தலைப்புச்செய்தி

இரவு உணவுக்குப் பின்னர் சோபாவில் உட்கார்ந்து அரைத் தூக்கத்தில் கரகம் ஆடிக் கொண்டிருந்தான் சுதாகரன். எதிர்ச்சுவரில் மாட்டியிருந்த தொலைக்காட்சியில் நின்றபடி தலைப்புச் செய்திகளை வாசித்துக் கொண்டிருந்தாள் ஜீன்சும் டீசர்ட்டும் அணிந்த இளம் பெண். திரையில் மாறி மாறி ஒளிரும் வண்ணங்கள் சுதாகரனின் முகத்திலும், பின்புறச் சுவரிலும் நடனமாடிக் கொண்டிருந்தன. சுவாரசியமற்ற ஒரு பேச்சாளரைப்போல அந்த ஒளி நடனம் அவனை மேலும் மேலும் தூக்கத்திலாழ்த்திக் கொண்டிருந்தது.

       திரையில் திடீரென அந்த வாசிப்பாளினியின் பிம்பம் மறைய… ”ஜிஜிஜிஜிஜிஜைங்….. ஜிஜிஜிஜிஜிஜிஜைங்….“ என்று சற்றுத் தூக்கலான அந்தப் பின்னணி இசை ஒலிக்கத் தொடங்கியது. ”பிரேக்கிங் நியுஸ்” என்று தொலைக்காட்சியின் திரை மின்னிமின்னி பளிச்சிட…. கண்களை இடுக்கியபடி உற்றுப் பார்த்தான் வசீகரன்.

        “தலை முடிக்கு டை அடிக்கத் தடை…. அவசரச் சட்டம்… நள்ளிரவு முதல் நாடு முழுவதும் நடைமுறை” என்ற எழுத்துக்கள் தொலைக்காட்சித் திரை முழுவதும் திரும்பத் திரும்ப மின்னின. இப்படியான பிரேக்கிங் நியுஸ்களுக்காகவே மெட்டமைக்கப்பட்ட அந்த ”ஜிஜிஜிஜிஜிஜைங்….. ஜிஜிஜிஜிஜிஜிஜைங்….“ என்றப் பினனணி இசை தொடர்ந்து அலறியது. தலையை உதறிக்கொண்டும், கண்களை அகலத் திறந்தும், சுருக்கிக் கொண்டும் உற்று உற்றுப் பார்த்தான் சுதாகரன்.

       சமையல் அறையில் இருந்த ரேவதி, அந்த இசையைக் கேட்டதும், மணல் மணலாய் வெந்நிறப் பூக்கள் மலர்ந்திருந்த நீலநிற நைட்டியில் தனது ஈரக் கைகளைத் துடைத்தவாறு ஆர்வக் குறுகுறுப்போடு தலையை நீட்டி எட்டிப் பார்த்தாள். “பிரேக்கிங் நியுஸ்”  “பிளாஷ் நியுஸ்” ”பர்ஸ்ட் நியுஸ்” என தொலைக்காட்சிகள் அடிக்கடி ஏதாவது ஒளிபரப்புவதால் இப்படியான இசையைக் கேட்டாலே கண்கள் தானாக தொலைக்காட்சிப் பக்கம் திரும்பி விடுகின்றன.

       அப்படியாக புருவங்களைச் சுருக்கிக் கொண்டு அந்தச் செய்தியைப் பார்த்த ரேவதி, குழப்பத்தோடு திரும்பி சுதாகரனைப் பார்தாள். அவனும் அதே குழப்பத்தோடு தான் திரையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

       “இன்னாங்க இது….? இப்டிலாமா நாட்ல சட்டம் போடுவாங்க….?” எனறாள் ஆச்சரியத்தோடு சுதாகரனின் பக்கத்தில் வந்து அமர்ந்தபடி.

      தூக்கம் முற்றிலும் கலைந்துவிட… ரிமோட்டை எடுத்து வேறொரு செய்திச் சேனலை மாற்றினான் சுதாகரன். அதிலும் அவர்களுக்கான பின்னணி இசையோடு இதே ”பிரேக்கிங் நியுஸ்” வேறுவேறு வண்ணங்களில் மின்னிக் கொண்டிருந்தது. இன்னொரு சேனலை மாற்றினான். அதிலும் இதே செய்திதான். இறுதியாக ஆளுங்கட்சி ஆதரவுச் சேனலை மாற்றினான். அதிலும் இதே செய்திதான் கூடுதலான ஒலி ஒளியோடு.

       ”ஒரே கேலிக்கூத்தா இருக்குது…. மயிருக்கு டை அடிக்கக் கூடாதுனு கூடவா சட்டம் போடுவானுங்க…? எவ எதுக்கு எதப் பூசனா இவனுங்களுக்கு இன்னா….?” என்றான் சுதாகரன் எரிச்சலாக. அவன் முகம் அருவருப்பில் சுருங்கியது. வார்த்தைகளில் இருந்த எரிச்சல் அவன் கண்களிலும் பரவியது.

       திடீரென இப்படி ஒரு அவசரச் சட்டம் வரும் என்று நாட்டில் யாருமே எதிர்பார்க்கவில்லை. சுதாகரனும் எதிர்பார்க்கவில்லை. நாட்டில் யாருமே எதிர்பார்க்கவில்லை என்று கூறிவிட்டு, மீண்டும் சுதாகரனை மட்டும் தனியாக குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன என்று நீங்கள் நினைக்கலாம். அதற்கான அவசியத்தை போகப்போக நீங்களே புரிந்து கொள்வீர்கள்.

       இப்படி ஒரு அவசரச் சட்டத்தை அரசாங்கம் கொண்டு வந்ததே நம்ப முடியாத ஒரு சம்பவத்தின் பினனணியில் தான் என்பதை முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அந்தப் பின்னணியில் உள்ள மிக முக்கியமான சில அரசு ரகசியங்களைத் தவிர்த்துவிட்டு, சாதாரண குடிமகன்கள் என்னவெல்லாம் தெரிந்து கொள்ள உரிமை இருக்கிறதோ அதைவிட சற்றுக் கூடுதலான சில விவரங்களை முதலில் உங்களுக்குச் சொல்லிவிடுகிறேன்.

