Unknown (தெலுங்கு) – சுரேஷ்,தமிழில் – சண்முக விமல் குமார்


மல்லாந்து கிடக்கிறது உடல்.

குப்புறக் கிடந்த போது இருவராகச் சேர்ந்து திருப்புவது அவர்களுக்கு இயலவில்லை. பெருத்த மனிதன்.

வேறு இருவருடன் சேர்ந்து கால்களால் உதைத்து மூச்சிரைத்தபடி வயிற்றின் கீழே சிக்கியிருந்த கைகளைப் பிடித்து இழுத்தனர். அப்படி செய்யவும் ஒரு பக்கமாய்  திரும்பியது உடல்; முகம் அப்படியேதான் இருக்கிறது.

***

பள்ளி எழுச்சிப் பாடலின் மீ ஒலிப்பில் ஃபோனின் அழைப்பு கேட்கவில்லை. சோஃபாவின் மீது வைப்ரேசன் ஆனதில் தெரியவந்தது.

UNKNOWN

‘யார்?’

எதிர்புறம் டிப்பர் மீது க்ரானைட் கற்கள் உரசிக்கொள்ளும் சத்தம்.

‘…?’

‘ஆமாம் நீங்க யாரு?’

‘கவனமாகக் கேள்…! நீ முன் அறையின் சோஃபாவில் உட்கார்ந்துகொண்டு சுப்ரபாதம் கேட்டுக்கொண்டிருக்கிறாய்.’

‘ஆமாம்’

‘உங்கள் மகள் ஆக்டீவாவில் கல்லூரிக்குக் கிளம்பி பத்து நிமிடங்கள் ஆகிறது’

‘அதற்கு?’

‘உங்கள் மனைவி சமையல் அறையில் சுரைக்காய் பொரியல்…’

சமையல் அறையிலிருந்து கருகிப்போன பொரியலின் வாசம் வருகிறது.

‘நீங்கள் யாரென்று சொல்லுங்கள் சார்’

‘பிறகு சொல்கிறேன். முதலில் நான் உன் நலம் விரும்பி என்பதைப் புரிந்துகொள்’

‘புரிந்துகொண்டாயா?’

‘புரிகிறது சார்’ ஆசுவாசம்

‘நல்லது. உனக்கு ஒரு பெரிய ஆபத்து நேரவிருக்கிறது. ’

கட் பனியன் வேர்வையால் நனைந்துவிட்டது.

‘சார்ர்ர்..!’

மார்பு முடிகளில் கழுத்திலாடும் சங்கிலி சிக்குண்டது.’

‘ஆமாம்’

‘யாரால் சார்’

‘சார் சார் என்று சொல்லாதீர்கள் கேவலமாய். தம்பி என்று கூப்பிடுங்கள் அண்ணா’

‘புரியவில்லை அண்ணா, இல்லை தம்பி…’

‘ஆமாம். உங்களை ஆபத்திலிருந்து காப்பாற்றுவதற்காகவே ஃபோன் செய்திருக்கிறேன்.’

‘தம்பி ஆபத்து யாரால் நேரவிருக்கிறது? இன்னும் பெயர் சொல்லவில்லை’ பாதி உயிர்.

‘என்னால்தான் அண்ணா’

‘ ஆமாம் அண்ணா. என்னிடமிருந்து உன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவே இந்த ஃபோன். புரிகிறதா?’

இனி பெயர் அவசியமில்லை.

‘சென்ற வியாழக்கிழமை அன்று அரண்டால் பேட்டையில் ஆயிரம் சதுரடி இடத்தை விற்றாய் அல்லாவா!’

‘பயப்படவேண்டாம் அண்ணா. உன் நலம் விரும்பிதான்.’

**

வீங்கிய முகத்திலிருந்து திறந்துகொண்ட கண்கள் ஆகாயத்தை, அதிக வலியுடன் உறவாடிக்கொண்டிருக்கின்றன. கீழ் உதடு கோணி இருக்கிறது. தொலைவிலிருந்து பார்ப்பதற்குக் குழம்புகள் இறுகியதைப் போன்ற தோற்றத்தில் உதடுகள் இரண்டும் சிரித்ததைப் போன்று இறுகிப்போய் இருக்கின்றன.

சடலத்தின் கண்களை அங்கிருந்தவர்களில் ஒருவன் மூடிய உடன் அந்த சிரிப்பானது ஏதோ ஆச்சரியமென மாறுவதைப் போலிருந்தது.

**

ரெண்டு இட்லி ஒரு புலகம் (பாசிப்பருப்பு, அரிசி, மஞ்சள் கலந்து வேகவைத்த உணவு. ராம நவமி போன்ற தினங்களில் செய்வர்)  ஐந்து வெள்ளரிக்காய் துண்டு ஆகியவற்றை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது மீண்டும் வந்தது அந்த அழைப்பு.

மறுபுறத்தில் வெந்த செம்மறியின் விரைகளை நன்றாக மெல்லும் சத்தம் கேட்கிறது.

‘பெத்த காகானிக்கு (ஓரூரின் பெயர்) அருகில் லே அவுட் போட்ட பிறகு ஃபோன் எடுக்கவில்லை ஏன்?’

‘இது ஏதாவது நன்றாக இருக்கிறதா அண்ணா?’

‘இல்லை அண்ணா!  ஒரு வாரம் இல்லை. ஒரு மணி நேரம் கூட உனக்கு நேரம் தரமாட்டேன்.’

‘இங்கு உட்கார்ந்துகொண்டு கணக்குப் பார்க்கச் சொல்கிறாயா?’

‘நேற்றைய தேதிக்கு நூற்றுப் பதிமூன்று மனைகள் விற்றிருக்கிறாய். இந்த வாரம் இன்னும் ஒன்பது விற்பாய்’

‘உனது விற்பனைக் குழுவில் இருப்பவர்கள் தின அறிக்கையை உனக்குத் தருவதற்கு முன்பே எனக்குத் தந்துவிடுகிறார்கள். ஒவ்வொரு நாளின் கணக்கும் அன்றன்றைய இரவே என் முன்னே இருக்கும். புரிகிறதா?’

