுகளை கொத்தி விளையாடியபடி பீடி அடித்துக் கொண்டிருப்பதைப் போல இருந்தது.


லெனினா வண்டியின் வேகத்தைக் குறைக்கச் சொன்னாள் அதற்கான லெனினாவின் நடத்தை வண்டியின் வேகத்தைவிடப் படு வேகமாக இருந்தது. அவசர அவசரமாக வண்டியை நிறுத்தி என்ன லெனினா என்று கேட்டேன். இந்த உலகின் மகத்துவமான எல்லா விஷயங்களுமே சிறு புள்ளியில் உடைந்து விடுகிறதுதானே என்று கேட்டாள். நான் வண்டியை ஓரமாக மெல்ல செலுத்திய படியே ஆமாம் லெனினா ஆனால் நாம் மகத்துவம் என நம்புகிற எல்லா விஷயங்களும் கூட சிறு புள்ளியிலிருந்துதான் ஆரம்பிக்கிறது. அதை அவள் ஏற்றுக்கொண்டது போல தலையை அசைத்தபடி பிறகு ஏன் நீ சூசையைக் காப்பாற்றவில்லை எனக் கேட்டபோது என்னால் பதில் சொல்ல முடியவில்லை. சொல்லப்போனால் அவள் அப்படிக் கேட்பாள் என்பதை எதிர்பார்க்கவில்லை எனலாம். அதை சமாளிக்க என்னை எப்படி வைக்க வேண்டுமெனத் திணறல் எடுத்தது. ஆளற்ற அந்தச் சாலையில் ஹாரனை இடைவிடாது அழுத்தினேன். லெனினா அந்த சாலையைப் பார்த்தாள், அங்கு சாலை வெகு தூரம்வரை போய்க்கொண்டிருந்தது.


ன்று மிக முக்கியமான தேவை என்னுள் காலையிலே ஊரத்தொடங்கியது, அது என்னவென்று அறியாத போதும் வேகவேகமாக ஊறியது. காலையிலே விக்டர் எல்லா பணியாளர்களையும் தரைதளத்தில் ஒன்று கூடச்சொல்லியிருந்தார். என்னோடு சேர்த்து சில பணியாளர்கள் காலையிலே வேலைக்குப் போவது போல குளித்து தயாராக வந்திருந்தோம். ஆனால் எனக்கு வேலைக்கு போகவெல்லாம் விருப்பமில்லை லாங்கூர் சந்தைக்குப் போனால் நன்றாய் இருக்கும் என்பதுபோலத் தோன்றியது. சந்தையில் யாரோ எனக்காகக் காத்திருப்பது போலத் தோன்றியது. பொதுவாகப் பகலில் சந்தைக்குப் போகமாட்டேன், அன்று என்னவோ தினவெடுத்தது.

விக்டர் எல்லா மீனவர்களையும் பார்த்து வணக்கம் வைத்தார். கடந்த மூன்றாண்டுகளில் நமது படகுகள் மீன்பிடியில் நன்றாக முன்னேற்றம் அடைந்திருக்கிறது உண்மையிலே இதற்குக் காரணம் நீங்கள் எல்லோரும்தான் என்றார். கைதட்டினார்கள் எனக்கு மூளைக்குள் முள் கம்பிகள் தைக்கப்படும் சப்தம் கேட்டது. அதிலும் சூசையின் மீன்பிடித் திறனை நாம் நிச்சயம் கொண்டாடியே ஆகவேண்டும், அவனைச் சிறப்பிக்கும் விதமாக எனது படகுகளில் ஒன்றை அவனது தனி பொறுப்பில் விடப்போகிறேன் என்றார்.இப்போது எல்லோரும் அதிகமாகக் கைதட்டினார்கள். எனக்கு மண்டை வெடிப்பது போல உணர்ந்தேன். இது போல இனி வரும் வருடங்களில் சிறந்த மீன்பிடியாளர்களுக்கு தனிப்படகு தலைமை தரப்படும் என கத்தினார்.

