திரிசடையின் கவிதைகள்: பிரபஞ்ச தரிசனமும் பெண் கற்பும்

மறைந்த கவிஞர் திரிசடை பற்றிய சிறு அறிமுகத்தைத் தந்த பின் கவிதைகளை அணுக நினைக்கிறேன்.  திரிசடையின் இயற்பெயர் சாந்தா, சாந்தா சுவாமிநாதன். நவீன தமிழ் எழுத்தின் முன்னோடிகளில் ஒருவரான நகுலனின் தங்கை அவர் என்பது வாசகர்கள் பலருக்கும் தெரிந்திருக்கும். இவ்வுறவைக் குறிப்பிடும்போது ஒரு தகவலையும் பகிரவேண்டியிருக்கிறது. கவிஞர் திரிசடையின் கவிதைத் தொகுப்புகளைத் தேடி அலைந்த போது கவிஞர் கிருஷாங்கினி அவர்களைத் தொடர்புகொண்டேன். அப்போது அவர் முக்கியமான ஒரு தகவலைச் சொன்னார். நகுலன் ஒரு சமயத்தில் வருத்தப்பட்டாராம், பல எழுத்தாளர்களைப் பற்றி எழுதியிருக்கிறேன், ஆனால் திரிசடையைப் பற்றி ஒன்றும் எழுதவில்லை என்று. அவருக்கு என்ன தயக்கமோ, இல்லை, தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களைப் பாராட்டக் கூடாது என்ற நிலைப்பாடு எடுத்திருந்தாரோ என்னவோ தெரியவில்லை. நகுலன் பெரிதாக அவரைப் பற்றி ஒன்றும் எழுதவில்லை. ஆனால் திரிசடையின் ‘பனியால் பட்ட பத்து மரங்கள்’ தொகுப்புக்கு நகுலன் 1977இல் சிறிய முன்னுரை எழுதியிருக்கிறார். அதில் அவர் இவ்வாறு எழுதுகிறார்:

“இந்தக் கட்டத்தில்  ‘திரிசடை’யின் கவிதைகள் புஸ்தக வடிவமாக ஏன் வர வேண்டும் என்று ஒரு சிலராவது கேட்கலாம். ஏன் ‘திரிசடை’கூட என்னிடம், எனக்காக நான் எழுதிய கவிதைகள் புஸ்தக வடிவம் பெற வேண்டுமா என்று கேட்டதாகத்தான் என் நினைவு,” எனக் கூறிவிட்டு மேற்கொண்டு எழுதுகிறார்: “இக்கவிதைகளைப் பற்றி எழுதுகையில் க.நா.சு. இலக்கியத்திற்கு —நாம் படைக்கும் இலக்கியத்திற்கு — ஒரு இந்திய உருவம் வேண்டும் என்று சொன்னது நினைவில் வருகிறது. இக்கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்தவை, அமெரிக்காவின் இயற்கைச் சூழ்நிலை பற்றியவை. இத்துடன் – இது ஒரு சிறந்த அம்சம் என்பது —இக்கவிதைகள் மரபு பிறழாதவை — மரபைப் பல விதமான சூழ்நிலைகளில் நிறுத்தி அதன் விவிதாம்சங்களை ஒரு நுணுக்கத்துடனும் ஆழத்துடனும் வெளிக் காண்பிப்பவை.”

நகுலனின் இந்தக் கூற்றுகளில் சில தாவல்கள், நாம் நிரப்பிக்கொள்ள வேண்டிய சில வெற்றிடங்கள், சில விடுபடல்கள் இருக்கின்றன. உதாரணமாக, இந்திய உருவத்துக்கும் அமெரிக்க இயற்கைச் சூழ்நிலைக்கும் என்ன தொடர்பு? மரபு என்பது எதைக் குறிக்கிறது? ஒருமையான அல்லது பன்மையான சமயம், பண்பாடு சார்ந்த மரபையா, எழுத்து, இலக்கிய மரபையா? கூடவே, மரபை எழுதுதல் எவ்வகைப் பெண்பால்தன்மையை நமக்குக் காட்டித் தருகிறது என்ற கேள்வியும் எழுகிறது.  மரபை எழுதுதல் தேசங்களுக்கு இடையிலான தொடர்புறுத்தல்களாக, அல்லது விளக்கங்களாக எவ்விதம் விளங்குகிறது,  தவிர, எவ்வகையில் புலம்பெயர்தலைப் பேசும் இக்கவிதைகள் நவீனத்துவமாக உருவம் பெறுகின்றன போன்ற கேள்விகளையும் இக்கவிதைகளை முன்னிட்டுக் கேட்க தோன்றுகிறது. இவற்றில் சில கேள்விகளை ஒரு முதல் முயற்சியாக இக்கட்டுரை அணுகப் பார்க்கிறது.

