காலநிலை மாற்றமும் பெண்களும்

காலநிலை மாற்றமும் பெண்களும் என்ற தலைப்பு மிக அடிப்படையான கேள்வி ஒன்றை எழுப்பக் கூடும். காலநிலையில் ஏற்படும் மாற்றங்கள் அனைவருக்கும் பொதுவானவை தானே, இதில் பெண்களின் தனித்த பங்கு அல்லது பாதிப்பு என்னவாக இருக்க முடியும் என்பதே அது. இதைச் சற்று கவனத்தோடு அணுகும்போது, நாம் ஏற்கெனவே அறிந்தவை புதிய கோணத்தில் புலப்படும். ‘இதுதானே இயல்பு’, ‘இது எப்போதும் இப்படித்தானே நடக்கிறது’ என்பன போன்ற நாம் இயல்பாகக் கடந்துவிடக்கூடிய, சுரணையற்று அல்லது மரத்துப் போய் ஏற்றுக்கொண்டுவிட்ட சில நிதர்சனங்கள் வெளிப்படுகின்றன.

தமிழ் இலக்கியத்தில் சூழலியல் குறித்த பதிவுகள் எக்காலம் தொட்டுக் கிடைக்கின்றன என்பதற்கு ஔவையாரின் இந்தப் பாடல் ஒரு சான்று:

வரப்புயர நீருயரும்

நீருயர நெல்லுயரும்

நெல்லுயரக் குடியுயரும்

குடியுயரக் கோலுயரும்

கோலுயரக் கோனுயர்வான்”

என்று இயற்கை வளங்கள் எவ்விதம் மேலாண்மை செய்யப்படுகின்றனவோ, அதன் அடிப்படையிலேயே ஒரு நாட்டின் வளர்ச்சி இருக்கும் என்பது இதன் பொருள்.

மழைநீரைச் சேமிக்க ஏரி, குளங்கள் அமைக்கப்பட்ட செய்தி சங்க இலக்கியத்தின் பல பாடல்களில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது:

நிலன் நெளிமருங்கின் நீர்நிலை பெருகத்

தட்டோரம்ம இவன் தட்டோரே

தள்ளாதோர் இவண் தள்ளாதோரே”

நிலம் எங்கெங்கு பள்ளமாக இருக்கிறதோ அங்கெல்லாம் நீர் நிலைகள் அமையும்படி கரை அமைத்த மன்னர்களே இவ்வுலகில் என்றென்றும் அழியாப் புகழ்பெற்று விளங்குவர் என்று பாண்டியன் நெடுஞ்செழியனைப் பார்த்து புலவியனார் கூறும் கூற்றாக இந்தப் புறநானூற்றுப் பாடல் அமைந்திருக்கிறது.

நக்கண்ணையாரின் அகத்திணைப் பாடல் ஒன்று:

துய்அவிழ் பனிமலர் உதிர வீசித்

தொழின்மழை பொழிந்த பானாட் கங்குல்

எறிதரைத் திவலை தூஉம் சிறுகோட்டுப்

பெருங்குளம் காவலன் போல,

அருங்கடி அன்னையும் துயில் மறந்தனளே”

பலத்த மழை பொழிந்துகொண்டிருக்கும் நள்ளிரவில் தூக்கமின்றி, பெரிய குளம் ஒன்றை உடைபடாமல் காக்கும் காவலன் போல, அன்னை அவளைப் பாதுகாப்பதாக தலைவி தனது நிலை குறித்து தோழி மூலம் தலைவனிடம் சொல்கிறாள். பெற்ற மகளைக் கண்ணுக்குள் வைத்துக் காக்கும் அன்னைக்கு இணையாக நீருக்குக் காவல் நின்றவனை உவமித்த மரபு நமக்கு இருக்கிறது.

இன்றோ இயற்கை வளங்களைத் தொடர்ந்து அதீதமாகத் துய்த்தும் எல்லையற்ற நுகர்வுக்கு ஆட்படுத்தியும், அதன் விளைவாகச் சூழல் பாதிக்கப்பட்டு காலநிலை நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் இவ்வுலகைக் காணும்போது இன்றைக்குப் பொதுமக்களிடையே அது குறித்த விழிப்புணர்வும் அதற்கான முன்னெடுப்புகளில் பங்கெடுப்பும் எவ்வளவு தூரம் இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது.

பெண்கள் அடையும் பாதிப்புகள்  

காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை அன்றாட வாழ்வில் பெருமளவில் எதிர்கொள்கிறவர்கள் பெண்களே. இவை போன்றச் சிக்கல்களால் பெண்கள்தான் அதிக பாதிப்புக்குள்ளாகிறார்கள் என்று சான்றுகளும் ஆய்வுகளும் தெரிவிக்கின்றன. வீட்டுக்குத் தேவையான இயற்கை எரிபொருள்கள், வாழ்வாதாரங்கள் ஆகியவற்றைச் சேகரித்து, நிர்வகிப்பதில் பெண்களே முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.

2004-இல் சென்னையில் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை நேரம் லேசான நிலஅதிர்வை உணர்ந்தபடி, வீட்டு உதவியாளர் லீலா இன்னும் வரவில்லையே என்று காத்துக்கொண்டிருந்தபோது ஆழிப்பேரலை குறித்த முதல் செய்தி வந்தது. அது ஏற்படுத்திய பேரழிவின் கோர முகங்களை அதன்பின் வரும் நாளில் செய்திகள் வழி, ஊடகங்கள் வழி, நிவாரணப் பணிகளில் நேரடியாக ஈடுபட்ட நண்பர்கள் வழியே அறிந்து கொண்டிருந்தாலும், அதன் முழுமையான தாக்கத்தை அதற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு வேலைக்கு வந்த லீலா மூலமாகவே அறிந்துகொள்ள முடிந்தது.

கடற்கரையில் மீனவர் குடியிருப்பில் இருந்தது அவளது வீடு. அவளுக்கிருந்த ஒரே உறவான அவளது தாத்தாவைக் கடலிடம் இழந்துவிட்டு வீட்டையும் மேலும் சில உடைமைகளையும் கடல் எடுத்துக்கொண்டுவிட, நள்ளிரவுவரை அருகே இருந்த பள்ளியிலும் கோவில் வாயிலிலும் கழித்துவிட்டு மூன்றாவது நாளே வேலைக்கு வந்திருந்தாள். அனைத்தையும் இழந்தாலும் சோகம் கொண்டு சோர்ந்து செயலோய்ந்து அமர்ந்திருப்பதும் வசதியுள்ளவர்களுக்கு மட்டுமே வாய்க்கும் ஆடம்பர நிலை என்று அன்றெனக்குப் புரிந்தது. இன்று மேலும் சிலதினங்கள் விடுப்பு எடுத்துக்கொள்ளுமாறு சொன்னதற்கு, உயிரோடு பிழைத்திருப்பவர்கள் சாப்பிட்டாகவேண்டுமே என்றாள். அவளொத்த அனைத்துப் பெண்களும் வேலைக்கு சென்றுவிட்டனர். சமீபத்தில் குழந்தை பெற்றிருந்த ஒரு பெண்ணுக்கும், அவள் குழந்தைக்குமான பொறுப்பை இவள் இயல்பாக ஏற்றுக்கொண்டு விட்டிருந்தாள்.

எவ்வளவு புத்தகங்கள் வாசித்தாலும், காணொளிகள் கண்டாலும், அறிதல் நம்மிலிருந்தே துவங்குகிறது. நம் அகத்தில் ஒரு கண் திறந்துகொண்டு ஒரு அறிதல் நம்முள் நிகழும் கணம் ஒன்றிருக்கிறது. அன்றிலிருந்தே இது போல வீட்டு வேலைக்கு வரும் பெண்களின் வாழ்வை கவனித்துக் கொண்டேதான் இருக்கிறேன்.

