காலநிலை மாற்றம்: அடிப்படைக் கேள்விகளும் பதில்களும் (FAQs)

புவி வெப்பமாதல் என்றால் என்ன?

புவியின் சராசரி வெப்பநிலை அதிகரிப்பது புவி வெப்பமாதல் என்று குறிப்பிடப்படுகிறது. 1880-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, இப்போதைய சராசரி வெப்பநிலை ஒரு டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்திருக்கிறது. அதையே புவி வெப்பமாதல் என்கிறோம்.

இந்த எண் குறைவாகத் தெரியலாம், ஆனால் மொத்த புவிக்குமான சராசரி என்கிற அளவில் இது மிகவும் அதிகம் என்பது விஞ்ஞானிகளின் கண்டறிதல்.

காலநிலை மாற்றமா? புவி வெப்பமாதலா? இதை எப்படி அழைப்பது?

இரண்டுமே சரியான சொல்லாடல்கள்தான். ஆனால் அவற்றின் உட்பொருள் வேறு. காலநிலை மாற்றத்தின் ஒரு அங்கம்தான் புவி வெப்பமாதல் . வெப்பமடையும் புவியைத் தவிர, பருவமழையில் ஏற்படும் மாற்றங்கள், கடல்மட்டம் உயர்தல், தீவிரப் பருவகால நிகழ்வுகள் என எல்லாவற்றையும் உள்ளடக்கியது காலநிலை மாற்றம்.

“புவி வெப்பமாதல் ” என்ற சொல்லாடலைப் பயன்படுத்தும்போது, வெப்பமாதலால் ஏற்படும் நிகழ்வுகள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. காலநிலை மாற்றம் என்பது பல நிகழ்வுகளையும் சேர்த்துக் குறிப்பிடுகிறது என்பதால் அது பரிந்துரைக்கப்படுகிறது.

பசுமைக்குடில்/பசுங்குடில் விளைவு என்றால் என்ன? அதற்கும் புவி வெப்பமாதலுக்கும் என்ன தொடர்பு?

19-ஆம் நூற்றாண்டில், காற்றில் உள்ள சில வாயுக்கள் வெப்பத்தைப் பிடித்து வைத்துக்கொள்கின்றன எனவும், அந்த வெப்பம் வளிமண்டலத்தைத் தாண்டிப் போய்விடாமல் அவை பாதுகாக்கின்றன எனவும் கண்டறியப்பட்டது. இந்த வாயுக்கள் இல்லாவிட்டால் பூமியே பனிப்பாலைவனமாக மாறிவிடும். இவையே பசுங்குடில் வாயுக்களாகும். கரியமில வாயு, மீத்தேன் போன்றவை முக்கியமான பசுங்குடில் வாயுக்கள்.

இந்தப் பசுங்குடில் வாயுக்களின் அளவு அதிகரித்தால், புவியின் சராசரி வெப்பநிலையும் அதிகரிக்கும் என்று 1896-இல் முதன்முதலில் கணிக்கப்பட்டது. தொழிற்புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தோடு ஒப்பிடும்போது, இந்த வாயுக்கள் 43 சதவீதம் அதிகரித்திருக்கின்றன, சராசரி வெப்பநிலையும் அதற்கேற்றவாறு உயர்ந்திருக்கிறது.

இயற்கைக் காரணிகளால் காலநிலை மாற்றம் அதிகரிக்குமா?

வெப்பநிலையை அதிகரிக்கும் பல இயற்கை நிகழ்வுகள் உண்டு. அவை எதுவும் இப்போது நிகழவில்லை என்று அறிவியலாளர்கள் நிரூபித்திருக்கிறார்கள்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், இயற்கைக் காரணிகளால் கரியமில வாயுவின் அளவு ஏறி இறங்கியது. ஆனால் அந்த மாற்றம் ஏற்படுவதற்குச் சில ஆயிரம் ஆண்டுகளாவது தேவைப்பட்டன. ஆனால் இப்போது கரியமில வாயு அதிகரிக்கும் வேகத்தையும் மனிதர்களின் செயல்பாடுகள் மூலம் வரும் உமிழ்வுகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இது மனிதர்களால் ஏற்பட்டுள்ள மாற்றம்தான் என்பது உறுதியாகிறது.