திரிசடை கேரள கலாசாலையில் ஆங்கிலத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றவர். திருமணமாகி அமெரிக்காவில் வசித்தவர். இரண்டு பிள்ளைகள் உண்டு. ‘பனியால் பட்ட பத்து மரங்கள்’ நூல் அட்டையில் “திரிசடையின் கவிதைகள் அவர் தம் தாய் வழியாகப் பெற்ற ஒரு அனுபவ – அனுபூதி ஞானம் பின் நிற்க ஒரு சுய –ரூபத்தில் சுய – பரிமாணத்தில் உருவானவை” என்றொரு குறிப்பு இருக்கிறது. யார் எழுதியது இதை எனத் தெரியவில்லை. ஆனால் நவீனக் காலகட்டத்தில் தனிமனித சுயம் என்பதை ஓர்மையுள்ள சுயமாகக் (coherent self) கருதுவதில் நம்பிக்கை இருக்கும் யாரோதான் இதை எழுதியிருக்க வேண்டும். ஆனால், இதற்கு மாறாக, திரிசடையின் பல கவிதைகளில், குறிப்பாக இயற்கை முன்னிலைப்படுத்தப்படும் கவிதைகளில் நாம் காண்பதென்னவோ சுயம் கலைத்தலை நோக்கி நகர்கிற யத்தனங்களையும்தாம்.  இத்தகைய யத்தனங்களை அவரது பல கவிதைகளில் முதல் வாசிப்பிலேயே நாம் காண்கிறோம்.

இதைப் பற்றி மேற்கொண்டு சொல்வதற்கு முன்னால் பொதுப்படையான ஓர் அறிமுகமாக திரிசடையின் பாடுபொருள்கள் பற்றிச் சற்றுப் பார்க்கலாம். முற்றிலும் அகமயமான கவிதைகளுக்கு மாறாக — அகமயமான கவிதைகளுக்குத் தமிழில் முக்கியமான முன்னோடி நகுலன் என்பதை இங்கே நினைவுகொள்ள வேண்டும் — பல வகையான கதைகள், உணர்வுகள், தளங்கள், மனிதர்கள், தெய்வங்கள், புனிதர்கள் முதலியோர் திரிசடையின் கவிதைகளில் இடம்பெறுகின்றனர். சிவன், கண்ணன், பராசக்தி, அன்னை மேரி, கிறித்து, நந்தனார், ராமகிருஷ்ணர், விவேகானந்தர், சாந்தனு, தருமன், துரியோதனன் போன்ற மகாபாரதக் கதாபாத்திரங்கள், செர்ரி, ப்ளம், ஹனி டியூ மெலன் போன்ற பழவகைகள், சைவ உணவு ஆராதனை, அன்னை தெரஸா, ஓமான் நாட்டு மலைகள், காசி, ஜப்பானின் கியோட்டாவின் புத்தர் சிலைகள் இப்படிப் பற்பல. அதேபோல மனிதர்களும்தாம். ‘எங்கள் வீட்டுப் பெண்’ கவிதையில் கணவனின் சின்னத் தங்கை கமலம் பற்றிய குறிப்பு, ‘ஈ.டி.யின் கருத்தும் விளங்கிவிட்டது’ என்ற ஒரு கவிதையில் பதினோரு மாதக் குழந்தை பேத்தி பற்றி வருகிறது. ‘படரும் பாசம்’ என்கிற கவிதையில் கேரளத்தில்  அவரோடு படித்து, பின்னர் கர்த்தரின் மணமகளாக மாறிய ஆங்கிலோ இந்தியப் பெண் சிநேகிதி பற்றி, ‘பரமனின் பித்தலாட்டமே’ கவிதையில் மைத்துனியைப் பற்றி. ‘தனிமை’ கவிதையில் தன் மகனின் தோழனான வெள்ளைக்காரன் ஒருவனைப் பற்றி, ‘ஒரு சகோதரி’ கவிதையில் சகோதரர்கள் பற்றி… இவை சில எடுத்துக்காட்டுகள்.