       தற்போது நாட்டை அரசாட்சி செய்கிற த.க.மு.க. கட்சியின் மூத்தத் தலைவரான அவர் மிகச்சிறந்த பேச்சாளி என்பது உங்களுக்கும் தெரியும். அடுக்கு மொழியில், நையாண்டி, நக்கல், எகத்தாளம் கலந்து பேசுவதில் அவர் வல்லவர்.

       எழுதி வைத்தோ, அட்மின் வைத்தோ பேசுகிற, எழுதுகிற தலைவர்களுக்கு இடையில்… சீறிப்பாய்கிற குற்றால அருவியைப் போல சுயமாக முழங்குகிற தெய்வப்பிறவி அவர். தலை நகரத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்ட மேடையில் ”யாரைக் கேட்கிறாய்….? ஏன் கேட்கிறாய்….? எதற்குக் கேட்கிறாய்…?” என்று படிப்படியாகக் குரலை உயர்த்தி, முஷ்டியை மடக்கி கர்ஜிக்க… ஒலிபெருக்கியின் உதறல் உச்சத்துக்குப் போனது. அதே நொடியில்தான் அந்த பயங்கரமும் நடந்தது. ஒரு வேரற்ற மரம் திடுமென கீழே சரிவதைப் போல… தடாலென மயங்கிக் கீழே சரிந்தார் அவர்.

      வாய் பிளந்து அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த தொண்டர்களுக்கு அங்கே என்ன நடந்தது என உரைக்கவே சில விநாடிகள் ஆனது. அடுத்த சில நொடிகளில் கூச்சலும் குழப்பமும் அலறல்களுமாய் அந்த இடமே அமளி துமளி ஆனது.

      மேடையிலிருந்த மற்ற தலைவர்கள் உடனே சுதாரித்துக் கொண்டு கீழே சரிந்து கிடந்த தலைவரைத் தூக்கி நிமிர்த்தினர். நைந்துபோன பழைய நைலான் துணியைப்போல தலைவரின் உடல் மீண்டும் கீழே சரிந்தது. தண்ணீர் பாட்டிலைத் திறந்து ஒரு கைப்பிடி தண்ணீரைப் பிடித்து தலைவரின் முகத்தில் பயபக்தியோடு தெளித்தார் ஒரு அமைச்சர். தலைவரிடம் எந்தச் சலனமும் இல்லை. இன்னொரு கை தண்ணீர் பிடித்து “சுரீர்” என ஓங்கித் தலைவரின் முகத்தில் அடித்தார். ம்கூம்.

       எதிரிலிருந்த தொண்டர்கள் கூட்டம் திமிறிக் கொண்டு மேடையேறத் துடித்தது. காவலர்கள் கூட்டத்தை விலக்கத் தடிகளைச் சுழற்றினர். கூட்டம் அடங்கவில்லை. தலைக்கு மேலே சுழன்ற தடிகள் கீழே இறங்கின. பளீர் பளீர் என முதுகுகளிலும், தொடைகளிலும் தலைகளிலும் தடிகள் இறங்க இறங்க… கூட்டம் சிதறி ஓடியது.

       வானத்தை நோக்கிப் பறந்த பெரும் புழுதிப் படலம் மக்கள் கூட்டத்தை மூடி மறைத்து மங்கலாக்கியது. சுற்றிலும் பிரகாசித்துக் கொண்டிருந்த மின் விளக்குகளின் வெளிச்சங்கள் அந்தப் புழுதிப் படலத்திற்குள் பதுங்கிக் கொள்ள… எங்கும் இருட்டு… கூச்சல்… குழப்பம். பல பெண்களும் குழந்தைகளும் மூச்சடைத்து மயங்கி விழுந்தனர். விழுந்தவர்களை சிலர் தூக்கி விட்டனர். சிலர் ஏறி மிதித்துக் கொண்டு ஓடினர்.

       ”உயும்…. உயும்…. உயும்….. உயும்….” என்று அலறிக்கொண்டு வந்து நின்ற ஆம்புலன்சில் தலைவரின் அசைவற்ற உடல் ஏற்றப்பட்டு, மீண்டும் “உயும்..…. உயும்… உயும்… உயும்…” என்று அடித்தொண்டையில் கதறியபடி தொண்டர்களைப் பிளந்து கொண்டு அது ஓட… பின்னாலேயே பிற தலைவர்கள், அமைச்சர்களின் வாகனங்களும் ஓடின.

       மருத்துவர்களின் வேக வேகமான முதலுதவி சிகிச்சைக்குப் பின்னும் தலைவரின் இரத்த அழுத்தம் தாறுமாறாக ஏறிக்கொண்டே இருந்தது. ஈ.சி.ஜி., எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. என விடிய விடிய பரிசோதனைகளும் தீவிர சிகிச்சைகளும் நடந்துகொண்டிருந்தும்… தலைவர் கண் விழிக்காமல் மயக்க நிலையிலேயே கிடந்தார். இது மருத்துவர்களையும், அமைச்சர்களையும் மேலும் மேலும் கவலையில் ஆழ்த்தியது. இதனிடையில் நாட்டில் குழப்பத்தை விளைவிக்க எதிர்க்கட்சிகள் சதி செய்யலாம் என்பதால் தலைவர் கண் விழித்து விட்டதாக பொய்யாக ஒரு அவசர அறிக்கையை வெளியிட்டது அரசு.

         தலைவருக்கு எதனால் மயக்கம் ஏற்பட்டது, ஏன் கோமா நிலைக்குப் போய்விட்டார் என்று தெரியாமல் மருத்துவர்கள் மண்டையைப் பிய்த்துக்கொண்டனர்.

         அப்படி மண்டையைப் பிய்த்துக்கொண்ட ஒரு மருத்துவரின் மூளைக்குள் திடீரென ஆயிரம் வாட்ஸ் விளக்கெரிய… தலைவரின் மூளையை பல கோணங்களில் எடுத்திருந்த படங்களை எடுத்து உற்று உற்றுப் பார்த்தார். மீண்டும் தலைவரின் மூளை ஸ்கேன் மூலம் அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்யப்பட்டது.

         மூளையின் மேற்புறம் கனமான படலமாக ஏதோ படர்ந்திருப்பதும், மூளையின் நிறமும் மாறியிருப்பதும் அப்போது தான் மருத்துவர்களின் கண்களில் பட்டது.