இதற்கு மனிதர்கள்தான் காரணம் என்பதை எப்படி அறிந்துகொள்வது?

இயற்கையான உமிழ்வுகள் எவை, மனிதச் செயல்பாடுகளால் வெளியிடப்படும் உமிழ்வுகள் எவை என்று பிரித்தறிவதற்குப் பல சோதனைகள் உண்டு. அந்த ஆராய்ச்சிகள் எல்லாமே, இப்போது இருக்கும் கூடுதல் பசுங்குடில் வாயுக்கள் மனிதச் செயல்பாடுகளின்மூலமே உமிழப்பட்டவை என்று நிரூபித்திருக்கின்றன.

கரியமில வாயு காற்றில் கொஞ்சமாகத்தான் இருக்கிறது என்று பள்ளிகளில் படித்திருக்கிறோம், அதுவா இந்த அளவுக்குப் பெரிய ஆபத்தை உண்டாக்கிவிடும்?

அளவில் குறைவாக இருந்தாலும் அதன் பசுங்குடில் விளைவு மிக அதிகம். 1856-இல் அமெரிக்க விஞ்ஞானின் யூனிஸ் நியூட்டன் ஃபூட், கரியமில வாயுவின் தாக்கத்தைப் பரிசோதிப்பதற்காக ஒரு சிறு அறிவியல் சோதனையை வடிவமைத்தார். ஒரே அளவிலான இரு கண்ணாடி சிலிண்டர்களை எடுத்துக்கொண்டார். ஒன்றில் காற்றையும் இன்னொன்றில் கரியமில வாயுவையும் நிரப்பி, இரண்டு சிலிண்டர்களையும் ஒரே நேரத்தில் சூரிய வெளிச்சத்தில் வைத்தார். தொடர்ந்து இரு சிலிண்டர்களின் வெப்பநிலையையும் பரிசோதித்ததில், கரியமில வாயு நிரம்பிய சிலிண்டர் எளிதில் சூடாகி, அதிக நேரம் சூடாகவே இருக்கிறது என்பது தெரியவந்தது.

பிரச்சினையின் தீவிரம் எப்படிப்பட்டது?

காலநிலை மாற்றம் என்பது மிகப்பெரிய ஒரு அச்சுறுத்தல். அடுத்த 25 அல்லது 30 ஆண்டுகளில் சராசரி வெப்பநிலை அதிகரிக்கும், தீவிர பருவகால நிகழ்வுகள் அடிக்கடி நிகழும். ஏற்கெனவே பவளத்திட்டுக்கள் உள்ளிட்ட பல மென்வாழிடங்கள் அழியத் தொடங்கிவிட்டன. காலநிலை மாற்றத்தால் வளங்கள் குறையும், அதனால் பூசல்களும் உள்நாட்டுப் போர்களும் ஏற்படலாம். உயிரினங்கள் அழியும். துருவப் பகுதிகளில் பனிக்கட்டிகள் உருகும். கடல்மட்டம் உயர்வதால் பல கடலோர நகரங்கள் மூழ்கும்.

காலநிலை மாற்றம் என்னை நேரடியாக பாதிக்குமா?

அனைவரும் இதை உணர்கிறார்களோ இல்லையோ, இப்போதே காலநிலை மாற்றம் மக்களைத் தாக்கத் தொடங்கிவிட்டது. சாண்டி புயல் நியூ யார்க்கையும் நியூஜெர்சியையும் தாக்கியபோது, கூடுதலாக எண்பத்தி மூன்றாயிரம் பேரின் வீடுகள் மூழ்கியதற்குக் காலநிலை மாற்றமே காரணம். நிலையான பருவகாலத்தில் இந்த நிலை வந்திருக்காது. காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் வெப்பத்தால் ஏற்கெனவே பல்லாயிரக்கணக்கானோர் இறந்துவிட்டார்கள். உலக நாடுகள் பலவற்றின் அரசாங்கங்களை ஸ்தம்பிக்கவைக்கும் அளவுக்கு அதிகரித்திருக்கும் அகதிகளின் எண்ணிக்கையில் காலநிலை மாற்றத்துக்கும் ஒரு முக்கியப் பங்கு உண்டு. மற்ற எல்லா பிரச்சினைகளையும் போலவே இதிலும் அதிகம் பாதிக்கப்படப்போவது வறியவர்கள்தான்.

