1.தடா சிமாகோ (1930- )
மேற்கத்திய கருத்துகளைப் படி தடா சிமாகோ மற்ற ஜப்பானிய கவிஞர்களை விட அதிகம் படித்தவராகவும், அதிக தத்துவஞானம் உடையவராகவும் கருதப்படுகிறார்.இத்துறையின் பேராசிரியர்களை தவிர ஜப்பானிய அறிவார்ந்தவர்கள், மேற்கத்திய நாடுகளில், ஆழ்ந்த தத்துவம் என அழைக்கப்படும் ‘தேகாஹெ’ என்ற(தேகார்த்,காந்த்,மற்றும் ஹேகல்) இவர்களின் தத்துவங்களை, கெட்ட பழக்கங்களில் ஒரு மாதிரியான வடிவம் என்றே கருதுகின்றனர். ஆனால் தடா சிமாகோ மேலைநாட்டினராலும் கீழை நாட்டினராலும் ஆழ்ந்த அறிவு உடையவர் என்று ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளார். அவர் கிரேக்கர்கள்,.ஹெல்லெனிஸ்ட், பைசான்டின்,மற்றும் அவர் கால பிரெஞ்சு இலக்கியதால் பாதிப்புக்கு உள்ளானவர். அவருடைய கவிதைகள் காலத்தின் மீதும் அவரின் மீதும் அவர் மனதில் ஓடும் எண்ணங்களை கல்லறை வாசகங்களாய் எழுதியது போல் இருக்கும். அவர் வெவ்வேறு விதமான மொழிபெயர்ப்புகளை பிரஞ்சுமொழியிலிருந்து செய்திருக்கிறார்.உதாரணத்திற்கு செயின்ட்.ழான் பெர்செ மற்றும் லெவி ஸ்ட்றாஸ் இவர்களைக் கூறலாம் சமீபகாலத்தில் புத்த மதத்தின் மேல் ஈடுபாடு கொண்டுள்ளார். அவருடைய வீடு கட்பில் இருக்கிறது.
கண்ணாடி
என் கண்ணாடி எப்பொழுதும் என்னைவிட சிறிது உயரமாகவே உள்ளது.
நான் சிரித்த பிறகு சிறிது நேரம் கழித்தே சிரிக்கிறது..
வேகவைத்த நண்டின் நிறத்தில் வெட்கப்பட்டப்படி,
நகவெட்டியால் என்னில் நீளும் ஒரு பகுதியை வெட்டிக்கொள்கிறேன்.
என் உதடுகளை கண்ணாடியின் அருகே செல்லவிடும் பொழுது,
அது மங்குகிறது,
என் பெருமூச்சிற்கு அப்பால் நான் மறைந்து கொள்கிறேன் தன் கொண்டைக்கு பின் மறையும் கனவானைப் போலவும்
தான் குத்திக் கொண்டிருக்கும் பச்சைக்கு பின் மறையும் கனவானைப்போவும்.
என் கண்ணாடி புன்னகைகளின் கல்லறை,
பிராயாணியே,
லக்கைடைமானுக்கு வரும் பொழுது.
அதிக அளவு ஒப்பனைகளுடன் வெள்ளைச் சாயம் அடிக்கப்பட்டு,
கண்ணாடிமேல் காற்று மட்டும் அடித்த படி
இங்கு ஒரு சமாதி இருப்பதாகக் கூறிவிடு.
