பலா தித்திப்பான இனிப்புச் சுவையைக் கொடுப்பது போல எழுத்தாளர் சு.சமுத்திரம் அவர்கள் எழுதிய ‘வேரில் பழுத்த பலா’ நாவலிலும் அத்தகையதொரு இனிமையான சுவையைக் கண்டேன்… உணர்ந்தேன்…
நாவலின் பெயர் பொருத்தம் மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது. கருத்துச் செறிவான அடர்த்தியான வார்த்தைகளால் வடித்திருக்கிறார். தேவையற்ற எவ்வித வர்ணனைகளோ, விளக்கங்களோ இல்லாமல் படைத்திருக்கிறார்.
அடித்தட்டில் வாழும் மக்களின் அவலங்களில் ஒன்றாக, அவர்கள் படித்து ஓரளவுக்கு மேல் எழுந்துவரும் சூழலில் வேலைத்தளங்களிலும் சமூகச் சூழலிலும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் ஏராளம் உண்டு. அப்படிப்பட்ட சவால்களில் ஒன்றைக் கதைக்களமாக எடுத்துக் கொண்டு இந்நாவலை படைத்திருப்பது மிகச் சிறப்பு.
அரசு அலுவலகங்களில் அடித்தட்டு சமூகத்திலிருந்து படித்து வேலைக்கு வரும் நபர்கள், கீழ்நிலையில் பணியில் இருந்தாலும், மேல் நிலையில் இருந்தாலும் பிரச்சனைதான். கீழ்நிலையில் இருப்பவர்களை அவ்வலுவலகத்தை விட்டே விரட்ட நினைக்கும் மனநிலையும், மேல்நிலையில் அதிகாரி மட்டத்திலிருப்பவர்களை மற்ற சமூகத்தினர் தங்களை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தக் கூடாது. அல்லது நாங்கள் அவர்களின் கட்டளைக்கு உட்பட மாட்டோம் என்கிற மனநிலையையும் மிக அழகாக நாவலில் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்.
அரசு அலுவலகங்களில் நடக்கும் இதுபோன்ற தீண்டாமை அல்லது சாதிய சமூகத்தினரின் பொதுப் புத்தியில் உறைந்துபோன மனநிலையால் நடக்கும் சீர்கேட்டை சித்தரிக்கும் நாவல்கள் எதுவும் வந்துள்ளனவா? எனத் தெரியவில்லை. அப்படியே வந்திருந்தாலும் வேரில் பழுத்த பலா நாவலின் அளவுக்கு அதன் வீச்சு, அடர்த்தி இருக்குமா? என்பதும் சந்தேகம்தான்!
அரசு அலுவலகங்களில் தாழ்த்தப்பட்ட பெண்களின் நிலை
அன்னம் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த பெண் என்பதற்காக பட்டதாரியான அவளுக்குப் படிப்பிற்கேற்ற வேலையைக் கொடுக்காமல் அந்த அலுவலகத்திலே மிகவும் கீழான டெஸ்பாட்ச் செக்ஷனில் வேலை கொடுக்கப்படுவது சாதிய மனோபாவத்தால்தான். முறைப்படி அரசுப் போட்டித் தேர்வு எழுதிப் பணிக்கு வந்தாலும் அன்னம் கீழ்சாதியில் பிறந்ததுதான் இதற்குக் காரணம். அன்னத்திற்குக் கொடுக்க வேண்டிய பணியை பத்தாம் வகுப்பு படித்த மேல் வகுப்பைச் சார்ந்த சந்தானத்திற்குக் கொடுப்பதும், அதற்காக அவ்வலுவலக நிர்வாக அதிகாரி சூழ்ச்சி செய்திருப்பதும் சாதி விசுவாசம்தான்.
தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்தவர் அன்னம் என்பதற்காக அலுவலில் மேலதிகாரிகள் செய்யும் தில்லுமுல்லுகளுக்கு அன்னத்திற்குத் தெரியாமலே உட்பட வைக்கிறார்கள். இவர்கள் செய்யும் சூழ்ச்சியில் சிக்கினாலும் கடைசியில் மாட்டப்போவது சூழ்ச்சிதாரிகள் கிடையாது. அப்படிப்பட்ட சிக்கலில் மாட்டவைத்து அதற்காக மெமோவும் அன்னத்திற்குக் கொடுக்கப்படுகிறது. இது தெரியாமல், இந்த மெமோ வெறுமனே அன்னத்தை பயமுறுத்தவே எனச் சொல்லி, உதவி இயக்குநர் பதவியிலிருக்கும் சரவணன் கொடுத்தாலும் திட்டமிட்டே அது கோப்புகளில் சேகரிக்கப்பட்டுள்ளதை பின்பு தெரிந்து கொள்கிறான். அன்னத்தின் பின்புலத்தை அறிந்த பின்பு அதே சமூகத்தைச் சார்ந்த அதிகாரியான சரவணனின் மனம் கொதிக்கிறது இவர்களின் சூழ்ச்சிகளால். விசாரணையில் தவறுக்குக் காரணமான மேலதிகாரிகளின் பெயரையும் மெமோவில் சேர்க்கிறான் சரவணன்.
தன்னைப் போன்ற அடித்தட்டு சமூகத்திலும் பிறந்து பெரும் சவால்களுக்கு இடையில் இவ்வலுவலகப் பணிக்கு வந்திருக்கும் அன்னத்தின் மீது சரவணனுக்கு அப்போதுதான் மரியாதை உண்டாகிறது. அதுவரை அன்னம் ஒன்றுக்கும் உதவாதவள் என நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால் இவ்வலுவலகத்திலுள்ள சக அதிகாரிகளால் அவள் எவ்வளவு வஞ்சிக்கப்பட்டிருக்கிறாள் என்பதை நினைத்துப் பார்த்தான். இத்தனை நாள் அன்னத்தின் பின்புலம் தெரியாமலும் அவளின் சகிப்புத்தன்மையின் மதிப்பு தெரியாமலும் இருந்திருக்கிறோமே என வருந்துகிறான். அந்த அன்னமே சரவணனுக்கு உற்ற துணையாகவும் ஆறுதலாகவும் பின்பு மாறுவது நாவலின் சிறப்பம்சம் எனலாம்.
அரசு வேலையைத் தக்க வைக்கும் தந்திரம்
அரசு அலுவலகங்களில் இருக்கும் பல காலி இடங்களை முறையாக மேலிடத்திற்குத் தெரிவிக்காமல் அவ்விடங்களில் தங்களுக்கு வேண்டியவர்களை சுய சாதிக்காரர்களைத் தற்காலிகமாக வேலையில் அமர்த்தி, பின்பு நிரந்தரமாக்கிக் கொள்ளும் தந்திரம். அரசாங்க வேலைகள் எல்லாம் உயர் வகுப்பினருக்கே உரியது போல் எண்ணிக் கொள்ளும் மனப்பான்மையை வெட்ட வெளிச்சமிட்டு இந்நாவலில் காட்டப்பட்டுள்ளது.
நானும் ஒருசில அரசு அலுவலகங்களில் என்ன அடிப்படையில் தற்காலிகமாகப் பணியில் அமர்த்துகிறார்கள், யார் அதற்கான அதிகாரத்தைக் கொடுக்கிறார்கள் என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். அதற்கான விடை அப்போது தெரியவில்லை எனக்கு. அதுவெல்லாம் உயர் வகுப்பார் பணிகளைத் தங்களுக்கு உரித்தானதாக தக்க வைத்துக் கொள்ள நினைக்கும் சூழ்ச்சி என்பதை, “எஸ்.எஸ்.எல்.சி படித்த ஒரு சந்தானத்தை எப்படியோ வேலையிலே சேர்த்து, அக்கௌண்ட்டைக் கவனிக்கச் சொல்லலாம்… அவரு இருக்குற கிளார்க் வேலையை ஸ்டாப் செலக்ஷன் கமிஷனுக்கு முறைப்படி தெரியப்படுத்தாமல், சட்டவிரோதமாய் இருக்கலாம். அப்புறம் நாலைந்து வருஷத்துக்குப் பிறகு அந்த சட்ட விரோதத்தையே ஆதாரமாக்கி சட்டப்படி அவரை நிரந்திரமாக்கலாம்… ஏன்னா சந்தானம் பட்டா போட்டு வேலைக்கு பரம்பரையாய் வாரவரு… அன்னம் கோட்டாவுல வந்தவள்… அப்படித்தானே சார்…?” (பக் 30-31) என அதிகாரியான சரவணன் தனக்குக் கீழ் இருக்கும் அதிகாரிகளின் சூழ்ச்சியைக் கேள்வி கேட்கும் போது புரிந்து கொள்ள முடிகிறது.