         அமைச்சர்களுடன் மருத்துவர்கள் அவசர ஆலோசனை நடத்தினர். தலைவருக்கு உடனே மூளை அறுவை செய்ய முடிவானது. புகழ்பெற்ற உள் நாட்டு மருத்துவர்களுடன் ஒரு வெளிநாட்டு சிறப்பு மருத்துவரும் வரவழைக்கப்பட்டார். அந்தக் குழு பல மணி நேர சிக்கலான ஆபரேஷனுக்குப் பிறகு  தலைவரின் மண்டை ஓட்டைத் திறந்தது. மண்டை ஓட்டுக்குள்ளிருந்த தலைவரின் மூளையைப் பார்த்ததும் ஒட்டுமொத்தமாக எல்லா மருத்துவர்களுமே அதிர்ச்சியடைந்தனர்.

       மங்கலான வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டிய மூளை… முழுவதுமே கருப்பு நிறத்தில் இருந்தது. சில நிமிடங்கள் அந்த மூளையை பிரமிப்புடன் பார்த்துக்கொண்டு நின்றனர் மருத்துவர்கள்.

       அந்த வெளிநாட்டு மருத்துவர்தான் துணிந்து கிளவுஸ் மாட்டிய தன் இடது கை ஆட்காட்டி விரலால் மூளையின் மேல் பகுதியை லேசாகத் தொட்டார். தொட்ட விரலை திருப்பிப் பார்த்தார். விரலில் கொழ கொழவென கருப்பு மை போல எதுவோ ஒட்டிக்கொண்டிருக்க… அதை கண்களுக்கருகில் வைத்து உற்றுப் பார்த்தார்.

        உடனே சுதாரித்துக்கொண்ட மற்றொரு மருத்துவர், நவீன கருவியின் மூலம் பக்குவமாக வெட்டி பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த தலைவரின் மண்டை ஓட்டை எடுத்து அதன் உட்புறம் பார்த்தார்.  அங்கும் அதே போல கொழ கொழவென கருப்பு மை திரவம். எல்லா மருத்துவர்களும் ஒரே நேரத்தில் தலையை ஆட்டிக்கொண்டு பார்வையாலேயே பேசிக்கொண்டர்.

       தலைவர் முடிக்கு டை அடிப்பது நாட்டுக்கே தெரியும். அதனால் தான் இவ்வளவு வயதிலும் அவர் தலைமுடி கருகருவென மின்னும். நரைத்த தாடியுடனோ தலையுடனோ அவரை யாருமே பார்த்ததில்லை.

       அவர் இது நாள் வரை தலை முடிக்குப் பூசி வந்த கருப்புச்சாயம் மண்டை ஓட்டுக்குள் ஊறி, மூளைக்கும் பரவியிருக்கிறது. அதனால்தான் இந்த மயக்கம், கோமா நிலை என புரிந்து கொண்ட அந்த மருத்துவ மூளைகள் அடுத்தடுத்த நிமிடங்களில் பரபரப்பாக இயங்கின.

       முதலில் மூளையின் மேற்புறம் படர்ந்திருந்த கருப்பு மையை வெண் பஞ்சில் பூப்போல ஒற்றி ஒற்றி எடுத்தனர். மண்டை ஓட்டினடியில் இருந்த மையையும் துடைத்தெடுத்தனர். கொழகொழவென  இருந்த மையைத் துடைத்துத் துடைத்து அவர்கள் வீசிய கரும்பஞ்சுகள் ஒரு குவியல்போல கூடையில் குவிந்தன. மீண்டும் பல மணி நேர கடினனமான ஆபரேஷனுக்குப் பின் மண்டை ஓட்டை மீண்டும் தலையில் பொருத்தினர்.

        எல்லாம் முடிந்து ஆபரேசன் தியேட்டரிலிருந்து பெருமூச்சுகளோடு வெளியே வந்த மருத்துவர்களுக்கு அது பிரமிப்பான அனுபவமாக இருந்தது. கண்களை உருட்டி, வாயைக் குவித்து “உப் உப்“ என ஊதி தன் வியப்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார் வெளிநாட்டு மருத்துவர்.

        தலைவருக்கு நடந்த இந்த அறுவை சிகிச்சை குறித்து இரண்டு முக்கிய அமைச்சர்களிடம் மட்டும் ரகசியமாகப் பேசிய தலைமை மருத்துவர், தலைவரின் கருப்பு மூளை படங்களையும் அவர்களிடம் காட்டினார்.

       “எப்பா…. எல்லார்க்கும் வெள்ள மூளனா…. தலைவருக்கு மட்டும் கருப்பு மூளபா… அதாங் அவ்ளோ அறிவாளியா இருக்காரு….” என்று பரவசப்பட்டார் ஒரு அமைச்சர்.

      “ம்க்கும்…. டாக்டரு சொன்னத சரியா கவனிக்கலயா நீ…. முடிக்கி டை அட்ச்சி அட்ச்சிதாங் அப்டி கலர் மாறி இருக்குது…” என்றார் இன்னொரு அமைச்சர் திகிலோடு.

      பளிச்சிடும் உச்சி வழுக்கைக்குக் கீழே, படுக்க வைக்கப்பட்ட மாட்டு லாடம் போன்ற தன் கருகரு முடியை அடிக்கடி கவலையோடு தடவிக்கொண்டார் அவர். .

       அவரும் பல ஆண்டுகளாக டை அடிப்பவர். தலைவரைப் போல தானும் மயங்கி விழுந்து கோமாவுக்குப் போய்விடுவோமோ என்கிற பயத்தில் அவர் முகம் வியர்க்கத் தொடங்கியது.

        தலைவர் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் வீட்டுக்குத் திரும்புவார் என்றும் கவலை தோய்ந்த முகத்துடன் அவர் ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார். தலைவர் குணமடைந்து வீடு திரும்பியே ஆகவேண்டும் என அவர் மனசார விரும்பினார். அதற்காக தனக்குத் தெரிந்த கடவுள்களை எல்லாம் மனசுக்குள் வேண்டிக்கொண்டார்.