‘சரி! இன்னும் இரண்டு நாட்கள்தான் கெடு உங்களுக்கு’

‘திரும்பவும் ஃபோன் செய்யமாட்டேன்’

‘மூன்றாம் நாள் வேக வைக்காமல் என்ன சாப்பிடுவேன் என்று உனக்கு நன்றாகவே தெரியும்’

மோர் டம்ளர் தவறி உடம்பு மீது விழுந்தது.

**

குச்சிகளைப்போன்று இறுகிப்போன விரல்களுக்கு அவ்வளவு பலம் இருக்குமென அவர்கள் நினைக்கவில்லை. கைகளில் இறுகிப்போன வில்லை பிடுங்குவதற்கு மேலும் இருவர் வந்தார்கள். ஸ்க்ரூ ட்ரைவரை உள்ளே நுழைத்து விரல்களை விடுவித்தனர்.

அருகே பாதி திறந்துகொண்டிருந்த கைப்பையில் பதிமூன்று அம்புகள்; அவற்றின் முனைகள் காயப்படுத்தாமல் இருக்க ப்ளாஸ்டிக் மூடிகளுடன். வில்லை இந்தப் பக்கமாக எடுத்து பெரிய ஃப்ளாஸ்டிக் பையில் கவனத்துடன் வைத்தனர்.

**

சிங்கப்பூர் கன்ஸார்ஷியம் கட்டிடத்தின் முப்பத்து இரண்டாவது தளத்தில் நகரப்புற மேம்பாட்டு பெசியிலிருந்து லான்சில் கால் வைத்தபிறகு வலது தொடைக்கு அருகில் பீ வண்டினைப் போன்று துளைத்தது ஃபோன் வைப்ரேஷன். கைகளில் எடுத்து சைலன்ட் மோடிலேயே பதில் அளித்தான்.

‘ஆமாம்’

அந்தப்பக்கத்தில் கீழே யுவதி மூச்சு வாங்கும் சப்தம்.

‘திருப்பதியைச் சுற்றி மட்டுமல்ல, அந்தப்பக்கம் மதுரவாடாவிலிருந்து இந்தப்பக்கம் நந்திகிராம் வரைக்கும் என்னுடைய கட்டுப்பாட்டிலேயே.’

‘இருக்கட்டும்’

‘யார்டா நீ’

‘ங்கொம்மா, இதற்கு முன்பு அழைத்தாய் அல்லாவா’

‘என்னை விடப் பெரிய புடிங்கியாடா நீ?’

‘வாடா வேசி மகனே பார்த்துக்கொள்ளலாம்?’

‘பத்து கோடி இல்லை பத்து பைசா கூட தரமாட்டேன் முடிந்தால் பார்த்துக்கொள்…’

அந்தப்பக்கத்தில் பெண்ணின் கூப்பாடு. காதுகள் கிழிந்தன.

ஃபோனை வேறு கைக்குக்கூட மாற்றிக்கொள்ளாமல், புழுக்கத்தில் தவித்தபடி லிப்டிலிருந்து இறங்கினான். ஓட்டுநர்கள் அடித்தளத்திற்கு ஓடி எஸ்.யு.வி காரினையும், அதற்குப் பின்னே எஸ்கார்ட் வேனையும் கொண்டுவந்தவுடன்…

‘ஹோட்டல் ஹைலாபுரம்’

இன்னும் மூச்சிரைத்தல் ஓயவில்லை.

திரும்பவும் பீ வண்டு குடைந்தது.

‘நான்தான்’

‘திரும்பவும் அவன்தானா?’

‘உன் ஆட்களிடம் சொல்லி ட்ரேஸ் செய்’

‘சார் வேசி மகன் உங்களிடமே புகாரளித்தானா?’

‘கவனம். அந்த போனை இனி உபயோகிக்காதே’

‘தயவு செய்து கேளுங்கள். இந்த எண்ணிலிருந்து எந்த அழைப்பும்…’

‘ஒரு மணி நேரத்திற்குள் விசயத்தைச் சொல்’

‘வைக்கிறேன்’

வண்டி மந்தடம் தாண்டி பெஜவாடா திருப்பத்திற்கு அருகில் வந்ததும், சளி பிடித்ததைப் போல இருந்திருந்து சென்றது. ஓட்டுநர் இறங்கி என்ஜினைப் பார்ப்பதைப் போன்று நடித்துக்கொண்டிருக்க வலது புறம் ஒருவர் இடது புறம் ஒருவர் என இருவர் ஏறி அமர்ந்துகொண்டனர். பின்புறம் வந்துகொண்டிருந்த எஸ்கார்ட் வேனைக் கண்ணுக்கெட்டிய தூரம் காண இயலவில்லை.

‘அந்த என் (வேசி) மகன் என்னை என்ன சொல்லி இருந்தால் சும்மா இருந்திருப்பேன் சார்.   … என்  அம்மாவை…?’

‘பெரிய இம்சை கொடுத்தாய்… பெரியவரிடம் இருந்து….’

‘என்னுடைய தனிப்பட்ட விசயம் என்று சொல்லுங்கள். சென்ற தேர்தலில் அவர் செலவழித்த தொகையில் பாதி என்னுடையது என்று அவருக்குத் தெரியும். பின்னால் இருக்கும் அந்த டீவி சத்தத்தைக் குறையுங்கள் சார்.’

‘சற்றுமுன் கிடைத்த செய்தி. பொந்துகூலவில் ஒரு மனிதனின் உடல் ஜராசந்தனுடையதைப் போல (புராதனப் பாத்திரம்) இரண்டாகப் பிளந்திருக்கிறது. இரண்டு வண்டிகளுக்கு இரண்டு கால்கள் கட்டி அவற்றை எதிரெதிராக… ’

’எஸ்யுவி இடது புறமாகத் திரும்பி தல்யாயபாளையத்தைத் (ஊர்) தாண்டி கிருஷ்ணா நதிக் கரையை அடைந்தன. மேலும் இருவர் வந்து அவன் மீது அமர்ந்துகொண்டனர்.’

ஆற்றில் அந்த போன் தூக்கி எறியப்பட்ட போது திரும்பவும் ஒலித்தது.