மனிதர்களைத் தவிரப் பல்வேறு உயிர்கள், குண்டு அணில்கள், குரங்குகள், தவிட்டுக் குருவிகள் உள்ளிட்ட பறவைகள், எறும்புகள், சிலந்தி… இப்படிப் பலவும் அவர் கவிதைகளில் நடமாடுகின்றன. இத்தகைய  பற்பல கவிதைகளும் வெறும் உணர்வுப்பதிவுகளாக மட்டும் தேங்கி விடுகின்றன என்பதைக் குறிப்பிட வேண்டிய தேவையிருக்கிறது.

நோய், குறிப்பாகப் புற்றுநோய் அவர் கவிதைகளில் பேசப்படுகிறது. புற்று நோயைச் சந்தித்தவர் திரிசடை என்பது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். ‘வெறும் நரஜன்மங்கள் மட்டுமே’  என்ற கவிதையில்

உடல் பூராகவும் சிதள் புற்றால் மறைக்கப்

பட்ட ரத்நாகரன் என்ற வேடன்

உன் புகழ் பாடத் தெரியாமல் பாடியும்

வால்மீகியானது அந்தக் காலம் …

 

இன்றோ என்னில் புற்றாக நோய் படர

அதை அநு நிமிடம் உணர்ந்து

அதில் ஊறி ஊறிப் போய் நிற்கும்

நினைவுகளின் தகிப்பைத்

தாங்க வொணாது

என அவர் அனுபவித்த நோய், வாதையின் பதிவாகிறது. போலவே, ‘வேண்டியதில்லை கண்கள்’ என்ற கவிதை, “கடும் நோயால் / கார்க்கோடக விஷம் போல / கருகி நின்ற என்னை” என நோய் பற்றிய சுயவிவரிப்பாக வெளிப்படுகிறது.  இப்பேசுபொருள்களைத் தாண்டி, அல்லது இவற்றோடு ஊடாடி என்னைச் சற்று ஈர்த்தவை வெளி பற்றிய அவரது கவித்துவ விசாரணைகளே. நமக்குப் பரிச்சயமான இருவகை வெளிகளை அவர் கவிதைகளில் நாம் பார்க்கிறோம். ஒன்று, வீட்டு வெளி, இன்னொன்று இயற்கை உள்ளிட்ட புறவெளி. ஆனால் திரிசடையின் கவிதைகளின் முக்கிய அம்சம் புலம்பெயர்ந்த அமெரிக்க வாழ்க்கையோடு இயைந்திருக்கும் வீடு, புறவெளிகள் இரண்டையும் இந்தியத் தொன்மங்கள், அதிகமாக இந்து மதத் தொன்மங்கள் மற்றும் ஞாபகக் கதையாடல்கள் மூலமாக மீள் உருவாக்கம் செய்வதே. இத்தகைய மீள் உருவாக்கத்தில், அபூர்வமாக, புறவெளி பிரபஞ்ச தரிசனத்தை நோக்கி நகர்வது நடக்கிறது.  .

இந்த வகை எழுத்து நகுலன் குறிப்பிட்டது போல மரபில், குறிப்பாக இந்து சமய மரபில் துலக்கம்கொள்கிறது என்றாலும் கிறித்துவ சமய மரபையும் சில இடங்களில் நாம் காண்கிறோம். இது  “கிழக்கத்திய”, “மேற்கத்திய” பண்பாடுகளுக்கான தொடர்புறுத்தலைச் செய்வதாகவும் இருக்கிறது.  அதே நேரத்தில், அவர் கவிதைகளில் வருகிற தேசங்கள், பொதுவாக அவை கொண்டிருக்கும் தனித்தன்மைகளை மீறி எல்லாருக்குமான ஒரு உலகத்தைக் கண்டடைவதாகவும் இருக்கிறது. எல்லார்க்குமான உலகம் என்பதில் மனிதர்கள் மட்டுமல்ல, மனிதர்களற்ற ஜீவராசிகளும் உண்டு. பிரபஞ்ச தரிசனம் என்று நான் சொல்வது அதனால்தான். இங்கே  உள்ளொளி, தரிசனம் என்பவற்றை அரூபச் சொற்களாக நான் பாவிக்கவில்லை. சமயவியலில் emic category ஆக, அதாவது மக்கள் மத்தியில் புழங்கும் ஒரு வகைமையாக, கருத்தாக்கமாக எவ்வாறு தரிசனம் என்கிற சொல் பயன்படுத்தப்படுகிறதோ, அதே வகையில் கவிதையை வாசிக்க உதவும் கருவியாகப் பயன்படுத்துகிறேன். இதை விளக்கும் வகையில், என் கூற்றுக்குப் பொருண்மையான எடுத்துக்காட்டாக விளங்கும் ஒரு கவிதை இது: 