ஏறத்தாழ சிறிய மாற்றங்களுடன் ஒரே கதை, பெண்களின் கதை. குடும்பத்தால், சமூகத்தால், கைவிடப்படுத்தலும், சுரண்டப்படுத்தலும், அடக்குமுறைகளும், அத்துமீறல்களும் அன்றாடம் எனக் கொண்ட பல பெண்கள் தங்களையே தேய்த்துக் கொள்ளும் உழைப்பொன்றையே அதற்கு விடையாகக் கூறிக்கொண்டு தமைச் சார்ந்த குழந்தைகளையும், முதியவர்களையும், பல சமயங்களில் தங்களைக் கைவிட்டுச் சென்ற “குடும்பத் தலைவர்”களையும் சேர்த்துக் கரைசேர்க்கும் கதை.

இதே நிலையைச் சிங்கப்பூரில் தனது ஒரு வயதே நிரம்பிய கைக்குழந்தையை விட்டுவிட்டு கடல்கடந்து பணிப்பெண் வேலைக்குவரும் பெண்ணிடமும், ஆறு வருடங்களாக குழந்தைகளைச் சென்று காண இயலாத நிலையில் இருக்கும் பணிப்பெண்ணிடமும் காண நேர்கிறது. பிலிபைன்ஸ், இந்தோனேஷியா, மியன்மார், இந்தியா என சுற்றிச் சூழ எல்லா நாடுகளில் இருந்து வரும் பெண்களிடமும் இதே நிலையைக் காண முடிகிறது. ஆயிரம் ஆய்வுக் கட்டுரைகள் உணர்த்தி விடமுடியாத பாதிப்பை சற்றே விழிதிறந்து நோக்க நம்மைச்சுற்றி இருக்கும் மனிதர்களின் வாழ்வில் இருந்தே உணர முடியும்.

பசிபிக் தீவுகளில் ஒன்றான துவாலுவில் வாழும் மிலிகினி ஃபாய்லாவுதுசி (Milikini Failautusi) என்னும் முப்பது வயது நிரம்பிய பெண் தனது சொந்த நாட்டிலேயே நாடோடி போல அலைய நேர்கிறது. உயரும் கடல்மட்டதால் தனது மூதாதை நிலமான தீவை விட்டுவிட்டு, ஃபூனாஃபூட்டி (Funafuti) என்னும் மைய நிலத்துக்குக் குடியேறுகிறார். அவர் தற்போது ஒரு சூழலியல் செயல்பாட்டாளராக இருக்கிறார்.

அவரால் கடலில் மூழ்கிவிட்ட தனது இல்லத்தை மீண்டும் காணவே இயலாதெனினும் தனது எதிர்கால சந்ததியினருக்கு அப்படி ஒரு கடல் விழுங்கிவிட்ட நிலத்தைக் காணும் அனுபவம் நேரக்கூடாதென உறுதிபூண்டுள்ளார். இது மிலிகினியின் கதை மட்டுமல்ல. காலநிலை மாற்றம் வாழ்வாதாரங்களை அழித்து பேரழிவை ஏற்படுத்தும்போது அதன் வடுக்களைப் பெண்களே பெருமளவில் சுமக்க நேரிடுகிறது. வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, மீன்பிடிப்பு போன்ற காலநிலை மாற்றம் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் பல துறைகளில் பெண்களே பெருமளவில் வேலை செய்கிறார்கள்.

ஐ.நா. கணிப்பின் படி காலநிலை காரணிகளால் இடம்பெயர நேரிட்டவர்களில் 80 சதவீதம் பெண்கள். பாகிஸ்தானின் 2010-இல் நேர்ந்த வெள்ள பாதிப்பில் இடமிழந்தோரில் 70 சதவீதம் பெண்களே. 2004-இல் இந்தியா, இந்தோனேஷியா, இலங்கையைத் தாக்கிய ஆழிப்பேரலையில் ஆண்களைவிட மூன்று மடங்கு பெண்கள் உயிரிழந்திருக்கிறார்கள். இதன் காரணங்களை ஆய்ந்து பார்த்தால், சமூகக் காரணிகளால் பெண்களைவிட ஆண்களுக்கே நீச்சல் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கின்றன. மேலும் பேரிடர் நேரத்தில் குடும்பத்தையும் குழந்தைகளையும் காப்பதற்கு பெண்களே பெருமளவில் பலியாகிறார்கள். அத்தகைய இயற்கைச் சீற்றங்களில் தப்பிப் பிழைக்கும் பெண்களும், சுகாதாரமற்ற, பாதுகாப்பற்ற நிவாரண மையங்களில் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாவதோடு முறையான மருத்துவ வசதிகளும் கிட்டாமல் தவிக்கிறார்கள்.

காலநிலையில் அதீத மாறுபாடுகளும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளும் பெண்களுக்கெதிரான வன்முறையை அதிகரிப்பதையும், அதே சமயம் பெண்களுக்கெதிரான சுரண்டல்கள் இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளும் முயற்சிகளை முடக்குவதையும் சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

பெண்களுக்கெதிரான வன்முறைகளை, அடக்குமுறைகளைக் களையாது திட்டமிடப்படும் சூழல் மேம்பாட்டுக்கான திட்டங்கள் பயனளிப்பதில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஆயிரக்கணக்கான ஆய்வு முறைகளில் ‘பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்’ (IUCN) மிகப் பரந்த ஆய்வொன்றை நிகழ்த்தி இருக்கிறது. இந்த ஆய்வறிக்கையை எழுதியவர்களில் ஒருவரான கேட் ஒவ்ரென் (Cate Owren), பெண்களுக்கு எதிரான வன்முறை மிகப் பரவலாக இருப்பதையும் காலநிலை மாற்றம் அத்தகைய வன்முறைகளுக்கு வழிகோலுவதையும் குறிப்பிடுகிறார். சூழலில் ஏற்படும் சீர்கேடு மற்றும் அழுத்தங்கள் அதிகமாகும்போது பெண்களுக்கெதிரான குடும்ப வன்முறைகள், குழந்தைத் திருமணம், பாலியல் அத்துமீறல் போன்ற வன்முறைகள் பெருமளவில் அதிகரிப்பதாக அறுதியாகக் கூறுகிறார்.

காரணிகள்

காலநிலை மாற்றம் என்பது அனைத்து நாடுகளையும் பாதிக்கும் ஓர் உலகளாவிய நிகழ்வு, ஆனால் அதன் விளைவுகளோ பரவலாக வேரூன்றிப் போயிருக்கும் பாலின சமத்துவமின்மையால் கட்டமைக்கப்படுகின்றன. வெப்ப அலைகள், கடும் வறட்சிகள், தொடர்ந்து உயரும் கடல்மட்டம், தீவிர புயல்கள் ஆகியவைப் பெண்களை அளவுக்கு அதிகமாக பாதிக்கின்றன. இதன் காரணங்கள் என்னவென்று பார்த்தால், ஆண்களைவிட பெண்கள் வறுமையில் அதிகம் வாழும் நிலைமை இருப்பதும், அடிப்படை மனித உரிமைகளை அணுக முடியாமையினாலும், சுதந்திரமாக இடம் பெயரவும், நிலத்தை வாங்குவதும் பெண்களுக்கு அரிதாக இருப்பதாலும், மற்றும் நிலையற்ற காலங்களில் அதிகரிக்கும் அமைப்பு சார்ந்த வன்முறையை எதிர்கொள்வதன் சிக்கல்களாலும் பெண்களே அதிகம் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

இன்றைய சூழல் இவ்வண்ணமே தொடர்ந்தால் சமத்துவத்துக்காக எடுக்கப்பட்ட பல முன்னெடுப்புகள் வீணாக்கக்கூடும். காலநிலைச் சீர்கேடுகள் உச்சம் பெரும்போது பாலினம் சார்ந்த வரையறைகள் மேலும் மாற்ற முடியாததாகி கடினமாகி விடக்கூடும். ஆண்கள் வேலைதேடி புலம்பெயர்வதும் பெண்கள் தங்களைச் சார்ந்த குடும்ப உறவுகளுக்கென அதன் பாரத்துக்கு ஆளாவதும் நேரிடும். அத்தகைய பாதிப்புக்குள்ளாகும் சாத்தியமுள்ள நிலங்களிலேயே தேங்கிவிடும் பெண்கள் மேலும் வறுமையையும் சந்திக்க நேர்ந்து, உடல்நலக் குறைபாடுகளால் வாழ்வை இழக்க நேரும். புலம்பெயர நேரும் பெண்களும் பல இன்னல்களையே சந்திக்க வேண்டி இருக்கிறது.