‘இன்னும் ட்ரேஸ் செய்யவில்லை. சுவிச் ஆப் செய்திருக்கிறான் வேசி மகன், நாளைக்குள்ளாக…’

‘கிருஷ்ணா கரைகளைத் தாண்டி கொந்துகுலவின் பக்கம் திரும்பியது எஸ்யுவி, பின்னால் இன்னொரு வண்டி.

***

சென்னை நெடுஞ்சாலை திருப்பத்தைக் கடக்கும் இடங்களில் இருமருகிலும் கேழ்வரகு வயல்கள். வயல்களுக்கு அந்தப்பக்கம் கோழிக் கிடங்கிலிருந்து வருகிற மூக்கை குடையும் நெடி.

சாலையின் மீது சிராய்த்துக்கொண்டுபோன டயரின் அடையாளங்கள். கார் சாலைக்கு அந்தப்பக்கம் குறுக்கும் மறுக்குமாகக் கவிழ்ந்து கிடக்கிறது.

காருக்கும் உடலுக்கும் இடையில் இருபது அடிகளுக்கும் மேலான தூரம் இருக்கும்.

***

ரேணிகுண்டா வழியில் காஜுலுமாண்டயம் உட் சாலை. சாலையில் திரும்பி மடத்தின் முன்பு நின்றது ‘தர்ம ரதம்’ என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஃபார்ட்ஸுனர்.

நன்கு பழுத்த நார்த்தங்காய்ப் பழ நுனியில் கசாய நிற கைக்குட்டை சுற்றிய மூங்கில் கொம்பு. ஓடிவந்த இருவர் பனை ஓலையினாலான குடையைப் பிடித்தபடி, நார்த்தங்காய்த் தோட்டத்திற்கு இடையிலிருந்த குடிசைக்கு, ரகசிய உரையாடலுக்காக அழைத்துச் சென்றனர்.

வருடாவருடம் ஜூலை ஒன்றாம் தேதி தாங்கள் ஊருக்குச் சென்று திவசம் வைக்க வேண்டுமாம்.

‘அவர்களின் ஆட்கள் யாராவது போய்விட்டார்களா?’

‘இல்லை. எப்பொழுதோ நடந்த போரில் எதிரிகள் எடுத்துக்கொண்டு சென்ற அவனுடைய முக்கிய உறுப்பு திரும்பவும் கிடைத்த நாளது. அதற்காக அவன் பதிமூன்று முறை படையெடுத்தான் என்று சொல்லிக்கொள்கிறார்கள்.

அதற்காக வருடாவருடம் ஒரு வாரம் முழுவதும் துக்கம் அனுசரித்து இருபத்தி ஐந்து ஊர்களுக்கு உணவு தயாரித்து அந்த ஏழுநாட்கள் துக்கம் அனுசரிக்கிறார்கள்.

’இவ்வளவு விபரீதமாக இருக்கிறதே.. பெரியவரிடம் செய்தியைச் சொல்லி இந்த தலைவலியை..’

‘அவர்கூட இந்த முறை முக்கிய விருந்தினர்களை, நமக்குக்கூட எந்த பிரச்சனையும் வராமல் பார்த்துக்கொள்வோம் என தெரியப்படுத்தினார்.’

‘இதற்கு முன்பு தென்கிழக்கு திசையில் எழுபது ஏக்கர்களை விவசாயிகள் நமக்கு மகிழ்ச்சியுடன் கிரயம் செய்துகொடுத்தபோது அந்த மகிழ்ச்சிக்குக் காரணம் பெரியவர் இல்லை அவரே என்று…’

‘அதுமட்டும் இல்லை இதற்கிடையில் இயற்கை எய்திய தன் தன் மனைவியை நம் மடத்தின் சார்பாக திவ்ய மாதாவாக அறிவிக்கச் சொல்கிறான்.’

‘இதற்கு முன்பு அவ்வாறு நம் மடாதிபதிகள் செய்ததற்கான சான்றுகள் ஏதும் இல்லை அல்லாவா!’

‘செய்யவில்லை என்றால் நாடு கடத்தல் தவறாது எனத் தெரிவிக்கச் சொன்னான். நம்முடைய சிக்குபாரை தார்பாங்க (இடம்) ஆசிரமங்களில்கூட தன்னுடைய ஆட்களே இருக்கிறார்கள் எனப் பெயர்கள் சகிதம் சொன்னான். ‘

***

சோலாபூர் செருப்புகளுள் ஒன்று காலிற்கு இரண்டு அடி தூரத்தில் விழுந்திருக்கிறது. மற்றொன்று ஹைவேவிற்கு அப்பால் விழுந்திருக்கிறது.

கதவு திறந்துள்ள ஆடியின் இருக்கைகளுக்கு மத்தியில் கீழ் ஓரத்தில் கோடாரிகள் இருக்கின்றன. கார்ப்பெட்டின் சிவப்பு கோடுகளின் மீது உடைந்த சில கண்ணாடிச் சில்லுகள்.