       மருத்துவர்களின் தொடர் சிகிச்சைக்குப் பிறகு மூன்றாவது நாளில்தான் கண் விழித்தார் தலைவர். ஆனாலும் பேச்சில்லை. அவர் கண் விழித்ததும் தனக்கே உயிர் வந்துவிட்டதைப் போல பேருவகை அடைந்தார் அந்த அமைச்சர்.

       இறக்குமதி செய்யப்பட்ட உயர் ரக முடிச்சாயத்தைப் பூசிய தலைவருக்கே இந்த நிலை என்றால்… சாதாரண டை பூசும் மக்களின் நிலை.…?

       ஒருவேளை பல பேர் இப்படி பாதிக்கப்பட்டு, பலியாகி இருந்தும் அது கண்டுபிடிக்கப்படாமலயே தொடர்கிறதோ…?

       மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்த நோயாளிகள், விபத்தில் உயிரிழந்து உடற்கூறாய்வுக்காக கொண்டுவரப்பட்ட உடல்கள் என சில பிணங்களின் மண்டை ஓடுகள் உடனடியாக திறந்து பார்க்கப்பட்டன. முடிச்சாயம் பூசுகிற எல்லோரின் மூளைகளுமே கருமையாக மாறியிருந்தன. மண்டை ஓடுகளின் அடிப்புறம் அதே கொழகொழ கருந்திரவம் மின்னிக்கொண்டிருந்தது.

        அதன் பிறகு மூத்த அமைச்சர்களுடன் மருத்துவர்கள் அவசர ஆலோசனை நடத்தினர். முடிச் சாயம் பூசுவதால் நேர்ந்துள்ள இந்த பிரச்சினையின் நீள, அகலங்கள் குறித்து மருத்துவர்கள்  கவலையோடு விளக்கினர்.

        இதே நிலை தொடர்ந்தால் மருத்துவர்கள் உள்பட அமைச்சர்கள், தலைவர்கள் எல்லாம் திடீர் திடீரென மயங்கி விழுந்து சாகலாம். அல்லது கோமா நிலைக்குப் போகலாம் என்று மருத்துவரகள் எச்சரிக்கை மணி அடித்தனர்.

        அவசர அவசரமாக அமைச்சரவை கூடி விவாதித்தது. எல்லா அமைச்சர்களுமே தங்களின் தலையை கவலையோடு தடவிக் கொண்டனர். அதன் பிறகு முடிச்சாயத்தை நினைக்கவே அவர்களுக்கு பயமாக இருந்தது.

       ஆனால் முடிச்சாயம் பூசாமல் இருந்து, திடீர் இட்லி, திடீர் சட்னி போல அவர்கள் திடீர் கிழவர்களாக மாறிவிட்டால் அதைப் பார்த்து நாடே சிரிக்காதா…?

      அந்தப் புதிய கவலை குறித்தும் நீண்டநேரம் விவாதம் நடந்தது. அவர்களுக்கு வந்தது நாட்டுக்கே வந்துவிட்டால்….?

      அப்படித் தான் அந்த அவசரச் சட்டம் நாட்டில் நடைமுறைக்கு வந்தது.

      சட்டம் நடைமுறைக்கு வந்த மறுநாள் காலையிலேயே கடைகளில் புகுந்த அதிகாரிகள் விதவிதமான டை பாக்கட்டுகளையும், டப்பாக்களையும், கிரீம்களையும் மூட்டை மூட்டையாகக் கைப்பற்றி பெரும் பெரும் பள்ளங்கள் தோண்டி மண்ணில் புதைத்தனர். இதனால் வியாபாரிகளும், பொதுமக்களும் செய்வதறியாது திகைத்தனர். சலூன் கடைக்காரர்கள் பிரம்மை பிடித்ததைப்போல நின்றனர்.

      வீடுகளில் உள்ள முடிச்சாயங்களை பொது மக்களே அழித்துவிட வேண்டும் என்று அமைச்சர்கள் வேண்டுகோள் விடுத்தனர். சில நடிகர்களும் நல்லெண்ண தூதுவர்களாக சின்னத்திரையில் தோன்றி உருக்கமாக வேண்டுகோள் வைத்தனர். சட்டத்தை மீறி யாராவது டை அடித்தாலோ, டை வைத்திருந்தாலோ அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் பாயும் எனறு வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள்களில் அடிக்கடி அறிவிப்புகளை வெளியிட்டது அரசு.

       டை அடிக்கும் பழக்கம் இல்லாத சுதாகரன் இதையெல்லாம் ஆர்வ குறுகுறுப்புடன்தான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

       சட்டம் நடைமுறைக்கு வந்து பத்திருபது நாள்களிலேயே… புதிதாக வளர்கிற அடிமுடி வெள்ளையாகவும், டை அடித்த மேல் முடி கருப்பாகவும் இரட்டை நிற முடிகளோடு எதிர்ப்படும் தலைகளைப் பார்க்கவே சகிக்கவில்லை சுதாகரனுக்கு.

       உடனடியாக சுதாரித்துக்கொண்ட சில அறிவாளிகள் தலையையும், மீசை, தாடியையும் மழுங்க மழுங்கச் சிரைத்துவிட்டு புத்த பிக்குகளைப்போல கொழுக் மொழுக் என வலம் வந்தனர். பல அரசியல் தலைவைர்கள் சப்பிப்போட்ட பனம்பழம் போல வெளுத்த தங்களின் தலையைத் தொண்டர்களுக்குக் காட்டப் பிடிக்காமல் சுற்றுப் பயணங்களை ரத்து செய்து விட்டு சொகுசு விடுதிகளில் தஞ்சம் புகுந்தனர்.

        நடிகர்களின் பாடுதான் பாவம். அறுபதைக் கடந்த பிறகும் கதாநாயகர்களாக மின்னிக் கொண்டிருந்த பலர் சாயம் வெளுத்த தலைகளை வெளியில் காட்ட முடியாததால் இரவோடு இரவாக வெளிநாடுகளுக்குப் பறந்துவிட்டனர். சிலர் “முற்றிலும் மாறுபட்ட வேடத்தில்” என மொட்டைத் தலையோடு நடிக்க வந்தனர்.