காலநிலை மாற்றத்தால் உயரும் புலம்பெயர்தல்

காலநிலை தொடர்பான இடம்பெயர்தல் உலகளவில் அதிகரித்துவருகிறது, மேலும் நிலமிழந்து, வீடிழந்து, வாழ்வாதாரங்களை இழந்து, சொந்த மண்ணைவிட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்களில் பெரும்பாலோர் பெண்கள் என்று ஐ.நா. சொல்கிறது. ஏனென்றால், ஆண்களைவிட பெண்கள் வறுமையில் வாழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம், பேரிடருக்குப் பிறகான இடப்பெயர்விலிருந்து மீளவும் அவர்களுக்கு குறைந்த ஆதாரங்களே உள்ளன.

யேல் பல்கலைக்கழகத்தின் காலநிலை, பெண்களின் உரிமைகள் மற்றும் சிக்கல்கள் துறையில் பணிபுரியும் மயிஷா ஆலம் (Mayesha Alam), பதிவுசெய்யப்பட்ட வரலாற்றில் முன்னெப்போதையும்விட இன்று இடம்பெயர்ந்த மக்கள் அதிகம் உள்ளனர் என்றும் காலநிலை மாற்றத்தால் தூண்டப்பட்ட இடப்பெயர்ச்சி அதிகரித்திருப்பதை காணமுடிகிறது என்றும் கூறுகிறார்.

வீட்டுநிர்வாகம்

நவீன அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான புயலாக ஆகிவிட்ட ‘மரியா’ சூறாவளி 2017-இல் போர்டோ ரிக்கோவைத் (Puerto Rico) தாக்கியது, புயலால் கிட்டத்தட்ட 3,000 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் தீவு முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர். அந்த பேரிடருக்குப் பின்னர், அழிவிலிருந்து மீண்டெழும் நேரத்தில் பெண்களே பெரும்பாலான சுமைகளைச் சுமக்க நேர்ந்ததாக ஆக்ஸ்பாமின் (Oxfam) அறிக்கை ஒன்று கண்டறிந்துள்ளது.

வழக்கமாக வீட்டு வேலைகளிலும், சுத்தம் செய்வதிலும் தண்ணீர் சுமந்து வருவதிலும், மழைநீரைச் சேகரித்து வைப்பதிலும், குழந்தைகளைப் பேணுவதிலும் பெண்களே மணிக்கணக்கில் ஈடுபடுகிறார்கள். உலகளவில் 70%-க்கும் மேற்பட்ட தண்ணீர் சேகரிப்புப் பணிகள் மற்றும் நிர்வகிப்பதற்கு பெண்களே பொறுப்பாக உள்ளனர். உலகெங்கிலும் கிராமப்புற சமூகங்களில், பெண்கள் நீர் மற்றும் வீட்டு எரிசக்தி வளங்களை சேகரிக்கும் உழைப்பை பெருமளவில் மேற்கொள்கின்றனர். வறட்சி, பஞ்சம், காட்டெரி போன்ற இயற்கைச் சீற்றங்களின்போது, அவர்கள் மேலும் பல மைல்கள் தூரம் பயணிக்கவும், இந்த அடிப்படைத் தேவைகளைப் பெறுவதற்கு மேலும் அதிக நேரம் செலவிடவும் வேண்டியிருக்கிறது.

எனவே காலநிலை மாற்றம், தொலைதூர கிராமப்புற சமூகங்களில், சமையல், சுத்தம் செய்தல், எரிபொருள் சேகரித்தல் மற்றும் குழந்தைகளைப் பராமரித்தல் போன்ற வீட்டுப் பொறுப்புகளை நிர்வகிப்பதை மேலும் கடினமாக்குகிறது.

பொருளாதாரம்

இயற்கைப் பேரழிவுகள், கடல்மட்ட உயர்வு, உப்புநீர் ஊடுருவல் போன்ற நிகழ்வுகள் நன்னீரின் தரத்தைக் கெடுக்கின்றன. உதாரணமாக இந்தியா மற்றும் பங்களாதேஷின் சில பகுதிகளில் நன்னீர் வழங்கும் ஆறுகளில் கடல்நீர் உட்புகுவதால், அங்குள்ள பெண்கள் சுகாதாரக் கேடுகளை எதிர்கொண்டுள்ளனர். மேலும் ஆறுகள் உப்புநீராக மாறுவதால் அவர்களின் பொருளாதார வாய்ப்புகளும் குறைந்துவருகின்றன.

வறட்சி மற்றும் தீவிர வெப்பநிலை மாற்றங்களால், நீர் ஆதாரங்கள் வறண்டு போகும்போது, ​​பெண்கள் சமையல் மற்றும் தண்ணீரை அடிப்படையாகக் கொண்ட மற்ற வேலைகளை நிர்வகிக்க தண்ணீரைத் தேடி அதிக தூரம் பயணிக்க வேண்டும். இதன் விளைவாக, வருமான வேலைவாய்ப்புகளைத் தொடர அவர்களுக்கு நேரம் குறைவாகவே உள்ளது, இது பொருளாதார ரீதியாக தன்னிறைவு கொண்டவர்களாக பெண்கள் மாறுவதைத் தடுக்கிறது.

அரிசோனா பல்கலைக்கழகத்தில் அமெரிக்க-மெக்ஸிகோ எல்லையில் நீர் பற்றாக்குறை எவ்விதம் பெண்களின் உரிமைகளை பாதிக்கிறது என்பது குறித்து ஸ்டெபனி பியூச்லர் (Stephanie Buechler) ஆய்வு செய்திருக்கிறார். நீர்த் தட்டுப்பாடு பெண்களின் தொழில் வாழ்க்கையில் முதலீடு செய்வதற்கான திறனைக் குறைப்பதாக அவர் கண்டறிந்திருக்கிறார்.

மெக்ஸிகோவின் சொனோராவில் (Sonora) உள்ள பெண்கள், கூடுதல் வருமானத்திற்காக பாலாடைக்கட்டி தயாரிக்கிறார்கள். கால்நடை உரிமையாளர்கள் நிறைய தண்ணீர் தேவைப்படும் பசுக்களுக்கு மாற்றாக குறைவான நீர் அருந்தும் பசுக்களை வாங்குகிறார்கள். அந்தப் புதிய மாடுகள் குறைந்த அளவிலேயே பால் உற்பத்தி செய்கின்றன. இது அப்பெண்களின் சிறுதொழில் முயற்சிகளுக்கு ஊறு விளைவிக்கிறது. பால் கிடைப்பது அரிதாகிறது, எனவே அவர்கள் ஒரு மணிநேர பயண தூரத்தில் உள்ள, நிலத்தடி நீர் இருக்கும் ஒரு இடத்திற்கு செல்ல வேண்டியிருக்கிறது என்றும் பாலாடைக்கட்டி தயாரிப்பது தீவிர வெப்பநிலை மாற்றங்களால் நசிந்துபோகக் கூடிய நிலையில் உள்ளது என்றும் அந்த ஆய்வில் அவர் கூறுகிறார்.

வேளாண்மை

உலகளாவிய வேளாண்மைத் தொழிலாளர்களில் 43 சதவீதத்தினர் பெண்கள், ஆனால் அவர்கள் பொருளாதார சுதந்திரத்திற்கு எண்ணற்ற தடைகளை எதிர்கொள்கின்றனர்.

போதிய நீர் கிடைக்காததால், சமுதாயத் தோட்டங்கள் மற்றும் உழவர் சந்தைகளை நம்பியுள்ள பெண்கள் வேளாண்மை மற்றும் விளைச்சல் குறைந்து போவதோடு தண்ணீர் மற்றும் எரிசக்தி கட்டணங்களுக்காக அவர்கள் அதிக செலவு செய்கிறார்கள். சுத்தமான குடிநீரின் ஆதாரங்கள் மறைந்துவருவது பெண்களுக்கு மேலும் துன்பங்களை விளைவிக்கிறது. உதாரணமாக, செனகலில் (Senegal), பெண்கள் அன்றாடப் பயன்பாட்டிற்காகத் தண்ணீரைச் சேகரிக்க அதிக தூரம் பயணிக்க வேண்டியிருப்பதால் தன்னிறைவு பெற்ற விவசாயிகளாக அவர்கள் இருப்பதற்கான திறனைக் கட்டுப்படுத்துகிறது.

