தங்கக்குடம்

மணி தன் தாயாருடன் வாசலில் நின்று கொண்டிருந்தான். அன்று திங்கட்கிழமை, மணி ஒன்பது இருக்கும்.

அவன் தாயார் எட்டரை மணிக்குச் சமையலை முடித்து விடுவாள். அவனுக்கு பத்து மணிக்கு மேல் கல்லூரிக்குப் போனால் போதும். எனவே இருவரும் தெருவைப் பார்த்துக்கொண்டு நிற்பார்கள்.

அவர்கள் வீட்டுத் தெருமுனை திரும்பினால் சவாரி நாயகர் ஸ்கூல் இருந்தது. இவர்கள் இருவரும் நின்றுகொண்டிருக்கையில் சுமார் ஒன்பது மணிக்கு அந்தச் சுற்று வட்டாரத்தில் உள்ள மாணவர்கள் சிறு சிறு கூட்டங்களாகப் பள்ளிக்கூடத்திற்குச் செல்வார்கள். எட்டேகால் முதல் சிறுவகுப்பு மாணவர்கள் செல்வார்கள். பிறகு ஒன்பது மணிக்கு வளர்ந்த பையன்கள் போவார்கள். அதற்குப் பிறகு தெருவிலேயே எல்லோரும் ஆபீஸிற்குப் போய்விட்டார்கள் என்ற உணர்ச்சி வீட்டிலுள்ளவர்களுக்குத் தோன்றும்படி ஒரு சூழ்நிலை பரவுகையில் நாலைந்து பிரிவுகளாகப் பெண்கள் – சிறுமிகள், வாலைக் குமரிகள் என்ற தரத்தில் – செல்வார்கள்.

அன்றும் மாணவர்கள் பள்ளிக்கூடத்திற்குப் போய்க் கொண்டிருந்தார்கள். சில மாணவர்களை இருவருக்கும் தெரியும். இவர்கள் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே ஒரு கூட்டம் போய்க் கொண்டிருந்தது.

“டேய், சசி, அந்தக் கோழியைக் கச்சவடம் (விற்று) செய்தோ (விட்டாயா)?”

“ரவி, உன் காரியத்தை நீ பார்த்துக் கொண்டு போ. நேற்று நீ வீட்டுக்குத் தேங்காய் பிடுங்கினதைவிட நான் செய்தது ஒண்ணும் மிஞ்சிப் போகவில்லை.”

“அவன் கிடக்காண்டா, மணி, நேத்திக்கு நான் உங்க வீட்டுக்கு வரணம்டுதான் இருந்தேன். இன்னிக்கும் அங்கு ரொம்பத் திரக்கு (கூட்டம்) உண்டா?”

“டேய், ரவி அதிகம் ஒண்ணும் வச்சுக்காதே. நீ கோழியைக் கடத்தவோ, தேங்காயைப் பிடுங்கவோ என்ன வேணுமானாலும் செய்; ஆனா எங்க வீட்டுச் சமாசாரத்தைப் பத்தி மாத்திரம்…”

மணி என்ற பையன் முடிப்பதற்குள் அவனுடன் பேசிக் கொண்டிருந்த ரவி என்பவன் ரமணியின் அடுத்த வீட்டுக்காரனான அச்சுத நாயரைக் கண்டவுடன் பேச்சடங்கி ஒரு மரியாதை பாவத்துடன் பேசாமல் சென்றான். அவன் கூட இருந்தவரும் அவனைப் பின்பற்றினர். பிறகு ஒன்பது மணிக்கு இன்னொரு கூட்டம்.

“ஏ, ஜில், விஷயந் தெரியுமா?”

“ஏ, சாமி, உன்கிட்ட எத்தனை தடவைதான் சொல்றது, என்னை ஜில் என்று கூப்பிடாதே. சரி, சமாசாரம் என்ன?”

“சரி, கோபால் நாயர், கோச்சுக்காதே. நம்ம பூகோள ஆசிரியை ஜீனிக்குக் கல்யாணம்.”

“அதுக்கு உனக்கென்னடா?”

