நுரைப் பூக்கள்


மார்னிங் குளோரிக் கொடியின் நீலப் பூக்கள் பால்கனியில் உதிர்ந்து கொண்டிருந்தன. நகர நெரிசலுக்குத் தொடர்பின்றி புன்னை மரங்கள் பிரம்மாண்டக் குடைகளாக வாசலில் விரிந்தன. மழை வலுத்து ஆங்காரமாய்ப் பெய்தது. அதன் ஆக்ரோஷத்தில் அந்தச் சிறிய வீடு கிடுகிடுப்பது போல் உணர்ந்தான். மழையும்,மண்ணும் குழைகையில் எழுவது பெண் மணம் என்று அவன் மனம் கிளர்ந்தது. ஜன்னலில் டேலியாப் பூக்கள் குலுங்கின. ஒவ்வொரு ஜன்னலாக மூடியவன் தன் கணினியையும் மூடினான் . தன் ஆய்வுக் கட்டுரையை எழுதும் மன நிலையை மழை கலைத்து விட்டது. தனிமை. தானே தேர்ந்த தனிமை சமயத்தில் கனத்துக் கவிகிறது. காபி மேக்கரில் நீரையும், தூளையும் போட்டு விட்டு டோஸ்ட்டரில் ரொட்டிகளை வாட்டத் தொடங்கினான். ஊருக்குள் போய் சாப்பாடு வாங்கி வரும் சென்றாயன் இன்னும் வரவில்லை. இது போதும் மதியத்திற்கு. ப்ரிஜ்ஜில் பாலும், பழங்களும், ரொட்டிப் பாக்கெட்டுகளும் இருந்தன. செந்நிற ஒயின் பாட்டில்கள். நல்ல பகல். ரொட்டிகளையும், காபியையும் சாப்பிட்டுவிட்டு கண்ணாடி ஜன்னலில் மழைக் கோலம் பார்த்தான் சற்று நேரம். பிறகு ஏ.சி்யை அணைத்துவிட்டு போர்வைக்குள் சுருண்டு கொண்டான்.

இருண்ட மதியம். கதவில் தட்டல். “வந்துட்டேன் சென்றாயன்” என்றபடியே அலுப்போடு கதவைத் திறந்தான். வெளியில் நின்றது சென்றாயனில்லை. அந்தப் பெண் நின்றிருந்தாள். பக்கத்துத் தோட்டத்தில் வேலைக்கு வந்த போது இங்கே வாசலைக் கூட்டிப் பெருக்க வருவாள் அவள். முழுக்க நனைந்திருந்தாள். கன்னத்தில் ஓடிய நீர் த் தாரைகளை  வழித்தெறிந்த படி நின்றாள். அவன் உடல் விதிர்த்தது.

“உள்ள வாம்மா’’ என்றான் பதட்டமாக. தொப்பலாக நனைந்திருந்தாள். தலையை மூடிய பாலிதீன் பையை  வெளியே உதறி விட்டு அஞ்சிய புறாக்கள் போல் அவள் பாதங்கள் உள ளே வந்தன. உடலோடு ஒட்டிய மஞ்சள் சுங்குடிச் சேலை. துல்லியச் செதுக்கல்களாக மார்பும் இடையும். அவள் குனிந்து புடவையின் கரையைக் கால் மிதிக் கம்பளத்தில் பிழிந்து விட்டாள்.

“என்ன பஸ்ஸை விட்டுட்டியா ”

“இல்லீங்க சாமீ”

“என்னை  அப்டிக் கூப்பிடக் கூடாதுனு அன்னிக்கே  சொன்னேன்”

தன் பார்வை அவளுடலை வருடுவதைத் தவிர்க்கவியலாமல் தவிர்த்தான்

முகத்தைத் திருப்பி  டிவியை இயக்கினான்.

“இல்லீங்கய்யா, இங்க தான் வந்திட்டு இருந்தேன். வாற வழில மழை பிடிச்சிடுச்சு”

“இங்க எதுக்கு இப்ப” கடுமையைக் குரலில் கூட்டிக் கொண்டான்.

அவள் எதுவும் சொல்லாமல் அவனை வெறித்துப் பார்த்துப் பிறகு, “ஐயா எம் புருஷன் வேலை பார்த்த மில்லு மூடிக்கிடக்கு. கொரனாவாமேங்க. அந்தாளுக்கு வேலையில்ல. என்னயவும் அப்பார்ட்டுமண்டு வேலகளுக்கு வரக் கூடாதின்னுட்டாக. எதாவது வேல தந்திங்கனா புண்ணியமா போகும். புள்ள குட்டிகளைப் பசியாத்த முடிலங்கய்யா.”

இந்தச் சமயத்தில் யாரையும் உள்ளே விட அவனுக்கும் அச்சமாகத் தான் இருந்தது. ஆனால் அவளுடைய இறைஞ்சல் ஒரு குரூர இன்பத்தைத் தந்தது. அவன் மட்டுமேயறிந்த காரணத்தாலானது அது. நொடியில் அது மறைந்தும் போனது.