உண்மையில், உலக நாடுகள் பாதியில் பெண்களுக்குச் சொத்துரிமை மறுக்கப்படுகிறது. உரங்கள் மற்றும் வேளாண் கருவிகளுக்காகக் கடன் வாங்குவதில் இருந்து பெண்கள் பெரும்பாலும் தடைசெய்யப்படுகின்றனர். இது பயிர்களை அறுவடை செய்வதிலும் சந்தைப்படுத்துவதிலும் பெண்களுக்குச் சிரமங்களை ஏற்படுத்துகிறது. மண்ணின் தரம் மோசமடையும்போதும், தண்ணீர் பற்றாக்குறையாக மாறும்போதும், அத்தகைய நிலைமைகளில் இருந்து மீண்டெழத் தேவையான கடன் மற்றும் நிதியுதவிகளைப் பெண்கள் கண்டடைவது கடினமாக இருக்கிறது. இதேபோல், புதிய சொத்துக்களை வாங்குவதற்கான சாத்தியம் இல்லாமல், பல பெண் விவசாயிகள் தங்களது கைவசம் இருக்கும் சீர்கெட்டுவரும் நிலத்தில் விளைச்சல் குறைந்து வருவதையும் சரிப்படுத்த இயலாமல் சிக்கித் தவிக்கிறார்கள்.

பெரும்பான்மையான பெண்களுக்கு அவர்கள் விவசாயம் செய்யும் நிலங்களின் உரிமைப் பத்திரங்களோ நில ஆவணங்களோ இருப்பதில்லை. எனவே காலநிலை மாற்றம் அவர்களின் வேளாண் உற்பத்தியை மோசமாக பாதிக்கும்போது இழப்பீடு அல்லது நிவாரணத்திற்கான வழிகள் இல்லாமல் ஆகின்றன. பொதுவாகவே, சிறு விவசாயிகளுக்கு காப்பீடு இருப்பதில்லை, எனவே அவர்கள் மாற்று வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளையே நாடவேண்டும். இது அவர்களை பாதுகாப்பற்ற நிலைக்கும் சுரண்டலுக்கும் உள்ளாக்குகிறது.

இந்தக் காரணிகள் அனைத்தும் காலநிலை மாற்றம் தீவிரமடைவதால் பெண்கள் மிகவும் பாதிப்படைவார்கள் என்பதைக் காட்டுகிறது.

ஆபத்தான சூழ்நிலைகள்

காலநிலை மாற்றம் இயற்கை வளங்களை பாதிக்கிறது. வறட்சி, வெள்ளம் மற்றும் கடல்மட்ட உயர்வு ஆகியவற்றால் வளங்கள் சுருங்கி வருகின்றன. வளங்கள் குறைத்து, நிலம் வசிக்க முடியாததாகி, பாதிப்புகள் தீவிரமடைவதால் பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் சுரண்டல் உயர்கிறது என்று ‘பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்’ (ஐ.யூ.சி.என்) தெரிவித்துள்ளது.

விலங்குகளையும், இயற்கை வளங்களையும், தாதுக்களையும் சட்டத்துக்குப் புறம்பான முறைகளில் கையகப்படுத்தும் அமைப்புகள் மற்றும் தீவிர மனிதஉழைப்பு சுரண்டுவதில் ஈடுபடும் அமைப்புகள், பெண்களைக் கடத்தும் குழுக்கள் ஆகியவை தலையெடுக்க இந்த சுற்றுச்சூழல் அழுத்தங்கள் தூண்டுதலாகி இருக்கின்றன. இந்த மனித உரிமை மீறல்களால் மிகவும் பாதிக்கப்படுவது பெண்கள் போன்ற நலிவடைந்த குழுக்கள்தான் (vulnerable groups).

வடகிழக்கு நைஜீரியாவில், போகோ ஹராம் என்ற பயங்கரவாதக் குழு வறட்சியால் தங்கள் நிலத்திலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களை, குறிப்பாக பெண்களை இலக்காகக் கொண்டுள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறை பெரும்பாலும் பாலின ஏற்றத்தாழ்வுகளை மேலும் அதிகரிக்கவும், பற்றாக்குறையான வளங்களின் மீதான கட்டுப்பாட்டை நிலைநிறுத்தவும் ஒரு வழியாகப் பயன்படுத்தப்படுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

அதிகரித்துவரும் கடல் வெப்பநிலை, கடல் அமிலமயமாக்கல் போன்றவற்றால் மீன்களின் எண்ணிக்கை குறைவதால், தங்கள் வாழ்வாதாரத்திற்காக மீன்களை நம்பியுள்ள பெண்கள், சட்டத்துக்குப் புறம்பான தொழிலில் ஈடுபடும் கட்டாயத்தில் உள்ளனர் என்று ஐ.யூ.சி.என் தெரிவித்துள்ளது. மீன்களைப் பெறுவதற்கும், சந்தைகளுக்கான வாய்ப்புகளுக்கும், வாழ்வாதாரத்திற்கான வாய்ப்புகள் ஆகியவற்றிற்காக பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள். மீன்களுக்காக உடலை விற்பது எனும் நிலை பாலின அடிப்படையிலான வன்முறையின் ஒரு உச்ச வடிவமாகும் என்று ஐ.யூ.சி.என் பாலின திட்ட மேலாளர் கேட் ஓரன் (Cate Owren) கூறுகிறார். சமத்துவமற்ற கட்டமைப்புகளில் இயற்கை வாழ்வாதாரங்களை அணுகுவதற்கான பேரங்கள் பாலின அடிப்படையிலான வன்முறையை ஒரு கருவியாக ஆக்குகின்றன.

வன்முறை

பெண்கள் இடம்பெயர நேர்ந்தால், அவர்களால் பெரும்பாலும் கல்வியைத் தொடரவும் பொருளாதார வாய்ப்புகளைத் தொடரவும் முடிவதில்லை. அகதிகளாக நேரும் சிறுமிகள் பள்ளியில் கல்வியைத் தொடர்வதற்கு சிறுவர்களைக் காட்டிலும் வாய்ப்பு பாதியளவே உள்ளது. பெண்கள் காலநிலை மாற்றம் காரணமாக குழந்தை திருமணம், வீட்டு வன்முறை, பாலியல் வன்முறை மற்றும் கடத்தல் ஆகியவற்றை பெருமளவில் எதிர்கொள்கின்றனர்.

உதாரணமாக, கிழக்கு ஆப்பிரிக்காவின் மலாவியில் (Malawi), காலநிலை மாற்றத்தின் இடையூறுகள் எதிர்வரும் ஆண்டுகளில், 1.5 மில்லியன் கூடுதல் குழந்தை மணப்பெண்களை உருவாக்கக்கூடும் என்று கணிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவில், புதர் நெருப்புகளுக்குப் பிறகு வீட்டு வன்முறை மிகவும் அதிகரித்ததோடு மேலும் தீவிரமாகவும் நீடிக்கும் ஒன்றாகவும் மாறியிருக்கிறது.

குழந்தைத் திருமணம்

காலநிலை மாற்றம் குடும்பங்கள் மீது பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்துவதோடு, நிலம், வாழ்வாதாரங்கள் மற்றும் வீடுகளை இழக்க வழிவகுக்கிறது, இதன் காரணமாக ஒட்டுமொத்த பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை குடும்பங்கள் இழக்கின்றன. அதனால் இளமையிலேயே மகள்களை திருமணம் செய்வது அதை சமாளிக்கும் ஒரு வழிமுறையாக மாறுவதால் குழந்தைத்திருமண ஆபத்து அதிகரிக்கிறது என்று மாயிஷா ஆலம் கூறுகிறார்.