“டே, சாமி, நீ ஏண்டா அவன் கிட்டப் போய் இதெல்லாம் சொல்றே, என்னவோ போன வருஷம் எவனோ ஒத்தன் ஆரம்பிச்சான்னா…”

“ராமு, நீ என்கிட்ட உதை வாங்கிறதுக்கு அதிக நாள் இல்லை. நான் என்னவோ சுபகாரியத்தைச் சொல்ல வந்தா, போன வருஷம் நடந்த இழவு சமாசாரத்தையெல்லாம்…”

“நடந்தது ஒன்னும் இழவு சமாசாரம் இல்லைடா. எல்லாம் சுபசமாசாரம் தான்.”

அந்தக் கூட்டமும் போயிற்று. ரமணிக்கும் அவன் தாயாருக்கும் போன வருஷம் சவாரி நாயகர் ஸ்கூலில் அந்தப் பையன் விவரித்த சம்பவம் தெரியும். வேறொன்றுமில்லை. படித்துக் கொண்டிருந்த மாணவி ஒருத்தி பள்ளிக்கூடத்திலிருந்து நடத்தைப் பிசகிற்காக விலக்கப்பட்டாள். அவ்வளவுதான்.

மணி ஒன்பதரைக்கு கடைக் கூட்டமும் போய்க் கொண்டிருந்தது. சற்று ஆடம்பரமாக உடையணிந்திருந்த பணக்கார யுவதிகளான சுசீலா, கோமதி முதலியவர்கள் ஒரு சாரி, பிறகு அவர்களை விட ஆடம்பரமாக ஆனால் அவர்களைவிட ஒரு தரம் குறைந்த கமலா, விமலா முதலியவர்கள்; பிறகு தினசரிக் கூலி வாங்கிப் பிழைக்கும் குடும்பங்களைச் சார்ந்த பெண்கள், இந்தக் கடைசிக் கூட்டத்தில் ரமணி வீட்டு வேலைக்காரி கோமதியின் பெண் மாலதியும் இருந்தாள். அவள் தனியாக ஓரிருவருடன் மாத்திரம் பேசிக் கொண்டு சென்றாள். அவளிடம் அழகும் இல்லை; செல்வச் செழிப்பும் இல்லை; கோமதி சொல்வதிலிருந்து அவளுக்குப் படிப்பும் வரவில்லை என்றுதான் தெரியவந்தது. அதனால்தானோ என்னவோ, அவளைப் பற்றிப் பேசும் பொழுதெல்லாம், கோமதி அவளுக்குச் சீக்கிரம் கல்யாணம் செய்து வைக்கவேண்டும் என்று சொல்வாள். அவளைப் பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது. ரமணியையும் அவன் தாயாரையும் பார்த்ததும் அவள் ஒரு மரியாதை கலந்த புன்னகையுடன், ஆனால் தன் பேச்சைத் தவிர்க்காமல் முன்னோக்கிச் சென்றாள்.

அவள் போனபிறகும் ரமணியும் அவன் தாயாரும் சிறிது நேரம் நின்றார்கள். ஆனால் மாலதி போனவுடன் பள்ளிக்கூட உலகமே அஸ்தமித்துவிட்ட மாதிரி தோன்றியது தெருவெல்லாம். அமைதி புகுந்து சூறையாட, தாயார் சமையலறைக்குச் சென்றாள்; மகன் சாப்பிட ஆயத்தமானான்.

இது ரமணியின் வாழ்வில் ஒரு நாளின் ஒரு சாயை.

2

  நான் தான் ரமணி. என் தாயார்தான் கமலம். நான் வசிக்கும் தெருவின் முனையில் தான் சவாரிநாயகர் ஸ்கூல் இருக்கிறது. சசி, ரவி, மணி, சுசீலா, கோமதி, கமலா, விமலா, மாலதி – இவர்கள் எல்லோரையுமே ஒரு விதத்தில் இல்லாவிட்டால் இன்னொரு விதத்தில் எனக்குத் தெரியும்.

பெரிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள், நாலுவேலை செய்து சம்பாதிக்கும் “சிறிய” குடும்பங்களின் பிரதிநிதிகள், உடலை ஒரு விதத்திலோ அல்லது இன்னொரு விதத்திலோ உழைத்து வயிற்றைக் கழுவும் மக்களின் வாரிசுகள் – இவர்கள் தான் நான் மேலே விவரித்த வருங்காலப் பிரஜைகள்.

நான் மாத்திரம் என்ன? நானும் அவர்களைப் போல ஒருவன். என்னுடைய விலை மாதம் எண்பது ரூபாய். என் தொழில் கல்லூரிகளில் வேண்டாத மாணவர்களுக்கு விரும்பாமல் பாடம் ஓதுவது. ஆனால் எனக்குப் புஸ்தகங்களென்றால் ஒரு கிறுக்கு.

நான் கடைசியாக வாங்கின தமிழ்ப் புத்தகம், “பாரதி மொழிபெயர்த்த தாகூரின் சிறுகதைகள்” மலிவுப் பதிப்பு. எனக்குக் கடைசியாக ஏற்பட்ட “அனுபவம்” சவாரி நாயகர் ஸ்கூலுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. அதைத் தெரிவிப்பதற்குத்தான், சசி, ரவி, மணி, சுசீலா, கோமதி, கமலா, விமலா, மாலதி – என்று சுற்றிச் சுற்றி வருகிறேன். எனக்கு அவர்களைப் பற்றி என்ன தெரியும்? குறிப்பாக இவர்களில் சிலருக்கு. வாழ்க்கையில் நேரடியாக ஆயிரம் விஷயங்கள் தெரியும். ஆனால் எனக்கு வாழ்க்கையில் ஒரு தடவையாவது ரவியைப் போல மாற்றானுடைய முதலுக்குத் தனக்கும் அதிகாரபூர்வமான உடமை உண்டு என்று சர்வநிச்சயத்துடன் என்னால் உரிமை கொண்டாட முடியுமா? அல்லது அந்த பத்து வயதுச் சசியைப் போலத் தன் காரியத்தைச் சாதித்துக் கொள்ளப் பேரம் பேசவும், சண்டை போடவும், கணக்கில்லாத காரசாரமான வார்த்தைகளை உபயோகிக்கவும் எனக்குத் தெரியுமா? எனக்கு என்னதான் தெரியும்? நானும் அந்த மாலதியைப் போல அசடுதானா? மாலதி கூட அசடு இல்லை என்று நிரூபித்துவிட்டாளே? அதைச் சொல்வதற்குத்தானே இப்படிச் சக்கர வளையமாகச் சுற்றி வருகிறேன்.

3

  எனக்கு வேறு ஒருவரையும் தெரியாவிட்டாலும் என் தங்கையைத் தெரியும். அப்படித்தான் நான் நேற்று வரையில் நினைத்துக் கொண்டிருந்தேன். போனவாரம் என்றுதான் சொல்லவேண்டும் போல் தோன்றுகிறது – அவளுக்குப் பலரறிய மணம் நடந்தது. அடுத்தவாரம் அவள் வருகிறாள், முதல் பிரசவத்திற்கு!

நேற்று, போன வாரம், அடுத்த வாரம் என்பதெல்லாம் கடந்த வருஷத்தில் நடந்ததுதான். ஆனால் நினைவு என்னும் நதியில் நாம் முக்குளி இடுகையில் இன்றும், நாளையும், அகல, நேற்றும், சென்ற, கடந்த, மடிந்து மாய்ந்து மறையாத நாட்களும், வாரங்களும், மாதங்களும், வருஷங்களும்தானே மணமான பெண்களைப் போலப் பூரண எழிலுடன் நம் முன் வந்து நிற்கின்றன. நான் யாரைப் பற்றி எழுதுகின்றேன்? கடந்துபோன நாட்களைப் பற்றியா? தங்கையைப் பற்றியா? அல்லது சவாரி நாயகர் ஸ்கூலைப் பற்றியா? அல்லது மாலதியைப் பற்றியா? அல்லது என்னைப் பற்றியேதானா?