~மஞ்சள் மரம்

எதிரே எட்டி நின்றது  “மஞ்சள் மரம்”

ஏற்றிவிட்ட தீபம் போல்,

ஒளியை மேலும் கீழும்

எண்டிசையும் பரப்பிக்கொண்டு.

நீண்ட உறுதியான நெடும் தூண்போல்

நின்றது மரம்.

தூணின் நிறமோ

எங்கள் நாட்டின் கோயில் ஸ்தம்பத்தை

நினைவுக்குக் கொண்டுவந்தது

இருபக்கமும் மேலும் கீழும்

தூணைச் சுற்றிப் பற்றிநின்ற

இலைகளோ தகதகக்கும் தனித்தங்கம்

மஞ்சட்பொடி கணபதி

மஞ்சட்பட்டாடை

மாங்கல்ய நூல்

பள்ளிக்குச் சிறுவர்களை அழைத்துச் செல்லும் இந்நாட்டு பஸ்

வீதியில் ஓடும் நீண்ட மஞ்சள்கோடுகள்

என்ற ஞாபகப் பட்டியல் விரிய

எல்லாவற்றையும் மீறி நின்றது இந்த மஞ்சள் ஜோதி

பூமியாம் அன்னை அவளுக்கு

மவுனமாகப் பக்தன் ஏற்றிவைத்த

கற்பூரக் கனகத்தட்டு போல்

தொட்டு வணங்கவும்

கண்களில் ஒத்திக்கொள்ளவும்

சொல்லாமல் சொல்லி அழைக்குதே

என் மஞ்சள் மரம்.

இந்து சமய மரபின் பொருள்கள், கடவுள்கள், குறியீடுகளை ஒட்டிப் புறவெளியை மீள் உருவாக்கம் செய்கிறார் கவிஞர். ஆனால் இந்த உருவாக்கத்தில் புலம்பெயர்ந்த அமெரிக்க நிலத்தின் மஞ்சள் நிறப் பொருட்களும் குறியீடுகளும் இதில் கலந்து  hybrid ஆன காட்சியைப் படைக்கின்றன. Cultural hybridity என்பது நவீனப் புலம்பெயர் வாழ்வின் இன்றியமையாத ஒரு பண்பு. இப்படியானதொரு காட்சியை ‘தரிசனம்’ எனும் சமயச் செயற்பாட்டுக்குள் கொண்டுவருகிறார் கவிஞர். கவிதைசொல்லிக்கு மஞ்சள் மரம் கற்பூரக் கனகத் தட்டு போல இருக்கிறது. அது கவிதைசொல்லியைத் தொட்டு வணங்க அல்லது கண்களில் ஒத்திக்கொள்ள அழைப்பது போலிருக்கிறது. இந்து சமயக் குறியீடுகள் இந்தக் கவிதையில் இருந்தாலும் இந்தக் கவிதையைப் பொறுத்தமட்டில் வணங்குதல் எனும் செயற்பாடு பூமி என்னும் அன்னையைப் பற்றியதாக இருக்கிறது. இயற்கைக்கான வழிபாடு என்றுதான் இதைக் கொள்ள முடியும்.

கொடிமரமாக, கற்பூர தீபமாக இருக்கும் மரம் வேறு சில கவிதைகளில்  இறையாகக் கூறப்படுகிறது. 