பங்களாதேஷின் காக்ஸ் பஜாரில் (Cox’s Bazar), நூறாயிரக்கணக்கான ரோஹிங்கியா (Rohingya) அகதிகள் இடம்பெயர்வு முகாம்களில் சிக்கித் தவிக்கின்றனர், அவை பெரும்பாலும் அடிப்படை வசதிகள்கூட இல்லாதிருக்கின்றன. மியான்மரில் இனப்படுகொலையில் இருந்து தப்பிய அகதிகளின் இடப்பெயர்வைக் காலநிலை பாதிப்புகள் மேலும் மோசமாக்கும் என்று கூறப்படுகிறது. காக்ஸ் பஜாரில் உள்ள பல முகாம்கள் பெண்களுக்கு பாதுகாப்பற்றவையாக இருப்பதோடு குழந்தை திருமணம், மனித கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அங்கே அதிகரித்துள்ளன. மொத்தத்தில், இயற்கை பேரழிவுகள், வெள்ளம் மற்றும் மண் அரிப்பு ஆகியவற்றால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய ஒரு கடலோரப் பகுதியில், மிகவும் நெருக்கடியான நிலையில் வாழும் அகதிகள் நிறைந்துள்ளனர். வெள்ளம், நிலச்சரிவுகள் அல்லது இயற்கை பேரழிவுகள் அகதி முகாம்களைத் தாக்கினால், அங்கு வாழும் அகதிகள் மேலும் இடப்பெயர்வுக்கு உள்ளாகி அல்லலுற நேரும் என்பது மேலும் கவலைக்குரிய விஷயம்.

உடல்நலம்

காலநிலை மாற்றம் ஆயுத மோதல்களின் சாத்தியத்தை அதிகரிப்பதோடு ஏற்கனவே இருக்கும் மோதல்களை இன்னும் அதிகரிக்கக்கூடும். இது பெண்களின் உடல்நலம், உரிமைகள் மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் அச்சுறுத்தும் இரண்டு சாத்தியக்கூறுகள். இடம்பெயர்தல் பல வழிகளில் பெண்களின் ஆரோக்கியத்தை அச்சுறுத்துகிறது. கருவுற்ற பெண்கள் இடம்பெயர நேர்ந்தால் அவர்கள் பேறுகால பராமரிப்பைப் பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைகிறது. இது எதிர்மறையான விளைவுகளை அதிகரிக்கிறது. மருத்துவமனைகள், செவிலியர்கள், சமூகச் சுகாதார மையங்களை அணுக இயலாத நிலையில் அகதிகள் போல இருக்கும் கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பான, சுகாதாரமான நிலையில் குழந்தைகள் பிறப்பது மிகவும் கடினமாகிப் போகிறது. பிரசவத்தின்போது இறக்கும் பெண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வன்முறை மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் உள்ளனர். அத்தகைய இடங்களில் சுகாதாரப் பாதுகாப்பு முறைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இடப்பெயர்வு முகாம்களில் பரவும் காலரா போன்ற தொற்று நோய்களுக்கு கர்ப்பிணிப் பெண்கள் அதிகம் உள்ளாகின்றனர் என்றும் மாயிஷா ஆலம் கூறுகிறார்.

உண்மையில் அமைதிகாலத்தும், போர்க்காலத்தும் எந்நிலையிலும் காலநிலை மாற்றம் பெண்களின் ஆரோக்கியத்தை பெரிய அளவில் அச்சுறுத்துகிறது என்று அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உணவு மற்றும் நீர் பாதுகாப்பின்மை கர்ப்பிணிப் பெண்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெறுவதைத் தடுக்கிறது. மோசமாகி வரும் வெப்ப அலைகள் நீரிழப்பு, வெப்பத்தால் ஏற்படும் வாதம் போன்ற சுகாதார பிரச்சினைகளுக்கும், பாலியல் வன்முறைகளுக்கும் நீர் மற்றும் எரிபொருள் சேகரிக்கச் செல்லும் பெண்களைப் பலியாக்குகிறது.

மீண்டெழல்

சூழலியல் இடர்பாடுகளின் வடுக்களைச் சுமக்கும் பெண்களுக்குத் தேவை அதை மாற்றும் செயல்களே அன்றி வெறும் பேச்சுக்கள் அல்ல. பேச்சும் உரைகளும் எவ்வளவு உண்மையானதாக, உன்னதமானதாக இருப்பினும் அதனினும் செயலே இங்கு மிலிகினி போன்ற வீடிழந்த பெண்களுக்கு உதவ முடியும். அவர்களுக்கு ஒருங்கிணைந்த நோக்கோடு கூடிய, உடனடியான உதவிகள் தேவைப்படுகிறது. பெண்களுக்கு சமமான சமூக இடம் வழங்குவதன் வழியாகவே அவர்கள் வாழும் குடும்பங்களும், சமூகமும், நாடும் தழைக்க முடியும்.

ஆண்பெண் சமத்துவத்தைக் கருத்தில் கொள்ளாது சூழலியலை மட்டும் மேம்படுத்த மேற்கொள்ளப்படும் திட்டங்கள் பயன்தராமல் போகலாம். பல சமுதாயங்களில் ஆண் பெண் சமத்துவத்துக்கான முயற்சிகள் முன்னேறிவரும் நிலையில் இத்தகைய சூழலியல் பிரச்சனைகள் முன்னேற்றத்தைத் தடுத்து பின்னோக்கி நகர்த்திவிடக்கூடும். இவையிரண்டு பிரச்சனைகளும் ஒன்றை ஒன்று சார்ந்து முற்றிலும் தொடர்புடவையாக இருப்பதனால், காலநிலை மாற்றம், ஆண்-பெண் சமத்துவம் இரண்டுமே முழுமையான கவனத்தைக் கோருபவை.

சமூக மாற்றங்கள்

வாட்டர் எய்ட் (Wateraid) என்ற நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி காலநிலை மாற்றங்களுக்கான நிதியுதவி ஏழ்மை நிலையிலுள்ள, அது மிகவும் தேவைப்படுகிற நிலையில் உள்ள, காலநிலை சீற்றங்களால் பாதிக்கப்படக்கூடிய மக்களைச் சென்று சேர்வதே இல்லை. பாதிக்கும் மேற்பட்ட நாடுகளில் நபருக்கு ஐந்து டாலருக்கும் குறைவான பணமே சென்று சேர்கிறது. 2016-இல் வெளிவந்த ஐ.நா. அறிக்கையின்படி, உலகளாவிய நிதியுதவியில் 0.01 சதவீதமே சூழலியல் மற்றும் சமத்துவம் குறித்த திட்டங்களுக்குச் சென்று சேர்கிறதென கண்டறியப்பட்டிருக்கிறது. இத்தகைய புள்ளிவிவரங்கள் ஒருபுறம் சோர்வை அளித்தாலும் மறுபுறம் முன்னேற்றங்களும் நிகழ்கின்றன. முன்னேறிய நாடுகள், வளரும் நாடுகளுக்குக் கழிவு உமிழ்வைக் குறைப்பதற்கும் வறட்சி, வெள்ளம், கடல்மட்ட உயர்வு போன்றவற்றை எதிர்கொள்வதற்கும் ஆண்டுக்கு நூறு பில்லியன் டாலர் உதவி செய்வதென உறுதிப்பாடு அளித்திருக்கின்றன. இவ்வகையான திட்டங்களுக்கு நிதி வழங்கும்  ‘பசுமை காலநிலை நிதி’த் திட்டம் பெண்களுக்கு அனைத்துத் திட்டங்களிலும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

காலநிலை மாற்றம் ஆண்கள், பெண்கள் மற்றும் பிற பாலினங்களை வெவ்வேறு விகிதங்களில், வெவ்வேறு வகைகளில் பாதிக்கிறது என்பதை உலக அளவில் உணர வேண்டும். எனவே இதற்கான நிவாரண செயல்பாடுகள் காலநிலை நடவடிக்கைகளை கருத்தில் கொள்ளும் அதே நேரத்தில் பாலின ஏற்றத்தாழ்வுகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஆய்வுகளின் வழியாக தெரியவருகிறது. முடிவெடுக்கும் அதிகார அமைப்புகளுக்குள் பெண்கள் அதிக பிரதிநிதித்துவத்தைப் பெறுவதால், பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுடன் காலநிலை நடவடிக்கைகளை இணைக்கும் செயல் திட்டங்களை நாடுகள் உருவாக்கத் தொடங்கியுள்ளன.