4

இவைகள் எல்லாவற்றைப் பற்றியும்தான். ஆனால் குறிப்பாக, சூக்குமமாக நான் எழுதுவதெல்லாம் என்னைப் பற்றித்தானே.

என் தங்கையைப் பற்றியும்தான். அவள் பெயரை உச்சரித்தவுடன் உடனே என் முன் அவளுடைய குண விசேஷங்கள் பவனி வருகின்றன. அவள் பெயர் தர்மு. தர்மு என்ற பெயரைச் சொன்னாலே, அசட்டுத் தன்மையற்ற ஒரு சுடரழகு என்று தான் வியாக்கியானம் செய்யவேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது.

எனக்கும் தெரியும்; அவள் சொல்லித் தெரியும். சொல்லாமல் இருந்தாலும் தெரிந்திருக்கும்.

பெண்மை என்பதற்கே தாய்மை என்பதுதான் அர்த்தம். இல்லையென்று சொன்னாலும் அதுதான் அர்த்தம்.

அப்படித்தான் தர்மு சொன்னாள். அழகு, படிப்பு, குணம் – என்னதான் இருந்தாலும் அவள் – அவள் என்றால் பெண், ஒருத்தி – பார்க்க விரும்புவதெல்லாம், தந்தை பெற்ற மகன் தன் ஆண்மையை ஸ்தாபிக்கத் தானும் ஒரு தந்தையாக விரும்புவதைப் போல தன் உதிரத்திற் கிளைத்து உடலைப் பாரமாக அழுத்தி உள்ளத்தை ஆராதனை செய்யும் ஒரு சிசுவின் முகார விந்தத்தைத்தான்.

ஆனால் வரித்த புருஷனுடன் வாழும் பொழுதுதான் தனக்கு என்று ஒரு பெயர் உண்டென்பதைச் சில சந்தர்ப்பங்களில் மறந்துவிடவேண்டும் என்று அவன் உணர்வதைப் போல் அவளும் உணர்கின்றாள்.

ஆனால் தர்மு சொல்வதைப் போல் இவையெல்லாம் பேச்சுக்கும் சிந்தனைக்கும் உதவுமேயன்றி, வாழ உதவாது. வாழ்க்கையில் வேர்விட்டுக் கொப்பும் கிளையுமாக நாம் தழைக்க விரும்பினால் நமக்கு வேண்டியதெல்லாம், வாக்கையும் சிந்தனையையும் தாண்டிய, மரத்திற்கும் மண்ணிற்கும் இருப்பது போன்ற ஒரு குருட்டுத் தைரியம்தான். ஏனென்றால் யாரிடத்திலும் எங்கும் ராம ராஜ்யத்தில் வண்ணான் இருந்தது போல், ஒரு ஜதை பரிகாசம் தோய்ந்த கண்கள் இருக்கத்தான் இருக்கின்றன.

வந்த மூன்று வாரங்களுக்குப் பிறகு தர்மு ஒரு அழகான ஆண் குழந்தைக்குத் தாயானாள்.

5

  நாட்டிற்குச் சுபிட்சமோ இல்லையோ என்பதைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் ஒரு வீட்டுக்கு ஒரு குழந்தையாவது இருப்பதுதான் வீட்டிற்குச் சுபிட்சம் என்று எனக்குத் தோன்றுகிறது.

இல்லாவிட்டால் நாம் ஆணும் பெண்ணுமாக எதிரும் புதிருமாகக் காலப்பரப்பில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு எவ்வளவு நேரந்தான் உட்கார்ந்துகொண்டிருக்க முடியும்?

தர்மு தாயாகிவிட்டாள்.

