தி. ஜா. என்கிற ஜானகிராமன் மாமா


ரு வாசகனாகப் பலரைப்போல் நான் தி. ஜா வை அறிந்தது என் இருபதுகளில். ‘சாவி’ பத்திரிகை புதிதாக வந்தபோது அதில் தி. ஜாவின் ‘அம்மா வந்தாள்’ பிரசுரம் செய்தார்கள். அதைப் படித்து அதிர்ந்து விட்டிருந்தேன். இப்படியும் ஒரு கதையா, இப்படி வேறு யாரேனும் தமிழில் எழுதி இருக்கிறார்களா என்று பல கேள்விகளை என்னுள் எழுப்பிய கதை அது. ஆசிரியர் சாவி அந்தக் கதை வெளியிட்டது குறித்து மிகப் பெருமையாகப் பேசியிருந்தார் என்றும் நினைவு. அதன் பின்னர் தி.ஜாவின் எழுத்துக்களைத் தேடிப் பிடித்து, படிக்கத் துவங்கி விட்டேன். ஒவ்வொரு கதையும் நாவலும் ஒரு விஷயத்தைப் பேசினாலும், ஒவ்வொன்றிலும் ஊர்மணம் நிரம்பி வழிந்தாலும், அடிநாதமாக அவர் எழுத்துக்களில் ஆண் பெண் உறவில் உள்ள உள, உடல் ரீதியான சிக்கல்களை அவர் கையாண்டவிதம் அதுவரையில் தமிழில் நான் படித்திராதது. இருபது வயதில் எனக்கு அவரின் எழுத்துக்களின் மேல் காதல் வந்ததற்கு ‘அந்த’ விஷயங்களை அவர் கையாண்டதுதான் காரணம்.

ஏறக்குறைய அவருடைய எல்லா எழுத்துக்களையும் பிற்காலங்களில் நான் படித்துவிட்டேன். இப்போதும் அவ்வப்போது படிக்கிறேன். ஆச்சரியமும் புதுமையும் குறையவே இல்லை. உறவுச் சிக்கல்கள் மட்டுமன்றி பல விஷயங்களையும் போகிற போக்கில் விவரித்து, சொல்ல வந்த பொருளின் மெய்ம்மையைக் கடந்து உண்மைக்குள் ஊடுருவும் தி.ஜாவின் திருஷ்டிக்கு ஈடாகத் தமிழில் எழுதியவர்கள் மிகக் குறைவே. அந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கவும் முடியாது. அவர் எழுதிய பயண நூல்கள் ‘அடுத்தவீடு ஐம்பது மைல்’, ‘சூரியன் உதிக்கும் தேசம்’ மற்றும் சிட்டியுடன் இணைந்து எழுதிய ‘நடந்தாய் வாழி காவேரி’ நூல்களும் அத்தனை சிறப்பு வாய்ந்தவை.

அவருடைய எழுத்துக்களைப் பற்றி எல்லோரும் எவ்வளவோ எழுதி விட்டார்கள். மேலதிகமாகச் சிறப்பு செய்யும் அவசியமோ, அதற்கான தகுதியோ இல்லாதவன் நான். இந்த வருடம் அவருடைய நூற்றாண்டு என்றவுடன், சில நினைவுகளை அசைபோடுகிறேன்.  அதிர்ஷ்டவசத்தால், என் பிறப்பின் பயனால் அவரை அருகிருந்து பார்த்து, பேசிப் பழகிய அனுபவங்கள் எனக்குண்டு.

அப்பா கவிஞர் திருலோக சீதாராம் (1917-1973) இருந்த பொழுது எங்கள் வீட்டிற்கும் அப்பாவின் அச்சாபீஸுக்கும் வராத எழுத்தாளர்களே இல்லை என்று சொல்லிவிடலாம். திருச்சி வந்தால் அப்பாவைச் சந்திக்காமல் எந்த எழுத்தாளரும் செல்வதில்லை. அவர் காலமான ஆண்டில் எனக்கு பதினேழு வயது. அதற்குள்ளாகவே அநேகமாக அத்தனை பெரும் எழுத்தாளர்களையும் நான் வீட்டிலோ அச்சாபீஸிலோ பார்த்துவிட்டிருந்தேன். அதிலும் கும்பகோணம் வெற்றிலைப் பெட்டி எழுத்தாளர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். கரிச்சான்குஞ்சு, எம்.வி.வி, தி.ஜா இவர்களை விசேஷமாகச் சொல்லவேண்டும். கரிச்சான்குஞ்சு எங்கள் வீட்டிலேயே சில மாதங்கள் தங்கியிருந்தார். எம்.வி.வி. அப்பா காலமான பின்பும் கூட எப்போது திருச்சி வந்தாலும் தவறாமல் அச்சாபீஸ் வருவார்.