இந்தச் சவால்களை சமாளிக்க பல்வேறு தளங்களில், துறைகளில் இயங்குகின்ற பெண்கள் எழுந்து வருகின்றனர். உதாரணமாக சிலவற்றைப் பார்க்கலாம்.

கென்யாவில் உள்ள பெண்களுக்கு அசுத்தமான சமையல் அடுப்புகளை மாற்ற தன்னார்வலரும் தொழில்முனைவோருமான சார்லோட் மாகாய் (Charlot Magayi) உதவுகிறார். இது சமூகச் சுகாதார நிலையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பசுங்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தையும் குறைக்கிறது.

ஆப்பிரிக்காவில் பெண்கள் தலைமையிலான சோலார் சிஸ்டர் (solarsister.org) என்னும் தன்னார்வ முயற்சி, அச்சமூகங்கள் சிறிய அளவிலான சூரிய மின்கலங்களைத் தாங்களே உருவாக்கிக் கொள்ளவும் அதன் உதவியோடு காற்று மாசுபாடு மற்றும் பசுங்குடில் வாயு வெளியேற்றத்தை குறைக்கவும் உதவிவருகிறது. பேர்ஃபூட் கல்லூரி (barefoot college) என்ற உலகளாவிய அமைப்பு பெண்கள் தங்கள் சமூகங்களில் சுத்தமான எரிசக்தி ஆதாரங்களை நிறுவவும் பராமரிக்கவும் சூரியசக்தி மின்பொறியாளர்களாக ஆகவும் பயிற்சி அளிக்கிறது. ஆப்பிரிக்கா முழுவதிலும் உள்ள பெண் விஞ்ஞானிகள் உள்ளூர் நிலைமைகள் மற்றும் வேளாண்மை குறித்த அறிவை ஆய்வகங்கள் மற்றும் ஆராய்ச்சித் துறைகளுக்குக் கொண்டுவருகிறார்கள். இவ்வகையில் அறிவியல் நிறுவனங்களில் பாலின ஏற்றத்தாழ்வுகளை குறைக்க உதவுகிறார்கள்.

கிரெட்டா துன்பெர்க் (Greta Thunberg) மற்றும் வெனேசா நகாடே (Vanessa Nakate) போன்ற சூழலியல் செயல்பாட்டாளர்கள் உலகளாவிய சுற்றுச்சூழல் இயக்கத்தை முன்னெடுத்து உதவுகின்றனர். கிறிஸ்டியானா ஃபிகியூரெஸ் (Christiana Figueres) போன்ற உலகத் தலைவர்கள் பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்திற்கு தலைமை தாங்கினர். பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் காலநிலை மாற்றத்தின் இடர்களைச் சமாளிக்க பெண்கள் தக்க உதவிகள் பெறுவதை உறுதி செய்வதற்கான குறிப்பிட்ட விதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கென்யா, இந்தியா போன்ற நாடுகளில் உள்ள பெண்கள் அன்றாட வாழ்வில் நிலைத்த மாற்றங்களுக்கான முன்னெடுப்புகள் மூலம் தங்கள் சமூகங்களில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றனர்.

காலநிலை மாற்றம் பெண்களை அதிக விகிதத்தில் பாதிக்கக்கூடும் என்றாலும், சரியான தருணத்தில் பெண்கள் சூழலியல் திட்டங்கள் குறித்த அதிகாரத்தின் பிடியைக் கைப்பற்றி வழிநடத்துவதால், ஏற்கனவே நடைமுறையில் உள்ள அரசியல் மற்றும் பொருளாதார வழிமுறைகள் இனி வரும்காலத்தின் பிரச்சனைகளுக்கு உதவச் சாத்தியமில்லை என்று தோன்றும்போது சமூகத்தின் விதிகளை மீண்டும் மாற்றி எழுதவும் இது வழிவகுக்கிறது. காலநிலை மாற்றம், பல்லுயிர் மேலாண்மை மற்றும் வளங்களின் பயன்பாடு தொடர்பான உள்நாட்டு, பிராந்திய மற்றும் சர்வதேச பேச்சுவார்த்தைகளிலிருந்து பெண்கள் வரலாற்று ரீதியாக விலக்கப்பட்டு வந்திருந்தனர், ஆனால் தற்போது அந்நிலை மாறத் தொடங்கியிருக்கிறது.

பசுமை காலநிலை நிதி போன்ற சர்வதேச நிதிகளுக்கு விண்ணப்பிக்கும்போது, இப்போது பெண்கள் ஒரு திட்டத்தில் எவ்வாறு இணைக்கப்படுவார்கள் என்பதை விவரிக்குமாறு கூறப்படுகின்றன. மேலும் வேளாண் மேம்பாட்டுக்கான சர்வதேச நிதி போன்ற குழுக்கள் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கின்றன.

மாறிவரும் மனச்சாய்வுகள்

சூழலுக்குக் கேடு விளைவிக்காத பொருட்களின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் அனேகமாக பெண்களையே இலக்காக்கி முன்னிறுத்தப்படுகின்றன. பலமுறை பயன்படுத்தக்கூடிய சானிடரி நாப்கின்கள் மற்றும் மாதவிடாய் கோப்பைகள் சந்தையில் அதிகரித்துவருகின்றன, பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும்விதமாக அழகுசாதனப் பொருட்கள் கண்ணாடி மற்றும் அலுமினிய கொள்கலன்களில் வருகின்றன. உள்ளாடைகள்கூட சூழலியல் பாதிப்பற்ற பொருள்களைப் பயன்படுத்தி நைலான் போன்றவற்றைத் தவிர்க்கின்றன. ஆனால் பெரும்பாலான சூழலியல் சார்ந்த பொருட்கள் பெண்களைக் குறிவைத்தே விற்பனை செய்யப்படுவதில் ஒரு வெளிப்படையான (மனச்சோர்வை ஏற்படுத்தும்) காரணம் உள்ளது: பெண்கள் அதிகளவில் நுகர்வோர் என்பது மட்டுமல்ல, பெண்களே பெருமளவு வீட்டுப் பொறுப்புகளை சுமப்பவர்களாகவும் உள்ளனர் என்பதையும் இது காட்டுகிறது.

சந்தை ஆராய்ச்சி நிறுவனமான மிண்டெல் (Mintel) ஒரு “சூழல்சார்ந்த பாலின இடைவெளி” இருப்பதாகக் கூறியுள்ளது. இந்த விஷயத்தில் மிண்டலின் 2018-ஆம் ஆண்டறிக்கையில், நுகர்வோர் வாழ்க்கைமுறை ஆய்வாளர் ஜாக் டக்கெட் (Jack Duckett), வீட்டை நடத்துவதைப் பெண்களே இன்னும் பொறுப்பேற்கும் நிலை இருப்பதால் சலவை செய்தல், சுத்தம் மற்றும் மறுசுழற்சி ஆகியவை அந்த பதாகையின் கீழ்வருகின்றன என்றும் இதனால் சூழலியல் பாதுகாப்பு குறித்த விளம்பரங்கள் மற்றும் பொருட்கள் பெரும்பாலும் பெண் பார்வையாளர்களையே இலக்காகக் கொண்டிருகின்றன என்றும் கூறுகிறார். இதனால் சூழலியல் பாதுகாப்பு மற்றும் நீடித்த நிலைத்தன்மை (Sustainability) என்பது பெண்களின் வேலை என்ற செய்தியை விளம்பரங்கள் கூவுகின்றன என்கிறார்.

பெண்களை வீடு மட்டுமல்லாது புவியின் பராமரிப்பாளர்களாகத் தொடர்ந்து சித்தரிப்பதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. பாலினம் சார்ந்த பிம்பங்களை, முற்சாய்வுகளை அவை கட்டமைக்கின்றன. ‘சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்வியலின் சமூக விளைவுகள்’ குறித்து விரிவான ஆராய்ச்சி செய்த பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியர் ஜேனட் கே ஸ்விம் (Janet K Swim), 1901 முதல் 1909 வரை அமெரிக்க அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட் சூழலியல் பாதுகாப்புக் கொள்கைகளுக்கு ஆதரவாக முயற்சிகள் மேற்கொள்வதும் பேசுவதும் அவர் பெண்ணைப் போல் நடந்துகொள்கிறார் என்று கேலி செய்யப்பட்டு அவர் ஒரு சமையல் ஆடையை அணிந்திருப்பது போல சித்தரிக்கும் அரசியல் கேலிச்சித்திரத்தை ஜேனட் சுட்டிக்காட்டுகிறார்.