“இந்தச் சமயத்தில் யாரயும் விடக் கூடாதேம்மா” என்று சொல்கையிலேயே தன் முகத்தில் சிறிது கண்ணியத்தையும், காருண்யத்தையும் கவனமாகத் தீற்றிக் கொண்டான். மேலும் அவளுடைய கெஞ்சல்.

“முகமூடியெல்லாம் வச்சிருக்கனுங்கய்யா. கொஞ்சம் தயவு பண்ணுங்க.சோப்பு வச்சுக் கை கால் கழுவிட்டுக் கூட்டிப் பெருக்கிட்டு , அந்தா  கெடக்கிற பாத்திரமெல்லாம் தேய்ச்சுக் கழுவிடுறேங்கய்யா.”

அடிமனதில் அவள் கெஞ்சல் தித்தித்தது. மேஜையில் கிடந்த பர்ஸை எடுத்துத் திறந்தான்.

“வேலை பார்க்காமல் கூலி வாங்க மாட்டனுங்க.”

இந்த பவுமானத்துக்கு ஒண்ணும் குறைச்சலில்ல. என்னடா இது வம்பாப் போச்சு என்று நினைத்தவன் சிறிது நேரம் யோசித்தான். அவளும் நிலைப் படியில் உட்கார்ந்து அவன் முகத்தையே பார்த்தபடி இருந்தாள். எழுந்தவன் புதிய சோப்பு ஒன்றை அலமாரியிலிருந்து எடுத்தான். கீழடுக்கிலிருந்து தன் மனைவியின் புடவை ஒன்றையும் உருவினான். அவள் ஒரு விபத்தில் தவறிப் போய் ஒரு வருடமாகிறது.

“அய்யோ , அந்த மவராசி சேலையா, வேணாங்கய்யா , நானு எஞ்சேலையவே உடுத்திக்கிறனுங்க.”

மறுத்தவளை அந்த க்ரீம் நிறத்தில் செம் பூக்கள்  போட்ட ஷிபான்  ஈர்த்தது. அனிச்சையாக வாங்கிக் கொண்டாள். வீட்டுக்கு வெளியில் இருக்கும் குளியலறையில் குளித்து முடித்து விளக்குமாற்றோடு உள்ளே வந்தவள் தேய்த்தது டெட்டால் சோப் தான் என்றாலும் மனைவி உபயோகிக்கும் dove மணம் அடைத்த வீட்டிற்குள் பரவியது வெற்றுப் பிரமையா, வேட்கையா குழம்பினான்.

விறுவிறுவென்று மாடியறை, பால்கனியெல்லாம் பெருக்கி, குளியலறையைக் கழுவி, பாத்திரம் துலக்கி, துணிகளை அலசி என்று ஏகப்பட்ட வேலை பார்த்திருந்தாள். கஷ்ட காலம். அதிகமாகவே பணம் தர வேண்டும். இருட்டி விட்டது. சென்றாயனுக்குப் போன் செய்து வரச் சொல்லி அவன் டி.வி.எஸ்.50ல இறக்கி விடச் சொல்லி விடலாம்.

“வேறெதும் செய்யணுமாங்கய்யா. ரவ்வக்கி  சோறாக்கணுமா? நா செஞ்சா சாப்புடுவீகளா.”

“கடையில் வாங்கித் தர பையன் வருவான். நீ எப்டி ,தனியா போயிடுவியா ,அவனோட போறியா.”

“அன்னிக்குப் பேசினதுக்கு மன்னிச்சுக்கங்கய்யா.”

அவன் காதிலேயே விழாதவன் போல இருந்தான்.

“என்னய இப்பப் போகச் சொல்லாதீக.” மழை யாவுமறிந்தது போலவும், ஒன்றும் தெரியாதது போலவும் சலசலத்தது. மெளன சாட்சியமாக என்று ஏன் தோன்றுகிறது

“இருட்டுக் கட்டிடுச்சு”

இல்லை. செய்தி அதுவல்ல. கரும் சிவப்பு மாதுளம் குமிழ் இதழ்கள் சொல்ல  முனைவது அதையல்ல. நிலைக் கதவைத் தாழிட்டாள். அவன் விரல் நுனிகள் சில்லிட்டன. மிக அருகில் தரையில் அமர்ந்து அவன் பாதத்தை  மடியில்  எடுத்து வைத்துக் கொண்டாள். அவன் அவளைத் தடுக்கவில்லை.