***

‘உங்களிடம் மறைப்பதற்கு என்ன இருக்கிறது அண்ணா, இந்த தெரு நாய்க்குப் பிறந்தவர்கள் எப்போது என்னைக் கொன்றுவிடுவார்களோ அண்ணா. இப்போதுதான் அந்த வேசி மகனுக்கு ஒன்றரை கோடி மதிப்புள்ள இடத்தை மாற்றிக் கொடுத்த போதும்? பின்னால் சென்று என்னவென்று ஃபோன் செய்தான் தெரியுமா? நீ உயிரோடு இருப்பது அவசியமா? கொன்றுவிட்டால் என்ன நஷ்டம் என்று கேட்டான் அண்ணா. அந்த என் வேசி மகனுக்குப் போகாபுரம் அருகில் பதினேழு கோடி மதிப்புள்ள நிலங்களை வாங்கிக் கொடுத்தேன் என்பது கொஞ்சமாவது மனதில் இருக்கிறதா அண்ணா. அவனுடைய மேலதிகாரிக்கு என்னவோ எழுபது கோடிகள். அதற்கு அவன் சொன்னான், இவனிடம் ஜாக்கிரதையாக இருங்கள் என்று. அவன் அந்த நிலைப்பாட்டின் மீது எவ்வளவு காலம் இருப்பான் என்று அவனுக்கு மட்டுமல்ல எனக்குமே கூட தெரியாது. அதனால்தான் நான் எங்கு இருக்கிறேனென எனக்கே தெரியாதபடி பிழைக்கிறேன் அண்ணா. மனைவியைக்கூட நம்புவது இல்லை அண்ணா. அவள் எப்போது விஷம் கலந்த பிரியாணியைச் சமைத்து வந்து கொடுப்பாளோ தெரியாது அண்ணா. இவ்வாறு உன் கண்களுக்குத் துணி கட்டி கூட்டிவந்ததற்கு மன்னித்துவிடு அண்ணா. உன் மீது நம்பிக்கை இல்லாமல் இல்லை; என் மீது எனக்கே நம்பிக்கை அற்றுவிட்டது. இப்போது நான் நானே இல்லை அண்ணா. நான் இனி வேறு யாரோ. நான் வேறொருவனாக எப்போது மாறினேன் என எனக்குத் தெரியும். ஆனால் எதற்கு என்றுதான் தெரியாது. நாம் முன்பு எப்படி வாழ்ந்தோம் அண்ணா. எந்த நாளாகட்டும்.  தான்தோன்றித்தனமாக, பொறுப்பின்றி, ஊதாரிகளாக. அப்போது நம்மிடம் என்ன இருந்தது அண்ணா. ஒரு ஜோடி சட்டைகள், ஒரு லுங்கி. உனக்கு நினைவிருக்கிறதா அண்ணா? நாம் இருவரும் லுங்கியிலேயே திருப்பதியிலிருந்து பர்லாகமிடி (இடம்) வரை டிக்கட் இல்லாமல் பயணிகள் ரயிலின் படிக்கட்டில் உட்கார்ந்துகொண்டு, க்ளீனரிடம் இறைஞ்சி லாரி டாப் மீது ஓட்டுனர் அறியாதவாறு, சப்பாத்துகளின்றி இரவெல்லாம் நடந்து குனிந்து பார வண்டி ஏறி, அங்கு ஒரு செம்மறி மந்தையில் கஞ்சி குடித்து பீடி வழித்தது… என் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ்ந்தது அப்போதுதான் அண்ணா. உண்மையாகவே அப்போதுதான் அண்ணா! இப்போது? ஏழாயிரம் ஏக்கர் நிலம் இருக்கிறது அண்ணா. பத்து ஆண்டுகள். நான் வேறொருவனாக ஆவதற்கு. ஆனால் அண்ணா… நேராமலிருக்காது. இறங்கிய பிற்பாடு இனி நேராமலிருக்காது அண்ணா இன்னும் இன்னும் ஆழத்திற்கே. மீள முடியாது அண்ணா.  உன்னுடைய விசயம்தான் வருத்தமளிப்பதாக உள்ளது அண்ணா. நீ எவ்வளவு வீணாய்ப்போனவன் அண்ணா. நீ மாறவில்லை; ஆனால் உலகம் எப்போதோ மாறிவிட்டது அண்ணா! இவை இருக்கட்டும் சரி, உனக்கு என்ன சொன்னேன் அண்ணா? சொன்ன வேலையைச் செய்தாயா அண்ணா? நீ என்றால் எனக்கு உயிர், அதற்கென்று என்னுடைய பலவீனத்தைப் பயன்படுத்திக்கொள்ள நினைக்காதே அண்ணா! அந்த பர்லாகமிடி தம்பி ஒருவன் எனக்கு வேண்டும் அண்ணா. என்ன செய்வாயோ எப்படிச் செய்வாயோ. நன்றாக யோசித்துக்கொள். இது உன் தம்பியின் முதலும் முடிவுமான வேண்டுகோள் என்று என்று நினைத்துக்கொள்கிறாயோ அல்லது மிரட்டல் என்று நினைத்துக்கொள்கிறாயோ அல்லது பிச்சை என்று நினைத்துக்கொள்கிறாயோ அல்லது ச்சீ.. நாயே என்றுகூட நினைத்துக்கொள்கிறாயோ. என்ன நினைத்துக்கொண்டாலும் சரி இதை மட்டும் செய் அண்ணா! உன் கரங்களைப் பற்றச் சொன்னால் கால்களைப் பிடித்துக்கொள்கிறேன். இன்னும் எதை வேண்டுமானாலும் பிடித்துக்கொள்கிறேன். ஆனால் செய்தாகவேண்டும் அண்ணா. இம்மாதம் முப்பதாம் தேதி வரைக்கே உனக்குக் கெடு அண்ணா. அதற்குப் பிறகு நான் உனக்குத் தம்பி கிடையாது. அப்படிப் பார்க்காதே. நாமிருவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போன்றவர்கள் அண்ணா. ஆனால் மாத இறுதி வரை மட்டுமே. புரிகிறதா?’

’அடேய்!! அண்ணாவைப் பிணைத்திருக்கும் சங்கிலியை விடுவித்து வாயில் ஒட்டியிருக்கும் பிளாஸ்டரை நீக்கி ஆடியில் கொண்டுபோய் விட்டுவிட்டு வாருங்கள். எந்த இடத்திலும் நம்முடைய மரியாதைக்குப் பங்கம் வந்துவிடக்கூடாது. ஜனங்கள் பத்தாண்டுகள் பேசிக்கொள்ள வேண்டும்.

***

நெடுஞ்சாலையை ஒட்டி இருக்கும் ஹீமு கோழிப் பண்ணையின் வாட்ச்மேன் அதிகாலை வேளையில் சைக்கிளில் வந்துகொண்டிருந்த போதுதான் முதலில் அதைப்பார்த்தார் என்று ஒருவர் சொன்னார்.

இல்லை, பெரிய கண்டைனர் வண்டி ஓட்டுநர்தான் நெடுஞ்சாலையை ஒட்டியபடி இருந்த காரை முதன்முதலாய் பார்த்து சந்தேகமுற்று நின்றார் என்றார் இன்னொருவர்.  ஆனால் இருவருமே ஃபோனில் பணம் தீரும்வரை அனைவருக்கும் ஃபோன் செய்துகொண்டே இருந்தனர் என்பது பலர் ஒப்புக்கொண்ட விடயம்.