தொடர்ந்து உயர்த்திக் கொண்ட சமூகம் அரசு அலுவலகங்களில் பதவிகளைப் பெறவும் தக்க வைக்கவும் என்ன மாதிரியான சூழ்ச்சிகளைக் கையாள்கிறார்கள் என்பதை அப்பட்டமாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்.
தாழ்த்தப்பட்டவர்கள் குறித்த உயர் வகுப்பாரின் புரிதல்
பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட படித்த (ஆண்–பெண்) இளைஞர்களுக்கு ஒன்றும் தெரியாது. அவர்கள் முட்டாள்கள், முரடர்கள் என்று எண்ணும் போக்கு புரையோடிப் போன சாதிய சமூகத்தில் இன்னும் இருக்கிறது. இதை இந்நாவலில், “ஒங்களுக்கு ஹரிஜனப் பெண்ணுன்னா, ஒன்னும் தெரியாதுன்னு நினைக்கிற சட்டவிரோத சமூக விரோத சிந்தனை” (பக் 31) என நறுக்குத் தெறித்தாற் போல் சொல்லப்பட்டுள்ளது மிக அருமை.
“படித்த ஹரிஜனங்களோட திறமை, வெட்டியெடுக்கப்படாத தங்கம் மாதிரி. தூசி படிந்த கண்ணாடி மாதிரி. நாம் தங்கத்தை வெட்டியெடுக்கணும் ஏதோ பித்தளை இருக்குதுன்னு தங்கத்தை புதைச்சுடக் கூடாது. கண்ணாடியை துடைச்சுப் பாக்கணும். கைக் கண்ணாடி போதுமுன்னு அதை உடைச்சிடப்படாது” (பக் 31) என்ற வைர வரிகள் தாழ்த்தப்பட்டவர்களின் திறமைகளை அங்கீகரிக்காமல் புறம் தள்ளும் சூழலை நன்றாக வர்ணிக்கிறது. இப்படியெல்லாம் ஒரு தாழ்த்தப்பட்ட அதிகாரி அவ்வலுவலகத்தில் வேலை செய்யும் மற்றவர்களைப் பார்த்துச் சொன்னால் உடனே சரியெனக் கேட்டுத் திருந்திவிடுவார்களா? எப்படியாவது இவர்களைக் கூண்டோடு வெளியேற்றத்தானே நினைப்பார்கள். அந்தச் சூழ்ச்சியும் நடக்கிறது.
அலுவலகத்தில் நடக்கும் விசயங்களை அதிகாரியான சரவணனுக்கு அன்னம்தான் போட்டுக் கொடுத்திருப்பாள் எனத் தில்லுமுல்லு சூழ்ச்சிகளில் ஈடுபடும் அவர்கள், “இந்த அன்னம் திமிர் பிடிச்ச சேரிக்கழுதை… இந்த கிறுக்கன்கிட்டே என்னவெல்லாமோ சொல்லிக் கொடுத்திருக்காள்… இருக்கட்டும்… இருக்கட்டும்… எத்தனை நாளைக்கு இந்த சரவணன் ஆட்டம்?” (பக் 31-32) என நினைத்து சரவணனை இவ்வலுவலகத்தை விட்டு அல்ல… அவனது வேலைக்கே உலை வைக்கும் தந்திரத்தோடு அவர்களின் ஊழலை, லஞ்சம் வாங்குவதைக் கண்டுபிடித்த காரணத்திற்காக சரவணனை சூழ்ச்சி செய்து பொய்யான குற்றச்சாட்டில் சிக்க வைக்கிறார்கள்.
