ஜப்பானிய மொழியில் திருக்குறளும் ஐக்கூ வடிவில் திருக்குறள் கருத்துகளும்..


ணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தரித்தக் குறள்” என்றாள் ஓளவைப் பாட்டி. இன்றைக்கு உலகப் பொதுமறை என அறியப்படும் திருக்குறள் சுமார் 41 உலக மொழிகளில் மொழியாக்கம்  செய்யப்பட்டிருக்கிறது.  இரண்டாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த திருக்குறளின் ஒரு பகுதியை (அறத்துப்பாலின் 38 அதிகாரங்களில் 13-ஐ மட்டும்) 1812 ஆம் ஆண்டில் முதன் முதலாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் பிரான்சிஸ் ராபர்ட் எல்லீஸ். அதன்பின் இது பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவர ஆரம்பித்தது.

இது 1981-ஆம் ஆண்டு ஜப்பானிய மொழியில் ஷுஸோ மாட்சுனாகா (Shuzo Matsunaga) என்பவரால் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்தது. இதன் பின்னணி சுவராசியமானதும், வித்தியாசமானதுமாகும்.

ஷுஸோ மாட்சுனாகா
சொ.மு.முத்து

ஷுஸோ அடிப்படையில் ஒரு பொறியியலாளர். அவர் 1970-களில் திருக்குறளில் ஒரு சிலவற்றைப் படித்தபின் அது பற்றி தெரிந்து கொள்ளவும், முழுமையாக வாசிக்கவும் ஆர்வம் கொண்டு அவரது பேனா நண்பராக சேலம் மாவட்டம் ஓமலூரில் வசித்து வந்த சேகருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். சேகர் அவருடைய தந்தையான திரு எஸ்.எம். முத்துவிடம் அது பற்றி கூற, தமிழ் ஆர்வலரான முத்து உடனடியாக ஜி.யு. போப் மொழியாக்கத்தில் வெளியான திருக்குறள் பிரதி ஒன்றை ஷூஸோவுக்கு அனுப்பி வைக்க, அவர்கள் இருவருக்குமிடையே நட்பு வளர ஆரம்பித்தது.

ஆங்கில மொழியாக்கத்தில் திருக்குறளைப் படிக்க ஆரம்பித்த ஷூஸோ அதை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்க்க ஆரம்பித்தார். அவருக்கான சந்தேகங்களை முத்து அவ்வப்போது தெளிவுபடுத்த ஓராண்டுக்குப் பிறகு, அதாவது 1981-ஆம் ஆண்டு மொழியாக்கம் முழுமை பெற்று ஜப்பானிய மொழியில் வெளியானது. அதன்பின் முத்து, ஷூஸோவிடம் பாரதியார் கவிதைகளையும் மற்ற தமிழ் இலக்கிய நூல்களையும் அறிமுகப்படுத்த அவரும் பாரதியாரின் குயில்பாட்டு, மணிமேகலை, நாலடியார், பஞ்சதந்திரக் கதைகள் என பலவற்றையும் ஜப்பானியில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.

ஜப்பானிய இலக்கியத்துக்கு வளம் சேர்த்ததற்காக தமிழ் ஆர்வலர் முத்துவைப் பாராட்டி ஜப்பானிய அரசு அவருக்கு 2007-ஆம் ஆண்டு அஞ்சல்தலை வெளியிட்டு கெளரவித்தது.

ஐப்பான் வெளியிட்ட அஞ்சல் தலை,

திரு. முத்துவின் ஆர்வத்தை அறிந்த ஷூஸோ, ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட ஜப்பானிய நூல்களை அனுப்பி வைக்க, இவரும் அதை தமிழாக்கம் செய்தார். அதில் குறிப்பிடத்தக்கவை `ஜப்பானிய தேவதைக் கதைகள்”, `தாய்லாந்து நாட்டுப்புறக் கதைகள்’, `மனித நாற்காலி’ என்கிற மர்ம நாவல், `நாட்டியக்காரி’ (இது ஜப்பானிய மொழியில் யாசுநாரி கவாபாட்டா – Yasunari Kawabata-  எழுதிய `The Izu Dancer’ என்கிற நூலாகும்)’ ஆகியவையாகும்.

2016_ஆம் ஆண்டு தனது 96 வயதில் முத்து மரணமடைந்தார். ஷூஸோவுக்கும் இவருக்குமான தொடர்பு சுமார் 30 ஆண்டுகள் நீடித்தன.