~ஓக் மரம்

கடவுளை நேரில் பார்க்கவில்லை

கல்லூரி சென்ற காளைப் பருவப் பிள்ளைகளின்

போக்கு பார்த்தாலும் புரியவில்லை

சிக்கலான பஸிலும் போட முடியவில்லை

ஓயாத டிவி நிகழ்ச்சிகளும் பிடிக்கவில்லை

நினைத்துப் பார்த்தால் –

நேரில் நெடுமால் போல

நிமிர்ந்து நிற்கும் எனது ஓக் மரங்கள்

இக்கவிதையில்,  ‘அமெரிக்க வாழ்க்கை’ என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாவிட்டாலும், பெற்ற பிள்ளைகள் அந்நியமாகி இருக்கும் வாழ்வு காட்டப்படுகிறது.  சிக்கலாகி இருக்கும் நவீன வாழ்வுக்கு மருந்தைப் போல், ஆறுதலைப் போல், நெடுமால் என நின்றிருக்கும் மரங்களின் வெளி காட்டப்படுகிறது. கவிதைகளில் மரங்களெனும் காட்சி  இறையாகவே மாறுவதைப் போல, இன்னொரு கவிதையில் யோகியாக மாறுகிறது தவிட்டுக் குருவி.

 ~தவயோகி

கண்ணெதிரே தெப்பமாக நனைந்த

தவிட்டு நிற உடலும்

கருப்பு சாந்து  கோபி போலத் தொங்கும் வாலில்

ஈரம் சொட்டப் 

பறவை ஒன்று

அவனது சிருஷ்டி உலகத்தில், பரந்த

பச்சை மரகதக் காடாக விரிந்த வானத்தில்

ஒன்றிவிட்டதைக் கண்டேன்

ஏனோ அது என் கருத்தில் தரித்து நின்றது 

கீதை, நாராயணீயம்

தேவாரம் திருமந்திரம்

ஓதும் நீ வெறும் முடுக்கிவிட்ட யந்திரம்

தவிட்டுப் பறவைதான் தவயோகி. 

போலவே, திரிசடை ‘குறியொன்றுமில்லாமலே’ ( ‘குறையொன்றுமில்லாமலே’?)  என்ற மற்றொரு  கவிதையில் தோத்திரங்களைக் கடிந்துரைக்கிறார்:  “சுருண்டுவிட்ட வாலைக் / கடித்து நீட்ட முயலும் நாய் போல் / நானும் உறவு கொண்டேன் / கீதை ராமாயணம் பாரதம் திருவாசகமென்று.”

திரிசடை

இந்து சமயக் குறியீடுகள் அல்லாத சில கவிதைகளும் அவரிடத்தில் உள்ளன. கிறித்துவம், பைபிள் சில கவிதைகளில் குறிப்பிடப்படுகின்றன. உதாரணமாக, ‘போகவிருக்கும் நான்…’ என்கிற கவிதையில், சமையற்கட்டைத் தேடி வருகிற அணில் கதாபாத்திரம். வாலைத் தூக்கி, மூக்கால் பணியாரம் தேடும், குருவிகளைக் கோபத்தோடு விரட்டும் அணில் அது. “உச்சி வேளையில் / கன்னிமேரி பிரார்த்திப்பதுபோல் / கைகளை மேல் தூக்கி  உன் வெள்ளைப் பஞ்சு வயிற்றை / எனக்குக் காட்டி நீ இருக்கும் அழகை / நான் எப்படித்தான் சொல்வது?”

அந்த அணில் இறந்துவிடுகிறது. தேனீக்கள்  அதன் கண்களை  மொய்க்கின்றன. அணிலோடும் கன்னிமேரியோடும் கவிதைசொல்லி கொள்ளும் நேசத்தை எடுத்துரைக்கும் கவிதையாகவும் இது உள்ளது.

திரிசடையின் கவிதைகளில் மரங்கள் இறையாக மட்டுமில்லை, அல்லது இறையைப் பிரதிநிதித்துவம் செய்வதாக மட்டுமில்லை. கவிதைசொல்லியின் உடலார்ந்த சுயமாகவும் அவை  வெளிப்படுகின்றன. இத்தகைய வெளிப்பாட்டை இங்கே முன் குறிப்பிட்ட கவிதைகளோடு வைத்து வாசிக்கும்போது,  புறவெளி என்பது கவிதைசொல்லியின்  சுயம் கரைந்துவிடும் வெளியாகவும் கவிதையில் உருவாகிறது. 

~பனியால் பட்ட பத்து மரங்கள்

கையில் 

10 விரல்கள் – ஏதோ ஒரு கோர்வை

எதிரிலோ

பனியால் பத்து, பட்ட மரங்கள்

ஏதோ ஒரு வரிசை

கீழே கரும் கூரைகள் 

விரல்களைப் பார்க்காமல்

ஊர்ந்து செல்லும் 

பலவர்ண வானின் அடியில்

விசுவ ரூபமாய்

நீங்கள் நிற்பதை

உவந்து, உவந்து பார்த்து

ஊமையானேன். 

