அந்த சாவிலும் ஒரு சுகம் உண்டு

னிதனின் மனசாட்சிப் பிரச்சனைகளுக்கு தீர்மானமான கலைவடிவம் தந்தவர் என்று ஆல்பெர் காம்யூவைச் சொல்வார்கள். அவரை போன்றே தனிமையை அலங்கரிக்கத் தெரிந்தவர் நகுலன்.

தனிமையை அலங்கரிக்கும் கலையோடு தொடர்புடைய சொற்களைத் தேடியலைந்தபடிதான் இவரது கவிமனம் இருக்கிறது. தமிழ் கவிதையுலகிலும் புனைவு வெளியிலும் நகுலனுக்கு தனித்ததொரு இடத்தை தனியாக இருக்கத்தெரியாத எவனொருவனும் எழுத்தாளனாக இருக்க முடியாது என்ற தனது தனித்துவமான மனசாட்சியிலுமிருந்துதான் கண்டடைந்தார். தனது கவிவெளியின் முழு தரிசனத்தையும் வாசகனுக்கு இதிலிருந்துதான் தந்திருக்கிறார்.

தனித்த மனதோடு, கவி வெளியின் கற்பனை, படிமம் என்ற சிறகுகளோடு நீரோடைக்குள் ஒற்றை மீன்குஞ்சொன்று நீந்திக்கொண்டிருக்கிறது.

“யாருமற்ற பிரதேசத்தில்

என்ன நடந்துகொண்டிருக்கிறது

எல்லாம்”

இயற்கையோடும் வெளியோடும் தனது தனிமையை பங்கீடு செய்வதுதான் நகுலனின் கவிதா உத்தி. அந்த கவிதைகளில் காணக் கிடைக்கின்ற மொழி கடலுக்குள் நிலவுகிற பேரமைதி. ஒரு தான்யம். ஒரு விதை. அது முளை விடும்போதும் பேரமைதியே சூழும். அதன் பச்சை வேறு; வாசனை வேறு; பூச்சி புழுக்களுக்கும் தவளை மண்புழுக்களுளுக்கும் உதிரி உயிர்களுக்கும் இடமளிக்கும் அதன் தன்மை வேறு

மழை மரம் காற்று (4) – என்ற கவிதையில்

 

மௌனியின்

கதை ஒன்றில்

வாசல் ஜன்னலூடு

வெளித்திண்ணைக்கு அப்பால்

தலை விரித்து

நின்றுகொண்டிருந்த

ஒரு மரத்தை

ஒருவன்

வீட்டில் தான் தனியாக இருந்தவன்

வெறித்துப்பார்த்துக்

கொண்டிருக்கிறான்.

 

 

பட்டுப்போன ஆரஞ்சுமரத்தின் கவிதை

 

விறகுவெட்டி!

என் நிழலை வெட்டு

எனக்கு

நானே ஒரு மலடியாகப்போகும்

நிலைமையை பார்த்துக்கொண்டிருக்கும்

அவஸ்தையிலிருந்து

என்னை விடுவி

 

கண்ணாடிகள் சூழ

நான் ஏன் பிறந்தேன்

பகல் பொழுது

என்னை சுற்றி வட்டமிடுகிறது

ராத்திரியில்

ஒவ்வொரு நக்ஷத்திரமும்

என்னை பிரசவிக்கிறது

நகுலனின் தனிமை மழை மரம் வானம் காற்று நக்ஷத்திரம் என்ற இயற்கையின் கூடாரத்தினுள் வாசகனை மாரிக்காலத்தின் குளிர் பொழுதுக்குள் அவனது தனிமையையும் சேர்த்து அணைத்துக்கொள்கிறது.

மழை மரம் காற்று முழுமை பெற்ற மகிழ்வோடு மீண்டும் தனிமைக்குள் நகுலனின் சொற்கள் இவ்வாறாக பிரவேசிக்கின்றன.

என் எதிரே திறந்த வெளி; சாந்தமான வெயில் ஒளி;

என் கண்முன்

நீல வெள்ளை

வளையங்கள்

மிதந்தன

தனிமையின் பித்திலிருந்துதான் இந்த நீல வெள்ளை வளையங்களை மிதக்க விடுகிறார். மனதின் மாய உந்துதல்கள் எவ்வித ஜோடனைகளுமற்று நேரடியான சொற்களில் கவிதைகளாகும் வித்தைகளைத்தான் வாசகன் தரிசிக்க முடியும்.

உறவு நட்பு மனித சந்தடியிலிருந்து விலகி, தனது உள் மனதோடு உறவாடி உறவாடி அதற்குள் நிலப்பரப்பையும் ஆகாயத்தையும் ஒரு கடலையும் படைத்து பித்து நிலையின் சம்பாஷனைகளை,

கடல் கண்டு நீலமானேனா?

பயிர்கண்டு பச்சையானேனா?