எல்லோரும் ஹேய் எனக் கத்தி உற்சாகமடைந்தனர். விக்டர் சூசையைப் பார்த்து உனக்கு யார் உதவியாளராக‌ வேண்டுமோ அவர்களைத் தேர்வு செய்யலாம் எத்தனை நபர்கள் வேண்டுமென்றுகேட்டார். சூசை தனது திமிர்தனமான மார்புகளை விடைத்து எங்களைப் பார்த்தார் அந்த மூர்க்கமான பார்வையும் அவனது அவலட்சண எண்ணமும் மறைந்திருந்த என்னைப் பார்த்து இவன்ஒருவன் மட்டும் போதும் ஓடாத குதிரைதான் பரவாயில்லை என்றான். நமட்டுத்தனத்தோடு அதை விக்டர் அதிசயித்து ஏதோ ஓடு உடைந்து வெளிவந்த ஒரு புது புழுவைப் பார்ப்பது போலப் பார்த்தது எனக்குள் ஏதோ மாதிரி வலித்தது. இப்போது கைதட்டல்கள் இல்லை ஆனாலும் என் மேனி முழுக்க சப்தங்கள் என் உடல் முழுக்க சுருங்கியது. மண்டைக்கு மேல் ஏதோ கிறுகிறுத்தது.

மறுநாள் வழக்கமான நன்னாள். மிதமான காற்று நிலா இல்லாத இரவு கட்லா வகைகள் கூட்டமாக அலைந்துகொண்டிருந்தது. அத்தனை கலங்கமற்ற நீரின் தெளிவில் இரைகளை மீன்கள் மேய்ந்து கொண்டிருந்தன. நானும் சூசையும் மட்டுமே அந்த தனித்த படகில் இருந்தோம். நான்மீன்களுக்காக இரைகளைத் தூண்டிலில் பொருத்தி வீசிக்கொண்டிருந்தேன். அப்போது சூசை படகின் உட்புற தொட்டியில் தேங்கியிருந்த நீரைப் பஞ்சினால் வெளியேற்றிக்கொண்டிருந்தார். மீன்கள் அதிகமாகத் தீண்டுவதும் தப்பிப்பதுமாக விளையாடிக் கொண்டிருந்தன. நான் முழுமையாக என்னை அதனுள் செலுத்திக் கொண்டிருந்தேன். அப்போது சூசை என்னை அழைத்தார், எதையோசொல்ல அத்தனை ரகசியமான குரலில் மெல்ல அழைத்தார். எனக்கு திரும்பக் கூட மனமில்லை, அவரது முகத்தைப் பார்க்க அருவருப்பாக இருக்குமென புரிந்தது அதனாலே திரும்பவில்லை. உள்ளுக்குள்ளே கோபமும் கூட கூடியிருந்தது. மேலும் சிலமுறை என் பெயரை உச்சரித்தார். நான் திரும்ப மாட்டேன் என்பதை அறிந்த உடனே சில நிமிட அமைதிக்குப் பிறகு நீரினால் கனத்த பஞ்சை எனது முதுகில் வீசி தாக்கினார். அதன் ஈரம் எனது முதுகை நனைத்து உள்ளாடை வரை இறங்கியது. அடங்கியிருந்த எல்லாக்கோபமும் தலைக்கேறியது அருகில் இருந்த அடிக்கட்டை ஒன்றைக் கையில் எடுத்தபடி அவரைத் தாக்க வேகமாகத் திரும்பினேன். ஆனால் நான் எண்ணிய எல்லா விதமான பிம்பமும் மாறுபட்டு சூசை படகில் ஓரத்தில் சாய்ந்தபடி இருந்தார், நெஞ்சைப் பிடித்தபடி வலியில் துடித்துக் கொண்டிருந்தார். நான் கட்டையைக் கீழே போட்டுவிட்டு சூசை என்னாச்சு உங்களுக்கு எனக் கேட்டேன். அவர் தனது கைகளை நீட்டி படகின் எஞ்சினை கரைக்கு திருப்ப சொல்லி சைகையித்தார்‌. அவரால் மூச்சு விட முடியவில்லை வேகமாகப் படகினை தட்டி ஆசுவாசத்தை வெளிபடுத்தினார். என்ன செய்வதென்று தெரியாது திகைத்தேன் அப்போது நான் வீசி வைத்திருந்த தூண்டில் ஒன்றில் மீனொன்று சிக்கி நரம்பு பந்து வேகவேகமாக சுழன்று ஓடிக்கொண்டிருந்தது. இருவரும் ஒரு சேர அதைப் பார்த்தோம் நரம்பின் எல்லை வந்ததும் நரம்புஅறுபட ஆயத்தமாகிற அந்த இறுகலில் கடலின் வேகமான காற்று கிதார் நரம்புகளை இயக்குவதைப் போல விட்டு விட்டு இசைத்தது. எனது முழு மனதும் ஏதோ தொந்தரவைக் கண்டு மொத்தமாகத் திசை மாறியது. நான் படகின் எஞ்சினை கரைக்குத் திருப்பினேன் வேகத்தைக் குறைத்து வைத்தேன். சூசைக்கு புரிந்துவிட்டது அவர் தன்னால் ஏதும் முடியாதென்பதைத் தலையை தொங்கவைத்துக் காட்டினார். என்னுள் ஒரு அசுரத்தனமான பாவனை அப்போது வெளியானது. எழுந்து கடலை சுற்றிப் பார்த்தேன் யாருமற்ற சமுத்திரத்தில் கரை போகும் வரை சூசைக்கு எஜமானனாக மனம் துடித்தது. அறுபட ஆயத்தமாகிக் கொண்டிருந்த நரம்பினை சுண்டி மீனை படகினை நோக்கி இழுத்தேன் நல்ல பெருத்த கிழ கட்லா அது நிறைய தூண்டில்களில் சிக்காமலே தப்பித்து வாழ்ந்திருக்க வேண்டும் அத்தனை துடிப்போடு இருந்தது அதன் வாயிலிருந்த தூண்டிலை அகற்றி சூசையின் அருகிலே போட்டேன் இருவரும் மெது மெதுவாக இறந்துகொண்டிருந்தார்கள். இப்போதும் விக்டரை ஏமாற்ற சூசை வரப்போவதில்லை என்பதை அறிந்ததும் ஒரு ராஜா தூண்டிலிடுவது போல தோரணையில் மீன்களைப் பிடித்து கரை செல்லும் வரை படகு முழுக்க குவிக்கத் தொடங்கினேன். சில முதலுதவிகளை சூசைக்கு நான் அளித்திருக்கலாம்‌ ஆனால் எதுவுமே செய்யவில்லை சூசையின் மேல் மீன்களைக் குவித்தபடி கரையை நோக்கி படகு சென்று கொண்டிருந்தது.