        ஒரு சிலர் மொட்டையடித்து நடித்தால் ரசிகர்கள் கொண்டாடுவார்கள். தயாரிப்பாளர்களும் குதூகலிப்பார்கள். ஒட்டுமொத்த நடிகர்களும் மொட்டையடித்துக்கொண்டு வரிசையில் நின்றால்…? தயாரிப்பாளர்கள் தங்களின் தும்பைப் பூ தலைகளின் மீது முக்காடுகளைப் போட்டுக்கொண்டு ஓடி ஒளிந்தனர்.

       ஒரு மாதம் முடிவதற்குள்ளாகவே முழுவதுமாய் நரைத்த தலையர்களும், முக்கால்வாசி நரைத்த தலையர்களும், அங்கொன்றும் இங்கொன்றுமாய் நரைத்த தலையர்களுமாய் நாடே முதியவர்களின் நாடாக மாறிவிட்டது. இது இளைஞர்களின் தேசம் என்று மார்தட்டிக் கொண்டிருந்த அரசியல்வாதிகள் பேச வார்த்தைகளற்று தவித்தனர்.

       வயது முதிர்ந்த பழம்பெரும் நடிகைகளைக் கூட கருகரு கூந்தலோடு பார்த்தே பழகிவிட்ட நம் ரசிகர்கள், எந்த நடிகையையாவது நரைத்த தலையோடு பார்த்துவிட்டால் அதிர்ச்சியில் அகால மரணமடைந்து விடலாம் என்பதால், அப்படியான நடிகைகள் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவோ, ஊடகங்களில் தோன்றவோ கூடாது எனத் தடை உத்தரவே போட்டுவிட்டது அரசு. அப்படியும் சில அகால மரணங்கள் நிகழ்ந்தே விட்டன.

       சந்தைகள், கடைத்தெருக்கள், பேருந்துகள், அரசு மற்றும் தனியார் தொழிற்சாலைகள் என எங்கும் எங்கும் வெள்ளை வெளேர் முடிகளையும், திடீர் கிழடுகளையும் பார்த்துப் பார்த்து விரக்தியின் உச்சிக்கே போய்விட்டனர் மக்கள். வாழ்க்கையின் அனைத்து சுவாரஸ்யங்களையும் யாரோ மூட்டைக் கட்டி கொண்டுபோய் இந்து மகா சமுத்திரத்தில் வீசிவிட்டதைப் பொல ஒட்டு மொத்த மக்களும் சலிப்புற்றனர்.

       நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்க… மயிருக்கு சாயம் பூசக்கூடாது என சட்டம் கொண்டுவந்து தனி மனித சுதந்திரத்தில் அரசு தலையிடுகிறது என்றனர் மனித உரிமை ஆர்வலர்கள். சட்டம் போட்டதே ஏதோ ஒரு பெரிய பிரச்சனையிலிருந்து மக்களை திசை திருப்பத்தான் என சில “அறிவு ஜீவிகள்” விவாத மேடைகளில் ஆவேசமாய் விவாதித்தனர். சில சமூக அமைப்புகளும் போர்க்கொடி தூக்கத்தொடங்கின.

       அந்த அலுவலகத்தில் அவனைத்தவிர மற்ற எல்லோருமே கிழவர்களாகவும் கிழவிகளாகவும் மாறிவிட்டதைப் பார்க்கப் பாரக்க சலிப்பாக இருந்தது சுதாகரனுக்கும். அத்தனை வெள்ளை முடிகளுக்கு மத்தியில் அவன் மட்டும் கருகருவென்ற தலைமுடியோடு அலுவலகம் போவது அங்கே எல்லோருக்குமே எரிச்சலாகவும், சந்தேகமாகவும் இருந்தது. ஐம்பது வயதை நெருங்கும் நிலையில் அவன் மட்டும் ஒரு நரை முடிகூட இல்லாமல் உலவினால் யாருக்குதான் பொறுக்கும்…?

       “ஏங்க… யாராயிருந்தாலும் சட்டத்த மதிக்கணும்….. நாடே டை கெடைக்காம தவிக்கும்போது நீங்க மட்டும் எப்டி தைரியமா டை அடிச்சிகிட்டு வர்றீங்க….?” என்று பொறாமையோடு சுதாகரனிடம் கேட்டார் அலுவலக மேலாளர் குணசேகரன்.

       “சார்…எனுக்கு டை அடிக்கிற பழக்கமே இல்ல.…” என்றான் சுதாகரன் பெருமையாக.

       “யார்கிட்ட கத உட்றீங்க… உங்க சர்வீஸ் ரெஜிஸ்டர் புக்க எட்த்து செக் பண்ணிட்டம்…. இப்ப உங்களுக்கு நாப்பத்தி ஒம்போதர வயசு… இந்த வயசுல ஒரிஜினல் கருப்பு முடியா…? அத நாங்க நம்பணுமா…?” என்றார் மேலாளர் நக்கலாக.

      “சார் இது ஒரிஜினல்தாங் சார்…” என்றான் தன் முன் தலை முடியை விரல்களால் இழுத்துக் காட்டியவாறு.

       மேலாளர் மட்டுமல்ல… அந்த அலுவலகத்தில் இருக்கும் யாருமே அதை நம்பவில்லை என்பதை அவர்களின் பார்வைகளே சொன்னது. அதைப்பற்றி சுதாகரன் கவலைப்படவில்லை.

       ஆனால் அரசாங்கம் கவலைப்பட்டது.

       கல்லூரி மாணவர்களே உப்பும் மிளகுமாய் நரைத்த தலைகளோடு கவலையில் கிடக்க…. சுதாகரன் மட்டும் கருகரு முடியோடு சுற்றிக் கொண்டிருப்பது எப்படியோ உளவுத்துறைக்கு தெரிந்துவிட்டது. எப்படியோ என்ன…? சுதாகரனின் சக ஊழியர்களே மொட்டைக்கடிதம் எழுதிப் போட்டுவிட்டனர்.

       அவ்வளவுதான்.

       “லவுடிக்கபால்… அவ்ளோ திமிரா…. யார்ரா அவங்….?” என்று எகிறினார் அந்தக் காவல் ஆய்வாளர்.

       சொட்டு நீலம் போட்டு வெளுத்த வெள்ளைத் துணி போன்ற தன் தலையை தொப்பிக்குள் மறைத்துக் கொண்டாலும் மன வருத்ததை மறைத்துக் கொள்ள முடியாத அவர், சக காவலர்களுடன் அன்று பின்னிரவில் சுதாகரனின் வீட்டுக் கதவைத் தடதடவென தட்டினார்.