சரி, இனி ஐக்கூ வடிவ குறளுக்கு வருவோம். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பான் மொழியில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தது போல பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு (2008) ஜப்பானிய கவிதை வடிவமான ஐக்கூவில் திருக்குறளின் கருத்துகளை தமிழியத்துக்கு ஏற்றவாறு ஆர்வலர்கள் புரிந்து கொள்ளும் வகையில் 2-1-1 என்றளவில் சொற்களையமைத்து `ஐக்கூ வடிவில் திருக்குறள் கருத்துகள்” என்கிற பெயரில் முனைவர் யு. ஜெயபாரதி, முனைவர் ந. தேவி, திருமதி. தி. சுபாஷிணி அடங்கிய பெண்களணி ஒரு கையடக்க நூலாகக் கொண்டுவந்தார்கள்.

வழக்கமாக 5-7-5 என 17 சொற்களைக் கொண்டிருக்கும் ஜப்பானிய ஐக்கூவை விட இந்தக் குறள் ஐக்கூவில் நான்கே சொற்கள்தான். வள்ளுவர் சொல்லியிருக்கும் கருத்துகளை எளிமையாக  ‘நறுக்’ கென்று சொல்ல முயன்றிருப்பது இந்நூலின் சிறப்பாகும்.

இந்த முயற்சி குறித்து சில ஆண்டுகளுக்கு முன்பு திருமதி சுபாஷிணி அவர்கள் தினமணிக்கு அளித்த நேர்காணலில்,  ‘என்னுடன் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில் பணிபுரிந்தவர்களில் யு.ஜெயபாரதியும், ந.தேவியும் எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள். ஜெயபாரதி ஒரு நாள், “அம்மா! உங்கள் கவிதைகளில் எளிமை இருப்பதால், நாம் ஏன் திருக்குறளை மேலும் எளிமைப்படுத்தி  ‘ஹைக்கூ’ வடிவில் தரக்கூடாது?’ என்று கேட்டார். உடனே நானும் ஜெயபாரதி, ந.தேவி மூவரும்  அப்பணியைச் செய்யத் தொடங்கினோம். திருக்குறளில் மிகச்சிறந்த 10 உரைகளைத் தேர்ந்தெடுத்து, அதன் நேரடிப் பொருளைக் கண்டு, உள்வாங்கிக் கொண்டு, குறளின் எழுசீரை ஐந்து சீராக்கி, அதற்கொரு வடிவமும் கொடுத்தோம். இந்நூல் தோழியர் மூவரின் முயற்சியால் உருவானது.’ எனக் கூறியிருக்கிறார்.

 

மாதிரிக்கு சில குறள்களும் அதன் ஐக்கூ வடிவமும் –

குறள்:

பிறர்க்குஇன்னா முற்பகல் செயின் தமக்குஇன்னா

பிற்பகல் தாமே வரும்.

ஐக்கூ வடிவம்:

முன் செய்யின்

பின் –

விளையும்!

 

குறள்:

அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து

இன்சொல னாகப் பெறின்.

 

ஐக்கூ;

ஈதலைக் காட்டிலும்

இனியது –

இனிய சொல்!

 

குறள்:

வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும்

கோலொடு நின்றான் இரவு.

 

ஐக்கூ:

வருத்தி வரிவாங்கும்

அரசன் –

வழிப்பறிக்காரன்!

குறளில் கூறப்படும் கருத்துகளைச் சிதைக்காமல் எளிமையாகவும் கடைசி வரி எதைப்பற்றிச் சொல்லவருகிறது என்கிற `ஐக்கூ’வுக்கே உள்ள எதிர்பார்ப்பையும் இது கொண்டிருக்கிறது.

ஆக, தமிழிலிருந்து திருக்குறள் ஜப்பான் செல்ல அந்நாட்டு கவிதை வடிவமான ஐக்கூவில் திருக்குறள் கருத்துகளைக் நம்மவர்கள் கொடுத்திருப்பது பொருத்தமானதோடு வித்தியாசமான, புதுமையான முயற்சியாகும்.


 

–  சித்தார்த்தன் சுந்தரம்

[tds_info]

 

சித்தார்த்தன் சுந்தரம் இதுவரை சுமார் 15 நூல்களை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழியாக்கம் செய்திருப்பவர்.  இதில் மால்கம் க்ளாட்வெல் எழுதிய டிப்பிங் பாயிண்ட், ப்ளிங்க், அவுட்லையர், டேவிட் & கோலியாத் ஆகியவையும், ஹார்ப்பர் லீ எழுதிய `To Kill a Mockingbird’ம், நோபல் பரிசு பெற்ற ஸ்வெட்லான அலெக்ஸியேவிச் எழுதிய `Voices from Chernobyl’ம் அடங்கும். இவர் பெங்களூருவில் வசித்து வருகிறார்

[/tds_info]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.