இன்னார்தான் எனத் தெரிந்தும் அவர்களைப் பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்காமல், அதற்கு நேர்மையான விளக்கம் கொடுத்து தன் மீது எந்தத் தவறும் இல்லையென சரவணன் நிரூபணம் செய்ய நினைக்கிறான். அதற்காக தவியாய் தவிக்கிறான். அவனது மனநிலையை, “வெளியே மனித நேயர்களாய் சிரித்தபடியே, உள்ளுக்குள் ஓநாய்த்தனத்தை மறைத்துக் கொள்ள இவர்களால் எப்படி முடிகிறது?” என வர்ணித்த விதம் அருமை. உண்மையில் இன்றைக்கும் தாழ்த்தப்பட்டவர்களின் நிலை பல இடங்களில் அப்படித்தான் இருக்கிறது. ஆனால் சூழ்ச்சி செய்பவர்களை நேரில் கேட்க முடியாத சூழலில் சிக்கிப் பரிதவிக்கும் எத்தனையோ நேர்மையான நபர்களை கேள்விப்பட்ட அனுபவங்களும் இன்னும் தொடரத்தான் செய்கிறது.
காலனி வீடுகள் குறித்த பார்வை
ஊருக்கு ஒதுக்குப் புறமாகக் கட்டப்பட்டிருக்கும் காலனி வீடுகளைப் பற்றி பொதுப் புத்தியில் ஒருசில கற்பிதம் இருக்கிறது. ஒருவரின் பின்புலத்தை அறிய வேண்டுமானால் அவர் குடியிருக்கும் இடத்திற்கு ஏற்றவாறுதான் முடிவு செய்யப்படுகிறது. எத்தகைய சூழ்ச்சி வேலை செய்தாலும் அஹ்ரகாரத்தில் இருந்தால் அதற்குத் தனி மரியாதைதான்! காலனி மற்றும் சேரிகளில் வசித்தால் அவர்களை சக மனிதர்களாகக்கூட பார்ப்பது கிடையாது. இதற்கு நாவலில் வரும் இவ்வரிகள் மிகப் பொருத்தமாக இருக்கும்.
“நீ வேற, பாவம் காலனிப் பொண்ணு, இது பார்க்கக்கூடிய ஒரு வேலை டெஸ்பாட்ச்னு பாவம் பார்த்தோம் பாரு. நமக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும்” (பக் 54)
“நல்லதுக்குக் காலமில்ல. ஒன்னையெல்லாம் அக்கௌவுண்ட் செக்ஷன்ல மாட்ட வச்சு டிராப் செய்யணும். காலனிப் பொண்ணாச்சேன்னு கருணை வைக்கிறதுக்கு இது காலமில்ல. அவர்கிட்ட என்னவெல்லாம் சொன்னியோ? எங்க தலைவிதி, காட்டான் கோட்டான் கிட்டெல்லாம் தலை குனிய வேண்டியதிருக்கு” (பக் 55) தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்த ஒருவன் படித்து திறமையாகத் தேர்வெழுதி அதிகாரியாக வந்தாலும் அவர்களைக் காட்டான் கோட்டானாகப் பார்க்க வேண்டிய மனநல நோயாளிகளாக இருப்பவர்களே இந்த தேசத்தின் பெருத்த அவமானம். மனிதநேய பண்பு துளியும் இல்லாத மனநோயாளிகள்தானே இவர்கள்! அரசு அலுவலகங்களில் பணிசெய்யும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள் இதுபோன்ற அவலங்களையும் சுமக்க வேண்டியதிருக்கிறது.