***

போரங்கி (ஊர்) வழியில் ஆட்டோ நகர்க் கோடி – லேன் ஷெட்டின் பின்புறம் செங்கல் அறையின் உள்ளே நுழைந்து இருவர் அமர்ந்தனர்.

‘உனக்காகத்தானே அண்ணா நான் வாழ்வது. நீ இங்கு இருக்கிறாய் அண்ணா, இங்கு… ‘ மார்பின் இடது புறத்தை அறைந்தபடி காண்பித்தான்.

‘உனக்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டேன் அண்ணா.’

‘எல்லாவற்றையும்.’

முகத்தைத் துழாவிக்கொண்டிருந்த பார்வையானது இடுப்பிற்குக் கீழே சரிந்து மீண்டும் முகத்திலேயே படர்ந்தது.

‘எனக்குத் தெரியும்’

உள்ளே நுழைந்த  வேலையாள் யாருக்குக் காஃபி தரவேண்டும், யாருக்குச் சர்க்கரை குறைவான தேநீர் தரவேண்டும் என்று புரியாமல் இருவர் முகங்களையும் குழப்பத்துடன் பார்த்துவிட்டு, கொண்டுவந்த கோப்பைகளை அவர்களுக்கு முன்பிருந்த இருக்கையின் மீது வைத்து விட்டுச்சென்றான்.

இருவருக்கிடையிலும் ஏதோ கண்ணாடி இருப்பதைப் போல தென்பட்டனர்.

‘கொஞ்சம் போதவில்லை அண்ணா’ சற்று வெட்கப்பட்டான்.

‘இம்முறை கொஞ்சம் உயர்த்துங்கள் அண்ணா!’

’தெரியும், நீ கேட்க வேண்டுமா என்ன? உனக்கு எப்பொழுது என்ன வேண்டும் என்று எனக்குத் தெரியாதா?’

‘ஆமாம் அண்ணா’

‘கொஞ்சம் என்ன, விதி! உன் குடும்பம் பத்து தலைமுறை ராஜாக்களைப் போல வாழ்வதற்கு ஏற்பாடு செய்கிறேன்.’

‘அண்ணா!’

‘நீ இருந்தாலும் இல்லாவிட்டாலும்’

‘புரியவில்லை அண்ணா’ சந்தேகத்துடன் பார்த்தான்.

‘அதுதான்.. நமக்கு என்ன ஆனாலும் நம் குடும்பத்தாருக்கு எந்த குறையும் இல்லாதபடி. நீயே கேள்’ ஒரு எண்ணை அழைத்துக் கொடுத்தான்.

‘நம் பிள்ளைகளின் பெயரிலும், உங்கள் அம்மாவின் பெயர் மீதும் இன்றே பதிவு செய்யப் போகிறார்களாம் அண்ணன்கள். உடனே ஆட்டோவில் புறப்படுகிறோம். யோவ்! அண்ணா என்ன சொல்கிறாரோ அதைச் செய்; என் மீது சத்தியம்’ மறுபுறத்திலிருந்து மகிழ்ச்சி.

‘தெரியும் அண்ணா. உன்னுடையது பொன்னைப் போன்ற மனது. சொல்லுங்கள் அண்ணா நான் என்ன செய்ய வேண்டும். நீ எதில் குதிக்கச் சொல்கிறாயோ அதில்… ’

‘தேவைப்படும் போது சொல்கிறேன்.’

***

மார்பின் மீதும் காதுகள் மீதும் ஏற்பட்ட துளைகள் கறுப்பு ரத்தத்தால் அடைக்கப்பட்டிருக்கின்றன.  அவற்றின் மீது எறும்புகள் சாரை சாரையாய் நிம்மதியுடன் அருகிருந்த புற்றை நோக்கி நகர்கின்றன. இரண்டு ஈக்கள் காயங்களின் மீது அமர்ந்தபடி பறப்பதற்கு எத்தனித்துக் கொண்டிருக்கின்றன.

வெள்ளை நிற சட்டையானது கிழிந்து போய் பொத்தான்கள் ஏதோ தகராறில் பிய்ந்தவை போல இருக்கின்றன.

இன்னும் துணிகளிலிருந்து சிவப்பு எலும்புப் பொடிகள் நகர்ந்தபடி.

***

‘இப்போது சிக்கினாயடா’

நீள்வட்ட ரேக்குகளின் ஷெட்டில் இரும்பு இருக்கையின் பின்புறமாக கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. கைகளிலிருந்து இருக்கைக்குக் கீழாக, முன் கால் வரை இன்னொரு இரும்புச் சங்கிலி. தலையிலிருந்து கழுத்துவரையுமாக கறுப்பு முகமூடி.

‘நன்றாக நம்பி வந்தாயா கடற்கரை விருந்துக்கு?’

‘கழுத்து வரை பிடித்தோம் என்பதால் கிடைத்தாய், இல்லாவிட்டால் உன் தரிசனத்திற்காக இன்னும் இன்னும் பத்தாண்டுகள்  பிடித்திருக்கும்.’

‘பெரியவருக்கு எவ்வளவு துன்பம் கொடுத்தாயடா! உன்னை விட்டுவிடுவாரா?’

‘உன்னை ஃபங்சர் போடும் இடத்திலிருந்து ஆடி (கார்) வரைக்கும் கூட்டிவந்தது அவரே என்பதை மறந்துவிட்டு உலை வைத்தாய்.’

‘அவருக்கு நீ வேண்டும். எனக்கோ உன்னிடமிருந்து பாகம் வேண்டும்.’

‘அறுநூறு கம்பிகள், இரண்டு ட்ரக்கு கட்டைகள், குடோன் நிறையக் கோப்புகள். பத்து இடங்களில் பத்து மாநிலங்களில் வைப்பாய் என்று எனக்குத் தெரியும். ஒவ்வொன்றிற்கும்  எவ்வளவு நேரம் பிடிக்கும் என்று கேட்க வேண்டுமோ?’