தி.ஜா எங்கள் வீட்டில் வந்து தங்கியிருந்த ஒரு நிகழ்ச்சியும், பின்னர் சிட்டியுடன் அச்சாபீஸ் வந்திருந்த நாளும் என் நினைவில் உள்ளவை. சிட்டியுடன் அலுவலகம் வந்திருந்ததைப் பற்றி ‘நடந்தாய் வாழி காவேரி’யில் அவர்களே எழுதிவிட்டார்கள். தி.ஜா எங்கள் வீட்டில் ஒரு நாள் கழித்ததை நினைத்துப் பார்க்கிறேன்.

1969 அல்லது 1970ஆக இருக்கலாம். திருச்சியில் குஜிலித் தெருவில் ஒரு குஜராத்தி பிராமணர் வீட்டில் ஒரு போர்ஷனில் நாங்கள் குடியிருந்தோம். இடப்புறம் மூன்று அறைகளும், வலப்புறம் மூன்று அறைகளும், இடையில் பெரிய ஹாலுமாய் இருந்த பெரிய வீடுதான். இடப்புறத்தில் வீட்டு ஓனரும் வலப்புறத்தில் நாங்களுமாய் குடியிருந்த வீடு. பின்கட்டில் தகரம் வேய்ந்த குளியல் அறை, மூலையில் இந்தக் காலத்தில் நினைத்தும் பார்க்க முடியாத ட்ரை லெட்ரின். வீட்டிற்குள்ளேயே கிணறும், முனிசிபல் குழாயும் இருந்தது மிகப் பெரிய சௌகரியம். பெருமையும் கூட. அங்கே நாங்கள் இருந்த போதும் சரி, அதற்கு முன்னும் பின்னும் இருந்த வீடுகளும் சரி, இதற்குமேல் பெரிய வசதிகள் உள்ள வீடுகளாய் இருந்ததில்லை. இன்னும் சௌகரியக் குறைவான வீடுகளிலும் இருந்ததுண்டு.

ஆனால் எழுத்தாளர்கள் வீட்டிற்கு வந்தால், எந்த வீடாயினும் இரவு உணவுக்குப் பின் ராவெல்லம் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருப்பார்கள். விடிகாலையில் ஒரு கோழித்தூக்கத்திற்குப்பின் மீண்டும் அரட்டை தொடங்கி விடும். அந்தந்த வீடுகளில் எத்தனை அசௌகரியம் இருந்தாலும் யாரும் அதைப் பொருட்படுத்தியதாக எனக்கு நினைவில்லை. எத்தனை பெரிய எழுத்தாளர்களெல்லாம் வந்திருக்கிறார்கள்!

அப்படித்தான் ஒருநாள் குஜிலித்தெரு வீட்டில் இருந்தபோது தி. ஜா வந்திருந்தார். மாடியில் இரண்டு அறைகள் உண்டு. மற்ற இடமெல்லாம் மொட்டை மாடிதான். வெளியில் ஜமுக்காளம் விரித்துதான் நாங்கள் குழந்தைகள் எல்லோரும் படுப்பது வழக்கம். இரவு உணவுக்குப் பின் மாடி அறைக்கு அப்பாவும் தி. ஜாவும் சென்றுவிட்டர்கள். இரவெல்லாம் அவர்கள் பேசிக்கொண்டே இருந்தது வெளியில் எங்களுக்குக் கேட்டுக்கொண்டே இருந்தது.

