Homeமொழிபெயர்ப்புகள்கவிதைகள்ஹென்றி பர்லாண்ட் கவிதைகள்

ஹென்றி பர்லாண்ட் கவிதைகள்

1) முன்னொரு காலத்தில் வருந்தினேன்

முன்னொரு காலத்தில் நான் வருந்தினேன்
ஒல்லியாகவும்
வியாபார நுண்ணறிவு இல்லாதவனாகவும்
தென்பட்ட ஒரு மனிதனுக்காக
பிறகொரு நாள் நாங்கள்
அடுத்தடுத்து அமர்ந்திருந்தோம்
அதே கண்ணாடியின் முன்பாக


2) பெரியதொரு மனவெழுச்சியினின்றும்
நான் வெளியே வந்தேன்

பெரியதொரு மனவெழுச்சியினின்றும்
நான் வெளியே வந்தேன்
ஒருவருக்கும் என்னை
அடையாளம் தெரியவில்லை
சாலை வளைந்து போனது
மக்களும் அவ்விதமாகவே சென்றனர்
காற்று வீசியபடியிருந்தது
ஒரு பெட்டி சிகரெட் வாங்கினேன்
வீட்டிற்கு திரும்பும் வழிநெடுக
அவை என்னை தொடர்ந்து வந்தன.


3) வாழ்க்கை கிடைக்கிறது
மலிவினும் மலிவாக…

கடந்த வருடத்தின் இலட்சியங்கள்
அதன் அசல் விலையினின்றும்
இப்போது பத்துசதவீதம் மட்டுமே.
நீங்கள் பழையக் கப்பலொன்றிற்கு
வர்ணம் பூசி
சில உதிரிப்பாகங்களையும் பொருத்தினால்
ஏற்றிச் செல்லமுடியும்
மனிதர்களை , கைப்பெட்டிகளை , மதுபுட்டிகளை
கணிசமானதொரு கட்டணத்திற்கு.

4) வேடிக்கை

முதலில்
அவள் அழைத்துக்கொண்டிருந்தாள்
அவனை
( தினந்தோறும் )
பிறகு
அவன் அழைத்கொண்டிருந்தான்
அவளை
( தினந்தோறும் )
கடைசியாகத்
தொலைபேசி
அடிக்கத் தொடங்கியது
அதுவாகவே .

5) என் தொப்பி

நேற்று
ஒரு தள்ளுவண்டி
என் தொப்பி மீது
ஏறிச் சென்றுவிட்டது.
இன்று காலை
எனது மேலங்கி
தொலைதூர இடங்களுக்கு
நடந்து போனது
இன்று மதியம்
எனது காலணிகள்
தாக்கி அழிக்கப்பட்டன.
நான் இன்னுமிங்கே
இருக்கிறேனா ?
இருப்பது
அ து
மட்டுமே.


-ஹென்றி பர்லாண்ட் 

தமிழில் : க.மோகனரங்கன்

 

ஆசிரியர் குறிப்பு:

ஹென்றி பர்லாண்ட்( 1908 -1930 ) ஜுலை29, 1908 ல் ரஷ்யாவிலுள்ள வைபோர்க் -ல் பிறந்த பர்லாண்ட், 1912 ல் தன் பெற்றோருடன் பின்லாந்திற்கு குடிபெயர்கிறார். ஹெல்சிங்கி பல்கலைக் கழகத்தில் சட்டப்படிப்பை 1927 ல் முடித்தவர் , லிதுவேனியாவிலுள்ள ஸ்வீடிஷ் தூதரகத்தில் பணியில் சேர்கிறார். 1930 ல் விஷக்காய்சல் கண்டு தனது 22வது வயதிலேயே இறந்துபோகிறார். அவருடைய கவிதைகள் அடங்கிய தொகுப்பு Idealrealisation 1928 ல் ஸ்வீடனில் வெளியானது.

க.மோகனரங்கன்:

ஈரோடு மாவட்டத்தை சார்ந்தவர். கவிதை, கட்டுரை, விமர்சனம், மொழிபெயர்ப்பு என்று இலக்கியத்தின் பல தளங்களில் இயங்கி வருபவர். ‘மீகாமம்’, ‘அன்பின் ஐந்திணை’, ‘மைபொதி விளக்கு’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

பகிர்:
Post Tags
முந்தைய பதிவு
அடுத்த பதிவு
Latest comments
  • ஆஹா! சுமைய்ற்று இவ்வளவு எளிமையாக எப்படி எழுதமுடிகிறது?

  • அருமையான படைப்புகளை தொடர்ந்து தருகிறீர்கள்

  • மோகனரங்கன் என்னும் முக்கியமான ஆளுமையின் இலக்கிய அனுபவம் ஒரு வாசகனை கவிதைகளுக்குள் மிக எளிதாக நுழைத்துவிடுகிறது. இவ்வளவு சின்ன வயதில் எப்படி சாத்தியம் இப்படியான முதிர்ந்த கவிதைகள் என ஆச்சரியப்பட வைக்கின்றன.//கடந்த வருடத்தின் இலட்சியங்கள் அதன் அசல் விலையினும் பத்து சதவிகிதம் மட்டுமே…. வித்தியாசமான பார்வை. ஆண்டின் தொடக்கநாள் டயரி வாங்கிய மகிழ்வில் எழுத அமரும் ஆரம்பகால ஆர்வம்தான் வாழ்க்கை. அதற்கு மேல் ஒன்றுமில்லை. “கணிசமான கட்டணத்திற்கு” என்கிற போது மலிவான கட்டணத்திற்கு கணிசமான பொருள்கள் என்கிற பொருள் தரவில்லை என்பது என் கருத்து.

leave a comment