அமீரி பராக்கா கவிதைகள்.

சம்பவம்

அவர் எங்கிருந்தோ திரும்பி வந்து சுட்டார். அவனைச் சுட்டுக் கொன்றார். அவர் திரும்பி வந்தபோது,   சுட்டார், அவன் தடுமாறினான், விழுந்தான். இருள்காட்டைக் கடந்து, கீழே, சுடப்பட்டு, இறந்துகொண்டு,  இறந்து, முற்றும் முழுமையான முடிவுக்குப் போனான்.

 

கீழே,  இரத்தப்பெருக்கு, சுட்டுக் கொல்லப்பட்டு. அவன் அங்கேயே இறந்தான்.

வீழ்ந்த பிறகு அங்கு, வேகமான தோட்டா அவனது முகத்தைக் கிழித்துவிட்டது.

கொலையாளியின் மீதும் சாம்பல்நிற ஒளியின் மீதும் இரத்தம் நன்றாகத் தெறித்திருந்தது.

 

இறந்த மனிதனின் படங்கள், எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன. அவனது ஆன்மா ஒளியை உறிஞ்சுகிறது. ஆனால் அவன் இருளில் அவனது ஆன்மாவைவிட இருட்டாக இறந்தான். எல்லாமே படிக்கட்டுகளில் தாறுமாறாக  உருண்டு வீழ்ந்து அவனுடன் இறந்துபோனது

 

அவர் செய்ததை நிறைவேற்ற, அவர் எங்கிருந்தோ திரும்பி வந்ததைத் தவிர

கொலையாளியைப் பற்றி

நம்மிடம் விபரங்கள் இல்லை

கொலையுண்டவனின் முறைப்பின் மீது ஒரே  ஒரு முறை மட்டுமே சுட்டார்,

இரத்தம் வெளியேறியபோது அவனை விட்டுவிட்டு விரைவாகக் கடந்து விட்டார்.

நமக்குத் தெரியும்

கொலையாளி திறமையானவர், விரைவானவர், அமைதியானவர், கொலையுண்டவனுக்கு அநேகமாக அவரைத் தெரிந்திருக்கலாம்.

அதைத் தவிர, கொல்லப்பட்ட மனிதனின் நெருப்பில் வாட்டிய புளித்த முக பாவனை குறித்தோ

விறைத்த அவனது கைகள், விரல்களில் இருந்த அசட்டையான ஆச்சர்யம், குறித்தோ

நமக்கு எதுவும் தெரியாது.

(Black Magic- 1969)

 

மரபு

 (ப்ளூஸ் மக்களுக்கு)

தெற்குப் பகுதியில், மருந்துக் கடைக்கு எதிர்புறம் தூங்கி, லாரிகளுக்கும் அடுப்புகளுக்கும் கீழே உறுமி, மர்மமான இரவு தொடங்கும்போது அதன் இரைச்சலான கண்களில் தடுமாறி, முகம் சுளிக்கும்படி குடித்துவிட்டு கையையோ சாட்டையையோ வீசிக்கொண்டு, நடனமாடி, முழந்தாழிட்டு நிழலை எட்டிப்பிடித்து சிறு ஓய்வெடுத்து

குடிக்கவோ சிறுநீர் கழிக்கவோ குத்தவைத்து

அருகிலுள்ள, முன்பு கடல் இருந்த இடத்தில், குதிரைகள் மீது இழுத்து நீட்டி மேலேறி (பழைய பாடல்கள் உங்களை நம்புவதற்கு இட்டுச் செல்லும்)

இந்த நகரிலிருந்து, இன்னொரு இடத்திற்கு பயணித்து, அதுவும் ஒரு கருப்பு நகரம், மக்கள் தூங்கிக்கொண்டிருக்கும் ஒரு சாலையின் கீழே

நிலவை நோக்கி வீடுகளின் நிழல்களை நோக்கி

பழைய பாடலின் பாசாங்கான கடலை நோக்கி

  (Black Magic- 1969)

 

    குறிப்பு: ப்ளூஸ் – அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் 1860-களில் உருவான இசை வடிவம். ஆஃப்ரோ – அமெரிக்கர்களின் கதைப்பாடல்கள், தொழில்பாடல்கள், மந்திரங்கள், ஆன்மீகப்பாடல்கள், மரபுப்பாடல்களின் வேர்களைக் கொண்டது. இதுவொரு இயக்கமாக பரிணமித்தது.

 

இருபது தொகுதிகள் கொண்ட  தற்கொலைக் குறிப்பின் முன்னுரை

( மே 16  1959 அன்று  பிறந்த கெல்லி ஜோன்ஸ்-க்கு)

அண்மையில், நான் பாதைக்கு பழக்கமாகிவிட்டேன்

ஒவ்வொரு முறையும் நான் நாயோடு நடக்க வெளியே செல்கையில்.