        கொட்டாவி விட்டபடி கதவைத் திறந்த சுதாகரினின் கருகருவென்ற தலைமுடி மின் விளக்கின் வெளிச்சத்தில் மேலும் மினுமினுத்தது. அதைப் பார்த்ததுமே ஆய்வாளரின் ஆத்திரம் மேலும் பல மடங்கு பெருகியது.

        “எவ்ளோ தைர்யம் இர்ந்தா சட்டத்த மதிக்காம டை அடிப்ப…. அவ்ளோ பெரிய ஆளா நீ…?” என்று அவனைப் பார்த்து பல்லைக் கடித்தார்.

       “சார் எனுக்கு டை அடிக்கற பழக்கமே இல்ல…” என்றான் சுதாகரன். அவன் கண்களைச் சுழற்றிக் கொண்டிருந்த தூக்கம் திடீரென எங்கோ ஓடி ஒளிந்துகொண்டது.

       ஆத்திரத்தோடு வீட்டைச் சல்லடை போட்டுத் தேடினர் போலீசார். ம்ஹீம். ஒரு பாக்கட் கூட கிடைக்கவில்லை. நடப்பது எதுவுமே புரியாமல் பெரும் திகிலோடு பார்த்துக் கொண்டிருந்தாள் ரேவதி.

      “ஊட்ல டை அடிக்கறதில்லியா நீ…..? கடையில போயி அடிக்கிறியா…? எந்தக் கட…?” என்றார் ஆய்வாளர் கடுப்போடு.

       “சார் நானு டையே அடிக்கறதில்ல சார்…” என்றான் மீண்டும் எரிச்சலாக.

       அதைக் கேட்டதும்… நைட்ரஜன் கேஸ் பிடிக்கப்பட்ட லாரி டியூப் புஸ்ஸென உப்புவதைப்போல  சுர்ரென ஏறிய கோபத்தில் ஆய்வாளரின் கன்னம் திடுமென உப்பி துடித்தது.

       “நீ இப்டிலாம் கேட்டா உண்மயச் சொல்வியா…? லாடம் கட்னாதாங் உண்ம வெளி வரும்…. வந்து வண்டில ஏறு…” என்று அதட்டினார் அவர்.

        இரும்பு கேட்டைப் பிடித்துக்கொண்டு வெளியில் வர மறுத்த அவனை வலுக்கட்டாயமாக இழுத்து வந்து ஜீப்பில் ஏற்றினர். ஒருமுறை குரூரமாக உருமி விட்டு சாலையில் திரும்பிப் பறந்தது ஜீப். நரியின் கண்களைப்போல ஒளிரும் பின்புற சிவப்பு விளக்குகளோடு ஓடுகிற அந்த ஜீப்பையே மனம் பதைக்கப் பதைக்க பார்த்துக் கொண்டு நின்ற ரேவதிக்கு நடப்பதெல்லாம் உரைக்கவே பல நிமிடங்கள் ஆனது.

       மறுநாள் எல்லா ஊடகங்களிலும் செய்தி வந்துவிட்டது. அவரச் சட்டத்தை மீறிய நபர் நள்ளிரவில் கைது… நூதன முறையில் டை அடித்தவர் கைது… கருப்பு முடி மைனர் அதிரடி கைது… என விதவிதமான தலைப்புச் செய்திகள் வால்போஸ்டர்களில் தொங்கின. அதில் கருகரு முடியுடன் சிரிக்கும் சுதாகரனின் படத்தைப் பார்த்த பலருக்கு பொறாமையில் காதுகளில் புகை வந்தது.

        கைது செய்யப்பட்ட சுதாகரனிடம் இரவு பகலாக விசாரணை நடந்தது. முதலில் சாதா போலீஸ் விசாரணை, பிறகு ஸ்பெஷல் சாதா போலீஸ் விசாரணை. கடைசியில் கொரில்லா விசாரணை. எல்லாவற்றிலும் விசாரித்தவர்கள் தான் நாய் கிழித்த துணிக்கந்தலைப் போல துவண்டு போயினர். கைது செய்த கணத்திலிருந்து மூன்றாவது நாள் விசாரணை வரை “டை அடிக்கற பழக்கமே இல்ல“ என்கிற பல்லவியைத்தான் சாதாரணமாகவும், வலியோடும், அழுகையோடும், கதறலோடும் பாடினான் சுதாகரன்.

         இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த இந்த இடைப்பட்ட காலத்தில் ரகசியமாக டை அடித்து  பிடிபட்ட பல பேர் போலீஸ் அடிக்கு பயந்து உண்மையை ஒத்துக்கொண்டு, நீதிமன்றத்தில் அபராதம் கட்டியிருக்கிறார்கள். ஆனால் இவன் அப்படி ஒத்துக் கொள்ளாததும், எவ்வளவு அடித்தாலும் சொன்னதையே சொல்வதும் போலீசாருக்கே சவாலாக இருந்தது.

        “சார் உங்களுக்கு அப்டியும் சந்தேகமா இருந்தா எம்முடிய டெஸ்ட் பண்ணிப்பாருங்க சார்…” என்றான் கிழிந்த உதட்டை கோணிக்கொண்டே சுதாகரன். அதைக் கேட்டதும் போலீசார் முகத்திலும் திடீரென வெளிச்சம் படர்ந்தது.

         உடனடியாக அவன் தலையிலிருந்து ஒரு கொத்து முடியைக் கத்தரித்து ஒரு கனமான கவரில் போட்டு சீல்வைத்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். ஆய்வு முடிவு வரும் வரை அவனை வீட்டுக்கு அனுப்ப முடியாது என்பதால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பதினைந்து நாள்கள் சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

       மூன்றாவது நாள் வந்த சோதனை முடிவைப் பார்த்ததும் போலீசாருக்கே மண்டை குழம்பியது. அந்த முடியில் முடிச்சாயம் ஏதும் இல்லை என்றது சோதனை முடிவு. அவர்களால் அதை நம்பவே முடியவில்லை. சிறைக்கே போய் மீண்டும் ஒரு கொத்து முடியை கத்தரித்து வடக்கில் உள்ள தேசிய ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர். நான்காவது நாள் மின்னஞ்சலில் வந்த அந்த முடிவும் அதையேதான் சொன்னது.