கடல்மட்டம் எவ்வளவு உயரும்?

ஒரு நூற்றாண்டுக்கு ஒரு அடி என்கிற விகிதத்தில் கடல்மட்டம் உயர்ந்துகொண்டிருக்கிறது. அதே விகிதம் இருந்தால் ஓரளவு சமாளிக்கமுடியும் என்பதே அறிவியலாளர்களின் கணிப்பு.

துரதிர்ஷ்டவசமாக, இந்த விகிதம் நிச்சயம் உயரும். ஒரு தசாப்தத்துக்கு ஒரு அடி என்கிற விகிதமாகக் கூட இது மாறக்கூடும் என்று எச்சரிக்கிறார்கள் புவிசார் வரலாற்றை ஆராய்ந்துவரும் நிபுணர்கள். நாளையே உமிழ்வுகள் முழுவதுமாக நிறுத்தப்பட்டால்கூட, 15 முதல் 20 அடி வரை கடல்மட்டம் உயர்வதை யாராலும் தடுக்க முடியாது, அதுவே பல நகரங்களை மூழ்கடித்துவிடும். இதற்கு எத்தனைக் காலம் பிடிக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஒருவேளை உமிழ்வுகள் நிறுத்தப்படாவிட்டால், கடல்மட்டம் 80 முதல் 100 மீட்டர்கள் வரை உயரலாம்.

உலகின் வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் அதிகரித்தால் என்ன ஆகும்?

உமிழ்வுகள் கட்டுப்படுத்தப்படவில்லை என்றால் உலகின் சராசரி வெப்பநிலை 4 டிகிரி வரை அதிகரிக்கும். உணவு உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்படும். பல விளைநிலங்கள் கடலில் மூழ்கும். கரியமில வாயு அதிகரிக்கும்போது பயிர்களில் சத்து குறையும். வறட்சி, பயிர்நோய்கள், பயிர்களை அழிக்கும் பூச்சிகள் ஆகியவை அதிகரிக்கும். 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிப்பு என்பதை உலகத்தால் எதிர்கொள்ளவே முடியாது என்று எச்சரிக்கிறது உலக வங்கி.

சமீபத்திய மோசமான பருவகாலம் இதனால் ஏற்பட்டதா?

கொஞ்சம் அப்படித்தான்.

புவியின் வெப்பம் அதிகரிக்கும்போது, கோடைகளின் வெப்பநிலை மிகத்தீவிரமாக இருக்கும், புயல்களின் தீவிரம் அதிகரிக்கும், வெள்ள அபாயம் அதிகரிக்கும். மத்தியக் கிழக்கு நாடுகளில் காலநிலை மாற்றத்தால் வறட்சி அதிகரித்திருக்கிறது. கலிஃபோர்னியா மாகாணத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வறட்சிக்கும் காலநிலை மாற்றத்துக்கும் தொடர்பு உண்டு என்பதை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.

இன்னும் பல பருவகால நிகழ்வுகளுக்கும் காலநிலை மாற்றத்துக்கும் உள்ள தொடர்பை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள். கணிப்பொறி மாதிரிகளை உருவாக்கும் தொழில்நுட்பம் முன்னேறும்போது இந்த ஆராய்ச்சிகளிலும் எளிதில் தரவுகள் கிடைக்கும்.

இந்தப் பிரச்சினைக்கான தீர்வு என்ன?