தி.ஜா அப்பொழுது மிகப் பிரபலமான எழுத்தாளர். ஆனால் அவர் வருவதும் உரையாடுவதும் அருகில் இருப்பவர்க்கும் கேட்காது. அத்தனை சன்னமான குரல். அப்பாவின் குரல் பெருத்து ஒலிக்கும் குரல். சிரிக்கும்போது வெடிச்சிரிப்பு ஓசையுடன் வரும். இருவரும் பேசுகிறார்களா அன்றி அப்பா மட்டும் பேசுகிறாரா என்று சந்தேகம் வரும்படியான சம்பாஷணை இரவு முழுவதும். நாங்கள் சிறியவர்கள் ஆதலால் அவர்களுடனே இருந்து பேச்சைக் கேட்க வாய்ப்பில்லை.

காலை எழுந்ததும் இயல்பாகக் காபி சாப்பிடுவது, காலைக் கடன்,  குளியலறை,  என்று எல்லாம் நடந்துவிடும். புதிய வீடு, புதிய அசௌகரியம் என்று எதுவும் இருந்ததாக நினைவில்லை. இன்று நினைத்துப் பார்த்தாலும் ஆச்சரியம் குறையவில்லை. இத்தனை சுவாதீனமாக நண்பர்கள் வீட்டில் புழங்க அவர்களுக்கு முடிந்திருக்கிறது. கு. ப. ராவின் குழுவினர் அனைவருக்கும் இந்த சுலபப் பார்வை வாழ்க்கையைப் பற்றி இருந்தது என்று நினைக்கிறேன்.

1981ல் தி. ஜா தில்லியில் ஆல் இந்தியா ரேடியோவில் பெரிய பதவியில் இருந்தார். அப்போது தில்லி சென்றிருந்தேன். என் வங்கி நண்பர் ஒருவருடன் தங்கியிருந்தேன். தி.ஜாவைக் கண்டிப்பாகப் போய்ப் பார்த்து வா என்று என் சித்தப்பா சொல்லி அனுப்பினார். அந்தக் காலங்களில் நான் தி. ஜாவை ஆர்வத்துடன் படித்து வந்தவன். நான் மட்டுமல்ல, என் நண்பர்கள் அதிகம் பேரும் அப்படித்தான். தில்லியில் நான் தங்கியிருந்த வீட்டு நண்பரும், தினமும் அவரைப் பார்க்க வரும் மற்ற வங்கி நண்பர்களும் (எல்லோரும் ஆபீஸராகப் பதவி உயர்வு பெற்று தில்லிக்கு மாற்றலாகி வந்த கல்யாணமாகாத இளைஞர்கள்) தி. ஜாவின் விசிறிகள். அந்தக் குழுவில், ஒரு மாலை அரட்டைப் பொழுதில், நான் மறுநாள் தி. ஜாவை சந்திக்க இருப்பதைச் சொன்னேன்.

நேற்று நடந்ததைப் போல் நினைவுக்கு வருகிறது. அங்கிருந்த ஜெயசீலன் என்ற நண்பர் இருக்கையிலிருந்து துள்ளி எழுந்துவிட்டார்.

“என்ன, என்னது? தி. ஜானகிராமனா? இங்கதான் டெல்லில இருக்காரா? என்ன சார் சொல்றீங்க?” என்று என் அருகில் வந்து என் கைகளை இறுக பற்றிக் கொண்டார். தி. ஜாவின் பெயரைச் சொன்ன மாத்திரத்தில் ஜெயசீலனுக்கு ஏற்பட்ட புல்லரிப்பை இப்போது நினைக்கும் போதும் எனக்கும் அதே புல்லரிப்பு உண்டாகிறது. அவருக்கு என் பின்புலத்தை விளக்கி, தி. ஜாவுக்கும் என் அப்பாவுக்கும் இருந்த உறவை விளக்கினேன். உடனே பிடித்துக் கொண்டு விட்டார். “சார், நானும் வரேனே. என்னையும் கூட்டிட்டு போறீங்களா, ப்ளீஸ்?” என்ற அவரின் வேண்டுகோள் ஒரு கட்டளையாகவே இருந்தது.

அவர் வேலை செய்து கொண்டிருந்த கனாட்ப்ளேஸ் கிளையின் அருகில்தான் தி. ஜா தங்கியிருந்த கர்ஸான் அபார்ட்மெண்ட்ஸ் இருந்ததால், வங்கியிலிருந்து நடையாகவே சென்றுவிட்டோம். போகும் வழியில் எல்லாம் நண்பர் மந்திரித்து விடப்பட்டவர் போல் ஒரு ஆர்வம், அச்சம், வேகம், எதிர்பார்ப்பு என்று கலவையாகப் பேசிக்கொண்டே வந்தார். தன் ஆதர்ச எழுத்தாளனைக் கண்டு பேசப் போகிறோம் என்று அவர் நினத்தும் பார்த்திராத வாய்ப்பு கைகூடும் தருணமது.