‘சோம்பல் முறித்தபடி கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே எழுந்து தகரக் கதவைத் தட்டினான்.

‘இனி ஆரம்பிக்கலாம்.’

நீர் வாளியை ஏந்தியபடி ஒருவன்; டூல் பாக்ஸ், டிர்லிங் மிஷின்களோடு இருவர்.

‘சொல்லாமலேயே இவ்வளவு நல்ல ஏற்பாடு செய்திருக்கிறீர்கள். இப்படித்தான் இருக்க வேண்டும்.’ என்று தன் ஆட்களை மெச்சிக்கொண்டான்.

ஒருவன் ப்ளக் பாய்ண்டிற்காகத் தேடிக்கொண்டிருக்க ஓய்ந்துபோன தலையை இருவர் அழுத்திப்பிடித்தனர்.

செல்லமாக முனகல் கேட்டு முன்புறம் வளைந்து முகமூடிக்கு அருகில் காதுகளை வைத்தார்கள்.

’என்ன சொல்கிறான்?’

‘கடற்கரை கூட்டு விருந்து ஏற்பாடு பற்றியதாகவே இருக்கட்டும்..’

‘ஆனால்?’

‘இந்த செட்டப் தன்னுடையதே என்கிறான் சார்’

‘கேட்கவில்லையா’

‘இந்த ஷெட், இந்த ஏற்பாடுகள் யாவும் தன்னுடையவையேவாம் சார்…’

‘திட்டத்தை நன்றாகவே தீட்டினாய். ஏற்பாடுகள் உன்னுடையதாகவே இருக்கட்டும் ஆனால் சிறிய மாற்றம்’

‘உள்ளே வந்தது என்னவோ என்னுடைய ஆட்கள். அந்த முகமூடியைக் களையுங்கள்.’

தொங்கிப்போயிருந்த தன் தலையைக் கடினத்துடன் தூக்கி, ஏறெடுத்துப் பார்த்தான். சுற்றிலும் தெரியாத முகங்கள். ட்ரிலிங் எந்திரம் ரிவ் என்றது.

திரும்பவும் முன்புறமாகக் குனிந்து கேட்டார்கள்.

‘என்ன சொல்கிறான்.?’

‘பெரிய எச்சரிக்கை தந்தான் சார்’

‘என்னது அது’

‘தலை தூக்குடா பாடுகோவ் (வசைச்சொல்)..’

சரிந்த தலைமீது சிவப்பு டை போட்ட மயிர். கீழே வெள்ளை வேர்கள்.

’இவன் அவன் இல்லையாம் சார்!’

அவனைப்போலவே இன்னும் மூவர் இருக்கிறார்களாம் சார். அவர்களுள் இவனும் ஒருவனாம்.’

‘அப்பொழுது அந்த வேசி மகன் எங்கே?’

‘உண்மையானவன் யார் என்று நால்வரில் ஒருவனுக்கு மட்டுமே தெரியுமாம் சார்! அவன் யார் என்று அவன் சொல்லவும் மாட்டானாம் மற்றவர்கள் கேட்கவும் மாட்டார்களாம். ஒருவரை ஒருவர் சந்திப்பதுகூட இல்லை.  அதுவே இவர்களுக்கிடையே உள்ள ஒப்பந்தம்.’

நீண்ட நேரம் அமைதி.

‘இவன்தான் உண்மையான ஆள் என்றால்?’

‘இல்லாவிட்டால்?’

கொஞ்சம் நேரம் அமைதி.

‘துணிகளை அகற்றுங்கள்’

‘எதற்கு சார்?’

‘இவன் யார் என்று தெரிந்துவிடும்.’

‘அதற்கு வாய்ப்பு இல்லை சார். மற்ற மூவரையும்கூட தன்னைப் போலவே இருக்கும்படி பார்த்துக்கொள்கிறான். இந்த விசயத்தில் கூட. அனைவரையும் சர்ஜரி செய்துகொள்ளச் செய்திருக்கிறான்.’

திரும்பவும் அமைதி.

’நமக்கும் வேறு வழி இல்லாமல் செய்துவிட்டான். திருட்டுப்பயல்’

‘ட்ரிலிங் எந்திரம் திரும்பவும் ரிவ் என்றது.

***

வரிசை கட்டிய ஓபி வேன்களால் நெடுஞ்சாலையில் நெரிசல் ஏற்படத் தொடங்கியது. தாமதமாக வந்த வேன்கள் அப்பாலிருந்த கேழ்வரகு வயல்களில் இறங்கியதும் அவற்றின் சக்கரங்கள் மூழ்கிவிட்டன.

குறுக்கே விழப்போன வயல் உடைமையாளனை முந்திக்கொண்டு கேமாரக்கள் சகிதம் வந்தனர். நிருபர்கள் வேன் கண்ணாடிகளைப் பார்த்து தலையைச் சரிசெய்து கொண்டு சாலையின் மீது நடந்து வந்தனர்.

**

உண்டூரு, கொஞ்சாலாவிற்கு இடையில் மூன்றாவது மைல் கல்லிடம் கட்டிய துணியை இருபது அடி உயர இரும்புக் கதவினைத் தாண்டியவுடன் அகற்றினார்கள். கண்களைச் சிமிட்டியபடி சோபாவில் இருவர் அமர்ந்துகொண்டனர். வராந்தாவில் யாரும் இன்னும் வரவில்லை.

‘என்ன கேட்கவேண்டும் என்று நினைவிருக்கிறதா?’

‘இருநூற்றி பதிமூன்று கணக்கு சரிதானே என்று’

‘இன்னும்’

‘கோடப்ப மலை தரிசனத்திற்கு வந்த அவனின் மனைவியை எருமை உதைத்தபோது உண்மையில் அவள் எதற்கு சிவப்பு துணி அணிந்து வந்தாள் என்று?’

‘உண்மையில் மிருகங்களுக்கு நிறங்கள் தெரியாது என்கிறார்களே? நம்பலாமா?’

‘என்றால், சவத்திற்கு சிவப்பு துணிகள் அணிவித்தீர்களா?

அண்ணாவுக்கு அண்ணி என்றால் உயிர். அண்ணாவை வேண்டினால்தான்..