செயல்படுவதற்கு நாம் நெடுங்காலம் எடுத்துக்கொண்டதால் பாதிப்புகள் ஏற்கெனவே தீவிரத்தன்மைக்கு வந்துவிட்டன என்று விஞ்ஞானிகள் கவலை தெரிவிக்கிறார்கள். உமிழ்வுகளைப் பூஜ்ஜியமாகக் குறைத்தால் மட்டுமே வெப்பமடைதலின் வேகம் சமாளிக்ககூடிய அளவுக்குக் குறையும்.

கார்களில் இருக்கவேண்டிய எரிபொருள் சிக்கனம், கட்டிடங்களின் ஆற்றல் குறித்த வரையறை, மின் நிலையங்களுக்கான உமிழ்வு உச்சவரம்புகள் ஆகியவை உலக அளவில் ஓரளவு அமல்படுத்தப்பட்டிருக்கின்றன. அதனால் உமிழ்வுகள் குறையத் தொடங்கியிருக்கின்றன. ஆனால் மோசமான காலநிலை விளைவுகளிலிருந்து உடனே நாம் நம்மைக் காத்துக்கொள்ளவேண்டுமானால் இவற்றின் வேகம் முடுக்கிவிடப்படவேண்டும்.

பாரிஸ் ஒப்பந்தம் என்றால் என்ன?

டிசம்பர் 2015-இல் ஏற்படுத்தப்பட்ட உலகளாவிய ஒப்பந்தம் இது. ஒவ்வொரு நாடும் எதிர்கால உமிழ்வுகளைக் கட்டுப்படுத்துவதாக ஒப்புக்கொண்டிருக்கிறது. உமிழ்வுக் கட்டுப்பாடுகள் தனிச்சையானவை. சில ஆண்டுகளுக்கு ஒருமுறை இது மீளாய்வு செய்யப்படும், நாடுகள் தங்கள் உச்சவரம்புகளில் திருத்தங்கள் செய்து அறிவிக்கும். 2017-இல் அமெரிக்கா இதிலிருந்து விலகும் என்று அந்நாட்டின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார். அமெரிக்காவின் செயல்பாடு எப்படி இருந்தாலும் தாங்கள் ஒப்பந்தத்திற்குக் கட்டுப்படுவதாக பிற நாடுகள் அறிவித்தன.

அமெரிக்காவின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன், பாரிஸ் ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்காவை இணைப்பதற்கான உத்தரவில் 2021 ஜனவரியில் கையெழுத்திட்டார்.

மாசற்ற ஆற்றலால் பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படுமா?

காற்றாலை மின்சாரம், சூரிய ஒளி மின்சாரம், நீர்மின் நிலையங்கள், அணுமின் நிலையம் ஆகியவை குறைந்த உமிழ்வுகளை வெளியிடும் ஆற்றல் நிலையங்கள். இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தும் நிலையங்களிலும் உமிழ்வுகள் குறைவு.

நிலக்கரியிலிருந்து இதுபோன்ற எரிபொருளுக்குப் பெயர்வதற்கான இப்போதைய செயல்பாடுகள் செலவு பிடிக்கும் என்பது உண்மைதான். ஆனால், காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது, மாசுபாட்டைக் குறைப்பது ஆகியவற்றின் மூலம் இந்த எரிபொருட்களால் மிச்சப்படும் நிதி ஒப்பீட்டளவில் மிக அதிகம். இதனால் நிலக்கரி நிறுவனங்களுக்கு இழப்புதான் என்றாலும், இவற்றால் உருவாகப்போகும் புதிய வேலைவாய்ப்புகள் அதிகம். உதாரணமாக, நிலக்கரித் துறையோடு ஒப்பிடும்போது, அமெரிக்காவில் மட்டும் இரண்டு மடங்கு அதிக தொழிலாளர்கள் சூரியமின் துறையில் பணி செய்கிறார்கள்.

“சுத்தமான நிலக்கரி” என்றால் என்ன?