ஏழாவது மாடியில் குடியிருந்தார் என்று நினைக்கிறேன். அழைப்பு மணிக்கு அவரே வந்து கதவைத் திறந்தார். அறிமுகம் இல்லாமலே “வாங்கோ” என்று உள்ளே அழைத்துச் சென்று அமர வைத்தார். பத்து பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நான் பார்த்திருந்த அதே உருவம். அதே சன்னமான குரல். நட்பான புன்னகை. கூட வந்த ஜெயசீலனை அறிமுகம் செய்து வைத்தேன். சொல்லாமல் கொள்ளாமல் புதிய மனிதரை நான் வீட்டிற்குக் கூட்டி வந்ததைப் பற்றி எந்த வித்தியாசமான முகபாவமும் இல்லை. சிநேகமாக அவரையும் உட்காரச்சொன்னார். உள்ளே திரும்பி, “சீதாராமன் பிள்ளை வந்திருக்கார் பாரு” என்று சன்னமான குரலில் அறிவித்தார். அவர் மகள் காபியுடன் வந்து என்னிடம் அப்பாவைப் பற்றிச் சில நினைவுகளைப் பகிந்துகொண்டார். என் அப்பா காலமாகி 8 ஆண்டுகளுக்குப் பிறகு அப்போதுதான் அவரைச் சந்திக்கிறேன்.

விவரமாகக் குடும்ப நலன் பற்றி விசாரித்தார். என் பதில்களினூடே அவர் கேட்ட கேள்விகளில், எங்கள் குடும்பம் பற்றிய தகவல்கள் பலவற்றை அவர் முன்னமே அறிந்திருந்தார் என்பது தெரிந்தது. நேர்த் தொடர்பில் இல்லையென்றாலும், நிலைமையைப் பிறர் மூலம் அறிந்துகொள்ளும் அக்கறை அவருக்கு இருந்ததை அறிந்து கொண்டேன். நான் அவருடைய எழுத்துக்கள் குறித்து எதையும் பேசவில்லை. அருகில் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்த ஜெயசீலனை நோக்கி அவருடைய வேலை, தில்லியில் அவர் வசிக்கும் பகுதி பற்றியெல்லாம் விசாரித்தார். “ ஜனக்புரி இங்கேர்ந்து ரொம்பத் தூரமாச்சே, எப்டி வரேள்?” என்று கேட்டுவிட்டு, அவரே, “அதான் நெறைய பஸ் போறதே” என்று பதிலும் சொல்லிக்கொண்டார். ஜெயசீலன் அவர்முன் ஒரு மகாசுவாமியின் முன் பக்தனைப் போல் அமர்ந்து அவர் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். “சார் நான் உங்க கதைகள் எல்லாம் படிச்சிருக்கேன். உங்கள மாதிரி யாராலயும் எழுத முடியாது சார்” என்று ஜெயசீலன் சொன்னதற்கு, சிரித்துக் கொண்டே அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், “என்னைவிட நன்னா எழுதறவா எவ்வளவோ பேர் இருக்காளே” என்றார்.  ஒரு மணிக்கும் மேல் அவரோடு இருந்தோம். சிறிய சிற்றுண்டிக்குப்பின் எங்களை வழியனுப்பி வைத்தார். குறிப்பாக நண்பரிடம், “இங்கேதானே இருக்கேள், எப்ப வேணா வாங்கோ. போன் பண்ணிட்டு வாங்கோ” என்றார்.

தன்னைப் பற்றிய எந்த மிகை எண்ணமும் இல்லாமல், புகழின் உச்சத்தைத் தொட்டு, வாசகர்கள் அனைவரையும் பக்தர்களாகக் கொண்ட ஒரு மகா எழுத்தாளன் எந்த விதமான தற்பெருமையோ தன்வியப்போ இன்றி, தன்னைப்பற்றிப் பேசவே கூசும் மனிதனாக இருந்தார். நண்பர் ஜெயசீலன் வெளியில் வந்த பின்னும் மயக்கத்தில் இருந்து மீளவில்லை. “ என்ன சார், இப்பிடி? எவ்வளோ பெரிய எழுத்தாளர் இவ்வளவு சிம்பிளா இருக்கார்” என்று நூறுமுறை சொல்லிவிட்டார்.