       “சார் இவங் யமகாதகனா இருப்பாங் சார்… சோதனைல கூட கண்டுபுடிக்க முடியாதமாரி ஹைகிளாஸ் டைய யுஸ் பண்ணுவாம்போல இருக்கு சார்… வெளிநாட்டு டையா இருக்கும்…. போலீஸ் கஸ்டடில வெச்சி வேற மாறி விசாரிக்லாம் சார்…. உயிரா… மயிரானு அவனுக்கு பயம் வர்ணும் சார்… அப்பதாங் உண்மய கக்குவாங்…” என்று டி.எஸ்.பியின் காதைக் கடித்தார் ஒரு ஆய்வாளர்.

        மறுநாளே நீதிமன்ற உத்தரவு பெற்று சுதாகரனை போலீஸ் விசாரணைக்கு எடுத்தனர். ஏற்கனவே நான்கு நாள் நடந்த சித்ரவதைகளும், சில நாள்கள் சிறை வாசமுமே அவன் உடலைப் பாதியாக்கியிருந்தது. மீண்டும் தீவிர விசாரணைகள் தொடங்கின. விசாரணகள் என்ன…? ஆத்திரம் தீரும் வரை ஆளாளுக்கு அவனைச் சாத்தியெடுத்தனர். ம்கூம்… அப்போதும் சொன்னதையேதான் சொல்லிக் கொண்டிருந்தான்.

        “எங்கிட்ட மட்டும் உண்மய சொல்லிட்றா… அது இன்னா டையி… எங்க கெடைக்கும்னு மட்டும் சொல்லிடு… உன்ன இன்னிக்கே விட்டுர்றங்…” என்றார் ஏகக்கத்துடன் டி.எஸ்.பி. தனது பாதி வழுக்கையில் மின்னும் சொற்ப வெள்ளை முடிகளையும் சோகத்துடன் கோதிக்கொண்டார்.

        “சார் நானு டையே அடிக்கறதில்ல சார்…” என்றான் அவரை பரிதாபத்துடன் பார்த்தபடி. அடுத்ததாக எங்கே அடி விழும் என்று தெரியாததால் பயத்துடன் முழு உடலையும் குறுக்கிக் கொண்டான். இரவெல்லாம் கடும்பனியில் நனைந்த நாய்க்குட்டியைப்போல அவன் உடல் நடுங்கியது.

      “டேய்… ஒன்னு காஸ்ட்லி டை அடிக்கணும்…. இல்லன்னா லேப்ல ரிசல்டயே மாத்தணும்… இதுல எதுனு நீயே சொல்லிடு…. நாடே இப்ப உன்னப்பத்திதாங் பேசிட்டு இருக்குது… மினிஸ்டர்ஸ் வரைக்கும் பிரஸ்ஸர்… அது என்னா டையினு மட்டும் சொல்லிட்ரா… அதக்கேட்டு கேட்டு பெரிய தலைங்கள்லாம் என்ன வாட்டி எடுக்கறாங்கடா…..” என்று அழாத குறையாக கெஞ்சினார் அடுத்து விசாரிக்க வந்த எஸ்.பி.. அவரும் எவ்வளவு தான் அடிக்க முடியும்…? ஆனால் அதிசயமாக அவ்வளவு அடிகளையும் தாங்கிக்கொண்டு சுதாகரன் உயிரோடு தான் இருந்தான்.

        தொலைக்காட்சிகளில் விவாத மேடைகள் தினமும் களைகட்டின. இவன் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்ட முடிச்சாயத்தை பயன்படுத்தி இருப்பான்…? ஆய்வு முடிவுகளை நம்பலாமா…? இது போன்ற குற்றங்களுக்கு உயர்ந்தபட்ச தண்டணை என்ன….? என பல துறை அறிஞர்கள் விவாதித்துத் தள்ளினர்.

       ஒரு பக்கம் சுதாகரனை பிணையில் எடுக்க ரேவதி நீதிமன்றத்தின் வாசலில் தவம் கிடந்தாள். பிணையில் விட்டால் விசாரணைக்கு குந்தகம் ஏற்படும் என்று கடுமையாக ஆட்சேபித்தது காவல் துறை.

       அடுத்தகட்ட விசாரணையின் போது காவல் துறையினரும், மருத்துவர்களும் வசீகரனை அங்குலம் அங்குலமாக உற்றுப்பார்த்தனர். அவர்கள் எல்லோருமே மண்டை காய்ந்து கிடந்த ஒரு பிற்பகலில்… திடீரென அந்த யோசனையைச் சொன்னார் ஒரு மருத்துவர்.

      “இவன இன்னும் ஒரு பத்து நாளு இங்க போலீஸ் காவல்லயே வச்சி ஃகேர்புல்லா வாட்ச் பண்ணலாம்… முடி வளர வளர அசல் நிறம் என்னன்னு தெரிஞ்சிரும்….” என்றார் தன் மூக்குக் கண்ணாடிக்கு மேலாக சுதாகரனின் தலைமுடியின் அடிப்புறத்தை உற்றுப் பார்த்தபடி.

      ”வெரிகுட் ஐடியா…. ” என்றார் எஸ்.பி.

      “சார்….அதவிட இன்னொரு ஐடியா… இவந்தலய மொட்ட அடிச்சிட்லாம்… புதுசா மொளைக்கற முடிய வெச்சி தெர்ஞ்சிக்கலாம்…” என்றார் கண்கள் மின்ன இன்னொரு மருத்துவர்.

       அதைக்கேட்டு எல்லோரின் கண்களும் ஒரே நேரத்தில் மின்னின.

       அடுத்த பத்தாவது நிமிடம் சுதாகரனின் தலை மொட்டையடிக்கப்பட்டது. முகம் மழிக்கப்பட்டது. ஒரு பெரிய அறைக்குள் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டு அதற்குள் விடப்பட்டான் அவன். அறையின் உள்ளே இரண்டு காவலர்ளும், வாசலில் இரண்டு காவலர்களும் சுழற்சி முறையில் காவலுக்கு நிறுத்தப்பட்டனர்.