எதிர்ப்புக்குரல்
ஏற்கனவே இருக்கிற சாதிய கட்டமைப்பை அப்படியே ஏற்று மேல் வகுப்பாரின் மனம் கோணாமல் அடங்கி நடந்து கொண்டால் அவர்கள் நல்லவர்கள். தனக்கு நேரும் அவமானத்தை எதிர்த்துக் கேள்விக் கேட்டால் திமிர் பிடிச்சவன்;. அகராதி பிடிச்சவன் என்ற பட்டமெல்லாம் தாழ்த்தப்பட்டவர்கள் வாங்கிக்கட்ட வேண்டியது பொதுப் புத்தியில் உறைந்துபோன ஒன்று. அப்படித்தான் அதே அலுவலகத்தில் அன்னத்தை காலனிப் பொண்ணு என அவமதித்து திட்டிக் கொண்டிருக்கும் போது, அங்கு வேலை செய்யும் தங்கமுத்து வெகுண்டுடெழுந்து அன்னத்திற்குச் சாதகமாகக் குரல் கொடுக்கிறான்.
“ஆமா… ஒங்க மனசுல என்ன நினைக்கிறீங்க… சொல்லுக்குச் சொல்லு… காலனி காலனின்னு சொல்றீங்க…” (பக் 55)
“அன்னம்… ஒங்களைத்தான்… கிராமத்து சேரி குனிகிறது மாதிரி இங்கே குனிந்தால், அப்புறம்… பூமியில் வந்துதான் முன்தலை இடிக்கும்…”
“இங்கே… யாரும் ஒங்களுக்கு அவங்களோட அப்பன் வீட்டுல இருந்து சம்பளம் கொடுக்கல… பிச்சை போடல… யாரோட தயவாலயும் நீங்க இங்கே வேலைக்கு வரல… ஒங்க மாமா மச்சான் ஒங்களை இங்கே… ‘அட்ஹாக்ல’ போட்டு, அப்புறம் நிரந்தரமாக்கல… செலக்ஷன் கமிஷன் மூலம் வந்தவங்க நீங்க.”
“சிரிக்கிறவங்களைப் பார்த்துச் சீறணும்… சீறுறவங்களைப் பார்த்து அலட்சியமாய் சிரிக்கணும்… அப்போதுதான்… நம்மை மாதிரி ஆளுங்க காலம் தள்ள முடியும்…”
“இந்தா பாரு… பாவிப் பொண்ணே! ஒன்னை இனிமேல், யாராவது காலனிப் பொண்ணுன்னு சொன்னால், காலணியைக் கழற்றி அடி. அது ஒன்னால முடியாதுன்னால்… செட்யூல்ட்காஸ்ட் கமிஷனுக்கு கம்ப்ளெயிண்;ட் கொடு…” (பக் 56)
மேற்கண்டவாறு தங்கமுத்து அன்னத்தின் மீது எறியப்பட்ட ஏளன சொற்களை சுயமரியாதை உணர்வோடு, அன்னத்திற்கு ஆதரவாகப் பேசி உணர்ச்சிகரமாக எதிர்தாக்குதலைத் தொடங்கியதும் எதிர் தரப்பினர் ஆட்டம் கண்டுபோய் அமைதியாவதும் தொடர்கதை தான். ஆனாலும் இது முடிவல்ல என்பது மட்டும் நிதர்சனம்.
இதே தங்கமுத்து தான் ஆபிஸ் அம்பேத்கர் என்று ஓரிடத்தில் அதிகாரியான சரவணனால் புகழப்படுகிறான். உண்மையாகவே தங்கமுத்து அன்னத்திற்குப் பதில் கொடுத்து பேசிய கருத்துக்கள் அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக நடக்கும் அவலங்களை எதிர்கொண்ட வேகமும் வீச்சும் இருக்கத்தான் செய்கிறது. தங்கமுத்துவிற்கு மிகப் பொருத்தமான அடைமொழி பெயர்தான் வைத்திருக்கிறார்கள்.