மைதானம் திறந்து என்னைப் பொதிந்து கொள்கிறது

அல்லது நான் பஸ்ஸிற்காக ஓடும்போது  காற்று இசைக்கிறது

பரந்த முனைகள் கொண்ட வேடிக்கையான இசையை…

 

அந்தவரைக்கும் விஷயங்கள் வந்துவிட்டன.

 

இப்போது, ​​ இரவுதோறும் நட்சத்திரங்களை எண்ணுகிறேன்,

ஒவ்வொரு இரவும் ஒரே எண்ணிக்கையை அடைகிறேன்.

எண்ணுவதற்கு அவை வராத போது

அவை விட்டுச் செல்லும் துளைகளை எண்ணுகிறேன்.

 

யாரும் இப்போது பாடுவதில்லை.

 

பிறகு நேற்றிரவு, பூனைப் பாதங்களால்

என் மகளின் அறைக்குச் சென்றபோது யாரோ ஒருவரிடம் அவள் பேசுவது கேட்டது, நான் அறைக்கதவைத் திறந்த போது

அங்கு யாரும் இல்லை …

அவள் முழந்தாழிட்டபடி, எட்டிப் பார்த்துக்கொண்டிருக்கிறாள் கோர்த்திருந்த

அவளது சொந்தக் கைகளை

(Preface to twenty volume suicide note -1961)

 

குறிப்பு: கெல்லி ஜோன்ஸ் – அமீரி பராக்காவின் மகள்.

 

பாம்புக் கண்கள்

என்னைச் செதுக்கிய அந்த விசை தொலைந்துவிட்டது, அதன் உருவத்தோடு கழித்த, கடைந்தெடுக்கப்பட்ட, தன் மென்வாழ்வை குற்றுயிரோடு கழித்த அந்த பழுப்பு நிற கிழட்டுப் பொருள் தெருக்களின் குப்பைக் கூளங்களோடு போய்விட்டது.

சொற்களால் அதன் எல்லைக்குத் துரத்தப்பட்ட வெறும் தசைகள் என்ன செய்ய முடியும், பலவீனமான சைகைகள் மூச்சைச் சுற்றிலும் பாவாடைகள் போல் வளர்ந்திருக்கிறது.

 

நாம்

என்னவாக ஆகமுடியாதோ அதை நிரூபிப்பதற்காகவே அர்த்தமற்ற ஆபத்துகளைக் கைக்கொள்கிறோம்

உதாரணமாக

நான் ஒரு கிறுக்கனாகக்கூட இல்லை.

        (Transbluesency: The Selected Poetry of Amiri Baraka/LeRoi Jones 1961-1995)

 

நண்பர்களுக்கான சிற்றுரை

அரசியல் கலை, அது மென்மையாக இருக்கட்டும்

விரல்கள் தொடும் கீழ் ஸ்தாயி தந்திகளாக இருக்கட்டும்,

அல்லது

பரந்த வழிகளில் ஏறிச்செல்லும் இலையுதிர்காலத்தின் அகலமாயிருக்கட்டும்

நல்லொழுக்கத்தின் கண்ணியத்தின் ஊடே நீங்கள் எந்த நகரத்தில் இருக்கிறீர்கள், யாருடன் பேச வேண்டும், என்ன ஆடைகள் – அதிலும் என்ன பொத்தான்கள் அணிய வேண்டும் என்பதைக் குறித்து அறிந்து வைத்திருப்பதாகட்டும்

 

நான் சொல்கிறேன்

/ சமூகம்

 

பொதுவான கற்பனாவாதத்தின்

படிமம்

 

/ பிரித்தலின், தனிமைப்படுத்தலின்

வக்கிரம்,

தங்கள் ராஜ்யங்களுக்குள் நுழைய முயன்று பல வருடங்கள் கழித்து,

இப்போது அவர்கள் கண்ணீருடன் வருந்துகிறார்கள், இந்த மற்றவர்கள், கருணைக் குறைவான தங்கள் வீடுகளின் மரக் கதவுகள் வழியாக சாக்ஸோபோன்களை சிணுங்க விடுகிறார்கள். ஏழைகள் எங்கள் படைப்பாளிகளாக மாறிவிட்டனர். கருப்பு. முழுமையான

அறியாமை.

சரிதான் மனிதமற்றதற்கும் ஒழுக்கமற்றதற்குமான சேர்கை தொடங்கட்டும்.

 

2.அதிகாரம்தான் எதிரியா? (விடியல்களை அழிப்பவர், காதலர்களின் விட்டேத்தியான தசை, ரேடியோக்களுக்கு மத்தியில், இடைநிறுத்தங்கள், 19 ஆம் நூற்றாண்டின் குடிகாரர்கள்.. நான் அதைப் பார்க்கிறேன்,

எந்தவொரு மனிதனின் ஒற்றை வரலாறு போல. வெப்பச் சோர்வில் இறந்த

சாத்தியமான அனைத்து கதாநாயகர்களும்

கடற்கரையில்

அல்லது

கேமராக்களிலிருந்து பல ஆண்டுகளாக மறைந்திருக்கும்

நமது தினசரி பொய்களின் பக்கங்களில் மலிவாக இறக்க மட்டுமே.