பறவை கண்டு திரிந்தேனா?

என்ற கவி மடலை ஆகாயத்திலும் பயிர்பச்சையிலும் திறந்தபடி ஒற்றைப்பறவையாக நகுலன் அலைகிறார். தனக்கு தானே தருவித்து கொண்ட தனிமை வாழ்வு, அத்தனிமை வாழ்வின் அத்தனை வாசல்களிலும் அந்த மஞ்சள் நிற பூனைக்குடியை தான் அவர் பார்திருந்தார். காலம் இடம் மனிதன் எல்லாவற்றையும் புறந்தள்ளி, அந்த மஞ்சள் நிற பூனை குட்டிக்கு அவரிடம் ஒரு இடம் இருந்தது. அதுவே அவரது கவிதையின் space ஆகவும் உள்ளது. Space பற்றி தேவதச்சன் இவ்வாறாக சொல்கிறார்.

வினைச்சொல்லோ பெயர்ச்சொல்லோ ஒவ்வொரு சொல்லுக்கும் டைம் சென்ஸ் இருக்கிறது சொல்லும் வாசிக்கிறவனும் ஒருவரை ஒருவர் தொடும்போது வெவ்வேறு கால அசைவுகள் தோன்றுகின்றன. இவ்வாறு ஒரே வேளையில் நூற்றுக்கணக்கான கால அதிர்வுகள் புறப்படும்போது, அகாலம் கால ஓட்டம் என்ற கருத்து ரீதியான காலச்சிறையிலிருந்து மனிதன் வெளியேறி விடுகிறான். அனுபவங்களில் இல்லாத இலக்கணத்தை கர்ப்பங்கொள்ளும் இலக்கணம் தான் கவிதையின் ஸ்பேஸ் என்கிறார். இவ்வாறாக, நகுலன் தனது கவிதையின் ஸ்பேஸும் ஒரு மாற்று இயற்கைக்குட்பட்ட கலையின் மொழியிலிருந்தே வெளிப்படுகிறது. எனவேதான் தனிமையின் சஞ்சாரத்தை பொதுமை படுத்தும் வித்தகத்தை நகுலனின் கவிதைகள் அடைந்திருக்கின்றன.

புதிய கவிஞனோ புதிய வாசகனோ நகுலனின்  கவிதைகளை ஏன் வாசிக்க வேண்டும்? அவைகள் எளிமையானவை, Linear poetries. அவற்றோடு, வாழ்க்கைக்கும் எழுத்துக்குமான நேர்மையோடு தொடர்புடையவர் நகுலன். எழுத்துக்குள் நுழையும் புதிய கவிஞன் நகுலன் காட்டுகின்ற அக வெளியிலிருந்து தனது புறதுக்குள் நிகழ்த்தும் வினையின் புனைவுகளில் புதிய படிமங்களையும், புதிய உத்திகளையும் கண்டடைந்துவிட முடியும். அடிமன ஆழங்களுக்குள் ஒரு பயணத்தை நிகழ்த்தும் எழுத்து சிருஷ்டிவெளியின் தரிசனத்தை உணரும் புதிய நாசிகளுக்கு மலரின் வாசனையை, இயற்கையின் வாசனையை, மூலிகையின் வாசனையை கண்களால் கேட்கப்படும் இசை போல விட்டுச்செல்லும். கவிதையின் வினையே இருத்தலின் இல்லாதிருத்தலின் சூட்சிமம் எனலாம். அந்த சூட்சுமத்தை நகுலனின் படைப்புகளில் இருந்து புதிய வாசகனும், புதிய கவிஞனும் சுலபமாக பெற்றுவிட முடியும்.

“அந்நேரம்

அந்தரமனைத்தும்

கிளிகள் பறக்கும்

இந்த மண்ணும் விண்ணாக மாறும்”

இப்படி புதிய அனுபவங்களை தரும் நகுலனின் கவிதைகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

ஓவியத்தில் காட்டப்படும் உணர்ச்சிகளென களிப்பு நகைச்சுவை பரிவு வீரம் பெருஞ்சினம் அச்சுறுத்தல் அருவருப்பு பெரு வியப்பு மனவமைதி இவைகள், மனித உருவை உணர்வு சிதையாமல் கவிதை மொழியில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒளிரும் சொற்களும் நிழல்படிந்தவாறுள்ள சொற்களுமாக நிறங்களில் சாயலையும் கவிதையின் உணர முடிந்ததையும் சொல்ல தோன்றுகிறது. நகுலன் தான் எதற்காக படைப்பை நாடுகிறேன் என்ற காரணமும் அவரது ‘வேளை வந்துற்றபோது’ கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“சிருஷ்டி நியதியில் எனக்கு நான் யார்

என்று தெரியாது என்பதனால்

என் உருவம் எனக்கு புலப்பட

என் உலகம் எது என்று கண்டு

பிடிக்க எழுத்தை நாடுகிறேன்”