சாதிப்பட்டம்
இன்றைக்கும் தன் பெயருக்கு முன்னால் பலர் சாதிப் பட்டத்தையும் சேர்த்தே சொல்வதைக் கேள்விப்பட்டிருப்போம். பெரியார் தன்னுடைய பெயருக்கு முன்னால் சாதிப் பட்டத்தைத் துறந்த கையோடு சுயமரியாதை உள்ள ஒவ்வொருவரும் தங்களது பெயருக்குப் பின்னால் போட்டுக் கொள்ளும் சாதிப் பட்டத்தை துறக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். பலர் அப்படியே செய்தார்கள். இது கிட்டத்தட்ட பெரியார் சொல்லி இன்று ஒரு நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் பலர் சாதிப் பட்டங்களைக் கைவிடுவதாய் இல்லை. சுயமரியாதை இருந்தால் அவர்கள் ஏன் பெயருக்குப் பின்னால் சாதிப் பட்டத்தை போட்டுக் கொள்ளப் போகிறார்கள். இதற்கு அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் என யாரும் விதிவிலக்கல்ல. இத்தகைய பெரியாரின் சுயமரியாதை சிந்தனையை இந்நாவல் ஓரிடத்தில் இவ்வாறு பதிவு செய்கிறது.
“என்றைக்கு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், அரசியல்வாதி, எழுத்தாளன், கவிஞன், பத்திரிகை ஆசிரியர்னு ஒருவனுக்குப் பட்டம் வருதோ அப்போ அவன் தன்னோட சாதிப் பட்டத்தை துறந்துடணும்!” இது சுயசாதிப் பட்டங்களைத் துறந்து மனிதத்தைப் போற்ற வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறது.
நாமெல்லாம் ஒரே சாதி என்று சொல்வதைக்கூட தவிர்க்கப்பட வேண்டும் என்பதை இந்நாவல் ஓரிடத்தில் வலியுறுத்துவதை மிகக் கவனமாகப் பார்க்க வேண்டியதிருக்கிறது. சாதிப் பெயரைச் சொல்லாவிட்டாலும் ஒரே சாதி என்பதற்கு அர்த்தம் என்ன என்பதையும் கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது. அதைத்தான் சரவணன் மறுத்து மேற்கண்டவாறு தனது நண்பனிடம் சொல்கிறான். சாதிப் பட்டங்களைச் சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டு திரிபவர்களுக்கு அதுவொரு போதை போன்ற ஓர் உணர்வைக் கொடுக்கலாம். ஆனால் அதே சாதியின் பெயரால் சமூகத்தில் சொல்லி மாளாத துன்பங்களை அனுபவிக்கும் அல்லது எதிர்கொள்ளும் எவரும் அத்தகையதொரு பட்டத்தை வெறுத்து மனிதத்தைப் போற்றவே விரும்புவார்கள் என்பது எதார்த்த உண்மை.
நேர்மைக்கு விலை
தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து கிராம பின்புலத்தில் படித்துத் தேறி யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மூலம் எடுத்த எடுப்பிலேயே கிளாஸ் ஒன் ஆபிஸர் வேலைக்குத் தேர்வாகும் சரவணன் நேர்மையாக, பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு ஸ்டேஷனரிப் பொருட்களை கொட்டேஷன் மார்க்கெட்டில் வாங்கி சப்ளை செய்யும் மத்திய அரசு அலுவலகம் ஒன்றில் உதவி இயக்குநராக பணியாற்றுகிறான்.
பொருளின் தரம் இல்லாததால் சௌரி நாராயணன் எனும் காண்ட்ராக்டரின் கொட்டேஷனை ரத்து செய்துவிட்டு வேறொரு கம்பெனிக்கு ஆர்டர் கொடுத்தது பிடிக்காமல், உள்ளே வேலை செய்யும் அலுவலர்கள் சரவணனுக்கு எதிரான சூழ்ச்சிகளில் ஈடுபட்டு அவனது வேலையை காலி செய்வதற்கு காண்ட்ராக்டரோடு கங்கணம் கட்டிச் செயல்படுகிறார்கள். இதையெல்லாம் எதிர்கொள்ள பெரும் சவால்களைச் சந்தித்து தன் இருப்பிடத்தைத் தக்க வைக்கப் போராடுகிறான்.