ஒரு வாசகன் தன் மனம் கவர்ந்த எழுத்தாளனைச் சந்திக்கும் நேரத்தில் தன்வசமிழந்து போவதை அன்று பார்த்தேன். உண்மையில் அந்த அனுபவம் வாசகனின் வாழ்வில் முக்கியமான தருணம்தான். நான் அப்பாவின் நண்பர் என்ற முறையில் அவரை அந்தக் கால வழக்கப்படி “மாமா” என்றுதான் இயல்பாக அழைத்தேன். அவர் மக்களையொத்த வயதுடையவன் என்றாலும் அவர் என்னை ‘வாங்கோ’ என்றுதான் அழைத்தார். அவருடைய பழக்கம் அப்படி என்றுதான் நினைக்கிறேன், வயது குறைந்த யாரையும் ஒருமையில் அழைக்காமல் மரியாதையுடன் அழைப்பது. ஆனால் அவர் அப்பாவுக்கு எழுதும் கடிதங்களில் அப்பாவை ஒருமையில் அழைத்துதான் நான் பார்த்திருக்கிறேன். அஞ்சலட்டையில்தான் (அந்தக் காலத்தில் ஆறு பைசா) அவர் எழுதுவார். “சீதாராமா, வா போ” என்றுதான் மொழி இருக்கும்.

இந்த இரண்டு சந்திப்புகளன்றி, வேறு சில விஷயங்களும் என் நினைவில் உள்ளன.

தி. ஜா புட்டபர்த்தி சாய்பாபாவின் பக்தர். என் உறவின் முறையில் சிற்றப்பா ஒருவர் T.A. கிருஷ்ணமூர்த்தி என்று இருந்தார். அப்பாவுக்கு மிக அணுக்கமான உறவினர். நல்ல ரசிகரும் கூட. அவரும் சாய்பாபாவின் பக்தர். பலரோடும் கடிதத் தொடர்பில் இருந்தவர். ராஜாஜி, சுப்புடு, கல்கி, தி. ஜா என்ற நீண்ட  கடித நண்பர்கள் பட்டியல் அவருக்குண்டு. அவர் ஒருமுறை சாய்பாபா பற்றி வெளிநாட்டு பக்தர் ஒருவர் ஆங்கில சஞ்சிகை ஒன்றில் எழுதிய கட்டுரை ஒன்றை அப்பாவுக்கு அனுப்பி அவருடைய கருத்தை அறிய விரும்பினார். தன் கருத்தை அடுத்த சிவாஜி இதழில் ஒரு கட்டுரையாகவே அப்பா எழுதிவிட்டார். அப்பா பாபாவின் பக்தர் அல்லர். அவருடைய கருத்து பாபாவைப் பற்றிய வியப்பில்லா ஒருவரின் நேர்மையான எதிர்வினையாக அமைந்திருந்தது. அந்தத் தருணத்தில் தி.ஜா அப்பாவின் கட்டுரையைப் பார்த்துவிட்டு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அப்பா அதை அப்படியே கிருஷ்ணமூர்த்திக்கு அனுப்பிவிட்டார். தி. ஜாவின் அந்தக் கடிதத்தை, எல்லோரும் படிக்கும் வகையில் தன் மகளிடம் கொடுத்து நல்ல கையெழுத்தில் படியெடுத்து பெட்டகம்போல் கிருஷ்ணமூர்த்தி வைத்திருந்து எனக்கு அவருடைய இறுதிக் காலத்தில் அதை வழங்கிவிட்டார். அந்தக் கடிதம் இதோ:

தி. ஜானகிராமன்   

புதுடில்லி -1

 