இந்தக் கவிதை உடனடியாக நமக்கு வேறோர் எழுத்தாளருடைய வரிகளை ஞாபகப்படுத்தும். வேறு யார், நகுலன்தான்:

நினைவு ஊர்ந்து  செல்கிறது 

பார்க்கப் பயமாக இருக்கிறது 

பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை.

ஆனால், இரு கவிதைகளும்தாம்  எத்தனை வித்தியாசப்படுகின்றன! நகுலனின் வரிகளில் ஒருவனுக்கு அவன் நினைவு. மெதுவாக ஊர்வதைப் பார்த்து பயம் வருகிறது. நவீன வாழ்க்கை முன்வைக்கும் தனிநபர், அவர் தனிமை,  தன் ஞாபகத்திலிருந்தும் கூட அன்னியமாகும் தன்மை ஆகியவற்றைத்தான் நகுலனின் கவிதை உடனடியாக முன்னிறுத்துவது. ஆனால், திரிசடையின் கவிதை வேறுபட்ட உணர்வனுபவத்தைக் காட்டித் தருகிறது. கவிதைசொல்லியின் பத்து விரல்கள், ஒன்றைப் போல் ஒன்றில்லாதவை, பத்து மரங்களாகின்றன. பனியால் பட்டுப் போன மரங்கள் விரல்களுக்கு என்னவோர் அற்புதமான உவமைப் பொருத்தம்! குளிரில் விரல்கள் மரத்துப்போய் மரமாகிற தன்மை, அமெரிக்கா போன்ற பிரதேசங்களுக்கே உரித்தான தன்மை, இங்கே கவிதையில் உள்ளிடை. கைகளின் பத்து விரல்களும் வெளியே பத்து மரங்களாகி நிற்க வானம் வர்ணஜாலத்தோடு மேலே ஊர்கிறது. ஊர்கிற வானத்துக்கு மரங்களின் மேல் எந்தக் கவனமும் இல்லை. நகுலனின் கவிதையில் வருகிற அச்சத்துக்கு மாறாக, இங்கே கவிதைசொல்லியின் மனத்தில் உவகை பெருகுகிறது.

நினைவு என்பது ஒருவரின் உள்ளே இருக்கிறது என்றபோதும் வெளியே இருக்கிற ஒன்றாய், அவர் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் அச்சுறுத்தி ஊர்வதாய் நகுலனின் கவிதையில் வருகிறது. திரிசடையின் கவிதையிலோ உடல் உறுப்புகள், அதாவது விரல்கள். வெளியே இருக்கும் மரங்களாய்த் தோற்றம் கொள்ள, மிதக்கின்ற வானத்தின் வர்ணஜாலம் காட்சியாகிறது.

நகுலனின் கவிதை வரிகள் சுயம் குவித்தலில் கவனம்கொள்கின்றன என்றால், திரிசடையின்  கவிதை வரிகள் உடலை இயற்கையாக்கி நினைவெனும் சுமையை, விஷத்தைத் தள்ளிவைத்து வானத்தை இயற்கை-உடலின் மேல் மிதக்கவிடுகின்றன. தனிமனித சுயத்தின் கலைப்பு இயற்கை வாயிலாக இங்கே சாத்தியமாகிறது.  “வானின் அடியில் விசுவ ரூபமாய் நீங்கள்” என்பதில் ”நீங்கள்”  இறையைச் சுட்டுவதாகக் கொள்ளலாம். என்றாலும் ”நீங்கள்” என்பதை கவிதைசொல்லியின் ”நானாக” பொருள்கொள்ளவும் முடியும். கவிதையில் ”நான்” என்பது பிறிதொன்றாவதை, அத்தகையதொரு மாற்றத்தை,  மரங்களாகும் விரல்கள், அல்லது விரல்களாகும் மரங்கள் சாத்தியப்படுத்துகின்றன.

எவ்வாறு  இயற்கை எனும் புறவெளிக்கு சுயம் தள்ளப்பட்டு, கரைக்கப்பட்டு உருமாற்றப்படுகிறதோ, அதே போல புறவெளி உள்நுழைந்து அகம் முழுக்க வியாபிப்பதை முன்வைக்கும் கவிதையையும் திரிசடை எழுதியிருக்கிறார்.  ‘ஜொலிப்பு’ என்கிற இந்தக் கவிதையிலும் “நீயும் நானுமற்ற”  நீ என்ற ஒன்றை நோக்கிய நகர்வைக் கவிதை கூறுகிறது.