என்னைத் தடுக்காதே அண்ணா… இங்கு இண்டர்வியூ நடக்கவில்லை ப்ளூ ஃபிலிம் சூட்டிங் நடக்கிறது.’

‘இன்னும்’

‘ஆகஸ்ட் பத்தாம் தேதி ஒரே சமயத்தில் எப்படி இரண்டு இடங்களில் காணக்கிடைத்தான்?’

‘இவ்வளவு நேரம் சிறுபிள்ளைத்தனமான கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறாய் அண்ணா அவன் என்ன தெய்வமா? ஒரேசமயத்தில் இரண்டு இடங்களில் அருள்பாலிக்க?’

‘பிறகு?’

‘அப்படியானால்  சிவப்புத் துணியை நீங்கள் கட்டவில்லையா, யாரோ அந்த எருமையின் கண்களைக் குத்திவிட்டு அந்தப் பெண் மீது விட்டார்கள் என்று?’

‘அண்ணாவிற்கு எத்தனையோ எதிரிகள். அண்ணனை டார்கெட் செய்யாமல் போனார்களே வேசி மகன்கள். அவர்களை விடுவதாக இல்லை. ஒரு இடம் கூட விடாமல் வீட்டிற்கு வீடு, தெருவிற்குத் தெரு, ஊருக்கு ஊர் என இருக்கும் எல்லா மனிதர்களையும் தேடிப் பிடித்துக்கொண்டு மேலும் அவர்களைச் சட்டத்தின்படி…’

‘பேஸ்பால் போட்டியில் தேசிய அளவிற்குச் சென்றிருக்கிறீர்கள். அப்பொழுது உங்கள் உணர்வு எப்படி இருந்தது?’

‘பள்ளியில் யாரோ உங்களைவிட நன்றாக ஆடுகிறார்கள் என்றவுடன் அவனைவிட்டுவிட்டு அவனுடைய பேஸ்பால் பேட்டினை உடைத்தீர்கள் என்ற செய்தி எந்த அளவிற்கு உண்மை?

‘உங்கள் கணக்கில் இதுவரை இருநூற்றி பதிமூன்று நபர்கள் என்கிறார்களே உண்மைதானா’

‘நீங்கள் நாட்டு ஆயுதங்களை அதாவது… வில், அம்பு, கோடாரி போன்றவற்றைப் பயன்படுத்துகிறீர்கள் என்று சொல்கின்றனர். உங்களுக்கு நம்முடைய பண்பாடு, பழக்கவழக்கங்கள் என்றால் அவ்வளவு மதிப்பிற்குரியதா அல்ல வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா?’

‘பதிமூன்று என்ற இலக்கத்தின் மீது ஏதாவது நம்பிக்கை இருக்கிறதா? உடலை பதிமூன்று துண்டுகளாகச் செய்வதன் உள் அர்த்தம் என்ன?’

‘இன்றைய தேதிவரை தாங்கள் பதிமூன்று முறை இறந்துவிட்டதாக உலகம் நம்புகிறது. இன்னும் நீங்கள் உயிரோடுதான் இருக்கிறீர்களா?’

‘கடைசி கேள்வி. எங்கள் தொலைக்காட்சியின் உரிமையாளர் என்ற முறையில் பார்வையாளர்களுக்கு நீங்கள் சொல்லவரும் செய்தி?’

‘வராந்தாவிற்கு வந்துகொண்டிருக்கும் காலடிகள் சப்தங்களைக் கேட்டு, ஸோபாவில் அமர்ந்திருந்த தொகுப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் எழுந்து நின்றனர்.

**

வராண்டா முழுக்க சுவரில் மாட்டப்பட்டிருக்கும் பதினேழு எல்.இ.டி. தொலைக்காட்சிகளிலும் செய்தி சேனல்களை ஓடவிட்டு, தன்னுடைய மரணச் செய்தியைத் தானே பார்த்துக்கொண்டிருக்கிறான்.

அத்தனை முகங்களையும் ஆக்கிரமிக்கும் மைக்ரோ ஃபோன்கள்.

‘அவனைத் தயார் செய்தது அவர்களே’

‘இல்லை இவர்களே’

‘ஒருவர் செய்யவேண்டும் என்று அவசியமில்லை. அவனே ஒரு சுயம்புதான்’

அனைத்தையும் எச்சரிக்கையாக டைரியில் குறித்து வைத்துக்கொள்ளும் அவன், அவர்கள் வந்திருக்கிறார்கள் என்ற தகவல் வரவும் வராந்தாவிற்குச் சென்றான்.

அந்தத் தொலைக்காட்சிகளில் நூற்றுக்கணக்கானவர்கள் வட்ட வடிவ மேசைகளைச் சுற்றி நின்றுகொண்டு தங்கள் பங்கிற்காகப் பொறுமையின்றி தொகுப்பாளரைப் பார்க்கிறார்கள்.

தொகுப்பாளினி குரலைச் சரிசெய்துகொண்டாள்.