இது அடிப்படையில் நேர்மையானவனுக்கு அரசு அலுவலகங்களில் வேலை கிடையாது. அப்படியே இருந்தாலும் கண்டும் காணாமலும் இருக்க வேண்டும், இல்லையென்றால் இப்படித்தான் சிக்கலில் மாட்ட வைப்போம். அதுவும் தாழ்த்தப்பட்டவன் உயர் பொறுப்புகளில் இருந்து கொண்டு எங்களுக்கு ஆர்டர் போடக்கூடாது என்கிற கருத்தை உணர்த்துவது போலவும் இருந்தது.
அந்த இடத்தில் அன்னம்தான் சரவணனின் மனவோட்டத்தைப் புரிந்து கொண்டு, “வீட்டுக்கு வீடு வாசல்படிதான் சார். ஒங்களை மாதிரி நேர்மையானவங்க எங்க போனாலும் வம்புதான். அதனால தெரிஞ்ச வம்பு, தெரியாத வம்பைவிட நல்லது” என்று சொல்லித் தேற்றுகிறாள்.
பத்தாம் வகுப்பு படித்திருந்தாலும் சந்தானத்தை தன் சாதிக்காரன் என்ற உணர்வே தந்திரமாக வேலையில் அமர்த்தி தகுதி இல்லாவிட்டாலும் தகுதி இருப்பதாக நினைத்து உயர் வகுப்பார் உரிமை கொண்டாடினார்கள். ஆனால் நேர்மையான, தவறு செய்ய நினைக்காத, பழிவாங்கும் எண்ணம் இல்லாத சரவணனை புரிந்து கொண்டு அந்த தூய உள்ளத்திற்காக அன்னம், சரவணனுக்கு அனுசரணையாகப் பேசுகிறாள். இதுதான் தாழ்த்தப்பட்டவர்களின் இயல்பு. அவர்களின் குணம்சங்கள்.
இந்த அலுவலகத்திலிலேயே தன்னைப் புரிந்துகொண்ட ஒரே நபர் அன்னம்தான் என சரவணனுக்குள் எழும் இயல்பான மனவோட்டத்தால் அவளிடம் மனம்விட்டுத் தன்னுடைய ஆதங்கத்தைப் பகிர்கிறான்.
“ஒரு அரசு ஊழியனை, நேர்மையாகச் செயல்பட முடியாமல் தடுப்பது சட்டப்படி குற்றம்… சமூகப்படி துரோகம்… இதை அரசே செய்தாலும், குற்றம் குற்றந்தான். அதுவும் குற்றவாளிதான்” (பக் 100) என அரசு நிர்வாகத்தில் புரையோடிப் போயிருக்கும் அழுக்கைச் சுத்தப்படுத்தத் தன்னை மனதளவில் ஆயத்தமாக்குகிறான். அதற்கு அன்னத்தின் கரம் ஆதரவாக இருக்கிறது.