2.ஃபூக்காவோ சுமாகோ (1878-1942)
ஹையோகொ பிரிவைச் சேர்ந்த ஒரு பாரம்பரிய குடும்பத்தில் பிறந்தவர் .அப்பிரிவு அவர் தந்தையின் மறைவுக்குப்பின் செல்வ நிலையை இழந்துவிட்டது.இவரின் இள வயதிலேயே இவரின் கணவர் இறந்து விட்டார்..யொசொனொ அகிகோவின் தோழி.(பின்னர் அவருடைய சரிதத்தை இவர் தான் எழுதினார்).அவருடைய கவிதைகள்,பெண்ணிய கருத்துகள்,புரட்சிகரமான சமூகக் கருத்துகள் இவரை மிகவும் வசீகரித்தன.பொதுலேய்ர்,ஹொல்தெர்லின்,மற்றும் ப்ளேக் ஆகியோரின் கவிதைகளின் இயல்பான தனிமைப்படுதலையும் புரட்சியையும் உணர்ந்த முதன்மை ஜப்பானிய கவிஞர்களில் இவரும் ஒருவர்.பிற்காலத்தில் ஐரோப்பவில் பயணம் மேற்கொண்ட பொழுது கொலெட் ஆல் வசிகரிக்கப் பட்டார்.அவருடைய நூல்கள் தனிப்பட்ட எதிர்ப்பிலிருந்து தொடங்கி மெதுவாக சமூக பிரச்சனைகள் மற்றும் மனிதர்களிடையே ஆன உளவியல் பிரச்சனைகள் பற்றி பேசத்தொடங்கின.பசஃபிக் போருக்கு பிறகுஅவர் மீண்டும் வெளிநாடு சென்றார்.அவருடைய கடைசிப் பயணம் மத்தியகிழக்கு,கிழக்கு ஐரோப்பிய மற்றும் சீன நாடுகளுக்கு சென்றது தான்.அவர் காலத்து மக்களைப் போல அமெரிக்காவால் ஜப்பான் ஆளப்பட்டத்தையும், அழிக்கப் பட்டதையும் பற்றிய கசப்புணர்வு கொண்டவராய் விளங்கினார்.அவருடைய பிற்காலத்திய கவிதைகள் அவருடைய துயரம், எதிர்ப்பு மற்றும் திகைப்புக்கு குரல் கொடுத்தது மற்றுமன்றி ஜப்பானின் புதிய முதலாளித்துவத்தையும் எதிர்த்து குரல் கொடுத்தன.
ஒளிநிறை வீடு.
அது ஒரு ஒளி நிறைந்த வீடு;
ஒரு அறை கூட மங்கலாய் இருக்காது.
முகடுகளின் மேலே
உயர்ந்து நிற்கும்வீடது.
காட்சி கோபுரம் போல
திறந்திருக்கும் வீடது.
இரவு கவியும் போது
அதில் விளக்கேற்றுகிறேன்.
சூரியனை விடவும்
சந்திரனை விடவும்
பெரியதொரு விளக்கது.
மாலையில் தீக்குச்சியை
என் நடுங்கும் விரல்களால்
உரசும் பொழுது
என் இதயம் எப்படித்துடிக்கும்
என எண்ணிப்பாருங்கள்.
கலங்கரை விளக்குப் பாதுகாவலரின்
துடிப்பான மகளைப் போல
என் மார்புயர்த்தி
காதலின் ஒலியை உள்ளிழுத்து வெளியேற்றுகிறேன்.
ஒளிநிறை வீடது
மனிதரெவராலும் அமைக்க முடியா உலகொன்றை
அங்கு நான் உருவாக்குவேன்.
3.ஹயாஷி ஃபுமிகோ(1904-1951)
எட்டு வயதில் ஹயாஷி ஃபுமிகோ அவரின் தாயாரினால் தந்தையிடமிருந்து பிரிக்கப்பட்டு, தன் தாயாரின் இரண்டாவது கணவனான ஒரு சிறு வியாபாரியுடன் ஜப்பான் முழுவதும் சுற்றி அலைந்து இருக்கிறார்.தங்க ஒரு வீடு இல்லாமல், எப்பொழுதும் பசியுடன் சிறிய வயதிலேயே வேலைக்குச் செல்லத் துவங்கி, பல சிறிய வேலைகளை செய்திருக்கிறார். அவர் கவிதைகள் பெரும்பாலும் வேலைக்கு செல்லும் மிக ஏழையான பெண்மணிகளை பற்றியும், அவர்களை அவமதிக்கும் ஆண்களைப் பற்றியும் தான் பொதுவில் பேசுகிறது.இயற்கைக் கவிஞர்களிலிருந்து அதிகம் மாறுபட்டவர் இவர். இவருடைய கவிதைகள் உண்மையில் அழுத்தமான உணர்வுகளை வாசிப்பவர்களுக்குக் கடத்துகிறது.
புத்தன்
புத்தனின் மேல் நான் காதல் கொள்கிறேன்
தெய்வகுற்றமெனினும் அவரின் குளிர்ந்த உதடுகளில் நான் முத்தமிடுகையில்
ஆரம்பத்திலிருந்து இறுதிவரை
என் இதயம் மயக்கம் கொள்கிறது.
என் அமைதி நிரம்பிய இரத்தம் பின்னோக்கிப் பாய்கிறது.
தெய்வ குற்றத்தினால் ஆட்கொள்ளப்பட்ட என் இதயம்
அவரின் கலைக்கயியலாத அமைதியின் அழகினால் நிரம்பி வழிகிறது.
ஓ புத்தனே! . .
தமிழில் : பத்மஜா நாராயணன்
[tds_info]
மொழிபெயர்ப்பாளர் குறிப்பு:
பத்மஜா நாராயணன்: மொழிபெயர்பாளர் மற்றும் கவிஞர்.
[/tds_info]