அன்புள்ள திருலோகம், அநேக மங்களம். ஆவணி சிவாஜி வந்தது. உன் தலையங்கம் என்னை வியப்பில் ஆழ்த்திவிட்டது. நாலைந்து நாட்களுக்கு முன்பு “அமிர்தஸ்ய புத்ரா:” என்னும் தலைப்பில்  புட்டபர்த்தி ஸத்ய ஸாயிபாபா எப்பொழுதோ நிகழ்த்திய ஒரு பிரசங்கத்தின் சில பகுதிகளைத் தமிழில் மொழிபெயர்த்து பாதி முடிந்தபின்பு சிவாஜியின் ஆண்டுமலருக்கு அனுப்பலாம் என்று முடிவு செய்தேன். பின்பு பிரசாந்தி நிலையத்தின் அனுமதி பெறவேண்டும் என்றும் தாமதமாகலாம் என்றும் நினைத்து, பிறகு வேறு ஒரு satire எழுதி முந்தாநாள் உனக்குப் போஸ்ட் செய்தேன். இன்று பிரசங்கத்தின் மொழிபெயர்ப்பை முடித்துவிட்டு யோசித்துக் கொண்டிருந்தேன். நீ பிரசுரிப்பாயோ மாட்டாயோ என்ற ஐயப்பாடுடன். சத்ய ஸாயிபாபாவிடம் ஈடுப்பட்டுள்ள T.R. முரளீதரன் என்ற A.I.R. டைரக்டர் (திருச்சியில் முன்பு இருந்தவர்) யாருக்கு இதை அனுப்பப் போகிறாய் என்று கேட்டார். உனக்கு என்று சொல்லி – திருலோகமும் ஒரு ஸாயிபாபா போல்தான். சிற்சில prophets குள்ளமாக ஆகிருதியில் இருப்பார்கள். ஆனால் தெய்வாம்சத்தால் மிக உயரமாகப் பார்வைக்கே – (புற) தோன்றுபவர்கள் – அகத்தோற்றத்தின் உன்னதத்தால் புறமும் நெடிதாகத் தோன்றும் – தோரணையும் அப்படியேதான் என்று சொல்லி உன்னை உதாரணம் சொன்னேன். இன்று மாலையில் அதை ஆபீஸில் வைத்து, நாளைக்கு ஒரு நகல் எடுத்து புட்டபர்த்திக்கு அனுப்பி, அசலை உன்னிடம் அனுப்பலாம் என்று நினைத்துக் கொண்டே வீடு வந்ததும் சிவாஜியைப் பார்த்தேன். புரட்டியதும் திகைப்பாய் இருந்தது. நான் சத்ய ஸாயிபாபாவைப் பற்றியோ வேறு சில விஷயங்கள் பற்றியோ சந்தேகம் வரும்போது அவருடைய பிரசங்கங்களில் எந்தப் பக்கத்தையாவது புரட்டினால் திடீரென்று அந்த சந்தேகத்திற்கு விளக்கம் தரும் ஒரு பத்தி வரும். Coincidence எத்தனைதான் வரும்? நூற்றுக்கணக்கில் வராது. இன்று நான் சந்தேகப்பட்டபோது உன் தலையங்கத்தைப் படித்தேன். நீயும் ஒரு அதிமானுடன் ஆதலால் அந்த பிரமாணக்குரலுடன், நிச்சயத்துடன் நுட்பமான தர்சனத்துடன், உன் தலையங்கம் எனக்கு வேதவாக்காக முழங்குகிறது. ஆகவே நீ ஒதுக்கமாட்டாய் என்ற நிச்சயத்துடன் நாளை மறுநாள் ‘அமிர்தத்தின் புதல்வர்களை’ அனுப்புகிறேன். நான் இதைத் தேர்ந்தெடுக்கக் காரணமும் உன்னுடைய அமிர்த சபைதான்.

 

நமஸ்காரம்.

 

-தி.ஜா

மேலே காணும் தி. ஜாவின் கடிதம் மிக முக்கியமானது என்று நினைக்கிறேன். அவருக்கும் அப்பாவுக்கும் மிக நீண்ட நெருக்கமான நட்பு மட்டுமன்றி, ஒருவர் மேல் ஒருவருக்கு ஆழ்ந்த உளமார்ந்த மதிப்பும் இருந்ததற்குச் சான்று இந்தக் கடிதம். நான் நேரில் கண்ட அளவில் இருவரும் ஒருவர் தோள்மேல் ஒருவர் கைபோட்டுக் கொண்டு வளையவந்தாலும், வெடித்துச் சிரித்து வெற்றிலையும் புகையிலையும் போட்டுக் குதப்பினாலும் அவரவர் படைப்பாற்றல் மற்றும் சிந்தனகள் மேல் பெரும் நம்பிக்கையும் அடுத்தவர் ஆற்றல் மற்றும் அறிவின் மேல் பெரும் மதிப்பும் வைத்திருந்தவர்கள். எந்தவிதப் பாசாங்கும் இன்றி அதை வெளிப்படுத்தியவர்களும் கூட.