ஆண்களைவிட பெண்கள் பசுமை உலகுக்கான செயல்பாட்டில் ஈடுபடுவது அதிகம் என்பது உண்மைதான் என்றாலும், கடந்த காலத்தில் பாலின இடைவெளி குறித்த சமூக பிம்பங்களும் இந்த ஆளுமை வேறுபாடுகளுக்குக் காரணம். 1990-களின் நடுப்பகுதியிலிருந்து 2000-களின் முற்பகுதி வரையிலான ஆராய்ச்சி சமூகத்தின் மேல் கரிசனமும், அக்கறையும் ஈடுபடும் கொண்ட பெண்களுடைய இயல்பை சுட்டிக்காட்டியது. பெண்கள் மற்றவர்களைப் பற்றி அக்கறை கொள்வதற்கும் சமூகப் பொறுப்புள்ளவர்களாக இருப்பதற்கும் அதிக அளவிலான சாத்தியங்கள் கொண்டிருப்பதாக இந்த ஆராய்ச்சி கூறுகிறது. இதுவே சுற்றுச்சூழல் பிரச்சினைகளைப் பற்றி கவலைப்படுவதற்கும் சுற்றுச்சூழல் சார்ந்த நடத்தை முறைகளை பின்பற்றத் தயாராக பெண்கள் இருப்பதற்கும் வழிவகுக்கிறது.

காலநிலை இடர்கள் குறித்த செறிவான வாதங்கள்கூட பாலினக் கோடுகளால் பிரிக்கப்படுகின்றன. ஆண்கள் விஞ்ஞானம் மற்றும் வணிகத்தை மையமாகக் கொண்ட வாதங்களை விரும்புகின்றனர் என்றும் நெறிமுறைகள் மற்றும் சுற்றுச்சூழல் அடிப்படையில் வாதிட்ட ஆண்களுக்கு எதிர்மறை பெண்ணிய பண்புகளை அடையாளப்படுத்துவதையும் ஒரு ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

பெண்மையும் ‘பசுமையும்’ இணைத்தே பார்க்கப்படுகிறது (ஆண்களாலும் பெண்களாலும்) என்பதற்கான சான்றுகள் உள்ளன – இது ஆண்கள் தங்கள் பங்கை ஆற்றுவதை ஓரளவு தடுக்கிறது. மறுபயன்பாட்டுக்குரிய ஒரு பையை எடுத்துச் செல்வதையோ அல்லது பெண்மை நிறைந்ததாக கருதப்படும் எந்தவொரு சுற்றுச்சூழல் நட்பு நடவடிக்கையும் ஆண்கள் செய்ய விரும்புவதில்லை, அத்தகைய செய்கைகள் மூலம் அவர்கள் பெண்மை நிறைந்தவராகவும், தன்பால் நாட்டம் கொண்டவராகவும் பிறரால் கருதப்படுபவர் என்று அஞ்சுகின்றனர் என்றும் ஆய்வில் தெரியவருகிறது. இதேபோல், நுகர்வோர் ஆராய்ச்சி இதழில் 2016-ஆம் ஆண்டு வெளியான ஒரு ஆய்வறிக்கை, ஆண்கள் தங்கள் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக பசுமையான நடத்தைகளைத் தவிர்க்கவோ அல்லது எதிர்க்கவோ விழையலாம் என்றும், பெண்மைக்கும் நிலைத்த வளர்ச்சிக்கும் சூழலியல் மேம்பாட்டுக்குமான தொடர்புறுத்தலை பலவீனப்படுத்துவதன் மூலம் ஆண்களின் பங்கேற்பை ஊக்குவிக்க முடியும் என்றும் கண்டறிந்துள்ளது.

ஆனால் தற்போது இதில் சில மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன. இரண்டு பிரபலமான இணையவழி வணிக நிறுவனங்கள், பாலின சார்பற்ற வியாபார நுட்பங்களையே பயன்படுத்தவேண்டுமென கவனமாக இருப்பதாக கூறுகிறார்கள் – ஆனால் இருவரும் தங்கள் வாடிக்கையாளர்களில் 90% பெண்கள் என்று கூறுகிறார்கள். மூங்கில் கரண்டிகள் மற்றும் சூழல் துப்புரவு பொருட்கள் போன்ற பொருட்களை விற்கும் கடையின் நிறுவனர் லாரன் சிங்கர் (Lauren Singer), இந்த ஏற்றத்தாழ்வு ஒருவகையில் பெண்களுக்கு இன்றைய நிலையில் தலைமை ஏற்று வழிநடத்தும் வாய்ப்பை அளிக்கிறது என்று கூறுகிறார்.

2016-ஆம் ஆண்டில் தேசிய புள்ளிவிவரங்களுக்கான அலுவலகம் வெளியிட்ட ஆய்வறிக்கையில், பெண்கள் ஆண்களைவிட சராசரியாக 60% ஊதியம் பெறாத வேலைகளைச் செய்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. சூழல் மேம்பாட்டில் பாலின இடைவெளியை நீக்க வேண்டுமென்றால், முதலில் வீட்டில் சலவை செய்வது, மாதாந்திர வீட்டுப் பொருட்கள் வாங்குவது, சுத்தம் செய்வது போன்றவற்றில் உள்ள பாலினம் சார்ந்த அடையாளங்களை அகற்றுவதும், ஒரு சூழலுக்கு உகந்த நுகர்பொருள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த தவறான அனுமானங்களை அகற்றவும் வேண்டுமென்கிறார் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் நிலைத்த வளர்ச்சியின் விரிவுரையாளர் ரேச்சல் ஹோவெல் (Rachel Howell).

வரலாற்று ரீதியாக ஆண்கள் அனைத்துத் துறைகளிலும் கையோங்கி இயங்கிய காரணத்தால் இன்று நாம் சந்திக்கும் பல சூழலியல் பிரச்சினைகளில் அவர்களுக்குப் பெரும்பங்கு இருக்கிறது. ஆனால் இன்று அவற்றைச் சரிசெய்ய பல சமயங்களில் பெண்களே பெருமுயற்சி எடுக்கவேண்டியிருக்கிறது என்றும் அதற்கான முழுமையான அதிகாரமும் வாய்ப்புகளும் அவர்களுக்கு இல்லாதபோதும் பெண்களே பொறுப்பேற்க வேண்டி இருக்கிறது என்றும் ஹோவல் கூறுகிறார்.

ஆண்கள் சருமப்பராமரிப்புப் பொருட்களைத் தயாரிக்கும் பிரிட்டிஷ் நிறுவனம் புல்டாக் (Bulldog) அதன் பிராண்டின் ஒரு அடித்தளமாக நீடித்த நிலைத்தன்மையை விளம்பரப்படுத்துகிறது. அதன் மூங்கில் கைப்பிடி கொண்ட ரேஸர்கள் மற்றும் சூழலியல் சார்ந்த குளியல் பொருட்கள் ஆகியவற்றை அட்டைப் பெட்டிகளில் விற்கிறது; பிராண்டின் நிறுவனர் சைமன் டஃபி (Simon Duffy) நிலைத்தன்மை குறித்த திட்டங்களில் உண்மையில் பாலினம் சார்ந்த பார்வை தேவையற்றது என்றும் இதை ஆண்பால் பெண்பால் என்று வேறுபடுத்துவது சரியல்ல என்றும் குறிப்பிடுகிறார்.