~ஜொலிப்பு

  அந்தி நேரத்தில்

வாய் பிளந்த சுறா மீன்

போல் ஆகாசத்தில் நீ

ஜொலிக்க

கார்மேகம்

மேலும்

கீழும்

உள்ளிலும்

நிறைந்தது.

மறுபடியும்

ஜொலிப்பது

மேகம் பின் தொடர

நீயும்

நானுமில்லாமல்

நீ மாத்திரமே.

திரிசடையின் கவிதைகளில் புறவெளி என்பது உவகையின், இறைமையின் வெளியாக இருக்கையில், வீடு என்பதோ பழக்கமான, சொல்லப்போனால் தேய்வழக்குகளாலான குடும்ப அல்லது சிநேகிதக் கதையாடல்களின் பரப்பாக புனையப்படுகிறது. புறவெளியில் தன்னைக் கலைத்துக் கொள்கிற சுயத்தை இங்கே நாம் பார்க்க முடிவதில்லை. மாறாக, தெளிவாக பேரன், மகன், சிநேகிதர் போன்ற உறவுகளோடு, அவற்றைக் கொண்டாடி, அத்தகைய உறவுகளில் தன்னைக் கவிதைசொல்லி நிறுத்திக்கொள்வது நடக்கிறது. அதே நேரத்தில் பண்பாட்டில் வழக்கமான வியந்தோதப்படும் பெண் அடையாளம் வலியுறுத்தப்படுகிறது. ஓர் எடுத்துக்காட்டு, ‘கிடைப்பது அரிதே!’ என்ற கவிதை. கவிதைசொல்லி குழந்தை பெற்று வீட்டுக்கு வந்தபின் உதவவரும் ஒரு பெண்ணைப் பற்றியது இக்கவிதை. அவரது மற்ற சில கவிதைகளைப் போல, தான் விட்டுவந்த நாட்டின் வழக்கங்களை அமெரிக்காவோடு ஒப்பிட்டு உயர்த்திப் பேசுவதைக் கவிதை செய்கிறது. வீட்டுக்கு வந்திருக்கும் பெண்ணின்  குணநலன்களைச் சித்தரித்துவிட்டு மேற்கொண்டு அவள் பேசும் பழங்கதைகளைக் கவிதை குறிப்பிடுகிறது. நிறைவாக, “மின் அடுப்பில் / திடீர் சமையல் பக்குவ பதார்த்தங்கள் / நிறைந்து கிடக்கும் இந்நாட்டில் / ஏதோ சமைத்தும் சாப்பிட்டும் விடலாம் / ஆனால் அவள் சொல்லும் கதைகள் / கடைகளில் தேடினாலும் / கிடைப்பது அரிதே! /காசு கொடுத்தாலும் இல்லையே!” என ஏங்கி முடிகிறது.

இந்திய நிலப்பரப்பின் கதையாடல்களை உயர்த்திச் சொல்கிற தொனியைக் கைக்கொள்கிறது இக்கவிதை. மேலும், இக்கவிதை கணவன் உறவுகொள்கிற தாசிக்கும் சோறு சமைத்துக் கொடுப்பவள் நல்ல பெண் என்கிற ஆண்மையக் கருத்தியலை வெளிப்படையாகத் தருகிறது. போலவே, கவிதையில் கவிஞரது குடும்பத்தின் ஆண்மைய சமூக வரலாறு மையப்படுத்தப்படுகிறது. நளாயினி எனும் புராதனக்  ‘கற்பரசி’ பாத்திரத்தின் கற்பு சிலாகிக்கப்படுகிறது. ஓர் ஆணுக்குப் பல பெண்களோடு உறவிருப்பதைப் பெண் கற்போடு இயைத்து அவன் மனைவி ஏற்றுக்கொள்வதைக் கவிதை பேசுகிறது. தவிர, ஆணுடைய கலத்தில் பெண் உண்பதை பெருமைக்குரிய விஷயமாக முன்நிறுத்துகிறது. திரிசடையின் இத்தகைய கவிதைகள் வாசிக்கும்போது அலுப்பைத் தருவது மட்டுமல்லாமல், பிரச்சினைக்குரியவை, விமர்சிக்கத்தக்கவை.