மனதால் கலப்பதே காதல்
அலுவலகத்தில் தனக்கு எதிராக நடக்கும் சூழ்ச்சிகளுக்கு மத்தியில் தன்னால் இனி வேலை பார்க்க முடியாது எனத் தனது பணியை ராஜினாமா செய்ய நினைக்கும் சரவணனை அன்னம் தனது ஆற்றுதலில் சரிசெய்கிறாள். அப்போது தனக்காக இவள் எப்படியெல்லாம் துடிக்கிறாள். தான் அதிகாரியாக இருந்தும், அவளைப் புரிந்து கொள்ளாமல் மனம் நோகச் செய்ததை நினைக்கும் சரவணன், இவளுக்கு எவ்வளவு பெரிய மனசு என நினைத்துக் கொண்டே, இன்னொன்றும் நினைக்கிறான், “அலுவலக மரங்களின் உச்சாணிக் கிளைகளில், அணில் கடித்த பழங்களையும், பிஞ்சில் பழுத்த பழங்களையும் பிடுங்காமல் பார்த்த எனக்கு, இவ்வளவு நாளாய்… இந்த வேரில் பழுத்த பலா பார்வைக்குப் படாமல் போய்விட்டதே? இப்போ, இவளை இவளையே… இவளை மட்டுமே… நாள் பூராவும் பார்த்துக் கொண்டே இருக்கணும் போல் தோணுதே! இதுக்குப் பெயர்தான் காதலோ…” (பக் 99)
இங்கு கண்டதும் காதல் வரவில்லை இவர்களுக்கு. தாங்கள் வேலைச்சூழல், தங்களுக்கு எதிராக சுற்றி நடக்கும் சதித்திட்டம், நெருக்கடிகள், உள்ளுக்குள்ளே இருந்து கொண்டு குழிபறிக்கும் நயவஞ்சகர்களுக்கு மத்தியில் தனக்கான ஆற்றுதலாக, தேற்றுதலாக ஓர் உயிர் உருகுகிறது என்றால் அதைக் காதல் என்று சொல்வதில் என்ன தவறு? அப்படித்தான் சரவணன் தன்னை முழுமையாகப் புரிந்து கொண்ட, தன் நலனில் அக்கறை கொண்டாடுகிற அன்னத்தை வாழ்க்கைத் துணையாகத் தேர்வு செய்கிறான். இது தூய்மையான இரு மனங்கள் இணையும் காதல்தானே! இப்படியாகக் காதலின் மகத்துவத்தை நயமான வார்த்தைகளால் ஒன்றினையச் செய்துவிடுகிறார் ஆசிரியர்.
எனது பார்வை
எழுத்தாளர் சு.சமுத்திரம் அவர்கள் வேரில் பழுத்த பலா நாவலைப் படைத்த விதம் உயர் வகுப்பாரின் பார்வையில் தாழ்த்தப்பட்டவர்களைப் பார்க்காமல் தாழ்த்தப்பட்டவர்களின் மனங்களை அறிந்தவராக அவர்களில் ஒருவராகத் தன்னை நிறுத்தி அவர்களின் பார்வையில் உயர் வகுப்பாரின் அணுகுமுறையை மனநிலையை கதாபாத்திரங்கள் வழியாக உரையாடல்களாக வடித்திருப்பது மிக அருமை.
சமூகத்திலுள்ள கட்டமைப்பை மேலிருந்து கீழாகப் பார்க்காமல், கீழிருந்து மேல் உள்ளவர்களை ஆட்டம் காண வைக்கும் அல்லது சமமாகப் பார்க்கும் மனநிலை எல்லோருக்கும் வாய்க்காது. அது இந்நாவலின் ஆசிரியருக்கு மிகவும் நன்றாக வாய்த்திருக்கிறது. கொண்டாடப்பட வேண்டிய நாவல்களில் இதுவும் ஒன்று எனச் சொல்வேன்.
இந்நாவலை வாசிக்கக் கூடிய யாவரும் ஒருவித மனமாற்றம் அடைவார்கள் என்று உறுதியாகச் சொல்லலாம். அது தாழ்த்தப்பட்டவர்களாக இருந்தால் சாதிய சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் அவலங்களுக்கு எதிராகத் தனது எதிர்ப்பைக் காட்ட உத்வேகம் கொள்ளவும், உயர் வகுப்பாராக இருந்தால் அவர்களின் கீழ்த்தரமான எண்ணங்களைக் கண்டு வெட்கித் தலைகுனிய வைப்பதோடு, மனசாட்சியை ஆட்டம் காணச் செய்யும் படைப்பாகவும் இது இருக்கும் என உறுதிப்படச் சொல்லலாம்!
- மு.தமிழ்ச்செல்வன்
நூல் : வேரில் பழுத்த பலா
ஆசிரியர்: சு.சமுத்திரம்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
விலை : ₹110