நிலக்கரியை ஆற்றலாகப் பயன்படுத்தும் மின்நிலையங்களில், உமிழ்வுகளை வெளியில் விடாமல் நிலத்தடி பாதுகாப்புப் பெட்டகங்களை நோக்கித் திருப்பினால், அதுவே “சுத்தமான நிலக்கரி” என்று அழைக்கப்படுகிறது, அதில் உமிழ்வு இருக்காது. பொருளாதார ரீதியாக இதில் சில சிக்கல்கள் உண்டு என்றாலும், பணப் பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டால் இது ஒரு பெரிய தீர்வாக இருக்கும் என்று வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

மின்சாரக் கார்கள் இதற்குத் தீர்வாகுமா?

நிச்சயமாக. அதிலும் குறிப்பாக, இந்தக் கார்களில் பயன்படுத்தப்படும் மின்சாரமும் சுத்தமான ஆற்றல் நிலையங்களின்மூலம் வருமானால் உமிழ்வுகளின் விகிதம் இன்னும் குறையும். மின்சாரக் கார்களின் ஒட்டுமொத்த விற்பனை இப்போதைக்குக் குறைவாகவே இருக்கிறது. ஆனால் அவற்றின் உற்பத்தி சமீபகாலங்களில் அதிகரித்துவருகிறது. 2030-க்குள் எல்லாக் கார்களையும் மின்சாரத்தால் இயங்குபவையாகவே  மாற்றமுடியுமா என்றுகூட சில நாடுகள் விவாதித்துவருகின்றன.

கரிம வரி, கரிம பட்ஜெட் போன்றவை என்ன?

மனிதனால் வரும் பசுங்குடில் வாயுக்களின் உமிழ்வைப் பொதுவாகக் கரிம உமிழ்வுகள் என்கிறோம். உமிழ்வுகளின் உச்சவரம்புகளை நிர்ணயிக்கவும், ஒவ்வொரு நாடும் எத்தனை உமிழ்வுகளை வெளியிடவேண்டும் என்று வரையறுக்கவும் உலக அளவில் ஒப்பந்தங்கள் உருவாக்கபடுகின்றன. கரிம வரி என்பது, உமிழ்வுக்கும் மாசுபாட்டுக்குமான வரி.

இது பெரிய பிரச்சினையாகத் தெரிகிறது, அதற்கு நான் என்ன செய்ய முடியும்?

பிரம்மாண்டமான கூட்டு முயற்சியால் மட்டுமே இதைத் தீர்க்க முடியும். ஒரு குடிமகனாக உங்கள் குரலை எழுப்புவது, மாற்றத்துக்கான கோரிக்கைகளை வைப்பது ஆகியவற்றைத் தொடங்குங்கள்.

உங்கள் கரிம கால்தடத்தைக் கூடிய வரையில் குறைத்துக்கொள்ளுங்கள். வீடுகளில் மின்சாரத்தைச் சேமிப்பது, பொதுப் போக்குவரத்தில் பயணிப்பது, உணவையும் தண்ணீரையும் வீணாக்காமல் இருப்பது, விமானப் பயணங்களைக் குறைத்துக்கொள்வது, சூரியஒளி மின்சாரம் முதலான உமிழ்வுகளற்ற ஆற்றல் திட்டங்களுக்கு மாறுவது, சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத நிறுவனங்களுக்கு ஆதரவு தருவது ஆகியவை முக்கியமான சில செயல்பாடுகள்.

தொடர்ந்து உங்களைச் சுற்றியிருக்கும் நண்பர்களிடமும் குடும்பத்தினரிடமும் இதைப் பற்றிய உரையாடல்களை முன்னெடுப்பதும் ஒரு முக்கிய செயல்பாடுதான்.


நாராயணி சுப்ரமணியன் – கடல் உயிரின ஆராய்ச்சியாளர், எழுத்தாளர்.

 

 

1 COMMENT

  1. Quite interesting. Use of new Tamil terms appear to be fascinating. A detailed essay or article with latest facts and figures may be quite thought provoking. Appreciable attempt in producing a scientific article with latest Tamil words. All the best.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.