.

ஒரு கதாநாயகன்

இலக்கியம் குறித்த பாசாங்குகளைக் கொண்டுள்ளான்

ஒருவன் பிழைகளின் உற்பத்தியின் மீது, திமிர்த்தனமாக, மாறுவேடங்களைத் தொடர்ந்து மாற்றிக்கொண்டு

லாரி ஓட்டுனராக, குத்துச்சண்டை வீரனாக, அந்தரங்கப் பணியாளாக,

நினைவின் சத்திரத்தின் வயதான விடுதிகளில் பரிசாரகனாக, சுய இன்பத்தின் விரைவான கதாநாயகிகளுகளோடு உறவு கொள்பவனாக

அல்லது நேரடியான தீமையை சினிமாவின் பொதுப் படிக்கட்டுகளில்

தொடர்ந்து உதைத்துத் தள்ளுபவனாக.

 

ஒரு சமரசம் மெளனமாகக் கூட இருக்கக்கூடும் .

வாயை மூடுவதற்கு, வினைச்சொற்களையும் பெயர்ச்சொற்களையும் சரியான இடத்தில் பொருத்துவதற்கு கைக்கொள்ளும் ஆபத்தும் கூட

சில வீரமான அறிவுஜீவிகளின் முகத்தில் விழவிடாமல்

அந்தரத்தில் எச்சிலை உறைய வைக்க,

 

எந்த வினோதமான காரணமாக இருந்தாலும்

புரிந்து கொள்ள யாரேனும் இருப்பார்கள், இறந்த, கீழே கிடக்கும், ரோய், 1 உங்கள் குழந்தைகள் வளர்ந்ததைப் போல மீள்வான்

ஏனென்றால் ஜார்ஜ் ஆம்ஸ்ட்ராங் கஸ்டர் 2

இந்த 100 ஆண்டுகளில், ஒருபோதும் செய்யவில்லை

ஒரு தவறை.

                                                                                  (  The Dead Lecturer -1964)

குறிப்பு: 1) அமீரி பராக்காவின் இயற்பெயர் லெ ரோய் ஜோன்ஸ்

2) ஜார்ஜ் ஆம்ஸ்ட்ராங் கஸ்டர்-(1839-1876) அமெரிக்க சிவில் யுத்தத்தில் அமெரிக்கக் காலாற்படையின் கமாண்டராக இருந்தவர். பல்வேறு வெற்றிகளை ஈட்டியவர்.

 

அமீரி பராக்கா கவிதைகள்

 தமிழில் : சிவசங்கர்.எஸ்.ஜே.                            


    அமீரி பராக்கா (1934-2014):                             

கவிஞரும் எழுத்தாளரும் ஆசிரியரும் அரசியல் ஆர்வலருமான அமீரி பராக்கா 1934- இல் நியூ ஜெர்சியிலுள்ள நெவார்க்கில் எவரெட் லெராய் ஜோன்ஸ் எனும் இயற்பெயரில் பிறந்தார். ரட்ஜர்ஸ் மற்றும் ஹோவர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்றபின், அமெரிக்க விமானப்படையில் மூன்று ஆண்டுகளைக் கழித்தார். பின்னர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேரும் பொருட்டு நியூயார்க் நகரத்திற்குத் திரும்பினார். பராக்கா தனது கடுமையான சமூக விமர்சனங்களுக்காக நன்கு அறியப்பட்டவர்.

1950- களில் பராக்கா கிரீன்விச் கிராமத்தில் வாழ்ந்தபோது, பீட் கவிஞர்களான ஆலன் கின்ஸ்பெர்க், ஃபிராங்க் ஓ’ஹாரா மற்றும் கில்பர்ட் சோரெண்டினோ ஆகியோருடன் நட்பு கொண்டிருந்தார். வாழ்நாள் முழுதும் சர்ச்சைகளில் சிக்கியபடி இருந்தார். அவருடைய தொடக்க காலக் கவிதைகளில் கறுப்பின அரசியலும் பின்னர் கியூபா பயணத்திற்குப் பின் மூன்றாம் உலக அரசியலும் செல்வாக்கு செலுத்தியது. பீட் இயக்கத்தின் செல்வாக்கும் அவரது கவிதைகளில் பிரதிபலித்தது. பராக்காவின் முதல் கவிதைத் தொகுதி Preface to a Twenty Volume Suicide Note 1961-ல் வெளியானது.

அவரது பிற ஆக்கங்கள்.

The Dead Lecturer (1964) கவிதைகள்

The System of Dante’s Hell (1965) நாவல்

Home: Social Essays (1966) – கட்டுரைகள்

Tales (1967) – சிறுகதைத் தொகுதி

Transbluency: The Selected Poems of Amiri Baraka/LeRoi Jones (1961-1995)– கவிதைகள் மொத்தத் தொகுதி

இசை குறித்த நூல்கள்

Blues People: Negro Music in White America (1963)

Black Music (1968)

The Music: Reflections on Jazz and Blues (1987)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.