       கூண்டுக்குள் அடைக்கப்பட்ட வெள்ளெலி போல அந்த அறையில் சோர்ந்துபோய் படுத்திருந்தான் வசீகரன். வேளா வேளைக்கு உணவு வந்தது. ஆனால் அவனால் எதையும் சாப்பிட முடியவில்லை. கண்களைத் திறந்தாலும், மூடினாலும் ரேவதியும் குழந்தைகளும் அழுது தவிக்கும் காட்சிகள்தான் வந்து வந்து அவனை ஏங்க வைத்தன. கந்தலாய் கிழிந்துபோன உடலின் ஒவ்வொரு துளியிலும் வலித்தது. கை கால்களை அசைக்கவே முடியவில்லை. இந்த நரகத்திலிருந்து தப்பிக்க இப்படியே செத்துப்போனால் கூட போதும் என நினைத்து ஊமையாய் அழுதான்.

        அவனுக்கு தலை மொட்டையடிக்கப்பட்டதும் தலைப்புச் செய்திகளாக வந்தது. மீண்டும் கருப்பு முடி முளைக்குமா…? வெள்ளை முடி முளைக்குமா…? முதலில் முடியே முளைக்குமா… முளைக்காதா…? என மீண்டும் விவாத மேடைகள் களை கட்டின.

       ஒரு வாரம் நகர்வது ஒரு யுகமாய் இருந்தது. அந்தத் தனியறையில் என்ன நடக்கிறது என தெரிந்துகொள்ள எல்லோருமே ஆர்வமும் குறுகுறுப்புமாய் காத்திருந்தனர்.

        ஏழாவது நாள் மாலையில் தொலைக்காட்சிகள் மீண்டும் பரபரப்பாய் மின்னத் தொடங்கின.

       “சுதாகரன் தலையில் மீண்டும் கருப்பு முடியே முளைத்தது…” என்ற பிரேக்கிங் நியுஸ் வீடுகள்தோறும் கசியத் தொடங்கியது.

       “இட்ஸ் மிராகிள்…. அம்பது வயசுல அசல் கருப்பு முடியா…?” என்று கண்களை விரித்தார் ஒரு வயது முதிர்ந்த சிறப்பு கேச மருத்துவர். அவர் சுதாகரனையே பிரமிப்பாகப் பார்த்தபடி அந்தத் தனி அறையில் நின்றிருந்தார்.

       சுதாகரனின் தலையெங்கும் கூர்கூராய் முளைத்திருந்த கருகரு தலை முடிகள் முள்முள்ளாய் குத்திட்டு நின்றன. முகத்தில் இருந்த தாடியிலும் மீசையிலும் கூட ஒரு நரை முடி இல்லை.

       “நாந்தாங் மொதல்லருந்தே சொல்லிகினு இருக்கறனே சார்….” என்று பலவீனமாக முனகினான் சுதாகரன்.

        ”அதான யாரலயும் நம்ப முடில…!” என்றார் எஸ்.பி.

        “சார்… எங்கம்மா சாவும்போது எண்பத்தி மூணு வயசு…. அவங்களுக்கே ஒரு முடி கூட நரைக்கல….” என்றான் பெருமையாகவும், சோகமாகவும் சுதாகரன்.

       அதைக் கேட்டதும் எல்லோரும் மேலும் ஆச்சரியமாக அவன் முகத்தைப் பார்த்தனர். அந்தக் கேச மருத்துவர் மட்டும் அதே பிரமிப்போடு மீண்டும் புருவத்தை உயர்த்தினர். சுதாகரனை விசித்திரமாக உற்று உற்றுப் பார்த்தார். எஸ்.பி.யின் காதில் அவர் என்னவோ சொன்னார்.  மேலும் கீழுமாய் தலையாட்டிக்கொண்டார் எஸ்.பி.

       “சார்…. நாந்தாங் டை அடிக்கலனு தெர்ஞ்சிருச்சே… இப்ப நானு வீட்டுக்குப் போவலாமா…?” என்று கேட்டான் சுதாகரன். அவன் கண்களில் ரேவதியின் கவலை தோய்ந்த முகம் மீண்டும் மீண்டும் நிழலாடியது.

      “உங்க பரம்பர மரபணுல ஏதோ அதிசயம் இருக்கு…. அதனாலதாங் முடி நரைக்கல… அது என்னான்னு ஆராய்ச்சி பண்ணா நாட்ல நெறைய்ய பேரோட பிரச்சன தீரும்….” என்றார் மருத்துவர் சுதாகரனை உற்றுப் பார்த்தபடி.

       அதைக் கேட்டு ஒன்றும் புரியாமல் அவர் முகத்தை அண்ணாந்து பார்த்தான் சுதாகரன்.

       “அதனால உங்கள வெச்சி மருத்துவ ஆராய்ச்சி பண்ணப் போறாராம்…” என்றார் மருத்துவர்.

       பீதியோடு அவரையே பார்த்தான் சுதாகரன்.

      “அதனால…. இப்பத்திக்கி உன்ன ரிலீஸ் பண்ண முடியாது…..” என்றார் எஸ்.பி கறாராக.

      அதைக் கேட்டதும் தலை கிர்ரென சுற்றியது அவனுக்கு. கண்கள் இருட்ட…தொபீரெனக் கீழே விழுந்து மூர்ச்சையானான்.


-கவிப்பித்தன்

1 COMMENT

  1. முடிச் சாயத்தை வைத்துக்கொண்டு இன்றைய அரசியல்வாதிகளினதும் அராஜக அதிகாரிகளினதும் சாயத்தை மட்டுமல்ல ஆராய்ச்சி என்ற பெயரில் மக்களைக் கொள்ளையடிக்கும் வைத்தியர்களினதும் சாயத்தை வெளுக்கவைத்திருக்கிறது இந்த ‘தலைப்புச்செய்தி’.நாட்டு நடப்பை நகைச்சுவையோடு மிக நளினமாக வெளிப்படுத்தியிருக்கும் நல்லதொரு சிறுகதை. நீண்ட நாட்களுக்குப்பின் நல்லதொரு சிறுகதை வாசித்தத் திருப்தியை அளித்திருக்கிறது இந்தக் கதை. கதாசிரியருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.