‘விவாதத்தை முடிப்பதற்கு முன்பாக… விரிவாக.. சுருக்கமாக… அவனுடைய உண்மையான பெயர் என்ன என்று யாருக்கும் தெரியாது என்றும் அவனை யாரும் இதற்கு முன்பு நேரில் பார்த்ததில்லை என்றும் அல்லது அவனை நேரில் பார்த்தவர்கள் யாரும் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்றும் அவன் ஒரு பெரிய வங்கி அதிபதி என்றும் கோடிக்கணக்கான ரூபாய்கள் அவனுடைய விரல் நுனியிலிருந்து தினமும் குதிக்கின்றன என்றும், இல்லை பதிவாளர் என்றும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களைத் தானே பதிவு செய்துகொண்டான் என்றும் பதிவு செய்ய வைத்தான் என்றும், இல்லை அவன் ஒரு வழக்குரைஞர் என்றும் யாருடைய தரப்பிலாவது வாதிட்டு வழக்கை ஒரே வார்த்தையில் முடித்துவைப்பவன் என்றும் இல்லை இவற்றைவிடப்  பெரிய நீதிபதி என்றும் தன்னுடைய தீர்ப்புகளை மதிக்காதவர்களைப் பழிவாங்குபவன் என்றும், இல்லை அவன் ஒரு வியாபாரி என்றும் பெரிய பெரிய அரசியல்வாதிகளே அவன் பின்னால் திரிகிறார்கள் என்றும், இல்லை அவன் ஒரு அரசியல்வாதி என்றும் வியாபாரிகள்தான் அவனைச் சுற்றி அங்கப்பிரதட்ஷனம் செய்கிறார்கள் என்றும், இல்லை டவுன் பிளானிங் அதிகாரியாக இருக்கலாம் என்றும், நகரத்தில் மட்டுமன்றி மாநிலம் முழுவதும் எது எங்கு நிகழவேண்டும் என நிர்ணயிக்கிறான் என்றும், இல்லை அவன் வரும் பொழுது மாநில அளவிலான அதிகாரி ஒருவர் எழுந்து நிற்பதைப் பார்த்தோம் என்றோம், ஆகையால் அவன் நாட்டின் பெரிய அதிகாரியாக இருக்க வேண்டும் என்றும், நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உருவான யாரையும் பொதுவெளியில் தீவிரமாகக் கண்டித்தான் என்றும், ஆகையால் அவன் தேச பக்தன் என்றும், காப்பாளன் என்றும், மீட்பன் என்றும், இடது கைக்குத் தெரியாமல் வலது கையால் கொடை வழங்குபவன் என்பதால் மாபெரும் வள்ளல் ஆவான் என்றும், மக்கள் சேவை செய்பவன் என்றும், அனைவரிடமும் அனைத்து மொழி, கிளை மொழிகளில் பேசக்கூடியவன் என்பதால் அனைத்துவிதமான பிராந்திய வேறுபாடுகளுக்கும் அந்நியமானவன் என்றும், வேண்டுபவர்களுக்கு, அடைக்கலம் வேண்டி நிற்பவர்களுக்கு எப்போதும் துணை நிற்பவன் என்பதால் முடிச்சுப் பணம் போன்றவன் என்றும், பயந்துபோய் வேற்று நாடுகளில் ஒளிந்துகொண்ட எதிரிகளைக்கூட மன்னிக்கக்கூடிய பொறுமையாளன் என்றும், அவன் யாருக்கும் புரியமாட்டான் என்பதால் பெரிய தத்துவவாதி என்றும், இல்லை பூமியின் மீதிருக்கும் யாவற்றையும் குறித்தும் தெரிந்துவைத்திருப்பவன் என்பதால் பெரிய ஞானி ஆக இருப்பான் என்றும், சட்டைப்பையில் ரூபாய்கூட இல்லாமல் சுற்றித்திரிகிறான் என்பதால் முற்றும் துறந்த யோகி என்றும், வில், அம்பு, கோடாரி தரிக்கிறான் என்பதால் உண்மையான சுதேசி என்றும், தன்னுடைய சேனல்களில் தன்னை திட்டும் நிகழ்ச்சிகளுக்குக் கூட ப்ரைம் டைம் ஸ்லாட் ஒதுக்குபவன் என்பதால் பெரிய ஜனநாயகவாதி என்றும், ஒரேசமயத்தில் பல்வேறு இடங்களில் காட்சிதருபவன் என்பதால் மனிதன் இல்லை என்றும், சாவு அவனை ஏதும் செய்யவில்லை என்றும், மரணத்தையே வென்றவன் என்றும் வந்திருந்தவர்கள் எல்லாம் ஒருவரை ஒருவர் எதிர்த்துக்கொண்டார்கள் என்பதாக நமக்குப் புரியவருகிறது.

**

அவர்கள் அவனுடைய முகமூடியைக் கழற்றி அறைக்குள் அனுப்பியதும் கதவுகளைத் தாழிட்டார்கள். இனி தன் வாழ்க்கையில் ஒருபோதும் அவரைப் பார்க்கமாட்டான் என்பதுபோல் சட்டென்று காலில் விழுந்தான்.

அவனை எழுப்பும் முயற்சி ஏதும் செய்யாமல் அவர் இவ்வாறாகச் சொன்னார்:

‘போட்டது அவனைத்தான் என்பது உனக்கும் எனக்கும் தவிர வேறு யாருக்கும் தெரியாது. கொன்ற எங்கள் ஆட்களுக்குட்பட! அப்படித்தானே?’

கால்களருகிலிருந்த தலை ஆடியது.

‘நீ இப்பொழுதிருந்து அவனாக மாற வேண்டும். இந்த விசயம் உன் மனைவிக்குக்கூட தெரியக்கூடாது. வாலாட்டினால்?’

தரையிலிருந்த தலை மறுபடியும் ஆடியது – புரியாத புன்னகையுடன்.

 

Unknown
தெலுங்கு : சுரேஷ்
தமிழில் : சண்முக விமல் குமார். 

 

குறிப்புகள்:

இக்கதை கொத்த கத 2017 என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

சுரேஷ் –

பத்துக்கு மேற்பட்ட கதைகளை எழுதியுள்ள சுரேஷ், தனது நண்பர்களுடன் சேர்ந்து கடந்த இருபது ஆண்டுகளாக ரைட்டர் மீட்டிங் என்ற பெயரில் பயிற்சிப்பட்டறைகள் நடத்தி வருபவர். கொத்த கத என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள மூன்று தொகைநூல்களின் இணை தொகுப்பாசிரியராக உள்ளார். மாய யதார்த்தவாதம் குறித்த கட்டுரைகளையும், மேற்கத்திய எழுத்தாளர்கள் குறித்த சில குறும்படங்களை 10 tv தெலுகு ஊடகத்தோடு சேர்ந்து இயக்கி உள்ளார். மார்க்வெஸ் வாழ்வும் பணியும் என்ற தலைப்பில் நூல் எழுதிவருகிறார்.

 

சண்முக. விமல் குமார்

புதுப்புனல், கணையாழி, இடைவெளி போன்ற இதழ்களில் மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் வெளிவந்துள்ளன. றாம் சந்தோஷ் என்ற புனைபெயரிலும் எழுதிவரும் இவர், ‘சொல் வெளித் தவளைகள்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.