ஒரு கலைப்படைப்பாளியாக நகுலன் எழுத்தை நாடியிருக்கும் விஷயம் கலைஞனின் ஆழ்மனதிலிருந்து வெளிப்பட்ட அனுபவத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது. மிக்கலெஞ்சலோ கண்ட பளிங்குக்கல்லில் ஒரு தேவதை இருப்பாள், அந்த தேவதை விடுதலை அடையும் வரை, அவர் அந்த பளிங்கு கல்லைச் செதுக்கிக்கொண்டிடருப்பார். நகுலனும் அவ்வாறே தனது கவிதைகளை, படைப்புகளைச் செதுக்கிக் கொண்டிதானிருக்கிறார். அவரது கவிதைகளில் தேவையற்ற ஒரு சொல்லைக்கூட கண்டுவிட முடியாது. அவரது கவிதைகளில் அனுபவ ரீதியாக எந்தவொரு வாசகனும் சிந்தனை கருத்து இவற்றையெல்லாம் புறந்தள்ளி ஒரு அனுபவத்தை பெற்றுவிடமுடியும். அனுபவத்தை மட்டுமே பெற்றுவிடக்கூடிய, மனதால் மட்டுமே உணர்ந்துவிடக்கூடிய, கவிதைகள் அவருடயவை.

தஞ்சாவூர் ஜில்லாவின் கலை இலக்கிய ஆளுமைகள் பட்டியலில் நகுலனுக்கு தனியிடம் உண்டு. அவர் 1921ல் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிறந்தவர். அந்த ஜில்லாக்கரர்களின் இலக்கிய பதிவுகள் லேசுபட்டதில்லை. அந்தவகையில் கும்பகோணத்தை பூர்விகமாக கொண்டு, திருவனந்தபுரத்திற்கு இடம் பெயர்ந்த நகுலன், கவிதை சிறுகதை நாவல் என்ற புனைவு வெளிகளில் புதிய தடங்களை பதித்தவர். டி. எஸ். எலியட்டையும், சாமுவேல் பேக்கட் போன்றவர்களின் பாணியும் அவரது படைப்பின் பிரதிபலிப்பாக அமைந்தது.

“யார் எங்கிருக்க கூடும் என்று

யார் வந்திருக்க கூடும் என்று

இரவு மங்க

கண் மயங்க

தெருவில் நாளின் உயிர் கிளைக்க

கண் பதித்து காத்திருந்தேன்”

இப்படி கவிதைகளெல்லாம் அவரிடம் பிறக்க, அவர் தனிமையை அவர் அலங்கரித்துக்கொண்ட நவீனன் டைரியின் நாட்குறிப்பில் காணலாம். யாருமே இல்லாது போன வீட்டில்,  கோட் ஸ்டாண்டோடு அவர் நிகழ்த்திய உரையாடல்களில் தொகுதி, கோட் ஸ்டான்ட் கவிதைகளாக மாறியிருக்கின்றன.

ஸ்டேஷன்

ரயிலை விட்டு இறங்கியதும்

ஸ்டேஷனில் யாருமில்லை

அப்பொழுதுதான்

அவன் கவனித்தான்

ரயிலிலும் யாருமில்லை என்பதை

ஸ்டேஷன் இருந்தது,

என்பதை

“அது ஸ்டேஷன் இல்லை”

என்று நம்புவதிலிருந்தும்

அவனால் அவனை

விடுவித்துக்கொள்ள

முடியவில்லை

ஏனென்றால்

ஏனென்றால்

ஸ்டேஷன் இருந்தது

இப்படி அவரது தனிமை குறித்தான கவிதைகளின் யாத்திரை அவருக்கும் வாசகனுக்குமாக தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. இந்த கட்டுரையும் அவரது தனிமையின் சுருதிக்குள்ளேயே மீண்டும் மீண்டும் போகிறது.

நகுலன் ஒரு உரையாடல் கலைஞன். தன் தனிமையோடு உரையாட தெரிந்து அதனை எழுத்துக்கலைஞர்களின், வாசகர்களின் படைப்பு மனோநிலைக்கு பக்கபலமாகவும் தூண்டுதலாகவும் மாற்றத்தெரிந்த வித்தகன்.

“ஒரு கட்டு

வெற்றிலை

பாக்கு சுண்ணாம்பு

புகையிலை

வாய் கழுவ நீர்

ஃபிளாஸ்க்

நிறைய ஐஸ்

ஒரு புட்டிப்

பிராந்தி

வத்திப்பெட்டி/சிகரெட்

சாம்பல் தட்டு

பேசுவதற்கு நீ

நண்பா

இந்தச்சாவிலும்

ஒரு சுகமுண்டு”

என்று கூவாமல் கூவி அழைத்தவன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.