ந்த வாழ்வு எப்போதுமே சொற்ப வன்முறைகளைத் தனக்கே தெரியாமல் எப்படியும் வழங்கிவிடுகிறதுதான். அதை நேர்த்தியாகக் கையாளவும் கற்றுக் கொடுத்து விடுகிறது. வண்டி நேர் சாலையில் செல்லும் போதே இடையே வந்த தனிப்பாதை ஒன்றில் வளைந்தது. அந்த காட்டுப் பாதையில் சுற்றி அங்கங்கு சிறு நீர்த் திடல்களும் உடைந்த கட்டிடங்களுமாக நீண்டிருந்தது. அது அவனுக்கு லாங்கூரின் பழைய வர்ணனையை கருப்பு வெள்ளையாகக் காட்டியது. இருவரும் ஒரு உடைந்த பாலத்தின் முன் வண்டியை நிறுத்தினார்கள். அதன் மேல் வண்டி போக முடியாதென்பதை உணர்ந்ததும் நடக்கத் தொடங்கினார்கள். கடலாறை செடிகள் கூட்டம் கூட்டமாக செழித்திருந்தது, அதன் மேலேறி அவர்கள் செல்லும் போக்கு அத்தனை திரிதலை போல இருந்தது. குறிப்பிட்ட நாட்டுக் கருவைகளின் புதருக்குள் நுழைந்து நின்ற போது லெனினா வாயைப் பொத்தி அப்பாவென்று அழத்தொடங்கினாள். அவனுக்கு இப்போது பூரான் வெளிவரவில்லை. கல்லறையைப் பார்த்தான் சூசை தோற்றம் மறைவு என பொறித்து மினுங்கிக்கொண்டிருந்தது. அதன் மேல் நிறைய மெழுகுவர்த்திகள் உருகிய தடமிருந்தது. ஒரு முறை அந்த முழு கல்லறைகளையும் சுற்றிப் பார்த்தான், சூசைக்கு யார் இவ்வளவு மெழுகுவர்த்திகளைப் பொருத்தியதென்று அவனுக்குப் புரியவில்லை. பிறகு அவனே சொல்லிக்கொண்டான், சொல்ல முடியாது பிற கல்லறைகளில் எரிகிற மெழுகுவர்த்திகளை சூசை எடுத்து வந்து தனக்காக எரிய வைக்கிறவனாகக் கூட இன்னும் இங்கும் வாழ்ந்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை.


  • ச.துரை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.