இந்தக் கடிதம் 1972 செப்டம்பர் மாதத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும். தி. ஜா சொல்கிற ‘அமிர்தஸ்ய புத்ரா:’ மற்றும் தலைப்பில்லாத satire உம் சிவாஜியின் 1972 ம் ஆண்டுமலரில் வெளிவந்தன. அதுதான் அப்பா வெளியிட்ட இறுதி ஆண்டுமலர். அடுத்த ஆண்டுமலரின் போது அவர் உயிருடன் இருக்கவில்லை.

தி. ஜா சொல்கின்ற பகடிக் கதை கூட அந்தக் காலத்தில் கவனம் பெற்றுவந்த ‘புதுக்கதை’யைப் பகடி செய்து எழுதியது. தி.ஜாவின் அடையாளத் திறமை முழுதும் காணப்படும் கதை. அதற்கு ஒரு குட்டி முன்னுரையும் அதைவிடக் குட்டிப் பின்னுரையும் உண்டு.

 ஜானகிராமன் மாமா பணி ஓய்வு பெற்றுச் சென்னை வந்துவிட்டார். சென்னை செல்லும்போது அவரைச் சந்திக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். எதிர்பாராமல் ஒரு சிறிய நோய்வாய்ப்பட்டு 1982ல் காலமாகிவிட்டார். தமிழ் உலகிற்குப் பெரும் நஷ்டம். ஆனால் அவரிடம் கேட்டால் சிரித்துக்கொண்டே ‘அப்படியெல்லாம் ஒண்ணுமில்லே. லாபம் வேணும்னா எதாவது இருக்கலாம்’ என்றுதான் சொல்லுவார்.


 – சுப்ரமணியன் சீதாராம்

10 COMMENTS

  1. This Janakiraman is perhaps the only writer in Tamil who handled sensitive relation ship narratives with aplomb.But I am deeply moved by your narration of your experiences with T J R.I am lucky that I had the chance to be with you on different occasions fro Summer house, Delhi Rajendar nagar, Vijayanagar Bangalore and in Madras.I am deeply moved by the hospitality of your family members and your wife Bavant. That you remember me really lifts my spirits esp during these turbulent times.No doubt you were blessed to be born to HREAT Thirulokaseetaram.But I am also lucky to have a friend who had connections with Mahakavi Bharathi’ family and all leading Tamil poets and writers

  2. The friendship between T.J and ‘Trilokam’ is interestingly recalled by the latter’s son, Subramanian Sitaram, who himself, I know, used to reel off one or two delightful essays for Sivaji, when he, still a teenager, abandoned his studies (at which he was excellent) and courageously took over the magazine’s editorship after his dad had died so suddenly. The actual letter that TJ wrote to Trilok as reproduced by Subramanian is a really fascinating document and should prove a veritable treasure for the Tamil literati. The deep affection and respect that TJ and Trilok had for each other is beautifully brought out in this piece.
    Tailspark: Would have loved to read the Thalaiyangam that ‘Trilokam’ wrote, which so enthused TJ, as well.

    • Thanks Ganesh. I took over the ‘management’ of Shivaji after appa’s passing away and not ‘editorship’. That was a responsibility shouldered by Sekkizhar Adippodi T N R. Thi Jaa actually meant ‘Ilakkiya Padagu’ essay on Saibaba though he has written as ‘Thalaiyangam’. That Ilakkiya Padagu essay on Baba was included in the second edition published in 2000

    • Thanks Ganesh. I took over the ‘management’ of Shivaji after appa’s passing away and not ‘editorship’. That was a responsibility shouldered by Sekkizhar Adippodi T N R. Thi Jaa actually meant ‘Ilakkiya Padagu’ essay on Saibaba though he has written as ‘Thalaiyangam’. That Ilakkiya Padagu essay on Baba was included in the second edition published in 2000

  3. அற்புதமான கட்டுரை. மிகுந்த நன்றிகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.