இதுவரை நான் சுட்டிக்காட்டிய திரிசடையின் கவிதைகள் அவர் படைப்பு வெளிப்பாட்டில் வீடும் வெளியும் வேறுபட்டுக் காட்சிபடுத்தப்படுகிற விதங்களுக்கு எடுத்துக்காட்டானவை.  திரிசடையின் கவிதைகளைப் பற்றி நகுலன் எழுதும் போது மரபைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதை இக்கட்டுரையில் தொடக்கத்தில் சுட்டியிருந்தேன்.  திரிசடையின் கவிதைகளில் வீடு, பெண்ணின் உறவுகளுக்கும் பெண் கற்புக்குமான மரபுக் கதையாடல்களுக்கான இடமாக உள்ளது. ஆனால், புறவெளியோ தனிமனிதச் சுயத்தைக் கலைக்கும் இடமாக, அதற்கு மேம்பட்ட இடமாகக் கட்டப்படுகிறது. இத்தகைய புறவெளி இந்து சமயப் பண்பாட்டுக் குறியீடுகளோடு, அல்லது அபூர்வமாக பிற சமய மரபுகளோடு விவரிக்கப்பட்டாலும், தேசிய எல்லைகளுக்கு அப்பாலான ஒன்றாகவும், மனிதர்களைத் தாண்டிய பல்லுயிர்களுக்குமான பொதுவெளியாகவும் இருக்கிறது. இந்த வேறுபாட்டைப் புரிந்துகொள்வது முக்கியம்.

கடைசியாக திரிசடையின் கவிதைகளிலிருந்து இன்றைய கவிதை நகர்ந்திருப்பதைச் சுட்டும் விதமாக, வேறுபாட்டை வாசகர்கள் பரிசீலிக்க இரு கவிதைகளைத் தருகிறேன். ‘செர்ரி ப்லாஸம்’ என்ற தலைப்பிலான திரிசடையின் கவிதையை வாசித்தபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் நான் எழுதிய கவிதை ஒன்று செர்ரி ப்லாஸம் பற்றியது. திரிசடையுடைய கவிதை செர்ரிப் பூக்களின் அழகைக் கண்முன் கொண்டுவந்து நிறுத்துவது:

~செர்ரி ப்லாஸம்

ஜன்னல் வழியாகப் பார்த்தேன்

கடற்கரையில் கிடைக்கும் முத்துச் சிப்பிகளால்

செய்த மரமாக நின்றது

எங்கள் செர்ரி ப்லாஸம் 

மனதை அள்ளி நீண்ட நேரம் 

போதை தரும்

மல்லிகையின் மணமும் 

இல்லைதான்.

ஆனால் இந்த மனிதன் படைத்துக்

காட்டும் செயற்கைச் சிங்காரங்களனைத்தையும்

விற்று, வாங்கக்கூடிய

உன் அழகை என்ன சொல்வேன்!

என் கவிதை ‘பெண் மனசு ஆழம் என 99.99 சதவிகித ஆண்கள் கருதுகிறார்கள்’  தொகுப்பில் இடம்பெற்றது:

 ~குளிர் போய்விட்டது

வாஷிங்டனில் அடுத்த வாரம்
செர்ரிப் பூக்களின் வசந்தோத்சவம்
ஆனால்
நான் போகப் போவதில்லை
அவற்றைப் பார்க்க ஆன்மா வேண்டும்
என்னிடம் ஸ்மார்ட் ஃபோன்தான்
இருக்கிறது.


-பெருந்தேவி

உதவிய நூல்கள்:     

பனியால் பட்ட பத்து மரங்கள். திருவனந்தபுரம்: டி.கே.துரைசாமி, ஜூலை 1978

திரிசடை கவிதைகள், பதிப்பாசிரியர்: வெண்ணிலா, தமிழ்ச் சங்கம், வாஷிங்டன் மெட்ரோபாலிடன் மற்றும் பால்டிமோர், 1996.


-பெருந்தேவி

ஓவியம் : இயல்

1 COMMENT

  1. உலகளாவிய எண்ண வெளிப்பாடுகளின் உயர்ந்த ரக விமர்சனம். அத்தனை கவிதைகளையும் படிக்கும் ஆவல் தோன்றுகிறது. அருமை! மிக்க நன்றி !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.