அவள் குழந்தையின் ஒவ்வொரு அங்க அசைவிலும் நாங்கள் என்னவெல்லாமோ கற்பனை செய்து கொண்டிருந்தோம். என்னென்ன வியாக்கியானங்கள்! முதல் மாதம் அவன் தாயின் மடிமீதே படுத்துறங்க விரும்பினது கர்ப்பப் பாத்திரத்தின் சூட்டிற்காக என்றார்கள். அவன் கரங்களை உதைப்பது பிரம்மாவிற்கு மண் குழைக்க என்றார்கள். அவன் திடீரென்று அழுவதை மண்ணுலகிற்கு வந்து விட்டதை நினைத்துக்கொண்டு என்றார்கள்!

6

  நானும் தர்முவும் உட்கார்ந்திருந்தோம். எங்கள் நடுவில் அவள் குழந்தை. குழந்தையின் மேல் எங்கள் கண்கள்! இன்னும் அதைப் பார்க்க ஜதை ஜதையாகக் கண்கள் வரும்! அது ஒரு வேடிக்கை.

அதை விட எனக்கு விசித்திரமாகப் பட்டது எங்கள் வீட்டு வேலைக்காரி கோமதி எங்கள் வீட்டுக் குழந்தையை ஒரு தடவையாவது தலையெடுத்துப் பார்க்காததுதான்.

நாங்கள் அவளை வேலைக்காரி என்றே நினைக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

அன்றொருநாள் அந்த அப்பாவி மாலதி அகாலமாகப் பகல் 11.30 மணிக்குத் தனியாக ஸ்கூலிலிருந்து திரும்பி வந்தபொழுது நானும் அம்மாவும் ஒரே சமயத்தில் “இவள் என்ன இப்பொழுது தனியாகப் போகிறாள்” என்று சொன்னது எனக்கு ஞாபகம் வந்தது.

மற்றொருநாள் அவள் பிற்பகல் இரண்டரை மணிக்கு அழுதுகொண்டே வீட்டுக்குச் சென்றதையும் நாங்கள் பார்த்ததுமின்றி, அதைப் பற்றிக் கோமதியிடம் கேட்கவும் செய்தோம். அவள் அதற்குப் பதில் மாலதிக்குத் தீராத வயிற்றுவலியென்று சொன்னதும், மாலதி தொடர்ந்து ஸ்கூலுக்குப் போவதை நிறுத்திவிட்டதும் எங்களுக்கும் ஞாபகம் வந்தது.

அவளுக்குப் பத்தியத்திற்கு என்று கோமதியும் சில பதார்த்தங்களை எங்களிடமிருந்து பெற்றுச் செல்வாள். நாங்கள் அவள் “குழந்தை” மீது, இவ்வளவு அன்பாக இருந்தும், அவள் எங்கள் வீட்டுக் குழந்தையை ஒரு தடவை கூடத் தலையெடுத்துப் பார்க்கவில்லை.

7

  நாளைக்குத் தர்மு போகிறாள்.

இன்று கோமதி குழந்தையைச் சீராட வந்தாள்.

ஆனால் சீராட வந்தவள் கூடவே ஒரு வாக்கியமும் சொன்ன பொழுதுதான் எனக்கு விஷயம் புரிந்தது.

“மாலதி பெற்ற தங்கக் குடமும் இதே மாதிரிதான் இருக்கு, அம்மா” என்றுதான் அவள் சொன்னாள்.

இதற்குத் தர்மு பதில் ஒன்றும் சொல்லாமல் தன் குழந்தையின் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு வேளை அவள் கோமதியால் சுட்டிக் காட்டப்பட்ட ஒற்றுமையை ஆராய்ந்து கொண்டிருந்தாளோ என்னவோ! சூழ்நிலையில் ஒரு வித வேதனை பொருந்திய மௌனம் வியாபித்திருந்ததை நான் உணர்ந்தேன். நான் திரும்பிப் பார்த்ததும் கோமதி அங்கில்லாததைப் பார்த்தேன்.

காரணமின்றியே நான் இருந்த அறையிலிருந்து வெளியே எட்டிப் பார்த்தேன். நிசப்தம் மாணவர்கள் பள்ளிக்கூடத்திற்குப் போய்விட்டார்கள் என்பதைப் பறையறைந்தது.

தெரு திறந்த நிர்வாண வெயிலில் கிடந்தது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.