உலகம் மாறிவருகிறது

பியூ ஆராய்ச்சி மையத்தால் (Pew Research Center) அமெரிக்காவில் தொகுக்கப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, மில்லினியல்கள் மற்றும் Z தலைமுறையினர் (80-களின் முற்பகுதியிலிருந்து 2000-இன் நடுப்பகுதியில் பிறந்தவர்கள்) காலநிலை நெருக்கடியைப் பற்றிய விஷயங்களில் அதிக அக்கறை கொள்கிறார்கள்; இளைஞர் காலநிலை இயக்கங்களில் மற்றும் கிரெட்டாவைப் பின்பற்றுவோரில் நிறைய இளைஞர்களும் பெண்களும் உள்ளனர்; இது இத்தலைமுறையின் மாற்றம் என்று காணலாம். ஐரோப்பியர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட மூன்றில் இரண்டு பங்கு (68%) அதிகமாக சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களே மிக முக்கியமானது என்று 2018-ஆம் ஆண்டில் நிகழ்ந்த ஒரு ஐரோப்பிய நுகர்வோர் உணர்வுகள் கணக்கெடுப்பில் தெரிவித்துள்ளனர். 19 முதல் 29 வயதுடையவர்களுக்கு, இது 80% ஆக இருக்கிறது.

சூழலியல் மேம்பாடு என்பது ஒரு சிறு குழுவினர் மட்டும் ஈடுபடும் தனித்த செயல்பாடுகள் அல்ல; மக்களுக்கும் புவிக்குமான உறவை மேம்படுத்தி, அது குறித்த விழிப்புணர்வோடு ஒவ்வொருவரும் தமது வாழ்வியலூடாகவே பங்குபெறும் ஒரு தொடர் செயல்பாடு.

இதற்கு மூன்று பண்புகள் தேவையாகின்றன. அன்றாடத்தை ஒருதுளியும் மாற்றாது நாளைய உலகை நாம் காண விரும்பும் வண்ணம் மாற்றிடாது, மாற்றியே ஆக வேண்டியவற்றை ஒவ்வொரு நிமிடமும் நமது முழு ஈடுபாட்டுடன் மாற்ற முனைவதே, நாம் காண விரும்பும் மாற்றமாக நாம் ஆவதே இதில் முதற்படி. இதற்குத் தேவை முழுமையான முனைப்போடு கூடிய ஆர்வம்.

இரண்டாவதாக, மேற்கொள்ளும் பயணத்தில் அதன் இலக்கில் தொய்வின்றி தொடர்ந்து நடைபோடுதல். துளித்துளியாகவே பெருமழையும் மண் நிறைக்கும், துளித்துளியாகவே விதைகள் துளிர்விடும். அதற்கான விடாமுயற்சி மிக முக்கியமான இரண்டாவது பண்பு.

மூன்றாவதாக, இணைந்து செயலாற்றுதல். எந்நிலையிலும் இயற்கை பாதுகாப்பு குறித்த திட்டங்கள், செயல்பாடுகள் ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சியைக் கூறுபவை. ஒவ்வொருவர் பங்கும் முக்கியமாக இருக்கும் அதேநேரத்தில், இப்புவியின் மாபெரும் நெசவில் நாம் ஒரு சிறு கண்ணியே எனும் அறிதலோடு கூடிய கூட்டு செயல்பாடு மிக முக்கியமான ஒன்று.

ஏற்கெனவே காலநிலை மாற்றத்தின் மோசமான தாக்கங்களை அனுபவித்து வரும், அல்லது சூழலியல் அபாயங்களைத் தணிப்பது எவ்வாறு என்பதைப் பற்றி சிந்திக்க விரும்பும் எந்தவொரு நாடும், காலநிலை மாற்றத்தில் பாலின தாக்கத்தை நிவர்த்தி செய்வதற்கும் பாலின சமத்துவத்தை அவர்களின் எல்லா அணுகுமுறைகளிலும் ஒருங்கிணைப்பதற்கும் கொள்கைகள் மற்றும் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். கொள்கைகளுக்கு என்றுமே ஏதும் குறைவில்லை.

ஆனால் பாலின வேறுபாடுகளைக் களைய வேண்டும் என சொல்லும்போது செய்யக்கூடுவது யாது? பெண்களுக்கு என்றோ ஒருநாள் ஒருமுறை பயிற்சி அளிப்பதும், கொள்கைகளும் சட்டங்களும் இயற்றுவதும் மட்டும் இதற்குத் தீர்வாகாது. தலைமுறை தலைமுறையாக நீடித்து நிலைக்கும் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தவும், பெண்களின் வாழ்க்கையை மாற்றவும், சமத்துவத்தை அடைய ஒரு அர்த்தமுள்ள சமூக மனமாற்றத்தை ஏற்படுத்தவும், பாலின சமத்துவத்துக்கான திட்டங்களின் குறிப்பிட்ட கூறுகளை தொடர்ந்து கண்காணித்தல் மற்றும் நிர்வகித்தல் தேவையாகிறது.

காலநிலை மாற்றம் மற்றும் பெண்களின் சமத்துவம் நமது தீவிர கவனத்தையும் அவசர நடவடிக்கையையும் கோரும் மனித உரிமைகள் பிரச்சினையாக உலகின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கி இருக்கிறது. இருப்பினும், சிக்கல்கள் வெளிச்சத்துக்கு வந்தாலும் நீண்டகால, சமூகம் சார்ந்த தீர்வுகளை செயல்படுத்துவதில், அதன் இடைவெளிகளை நிறைப்பதில் நம் ஒவ்வொருவருக்கும் முக்கிய பங்கு இருக்கிறது என்பதையே இத்தனை ஆய்வுகளும், நாம் காணும் நடைமுறையும் நமக்கு உணர்த்துகின்றன.


சுபஸ்ரீ சுந்தரம் – மென்பொருள் மென்பொருள் மற்றும் தகவல் பாதுகாப்புத் துறை வல்லுநர் வல்லுநராகச் சிங்கப்பூரில் பணியாற்றுகிறார். இசை மற்றும் ஓவியம் சார் கலைகளிலும், புனைவிலக்கியம் தவிர வரலாறு மற்றும் தத்துவ நூல்களில் ஈடுபாடு கொண்டிருக்கிறார். இணையதளங்களுக்குத் தொடர்ச்சியாக எழுதிவருகிறார்.

1 COMMENT

  1. ஆசிரியர் வெகு அழகாக ஆழமாக எல்லாக் கோணங்களிலிருந்தும் எடுத்துக் கொண்ட விஷயத்தை மிகத் தீவிரமாக அணுகியிருக்கிறார். நல்ல தமிழில் இப்படி ஒரு கட்டுரை. இவ்விதமான ஒரு முயற்சி நிச்சயமாக தேவை.

    மாற்றத்தைக் கொண்டுவர என்ன செய்ய வேண்டும் என்பதையும் மிகத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்.

    காலநிலை மாற்றத்திற்கு அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் பெண்கள் மட்டுமல்லாது எத்தனையோ வாய் பேச முடியாத தம்முடைய பிரச்சினையை எடுத்து இயம்ப முடியாத உயிரினங்களும் கூட. இந்த பூமிப்பந்து எல்லோருக்கும் சொந்தம் எல்லோருக்கும் இங்கு வாழ சம உரிமை உள்ளது என்ற புரிதல் வராதவரை காலநிலை மாற்றம் பெண்களையும் மற்ற உயிர்களையும் அதிகமாகவே பாதிக்கும்.

    காலநிலை மாற்றம் ஏற்படுவதற்கு ஒருவகையில் பெண்களும் கூட மிக அதிக அளவில் எவ்விதம் காரணமாகிறார்கள் என்பதையும் ஆசிரியர் தொட்டுக்காட்டி இருக்கலாம். பாதிக்கப்படுவது அதிகம் பெண்களாக இருந்தாலும் கூட காலநிலை மாற்றத்திற்கான காரணத்திலும் நிச்சயம் அவர்களுக்கான மிகப்பெரிய பங்களிப்பும் உள்ளது. பெண்கள் நினைத்தால் அந்த காரணங்களை தவிர்க்கவும் மாற்றுச் செயல்பாடுகளை முன்னெடுக்கவும் முடியும்.

    மொத்தத்தில் இது மிகவும் ஆராய்ந்து எளிய தமிழில் அழகாக எழுதப்பட்ட ஒரு நல்ல கட்டுரை.

    ஆசிரியரின் இவ்விதமான கட்டுரை முயற்சி மேலும் மேலும் தொடர நல்வாழ்த்துக்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.