” நீ…” பலவீனமாக ஆரம்பித்த அவன் குரல் மங்கி அடங்கிற்று. படுக்கையறைக் கட்டிலில் அவளைப் பார்த்த போது தான் தெரிந்தது. சுருக்கி மூடிய கண்கள். கட்டில் விளிம்பைப் பற்றிய கைகள். இருவருக்குமிடையே கனத்த திரைகள். இவள் இதற்கானவள் அல்ல. தன்னை விலை பொருளாக்க இவளுக்குத் தெரியாது. முடியவும் முடியாது. அவள் சுபாவத்திலேயே அது இல்லை.  அரை வெளிச்சத்தில் தெரியும் உடல் விளிம்புகளை நான் அணுகவே முடியாது. தொடத் தொட ஜடத் தன்மையுறும் அவள் தேகம். அனிச்சையாகத் தன்னை மறைக்கும் கைகள். அவளுக்குள்ளிருக்கும்  அவள்  தீண்டவியலாதவள். தான் தேடும் ஜனனியையோ , வேறு பெண்ணையோ அவளில் கண்டடைய முடியாது.

அன்றும் இதே போல் “எதும் வேலை இருக்கா சாமி ” என்று வந்தவள் தான். அவன் புத்தகத்திலோ ,லேப்டாப்பிலோ குனிந்தபடியே இருப்பான். ஒரு முறை கதவைத் திறந்த போது மஞ்சள் மணம். காலில் ஜிலேபிக் கொலுசு. உடலும் ,மனமும் குலைந்து தடுமாறியது. தொட்டியில் கிடந்த பாத்திரங்களைத் துலக்கிக் கொண்டிருந்தவளின்   இடுப்பில்  கை வைத்து விட்டான்.

திரும்பி “என்ன?” என்று முறைத்தவளிடம் “பணம் வேணா வாங்கிக்க” என்றான் அபத்தமாக.

“ஸாரி.”

“என்னடா  சாரி?களையெடுக்கிறவ ,கக்கூஸ் கழுவுறவன் னா தொக்காப் போச்சா ஒனக்கு? நோட்டைக் காட்டுனா நீட்டிப்  படுத்துடுவான்னு நெனப்பா ? பீயள்ளிப் பொழச்சாலும் பொழைப்பம் ,இப்புடியில்ல .ஊருக்குள்ள சொன்னேன்,  உன் னய வகுந்துடுவாங்க. சூதானமா இருந்துக்க.”

இப்போதும் ஒவ்வாமல் சுருங்கிக் கிடக்கும் இதே கண்கள் தான் அப்போது குருதியேறி உக்கிரம் கொண்டன. சட்டென்று பின்னகர்ந்தான். மீண்டும் மன்னிப்புக் கேட்டான். அவள் சொல்மாரி அடங்கவில்லை.

“அயி சத கண்ட விகண்டித ருண்ட  கண்ட கஜாதிபதே,ரிபுகஜ கண்ட விதாரண சண்ட

பராக்ரம சுண்ட ம்ருகாதி பதே.”  அவன் கை குவித்து வணங்கினான். அந்தப் பெண்மையின் திண்மை. அந்த மனதை உருவிக் குலைத்தது இந்தக் கிருமியா._

உலுக்கிப் போட அவளை விலக்கினான்.

“இன்னாய்யா “அவளுக்குப் புரியவில்லை.

“ஒண்ணுமில்ல. நேரமாச்சு நீ கிளம்பு. ”

அவன் தந்த ரோஜா நிற 2000ரூபாய் நோட்டைக் கண்ணிலொற்றி வாங்கிக் கொண்டாள்.

“கொள்ளக் காசு.”

“நாளை முதல் நீ வேலைக்குத் தினமும் வரலாம்.”

“சரிங்க சாமி” கண்ணிமை நுனியில் ஒரு வைரத் துளி.

சென்றாயனின் நம்பரை அழுத்தினான்.  வந்து கொண்டிருப்பவளை வீட்டில் இறக்கி விடச் சொன்னான். அவள் விரைந்து வெளியேறி இருந்தாள். குளியலறைக் குழாயில் நீர் சீறியது.

“உன் பெயரென்ன” கேட்கலாமென்று வாசலுக்கு வந்தான். அவள் அதற்குள் இறுக்கி முடிந்த கூந்தலும், ஒளிரும் நெருப்பு நிறச் சுங்குடிச் சேலையுமாக  சேறும் சகதியுமான பாதையைத் தாண்டி தார் ரோட்டில் பேருந்து நிறுத்தத்தை அடைந்திருந்தாள்

வயர்க் கொடியில் ஜன னியின் புடவை அலசிக் காயப் போடபட்டிருந்தது. க்ரீம்  நிறம் நுரைக்கும் நதியில் மிதக்கும் செந்நிறப் பூக்கள். காற்றில் அதன் படபடப்பு தன் மனதின் தாளம் போல.


– மிதுனா

1 COMMENT

  1. மிதுனா வின் ‘நுரைப் பூக்கள்’ சிறுகதை சில்லென்று காற்றோடு பெய்த மழையில் நனைந்த மாதிரி இருந்தது.நெகிழ்வான கதை.
    -தஞ்சிகுமார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.